Jeyamohan's Blog, page 602
April 3, 2023
விடுதலை, திரையரங்கில்…
இன்று, 3 ஏப்ரல் 2023 ல் விடுதலை படத்தை நாகர்கோயில் ராஜேஷ் திரையரங்கில் அருண்மொழியுடனும் அஜிதனுடம் சென்று பார்த்தேன். நல்ல கூட்டம், குடும்பத்துடன் ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள்.
எப்போதுமே திரைப்படங்களை அரங்கில் பார்க்க நான் விரும்புவேன். திரையரங்க அனுபவம் என்பதே தனியானது. தமிழகத்தில் என்றுமே சினிமா பார்ப்பதில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. சினிமாவை என்றல்ல, எதையுமே கவனமாகவும் முறையாகவும் பார்க்கும் பழக்கம்பொதுவாக நமக்கில்லை. அது ஒரு வாழ்முறையாகவே இங்குள்ளது.
படம் தொடங்கி பாதியில் வந்து கதை கேட்பவர், படம் ஓட ஓட கதையை சொல்லிக்கொண்டே வருபவர், முன்னரே பார்த்துவிட்டு வரப்போகும் காட்சியைச் சொல்பவர் என முன்பிருந்தே பல கதாபாத்திரங்கள் உண்டு. இப்போதைய புதிய சிக்கல், செல்பேசி. படம் ஓடும்போதே போனில் பேசிக்கொண்டும், டைப் செய்துகொண்டும் இருக்கிறார்கள். ஒளி கண்ணில் அடிக்கிறது. என் முன் ஓர் அம்மையார் படத்தின் காட்சிகளை செல்பேசியில் படம்பிடித்தபடியே இருந்தார், முழுப்படத்தையும் செல்பேசித் திரையில்தான் பார்த்தார்.
ஆனாலும் கூட்டத்துடன் படம் பார்ப்பது இனியது. முதலில் வீட்டைவிட்டு வெளியே கிளம்புவதே ஒரு நல்ல அனுபவம். கூட்டத்துடன் ஒன்றாக இருக்கும் எல்லாமே எனக்கு பிடிக்கும், திருவிழாக்கள் குறிப்பாக. படம் பற்றிய எதிர்வினைகளை அரங்கிலேயே காணமுடிவது படங்களில் வேலைபார்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு முக்கியமானது.
நாகர்கோயில் ராஜேஷ் அரங்கம் பழையது. பத்தாண்டுகளுக்கு முன் புதுப்பித்து ஏஸி செய்தார்கள் என நினைக்கிறேன். ஒலி அமைப்பு கொடூரம். அதைவிட திகைக்கவைப்பது படம் திரையிடப்படுவதின் தரம். திரையில் பிரச்சினையா, புரஜக்டர் பிரச்சினையா தெரியவில்லை, திரையில் வட்டமாக ஒரு இளநீல வெளிறல் இருந்துகொண்டே இருந்தது. எல்லா காட்சிகளும் வெளிறிப்போய் அபத்தமாக தெரிந்தன. பழுதடைந்த பழைய தொலைக்காட்சியில் படம் பார்க்கும் அனுபவம். பாவம் வேல்ராஜ் என நினைத்துக் கொண்டேன்.
திரையரங்கில் எவரும் என்னை அடையாளம் காணவில்லை. ஒருவர் மட்டும் கொஞ்சம் தயங்கி கேட்டார், ஆமாம் என்றேன். அஜிதன் “எப்படி தைரியமாக நம்பி தியேட்டருக்கெல்லாம் வர்ரே?” என்றான்.
“என்னை யாருக்கும் தெரியாது, நீயே பாரேன்” என்றேன்
“யூடியூபிலயும் ஃபேஸ்புக்கிலேயும் ஒரே ரணகளமா இருக்கே” என்றான்.
“யூடியூபிலே சினிமா டிரெயிலர்கள், பிரமோ நிகழ்ச்சிகள், பாட்டுகள் வர்ரது வேற. ஆனா சினிமா பத்தி அதிலே பேசுறவங்களோட உச்சகட்ட ஹிட் என்பதே ரெண்டு மூணு லட்சம். அப்டீன்னா மொத்தமா எல்லாத்தையும் ஒரு லட்சம்பேர் பாக்கிறாங்க. ஒரு ஹிட் சினிமாவை தியேட்டருக்கு வந்து பாக்கிறவங்களே ஒரு கோடிக்கும் மேல்… நூற்றிலே ஒருத்தர்கூட யூடியூப் சினிமாப் பேச்சுக்களைப் பாக்கிறதில்லை. அதிலே என்னோட பேட்டிகள் எல்லாம் அதிகபட்சம் அம்பதாயிரம் ஹிட் போகும். அதாவது ஒரு பதினஞ்சாயிரம் பேர் பாக்கிறாங்க. சினிமா பாக்கிறவங்களிலே ஆயிரத்திலே ஒருத்தர் பாக்கிறாங்க… ஃபேஸ்புக்ல மிஞ்சிப்போனா ஒரு அஞ்சாயிரம்பேர், அவ்வளவுதான்” என்றேன்
”அவ்ளவுதானா?”
“சினிமா பத்தின இந்த சர்ச்சைகள் முழுக்க நடக்கிறது ஒரு ரொம்ப குட்டி உலகத்துக்குள்ள… ஆனா அதிலே ஒரு வருமானம் இருக்கு. கொஞ்சம் புகழ் இருக்கிற மாதிரி இருக்கு. அதை பங்குவைக்கத்தான் அவ்வளவு போட்டி. ஒவ்வொரு சினிமா வந்ததும் பலபேர் அதைப்பத்தி ஏதாவது பேசுறது, யூடியூப்ல பதிவு போடுறது எல்லாமே அந்த சினிமாவோட வெளிச்சத்திலே கொஞ்சநேரம் நிக்கிறதுக்காகத்தான். ஏன்னா சினிமா தவிர எதையும் இங்க ஜனங்க கவனிக்கிறதில்லை. அதான் எல்லாருமே சினிமா விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. எழுத்தாளர்கள் , பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் எல்லாமே… இப்ப சினிமா விமர்சனம் கொஞ்சம் சலிப்பாயிடுச்சு… ஏகப்பட்டபேர் வந்திட்டாங்க. அதனாலே ஏதாவது நெகெட்டிவா சொல்லியாகணும். ஏதாவது வசைபாடியாகணும். அப்பதான் ஹிட் வரும்…அது ஒரு டிரெண்ட்…அந்த மொத்த பேச்சும் அதிகம்போனா ரெண்டு வாரம்தான். அடுத்த சினிமா வர்ர வரைக்கும்…யாரும் யாரையும் கவனிக்கிறதே இல்லை…” என்றேன்.
இணையம் சினிமாவுக்கான செலவு குறைந்த வலுவான விளம்பரச் சாதனம். சினிமா ’பிரமோ’ எனப்படும் உரையாடல்கள் ஒரு மெல்லிய கவனச்சூழலை உருவாக்குகின்றன. ஆகவே அதை சினிமா பயன்படுத்திக் கொள்கிறது. அதற்குமேல் சினிமாக்காரர்களுக்கு அவை முக்கியமில்லை. ஆனால் எப்படியும் ஒரு பத்தாயிரம்பேர் அதிலேயே உணர்ச்சிகரமாக விழுந்து கிடக்கிறார்கள் என நினைக்கிறேன். நல்லதுதான், சினிமாவுக்கு எந்தக் கவனமும் நல்லதே. மேலும் இப்படி சினிமா சர்ச்சைகளில் இருந்து அடுத்த சினிமாச் சர்ச்சைக்குச் சென்று அதிலேயே வாழ்பவர்கள் வேறு எதையும் குறிப்பிடும்படிச் செய்யும் தன்மை அற்றவர்கள்.
படம் அரங்கில் வலுவான தாக்கத்தை உருவாக்குவதைக் காணமுடிந்தது. காட்சிகள் வழியாக உணர்த்தப்படும் உணர்ச்சிகளே முதன்மையாக இப்படத்தின் தனித்தன்மை. தொடக்கக் கட்ட ரயில் விபத்துக் காட்சி தமிழ் சினிமாவின் சாதனைகளில் ஒன்று.
ஒரு தென்னை
என் தாய்மாமன் மணி என்கிற காளிப் பிள்ளை மறைந்தார். என் அம்மாவின் தம்பி. என் அம்மாவுடன் பிறந்தவர்கள் ஏழுபேர். மூத்தவர் வேலப்பன் பிள்ளை. அதன்பின் கேசவ பிள்ளை. அடுத்து தாட்சாயணி. இன்னொருவர் மீனாட்சி. அடுத்தவர் கங்காதரன், பிரபாகரன், அடுத்து என் அம்மா விசாலாட்சி. கடைசியாக காளிப்பிள்ளை.
மணி மாமாவுக்கு போடப்பட்ட பெயர் மணிகண்டன். அப்படித்தான் ஆறுவயது வரை வாழ்ந்தார். பள்ளிக்கூடத்தில் போட கூட்டிச்சென்றவர் ஒரு வயதான தாய்மாமன். அவருக்கு பையனின் பெயர் மறந்துவிட்டது. அதென்ன சின்னப்பையனிடம் போய் அவன் பெயரைக் கேட்பது. அவருடைய தாத்தா பெயர் காளிப் பிள்ளை. அதை போட்டுவிட்டார். மணிகண்டன் காளிப் பிள்ளை ஆக மாறினார்.
ஆனால் மாறவில்லை. எண்பது வயதிலும் மாமாவுக்கு அவர் உண்மையில் மணிகண்டன் என்பவர்தான் என்னும் எண்ணமும், அவரை அநியாயமாக காளிப் பிள்ளை என வேறு எவரோ ஆக மாற்றிவிட்டார்கள் என்ற ஆவலாதியும் இருந்தது. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மேற்படி காளிப் பிள்ளைக்கு இந்த நூற்றாண்டில் இத்தனை வசையை அந்தக்கிழவர் வாங்கிக்கொடுத்துவிட்டார்.
மணி மாமா தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் ஆக பணியாற்றினார். சி.ஐ.டி.யூ இயக்கத்தின் அதியதிதீவிரச் செயல்பாட்டாளர். அவருடைய மூத்த அண்ணா கேசவபிள்ளை வழியாக வந்த கம்யூனிசம்.காளிப் பிள்ளை மாமா ஜே.ஹேமச்சந்திரனுக்கு நெருக்கம். தோழர் திவாகரனுக்கு அதைவிட அணுக்கம். பாதிநாள் வாழ்ந்ததே கட்சி அலுவலகத்தில்தான். தலைமாட்டில் செங்கொடி சுருட்டி வைத்திருந்தால்தான் நல்ல தூக்கமே வரும் நிலை.
அவர் திருமணம் செய்துகொண்டது நெடுமங்காடு அருகே வேங்கவிளை என்னும் ஊரில். மாமி அங்கே ஒரு பெரிய குடும்பத்தில் ஒரே மகள். திருமணமாகி கொஞ்சநாளில் மாமா வேங்கவிளை சென்று குடியேறினார்.
என் அப்பா அம்மாவின் குடும்பத்துடன் கொண்ட பூசலால் எங்களை அம்மாவின் வீட்டுக்கோ, உறவினர் வீட்டுக்கோ அனுப்பியதில்லை. நான் கல்லூரி செல்ல ஆரம்பித்தபோது நானே முடிவுசெய்து நட்டாலத்தில் அம்மா வீட்டுக்கும், வேங்கவிளையில் மாமாவீட்டுக்கும் செல்ல ஆரம்பித்தேன். முதல்முறை சென்றபோது என்னை தழுவிக்கொண்டு அழுதார். மாமா பையன்களுடன் அருகிலிருந்த பெரிய பாறைமேல் ஏறிச்சென்றது நினைவிருக்கிறது. வெள்ளையில் நீலக்கோடு போட்ட ஒரு சட்டையும் நீல பாண்டும் வாங்கித்தந்தார்.
1985 வாக்கில் மணி மாமா திருவனந்தபுரம் பஸ்ஸில் இருந்து விழுந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகராகியிருந்தார். காலில் நல்ல அடி. நாலைந்து அறுவைசிகிழ்ச்சை. அவர் இறுதிவரை இயல்பாக நடக்கும்நிலை உருவாகவில்லை. அதன்பின் வேலையை விட்டுவிட்டு வேங்கவிளையிலேயே இருந்தார். அங்கே ஒரு கடை வைத்திருந்தார்.
நான் பார்க்கச்செல்லும்போதெல்லாம் மாமா கண்கலங்குவது வழக்கம்.முதலில் கண்டபோது இருந்த அதே உணர்வு. அதன்பின் என்னைப் ப்பார்க்கும் போதெல்லாம் என் அம்மா நினைவு வந்துவிடும். அடிக்கடி வராமைக்காக கொஞ்சம் வசை. அதன் பின் உபசரிப்பு. அவர் ஒரு பழைய மனிதர். பழையபாணி கம்யூனிஸ்டு. டிவி வந்தாலும் அதில் நம்பிக்கை இல்லை. இடதுசாரி நாளிதழ்களில் அச்சிடுவதே வரலாற்றுண்மை என்னும் நம்பிக்கை கொண்டவர்.
சென்ற மார்ச் 26 அன்று அவர் மறைந்தார். 84 வயது. சர்க்கரை நோய் இருந்தது. அவருக்கு பஞ்சபாண்டவர்கள் என பிறரால் அழைக்கப்பட்ட ஐந்து மகன்கள். அவர்களில் மூத்தவனாகிய விஜயன் ராணுவத்தில் பணியாற்றினான், மூன்றாண்டுகளுக்கு முன் மறைந்தான். பஞ்சபாண்டவர்களின் வீடுகளும் மாமாவின் நிலத்திலேயே அருகருகே வரிசையாக உள்ளன.
மாமாவின் ‘குழிமூடல் அடியந்திரம்’ என்னும் சடங்குக்கு நான் அண்ணாவுடன் சென்றேன். மாமாவின் ஐந்து மகன்களின் பெண்வீட்டார், முதல்மகனின் மகளின் கணவன்வீட்டார் என மொத்தக்கூட்டமே அருகருகேதான் குடியிருக்கிறது. ஆகவே நல்ல நெரிசல்.
என் அம்மாவின் அக்காக்களின் மகன்களில் ரவி அண்ணா மறைந்துவிட்டார். பிரசாத் அண்ணா ஓர் அறுவைசிகிழ்ச்சைக்குப் பின் ஓய்விலிருக்கிறார். மற்ற அனைவரும் வந்திருந்தனர். அண்ணாக்கள் முன் அறுபது கடந்தாலும் நான் சிறுவனாகிவிடுவேன். “எந்தெடே?” என ஓர் அதட்டல். அதற்கு பம்மிக்கொண்டு சிரிக்கவேண்டும்.
வீட்டுக்கு வந்து அம்மாவின் ‘குடும்ப மரத்தின்’ சித்திரத்தை அஜிதனுக்கு அதன் அத்தனை கிளைகளுடன், சல்லிகளுடன் சொன்னேன். அவனுக்கு மிக ஆர்வமூட்டும் பேசுபொருள் அது. அது ஒரு நாவல் போல விரிந்து விரிந்து செல்வது. பிறப்பு, வாழ்வு, மரணம், மீண்டும் பிறப்பு… தலைமுறைத்தொடர்கள். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை. வந்து திகழ்ந்து மறையும் முகங்களின் பெரும் பரப்பு. எல்லாமே கதைகள்தானா என்ற ஐயம் எழும்.
மாமாவின் உடல் கேரள வழக்கப்படி வீட்டுத் தோட்டத்திலேயே எரியூட்டப்பட்டிருந்தது. அங்கிருந்து எலும்பு எடுத்துவந்து வணங்கி வீட்டுமுன் சிலகாலம் வைத்து விளக்கேற்றுவார்கள். பின்னர் ஏதேனும் புனித நீரில் கரைப்பார்கள்.
எலும்பு எடுத்தபின் மூடப்பட்ட குழியில் ஒரு தென்னைமரம், ஒரு சேம்பங்கிழங்குச் செடி, ஒரு மஞ்சள்செடி ஆகியவை நடப்பட்டன. நல்ல வளமான தென்னங்கன்று. நீரூற்றப்பட்டபோது உற்சாகமடைவது தெரிந்தது. இன்னும் நாலைந்தாண்டுகளில் தலைமேல் சிறகு பரப்பி எழும், மேலும் இரண்டு ஆண்டுகளில் காய்கள் தரத்தொடங்கும்.
சொந்தக்காரர் ஒருவர் கம்யூனிஸ்டு. அவர் சிலகாலம் முன்பு இன்னொரு உறவினரின் இதேபோன்ற சடங்கின்போது “இந்தமாதிரி மூடச்சடங்குகள் எல்லாம் இன்னும் கொஞ்சநாள்தான்” என்றார்
“சரி, அறிவார்ந்த சடங்குகள் எவை ?” என்று நான் கேட்டேன்.
அவர் தடுமாறியபோது நானே தொடர்ந்தேன். “படத்திறப்பு, மாலை அணிவித்தல், பத்திரிகைகளில் விளம்பரம் அளித்தல், இரங்கல்கூட்டம் நடத்துதல், இரங்கல் கட்டுரைகள் எழுதுதல், மலர்வெளியிடுதல், நினைவு மண்டபம் கட்டுதல்…இல்லையா?”
“ஆமாம்” என்றார்.
”ஆனால் அவை அனைத்தையும் விட அறிவார்ந்ததும் ஆன்மிகமானதும் இப்படி ஒரு மரம் நடுதல். ஒரு மனிதன் சென்றான், அவன் இடத்தில் ஒரு மரம் நின்றிருக்கிறது என்பதே ஓர் உச்சகட்ட கவித்துவம். அதிலுள்ள தரிசனம் பல்லாயிரமாண்டுக்கால தொன்மை உள்ளது” என்றேன். “ஒரு மனிதனுக்கு நிகராக இங்கே வைக்கப்படத்தக்கது ஒரு மரம் மட்டுமே”
இந்தத் தென்னை இங்கே நிற்கும். இனியும் வேங்கவிளை வரவேண்டியிருக்கும். சொந்தங்கள் பாதி இங்கேதான். அப்போது இந்த மரத்தை வந்து பார்ப்பேன். ஒருவேளை இதிலிருந்து ஓர் இளநீரையும் நான் குடிக்கக்கூடும். மணிமாமாவின் பனித்த கண்கள் பற்றிய நினைவுடன்.
கற்றங்குடி வேல்சாமி மௌனகுரு சுவாமிகள்
கற்றங்குடி வேல்சாமி மௌனகுரு சுவாமிகள் ( 1890) இந்து யோகி. ஸ்ரீ ரெட்டி சுவாமிகள் என்றும் அழைக்கப்படுகிறார். அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கற்றங்குடியில் இவர் சமாதி அமைந்துள்ளது
கற்றங்குடி வேல்சாமி மௌனகுரு சுவாமிகள்
கற்றங்குடி வேல்சாமி மௌனகுரு சுவாமிகள் – தமிழ் விக்கி
சங்கத்தமிழர் மதம் – கடலூர் சீனு
நமது இந்தியத் தத்துவ அறிமுக வகுப்புக்கு பிறகு வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. வகுப்புக்கு வெளியிலான பண்பாட்டு ஆர்வலர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் சண்முகம் பிள்ளை அவர்கள் எழுதிய இந்த சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும். மிக முன்னர் திரு ஜடாயு அவர்கள் எனக்கு பரிந்துரை செய்த நூல்களில் ஒன்று இது.
சங்க காலம் என்று அழைக்கப்படும் பண்டைய தமிழர் வாழ்வின் அடிப்படைக் கூறுகளை உருவாக்கிய வழிபாட்டு மரபுகளில் வேத மரபு கொண்டிருந்த முதன்மையான அடிப்படையான இடத்தை இந்த நூல் ஆதாரங்களின் வழியே முன் வைக்கிறது. வேத மரபு, வேதத்தின் இந்திரன் போன்ற தெய்வங்கள், மாயோன், முருகன், முக்கண்ணன் வழிபாடு, பிற தெய்வங்கள், கோள்கள், இந்த வழிபாடுகள் நமது பண்டைய பண்பாட்டில் வகித்த இடம் அன்றைய சடங்கு நிலைகள் குறித்தெல்லாம் தமிழ் நிலம் சார்ந்த விரிவான அடிப்படைகளை ஆதாரம் வழியே முன் வைக்கிறது.
சங்க இலக்கியப் பாடல்கள் அதன் செவ்வியல் தன்மையை எவ்விதம் அடைந்தது என்று ஒரு வாசகருக்கு கேள்வி எழுந்தால் இந்த நூலின் பகைபுலம் வழியே அவ்வினாவுக்கு விடை காண முடியும்.
ஆய்வாளர் ராஜ் கெளதமன் அவர்களின் பண்டைய தமிழ் சமுதாயத்தில் சாதிகளின் உருவாக்கம் போன்ற ஆய்வு நூல்களை இந்த நூல் வழியே விரித்துப் பொருள் கொள்ள இயலும்.
வேத நெறி ஊடாடாத தூய தமிழ் நிலம் சார்ந்த கற்பிதங்கள் அரசியல் நோக்குகளுக்கு தெளிவான பதில் இந்த நூல்.
இது போக சில மாதம் முன்பு சிறு தெய்வம் பெருந்தெய்வம் பிராமணயமாக்கம் சார்ந்து அரசியல் நோக்கில் கருத்தியல் அடித்தடிக்கள் நடந்த போது எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் சங்கம் மருவிய காலத்தின் நூலான சிலப்பதிகாரத்தை முன்வைத்து பண்பாட்டு நோக்கில் ஒரு விளக்கம் அளித்திருந்தார்.
அது
….சிலப்பதிகாரத்தை படித்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று உறைத்தது. மாலதி என்ற பிராமணப் பெண் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது பால் விக்கி குழந்தை இறந்து விடுகிறது. அவள் கோவில் கோவிலாகச் செல்கிறாள்
“அமரர்தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம் புகா வெள்ளை நாகர் தம் கோட்டம், பகல் வாயில் உச்சிக் கிழான் கோட்டம், ஊர் கோட்டம், வேற் கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம், நிக்கந்தக் கோட்டம், நிலாக் கோட்டம்.”
பத்துக் கோட்டங்கள். ஒரு பெருந்தெய்வம் கூடக் கிடையாது (வேற் கோட்டம் என்பதை முருகன் கோவில் என்று எடுத்துக் கொண்டால் அதைத் தவிர). சிவன் இல்லை. விஷ்ணு இல்லை. கண்ணன் இல்லை. இராமன் இல்லை. கடைசியில் பாசண்டைச் சாத்தன் கோவிலுக்கு வருகிறாள். குழந்தை பிணத்தை இடாகினிப் பேய் தின்று விடுகிறது.
ஆனால் பின்னால் ஆய்ச்சியர் பாடுகிறார்கள். அதில் ராமன் இருக்கிறான். கண்ணன் இருக்கிறான். திருமாலின் அவதாரங்கள் பேசப்படுகின்றன. கடைசியில் அவன்தான் நாராயணன் என்றும் சொல்லப் படுகிறான். மாலதி பாப்பாத்தி. ஆய்ச்சியர்கள் பாப்பாத்திகள் அல்லர்.
இத்தகு பண்பாட்டு அடிப்படை நிலைகள் சார்ந்த உருவாக்கம் சங்க காலத்தில் எவ்விதம் இருந்தது அதில் வேத நெறியின் இடம் என்ன போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்ள, அறிவுத் தேட்டம் கொண்ட ஒவ்வொருவரும் அவசியம் வாசித்திருக்க வேண்டிய நூல் இது.
கடலூர் சீனு
சங்கத்தமிழரின் பண்பாடும் சடங்குகளும் மு சண்முகம் பிள்ளை இணைய நூலகம்அறம், Stories of the True, ஒரு சந்திப்பு
அறம் வரிசைக் கதைகளின் மொழியாக்கமான Stories of the True நூலின் மொழிபெயர்ப்பாளரான பிரியம்வதா ராம்குமார், இலக்கிய ஒருங்கிணைப்பாளரும், மொழிபெயர்ப்பாளருமான மேரி குர்கலாங் (MaryTKurkalang ) இருவரும் சென்ற ஏப்ரல் ஒன்றாம்தேதி சிக்கிம் காங்டாக் நகரிலுள்ள Rachna Books என்னும் புத்தகக் கடையில் ஓர் உரையாடலை நடத்தினார். வாசகர் சந்திப்பும் நிகழந்தது.
சிக்கிம் காங்டாக் நகருக்கு நான் நீண்டகாலம் முன்பு சென்றிருக்கிறேன். அந்த நிலம் மிக அன்னியமானதாகத் தோன்றியது. அங்குள்ள ஒரு புத்தகக் கடையில் என் நூல் கட்டுகட்டாக கையெழுத்திடப்படுவதைப் பார்க்கையில் ஆங்கிலத்தின் வலிமை என்ன என்பதைக் காணமுடிகிறது. நல்ல ஆங்கிலத்தின் தேவையும் தெரிகிறது. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற நூல்களில் மிகக்குறைவான படைப்புகளே இப்படி விரிவாகச் சென்றடைந்துள்ளன.
கூடவே ஒரு சின்ன வருத்தம். எல்லாமே பேப்பர்பேக் நூல்கள். கெட்டிஅட்டைப் பதிப்புகள் எல்லாம் விற்றுத்தீர்ந்துவிட்டிருக்கின்றன. அவை விரைவாக விற்றமையால் இந்த மெல்லிய அட்டைப் பதிப்பு வெளிவந்துள்ளது. இருந்தாலும் எனக்கு என்னவோ தாள்அட்டை பதிப்புகள் மேல் கொஞ்சம் தாழ்வான எண்ணம். அவை ஒரு வகை மன்னிப்புகோரும் பாவனை கொண்டிருப்பதாக தோன்றும். எனக்கு இன்றும் பிரியமானவை பழைய பிரிட்டிஷ் பாணி தோல் அட்டைபோட்ட, தடிமனான நூலகப்பதிப்பு நூல்கள். கிளாஸிக் எடிஷன். என் நூல்களில் ஒன்றாவது அப்படி வந்தால் நன்று என்பது ஓர் ஏக்கம்.
ஏழாம் உலகம் நாவலின் மொழியாக்கமான The Abyssமின்னூலாக கிடைக்கிறது. அதன் அச்சுவடிவம் வரும் ஏப்ரல் 10 முதல்தான் கடைகளில் கிடைக்கும். இப்போது அமேசானில் முன்பதிவு செய்யப்படுகிறது. அச்சுநூலை வாசித்த நண்பர்கள் அபாரமான மொழியாக்கம் என்றார்கள். ஆனால் அதுவும் தாளட்டைப் பதிப்புதான்.
THE ABYSS Paperback – வாங்கThe Abyss Kindle Edition வாங்கApril 2, 2023
திருவாரூரில் அருண்மொழி
அருண்மொழியின் அப்பா திரு. சற்குணம் பிள்ளை.எம்.ஏ.பி.எட் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) மற்றும் அம்மா திருமதி சரோஜா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) இருவரையும் மெய்சிலிர்ப்பு பரவசம் ஆகியவற்றை அடையச்செய்யும் புகைப்படம் இதுவாகவே இருக்கும். அருண்மொழி திருவாரூரில் பொதுமேடையில் பேச பின்னணியில் மு.கருணாநிதி அவர்களின் முகம். அவர்கள் பரம்பரை திமுக.
நான் பொதுவாக திறந்தவெளி மேடையில் பேசுவதில்லை. ஓரிருமுறை புத்தகக் கண்காட்சிகளில் பேசியது சரியாக அமையவுமில்லை. என்னை எவரேனும் கேட்கிறார்களா என்னும் ஐயம் வந்துவிடும். பார்வையாளர்கள் வந்தமர்ந்துகொண்டும் எழுந்து சென்றுகொண்டும் இருந்தால் சரியாகப் பேசமுடியாது. அத்துடன் என்னை முறையாகப் பேச அழைப்பது எனக்கு முக்கியம். சட்டென்று பேசு என்றால் பதறிவிடுவேன்.
திருவாரூரில் பேச அருண்மொழிக்கு அழைப்பு வந்ததுமே அவளிடம் இதைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அவள் ‘சரி, பாத்துக்கலாம்’ என்ற மனநிலை கொண்டிருந்தாள். ஏற்கனவே இதேபோல நான் பயமுறுத்தியும் பொருட்படுத்தாத போகன் சங்கர் மேடையில் இயல்பாகவே சிறப்பாகப் பேசியது நினைவுக்கு வந்தது.
அந்தமேடையில் சுரேஷ்பிரதீப், செந்தில் ஜெகன்னாதன் எல்லாம் சிறப்பாகப் பேசியதாக அறிந்தேன். கீரனூர் ஜாகீர்ராஜா ஏற்கனவே நல்ல பேச்சாளர். காளிப்பிரசாத் பேசவிருந்தார். ஆகவே நமக்குத்தான் சரிவரவில்லை என்று சொல்லிக்கொண்டேன்.
ஆனால் அருண்மொழி முதல்முறையாக மேடையில் தடுமாறுவதைக் காண்கிறேன். அன்றுகாலை திருவாரூர் தேர்விழா. அதற்குச் சென்றுவிட்டு அப்படியே புத்தக விழாவுக்குச் சென்றுவிட்டாள். முதல் ஐந்து நிமிடம் உரை எங்கெங்கோ தொட்டுச் செல்கிறது. ஒரு கோவையான ஒழுக்குக்கு வர பத்து நிமிடங்கள் ஆகின்றது. அதன் பின் வழக்கமான ஜெட் பயணம்.
நினைவுகள் ஆங்காங்கே தடுக்குகின்றன. அது அவள் இயல்பே அல்ல. அருண்மொழி எதையாவது மறந்து நான் கண்டதில்லை. இதில் தஞ்சை எழுத்தாளர்களில் சாரு பெயர் இல்லை. (சாருவை விரும்பும் வாசகி அருண்மொழி. ஆனால் அவரை ஒரு சென்னை எழுத்தாளர் என நினைவில் கொண்டிருக்கலாம்). மேலும் பல முக்கியமான விடுபடல்கள்.
ஆனால் தஞ்சைக்காரர் அல்லாத மௌனி பெயர் அவள் பட்டியலில் இருக்கிறது. (இது வேண்டுமென்றே சேர்க்கப்படுவதாகவும் இருக்கலாம். முன்பு பலரும் செய்துள்ளனர்) தஞ்சைப்பெருமை கொஞ்சம் அதிகமாக எழுகிறது.
ஆனால் என்னென்ன இனி எழுதப்படலாம் என்று சொல்லுமிடத்தில் உரை குறிப்பிடத்தக்க ஒன்றாக ஆகிறதென நினைக்கிறேன்.
கி.ரா, கே.எஸ்.ஆர்
வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அழைத்திருந்தார். கி.ராஜநாராயணனுக்கு அவர் தொடர்ச்சியாகச் செய்து வரும் பணிகளைப் பற்றிக் குறிப்பிட்டார். கி.ரா-100 தொகுப்பே அவர் முயற்சியால் உருவானது. 500 கட்டுரைகளில் இருந்து கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டன. அவர்தான் அதன் தொகுப்பாசிரியர்.
கி.ராஜநாராயணனுக்கு 60 நிறைவு விழாவை கொண்டாடியது, 70 நிறைவை கொண்டாடியது, 80 நிறைவை கொண்டாடியது, டெல்லியில் 95 நிறைவை கொண்டாடியது ஆகியவை தன் முயற்சியாலும் முன்னெடுப்பாலும்தான் என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சொன்னார். அரசியல்வாதியும், வழக்கறிஞருமான ஒருவர் ஓர் எழுத்தாளரின் படைப்புலகில் இத்தகைய தீவிரமான அர்ப்பணிப்புடன் இருப்பதும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக அவ்வெழுத்தாளரை கொண்டாடி வருவதும் மிக முன்னுதாரணமான ஒரு நிகழ்வு. இலக்கியவாதி என்னும் வகையில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என் நன்றிக்குரியவர்
நான் கிரா 100 நூலை பற்றி எழுதும்போது எவ்வகையிலும் அதைத் தொகுத்தவர்களின் பணியை குறைத்து எழுதவில்லை.ஆனால் இன்னும் ஒருங்கிணைந்த முயற்சிகளைச் செய்திருக்கலாமோ என்னும் ஆதங்கமே என்னிடம் இன்னும் உள்ளது.
பிறந்தநாள் விழாக்கள் சிறப்பானவை. ஆனால் அதை சாதாரணமானவர்களுக்கும் செய்கிறார்கள். டெல்லியில் ஓர் இந்திய அளவிலான கருத்தரங்கு நிகழ்த்தியிருக்கலாம். அதில் இந்திய அளவில் எழுத்தாளர்கள் பங்குகொள்ளச் செய்திருக்கலாம் . ஆங்கிலத்தில் கி.ராவின் நூல்கள் வெளிவரச்செய்திருக்கலாம். ஒரு நல்ல தொகைநூலும் ஆங்கிலத்தில் வந்திருக்கலாம். கி.ரா ஞானபீடம் நோக்கிச் சென்றிருப்பார்.
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனிமுயற்சியால் செய்த பணிகள் பாராட்டுக்குரியவை. தமிழ் அறிவியக்கம் இன்னும் கூடுதலாக இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பதே என் மனக்குறை.
வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார்
இன்றைய உரைநடை வடிவம் எப்படி உருவாகியது என இன்று பலருக்கும் தெரியாது. அரைகுறை இலக்கணத்தார் சிலர் இந்த இலக்கணங்கள் நன்னூல் காலம் முதல் இருப்பதாகவும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை இதழியல், மொழியாக்கம் வழியாக ஆங்கில உரைநடையின் சாயலுடன் தமிழில் உருவாக்கப்பட்டது என்பதே உண்மை. அதை உருவாக்கியதில் பெரும்பங்களிப்பாற்றியவர் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார். அவருடைய மொழிபெயர்ப்புகளில் ஆங்கிலச் சொற்றொடரமைப்புகளைப் பயன்படுத்தினார். ஒற்று, கால்புள்ளி, அரைப்புள்ளி, மேற்கோள்புள்ளிகளை போட்டு வழிகாட்டினார்
ஆகாயம், கடிதம்
புனைவுக்களியாட்டு கதைகள் வாங்க
அவ்வப்போது, புனைவுக்களியாட்டு சிறுகதைகளுள் மனம்போன போக்கில் ஏதேனும் ஒன்றை படிப்பது வழக்கம். சென்றவாரம் அப்படித்தான் ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தபோது ‘ஆகாயம்’ தலைப்பில் கை தன்னிச்சையாக நிற்கவே, இணைப்பை சொடுக்கி படித்தேன். மனசுக்குள் நீலன் பிள்ளையின் பேச்சுதான். மனசை வெகுவாக கவர்ந்துவிட்டார் மனிதர். தம்மைவிட படிநிலையில் உயர்ந்தவர்களிடம் பணிந்தபடியே தமது வாக்கு வன்மையால்/ சாதுர்யத்தால் அவர்களை மூலையில் நிறுத்துவதாகட்டும், சற்றே படிநிலையில் குறைந்தவரை தந்நிமிர்வால் பணியவைப்பதாகட்டும் …. சொல்வலனும் மதியூகியுமான அமைச்சன்.
இவர்களைப்போல எத்தனை பெயர் தெரியாதவர்கள், அழிவின் விளிம்பில் இருந்த கலைஞர்களை காத்தார்களோ… இப்படிப்பட்டவர்கள் இல்லா கெடுவிதியால் எத்தனை கலைஞர்கள் புரக்கப்படாது அழிந்தார்களோ …
கலைஞனின் மனது பெயர் தெரிந்த, தெரியாத எத்தனையோ பறவைகள் வந்தமர்ந்து நீங்கும் அரசமரம் என்பது அற்புதமான திறப்பு. கலைஞனும் சாமான்யன் போல தத்தளிப்பும் கொந்தளிப்பும் அவஸ்தைகளும் அலைக்கழிப்புகளும் கொண்டவனே. பிறகு எது அவனை சாமான்யனிடமிருந்து விலக்கி தனித்து நிறுத்துகிறது? மனதில் வந்தமரும் ஒவ்வொரு பறவையையும் கவனித்து முடிந்த அளவு அணுவணுவாக கல்லிலோ, திரைச்சீலையிலோ எழுத்திலோ, வாத்தியத்திலோ வடித்து வைப்பது, குமாரன் ஆசாரி போல. வந்தமர்வது இதுவரை யாரும் பார்க்காத பறவையாகவே இருந்தால்தான் என்ன?
பேச இயலாத கலைஞன் என்பவன் ஒடுக்கப்பட்ட கலைஞனுக்கான பிரதிநிதி அல்லவா ? தமிழில், புறக்கணிப்புக்கு உள்ளாகி குரலற்றிருந்த சிறுபத்திரிகை இயக்கத்திற்கான குறியீடாக இதைப் பார்த்தால் பெருமூச்சு வருகிறது. நல்லூழாக இடைநிலை பத்திரிகை என்ற நீலன்பிள்ளை அமைந்தது. இல்லாமல் நாம் இழந்த கலைஞர்கள் எவரெவரோ …
அந்த அரசமரத்தைப் பார்த்த சாத்தப்பன் ஆசாரி இயல்பாக ஆகாசம் என்கிறார். அவர் அப்படி ஆகாசம் என்று கண்டுகொண்டது எதை? வாயும் செவியுமற்ற அந்த கலைஞனை காத்துக்கொண்ட நீலன் பிள்ளையின் மனதையா? அல்லது கலைஞர்களின் கலைமனதின் ஒட்டுமொத்த தொகுப்பையேதானா?
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
கல்லுக்குள் ஈரம், கடிதம்
ர.சு.நல்லபெருமாள் தமிழ் விக்கி
அன்பின் ஜெ,
வணக்கம்.
ர.சு. நல்லபெருமாளின் “கல்லுக்குள் ஈரம்” வாசித்தேன். நல்லபெருமாள் பற்றி மேல் விபரங்கள் அறியவும், வாசிப்பனுபவத்தை நண்பர்களுக்கு பகிரும்பொழுது அவரின் புகைப்படங்களை தரவிறக்கிக் கொள்ளவும் தமிழ் விக்கி தளம் மிகுந்த உதவியாயிருந்தது.
நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உண்மை வரலாற்று நிகழ்வுகளினூடே கதை மாந்தர்கள் பயணிக்கிறார்கள். காந்தி, மகாதேவ தேசாய், நேரு, படேல், வ.உ.சி, பாரதி, சுப்ரமணிய சிவா, முஸ்லிம் லீகின் தலைவர் முகமது அலி ஜின்னா, சுபாஸ் சந்திர போஸ், ராஷ் பிஹாரி போஸ், அமெரிக்க பத்திரிகையாளர் வெப் மில்லர், பிரிட்டனின் அரசியல் தூதுவர் சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ், கோட்சே…அனைவரும் நாவலில் வருகிறார்கள். சுதந்திரப் போராட்டத்தில், காந்தியின் அஹிம்சை வழிமுறைகளுக்கும், தீவிரவாதக் குழுக்களின் ஆவேசத்திற்குமிடையேயான உரையாடல்களும், முரணியக்கங்களும் நாவலில் இடம்பெற்றிருக்கின்றன. புனைவுப் பாத்திரங்களை, உண்மை மனிதர்களிடையே உலவவிட்டு, சுதந்திரப் போராட்டத்தின் பல முக்கிய நிகழ்ச்சிகள் வழியாக, நாவலைப் படைத்திருக்கிறார் ர.சு. நல்லபெருமாள்.
22 வயதாகும் ரங்கமணி, அம்பாசமுத்திரம் நெல்லையப்பப் பிள்ளையின் பேரன். ரங்கமணியின் அப்பா சாமிநாதன், வ.உ.சி-க்கும், பாரதிக்கும், சுப்ரமண்ய சிவாவிற்கும் நெருங்கிய நண்பர். சிதம்பரம் பிள்ளை சுதேசி கப்பல் கம்பெனி துவங்க, சாமிநாதன், அப்பா நெல்லையப்பரை வற்புறுத்தி, முதலீட்டில் உதவியிருக்கிறார். அவர் உறுப்பினராயிருந்த “பாரத மாதா சங்க”த்தின் ஏற்பாட்டில்தான் வாஞ்சிநாதன் மணியாச்சியில் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றது; அப்போது சாமிநாதனும் உடனிருந்திருக்கிறார். “பிளான் B”-யாக, வாஞ்சியால் முடியாமல் போனால், ஆஷைக் கொல்வதற்கு அவரிடமும் ஒரு துப்பாக்கி இருந்திருக்கிறது.
ரங்கமணியின் பத்தாவது வயதில், அவன் கண் முன்னாலேயே அவனின் அப்பா சாமிநாதன், சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளைக்கார காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுவிட, அதற்குப் பழிவாங்கும் சமயத்திற்காகக் காத்திருக்கிறான் ரங்கமணி. பள்ளிப் பருவத்தில், தாத்தாவின் நண்பர் சங்கரராம தீக்ஷிதருடன் சென்று, தன் பதினான்காவது வயதில், திருநெல்வேலிக்கு வந்திருந்த காந்தியைச் சந்திக்கிறான் ரங்கமணி. காந்தி அவனுக்கு சிலுவை ஒன்றை பரிசாகத் தருகிறார். தீக்ஷிதர் அவனை அஹிம்சா வழியில் திருப்ப எத்தனைதான் முயற்சித்தாலும், வளர வளர, ரங்கமணியின் மனதில் வெள்ளையர்களை பழிவாங்க வேண்டும் என்ற வெறி தழலாய் எரிகிறது. சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் அஹிம்சா வழிமுறையை அடியோடு வெறுக்கிறான் ரங்கமணி. போஸ்தான் அவனின் ஆதர்சம். தீவிரவாத சிந்தனைகளிலும், செயல்பாடுகளிலும் விருப்பம் கொண்டு சென்னை சட்டக்கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஊருக்குத் திரும்புகிறான்.
முன்பொருமுறை, செம்புதாஸ் கிட்டங்கியில் ரகசியமாக வெடிகுண்டுகள் வாங்கி, ஓர் நள்ளிரவில், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் அரசு அலுவலகத்தின் மேல் வீசிவிட்டு தப்பி ஓடும்போது, துரத்திக்கொண்டு வந்த காவலர்களிடமிருந்து, தன்னைக் காப்பாற்றிய, திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சேர்ந்த சர்தார் சொக்கலிங்கம் பிள்ளையை (அவருக்கு, முன்பு வேறு பெயரிருக்கிறது) சென்று சந்திக்கிறான் ரங்கமணி. சிக்கல் நரசையன் கிராமத்திலிருக்கும் தன் சுயேட்சை அச்சகத்தில் அவனை நிருபராக வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறார் பிள்ளை. அச்சகத்தில் தங்கிக்கொண்டு பிள்ளையின் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொள்கிறான். பிள்ளையின் சகோதரியான அத்தை, ரங்கமணியின் மேல் மிகுந்த பிரியம் கொள்கிறாள். ரங்கமணியும் அத்தையை அம்மாவாக நினைத்து அன்பு செலுத்துகிறான். பிள்ளையின் மகள் இளம்பெண் திரிவேணி, அப்பகுதியிலேயே பிரபலமான காங்கிரஸ்வாதி. காந்தியத்தின் மேல் நம்பிக்கை கொண்டவள். ரங்கமணியின் மேல் காதல் கொள்கிறாள். அவனை அஹிம்சா வழிக்குத் திருப்பமுடியும் என்று நம்புகிறாள்.
போலீஷ் டெபுடி சூப்பிரண்ட்டென்ட் சிவானந்தம் (25 வயது), காந்தியவாதிகள் மேல் மரியாதை கொண்டவன். ஆனால், வகிக்கும் பதவியினால், போராட்டக்காரர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சிவானந்தத்திற்கு சொக்கலிங்கம் பிள்ளையின் மகள் திரிவேணியின் மேல் மிகுந்த மதிப்பு. ஆனால் அவன் மனைவி கமலவாசகிக்கு (ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த ஊத்துப்பட்டி ஜமீந்தார் சர் டி. முத்தையா பிள்ளையாவின் மகள்) காங்கிரஸ்காரர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை. கமலாவின் பெரியப்பா பையன் வெங்கு, ஒரு வெகுளி; பிள்ளைக்கும், திரிவேணிக்கும், ரங்கமணிக்கும் நண்பன்.
சொக்கலிங்கம் பிள்ளையின் “சுயேட்சை அச்சகம்” வெறும் மேல் பூச்சுக்குத்தான். “பாரத மாதா சங்க”-த்தின் கிளை அங்குதான், பிள்ளையின் தலைமையில் செயல்படுகிறது. பகலில் அச்சகம். இரவில் ரகசியக் கூட்டங்களும், செயல் திட்டங்கள் வடிவமைப்பும் நடக்கும் இடம் அது. சங்கத்தின் உறுப்பினர்கள், சோமு (20 வயது), மந்திரம், மீனாட்சிநாதன், மாணிக்கம், நாகலிங்கம், முத்து, காசிலிங்கம், நீலகண்டன்… இவர்களுடன் இப்போது ரங்கமணியும்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான், ஜெர்மனிகூட்டுப்படைகளுக்கெதிராக போரிடுவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு/பங்களிப்பு வேண்டி இந்திய தேசிய காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த கிரிப்ஸ் டெல்லி வருகிறார். பத்திரிகை நிருபராக ரங்கமணி டில்லிக்கு அனுப்பப்படுகிறான் (ஆனால் காரணம் வேறு; கேப்டன் மோகன் சிங் தலைமையில், போஸ் அமைக்கவிருக்கும் “இந்திய தேசிய ராணுவ”ப் பணிகளின் ரகசிய செய்திப் பரிமாற்றங்களுக்கான ரேடியோ டிரான்ஸ்மீட்டர் கருவியை, ரவீந்திர சென் குப்தாவிடமிருந்து பெற்று வருவது). டில்லியில் ரங்கமணிக்கு இரகசியக் குழுவின் உறுப்பினர் தேவிகாவின் அறிமுகம் கிடைக்கிறது. அமெரிக்க பத்திரிகையாளர் மில்லரும், கிரிப்ஸ் செய்தியாளர் சந்திப்பில் அறிமுகமாகி நட்பாகிறார்.
1942 ஆகஸ்ட். டிரான்ஸ்மீட்டரின் மீதிப் பாகங்களை வாங்க பம்பாய் செல்லும் ரங்கமணி, அங்கும் தாஜ் ஹோட்டலில் மில்லரை சந்திக்கிறான். மில்லர் காங்கிரஸ் கமிட்டியின் பம்பாய் கூடுகையில் செய்தி சேகரிப்பதற்காக வந்திருக்கிறார். 8-ம் தேதி “வெள்ளையனே வெளியேறு இயக்கம்” காந்தியால் அறிவிக்கப்படுகிறது. மறுநாள் அதிகாலையிலேயே காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். நாடெங்கும் பதட்டம்; கொந்தளிப்புகள். கொதித்தெழும் மக்கள் கூட்டம், தலைவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் நாடு முழுதும் ஒத்துழையாமை இயக்கத்தின் பேரால் கட்டவிழ்கிறது. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
இங்கு திருநெல்வேலியிலும் திரிவேணியின் தலைமையில் நடந்த பேரணியில் வன்முறை. வெங்குவும், திரிவேணியின் அத்தையும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிறார்கள். தாயைப் போன்ற அத்தையின் இழப்பில் மனம் உடையும் ரங்கமணி, பழிவாங்க ஏதேனும் செய்யத் துடிக்கிறான். இரவு, சுயேட்சை அச்சகத்தில் குழு கூடுகிறது. சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றுப் பாலத்தை வெடி வைத்துத் தகர்த்து, 500/600 வெள்ளையர்கள் பயணிக்கும் ரயிலை கவிழ்க்க திட்டம் தீட்டப்படுகிறது.
அன்றிரவு…
திரிவேணியும், தீக்ஷிதரும் ரங்கமணியை ஒருமுறையாவது காந்தியைச் சந்திக்குமாறு சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். காந்தியைச் சந்தித்தால் தன் மனதை மாற்றி அஹிம்சை வழியில் திருப்பிவிடுவாரோ என்ற பயத்தினாலேயே அவரைச் சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறான் ரங்கமணி. ஒருமுறை தீக்ஷிதருடன் வார்தா ஆசிரமம் வரை சென்றுவிட்டு காந்தியைப் பார்க்க பயந்துகொண்டு தீக்ஷிதரிடம் கூட சொல்லாமல் அவருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறான்.
சேரன்மாதேவி சம்பவத்திற்குப்பின் நடந்த நிகழ்வுகளால் மனம் வெதும்பி கலங்கிப்போய், வாழ்க்கையில் விரக்தியடைகிறான் ரங்கமணி. ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசத்தில் இருக்கும்போது, நாடு சுதந்திரம் அடைந்து, சிறையிலிருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படும்பொழுது, ரங்கமணியும் விடுதலையாகிறான்.
1948 ஜனவரி 30. காந்தியைச் சந்தித்து அவருடனேயே தங்கிவிடும் முடிவுடன், தீக்ஷிதருடன் கிளம்பி டில்லிக்கு வருகிறான் ரங்கமணி (தான் சிறுவனாயிருந்த போது காந்தி பரிசாகத் தந்த சிலுவையையும் உடன் எடுத்து வருகிறான்). அப்போது காந்தி டில்லி பிர்லா மாளிகையில் தங்கியிருக்கிறார். டில்லி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி பயணியர் விடுதியில் அறை எடுத்து தங்குகிறார்கள் தீக்ஷிதரும், ரங்கமணியும். தீக்ஷிதர் பிர்லா மாளிகைக்குச் சென்று காந்தியைச் சந்தித்து ரங்கமணியைக் கூட்டிவர அனுமதி/நேரம் கேட்கச் செல்கிறார். விடுதியில் மற்றொரு அறையில் தங்கியிருக்கும் விநாயக ராவும், நாராயண ராவும் ரங்கமணிக்கு பரிச்சயமாகிறார்கள். அவர்கள், தாங்களும் காந்தியைச் சந்திப்பதற்குத்தான் ஆவலாய் இருப்பதாகவும், ஆனால் இன்று சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை என்றும், இரவு ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்றும் ரங்கமணியிடம் சொல்கிறார்கள்.
மாலை நான்கு மணிக்கு மேல் விடுதிக்கு வரும் தீக்ஷிதர், பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்வதற்கு முன் ரங்கமணியைச் சந்திப்பதாக காந்தி சொல்லியிருக்கிறார் என்று கூறி இருவரும் அவசரமாகக் கிளம்பி பிர்லா மாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கு செல்ல சிறிது தாமதமாகி விட, காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்குக் கிளம்பி வழியில் வந்துகொண்டிருக்கிறார். தீக்ஷிதரும், ரங்கமணியும் சென்று ஜனங்களுடன் வரிசையில் நின்று கொள்கிறார்கள். யதேச்சையாய் பக்கத்தில் பார்க்கும் ரங்கமணி அங்கு விநாயக ராவ் (கோட்சே) நிற்பதைப் பார்க்கிறான்…
வெங்கி
“கல்லுக்குள் ஈரம்” – ர.சு. நல்லபெருமாள்
வானதி பதிப்பகம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


