Jeyamohan's Blog, page 603
April 1, 2023
வைக்கமும் கேரளமும்
அன்புள்ள ஜெ
வைக்கம் பற்றி நீங்கள் எழுதியிருந்த குறிப்பைப் படித்தேன். (வைக்கம் -மாபெரும் பிரச்சார இயந்திரம்) அதன்பின் அதனுடன் தொடர்புள்ள விரிவான கட்டுரைகளை வாசித்தேன். ஐயன்காளி, ஜார்ஜ் ஜோசப், மன்னத்து பத்மநாபன், நாராயணகுரு ஆகியோரின் பங்களிப்புகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறீர்கள். வைக்கம் போராட்டம் எத்தனை ஆண்டுகள் எவ்வளவு படிநிலைகளாக நடைபெற்றது, அதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் என்ன என்று சொல்லியிருக்கும் கட்டுரைகள் மிக முக்கியமானவை.
இவை இப்படி பொதுவெளியில் கிடைக்கின்ற நிலையில் இவற்றைப்பற்றிய எளிமையான வாசிப்புகூட இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சொன்னதாக ஒரு வரியை இவர்களே புனைந்துகொண்டு அவற்றுக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. வைக்கம் போராட்டம் பற்றி கேரளத்தில் உள்ள சித்திரத்தையும் புரிந்துகொண்டேன். சலிப்பில்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் பொறுமைக்கு ஒரு வணக்கம்.
என். ஜெகதீஷ்
அன்புள்ள ஜெகதீஷ்,
மூர்க்கமான ஒற்றைப்படைத்தன்மையுடன் வைக்கம் போராட்டம் ஈ.வெ.ரா தொடங்கி நடத்தி வென்றது என்று இங்கே எல்லா இடங்களிலும் எழுதி வைத்தவர்களே இன்று அது காந்தியப்போராட்டம் என்றும், அதில் வேறு பல தலைவர்களும் பங்கெடுத்தார்கள் என்றும் சொல்ல ஆரம்பித்திருப்பதன் வெற்றியில் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் வரலாற்றுப்பக்கமாக அவர்கள் நகர்ந்தார்கள் என்றால் நமக்கு என்ன பிரச்சினை?
ஆனால் கேரளத்தில் வைக்கம் போராட்டத்தை ஒட்டி நிகழ்வனவற்றைக் கண்டால் நாராயணகுரு பிறந்த மண்ணா என்னும் சலிப்பு உருவாகிறது. சாதியரசியல் இந்தியாவை ஒட்டுமொத்தமாக எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று தெரிகிறது.
வைக்கம் போராட்டம் நாராயணகுருவின் மாணவரான டி.கெ.மாதவனால் தொடங்கப்பட்டது. அதற்கு முன்னர் ஈழவர்கள் வைக்கத்தில் நடத்திய ஒரு ஆலயநுழைவுப் போராட்டம் திவான் வேலுப்பிள்ளையால் கொடுமையாக ஒடுக்கப்பட்டமையே டி.கே.மாதவனின் முன்னெடுப்புக்குக் காரணம். டி.கே.மாதவனுக்கு நாராயணகுரு ஆதரவளிக்கவில்லை. எதிர்ப்புப் போராட்டங்கள் அவருடைய வழி அல்ல.
காங்கிரஸ்காரரான டி.கே.மாதவன் அன்னிபெசண்டை உள்ளே கொண்டுவர முயன்றார். அது போதிய அளவு வெற்றிபெறவில்லை. அதன்பின் காந்தியை உள்ளே கொண்டுவருவதில் அவர் வெற்றிபெற்றார். கேரள காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களான கேளப்பன், கே.பி.கேசவமேனன் ஆகியோரும் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
அன்றைய இளம் காங்கிரஸ் தலைவர்களான, பிற்கால கம்யூனிஸ்டுக் கட்சியினரான இ.எம்.எஸ், ஏ.கே.கோபாலன் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்த சி.வி.குஞ்ஞிராமன் அதன் முதன்மை ஆளுமைகளில் ஒருவர். இந்தப் போராட்டத்தின் விளைவாக தேசாபிமானி, கேரளகௌமுதி ஆகிய நாளிதழ்கள் உருவாயின.
டி.கே.மாதவன்இப்போராட்டத்தில் ஐயன்காளியின் இயக்கம் பங்கெடுத்தது. ஈ.வெ.ராவும் கோவை அய்யாமுத்து போன்ற தமிழகத் தலைவர்களும் பங்கெடுத்துச் சிறைசென்றனர். கர்நாடகத்தில் இருந்தும் காங்கிரஸ் போராளிகள் வந்து கலந்துகொண்டனர்.
காந்தி இப்போராட்டம் இந்துக்களிடையே பிளவை உருவாக்கிவிடலாகாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். அது பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இடமளித்துவிடும், இந்தியா முழுக்க அந்தக் கசப்பை அவர்கள் பரப்பி தேசிய இயக்கத்தை அழித்துவிடுவார்கள் என அஞ்சினார். பிரிட்டிஷ் ஆங்கில நாளிதழ்கள் அவ்வாறுதான் நடந்துகொள்ளவும் செய்தன.
காந்தியின் வழிகாட்டலின்படி ஆலயநுழைவுப் போராட்டம் ஒவ்வொருநாளும் விடாப்பிடியாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கைதாகும் போராளிகளில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர், ஒருவர் ஈழவர், ஒருவர் உயர்சாதியினர் என இருக்கவேண்டும் என காந்தி ஆணையிட்டிருந்தார். ஆகவே பிரித்தாளும் முயற்சிகள் வெல்லவில்லை. வன்முறை உருவாகவே கூடாது என்ற பிடிவாதம் காந்திக்கு இருந்தது. அரசுத்தரப்பில் கும்பல் வன்முறையை தூண்டிவிட எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன.
இந்தப் போராட்டத்தின்போது ஆலயநுழைவு மறுக்கப்பட்டவர்கள் மதம் மாறலாம் என சி.வி.குஞ்ஞிராமன் அறிவித்தார். சிலர் மதம் மாறினர். கிறிஸ்தவ இஸ்லாமிய மதகுருக்கள் மதமாற்றத்துக்கு அழைப்பு விடுத்தனர். உடனே உயர்சாதித் தரப்பு இந்த மொத்தப் போராட்டமே மதமாற்ற சக்திகள் நடத்துவதுதான் என பிரச்சாரம் செய்தனர். காந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜார்ஜ் ஜோசப் போன்றவர்களை விலகிக் கொள்ளும்படி அறிவித்தார். ஈ.வெ.ரா அந்த ஆணையை எதிர்த்தார். ஆனால் ஜார்ஜ் ஜோசப் காந்தியின் ஆணைப்படி மதுரை உட்பட்ட இடங்களில் தலித் கல்விக்கான பணிகளில் ஈடுபட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற போராட்டத்தில் நடுவே சிலகாலம் மட்டுமே ஈ.வெ.ரா கலந்துகொண்டார். சிறைசென்றார். அதன்பின் அவர் தமிழகம் திரும்பி சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டார். வைக்கம் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இடதுசாரித் தலைவர்களும் அதில் நம்பிக்கை இழந்து விலகிச் சென்றனர். அவர்கள் சத்யாக்கிரக வழிகளை ஏற்கவில்லை, வன்முறைப்பாதையை நம்பினர்.
மன்னத்து பத்மநாபன்காந்தி இரண்டுமுறை கேரளம் வந்து நாராயணகுரு உள்ளிட்டோரைக் கண்டு பேசினார். பழமைவாதிகளின் தலைவரான இண்டன்துருத்தில் நீலகண்டன் நம்பூதிரிப்பாடை வீட்டில் சென்று சந்திக்க முயன்றாலும் அவர் சந்திக்க ஒப்பவில்லை. ஆலயப்பிரவேசத்தை எதிர்த்த சந்திரசேகர சரஸ்வதியிடமும் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் நீண்டகாலம் நடைபெற்ற வைக்கம் போராட்டம் உயர்சாதியினரில் கணிசமானோர் மனதை மாற்றியது. பழமைவாதிகள் தனிமைப்பட்டனர். காந்தியின் கோரிக்கையின்படி நாயர் சர்வீஸ் சொசைட்டி நிறுவனர் மன்னத்து பத்மநாபன் வடகேரளத்தில் இருந்து வைக்கத்திற்கு ஒரு நீண்ட நடைபயணம் நடத்தினார். நாராயணகுருவை கண்டு வணங்கி வைக்கம் சென்றார். நாராயணகுருவும் போராட்டத்திற்கு வந்தார்.
வைக்கம் போராட்டம் பெரும் மக்களியக்கமாக ஆனது இந்த இரு தலைவர்களும் உள்ளே வந்தபின்னர்தான். இருவரும் அன்று நாயர், ஈழவர் தரப்பினரால் தெய்வத்திற்கு நிகராக வணங்கப்பட்டவர்கள். பல்லாயிரம் பேர் பங்கெடுக்கும் பெரும் போராட்டமாக வைக்கம் சத்தியாக்கிரகம் அவர்கள் வந்தபின் மாறியது.
அத்துடன் திருவிதாங்கூரின் காவல்துறை தலைவராக இருந்த பிட்ஸ் துரைக்கு காந்தி கடிதமெழுதி அரசாங்க வன்முறைக்கு துணைபோகக்கூடாது என கோரினார். விளைவாக பிட்ஸ் துரை போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டார். அதற்குரிய படைபலம் திருவிதாங்கூருக்கு இல்லை என்றும், அது அறமல்ல என்றும் மன்னரிடம் தெரிவித்தார்.
வைக்கம் போருக்கு பொதுவாக மொத்தக் கேரளசமூகமும் ஆதரவளித்தது. எதிர்த்தரப்பில் இறுதியில் மிகச்சிலரே எஞ்சினர். விளைவாக திருவிதாங்கூர் அரசு பணிந்தது. வைக்கம் ஆலயத்தில் அனைவரும் நுழைய அனுமதி அளித்தது. (தாந்த்ரீகச் சடங்குகள் நிகழும் மைய வாசலுக்கு மட்டும் விதிவிலக்கு தேவை என தந்த்ரிகள் கேட்டதை போராட்டத்தரப்பு ஏற்றுக்கொண்டது) ஆலயநுழைவு ஒப்பந்தத்தில் காந்தி சார்பில் தேவதாஸ் காந்தி கையெழுத்திட்டார். மன்னர் ஆலயநுழைவை அறிவித்தார்.
வைக்கம் போராட்டம் வென்றதும் அதே பாணியில் இந்தியா முழுக்க ஆலயநுழைவுக்கான காந்தியப்போராட்டத்தை காந்தி தொடங்கினார். அனந்தபத்மநாபசாமி ஆலயம், குருவாயூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆலயநுழைவுப்போர் தொடங்கியது. டி.கே.மாதவன் திருவார்ப்பு ஆலயத்தில் ஆலயநுழைவுப் போரை தொடங்கினார்.
இது உண்மை வரலாறு. ஆனால் வைக்கம் நூற்றாண்டு நிகழும் போது நாம் கேரளத்தில் காண்பது ஒரு சோக வரலாற்றை. மாத்ருபூமி நாளிதழ் உள்ளிட்ட இதழ்கள் வைக்கம் என்பது முழுக்கமுழுக்க மன்னத்து பத்மநாபன் போராடி வென்ற போராட்டமாக சித்தரிக்கிறார்கள். ஈழவ இதழ்களில் மன்னத்து பத்மநாபன் பெயரே இல்லை. முழுக்க முழுக்க நாராயணகுரு நடத்திய போராக அதை காட்டுகிறார்கள். நாராயணகுருவின் ‘ஆணைப்படி’ அதை காந்தி நடத்தினார் என்கிறார்கள் சிலர்
காங்கிரஸ் இதழ்களில் கேளப்பன், கேசவமேனன் ஆகியோரின் முகங்களே உள்ளன. போராட்டத்தில் ஏ.கே.கோபாலனும் ஈ.எம்.எஸும் அளித்த பங்கே இல்லை. கேரள இடதுசாரி அரசு அது இடதுசாரித் தலைவர்கள் முன்னின்று நடத்திய போராட்டம் என சொல்ல விரும்புகிறது. காந்தியை எதிர்த்தவர்களான ஈ.வெ.ராவையும் ஜார்ஜ் ஜோசப்பையும் சேர்த்துக்கொள்கிறது.
ஆனால் கேரளத்தில் பொதுவாக வைக்கம் வெற்றி என்பது மன்னத்து பத்மநாபனின் சாதனை, அல்லது நாராயணகுருவின் சாதனை என்ற குரலே இன்று ஓங்கிக் கேட்கிறது. ஏனென்றால் நாயர்களும் ஈழவர்களுமே இன்று அங்கே பெரிய சாதிகள். அவர்கள் இருவரும் கடைசியாகத்தான் வந்து சேர்ந்தார்கள், ஓராண்டு முன்புகூட மன்னத்து பத்மநாபன் எதிர்மனநிலை கொண்டிருந்தார், நாராயணகுரு போராட்டம் பற்றி ஐயம்கொண்டிருந்தார் என ஒருவரிடம் சொன்னேன். அவர் என்னை அடிக்காத குறை.
அண்மையில் ஒருவர் இண்டன் துருத்தில் நீலகண்டன் நம்பூதிரிப்பாடுதான் வைக்கம் போராட்டத்தின் தலைவர், உண்மையான வைக்கம் வீரர் என்று ஆவேசமாகப் பேசுவதைக் கேட்டு துணுக்குற்றேன். நல்லவேளை, பகடிதான் செய்கிறார் என பத்து நிமிடம் கழித்தே புரிந்தது.
வைக்கத்தின் உண்மையான வரலாற்றை, முழுமையான சித்திரத்தை, தமிழில் சொல்வதைவிட மலையாளத்தில் சொல்வது மேலும் சிரமம் என்னும் நிலை இன்று உள்ளது. சொல்ல ஆரம்பித்தாலே நீ யார், நாயரா ஈழவரா, காங்கிரஸா, கம்யூனிஸ்டா என்று கேட்பார்கள். அவ்வளவு மூர்க்கம். முழு உண்மை எவருக்குமே தேவையில்லை.
வரலாறென்பதே இப்படித்தான் உருவாகிறது போலும். சமகாலத்தில் எவருக்கு அதிகாரம் உள்ளதோ அவர்களே வரலாற்று நாயகர்கள்.
ஜெ
வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்
காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்
பெண்கள், சட்டம் – கடிதங்கள்
ஆசிரியருக்கு,
பெண்கள் ஆண்கள் மீது பொய்ப்புகார் அளித்து துன்புறுத்துவது பற்றி சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தீர்கள். குறிப்பாக இதை செய்வது நடுத்தர குடும்பங்கள் அல்லது மேல் நடுத்தர வர்க்கப்பெண்கள் என்பது முற்றிலும் உண்மை.
அந்த பேட்டியில் நீங்கள் கூறியதை 22 ஆண்டுகள் அனுபவம் உடைய குற்றவியல் வழக்கறிஞர் என்கிற வகையில் முழுமையாக ஏற்கிறேன். கணவனுடன் சேர்த்து வயோதிக மாமனார், மாமியார், வெளியூர் நாத்தனார் கொழுந்தனார்கள் மீது பொய் புகார் அளித்து துன்புறுத்துவது இன்று ஒரு trending தான்.
உச்ச நீதிமன்றம் சொல்லியும் கூட பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மகிளா நடுவர் நீதிபதிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியது. உரிய பகுதிகளை மொழியாக்கம் செய்து கீழே தந்திருக்கிறேன்.
Arnesh Kumar vs State of Bihar 2014 8 Scc 273
https://indiankanoon.org/doc/2982624/
“உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரத்தை பார்வையிட்டதில் இதுபோல ஆண்டுக்கு 1.9 லட்சம் பேர் தேசம் முழுவதும் இந்த வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள் என தெரியவருகிறது. ஆனால் 15% க்கு கீழ் தான் தண்டிக்கப்படுகிறார்கள். இதுதான் உள்ளதிலேயே தண்டனை சதவிகிதம் குறைவான வழக்கு வகை.
இ த ச 498 A என்கிற துன்புறுத்தல் பிரிவு ஒரு பெண்ணை அவரின் கணவர், மாமனார் மாமியார் துன்புறுத்துவதை தடுக்க ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நடைமுறையில் இது கேடயமாக அல்ல, ஆயுதமாக பயன்படுகிறது. விரக்தியுற்ற மனைவிகள் தனது கணவர், வயோதிக மாமனார் மாமியார் வெளிநாடு வாழ் நாத்தனார் மீது தேவையற்ற புகார் அளித்து அவர்களை பிணையில் விடா குற்றத்தில் சிறையில் தள்ளுகிறார்கள். எங்கள் அனுபவத்தில் கைதுகள் அதன் முக்கியத்துவம் உணராமல் ஒரு சாதாரணச் சடங்கு போல செய்யப்படுகின்றன. நீதிமன்றக் காவலும் வெகு சாதாரணமாக செய்யப்படுகிறது.
பொதுவாக ஒரு வழக்கில் ஒரு நீதித்துறை நடுவர் தன் முன் கைது செய்து கொண்டு வரப்படும் நபரை சிறைக் காவலுக்கு அனுப்ப உண்மையில் தேவை இருக்கிறதா என இத் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்படும் அம்சங்களை பொறுத்து திருப்தியுற வேண்டும். இல்லையெனில் அவரை விடுவிப்பது நீதித்துறை நடுவரின் கடமை. காரணமின்றி நீதிமன்றக் காவலுக்கு ஒருவரை உட்படுத்தினால் அந்த நடுவர் மீது சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றம் துறைவாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் “
10 ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணா என்கிற ஒரு வடக்கத்திய நண்பர் “ஆண்கள் பாதுகாப்பு இயக்கம்” ஒன்றை வைத்திருந்தார். அவர் நீதிமன்றத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு உதவிகள் செய்வார். அவர் மனைவியால் பாதிக்கப்பட்டு சிறை சென்று பிணையில் வந்தவர். இந்த டிரெண்ட் ஐ அப்போதே அவர் உணர்ந்திருந்தார்.
கிருஷ்ணன்,
ஈரோடு.
***
அன்புள்ள கிருஷ்ணன்,
நாலைந்து நாட்களுக்குள் இரண்டு சாவுச்செய்திகள், மூன்று வழக்குச் செய்திகள் என்னை வந்தடைந்தமைக்கான எதிர்வினையாகவே அதைச் சொன்னேன். அதாவது ஒரு சமூக நிகழ்வு எனக்கு அளிக்கும் தொந்தரவு எப்படி கலையாக ஆகிறது என்பதற்கான உதாரணமாக சொன்னது. சொல்லக்காரணம் அன்று காலை அந்த வீடியோவை பார்த்ததும் அந்த உணர்வில் இருந்ததும்.
அப்போது அந்தப் பேட்டியாளர் உட்பட அனைவருமே ‘அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வதைக்கொண்டு கொள்கை உருவாக்கிக் கொள்ளலாமா’ என்று கேட்டனர். சில அரைவேக்காட்டுப் பெண்ணியர், கால்வேக்காட்டு மார்க்ஸியர் ‘எங்கே புள்ளி விவரம்?’ என முகநூலில் கொதிக்கின்றனர்
இந்த தீர்ப்பு 9 ஆண்டுகளுக்கு முந்தையது. இன்றைய நிலைமை இன்னும் மிகப்பரிதாபகரமானதாகவே இருக்கும். ஆண்டுக்கு ஒன்றேகால் லட்சம் வழக்குகள் அன்று. இன்று இரண்டு லட்சமாவது இருக்கும். ஒவ்வொரு வழக்கிலும் ஒரு குடும்பமே கைதாகிறது. சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவருகிறது. குற்றம்சாட்டப்படுபவர்களில் நூற்றில் ஒருவரே இறுதியில் ஏதேனும் தண்டனை பெறுகிறார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள், ஆண்களின் உறவினர் அனைவருமே சிறைசெல்கிறார்கள். அதாவது தண்டனைக்கு ஆளாகிறார்கள்.
இவை நீதித்துறையே அளித்த மிகமிக விரிவான தரவுகள். என்னிடம் புள்ளி விபரம் எங்கே என்பவர்கள் இதை படித்திருக்க மாட்டார்கள். இப்போது கொடுத்தாலும் இதை திரிப்பார்களே ஒழிய படிக்க மாட்டார்கள். இங்கே இருப்பது மனச்சிக்கல் அளவுக்கே சென்றுவிட்ட ஒரு வகை மிகைவெளிப்பாடு. தான், தன் தரப்பு மட்டுமே என நம்பி வெறிகொண்டு கூச்சலிடும் ஒருவகை நரம்புச்சிக்கல்.
எனக்கு திகைப்பூட்டியது ஒன்று. குற்றம் சாட்டப்பட்ட ஆணின் குடும்பத்தினர் நீதிமன்றம் வரவேண்டியதில்லை என உயர்நீதிமன்ற ஆணை சொல்கிறது. அவர்களை மிக அவசியம் இல்லாவிட்டால் கைது செய்யலாகாது என்கிறது. ஆனால் நடைமுறையில் உடனடியாகவே கைது நடைபெறுகிறது. எல்லா நீதிமன்றங்களிலும் ஆணும் அவர் குடும்பத்தினரும் வழக்கு நடைபெறும் நாட்கள் முழுக்க வரும்படிச் செய்யப்படுகிறார்கள். மிக வயதானவர்கள் வந்து அமர்ந்திருக்கிறார்கள். இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு வந்து அமர்ந்திருக்கிறார்கள்.
குற்றம்சாட்டப்பட்டாலே நீதிமன்றம் வரவேண்டியதில்லை, வராவிட்டால் வாரண்ட் வராது, அதற்குச் சட்டமில்லை என்று அவர்களிடம் வழக்கறிஞர்கள் சொல்வதில்லை. அவர்கள் வந்தால்தான் தங்களுக்குப் பணம் வரும் என்று நினைக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் வரவேண்டியதில்லை என உயர்நீதிமன்ற ஆணை உண்டு என அவர்களிடம் ஊடகம்தான் சொல்லவேண்டும். (முகநூலில் சதா புரட்சி கொப்பளிக்கும் நம்மூர் முற்போக்கு வக்கீல்களும் இதையெல்லாம் சொல்லலாம்- கட்சிக்காரர்கள் இருந்தால்)
நான் இந்த ஓராண்டில் அறிந்த குடும்பங்கள் எத்தனை. எத்தனை நண்பர்களின் கதைகள். இப்போது கடிதங்கள் வந்து குவிகின்றன. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. குறைந்தபட்சம் உயர்நீதிமன்றமாவது இன்றைய சூழலை உணர்ந்திருப்பது ஒன்றே நம்பிக்கை அளிக்கிறது
ஜெ
*
அன்புள்ள ஜெ,
நீங்கள் ஓர் இணையக் காணொளியில் இன்றைய குடும்பச் சூழலில் உள்ள ஒரு சிக்கல் பற்றிச் சொல்கிறீர்கள். நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பங்களில் இன்று வளர்ந்து வரும் பெண்கள் பற்றிய ஒரு அவதானிப்பு அது.
பெண்கள் ஆயிரமாண்டுகளாகச் சுரண்டப்பட்டனர் என்றும், ஆகவே அவர்களுக்குச் சாதகமாக சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்றும், ஆனால் அச்சட்டங்களைச் சென்ற சில ஆண்டுகளாக நடுத்தர உயர்நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களில் ஒரு சாரார் மிகத்தவறான முறையில் பயன்படுத்துவதாக தனியனுபவங்களின் வழியாக நீங்கள் உணர்வதாக அதில் சொல்கிறீர்கள்.
கூடவே, கீழ்நடுத்தர, அடித்தள குடும்பங்களில் அந்த மனநிலை இல்லை என்கிறீர்கள். அடித்தளக் குடும்பங்களில் அப்பெண்களின் உழைப்பாலேயே குடும்பங்கள் வாழ்வதாகவும் சொல்கிறீர்கள்.
மிக தெளிவான பேட்டி. ஆனால் அதை உடனே ஒற்றை வரியாக ஆக்குகிறார்கள். ‘குடும்ப பிரச்சினைக்கு காரணம் பெண்கள்’ என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொல்லி முகநூலில் இணையச்சல்லிகள் ஒரே கூச்சல். இந்த கூச்சலை நீங்கள் எதிர்கொள்வதிலுள்ள நிதானம் திகைப்பூட்டுகிறது.
ராஜ்
*
அன்புள்ள ராஜ்,
கூச்சலிடுபவர்கள் அவர்களின் அறியாமை, உள்நோக்கம் ஆகியவற்றையே வெளிப்படுத்துகிறார்கள். அது நல்லது. சிலரை அந்த முழு வீடியோவையும் பார்க்க வைத்தால் சிறப்பு.
நரம்புநோயாளிப் பெண்கள் சிலர் அக்கருத்தைச் சொன்னமைக்காக என்னை கைது செய்யவேண்டும் என்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்ற தீர்ப்பில் வந்த விஷயம் அது. அதையே நான் வேறொரு கோணத்தில் சொல்லியிருக்கிறேன். உயர்நீதிமன்றத்தையே கைதுசெய்ய பாய்வார்கள் என நினைக்கிறேன்.
ஜெ
அமெரிக்கன் கல்லூரி உரை, கடிதங்கள்
அன்புள்ள ஜெ
அமெரிக்கன் கல்லூரியில் உங்கள் உரையும், அந்த நிகழ்வு பற்றிய குறிப்புகளும் அருமையானவை. அந்த குறிப்புடன் உள்ள இணைப்புகள் வழியாக டேனியல்பூர் நினைவு நூலகம் பற்றி அறிந்துகொண்டேன். நான் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. இத்தனை வரலாற்றுப்பின்புலமும் ஒரே கட்டுரை வழியாக கிடைக்கிறதென்றால் அதற்குக் காரணம் தமிழ் விக்கி என்னும் கலைக்களஞ்சியம்தான். உங்கள் கட்டுரைகளின் இணைப்புகள் எல்லாமே மிகுந்தமுக்கியத்துவம் உடையவையாக ஆகிவிட்டன.
என்.மாணிக்கவாசகம்
அன்புள்ள ஜெ
அமெரிக்கன் கல்லூரி உரை வழக்கம்போல அருமையானது. ஆழமான கருத்துக்களை சரளமாகச் சொல்லிச் செல்கிறீர்கள். யதார்த்தவாதத்தின் பிறப்பும், அது நவீனத்துவத்தில் அடைந்த இறுக்கமும், அதை அழகிரிசாமி – கி.ராஜநாராயணன் இருவரும் கடந்துசென்றதும் அற்புதமான பதிவுகள். மிகச்சிறப்பான உரை. நன்றி.
(உண்மையிலேயே சற்று மெலிந்திருக்கிறீர்கள்)
மகேந்திரகுமார்
எம்.டியின் மஞ்சு
எம்.டி.வாசுதேவன்நாயர்எம்.டி.வாசுதேவன் நாயர் தமிழ் விக்கி
அன்பின் ஜெ,
வணக்கம்.
இக்தாராவின் அந்தக் காத்திருப்பின் இசையை மறுபடி கேட்க வேண்டும் போலிருந்தது. எம்.டி-யின் “மஞ்சு”-வை சென்ற வாரம் மீள்வாசிப்பு செய்தேன்.
எம்.டி. வாசுதேவன் நாயர் என்ற பெயர், முதன்முதலாக சினிமா திரைக்கதைகள் மூலமாகத்தான் தொண்ணூறுகளில் எனக்கு அறிமுகமாயிற்று. கல்லூரிக் காலத்தில், கோவை தியேட்டர் ஒன்றில் “சதயம்” பார்த்துவிட்டு அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. அதன்பின்தான் அவர் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். “மஞ்சு”, 1983-ல் எம்.டி-யின் இயக்கத்தில் மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.
ஜக்பீர் ஹிமாலயாவின், குமாயுன் மலையடிவாரத்தில் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் நகரம் நைனிடால், கோடையில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகமிருக்கும் ஒரு மலை வாசஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1900 மீட்டர்கள் உயரத்தில் இருக்கிறது. நகர் நடுவில், சுமார் 2 கிமீ சுற்றளவில் கண் வடிவ அமைப்பிலான அழகான ஏரி ஒன்றிருக்கிறது. அதனை ஒட்டி படகுத் துறை. மேலே குன்றில் பெரிய வெண்கல மணிகளுடன் நைனி தேவி கோயில்.
விமலாவிற்கு 31 வயது. ஏரிக்கருகில் ஒரு ரெசிடன்சியல் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்துகொண்டு அங்கேயே தங்கியிருக்கிறாள். 1955-ல், தன் 21-வது வயதில் சந்தித்து, காதலிக்க ஆரம்பித்த நண்பன் சுதிர்குமார் மிஸ்ராவின் மீள் வருகைக்காக கடந்த ஒன்பது வருடங்களாகக் காத்திருக்கிறாள். 53 மைல்கள் தொலைவில் உருளைக்கிழங்கு தோட்டங்களுக்கு மத்தியில்தான் அவள் வீடு. வீடு அவளுக்குப் பிடித்ததில்லை. நோய்வாய்ப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக படுத்த படுக்கையாய் கிடக்கும் அப்பா. ஆல்பர்ட் கோமஸுடன் உறவு வைத்துக்கொண்டு அடிக்கடி அவருடன் வெளியில் சுற்றக் கிளம்பிவிடும் அம்மா. வீட்டு வேலைக்காரன் பீர்பகதூர் வழியாக தன் காதலன் பிரதீப் சந்திர சர்மாவிற்கு காதல் கடிதங்கள் கொடுத்துவிடும் தங்கை அனிதா. இரவில் வீட்டிலிருந்து வெளியேறி பஹாடிகளுடன் கஞ்சா புகைத்துக்கொண்டு சீட்டாடும் தம்பி பாபு. வீட்டின் நினைவு எழுந்தாலே மனம் கசக்கிறது அவளுக்கு.
படகுத் துறையில் “மேஃப்ளவர்” படகை வாடகைக்கு எடுத்து ஓட்டும் 18 வயது புத்து, விமலாவிற்கு பரிச்சயமானவன். அவன், தன் அப்பாவை இதுவரை பார்த்ததில்லை. அவன் அப்பா ஒரு வெள்ளைக்காரர் என்று அவன் அம்மா சொல்லியிருக்கிறாள். எப்போதாவது ஒரு கோடை ஸீஸனில் நகருக்கு வரும்வெள்ளைக்காரர்களில் அப்பாவும் இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரின் வருகைக்காக அவரின் புகைப்படத்தை பையில் வைத்துக்கொண்டு காத்திருக்கிறான் புத்து.
பள்ளிக்குப் பக்கத்திலேயே இருக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கான காட்டேஜ் “கோல்டன் நூக்”கில், அக்கோடையில் தனியாக வந்து தங்கும் சர்தார்ஜி, விமாலாவிற்கு நட்பாகிறார். அவருக்கு நுரையீரல் புற்றுநோய்; இன்னும் நான்கு மாதங்கள்தான் உயிரோடிருப்பார். இறப்பிற்காக காத்திருக்கிறார். இறப்பதற்கு முன் தனக்குப் பிடித்த, தன் நினைவுகளுடன் பின்னிய பழைய இடங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்.
“மரணம் மேடைப் பிரக்ஞை இல்லாத் ஒரு கோமாளி” என்று ஓரிடத்தில் உரையாடலில் சொல்கிறார் சர்தார்ஜி. மற்றொரு சமயத்தில் கீழ்வரும் வரிகளை விமலா நினைத்துக்கொள்கிறாள்…
“என் மரணத்தையும் என் பின்னவர் மரணத்தையும்
நானே மரிக்கிறேன்…
என் வாழ்வையும் என் பின்னவர் வாழ்வையும்
நானே வாழ்கிறேன்…”
இக்தாரா இசைக்கருவியின் இசை, நாவல் முழுவதும் பின்னணி இசையாக வருகிறது. மலையும், ஏரியும், பனியும், பருவமும், காலமும் பாத்திரங்களாக உடனிருக்கின்றன. “மஞ்சு” ஒரு சிறிய நாவல்தான்; நீள்கதை அல்லது குறுநாவல் என்றும் கொள்ளலாம். ஆனால் அது தரும் அனுபவம் அபாரமானது. காட்சிகளும், பசுமையும், உணர்வுகளும் வைகறைப் பனியென மனதில் கவிபவை. பரபரப்புகளோ, ஓசைகளோ, சந்தடிகளோ அற்ற, வெகு நிதானத்தில் நகரும் மௌனச் சலனங்களின் கவிதை போல் தோன்றியது “மஞ்சு”.
வெங்கி
“மஞ்சு” (குறுநாவல்) – எம்.டி. வாசுதேவன் நாயர் (1964)
மலையாளத்திலிருந்து தமிழில்: ரீனா ஷாலினி
காலச்சுவடு பதிப்பகம்
March 31, 2023
கி.ரா -100
கி.ராஜநாராயணன் மறைவுக்குப் பின்னர் வரும் நூல்களைப் பார்க்கையில் ஓர் ஆற்றாமை ஏற்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இந்நூல்களை வெளியிட்டிருந்தால், அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தால், சற்று தொடர்புப்பணிகளைச் செய்திருந்தால் தமிழுக்கு இன்னொரு ஞானபீடம் கிடைத்திருக்கும். நாம் பெருமைகொள்ளும் ஞானபீடமாகவும் அது இருந்திருக்கும்.
ஆனால் எப்போதுமே இறந்தபின் கொண்டாடுவதே நம் வழக்கம். அது நமது தொன்மையான நீத்தார்வழிபாட்டின் மனநிலையின் நீட்சி. கி.ராவின் நினைவாக கதைசொல்லி இதழும் பொதிகை, பொருநை, கரிசல் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டிருக்கும் கி.ரா 100 நூல் (இரு தொகுதிகள்) அந்த ஆற்றாமையையே உருவாக்கியது.
மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட நூல். மொத்தம் 158 கட்டுரைகள் அடங்கியது. தமிழ்ச்சமூகத்தின் எல்லா பகுதியினரும் எழுதியிருக்கிறார்கள். இலக்கியவாதிகள், இதழாளர்கள், ஆய்வாளர்கள், அரசியலாளர்கள், நீதிபதி, நடிகர் என பலர். இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயிடு தலைமையில் நூல் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்புதான், ஆனால் இதையும் சில ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்கலாம்.
நூல் எனும் வகையில் இது ஒரு முக்கியமான தொகுப்பு. கி.ராவின் மீதான தமிழ்ச்சமூகத்தின் ஒட்டுமொத்தப்பார்வையே இதன் வழியாக அறியக்கிடைக்கிறது. எதிர்காலத்தில் கி.ரா மீதான பெரும்பாலான ஆய்வுகள் இந்நூலின் வழியாகவே நிகழவிருக்கின்றன என்று தெரிகிறது. திடவை பொன்னுசாமி, ப்ரியன், அருள்செல்வன், ஆகாசமூர்த்தி, இர.சாம்ராஜா, இளசை அருணா, கார்த்திகாதேவி, கவிமுகில் சுரேஷ் என நிறையபெயர்கள் எனக்கு எவரென்றே தெரியாதவர்கள் . உக்கிரபாண்டி, கோ.சந்தன மாரியம்மாள், கு.லிங்கமூர்த்தி என பல பெயர்கள் அசலான தெற்கத்திப் பெயர்களாகத் தோன்றுகின்றன.
இத்தனைபேர் கி.ரா பற்றி எழுதியிருப்பதும், இவர்களின் எழுத்துக்களை தேடித் தொகுத்திருப்பதும் உண்மையில் பெரும்பணி. பல கட்டுரைகள் மிக எளிய சமூகப்பார்வை அல்லது கல்வித்துறைப் பார்வை கொண்டவை. ஆனால் எந்த ஒரு கட்டுரையிலும் அதை எழுதியவருக்கு கி.ராவுடன் இருக்கும் அணுக்கமும், அவருக்கு கி.ரா அளித்ததென்ன என்பதும் இல்லாமலில்லை.
இந்நூலில் சில கட்டுரைகள் முக்கியமானவை. சூரங்குடி அ.முத்தானந்தம், பாரத தேவி, மு.சுயம்புலிங்கம் போன்றவர்களை நடை, கூறுமுறை, பார்வை ஆகியவற்றில் கி.ராவின் நேரடியான தொடர்ச்சிகள் என்றே சொல்லமுடியும். பாரததேவி கி.ராவுடன் நேரடியான அணுக்கமும் கொண்டிருந்தார். ’கி.ரா. எனக்கு எழுதிய கடிதங்களை நான் என் மேல்சட்டைப்பையில் வைத்திருப்பேன். அந்தக் கடிதங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்போ அப்போ எழுத்து நான் படிச்சிக்கிட்டே இருப்பேன். கிராவின் கடிதங்கள் படிக்கிறதுக்கு சொகம்மாயிருக்கு,. அவர் கடிதங்கள் இதயநோயாளியான மு.சுயம்புலிங்கத்தின் பலஹீனமான இதயத்தை இதமாய் தடவிக்கொடுக்கும்’ என்னும் சுயம்புலிங்கத்தின் வரிகளில் இருக்கும் நெருக்கமும் நெகிழ்வும் ஆழமானவை.
கி.ரா மீது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளை அமைப்பு ஒன்று விடுத்த தீண்டாமைக்கொடுமை வழக்கு அவரை அலையவைத்து சோர்வுள்ளாக்கியது. அவ்வழக்கில் கி.ராவின் இடத்தை சுட்டிக்காட்டி பெருமைப்படுத்திய நீதிபதி ஜிஆர். சுவாமிநாதனின் கட்டுரை இந்நூலில் உள்ளது. “வட்டாரவழக்கு என்று பெருந்தகைகளாலும், தமிழ்ப்பதாகைகளாலும் செம்மல்களாலும் அறிஞர்களாலும் அவதூறு செய்யப்பட்ட மக்கள் மொழி என்பது ஓரு மொழிக்கிடங்கு என்று எப்போதும் நிறுவியவர் கிரா’ என்று நாஞ்சில்நாடன் குறிப்பிடுகிறார். கி.ராவை அவர் பயன்படுத்திய சொற்கள் வழியாகவே அணுகும் சுவாரசியமான கட்டுரை அது.
இன்னும்கூட கட்டுரைகள் கேட்டு பெறப்பட்டிருக்கலாம். கமல்ஹாசன் கி.ரா மேல் பெரும் ஈடுபாடு கொண்டவர். அவரிடமிருந்து ஒரு நல்ல கட்டுரை பெற்றிருக்கலாம். கி.ராவின் நிலத்தைச் சேர்ந்தவரான வசந்தபாலனிடம் ஒரு கட்டுரை கேட்டிருக்கலாம். ஆனால் அப்படிப்பார்த்தால் அந்தப் பட்டியலுக்கு முடிவே இல்லை.
தமிழின் முதன்மைப்படைப்பாளி ஒருவரின் நினைவுக்கு ஆற்றப்பட்ட மிகப்பெரிய அஞ்சலி இந்நூல்.
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
இளைய தலைமுறையினரிடம் பேசும்போது அவர்களுக்கு தமிழக ஆலயக்கலை பற்றி எந்த புரிதலும் இல்லை என்பதைக் காணமுடிகிறது. ஆலயம் என்றால் பக்தி என்று மட்டுமே தெரிந்து வைத்துள்ளனர், அங்கே செல்வதும் அரிது. ஆலயங்கள் மாபெரும் கலைச்செல்வங்கள், பண்பாட்டு மையங்கள், வரலாற்றுத் தடையங்கள். அதை பயிற்றுவிக்க நாங்கள் பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைக்கிறோம்
அந்த பார்வையை தமிழில் முன்வைத்த முன்னோடி ஒருவர் பாஸ்கரத் தொண்டைமான்.
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்திருப்பூர் உரை, கடிதம்
தமிழகத்தின் கூட்டங்களுக்கு விழாக்களுக்கு என்று சில பொதுப் பண்புகள் உண்டு.
அ. குறித்த நேரத்தில் தொடங்காமை குறித்த நேரத்தில் நிறைவு செய்யாமை
ஆ.வந்திருப்பவர்களின் நேரத்தை துச்சமென மதித்து நீட்டி முழக்கப்படும் பொருளற்ற உளறல்கள்.
இ. மேடையில் இருக்கும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி விதந்தோதுதல்.
ஈ. பெரும்பாலும் வழங்கப்பட்ட தலைப்பிற்கு பொருத்தமற்ற அந்த நேரத்தில் மனதிற்கு தோன்றும் நினைவுகளை தொடர்பற்று பேசுதல்.
உ. தான் எவ்வளவு அடக்கமானவன் எளிமையானவன் என்பதை மட்டும் அவையடக்கத்தோடு பதினைந்து நிமிடம் உரைத்து பின்பு தலைப்பிற்குள் செல்லுதல்.
ஊ. கூட்டத்தில் ஒரு செல்வந்தரோ அதிகாரியோ அரசியல்வாதியோ இருந்து விட்டால் அவர் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்வதே ஒரு பெருமை கொடுப்பினை என்பதை ஐம்பது முறை மட்டும் வந்திருப்பவர்களுக்கு நினைவுபடுத்துதல்.
எ. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் போன்ற நூறாண்டு பாரம்பரியம் கொண்ட எண்ணற்ற தேய் வழக்குகளை மீண்டும் மீண்டும் புளித்துப் போகும் அளவு கூறுதல்.
ஏ. சகிக்க முடியாத பாவனைகள் தோரணகள்.
ஐ. எழுதி எடுத்து வந்த குறிப்புகளை தலையை குனிந்து கொண்டு கூட்டத்தினரோடு எவ்வித தொடர்பும் கொள்ளாமல் தப்பும் தவறுமாக படித்து ஒப்பித்தல்.
ஒ. ஒரு பக்கம் நினைவுக்கு வருபவற்றை எல்லாம் தோன்றியவாறு பேசுபவர்கள் என்றால் இன்னொரு பக்கம் நூறு பூக்கள் நூறு காய்கள் சில பதிகங்கள் பாசுரங்கள் திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறனையே ஒரு பெரிய சாதனை என நம்பி ஆபாசமாக தங்களை முன்னிறுத்துபவர்கள்.
ஔ. தன்னுடைய வாழ்வில் ஒருபோதும் பின்பற்றாதவற்றை போலியாக போதனை செய்தல். அன்பு அமைதி ஆனந்தம் சமூக நீதி சமத்துவம் பகுத்தறிவு போன்ற வெறும்வாய் புரட்சிகள்
இதுபோன்ற குளறுபடிகள் இல்லாமல் மிகச் சிறப்பாக நண்பர் ராஜமாணிக்கம் மாநில தலைவராக பொறுப்பேற்ற நிகழ்வு அமைந்தது. நவீன இலக்கியத்திற்கு அறிமுகமான ராஜமாணிக்கம் போன்ற ஒருவர் ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை உணர முடிந்தது.
மூத்த பொறியாளர்கள் ஜெயகோபால் ஐயா அவர்களும் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களும் மிகச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.இயற்கை விதிகளை வாழ்வின் வளங்களாக ஒரு பொறியாளர் எப்படி தனது மதி நுட்பத்தால் இம்மண்ணில் நெடுங்காலம் முன்பே உருவாக்கியுள்ளார்கள் என்பதை காளிங்கராயன் கால்வாய் பவானி உதாரணங்களைக் கொண்டும் கட்டுமானம் போன்ற கணக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு துறையில் கலை நுழையும் பொழுது ஏற்படும் மாற்றங்களை தேவைகளை இருவரும் குறைந்த நேரத்தில் சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.
இந்த சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகளை பொறுப்பை கைமாற்றுதல் போன்றவற்றை விரித்துரைத்த தருணங்களும் மிக கச்சிதமாக இருந்தது.முக்கியமாக சங்கத்தின் சின்னமாக பாலத்தை வடிவமைத்துள்ளார்கள். கல்விக்கூடங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையே எப்போதும் இருக்கும் இடைவெளி ஒன்றுன்டு. அந்த இடைவெளியை இணைப்பதற்கான தங்களுடைய தொடர்ச்சியான கருத்தரங்கங்கள் மூத்த ஆளுமைகளை கொண்டு நடத்திய வகுப்புகள் போன்றவற்றை குறைந்த நேரத்தில் சொல்லி நிறைவு செய்தார்கள். அறிவை பகிர்ந்து பரவலாக்கி தேச கட்டுமானத்திற்கு பங்களிப்பதே சங்கத்தின் பிரதான நோக்கம் என்று கூறியபோது பெருமிதமாக உணர்ந்தேன்.
இது போன்ற ஒரு பொது நிகழ்வில் பல்வேறு துறையினரும் தரப்பினரும் கூடும் ஒரு அடையாள கூட்டத்தில் நீங்கள் என்ன பேச போகிறீர்கள் என்பது குறித்து எனக்கு ஒரு சின்ன குறுகுறுப்பு இருந்தது.பொதுவாக இலக்கியம் சாராத உங்களை மட்டும் கேட்க வராத, செவி கொடுக்கும் வாய்ப்பும் அறிவார்ந்த செயல்பாடுகளில் முன் பயிற்சியும் குறைவாக உள்ள இடங்களில் நீங்கள் பேசுவதில்லை என்பதை நான் அறிவேன். உங்கள் உரைக்குப்பின் அவ்வை பாட்டியின் கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற மூதுரையை நினைத்து கொண்டேன். ராஜமாணிக்கத்தை ஒரு தந்தையின் இடத்தில் இருந்து வாழ்த்த வந்திருப்பதாக கூறியது ராஜமாணிக்கத்திற்கு வாழ்நாளிற்கான பேறு.பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும் உங்களுடைய கட்டுமான பணியினை நிறைவு செய்து கொடுத்த தேவ சிற்பி ஆனந்த் அவர்களை நினைவு கூர்ந்தது உங்களின் பெருந்தன்மைக்கும் அவரின் திறமைக்கும் சான்று.
தனிப்பட்ட நேர் பேச்சுகளிலோ உங்கள் கட்டுரைகளிலோ கதைகளிலோ சாதாரணமாக கடந்து செல்லும் ஒன்றை நீங்கள் பெரும்பாலும் கூறுவதில்லை. பாலு அண்ணன் பண்ணை வீட்டில் நடந்த புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட எனது மனைவி வீடு திரும்பும் போது ஒன்று சொன்னார் அணுவிடை தளரா நெருப்பு போல் எரிகிறீர்கள் என. இந்த உரையும் அவ்வாறானதுதான் வாழ்நாளுக்கான கதகதப்பை வந்திருந்தவர்களுக்கு வழங்கியது.
இந்த பிரபஞ்சத்தில் வாழ்வு எனப்படுவதே சிவசக்தி லீலைதான்…இரவு பகல், சந்திரன் சூரியன், பிறப்பு இறப்பு, செயல் அமைதி, விரிதல் ஒடுங்குதல் என மரபில் இருந்து விஷ்வகர்மாவையும் மயனையும் முன்வைத்து துவங்கியது பெரும் திறப்பு.அமைதிக்கும் நேர்மறைக்கும் நிதானத்திற்கும் ஒரு வகையில் அடித்தளமாக இருப்பது வென்று செல்லும் விழைவுள்ள ஆண்மை மிகுந்த அறைக்கூவல்கள் தானே. துவாரகையும் இந்திர பிரஸ்தமும் அஸ்த்தினாபுரியுமே அழியும்போது இன்றைய பெருங்கட்டிடங்கள் அப்படியே எஞ்சி விடுமா என்ன…
எதுவுமே எஞ்ச போவதில்லை என்ற அதி எல்லைக்கு சென்று விட்டால் செயலின்மையில் மூழ்கடித்து விடும். புவியனைத்தும் எனக்கே என் தேவையையும் விழைவையும் தாண்டி பிரிதொன்றில்லை என்று தருக்கி எழுந்தால் சாம்பல் கூட மிஞ்சாத சர்வநாசம் தான். சலனமும் அசைவின்மையும் சந்திக்கும் சமரசப் புள்ளியில் முயங்கியெழுவதே வாழ்வெனும் ஆடல்…மாறாத நிலையான நடுநிலை என்ற ஒன்று இல்லை ஒற்றை எல்லையில் தேங்கி விடாத இடைநில்லா பயணத்தின் இடையில் தோன்றும் சமநிலைகளை நடுநிலை என்றெண்ணுகிறேன்.
மகாத்மாவின் தற்சார்புத்தரிசனங்களின் தேவை அளவுக்கே சுதந்திர இந்தியாவின் நவீன ஆலயங்களான அணைகளுக்கும் இடம் உண்டு.அதே சமயம் நவ காந்தியர்களின் கூற்றான அணை கட்டினால் ஆறு இறந்துவிடுகிறது என்பதையும் பேரணைகளால் விளைந்த சூழியல் நாசம் என்ற கோணத்தையும் மறுப்பதற்கு இல்லை. இங்கேதான் நீங்கள் உரையில் குறிப்பிட்ட நம்மாழ்வார் ஐயா போன்றவர்களின் ஓடும் தண்ணீரை நடக்க வைக்க வேண்டும் நடக்கும் தண்ணீரை நிற்க வைக்க வேண்டும் நிற்கும் நீரை நிலத்தினுள் இறங்க வைக்க வேண்டும் என்ற பார்வைகளுக்கான தேவைகள் எழுந்து வருகின்றன.
பாரதத்தின் பழைய வறுமை சற்றேறக்குறைய இப்போது இல்லை ஒரு சுற்று நிறைவுறும் தருணம் இது.தேவ சிற்பிகள் பெருக வேண்டிய காலமிது…நீங்கள் நெடுங்காலமாக வலியுறுத்தி வரும் தன்னறத்தையும் நான்கு வேடங்கள் சார்ந்த புரிதலையும் இன்று இங்கே இப்போது மகிழ்ந்து வாழ்வதற்கான தேவையையும் வழிகளையையும் மற்றும் ஒரு கோணத்தில் படைப்பூக்கத்தோடு பகிர்ந்து கொண்டதாகவும் இந்த உரைகளில் ஒரு தொடர்ச்சி இருப்பதையும் உணர்கிறேன்.
இந்த நிகழ்விற்கு வர விரும்பி வேலை நெருக்கடிகளின் காரணமாக வர முடியாத சகோதரி லோகமாதேவி அவர்கள் இதே தலைப்பில் உரை நிகழ்த்த இருப்பதாகவும் பதிவு செய்ய முடியுமா என்றும் கேட்டிருந்தார். கைவசம் இருந்த கைபேசியிலேயே உங்கள் உரையை பதிவு செய்து அவருக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்திருந்தேன். இணைப்பு
வெண்முரசு எழுதுவதற்கு முந்தைய ஜெயமோகனின் முள் சிறிது மயனின் பக்கம் சாய்ந்திருக்கும் தானே…
நன்றியுடன்
மு.கதிர் முருகன்
கோவை
மாடன் மோட்சம், மலையாளத்தில்
மாடன் மோட்சம் கதையை நானே மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்தேன். ஆகவே கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டு மலையாளத்திற்குரிய பகடிகளும், நுண்ணிய கேலிகளும் கலந்து எழுதினேன். அதை மலையாள மனோரமா நிறுவனத்தின் பாஷாபோஷிணி இதழின் ஆண்டுப்பதிப்புக்கு அனுப்பினேன். (அதில்தான் அறம் கதைகள் ஏறத்தாழ எல்லாமே வெளியாகியிருந்தன) ஆனால் அவர்கள் அதை வெளியிடவில்லை. ஏற்கனவே மதம் சார்ந்த கருத்துக்களுக்காக மனோரமா விவாதங்களுக்கு ஆளாகியுள்ளது, மீண்டும் ஒன்றை விரும்பவில்லை என்றனர். என் நண்பர் கே.சி.நாராயணன்தான் அப்படிச் சொல்லி திருப்பி அனுப்பியவர். ஆகவே அப்படியே தூக்கி வைத்துவிட்டேன்.
பெங்களூர் இலக்கியவிழாவில் பதிப்பாளர் ரவி.டி.சியைச் சந்தித்தேன். அவர் பாஷாபோஷினி ஆசிரியர் கே.சி.நாராயணன் இப்படி ஒரு கதை கையில் உள்ளது, அற்புதமான கதை என்றார்களே என்று என்னிடம் கேட்டார். கைப்பிரதியை தேடிப்பார்க்கிறேன் என்றேன். கைப்பிரதி கிடைத்தது, அனுப்பி வைத்தேன். அது இப்போது நாவல் ஆக வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இரண்டு படங்கள். முன்னுரை, பின்னுரை. மொத்தம் நூறு பக்கங்கள். நூற்றி முப்பது ரூபாய் விலை.தள்ளுபடி விலை 117 ரூபாய்.
’நாவல்’ வெளியாவதை ஒட்டி டி.சி. புக்ஸ் நிறுவனத்தின் மாத இதழான கரண்ட் புக்ஸ் புல்லட்டின் அட்டைப்படக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. புத்தகம் இதற்குள்ளாகவே ஆயிரம் பிரதிகளைக் கடந்து விற்றுக்கொண்டிருக்கிறது.
ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்-கடிதம்
அன்புள்ள ஜெ
பாலியகாலநினைவுகளை எழுதியிருக்கிறார் என்றுதான் ஆயிரத்தி முன்னூற்றிப் பதினான்கு கப்பல்கள் கதையை வாசித்தேன். எளிமையான சரளமான கதை. மிகவேகமாக வாசித்து முடித்தேன். ஆனால் கதை முழுக்க சாவு என்பதும், சாவின் வழியாக கண்டடையும் வாழ்வு என்பதும் கதை வாசித்து ஒருநாள் கழிந்து யோசிக்கையில் புரிந்தது. அப்படி ஒரு subtle ஆன படைப்பு. வாசகனை நம்பி இப்படி எழுதுவது இன்று குறைவு. இளமைப்பருவ இனிமை என்பது இட்லிப்பூவின் தேன்போல அவ்வளவு சின்ன இனிப்புதான் என்பது ஒரு பிரமிகவைக்கும் image. நான் அந்த இனிப்பை வாயில் வைத்திருக்கிறேன். இனிப்பா இல்லை நம் மனப்பிரமையா என்ற சந்தேகமே வரும். அழகான கதை. கதை என்பது முதலில் அழகாக இருக்கவேண்டும். அதை உணர்ந்தேன்
ரங்கராஜ் ஸ்ரீனிவாஸன்
ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்: அஜிதன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


