Jeyamohan's Blog, page 600

April 7, 2023

எழுதுதல், கடிதம்

அன்புள்ள ஜெ,

நீண்ட நாட்கள் கடிதம் எழுதாமல் ஏதோ தனிமையில் பயணிப்பது போல இருக்கிறது. தொடர்ந்த பணிச்சுமையும், உலகியலும் அழுத்திக் கொண்டிருக்கிறன. ஏதாவது எழுத வேண்டும் என்று சில நாவல்கள் ஒற்றை வாசிப்பில் நின்றிருக்கின்றன. உங்களுடைய தளத்தை மட்டும் ஒரு வழிப்பாதையில் செல்வதைப்போல வாசித்துக் கொண்டிருக்கிறேன். இடையில் ஒரு இந்திய பயணம் நாளை முதல்.

இதனிடையில் என்னுடைய இரண்டாவது நாவல் முடியும் தருவாயில் இருக்கிறது. எப்படியும் ஒன்றிரண்டு மாதத்துக்குள் முடித்துவிட வேண்டும் என்று கிடைக்கும் சிறிது நேரத்தையும் அதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். கரையெல்லாம் நதிகள் என்று தற்போதைக்கு பெயர் வைத்திருக்கிறேன். நன்றாக வந்து கொண்டிருக்கிறது. உண்மையில் எழுதிப் பார்ப்பதன் வழியாக நான் சில தடைகளை உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். பார்க்கலாம்.

இந்த நேரத்தில் எனக்கு அனுபவப்படும் நிகழ்வுகள், எழுதிக் கொண்டிருப்பது நடக்கிறதா அல்லது நடப்பதை எழுதிக் கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறன. வழக்கம் போல எழுதி முடித்ததும் உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கமாக இருக்கிறது. இந்த நோக்கம் எப்படி இவ்வளவு ஆற்றலைக் கொடுக்கிறது என்பது ஆச்சரியம் தான்.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

***

அன்புள்ள பழனிவேல் ராஜா

நாம் எழுதுவது நம்மைத்தான். ஆகவே அது எப்படியோ நம் நிகழ்காலம் இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் சார்ந்ததாகவே இருக்கும். எழுதுங்கள்.

நம் சூழலில் எழுத்தாளனின் வாழ்க்கை என்பது அன்றாடத்தின் அழுத்தம் மற்றும் சலிப்புடன் ஓயாது போராடி அடையவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2023 11:32

பௌத்தம் – சோ.ந.கந்தசாமி

இனிய ஜெயம்

என் சேகரிப்பில் உள்ள தத்துவம் சார்ந்த மற்றொரு முக்கிய நூல் இது. சோ ந. கந்தசாமி அவர்கள் எழுதிய இந்த _பௌத்தம்_  நூல், சமயவியல், பிரபஞ்சவியல், அறவியல், தருக்கவியல், தத்துவவியல் எனும் ஐந்து அத்தியாயங்கள் கொண்டது.

இந்த நூலின் தனித்துவம் என்பது இது தமிழ் நிலத்தின் பௌத்தம் சார்ந்து எழுதப்பட்டது என்பதே.

இதில் முதற் கட்டுரையில் பௌத்த நெறியில் பரம்பொருட் கொள்கை இடம் பெற்ற திறமும், பௌத்த தெய்வங்களின் நிலையும், பத்தி மார்க்கமும், போதிசத்துவக் கொள்கையும், துறவு நெறியும் பிறவும் ஆராயப்பெறுகின்றன. அடுத்து வரும் இரு கட்டுரைகளில் பௌத்தப் பிரபஞ்சக் கொள்கையும், அறங்களும் விளக்கப்பெறுகின்றன. இறுதிக் கட்டுரைகள் இரண்டும் பௌத்த தருக்கம், தத்துவம்பற்றிய கோட்பாடுகளை ஆராய்ந்துணர்த்துகின்றன. தமிழிலக்கியத்தில் காணப்பெறும் பௌத்தம்பற்றி எழுதப்பெற்றுள்ள இந்நூலில்,  தெளிவிற்காகவும் விளக்கத்திற்காகவும் பாலி, வடமொழிப் பௌத்த நூல் களின் கருத்துக்களும்  இடம் பெற்றுள்ளன. பௌத்தவியல் பேரறிஞர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு நூல்கள் இவ் ஆய்விற்கு மிகுதியும் பயன்பட்டன.

என்று முன்னுரையில் ஆசிரியர்  தெரிவிக்கிறார்.

நூலின் சுட்டி கீழே:

பௌத்தம் இணைய நூலகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2023 11:30

ஜென் கவிதைகள்

பெயரற்ற யாத்ரீகன் வாங்க

நிகழ்காலத்தை நீட்டிப்பது அல்லது நிரந்தரமானதாக ஆக்குவது தான் ஜென் கவிதை என்கிறார் இக்கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்திருக்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். கிட்டத்தட்ட Living in the present (கணத்தில் வாழ்வது) என்ற ஜெகி (ஜெ. கிருஷ்ணமூர்த்தி)யின் ஆப்த வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது. நிகழ்காலத்தை நிரந்தரமாக்குவது என்பது, கடந்தவைகளையும், வரப் போகின்றவைகளையும் நிகழ்காலத்தில் கரைத்து இல்லாமலாக்கி விடுவதுதான்.

பெயரற்ற யாத்ரீகன் வாசிப்பு முத்துக்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2023 11:30

April 6, 2023

மேடையுரைப் பயிற்சி

வரும் ஏப்ரல் 14, 15 16 (வெள்ளி சனி ஞாயிறு) தேதிகளில் மேடையுரை பயிற்சி முகாம் ஒன்றை நடத்துவதாக உள்ளோம். ஏற்கனவே ஒரு முகாம் நடைபெற்றது.அதன் வெற்றியே இதை நடத்துவதற்கான ஊக்கத்தை அளித்தது

பங்கேற்க விரும்புபவர்கள் என்னும்

programsvishnupuram@gmail.com

பெயர், வயது, ஊர் ஆகிய தகவல்களுடன் எழுதவும்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2023 17:22

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன?

அன்புள்ள ஜெ,

சாவர்க்கர் பற்றிய இன்றைய ஊடகவியலாளர்கள் சொல்லும் கருத்துகளை தற்போது கவனிக்கையில், காந்தி சிறையில் கண்ணியமாக நடத்தப்பட்டார், போரட்டங்களில் கூட அவர் முன் நின்றாலும் அடி வாங்கியதில்லை, ஆனால் சாவர்க்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டார் என்கின்றனர்.   எனில், சாவர்க்கர் மன்னிப்பு கேட்டு ஒரு எளிய சுதந்திரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டதில் என்ன தவறு உள்ளது.  காந்திக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள் அளிக்கப்பட்டன.

த. பிரபாகரன்

அன்புள்ள பிரபாகரன்,

ஒவ்வொரு விவாதத்தையும் அதன் அடிப்படைக் கேள்விகளைக் கொண்டே அணுகவேண்டும். ஒட்டுமொத்தமாகவே வகுத்துக் கொள்ளவேண்டும். என் வழி அது. அதையே முன்வைக்கிறேன். ஆகவே எப்போதுமே ஒரு விரிவான சித்திரத்தை அளிக்க முயல்கிறேன்.

தமிழில் பொதுவாக அவ்வகை அணுகுமுறைகள் வழக்கமில்லை. தீவிரமான நிலைபாடு ஒன்றை எடுத்து அதனடிப்படையில் மிகையுணர்ச்சியுடன் அனைத்தையும் அணுகுவதே இங்கு வழக்கம். கட்சிச்சார்பு, சாதி மதச்சார்பு. பலசமயம் அவை எல்லாம் ஒன்றாகவே உள்ளன.

ஆகவே எதையும் ஒற்றைவரி, ஒற்றைக்கருத்தாக ஆக்கிக் கொள்வார்கள். எல்லாவற்றிலிருந்தும் ஒற்றை நிலைபாட்டை அடைவார்கள். ஒற்றை வரியை பிடுங்கிக்கொண்டு விவாதிப்பார்கள். எதிர்த்தரப்பு என்றால் அதிலுள்ள எல்லாமே அயோக்கியத்தனம். தன் தரப்பு என்றால் அதிலுள்ள எல்லாமே உயர்வு. அதையே பிறரிடம் எதிர்பார்ப்பார்கள். சார்புநிலை எடு, ஒற்றைவரியைச் சொல், எதிர்க்கூச்சல் இடு- இதுதான் நம்மிடம் எப்போதும் கோரப்படுகிறது. அதைச்செய்ய எழுத்தாளர் தேவையில்லை.

அவ்வாறு அவர்கள் சொல்லும் ஒற்றை வரியை நாம் சொல்லவில்லை என்றால் அவர்களின் எதிரித்தரப்புக்கு நம்மை கொண்டுசெல்வார்கள். நம்மிடம் ஒற்றைவரிகளை பிடுங்குவார்கள். அந்த ஒற்றைவரிக்கு ஆவேசமான மறுப்பும், வசைபாடலும், ஏகத்தாளமும் கிளம்பி வரும். ஆயினும் ஒரு முழுச்சித்திரத்தை அளிக்க முயல்கிறேன். உடனே ‘வளவளவென பேசுகிறார்’ என்ற குற்றச்சாட்டு வரும். கட்டுரைகளை முழுமையாக படிக்க மாட்டார்கள். ஆயினும் எனக்கான சில வாசகர்கள் உண்டு என்னும் நம்பிக்கையில் ஒவ்வொரு முறையும் பேசுகிறேன். 

கல்லக்குடி சிறையில் மு.கருணாநிதி இருந்ததை பற்றி கண்ணீர் மல்கும் ஒருவருக்கு சவார்க்கர் அந்தமான் சிறையில் இருந்தது ஒரு பொருட்டே அல்ல. வாழ்நாள் முழுக்க பிரிட்டிஷ் ஆதரவு நிலைபாடு எடுத்த தலைவர்களை ஆதரிக்கும் ஒருவருக்கு சவார்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதியது மாபெரும் கோழைத்தனம். இப்படியே இங்கே விவாதங்கள் நிகழ்கின்றன.

இந்த வகை விவாதங்களிலேயே நீங்கள் எழுப்பியது போன்ற ‘உதிரி விவாதங்கள்’ உருவாகின்றன. காந்தியும் நேருவும் சிறையில் இருந்தார்கள், அம்பேத்கர் சிறை சென்றாரா என கேட்பவர்கள் உண்டு. பகத்சிங் தூக்கில் தொங்கினார், காந்தி சிறையில் வசதியாக இருந்தார் என வாதிடுபவர்கள் உண்டு. இந்தவகை விவாதங்கள் போல ஒட்டுமொத்த வரலாற்றுச் சித்திரத்தை மறைக்கும் செயல் வேறொன்றில்லை.

சவார்க்கர் கடுந்தண்டனை அனுபவித்தார், அதை இந்திய சுதந்திரத்தின் பொருட்டே அனுபவித்தார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர் கோழையோ தன்னலவாதியோ அல்ல. அவரது தியாகத்தை மறுப்பதென்பது எதிர்த்தரப்பை முழுமையாக மறுத்து இழிவுசெய்யும் மனநிலையின் வெளிப்பாடு மட்டுமே. நான் சவார்க்கரை விரிந்த ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து தர்க்கபூர்வமாக அணுகவே முயல்கிறேன்.

வன்முறையாளரும் ஜனநாயகவாதிகளும்

சவார்க்கரின் சிறைவாழ்க்கையை காந்தி அல்லது நேருவின் சிறைவாழ்வுடன் ஒப்பிடுகையில் ஓர் அடிப்படையான தெளிவு வேண்டும். உலகில் உள்ள எந்த அரசும் அதற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை முன்வைப்பவர்களையும் ஜனநாயகப்போராட்டத்தை முன்வைப்பவர்களையும் வேறுபடுத்தியே பார்க்கும். வரலாறு முழுக்க அப்படித்தான் நிகழ்ந்துள்ளது.

நீங்கள் ஆயுதமெடுக்கையிலேயே உங்களுக்கு எதிராக ஆயுதத்தை பயன்படுத்தும் உரிமையை மறுதரப்புக்கு அளித்துவிடுகிறீர்கள். நீங்கள் வன்முறை வழியை தெரிவு செய்யும்போது உங்கள்மேல் வன்முறையைச் செலுத்தும் நியாயங்களை நீங்களே உருவாக்கிவிடுகிறீர்கள். ஆயுதம் என்பது மிகத்தெளிவான ஒரு செய்தி. எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை, எந்தச் சமரசத்திற்கும் வழியில்லை என்பதுதான் அது. ஆயுதங்கள் மோதி அதன் வழியாக உருவாகும் சமநிலைப்புள்ளி மட்டுமே தீர்வு என்ற அறிவிப்புதான் அது.

அப்படி ஆயுதத்தை எடுத்தபின் எதிர்த்தரப்பு வன்முறையை கைக்கொள்கிறது என்பதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைப்பதில் பொருளே இல்லை. தங்கள் வன்முறை அறம் சார்ந்தது  எதிரியின் வன்முறை அறமற்றது என்று சொல்வதைப்போல அபத்தமும் வேறில்லை. 

தனக்கெதிரான ஆயுதக்கிளர்ச்சியை எந்த அரசும் அடக்கவே முயலும். அது பிரிட்டிஷ் அரசாக இருந்தாலும் சரி, இன்றைய இந்திய அரசாக இருந்தாலும் சரி. அதில் வெல்லமுடியாதவர்கள் தங்கள் தோல்வியை ஒரு தியாகம் என சித்தரிப்பதில் மிகப்பெரிய தர்க்கப்பிழையே உள்ளது. அறப்பிழையும்தான். ‘நீ வென்றிருந்தால் அவர்கள் உனக்குச் செய்ததை நீ அவர்களுக்கும் செய்திருப்பாய் அல்லவா?’ என்பதே அதில் எழும் முதல் அறம்சார்ந்த கேள்வி.

சவார்க்கர் பிரிட்டிஷ் அரசு மேல் தொடுத்தது ஆயுதக்கிளர்ச்சிக்கான அறைகூவல். அதற்கான தயாரிப்புகளையும் அவர் செய்தார். அவருக்கு எந்த யதார்த்தவுணர்வும் இருக்கவில்லை. எந்த வரலாற்றுணர்வும் இருக்கவில்லை. பிரிட்டிஷ் அரசின் மாபெரும் நிர்வாக இயந்திரம், அதன் மாபெரும் ராணுவம் பற்றிய புரிதலே அவருக்கு இல்லை. பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் கோடானுகோடி மக்கள் அதற்கு அளித்த ஏற்பின் வலிமையில் நிலைகொள்கிறது என்றும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

இந்தியாவில் முகலாய அரசின் வீழ்ச்சிக்குப் பின் உருவான மாபெரும் அராஜகச்சூழலில் ஆட்சிக்கு வந்தவர்கள் பிரிட்டிஷார். அவர்கள் இங்கே வரும்போது நூற்றுக்கணக்கான குட்டிப்போர்களில் இந்தியா அழிந்துகொண்டிருந்தது. ராணுவங்கள் சிதைந்து கொள்ளைக்கூட்டங்களாக ஆகிவிட்டிருந்தன. பிரிட்டிஷார் இங்கே உள்நாட்டு அமைதியை, சீரான நிர்வாகத்தை, பொதுவான சட்டத்தை உருவாக்கினர். ஆகவே மக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டனர். மக்கள் அளித்த அந்த ஏற்பை இல்லாமலாக்காமல் பிரிட்டிஷாரை எதிர்த்தால் அதற்கு மக்களின் ஆதரவு இருக்காது என்பதே அன்றைய வரலாற்றுச்சூழ்நிலை. அது சவார்க்கருக்கு தெரிந்திருக்கவில்லை. 

பிரிட்டிஷாரின் தீமை என்பது அவர்களின் ஈவிரக்கமில்லாத பொருளியல் சுரண்டலில் இருந்தது. அச்சுரண்டலுக்கு உள்ளூர் ஜமீந்தார்களை கட்டவிழ்த்து விட்டனர். விளைவாக உருவான பெரும் பஞ்சங்களில் இந்தியாவின் அராஜக காலகட்டத்தில் நிகழ்ந்ததை விட நூறு மடங்கு உயிரிழப்பும் அழிவும் இடப்பெயர்வும் நிகழ்ந்தது.அந்தப் பொருளியல் சுரண்டலை முன்வைத்து, நடைமுறைகள் வழியாக அதை கண்கூடாகக் காட்டி விளக்கி, பிரிட்டிஷ் ஆட்சிக்குமேல் மக்களிடம் உண்மையான விமர்சனத்தை உருவாக்கியவர் காந்தி. அதன்பின்னரே இந்தியச் சுதந்திரப்போர் மக்களியக்கமாக ஆகியது. (இன்றைய காந்தி நூலில் விரிவாகவே இதை விவாதித்துள்ளேன்) 

அதற்கு முன் சவார்க்கரின் காலகட்டத்தில் ‘அறிவாளிகள்’ சிலர் வன்முறை வழியாக பிரிட்டிஷாரை துரத்திவிடலாம் என நம்பியிருந்தனர். வன்முறையை தொடங்கி வைத்தால்போதும், மக்கள் கிளர்ந்து பிரிட்டிஷாரை அழிப்பார்கள் என நினைத்தனர். மேலும் ஐம்பதாண்டுகள் கழித்து இந்திய நக்சலைட்டுகளும் அச்சு அசலாக அதே நம்பிக்கையும் அதே வழிமுறையுமே கொண்டிருந்தனர்.

சவார்க்கரும் சரி, பகத்சிங்கும் சரி, சுபாஷ் சந்திர போஸும் சரி அந்த அபத்தமான வரலாற்றுப் புரிதல் கொண்டவர்களே. அவர்களுடையது சிறுபிள்ளைத்தனமான ஒரு போர் முயற்சி. முழுக்கமுழுக்க வன்முறை மற்றும் தனிநபர் சாகசம் சார்ந்தது. அவர்களின் அந்த தன்னம்பிக்கை என்பது தங்களை அசாதாரணமான மனிதர்களாக, வரலாற்றை தீர்மானிக்கும் ஆற்றல்கொண்டவர்களாக கற்பனைசெய்துகொள்வதில் இருந்து வருவது. அடிப்படையில் மக்கள் என்னும் மாபெரும் சக்தி மேல் நம்பிக்கையில்லாமையில் இருந்து உருவாவது.

பிரிட்டிஷார் வன்முறைக் கிளர்ச்சிகளை ஒடுக்கினர். ஏனென்றால் அவர்கள் உலகமெங்கும் அத்தகைய பல  வன்முறைக் கிளர்ச்சிகளை ஒடுக்கிய அனுபவம் கொண்டவர்கள். சவார்க்கர் சிறைப்பட்டார். பிறர் கொல்லப்பட்டனர். சவார்க்கர் முதலிய அன்றைய கிளர்ச்சியாளர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளலாம், அவர்களின் நோக்கத்தை மதிக்கலாம், அவர்கள் சுதந்திரப் போராளிகளே. ஆனால் அந்த மதிப்பு அவர்களின் பார்வையையோ வழிமுறைகளையோ எந்தவகையிலும் நியாயப்படுத்தாது. இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ள மிகையுணர்ச்சிக் கூச்சலிடுபவர்களால் இயலாது. நான் பேசுவது கொஞ்சமேனும் பிரித்துப் புரிந்துகொள்ளும் சிலரிடம் மட்டுமே.

காந்தியும் நேருவும் முன்னெடுத்தது ஜனநாயகப் போராட்டம். ஓர் இந்திய உயிர் அளவுக்கே பிரிட்டிஷ் உயிரும் முக்கியமானது என்று சொன்னவர் காந்தி. பிரிட்டனில் உள்ள எளிய உழைக்கும் மக்களுக்காகவும் தான் போராடுவதாக நிலைகொண்டவர். பிரிட்டன் சென்றால் அங்கே அந்த அடித்தள மக்களுடன் தங்கியவர். அவரை வரவேற்க பிரிட்டிஷ் உழைப்பாளி மக்கள் திரண்டு துறைமுகத்திற்கு வந்து கூடியமை வரலாறு. 

ஒவ்வொரு தருணத்திலும் மிகக்கவனமாக வன்முறையை காந்தி தவிர்த்தார். தன்னுடையது அகிம்சைப்போர் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருந்தார். எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சித்தரப்பில் இருந்த மிகச்சிறந்த ஆளுமைகளுடன் மிக நெருக்கமான தனிப்பட்ட நட்பை கொண்டிருந்தார். அவர்களும் அவரைப்பற்றி உயர்மதிப்புடன் இருந்தனர்.  

காந்தி தான் முன்னெடுப்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமே ஒழிய, பிரிட்டிஷாருக்கு எதிரான போர் அல்ல என்பதை தெளிவுபடுத்திக் கொண்டே இருந்தார். பிரிட்டிஷார் எவரும் தன் எதிரிகள் அல்ல என்று காந்தி திரும்பத் திரும்பச் சொன்னார். இந்திய மக்களிடமும் அதைச் சொல்லிக் கொண்டே இருந்தார். தன் போராட்டம் வரலாற்றின் ஒரு தருணத்தில் நிகழ்ந்தே ஆகவேண்டிய ஜனநாயகம் நோக்கிய மாற்றத்திற்கான ஓர் எழுச்சி மட்டுமே என தெளிவு கொண்டிருந்தார். அதில் பிரிட்டிஷார் ஒரு தரப்பும் தான் இன்னொரு தரப்பும் மட்டுமே என நினைத்தார்.

காந்தி சம்பாரன் முதலிய மக்கள் போராட்டங்கள் வழியாக தலைவராக உருவானவர். ஜனநாயக முறையிலேயே அரசியல் வெற்றியை அடையமுடியும் என்று மக்களுக்குக் காட்டினார். அரசியல் போராட்டங்களுக்காக எளிய மக்களை களப்பலி கொடுக்கக்கூடாது என்னும் திடம் கொண்டிருந்தார். வரலாற்றில் அத்தகைய பொறுப்புணர்ச்சி கொண்ட முதல் அரசியல்தலைவர் காந்தியே.

ஆகவே காந்தி ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருந்தார். அவருக்குப்பின்னால் கோடிக்கணக்கான இந்திய மக்கள் இருந்தனர். உலகமே அவரை கவனித்தது. அவருடைய ஒவ்வொரு சொல்லும் ஊடகங்களால் கவனிக்கப்பட்டது.அவர் 1918ல் இந்தியா வருவதற்கு முன்னரே அவர் உலகமெங்கும் அறியப்பட்ட அகிம்சைப் போராளியாக இருந்தார்.

அகிம்சைப்போராளியும் ஜனநாயகவாதியுமான காந்தியையோ அல்லது அவரது வழிவந்த நேருவையோ வன்முறை மூலம் ஒடுக்கினால் தாங்கள் ஜனநாயகவாதிகள் என்றும், பாரபட்சமற்ற சட்டநிர்வாகம் கொண்டவர்கள் என்றும் பிரிட்டிஷார் சொல்லிக்கொண்டது உலகின் கண்களின் முன் பொய்யாக ஆகும். பிரிட்டிஷ் நீதிமுறை மீதும், பிரிட்டிஷ் நிர்வாகவியல் மீதும், அவர்களின் ஜனநாயகம் மீதும் உலகமெங்கும் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையால்தான் கீழைநாடுகள் முழுக்க பிரிட்டிஷ் ஆட்சிக்கு மக்களாதரவு இருந்தது. காந்தியை கொடுமைப்படுத்தி அந்த அடித்தளத்தை இழக்க பிரிட்டிஷார் தயாராகவில்லை. அந்த அறிவு அவர்களுக்கு இருந்தது.

தொடர்ச்சியாக பிரிட்டிஷார் தாங்கள் ஜனநாயகவாதிகள் ஆகையால் காந்தி, நேரு உள்ளிட்டவர்களையும் இந்திய சுதந்திரப்போராட்டத்தையும் மிகமிகச் சட்டபூர்வமாகவே நடத்துவதாக உலகின் முன் காட்டிக்கொண்டிருந்தார்கள். காந்தியும் அவர்களின் சட்டம், நிர்வாகம், ஜனநாயகப்பண்பு ஆகியவற்றின் மேல் நம்பிக்கை உண்டு என்றும்; ஆனால் இந்தியாமீதான அவர்களின் ஆதிக்கத்தையும் அவர்களின் பொருளியல் சுரண்டலையும் ஏற்க முடியாது என்றும் கூறிக்கொண்டிருந்தார். அந்த போராட்டமே இரண்டு தரப்புகளும் தங்கள் ஜனநாயகப்பண்புகளை முன்வைத்து நடத்திய ஒரு பேரமாகவே இருந்தது. 

சவார்க்கரின் நிலை அப்படி அல்ல, அவரை இந்தியாவிலேயே எவருக்கும் பெரிதாக தெரியாது. அவர் ஒரு வன்முறைக் குறுங்குழுவின் தலைவர் மட்டுமே. அவர் வன்முறையை கையில் எடுத்ததுமே அவரை கடுமையாக நடத்தும் உரிமையை பிரிட்டிஷ் அரசுக்கு அவர் வழங்கிவிட்டார். இந்தியாவில் வன்முறைப்பாதையை தெரிவுசெய்த அனைவரையுமே பிரிட்டிஷ் அரசு கடுமையாகவே நடத்தியது. ஆயுதக்கிளர்ச்சி செய்த சிற்றரசர்களும் ஜமீன்தார்களும் பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டனர். பின்னர் படித்த இளைஞர்கள் ஆயுதக்கிளர்ச்சி நோக்கி சென்றபோது அவர்களும் ஒடுக்கப்பட்டனர்.

காந்தியின் போராட்டத்தில் வன்முறை நிகழவேண்டும் என்று பிரிட்டிஷார் காத்திருந்தனர். அதை அன்றைய பிரிட்டிஷ் நாளிதழ்கள், அரசு அறிக்கைகள் அனைத்திலும் காணலாம். வன்முறை சற்றேனும் நிகழ்ந்திருந்தால் உலகின் மிகமிக வல்லமை மிக்க ராணுவமாக இருந்த பிரிட்டிஷ் ராணுவம் களமிறக்கப்பட்டிருக்கும். காந்தியும், நேருவும் கடுமையாக ஒடுக்கப்பட்டிருப்பார்கள். இந்திய சுதந்திரப்போராட்டம் ரத்தத்தால் அழிக்கப்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை பிரிட்டிஷாருக்கு அளிக்கவே கூடாது என்பதில் காந்தி மிக உறுதியாக இருந்தார். சிறு வன்முறை நிகழ்ந்தால்கூட அதற்கு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பொருட்டு மன்னிப்பு கோரினார். தன்னை தண்டித்துக்கொண்டார்.

சென்ற நூறாண்டுகளில் பல்வேறு அரசியல் போராட்டங்களில், உள்நாட்டுப்போர்களில் எத்தனை கோடி சாமானிய மக்கள் கொன்றழிக்கப்பட்டனர் என்று கொஞ்சம் தேடிப்பாருங்கள். எத்தனை கோடி மக்கள் இடம்பெயர்ந்து அகதியாயினர். எத்தனை கோடி மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டது. அவற்றை கொண்டு பார்த்தால் காந்தியின் அந்த எச்சரிக்கையுணர்ச்சி, அந்த பொறுப்புணர்ச்சி, அவருடைய தீர்க்கதரிசனம், எளிய மக்கள் மேல் அவர்கொண்ட பரிவு மானுட வரலாற்றிலேயே ஒரு மகத்தான புதிய நிகழ்வு என்று புரியும். ‘வாழ்விக்க வந்த காந்தி’ என்று நம் பெருங்கவிஞன் வெறுமே பாடவில்லை.

சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். காந்தி எதிர்கொண்டது பிரிட்டிஷ் அரசின் ‘குடிமை’ முகத்தை. பிரிட்டிஷ் ராஜதந்திரிகளை அவர் சந்தித்தார். சவார்க்கரோ ,பகத்சிங்கோ, சுபாஷ்சந்திர போஸோ எதிர்கொண்டது பிரிட்டிஷ் அரசின் ஆயுதங்களை, அதன் ராணுவத்தை. காந்தி ஜனநாயக, அகிம்சை வழியை கடைப்பிடித்தார். ஆகவே அரசும் அதே ஆயுதத்தை எடுத்தாகவேண்டியிருந்தது. இதுதான் வேறுபாடு.

சாகசக் கிளர்ச்சியும் வரலாற்றுணர்வும்  

பொதுவாக நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய உளநிலை ஒன்றுண்டு. அமைதியான சமூகச் சூழலில், நடுத்தர வர்க்க வாழ்க்கையின் எளிமையான அன்றாடத்தில், நமக்கு ஒருவகை ‘கிளர்ச்சி மனநிலை’ தேவையாகிறது. ஆகவே மிகையுணர்ச்சிகளை நாடுகிறோம். செயற்கையாக கொந்தளிக்கவும், கூச்சலிடவும், கண்ணீர்மல்கவும் காரணங்களை தேடி அலைகிறோம். அதன் வழியாக நம்மை நாமே தீவிரமானவர்கள் என்றும் உண்மையானவர்கள் என்றும் கற்பனை செய்துகொள்கிறோம். கழிவிரக்கமும் போலிவீரவுணர்சியும் சரிசமமாக கலந்த ஓர் உணர்வுநிலை அது. 

அது ஒரு மாபெரும் அசட்டுத்தனம். இருபது வயது வரை அந்த மனநிலை இருப்பது மன்னிக்கத்தக்கது. சாகச சினிமாக்கள் பார்த்து மெய்சிலிர்ப்பதுபோன்ற மனநிலைதான் அது.  அதன்பிறகும் இந்த அசட்டுத்தனத்தில் இருந்து விடுபடாதவருக்கு எந்த சிந்தனைக்குள்ளும் நுழையும் தகுதி இல்லை

நம் அசட்டு மிகையுணர்ச்சிகள் வழியாக நாம் அரசியலையும் வரலாற்றையும் அணுகும்போதுதான் ‘வீர வழிபாட்டு’ மனநிலையைச் சென்றடைகிறோம். ஆளுமைகளை திருவுரு ஆக்குகிறோம். அப்போது நமக்கு உகந்தவர்கள் சாகசக்காரர்கள், தியாகிகள் ஆகியோர்தான். அவர்களின் சாகசங்களை சொல்லிச் சொல்லி பெரிதாக்கிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட ஒரு வன்முறையாளர் ஒருவர் தன் தன்முனைப்பால் உருவான  சாகசத்தன்மையால், வரலாற்றுணர்வு இல்லாத காரணத்தால், அறிவற்ற மூர்க்கத்தால் வீழ்ந்துபட்டால் உடனே அவரை தியாகி ஆக்குகிறோம். அவர் அடைந்த கஷ்டங்களை எல்லாம் சோகக்காவியங்களாக ஆக்கிக் கொள்கிறோம்.

இந்த அசட்டுத்தனமே வரலாறு முழுக்க போலி ஆளுமைகளை தலைவர்களாக கொண்டு வந்து நிறுத்துகிறது. வரலாறு குறித்த எந்தப் புரிதலுமில்லாத ஒருவர், மக்கள்மேல் எந்த மதிப்புமில்லாத ஒருவர், எந்தவகையான தலைமைப் பண்பும் இல்லாத ஒருவர், வன்முறையில் ஈடுபட்டு சிறைசென்று; அங்கே   கொடுமைக்குள்ளாகி திரும்பி வந்தால் அவர் தியாகியாகிவிடுவார். அந்த ‘தியாகத்தை’ சோட்டா அறிவுஜீவிகள் கொண்டாடுவார்கள். நடுத்தரவர்க்கத்தினர் மெய்சிலிர்ப்பார்கள். அவர் அந்த சிலிர்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால்  மக்களால் ஏற்கப்பட்டு தலைவரும் ஆகிவிடுவார். அப்படி மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு வரலாறு முழுக்க பலர் தலைவர்களாகியுள்ளனர். அவர்களனைவருமே மூர்க்கமான சர்வாதிகாரிகளாகவே இருந்துள்ளனர். அந்த தேசங்களையே பேரழிவு நோக்கித்தான் கொண்டு சென்றுள்ளனர்.

இந்தியாவின் தொடக்ககால சுதந்திரப்போராட்டத்தில் வன்முறையில் நம்பிக்கை கொண்ட சாகசக்காரர்கள் பலர் இருந்தனர். பின்னர் இந்தியச் சுதந்திரப்போராட்டம் மக்களியக்கமாக ஆனபோது, மக்களை கவர்வதற்காக அவர்களின் வாழ்க்கைவரலாறுகள் உணர்ச்சிக்காவியங்களாக ஆக்கப்பட்டன. அவர்கள் திருவுருக்களாக மாற்றப்பட்டனர். ஏனென்றால் மக்களுக்கு ஜனநாயகம் புதியது, அவர்களால் ஜனநாயகத்தலைவர்களை புரிந்துகொள்ள முடியாது. ஆனால் வீரவழிபாட்டுக்கு இரண்டாயிரமாண்டு வரலாறு உண்டு. மிக எளிதில் வீரகதைகள் அவர்களைச் சென்று சேரும். இந்தியா முழுக்க வீரசூரபராக்ரமிகளான தேசப்போர்த் தியாகிகள் கண்டடையப்பட்டு, அவர்களுக்கான கதைகள் உருவாக்கப்பட்டன

ஆனால் இன்றைய ஜனநாயக யுகத்தில் நாம் அந்த வீரவழிபாட்டு புல்லரிப்புகளை கடந்தே ஆகவேண்டும். அவர்களை வரலாற்றில் வைத்து புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவின் தொடக்ககால வன்முறைக் கிளர்ச்சியாளர்களை அன்றைய உலகச்சூழலில் வைத்து மதிப்பிடலாம். அன்று உலகில் எங்குமே ஜனநாயகப்போராட்டம் என்பது ஆழமாக வேரூன்றவில்லை. ஐரோப்பாவில் அப்போதுதான் அது தோன்றி, நடைமுறையில் சில எளிய வெற்றிகளை அடைந்துகொண்டிருந்தது.  ஆகவே அன்று உலகமெங்கும் வெவ்வேறு தளங்களில் சமூக மாற்றத்தையோ அரசியல் மாற்றத்தையோ விரும்பியவர்கள் அனைவருமே வன்முறைப்பாதையே அதற்கான ஒரே வழி என நினைத்தனர்.

வரலாற்றில் அதற்கு முன்னர் மன்னராட்சி நிலவியது. மன்னருக்கு எதிரான போர்கள் ராணுவக் கிளர்ச்சிகளாகவே இருந்தன. அதன்பின் வெவ்வேறு சிறு மக்கள் கிளர்ச்சிகள் தோன்றின. அதன்பின்னர் கம்யூனிஸ்டுப் புரட்சிகள் உருவாயின. அவை அனைத்துமே மன்னராட்சிக்கால கிளர்ச்சிகளை வேறொருவகையில் நகல் செய்பவை. ஆக, அன்று பரவலாக இருந்த இரண்டு அதிகார எதிர்ப்பு வழிமுறைகளும் வன்முறை சார்ந்தவை. பகத்சிங்கோ ,சவார்க்கரோ, சுபாஷ் சந்திரபோஸோ அவற்றையே நம்பினர். 

முந்தைய மன்னராட்சிக்காலத்திலேயே வன்முறையற்ற மக்கள் எதிர்ப்புகள் பல நிகழ்ந்து வெற்றியும் அடைந்துள்ளன. ஐரோப்பாவில் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் (புரட்டஸ்டாண்டுகள்) வன்முறையற்ற போராட்டம் வழியாக மக்கள் செல்வாக்கை அடைந்து தங்களை நிறுவிக்கொண்டனர். இன்றைய ஜனநாயகப் போராட்டங்களின் ஐரோப்பிய முன்னுதாரணம் அவர்களே. காந்தி அகிம்சைப்போராட்டத்தை முன்னெடுத்தபோது கிறிஸ்தவர்களால் அதை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தமைக்குக் காரணமும் இதுவே. அதன்பின் ஐரோப்பாவில் பல ஜனநாயகப் போராட்டங்கள் நிகழ்ந்தன. காந்தி அவற்றில் இருந்தும், இந்தியாவில் சமணர்கள் நிகழ்த்திவந்த ‘சகிப்பு– தியாகம்’ வழியான போராட்டங்களில் இருந்தும் தன் ஜனநாயக வழிகளை கண்டுகொண்டார்

அந்த வழிமுறைகளை அறியாத ஒரு காலகட்டத்தின் ஆளுதான்  சவார்க்கர். அந்த வழிமுறைகளை புரிந்து கொள்ளாதவர்கள் பகத்சிங்கும், சுபாஷ் சந்திரபோஸும். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதும், வீழ்ந்ததும், அழிந்ததும் தவிர்க்கவே முடியாத நிகழ்வுகள். அவர்களைப்போல உலகமெங்கும் பல்லாயிரம் பேர் வரலாற்றில் காணக்கிடைக்கின்றனர். வன்முறையை கைக்கொண்டு, ஒரு நவீன அரசின் உண்மையான ஆற்றல் எங்குள்ளது என புரியாமல் அதனுடன் மோதி அழிந்தவர்கள் அவர்கள்.  அவர்களில் மெய்யான அறிஞர்கள் உண்டு. மாவீரர்கள் உண்டு. உண்மையான பெருநோக்கம் கொண்டவர்களும் உண்டு. அவர்கள் வரலாற்றின் தோற்கும் அலையில் இருந்தனர், அவ்வளவுதான்.

யோசித்துப் பாருங்கள், நம்மில் பலர் ஏன் தோற்றவர்கள் மேல் அனுதாபம் கொண்டிருக்கிறோம்? அவர்களை தியாகிகளும் திருவுருக்களும் ஆக ஏன் மாற்றத் துடிக்கிறோம்? அவர்கள் தோற்றமைக்கான காரணம் என்ன, அவர்கள் தங்கள் தோல்வி வழியாக மற்றவர்களுக்கு அளித்த அழிவுகளும் துயரங்களும் என்ன என ஏன் நாம் யோசிப்பதில்லை? அந்த தோல்வியடைந்த ஆளுமைகள் ஏதேனும் சந்தர்ப்பத்தில் வென்றிருந்தால் தங்கள் தவறான வரலாற்றுப் புரிதல்கள் வழியாக நம்மை ஒட்டுமொத்தமாக அழிவுக்கு கொண்டு சென்றிருப்பார்கள் என ஏன் நினைப்பதில்லை நாம்?

என் பார்வையில் சவார்க்கர், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் மூவருமே மக்களேற்பை அடைந்து இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருந்தால் இந்தியா பேரழிவை சந்தித்திருக்கும். மூன்று வழிகளிலான பேரழிவு. சவார்க்கர், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் மூவரும்  முறையே அயதுல்லா கொமெனி, ஸ்டாலின், ஹிட்லர் ஆகியோர் அவர்களின் நாட்டுக்கு அளித்த அழிவுக்கு நிகரான பேரழிவை நமக்கு அளித்திருப்பார்கள்.

வன்முறைப்பாதையை தெரிவுசெய்தவர்கள் அவர்கள் வன்முறைப்பாதையை தேர்வு செய்தமையாலேயே எதிர்த்தரப்புக்கும் வன்முறைக்கான உரிமையை வழங்கிவிடுவதனால் அவர்களால் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் அடையும் துன்பங்கள் மிகுதி. அந்த துன்பம் அவர்களின் வன்முறைப்பாதை அவர்களுக்கு அளிப்பதே ஒழிய எவ்வகையிலும் அவர்களின் ஆளுமைத்திறனுக்கான சான்று அல்ல. நாம் நம்முடைய நடுத்தவர்க்க வாழ்க்கை மீதான குற்றவுணர்வாலோ அல்லது சலிப்பாலோ அவர்களை திருவுருவாக்கினால், தலைவர்களாக ஆக்கினால் நம்மை அழித்துக்கொள்கிறோம்.

ஆகவே, தியாகக் கணக்கெடுப்பின் வழியாக தலைவர்களை மதிப்பிடுவது அபத்தமான ஒன்று. அவர்களின் வரலாற்றுப் புரிதல் என்ன என்பதே கேள்வி. அவர்களின் வழிகள் என்ன, அவ்வழிகளின் அறுதி விளைவுகள் என்ன என்பது மட்டுமே ஆய்வுக்குரியது. தலைவர்கள் அவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படவேண்டும்

சவார்க்கர், பகத்சிங்,  சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய மூவரையும் மூன்றுவகை வன்முறைப்பாதையின் உதாரணங்களாகவே சுட்டிக்காட்டுகிறேன். மூவரும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகள் கொண்டவர்கள். ஆனால் ஒரே பாதையை தெரிவுசெய்தவர்கள். மூவருமே வீழ்ந்துபட்டவர்கள். மூவருமே தியாகிகளாக வெவ்வேறு தரப்பினரால் கொண்டாடப்படுபவர்கள். 

மாறாக ஜனநாயகப்பாதையை தெரிவுசெய்தவர்கள் என காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகிய மூவரையும் சொல்வேன். அவர்களின் பார்வைகள் வேறுபடுபவை. வழிமுறை எப்போதுமே ஜனநாயகம் சார்ந்தது. நான் ஏற்பது அவர்களின் வழியையே.

காந்தி, நேரு, அம்பேத்கர் மூவரும் இந்தியத் தலைவர்களில் என்றல்ல; அன்றைய உலகத்தலைவர்களிலேயே தெளிவான வரலாற்றுப்பார்வையும் திட்டவட்டமான ஜனநாயகப்புரிதலும் கொண்டவர்கள். அவர்களால் நம் தேசம் வடிவமைக்கப்பட்டது நமது நல்லூழ்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2023 11:35

இரா. திருமுருகனார்

[image error]

இரா. திருமுருகனார் ம.இலெ.தங்கப்பாவுடன் இணைந்து பாண்டிச்சேரி மாநிலத்தில் தமிழ்ப்போராட்டங்களை முன்னெடுத்தவர். தமிழிலக்கண அறிஞர். இரா._திருமுருகனார் இரா._திருமுருகனார் இரா._திருமுருகனார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2023 11:34

எழுத்தாளர் உரைகள்

மேடைப்பேச்சும் எழுத்தாளர்களும்

அன்புள்ள ஜெ

எழுத்தாளர் உரைகள் பற்றிய கட்டுரை கண்டேன். உரைகளின் வகைமைகளை அழகாகச் சொல்லியிருந்தீர்கள். என்னுடைய பார்வையில் கொஞ்சம் முன்னுக்குப்பின் இருந்தாலும் எழுத்தாளர்களின் உரைகளின் அளவுகோல் ஒன்றுதான். அந்த எழுத்தாளர் நல்ல எழுத்தாளரா, நிறைய வாசித்து ஒரிஜினலாக பேசுகிறாரா என்பது மட்டும்தான்.

அண்மையில் அருண்மொழி நங்கை திருவாரூரில் ஆற்றிய உரை ஓர் உதாரணம். இயல்பாக பேசிச்செல்கிறார். மேடைப்பாவனை கிடையாது. குட்டிக்கதை நகைச்சுவை ஒன்றும் இல்லை. ஆனால் தஞ்சைப் பண்பாட்டில் இனிமேல் என்ன எழுதலாம் என்று சொல்லுமிடத்தில் சட்டென்று ஒரு பெரிய கனவை முன்வைக்கிறார். சொந்தவாழ்க்கையின் சிமிழ்களில் இருந்து வெளிவந்து தஞ்சையின் பண்பாட்டை தெரிந்துகொண்டு பெரிய திட்டங்களுடன் எழுதுவதற்கான அறைகூவல் அது.

அதைப்போன்ற உரைகள் முக்கியமானவை. திருவாரூர் புத்தகக் கண்காட்சி அரங்கில் பல இளைஞர்களின் பேச்சு சிறப்பாக இருந்தது. சுரேஷ்பிரதீப், கீரனூர் ஜாகீர்ராஜா, காளிப்பிரசாத் அனைவரும் அருமையாகப்பேசினார்கள். எழுத்தாளர்களின் உரைகள் எனக்கு ஏன் முக்கியம் என்றால் இலக்கியம் பற்றி மேற்கொண்டும் எனக்கு யோசிக்கவேண்டியிருக்கிறது. அதற்கு அந்த உரைகள் அவசியம். நானே எனக்குள்ளே பேசிக்கொள்வேன்.

அந்த எழுத்தாளர்களின் முகம் அறிமுகமாவதும் அவர்களின் பேச்சும் சிரிப்பும் தெரிந்திருப்பதும் அவர்களின் புத்தகங்களை வாசிக்கையில் ஒரு நெருக்கமான உணர்வை உருவாக்குகின்றன. பேசும் எழுத்தாளர் எனக்கு ஒரு படி கூடுதலாகவே நெருக்கமாகவே உள்ளார்.

திருவேங்கடம் கிருஷ்ணசாமி

அன்புள்ள திருவேங்கடம்

எழுத்தாளர்கள் உரை பற்றி என் கருத்தும் அதுவே. எழுத்தாளர்கள் உரையாற்றத்தொடங்கியிருப்பதே இப்போதுதான். உரையாற்றும் எழுத்தாளர் நம்மிடம் நேரடியாகப் பேச ஆரம்பிக்கிறார். அவருடைய சொற்கள் அவருடைய எழுத்துலகில் இருந்து வருகின்றன. அவருடைய எழுத்துலகுக்குள் நுழைவதற்குரிய சரியான வாசல்கள் அவை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2023 11:31

தியானப்பயிற்சி, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம் , நலமே வேண்டுகிறேன். எல்லா வகையிலும் என்னை நிலை நிறுத்திக்கொள்ள உங்கள் சொல் கொண்டு அடுத்த 10ஆண்டுக்கான திட்டம் ஒன்றை முடிவு செய்தேன். விரைவில் உங்களிடம் பகிர்கிறேன்.என்னை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்துவதில் சிறு குழப்பம் இருந்தது. உங்கள் தளத்தில் ஆசிரியர் தில்லை செந்தில் பிரபு அவர்களின் தியான பயிற்சி வகுப்பு பற்றி அறிந்தேன். உங்கள் எல்லோரின் நல்விருப்பம் வாய்ப்பு பெற்று தியான வகுப்பில் கலந்து கொண்டேன்.

இது என் முதல் அனுபவம். தில்லை செந்தில் sir வகுப்புகளை திட்டமிட்டிருந்த விதம் அனைத்து வயதினருக்கும்ஏற்ற கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.முதல்நிலையில் ஆசனங்களை தேர்வு செய்து தொகுப்பாக வழங்கியிருந்தார். இதிலிருந்து அடுத்தடுத்த நிலைக்கான சாத்தியங்களையும் விளக்கினார். பயிற்சிக்கான நேரம் , இடைவேளை, செய்முறை , குறிப்புகள் மற்றும் விளக்கம் வடிவமைத்த வகையில் தில்லை sir ஐ பணிவுடன் வணங்குகிறேன்.3நாட்கள் சிறு புன்னகையுடன் இருந்த முகம் மாறவே இல்லை.குருக்களுக்கு நன்றி சொல்லும் போது நெகிழ்ந்து விட்டார். குருமரபு, யோகமரபு, உடல் மனம் தியானம் கர்மா அக்கணத்தில் வாழ்தல் என பயிற்சி விரிவடைந்த விதம் பெரும் நிறைவு.

ஆசிரியரின் தன்மை, பயிற்சிக்கான இடம் சூழல் ஆகியவை பெரும் ஆசிர்வாதம். பதற்றமான நெருக்கடி நேரத்தில், பெரும் செயல் தொடங்கும் முன் செய்ய வேண்டியதாக சைதன்ய யோகத்தை முக்கியமாக கருதுகிறேன். 3 நாளில் தரிசனமாக அமைந்த நிகழ்வு முதல் 2 நாட்கள் வகுப்பு நடைபெற்ற  ஹாலுக்கு முன்னுள்ள குளம் வறண்டு வெடித்து இருந்தது. 2ம் நாள் நள்ளிரவில் பெய்த மழை மறுநாள் குலத்தின் வெடிப்புகளை நீரால் அநேகமாக நிரப்பியிருந்தது. இந்த நிறைவுடனும் ஆசிரியர்களின் ஆசீர்வாதத்துடன் பயிற்சியில் ஒவ்வொரு நாளும் அமர்வேன்.யோகம் நிகழும். குளத்தில் நீர் பெருகி அலை ததும்பும். ஹரி ,மணி அண்ணா, உணவளித்த அய்யா மற்றும் மயில்களுக்கு நன்றி.

நன்றி

இப்படிக்கு

மோகன் தனிஷ்க்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2023 11:31

காடு, ஒரு விமர்சனம்

காடு வாங்க 

நாம் கானகத்தை உணர வேண்டுமானால் அதன் ஆரம்பம் சென்று நிமிர்ந்து பார்த்தால் முடியாது. அதற்குள் பயணப்பட வேண்டும் . கரடுமுரடான பாதைகளை கடந்தாக வேண்டும் . அதே போல் தான் ஜெயமோகனின் இந்த படைப்பும் ஆரம்பத்தில் மிக கடினமாக தோன்றினாலும் அந்த காட்டிற்குள் கிரிதரன் வாழ பழகிய பிறகு இந்த நாவல் நம்மை அழகாக உள்வசப்படுத்திவிடுகிறது . ஞானும் மலையாளமும் கலந்து போனோம் .

அழகான ஓவியத்தின் மேல் கோடு போடுவதற்கு இணையானது காட்டில் மனிதன் அமைக்கும் சாலைகள் . நான்ஒரு முறை காட்டிற்குள் பயணப்படும் போது யானைகளின் பாதைகளை தேர்வு செய்தேன் .அழகான பாதைகளை தங்களுக்கான தேவைக்கு மட்டுமே உருவாக்குகின்றன . காட்டின் அடிவாரத்தில் இருக்கும் சிறு அருவியில் இருந்து மேல் நோக்கி பயணப்பட்டேன் . சற்று கடினமான பயணம் தான் ஆனால் அற்புதமானது . இதுவரை பார்த்திராத பறவைகள் , விலங்குகள் , மரங்கள் , செடிகள் என அனைத்துமாக என்னை ஆட்கொண்டுவிட்டது . தொடர்ந்து வழியும் நீர் பாறைகளையும் , மண்ணையும் உறவாக்கி கொள்கின்றன . காட்டின் மையப்பகுதியை எட்டுவதற்குள் இருள் சூழ தொடங்க திரும்ப வேண்டி இருந்தது . அந்த ஏக்கம் தொடர்ந்து இருந்து வந்தது . ஆனால் “காடு” என்கிற படைப்பின் வாயிலாக கானகம் முழுவதுமாக சுற்றி திரிந்த அனுபவம் கிடைத்துவிட்டது .

கிரிதரன் காட்டிற்குள் கல்வெர்ட் கட்டும் பணிக்கு மேற்பார்வையாளனாக தனது மாமாவிற்கு உதவ காட்டிற்குள் போகிறான் . அந்த நாட்களில் அவன் காட்டை கண்டு பயந்து போகிறான் . ஒரு மிளாவுடன் தான் முதலில் சினேகமாகிறான் . இந்த நாவல் முழுவதும் அந்த மிளாவும் தொடர்ந்து பயணமாகிறது . நாவலின் மற்றோரு சிறப்பான கதாபாத்திரங்கள் குட்டப்பன் மற்றும் ரெசாலம் ஆகியோர் தான் . உடன் வேணி,அம்பிகா , குரிசு , சினேகம்மை, ராசப்பன், ராபி, ஆபேல், மேரி, ரெஜினா , டாக்டர் , இன்ஜினியர் அய்யர் என நிறைய மனிதர்கள் காட்டில் வாழ்கிறார்கள் . ஆனால் வாசித்த போதே என்னில் வாழ்ந்தது நீலி மட்டுமே .

காட்டில் பெய்யும் மழை ஏற்படுத்தும் தாக்கங்களை இரண்டு பருவநிலைகளில் மிக விரிவாக கவிதை போலவே கடந்து போகிறார் . ஒரு மழை அழகானது இன்னோரு மழை ஆபத்தானது மூன்றாவதாக ஒரு மழை அதுவே முடிவாகிறது . காடு ஏற்படுத்தும் நெருக்கம் காமம் உட்பட இனிமையாகிறது . காமம் எளிதில் எட்டும் நிலையிலும் கிரிதரன் விலகி நிற்கிறான் அதனால் தான் நீலி அவனை தேடி வருகிறாள் . அந்த காட்டின் உறவு நீலி மட்டுமே . அவளோடு கிரிதரன் ஆர்பரிக்கும் மழையில் குறிஞ்சிப்பூவை காண பயணப்படுவது அழகான பயணம் . அவர்களின் அத்தனை சந்திப்பும் கவிதைகளால் புணரப்பட்ட உரையாடல்கள் .

இந்த காடு மரங்களை மட்டுமல்ல மனிதர்களையும் கொண்டாடுகிறது . தேவாங்கினை தனது குழந்தையாகவே நினைத்து உருகும் ரெசாலம் ஒரு பக்கம் , காட்டையே உறவாக கொண்ட குட்டப்பன் இன்னோரு பக்கம் , மக்கள் சேவையை மட்டுமே உயிரேன கருதும் டாக்டர் , பைபிளை மட்டுமே நேசிக்கும் குரிசு , இயற்கைக்குள் இலக்கியம் கலந்து வாழும் இன்ஜினியர் அய்யர் என அத்தனை மனிதர்களும் நம்மில் படர்ந்துவிடுகிறார்கள் . கிரிதரன் அந்த மதம்பிடித்த யானையை சந்திக்கும் ஒவ்வோரு நிகழ்விலும் ஒவ்வோரு விதமான சூழல் நிலவுகிறது . காதலில் இருந்து காமம் முதல் .

ஒரு மனிதன் அவனுக்கு நெருக்கமான சூழலை விட்டு வாழ்வதற்கான சூழலை ஏற்று கொண்டு வாழ வேண்டி வரும் போது அவன் கொஞ்சம் கொஞ்சமாக சிதறுண்டு போய் இறுதியில் ஏதோ ஒரு புள்ளியில் கரைந்து போகிறான் . கிரிதரனும் நீலிக்கு பிறகு சந்தனகாட்டிற்குள்ளாகவே கலந்து போகிறான் எஞ்சிய பிண்டம் வாழ்ந்து கொண்டிருக்கிறது . என்னுடைய நெருக்கத்தில் எப்போதும் இருக்கும் இந்த “காடு” . வாசிப்பை நேசிப்போர் தவறாது வாசிக்க வேண்டிய படைப்பு .

கதிரவன் மகாலிங்கம் .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2023 11:31

April 5, 2023

மேடைப்பேச்சும் எழுத்தாளர்களும்-2

ஹெர்மிஸ் மேடைப்பேச்சும் எழுத்தாளர்களும் பகுதி 1

நல்ல எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் அல்ல என்று சொல்லமுடியுமா?

 

அதற்கு ஒரே வரிப் பதில்தான். தமிழகத்தில் கட்டணம் வைத்து அரங்கினரைக் கூட்டி உரையாற்றிய மாபெரும் பேச்சாளர் ஒருவரின் சொல்லில் இருந்தே நவீன இலக்கியமே தோன்றுகிறது. சுப்ரமணிய பாரதி.

நவீன இலக்கியம் என்பது ஒற்றைப்படையானது அல்ல. எந்த வகை  எழுத்தாளர்கள், எந்த காலகட்ட எழுத்தாளர்கள் மேடையில் நிறைய பேசினார்கள்; எவர் மேடைகளை தவிர்த்தார்கள் என்றுதான் இலக்கியமறிந்தோர் பார்க்கமுடியும்

நவீன இலக்கியத்தில் அதன் யதார்த்தவாத அழகியல் மரபைச் சேர்ந்தவர்கள், அரசியல் நோக்கம் கொண்ட எழுத்தாளர்கள் மேடையை அதிகமாகப் பயன்படுத்திய பேச்சாளர்களாகவும் இருந்தனர். இந்தியா முழுக்க. தாகூர் சிறந்த பேச்சாளர். டாக்டர் சிவராம காரந்த் சிறந்த பேச்சாளர்.  தகழி சிவசங்கரப் பிள்ளையும் பி.கேசவதேவும் மாபெரும் பேச்சாளர்கள்.ஜெயகாந்தன் சிறந்த பேச்சாளர்.

தேசிய இயக்கம் சார்ந்தோ, இடதுசாரி இயக்கம் சார்ந்தோ செயல்பட்டவரள் சிறந்த பேச்சாளர்களாகவே இருந்தார்கள். நாமக்கல் கவிஞரோ டி.கெ.சிதம்பரநாத முதலியாரோ பேசாமல் இருக்க முடியாது. அவர்களின் வழிவந்தவர்களும் சிறப்பாகப் பேசினர்.

அதன்பின் நவீனத்துவ அலை உருவானது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இருத்தலியல் சார்ந்த தத்துவ நோக்கு கொண்டவர்கள். அகவயமான உளநிலை கொண்டவர்கள். ஆகவே தனித்தவர்கள். அவர்கள் பொதுவெளிப்பாட்டை தெரிவு செய்யவில்லை. அதை நிராகரித்தவர்களும் உண்டு.

மேலும் தமிழ்ச்சூழலில் நவீனத்துவ இலக்கியவாதிகள் பெரும்பாலும் சிற்றிதழ்ச்சூழலில் இயங்க நேரிட்டது. அவர்களுக்கு பெரிய மேடைகளும் அமையவில்லை. பேசும் வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை. மிகச்சிறிய குழுக்களுக்குள் தங்களுக்குள் உரையாடி அவர்கள் செயல்பட்டனர். ஆகவே பொதுச்சொற்பொழிவு சார்ந்த பயிற்சி அவர்களுக்கு அமையவில்லை.

ஆனால் இந்திய நவீனத்துவர்களிலேயே யு.ஆர். அனந்தமூர்த்தி மாபெரும் பேச்சாளர். ஏனென்றால் அவர் கர்நாடக சோஷலிச இயக்கங்களில் இருந்து வந்தவர். பி.கே.பாலகிருஷ்ணன் சிறந்த பேச்சாளர். அவர் தொழிற்சங்க இயக்கத்துக்குள் நீண்டகாலம் செயல்பட்டவர். பாலசந்திரன் சுள்ளிக்காடு சிறந்த பேச்சாளர், அவர் நடிகரும்கூட. க.நா.சு டெல்லி சென்று பேசுவதற்கு அரங்குகள் அமைந்து பழகிய பின் மிகச் சிறப்பாக பேசலானார்.

நவீனத்துவ அலைக்குப் பின் இலக்கியம் பொதுவெளியை எதிர்கொள்ளலாயிற்று. புதிய ஊடகங்கள் உருவாயின. இலக்கியவாதிகளுக்கு சபைகள் அமைந்தன. ஆகவே இன்று எழுதும் படைப்பாளிகள் பேசுவதற்கு எளிதில் பழகுகிறார்கள். பலர் சிறப்பாக பேசுகிறார்கள். என் தலைமுறையில் நான், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் மூவரும் சிறப்பான பேச்சாளர்களே. எனக்கு அடுத்த தலைமுறையில் மனுஷ்யபுத்திரன், அழகிய பெரியவன் போன்றோர் நல்ல பேச்சாளர்கள்.

உலகம் முழுக்கவே இப்படித்தான். எழுத்தாளர்களில் பொதுவெளிச் செயல்பாடு கொண்டவர்கள் பெரும்பாலும் நல்ல பேச்சாளர்கள்தான். பாப்லோ நெரூதா பேச்சாளராக அல்லாமல் இருக்க முடியாது.

 

எழுத்தாளர்கள் பேசலாமா?

 

எழுத்தாளனின் மைய ஊடகம் எழுத்து. பேச்சு அல்ல. பேச்சு அவனுக்கு எழுத்துக்கான துணையூடகமே. எழுத்தாளன் பேச்சாளனாக மாறுவது ஒரு தற்கொலை என்றே நினைக்கிறேன். ஆனால் எழுத்தாளன் எழுத்தாளனாக நின்றுகொண்டே பேசும் பேச்சு ஒன்று உண்டு. அதை அவன் பேசியாகவேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது.

இன்றைய உலகம் சென்ற முப்பதாண்டுகளாக மெல்ல மெல்ல உருமாறி உருவாகி வந்துள்ளது. முப்பதாண்டுகளுக்கு முன் ஓர் எழுத்தாளன் தன் படைப்புகள் பற்றி பேசுவதே பிழை என்னும் மனநிலை இருந்தது. எழுத்தாளன் எழுதிவிட்டு மௌனமாக ஒதுங்கிக் கொள்வதே உசிதமானது என்னும் எண்ணம் இருந்தது. சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும் அந்த மனநிலை கொண்டவர்கள்

ஆனால் அப்போதே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நாம் மதித்துப் போற்றும் இலக்கியமேதைகள் தங்கள் எழுத்துக்களை தாங்களே முன்வைக்க ஆரம்பித்திருந்தனர். எழுத்தாளன் ஒரு நூலை எழுதிவிட்டு ஊர் ஊராகச் சென்று அதைப்பற்றிப் பேசுவதும், அதை வாசித்துக் காட்டுவதும் எனக்கெல்லாம் திகைப்பை உருவாக்கியிருந்தது.

பதிப்பாளர் நூலுக்கான விழாக்கள், விருந்துகள் ஏற்பாடு செய்வதும்; அதில் விமர்சகர்கள் கலந்துகொள்ளச் செய்யப்படுவதும்; எழுத்தாளர் அதில் கலந்துகொண்டு அனைவரையும் கவரும்படி பேசுவதும் அமெரிக்காவில் வணிகநாவல்களின் பிரசுரங்களில் தொடங்கி பின்னர் இலக்கிய நூல்களிலும் இயல்பாக ஆயின

பின்னர் அந்த மனநிலை, அந்த வழக்கம் இந்திய ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் உருவாகத்தொடங்கியது. டி.சி.கிழக்கேமுறி சாகித்ய பிரவர்த்தக சஹஹரண சங்கத்தில் இருந்து பிரிந்து டிசி புக்ஸ் என்னும் பதிப்பகத்தை தொடங்கியபோது அவ்வழக்கத்தை மலையாளத்தில் தொடங்கி வைத்தார்.

முன்னர் இந்திய நூல்பதிப்பு என்பது ஒரு சிறுதொழில். நூலகங்களே 90 விழுக்காடு நூல்களை வாங்குவது வழக்கம். தனிநபர்கள் புத்தகங்கள் வாங்குவது அரிதினும் அரிது. நூலகங்களை நம்பியே பிரசுரம் நிகழும்போது நூல்களை விளம்பரம் செய்யவேண்டிய தேவையே இல்லை. அது முழுக்க முழுக்க தொடர்புவலையால் நிகழும் வணிகம். வாசகர்கள் நூல்களை நேரடியாக வாங்கி வாசிக்கவேண்டுமென்றால் விளம்பரம் தவிர்க்கவே முடியாது என்னும் நிலை உருவானது.

டி.சி.கிழக்கேமுறி வைக்கம் முகமது பஷீரையும் தகழி சிவசங்கரப்பிள்ளையையும் எம்.டி.வாசுதேவன் நாயரையும்பலநூறு புகைப்படக் கட்டுரைகள், கார்ட்டூன்கள் வழியாக ஒரு ‘திருவுரு’ ஆக மாற்றினார். அதைப்பற்றிய ஏராளமான நகைச்சுவைகள் உண்டு. பஷீர் இரவில் வீட்டை விட்டு வெளியே வந்தபோது மின்னல் அடித்தபோது “இரு இரு நான் வேட்டி உடுக்கவில்லை” என்று சொன்னாராம். எம்.டி.வாசுதேவன் நாயர் தென்னைமரத்தில் பாதி ஏறி அமர்ந்து அளித்த புகைப்படம் பிரபலமானது

மேலும் இருபதாண்டுகளுக்குப்பின் 2000த்தில் தமிழிலும் அந்த அலை தொடங்கியது. சொல் புதிதின் அட்டையில் எழுத்தாளர்களின் படங்களை அச்சிட்டபோது அதை கடுமையாக எதிர்த்து எனக்கு கடிதமெழுதினார் சுந்தர ராமசாமி. அம்பை அதை கேலி செய்தார். ஆனால் சுந்தர ராமசாமி ‘டைட்டானிக்’ கதைநாயகன் போல கடலோரம் கைவிரித்து நின்று புகைப்படத்திற்கு ‘போஸ்’ கொடுக்கும் காலமும் வந்தது.

அதேதான் சொற்பொழிவுக்கும். சென்ற யுகத்திற்கும் இன்றைய யுகத்திற்கும் என்ன வேறுபாடு. முதன்மையாக ’பெருக்கம்’ எனலாம். இன்று கலை, இலக்கியம், செய்திகள், கருத்துக்கள்  எல்லாமே பல மடங்காகப் பெருகிவிட்டிருக்கின்றன. பெருக்கம் என்பது பின்நவீனத்துவ காலகட்டத்தின் அடிப்படை இயல்பு என்கிறார்கள். ஆகவே எவரும் எதையும் கவனிப்பதில்லை. செய்திகளுக்காக செவிகூர்ந்திருந்த தலைமுறை இன்றில்லை. எதையும் தேடிப்போகும் மனநிலை இன்றில்லை. இன்று எல்லாமே அதற்கான ரசிகர்களை, பார்வையாளர்களை தேடிப்போகவேண்டியிருக்கிறது.

சினிமாவே உதாரணம். முன்பெல்லாம் நடிகர்கள் சினிமா விளம்பர நிகழ்வுகளுக்கு வருவதில்லை. இன்று ஊர் ஊராக அவர்கள் சென்றாகவேண்டும். நானே 2.0 வரை எந்த சினிமா விளம்பர நிகழ்வுகளுக்கும் சென்றதில்லை. தொலைக்காட்சியில் தோன்றியதில்லை. இன்று வேறு வழியே இல்லை.

தன் எழுத்தை, தன்னை எழுத்தாளன் கொண்டுசென்றாகவேண்டும் என்னும் நிலை இன்று தவிர்க்கவே முடியாததாக உள்ளது . என் நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகின்றன. நான் பேட்டிகள் அளிக்கவேண்டும். இலக்கியவிழாக்களில் சென்று விவாதங்களில் கலந்துகொள்ளவேண்டும். பேசவேண்டும். இல்லையேல் என் நூல்களை கவனிக்க மாட்டார்கள். அது என் பதிப்பகத்திற்கு நான் செய்தாகவேண்டிய கடமை.

இது எல்லா துறைகளிலும் உள்ளது. சென்ற கால அறிவியலாளர்கள் பேச்சாளர்கள் அல்ல. அவர்கள் ஆய்வில் மூழ்கிக் கிடந்தவர்கள். மொழியற்றவர்கள். இன்று அப்படி அல்ல. சிறப்பாகவே பேசியாகவேண்டும். இரண்டு தளங்களில் அந்த பேச்சாற்றல் தேவைப்படுகிறது. ஒன்று, ஆய்வின் பகுதியான பேச்சு. வெவ்வேறு சபைகளில், சந்திப்புகளில் திறம்படப்பேசி தனக்கான அணியை திரட்டவேண்டும். அவர்களை ஊக்குவித்து உடன் கொண்டு செல்லவேண்டும். தனக்கான நிதியாதரவை திரட்டவும் பேசியாகவேண்டும். இரண்டு, தன் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி வெளியுலகுடன் பேசுவது. அறிவியலாளர்கள் திறமையாக பொதுச்சூழலுடன் உரையாடியே ஆகவேண்டும். இந்த நூற்றாண்டின் பெரும் அறிவியலாளர்கள் பெரும் சொற்பொழிவாளர்களும் கூட.

தொழில், வணிகம் என அனைத்து களங்களிலும் திறமையான உரைகள் இன்றியமையாதவை என்னும் சூழல் அமைந்துவிட்டிருக்கிறது. தன்னை முன்வைக்க, தன்னை வெளிப்படுத்த தெரியாதவனால் எதையுமே இயற்ற முடியாது என்னும் சூழல்.

உரை என்பது இந்நூற்றாண்டின் தவிர்க்கமுடியாத தேவைகளில் ஒன்று. ஆடை அணிவதுபோல. பொதுமரியாதைகள் போல அதுவும் ஒரு பொதுவான வழக்கமாக ஆகிக்கொண்டிருக்கிறது. இலக்கியவாதிக்கு மட்டுமல்ல, ஏறத்தாழ அனைவருக்கும்

 

இலக்கியவாதியின் உரை எது?

 

ஓர் இலக்கியவாதி , குறிப்பாக புனைவெழுத்தாளன், சிலவகை உரைகளை ஆற்றக்கூடாது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவை அவன் எழுதும் மொழிவெளிப்பாட்டு முறைகளுக்கு எதிரானவை. கேளிக்கையுரை குறிப்பாக. விவாத உரை அடுத்தபடியாக. அறிவுறுத்தலுரையும் எழுத்தாளனின் இயல்புக்கு மாறானதுதான். சடங்குரைகளை தவிர்க்க எவராலும் இயலாது. ஆகவே எழுத்தாளனுக்குரியது தன்னுரைதான். அவன் விமர்சகன் என்றால் விளக்கவுரைகள் ஆற்றலாம்.

ஆனால் இதை அந்த எழுத்தாளனே முடிவெடுக்கவேண்டும். அரசியல் களத்தில் செயலாற்றும் எழுத்தாளன் பிரச்சார நோக்கம் கொண்ட விவாத உரைகளையும், அறிவுறுத்தல் உரைகளையும் தவிர்க்க முடியாது.

 

எழுத்தாளர்களுக்கு உரைப்பயிற்சி தேவையா?  

 

எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பயிற்சி தேவை என்பது போல உரைப்பயிற்சியும் தேவை. பிற உரைகளில் இருந்து கற்றுக்கொள்ளலாம். முறையான பயிற்சிகளை எடுக்கலாம். ஆனால் எந்த ஒரு வெளிப்பாட்டுக்கும் அதற்கான வடிவ ஒழுங்கு உண்டு. அதை கற்றுக்கொண்டே ஆகவேண்டும். சிறுகதை, நாவல் போன்றதே உரையின் வடிவமும்.

ஏன் அவ்வடிவத்தை கற்கவேண்டும்? ஏனென்றால் முன்னால் கேட்டுக்கொண்டு ஒருசில உயிர்கள் அமர்ந்திருக்கின்றன. அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும், அவர்கள் உடன்வரவேண்டும். ‘எந்த பயிற்சியும் எடுத்துக்கொள்ள மாட்டேன், எந்த பொறுப்பையும் ஏற்க மாட்டேன், மனம்போனபடி உளறுவதுதான் எனக்கு வசதி’ என ஓர் எழுத்தாளன் சொல்வானேயானால் அவனை முழுமையாக தவிர்க்கும் உரிமை வாசகனுக்கும் உண்டு. அதன்பின் என்னை அழைக்கவில்லை, என்னை புறக்கணிக்கிறார்கள் என்ற பிலாக்காணத்தை வைக்க எழுத்தாளனுக்கு உரிமை இல்லை.

இப்போது எழுத்தாளர் அனைவருக்கும் பேசும் வாய்ப்புகள் அரசு நிகழ்வுகள், புத்தகக் கண்காட்சி நிகழ்வுகள் வழியாக அமைகின்றன. இது உண்மையில் மிகப்பெரிய திருப்புமுனை. இன்றுவரை எழுத்தாளர்கள் சொல்லி வந்ததெல்லாம் தங்களுக்குச் சமூகத்தில் மரியாதை இல்லை, தங்கள் எழுத்துக்களை முன்வைக்க மேடை இல்லை, தாங்கள் கவனிக்கப்படுவதில்லை என்றுதான். அதற்கெல்லாம் வாய்ப்பு இப்போது வந்துள்ளது.

ஓர் அரசு விழாவில் அழைப்பு என்பது எழுதத்தொடங்கும் எழுத்தாளர்களுக்கும், பெரியதாக அறியப்படாத எழுத்தாளர்களுக்கும் நல்வாய்ப்பே. சுற்றத்திலும் குடும்பத்திலும் அது ஒரு மதிப்பை உருவாக்கும். அந்த மதிப்பு அவன் தொடர்ந்து எழுதுவதற்கு இருக்கும் தடைகளை நீக்கும். நான் எழுத்தாளனாக விரிந்தமைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று 1992ல்  கதா விருதை நான் இந்திய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவிடமிருந்து பெற்றதுதான். அது என் அலுவலகச்சூழலையே எனக்குச் சாதகமாக மாற்றியது.

ஓர் எழுத்தாளன் அவ்வப்போது இலக்கியக்கூட்டங்களில் பேசுவது இன்றைய சூழலில் அவன் உளநிலைக்கும் மிக நல்லது என்பது என் எண்ணம். அவன் அங்கே பாராட்டப்படுகிறான், நேரடியாக வாசகர்களைச் சந்திக்கிறான். அந்த ஊக்கம் சில நாட்களுக்கு நீடிக்கும். இன்றைய சூழலில் நவீன இலக்கியவாதிகளுக்கு இருக்கும் தவிர்க்கமுடியாத உளச்சோர்வுக்காலகட்டத்தை தாண்ட அது மிகச்சிறந்த வழி.

அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதே எழுத்தாளன் செய்யவேண்டியது. அவன் தன்னை அதற்கு தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். தன் முழு ஆளுமையையும் வெளிப்படுத்தவேண்டும்

ஆனால் அந்த வாய்ப்பை அப்படி பலரும் முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. அது ‘எழுத்தாளர்களின் இயல்பு’ அல்ல. நானறிந்த எந்த நல்ல எழுத்தாளரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அந்த இயல்பு பொதுவாக நம் சூழலில் உள்ள ஒன்று. நம் கல்விநிலையங்களில் இருந்தே வருவது. அதை ‘ஒப்பேற்றுவது’ ‘சமாளிப்பது’ என்று சொல்லலாம். சிறப்பாக வெளிப்படுவதற்குப் பதிலாக குறைந்தபட்சம் எதைச் செய்தால்போதுமோ அதைச் செய்து கடந்துசெல்வது. இதை நாம் வாழ்க்கையாகவே கொண்டிருக்கிறோம். இதையே இந்த ‘பயிலா எழுத்தாளர்களும்’ செய்கிறார்கள்.

நிகழ்ச்சி நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள் சொல்வதைக் கேட்டால் ஆற்றாமையாக இருக்கிறது. முதல் விஷயம் எந்த தயாரிப்பும் இல்லாமல் நேராக கிளம்பி மேடைக்குச் சென்றுவிடுகிறார்கள். அங்கே என்னென்ன தோன்றுகிறதோ அதைச் சொல்கிறார்கள்.

ஒரு மேடைப்பேச்சாளன் மேடையில் அவன் பேசவேண்டிய உரைக்கான ஒரு வரைவை காகிதத்தில் குறித்துக்கொண்டே ஆகவேண்டும். என்ன சொல்லப்போகிறோம், எவ்வளவு நேரம், எது தொடக்கம், எவை மையக்கருத்துக்கள், எப்படி முடிக்கவேண்டும் என உறுதிப்படுத்திக் கொள்ளாமல் மேடையேறினாலே உளறல்தான் நிகழும்.

என்ன ஆகும்? ஒன்று, நினைத்து நினைத்து பேசுவதனால் பேச்சு எங்கே செல்கிறதென்றே தெரியாது. பேசுபவனுக்கு அவன் சொல்லும் ஒரு விஷயத்திற்கும் இன்னொரு விஷயத்துக்குமான தொடர்பு தெரியும். ஆனால் கேட்பவனுக்கு தெரியாது. ஆகவே கேட்பவனுக்கு எதுவுமே தொடர்புறாது. துண்டுதுண்டாக ஏதோ சொல்வதாகவே தெரியும்,

இரண்டு, பேசுபவன் பேச்சை ஏற்கனவே வடிவமைத்துக் கொள்ளவில்லை என்றால் அந்தப்பேச்சுக்கு நேர அளவே இருக்காது. எத்தனை பேசினாலும் பேசவில்லை என்று தோன்றும். நேரக்கணக்கு உள்ளத்தில் தோன்றாது.  அண்மைக்கால நிகழ்வுகளில் எழுத்தாளர்களை மேடையேற்றும்போது நிகழ்ந்த பெருங்கொடுமை என்பது கட்டற்று மணிக்கணக்காக பேசித்தள்ளியவர்கள் உருவாக்கியதுதான். பிறர் நேரத்தை எடுப்பது பற்றி, பார்வையாளர்களின் பொறுமை அழிவதைப் பற்றி கவலையே படுவதில்லை

(நான் இன்று இதில் மிக உறுதியாக இருக்கிறேன். இதை அறிவித்தும் உள்ளேன். நான் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன். அதிலுள்ளவர்கள் எவரேனும் பேச்சாளர் பட்டியலில் இருந்தால் நான் கலந்துகொள்ள மாட்டேன். நான் இருக்கும் மேடையில் அழைப்பிதழில் இல்லாதவர்கள் பேச வந்தால் அக்கணமே எழுந்து வெளியேறிவிடுவேன். முன்னரே ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் பேசுவார்கள் என்று கேட்டுக்கொள்வேன். அதிகபட்சம் 10 நிமிடம் கூடுதலாகப்பேசலாம். அதற்கு மேல் பேசினால் நான் வெளியேறிவிடுவேன்)

மேடைப்பேச்சுப் பயிற்சி என்பது மிக எளியது. நான் நடத்திய மேடைப்பேச்சு பயிற்சி நிகழ்வில் 30 பேர் கலந்துகொண்டனர். முதலில் மிகச்சுமாராக பேசியவர்கள் மூன்றாம்நாள் சிறப்பாகப் பேசினர். அவ்வளவுதான். பேச்சுக்கான உள்ளடக்கத்தை தயார் செய்துகொள்வது, பேச்சின் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்வது ஆகியவையே பயிலப்படவேண்டும். கொஞ்சம் அச்சம் விலகவேண்டும். அந்த சிறு பயிற்சியைக்கூட எடுத்துக்கொள்வதில்லை, அந்த சிறு குறிப்பைக்கூட தயாரித்துக்கொள்வதில்லை என்றால் அதன் பெயர் எழுத்தாளனின் சுதந்திரம் அல்ல. அது அறியாமை, பொறுப்பின்மை.

எழுத்தாளர்களை பேசவிடவேண்டாம், கேள்விபதில் வைக்கலாம் என்பது போல அபத்தம் வேறில்லை. கேள்விபதிலும் பேச்சுதான். உண்மையில் பேச்சையாவது முன்னரே தயாரித்துக்கொண்டு வரலாம். கேள்விக்கான பதில் அங்கேயே சொல்லப்படவேண்டும். பேசத்தெரியாதவர்கள் அங்கே மேலும் உளறுவதையே நான் கண்டிருக்கிறேன். கேள்விக்கான பதிலாக சம்பந்தமில்லாமல் எதையாவது சொல்வார்கள். சொல்ல ஆரம்பித்து எங்கெங்கோ செல்வார்கள். அல்லது குழறுவார்கள்.

மேடைப்பேச்சில் உளறுபவர் கேள்விபதிலில் இரண்டு மடங்கு உளறுவார். அதோடு கேள்வி கேட்பவர் மேல் எவருக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லை. தனியரங்குகளில் வரையறுக்கப்பட்ட பார்வையாளர் இருந்தால் மட்டுமே கேள்விகளை சற்றேனும் ஒழுங்குக்கு கொண்டு வர முடியும்.பொது அரங்குகள் என்றால் கேள்வி என்றபேரில் எழுந்து உரையாற்ற ஆரம்பிப்பார்கள். சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்பார்கள். வேண்டுமென்றே புண்படுத்தவும் சீண்டவும் முயல்வார்கள். அரங்கு முழுமையாகவே வீணாகிவிடும். அத்தகைய சீண்டல்கள், குளறுபடிகளை சமாளித்து பேசுபவர்கள் நல்ல சொற்பொழிவாளர்களாகவே இருப்பார்கள்

ஆகவே இளம் எழுத்தாளர்கள் சொற்பொழிவுக்கலையை கற்றுக்கொள்ளவேண்டும். எல்லா துறைகளைச் சேர்ந்தவர்களும் தங்களை திறமையாக தெளிவாக அவைமுன் வைக்க கற்றுக்கொள்ளவேண்டும். அதுதான் இன்றைய உலகம். இன்றைய சூழலின் தேவை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2023 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.