Jeyamohan's Blog, page 605
March 29, 2023
பெங்களூர் கட்டண உரை, காமன் கூத்து – கடிதம்
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம். கடந்த ஜனவரி 26 அன்று பெங்களூரில் கட்டண உரையின் பொது உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக கட்டண உரையில் கலந்து கொண்டேன். மிகவும் நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டு, நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட படி சரியான நேரத்தில் அனைத்தும் நடந்தது.
உங்கள் உரையில் என்னை மிகவும் பாதித்தது இருத்தலியல் துன்பம் பற்றி நீங்கள் குறிப்பிட்டது. கடந்த சில நாட்களாக நானும் இதே சிந்தனையில் இருந்தேன். தன்னுடைய சுதர்மம் அறிந்து அதில் சோர்வில்லாமல் ஈடுபடுபவரைத்தவிர பிறர் தங்கள் சுதர்மம் அறியும் வரை கண்டிப்பாக இந்த மனநிலையை அடைந்து அதை தாண்டித்தான் வரவேண்டும் என நினைக்கிறேன். மேலும் நீங்கள் குறிப்பிட்டதில் மிகவும் கடினமான விஷயம், பிறரிடம் பழகும் போது நம் பிற அறிதல் / மேதமை வெளிப்படாமல் அவர்களின் மனவோட்டத்தில் பழகுவது. அறிவில் நிறைநிலை அடைந்தவர்களே அவ்வாறு இருக்க முடியும் என கருதுகிறேன்.
உங்களை நேரில் பார்க்கும் வரை ஏதாவது பேச வேண்டும் என நினைத்துக் கொண்டு இருந்தேன். உங்கள் பக்கத்தில் வந்ததும் தயக்கத்தாலும் , ஏதாவது தப்பாக பேசிவிடுவோமோ என்ற சிந்தையாலும் ஒன்றும் பேசாமல் வந்து விட்டேன். உங்களை நேரில் பார்த்ததே போதுமானதாகவும், நிறைவாகவும் இருந்தது.
மேலும் ஒரு விஷயம், கடந்த வாரம் எங்கள் உறவினர் புலவர் முனுசாமி என்பவர் மறைந்தார். அவரின் அகவை 90 க்கு மேல் இருக்கும். 1990 வரை ஹோலி பண்டிகையின் போது காமன் கூத்து நடைபெறும், அவரும் அதில் கலந்து கொண்டு பாடுவார். கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இல்லை. அவர் மறைவின் போது 1960 களில் அவ்வாறு பதிவு செய்யப்பட்ட நடந்த காமன் கூத்து நிகழ்ச்சி பகிரப்பட்டது.
உங்கள் பார்வைக்கு அந்த சுட்டி :
அன்புடன்
அருண்
விழுப்புரம் புத்தகக் கண்காட்சி
இன்று விழுப்புரத்தில் முதல் புத்தக திருவிழா துவக்கம். தமிழ் நிலம் முழுக்க கோயில் கோயிலாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதே போல புத்தக சந்தை புத்தக சந்தையாக சுற்ற துவங்கி விடுவேன் போல :). புத்தகம் வாங்குவது அல்ல, பொது ஜனம் இத்தகு விஷயங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நேரில் காணும் ஆவல்தான்.
விழுப்புரம் திருவிழா மிக சிறந்த ஏற்பாடு. நகரின் மையம். விழுப்புரம் வாசிகள் எதை செய்யவேண்டும் என்றாலும் அந்த சாலையை தொட்டே தீர வேண்டும். புதிய நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய உடனே அடுத்த காலை நேரடியாக புத்தக சந்தை வாசலில் வைத்து விடலாம். பொது ஜனம் எவரும் காணும் வண்ணம் சாலை நோக்கி திறந்த அரங்க வாயில்கள், மேடை, விசாலமான பார்க்கிங் என நல்ல தேர்வு. விழுப்புரம் சுற்றி உள்ள எல்லா பக்கமும் நல்ல விளம்பரமும் செய்திருக்கிறார்கள். நாளொன்றுக்கு 10 000 பேர் வரை உள்ளே வர வேண்டும் எனும் இலக்குடன் கலக்டர் பணி புரிகிறார் என கேள்விப்பட்டேன். தமிழக அரசு, வருடம் முழுக்க தமிழ் நிலம் முழுக்க சர்வே செய்து, இந்த புத்தக விழா விஷயத்தில் முன்னுதாரணமாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏதேனும் சிறப்பு செய்யலாம்.
உள்ளே சும்மா சுற்றி வந்தேன். பரவாயில்லை எனும் படிக்கு கூட்டம். வணிகமும் நடந்து கொண்டிருந்தது. நமது ஈரோடு நண்பர் பாரதி புக் இளங்கோ அண்ணன் கடைகள் எடுத்திருக்கிறார். இதை எதிர் பார்க்கல இன்னிக்கு நல்ல சேல்ஸ் என்றார். விழா நடைபெறும் 12 நாளும் மேடை பரபரப்பாகவே இருக்கும் வண்ணம் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டு இருக்கிறது. துவக்க நாளின் மாலை உரைக்கான சிறப்பு விருந்தினர்கள் கவி மனுஷ்ய புத்திரன் மற்றும் கண்மணி குணசேகரன்.
பொதுவாக முகநூல் எழுத்தாளர்கள் மத்தியில் ஒன்றை கவனிக்கிறேன். அது இத்தகு நிகழ்வுகளில், சொந்த ஊரை சேர்ந்த எழுத்தாளர்களை அழைக்கவில்லை, இவரை கூப்பிட வில்லை, அவரை அழைக்க வில்லை, இந்த ஊரில் புத்தக சந்தை நடக்கிறது இந்த ஊரிலேயே வாழ்ந்து 300 புத்தகம் போட்ட அந்த தொல்லியல் ஆய்வாளரை ஏன் கூப்பிடவில்லை. இவர்களை இப்போதுதான் மக்கள் பார்க்க வழி, இப்போதும் அவர்களை விடுத்து எப்போ பாரு சுகி சிவமா போன்ற முணுமுணுப்புகள்.
பொறுமை அய்யா பொறுமை. நான் பார்த்த வரை நிர்வாகம் சரியாகவே செயல்பட்டு வருகிறது. இவ்வருடம் இல்லை எனில் வரும் வருடங்களில் வாய்ப்பு உண்டு. இது போக அந்தந்த மாவட்ட அளவில் ஜனத்தொகை அடிப்படையில், அதிலிருந்து பொது வாசிப்பு நோக்கி சிலர் உள்ளே வர இத்தகு முதன் முதல் புத்தக சந்தை முயற்சிகளில், வெகு மக்களை உள்ளே கொண்டு வரும், அவர்களை உள்ளே இருத்தி வைக்கும் முகங்களையே முதல் சில வருடங்களுக்கு முன்னணி படுத்த முடியும். அந்த வகையில் நிர்வாகம் சரியான நாட்களில் முக்கிய எழுத்தாளர்களை உள்ளிட்டே நிகழ்ச்சி நிரலை அமைக்கிரது.
இதற்க்கு வெளியே நிர்வாகத்தையே குறை கூறுவதை விடுத்து எழுத்தாளர்கள் வசமும் சில குறைபாடு உண்டு அதையும் கொஞ்சம் பேசிப் பார்க்கலாம். அது என்ன எனில், இன்றைய தேதியில் மனுஷ்ய புத்திரன், எஸ்ரா, பவா செல்ல துரை, பாரதி கிருஷ்ண குமார், கண்மணி குணசேகரன் உள்ளிட்ட ஒரு 15 எழுத்தாளர்களுக்கு மட்டுமே எடுத்த முதற்சொல் துவங்கி நன்றி தெரிவிக்கும் வரை பொது மக்களை தனது உரைக்குள்ளேயே பிடித்து நிறுத்தி வைக்கும் வல்லமை உண்டு. பலர் எந்த மேடை எனினும் காகித கட்டை பிரித்து எழுதிக் கொண்டு வந்ததை தவச மந்திரம் போல ஜெபித்து விட்டு செல்பவர்கள். சிலர் தேர்வு செய்யப்பட்ட அவர்கள் துறை மீது ஈடுபாடு கொண்ட வாசகர் கூட்டத்தில் மட்டுமே பேசும் வல்லமை கொண்டவர்கள். சிலர் பேச துவங்கினால் அவர்களின் சொந்த சாகச பிலாக்கணத்தை முடிப்பதற்குள் அந்த நாளே முடிந்து விடும். இப்படி பல்வேறு வகை மாதிரிகள் இங்கே உண்டு.
தமிழ் நிலம் முழுக்க நீடிக்கும் ஒரு தொடர் செயல்பாடு என்பது பல்வேறு சரி தவறுகளோடு, எது சரியாக வரும் எது சரியாக வராது இவற்றை எல்லாம் பேசிப்பேசி சிலவற்றை செய்து பார்த்து, அதில் சிலவற்றை ஏற்று பலவற்றை கைவிட்டு குறைகளை மெள்ள மெள்ள சரி செய்தபடித்தான் முன் செல்லும். ஆகவே இன்னும் சில ஆண்டுகளுக்கேனும் புரிந்துணர்வுடன் நம்பிகையுடன் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டியதே இப்போது உள்ள முதல் தேவை.
மற்றபடிக்கு விழா மேடைக்கு அருகிலேயே விழுப்புரம் தொல்லியல் களங்களை அறிந்து கொள்ள ஒரு அரங்கு அமைத்திருந்தார்கள். நல்ல முன்னெடுப்பு. விழுப்புரம் புத்தக திருவிழா சென்ற நினைவாக மனுஷ்ய புத்திரன் எழுதிய, கவிதைகள் மீதான கட்டுரைகள் அடங்கிய நூலான எப்போதும் வாழும் கோடை நூலை வாங்கிக்கொண்டு கடலூருக்கு பேருந்து ஏறினேன்.
கடலூர் சீனு
திருவாரூரில் அருண்மொழி உரை
திருவாரூரில் புத்தகக் கண்காட்சியை ஒட்டி நடைபெறும் இலக்கிய அரங்கில் அருண்மொழி பேசுகிறாள். ‘தஞ்சை இலக்கியத்தில் எழுதப்பட்டதும் எழுதப்பட வேண்டியதும்’ எனும் தலைப்பில்.
அன்றே எழுத்தாளர் காளிப்பிரசாத், எழுத்தாளரும் திரை இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் பேசுகிறார்கள்/.
திருவாரூர் இப்போது அருண்மொழியின் பிறந்தகம். அங்குதான் அவள் பெற்றோர் வாழ்கிறார்கள். அங்கே வடபாதிமங்கலம் அருகே புள்ளமங்கலம் அவள் அம்மாவின் ஊர்.
நாள் 1 ஏப்ரல் 2023 (சனிக்கிழமை)
இடம் புத்தகக் கண்காட்சி அரங்கு திருவாரூர்
பொழுது மாலை 5 மணி
March 28, 2023
திருப்பூர் உரை ‘படைப்பியக்கத்தின் அறம்’
நண்பர் ராஜமாணிக்கம் திருப்பூர்க்காரர். கட்டுமானத்துறை பொறியாளர், தொல்லியலில் ஆர்வம் கொண்டவர். எங்கள் பயணத்துணைவர். ராஜமாணிக்கம் தமிழகக் கட்டுமானப்பொறியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டதை ஒட்டி ஒரு விழா திருப்பூரில் 27 மார்ச் 2023ல் நடைபெற்றது. அதில் அவருடைய கட்டாயத்திற்கு இணங்க நான் கலந்துகொண்டேன்.
விந்தையான அரங்கு. என் வாசகர்கள் பாதிப்பேர், எஞ்சியவர்கள் கட்டிடப்பொறியாளர்கள். நான் பேசுவதுபோன்ற ஓர் உரையை அவர்கள் செவிகொடுத்துக் கேட்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் வேறு வழியில்லை.சம்பிரதாயமான ஒரு வாழ்த்து சொல்லி திரும்பிவிடலாம் என்றால் ராஜமாணிக்கம் நான் அதை ஒரு தலைப்பு சார்ந்து தனி உரையாக ஆற்றவேண்டும் என்று கோரியிருந்தார். ‘படைப்பியக்கத்தின் அறம்’ என நானே தலைப்பை தேர்வு செய்துகொண்டேன். அவர் சொன்ன தலைப்பு ‘தொழிலில் அறம்’ என்பது.
26 மாலை நாகர்கோயிலில் இருந்து கோவைக்கு கிளம்பினேன். உரைகளை கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் என நினைத்தாலும் வேறு வழியில்லாமல் உரைகள் அமைந்துகொண்டே இருக்கின்றன. ரயிலில் சரியாக தூக்கமில்லை. குடும்பங்கள் உடன் ஏறிக்கொண்டால் தூங்க விடமாட்டார்கள். கடைசி நிறுத்தம் வரை கலைந்துகொண்டே இருப்பார்கள். அதிகம் பயணம் பண்ணி பழக்கமில்லாதவர்கள் என்பதனால் அவர்களுக்கு ரயிலில் தூக்கமும் வருவதில்லை. ரயில் நிலையத்திற்கு ராஜமாணிக்கம் வந்திருந்தார்.
ஆர்.கே.ரெசிடென்ஸியில் தங்கினேன். அறைக்குள் வந்ததுமே படுத்து இரண்டு மணிநேரம் தூங்கியதனால் கொஞ்சம் தெளிவடைந்தேன். அதன்பின்னர் சொற்பொழிவுக்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தபோது நண்பர்கள் வரத்தொடங்கினர். மதியம் கிருஷ்ணனும் ஈரோட்டு நண்பர்களும் வந்தனர். இந்த வகையான நிகழ்ச்சிகளில் பேச்சுக்கு முன் அதிகமாக உரையாடி மூச்சை கெடுத்துக்கொள்ளலாகாது என்பது என் முன் அனுபவம்.
திருப்பூரில் பல இடங்களில் பேனர் எல்லாம் வைத்திருந்தார்கள். அரங்கு நிறைந்த கூட்டம். கட்டுமானத்துறை பொறியாளர்களின் சங்கத் தலைவராக முறைப்படி ராஜமாணிக்கம் பொறுப்பேற்றார். இரண்டு ஆச்சரியங்கள். கட்டுமானத்துறையின் மூத்த பொறியாளரும் பேராசிரியருமான முனைவர் ஜெயகோபால் அவர்களின் சுருக்கமான, அழகான உரை. திருக்குறள் பற்றிய புதிய பார்வை கொண்டது. இன்னொன்று கட்டுமானத்துறைப் பொறியாளர் சி.கல்யாணசுந்தரம் அவர்களின் உரை. அதில் மு.கருணாநிதி அவர்களின் ஒரு பொறியியல் சார்ந்த ஒரு கூரிய அறிவுறுத்தலைப் பற்றிச் சொன்னார். அது அரசுவிழாக்களிலோ கட்சிவிழாக்களிலோ எழும் வழக்கமான புகழுரை அல்ல, அதற்கான அரங்கும் அல்ல அது. அந்த உண்மைத்தன்மையாலேயே அதன் மதிப்பு மிக அதிகம்.
நான் அரைமணிநேரம் பேசினேன். அதன்பின் புகைப்படங்கள். இப்போது இரவுணவு உண்பதில்லை. 15 மணிநேர உண்ணாமை நெறி. ஆகவே விடுதிக்கு வந்து வெந்நீர் குடித்துக்கொண்டேன். நண்பர்கள் பேசிக்கலைய இரவு 12 ஆகியது. அதிகாலை 4 மணிக்கு கோவைக்கு கிளம்பினேன். அதிகாலை 6 மணிக்கு சென்னை விமானம். இன்னொரு தலைபறபறக்கும் நாளை எதிர்நோக்கி. பொன்னியின் செல்வன்2, விடுதலை பற்றிய உரையாடல்கள். என்னுடைய The Abyss நாவல் பற்றிய பேட்டிகள்….
இன்னும் ஒரு மாதம் புயல்சுழலும் நாட்கள்…
செந்தில்குமார் தேவன்,முனைவர் பட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை மாலை கோலாகல கொண்டாட்டங்களுடன் டாக்டர் பட்டம் பெற்றேன்.
முன்னதாக நடந்த PhDக்கான இறுதி தேர்வில், 30 நிமிட உரை, அதன்பின் 30நிமிட விவாத அரங்கு. அத்தனை கேள்விகளையும் சிறப்பாக எதிர்கொண்டு distinctionடன் தேர்ச்சி பெற்றேன். எனது பேராசிரியர், இன்றைய நாள் உன்னுடைய ஷோ. மொத்த அரங்கையும் கட்டியாண்டாய் என்றார்.
மேலும் தேர்வு கமிட்டியில் இருந்த அத்தனை பேரும் இம்ப்ரஸ்ட். நான் சிறப்பாக விவாதித்ததாக தெரிவித்து Distinction marks வழங்கினார்கள் என்றார். German விஞ்ஞானிகளிடம் distinction வாங்குவது ஒரு கவுரவம்தானே.
ஆராய்ச்சி உலகில் நீண்டகால உழைப்பிற்குபின் இப்போதுதான் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது துவக்கம் தான். நான் இனிதான் எனக்காக இடத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
சோர்வடையும் போதெல்லாம் உங்கள் எழுத்துக்களே எனக்கு வினையூக்கி, செயல்களே முன்னுதாரணங்கள். உங்களை வாசிக்க ஆரம்பித்து உங்கள் வழியாக ரிச்சர்ட் டாக்கின்ஸின் ‘கிரேடஸ்ட் ஷோ ஆன் எர்த்’ நூல் அறிமுகம் ஆனபின்னரே எனக்கு உயிரியல்/அறிவியல ஆராய்ச்சியில் உண்மையான ஆர்வம் வந்தது.
இன்றைய வெற்றிக்கு உங்கள் டிரெயினிங் ஒரு முக்கிய காரணம்.
என்றும் அன்புடன்,
Dr. செந்தில் குமார் தேவன்.
அன்புள்ள செந்தில்குமார் தேவன்
இப்போது நீங்கள் முதன்முதலில் எழுதிய சோர்வும் நம்பிக்கையின்மையும் நிறைந்த கடிதத்தை நினைவுகூர்கிறேன். நெடுந்தொலைவு வந்துவிட்டிருக்கிறீர்கள். இது ஒரு வெற்றி, ஒரு தொடக்கம். செல்ல நெடுந்தொலைவு எஞ்சியுள்ளது. வாழ்த்துக்கள்
நடைமுறைத்தளத்தில் இலக்கியமும் அறிவியலும் இணைந்தே செயல்படமுடியும். ஒன்றில் ஏற்படும் சிறு சலிப்பை அல்லது ஊக்கக்குறைவை இன்னொன்றை வைத்து சமன்செய்துகொள்ளலாம். அது ஐன்ஸ்டீன் உட்பட அறிவியல் மேதைகள் கூட கைகொண்ட முன்னுதாரணமான வழிமுறை என நான் அன்று எழுதியதை மீண்டும் கூறுகிறேன்.
ஜெ
லாரன்ஸ் ஹோப்பும், கல்லறையின் காதலனும் -செந்தில்குமார் தேவன்
ராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் – செந்தில்குமார் தேவன்
பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்
எழுகதிர்நிலம், கடிதம்
பாலைநிலப்பயணம் செல்வேந்திரன் வாங்க
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம், நலம்தானே?
கடந்த 25-2-23 கடலூரில் ஒரு நூல் வெளியீட்டிற்குத் தலைமை ஏற்றேன். கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய ”அயல்வெளிப் பயணங்கள்” என்னும் பயண நூல் அன்று வெளியிடப்பட்டது. அவர் அமெரிக்கா சென்றது பற்றி எழுதி இருந்தார். என் தலைமை உரையில் தங்களைப் பற்றித்தான் பத்து நிமிடங்கள் பேசினேன். தங்களின் பயணம் செல்லும் ஆர்வம் பற்றியும், அடிக்கடித் தாங்கள் பயணம் செல்வதையும், எழுதும் பயணக்கட்டுரைகள் பற்றியும் விரிவாகப் பேசினேன். குறிப்பாக எழுகதிர்நிலம் பற்றிப் பேசினேன். நண்பர் சீனுவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
இந்த எழுகதிர் நிலபயணக் கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. பாராட்டவேண்டியதைப் பாராட்டும் தங்கள் பண்பு தவாங் சமவெளிக்குப் போகும்போது அங்கிருக்கும் சாலை அமைப்புகள் பற்றிக் கூறும்போது வெளிப்பட்டுள்ளது. வடகிழக்கு மக்களின் அன்றைய நிலை பற்றிய அறிய தாங்கள் பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய ”கலங்கிய நதி”யைப் படிக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறீர்கள். அந்த நூலைப் படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.
அசாமில் ஏற்பட்ட மாணவர் கிளர்ச்சிதான் ஒரு கட்சியாக உருவெடுத்துப் பின்னர் அது ஆட்சியையே அங்கு கைப்பற்றியது. ஆனால் அது அரசியல்கட்சியாக மாறியபின்னர் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உரிய பண்புகள் அதற்கும் வந்து விட்டன. அதனால்தான் இன்றுவரை மாணவர் கிளர்ச்சியாளர்களை மனக்கசப்புடன் பார்க்கிறார்கள் என்று நீங்கள் எழுதி இருப்பதன் உண்மை புரிகிறது. அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவைத் தாங்கள் பாராட்டியது சிறப்பான பதிவாகும்.
சாலையில் ஆங்காங்கே ஆங்கிலத்தில் இருக்கும் சொற்றொடர்களின் கவிநயத்தைத் தாங்கள் குறிப்பிட்டிருப்பது சிறப்பாக உள்ளது. உதாரணத்திற்கு “This is a highway, not a runway”. மூங்கில் குருத்துகளைப் புட்டிகளில் அடைத்துவைத்துக் கடைகளில் விற்பதும், காட்டு உயிர்கள் ஏதும் வடகிழக்கே நிறைய இல்லை என்பதும் முக்கியமான செய்திகள். வேட்டையாடிகளின் கைவண்ணம் அது.
நம்நாட்டு முற்போக்கு இடதுசாரிகள் எப்பொழுது வாக்கு வங்கியைக் குறிவைக்கத் தொடங்கி விட்டார்களோ அப்போதே அவர்களின் கொள்கைப் பாரம்பரியம் அடிபட்டுவிட்டது. அதனால்தான் திபெத்தின் மீது நடந்த சீன ஆக்கிரமிப்பை அவர்கள் கண்டிக்கத் தயங்கிவிட்டார்கள்.
தெம்பாங்கில் நடந்த நிகழ்ச்சி இரண்டாம் நாள் பயணத்தில் முக்கியமான ஒன்று. ஓட்டுநரை வழி திருப்பித் திருவிழா பார்க்கச் சென்றதுதான் அது. அவ்வூர்த்தலைவர் அனைவர்க்கும் வெண்பட்டுச்சால்வை அணிவித்து வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் அது குடித்திருவிழா போலும். எல்லாருக்கும் இலவச மது வழங்கப்பட்டிருந்ததும் அனைவரும் நன்கு குடித்து அதை ஒரு கொண்டாட்டமாக அவர்கள் நிகழ்த்தியதும் அத்திருவிழாவின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. “ஆனாலும் நம்மூர் போல பூசல்களும் அத்துமீறல்களும் அங்கு அப்பொழுது இல்லை” என்ற தங்கள் பதிவு அவர்களின் பண்பை உணர்த்துகின்றது. அவர்களின் பள்ளிக்கு ரூ 15000 அளித்த அரங்கசாமியின் நல்ல உள்ளம் போற்றுதலுக்குரியது.
சேலாபாஸ் உச்சி பற்றிய வருணனை சிறப்பாக உள்ளது. அங்குள்ள 101 ஏரிகளைப் பற்றிக் குறிப்பிட்டு அவை புனிதமானவை என்றும் அவற்றில் தீர்த்தாடனமும் நடக்கிறது என்றும் எழுதியிருப்பது நம் நாட்டின் 108 வைணவ திவ்யதேசங்களை நினைவுக்குக் கொண்டு வந்தது.
1965-இல் சீனப்போரில் நாட்டுக்காக உயிர் நீத்துத் தியாகம் செய்த இராஜஸ்தான் வீரர் ஜஸ்வந்த்சிங்கின் தியாகம் மறக்க முடியாதது. ஜாங் அருவியில் நின்றுகொண்டிருந்த போது எழுந்த உங்கள் மன எழுச்சிகளை நன்கு பதிவுசெய்து இருக்கிறீர்கள். படித்து உணர வேண்டிய ஒன்று அது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலமின்மை, மற்றும் எண்ணங்களின் ஒழுங்கு போன்றவை மிகவும் முக்கியமானவையாகும்.
சீன ஆக்கிரமிப்பு பற்றித் தாங்கள் எழுதி இருப்பது நேருவின் மறுபக்கத்தைக் காட்டுகிறது. உண்மையில் நேரு எல்லாரையும் தம்மைப் போலவே நினைத்தார். அதுதான் அது அவருக்குப் பல சங்கடங்களை உண்டாக்கியது. அவருக்கிருந்தது கற்பனாவாதப் புரிதல் என்று சரியாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.
”பனிச்சாலைகளில் சக்கரங்களைச் சங்கிலியால் கட்டிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பனியில் சக்கரங்கள் முன்னே செல்லாமல் சுழலத் தொடங்கிவிடும்” என்பது புதிய செய்தியாகும். எந்தச் செய்தியையும் விட்டுவிடாமல் பதிவு செய்வதால்தான் உங்கள் பயணக்கட்டுரைகள் வாசிக்கக் களைப்பின்றி சுவாரசியமாக இருக்கின்றன.
வழியில் நாய்க்குட்டியை அரங்கசாமி தூக்கிக்கொண்டது, வண்டிகளில் ஏற்பட்ட பழுது, உணவு ஒவ்வாமையாகி வயிற்றைத் தொந்தரவு செய்தது போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். ஷெர்கோவான் என்னும் இடத்தில் நூலகம் சென்றதையும், அங்கு ஹெலன்கெல்லர் பற்றி வாசித்ததையும் எழுதி உள்ளீர்கள். சிறந்த வாசிப்பாளருக்கு சிறிது நேரம் கிடைத்தாலும் வாசிக்கத்தான் தூண்டும் என்பதைத்தான் அது உணர்த்துகிறது
நோஹாலிகை அருவி பற்றிய தொன்மக் கதை நல்ல பதிவு. வழியில் பார்த்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தையும் குறிப்பிட்டுள்ளீர்கள். வியப்பு என்னவென்றால் அங்கு பெண்களே நிறைய இருந்தனர் என்பதுதான். எங்கும் வறுமை இல்லை, நல்ல சீருடையும், ஆங்கிலக் கல்வியும் காணப்பட்டது என்பது அவர்களின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது
கட்டுரையில் ஆங்காங்கே மின்னல் தெறிப்புகளாகத் தோன்றிய இலக்கிய நயங்களைக் காட்டி இதை முடிக்கிறேன்.
“புல் நுனிகள் தீட்டப்பட்டு சவரத் தகட்டினை கூர்கொண்டுவிட்டதைப்போல”
”இந்தப் பயணம் ஒரு சுழல் படி. ஒரு மாபெரும் இசைத்தட்டில் ஊசியாகச் சுழல்வது போல”
”சாலையோரப் புற்கள் எல்லாம் பருத்திப் பூப்போல பனி ஏந்தி இருந்தன”.
”கற்பனாவாதக் கொண்டாட்டத்திற்கு அடியில் உடல் யதார்த்தவாதக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது”.
”நுரையீரல் ஒரு குளிர்நீர் தோல்பை”
”சில இடங்களில் சாலை பிய்ந்து விழுந்து மலையில் புண் போல் தெரிந்தது”.
”நான் ஒரு பேனாவாக உணர்ந்தேன். என்னைக்கொண்டு சுழித்துச் சுழித்து எவரோ எழுதிக் கொண்டிருந்தார்கள்”.
”குறுந்துயில்கள் இனியவை; சிறு மிட்டாய் போலத் தித்தித்திப்பவை.
வளவ. துரையன்
சிதையும் குடும்பம் – வெங்கி
ஒரு குடும்பம் சிதைகிறது – இணைய நூலகம்
ஒரு குடும்பம் சிதைகிறது – வாங்க
கண்ணீரைப் பின்தொடர்தல் மின்னூல் வாங்க
அன்பின் ஜெ,
வணக்கங்களும் அன்பும்.
சமீபத்தில் பைரப்பாவின் “ஒரு குடும்பம் சிதைகிறது” வாசித்தேன். “வாழ்வின் பொருள் என்ன?” என்ற கேள்வி மறுபடியும் மனதை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது.
வழக்கம் போல் பெரிய செவ்வியல் தன்மை கொண்ட நாவல்களைப் படித்து முடித்ததும் மனதில் உண்டாகும் ஆழ்ந்த இனம்புரியாத கனத்துடன்தான் “ஒரு குடும்பம் சிதைகிறது” நாவலை வாசித்து முடித்த பின்னும், அதன் முன் மௌனித்து அமைதியாக அமர்ந்திருந்தேன். இம்முறை மனது சற்று அதிகமாகவே அலைபாய்ந்தது. அந்த வாழ்க்கை…, அந்த மனிதர்கள்…, நஞ்சம்மா… மனம் ஏகத்துக்கும் விக்கித்துதான் போயிருந்தது. நாவல் அதீத சிந்தனைப் பின்னல்களையும், மன ஆழ விசாரங்களையும், தத்துவத் தேடல்களையும் கொண்டிராவிட்டாலும், அவை அத்தனையையும் வாசிக்கும் மனதிற்குள் உண்டாக்குவதுதான் அவ்வெழுத்தின் ஆச்சர்யம். நிகழ்வுகள், நிகழ்வுகள்…மேலும் மேலும் வாழ்வின் நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார் பைரப்பா. இயல்பான அதுவே வாசிக்கும் மனத்தை ஈர்த்து கிஞ்சித்தும் விலகவிடாமல் செய்கிறது.
எச்.வி. சுப்ரமணியம் தமிழில் மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். முக்குணங்களில் “தமஸ்”-ஐப் பற்றி அதிகம் படித்திருக்கிறேன்; பெரியவர்களிடமிருந்தும் கேட்டிருக்கிறேன். முதல் முறையாக தமஸே முழு மனித வடிவம் கொண்ட பாத்திரமாக “சென்னிகராய”ரை இந்நாவலில்தான் சந்தித்தேன். உணவிலும், உறக்கத்திலும் மட்டுமே பெரு விருப்பு கொண்ட ஒரு சுயநல ஜென்மம். அம்மா, தம்பி, மனைவி, மகன்/மகள் யாருமே அவருக்கு அடுத்த பட்சம்தான். “நாவலில் சென்னிகராயரின் உணவுகள்” என்ற தலைப்பிலேயே ஒரு நீள்கட்டுரை எழுதலாம்.
நாவல் தலைப்பின் தன்மை/பிரதிபலிப்புகள், முதல் அத்தியாயத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகத்திலேயே துவங்கி விடுகிறது. வசைகளும், சாபங்களும் பல கதாபாத்திரங்களின் வாயிலாக நாவல் முழுவதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. எதிர்மறைகளின் பெரும்பான்மையில், நேர்மறை மூச்சுத் திணறுகிறது. வாழ்க்கைச் சக்கரத்தில், கதாபாத்திரங்களின் மரணங்கள் கூட வெகு இயல்பாக, சாதாரணமாக நாவலில் வந்து செல்கின்றன. பூ உதிர்கிறது; பிஞ்சு உதிர்கிறது; காய் உதிர்கிறது; கனி உதிர்கிறது. நல்லனவும், நேர்மையும் இப்பூமியில் கஷ்ட ஜீவிதத்தில் குறை ஆயுளோடு அல்லலுற, தகிடுதத்தங்களும், ஏமாற்றும் தன்மையும், எதிரும் நீண்ட ஆயுளுடன் சிரிப்போடு பிழைக்கின்றன. காலம் தன் போக்கில் சுழன்று கொண்டிருக்கிறது.
1920/30-களின் காலகட்டம். மைசூர் சமஸ்தானம், தும்கூர் ஜில்லா, திப்டூர் தாலுகா, கம்பனகெரே பிர்க்காவில் ராமஸந்திர கிராமத்தின் கணக்குப்பிள்ளை ராமண்ணாவிற்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டு வருகிறாள் பதின் வயது கங்கம்மா. ஊரில் ஒரு சிவன் கோயிலும், ஆஞ்சநேயர் கோயிலும், இரு அம்மன் தேவதைகளும் (கிராம தேவதை காளம்மன், ப்ளேக் தேவதை சுங்கலம்மா) உண்டு. இரண்டு/மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஊர் ப்ளேக் நோய் பரவலால் அவதிப்படும்; பிளேக் நோய் அறிகுறிகள் தென்பட்டதும் ஊர் மொத்த ஜனமும் ஊரைக் காலிசெய்து ஊருக்கு வெளியே கொட்டகை போட்டு தங்கிவிட்டு, பிளேக் முடிந்ததும் ஊருக்குள் வருவார்கள்.
ராமண்ணாவிற்கும் கங்கம்மாவிற்கும் முப்பது/முப்பத்தைந்து வயது வித்தியாசம். அவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவன் சென்னிகராயன்; இளையவன் அப்பண்ணய்யா. கங்கம்மாவின் இருபத்து ஐந்தாவது வயதில் ராமண்ணா இறக்கும்போது சென்னிகராயனுக்கு 9 வயது; அப்பண்ணய்யாவிற்கு 7 வயது. சட்டப்படி கிராமத்தின் கணக்குப்பிள்ளை வேலை, தந்தை இறப்புக்குப் பின் மூத்த மகனுக்கு வரவேண்டும். சென்னிகராயனுக்கு அப்போது 18 வயது ஆகவில்லையென்பதால் தற்காலிகமாக மணியக்காரர் மைத்துனன் சிவே கவுடன் அந்த வேலையைப் பார்த்து வருகிறான். பையன்கள் இருவருக்கும் படிப்பில் நாட்டமில்லை. கங்கம்மா மூர்க்க குணம் படைத்தவள். எப்போதும் வசைகளும், சாபங்களும், கெட்ட வார்த்தைகளுமே அவள் நாவில் நடமாடும். அவளின் வளர்ப்பு இரண்டு மகன்களிடமும் பிரதிபலிக்கிறது. படிக்க பள்ளிக்கூடம் செல்லச் சொல்லும் அம்மாவின் மீது கோபம் கொண்டு சொந்த வீட்டின் ஓட்டுக் கூரையையே இரவில் உலக்கையால் சேதப்படுத்துகிறார்கள். சென்னிகராயன் சோம்பேறி; சுயநலமி; போஜனப் பிரியன். அப்பண்ணய்யா அவனளவிற்கு இல்லையென்றாலும் அவனும் மூடன்தான்.
அக்காலத்தில் பெண்கள் வயதுக்கு வருமுன்னே திருமணம் செய்கிறார்கள் (மகள்கள் பெரியவளாகும் வரை திருமணம் நடக்கவில்லையென்றால் அம்மாக்கள் கவலைப்படுகிறார்கள்); பின்னர் மணப்பெண் பெரியவளானதும் சீர்வரிசையோடு புக்ககம் வருவது வழக்கம். நாகலாபுரம் கிராமத்தின் புரோகிதர் கண்டி ஜோசியரின் மகள் பனிரெண்டு வயது நஞ்சம்மாவிற்கும், பதினெட்டு வயது சென்னிகராயருக்கும் திருமணம் நடக்கிறது. கிராமத்தின் கணக்குப் பிள்ளை வேலையை திருப்பித் தர மறுக்கும் சிவலிங்கனிடமிருந்து, அவனை மிரட்டி அந்த வேலையை சென்னிகராயனுக்கு வாங்கித் தருகிறார் கண்டி ஜோசியர்.
வருடங்கள் உருண்டோடுகின்றன. சென்னிகராயனுக்கு கணக்குப் பிள்ளை வேலையை சரியாகச் செய்யத் தெரியவில்லை. நஞ்சம்மாதான் பார்த்துக் கொள்கிறாள். மாமியாரின் குணத்தினாலும், கணவனின் விட்டேற்றித் தனத்தினாலும் நஞ்சம்மா புகுந்த வீட்டில் சிரமங்களை அனுபவிக்கிறாள். அவ்வீட்டை கட்டிக் காக்கும் பொறுப்பு அவள் தலை மேல் விழுகிறது. தாய் மகன்களின் நடவடிக்கைகளால் அவ்வீட்டின் சொத்துக்கள் ஒவ்வொன்றாய் கைவிட்டுப் போவதை நஞ்சம்மா எவ்வளவு முயன்றும் தடுக்க முடிவதில்லை. நஞ்சம்மாவின் வீடெதிரில் இருக்கும் கோயிலில் வசிக்கும் பிரம்மச்சாரி பெரியவர் மாதேவய்யாவும், குருபரஹள்ளி குண்டே கவுடரும் அவர் மனைவி லக்கம்மாவும் நஞ்சம்மாவிற்கு ஆதரவாய் உதவிகள் செய்கிறார்கள்.
கடூர் வட்டம் நுக்கிகெரே கிராமத்தின் சியாம பட்டரின் மகள் சாதம்மாவை மணக்கிறான் இளையவன் அப்பண்ணய்யா. நஞ்சம்மாவின் பிறந்த வீட்டில் அவள் பாட்டி அக்கம்மாவும் (கண்டி ஜோசியரின் அம்மா), அண்ணன் கான்ஸ்டபிள் கல்லேசனும் வசிக்கிறார்கள். கல்லேசனுக்கு, கண்டி ஜோசியர் ஹாசனைச் சேர்ந்த கமலாவைத் திருமணம் செய்து வைக்கிறார். கமலாவிற்கு கல்லேசனையும், நாகலாபுரம் கிராமத்தையும் பிடிப்பதில்லை.
கால ஓட்டத்தில் நஞ்சம்மாவிற்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் பார்வதி, அடுத்தது ராமண்ணா (படிப்பிலும், சாமர்த்தியத்திலும் கெட்டி), மூன்றாவது விஸ்வநாதன் (விசுவன்). சாதம்மாவிற்கு இரண்டு குழந்தைகள்; மூத்தவள் ஜெயலட்சுமி, அடுத்து ராமகிருஷ்ணன். கிராமத்தில் இன்னும் பல கதாபாத்திரங்கள்; வீட்டுத் திண்ணையில் கடை வைத்து நடத்தும் சென்ன செட்டி, அவர் மகன் கிரியன், கிரியனின் மனைவி நரசம்மா (மூவருக்குமான ஒரு அட்டகாசமான பஞ்சாயத்துக் காட்சி நாவலில் வருகிறது!). ஊருக்குள் பகட்டாகத் திரியும், கடன் வாங்கிச் சூதாடும் ரேவண்ண செட்டி, அவன் மனைவி சர்வக்கா.
குடும்பத்தை நிலைநிறுத்த, குழந்தைகளை வைத்துக்கொண்டு நஞ்சம்மா எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறாள். பட்டினி கிடக்கிறாள்; கணவனின் கணக்குப்பிள்ளை வேலைகளைச் செய்கிறாள்; அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது, எப்படி காலம் தள்ளுவது என்று எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறாள். புரச இலை தைத்து விற்கிறாள்; பஞ்சகாலத்தில் ஏரிப் படுகையில் தாமரைக் கிழங்கு தோண்டி உணவுக்குப் பயன்படுத்துகிறாள். அவள் சிரமப்பட்டு எழுந்து நிற்க முயலும் ஒவ்வொரு முறையும் விதி அவளைக் கீழே தள்ளுகிறது.
நாவலில் எனக்கு மிகப் பிடித்த பகுதி, நஞ்சம்மா மகன் விஸ்வனுடன் மேற்கொள்ளும் சிருங்கேரிப் பயணம். மனம் நெகிழ்ந்து கண் நிறைந்த காட்சி, தினமும் பத்து மைல்கள் நடந்து பள்ளிக்குச் சென்று வரும் ராமண்ணா, ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் இருட்டக் காத்திருந்து வீட்டில் பசியோடிருக்கும் எல்லோருக்கும் சேர்த்து பலாக்காய் திருடிக் கொண்டு வரும் காட்சி. மனதைக் கலங்கடித்த பகுதி அம்மா பிளேக்கினால் இறந்து பல மாதங்களான பின்னும், இன்னும் அதை நம்ப முடியாமல், மாதேவய்யாவுடன் ஊர் விட்டுக் கிளம்பும் கடைசிக் காட்சியில், தன் வீட்டிற்குள் போய் எல்லா இடங்களிலும் “அம்மா…அம்மா” என்று விஸ்வன் அழைக்கும் காட்சி.
திருமணம் முடிந்து முதலிரவு கூட நடக்காத குழந்தை பார்வதியை பிளேக்கிற்குப் பறிகொடுத்து, அவளை மயானத்தில் எரித்து விட்டு வருவதற்குள் மகன் ராமண்ணாவும் பிளேக் காய்ச்சலினால் இறக்க மனம் நிலைகுலையும் நஞ்சம்மா அன்றிரவில் தற்கொலை செய்துகொள்ள ஊர்க் கிணற்றின் விளிம்புச் சுவற்றின் மேல் ஏறி நிற்கிறாள்…அவள் மனம் அக்கிராமத்திற்கு அவள் மணம் முடித்து வந்த நாளிலிருந்து இப்போது வரையிலான அவளின் துயரங்களையெல்லாம் எண்ணிப் பார்க்கிறது…
“கண்ணீரைப் பின் தொடர்தல்” நூலுக்குத்தான் எத்தனை பொருத்தமான, அபாரமான தலைப்பு என்று வேலூர் லிங்கம் சார் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். நான் “கண்ணீரைப் பின் தொடர்தல்” நூல் வாங்கியது பல வருடங்களுக்கு முன் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் விஜயா பதிப்பகக் கடையில். அம்முவின் (மல்லிகா) அம்மா, விமலா அத்தைக்கு உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அம்முவை உதவிக்கு மருத்துவமனையில் விட்டுவிட்டு மும்பைக்கு தனியாக திரும்ப வேண்டும். மருத்துவமனையை விட்டு, படுக்கையில் படுத்திருந்த விமலா அத்தையிடம் ஆசி வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, என் கைகளைப் பிடித்துக்கொண்டு அத்தை கண்ணீருடன் “மல்லிகானு சூசுகபா” (“மல்லிகாவப் பார்த்துக்கப்பா”) என்றார். என் கண்களும் நிறைந்தது. நான் மனதுள் கேவினேன். நான் பின்தொடர்ந்த இரண்டாவது கண்ணீர் விமலா அத்தையினுடையது. முதல் கண்ணீர் அம்மாவுடையது.
வெங்கி
“ஒரு குடும்பம் சிதைகிறது” – எஸ். எல். பைரப்பா
கன்னட மூலம் – “Griha Bhanga”
தமிழில்: எச். வி. சுப்ரமணியம்
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
March 27, 2023
பொன்னியின் செல்வனும் கோதாவரியும்
(இந்த கட்டுரை 2011 ஏப்ரல் 28 அன்று எழுதப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுதும் பொருட்டு நான் பிரம்மாவர் அருகே கோதாவரிக் கரையோரமாக எலமஞ்சிலி லங்கா என்னும் இடத்தில் தங்கியிருந்தேன். இந்த நாளில்தான் அங்கிருந்து கிளம்பினேன். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே நாளில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பகுதி வெளியாகவிருக்கிறது)
அன்புள்ள ஜெ,
நீரின்றி அமையாது உலகு என்பது வாக்கு. பெரு நாகரிகங்களும், பேரரசுகளும், நதிக்கரையை ஒட்டியே வளர்ந்துள்ளன. வேளாண் பெருமக்கள் நீர் வசதிக்காக நதிக்கரைகளைத் தேர்ந்தேடுத்துக்கொண்டார்கள் என்ற கோட்பாடு இருந்தாலும், மற்ற சமூகங்களும் குறிப்பாக அந்தணர்கள் கூட நதிக்கரையை ஒட்டியே தங்கள் இருப்பிடங்களை வகுத்துக்கொண்டார்கள்.
நீங்கள் கடந்த சில வாரங்களாக கோதாவரி நதிக்கரையில் வசித்து வருவது தெரியும். முன்னமே நீங்கள் நதிக்கரையில் வாசித்திருக்கக்கூடும். கோதாவரி போன்ற பெரு நதிக்கரை வாசம் உங்களில் எத்தகைய மாறுதல்களை உண்டாக்கி இருக்கிறது?
ஏதும் வித்யாசமாக உணர்கிறீர்களா? உங்கள் சிந்தனை முறைமைகளில் இவ்வாசம் ஏதும் மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறதா? நான் பிறந்ததில் இருந்து மிகப்பெரும்பாலும் நதிக்கரையிலே வசித்து வருகிறேன். கோதாவரி என் வாழ்கையில் மிக மிக முக்கியமான நதி.
இப்போது இங்கே கூட என் வீட்டிலிருந்து நூறு அடியில் ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மாலையானால் நானும் என் மகனும் அதன் கரையில் போய் அமர்ந்துகொள்கிறோம். இதையே எனது கோதாவரியாக நினைத்துக்கொள்கிறேன். ஏன் எனத் தெரியாது சற்றே ஆசுவாசமாக இருக்கிறது.
நன்றி
ராம்
*
அன்புள்ள ராம்கோதாவரியின் கரையில் இருந்து 26 மதியம் கிளம்பி சென்னை செல்கிறேன். கிட்டத்தட்ட ஒருமாதத்துக்கும் மேலாக இங்கே எலமஞ்சிலி லங்காவில் இருந்துகொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் எல்லாநாட்களையும்போலவே இவையும் முக்கியமானவை, மறக்கமுடியாதவை.
ஓர் ஊரைச் சென்று பார்க்கும்போது நம் அகம் ஒரு அதிர்ச்சியை அடைந்து திறந்துகொள்கிறது. கொஞ்சநேரம் அந்த பரவசம் நீடிக்கிறது. நம் பார்வையை மூடியிருக்கும் பழக்கம் என்ற திரை அங்கே இல்லை. ஆகவே அந்த இடத்தை மிக உன்னிப்பாகக் கவனித்து உள்ளே வாங்கிக்கொள்கிறோம். அது ஒரு முக்கியமான அனுபவம். இந்த திறப்புக்கு அந்தகரண விருத்தி என்று பெயர்
ஒரே இடத்தில் தொடர்ந்து நெடுநாட்களாக இருக்கும்போது அந்த இடத்தை நம் மனம் பழகிக் கொள்கிறது. அதை முதலில் மொழியாக ஆக்கிக்கொள்கிறோம், இதை சப்தாகரண விருத்தி என்கிறார்கள். பெயர்கள் அடையாளங்கள் என அந்த இடம் மாறுகிறது. அதன் பின் அந்த பழக்கத்தைக்கொண்டு அந்த இடத்தை அறிகிறோம். அதன் உண்மையான காட்சி மனதை எட்டுவதில்லை. இது ததாகரண விருத்தி. இந்த பழக்கத்தின் திரையை கிழித்து இயற்கையைப்பார்க்கவே பயணங்கள் தேவையாகின்றன. நம் கொல்லைப்பக்க இயற்கை நம்மைக் கவர்வதில்லை. பயணத்தில் நாம் உணர்ச்சிவசப்படுகிறோம்.
ஆனால் ஒரு இடத்தில் தங்கி அதைப் பழக்கப்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து பயிற்சி மூலம் அதை ஒவ்வொருநாளும் புதியதாக உள்ளே செலுத்திக்கொள்ள முயல்வதென்பது மிக முக்கியமான ஒன்று. அதைத்தான் இங்கே செய்தேன் எனலாம். முன்னரே முடிவெடுத்தேன். எதையும் வாசிப்பதில்லை. செய்தித்தாள்களைக்கூட. தொலைக்காட்சி பார்ப்பதில்லை. அரட்டை கூட அதிகம் இல்லை. கூட இருந்தவர் தனசேகர். இனிய அமைதியானச் சின்னப்பையன்.
இந்த பெரிய உப்பரிகையில் இருந்துகொண்டு ஒவ்வொரு நாளும் காலைமுதல் இரவு வரை இடைவிடாது கோதாவரியை பார்த்துக்கொண்டே இருந்தேன். மீண்டும் மீண்டும் இமை பிளந்து கண்ணால் பார்ப்பது போல பிரக்ஞையை பிளந்து ஆழ்மனதால் இதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். துணைக்கு இசை. மெல்லமெல்ல இந்த இடம் உள்ளே ஆழமாகப் பதிந்தது. அதன்பின் மிக இயல்பாக இதைத்தவிர எதையும் பார்க்க முடியாதென்ற நிலை வந்தது. வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டால் போதும். கோதாவரி மட்டுமே இருக்கும்.
நண்பர்கள் வந்திருந்தார்கள். வசந்தகுமார் நாலைந்து நாள் இருந்தார். அவர் பாட்டுக்கு பாலகொள்ளு, ராசூல் என்று அலைந்துகொண்டிருந்தார். அதன்பின் ஆனந்த் உன்னத் வந்தார். பிறகு கல்பற்றா நாராயணன். அதன்பின் கிருஷ்ணன், அரங்கசாமி, ஆனந்தக்கோனார். அதன்பின் யுவன் சந்திரசேகர், கெ.பி வினோத். நண்பர்களுக்கும் இந்த இடம் அபாரமான மனஎழுச்சியை அளித்தது. கல்பற்றா மிகவும் தீவிரமான மனநிலையில் இருந்தார்
தினமும் காலையில் கொஞ்சம் எழுத்து. மாலையில் கோதாவரியில் படகுப்பயணம். இரவில் நாலைந்து மணிநேரம் இசை. இந்த இடத்துக்கான குரலாக பானுமதி மனதில் உருவானார்கள். தெலுங்கு சாயல் கொண்ட இனிமையான குரல். வெய்யிற்கேற்ற நிகலுண்டு என்று பாடுகிறார்கள். அதன்பின் கர்நாடக சங்கீதம்.
இந்த நாட்களில் இரு பௌர்ணமி வந்து சென்றது. வந்தபோது முழுநிலா. அது தேய்ந்து மறைந்தபின் மீண்டும் முழுநிலா வந்து தேய்ந்து கொண்டிருக்கிறது. உருகும் இரும்புக்கோளம் போல நிலா கோதாவரி மேல் நிற்கும். நதிப்பரப்பு தழலாகும். காலையில் பிரம்மாண்டமான பொன்னிற மசூதிமுகடு போல சூரியன். கண்கூச ஒளிரும் கோதாவரி.
கண்வழியாக ஆன்மாவுக்குள் போதுமான அளவுக்கு அள்ளிவிட்டேன் என்று நினைக்கிறேன்.கிளம்பும்போது தனசேகர் மனம் கசிந்துகொண்டே இருக்கிறார். எனக்கு சோகம் ஏதும் இல்லை. ஏக்கமும் இல்லை. நிறைவுதான்.
நான் பிறந்ததும் வளர்ந்ததும் நதிக்கரையில்தான். வாழ்வதும் நீர் வெளிகள் நடுவேதான். ஆறுகள் மேல் எப்போதும் பெரும் பித்து உண்டு. அவை என்றுமிருப்பவை. மனிதர்கள் அவற்றில் வெறும் குமிழிகள். ஆனால் இருக்கும் காலம் முழுக்க வானை பிரதிபலிக்க வேண்டும், ஏழுவண்ணம் கொண்டு ஒளிவிடவேண்டும்.
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 28, 2011
சு.தியடோர் பாஸ்கரன்
தமிழிலக்கியத்தில் சு.தியடோர் பாஸ்கரனின் இடம் மிக முக்கியமான ஒன்று. தமிழ் திரை ஆய்வாளர், தமிழ் சூழியல் எழுத்தாளர் என்னும் வகைகளில் அவர் முன்னோடியானவர். அவருடைய தமிழ் நடை நேரடியானது, நுண்தகவல்களாலேயே அவர் படைப்பிலக்கியத்திற்கு நிகரான கவித்துவத்தை, உணர்வுநிலையை உருவாக்கிவிடுபவர்
தியடோர் பாஸ்கரன்
தியடோர் பாஸ்கரன் – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



