Jeyamohan's Blog, page 609
March 21, 2023
இன்னொருவரின் புலி -கடிதம்
அன்புள்ள ஜெ,
ஆனையில்லா தொகுப்பை இன்றுதான் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு கதையிலுமுள்ள அந்த அபாரமான எளிமையும் ஃப்ளோவும்தான் எழுத்தில் வந்தாகவேண்டிய உச்சம். அதை மொழியின் மெருகு என்று சொல்வதா, மொழிக்குப்பின்னாலுள்ள மனதின் பிரகாசம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. உலகம் முழுக்க அத்தகைய எழுத்துக்கள்தான் உச்சமாகக் கொண்டாடப்படுகின்றன. நட் ஹாம்ஸன் முதல் வில்லியம் சரோயன், மார்க்யூஸ் வரை.
நான் மலையாளத்தில் பஷீரில் அப்படிப்பட்ட அழகை கண்டிருக்கிறேன். தமிழ் மொழியாக்கத்திலும் சரி, ஆங்கில மொழியாக்கத்திலும் சரி அது உள்ளது. அதேபோல பால் ஸகரியா கதைகளிலும். தமிழில் நாம் சிற்றிதழ்களுக்குள் நுணுக்கி நுணுக்கி எழுதுவதனாலும், அபூர்வமாக ஏதாவது எழுதுவதனாலும் அந்த ஈஸினெஸ் வந்தது குறைவு. ஈஸினெஸ் வரும். அதாவது எழுத்தாளர் ஒரு நிலையான ஸ்டைல் வைத்துக்கொண்டு அதையே எழுதினால் அப்படித் தோன்றும். ஆனால் அது கலை கிடையாது.
இந்தக்கதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் எவரும் வர்ணிக்கப்படவில்லை. பெரும்பாலும் அவர்கள் போகிறபோக்கில் பேசும் உரையாடல்களில் இருந்துதான் அவர்களின் குணாதிசயங்கள் தெளிவடைந்து வருகின்றன. நிகழ்வுகள் ஒன்றும் உணர்ச்சிகரமானவை அல்ல. அன்றாடக்கதைகள். அன்றாடம்தான் எல்லாமே. ஆனால் மனிதர்களின் குணநுட்பங்களும், அதற்கான வாழ்க்கைச்சம்பவங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. எங்கும் துக்கம் இல்லை. மனிதவாழ்க்கை என்ற கொண்டாட்டம்தான் உள்ளது. அதிலே நாய்கள், குரங்குகள் எல்லாமே உள்ளன.
இன்னொருவனின் பூனையை நாம் ஏன் பூனையாக்கவேண்டும் என்று ஒரு வசனம் வருகிறது. எல்லா புலிகளையும் சாதாரணமாக பூனையாகக் காட்டிவிடுகிறது இந்த தொகுப்பு.
ஸ்ரீனிவாஸ்
March 20, 2023
தன்பாலுறவினரின் வாழ்க்கை
அன்புள்ள ஜெ,
அண்மையில் ஒருபாலுறவு பற்றிய உங்கள் நூலை வாங்கி வாசித்தேன். அண்மையில் ஒரு இலக்கியப்படைப்பாளி மீதான விவாதத்தில்தான் உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டேன். அதன் பிறகுதான் உங்கள் நூலை வாங்கி வாசித்தேன். என்னுடைய ஆர்வத்துக்கான காரணம் நான் ஒரு தன்பாலுறவு மனிதன் என்பதுதான்.
இந்தப்பிரச்சினைகளை எவரும் இன்றைக்கு எழுதுவதில்லை. நானே என் பெயரை வெளியிட மாட்டேன். நிறைய அரைகுறைஆங்கிலமும் கலந்தே என்னால் எழுதமுடியும். ஆனால் உங்கள் தளத்திலே வெளியிடமுடியும் என்று நினைக்கிறேன். அந்த நம்பிக்கையை உங்கள் புத்தகம் அளித்தது. ஆகவே எழுதுகிறேன்.
நான் என்னுடைய தன்பாலுறவு நாட்டத்தை என் 18 வயதிலேயே கண்டுபிடித்தேன். எனக்கு ஆண் மீது தவிர எந்த ஆர்வமும் இல்லை. கொஞ்சம்கூட என் இந்திரியங்கள் தூண்டப்படுவதே இல்லை. ஆண் உறவு இல்லை என்றால் எனக்கு பாலின்பமே இல்லை. நான் கைப்புணர்ச்சி செய்வதுகூட நடிகர்களின் படங்களைப் பார்த்துதான்.
நாங்கள் இந்த சமூகத்தில் வாழவேண்டாமா என்று கேட்டால் வாழவேண்டாம், சாகு என்றுதான் சமூகம் சொல்லும். இதுதான் உண்மை. ஆகவே தலைமறைவாகவே நாங்களெல்லாம் வாழமுடியும். அப்படித்தான் 90 சதவீதம்பேரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நீங்களேகூட தலைமறைவாக வாழ்வதற்குத்தான் ஆலோசனை சொல்கிறீர்கள். அது ஒரு பெருந்தன்மையான பார்வை. நடைமுறைப் பார்வையும்கூட. பாலுறவு ஒரு சின்னவிஷயம்தான் வாழ்க்கையில் என்றும், பாலுறவை விரும்பியபடி செய்துவிட்டு, பெரிய விஷயங்களில் ஈடுபடும்படியும் சொல்கிறீர்கள். அதைத்தான் நீங்கள் சொல்லமுடியும்.
இதில் ஒரு வேறுபாட்டைச் சொல்ல விரும்புகிறேன். இருபாலுறவினர் உண்டு. அவர்களுக்குப் பெண்களுடனும் உறவுகொள்ள முடியும். அவர்கள் வேறு பிரிவு. அவர்கள் ஒரு சுவாரசியம், தனி இன்பம் ஆகியவற்றுக்காக ஆண்களுடன் உறவுக்கு விரும்புகிறார்கள். அது ஒரு மனப்பிறழ்வுதான். அவர்களுடன் என்னைப் போன்றவர்களை ஒப்பிடக்கூடாது. இது ஒரு உயிரியல் விஷயம். அரவானிகளைப்போல. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது.
அண்மையிலே வந்த பிரச்சினைகளில் முற்போக்கு என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்களிடம் வெளிப்பட்ட பயங்கரமான முரட்டுத்தனமும் கண்மூடித்தனமான கோபமும் எனக்கு பெரிய அச்சத்தை அளித்தது.இவர்களெல்லாம் விவாதிக்கும்போது எல்லாம் முற்போக்காகத்தான் சொல்வார்கள். ஏதாவது ஒருவன் அகப்பட்டால் அடித்தே கொலைசெய்வார்கள்.
என்னால் பலநாட்கள் தூங்கவே முடியவில்லை. என்னை முச்சந்தியில் வைத்து அவமானப்படுத்துவது போலவும், உயிருடன் கொளுத்துவதுபோலவும் கற்பனை செய்துகொண்டேன். இதெல்லாம் நூறு வருசம் முன்பு நடந்தது. அரபுநாடுகளில் கல்லால் அடித்தே கொல்வார்கள். இங்கே உள்ள முற்போக்கினர் எல்லாம் உள்ளுக்குள் அந்தப் பழமைவாத மனநிலை கொண்டவர்கள். அவர்கள் எங்களைக் கொல்லத்தான் விரும்புவார்கள். சோவியத் ருஷ்யாவிலேகூட மரணதண்டனைதான் அளிக்கப்பட்டது.
குறிப்பாக, பெண்கள் எங்களை வெறுப்பார்கள். பொதுவெளியில் ஓர் அடையாளம் வந்தாலே பெண்களிடமிருந்து மிகப்பெரிய வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும். கொலைசெய்யும் அளவுக்கு வெறுப்பு. இந்த சமீபகால விஷயத்திலேகூட மனநிலை பாதிக்கப்பட்ட அளவுக்கு கூச்சல்போட்டவர்கள் பெண்கள்.
எங்களுக்கு இந்தச் சமூகத்தில் இயல்பான பாலியல்தேர்வே கிடையாது. அந்த பிரச்சினைகளை சமூகம் புரிந்துகொள்ளவில்லை. இதை எங்கேயும் விவாதிக்க முடியாது. அம்பது வருஷம் கழிந்து இப்படி ஒரு பிரச்சினை பேசப்பட்டது என்பது பதிவாகவேண்டும். ஆகவேதான் உங்களுக்கு எழுதுகிறேன். பிரசுரம் பண்ணுவீர்கள் என நினைக்கிறேன்.
தன்பால் உறவு மனநிலை கொண்டவர்கள் எப்படி இங்கே இணைகளை தேர்வுசெய்கிறார்கள்? தேடிக்கொண்டே இருக்கவேண்டும். வழக்கமாக எங்களைப் போன்றவர்கள் எல்லாரிடமும் அணுக மாட்டார்கள். பெரும்பாலானவர்களிடம் அப்படி தங்களைக் காட்டிக்கொள்ளவே மாட்டார்கள். அந்த வாய்ப்பு இருப்பதாக தோன்றும் நபர்களிடம் மட்டும் மென்மையாக அணுகிப்பார்ப்பார்கள். கொஞ்சம் எதிர்ப்பு தெரிந்தால்கூட அப்படியே போய்விடுவார்கள். கட்டாயப்படுத்தவே மாட்டார்கள். பெரும்பாலும் அந்த இடத்தில் இருந்தே நகர்ந்து விடுவார்கள். அந்த நபரையே மறுபடி சந்திக்க மாட்டார்கள்.
தன்பாலுறவினரிடம் பெரும்பாலும் வன்முறையே இருக்காது. ஏனென்றால் நாங்களே சமூகத்தை அஞ்சி ஒடுங்கிக்கிடக்கும் மிகச்சிறுபான்மையினர். சட்டம் ,சமூகம், மதம் எல்லாமே எங்களை கொல்ல அலைகின்றன. ஒரு சின்ன தவறு நடந்தால்கூட அவ்வளவுதான், அடி பின்னிவிடுவார்கள். எனக்கும் அடி விழுந்திருக்கிறது. ஒருநாள் முழுக்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்திருக்கிறேன். உதடு செவி எல்லாம் கிழிந்துவிட்டது. நேராக வேற்றூருக்கு போய்விட்டேன். அந்த மனநிலைதான் இன்றைக்கு இந்த விஷயத்தில் இணையம் முழுக்க தெரிந்தது.
கொஞ்சம் மசியக்கூடியவர் என தெரிந்தால் மட்டும்தான் என்னைப்போன்றவர்கள் தன்பாலுறவுக்கு ஆசைகாட்டுவோம். பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்போம். வேறுவகை உதவிகள் செய்வோம். பலவகை சலுகைகளும் கொடுப்போம். இது தப்பில்லை , இதை எல்லாரும்தான் செய்கிறார்கள் என்றெல்லாம் நியாயப்படுத்துவோம். அவர்களைக் கவர எல்லாமே செய்வோம். நல்ல ஆடை அணிவது, வாசனை பூசிக்கொள்வது உண்டு. சினிமா, அரசியல் எல்லாம் சிறப்பாகப் பேசுவோம். நகைச்சுவையாக பேசுவோம். அன்பாகவே இருப்போம்.
இதெல்லாம் உண்மை. ஆனால் ஆணும் பெண்ணும் உறவு கொள்வதே இதே வழியிலேதானே? ஒரு பெண்ணை கவர ஆண் என்ன செய்வானோ அதெல்லாம்தான் நாங்களும் செய்கிறோம். வன்முறையோ வற்புறுத்தலோ இருக்கவே இருக்காது. ஏனென்றால் சம்பந்தப்பட்டவர் ஒரு நாலுபேரிடம் சொன்னாலே நாங்கள் சாகவேண்டியதுதான். பிடிக்காவிட்டால் எவரிடமும் சொல்லாதே என்றுதான் மன்றாடிக்கொண்டே இருப்போம். இப்படி இருப்பவர் எப்படி மிரட்டமுடியும்? எப்படி பிளாக்மெயில் செய்ய முடியும்?
பொதுவாக இதற்குச் சம்மதிப்பவர்கள் இளைஞர்கள். அவர்களுக்கு வேறு செக்ஸ் இல்லாத வயதாக இருக்கும். புதிய விஷயம் என்பதனால் வரும் ஆர்வமும் இருக்கும். அவர்கள் எங்களைப் போன்றவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள். நான் நாலைந்து லட்சம் வரை செலவழித்திருக்கிறேன். என் வருமானம் 70 சதவீதம் இப்படித்தான் செலவாகிறது.
இப்படி மைனர் பையன்களை பயன்படுத்திக்கொண்டால் அது தப்பு, நீங்கள் சொல்வதுபோல சட்டப்படிக் குற்றம். ஆனால் ஒன்று தெரியவேண்டும். இளம்பெண்களைப்போன்றவர்கள் அல்ல ஆண்கள். பெண்களுக்கு நிராதரவான நிலை உள்ளது. அவர்கள் வேலையிலும் தொழிலிலும் முன்னேறவே முடியாது. அவர்களை எல்லா ஆண்களும் துரத்தி வேட்டையாடுகிறார்கள். அப்படிச் செய்யும் ஆண்களுக்கு எந்தச் சமூகப்பாதிப்பும் இல்லை. அவர்கள் பெரியமனிதர்களாக உலவலாம். அவர்களுக்கு அதில் பெருமைகூட இருக்கும்.
பெண்களுக்கு உடல் வலிமை இல்லை. அவர்களை தாக்குவது எளிய விஷயம். கற்பழிப்புகளே நடைபெறுகிறது. இந்தச் சமூகமும் அவர்களைத்தான் குற்றவாளிகளாகக் காட்டும். அவ்ர்களின் நடமாட்டமும் வேலைசெய்யும் உரிமையும்கூட பாதிக்கப்படும். அவர்களுக்கு அதாவது கெட்டபெயரை உருவாக்கிவிடுவோம் என்று சொல்லியே பெண்களை மிரட்டமுடியும்
எங்கள் விஷயம் அதுபோல அல்ல. இளம் ஆண்கள் உடல்வலிமை உடையவர்கள். ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைச் செய்யாமலிருக்க அவர்களால் முடியும். அவர்களை கட்டாயப்படுத்தவே முடியாது. வெளியே தெரிந்தால் அதற்கு கெட்டபெயரும் எங்களுக்குத்தான்.
ஒரு வயது வந்த ஆண் 21 வயதுக்குமேல் ஒரு கிரைம் விஷயத்தைச் செய்துவிட்டு எங்களை கட்டாயப்படுத்தினார்கள், எங்களை மூளைச்சலவை செய்தார்கள், இச்சககம் பேசினார்கள் என்று சொன்னால் இந்த தேசத்திலே சட்டம் அதை ஏற்றுக்கொள்ளுமா? இங்கே பெரும்பாலான ஆண்களுக்கு சின்னவயதில் எவராவது இப்படி அணுகிய அனுபவம் இருக்கும். கூடாது என்று சொல்லியிருப்பார்கள். அதோடு முடிந்திருக்கும்.
இப்படிச் சின்னவயதில் ஓர் ஆர்வத்திலே ஈடுபடுபவர்கள் கொஞ்சநாளில் அதிலிருந்து விலகிவிடுவார்கள். அவர்களுக்கு தன்பாலின ஈர்ப்பு இல்லாவிட்டால் கொஞ்சநாளிலேயே விரும்பமுடியாமல் ஆகும். அது குற்றவுணர்ச்சியை அளிக்கும். ஆகவே அவர்கள் எங்கள் மேல் முழுப்பழியையும் போட்டுவிட்டு தாங்கள் தவறே செய்யவில்லை என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். அதுவரை அடைந்த பலன்களையும் மறந்துவிடுவார்கள். விக்டிம் பிளே பண்ணுவார்கள். எங்களில் எல்லாருக்குமே இந்த அனுபவம் உண்டு. எனக்கே கூட உண்டு. இது எப்பவுமே நடந்துகொண்டே இருக்கும் விஷயம்.
ஆகவே ஒருவர்மேல் சிலர் பழி சொன்னதுமே கூட்டம்கூடி தர்ம அடி கொடுப்பதைப் பற்றி மக்கள் யோசிக்கவேண்டும். தர்மஅடி கொடுப்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் என்ற சித்திரம் வந்துவிடுகிறது. அவர்களெல்லாம் முற்போக்கானவர்கள் என்று தங்களை காட்டிக்கொள்பவர்கள். ஆனால் பழையபாணி மதவாதிகளைவிட மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். இந்த தர்ம அடியில் ஒரு மாறுபட்ட பாலுணர்வு கொண்ட ஒருவரை நாசமாக்கி அழித்தேவிடலாம். அதை மட்டும் ஞாபகப்படுத்துகிறேன்
அன்புடன்
என்.
அன்புள்ள என்,
இந்த தளத்தில் நான் மையச்சமூகப் பரப்பில் இருந்து வெவ்வேறு வகையில் விலகிச்செல்பவர்களின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து இடமளித்து வருகிறேன். ஒருபாலுறவினர் மட்டுமல்லாமல் விந்தையான நோய்க்கூறுகள் கொண்டவர்களின் பிரச்சினைகளும் இங்கே எழுதப்பட்டுள்ளன. அவை தன்னைக் கடத்தல் என்னும் நூலாக வெளிவந்துள்ளன.
இலக்கியம் வழியாக ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டியது முதன்மையாக ஒன்று உண்டு. ஏற்கனவே நிறுவப்பட்டு, அத்தனைபேரும் சேர்ந்து கூச்சலிடும் பொதுவான ஒழுக்கம், அரசியல்நம்பிக்கைகள், சமூகவழக்கங்கள் ஆகியவற்றைக் கடந்து சென்று மனிதனின் துயரத்தைப் பார்ப்பதுதான் அது. தனித்துவிடப்படுபவர்கள், விலக்கப்பட்டவர்கள், ஒதுங்கியவர்கள் சார்பாகவும் யோசித்துப்பார்ப்பதுதான் இலக்கியம் வழியாக கற்றுக்கொள்ளவேண்டிய அறம். மதமும் அரசாங்கமும் சொல்லித்தரும் அறத்துக்கு அப்பாலும் அறம் உண்டு என்றுதான் இலக்கியம் பேசுகிறது. என் எழுத்துக்கள் கற்பிப்பது அதுதான். கும்பலில் ஒருவன் என் வாசகன் அல்ல.
பொதுவாகப்பேசப்படும் விஷயங்களை தர்க்கரீதியாக ஆராய்ந்து ஒரு பொதுவிவேகத்தால் உண்மையில் என்ன நடந்திருக்கும் என ஊகிக்கும் திறனும் நல்ல இலக்கியவாசகனுக்கு வேண்டும். எவராயினும் அவரது தரப்பை மட்டுமே சொல்வார். பலகாலமாக அதை தயாரித்தும் இருப்பார். அவருடைய நியாயம் அதில் இருக்கும். அதை மறுக்க முடியாது. ஆனால் எவரும் வெள்ளந்திகள் அல்ல. சொற்களுக்கு அப்பாலுள்ள மானுட உள்ளத்தை அறிவதற்கே இலக்கியம் கற்பிக்கிறது. மானுட உள்ளம் நம்பமுடியாத ஆழ்ந்த இருள் கொண்டது. பலநூறு பாவனைகள், தற்பாவனைகள் வழியாகச் செயல்படுவது. அதை அறியாவிடில் இலக்கியம் வாசித்துப் பயனேதுமில்லை.
இன்றைக்கு முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நான் அன்று மதிப்பு கொண்டிருந்த ஒரு பேராசிரியரின் இளம் மனைவி தற்கொலை செய்துகொண்டார். அவரையும் குடும்பத்தையும் ஊடகங்கள் வேட்டையாடின. நான் உறுதியாக அவருடன் இருந்தேன். அவருக்கு என் ஆதரவை கடிதமாக எழுதினேன். பொதுவெளியிலும் பேசினேன். ஒருவன் தனித்துவிடப்பட்டு ஊடகவேட்டை ஆடப்பட்டால் என் பார்வை அவனுக்கும் ஒரு தரப்பை அளிக்கும். அவன்மேலும் அனுதாபம் கொண்டிருக்கும்.
ஆனால் அதே பேராசிரியர் அண்மையில் இந்த விஷயத்தில் அவரே ஊடகவேட்டையாளர்களில் ஒருவராக கருத்துக்குவிப்பு செய்வதைக் கண்டேன். அவருக்கு இலக்கியம் உருவாக்கும் அறமும் அழகும் தெரியாது, அவருக்கு இலக்கியமென்பது ஆராய்ச்சி செய்து படிக்கவேண்டிய ஒரு பாடம் மட்டுமே. ஒருவகை இலக்கியப் பாமரர். அவ்வளவுதான் அவரிடம் எதிர்பார்க்க முடியும்.
தன் பாலுறவினர் உள்ளிட்டவர்களிடம் நான் ‘அனுதாபம்’ கொண்டிருக்கவில்லை. அவர்களை புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன்பொருட்டு பரிவுடன் அவர்களின் சொற்களைக் கவனிக்கிறேன். அவர்களையும் உள்ளிட்ட ஒரு சமூகத்துக்காக, இன்னும் விரிவான அறத்துக்காக யோசிக்கிறேன். அதில் நான் தவறுகளும் செய்யலாம். ஆனால் என் பரிவு எப்போதுமே தனிமைப்பட்டவர்கள், வேட்டையாடப்படுபவர்களிடம்தான். ஒரு பக்கம் கும்பல் கூடிவிட்டாலே மறுபக்கத்தைத்தான் பார்ப்பேன்.
என் எழுத்துக்கள் முழுக்க அந்தப் பரிவு தெரியும். முதல் நாவலான ரப்பர் முதல் அத்தகைய கதாபாத்திரங்கள் என் உலகில் உண்டு.ரப்பர் நாவலின் குளம்கோரி எனக்கு தெரிந்தவர். அவரை ஊரே வெறுத்தது, அவமதித்தது. நான் அவருடன் நட்பாகவே இருந்தேன். அதன்பொருட்டு என்னை எவரும் ஒழுக்கம்சார்ந்து ஒரு சொல்கூட பழிக்கமுடியாது என்னும் நிமிர்வும் என்னிடமிருந்தது. அந்த பரிவும் நிமிர்வுமே என்னை கலைஞனாக்கியது. இன்று ஜெயகாந்தன் இருந்திருந்தால் என் சொற்களையே அவரும் சொல்லியிருப்பார்.
விஷ்ணுபுரம், இரவு, காடு, அனல்காற்று, பின்தொடரும் நிழலின் குரல் , ஏழாம் உலகம் முதல் வெண்முரசு வரை எத்தனை ‘புறநிலை’ மனிதர்களை எழுதியிருக்கிறேன் என நீங்கள் படித்துப் பார்க்கலாம். என் கதைகளில் அப்படி எத்தனை முகங்கள். தமிழிலக்கிய உலகம் மொத்தமாக எழுதிய புறநிலைமாந்தர்களை விடவும் இருமடங்கு இருக்கும். அந்தப்பார்வையே என்னுடையது. கும்பல்கூடி எனக்கு அறவுரை சொன்னால் ‘டேய் போடா’ என்பதே என் பதிலாக இருந்திருக்கிறது. அதுதான் ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் முன்வைத்த இலக்கிய மரபு.
தனித்தவர்கள், வேட்டையாடப்படுபவர்கள், ஆற்றலற்றவர்கள் சார்பில் நிலைகொள்ளும் துணிவே கலைஞனின் அடிப்படை. கும்பலுக்கு எதிராக தனித்து நின்றிருக்கும் திமிரும் தேவை. எளியவன் கிடைத்தால் எங்கெங்கோ பம்மிநின்று அடக்கிவைத்த வன்முறையை முழுக்கக் கொட்டும் கீழ்மை எழுத்தாளனிடம் இருக்கலாகாது. அவனுடைய மெய்யான வாசகர்களிடமும் அது நிகழாது
ஜெ
கருணாலய பாண்டியனார்
கருணாலய பாண்டியனார் ஈழத்து தமிழறிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், உரையாசிரியர். கலைச்சொல்லாக்கப் பணிகளில் ஈடுபட்டார். வட மொழியிலிருந்து பல நூல்களைத் தனித்தமிழில் மொழியாக்கம் செய்தார். கலைச்சொற்களைத் தனித்தமிழில் சொல்லாக்கம் செய்தார். தமிழ் இலக்கண இலக்கிய நூல்களில் சமூகப் பண்பாட்டுக் கூறுகளை ஆய்ந்து எழுதினார்.
கருணாலய பாண்டியனார்
கருணாலய பாண்டியனார் – தமிழ் விக்கி
தியானம், திரளும் தனிமையும்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
இப்போதுதான் தியான முகாமில் கலந்து கொண்டு கோவை போய்க்கொண்டு இருக்கிறேன்.அவ்வளவு புத்துணர்ச்சியாகவும் அகவலு கூடியும் இருக்கின்றது.
தில்லை செந்தில் அண்ணா அவர்களின் வகுப்பு 2010 போல நான் கலந்து கொண்டிருக்கிறேன்.ஆனால் இந்த மூன்று நாள் வகுப்பு வேறொரு தன்மையில் வேறொரு பரிணாமத்தில் அனைவருக்கும் பயன்படும்படியாக அன்றாட வாழ்க்கையில் அவர் சொல்லிக் கொடுத்த விஷயங்களை உபயோகப்படுத்தி பார்க்கும் படியாக மிக்க உறுதுணையாக இருக்கும் என்று தோன்றுகிறது.மிகக்குறைந்த நபர்களே இருந்ததால் அவரோடு உரையாட அவர் நாங்கள் செய்யும் பயிற்சிகளை எளிதாக சரிபார்த்து சொல்ல ஏதுவாக இருந்தது.
இரண்டாம் நாள் எதிர்பாராமல் மழை பெய்தது ஒரு நல் ஆசீர்வாதமாக தோன்றியது.உணவு உபசரிப்பு மற்றும் தங்குமிட ஏற்பாடு மணி அண்ணா மற்றும் சமையல் கலைஞர்கள் பொம்மன் மிகச் சிறப்பாக இருந்தது.
பல்வேறு கூட்டு தியானங்கள், மூச்சுப் பயிற்சிகள், ஆசனங்கள்,கேள்வி பதில்கள் என வகுப்பு மிகச் சிறப்பாக திட்டமிட பட்டிருந்தது.இது போன்ற விஷயங்களை ஒருங்கிணைத்த உங்களுக்கும்அதற்கு சூழல் அமைத்துக் கொடுத்த உங்கள் எண்ணத்திற்கும்மிகுந்த நன்றி கடன் பட்டவனாக இருக்கின்றோம்.
அன்பும் நன்றியும்
குமார் சண்முகம்
அன்புள்ள குமார்,
தில்லை செந்தில்பிரபு அவர்கள் தொழில்துறையில் மிகப்பெரிய பதவியில் இருந்து அதைத் துறந்து மிகப்பெரிய அமைப்பொன்றில் முழுநேர உறுப்பினராக ஆனார். பல ஆண்டுகள் புகழ்பெற்ற தியானப் பயிற்றுநராக இருந்தார். பலநூறுபேர், ஆயிரம்பேர் கலந்துகொள்ளும் முகாம்களை நடத்தியிருக்கிறார். அந்தப் பெருந்திரள் தியான முறையின் குறைபாட்டைக் கண்டு ஒதுங்கிக்கொண்டார். மீண்டும் தொழில்துறையில் இறங்கி பணியாற்றுகிறார். கூடவே கல்விப்பணி, தியானப்பயிற்றுமுறைகள் ஆகியவற்றைச் செய்து வருகிறார். எனக்கு நன்றாகவே தெரிந்தவர்.
தியான – யோகப் பயிற்சிகளில் பெருந்திரள் நிகழ்வுகளுக்கு ஒரு நடைமுறைப்பயன் உண்டு. பெருந்திரளுடன் இருப்பது ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. உற்சாகமான மனநிலை அமைகிறது. விழாமனநிலை அது. அது தேவை. ஆனால் உண்மையான பயிற்சி சிறிய அளவிலேயே நிகழமுடியும். ஆசிரியரை மாணவர் அறிவது முக்கியமல்ல, அறியவும் முடியாது, அறிந்ததுமே அவரும் ஆசிரியர் ஆகிவிடுவார். ஆனால் ஆசிரியர் மாணவரை தனிப்பட்ட முறையில் அணுக்கமாக அறிந்து வழிகாட்டவேண்டும். ஒவ்வொரு படிநிலையிலும் உடனிருக்கவேண்டும்
இந்த பயிற்சிகள் வழியாக உத்தேசிப்பது அதுவே. நான் எல்லாவற்றிலும் பொதுவாக இருப்பவற்றுக்கு எதிராக ஒரு மாற்று சொல்கிறேன். அதற்கு ஒரு வழியும் அமையட்டுமே, சிலருக்காவது பயன்படும் என்பதே நோக்கம்.
ஜெ
அகநிலம் – கடிதம்
அன்புள்ள ஜெ
என் வாழ்க்கையில் நான் வாசித்த நூல்களில் தலையாயது என்று ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால் தங்கப்புத்தகம் நூலைத்தான் சொல்வேன். மெய்யாகவே ஓர் ஆன்மிகத் தங்கப்புத்தகம் அது. அந்தக் கதைகள் இணையத்திலே வெளிவந்தபோது வாசித்தேன். ஆனால் அவை மாறி மாறி வந்தமையால் ஒரு முழுமையான சித்திரம் அப்போது உருவாகவில்லை. இன்று நூலாக வாசிக்கையில் பெரும் திகைப்பும் நுண்மையான அறிதல்களும் உருவாகின்றன.
நான் எற்கனவே லாப்ஸிங் ராம்பா போன்றவர்கள் எழுதிய திபெத் பற்றிய கதைகளை வாசித்துள்ளேன். ஓஷோ சொன்னதனால் திபெத்தியன் புக் ஆப் டெத் வாசித்தேன். ஆனால் தங்கப்புத்தகம் முற்றிலும் வேறானது. இது திபெத்தை ஒரு குறியீடாக எடுத்துக்கொண்டு நம்முடைய ஆன்மிகப்பயணத்தைப் பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு கதையும் திகைப்பையும் மலைப்பையும் அளிக்கிறது. மூளைக்குள் என்னமோ நிகழ்கிறது. நாம் தியானத்திலே இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.
தங்கப்புத்தகம், கூடு, கரு ஆகிய மூன்று கதைகளும் திபெத் பின்னணியில் அமைந்தவை. கொஞ்சம் தியானம் பயில்பவர்களுக்கு கூடு, தங்கப்புத்தகம், கரு என்னும் தலைப்புகளே ஆழமான அர்த்தங்களை அளிக்கும். காக்காய்ப்பொன் சிவம் நிழல்காகம் போன்ற கதைகள் தனியாக வேறு தளத்தைச் சேர்ந்தவை என்றாலும் இந்தக்கதைகளின் ஒளியில் அவை மேலும் ஆழம் பெறுகின்றன. ஒவ்வொரு கதையை ஒட்டியும் ஏராளமாகப் பேசமுடியும். இந்தப்புத்தகத்தை தியானம் பயிலும் ஒவ்வொருவரும் வாசித்தாகவேண்டும். ஒருவரோடொருவர் விவாதிக்கவேண்டும்.
நிழல்காகம் கதையை நான் என் நண்பர்களிடம் சொன்னேன். எல்லாருமே தியானம் பயில்பவர்கள். அனைவருமே திகைப்புடன் அவர்களின் சொந்த அனுபவம் அது என்றார்கள். காக்காய்ப்பொன் கதையும் அதேபோலத்தான். நாம் எதை பழகுகிறோம், எப்படி நம்மை இயற்கை பழகிக்கொள்கிறது என்பதெல்லாம் நுட்பமாக உணரத்தக்கது
இந்தக் கதைகளை ஏன் பயிலவேண்டும்? இதையே நேரடியாக உரைகளாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அப்போது அவை ஐடியா ஆகவே நம்முள் சென்றுசேரும். அனுபவமாக ஆகாது. அதற்குத்தான் கதைகள். கதைகளாக மட்டுமே சொல்லமுடியும். அல்லது சிம்பாலிக் சடங்குகளாகச் சொல்லமுடியும். ஆகவேதான் புராணங்களும் கோயில்களும் உருவாயின. இந்தக்கதைகளை ஒருவகையான நவீன புராணங்கள் என்று சொல்லலாம்.
நன்றி
திரு.மாணிக்கவாசகம்
அன்புள்ள ஜெ
தங்கப்புத்தகம் படித்தேன். ஒரே வார்த்தை. ஏதாவது ஒரு வகையில் யோகமோ தியானமோ பயில்பவர்கள் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய புத்தகம். அவர்களால்தான் இதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். கதைகள் எல்லாமே தியான -யோக உருவகங்களாகவே உள்ளன
சிவா ராஜ்குமார்
சுனில் கிருஷ்ணன் உரையாடல், பதிவு
(விஷ்ணுபுரம் நாவலில் இருந்து ஒரு பாடல். இசையமைப்பு ராஜன் சோமசுந்தரம்)
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம்.
சுனில் கிருஷ்ணன் அவர்கள், அரூ மின்னதழுக்கு நடத்திய நேர்காணல் ஒன்றில், எழுத்தாளர் நாஞ்சில் நாடனிடம், தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகள் குறித்து கேள்வி கேட்டிருப்பார். அதற்கு அவர், பாதித்த ஆளுமைகள் பெயர்களை குறிப்பிட்டுவிட்டு, புதுமைப்பித்தனின் ‘அன்று இரவு’, ‘கயிற்றிரவு’ மற்றும் ‘சாப விமோசனம்’ கதைகளை 20, 30 தடவை வாசித்ததாக பதில் சொல்லியிருப்பார். நான் நாஞ்சில் அவர்களைப் போல 20, 30 தடவைகள் எந்தச் சிறுகதையையும் வாசித்ததில்லை. ஆனால், பிடித்த சிறுகதைகளை நான்கு அல்லது ஐந்து முறைகள் வாசித்திருக்கிறேன். சுனில் கிருஷ்ணனின், வாசுதேவன் கதையை சில வருடங்களுக்கு முன் பலமுறை வாசித்த வாசகனாக , “வீடொன்று கட்டி ஒரு செங்கல்லை எடுத்துவிட்டால் வீடே இடிந்துவிடும் என்பதுபோல ஒரு வார்த்தையை / ஒரு வாக்கியத்தை எடுத்தாலும் இந்தக் கதையின் ஆத்மார்த்தம் போய்விடும் என்பதுபோல செதுக்கியுள்ளீர்கள் “ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். அவரது பேசும்பூனை , அம்புப்படுக்கை கதைகளை மாய்ந்து மாய்ந்து வாசித்திருக்கிறேன். ஆயுர்வேத மருத்துவத்தைப் பற்றிய ஒரு புரிதலை சுனிலின் கட்டுரைகளின் மூலமே கண்டடைந்தேன். அவரை மார்ச் 18, 2023 இணைய நிகழ்வில் சந்திக்க ஒரு விழாக்கால மனநிலையுடன் வாசகனாக காத்திருந்தேன். அதே மனநிலையில்தான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களும் இருந்தார்கள். கடந்த இருபது நாட்களாகவே அவரது புனைவுகள் / அபுனைவுகள் பற்றிய குறிப்புகள் வந்தவண்ணம் இருந்தன. 2019-ல் தாங்கள் அமெரிக்கா வந்தபொழுது, குழந்தைகளுக்கு இந்து ஞானத்தை அறிமுகப்படுத்த சுனிலின் நூலை பரிந்துரை செய்ததாக, தனக்கான தகவலை நண்பர் ஒருவர் பகிர்ந்தார்.
பிரபு, அவரது திரைப்படம் வெளியிடும் பணிகளுக்கு இடையில் சுனிலின் புனைவுகளை வாசிப்பதும், உரையாடுவதுமென இருந்தார். முதலில் சிறுகதைகள் குறித்து மட்டும் பேசுவதாக இருந்தவர், நாவலையும் வாசித்துவிட்டு சுனிலின் புனைவுகளுக்கு மொத்தச் சித்திரம் கொடுப்பதற்கு தயாராகிவிட்டார். அவரது உரையை நிகழ்வில் கேட்டவர்கள், Well Connected Speech என்று குறுஞ்செய்தி அனுப்பினார்கள்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா), முதன் முதலில் இணைய நிகழ்வு நடத்தியபொழுது, மதன் இன்றைய காந்தி வாசித்துவிட்டு அருமையான உரை ஒன்று நிகழ்த்தியது ஒவ்வொருவர் மனதிலும் அப்படியே இருந்தது. நவகாந்தியவாதியாக அறியப்படும் சுனில் கிருஷ்ணனின் காந்திய நூல்களைப் பற்றிப் பேச, காந்திய நூல்களை தொடர்ந்து வாசிக்கும் மதனே சரியான ஆள் என ஏகமனதாக ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டார்கள். நிகழ்வில் மதனும் , நம்பிக்கையை தக்கவைப்பவராக, ‘கல்மலர்’, ‘காந்தி எல்லைகளுக்கு அப்பால்’ நூல்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கொடுத்தார். சுனில் கட்டுரைகள் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளன என்று மதன் விளக்கும் விதத்திலேயே, காந்தி பற்றிய மேற்போக்கான எண்ணம் உள்ளவர்களுக்கு புதிய பாதை ஒன்று விரிவது தெரியும்.
திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் உண்டு. அதற்கென பாட்டு உண்டு. ஆனால், ஒரு எழுத்தாளுமையை அழைத்துச் சிறப்பிக்கும் விழாவில், புதிதாக ஒரு பாடலுக்கு இசையமைத்து அதைப் பாடிய புதுமையை ராஜன் சோமசுந்தரமும், விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமாரும் நிகழ்த்தியுள்ளார்கள். விஷ்ணுபுரம் நாவலில், திருவிழாவைப் பார்ப்பதற்கு , மாட்டுவண்டியில் பயணம் செல்லும் மக்கள் நகர் பற்றி, கோவில் பற்றி பாடும் பாடலை இசையமைத்து பாடத் தயாராவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கததால், ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சியும் ஆச்சர்யமும். வாசகனாக சுனில் விஷ்ணுபுரம் நாவலை அணுக்கமாக உணர்வார். அந்த வகையிலும் இந்தப் பாடல் பொறுத்தமாக அமைந்தது என்று நினைத்துக்கொண்டேன்.
சுனில் கிருஷ்ணன், எழுதியிருக்கும் 35 / 40 கதைகளில் பேசுபொருள் ஒரு கதைபோல் இன்னொன்றில் இருப்பதில்லை. காந்திய சிந்தனைகளை முன்னெடுக்கும் நூல்கள், ஆயுர்வேத மருத்துவக் கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள் என வெவ்வேறு தளங்களில் அவர் நூல்கள் இருப்பதாலோ என்னவோ இணைய அரங்கம் வாசகர்களால் நிறைந்து இருந்தது. குறைந்தது நாற்பது வாசகர்களாவது பதினைந்து நிமிடம் முன்னர் வந்து காத்திருந்தனர். கேள்விகளும் அவர் எழுதிய அனைத்துத் துறைகளிலும் இருந்து கேட்கப்பட்டன. ஒருங்கமைப்பாளர் ஜாஜா, பழுவேட்டரையரின் கதையின் பின்னனி என்ன என்று சுனிலைக் கேட்டு காத்திரமாக செல்லும் சூழலை கொஞ்சம் இலகுவாக்கினார். ஆயுர்வேதம், யோகா – இவைகளை சொந்தவாழ்க்கையில் பின்பற்றுவது. – நுகர்வோரின் உலகமான நவீனவாழ்க்கையில் சாத்தியமில்லை. இலக்கியச் செயல்பாடு, எழுத்து, வாசிப்பு – அடுத்து அடுத்து என ஓடும் வாழ்க்கையில் இது எப்படி சாத்தியம். இந்த அனைத்து முகங்களும் உடையவராக சுனில் வாசர்களது எண்ணங்களில் உள்ளதால் – அவரை அறிந்துகொள்ள ஆர்வமான கேள்விகள் இருந்தன. சுனிலின் விளக்கங்கள் மேன்பட்ட புரிதல்களை கொடுப்பதாக இருந்தன..
தாங்களும் வந்திருந்து வாசகர்களோடு வாசகராக கேட்டு ஆதரவு கொடுத்ததற்கு நன்றியும் மகிழ்ச்சியும்..
இதுவரை க.நா.சு உரையாடல் அரங்கில், கவிஞர் ஒருவரை அழைத்து உரையாடியதில்லை. அடுத்து அனைவருக்கும் அணுக்கமான கவிஞர் ஒருவரை, விருந்தினராக நண்பர்கள் எதிர்பார்க்கலாம்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
கன்னியின் காலடியில்
March 19, 2023
ஓர் இரவு
(ஒரு பழைய கட்டுரை. Sep 21, 2010 ல் வெளியானது. பதிமூன்றாண்டுகளில் ஒவ்வொருவரும் என்னென்ன ஆக ஆகியிருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன். ஆச்சரியமாக அனைவரும் அப்படியேதான் இருக்கிறார்கள். இக்கட்டுரை வெளியான அக்காலத்தில் எழுந்த பரவலான கேள்வி ‘அது என்ன பிராண்ட்?’ என்பதுதான்)
ஷாஜி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். வழக்கம் போல அமெரிக்க கறுப்பர்களுக்கு உரிய ஆடும் நடையில் வந்து என் பெட்டியை சுழற்றித்தூக்கி காருக்குள் போட்டார். நான் உள்ளே அமர்ந்ததும் ‘எப்டி போய்ட்டிருக்கு?’ என்றேன்.
‘என்ன போறது? விமரிசனத்துக்கே விமர்சனம். மவனே இசை விமர்சகன்னு மட்டும் சொன்னே கீசிடுவேன்னு சொல்றாங்க’ என்றார்.
நான் பீதியுடன் ‘இல்ல, நான்கூட நாளைக்கு சாயங்காலம் இசைய பற்றிபேசணுமே’ என்றேன்.
‘ஏன்? என்ன பிரச்சினை?’ என்றார்.
‘எனக்கு இசையைப்பற்றி ஒண்ணுமே தெரியாதே’ ‘அது உங்கள் வாசகர்களுக்கு எல்லாம் தெரியுமே…’ என்றார்.
தெரியாத விஷயங்களைப்பற்றி பேசுவதற்கு எழுத்தாளர்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது என நம்புகிறவன் நான். தெரியாத விஷயங்களைப்பற்றி தெரிந்தது போல பேசுபவன் இலக்கியவாதி, தெரியாத மாதிரியே பேசுபவன் அரசியல்வாதி. இசை தமிழகத்துக்கு அவசியத் தேவை என்று ஒரே போடாகப் போட்டு விட்டால் என்ன? ஆனால் கிட்டத்தட்ட அதே கருத்தை எஸ். ராமகிருஷ்ணனும் சொல்லக் கூடும். இசை என்றால் ‘இந்த ரேடியோ பெட்டியிலே காலையிலே கேக்குமே அதானே’ என்ற அளவில் அவரும்தான் சிறுவயதிலேயே இசையை அறிந்து வைத்திருக்கிறார். இளவயது நினைவுகளில் அலைவதற்கு அவருக்கு புனைவுலக உரிமைப் பதிவு வேறு இருக்கிறது.
ஏதாவது ஒப்பேற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் நான் ஷாஜியுடன் ஓட்டல் துளசி பார்க்குக்கு வந்தேன். ஷாஜி பதற்றமாக இருந்தார், சும்மாவே பதற்றமாக இருப்பது வழக்கம். இப்போது உரிய காரணங்களுடன். இதோ வருகிறேன் என்று கிளம்பிச் சென்றார். நான் என் மடிக்கணினியை விரித்தேன். இப்படியே போனால் இரும்பு உருக்குவது, கோழி வளர்ப்பது பற்றியெல்லாம் பேச அழைத்து விடுவார்கள் என அச்சமாக இருந்தது. இதை ஒப்பேற்றி விட்டால் இசைத் தெய்வத்துக்கு ஒரு தேங்காய் உடைத்து விடலாம் என்று வேண்டிக் கொண்டேன்.
ஏற்கனவே இசை பற்றி கொஞ்சம் யோசித்து வைத்திருந்தேன். அதை திரும்பவும் வாசித்துப் பார்த்தேன். உலக வரலாற்றிலேயே முதல் முறையாக இசைப்பது, கேட்பது இரு அம்சங்களும் இல்லாமல் இசை பற்றி எழுதப்பட்ட கட்டுரை. பாப்புலர் இசை என்பதை பரப்பிசை என்று மொழியாக்கம் செய்திருந்தேன். சோவியத் கலைச்சொல். அவர்களுக்கு இம்மாதிரி விஷயங்களில் பொதுவாக துணிவு அதிகம். அதை திரும்ப ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பார்த்தால் சரியாக வரவேண்டும் என்பது ஒரு விதி. பார்த்தேன். அகல இசை என்றோ தட்டை இசை என்றோ வந்தது. தமிழைப் பொறுத்தவரை மொழியாக்கம் சரிதான் என்ற நிறைவு உருவானது
ஆனால் நல்ல உரையில் பொன்மொழிகள் தேவை. வள்ளுவர் இசை கேட்கும் வழக்கம் இல்லாதவரென்று நினைக்கிறேன். ‘என்னத்தை குழலும் யாழும்? என் புள்ளை பேசுறான்பாரு’ என்ற தோதில் ஏதோ அவர் எழுதியிருக்கிறார். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ ஆனால் அது இசைபற்றித்தானா? பாட்டைக்கேட்டு ஈ என இளிக்கும் என்னைப்போன்றவர்களைப்பற்றியா? ‘நல்ல இசை சோகமானது’ அரிய கருத்து, ஆனால் அதை ஏற்கனவே பாரதி சொல்லிவிட்டார். ‘நல்ல இசை விமர்சனமும் சோகமானது’ என்று சொல்லிப்பார்த்தால் ஷாஜிக்கு நியாயம்செய்வதாக ஆகும். அவரை அறிந்தவன் என்றமுறையில் ‘நல்ல இசை விமர்சகன் சோகமானவன்’ என்றால் என்ன? கொஞ்சம் அதீதமோ?
அருண்மொழியை கூப்பிட்டு வந்து சேர்ந்த விஷயத்தைச் சொன்னேன். ‘பாத்துப்பேசு. நீ என்ன சொன்னாலும் ரெண்டு தரப்பும் தப்பாத்தான் புரிஞ்சுகிடுவாங்க’ என்றாள்.
”அப்ப?” என்றேன்.
‘புரியாமலே பேசிடறது ரொம்ப நல்லது’
அதுவும் சரிதான். ஆனால் நெடுங்காலமாக அது எனக்கு பழக்கம் இல்லை. குறைந்த பட்சம் எனக்குப் புரியக் கூடிய முறையில் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். மேலும் தப்பாக புரிந்து கொள்ளப் படுவதற்கு சரியாக புரிந்து கொள்ளப் பட வேண்டிய தேவை இல்லையே. நானும் கடந்த இருபதாண்டுகளாக தொடர்ந்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பழகிப்போனவன். சரியாக புரிந்து கொண்டவர்கள் எதிரிகளாக இருக்கிறார்கள்.
சிறில் அலெக்ஸ்சரிதான் என்று அந்த கட்டுரையை மூடிவிட்டு இன்னொரு கட்டுரையை விரித்து வாசித்தேன். ஊரில் இருந்து கிளம்பும் போதுதான் அதை எழுதியிருந்தேன். சொரேர் என்றது, தொ.பரமசிவன் பற்றிய கட்டுரை. அவர் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லாத கருத்துநிலை கொண்டவர். ஆனால் அழகர் கோயில் நூல் வழியாக ஒரு புதிய பாதை காட்டியவர் என்ற முறையில் அவர்மீது ஆழமான அபிமானமும் கொண்டிருந்தேன். கட்டுரை மட்டையடியாக இருந்தது. ஆய்வுசார்ந்த ஒரு புத்தகத்தில் பன்னிரு கட்டுரைகள், பன்னிரண்டும் தகவல்பிழை என்றால் வாசகனுக்கு எழும் வயிற்றெரிச்சல்தான் என்னுடையது. ஆனால் தொ.பரமசிவனை பொருத்தவரை பின்தொப, முன்தொப என இருவர் உள்ளனர். இருவரையுமே காய்தல் உவப்பன்று. குருநிந்தனை ஏற்கனவே நிறையச் செய்தாயிற்று.
கட்டுரையை ஏற்கனவே இணையத்தில் ஏற்றி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும்படி அமைத்திருந்தேன். உடனே வெளியே சென்று இணைய நிலையத்துக்கு போய் கட்டுரையை எடுத்து விஷப்பற்களை பிடுங்கி விடலாம். ஆனால் கதவு தட்டப் பட்டது. பூனைபோல பவ்யமாக திறந்து கொண்டு கெ.பி.வினோத் வந்தார். ஆபீஸில் இருந்து மூன்றுமணிக்கே தப்பி விட்டதாகச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் கோவை அரங்கசாமி முழுக்கை சட்டை முழுக்கால் பாண்ட் போட்டு கோவை சிறுதொழிலதிபர்களுக்கே உரிய அடக்கமான சிரிப்புடன் வந்தார். அதன்பின் சிறில் அலெக்ஸ். வல்லின றி, மறக்காமல் போடவேண்டும். கொஞ்ச நேரத்தில் ஷாஜியும் வந்தார். அதன்பின் தனசேகர்.
அரங்கசாமியிட்ம் அவரது ரிலையன்ஸ் இணைய இணைப்பை வாங்கி என்னுடைய மடிக்கணினியில் பொருத்தி திறந்தேன். வழக்கமாக ரிலையன்ஸ் இணைப்பை ஐஆர்8 அரிசி போல என்பார்கள். என் அம்மாவெல்லாம் அந்தக்காலத்தில் காலையில் எழுந்ததுமே கண்ணைக்கூட திறக்காமல் போய் மதியச்சோற்றுக்கு அரிசியை அடுப்பில் களைந்து போட்டு விடுவார்கள். பன்னிரண்டரை மணிவாக்கில் வடிக்க முடியும். நான் என் ஜிமெயிலை திறந்து வைத்துவிட்டு அவர்களிடம் பேசப்போனால் அது சட்டென்று திறந்தது. மின்னஞ்சல்களை பார்த்தேன். உற்சாகமாக இருந்தது. ஹமீதுடன் என் சண்டை தொடர வேண்டும் என உலகம் முழுக்க பரவலாக கருத்து நிலவுவது தெரிய வந்தது. கோமதி சங்கரின் மாற்றுக்கருத்தை மட்டும் பிரசுரித்து விட்டு என் இணையதளத்தை திறந்தால் ஐஆர்8 குணம் காட்டியது. திறக்கவில்லை.
‘அது அப்டி ஆகும். மெயிண்டெனன்ஸ் பண்ணுவாங்க’ என்று சொன்னார் சிறில். உலகிலேயே சிறப்பாக மெயிண்டெனன்ஸ் பண்ணப்படும் இணையதளம் வேர்ட் பிரஸ், தினம் நான்குமுறை.
சரி என பேச்சில் கலந்துகொண்டேன். விஷயம் ‘ஷாஜி இசை விமர்சகரா?’ . இசையப்பற்றி எழுதினாலே அது இசை விமர்சனம்தானே என்ற கருத்தில் இருந்து ஆரம்பித்தது. ஆனால் ஷாஜி ஏன் அவரைப் பற்றியும் எழுதுகிறார்? அவர் இசை கேட்கிற விஷயம் கட்டுரையில் வரவில்லை என்றால் எப்படி வாசக நம்பிக்கை ஏற்படும்? ஆனால் ஷாஜி இசை விமர்சகரல்ல என்று எப்படிச் சொல்லலாம்? ‘ஆனா அது ஒரு தரப்பு’ என்றார் சிறில். உலகில் நிலவும் எல்லா கருத்துக்களும் ஏதோ ஒரு தரப்பு என்று அடிப்படையில் ஒத்துக்கொள்ளும் பரிபக்குவம் அவருக்கு உண்டு.
தரப்பு என்ற சொல் அரங்கசாமியை மகிழ்வித்தது. ‘சிறில் அலெக்ஸ் சொல்றது அவரோட தரப்பு’ என்றார்.
பீர் அருந்திக்கொண்டே மேலே பேசலாமே என்ற கருத்து ஷாஜியால் முன்வைக்கப்பட்டது. சொந்த செலவில் சூனியம் என நான் நினைத்துக்கொண்டு கவலையுடன் கணினியை பார்த்தேன். இன்னமும் பராமரிப்பு வேலை நிகழ்ந்துகொண்டே இருந்தது. தனசேகர் குடிமறுத்தார். ஷாஜியின் கட்டுரையில் சுதிசேரவில்லை என்று சேதுபதி அருணாச்சலம் சொல்வதைக் கேட்டுத்தான் ஷாஜி அதற்கு முற்படுகிறரா என்ற ஐயமும் எழுந்தது.
கெ.பி.வினோத் குளிக்காமல் பீர் அருந்துவது விஜய் மல்லய்யாவின் உணர்வுகளை புண்படுத்துவது என்று எண்ணம் கொண்டிருந்தார். ஓடிப்போய் திரும்பும் அருகில்தான் அவர் வீடு. இதோ வருகிறேன் என்று வெளியே பாய்ந்தார்.மற்றவர்கள் பீர் அருந்தினார்கள்.
’அப்ப நாம என்ன பேசிட்டிருந்தோம்?’ இசையைப்பற்றி என்பது எல்லாருக்கும் நினைவில் இருந்தது.
‘பரப்புக்கலைய மதிப்பிடுறதைப்பத்தி என்ன சொல்றேன்னா…’ என்றேன்.
‘பருப்புக்கலைன்னா? நீ என்னடா பெரிய பருப்பான்னு கேப்போமே அதுவா?’ என்றார் ஷாஜி.
நான் கவலையுடன் பார்த்தால் என் இணையதளம் திறக்கவில்லை. உலகில் உள்ள அனைத்து இணையதளங்களும் இனிதே திறந்தன. எனக்கு தொ.பரமசிவன் பற்றி கொஞ்சம் கவலை ஏற்பட்டது. இசை விமர்சனத்தின் அதி நுண்மைகளை நோக்கிச் சென்றது விவாதம். படிப்படியாக அது இசை விமர்சனமே தேவை இல்லை என்ற எல்லையை எட்டியது. கெ.பி.வினோத் வந்து சேர்ந்தார்.
‘இசையிலே பல வகை இருக்கு…எல்லா இசையும் இசைன்னாக்கூட …’ என்று சிறில் பேசிக்கொண்டிருக்க நான் என் தளத்தை பார்த்தேன். ஊப்ஸ், ஒண்ணுமே பண்ண முடியலை என்றது இண்டெர்நெட் எக்ஸ்புளோரர்.
திரும்பினால் ‘…எங்க ஊர்ல பாதிரிமார்களைப்பத்தி வேற மாதிரி சொல்வாங்க…’ என்று பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. என்ன ஆயிற்று? கைத்தவறுதலாக ரிமோட்டில் விரல்பட்டு சேனல் மாறுவது போல ஒட்டுமொத்த அறையே வேறு விவாதத்தை நோக்கிச் சென்று விட்டிருந்தது. இத்தனைக்கும் நான் கணினியை மட்டுமே தொட்டிருந்தேன்.
பலவகையான பாதிரிமார்கள். பலவகை சினிமா நடிகர்கள். என்.டி ராமராவின் நடனத்தை ஷாஜி ஆடிக்காட்டினார். நான் சிரித்து குப்புற விழுந்து எழுந்து கணிப்பொறியை பார்த்தேன். ஒன்றும் நிகழவில்லை. மேலும் பீர்புட்டிகள் உறைந்த மீன்கள் போல பனிபடர்ந்து வந்து சேர்ந்தன. ஷாஜி உடனடியாக வீடு செல்லவேண்டும் என்று சொல்லி கிளம்பினார். நான் இசைக்கட்டுரையில் ஏதாவது உருப்படியான தகவல்களை சேர்க்கமுடியுமா என்று பார்த்தேன். பொதுவாக ஒரு கட்டுரையில் ஒன்று இரண்டு என்று எண்ணிக்கை போட்டு விஷயங்களைச் சொன்னால் ஒரு கனம் வருகிறது. ஆகவே ஆறு பரப்புக்கலைகளைப்பற்றிச் சொன்னேன். ஆறுக்கும் ஆறு திசைதேவதைகள்.
கெ.பி.வினோத் ‘அப்ப நம்மளோட போஸ்டர் ஒட்டுறது பரப்புக்கலை இல்லியா?’ என்றார். சேர்க்கவேண்டும்தான். ‘வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்’, ‘தமிழே தமிழுக்காக நடத்துகும் தமிழ்மாநாட்டில் தமிழ் அழைக்கிறது’ போன்ற கவித்துவச் சாத்தியங்கள் நிகழும் கலை அது. ஆனால் அதைச் சேர்த்தால் தர்ணா, சாலைமறியல் எல்லாவற்றையும் சேர்க்கவேண்டும். அவற்றை நாட்டுப்புறக்கலை என்றும் சொல்லலாமே.
பரப்புக்கலை குறித்த விவாதம் உக்கிரமாக நடந்தது. மெல்ல விவாத யந்திரத்தின் பற்சக்கரங்கள் நடுவே க்ரீஸ் சாலப்பெய்ய ஆரம்பித்து அவை கொழ கொழ என தங்கள் அச்சுகளில் தாங்களே இனிது சுழல ஆரம்பித்தன. ‘..ஆனா அது ஒரு தரப்புதான்’ என்றார் சிறில்.
மணி பன்னிரண்டு. சிறில் இணையதள உரிமையாளரிடம் பேசியபோது காலையிலாகிவிடும் என்றார்கள். கட்டுரை பிரசுரமான பின்னர் தூக்குவதை அரங்கசாமி ஆட்சேபித்தார். உடனே அதை கப்பென பிடித்து இணையத்தில் ஏற்றி ஹிட்லர் டைரிகளைப்பற்றி பேசும் உற்சாகத்துடன் நுண்விவாதத்தில் ஈடுபட ஒரு கும்பலே இருக்கிறது என்றார். நான் கவலையுடன் கடைசியாக தொ.பரமசிவன் பற்றிய கட்டுரையை வாசித்தேன். இந்தமட்டுக்கும் நிதானமாகத்தான் இருக்கிறதென ஆறுதல் கொண்டேன். நானெல்லாம் சின்னவயதில் இதை எழுதியிருந்தால் முதல் வரியிலேயே ‘டாய் என்னாடா நெனைச்சுக்கிட்டே? வெளியே வாடா’ ரீதியில் ஆரம்பித்திருப்பேன்
அரங்கசாமி ஒரே விஷயத்தை ரொம்பநேரமாக திரும்பத்திரும்ப சொல்வது போல இருந்தது. கவனித்தேன், அது குறட்டை. கெ.பி.வினோத் ‘நான் என்ன நினைக்கிறேன்னா, அரங்கசாமி தூங்கிட்டார்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?’ என்றார்.
சிறில் ‘அது பிரச்சினையே இல்லை. அது ஒரு தரப்பு , நாம எதைப்பற்றி பேசிட்டிருந்தோம்?” என்றார்.
‘ஒரு இசைக்கட்டுரை ஒரு வசைக்கட்டுரை. ரெண்டுமே பிராப்ளம்’ என்றார் கெ.பி.வினோத்.
‘அப்ப நாம கிளம்பலாமா?’ என்று சொல்லி இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.
வடபழனி தாண்டிச்செல்லும்போது காரை ஓட்டிய சிறில் திடீரென தன்னருகே கெ.பி.வினோத் இருப்பதை உணர்ந்து ‘நீங்க எங்க போறீங்க வினோத்?’ என்று கேட்டிருக்கிறார்.
‘உங்களை டிராப் பண்ணணும்ல?’
சிறில் ‘தேங்க்ஸ்’ என்றபின் இருபது நிமிடம் சிந்தனைசெய்து ‘இல்ல, அமெரிக்காவிலே எல்லாம் டிராப் பண்றவங்கதான் காரை ஓட்டுவாங்க’ என்றார்.
கெ.பி.வினோதும் அதை உணர்ந்து ‘ஆமா, அதைத்தான் நானும் ரொம்ப நேரமா நினைச்சிட்டிருக்கேன். அப்டீன்னா நீங்கதான் என்னை டிராப் பண்ணணும். ஏன்னா நீங்கதான் கார் ஓட்டுறீங்க’
இருவருமாக அதை விரிவாகப் பேசி தெளிவுபடுத்திக்கொண்டபின் சிறில் ‘அப்ப உங்க வீடு எங்க இருக்கு?’
”துளசி பார்க் பக்கத்து கட்டிடம். என்னை துளசி பார்க்கிலே இறக்கி விட்டால் நான் நடந்தே போய்டுவேன்”
”இப்ப நாம எங்க இருக்கோம்?” என்றார் சிறில்.
‘வடபழனின்னு நினைக்கிறேன்”
துளசி பார்க் வாசலுக்கு வந்ததும் கெ.பி.வினோத் அக்கறையுடன் ”சிறில் ரொம்ப நேரமாச்சு, நான் வேணுமானா உங்களை டிராப் பண்ணவா?” என்றார்.
”அதுக்கு உங்க கிட்ட கார் இல்லியே…”
”உங்க காரிலதான்”
”அப்ப எப்டி நீங்க திரும்பி வருவீங்க?”
இருவரும் அதை விவாதித்து தெளிவுபடுத்திக்கொண்ட பின்னர் அவரவர் வீடு திரும்பியிருக்கிறார்கள்.
ஷாஜி கூப்பிட்டார். ‘அவங்க போய்ட்டாங்களா’ என கேட்டார்
‘ஷாஜி, நீங்க கிளம்பினதுமே அவங்க மறுபடியும் பீர் குடிக்க ஆரம்பிச்சாங்க’ என்றேன்
‘என்னது?’ என்று ஷாஜி கூவினார்.’இப்ப எங்க இருக்காங்க?’
என் மெத்தைக்கு பக்கத்து மெத்தையில் அப்படியே எழுந்து ஒரு பிஸினஸ் ஒப்பந்தத்தை கையெழுத்து போடும் உடைகளுடன் அரங்கசாமி தூங்கிக்கொண்டிருந்தார்.
நான் இணையதளத்தை பார்த்தபின் இசைக்கட்டுரையில் சில மாற்றங்கள் செய்தேன். தொ.பரமசிவன் கட்டுரை இனி விதியின் கைகளில். இந்த இருண்ட இரவில் கோடானுகோடி நட்சத்திரங்களில் கோடானுகோடி உலகங்களில் கோடானுகோடி செயல்களை கட்டுப்படுத்தும் விதி இதையும் எதையாவது செய்து சமாளித்துக்கொள்ளும். என் மின்னஞ்சலை திறந்து கடைசியாக கடிதங்களை பார்த்தேன். தொ.பரமசிவம் கட்டுரைக்கு சண்முகத்தின் எதிர்வினை. அய்யய்யோ என்று என் இணையதளத்தை திறந்து பார்த்தேன். பிரசுரமாகியிருந்தது.
மணி இரண்டு, வேறுவழியில்லை தூங்கவேண்டியதுதான். ‘தொ.பரமசிவன் சரியான இசை விமர்சகர்தானா?’ என சிந்தனை ஓடியதை நானே உணர்ந்து கொஞ்சம் திடுக்கிட்டேன். விஜய் மல்லய்யா காற்றிலேயே போதையை பரப்பும் பீர் எதையாவது கண்டுபிடித்திருக்கிறாரா என கொஞ்சம் சந்தேகமாக இருந்தது.
எம்.டி.வாசுதேவன் நாயர்
மலையாள இலக்கிய வரலாற்றிலேயே புகழ்பெற்ற எழுத்தாளர் யார் என்றால் எளிதாகச் சொல்லிவிட முடியும், எம்.டி.வாசுதேவன் நாயர். இலக்கியம், சினிமா, இதழியல் என எல்லா களங்களிலும் அவர் சாதனை செய்திருக்கிறார். இன்று நான்காம் தலைமுறையினரும் விரும்பி வாசிக்கும் படைப்பாளி. அவருக்குப்பின் வந்த இருத்தலியல் எழுத்தாளர்களெல்லாம் போய் மறைந்துவிட்டனர்
தருமம் மறுபடி வெல்லும்!:MSV.முத்து
There are annoying misprints in history, but the truth will prevail!
—Nikolai Ivanovich Bukharin (1937)
“மிஞ்சும் சொற்கள்” என்ற கடைசி அத்தியாயத்தில் இவ்வாறு சொல்கிறார் அருணாச்சலம்:
ஆனால் ஒன்று மட்டும் நிபந்தனை விதித்தேன். தலைப்பு நான் சூட்டுவதுதான். ‘பின் தொடரும் நிழலின் குரல்’- புகாரினை, வீரபத்ரபிள்ளையை, என்னைப் பின் தொடர்ந்தது எங்கள் நிழல்கள் தாம். நிழலை ஒருவன் ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அது மறுபாதி. அது நம்முடன் இடைவிடாது உரையாடுகிறது. ஒளியைத் தன்முன் கண்டு நடக்கும் ஒவ்வொருவர் பின்னாலும் நிழல் தொடருகிறது. நிழலின் குரலை ஒரு போதும் நாம் புறக்கணித்துவிடக்கூடாது.
***
ஜெயமோகன் என்ற எழுத்தாளரை யார் எனக்கு அறிமுகம் செய்தது என்று எனக்கு நினைவில்லை. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு விகடன் மூலம் அறிமுகமானார். ஆனால் ஜெயமோகன் எனக்கு எதேச்சையாக நூலகத்தில் சும்மா படிப்பதற்கு தமிழ் நூல் தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமாகியிருப்பார் என்று நினைக்கிறேன். குறிப்பாக ‘காடு’ நாவல். அதற்கப்புறம் ஜெயமொகனின் சிறுகதைத் தொகுப்பு. காடு நாவலில் தான் பின் தொடரும் நிழலின் குரல் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அன்றிலிருந்து இந்த நாவலைப் படித்துவிடவேண்டும் என்று தீர்மானமாய் இருந்தேன். ஏன் என்று எனக்கு தெரியாது. அதற்கப்புறம் மதுரை இலக்கியபண்ணையில் இந்தமுறை ஜெயமோகன் நாவல்கலைத் தேடியபோது எனக்கு கிடைத்தது ஒன்றே ஒன்று தான்: விஷ்ணுபுரம். ஏன் என்று யோசித்தேன். ஒருவேளை நிறைய மக்கள் ஜெயமோகனைப் படிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அப்புறம் விஷ்ணுபுரத்தை வீட்டில் கொடுத்த போது, யாவரும் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்து சற்று மிரளவே செய்தனர். அப்புறமும் தைரியமாக எடுத்து படித்தவர்களில் என் அப்பாவும் என் அண்ணனும். அதில் நூறு பக்கத்தைத் தாண்டியவர் என் அண்ணன் ஒருவரே. (என் அப்பாவும் அண்ணனும் நிறைய நாவல்கள் படிப்பவர்கள். என் அப்பா தமிழாசிரியர். என் அண்ணன் வழக்கறிஞர்). நான் இதற்கு முன்பு எழுதிய ஆயிரம் கால் இலக்கியம்-7 -ல் அசோகமித்திரன் அவர்களின் நேர்காணலில் அவர் ஒரு கேள்விக்கு அளித்த ஒரு பதிலில் : ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் நிறைய எழுதுகின்றனர். ஆனால் யார் படிக்கிறார்கள் என்று கேட்டிருந்தார். மிகச்சரியான கேள்வி. நியாயமான கேள்வி. இல்லையா?
இன்றைய பாம்ப்லட்(pamphlet) உலகில் யார் எழுநூறு பக்க நாவல்களை படிக்க தயாரக இருக்கின்றனர்? அப்படியும் சொல்லிவிட முடியாது. பொன்னியின் செல்வனை மீண்டும் மீண்டும் பலமுறை படித்த -படிக்கின்ற! என் நண்பர் ஒருவர் சாப்ட்வேர் துறையில் இருப்பவர் தான்; பொன்னியின் செல்வனை, அதுவும் ஈ-புக், விடாமல் லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டே; படுக்கும் போது, உட்காரும் போது பாத்ரூமுக்கு தவிர; என்று எல்லாஇடங்களிலும் தூக்கிசென்று படித்து முடித்தார் – மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் வேறு மாதிரி. பின் தொடரும் நிழலின் குரல் (பி.நி.கு) வேறு மாதிரி. இரு நாவலையும் ஒப்பிடுதென்பதே அபத்தம். ஆனால் பக்கங்களின் எண்ணிக்கையில் மட்டுமே ஒப்பிடலாம். பொன்னியின் செல்வனில் ஒரு முடிச்சு எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். பிறகு காதல், நகைச்சுவை, வீரம் என்று சரியான அளவில் கலந்திருக்கும். ஆனால் பி.நி.கு தத்துவம் சார்ந்தது. தருக்கம் செய்வது. வாதடுவது. உண்மைகளை பொய்களை எடுத்து ஆராய்வது. அல்லது சிலர் சொல்லுவது போல ஒரு சார்பாக நின்று – அப்பொழுது வாதாடுவது. அலசுவது. இது சரி என்று சொல்வது. பிறகு இது சரியில்லை என்று சொல்லிவிடுவது. பிறகு அதுதான் சரி என்று சொல்வது. கடைசியில் அதுவும் சரியில்லை இதுவும் சரியில்லை இது தான் சரி என்று முடிவு சொல்லாமல் சொல்வது. சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் போல அல்ல.
வாதங்கள். வாதங்கள். பின்னர் மேலும் வாதங்கள். பின்னர் மேலும் மேலும் வாதங்கள். நம்மை குழப்பும் வாதங்கள். (பிறர் சொல்வது போல: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வாதங்கள்.!) சில இடங்களில் ஏன் இப்படி-போதுமைய்யா போதும் என்று மூடிவைத்துவிட தூண்டும் வாதங்கள். பிறகு நாமே யோசித்துப் பார்த்து வேறு என்ன வாதங்கள் இருக்கின்றன என்ற எதிர்பார்ப்பில் அதே பக்கத்துக்குப் போகவைக்கும் வாதங்கள். தெளிந்த வாசகன் மட்டுமே கடைசிவரை செல்ல முடியும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவனை மட்டுமே கடைசி வரை கூட்டிச்செல்லும். படிக்க முடியவில்லையா? பிடிக்கவில்லையா? குழப்பமாக இருக்கிறதா? தயவு செய்து விலகிக்கொள். என்னுடைய ஆள் இல்லை நீ. உன்னை கண்டிப்பாக படிக்கவைக்கவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு ஏதும் இல்லை. அதற்காக அத்தியாயங்கள் தோறும் முடிச்சுகள் வைக்க என்னால் முடியாது. முடிந்தால் படித்துக்கொள் என்று சவால் விடும் வாதங்கள்.
நான் நாவலை நூலகத்திலிருந்து எடுத்து ஒரு வாரம் வரையில் முன்னுரையிலேதான் இருந்தேன். நாவலின் முதல் அட்டையுடன் சேர்த்த பக்கத்தில் (வேறு பதிப்புகளில் எப்படி இருக்கிறது என்று தெரியாது. நான் படித்தது தமிழினி வெளியீடு!) பிட்ஸ்பர்க்கின் புகைப்படம் இருந்தது. எனக்கு அது பிட்ஸ்பர்க் தான் என்று என்னுடைய மேலாளர் சொல்லும்வரை தெரியாது. அப்படித்தான் இருக்கிறது எனது கம்யூனிச அறிவு. எனது பள்ளி நாட்களில் கொஞ்ச நாட்கள் (மாதம்!) நான் த.மு.எ.ச வின் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அவர்களது நூலகத்தில் (அவர்களது நூலகங்கள் அழகாக இருக்கும். அங்கு தான் எனக்கு முதன் முதலில் கணையாழியின் அறிமுகம் கிடைத்தது. மேலும் பல கம்யூனிச புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒன்றைக்கூட படித்ததில்லை என்பது வேறு விசயம். அனால் எனக்கு குமுதம் ஆனந்த விகடன் இல்லையே என்று ஏக்கமாக இருக்கும்!) இரண்டு திருக்குறள்கலோடு ஆரம்பிக்கிறது நாவல். அருமையான குறள்கள்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
***
கதை வீரபத்ரபிள்ளை என்பவரைச்சுற்றியே சுழல்கிறது. வீரபத்ரபிள்ளை மிகப்பெரிய படிப்பாளி. உலக இலக்கியங்களைப் படித்தவர். டிபிஎல்யு என்ற தொழிற்சங்கத்தில் உறுபினராக இருக்கிறார். அதை நிறுவிய கே.கே.எம் என்றவருடைய வலதுகரமாக இருக்கிறார். தொழிற்சங்கம் ஸ்டாலினை மையமாகக்கொண்டு இயங்கிவருகிறது. ஸ்டாலினால்காந்த இயக்கம் கம்யூனிசத்தை சார்ந்திருக்கிறது. வீரபத்ரபிள்ளைக்கு இருக்கும் வெளி உலகத்தொடர்பால் (குறிப்பாக ரஷ்யா) அவருக்கு புகாரின் என்பவரைப் பற்றிய உண்மைகள் கிடைக்கிறது. கார்பச்சேவ் காலத்தில்.
புகாரின் ஸ்டாலிக்கு வலதுகரமாக இருந்தவர். ஸ்டாலினின், குளக்குகள் என்ற ரஷ்ய விவசாய பெருங்குடிகளுக்கு, எதிரான நிலைப்பாடு புகாரினை கிளர்த் தெழச்செய்கிறது. ஸ்டாலினுடன் மாறுபட்ட கருத்து கொண்டவராகிறார். ஸ்டாலின் புகாரினை தேசத்துரோகி என்று பழி சுமத்துகிறார். புகாரின் தனது இளம் மனைவியான அன்னாவை விட்டுவிடவேண்டும் என்ற நிபந்தனையின் பெயரில் குற்றங்களை ஒப்புக்கொள்கிறார். ஸ்டாலின் புகாரினுக்கு மரண தண்டனை விதிக்கிறார். புகாரினின் மனைவி சைபீரியாவின் வதைமுகாம்களில் சிறைப்படுத்தப்படுகிறாள். அவள் ஐம்பது வருடங்கள் கழித்து புகாரின் சொல்லியிருந்த வாக்குமூலத்தை கார்ப்பச்சேவ் விசாரணையில் கூறி கதறுகிறாள். புகாரின் நிரபராதி என்று தீர்ப்புவழங்கப்படுகிறது.
இதை அறிந்துகொள்ளும் வீரபத்ரபிள்ளைக்கு ஸ்டாலின் மேல் மிகுந்த கோபம் உண்டாகிறது. ஸ்டாலிக்கு எதிராக குரல் கொடுக்க முயல்கிறார். கட்சி மறுக்கிறது. அவரிடம் உண்மைகளை மறைக்கும் படி மன்றாடுகிறது. பலனில்லை. வீரபத்ரப்பிள்ளையின் படித்த அகங்காரம் முந்திக்கொண்டுவிட்டது. புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் அல்ல. பணியாத வீரபத்ரப்பிள்ளை கட்சியை விட்டு துரோகிப் பட்டம் சுமத்தப்பட்டு தூக்கியெறியப்படுகிறார். வீரபத்ரபிள்ளை தனிமரமாகிறார். மொத்த கட்சியும் அவர் மீது புழுதி வாரியிரைக்கிறது. வீரபத்ரபிள்ளை குடிக்க ஆரம்பிக்கிறார். மனம் தடுமாறுகிறார். கடைசியில் அனாதையாக உயிர்விடுகிறார்.
கேகேஎம் என்பவர் கட்சியின் நிறுவனர். அவர் தான் கட்சியை வளர்த்தவர். பின்னர் சமீபகாலத்தில் பழைய கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் -விட்டுக்கொடுக்கமுடியாமல்- ஒட்டாத தண்ணீராக கட்சியென்ற தாமரை இலையில் இருக்கிறார். அவரை தூக்கியெறிய விரும்பிய கட்சி மேலிடம், அவருடைய வலது கரமாக அருணாசலம் என்பவரை பயன்படுத்திக்கொள்கிறது. அருணாசலம் தேர்ந்தெடுக்கப்பட, கேகேஎம் வெளியேறுகிறார். பிறகு அவரும் கட்சியால் தூற்றப்படுகிறார்.
அருணாசலத்துக்கு மன இறுக்கம். ஆனால் வேறு வழியில்லை. இந்த சமயத்தில் தான் வீரபத்ரபிள்ளையின் மகனைச் சந்திக்கிறார் அருணாசலம். வீரபத்ரபிள்ளை எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பு அவருக்கு கிடைக்கிறது. அதற்குப்பிறகு அவரைப் பற்றி விசாரிக்கும் பொழுது கட்சியில் வீரபத்ரபிள்ளை என்ற ஒருவர் இருந்ததற்கான அத்தாட்சியே இல்லாமல் இருக்கிறது. கேகேஎம் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுகிறார் (கேகேஎம் க்கு வலது கரமாக இருந்தவர் வீரபத்ரபிள்ளை). பிறகு வீரபத்ரபிள்ளை எழுதிய சிறுகதைக்கு முன்னுரை எழுதிய ஒருவரை பிடித்து அவருடைய தொடர்பு என்று கோர்த்து வீரபத்ரபிள்ளை என்பவரது உண்மையான அடையாளத்தை கண்டுபிடிக்கிறார்.
வீரபத்ரபிள்ளையின் நிழல் அருணாச்சலத்தை தொடருகிறது. அருணாச்சலம் கட்சி சவனியரில் வீரபத்ரபிள்ளை பற்றி எழுத மிகுந்த முனைப்போடு இருக்கிறார். கட்சி மோப்பம் பிடிக்கிறது. அருணாச்சலத்தை எச்சரிக்கிறது. அருணாச்சலம் மனம் பிறழ்கிறார். பைத்தியமாகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தையின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவர் மீண்டு வருகிறார். உண்மையைச் சொல்லப்போனால் மனைவி நாகம்மையின் மீது அவர் கொண்ட காதல் தான் அவரை மீட்டுகொண்டுவந்தது என்று எண்ணிக்கொள்ளலாம். (நான் எண்ணிக்கொண்டது!). இந்த பிரச்சனையில் முக்கிய புள்ளியாக இருப்பவர் ராமசாமி என்பவர். ராமசாமி என்பவர் தான் அருணாச்சலத்திற்கு வீரபத்ரப்பிள்ளை பற்றி சொன்னவர். வீரபத்ரபிள்ளையின் தீவிர அனுதாபி அவர். ராமசாமியின் வீட்டில் ஜெயமோகன் இருக்கும் போது அருணாச்சலம் முதன் முறையாக ராமசாமியை சந்திக்கிறார். முழுகதையையும் கேட்ட ஜெயமோகன் இதை நாவலாக தொகுத்து நமக்கு அருளியிருக்கிறார்.
இது தான் நாவலின் சாரம்சம். அடிச்சரடு. மல்லிகை இல்லாத நார். இதை சுற்றிலும் மல்லிகையாக ஜெயமோகனின் தத்துவம் மற்றும் தருக்கம். இங்கியல் மற்றும் மார்க்ஸிசம். ஸ்டாலின் மற்றும் லெனின். ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின். நான் மற்றும் எனது நிழல்.
***
ஆனால் நிழல் என்று ஏன் பெயரிட்டார் என்று தான் எனக்கு விளங்கவில்லை. நிழல் நம்மை எதிர்த்து குரல் கொடுக்காது. நிழல் நம்மை கேள்வியும் கேட்காது. நிழல் நாம் செய்வதை மட்டுமே செய்யும். மிகுந்த இருட்டான இடங்களுக்கு சென்று விட்டால் நம்மை விட்டு அகன்று விடும். ஜெயமோகன் சொல்வதைப் போல “தன் முன் வெளிச்சத்தைக் கண்டு நடப்பவர்களை எப்பொழுதுமே நிழல் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்பது மட்டும் முற்றிலும் உண்மை. ஆனால் எப்போதும் நம்மை விட்டு அகலாத ஒன்று மனசாட்சி மட்டும் தான். மனசாட்சி தான் எப்பொழுதும் நம்மை கேள்வி கேட்டுகொண்டேயிருக்கும். நிழல் என்பது வேறொன்றும் இல்லை மனசாட்சியே என்று வைத்துக்கொள்ளலாமா? இல்லை நிழல் என்பது வரலாறா? நாம் ஒவ்வொருவரின் பின்னேயும் வரலாறு பாலைவன மணல் போல காற்றால் மாற்றப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அந்த வரலாறு கூறும் உண்மைகளை உணர வேண்டுமா?
***
நாவல் எழுதப்பட்ட விதமே அற்புதம். எனக்கு இந்த முறை புதிது. அதாவது நாவல் முழுதையும் ஒரே கதையாகக் கூறாமல். கதையாக, கட்டுரையாக, கடிதமாக, கவிதையாக, நாடகமாக கூறியிருப்பதுதான் சிறப்பு. வீரபத்ரபிள்ளையின் ஆளுமைகள் அனைத்தும் நாவலில் அப்படியே இடம்பெறுகின்றன. வீரபத்ரபிள்ளை கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதுகிறார். கட்சித்தலைமை அவருக்கு பதில் கடிதம் எழுதுகிறது. இந்த இரு கடிதங்களிலும் ஸ்டாலினின் சிறப்பு மற்றும் வெறுப்பு அலசப்படுகிறது. வீரபத்ரப்பிள்ளையின் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள் கதைக்கு மேலும் பலம் சேர்க்கின்றன. வாதத்தை பலப்படுத்துகின்றன. கதையினூடாக ஜெயமோகன் வருவது யதார்த்தத்தை கொண்டுவருகிறது. நாவலின் பின் புலத்தைக் காட்டுகிறது.
***
கம்யூனிசம் தோன்றி இத்தனையாண்டுகள் ஆகிவிட்டிருந்தும் அவர்களது கனவான பொன்னுலகம் அவர்களுக்கு கிடைத்ததா? ஸ்டாலின் என்னதான் சாதித்தார்?
இன்றைக்கிருக்கின்ற கம்யூனிசத்தின் மீது பல கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. பழைய கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் கேகேஎம் பேசுகிறார். அவரை இன்றைய கம்யூனிசத் தொண்டர்கள் பழமைவாதி என்று முத்திரைக் குத்தி வெளியே அனுப்புகின்றனர். நிறுவனருக்கே இந்த நிலைமை. கட்சியும், தலைவர்களும் தங்களை மாறும் சமுதாயத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளவேண்டும் இல்லியா? தலைவர்கள் படிப்படியாக தரகு வேலை செய்யக் கற்றுக்கொள்கின்றனர்.
கே.கே.எம் சொல்கிறார்
நம்ப சங்கத்தில இன்னிக்கு எந்த கிளைலடே தத்துவமும் வரலாறும் அரசியலும்
சொல்லித்தாறம்? இங்க கூடியிருக்குத கிளைச் செயலாளர்களில் எவனாவது ஒருத்தன் எந்திருச்சு இங்கியல்னா என்னன்னு ஒரு பத்து நிமிஷம் பேச முடியுமாடே? என்னடே எவனாவது இருக்கியளா?சரித்திரம் முழுக்க மக்கள் முட்டாக் கும்பலாகத்தான் இருந்திருக்காங்க. அவங்களுக்கு எது நல்லதுண்ணு ஒருநாளும் அவங்களுக்கு தெரியாது. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம்னு சொன்னவன் மடையன் இல்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகம்னு சொல்ல அவனுக்கு தெரியாமலும் இல்லை.
ஜனங்களால ஒரு மேலான அரசாங்கத்தை உண்டு பண்ணிக்க முடியாது. தனித்தனியா ஒவ்வொருத்தனும் யோக்கியமானவனாத்தான் இருப்பான். கூட்டாச்சேர்ந்தா அறிவு கெட்ட மந்தயா ஆயிடுவான். புத்தியுள்ளவன் இழுத்த இழுப்புக்கு போற மந்தை. ஜனங்களுக்கு அறிவு கிடையாது. அறிவுள்ள புரலட்டேரியந்தான் அவங்களை வழி நடத்தனும். கட்சியைத் தலைமை வழி நடத்தனும். தலைமையை தத்துவம் வழி நடத்தனும். அது ப்ளேட்டோ கண்ட கனவு. அதை நடைமுறைப் படுத்தியது கம்யூனிசம் மட்டும் தான்.
சிலவங்க கேட்கிறாங்க, முதலாளிகிட்டயிருந்து நம்ம சொத்த நாம எடுத்துக்கிட்டா
என்ன தப்பு எண்ணு. அத நாம போராடி எடுப்போம். அது நம்ம உரிமை. திருடினோம்னா அது முதலாளிக்க சொத்து, அவனுக்க உரிமை எண்ணு நாமளே சம்மதிக்கற மாதிரியாக்கும். பிறவு வர்க்கப் போராட்டம் இல்லை. திருட்டு போட்டிதான். அவன் நம்மைத் திருடுவான். நாம் அவனைத் திருடுவோம். யாரு சாமர்த்தியமா திருடுறானோ அவனுக்கு அதிகாரம். கடைசில தொழிலாளி ஜெயிச்சிட்டான்னு வச்சுக்க இன்னொரு திருடனுக்க ஆட்சிதானே வரும்? இன்னும்
பெரிய திருடனுக்க ஆட்சி. அதுதான் கம்யூனிசமா? சித்தாந்தம் படிச்சவன் தானேடே நீ? சொல்லு?நாம் இப்ப எதுக்கு சங்கம் வெச்சிருக்கோம்? மனதைத் தொட்டுச் சொல்லு.
நாம தொழிலாளிக்கு உரிமைகளையா கத்துக் கொடுக்கறோம்? வர்க்கப் போராட்டத்துக்காவா அணி திரட்டறோம்? பாதிநாள் திருட்டுத் தொழிலாளிக்காக முதலாளி கிட்ட வக்காலத்து வாங்கிட்டிருக்கோம். இல்லன்னு சொல்லு பாக்கலாம்?நீ தொழிலாளிக்க சம்பளம் வாங்கிட்டு சேவகம் செய்றவன் மாதிரி பேசுறே. நான் தொழிலாளியை வழிநடத்திட்டுப் போறவன் மாதிரி பேசுறேன்
நெஞ்சில தீ வெணும்டே அருணாச்சலம். அதை அணைய விட்டிரப்பிடாது. நீ இப்பம் செய்யிற ஆள் பிடிக்குத வேலைய எல்.ஐ.சி க்கு செய்தா இன்னைக்கு உனக்கு எத்தனை லட்சம் தேறியிருக்கும், சொல்லுடே. தீ வேணும்டே. பேச்சிலஅதுக்கச் சூடு வேணும். அந்த சூடுதான் தொழிலாளிக்கு நம்மமேல நம்பிக்கையும்மரியாதையும் உண்டாக்குது. அது நம்ம ஆசான்கள்கிட்டேயிருந்து நாம எடுத்துக்கிட்ட தீ. அறுபத்து மூணில இந்த சங்கில உள்ள தீயை நம்பித்தான் எனக்க பின்னால அறுபதினாயிரம் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வந்தாங்க. பதினெட்டு பேர் குண்டடிபட்டு செத்தாங்க. பதினேழு மாசம் பட்டினி கிடந்தாங்க. தீ வேணும்டே. அதை அணைய விட்டுடாதே.
கதிர் என்ற இன்றைய கம்யூனிசத்தின் இளைஞர் சமுதாயத்தில் ஒருத்தர் இவ்வாறு வினா எழுப்புகிறார்:
மார்க்ஸியம் மதம் இல்லை. அருளுரையும் இல்லை. நாம் அதை வழிபட வேண்டிய அவசியம் இல்லை. மார்க்ஸியம் வந்து இப்ப நூறு வருஷம் ஆயாச்சு. அதோட பரிசோதனைக் காலம் முடிஞ்சாச்சு. இன்னமும் அது பூமிமேல அற்புதங்களை நடத்தும்னு நம்பிட்டிருக்கிறது மூடத்தனம். அதனால என்ன செய்யமுடியும் என்ன செய்யமுடியாதுன்னு இந்த நூறு வருஷ வரலாற்றிலிருந்து நாம படிக்கணும். மார்க்ஸியம் உருவாக்கின அரசாங்கங்களெல்லாம் பழைய சக்கரவர்த்திகளோட
அரசாங்கங்களைவிட மோசமானவைன்னு அப்பட்டமா தெளிவாயாச்சு.
மார்க்ஸியத்தால ஒரு புதிய சமூக அமைப்பையோ, பொருளாதார அமைப்பையோ, கலாச்சார அமைப்பையோ உருவாக்க முடியாது. அப்படி அது உண்டு பண்ணிக் காட்டிய அமைப்புகளெல்லாம் ஏற்கனவே இருந்த அமைப்புகளை விட
மோசமானவை மட்டுமல்ல, அவை மோசமான பழைய அமைப்புகளோட நகல்கள். இனிமே இம்மாதிரிக் கனவுகளை ஒருத்தன் வெச்சிட்டிருந்தானா அவன் தொண்டனா கொடிபிடிகக்த்தான் லாயக்கு.
ஆனா மார்க்ஸியம் உலகம் முழுக்க பல வெற்றிகரமான மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கு. ஒரு ஜனநாயக அமைப்பில, சுதந்திரப் பொருளாதார அமைப்பில, முக்கியமான ஒரு சக்தியா அது செயல்பட முடியும். முழுமையான மாற்று சமூகத்தை அது உருவாக்க முயலறப்பதான் பிரச்சனைவருது. ஏன்னா மார்க்ஸியத்துக்கு அதுக்கான சக்தி இல்லை. எந்த சித்தாந்தத்துக்கும் அந்த சக்தி கிடையாது. தெரிஞ்சும் தெரியாமலும் இயங்கக்கூடிய பல்லாயிரம், ஏன் பல கொடி சக்திகள் இணைஞ்சு சமூகமும் கலாச்சாரமும் பொருளாதார அமைப்பும் உருவாகுது. அதை எந்த சித்தாந்தமும் முழுமையா அணுகிட முடியாது. அதன் ஒரு பகுதியை மட்டும் தான் ஒரு சித்தாந்தம் தொட முடியும். அப்படி ஆய்வு செய்து அது முழுமையா நிரூபிச்ச உண்மைகளை முழு அபத்தமா ஆக்கக்கூடிய பல நூறு தளங்கள் மீதி இருக்கும். மார்க்ஸியம் தான் மானுடம் உண்டாக்கின சித்தாங்களிலேயே உபயோகமான சித்தாந்தமும் அதுதான். ஒரு பேச்சு வார்த்தை மேஜையில மார்க்ஸியம் ஏழைகளோட பிரதினிதியா உக்காந்து பேச முடியும்.
இன்னைக்கு தொழிலாளி வர்க்கம் அடைஞ்சிருக்கிற எல்லா லாபங்களும் மார்க்ஸியம் வழியா கிடச்சதுதான். மார்க்ஸியம் இல்லீன்னா உலகத்தில இருக்கிற எந்த வெல்பேர் ஸ்டேட்டும் கருணையோட இருக்க முடியாது. சமூக அமைப்பில சுரண்டப்பட்ட வர்க்கம் மார்க்ஸியக் கருத்தியலின் அடிப்படையில்தான் ஒன்று சேர்ந்து போராட முடியும். மார்க்ஸியத்தோட பணி இங்க தான். ஒன்று சேர்ந்து போராடரதுக்குத் தவிர்க்க முடியாத பெரும் கனவை அது உண்டு பண்ணித்தருது. அந்த கனவை தருக்கபூர்வமானதா மாத்தற தத்துவ அடிபப்டைகளை உருவாக்கிக்
காட்டுது. அந்த தருக்கம் தான் பேச்சு வார்த்தையில் தொழிலாளி வர்க்கத்தின்
மிகப்பெரிய துருப்புசீட்டு. எந்த தொழிலாளியும் பேச்சுவார்த்தைக்காக சாக மாட்டான். பெரிய கனவுகளுக்காத்தான் சாவான். தொழிலாளி சாகத்தயாரா இருந்தாதான் பேச்சுவார்த்தையில் ஏதாவது சாதிக்க முடியும். மார்க்ஸியத்தோட இடம் இதுதான்.கொள்கை வேறு நடைமுறை வேறு. மேலே மத்தியில ஜகஜித்சிங் வருஷா வருஷம் அதை நடத்திக் காட்டுறாரே!
முற்றிலும் உண்மை. கட்சிகள் கொள்கை என்ற ஒன்றை எப்பொழுதோ உதறிவிட்டனர். இப்பொழுது இருப்பது survival of the fittest. அரசியல் பெரும் வியாபாரம். அதனால் தான் ஒரே கட்சி மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறு வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டிருக்கின்றன. பல்வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு மக்களைச் சந்திப்பதில் கூச்சம் ஏதும் இருப்பதில்லை. ஏனெனில் மக்களும் அப்படித்தானே? மக்கள் தானே கட்சி!
அருணாச்சலம் ஜெயமோகனை சந்திக்கும் போது நடைபெறும் உரையாடலில் ராமசாமி ஜெயமோகனை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்:
இவரு முக்கியமான தமிழ் எழுத்தாளர். சமீபமா இவர்தான் ஸ்டார். பேரு ஜெயமோகன் தருமபுரியில் டெலிபோன்ல வேலை பார்க்கிறார்.ரப்பர்னு ஒரு நாவலும் திசைகளின் நடுவேன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பும் வந்திருக்கு. புதிசா பெரிசா ஒரு நாவல் எழுதிட்டிருக்கார் விஷ்ணுபுரம்னு பேரு
அப்படியா?! நிறைய நபர்களுக்கு ஜெயமோகன் யார் என்றே தெரியவில்லை என்பது தான் உண்மை. பாலாவின் நான் கடவும் என்ற படத்துக்கு வசனம் எழுதுவதனால் அவர் இனி பிரபலமாகக்கூடும். இந்த நாவல் வெளிவந்தது 99 என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் எவ்வளவு பேருக்கு ஜெயமோகன் தெரிந்திருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. மேலும் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை: இவ்வளவு அழகாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் ஏன் பிரபலமாகவில்லை? ஏன் ஜெயமோகனோ ராமகிருஷ்ணனோ சாமன்ய இலக்கியத்தில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை? கல்கியைப் போல. பிரபஞ்சனைப் போல. ஜானகிராமனைப் போல. பார்த்தசாரதியைப் போல. இனிமேல் கிடைக்குமோ?
ஜெயமோகனைப் பற்றி அருணாச்சலம் கொண்டிருக்கும் கணிப்பு:
பிறரை எடுத்த எடுப்பிலே குறைத்து மதிப்பிடும் அந்த அகங்காரம் முதிர்ச்சியின்மையின் விளைவு என்று பட்டது. இந்த இளைஞன் தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய சுயமதிப்பு கொண்டவனாக இருக்ககூடும்.
நான் ஜெயமோகனை ஒரு முறை சந்திருக்கிறேன். அப்பொழுது அவர் நாங்கள் வைத்திருக்கும் கேமரா போனைப் பற்றி கேட்பதில் ஆர்வமாக இருந்தார். என் நண்பர் ஒருவர் மிகவும் கூச்சப்பட்டார்: இவ்வளவு புத்தகங்கள் எழுதிய இவரை விட நம்மிடம் நிறைய வசதிகள் இருக்கிறதே. ஜெயமோகனை படத்திலோ அல்லது நேரிலோ பார்ப்பவர்கள் கண்டிப்பாக இவர் தான் கொற்றவையை எழுதினார் என்றால் தலையில் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள். ஏனெனில் அவரிடம் சித்தர் வேஷம் கிடையாது!
அருணாச்சலத்திடம் தோழர் தீர்த்தமலை கட்சியின் விதிகளைப் பற்றி வாதாடும் போது:
அம்பதுகளில் ரணதிவேதீஸிஸ் வந்தப்ப குமரி மாவட்டத்தில மட்டும் ஆயிரம் பேர் கட்சியை விட்டுப் போயிருக்காங்க. பயங்கரமான அடக்குமுறைகளில் கூட கட்சிக்காக ரத்தம் சிந்தின முன்னூறு பேர் நம்ம கட்சி ஜனநாயகத்தை ஏத்துக்கிட்டப்ப விட்டுட்டு போனாங்க. கட்சியைவிட்டுப் போனவங்களில சிலர்தான் தேறினாங்க. மீதியெல்லாம் ஆளுமை கெட்டு, குடிகாரர்களாகி உதவாக்கரைகளாகி, சீரழிஞ்சு போனாங்க. சிலர் பூர்ஷ¤வாக்களாகக்கூட ஆனாங்க.
ஏன், இப்ப நக்சலைட் இயக்கம் வெடிச்சப்ப கட்சிய விட்டு எண்ணூறு பேர் விலகிப் போகலையா? அதில வேணுகோபாலனை எனக்கு நல்லாத் தெரியும். நாலு வருஷம் நானும் அவனும் ஒரேரூம்ல தங்கியிருக்கோம். என் நிழலா இருந்தான். அவன் படிச்ச புஸ்தகங்களுக்க பின்அட்டை படிச்சவங்களே நம்ம கட்சியில குறைவு. பெரிய அளவில தேசிய அளவில போகப் போறான்னு நம்பினோம். இப்ப பேச்சிப்பாறை டாம் பக்கமா பிச்சை எடுக்கறான். என்னைப் போன வருஷம் செமினார் சமயத்தில் வழி மறிச்சு, ‘குட்மாரிங் தோழர், புரட்சி ஓங்குக. ஒரு அம்பது ரூபா கொடுங்க’ ன்னு கேட்டான். மனசுக்குள்ள நொறுங்கிப் போயிட்டேன். ஆனா என்ன செய்யமுடியும் சொல்லுங்க?கட்சி முன்னகருறப்ப சிலர் உதிர்ந்தே ஆகணும். திரிபுவாதிகள், கோழைகள், சுயநலவாதிகள் உதிருவாங்க. சில சமயம் கட்சியைவிடப் பெரிசா தங்களோட ஈகோவை வைச்சிருக்கிற படிப்பாளிகளும், திறமைசாலிகளும் உதிர்ந்திடலாம். ஆனாயாரா இருந்தாலும் உதிர்ந்தா உதிர்ந்தது தான். ஏன்னா கட்சிங்கறது புராணங்களிலசொல்றது போல ஒரு விராட புருஷன். நாமெல்லாம் அதன் உறுப்புகள். நாம அதை விட்டுப் பிரிஞ்சுட்டோம்னா அழுகி மட்கி இல்லாமப் போக வேண்டியதுதான்.தருக்கம் தார்மீகத்தின் முன்பு மட்டுமே தோற்கும்.
வீரபத்ரபிள்ளை எழுதிய ஏகப்பட்ட கடிதங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கடிதம் இது தான்:
ஜன்னலைத்திறந்து, பாதையில் போகும் பொறுக்கியை வேடிக்கை பார்க்கும் வீட்டு மனிதா, இது உனக்கு. வீடு உனக்கு பாதுகாப்பல்ல. ஏனெனில் உன்னிடம் என்ன உள்ளது? அர்த்தமற்ற பயங்களும், அசட்டு உணர்ச்சிகளும், கணந்தோறும் பழமைகொள்ளும் சில பொருட்களும், மலச்சிக்களும் தவிர? தெரு மனிதர்களை இகழாதே. உன்னால ஒரு போதும் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது. எல்லை வகுக்கப்படாத எதையும் பார்க்கவோ உணரவோ உனக்கு அனுமதி இல்லை.
உனக்கு அத்தனையும் ரேசனில் வழங்கப்படுகின்றன. காலம், வெளி, ஒளி, நீர் எல்லாமெ. குடும்ப அட்டையை கையில் வைத்தபடி -குடும்பத்தலைவன் என்று குறிப்பிட்டிருப்பதன் அபத்தமான பெருமிதத்துடன் -மகிழ்ந்துபோன அத்மாவாக உன் வீட்டுக்குள் வாழ்கிறாய். கதவிடுக்கில் பீரிடுகிறது தெருவின் திறந்த காற்று. உன் ஆஸ்துமாவிற்கு அது எமன். மூடுடா கதவை.
என்னை மிகவும் பாதித்த கவிதை:
இன்னும் வாழ்பவன் அல்ல, ஆவியும் அல்ல,
இழிந்த விலங்கும் அல்ல, மனிதனும்
அல்லஇனம்காண முடியாத ஏதோ ஒன்றாய்…
-புஷ்கின் என்ற ரஷ்ய கவிஞர் எழுதிய கவிதை
புகாரின் ட்ராட்ஸ்கி ஸ்டாலின் ஆகிய மூவரைப் பற்றிய செய்திகள். புகாரின் சதியால் கொல்லப்பட்டார் என்று கேள்விப்பட்டுதான் வீரபத்ரபிள்ளையின் நிழல் கேள்வி கேட்க ஆரம்பித்தது என்றால், புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் இல்லையே! புகாரின் லெனினுக்குப் பிறகு ட்ராட்ஸ்கி வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் தான் ஸ்டாலினை ஆதரித்தார். பிறகு பல கொலைகளை அவரும் ஸ்டாலினோடு சேர்ந்து நிகழ்த்தியிருக்கிறார். மிகில்னாய் ரயில் நிலயத்தில் சைபீரியாவின் கட்டாய வதை முகாம்களுக்கு சென்று கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்க்கும் வரை அவரது நிழல் தூங்கிக்கொண்டுதான் இருந்தது. பிறகு ஸ்டாலினோடு எதிர்ப்பு வலுத்தபின்னர் அவரது ஈகோ முந்திக்கொண்டது. நிழல் விழித்துக்கொண்டது. அவரால் பின்வாங்க இயலவில்லை.
அதே நிலைதான் வீரபத்ரபிள்ளைக்கும். வீரபத்ரபிள்ளைக்கு தெரியும் புகாரின் ஒன்றும் மிக நல்லவர் இல்லை என்பது. ஸ்டாலினும் புகாரினும் சேர்ந்து நடத்திய அரசியல் படுகொலைகளை அவரும் அறிந்தவர் தான். எனினும் ஏதோ ஒன்று அவரது மனதுக்குள் புகுந்து கொண்டுள்ளது. அது ஈகோ மட்டுமே. வேற எதுவாகவும் இருக்க வாய்ப்பு இல்லை.
கீழே ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின் செய்த சதிகள் கூறப்படுகின்றன:
பிலிப்குஸ்மிச் மிரானோவ் செம்படையின் மகத்தான தளபதிகளில் ஒருவர். எட்டு வருடம் ட்ராட்ஸ்கியின் உயிர் நண்பராக இருந்தார். மிக எளிய கசாக்கு குடும்பத்தில் பிறந்து, ஜாரின் ராணுவத்தில் படைவீரராக இருந்தவர். ட்ராட்ஸ்கியால் செம்படையில் சேர்க்கப்பட்டார். அக்டோபர் புரட்சியில் கிரெம்ளினில் நுழைந்த முதல் படைப்பிரிவை நடத்தினார். 1921-ல் கசாக்குகளின் கிளர்ச்சியை அடக்கும்படி தென்முனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு எளிய கசாக்கு குலப் பொதுமக்களை செம்படை சூறையாடியதைக் கண்டு மனம் பொறாது ட்ராட்ஸ்கியிடம் வாதாடினார். செம்படையின் தளபதிகளை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் கசாக்குகளை மொத்தமாக வெண்படை ஆதரவாளர்களாக மாற்றிவிடவே இம்மாதிரி நடவடிக்கைகள் உதவும் என்று முறையிட்டார். ட்ராட்ஸ்கி அதை ஏற்கவில்லை.
மிரானோவ் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு உத்தரவிட்டது ட்ராட்ஸ்கிதான். இன்று ட்ராட்ஸ்கியின் இடத்தில் ஸ்டாலின். மிரானோவின் இடத்தில் புகாரின்.
ஏப்ரலில் மிகில்னாய் ரயில் நிலயத்தில் புகைவண்டி சிறிது நேரம் நின்றது. வெளியேஎட்டிப்பார்த்தேன். திறந்த வெளியில் கிழிசல் உடைகள் அணிந்த பல்லாயிரம் விவசாயிகள் படுத்துக்கிடந்தார்கள். அவர்களைச் சுற்றி கவச வண்டிகளினாலான வேலி. துப்பாக்கி ஏந்திய காவலர்கள். பனி அவர்கள்மீது திரையிட்டிருந்தது. காற்றில் அது விலகும் போது ஒட்டி உலர்ந்த உடல்கள் தெரிந்தன. மூட்டை முடிச்சுகள். ஊடாக…குழந்தைகள்; குளிரில் விறைத்து, நீலம் பாரித்த குழந்தைகள்! அவர்கள் சைபீரியாவிற்குப் போகும் குளக்குகள். பெரும்பாலானவர்கள் அங்கு திரட்டப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டிருப்பார்கள்.
ரயிலுக்காக வெட்டவெளியில் காத்திருக்கையில் மீதிப்பேர் சாவார்கள். சைபீரியாவுக்கு எத்தனை பேர் போய்ச்சேர்வார்கள் என்று கூற முடியாது. இதுவரை ஒன்றரை கோடி விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பார்கள். ஒன்றரைக்கோடி உடல்களை குவித்துப் போட்டால் பீட்டர்ஸ்பர்க்கிலும் மாஸ்கோவிலும் உள்ள அனைத்து கட்டிடங்களையும்விட பெரிய பிணமலைகளாக இருக்கும்.
வீரபத்ரபிள்ளை எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் எனக்கு பிடித்த இரண்டு கவிதைகள்.
கடிதங்கள்
தபால் வசதி அனுமதிக்கப்படாத ஊர்களில்
பலநூறு கடிதங்கள் தினம்
எழுதப்படுகின்றன.
அவை காற்றில் குளிர்போல
கனத்து தொங்குகின்றன.
சிறு
காற்றில் வருடலில்
மழையாகி அவர்கள் மீதே விழுகின்றன.
குளிர்ந்து அவர்களைச்
சுற்றி இறுகிவிடுகின்றன.
கடிதங்களின் கடுங்குளிரில் அவர்கள் தூங்குகிறார்கள்.
அப்போது வெப்பமான காற்றை
அவர்கள் கனவு காண்கிறார்கள்
வானில் ஒளியாக
சொற்கள் பரவ
ஆத்மாக்கள் அவற்றை உண்ணும்
ஒரு மகத்தான தினத்தைக்
காண்கிறார்கள்
பின்பு விழித்தெழுந்து கண்ணீர் விடுகிறார்கள்
மறுநாள்
மீண்டும்
இறுகும் பனியை உடைத்தெழுந்து
கடிதங்களை எழுதத் தொடங்குகிறார்கள்.
இந்த கவிதை கண்டிப்பாக சைபீரிய வதைமுகாம்களில் பழி சுமத்தப்பட்டு தண்டனைகளை (பெரும்பாலும் மரண தண்டனை!) எதிர் நோக்கி காத்திருக்கும் மக்களை நினைத்து எழுதப்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

