Jeyamohan's Blog, page 601
April 5, 2023
உமா மகேஸ்வரி
எனது தலைமுறைப் பெண் எழுத்தாளர்களில் முதன்மையானவர் என உமா மகேஸ்வரியையே எப்போதும் குறிப்பிடுவது வழக்கம். கருத்துக்களில் இருந்து கதைக்குச் செல்லும் வழக்கம் கொண்டவர் அல்ல. ஆகவே பெண்ணிய எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது, பெண்ணியம் அவர் கதைகளில் இயல்பாகவே உண்டு. உணர்ச்சிகரமான தடுமாற்றங்கள் கொண்ட எழுத்து. ஆகவே எல்லா கதைகளும் சீரான கலைத்தன்மை கொண்டவை அல்ல. ஆனால் தமிழில் பெண்கள் எழுதச்சாத்தியமான பல நுண்தளங்களை எழுத்தில் சந்தித்தவர்.
உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி – தமிழ் விக்கி
பெருங்கை – கடிதம்
தன் மகளை கட்டிக்கொடுக்க நினைக்கும் லௌகீக தகப்பனான ஆசான், தன் சீடனும் யானைப்பாகனுமான கதைசொல்லிக்கு தன் மகள்மேல் இருக்கும் ஈர்ப்பை உணர்ந்தே இருக்கிறார். மறைமுகமாக அதற்கு தடைபோடும் முகமாகவே அவளைக் கட்டுபவனுக்கு ‘சர்க்காரு சம்பளம் இருக்கணும்’ என்கிறார். அதற்கு நியாயமான காரணத்தையும் சொல்லிவிடுகிறார் : ‘ஆன சோலி செய்யுதவனுக்கு அடுத்தநாள் வாழ்க்கை அந்தநாள் கணக்கு’. முத்தாய்ப்பாக, கதைசொல்லியை கலங்கவைக்கும் முத்தப்பனுக்கே கட்டிவைக்க விரும்புவதையும் சொல்லி அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிடுகிறார் – அல்லது அப்படி நினைத்துக்கொள்கிறார்.
கேசவனுக்கும் கதை சொல்லிக்குமான உறவை எப்படியெல்லாம் அழகழகாக சொல்கிறீர்கள். அவனோடு குறும்புடன் விளையாடும் களிதோழனாக, அவன் சொல்லும் எதையும் செய்யும் சேவகனாக, இரக்கமில்லாத உலகத்தின் வெம்மையிலிருந்து அவனை காப்பவனாக, கடைசீயில் அவன் காதலுக்கு தூதுவனாக …. ஒருவரை ஒருவர் அந்தரங்கமாக அறிந்திருக்கும் தோழர்கள்.
கேசவன், தரையிலிருந்து கசங்காமல் எடுக்கும் மல்லிகைப்பு ஒரு அழகிய படிமம். அதை எடுத்து பெண்களிடம்தான் நீட்டுகிறான் கேசவன். பூவின் அருமை அறிந்தவர்கள் பெண்கள்தானே ? அப்படித்தான், கதைசொல்லி தன் காதலிக்குக் கொடுக்க வாங்கின வளையலை தானே கொடுக்க துணிவின்றி, ஆசான் வாங்கிக்கொடுத்ததாக சொல்ல முடிவெடுத்திருக்க, அப்படி அந்த காதல் தரையில் வீசின மல்லிகையென ஆகிவிடக்கூடாதென, சட்டென்று அவன் மடியிலிருந்து அந்த வளையலை எடுத்து தானே தனது கையால் – பாலம் கட்ட பெருங்கற்களை பூப்போல தூக்கி வைத்து உதவிய – தரையில் விழ்ந்த மல்லிகை மலர்களை கசங்காமல் எடுக்கும் – தனது பெருங்கையால் – சந்திரியிடம் நீட்டும் கேசவன் … ஒன்றும் சொல்லத்திகையவில்லை.
‘கடல்போல மனம்’ (நன்றி – யானை டாக்டர்) கொண்டவன் கேசவன். அம்மனதின் பருவுருவாக அவனது பெருங்கை.
கதை முழுக்க காட்சிகள், காட்சிகள் … அப்படியே படமென மனதில் விரிகின்றன. குறிப்பாக, சங்கக்கவிதைகளை நினைவுறுத்தும் இந்த வரிகள் (தீபம் கதையிலும் இறுதியில் இதை நிகர்த்த வரிகள் உண்டு) :
’யானையுடன் திரும்பி வரும்போது அவன் மலர்ந்திருந்தான். ஒருநாளும் அவ்வளவு நல்ல நினைவுகளாக மனம் இருந்ததில்லை. வரும் வழியெல்லாம் அழகாக இருப்பது போல் தோன்றியது. திக்கணங்கோட்டு சந்துக்குள் ஒரு வேலி முழுக்க முருக்கு பூத்திருந்தது. ’
காதலால் பூரித்த மனதுக்கு வழியெல்லாம் பூத்து அழகாக தெரிவதில் வியப்பென்ன ?
ஓவியமென மெல்ல மெல்ல தீட்டி சந்திரியின் புன்னகையில் மலரவைத்திருக்கிறீர்கள்.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
விடுதலை – கடிதம்
அன்புள்ள ஜெ,
நாமக்கல் உரையான விடுதலை என்பது என்ன காணொளி பார்த்தேன், எனக்கு மிக பயனளித்தது, இந்து ஞான தத்துவங்கள் சார்ந்த ஆரம்ப கட்ட புரிதல்கள் கொடுத்தது, இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் நூல் படித்து வருகிறேன், இது இல்லாமல் விவேகானந்தர், சித்பவானந்தர் நூல்களும் சேர்த்து வாசித்து வருகிறேன், ஒரு நோக்கம் இருக்கிறது, அதற்காக இவைகளை வாசிக்கிறேன்.
விடுதலை உரை கேட்டபோது எனக்கு வைஷேசியமும், நியாயமும் இப்போது அவசியம் தேவையானது என்று தோன்றியது, எனக்கு என் தேவைகள் நோக்கங்கள் சார்ந்த தெளிவு இன்னும் சரியாக இல்லை, குழப்பங்கள் இருக்கிறது, என்னை வடிவமைக்க, எது என் தேவை, எது என் பிரச்னை, அதற்கு என்ன தீர்வு என்பதை உணர்ந்தாலே, இந்த அறியாமையை நீக்கினாலே அதை உணர்ந்து சரியாக செல்வேன் என்று உணர்கிறேன், உண்மையில் இப்படி யோசித்த சில நாட்களிலேயே, அதற்காக தீர்வை உணர்ந்து அதை நோக்கி நகரும் சில நாட்களிலேயே தெளிவுகளையும், தீர்வுக்கான சாத்தியங்களையும் உணர்கிறேன், அதற்கான சில அடிகள் நகர்ந்தும் இருக்கிறேன்.
ராதாகிருஷ்ணன்
மரணம், மரம் – கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்.
தங்களின் இன்றைய ‘ஒரு தென்னை’ பதிவை ஒட்டிய ஒரு நிகழ்வு. தங்களிடம் பகிர்ந்தால் இது போன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் என்பது என்னெண்ணம்.
என் தந்தைகடந்த 2018 ல் மறைந்தார். அவர் எங்கள் ஊரில், ஒரத்தநாடு பகுதியில் நன்கு அறியப்பட்டவர். திராவிட இயக்கங்களின் மேல் 1967 பொதுத்தேர்தல் காலம் தொட்டு தீவிர ஈடுபாடு மற்றும் செயல் வேகம் கொண்டவர். இதெல்லாம் நான் 1986 ல் பிறந்தபிறகு விவரம் தெரிந்து நான் அறிந்து கொண்டது.
நான் அவரை பார்த்த போதெல்லாம் கோபத்தையோ அன்பையோ நியாயத்திற்கு எதிராக பயன்படுத்தியதில்லை. தான் சார்ந்த கட்சியேயாயினும் தவறென்றால் சுட்டிக்காட்டவே செய்தார். ஜாதியையோ கட்சியையோ அவர் மனிதர்களை மதிக்கும் அளவுகோலாக கொள்ளவில்லை.
இதெல்லாம் ஒரு புறம்.”கட்சி சார்ந்து அவரின் பெயரை வைத்தோ அல்லது படத்தை பிரசுரித்தோ மறைவை நாளிதழ்களில் விளம்பரப்படுத்து..நினைவு நாளுக்கு ப்ளக்ஸ் வை” என்று தனது பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட இழக்க விரும்பாத சிலரும் விளம்பரப் பிரியர்களும் அறிவுரை செய்தனர்.
ஆனால் நான் அவைகளை (அவர்களை) தவிர்த்து ஆண்டு தோறும் மரக்கன்றுகள் எங்கள் கிராம மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஐந்தாவது நினைவு நினைவு நாளான மார்ச் 24 இந்த ஆண்டு முதல் ‘தென்னை’.
ஒருவர் நினைவு கூறப்பட வேண்டியது ‘பலனால்’ தானே ஒழிய ‘படத்தால்’அல்ல என்று உறுதிகொண்டுள்ளேன்.
அதோடு அருகில் உள்ள கிராமத்தின் நூலகத்திற்கு நூல்கள் சிலவற்றை அன்பளிப்பாக அளித்தேன். (இந்த கிராமத்தில்தான் என் தந்தை அவரின் இளமை காலத்தில் கள்ளுக்கடை நடத்தியதாக என்னிடம் சொன்னார்).
தனது செலவில் தானே மெனக்கெட்டு வைத்த ப்ளக்ஸில் தனது படத்தை, பெயரை பார்த்து சுயபெருமை பெருக்கிக்கொள்ளும் பிரகஸ்பதிகளில் சிலரேனும் மாறுவார்கள் என நினைக்கிறேன்.
அன்புடன்
விக்னேஸ்
நற்றுணை- என்.ஸ்ரீராம் நிகழ்வு
ஏப்ரல் மாத நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் என்.ஸ்ரீராம் அவர்களின் புனைவுகள் குறித்த நேரடி அமர்வாக நிகழவுள்ளது
வரும் சனிக்கிழமையன்று சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நிகழவுள்ளது
தலைமை:-எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்
சிறப்புரைகள்L
எழுத்தாளர்: முத்துகுமார்
எழுத்தாளர்: குணா கந்தசாமி
எழுத்தாளர்: ஜா.ராஜகோபாலன்
கலந்துரையாடல் & ஏற்புரை:-
எழுத்தாளர்: என்.ஸ்ரீராம்
நாள்:- ஏப்ரல் 8 சனிக்கிழமை மாலை 05:30 to 08:30
இடம்: பிரபஞ்சன் அரங்கம், டிஸ்கவரி புக் பேலஸ், கேகே நகர், சென்னை
நண்பர்கள் வருக!!
April 4, 2023
மேடைப்பேச்சும் எழுத்தாளர்களும்
டெமஸ்தனிஸ்அன்புள்ள ஜெ
இலக்கியவாதிகளின் மேடைப்பேச்சு பற்றி பலமுறை எழுதியிருக்கிறீர்கள். இன்று ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. புத்தகக் கண்காட்சிகளில் ஏன் பேச்சாளர்களை அழைக்க வேண்டும், இலக்கியவாதிகளை மட்டும் அழைத்துப் பேசவைத்தால் போதுமே என்று கேட்கிறார்கள். இன்னொரு சாரார் இலக்கியவாதிகள் பேச்சாளர்களாக ஆகக்கூடாது என்கிறார்கள். நல்ல எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் அல்ல என்று ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களை பேசச்சொல்லக் கூடாது, அவர்களிடம் கேள்விபதில் நிகழ்வுகளை அமைக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இந்த விவாதமே ஆளுக்காள் இழுக்கும் திசையில் சென்றுகொண்டிருந்தாலும் இலக்கியவாதிகளின் உரை பற்றி இன்றாவது ஒரு சின்ன விவாதம் ஆரம்பித்த அளவில் மகிழ்ச்சி என நினைக்கிறேன்.
ஜெய்சிங் ராஜ்
***
அன்புள்ள ஜெய்சிங்
நான் பல ஆண்டுகளாகச் சொல்லிவரும் சில விஷயங்கள் இவ்விவாதத்தில் பயனுள்ளவை. அவற்றை மீண்டும் தொகுத்துச் சொல்லலாம் என நினைக்கிறேன்
பொதுவாக இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்பவர்களுக்கு இலக்கியம் அல்லது இலக்கிய வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்பதே நாம் கேட்கவேண்டியது. பலசமயம் தன்னால் பேசமுடியாத நிலையை சமாளிக்க சின்னச்சின்ன எழுத்தாளர்கள் சொல்லும் சமாளிப்பு மட்டும்தான் இது.
அ. சொற்பொழிவுக்கலையின் தோற்றம்
மேடைப்பேச்சு என்னும் கலை இன்றைய வடிவில் இருநூறாண்டுகளாகவே உலகமெங்கும் உருவாகி நிலைகொண்டுள்ளது. அது நவீன ஊடகம், நவீன ஜனநாயகம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
சொற்பொழிவுக் கலையின் தொடக்கம் கிரேக்கம் எனப்படுகிறது. அரிஸ்டாடில் கலைகளில் அதுவே முதன்மையானது என்கிறார். கிரேக்க அரசியல்வாதியான டெமஸ்தனிஸ் மாபெரும் பேச்சாளர் என கிரேக்க வரலாறு கூறுகிறது. பேச்சாளர்களுக்குரிய தெய்வம் ஹெர்மிஸ் எனப்படுகிறது.
பேச்சு மிக இயல்பான ஒரு வெளிப்பாடு என்பதனால் பாடல் போலவே அதுவும் மிக தொன்மையானதாக இருந்திருக்கலாம். மகாபாரதத்திலேயே பல சொற்பொழிவுத் தருணங்கள் உள்ளன. பீஷ்மர் முதலிய மூத்தவர்களும், ரிஷிகளும் அவைகளில் சொற்பொழிவாற்றினர்.
ஆனால் அந்த உரைகள் எல்லாமே சிறிய கூடுகைகளுக்கானவை. தேவாலயம், அல்லது அரசர் அவை, அல்லது சிறிய நகர்மன்றங்கள். இந்தியச் சூழலில் உரையாற்றுவதென்பது சான்றோரவைகளில், அரசவைகளில் நிகழ்ந்துள்ளது என நூல்கள் சொல்கின்றன. மதப்பரப்புதலுக்குரிய உரைகளும் இருந்தன. அவையும் சிறிய அவைகளுக்குரியவையே.
நவீன தொழில்நுட்பமும், நவீன ஜனநாயகமும் உருவாக்கிய ஒரு தொடர்புமுறை என இன்றைய பொதுச்சொற்பொழிவு முறையைச் சொல்லலாம். ஒலிப்பெருக்கி இல்லாமல் பலர் கூடி அமரும் பெரிய அவைகள் இயல்வதல்ல. பொதுவெளி உரைகளும் அதன்பின்னரே உருவாயின. ஜனநாயகம் வந்த பின்னர்தான் அத்தனை மக்களும் வந்தமரும் அவைகள் உருவாயின.
இந்த வேறுபாடு நம் புரிதலில் இருக்கவேண்டும். சக அறிஞர்களை நோக்கி, சிறு சபை நோக்கி உரையாடும் சொற்பொழிவு முன்பு இருந்தது. மக்களை நோக்கி உரையாடும் சொற்பொழிவு என்பது ஒரு நவீன வடிவம். அதை பொதுச்சொற்பொழிவு எனலாம். அதற்குரிய முறைமைகள், அதற்கான வடிவ ஒருமை என எல்லாமே சென்ற இருநூற்றைம்பது ஆண்டுகளாக உலகளவில் உருவாகி வந்த ஒன்று
பொதுச்சொற்பொழிவு என்னும் வடிவம் உருவானதுமே மிக ஆற்றல் வாய்ந்த ஊடகம் என கண்டடையப்பட்டது. அதில் பெருந்திறனாளர்கள் உருவானார்கள். எட்மண்ட் பர்க், சர்ச்சில், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ,லியோன் டிராட்ஸ்கி என பெரும் பேச்சாளர்களின் பெயர்களின் நீண்ட வரிசை வரலாற்றில் உண்டு.
மூன்று தளங்களில் சொற்பொழிவு முதன்மைப் பங்களிப்பாற்றியது. ஒன்று, மதச்சீர்திருத்தம். இரண்டு, சமூகசீர்திருத்தம். மூன்று ஜனநாயக அரசியல். இம்மூன்று களங்களிலும் பெருவாரியான மக்களின் கருத்தை உருவாக்கவும் திரட்டவும் வேண்டியிருந்தது. அதற்குச் சொற்பொழிவு மிக உதவியானது. சென்ற முப்பதாண்டுகளாகவே அதற்கு மாற்றான நவீன ஊடகங்கள் தோன்றியுள்ளன.
சொற்பொழிவுக் கலை உருவானதும் அது மூன்று களங்களில் நேரடியான செல்வாக்கு செலுத்தியது. ஒன்று, தேவாலயங்களின் உரை. முன்பிருந்த பாடல்போன்ற உரைமுறைகள் மறைந்து நவீனச் சொற்பொழிவுகள் நிகழலாயின. இரண்டு. கல்வி. பேராசிரியர்கள் வகுப்புகளில் சொற்பொழிவாற்றும் முறை உருவானது. மூன்று, நீதிமன்றம். வழக்கறிஞர்கள் சொற்பொழிவாளர்களாக ஆகவேண்டுமென்னும் நிலை உருவானது.
இந்தியாவில் சொற்பொழிவு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஐரோப்பாவிலிருந்து வந்து சேர்ந்தது. இந்தியாவில் சொற்பொழிவு சீர்திருத்த கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்கள் வழியாகவே அறிமுகமாகியது என்று சொல்லலாம். அவர்கள் முச்சந்திகளில்கூட உரையாற்றினர். விரைவிலேயே அவர்களுக்கு எதிரான சைவ, வைணவ சொற்பொழிவாளர்கள் உருவாகினர். அவர்களும் சொற்பொழிவுப் பாணியை கடைப்பிடித்தனர். பலசமயம் சிலகாலம் கிறிஸ்தவர்களாக இருந்தோ, அல்லது அவர்களிடம் அணுக்கமாகப் பழகியோ அந்த சொற்பொழிவு முறையை கற்றுக்கொண்டவர்கள்தான் சைவ, வைணவச் சொற்பொழிவாளர்களாக மாறினர்
ஆறுமுக நாவலர், சூளை சோமசுந்தர நாயக்கர், வள்ளலார், ஞானியாரடிகள் என தொடக்ககால மாபெரும் சொற்பொழிவாளர்கள் பலர். மறைமலை அடிகள், திருவிக என அந்த மரபு தொடர்ந்தது. குன்றக்குடி அடிகளார், புலவர் கீரன் என வளர்ந்து நீடிக்கிறது.
அரசியல் சார்ந்த சொற்பொழிவாளர்களாக மலர்ந்தவர்கள் பெரும்பாலும் வழக்கறிஞர்களாகவோ பேராசிரியர்களாகவோ திகழ்ந்தவர்கள் என்பதை இந்தப்பின்னணியிலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அ.சீனிவாசராகவன், ரா.பி.சேதுப்பிள்ளை, நீதிபதி மகாராஜன், நீதிபதி மு.மு.இஸ்மாயீல் என பல உதாரணங்கள்.
ஆ. சொற்பொழிவின் வடிவங்கள்
சொற்பொழிவு என்றதுமே அதை ஒரு குறிப்பிட்ட வகையான வெளிப்பாட்டு வடிவம் என பொத்தாம்பொதுவாகச் சொல்வது இங்கே வழக்கமாக உள்ளது. அது பிழையான ஒன்று. இலக்கியம் என்றால் ஒரேவகையான வெளிப்பாடு என ஒருவர் சொன்னால் எப்படி பிழையாகுமோ அப்படி. சொற்பொழிவு வடிவங்கள் வேறு வேறு. சொற்பொழிவாளரின் இயல்புக்கு ஏற்ப சொற்பொழிவு முறையும் மாறுபடும்.
சொற்பொழிவுகள் நிகழும் களங்களை ஒட்டி அவற்றை வகைப்பிரிக்கலாம். அதைப்போல சொற்பொழிவுகள் கொண்டுள்ள உள்ளடக்கம் சார்ந்தும் அவற்றை வகைப்பிரிக்கலாம்.
அ. விவாத உரைகள்
ஒரு குறிப்பிட்ட விவாதச் சூழலில் ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு அதற்கு எதிர்த்தரப்பை மறுத்து , தன் தரப்பை விவாதித்து நிறுவும் உரைகள்.
இவற்றின் வடிவம் அந்த பேச்சாளர் எடுத்துக்கொண்ட தரப்பை மையம் என கொண்டது. அவர் முன்வைக்கும் வாதங்கள் வழியாக படிப்படியாக அது விரிவடையும். இந்த வகை உரைகள் எதிர்தரப்பின் மீதான மறுப்பு , தன் தரப்பு என ஊசலாடிக்கொண்டிருக்கும். நாம் கேட்கும் பெரும்பாலான அரசியலுரைகள் இத்தகையவை. இவையே அதிகமும் சுவாரசியமாக கேட்கப்படுகின்றன. ஏனென்றால் இவற்றில் ஒரு தொடர்ந்த தர்க்கம் உள்ளது. அது கேட்பவனை இட்டுச்செல்வது. அதோடு கேட்பவன் ஏற்கனவே அந்த விவாதச் சூழலில் இருப்பதனால் சொற்பொழிவுடன் அவன் எளிதில் உளம் இணைந்துகொள்கிறான்
ஆ. அறிவுறுத்தல் உரைகள்.
ஒரு குறிப்பிட்ட கருத்தையோ, எண்ணத்தையோ பேச்சாளர் விரிவாக உரைத்து கேட்பரை அதை நோக்கி ஆற்றுப்படுத்தும் தன்மை கொண்ட உரைகள். பெரும்பாலான மதப்பேருரைகள் இத்தன்மை கொண்டவை. தத்துவ உரைகளிலும் இந்த வடிவம் உண்டு. தன்னுடைய எண்ணங்களை பேச்சாளர் பல படிகளாக எடுத்து வைத்து, அவற்றின்மேல் கேட்பவர் கொள்ளும் ஐயங்களை களைந்து, அவரை ஏற்கவைக்கும் இயல்பு கொண்டவை இவை. பிரச்சார உரைகள் எல்லாமே இந்தவகையானவை.
இ. விளக்கவுரைகள்
ஒரு நூலை, அல்லது ஒரு கருத்துத்தொகுப்பையோ எடுத்துக்கொண்டு விளக்கம் அளிப்பதும் விரித்துச் சொல்வதும் இவ்வகையான உரையின் இயல்பு. பைபிள் அல்லது கீதை அல்லது குர்ஆன் உரைகள் இத்தகையவை. குறள் போன்ற நூல்களையும் இவ்வாறு விரித்துரைப்பதுண்டு. கார்ல் மார்க்ஸ் போன்ற அரசியல் சிந்தனையாளர்களின் நூல்களை இவ்வாறு விரித்துப்பேசுவதும் நிகழ்கிறது. இந்த உரைகளின் வடிவம் அந்த மூலநூலின் கட்டமைப்பைச் சார்ந்தே உள்ளது.
உ. தன்னுரைகள்
ஒரு பேச்சாளர் பேசுபொருள் சார்ந்து தன் எண்ணங்களை, உணர்வுகளை முன்வைப்பது இவ்வகை உரை. இது பேசுபவருக்கும் கேட்பவருக்குமான ஓர் உறவின் வழியாக நிகழ்கிறது. கிட்டத்தட்ட மேடையில் சிந்திப்பது, மேடையில் வெளிப்படுவதுதான் இது.
ஊ. கேளிக்கை உரைகள்
இவை பலவகை. இவற்றுக்கு உலகமெங்கும் பெரும் சந்தை உண்டு. கேட்பவரை மகிழ்விப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை. கற்பித்தல் அம்சமும் கொஞ்சம் சேர்ந்துகொள்ளக்கூடும். கதைகள், நகைச்சுவைகள், உணர்ச்சிகரமான மெய்ப்பாடுகள் ஆகியவை இணைந்து நிகழும் ஒருவகை மேடைக்கலை இது.
எ. சடங்குரைகள்
பல்வேறு வகையான வாழ்த்துக்கள், இரங்கல்கள் என நாம் அன்றாடம் இத்தகைய உரைகளை நிகழ்த்தவும் கேட்கவும் வேண்டியிருக்கிறது. சமூகச் செயல்பாட்டின் ஒரு பகுதி இவை.
இவ்வாறு பலவகையான உரைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான மரபுகளும் , மனநிலைகளும், வடிவ முறையும் இயல்பாக உலகமெங்கும் உருவாகி வந்துள்ளன.
இங்கே தமிழ்நாட்டில் நாம் ஆற்றவிருப்பது என்னவகையான உரை என்னும் பிரக்ஞை பேச்சாளர்களுக்கு இருப்பதில்லை. கேட்பவர்களுக்கும் அந்த வேறுபாடு தெரிவதில்லை. ஆகவே இரங்கல்கூட்டத்தில் பிரச்சாரப் பேருரையாற்றுவது, திருவிழாவில் திருக்குறள் விளக்கம் என அபத்தமாக வெளிப்படுகிறார்கள்.
உரைவடிவமும் நீளமும்
ஓர் உரையின் இயல்பென்ன, என்ன வகைமையைச் சேர்ந்தது என்பதைக் கொண்டே அதன் மற்ற கூறுகளை வகைப்படுத்த முடியும். அதை எவர் எங்கு ஆற்றவேண்டும் என வகுக்கமுடியும்.
உதாரணமாக ஒரு சடங்குரை எந்தச் சூழலில் ஆனாலும் இருபது நிமிடங்களை தாண்டலாகாது. ஏழுநிமிடம் என்பதே இன்றைய உலக நியதி. சுருக்கமாக இருக்க இருக்கத்தான் பொருத்தம்.
உரைகளின் நீளம்தான் அவற்றின் வடிவத்தை தீர்மானிக்கவேண்டும். ஏழு நிமிட உரைகள், இருபது நிமிட உரைகள் சிற்றுரைகள் என்னும் வகைமையைச் சேர்ந்தவை. அவற்றில் ஒரு மையம் மட்டுமே வெளிப்பட முடியும். அவற்றுக்கான கட்டமைப்பு ஒன்று உண்டு. நாற்பது நிமிடம் அல்லது ஒரு மணிநேரம் நிகழ்வது உரை. அதற்கான கட்டமைப்பே வேறு.
சிற்றுரை என்பது சிறுகதை போல. தீவிரமான தொடக்கம், இறுதிநோக்கி பாய்ந்துசெல்லும் தன்மை, உச்சம் ஆகியவை கொண்டது. உரை என்பதை குறுநாவல் எனலாம். அதிலும் அதே கட்டமைப்புதான். ஆனால் அதன் உட்ல் பகுதியில் ஓரிரு விரிவுகள் இருக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களை அது முன்வைக்கலாம்.
ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேல் நீளும் உரை என்பது பேருரை. அதை ஒரு வகை ஆய்வு எனலாம். அதன் இயல்பு சொல்ல வந்ததை முழுமையாக்கிச் சொல்வதே. அதற்குத்தான் அவ்வளவு நேரத்தை அது கோருகிறது. அதை நாவல் என்று சொல்லலாம்.
ஆகவே, ஆற்றப் போகும் அளவு என்ன, அதன் வடிவம் என்ன என்று ஒரு பேச்சாளன் முன்னரே முடிவுசெய்துகொள்ள வேண்டும். சிற்றுரை ஒன்றை ஆற்ற வேண்டிய இடத்தில், அப்படி தொடங்கி, நினைவுக்கு வரவர நீளமாக்கிக் கொண்டே சென்று, ஒன்றரை மணிநேரம் பொழிந்து முடிப்பது அசட்டுத்தனம். அரங்கினர் மீதான நேரடி வன்முறை.
ஒன்றுக்கு மேல் பேச்சாளர் உள்ள அரங்கில் எக்காரணம் கொண்டும் ஒரு பேருரை ஆற்றப்படக்கூடாது. அது பயனற்றது என்பதுடன் கேட்பவர்களை கொடுமைக்குள்ளாக்குவது. ஒரே மேடையில் இரண்டு பேருரைகள் என்பதைப்போல கொடுந்தண்டனை அரங்கினருக்கு வேறில்லை.
ஒருவர் ஒரு பேருரை ஆற்றவேண்டும் என்றால், ஒரு மணிநேரத்துக்கு மேல் பேசவேண்டும் என்றால், அவர் மட்டுமே அந்த அரங்கில் பேருரை ஆற்றவேண்டும். அது மட்டுமே அழைப்பிதழிலும் அறிவிப்பிலும் முதன்மையாகச் சொல்லப்பட்டு அரங்கினர் அதன்பொருட்டே வந்திருக்க வேண்டும். அந்த உரை பேருரை என தெரியாத அரங்கினர் இருக்கக் கூடாது.
பலர் பேசும் அரங்குகளில் நாற்பது நிமிட உரையே அதிகபட்சமானது. வாழ்த்து போன்ற உரைகள் என்றால், உரைக்குப்பின் வேறு நிகழ்ச்சிகள் உண்டு என்றால் இருபது நிமிடம் அதிகபட்சம். ஏழு நிமிடம் சிறப்பு. சிற்றுரைகளின் முதல் நியதியே ‘ஒன்றைச் சொல்க’ என்பதுதான்.
(மேலும்)
இரா.முத்தரசன்
[image error]மலேசிய எழுத்தாளர்; இதழாசிரியர். இவர் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், கவிதைகள், அரசியல் பார்வைகள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் ஓர் அரசியல் வரலாற்று நூலும், சமூக,அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். முத்தரசன் செல்லியல் இணைய இதழின் நிர்வாக ஆசிரியர் .
இரா.முத்தரசன்
இரா.முத்தரசன் – தமிழ் விக்கி
மதுமஞ்சரி – கடிதம்
அன்பு ஜெ,
மதுமஞ்சரிக்கு விகடன் நம்பிக்கை விருது வாங்கும் நிகழ்ச்சியைப் பார்த்தேன். விருதுகள் அங்கீகாரங்களின் மீது ஒவ்வாமை ஏற்படும் ஒரு பருவத்தில் இருக்கிறேன். மிக இளமையில் அப்படியில்லை. அதை நோக்கிய பயணத்தில் தான் இருந்திருக்கிறேன். இன்று அப்படியில்லை. குறிப்பாக தமிழ்விக்கி பயணம் பலருடைய வாழ்வையும் சுருக்கி பார்க்கும் வாய்ப்பை அளித்திருக்கிறது. மிகவும் குறிப்பாக நான் இன்று என்னுடையது என நினைக்கும் எழுத்துக்கலை சார்ந்த துறையில் உள்ள கலைஞர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறேன். மிக முக்கியமான பணிகளைச் செய்தவர்கள் யாருக்கும் தெரியாமல் மிகச்சில சுவடுகளை மட்டுமே எச்சமாக விட்டு விட்டு மாண்டு போயிருக்கிறார்கள். சிலர் இருக்கும் காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். சிலர் வாழ்ந்த காலத்திலேயே தங்களுக்கான அங்கீகாரங்களுடன் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு நேர் எதிர் தளத்தில் மிகச் சிறியவர்கள் (தன் கலைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பொறுத்து) தன் தகுதிக்கு மீறிய புகழையும் பேரையும் அதிகாரத்தால் பணபலத்தால் மன்றாட்டுகளால் பெறுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் விருதுப்பட்டியல் அவர்கள் எழுதிய புத்தகத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அடையும் புகழும் பேரும் அருவருப்பையே அளித்திருக்கிறது. இதற்கு மத்தியில் எல்லா விருதுகள், விருது வழங்கும் நிகழ்வுகளிலும் உள்ள அரசியல் கணக்குகள் சோர்வடையச் செய்கின்றன.
ஆனால் இன்று மஞ்சரி மேடையில் நின்று பேசும்போது ஏற்பட்ட உளப்பொங்கல் என்ன என சிந்தித்துக் கொண்டிருந்தேன். அது விருதின் மூலம் அவள் பெருமை அடைகிறாள் என நினைத்ததால் வந்ததல்ல. அவள் எங்கோ மூலையில் இருந்து கொண்டு எந்தவித எதிர்பார்ப்புமின்றி பல விதமான தடங்களுக்கு மத்தியில் நிமிர்வுடன் நின்று பேசியது தந்த உவகை அது. நீங்கள் உவக்கும் பெண்(நீலி) தன்மையும் கூட.
மஞ்சரிக்கு இந்த மேடை அவசியமானது. ஒவ்வொரு கிணறுக்கும் பொருளாதார ரீதியாக எத்தனை சிரமத்திற்கு ஆளாகிறாள் எனத்தெரியும் எனக்கு. அதற்கு இம்மேடை பயன்படும். நீலியில் முதல் நேர்காணல் மஞ்சரியினுடையது. ஏன் எவ்வாறு நிகழ்ந்தது என யோசித்துக் கொண்டிருக்கிறேன். உள்ளுணர்வின் மொழி தான் மனிதர்களை ஒன்றிணைக்கிறது என்பதை தீர்க்கமாக நம்புகிறேன். ஒன்றில் முரண்படுவதும் கூட அத்தகைய உள்ளுணர்வினால் தான். அதற்கு அருகில் எப்போதும் செவிசாய்த்து கவனமாக நின்று கொள்கிறேன்.
மஞ்சரி என் தங்கை என்று சொல்லும் வாய்ப்பை அவள் எனக்கு அளித்ததற்கு இறைவனுக்கு நன்றி. இம்மனிதர்களெல்லாம் என் வாழ்வில் உங்களால் தான் சாத்தியம் ஜெ. இந்தப் பயணங்களில் அவ்வபோது சோர்வு ஏற்படுகிறது. வழி தவறிவிடுகிறேன். நீங்கள் சொல்வது போல ஒரு இடைவெளிக்குள் ஆசிரியரை சந்திக்காமலிருந்தால் மனதில் கரை படிந்து விடுகிறது. நம் பாதைக்கு சற்றும் அவசியமல்லாத மனிதர்களும் விடயங்களும் நம்மை அழுத்த ஆரம்பித்து விடுகின்றன. தேவையற்ற அலைக்கழிப்புகள் ஆசிரியரை சந்தித்த கணமே சிறிய விடயமாக மாறிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். மிகப்பெரிய மானுட துக்கத்தை கண்ணோக்காதவரை மிகச்சிறிய விஷயங்களின் மேல் கவனத்தைக் குவித்து தன்வயமாக தன்னை குறுக்கிக் கொண்டு ஒடுங்கி முடங்கிவிடுகிறோம். இத்தகைய சமயத்தில் மஞ்சரியின் வரிகள் எனக்கு ஒளியானவை. என்னிடமிருக்கும் துன்பங்கள் எல்லாம் எத்தனை சிறியவை என காட்டிய ஒளியது.
அவளுக்கு கேள்விகளை அனுப்பி தொலைபேசி வழியாக ரெக்கார்ட் செய்து வாய்ஸ் நோட் பெற்று என நேர்காணலை அச்சடித்துக் கொண்டிருந்தேன் சென்ற ஆண்டு. யாருமற்ற ஒரு அறையின் நிசப்தத்தில் அவள் முதல் முதலில் கிணற்றிலிருந்து சுரந்த நீரை ”கரண்டிக்குள்ள சின்ன தண்ணி மாதிரி” என்று சொன்னபோது கண் கலங்கும் குரலைக் கேட்டேன். அதற்கு மேல் அச்சிட முடியாத படிக்கு அனைத்தையும் மூடி வைத்து விட்டு அன்று அழுது கொண்டிருந்தேன். பகிர்ந்து கொள்ள முடியாத விவரிக்க முடியாத எத்தனை உணர்வுகளால் இந்த தெய்வம் என்னை அலைக்கழிக்கிறது. துக்கமும் மகிழ்வும் என பிரித்தறியவியலாத பலவகை உணர்வுகளுக்குள் ஆளாகிறேன். இது இன்னது என்று உங்களிடம் சொல்லிப் பிரித்துக் கொள்ள முடிந்தவற்றையெல்லாம் சொல்லிவிடுகிறேன்.
சோர்ந்து போகும் போது தேவையற்ற துக்கங்களுக்குள் மண்டையை நுழைத்துக் கொள்ளும் போது மஞ்சரியை அவள் குரலை நான் நினைத்துக் கொள்வதுண்டு. தனி மானுட பிரச்சனைக்கான மன்றாட்டுகளை இறைவனிடம் முறையிட்டுக் கொண்டிருக்கும் போது ஒட்டுமொத்த மானுடனுக்கான பிரச்சனைக்கான தீர்வுக்காக ஒருத்தி கலங்கும் போது நம்மைச் சுற்றியிருக்கும் சிக்கல்கள் யாவும் சிறுமையாகிவிடுகிறது.
இந்த மேடையின் மூலம் வரும் புகழோ வெளிச்சமோ அவளுக்கு பொருட்டல்ல. மாறாக ஊர்க்கிணறு புனரமைப்புக்கு பொருளாதார ரீதியாக உதவி கிட்ட வேண்டும். அதே போல மைவிழி முத்தண்ணன் சிவராஜ் அண்ணா ஸ்டாலின் அண்ணா என பலரும் செய்யும் செயல்களுக்கு பொருளாதார ரீதியாக உதவியே தேவைப்படுகிறது. அவர்கள் யாவரும் ஒருவகையில் மானுட துக்கத்திற்கான தீர்வுக்காக மன்றாடுபவர்களாகவே பார்க்கிறேன்.
காந்தியவாத செயல்களுக்காக காந்தி அனைவரிடமும் சென்று கை நீட்டினார். அவர் கை ஏந்தாத இடமில்லை எனுமளவு சென்ற இடங்களிலெல்லாம் அதைச் செய்தார். விடுதலைக்கு முந்தைய பல பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் காந்தியவாதிகள். சரோஜா தன் கையிலிருந்த வளையலைக் களற்றிப் போட்டவர். எத்தனை நாடக நடிகர்கள் கலைஞர்கள் இசைவாணர்கள் நடித்து பாடி எழுதி என காந்தியவாதத்திற்கு உதவியிருக்கிறார்கள் என்பது தமிழ்விக்கி வழியாக பார்க்கையில் மலைப்பாக உள்ளது.
இன்று அப்படிச்சென்று கை ஏந்துவது சந்தேகக் கண்ணோடு பார்க்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். சக மனிதருக்கு இன்னொருவர் மேல் நம்பிக்கையில்லை. அன்பு இல்லை. சுயத்தின் முன்னேற்றத்தைவிட வேறொன்றும் பொருட்டல்ல. இன்றும் அவர்கள் மேல் நம்பிக்கை இழந்துவிடாமல் கையேந்தும் காந்தியவாதிகளாக இவர்களைப் பார்க்கிறேன். இம்மேடை அதை அடையாளப்படுத்தும் ஒன்றாக அமையட்டும். பாரதி, சத்யா, மைவிழி, முத்தமிழ்ச்செல்வி, முத்தண்ணன் என யாவரும் காந்தியின் முகங்கள் தான்.
இந்த மேடை மூலமாக அவர்கள் தங்கள் செயலுக்கான பொருளாதார உதவியைப் பெற வேண்டும் என மனதார விரும்புகிறேன். ஆகஸ்டில் நீலியில் அவளின் நேர்காணல் வந்தபோது நண்பர் விஜயபாரதி அந்த நேர்காணலை வாசித்து மஞ்சரியை முழுமையாக அறிந்த கொண்டதாகவும் தன்னால் பணமாக இயன்றதை கொடுத்ததாகச் சொன்னபோது மகிழ்வாக இருந்தது. அந்த பேட்டி வந்தபோது இருபதாயிரம் கிணறு புனரமைப்பிற்கான உதவியாக வந்ததாகச் சொன்னாள். நம் நண்பர்கள் அப்படிப்பட்டவர்கள் தான். மிகவும் பணம் வைத்திருப்பவர்கள் அல்ல அன்றாடங்களில் உழன்று கொண்டிருந்தும் நல்ல மனம் பெற்றவர்களே உதவுகிறார்கள். நீலியுடன் தொடர்பு கொள்ளும் சொற்பமானவர்களும் இத்தகைய தீவிரமானவர்கள். அந்த நிறைவு உள்ளது.
இரண்டாயிரம் சிமெண்ட் மூடைக்கான பணம் இல்லாமல் ஒரு நாள் தள்ளிப்போகும் செயல் மஞ்சரியை சோர்வடையச் செய்யலாம். ஆனால் அவள் தொடர்ந்து உதவுங்கள் என அங்கே சன்னமான குரலில் கேட்டுக் கொண்டேயிருப்பாள். அந்தக் குரலை உரியவர்கள் கண்டுகொள்வதற்கான மேடையாக இதைப்பார்க்கிறேன். அவள் நின்று அங்கே பேசியது மகிழ்வையும் நிறைவையும் அளிக்கிறது ஜெ. இந்த நாளை அவளின் காணொளி நிறைத்தது. ”ஒரு குழந்தை பிறக்கறப்போ எப்படி தாய்ப்பால் சுரக்குதோ அப்படி நமக்காக எப்பவும் சுரந்துக்கிட்டு இருக்கிற அந்த கிணறுகள நாம எப்படியாவது காப்பாத்தனும். அவ்ளோதாங்க வேற ஒன்னும் இல்லிங்க” என அவள் சொல்லி முடித்தபோது அவள் முகத்தில் குடி கொள்ளும் தெய்வத்தை தரிசிக்க முடிந்தது. அந்த அருளையும் கள்ளமின்மையையும் தக்கவைத்துக்கொள்ள இந்த இயற்கையும் மனிதர்களும் அனுமதிக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
பிரேமையுடன்
ரம்யா
***
பொய்க்குற்றச்சாட்டுகள், பெண்கள் -கடிதம்
அன்புள்ள ஜெ
நமது நாட்டில் பொய் குற்றச்சாட்டு என்பது மிக அதிகம். சாதாரணமான காசோலை வழக்குகளில் ஆரம்பித்து கற்பழிப்பு வழக்கு வரை அனைத்திலும் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. ஆகவே பெண்கள் சிலர் பொய் வழக்கு தொடுப்பது தவறில்லை அல்லது அதை பெரிதுபடுத்தக் கூடாது என்பது ‘வாதப் பிழை’ என நீங்கள் கற்றுக் கொடுத்துள்ளீர்கள். ஆகவே அப்படிக் கூற மாட்டேன். மாறாக நமது அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளவே இந்த தகவல். மேலை நாடுகளில் பொய் குற்றச்சாட்டுகளுக்கான விளைவுகள் கடுமையாக இருக்கும். இங்கு அவ்வாறில்லை என்பதால் அதிக பொய் குற்றச்சாட்டு வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.
உண்மையில் பெண்களுக்கான சட்டத்தை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்களா? குறிப்பாக படித்த மேல், நடுத்தரவர்க்க பெண்கள் என்ற விவாதத்திற்குள்ளும் நான் செல்ல விரும்பவில்லை, ஏனெனில் அதுவும் முடிவற்ற விவாதமாகவே இருக்கும்.
இன்று இந்தியாவில் பெருமளவில் தவறாக பயன்படுத்தும் சட்டங்களில் ஒன்றாக கருதப்படுவது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சட்டம் (SC & ST Prevention of atrocities Act 1989). நம் சுற்றத்தார் கூற்றின் மூலமும், தனிப்பட்ட அனுபவங்களின் மூலமும் அது உண்மை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவற்றை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவெங்கும் பெரும் விவாதத்திற்கு உட்பட்ட “Dr.சுபாஷ் காசிநாத் மஹாஜன் எதிர் ஸ்டேட் ஆப் மகாராஷ்டிரா” (https://indiankanoon.org/doc/108728085/) வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் U.U லலித் (பின்பு இந்திய தலைமை நீதிபதி ஆனவர்) அமர்வு எவ்வாறு வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும், எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் நிருபிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மிக விரிவாக விவாதிக்கிறது.
அதில் கிருஷ்ணன் குறிப்பிட்ட Arnesh kumar vs state of Bihar வழக்கும் மேற்கோள் காட்டப்பட்டு இங்கு கைது என்பது எவ்வளவு முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தியது.
தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சில தரவுகளை குறிப்பிட விரும்புகிறேன். (National Crime Records Bureau, Ministry of Home Affairs) 2016-ல் காவல்துறை கையாண்ட பட்டியல் இன, பழங்குடியினர் சார்ந்த வழக்குகளைப் பொறுத்து பட்டியல் இன மக்கள் சார்ந்த வழக்குகளில் 5347 வழக்குகளும் பழங்குடியினர்கள் பொறுத்து 912 வழக்குகளும் பொய் வழக்குகளாக மதிப்பிடப்படுகின்றன. 2015-ல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட 15638 வழக்குகளில் 11024 வழக்குகள் விடுதலை செய்யப்பட்டன. 495 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. 4119 வழக்குகள் குற்றம் நிரூபிக்கப்பட்டது. (Reference: Annual Report 2016-2017 published by the Department of Social Justice & Empowerment, Ministry of Social Justice and Empowerment, Government of India)
இவ்வாறு வன்கொடுமை சட்டத்தில் பொய் வழக்குகள் போடப்படுவதும், அதை சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்துவதை உறுதி செய்தபின் அவற்றைத் தடுக்கும் விதமாக சில மாற்றங்களை சட்ட விதிகளில் கொண்டுவந்தனர். அதில் முக்கியமானது வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என்ற நிலையை மாற்றியது. மேலும் ஒரு அரசு அலுவலர் இக்குற்றத்தில் ஈடுபட்டால் அவரை கைது செய்ய அவரை நியமிக்க அதிகாரம் உள்ள மேலதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு இன்னும் சில.
இத்தீர்ப்பினால் தேசமெங்கும் பெரும் சர்ச்சையும், போராட்டமும் நிகழ்ந்தது எனவே மத்திய அரசு இத்தீர்ப்பை செயலிழக்கும் வகையில் சில சட்ட திருத்தங்களை கொண்டு வந்து வன்கொடுமை சட்டத்தை பழைய நிலைமையிலே நீடிக்க செய்கிறது.
தலித் மற்றும் பழங்குடியினர் அவர்களின் உரிமைகளை காக்கும் பொருட்டும், ஜாதி என்ற பெயரில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுக்கும் பொருட்டும் கொண்டுவரப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பலர் தவறாகப் பயன்படுத்தி, பொய் வழக்கு போட்டு, மற்றவர்களை மிரட்டி, தங்கள் சுயநலத்திற்காக செயல்படுகிறார்கள் என்பதை நம் தனிப்பட்ட அனுபவம் மட்டுமன்றி உச்ச நீதிமன்றமே மிக விரிவான தரவுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளது. ஆகவே அந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.
இப்போது நம் முன் உள்ள கேள்வி ஒன்றுதான். இவ்வாறு உண்மை இருக்கையில் நாம் அதை வெளிப்படையாகக் கூறலாமா? விவாதிக்கலாமா? ஒரு தலித் பொய் வழக்கு போடுகிறார் என்று நீங்கள் கூற மாட்டீர்கள் என்று எனக்கு உறுதியாக தெரியும். என்ன காரணம்? அரசியல் சரி என்பதாலா, அப்படி பார்த்து பேசக்கூடிய நபர் நீங்கள் இல்லை. பயமா, நிச்சயமாக இல்லை. பிறகு வேறு என்ன காரணம். உண்மையை சொல்ல ஏன் தயங்க வேண்டும் என்று கேட்போருக்கு, ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட தரப்பினருக்குத்தான் என் ஆதரவு. அவர்களில் சிலர் தவறு இழைத்தாலும், குறைகள் இருந்தாலும் அவர்கள் பக்கம் நிற்பதே அறம் என் உங்கள் பதில் இருக்கும் என உங்களை அறிந்த அனைவருக்கும் தெரியும்.
மேற்சொன்ன அனைத்து குறைகளும் இருந்தாலும், அனைத்து பிழைகளும் நடந்தாலும் உச்சநீதிமன்றம் கூறியது போல் அல்லது இங்கு பெரும்பான்மையோர் விருப்பப்படுவது போல் வன்கொடுமை சட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் ஒடுக்கப்பட்டோர் மேலும் பாதிக்கப்படத்தான் வழிவகுக்கும். இந்த சட்டங்கள் வந்த பிறகுதான் ஓரளவேனும் அவர்கள் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள் குறைந்தபட்சம் பொதுவெளியில். இவ்வளவு கடுமையான சட்ட விதிகள் இருந்தும், அவர்கள் இன்னும் எவ்வளவு ஒடுக்குமுறையை அனுபவிக்கிறார்கள் என்று மனசாட்சி உள்ள அனைவரும் அறிவர்.
நம் சில அனுபவங்களின் மூலம் அல்லது தரவுகளின் மூலம், தலித் சிலர் பொய்வழக்கு போடுகிறார்கள், வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றோ பேசுவது, விவாதிப்பது அவர்களுக்கு அநீதி இழைப்பதாகும். உங்கள் வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் “அவர்கள் தவறு இழைத்தாலும் அதற்கான வரலாற்று நியாயங்கள் அவர்களுக்கு உண்டு”.
நான் மேற்சொன்ன அனைத்து வாதங்களும் பெண்கள் உரிமைகளை காக்கும் சட்டங்களுக்கும் அப்படியே பொருந்தும். பல நூறு ஆண்டுகாலமாக கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு சமூகம், இன்றும் பெரிய அநீதிகளையும், கொடுமைகளையும், குடும்ப வன்முறைகளையும் சந்தித்து வரும் ஓர் சமூகம், சிறிது சிறிதாக சட்ட பாதுகாப்பை பயன்படுத்தி தங்கள் சுதந்திரத்தை, உரிமைகளை மீட்டெடுக்கும் சமூகம், பூரண சமத்துவத்திற்கு இன்னும் பல போராட்டங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய சமூகம். இன்னும் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.
நாம் எதிர்மறையாக சொல்லும் சிறு கருத்துக்களும் அவர்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாகும். உண்மையில் இங்கு பெரும்பான்மையோர் விரும்புவது பெண்களுக்கு அளிக்கப்படும் சட்ட பாதுகாப்பை, சலுகைகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான். எங்கு சென்றாலும் கேட்கலாம், “இந்தியால எல்லா சட்டமும் பொம்பளைக்கு தான் ஆதரவா இருக்கு, அவங்க நினச்சா என்னவேணா பண்ணலாம்.” மிக சிலர் தான் இதற்கு எதிராக உண்மையாக போராடுகிறார்கள் (முகநூல் போராளிகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்).
ஒவ்வொரு நாளும் சந்திக்கும் வழக்குகள் அதிர்ச்சியையும், சோர்வையும் அளிக்கின்றன. படித்து ஓரளவு பொருளாதார நிறைவு வந்துவிட்டால் பெண்கள் அவர்களுக்கான சுதந்திரத்தை அடையாளம் என்ற நம்பிக்கை அனைவரிடம் உள்ளது ஆனாலும் உண்மை வேறுவிதமாக உள்ளது. ஆனால் வெளியில் மட்டுமல்ல வீட்டுக்குள்ளும் உடல்ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. வரதட்சணைக்காக இன்றும் தற்கொலைகளும் கொலைகளும் நகரத்திலும் நடந்துகொண்டே தான் இருக்கிறது. பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகளை பற்றி சொல்லவே தேவையில்லை. வெளியிடங்களில் மட்டுமல்ல வீட்டிற்குள். இப்போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு வழக்கிற்காக (legal aid) தயாராகி கொண்டிருக்கிறேன். முதல் குற்றவாளிக்கு மரணதண்டனை, இரண்டாம் குற்றவாளிக்கு ஆயுள். வழக்கு தொடுத்த பெண்ணின் தந்தை மற்றும் தாய்தான் குற்றவாளிகள். பெண்ணின் வாக்குமூலத்தை கண்ணீரின்றி யாரும் படிக்க முடியாது.
நீங்கள் வெறும் இலக்கியவாதி மட்டுமல்ல, இன்றைய முக்கிய சிந்தனையாளர், என்னைப் போன்ற பலருக்கு ஆசிரியர். அனைத்தையும் விட எப்போதும் ஒடுக்கப்பட்டோர் பக்கம் நின்று அறம் போற்றுபவர். உங்கள் ஒவ்வொரு சொல்லும் மிக வலிமை வாய்ந்தது இன்று மட்டுமல்ல என்றும் நின்று வழிகாட்டுவது. எனவே உங்கள் மாணவனாக உங்களிடம் வேண்டுவதெல்லாம் இதை அனைத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதே.
V.S.செந்தில்குமார், வழக்கறிஞர்
சென்னை.
அன்புள்ள செந்தில்குமார்,
நீங்கள் சொல்லும் கோணம் முக்கியமானதே. தவறாகப் பயன்படுத்தப்படுவது என்பது ஒரு சட்டத்தின் குறைபாடல்ல. அச்சட்டத்தை மறுக்க அது காரணமும் அல்ல. நான் பெண்களுக்கு ஆதரவாக உள்ள குடும்ப வன்முறைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றோ, அல்லது அதன் கீழ் வரும் குற்றச்சாட்டுகள் ஐயத்துடன் பார்க்கப்படவேண்டும் என்றோ கூறவில்லை. நீதிமன்றம் கூறுவதுபோல உடனடியான கைதுநடவடிக்கைகள் இன்றி நீதித்துறை நடுவர்கள் அக்குற்றச்சாட்டுகளின் உண்மையை முதல்நோக்கில் சற்று கவனத்தில்கொள்ளவேண்டும் என்று மட்டுமே.
ஜெ
காந்தி எனும் உரையாடல் -கடிதம்
உரையாடும் காந்தி மின்னூல் வாங்க
அன்பிற்குரிய திரு ஜெயமோகன்,
இன்றைய தினம் உங்களின் விவாத நூலான “உரையாடும் காந்தி” படித்து முடித்தேன். “இன்றைய காந்தி” வாசிப்பிற்கு இந்த என் சிந்தனையை விரிவு படுத்தும் நூலை படித்து அதீத உவகை கொண்டேன். மிக துல்லியமாக, வாசகர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடன், நாகரீகமான முறையில் நீங்கள் கூறியிருக்கும் பதில்கள் அனைவரும் இன்றைய அரசியல் சூழலில் அறிந்து கொண்டு, வரும் தலைமுறையினர் நல்ல சமூகமாக மாற உதவ வேண்டும் என்று எண்ணுகிறேன்.
வாசகர்கள் தேடி தேடி காந்தி பற்றி அறிய வேண்டிய அரிய தகவல்களையெல்லாம், நீங்கள் உங்கள் நேரத்தை உகந்த வகையில் பயன்படுத்தி படித்து சமூகத்திற்கு விவாதங்கள் வழியாக சொல்லியிருக்கும் முயற்சி மிகுந்த பாராட்டுதலுக்குரியது. இந்த நூலின் மூலம் தாங்கள் குறிப்பிட்டிருந்த பல ஆளுமைகளை பற்றி மேலும் அறிய விழைகிறேன். அதீத வியப்புடனும், உவகையுடன் படித்த பகுதி – இந்துத்துவம், காந்தி மற்றும் காந்தியின் சிலுவை.
இந்த நூலை படித்த பிறகு, உண்மை வரலாற்றை அறிய விழைகிறேன். மீண்டும் மகாத்மா காந்தி பற்றிய உங்களின் விவாதங்கள் அடங்கிய நூலை படிக்க அதீத உவகையுடன் இருக்கிறேன். சத்திய சோதனை வாங்கியிருக்கிறேன். வாசித்து, காந்தியின் கொள்கைகளை, கருத்துக்களை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களின் காடு, கொற்றவை, வெள்ளையானை, விஷ்ணுபுரம், இன்றைய காந்தி, பின் தொடரும் நிழலின் குரல், கதாநாயகி, குமரித்துறைவி, ரப்பர், கன்னியாகுமாரி படித்து முடித்து விட்டு இப்போது அனல் காற்று படித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படைப்பும் தனிச்சிறப்பு கொண்டது.
உங்களின் அடுத்த படைப்பை, உவகையுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
பழனியப்பன் முத்துக்குமார்.
***
அன்புள்ள முத்துக்குமார்,
உரையாடும் காந்தி நூல் உங்களுக்கு நிறைவளித்தமை மகிழ்ச்சியளிக்கிறது. காந்தியை ஓர் உரையாடல் மையமாகவே வைத்திருக்கவேண்டும், அவரை அடையாளமாக ஆக்கிவிடலாகாது என்பதே என் என்றுமுள்ள எண்ணம். நான் அவரை உரையாடல்கள் வழியாகவே கண்டடைந்தேன். நான் சந்தித்த மாபெரும் காந்தியக் களச்செயல்பாட்டாளர்களை நினைவுகூர்கிறேன்
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



