Jeyamohan's Blog, page 604

March 30, 2023

விடுதலை

விடுதலை திரைப்படம் இன்று (31 மார்ச் 2023) வெளியாகிறது. ஒரு வகையில் ஆச்சரியம். சென்ற 2022 செப்டெம்பர் 30 ல் பொன்னியின் செல்வன் முதல் பகுதி வெளியாகியது. அதற்கு 15 நாட்களுக்கு முன்பு வெந்து தணிந்தது காடு. இரண்டுமே நான் பணியாற்றிய படங்கள். முதல்படம் பற்றிய பதற்றம் செப்டெம்பர் முதல்வாரமே தொடங்கிவிட்டது. அது தணிந்து வெற்றியின் மகிழ்ச்சி நீடிப்பதற்குள் பொன்னியின் செல்வன் பற்றிய பதற்றம். ஒரு ரோலஸ்கோஸ்டர் மாதம் அது.

பொன்னியின் செல்வன் பற்றிய பதற்றம் கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருந்தது. ஏனென்றால் பொன்னியின் செல்வன் முதல் பகுதி உண்மையில் ஒரு இரண்டே முக்கால் மணி நேர டிரெயிலர்தான். கதாபாத்திரங்கள் கதைக்கரு இரண்டும் மட்டும்தான் அதில் அறிமுகமாகி இருந்தன. கதையே இல்லை. வந்தியத்தேவன் ராஷ்ட்ரகூட நாடு முதல் (நாவலில் உள்ளதுபோல காஞ்சியில் இருந்து அல்ல) தஞ்சை பழையாறை வழியாக இலங்கை வரை சென்று சினிமாவின் முதன்மைக் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துகொள்கிறான். அவ்வளவுதான் படத்தில் இருந்தது. கதாபாத்திரங்களின் குணங்கள் கோடிகாட்டப்பட்டிருந்தன. ஒரு சதிவேலை அறிமுகமாகியிருந்தது. கதையில் நகர்வே இல்லை.

கதை முழுக்க இரண்டாம் பகுதியில்தான். கதைத் திருப்பம்  ஆதித்த கரிகாலன் வழியாக. அதை நடித்தவர் விக்ரம். அப்படிப்பட்ட ஒரு பெரிய நடிகர் நடிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தை எளிதில் முடித்துவிட முடியாது. நீண்ட நாவல் ஒன்று சினிமாவுக்காகச் சுருக்கப்படும்போது ஏற்படும் தொடர்புச்சிக்கல்கள், நாவலிலேயே இருந்த ஏராளமான தொடர்ச்சியின்மைகள் ஆகியவற்றைச் சமாளிப்பதற்காக செய்யப்பட்ட திரைக்கதை உத்திகளும், இணைப்புகளும்தான் முதன்மையான பணிகளாக செய்யப்பட்டன.

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றி எடுத்தவர்களையே கொஞ்சம் திகைக்கச் செய்தது. அக்டோபர் இரண்டாம் வாரம்தான் பொன்னியின் செல்வன் காய்ச்சல் ஓய்ந்து அடுத்த வேலைக்கு நகரமுடிந்தது.

சென்ற ஆண்டு முழுக்கவே ஒரு வகை ஜ்வரவேகம்தான். ஜனவரியில் தமிழ் விக்கி அறிவிப்பு, பிப்ரவரி மார்ச் ஏப்ரல் எல்லாம் தமிழ்விக்கி தயாரிப்பு. மே மாதம் அமெரிக்காவில் தமிழ்விக்கி தொடக்கம் அதன் சவால்கள், அமெரிக்காவில் கிழக்குக் கரைமுதல் மேற்குக் கரை வரை பயணம், ஜூனில் குமரகுருபரன் விழா, ஜூலையில் குருபூஜை விழா, ஆகஸ்டில் தமிழ்விக்கி- தூரன் விழா, செப்டெம்பர் அக்டோபரில் சினிமா பதற்றம், அக்டோபரில் ஐரோப்பியப் பயணம், வந்ததுமே நவம்பரில் மலேசியப்பயணம், உடனே விஷ்ணுபுரம் விழா…

இம்முறையும் அதுவே நிகழ்கிறது. ஜனவரி முழுக்கச் சினிமா வேலைகள். பிப்ரவரியில் அருணாச்சலப்பிரதேசம். இதோ மார்ச்சில் இந்த இரு சினிமாக்கள்

மார்ச் 31 துணைவன் கதையின் விரிவாக்கமான விடுதலை. முப்பதுநாட்களுக்குள் பொன்னியின் செல்வன் 2. நான் அனேகமாக மே மாதம்தான் கொஞ்சம் நிலைக்கு வருவேன் என நினைக்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2023 11:35

வைக்கம் -மாபெரும் பிரச்சார இயந்திரம்

இன்றைய காந்தி வாங்க

உரையாடும் காந்தி வாங்க

அன்புள்ள ஜெ

பெரியாரின் வைக்கம் போராட்டப் பங்களிப்பு பற்றிய பிரச்சார இயந்திரம் மீண்டும் அதிவேகமாக இயங்க தொடங்கியிருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மை புரிகிறது. நேற்று இதை கண்டேன். “பெரியாரின் பங்களிப்பை மறுப்பவர்கள் (ஜெயமோகன்) தங்களது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள். வைக்கம் போராட்டத்திற்கு உயிரூட்டிய பெரியார்”

இந்தப்பிரச்சாரத்தை எதிர்கொள்ள போகிறீர்களா? அல்லது அவ்வளவுதானா?

ஆனந்த்ராஜ்

அன்புள்ள ஆனந்த் ராஜ்,

தமிழ்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ‘சித்தரிப்புகள்’ இவை. பாடநூல்களில் இப்படி எழுதி, கற்பிக்கப்பட்டிருந்தது. சுவரெழுத்துக்கள் தமிழகம் முழுக்க இப்படி எழுதப்பட்டன. பக்கம் பக்கமாக நூல்கள் இதே வரிகளுடன் எழுதப்பட்டன. மேடைப்பேச்சுகள் சொல்லவே வேண்டாம். இன்றும் இவ்வரிகளை நீங்கள் காணலாம்.

அ.  Periyar launched Vaikom Struggle

ஆ. வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையை ‘வாங்கிக்கொடுத்தவர்’ பெரியார்.

இ. வைக்கத்தில் ஆலய நுழைவுப்போராட்டத்தை நடத்த தலைவர்களே இல்லை. பெரியாரை அழைத்தார்கள். அவர் சென்று போராட்டத்தை நடத்தி வெற்றி வாங்கிக் கொடுத்தார்.

ஈ. வைக்கம் போராட்டத்தை தொடங்கி நடத்தி முடித்தமையால் அவர் வைக்கம் வீரர் என அங்கிருந்தோரால் புகழப்பட்டார்.

*

வைக்கம் போராட்டம் முழுக்க முழுக்க ஒரு காந்தியப்போராட்டம், காந்தியின் வழிகாட்டலில் காந்திய முறைப்படி நடந்த போராட்டம், காந்தியவாதிகள் நடத்திய போராட்டம் என்பது இவர்களால் சொல்லப்படவில்லை. அது காந்தியப்போராட்டம் என்று இன்றும்கூட இங்குள்ள பொதுமக்களில் பெரும்பாலும் எவருக்குமே தெரியாது.

வைக்கம் போராட்டம் என்பது டி.கே.மாதவன் என்னும் பெருந்தலைவரின் திட்டம். அவரால் தொடங்கப்பட்டது. அவரே காந்தியை உள்ளே கொண்டுவந்தவர். அவரே அதை நடத்தி முடித்தவர். வைக்கம் போராட்டத்தை வெற்றியுடன் முடித்தவர். அதன்பின் அதே போராட்டத்தை திருவார்ப்பு முதலிய ஆலயங்களில் முன்னெடுத்தவர். இச்செய்திகள் இங்கே சொல்லப்படவில்லை. அவர் பெயரையே இவர்களின் சித்தரிப்புகளில் காணமுடியாது.

வைக்கம் போராட்டத்தில் கேரளத்தின் மாபெரும் தலைவர்கள் கலந்துகொண்டு போராடினர், சிறை சென்றனர், அவர்களே புதிய கேரளத்தின் சிற்பிகளும் ஆயினர். அவர்களில் பின்னர் கம்யூனிஸ்டுகளாக மாறிய தலைவர்களும் உண்டு. பல நாளிதழ்களே அதற்காக தொடங்கப்பட்டன. வைக்கம் போராட்டத்தில் ‘தலைமைதாங்க ஆளில்லாமல்’ ஆகவில்லை. வைக்கம் போராட்டத்தின் அமைப்பே மாதக்கணக்கில் தொடர்ச்சியாக போராடுவதுதான். ஆகவே இங்கிருந்தும் பலர் செல்லவேண்டியிருந்தது. அந்த உண்மை இங்கே மறைக்கப்பட்டது.

தமிழகத்தில் வைக்கம் போராட்டத்தில் அன்று மிக முக்கியமான காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கோவை அய்யாமுத்து, எம்.வி.நாயுடு தேரூர் சிவன்பிள்ளை போன்றவர்கள் பலர் கலந்துகொண்டார்கள். அவர்களுடன் ஈ.வெ.ராவும் கலந்துகொண்டார். ஆனால் மற்றவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டன.

வைக்கம் போராட்டம் காந்தியின் செயல்திட்டம். அவர் சோதனை செய்து பார்த்த முதல் போராட்டம். அதன் வெற்றிக்குப்பின் அதை இந்தியா முழுக்க அவர் முன்னெடுத்தார். தமிழகத்திலும் முன்னெடுத்தார். அப்போராட்டங்களில் எதிலும் ஈ.வெ.ரா கலந்துகொள்ளவில்லை.

இந்த வரலாற்று மௌனத்திற்கு எதிராகவே நான் பேசநேர்ந்தது. என் நோக்கம் ஈ.வெ.ரா வை ‘உடைப்பது’ அல்ல. நான் எழுதியது காந்தி பற்றி, அவர் வைக்கம் போராட்டம் வழியாக எப்படி சத்தியாக்கிரக முறையை சோதனை செய்து பார்த்தார், எப்படி அதை விரித்தெடுத்தார் என்றுதான் நான் பேசினேன்.

அப்போது ’வைக்கம் போராட்டம் உண்மையில் ஈ.வெ.ரா தொடங்கி- நடத்தி -வென்ற போராட்டம் அல்லவா, காந்தி அதை எதிர்க்கத்தானே செய்தார்?’ என படித்தவர்களே என்னிடம் கேட்டனர். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வைக்கம் போராட்டம் உண்மையில் எப்படி நடந்தது என என விளக்கி எழுதினேன். அந்த விவாதத்தில் ஈ.வெ.ராவின் பங்களிப்பு உண்மையில் என்ன என்றும் சொன்னேன்.

என் இன்றைய காந்தி நூலில் இதைப்பற்றிய விரிவான கட்டுரை உள்ளது. அக்கட்டுரை இன்று வரை தரவுகளால் மறுக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. மாறாக அக்கட்டுரையின் தரவுகளுக்கு ஏற்ப இப்போது தங்கள் ஒற்றைவரிகளை கொஞ்சம் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் ‘பெரியாரியர்’. அதுவே நல்ல மாற்றம்தான்.

இன்றைய காந்தி நூலே காந்தி பற்றி தமிழகத்தில் சென்ற நூறாண்டுகளாக பரப்பப்பட்டுள்ள அவதூறுகள், திரிப்புகளை ஆதாரபூர்வமாகவும் வரலாற்றுப் பின்னணியிலும் ஒட்டுமொத்தப் பார்வையிலும் விளக்கி உண்மையை நிறுவுவதுதான். என் நோக்கம் அது மட்டுமே. நான் எந்த சிந்தனையாளருக்கும் ‘எதிரி’ அல்ல. என்னால் ஏற்கமுடியாதவர்களை தேவை என்றால் ஏன் ஏற்பதில்லை என்று சொல்வேன். எதிர்ப்பது என் வேலை அல்ல.

நூறுமுறை சொன்னதை திரும்பவும் சொல்கிறேன். ’ஈ.வெ.ரா வைக்கம் போராட்டத்தை தொடங்கவில்லை, நடத்தவில்லை, முடிக்கவில்லை. அதில் பங்கெடுத்தார், அவ்வளவுதான். அது காந்தியப் போராட்டம்’

இதை ’பெரியாருக்கும் வைக்கத்திற்கும் தொடர்பில்லை என ஜெயமோகன் அவதூறு செய்கிறார். இதோ அவர் பங்கெடுத்தமைக்கான ஆதாரங்கள்’ என திரித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பலமுனைகளில் உச்சகட்ட பிரச்சாரம் செய்கிறார்கள். பெரியாரின் பங்களிப்பே மறுக்கப்படுவதாகவும், இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும், அவருடைய பங்களிப்பை இவர்கள் நிறுவுவதாகவும் சொல்கிறார்கள்

பிரச்சார இயந்திரம் அப்படித்தான் செயல்படும். அது எளிமையான பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி நிறுவும். அது விரிவாகவும், வரலாற்றுப்புலத்தில் வைத்தும் மறுக்கப்படும்போது அந்த மறுப்பையே எளிமையாக ஆக்கி எடுத்துக்கொண்டு மீண்டும் கூச்சலிட ஆரம்பிக்கும்.

நல்லது, இப்போது அரை இஞ்ச் முன்னகர்ந்திருக்கிறார்கள். அது காந்தியப் போராட்டம்தான் என்றும், அதில் டி.கே.மாதவனே முதன்மை ஆளுமை என்றும், வேறு பலரும் கலந்துகொண்டனர் என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். பிரச்சார இயந்திரம் கொஞ்சம் உண்மையை முனகலாகவேனும் சொல்ல ஆரம்பித்துள்ளது. இந்த அளவுக்கு அதை நகர்த்த முடிந்ததே ஒரு வாழ்நாள் சாதனைதான். வரலாற்றுப்பங்களிப்புதான். நாராயணகுருவின் பேரியக்கத்தைச் சேர்ந்தவன் என்றவகையில், நித்ய சைதன்ய யதியின் மாணவன் என்றவகையில், டி.கே.மாதவன் எனும் வைக்கம் வீரரை தமிழில் பேசப்படச் செய்துவிட்டேன். என் ஆசிரியருக்கான கடமை நிறைவுற்றது.

இந்த ஆண்டுக்குள் வைக்கம் போராட்டம் பற்றிய முழுமையான வரலாற்றுச் சித்திரம் ஒன்றை எழுதிவிடுகிறேன். அது உண்மையின் சித்திரமாக இங்கே இருக்கும். ஆனாலும் பிரச்சார இயந்திரம் இங்கே பெருமுழக்கமிட்டபடியேதான் இருக்கும். (உண்மைகளுக்கு இத்தகைய மாபெரும் பிரச்சரா இயந்திரங்கள் தேவை இல்லை. ஆத்மார்த்தமான குரல்களாலேயே அது வாழும்) . இந்த இயந்திரத்துடன் அறிவுத்தரப்பு போரிடவும் இயலாது. நான் பேசுவது வாசிப்பவர்கள், உண்மையை அறிய முனைபவர்கள் அடங்கிய ஒரு சிறு திரளுடன் மட்டுமே.

ஜெ

வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள் வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு வைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள் திராவிட இயக்கம், தலித்தியம் ஐயன்காளியும் வைக்கமும் வைக்கம் மன்னத்து பத்மநாபன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2023 11:34

எம்.வி.வெங்கட்ராம் 

எம்.வி.வெங்கட்ராம் ஒருவகையில் அதிருஷ்டசாலி. மணிக்கொடி ஆசிரியர்களில் இளையவர், நீண்டகாலம் வாழவும் வாய்த்தது.ஆகவே தமிழிலக்கியத்தில் தொண்ணூறுகளில் உருவான மறுமலர்ச்சிக்காலத்தில் மீண்டும் கண்டடையப்பட்டார். அவரை மீட்டுக்கொண்டு வந்து நிறுத்தியவர் தஞ்சை பிரகாஷ். நிலைநாட்டியவர் ரவி சுப்ரமணியன். கடைசிக்காலத்தில் இலக்கிய அங்கீகாரம் பெற்றார். மணிக்கொடி ஆசிரியர்களில் அவர் ஒருவருக்கே அவ்வகையில் ஏதேனும் ஒரு அங்கீகாரம் அமைந்தது

எம்.வி.வெங்கட்ராம் எம்.வி.வெங்கட்ராம் எம்.வி.வெங்கட்ராம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2023 11:34

குறள் உரை, கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்,

முதல்முறையாக தாங்கள் ஆற்றிய “குறளினிது” உரைகளை கேட்டேன்

பல குறளுக்கு தங்களின் பொருள்படுத்தலும் அதற்கான வாழ்க்கை அனுபவங்களையும் சேர்த்து நிகழ்த்திய உரை எனக்கு புதிய திறப்பாக இருந்தது .எனக்கு திருக்குறள் மேல் மிகப்பெரிய காதலும் ஈடுபாடும் சிறுவயது முதலே உண்டு .தற்போது அதற்கு பலர் எழுதிய உரைகளை சேகரித்து வருகிறேன்.  தமிழின் எல்லா கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கும் குறளுக்கு உரையெழுதும் ஆசை இருக்கும்

அப்படி தங்களுக்கு திருக்குறளுக்கு உரையெழுதும் விருப்பம் இருக்கிறதா ?இருந்தால் எப்போது தங்களின் குறள் உரை நூலை எதிர்பார்க்கலாம் ?இதை என் சிறிய வேண்டுகோளாகவும் இதை தாங்கள் எடுத்து கொள்ளலாம் .

குறளுரையில் ஓரிடத்தில் நீங்கள் சொன்னது போல் “சிந்திக்கும் தமிழரின் வாழ்க்கை என்பது வாழ்நாள் முழுக்கதிருக்குறளை திரும்ப திரும்ப கண்டடைவது தான்”

எவ்வளவு சத்திய வார்த்தைகள் என்று நினைத்து பார்க்கிறேன் உடல் சிலிர்த்து வியந்து கொண்டே இருக்கிறது .

மிக்க நன்றி

அன்புடன்,

மதன்குமார் .

அன்புள்ள ஜெ

திருக்குறள் பற்றிய உங்கள் உரைகளை கேட்டு முடித்தபோது மெய்ஞான நூல்களை எவ்வளவு எளிமையாக சுருக்கி புரிந்துகொள்கிறோம் என்ற திகைப்பை அடைந்தேன். குறளை நாம் எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ள இரண்டு காரணங்கள்தான். ஒன்று, அன்றாடம். இன்னொன்று அரசியல். இரண்டு கோணங்களில் நமக்கு எது தெரியுமோ அதுதான் குறளிலும் உள்ளது என்று முடிவுகட்டிவிடுகிறோம். உங்கள் உரை குறளை மீட்டு அளிக்கிறது.

மா. செல்வக்கணபதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2023 11:30

குமரியும் குலதெய்வமும், கடிதம்

குமரித்துறைவி வாங்க

குமரித்துறைவி மின்னூல் வாங்க

பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

புத்தகக் கண்காட்சியில் தங்களிடம் பெற்றுக் கொண்ட குமரித்துறைவியை முதலில் அம்மா தான் வாசித்தார்கள். சில நாட்களாய் அவரை சலனப்படுத்திக் கொண்டிருந்த ஒரு சிறு மனச்சஞ்சலிருந்து மீண்டு புன்னகையும் தெளிவும் பெற்றார். “நீ எப்ப படிக்கப்போற”  “படிச்சிட்டியா” என்று என்னைக் கேட்டு சலித்து மறந்தும் விட்டார்.  நான் சென்ற வாரம் படித்து முடித்து அம்மாவிடம் பேசினேன். உவகையும் நிறைவும் தவிர பேசவும் பகிரவும் சொற்களின்றி மகிழ்ந்தோம்.

இரண்டு நாட்கள் கழித்து குலதெய்வம் கோவில் பயணம். ஐந்து தலைமுறையாக அறியாமல் என் அண்ணனின் தீவிர முயற்சியால் கண்டுபிடித்து கடந்த ஆறு வருடங்களாக போய் வந்து கொண்டிருக்கிறோம். கமுதி ஶ்ரீவீரமாகாளி அம்மன். குமரித்துறைவி வாசிப்புக்குப் பின் தெய்வத்தை தரிசிப்பதில் எவ்வளவு மாற்றம்! வேண்டுதல் முறையீடு குறைபாடு எதுவும் இல்லை. உற்சவம் முழுக்க என் இரு மகள்களையும் அள்ளி அணைத்துக் கொஞ்சிக் கொண்டே இருந்தேன்.

விளக்குப் பூஜை, அர்ச்சனை என்று இரண்டு நாட்களாக பல தேங்காய்கள் சேர்ந்து விடும். வீடு திரும்பியதும் அம்மா அதில் மிட்டாய் செய்தார்கள். தேங்காய் மிட்டாயுடன் சேர்த்து குமரித்துறைவியை என் அக்காவிற்கு கூரியரில் அனுப்பியுள்ளேன் :)

நன்றி

மதன் ஜெகநாதன்

பி.கு: இக்டிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது நண்பன் ஒருவன் என்னுடைய முதல் கடிதம் குறும்படங்களுடன் உங்கள் வலைத்தளத்தில் பகிரப்பட்டிருந்த செய்தியை அனுப்பியிருந்தான். பெரும் மகிழ்ச்சி. உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதில்  ‘நி.ச.ரி.ஸ’ என்ற குறும்படத்திற்கும் குமரித்துறைவிக்கும் உண்டான சிறு துளி ஒற்றுமையை பேச எண்ணியிருந்தேன்.

இரு குறும்படங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2023 11:30

March 29, 2023

மதுரை நாடு – ஓர் ஆவணப்பதிவு

 

[The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989]

இந்தியாவில் நேரடியாக ஆங்கில ஆட்சி வேரூன்றிய நாட்களில் ஆங்கில அதிகாரிகள் இந்திய நிலவியல் சமூக பொருளியல் சூழலைப் புரிந்துகொள்ள கடுமையான முயற்சிகள் எடுத்தனர். அவற்றை முறையாகப்பதிவுசெய்து அடுத்து வருபவர்களுக்காக விட்டுச்சென்றனர். அடுத்த கட்டத்தில் இப்பதிவுகளை தொகுத்து ஆவண நூல்களாக [manual] மாற்றும் பணியை அதிகாரிகள் செய்தனர். இப்பதிவுகள் இன்று பதினாறு, பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டு இந்திய இந்திய அரசியலைப் புரிந்துகொள்வதற்கு உதவும் முதன்மையான ஆதாரங்களாக உள்ளன. இவை அவர்கள் தங்களுக்குள் எழுதிக்கொண்டவை ஆதலால் பொதுவாக பிரச்சார நோக்கமற்ற நேர்மையான பதிவுகளாக உள்ளன.

இப்பதிவுகளை செய்த இவ்வதிகாரிகள் முறையான வரலாற்றுக் கல்வியும் மொழிப்பயிற்சியும் கொண்டவர்கள். அவர்களுக்கு தகவல்களை சேர்க்கவும் தொகுக்கவும் பெருமளவில் குமாஸ்தா மற்றும் உதவியாளர் உதவிகளும் அரசாங்க ஆவணங்களை நேரில் பார்வையிடும் வசதிகளும் இருந்தன. அனைத்துக்கும் மேலாக இவர்களுக்கு லத்தீன் தெரிந்திருந்தமையாலும் பிரெஞ்சு, போர்ச்சுக்கல், ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகள் கையெட்டும் தொலைவில் இருந்தமையாலும் இவர்களுடைய வரலாற்று நூல்கள் சாதாரணமாக தமிழில் வளவளவென்றும் மிகைப்படுத்தியும் பக்கச்சார்புகளுடனும் எழுதப்படும் வரலாற்று நூல்களைப் போல அல்லாமல் செறிவான மொழியில் நுட்பமான தகவல்களுடன் அமைந்துள்ளன.

மதுரை ஆட்சியராக இருந்த ஜெ.எச்.நெல்சன் [ஜேம்ஸ் ஹென்றி நெல்சன்] 1868-ல் எழுதி வெளியிட்ட மதுரை நாடு- ஆவணப்பதிவு என்ற நூல் இன்றுவரை மதுரையை அறிவதற்கான முதன்மை ஆதாரத்தொகுப்பாக உள்ளது. இதன் ஆசிரியரான நெல்சன் சென்னை ஆட்சப்பணியில் பணியற்றியவர். [எஸ்குயர் ஆ·ப் மெட்றாஸ் சிவில் செர்வீஸஸ்] கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியில் பெல்லோ ஆக இருந்தவர். இந்நூல் ஐந்து பாகங்களாக ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்டது.

முதல் பாகத்தின் முதல் அத்தியாயம் மதுரையின் நில அமைப்பு சார்ந்த தகவல்களை விரிவாகச் சொல்கிறது. இரண்டாவது அத்தியாயம் மதுரை பகுதியின் கனிவளம் குறித்தது. மூன்றாம் அத்தியாயம் தட்பவெப்ப பதிவு மற்றும் மழையளவு குறித்தது. நான்காம் அத்தியாயம் மதுரை பகுதியின் சுகாதாரச் சிக்கல்கள் கொள்ளை நோய்கள் மற்றும் மருத்துவப் பிரச்சினைகள் சாந்தது.

இரண்டாம் பாகம் மதுரை பகுதி மக்கள் இனங்கள், சாதிகள், தாவரங்கள், மிருகங்கள் குறித்தது. முதல் அத்தியாயம் பொதுவாக சாதிகளைப்பற்றி பேசிவிட்டு இரண்டாம் அத்தியாயத்தில் வேளாளர் முதலிய வேளாண் சாதிகளைப்பற்றியும் மூன்றாம் அத்தியாயத்தில் செட்டி முதலிய வணிக சாதிகளைப்பற்றியும் நான்காம் அத்தியாயத்தில் வடுகர்கள் முதலிய குடியேற்ற சாதிகளைப்பற்றியும் ஐந்தாம் அத்தியாயத்தில் மிருகங்களைப்பற்றியும் ஆறாம் அத்தியாயத்தில் செடிகொடிகளைப்பற்றியும் விரிவாக பேசுகிறார் நெல்சன்

மூன்றாம் பாகம் மதுரைபகுதியின் அரசியல் வரலாறு குறித்தது. முதல் அத்தியாயம் பண்டைய பாண்டியர்களைப் பற்றி பேச ஆரம்பிக்கிறது. இரண்டாம் அத்தியாயம் கூன்பாண்டியனுக்கு பிறகு உருவான அரசியல் நிலைமைகளைப் பற்றிய விவரணையுடன் தொடங்குகிறது. மூன்றாம் அத்தியாயம் நாயக்கர் காலத்தை விசுவநாத நாயக்கரில் இருந்து தொடங்கி விரிவாகப் பேசுகிறது. நான்காம் அத்தியாயம் மூன்றாம் விசுவநாத நாயக்கரின் ஆட்சி குறித்தது. ஐந்து ஆறு ஏழாம் அத்தியாயம் ‘மாபெரும்’ திருமலை நாயக்க மன்னனைப் பற்றியது. எட்டாம் அத்தியாயம் திருமலை மன்னரின் மறைவுக்குப்பின் 1682 வரையிலான நாயக்க ஆட்சியைப் பற்றியது. தொடர்ந்த ஒன்பது பத்து பதினொன்றாம் அத்தியாயங்களில் தன் காலம் வரையிலான மதுரைப் பகுதியின் அரசியலை நுட்பமான தகவல்களுடன் சொல்கிறார் நெல்சன்.

நாலாம் பகுதி மதுரை நாட்டின் பொருளியல் வரலாறாகும். இதில் முந்தைய ஆட்சியாளர்களின் குறிப்புகளையும் கிழக்கிந்திய கம்பெனிப் பதிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு வரிவசூல், பாசனம், வரட்சி, வணிகச் சிக்கல்கள் குறித்த விரிவான தரவுகளை நெல்சன் அளிக்கிறார். ஐந்தாம் பகுதி உதிரி தலைப்புகளினால் ஆனது. கல்வி நிர்வாகம் குறித்த தரவுகள் இதில் உள்ளன. ஏராளமான அட்டவணைகளும் அக்கால நில அளவை வரைபடமும் உள்ளது.

*

நெல்சனின் நூலின் மிக முக்கியமான சிறப்பியல்பு இதன் ஆங்கில நடையாகும். வழக்கமான ஆவணப்பதிவுகள் மிக சம்பிரதாயமான நடையில் சலிப்பூட்டும்படி இருக்கும். நெல்சனின் நடை தேர்ந்த புனைவெழுத்தாளனுக்கு உரியதுபோல் இருப்பதனால் இந்த நூலை பல பகுதிகளில் நிறுத்த முடியாத ஆர்வத்துடன் படிக்க வேண்டியிருக்கும். ஒரு தகவலுக்காக இதை புரட்ட ஆரம்பித்து பலநூறு பக்கங்களுக்கு படித்துச் செல்வது என்னைப் போலவே பலருக்கும் நிகழலாம்.

சாதாரணமாக ஆவண நூல்களில் நூலாசிரியரின் தனிப்பட்ட ஆளுமை சார்ந்த மதிப்பீடுகள் இருப்பதில்லை. ஆனால் இந்நூலில் நெல்சன் தனிப்பட்ட குரல் ஒலிக்கவே பேசுகிறார். நூலின் ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மைக்கு இது ஒரு காரணம். Stupid போன்ற பதங்களும் நகைச்சுவை கொண்ட அவதானிப்புகளும் சாதாரணமாக வருகின்றன. ‘சாளரங்கள் குறித்த உயர்வான அபிப்பிராயம் இந்திய கட்டிட வல்லுநர்களிடம் இல்லை’ போன்ற வரிகள் புன்னகைக்க வைப்பவை.

இதில் இரண்டு தளங்கள் உள்ளன. ஒன்று நெல்சனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இயல்பாக நூலில் கலந்துள்ளன. அக்கால இந்திய நகைகளை ‘அழகோ நுட்பமோ இல்லாத உலோகப்பொருட்கள்’ என்று அவர் சொல்கிறார். கட்டிட அமைப்புகளை ‘காற்றும் வெளிச்சமும் இல்லாத அழகு நோக்குடன் கட்டப்படாத அமைப்புகள்’ என்கிறார். அதேசமயம் இதில் அளிக்கப்படும் தகவல்களுக்கு அவர் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார். ஏசுசபை பாதிரியார்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டும்போது கூட தனிப்பட்ட முறையில் அதை உறுதிசெய்துகொள்ள முயல்கிறார்.

இப்போது அரசு வெளியிடும் ஆவணப்பதிவுகள் பலரால் பல சமயங்களில் எழுதப்பட்டவற்றின் தொகுதிகளாக உள்ளன. ஆகவே அவற்றை நூலாக கொள்ள முடியாது. ஆவணத்தொகைகளாக மட்டுமே அவை இருக்கும். பல பகுதிகள் தேவையில்லாத நீட்டலுடன் இருக்க பல பகுதிகள் உரிய தகவல்கள் கூட இல்லாமல் சுருங்கிக் கிடக்கும். கடந்த முப்பதுவருடங்களாக தமிழ்நாட்டில் இத்தகைய ஆவணப்பதிவுகளை அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சார சாதனமாக மாற்றி பொய்யான மிகைப்படுத்திய தகவல்களை குவித்து வைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் மேலோங்கியிருக்கிறது. இன்றைய அரசு ஆவண வெளியீடுகள் பாதியளவே நம்பத்தக்கவை என்று ஆய்வாளர்கள் சொல்லியதை நினைவுகூர்கிறேன். நெல்சனின் நூல் தனிப்பட்ட குரலாக ஒலிப்பதனால் நம்பகத்தன்மைடன் வாசிப்பு சுவையும் கொண்டதாக உள்ளது.

நெல்சனின் நடையின் சிறப்பியல்பே சரசரவென வரும் அவரது தனிப்பட்ட அவதானிப்புகள்தான். ”போலிப்பாவனை கொண்ட பிராமணன் [Pharisaical] சட்டங்களே இல்லாத மறவன், கஞ்சத்தனமான செட்டி, சுயநலவாதியான வெள்ளாளன், மந்தமான நாயக்கன், தந்திரமாய் பதுங்கும் கள்ளன் [skulking] நிலைகொள்ளாத குறவன், கூறுகெட்ட பறையன் [licentious] ஆகியவையே கூரிய அவதானிப்பின் மூலம் தெளிவாக பிரித்தறியத்தக்க இச்சாதிகளின் உள்ளார்ந்த இயல்புகள்” [பாகம் I, பக்கம் 16] என்று அவர் எழுதிச்செல்லும்போது அதில் அன்றைய ஆதிக்கவாதியின் பார்வை தெரியும் அதே நேரத்தில் தனிப்பட்ட அவதானிப்பு மூலம் உருவாகும் செறிவான மொழியையும் காணலாம்.

மிகச்சிறந்த சித்தரிப்பாளராக நெல்சன் இந்நூலில் வெளிபடுகிறார். நாயக்கராட்சிக்காலத்து ஆட்சிக்குழப்பங்களை மிகத்துல்லியமாக நாவல் போல சித்தரித்துக் காட்டுகிறார். 1910ல் ராமநாதபுரத்தில் வந்த பஞ்சமும் அதன் காட்சிகளும் பிரமிக்க வைப்பவை. அதைத் தொடர்ந்து வந்த கனமழை, ஒருநாள் அம்மழை விட்டு உருவான ஆழ்ந்த அமைதி, அதன் பின் அடித்த மாபெரும் புயல், அதில் கிராமங்கள் அழிந்தது, ஒவ்வொரு கண்மாயாக நிறைந்து உடைத்து அடுத்ததை உடைக்கப் புறப்பட்டது போன்ற காட்சிகள் மனக்கிளர்ச்சி ஊட்டுபவை. அதேபோல கிழவன் சேதுபதியின் நாற்பத்தேழு மனைவிகளும் அவரது சிதையிலேயே எரிக்கப்பட்ட காட்சி அரண்டுபோகச்செய்வது.

நெல்சனின் நூலின் வரலாற்றுப் பகுதியே மேலும் முக்கியமானது. அதில் பாண்டியர் வரலாறு இன்று மேலும் தகவல்களுடன் மிக விரிவாகப் பேசப்பட்டு விட்டது. ஆனால் நாயக்கர் காலச் சிக்கல்களைப் பற்றிய அவரது சித்தரிப்பு இன்றும் மிக முக்கியமான கவனத்துக்கு உரியது. சத்தியநாத அய்யரின் ‘மதுரைநாயக்கர் வரலாறு’ போன்ற புகழ் மிக்க நூல்களுக்கு அடித்தளமாக அமைந்த நூல் இதுவே.

தட்பவெப்ப நிலைப்பதிவுகளும் பொதுவாசகனுக்கு ஆர்வம் தருபவை. ஏறத்தாழ பத்துவருட சீரான இடைவெளியில் மதுரையில் பஞ்சமும் வரட்சியும் உடனே மீண்டும் புயலும் வந்தபடி இருப்பதைக் காணலாம்.

சாதிகளை இனங்களாக கண்டு உடற்கூறுகளை பதிவுசெய்ய ஆங்கிலேயர் எடுத்த முயற்சி [சென்ற இடமெங்கும் ஐரோப்பியர் இதைச் செய்திருக்கிறார்கள். பொதுமைப்படுத்தல் அவர்களுடைய சிந்தனையில் ஊறியது. அதையே முன்னர் காட்டிய மேற்கோளில் கண்டோம். இதன் விளைவுகளை ‘ரவாண்டா ஹோட்டல்’ என்ற திரைப்படத்தில் பார்கலாம்] இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகமும் ஏசு சபை பாதிரியார்களின் கடிதங்களைச் சார்ந்து எழுதப்பட்ட இந்நூலில் அப்பகுதிகள் மொழிபெயர்க்கப்படாமலேயே கொடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு முக்கியமான குறை. மெல்லிதாக வெளிப்படும் மதக்காழ்ப்பு இன்னொரு குறை. உதாரணமாக இந்துக்கள் தங்கள் குருநாதர்களின் [பிராமணர்கள்] மலத்தையும் சிறுநீரையும் புனித நாட்களில் சாப்பிடுகிறார்கள் என்பது போன்ற தகவல்களை பாதிரிமார் சொல்ல நம்பி எழுதிவைத்திருக்கிறார் நெல்சன்.

ஆனாலும் நம்மை நாமே அறிய உதவும் நுட்பமான தகவல்களின் பெரும் தொகுப்பு இந்த நூல்.

மதுரா கண்ட்ரி மானுவல் – இணையநூலகம்

முதற்பதிவு /மறுபிரசுரம் Jul 5, 2007

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2023 11:35

காதல், காமம் -ஓர் உரையாடல்

நன்றி https://www.ideelart.com/magazine/pai...

என் தளத்தில் அவ்வப்போது தனிப்பட்ட கடிதங்கள் வெளியாவதுண்டு. பலசமயம் அவை சமூக – உளவியல் ஆலோசனைகளாக இருக்கும். தன்வெளிப்பாடுகளாகவும் இருப்பதுண்டு. அவற்றுக்கு நான் அளிக்கும் பதில்கள் ஒரு பொதுவிவேகம் சார்ந்தவையாகவே இருக்கும்.

பல நண்பர்கள் இந்தத் தளத்தில் அவற்றுக்கான இடம் என்ன என்று என்னிடம் கேட்பார்கள். இது இலக்கியம், தத்துவம் ஆகியவற்றுக்கான தளம் அல்லவா என்பார்கள். உண்மை. ஆனால் இந்த உரையாடல்கள் எனக்கு தேவையாகின்றன. தொடர்ச்சியாக நான் சமூகத்தின் வெவ்வேறு களங்களைச் சார்ந்த வெவ்வேறு மனிதர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை தமிழில் வேறெந்த எழுத்தாளரும் இந்த அளவுக்கு ஒரு தொடர் உரையாடலில் இல்லை.

இந்த உரையாடல்களின் வழியாகவே இவற்றிலுள்ள உண்மையான உணர்வுகளை என்னால் தொட்டெடுக்க முடிகிறது. இந்த தளத்தில் என்னென்ன விசித்திரமான வாழ்க்கைகள் பதிவாகியிருக்கின்றன, அன்றாட எளிய வாழ்க்கையில் உருவாகும் சிறு சிக்கல்கள் எவ்வளவு பதிவாகியிருக்கின்றன என்பது ஆச்சரியமளிப்பது. ஒருவகையில் இந்த தளத்தின் உயிர்த்துடிப்பை இவை நிலைநாட்டுகின்றன, இதை ஒரு சமூக உரையாடற்களமாக நிலைநிறுத்துகின்றன என நினைக்கிறேன்.

அண்மையில் ஓர் உரையாடல்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களே ,

என் பெயர் –. உங்களின் தீவிர வாசகன். என் சொந்த வாழ்வில் ஒரு ஐயம் உள்ளது.

நான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண், இதற்கு முன் ஒருவரை காதலித்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளும் முன் என்னிடம் அதை சொல்லி விட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் எனக்கு வெறும் எழுத்தாளர் அல்ல நான் வழிபடும் குரு. பெரும் குழப்பத்தில் இருக்கிறேன். சத்திய வார்த்தையை கேட்க விழைகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்.

அன்புடன்

அன்புள்ள நண்பருக்கு

இந்தக்காலகட்டத்திலும் இப்படி குழப்பங்கள் வருமா என எனக்கு திகைப்பாக இருந்தது. ஆனால் இரண்டு இளம் நண்பர்களிடம் பொதுவாகப் பேசினேன். அவர்கள் உண்மையில் இன்றைய இளைஞர்களுக்கு இந்த குழப்பமும் கேள்வியும் இருப்பதாகச் சொன்னார்கள். நம் பண்டைய உளத்தடைகள் எளிதில் அகல்வதில்லை.

நீங்கள் சொல்லியிருப்பது ஒரு விஷயமே அல்ல. அதைப்பற்றி ஐந்து நிமிடங்களுக்குமேல் யோசிப்பதே அபத்தமானது. இது பழைய காலம் அல்ல. இன்று ஆணோ பெண்ணோ திருமணம் செய்துகொள்ள பல ஆண்டுகளாகின்றன. அதுவரை காதல் என ஒன்று உருவாகாமலிருக்குமா என்ன? மனதளவிலாவது? உறவும் பிரிவும் நிகழ்ந்திருந்தால் அது மிக இயல்பே. அதை எவரும் பொருட்படுத்தவேண்டியதில்லை.

அந்த முந்தைய காதல் முழுமையாக அகன்று பழங்கதையாக ஆகிவிட்டிருந்தால் அது எவ்வகையிலும் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை அல்ல. அதைப்பற்றி முழுமையாகவே இருவரும் மறப்பதும், அதை எந்நிலையிலும் நினைவுகூராமலிருப்பதும், பேசிக்கொள்ளாமலிருப்பதுமே முக்கியமானது. இதையெல்லாம் எல்லா நாளிதழ் குடும்ப ஆலோசனைப் பகுதிகளிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மேலதிகமாக ஒரு சொல் என்னிடம் கேட்கிறீர்கள், நல்லது. அதைச் சொல்லிவிட்டேன்.

ஜெ

சார்,

எனக்கு அந்த பெண் முன்பு காதலித்தது எந்த பிரச்சினையும் இல்லை எனக்கிருக்கும் ஒரே சந்தேகம், இந்த விஷயம் எங்களை இயல்புநிலையில் இல்லாமல் ஆக்கிவிடுமோ என்ற பயம் மட்டும்தான்.

இரண்டு பேரின் வாழ்வும் இதனால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம்தான். எனக்கு இதனை கண்ட்ரோல் செய்யும் அளவு மென்டல் மெச்சூரிட்டி உண்டா என்பதை அறிய முடியவில்லை.

என் மனம் ஏதாவது ஒன்றில் இறுக்கி பிடித்து கொண்டே உழன்று கொண்டே இருக்கும். என்னால் இதனை சரியாக ஹேண்டில் பண்ண முடியுமா என்பது சந்தேகம் தான். நான் உங்களிடம் கேட்பது ஒரு வகையில் என்னிடமே கேட்பது போலத்தான்

அன்புடன்

_

அன்புள்ள —

புரிகிறது. அதற்குத்தான் பதில் சொன்னேன். இது ஒரு விஷயமே இல்லை. அந்த விஷயத்தைப் பற்றி பேசாமலிருந்தாலே போதுமானது. கொஞ்சம் கொஞ்சமாக அது பின்னகர்ந்துவிடும். திருமணத்திற்கு முன்பு சிலநாட்களுக்கு இது ஒரு சிக்கலாக இருக்கும். அப்படி தோன்றும். திருமணத்திற்குப்பின் அதைப்பற்றி பேசாவிட்டால் அது மறைந்துவிடும்.

திருமணத்திற்குப்பின் காமம், அந்த பெண்ணின் ஆளுமை பற்றிய உங்கள் ஈர்ப்பு ஆகியவை மேலோங்கும். ஓரிரு ஆண்டுகளில் மனைவி கூட முக்கியமில்லை, குழந்தைகளே முக்கியமாக இருக்கும். எஞ்சிய வாழ்க்கை முழுக்க அப்படித்தான்.

திருமண வாழ்க்கையில் காமம், ஆண்பெண் உறவு என்பது 10 சதவீதம்தான். எஞ்சியதெல்லாமே குழந்தைகள்தான். நீங்கள் மனைவி கருத்தரித்ததுமே குழந்தை மேல் பித்து ஆகிவிடுவீர்கள். அப்போது தெரியும், இதெல்லாம் எவ்வளவு சின்ன விஷயம் என்று.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2023 11:34

காதல்,காமம் -ஓர் உரையாடல்

நன்றி https://www.ideelart.com/magazine/pai...

என் தளத்தில் அவ்வப்போது தனிப்பட்ட கடிதங்கள் வெளியாவதுண்டு. பலசமயம் அவை சமூக – உளவியல் ஆலோசனைகளாக இருக்கும். தன்வெளிப்பாடுகளாகவும் இருப்பதுண்டு. அவற்றுக்கு நான் அளிக்கும் பதில்கள் ஒரு பொதுவிவேகம் சார்ந்தவையாகவே இருக்கும்.

பல நண்பர்கள் இந்தத் தளத்தில் அவற்றுக்கான இடம் என்ன என்று என்னிடம் கேட்பார்கள். இது இலக்கியம், தத்துவம் ஆகியவற்றுக்கான தளம் அல்லவா என்பார்கள். உண்மை. ஆனால் இந்த உரையாடல்கள் எனக்கு தேவையாகின்றன. தொடர்ச்சியாக நான் சமூகத்தின் வெவ்வேறு களங்களைச் சார்ந்த வெவ்வேறு மனிதர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை தமிழில் வேறெந்த எழுத்தாளரும் இந்த அளவுக்கு ஒரு தொடர் உரையாடலில் இல்லை.

இந்த உரையாடல்களின் வழியாகவே இவற்றிலுள்ள உண்மையான உணர்வுகளை என்னால் தொட்டெடுக்க முடிகிறது. இந்த தளத்தில் என்னென்ன விசித்திரமான வாழ்க்கைகள் பதிவாகியிருக்கின்றன, அன்றாட எளிய வாழ்க்கையில் உருவாகும் சிறு சிக்கல்கள் எவ்வளவு பதிவாகியிருக்கின்றன என்பது ஆச்சரியமளிப்பது. ஒருவகையில் இந்த தளத்தின் உயிர்த்துடிப்பை இவை நிலைநாட்டுகின்றன, இதை ஒரு சமூக உரையாடற்களமாக நிலைநிறுத்துகின்றன என நினைக்கிறேன்.

அண்மையில் ஓர் உரையாடல்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களே ,

என் பெயர் –. உங்களின் தீவிர வாசகன். என் சொந்த வாழ்வில் ஒரு ஐயம் உள்ளது.

நான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் , இதற்கு முன் ஒருவரை காதலித்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளும் முன் என்னிடம் அதை சொல்லி விட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் எனக்கு வெறும் எழுதாளர் அல்ல நான் வழிபடும் குரு. பெரும் குழப்பத்தில் இருக்கிறேன். சத்திய வார்த்தையை கேட்க விழைகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்.

அன்புடன்

அன்புள்ள நண்பருக்கு

இந்தக்காலகட்டத்திலும் இப்படி குழப்பங்கள் வருமா என எனக்கு திகைப்பாக இருந்தது. ஆனால் இரண்டு இளம் நண்பர்களிடம் பொதுவாகப் பேசினேன். அவர்கள் உண்மையில் இன்றைய இளைஞர்களுக்கு இந்த குழப்பமும் கேள்வியும் இருப்பதாகச் சொன்னார்கள்.  நம் பண்டைய உளத்தடைகள் எளிதில் அகல்வதில்லை.

நீங்கள் சொல்லியிருப்பது ஒரு விஷயமே அல்ல. அதைப்பற்றி ஐந்து நிமிடங்களுக்குமேல் யோசிப்பதே அபத்தமானது. இது பழைய காலம் அல்ல. இன்று ஆணோ பெண்ணோ திருமணம் செய்துகொள்ள பல ஆண்டுகளாகின்றன. அதுவரை காதல் என ஒன்று உருவாகாமலிருக்குமா என்ன? மனதளவிலாவது? உறவும் பிரிவும் நிகழ்ந்திருந்தால் அது மிக இயல்பே. அதை எவரும் பொருட்படுத்தவேண்டியதில்லை.

அந்த முந்தைய காதல் முழுமையாக அகன்று பழங்கதையாக ஆகிவிட்டிருந்தால் அது எவ்வகையிலும் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை அல்ல. அதைப்பற்றி முழுமையாகவே இருவரும் மறப்பதும், அதை எந்நிலையிலும் நினைவுகூராமலிருப்பதும், பேசிக்கொள்ளாமலிருப்பதுமே முக்கியமானது. இதையெல்லாம் எல்லா நாளிதழ் குடும்ப ஆலோசனைப் பகுதிகளிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மேலதிகமாக ஒரு சொல் என்னிடம் கேட்கிறீர்கள், நல்லது. அதைச் சொல்லிவிட்டேன்.

ஜெ

 

சார்,

எனக்கு அந்த பெண் முன்பு கதலித்தது எந்த பிரச்சினையும் இல்லை  எனக்கிருக்கும் ஒரே சந்தேம், இந்த விஷயம் எஙகளை இயல்புநிலையில் இல்லாமல் ஆக்கிவிடுமொ என்ற பயம் மட்டும்தான்.

இரண்டு பேரின் வாழ்வும் இதனால் ஏதாவது ஆகிவிடுமொ என்ற பயம்தான்.. எனக்கு இதனை கண்ட்ரோல் செய்யும் அளவு மென்டல் மெச்சூரிட்டி உண்டா என்பதை அறிய முடியவில்லை.

என் மனம் ஏதாவது ஒன்றில் இறுக்கி பிடித்து கொண்டெ உழன்று கொண்டே இருக்கும்.என்னால் இதனை சரியாக ஹேண்டில் பண்ண முடியுமா என்பது சந்தேகம் தான். நான் உங்களிடம் கேட்பது ஒரு வகையில் என்னிடமே கேட்பது போலத்தான்

அன்புடன்

_

அன்புள்ள —

புரிகிறது. அதற்குத்தான் பதில் சொன்னேன். இது ஒரு விஷயமே இல்லை. அந்த விஷயத்தைப் பற்றி பேசாமலிருந்தாலே போதுமானது. கொஞ்சம் கொஞ்சமாக அது பின்னகர்ந்துவிடும். திருமணத்திற்கு முன்பு சிலநாட்களுக்கு இது ஒரு சிக்கலாக இருக்கும். அப்படி தோன்றும். திருமணத்திற்குப்பின் அதைப்பற்றி பேசாவிட்டால் அது மறைந்துவிடும்.

திருமணத்திற்குப்பின் காமம், அந்த பெண்ணின் ஆளுமை பற்றிய உங்கள் ஈர்ப்பு ஆகியவை மேலோங்கும். ஓரிரு ஆண்டுகளில் மனைவி கூட முக்கியமில்லை, குழந்தைகளே முக்கியமாக இருக்கும். எஞ்சிய வாழ்க்கை முழுக்க அபப்டித்தான்.

திருமண வாழ்க்கையில் காமம், ஆண்பெண் உறவு என்பது 10 சதவீதம்தான். எஞ்சியதெல்லாமே குழந்தைகள்தான். நீங்கள் மனைவி கருத்தரித்ததுமே குழந்தை மேல் பித்து  ஆகிவிடுவீர்கள். அப்போது தெரியும், இதெல்லாம் எவ்வளவு சின்ன விஷயம் என்று.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2023 11:34

சி.மோகன்

சி.மோகன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், பிரதிமேம்படுத்துநர் என்னும் நிலைகளில் தமிழில் நாற்பதாண்டுகளாக இலக்கியச் செயல்பாடுகளுடன் இருந்துகொண்டிருக்கிறார். தமிழில் ஒரு படைப்பாளிகளின் நிரை அவரை தங்கள் ஆசானாகவும் முன்னோடியாகவும் கருதுகிறார்கள்.

சி. மோகன் சி. மோகன் சி. மோகன் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2023 11:34

கிருஷ்ணம்மாள், அறம் – சிவராஜ்

அறம் புதிய பதிப்பு வாங்க

அறம் மின்னூல் வாங்க

அறம் ஆங்கிலநூல் வாங்க

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

இரண்டு மாதங்கள் முன்பு, மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் மகள் சத்யா அக்கா அழைத்ததன்பேரில், கெளசிக், அருணிமா, மதுமஞ்சரி, வினோத் பாலுச்சாமியுடன் நானும் சேர்ந்து காந்திகிராம் பல்கலைக்கழகத்திலுள்ள ஊழியரகத்திற்குச் சென்றிருந்தோம். கிராமங்களில் களப்பணியாற்றும் காந்தியர்களுக்கான வெவ்வேறு செயற்பயிற்சிகளைத் தொடர்ந்து வழங்கிவந்த கூடமே ஊழியரகம். ஜெகந்நாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் உள்ளிட்ட நிறைய காந்தியர்கள் கல்சுமந்து கட்டியெழுப்பிய கற்கட்டிடம் அது. இளமைக்காலந்தொட்டு தாங்கள் அவ்வப்போது தங்கியிருந்து தொண்டாற்றிய இடத்திற்கே கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் மீண்டும் வந்து நிரந்தரமாகத் தங்கத்தொடங்கியுள்ளார். அவரது மகளான சத்யா அக்கா, குழந்தைகள் மருத்துவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சூழ்நிலையில், தனது ஆய்வுக்கட்டுரைப் பணிகள் மற்றும் கூடுதல் களப்பணிகளின் திட்டமிடுதலுக்காகவும் தன் தாயுடன் ஊழியரகத்தில் தங்கி பணிசெய்து வருகிறார்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் குரலிலேயே அவருடைய வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்யும் பெரும்பொறுப்பினை சமகாலச் செயற்திட்டங்களுள் ஒன்றாகத் துவங்கியிருக்கிறோம். அந்த ஆவணப்பதிவின் பொருட்டு அம்மாவுடன் மூன்று நாட்கள் கூடவே தங்கியிருந்து அவரது வாழ்வுக்கதையைக் கேட்டறியும் நல்வாய்ப்பும் அமைந்தது. அப்படியான ஒருநாளின் பின்னிரவில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் ‘அறம்’ புத்தகத்தினைக் கையிலெடுத்து, ‘ஓலைச்சிலுவை’ மற்றும் ‘நூறுநாற்காலிகள்’ கதைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். இலட்சியவாதக் கனவை மனதுள் ஆழப்பதிக்கும் அக்கதைகளின் நினைவுகளினூடே, நான்கைந்து முறை திடீரெனத் தனது கைகளையுயர்த்தி “ஆறாயிரம் வீடுகள கட்டியே ஆகணும்” என சொல்லிக் கொண்டார். முதிர்ந்து கனிந்திருக்கும் அந்த மூதன்னையின் மனம் ஏந்தியுள்ள வைராக்கியம் எங்களுக்கு மலைப்பை உண்டாக்கியது. அணையாத்தீயென அறம் அம்மாவுக்குள் இன்னமும் சுடர்ந்துகொண்டே இருக்கிறது.

நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் வாழும் மீனவ மக்கள் வசிப்பதற்கு எப்பாடுபட்டாவது ஆறாயிரம் வீடுகளைக் கட்டவேண்டும் என்கிற கனவு அம்மாவுக்குள் உயிர்த்துடிப்பை நீட்டித்துக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அந்த இலக்கு குறித்து தொடர்ந்து அவர் பேசியபடியே இருக்கிறார். வெவ்வேறு மனிதர்களை அதன்பொருட்டு எங்கெங்கோ சென்று சந்திக்கிறார். எதன்பொருட்டும் தொய்வின்றி அக்கனவு சார்ந்த முயற்சி நிகழ்ந்துகொண்டே இருப்பதை நாங்கள் நேர்பட அறிந்தோம். “எப்பயாச்சும் மனசளவுல நொடிஞ்சுபோனாக்கூட இந்தக் கதைகள் வைராக்கியத்தை கூட்டுதுய்யா. ஒவ்வொரு கதையிலயும் சத்தியம் இருக்கு” என்று இரண்டு மூன்றுமுறை தனது அகவுணர்வைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், “நாம செய்யுற வேல மட்டுந்தான்ய்யா நிலைச்சு நிக்கப்போகுது. நம்மளப்பத்தி ஏசுற பேச்சுகளோ, குற்றச்சாட்டுகளோ, செஞ்ச வேலைகள்ல இருக்க சின்னச்சின்ன குறைகளோ… எதுவுமே காலத்தோட கணக்குல எஞ்சாது. செஞ்சோமா இல்லையான்னு மட்டுந்தான் அது ஞாபகம் வச்சுக்கும். நம்மளவிட நம்ம வேலைக்கு ஆயுசு அதிகம். சிவாய்யா… நாம இன்னும் தீவிரமா நிறைய வேல செய்யனும்ய்யா” என்று குரலதிர அவர் சொன்னபோது நாங்கள் கண்கலங்கி அழுதிருந்தோம்.

மதுமஞ்சரி முன்னெடுக்கும் கிணறு தூர்வாரும் பணிகளைப்பற்றி குறிப்பிட்டுப் பேசும்போதுகூட, “தீண்டாமைக்கான பெரிய ஆயுதத்த இந்த சின்னப்பொன்னு கையில எடுத்திருக்காய்யா. இந்த வேலயும் கிணறு தூர்வார்ரது மாதிரிதான். தோண்டும்போது தெரியாதுய்யா, தோண்டுற வேல என்ன செய்யும்னு. ஆனா, தண்ணி ஊத்தெடுத்து ஊரோட தாகம் தணியுறப்ப தெரியும், வேலயோட வீரியம். இங்க திண்டுக்கல் பக்கத்துல, அப்படி நிறைய கிராமங்கள்ல இருக்க கிணறுகள்ல எடுத்து வேல செய்யணும்ய்யா. ஒன்ன மீட்டா போதும், அது தர நம்பிக்கைல ஒன்னொன்னா மீட்டுடலாம்” எளிமையான வார்த்தைகள் தான். ஆனால், தன் வாழ்க்கையால் ஓர் ஆசிரியர் அதற்கு அடிக்கோடிடும்போது அது இவ்வுலகிலேயே மிக வலிமையான தத்துவமாக மனம் நுழைகிறது.

98 வயது ஆகிவிட்டது கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களுக்கு. இந்தியா முழுக்க எத்தனையோ களப்பணிகளுக்காக அலைந்து திரிந்து எத்தனையெத்தனை மனிதர்கள், எவ்வளவு அனுபவங்கள், சரிவுகள், மீண்டெழல்கள் அவரது வாழ்வில்! இத்தனையைக் கடந்து அகவுறுதி அடைந்த அவருக்கு நம்பிக்கை தரக்கூடிய பற்றுதலாக ‘ஒரு சொல்’ இருக்கிறது. அறம் தொகுப்பின் கதைகளில் இருப்பதும் திரள்வதும் எக்காலத்துமான ஓர் அழியாப்பொருள். அது ஓர் ஆழ்மனச்சுனை. அதிலிருந்து சுரந்துபெருகும் ஒன்று இம்மானுடம் முழுமைக்கும் பொதுவான ஒன்று. அதைத்தான் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களும் பெற்றடைந்திருக்கிறார்.

 

 

இதற்குமுன்பு பலமுறை அம்மாவுடன் அணுக்கமான உரையாடல்களில் அருகிருந்தாலும் இந்தமுறை அது மிகவும் நெகிழ்வுக்குரிய தருணமாக மனதுள் பதிந்துவிட்டது. அண்ணன் பாலசுப்பிரமணியம் முத்துசாமி எழுதிய ‘இன்றைய காந்திகள்’ மற்றும் ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தக வெளியீட்டு நிகழ்வு பற்றியும், ஜெகந்நாதன் கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் வாழ்வியல் ஒளிப்பட அருங்காட்சியகத்தை நீங்கள் திறந்துவைத்த நினைவுகளையும் அம்மாவுடன் பகிர்ந்துகொண்டோம். முகமலர்ந்து அவர், “அன்னைக்கு அந்த கூட்டம் எழுப்புன சத்தம் எனக்கு இன்னும் ஞாபகமிருக்குய்யா. எல்லாரும் சேர்ந்து சந்தோசத்த வெளிப்படுத்துன சத்தம். அவரு நட்டவச்சு மரம்கூட நல்லா வளந்து துளிர்விட்டிருக்கு பாத்தியா. எல்லோருக்கும் சந்தோசமான நாளு” என்றார்.

எல்லாவகையிலும் அந்நாளின் அருள் நீங்கள் படைத்த அறத்தால் விளைந்தது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் கரங்கூப்பி கடவுளைத் தொழும் அதிகாலைப் பிரார்த்தனையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான இறைவேண்டலும் உள்ளுறையும். நாங்களறிந்து நான்கைந்து தடவைகளுக்கும் மேலாக ஓலைச்சிலுவைக் கதையை அம்மா படித்துவிட்டார். திரும்பவும் படிக்க ஆசைப்படுவதாகச் சொல்கிறார். இக்கடித்த்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் ஓரிரு நாட்கள் முன்பாகத்தான் வந்துசேர்ந்தது. ஒளிப்படக்கலைஞர் வினோத் பாலுச்சாமி காட்சிப்பதிந்தவை இவை. உங்களுக்கு இப்படங்களை அனுப்புவதில் ஓர் நல்லசைவு முழுமையடைவதை உணர்கிறோம்.

அறம் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்களை முற்றளித்தத் தியாக வாழ்வானது நம் எல்லா தலைமுறைகளுக்குமான அசரீரி. எண்ணற்ற இருதயங்களுக்கு மீட்பளிக்கும் என்றுமுள சொல் அது. செயலாற்றத் துணியும் சமகால மனிதனுக்கு… காற்றில் கரைந்த அந்த நல்லான்மாக்கள் இக்கதைகள் வழியாக மீளவும் அகமடைந்து ஆசியாகவும் ஆசிரியராகவும் உடன்வருகிறார்கள். எல்லாம்வல்ல பேரிறைக்கு ஒப்பான அந்தத் தியாகமனிதர்களின் கருணையைப் பணிந்து வணங்கி இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

~

நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2023 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.