கி.ரா -100

கி.ராஜநாராயணன் – தமிழ் விக்கி

கி.ராஜநாராயணன் மறைவுக்குப் பின்னர் வரும் நூல்களைப் பார்க்கையில் ஓர் ஆற்றாமை ஏற்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இந்நூல்களை வெளியிட்டிருந்தால், அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தால், சற்று தொடர்புப்பணிகளைச் செய்திருந்தால் தமிழுக்கு இன்னொரு ஞானபீடம் கிடைத்திருக்கும். நாம் பெருமைகொள்ளும் ஞானபீடமாகவும் அது இருந்திருக்கும்.

ஆனால் எப்போதுமே இறந்தபின் கொண்டாடுவதே நம் வழக்கம். அது நமது தொன்மையான நீத்தார்வழிபாட்டின் மனநிலையின் நீட்சி. கி.ராவின் நினைவாக கதைசொல்லி இதழும் பொதிகை, பொருநை, கரிசல் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டிருக்கும் கி.ரா 100 நூல் (இரு தொகுதிகள்) அந்த ஆற்றாமையையே உருவாக்கியது.

மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட நூல். மொத்தம் 158 கட்டுரைகள் அடங்கியது. தமிழ்ச்சமூகத்தின் எல்லா பகுதியினரும் எழுதியிருக்கிறார்கள். இலக்கியவாதிகள், இதழாளர்கள், ஆய்வாளர்கள், அரசியலாளர்கள், நீதிபதி, நடிகர் என பலர். இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயிடு தலைமையில் நூல் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்புதான், ஆனால் இதையும் சில ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்கலாம்.

நூல் எனும் வகையில் இது ஒரு முக்கியமான தொகுப்பு. கி.ராவின் மீதான தமிழ்ச்சமூகத்தின் ஒட்டுமொத்தப்பார்வையே இதன் வழியாக அறியக்கிடைக்கிறது. எதிர்காலத்தில் கி.ரா மீதான பெரும்பாலான ஆய்வுகள் இந்நூலின் வழியாகவே நிகழவிருக்கின்றன என்று தெரிகிறது. திடவை பொன்னுசாமி, ப்ரியன், அருள்செல்வன், ஆகாசமூர்த்தி, இர.சாம்ராஜா, இளசை அருணா, கார்த்திகாதேவி, கவிமுகில் சுரேஷ் என நிறையபெயர்கள் எனக்கு எவரென்றே தெரியாதவர்கள் . உக்கிரபாண்டி, கோ.சந்தன மாரியம்மாள், கு.லிங்கமூர்த்தி என பல பெயர்கள் அசலான தெற்கத்திப் பெயர்களாகத் தோன்றுகின்றன.

இத்தனைபேர் கி.ரா பற்றி எழுதியிருப்பதும், இவர்களின் எழுத்துக்களை தேடித் தொகுத்திருப்பதும் உண்மையில் பெரும்பணி. பல கட்டுரைகள் மிக எளிய சமூகப்பார்வை அல்லது கல்வித்துறைப் பார்வை கொண்டவை. ஆனால் எந்த ஒரு கட்டுரையிலும் அதை எழுதியவருக்கு கி.ராவுடன் இருக்கும் அணுக்கமும், அவருக்கு கி.ரா அளித்ததென்ன என்பதும் இல்லாமலில்லை.

இந்நூலில் சில கட்டுரைகள் முக்கியமானவை. சூரங்குடி அ.முத்தானந்தம், பாரத தேவி, மு.சுயம்புலிங்கம் போன்றவர்களை நடை, கூறுமுறை, பார்வை ஆகியவற்றில் கி.ராவின் நேரடியான தொடர்ச்சிகள் என்றே சொல்லமுடியும். பாரததேவி கி.ராவுடன் நேரடியான அணுக்கமும் கொண்டிருந்தார். ’கி.ரா. எனக்கு எழுதிய கடிதங்களை நான் என் மேல்சட்டைப்பையில் வைத்திருப்பேன். அந்தக் கடிதங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்போ அப்போ எழுத்து நான் படிச்சிக்கிட்டே இருப்பேன். கிராவின் கடிதங்கள் படிக்கிறதுக்கு சொகம்மாயிருக்கு,. அவர் கடிதங்கள் இதயநோயாளியான மு.சுயம்புலிங்கத்தின் பலஹீனமான இதயத்தை இதமாய் தடவிக்கொடுக்கும்’ என்னும் சுயம்புலிங்கத்தின் வரிகளில் இருக்கும் நெருக்கமும் நெகிழ்வும் ஆழமானவை.

கி.ரா மீது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளை அமைப்பு ஒன்று விடுத்த தீண்டாமைக்கொடுமை வழக்கு அவரை அலையவைத்து சோர்வுள்ளாக்கியது. அவ்வழக்கில் கி.ராவின் இடத்தை சுட்டிக்காட்டி பெருமைப்படுத்திய நீதிபதி ஜிஆர். சுவாமிநாதனின் கட்டுரை இந்நூலில் உள்ளது. “வட்டாரவழக்கு என்று பெருந்தகைகளாலும், தமிழ்ப்பதாகைகளாலும் செம்மல்களாலும் அறிஞர்களாலும் அவதூறு செய்யப்பட்ட மக்கள் மொழி என்பது ஓரு மொழிக்கிடங்கு என்று எப்போதும் நிறுவியவர் கிரா’ என்று நாஞ்சில்நாடன் குறிப்பிடுகிறார். கி.ராவை அவர் பயன்படுத்திய சொற்கள் வழியாகவே அணுகும் சுவாரசியமான கட்டுரை அது.

இன்னும்கூட கட்டுரைகள் கேட்டு பெறப்பட்டிருக்கலாம். கமல்ஹாசன் கி.ரா மேல் பெரும் ஈடுபாடு கொண்டவர். அவரிடமிருந்து ஒரு நல்ல கட்டுரை பெற்றிருக்கலாம். கி.ராவின் நிலத்தைச் சேர்ந்தவரான வசந்தபாலனிடம் ஒரு கட்டுரை கேட்டிருக்கலாம். ஆனால் அப்படிப்பார்த்தால் அந்தப் பட்டியலுக்கு முடிவே இல்லை.

தமிழின் முதன்மைப்படைப்பாளி ஒருவரின் நினைவுக்கு ஆற்றப்பட்ட மிகப்பெரிய அஞ்சலி இந்நூல்.

கி.ரா.நூறு – தாய்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2023 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.