Jeyamohan's Blog, page 599
April 9, 2023
மதுக்கடல்,கடல்
அன்புள்ள ஜெ.,
‘பாலாபிஷேகம் செய்யவோ…’ எழுபதுகளின் இறுதியில் வானொலியில் குறிப்பாக இலங்கை வானொலியில் நிறைய ஒலித்த பாடல். ஜெயச்சந்திரனின் ஆரம்பகாலப் பாடல். அவருடைய மலையாளப்பின்னணி தெரியாத அந்த வயதிலேயே அவருடைய தமிழ் உச்சரிப்பு ஜேசுதாஸைவிடத் தெளிவாக இருந்ததாக உணர்ந்திருந்தேன். ‘மாஞ்சோலைக் கிளிதானோ…மான்தானோ…’ பள்ளி, கல்லூரிகளில் பாட்டுப்போட்டிகளில் கலக்கிக்கொண்டிருந்தபோது, அவர் பாடியதுதான் ‘மதுக்கடலோ….’ எஸ்.ஜானகியோடு, சங்கர் கணேஷ் இசையில். அநேகமாக நீங்கள் கேட்டிருக்கலாம். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல். பாடலின் வெற்றி நம்மைப்போலவே அது பிறக்கும்நேரத்திலேயே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது போல.
படத்தின் பெயரோ, பாடல்களின் முதல் வரியோ தெரிந்தால் தட்டச்சிக் கண்டுபிடித்து விடலாம். தெரியாவிட்டால் சிரமம்தான். சமீபத்தில் திடீரென்று கண்டசாலா பாடிய ஒரு பாட்டு நினைவுக்கு வராமல் திணறிக்கொண்டிருந்தேன். மனிதனைப் பார்த்து பாரடா..பாரடா…என்று புலம்புவார் என்று மட்டும் நினைவிலிருந்தது. முதல் வரி தெரியவில்லை. குகை திறக்கும் மந்திரம் தெரியாமல் திணறும் அலிபாபாவின் அண்ணனைப்போல தப்புத்தப்பாக சொல்லிப் பார்த்தாலும் வரவில்லை. கடைசியில், கூகுளில் கண்டசாலா, நண்பா, பாரடா என்று தட்டச்சிக் கண்டுபிடித்துவிட்டேன். ‘சுயநலம் பெரிதா…பொது நலம் பெரிதா..’ தான் பாட்டின் ஆரம்பம். தப்பான இடத்தில் சந்தி பிரிப்பதும், தேவையில்லாத இடங்களில் அழுத்தம் கொடுப்பதுமான கண்டசாலாவின் ‘அக்மார்க்’ பாடல்.
‘கண்பாடும் பொன்வண்ணமே..’,’கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை’, ‘நினைக்கும் போதே ஆஹா…’ (ஏ.எம்.ராஜா) ‘இன்பக் காவியம் ஆகும் வாழ்வே..’ (கண்டசாலா, பானுமதி) ‘எளியோரைத் தாழ்த்தி…’, ‘வீடு நோக்கி ஓடிவந்த எம்மையே…’ (டி எம் எஸ்), ‘ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா…’ (ஜிக்கி), ‘கண்ணில் தோன்றும் காட்சி யாவும்….'(நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி, ஜிக்கி), தென்னிலங்கை மங்கை…(எஸ்.ஜானகி) போன்ற தொகுப்புகள் தவறவிடும் பாடல்களையும் ‘கூகுளி’ல் இப்பிடித் தட்டச்சி கண்டுபிடித்துவிட முடிகிறது. ‘காணா இன்பம் கனிந்ததேனோ..(டி ஏ மோதி, பி சுசிலா) நீ வரவில்லையெனில் ஆதரவேது…(சத்யம் பாடியது) இப்பிடி ஒன்றிரண்டு பாடல்கள் பாடியவர்களும் வரலாற்றில் நீடிப்பதைக் காணமுடிகிறது. எனக்கென்னவோ இன்றைய தொழில்நுட்பம் இணையத்தில் வெளியிடப்படும் எல்லாப்பாடல்களுக்கும் ஒருவிதமான அமரத்துவத்தை அளித்துவிடுவதாகத் தோன்றுகிறது.
‘புதைந்தவை’ என்றா சொன்னீர்கள்? நம்முள் புதைந்தவை. ஆனால் நம்மோடு புதையப்போபவை அல்ல. தகவல் வெளியில் புதைந்து கிடப்பவை. நம்முடைய ரசனைத் தீற்றல் கொண்ட யாராலோ தோண்டி எடுத்துக்கொள்ளப்படக் காத்திருப்பவை. ‘இதைக்கேட்ட இன்னொருவரை சந்தித்ததில்லை’ என்று இனிமேல் எப்போதாவது எழுதவேண்டி வந்தால், என்னை நினைவில் கொள்ளவும்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
இரண்டாம் கட்ட யோகப்பயிற்சி வகுப்புகள்
குருஜி சௌந்தரின் இரண்டாம் கட்ட யோக வகுப்பு வரும் ஏப்ரல் 21, 22 மற்றும் 23 தேதிகளில் (வெள்ளி காலை முதல் ஞாயிறு மதியம் வரை) மீண்டும் நிகழவிருக்கிறது.
முதற்கட்ட வகுப்புகள் எளிய அடிப்படைப் பயிற்சிகள். இவை மேலதிகப்பயிற்சிகள். முந்தைய முதல்கட்ட வகுப்புகளில் கலந்துகொண்டவர்களுக்கான இரண்டாம் கட்ட வகுப்புகள் இவை. அதில் பங்குகொண்ட அனைவரும் பங்குகொள்ளலாம். புதியவர்களுக்கான பயிற்சிகள் மே மாதம் நிகழும்
கீழ்க்கண்ட விலாசத்திற்கு எழுதலாம்
programsvishnupuram@gmail.com
விடுதலை உரை, கடிதம்
ஆசிரியருக்கு,
சென்ற ஆண்டு நாமக்கல்லில் விடுதலை என்றால் என்ன ? தலைப்பில் தாங்கள் ஆற்றிய உரையை நேற்றிரவு சுருதி டிவி பொதுபார்வைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இரவு உறங்குவதற்கு முன் முதற்பாதி உரையை கேட்டேன். இன்று காலை எழுந்து இப்பொழுது இரண்டாம் பாதி உரையை கேட்டேன். என் காலைகள் ஒன்பது மணிக்கு விடிந்து பதினொரு மணிக்கு தொடங்குவதால் உங்கள் கணக்கிற்கு நண்பகல் என்று வைத்து கொள்ளலாம்.
முதல் அமர்வில் விடுதலையை குறித்து நாம் வைத்து கொள்ள மயக்கங்களை குறிப்பிட்டு பேசினீர்கள். அவற்றை இப்படி சுருக்கலாம். ஒன்று, விடுதலை என்பது வீட்டை – உலகியலை முற்றாக – துறந்து சென்று எங்கோ உள்ள ஒன்றை அடைவது. இரண்டு, விடுதலை அடைந்தவர் ஒரு காலம் இடத்திற்கு கட்டுபடாத ஒரு அதிமானுடர். இவ்விரு வகை மயக்கங்களையும் சுமந்தபடி நம் உலகியல் ஆசைகளுக்காக அவற்றை நாடி செல்லுதல். இது அல்ல விடுதலை.
மேற்கண்ட சுருக்கத்தை ஆழ மனதில் பதியவைக்க புதுமைப்பித்தனின் சித்தி கதையில் தொடங்கி தி.ஜா, பிச்சமூர்த்தியின் ஞானப்பால், நித்யா, நடராஜ குரு என விரிவான சுவரசியமான உரையை வழங்கினீர்கள். இரண்டாவது பகுதி தொடங்குவதற்கு முன் விடுதலை என்பது ஒவ்வொருவருக்கும் தனியாகவே அமைய முடியும் என்று சொல்லி நிறைவு செய்தீர்கள்.
இரண்டாவது பகுதியின் தொடக்கம் முறையான தத்துவ கல்வி இன்மையின் குழப்பங்களை சுட்டிக்காட்டி, முறையான தத்துவ கல்வி எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை கூறுவதுடன் தொடங்கியது.
முறையான தத்துவ கல்வி வரலாற்று பார்வையை தன்னகத்தே கொண்டிருக்கும். இன்று பேசப்படும் ஒரு கருத்துரு இதுவரையிலான மானுட வரலாற்றில் எவ்வண்ணம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டிருக்கும். அடுத்து contextual – அதாவது தன் பேசுதளம் சார்ந்த தெளிவை கொண்டிருக்கும். தன்னுடைய தரப்பு என்ன என்பது தொடங்கி அது பிற தரப்புகளுடன் கொண்டுள்ள உறவை முழுமையாக கணக்கெடுத்து கொண்டே பேசும். இந்த இடத்தில் கலை சொற்களை கையாள்வதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தீர்கள். மேற்கண்ட இரு வழிகளின் வாயிலாக அறியும் போது தான் ஒரு கலைச்சொல் குறித்து முழுமையான பொருளை ஒருவன் அடைய முடியும். அதே போல் சரியான ஒரு தத்துவ மாணவன் தன் அனுபவ தளத்தில் இருந்து தொடர்படாத கலைச்சொல்லை ஒருபோதும் அவசியமின்றி கொட்டி இறைக்க மாட்டான்.
இப்படியான முன்விளக்கத்துடன் விடுதலை – முக்தி அல்லது மோட்சம் – சொல் இந்து மதத்தில் எப்படி விளக்கப்படுகிறது என்று சொல்ல தொடங்கினீர்கள். அதற்கு முன் இந்து மதம் என ஒன்றில்லை என சொல்லும் போலி அறிவுஜீவிகளின் வாதத்தை சங்கரரின் ஷண்மத ஸங்கரகத்தை சொல்லி மறுத்துவிட்டு இந்து மதம் என்பது ஆறு மதங்கள், ஆறு தரிசனங்கள்\தத்துவங்கள், பிரஸ்தான த்ரயம்(மூன்று தத்துவங்கள்) ஆகியவற்றை கொண்டது. சாக்தம் (சக்தியை மைய வழிபாட்டு தெய்வமாக கொண்டது), சைவம் (சிவனை), வைணவம் (விஷ்ணுவை), காணபத்யம் (கணபதியை), கௌமாரம் (குமரனை\முருகனை), சௌரம் (சூரியனை) என்பன ஆறு மதங்கள் ஆகும். சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் என்பன் ஆறு தரிசனங்கள் ஆகும். பிரஸ்தான த்ரயம் என்பவை உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் கீதை.
இவற்றில் ஒருவன் விடுதலை போன்ற ஒரு கருத்துருவூ பற்றி பேச தொடங்கினான் என்றால் அவனிடம் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் மூன்று. அது எந்த மரபு சொல்லும் விடுதலை ? அவனுடைய ஆசிரியர் யார்? அதை விளக்க அவன் பயன்படுத்தும் தர்க்க அமைப்பு எந்நூலின் அடிப்படையில் அமைந்தது ? இம்மூன்று கேள்விகளும் எந்தவொரு தத்துவ விவாதத்திலும் அடிப்படை தேவைகள். ஒரு தத்துவ உரையிலும் இவையில்லாது செயல்படுகையில் வெவ்வேறு காலக்கட்டத்தின் பொருள் கோள்களை தன்னிச்சையாக மனம்போன இணைத்து முரண்பட்ட குழப்பமூட்டும் சித்திரத்தை அடையவே வழி வகுக்கும்.
இதன் பின்னணியில் ஆறு தரிசனங்கள் சொல்லும் நான்கு வகை விடுதலையை குறித்து சுருக்கமான விளக்கத்தை அளித்தீர்கள். சாங்கியம் பேத புத்தியை களைதலை விடுதலையாக முன்வைக்கிறது. அது முன்வைக்கும் பிரபஞ்ச தரிசனத்தை பார்த்தால் தான் இந்த பேத புத்தி களைதல் என்பது என்னவென்று பொருள்படும். ஆதியில் மூல பிரக்ருதி இருந்தது. அதனுள் சத்வ, ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களும் சமநிலையில் இருந்தன. ஏதோ ஒரு மாயக்கணத்தில் அந்த சமநிலை மாறுபட்டது. முக்குணங்களும் ஒன்றுடனொன்று இணைந்து மீண்டும் அச்சமநிலைக்கு வர முயல்கின்றன. அதன் விளைவாக இன்று நாம் காணும் இந்த பரு பிரபஞ்சம் மூல பிரக்ருதி பிரிந்து பிரிந்து உருவான பிரக்ருதிகளால் ஆனது. இது என்றோ ஒருநாள் மீண்டும் மூல பிரக்ருதியாக மாறும். இப்படி முக்குணங்கள் உள்ளன என்றால் அதை பார்ப்பவன் யார் ? அவனே புருஷன். புருஷனின் முன் பிரக்ருதி தன்னை நிகழ்த்தி கொள்கிறது. மூல பிரக்ருதி பரம புருஷனின் முன் இருக்கிறது. இப்படி விரிந்து பரவும் புருஷனை யோகத்தின் மூலம் பரம புருஷ நிலைக்கு செல்ல இயலும். அதாவது காவிரியை தலை காவிரிக்கு கொண்டு செல்வது போல. அந்நிலையில் பலவாக தெரியும் பிரக்ருதி தன் மூலத்தில் ஒன்றாக இருப்பதை உணர்வான். அதுவே சாங்கியம் சொல்லும் பேத புத்தி களைதல். ஒரு துளி தன்னை கடலில் ஒரு துளியாக, கடலாக உணரும் நிலை. எனவே பதஞ்சலியின் யோக சூத்திரம், யோக சித்த விருத்தி நிரோதஹ என தொடங்குகிறது.
வைசேஷிகம் சொல்லும் விடுதலை என்பது ஒன்றை வகுத்து கொள்ள முடியாமையில் இருந்து விடுபடுதலை குறிக்கிறது. துயரம் என்பதே ஒன்றின் காரணத்தை அறிய முடியாமையில் இருந்து தொடங்குவது. ஒன்றை அறிந்து வகுத்த அக்கணம் அத்துயரத்தை கடந்து விடுகிறோம் என்கிறது. வைசேஷிகம் சொல்லும் பிரபஞ்ச தரிசனம், ஒவ்வொன்றிற்கும் ஒரு தன்மாத்திரை குணம் கொள்ளாது. அக்குணத்தை உருவாக்குவது அப்பொருளின் மீச்சிறு அலகு. அதை அணு என குறிக்கிறது. எனவே வைசேஷிகம் அணுக்கொள்கை என்றழைக்கப்படுகிறது. தீயை உருவாக்குவது தீ தன்மை என்றவாறு மிக விரிவான தத்துவ கட்டமைப்பை கொண்டது. ஒவ்வொன்றின் குணத்தையும் அறிந்து வகுப்பதன் ஊடாக அதன் மூலமாக வரும் துயரத்தை கடக்கிறோம். அதுவே வைசேஷிகம் சொல்லும் விடுதலை. know it, define it, cause it – that’s all.
பூர்வ மீமாம்சம் வேள்வியை மையமாக கொண்டது. வரலாற்று நோக்கில் பூர்வ மீமாம்சத்தில் வேள்விக்கு கட்டுப்படாத எந்த தெய்வமும் கிடையாது. இந்திரன், யமன், வருணன், குபேரன், சூரியன் என தேவர்கள் அனைவரும் இயல்பில் அசுரர்களே. வேள்வி செய்து அவியளித்து அவர்களை தேவர்கள் ஆக்கி வைத்துள்ளோம். இங்கு ஆற்றப்படும் செயல்களின் உச்ச பயனை அவர்களுக்கு அவியளித்து அதற்கு மாற்றாக அங்கே மறுமையில் அப்பயனை சேமித்து வைத்தல். இங்கே இப்படி சொல்லும் போது பூர்வ மீமாம்சம் ஒரு மாற்று குறைந்தது போல உங்களுக்கு தோன்றும். ஆனால் பூர்வ மீமாம்சம் தன்னளவில் மிகப்பெரும் அறிவு துறை. அந்த சந்தஸ் சாத்திரம் பெரும் பங்களிப்பாகும் என்று குறிப்பிட்டீர்கள். அதே போல கேரள கடவலூரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிராத்ர வேள்வியை குறிப்பிட்டு 64 கலைகளின் உச்சமும் நிகழ்ந்த பின்னரே நிகழ்த்தப்படும். உலகியலில் முழுமை நிகழ்ந்து பின்னர் அதனை அவியளித்தல். பூர்வ மீமாம்சம் சொல்லும் விடுதலையை இவ்வண்ணம் அறிமுகம் செய்தீர்கள்.
உத்தர மீமாம்சம் அல்லது வேதாந்தம். கடந்த 2300 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உறுதியாக நிற்கும் தத்துவ தரப்புகளில் ஒன்று. வேதாந்தத்தின் தொடக்கம் ரிக் வேத இறுதி காண்டத்தில் அமைந்துள்ள சிருஷ்டி கீதமே தொடக்கமாகும். மாக்ஸ் முல்லர், ஜாக்கோபி போன்ற முக்கியமான இந்தியவியல் அறிஞர்கள் கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் இந்தியாவில் தோன்றிய முதன்மையான கவிதையாக கருதுகிறார்கள். விஷ்ணுபுரத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட அப்பாடலின் இறுதி வரிகளை நினைவு கூர்ந்து சொன்னீர்கள். அதன் பின் வேதாந்தம் இங்கனைத்திற்கும் மூலமாய் உள்ளதை ‘அது’ ‘தத்’ என்கிறது. பெயர் வசதிக்காக பிரம்மம் என அழைக்கிறது. அதை உணர இவையனைத்தையும் விலக்கி விலக்கி சென்று தொடுதல் என்று சொல்லி ஒன்றொன்றாய் தொட்டெண்ணி ஒடுங்கிடும் பொருள் நின்றிடும் பரம் என்ற நாரயண குருவின் வரிகளை குறிப்பிட்டீர்கள். வேதாந்தம் சொல்லும் விடுதலை என்பது இதுவே.
இவை நான்கும் நான்கு வெவ்வேறு வகையான விடுதலைகளை முன்வைப்பவை. அவரவர் இயல்புக்குரியதை அவரவரே தற்கண்டடைதல் வேண்டும். உங்கள் இயல்பு தொட்டுதொட்டு விரிவதாக இருந்தால் யோகம் உங்களுக்கு ஒருங்கிணைவை வழங்கும். ஒன்றை வகுத்து அறியா முடியாமையின் தத்தளிப்பு தான் உங்கள் பிரச்சினை என்றால் வைசேஷிகம் விடுதலையை வழங்கும். செயல்களின் ஊடாக ஆற்றப்படும் யோகம் எனில் பூர்வ மீமாம்சத்தை சேரலாம். உங்களுடைய பிரச்சினை மிகையான தன்னிலை\ அகங்காரம் தான் எனில் வேதாந்தம். ஆனால் இவற்றில் எது உங்களுக்குரியது என்பதை நீங்களே தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவர் அகங்காரம் இல்லாமல் உசாவி கொண்டால் அவரால் தன் விடுதலைக்கான பாதையை எளிதாக தேர்ந்தெடுத்து கொள்ள முடியும். இறுதியாக, விடுதலை என்பது எய்தப்படுவதல்ல, திகழ்வது. எது ஒவ்வொரு காலடியிலும் உங்களை நிறைவாக உணர செய்கிறதோ அதுவே உங்கள் விடுதலைக்கான பாதை என்று சொல்லி முடித்தீர்கள்.
இந்த பாதையில் உங்களுக்கு வழிகாட்ட ஒரு குரு அமைவாரெனில் அது நல்லூழ் என்றும், நவீன ஓவியத்தை பார்ப்பதன் ஊடாக நம் பார்வையில் ஏற்படும் மாற்றத்தை போன்றது மெய்யியல் பாதையின் பயணம் என விளக்கி முடித்தீர்கள். இவையெல்லாம் என் நினைவில் நின்றவற்றின் சாரம். இது அல்லாது நீங்கள் கூறிய உவமைகள், நிகழ்ச்சிகளும் மனதில் உள்ளன. அவற்றை என்னால் கச்சிதமாக இணைக்க முடியவில்லை. ஓரிடத்தில் வேதாந்தினை விளக்க சூரியனை தலைதூக்கி பார்க்கும் உவமை கூறினீர்கள். அது போன்று நிறைய.
இந்த உரையை கேட்டு முடித்த பின் நேற்றைய என் கடிதத்தில் குறிப்பிட மறந்து போன ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது. தத்துவ நூல்களை கற்க எத்தனித்தேன் என்று சொன்னேன் அல்லவா ? அவை என்ன நூல்கள் என்று சொல்லவில்லையே! அவை ஹிரியண்ணா எழுதி 1966 ஆல் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய தத்துவ அறிமுக நூல்கள். பொருளடக்கத்தை பார்க்கையில் நீங்கள் சொல்வது போல வரலாற்று ரீதியான பார்வை ஒன்றை உருவாக்கி கொள்ள இயலும் என்று தோன்றியது. ஆனால் அதற்குள் தற்கல்வியும் தத்துவமும் கட்டுரை தொடரை வாசித்து என் ஐயம் பெருகியதால் தொடங்காமல் நிறுத்தி வைத்துள்ளேன். நீங்கள் தொடர்ச்சியாக சுட்டிகாட்டும் பிழை என்பது வரலாற்று நோக்கில்லாமல் கைக்கு கிடைத்தவாறு முறையற்று ஆன்மீக தத்துவ நூல்களை வாசிக்கும் செயலை. அதற்கு மாற்றாக தத்துவ வகுப்பிற்கு வருவதற்கு முற்பட்ட காலத்தில் இம்மாதிரி கல்விதுறை சார்ந்து கிடைக்கும் வரலாற்று நோக்கில் அமைந்த முறையான தத்துவ நூல்களை கற்கலாம் தானே ? என்பது என் கேள்விகளில் ஒன்று.
அன்புடன்
சக்திவேல்
April 8, 2023
வெண்முரசு குடும்ப வாசிப்பு
அன்புள்ள ஜெ
ராஜேந்திரன் தண்டபாணி புகழ்பெற்ற நிர்வாகி. அவர் தன் அம்மா சுசீலா சுவாமிநாதன் அவர்களுக்கு தொடர்ச்சியாக வெண்முரசு வாசித்துக் காட்டுகிறார். ஒவ்வொரு நூல் முடிந்ததும் ஒரு படத்துடன் அறிவிப்பை வெளியிடுகிறார். அந்தப்படங்கள் அருமையாக உள்ளன. அவற்றையே வரிசையாகத் தொகுத்து வெண்முரசு மீதான வாசிப்பு பற்றிய ஓர் ஆவணப்படமாக ஆக்கலாமென தோன்றுகிறது. வெண்முரசு இப்படி நுட்பமாக வாசிக்கப்படுவதென்பது வியப்பளிக்கிறது.
ஆர்.நாகராஜன்
அன்புள்ள நாகராஜன்,
இந்த தளத்தில் தொடர்ச்சியாக வெண்முரசு வாசகர்களின் விரிவான கடிதங்கள், கட்டுரைகள் வெளிவருவதை நீங்கள் கண்டிருக்கலாம். வெண்முரசு எழுதப்பட்ட முதல் ஆண்டு முதல் இன்று வரை மிகத்தீவிரமாகத் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வரும் ஒரு படைப்பு. வாசிப்போ நூல்விற்பனையோ குறைந்ததே இல்லை. அச்சிட அச்சிட தீர்ந்துகொண்டே இருக்கிறது. உண்மை என்னவென்றால் இத்தனை பெரிய தொகுதிகளை தொடர்ச்சியாக அச்சிட்டு அனைத்தையும் விற்பனையில் வைத்திருக்குமளவுக்கு இங்கே அச்சகங்கள் சுறுசுறுப்பாக இல்லை. புதிய பகுதிகல் அச்ச்சிலிருக்கையிலேயே அச்சிடப்பட்டவை விற்று முடிந்திருக்கும்.
வெண்முரசு வாசிப்புக்குச் சில தனித்தன்மைகள் உண்டு. வெண்முரசு வாசகன் எளிமையானவன் அல்ல. எளிய வாசகன் அந்த பக்க அளவைக் கண்டதுமே திகைத்து பின்வாங்கிவிடுவான். சில்லறை நையாண்டிகளை எங்காவது முகநூலில் சொல்லிக்கொண்டிருப்பான். வெண்முரசை வாசிப்பவன் வாசிப்பு என்னும் செயலில் நல்ல தேர்ச்சி கொண்டவன். தன்னியல்பாக மொழியில் மூழ்கி காட்சிகளையும் உணர்வுகளையும் அடைபவன். கனவு போல கதைவாசிப்பை நிகழ்த்தக் கற்றவன். வெண்முரசின் அளவே ஒரு பெரிய வடிகட்டி, எளிய வாசகர்களை அது வெளியே தள்ளி விடுகிறது.
வெண்முரசு தூயதமிழில் உள்ளது. பல்லாயிரம் புதிய சொற்கள் அதிலுள்ளன. இந்திய மெய்ஞான மரபு பற்றிய சொற்கள் புதிதாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆகவே அடிப்படைத் தமிழ்ப்பயிற்சி கொண்டவர்கள் அதை எளிதில் வாசிக்க முடியும். ஆனால் நான் கண்ட ஒன்றுண்டு, அதன் அளவே அந்த மொழியை கற்பிக்கிறது. தொடர்ந்து வாசிக்கமுடிந்தால், அந்த மொழியை அந்த வாசிப்பின் வழியாகவே ஆழமாக அறிந்துகொள்ளலாம். அறியாத ஒரு சொல் இரண்டுமுறை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திரும்ப வரும்போது தெரிந்ததாக ஆகிவிடும்.
பிற படைப்புகளுக்கு உள்ள மிக முக்கியமான குறைபாடு வெண்முரசுக்கு இல்லை. அதை contextualization எனலாம். எந்தப் புனைவானாலும் அது நிகழும் சமூகச் சூழல், பண்பாட்டுச்சூழல், காலச்சூழல் மேல் நமக்கு ஆர்வமும் ஓரளவு அறிமுகமும் இருக்க வேண்டும். பெரிய நாவல்கள் அந்த நாவல்களின் கதையோட்டம் வழியாகவே அவற்றை அறிமுகம் செய்துவிடும். ஆனாலும் உள்ளே போக கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். சிலசமயம் பல்வேறு உளத்தடைகளால் நம்மால் உள்ளே செல்லமுடியாது.
அவ்வாறு உள்ளே சென்றால்கூட அந்தச் சூழலில் உள்ள நிகழ்வுகள் மற்றும் பொருட்களை படிமங்களாக விரித்தெடுத்துக்கொள்ள நம்மால் இயலவேண்டும். இல்லையேல் குறைப்பட்ட மேலோட்டமான வாசிப்பே நிகழும். அந்த ஆசிரியர் அவற்றை படிமங்களாக ஆக்கியிருந்தால்கூட நம் ஆழுளம் அவற்றை படிமங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருந்துவிடக்கூடும். காரணம் அவை நமக்கு முன்னரே தெரிந்திராதவை. அவற்றை நமக்கு ஏற்கனவே தெரிந்த நிகழ்வுகள் மற்றும் படிமங்களுடன் இணைத்தால் மட்டுமே நம் ஆழுளம் அவற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
அத்தகைய நாவல்களிலுள்ள நிகழ்வுகளும் பொருட்களும் படிமங்களானாலும்கூட அவை மேலும் ஆழ்ந்து சென்று நம் அகத்திலுள்ள ஆழ்படிமங்களை தொட்டு எழுப்பி அவற்றுடன் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக, ஒரு கடல்சார் நாவலில் மீன்பிடி வலை பற்றி வருகிறது. விரிகடலில் வலைவீசுவதை நாம் படிமமாக ஆக்கினாலொழிய அது கலைப்படைப்பாக ஆவதில்லை. ஆனால் நமக்கு மீன்பிடி வலை பற்றித் தெரியாது. அதை நாமறிந்த வலைகளுடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளவேண்டும். நம் ஆழத்தில் வலை என்னும் ஆழ்படிமம் உள்ளது. பிறவிவலை, கர்மவலை என பலவாகப்பிரிவது. அங்கே அந்தப்படிமம் சென்று தொடவேண்டும்.
இது எல்லா வாசகர்களாலும் இயல்வதில்லை. ஆகவே பெரும்பாலான சமகாலம் யதார்த்தப் படைப்புகளை ‘வாழ்க்கையை பதிவு செய்பவை’ என்ற அளவில் வாசித்துவிட்டு போகிறார்கள். இளமையில் வெவ்வேறு வாழ்க்கைகளை அறியும் ஆர்வமிருக்கும் காலகட்டத்தில் வாசிக்கிறார்கள். நடுவயது கடந்தபின் தன்னை, தன் அகத்தை அறிவதே முதன்மைப்படுகிறது. அப்போது புறவாழ்க்கைகளைச் சொல்லும் படைப்புகள்மேல் ஆர்வம் உருவாவதில்லை.
இந்த படிநிலைகள் எதுவுமே வெண்முரசு போன்றவற்றுக்கு இல்லை. அவை நேரடியாகவே படிமங்களாக உள்ளன. நேரடியாகவே நம் ஆழ்படிமங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன. ஆகவே உணர்ச்சிகரமாகவும் கவித்துவமாகவும் நம்மால் மிக எளிதில் ஈடுபட முடிகிறது. இன்று வாழும் ஒரு மனிதனை புரிந்துகொள்வதை விட நம்மால் மகாபாரத கதாபாத்திரத்தை புரிந்துகொள்வது எளிது. ஒரு முதிய குடும்பத்தலைவன் கதாபாத்திரத்தை புரிந்துகொள்வதை விட பீஷ்மரைப் புரிந்துகொள்வது எளிது. சொல்லப்போனால், பீஷ்மரைக்கொண்டுதான் நாம் ஒரு முதிய குடும்பத்தலைவரைப் புரிந்துகொள்கிறோம்.
இக்காரணத்தால் நவீன இலக்கிய அறிமுகமே இல்லாதவர்கள்கூட வெண்முரசு நாவல் வரிசையை இயல்பாக வாசிக்கவும், பெரும்பாலும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவும் முடிகிறது. அதற்கான முன்தயாரிப்புகள் அவர்களுக்கு மரபில் இருந்து வந்திருக்கிறது. அவர்கள் மகாபாரதத்தை வெண்முரசில் வாசிக்க ஆரம்பிக்கிறார்கள், மிக எளிதில் அதிலுள்ள நவீன அழகியல்கூறுகளையும் தரிசனங்களையும் வந்தடைகிறார்கள். மிக வயதானவர்கள் கூட வாசித்துவிட்டு எழுதியிருக்கிறார்கள். மிகமிக இளையவர்கள் வாசித்துவிட்டு எழுதியிருக்கிறார்கள்.
நானறிந்து பலநூறு குடும்பங்களில் குடும்பமே அமர்ந்து வெண்முரசு வாசித்திருக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே வெண்முரசு சார்ந்த நீண்ட உரையாடல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துள்ளன. குழந்தைகளுக்கு வெண்முரசு தினம் ஒரு அத்தியாயம் வீதம் கதை சொன்னவர்கள் உண்டு. நாள்தோறும் தூங்குவதற்கு முன் வாசித்துக் காட்டியவர்கள் உண்டு. இதேபோல அம்மா, அப்பாக்களுக்கு வாசித்துக் காட்டிய, வாசித்துக் காட்டும் பலர் உண்டு.
இளையதலைமுறை வெண்முரசின் கதையோட்டம், கதைமாந்தர்களுக்காக வாசிக்கிறது. ஆனால் கூடவே இந்திய இலக்கிய அழகியல், இந்திய பண்பாட்டுமரபு, இந்தியக் கலை, இந்திய தத்துவம் ஆகியவையும் அவர்களுக்குச் சென்றுசேர்கிறது. வெண்முரசில் ஏறத்தாழ எல்லா இந்திய தொன்மங்களும் உள்ளன. முதியவர்கள் அவர்கள் இன்னொருவகையில் அறிந்த ஒவ்வொன்றையும் மீள்கண்டடைவு செய்ய முடிகிறது.
ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். அவருடைய முதிய தந்தைக்கு அவர் கொடுக்கக்கூடிய ஒன்றுமே இல்லை. அவர் அமெரிக்காவில் இருக்க தந்தை தனியாக இந்தியாவில் இருந்தார். தந்தையிடம் வேண்டிய பணம் இருந்தது, தேவைகளும் இல்லை. ‘உங்களுக்கு என்ன வேணும் அப்பா?” என்றால் “ஒண்ணுமே வேணாம்” என்றே பதில் சொல்வார். 2019 ல் வெண்முரசு தொகுதிகள் வாங்கிக்கொடுக்க ஆரம்பித்தார். அப்பாவால் வாசிக்கமுடியாது, கண் பிரச்சினை. அருகே ஒரு கல்லூரி மாணவியை ஊதியம் கொடுத்து ஏற்பாடு செய்தார். ஒருநாள் இரண்டு அத்தியாயம் வாசித்துக் காட்டவேண்டும். அப்பாவுக்கு தான் அளித்த மிகப்பெரிய பரிசு அது என அந்த நண்பர் எழுதியிருந்தார்.
ஆண்டுக்கணக்காக அந்த வாசிப்பு நீண்டது. அப்பா முழுமையான மகிழ்வில் இருந்தார். அவருடைய வாழ்க்கையின் வெறுமை முற்றிலும் அகன்றது. கற்பனையும் கனவும் நிறைந்த ஓர் உலகில் வாழ்ந்தார். வெண்முரசு தவிர எதைப்பற்றியும் பேசுவதில்லை. வெண்முரசு முடிந்தபின் மீண்டும் ஆரம்பித்து நீலம் வாசித்தார். அதன்பின் முதற்கனல் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தார்
எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே எவரேனும் சில வாசகர்கள் வெண்முரசு வாசிப்பு எப்படி ஒரு குடும்ப நிகழ்வாக உள்ளது, அது குடும்பத்திலுள்ள வெறுமையை எப்படிப் போக்கியது என்று என்னிடம் சொல்வதுண்டு. நவீன வாழ்க்கை இன்று நாம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வட்டத்திற்குள் அடைத்துவிடுகிறது. நூறாண்டுகளுக்கு முன் அப்பா, மகன், தாத்தா அனைவரும் ஒரே தொழில் செய்து ஒரே உலகில் வாழ்ந்தனர், இன்று அவ்வாறல்ல. அவர்கள் நடுவே பேசிக்கொள்ள பொதுவாக ஒன்றுமே இருப்பதில்லை.
சென்ற காலங்களில் கொஞ்சம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பேசிக்கொண்டார்கள். இன்று அதையும் அந்தரங்கமாக வைத்துக் கொள்கிறோம். அதைப்பற்றிய விசாரிப்புகளை எவரும் விரும்புவதில்லை. எனில் பேச என்னதான் உள்ளது? அரசியலோ பிற சமகால நிகழ்வுகளோ மிகமிக எதிர்மறையானவை. மிக எளிதில் பூசல்களை கொண்டுவருபவை. வெண்முரசு இன்னொரு உலகம். கனவுலகம். உச்சங்களும் அழகுகளும் மட்டுமே கொண்டது. அனைவரும் அதில் ஈடுபட முடிகிறது. பொதுவான ஒரு பேசுபொருளாக அது அமைகிறது.
அடுத்த கேள்வி, வெண்முரசேதான் வேண்டுமா? தேவையில்லை. அதேபோல அனைவருக்கும் பொது ஈடுபாடுள்ள ஏதேனும் நூல் போதும். ஆனால் நான் பார்த்தவரை ஒன்றுள்ளது, பழைய மகாபாரதம் அல்லது ராமாயணம் வாசிக்கலாம். ஆனால் அதை வாசிக்கும் இளைய தலைமுறைக்கு அவற்றின் மொழிநடையும், அவற்றின் கூறுமுறையும் ஈர்ப்பை உருவாக்குவதில்லை. ஆர்வத்துடன் தொடங்கும் வாசிப்பு மிக எளிதில் நின்றுவிடுகிறது. அதேபோல ஒரு புதியவகை படைப்பு என்றால் முதியவர்கள் விலகிவிடுவார்கள். வெண்முரசு மரபுக்கும் நவீன இலக்கியத்திற்குமான ஓர் இணைவு. ஆகவே அது அந்த இடத்தை வகிக்கிறது.
நான் எண்ணியது வெண்முரசுக்கு அவ்வாறு ஒரு வாசிப்பு அமையவேண்டும் என்றுதான். முந்தைய தலைமுறை வரை வருந்தலைமுறை வரை அனைவருக்குமான ஆக்கமாக திகழவேண்டும்.
தமிழில் நவீன இலக்கியம் என வரையப்பட்டிருக்கும் அபத்தமான ஒரு வட்டம் என்னை சிறைப்படுத்துகிறது என்பதை எழுதவந்த காலம் முதலே உணர்ந்திருக்கிறேன். 1985 முதல் எழுதிய கடிதங்களிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். சுரேஷ்குமார இந்திரஜித் அண்மையில் என் பழைய கடிதமொன்றை வெளியிட்டபோது அதில் நான் அப்படி எழுதியிருந்ததை கண்டேன். விஷ்ணுபுரமே அதற்கான முயற்சிதான்.
ஜெ
இறையரசன்
[image error]இறையரசனின் இயற்பெயர் மகாராஜா.இறையரசன் 1938-ல் தன் பத்தாம் வயதில் பெற்றோரை இழந்தார். தூத்துக்குடி அனாதைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். தூத்துக்குடி ஆயர் திபூர்ஸியுஸ் ரோசின் தூண்டுதலால் கிறிஸ்தவராக மாறி 1938-ல் கூட்டப்பாடு பெரியசாமிபுரத்தில் திருமுழுக்குப் பெற்று தன் பெயரை ஜேசுராஜா என்று மாற்றிக்கொண்டார்.அவருடைய முதன்மை ஆக்கமான உலகஜோதி என்னும் காவியம் அவர் மறைவுக்குப்பின் ஒரு மாதம் கழித்து வெளியாகியது.
இறையரசன்
இறையரசன் – தமிழ் விக்கி
அருண்மொழி உரை, கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
திருவாரூர் புத்தக விழாவில் அருணாவின் உரையை கேட்டேன். அருணா முன்பெப்போதும் எந்த புகைப்படத்திலும் இத்தனை அழகு மிளிர இருந்ததில்லை. தாய் மண் அப்படி கூடுதல் அழகாக்கிவிடுகிறது போல. பிறந்த ஊரில் வேண்டியவர்கள் முன்பு ஒரு மேடை என்பது அளித்த நிறைவின் வெளிப்பாடே இந்த கூடுதல் அழகு. அதே உணர்வு தான் துவக்கத்தில் அவரை கொஞ்சமே கொஞ்சம் தடுமாற வைத்திருக்கிறது.
இசை சிற்பம் ஓவியம் பரதம் என்று பல கலையை சேர்ந்த பிரபல ஆளுமைகளை சொல்லி திருவாரூரின் பெருமைகளை துவக்குகிறார். சமையலில் ஃபில்டர் காபியில் தொடங்கி சரபோஜி மன்னரின் அவையிலிருந்து கிடைத்த சாம்பாரிலிருந்து இட்லி வரை ஊரின் பெருமையை மணக்க மணக்க சொல்லும் அருணா இவற்றையெல்லாம் ஒரு கலைஞன் அவசியம் அறிமுகமாவது கொண்டிருக்க வேண்டிய உபகலைகள் என்றபோதுதான் அவர் எதிலிருந்து மையப்புள்ளிக்கு வருகிறார் என்று புரிகிறது.
மரபிலக்கியம், நவீன இலக்கியம் பேசத்துவங்குகையில் அவை அவரது ஹோம் கிரவுண்ட் என்பதால் உரை நிதானமாக அழுத்தம் திருத்தமாகிவிட்டது. மரபிலக்கியத்தில் திருவாரூரின் கணிசமான பங்கையும் எப்படி மணிக்கொடி தீவிர இலக்கியத்துக்கு விதையூன்றியது என்பதையும் சொல்கிறார்.
பெட்டிக்கடை கவிதை எப்படி ஆரம்பத்தில் கவனிக்கப்படாமல் போனது பின்னர் எப்படி அது புதிய கவிதை மரபாக வரவேற்கப்பட்டது என்பதையும் அருணா சொல்லித்தான் அறிந்துகொண்டேன்.பின்னர் கு ப ரா, மெளனி ஆகிவர்களை உதாரணமாக கொண்டு சிறுகதை வடிவத்துக்கு வருகிறார். மெளனியின் இருத்தலியல் சிக்கலை சொல்லிய பிரபஞ்ச கானத்தை, கு ப ராவின் விடியுமாவை பேசுகையில் அருணா மேடைப் பேச்சுக்களில் தன்னை மறந்து மூழ்கும் பழைய அருணாவாகி விட்டிருந்தார்.தந்தி அனுப்பப்பட்ட சென்னையை, அது வந்து சேர்ந்த கும்பகோணத்தை, போய்க்கொண்டிருக்கும் ரயிலையெல்லாம் கைகளாலே சுட்டிகாட்டி செங்கல் ஒன்றை அங்கிருந்து எடுத்து அதை கார்பன் கணக்கீடு செய்து காண்பித்து அபிநயம் பிடித்து சொல்லும் அதே அருணா.
தி ஜா, லாசாரா, எம் வி வி, க நா சு, இ பா என்று பட்டியலிட்டு ஒவ்வொருவரின் படைப்பிலிருக்கும் நுட்பங்களையும் அவை எழுதப்பட்ட காலத்தை ஒப்புநோக்கி அலசுகிறார்.அந்த கதைகளை முன்பே வாசித்திருந்தாலும் அருணாவின் உரைக்கு பிறகு மீள வாசிக்க வேண்டும் என்று தூண்டல் உருவாகிறது.
மோகமுள்ளின் மெளன இடைவெளிகளை, இளைஞர்கள் யமுனாவை போன்ற பெண்ணை தேடி அலைந்த அளவுக்கான அதன் தாக்கத்தை, கதை முடிவை எல்லாம் சொல்லிய அருணா, பின்னர் அடுத்த தலைமுறை இலக்கியவாதிகளை சுட்டிக்காட்டுகிறார். அவர்களில் பலர் எதிரிலமர்ந்திருப்பதை அருணாவின் கண்கள் வழியே பார்க்க முடிந்தது. தான் முன்பே எழுதியிருக்கும் தன் பால்ய கால கூண்டு வண்டி பயணத்தை சொல்லுகையில் அருணா மானசீகமாக அதில் பயணித்த படியே அல்லிக் குளங்களையும் காவிரியையும் கடந்தபடியே பேசுகிறார்.
உரையில் நான் மிக ரசித்தது எங்க அப்பா அம்மா என்று சொல்கையில் அருணா நெஞ்சில் கை வைத்துக்கொண்டதை. சிறு குழந்தைகள் இப்படி ’’ எங்க வீடு எங்க அப்பாம்மா’’ என்று அவர்களுக்கு சொந்தமென்பவற்றை சொல்லுகையில் எல்லாம் அப்படி நெஞ்சில் கை வைத்து கொள்வார்கள்.தஞ்சையின் மாற்றம், அங்கிருக்கும் கோவில்கள் என்று அவரது நினைவுகளின் வழி உரை ஒழுகி செல்கிறது.
எந்த சமுதாயமும் சரிவை நோக்கி போவதில்லை என்றும் கடந்த காலங்கள் எல்லாம் பொற்காலங்கள் நிகழ்காலங்கள் எல்லாம் அப்படி இல்லை என்பதில் அருணாவுக்கிருக்கும் ஆட்சேபத்தையும், போதாமைகளையும் பெருமைகளையும் உணர்ந்து சமநிலையில் எழுதுபவனே கலைஞன் என்பதையும் சொல்லி,அம்மண்ணைக்குறித்து இன்னும் எழுதப்படாத, எழுத திராணியில்லாதவற்றை குறிப்பிடுகிறார்.மூழ்கி துருவேறிய ஒரு கப்பலை கண்டு டைட்டடானிக் படைக்கும் அவர்களையும் ஒரு நகரமே காலடியில் புதைந்து கிடக்கையில், கண் முன்னே ஒரு மாபெரும் களமொன்று திறந்து எழுதப்பட காத்துக் கிடக்கயில் அவை எழுதப்படாததன் ஆதங்கத்தையும் சொல்கிறார்.
பன்முகத்தன்மை கொண்ட அந்த கலாச்சாரத்தின் எழுதியாக வேண்டிய பல மரபுசார்ந்த தளங்களையும் உதாரணங்களுடன் சுட்டுகிறார்.ஒரு தேக்கரண்டி வாழ்விலிருந்து கொண்டு வரம்பிற்குட்பட்டவற்றை திரும்ப திரும்ப எழுதிக்கொண்டிருக்காமல் வானளாவிய களங்களிலிருந்து எழுதவேண்டுமெனச்சொல்லி உரையை அழகிய விரிந்த புன்னகையுடன் முடிக்கிறார்.
இவற்றை எழுதாமல் இருப்பதன் பேரிலான குற்றச்சாட்டை தன் மீதும் சுமத்திக்கொள்ளும் அருணா நிச்சயம் இவற்றில் அவருக்குகந்தவற்றை விரைவில் எழுதுவார் என்று நினைக்கிறேன், எழுதட்டும் என எதிர்பார்க்கிறேன்
அன்புடன்
லோகமாதேவி
ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
இவ்வாண்டு நூற்றாண்டுவிழா கொண்டாடும் கு.அழகிரிசாமி பற்றிய ஒரு செய்திக்காக கூகிளில் தேடினேன். தேடியதுமே முதலில் வந்தது விக்கிபீடியா. இரண்டாவதாக வந்தது தமிழ்விக்கி. இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உரியதாக இருந்தது. பிரமிக்கவைக்கும் அளவுக்கு கு.அ பற்றிய செய்திகள் தமிழ்விக்கி பதிவிலே நிறைந்திருந்தன. மொத்தமாகவே ஒரு முழுமையான சித்திரம் கிடைத்தது.
உண்மையான ஒரு கலைக்களஞ்சியப் பதிவுக்கு என்ன வடிவம் இருக்கும் என்றும், அதற்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் என்றும் புரிந்தது. அக்கலைக்களஞ்சியப் பதிவை ஒரு வரலாறு என்று சொல்லிவிடமுடியும். ஹிஸ்டரி பகுதிக்குள் போய் எவ்வளவு திருத்தம் நடைபெற்றிருக்கிறது என்று பார்த்தேன். கிட்டத்தட்ட ஐநூறு முறை ரிவைஸ் ஆகியிருக்கிறது. அவ்வளவு பேர் அதில் பங்கெடுத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய உழைப்பு. எத்தனைபேர் கூட்டாகச் சேர்ந்து செய்யும் அறிவுப்பணி.
இத்தனைபெரிய அறிவுப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே கல்வித்துறை சார்ந்த கவனமே இல்லை. அறிவுத்துறையில் செயல்படுபவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். சல்லிகள் அவதூறு சொல்லிக் கூப்பாடு போட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அமைதியாக வேலை நடைபெறுகிறது. காலம் இதையெல்லாம் பதிவுசெய்யும்.
அன்புடன்
ராமமூர்த்தி.கா
அன்புள்ள ஜெ
அண்மையில் ஒரு கல்லூரி இலக்கிய விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கே ந.பிச்சமூர்த்தி பற்றிய அறிமுகம் வாசிக்கப்பட்டது. எங்கேயோ படித்தது மாதிரி இருந்தது. தேடிப்பாத்தேன். தமிழ் விக்கியில் எழுதப்பட்டிருந்த அதே கட்டுரை. வேடிக்கையாக இருந்தாலும் சரியான தகவல்கள் போய்ச் சேர்ந்துள்ளன என்ற ஆசுவாசம் எழுந்தது. கூகிளில் தேடினால் இரண்டாமிடத்தில் தமிழ் விக்கி வந்துவிடுகிறது. முதலிடத்திலுள்ள விக்கிப்பீடியா பதிவு மேலோட்டமாகவே இருக்கும் என்றும் எல்லாருக்கும் தெரியும். ந.பிச்சமூர்த்தி பற்றிய கட்டுரையே உதாரணம். அரிய படங்கள், முழுமையான செய்திகள், சீரான தலைப்புகள் ஆகியவை கொண்ட சிறப்பான கட்டுரை.
’தமிழ்க்குரல்’ செந்தில்வேல்
அனலும் கதிரும் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
எழுகதிர் தொகுப்பில் அனலுக்குமேல் என்னும் கதையை இன்று வாசித்தேன். ஒரு பெரும் திகைப்பு உருவாகியது. துப்பறியும் கதைபோலப் போகும் கதை. ஆனால் அடுக்கடுக்காக வேறேதேதோ சொல்லிச் செல்கிறது. ஆண் பெண் உறவின் நுட்பங்களாக இந்தக்கதையை வாசித்துக்கொண்டே செல்லலாம். இன்னொரு மொழிச்சூழலில் என்றால் இதற்குள் ஒரு அபாரமான சினிமாவாக இந்தக்கதை வந்திருக்கும். அப்படிப்பட்ட கதை. அனலுக்குமேல் என்பதேகூட ஒரு பெரிய குறியீடு. எல்லாமே நெருப்புக்குமேலே நடைபெறுகிறது. நெருப்பு உள்ளே உறங்குகிறது. கொலை, சாவு, பலி, செக்ஸ் என்று எவ்வளவு விஷயங்களை அந்தக் கதை தொட்டுச்செல்கிறது. உண்மையான ஓவியம் ஒன்றின் கதை.
அதேபோல எழுகதிர் கதை. அதையும் ஒரு அற்புதமான சினிமாவாக ஆக்கமுடியும். கதை தேடிச்செல்பவர்கள் ஏன் இதையெல்லாம் படமாக்கவில்லை என்பது ஆச்சரியம்தான்.
சிவக்குமார் மாரிமுத்து
***
அன்புள்ள ஜெ
எழுகதிர் தொகுப்பிலுள்ள பலிக்கல் என்ற சிறுகதையை பற்றி நான் ஒரு கடிதம் எழுதவேண்டுமென்று நினைத்தேன். பலமுறை சொல்லிப்பார்த்தேன். எழுதமுடியவில்லை. கடைசியாக இப்போது எழுதுகிறேன். ஆழமான கதை. நெஞ்சில் கத்தியாலே குத்துவதுபோல ஒரு கதைக்கரு. யோசித்துக்கொண்டே இருக்கிறேன். எவ்வளவு தூரம் யோசித்தாலும் அதன் உண்மையான அர்த்தங்கள் கொஞ்சம் அப்பாலே தான் இருக்கின்றன. இங்கே மனித வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. நாம் வாழ்வது நம்மோட வாழ்க்கை இல்லை. வேறு எவரோடோயோ வாழ்க்கையோட மீதம்தான் என்று எனக்கு தோன்றியது. எனக்கு ஜோசியத்திலே நம்பிக்கையும் ஆர்வமும் உண்டு. அந்த ஆர்வத்தால் பல ஜாதகங்களைப் பார்த்திருக்கிறேன். மனிதவாழ்க்கை ஒரு தொடர்ச்சி என்று நினைக்காமல் பார்த்தால் ஜாதகபலன்களை புரிந்துகொள்ளவே முடியாது. அப்படி ஒரு ஆழமான கதை.
இவன்
அருணாசலதாசன்
எழுகதிர் முன்னுரைApril 7, 2023
சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)
சவார்க்கர் கோழையா?
இன்று சவார்க்கர் அளித்த மன்னிப்புக் கடிதம் ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. இதைச்சார்ந்த காங்கிரஸின் பேச்சுக்கள் எளிய கட்சித்தொண்டர்களால் சொல்லப்படுமென்றால் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை. கொள்கை வகுப்பாளர்களுக்கோ தலைவர்களுக்கோ இன்னும் சற்று விரிவான வரலாற்றுப்புரிதல் தேவை.
சவார்க்கர் சிறைசென்றபோது இந்தியாவில் அரசியலியக்கமே பெரும்பாலும் இல்லை. காங்கிரஸ் உயர்நிலை மக்களின் ஒரு கூடுகையாக, அரசிடம் மன்றாடும் போக்கு கொண்டதாக இருந்தது. சவார்க்கர் பொறுமையிழந்த தலைமுறையைச் சேர்ந்தவர். அன்றைய ஐரோப்பாவில் ஓங்கி ஒலித்த ‘ஆயுதக்கிளர்ச்சி வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றுதல்’ பற்றிய கருத்துக்களால் கவரப்பட்டவர். அன்றைய ஐரோப்பாவின் மையப்பேசுபொருளான ‘பண்பாட்டுத் தேசியம்’ அவரை ஈர்த்தது. ஆகவே அவர் வன்முறை சார்ந்த ஒரு குறுங்குழுக் கிளர்ச்சியை தொடங்கினார்.
சவார்க்கர் ஆயுதக்குறுங்குழு வழியாக ஆட்சியைப் பிடிக்கமுடியும் என்னும் நம்பிக்கை கொண்டிருந்தபோது 1910-ல் ரஷ்யாவில் லெனினும் அதே நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை நாம் கவனிக்கவேண்டும். லெனின் தான் நடத்திவந்த ஆயுதக்குறுங்குழுப் போரை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுத்தருணத்தில் ராணுவக்கிளர்ச்சியாக மாற்றிக்கொண்டார். ருஷ்ய ராணுவம் ஜார்மீது கொண்டிருந்த அதிருப்தியை பயன்படுத்திக்கொண்டதன் வழியாக, ருஷ்ய ராணுவ ஆதரவை அடைந்து, ரஷ்யப்பேரரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினார்.
ஆனால் அது அளித்த நம்பிக்கையில் உலகம் முழுக்க பல நாடுகளில் ஆயுதக்குறுங்குழுக்கள் அரசுக்கு எதிராக போராடின. கியூபா போன்ற சில நாடுகளில் மட்டுமே அவை வென்றன. எஞ்சிய நாடுகளில் எல்லாம் அக்குழுக்கள் வேருடன் அழிக்கப்பட்டன. இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, காங்கோ, ஸ்பெயின்,பொலிவியா என ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
சவார்க்கர் சிறையில் இருந்தபோது ஆயுதக்குறுங்குழுச் செயல்பாடுகள் மீதான நம்பிக்கையை படிப்படியாக இழந்திருக்கலாம். இந்தியாவில் காந்தி தலைமையில் உருவான மக்களியக்கத்தை கண்டு அதன் செயல்முறைகள் மீது ஈர்ப்பு கொண்டிருக்கலாம். ஆகவே புதிய ஒரு பாதையை தேர்வுசெய்ய எண்ணி பிரிட்டிஷ் ஆட்சியுடன் சமரசமாகச் செல்ல முடிவெடுத்திருக்கலாம்.தன் ஜனநாயகப் பார்வை மேல் பிரிட்டிஷாரின் நம்பிக்கையை கோரியிருக்கலாம். அவருடைய கடிதங்களும் சரி, பின்னர் அவருடைய நடவடிக்கைகளும் சரி அதையே காட்டுகின்றன.
இந்தியாவில் இன்று அதிகாரத்தில் இருக்கும் பல கட்சிகள் பிரிட்டிஷ் ஆதரவு கொண்டவையாக இருந்தவைதான். திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கட்சியான ஜஸ்டிஸ் கட்சி முழுக்க முழுக்க பிரிட்டிஷ் ஆதரவு கொண்டது. ஈ.வெ.ரா பிரிட்டிஷ் ஆதரவுப் போக்கு கொண்டிருந்தவர். அம்பேத்கர் பிரிட்டிஷாரால் முன்னிறுத்தப்பட்டவர், பிரிட்டிஷ் ஆதரவு கொண்டவராகவே ஏறத்தாழ சுதந்திரம் கிடைக்கும் காலம் வரை நீடித்தவர்.
இந்திய அரசியல் கட்சிகளில் பிரிட்டிஷாருடன் ஏதேனும் ஒரு தருணத்தில் சமரசம் செய்துகொள்ளாத எந்தக் கட்சியும் இல்லை— காங்கிரஸ் உட்பட. காந்தி சௌரிசௌரா வன்முறையை ஒட்டி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக்கொண்டதுகூட சமரசமாக பார்க்கப்பட்டு கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின்போது இந்திய கம்யூனிஸ்டுகள் பிரிட்டிஷாரை ஆதரித்தனர்.
அரசியல் எப்போதுமே அப்படித்தான். அது போராட்டமும் சமரசமும் மாறி மாறி வருவது. சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். திராவிட நாடு கோரிக்கையை தி.மு.க விட்டுக்கொடுத்தது ஓர் உதாரணம். சவார்க்கரின் மன்னிப்புக் கடிதத்தை நான் அவ்வாறுதான் பார்க்கிறேன். மன்னிக்க முடியாத விட்டுக்கொடுத்தல் என்பது சுபாஷ்சந்திரபோஸ் சயாம் மரணரயிலில் பல லட்சம் தமிழர்கள் ஜப்பானியர்களால் கொடூரமாக வதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதை அறிந்தும் ஜப்பானியரிடம் சமரசம் செய்துகொண்டதுதான். (சயாம் மரண ரயில்பாதை )
சவார்க்கர் எனும் அடிப்படைவாதி
சவார்க்கர் ஒரு கோழை என நான் நினைக்கவில்லை. அவருடைய தேசபக்தியை ஐயப்படவில்லை. அவர் தேசத்திற்காக தியாகம் செய்தவர் என்பதை மறுக்கவுமில்லை. ஆனால் அவர் எவ்வகையிலும் ஏற்கமுடியாத அரசியல்வாதி என்றே மதிப்பிடுகிறேன். அது அவருடைய வரலாற்றுப் பார்வையாலும் அவருடைய அரசியல் நடைமுறையாலும் அவர்மேல் வைக்கத்தக்க மதிப்பீடு.
சவார்க்கர் ஒரு அடிப்படைவாதி. எந்தவகையான அடிப்படைவாதமும் (Fundamentalism) ஜனநாயகத்திற்கு நேர் எதிரானதுதான். அது மக்களின் நல்வாழ்வுக்கு எதிரானது, அறுதியில் அழிவை மட்டுமே கொண்டுவருவது. மதம், சாதி, மொழி, இனம், தேசியம் எதைச்சார்ந்த அடிப்படைவாதமும் அழிவுச்சக்தியே.
எல்லா அடிப்படைவாதமும் நடைமுறையில் ஒன்றே. ஏனென்றால் அடிப்படைவாதம் மக்களின் நல்வாழ்க்கையை விட மேலானதாக ஒரு கருத்துருவத்தை முன்வைக்கிறது. அந்தக் கருத்துருவத்தை நிலைநிறுத்த எத்தனைகோடி மக்கள் செத்தாலும் சரியே என வாதிடுகிறது. கூசாமல் கோடிக்கணக்கானவர்களை பலிகொள்கிறது. வரலாறு திரும்பத் திரும்ப அதையே காட்டுகிறது
அடிப்படைவாதம் என்றால் என்ன? ‘ஒரு கருத்துருவத்தை மையப்புள்ளியாகக் கொண்டு, அதை நிலைநாட்டும் பொருட்டு செய்யப்படும் பண்பாட்டு, அரசியல் செயல்பாடுகளையே அடிப்படைவாதம் என்கிறோம்’.
அடிப்படைவாதத்தின் இயல்புகள் சில உண்டு
அ. அடிப்படைவாதம் அந்த கருத்துருவ மையப்புள்ளியை ஐயத்திற்கே அப்பாற்பட்ட ஒன்றாக, புனிதமானதாக நிலைநிறுத்தும். அதை மறுப்பவர்களை அல்லது ஏற்காதவர்களை எதிரிகளாகக் கட்டமைக்கும். அந்த எதிரிகளை அழிக்க முற்படும். எப்போதுமே அது எதிரிகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். எதிரிகளுக்கு எதிரான செயல்பாடாகவே தன் அனைத்துப் பணிகளையும் வகுத்து வைத்திருக்கும். அதற்கு நேர்நிலைச் செயல்பாடே இருக்காது.
ஆ. அடிப்படைவாதம் தன் கருத்து மையத்தின் சரியான பிரதிநிதிகள் என சிலரை முன்வைக்கும். அவர்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் அளிக்கும். அவர்களை திருவுருக்கள் ஆக்கும். அவர்களை முழுக்க நம்பி கொண்டாடும்படி அறைகூவும்.
இ. அடிப்படைவாதம் எப்போதும் தன் மையக் கருத்துருவத்தை மதம், இனம், மொழி என பழமையான பண்பாட்டு மரபில் இருந்தே எடுத்துக் கொள்ளும். அவற்றுக்கு புனிதத்தன்மையை உருவாக்கும். ஆகவே அவற்றை மறுக்கமுடியாதவையாக ஆக்கும்.
இம்மூன்றின் விளைவாக அடிப்படைவாதம் தன்னளவிலேயே ஜனநாயகத்திற்கு எதிரானது. ஏற்பும் மறுப்புமான விவாதத்தன்மை ஜனநாயகத்தின் அடிப்படை. நிராகரிப்பதற்கான உரிமையை ஒவ்வொருவருக்கும் அளிப்பதே ஜனநாயகம். அனைத்தையும் உள்ளடக்குவதும், அனைத்து முரண்பாடுகளும் ஒன்றோடின்று விவாதித்து முரணியக்கமாக ஆவதுமே ஜனநாயகத்தின் செயல்பாடு. அடிப்படைவாதம் அதற்கு நேர்மாறானது.
இந்தியாவில் ஜனநாயகத்தின் மையப்புள்ளி என காந்தியைச் சொல்லலாம். நேர் எதிராக அடிப்படைவாதத்தின் மையப்ப்புள்ளி என சவார்க்கரைச் சொல்லலாம். ஒரே காலகட்டத்தில் தோன்றிய இரண்டு வாய்ப்புகள் அவை. இரண்டுக்குமே ஐரோப்பாவில்தான் தொடக்கங்கள் இருந்தன. நாம் ஜனநாயகத்தை தேர்வுசெய்தோம்.
அடிப்படைவாதம் பற்றி இரண்டு கண்ணோட்டங்களைச் சொல்லியாகவேண்டும். முன்னர் ஒரு நீண்ட கட்டுரையில் இதை விளக்கமாக எழுதியிருக்கிறேன். இவற்றை புரிந்துகொள்ளாமல் அடிப்படைவாதத்தை எவராலும் எதிர்க்க முடியாது (உரையாடும் காந்தி நூலில் அக்கட்டுரையை காணலாம்.)
அடிப்படைவாதம் வேறு பழமைவாதம் வேறு. எல்லா மதங்களிலும் உறுதியான மதப்பழமைவாதிகள் உண்டு. வெவ்வேறு வகையான பழமைவாதங்கள் உலகமெங்கும் உண்டு. பழமைவாதம் என்பது ஒரு தேக்கநிலை. பழைய மதிப்பீடுகள் மற்றும் வாழ்க்கைமுறைகளில் நின்றுவிடுவது. அதில் சில பகுதிகள் காலத்திற்கு ஒவ்வாதவையாக இருக்கலாம். ஆகவே இன்றைய பார்வையில் அநீதி என்றோ அபத்தம் என்றோ தோன்றலாம். ஆனால் சிலர் அத்தகைய வாழ்க்கையில் உறுதியாக நின்றுவிட விரும்புவார்கள்.
ஏனென்றால் பழமையிலுள்ள சில பண்பாட்டுக்கூறுகள் அல்லது ஆன்மிகக்கூறுகள் அவர்களுக்கு வாழ்க்கையில் ஓர் உறுதியான பிடிமானத்தை அளிக்கின்றன. மாறுதல்களின் அலைக்கழிப்பை விட அந்த உறுதிப்பாடு அவர்களுக்குத் தேவையாக இருக்கலாம். இன்னொருவர் வாழ்க்கையை பாதிக்காதவரை அந்த வாழ்க்கையை வாழ ஒருவருக்கு உரிமை உண்டு என்றுதான் நான் நினைக்கிறேன்.
அடிப்படைவாதம் என்பது பழமையில் இருந்து ஓர் அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை நவீனக் கருத்துருவாக ஆக்கி, அதை மையமாக கொண்டு ஓர் நவீன அதிகாரத்தைக் கட்டமைக்க முயலும் பண்பாட்டு– அரசியல் நடவடிக்கை. அது பழமையில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதில்லை. பழமையில் தன் அதிகார அரசியலுக்கு எவையெல்லாம் உகந்தவை அல்லவோ அனைத்தையும் அதுவும் நிராகரிக்கும்
ஆகவே அடிப்படைவாதத்திற்கு எப்போதும் ஒரு சீர்திருத்த முகம் இருக்கும். அடிப்படைவாதம் எப்போதுமே தர்க்கபூர்வமானதாகவும், ஓரளவு அறிவியல் சார்ந்ததாகவும், பெருமளவு சமகாலப்பார்வை கொண்டதாகவும் இருக்கும். அது நவீனமானது என்றுகூடத் தோன்றும்.
ஆச்சரியமான ஒன்று உண்டு. அடிப்படைவாதம் என்பது உண்மையில் நவீனத்துவம் (Modernism) எனப்படும் பண்பாட்டுக் காலகட்டத்துடன் சம்பந்தப்பட்டது. உலகிலுள்ள எல்லா அடிப்படைவாதங்களும் நவீனத்துவம் தொடங்கிய காலகட்டத்தில் தொடங்கியவை. நவீனத்துவத்துடன் இணைந்து வளர்ந்தவை. அடிப்படைவாதமே ஒருவகை நவீனத்துவ அம்சம்தான் என்று சொல்லமுடியும்.
நவீனத்துவம் என்பது சென்ற நூறாண்டுகளில் உலகில் தோன்றிய சிந்தனைசார்ந்த, வாழ்க்கைமுறை சார்ந்த ஒரு போக்கைச் சுட்டிக்காட்டுவதற்கான பெயர். நவீனத்துவத்தின் இயல்புகளான தர்க்கபூர்வத்தன்மை, உலகளாவிய பார்வை, மையத்தை வலியுறுத்தும் நோக்கு, தனிமனிதப்பார்வை, அதிகாரத்தை குவிக்கும்தன்மை எல்லாமே அடிப்படைவாதத்திற்கும் உண்டு.
உலகமெங்கும் நவீனத்துவ கருத்தியல்களான தாராளவாதமோ, பகுத்தறிவுவாதமோ , மார்க்ஸியமோ தீவிரமாக தாக்கி உடைக்க முயல்வது பழமைவாதத்தை மட்டுமே. அடிப்படைவாதத்தை அவை வலுவாக எதிர்க்க முடியாது. பெரும்பாலும் அவை அடிப்படைவாதத்தின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்கின்றன.ஏனென்றால் தாராளவாதமும் பகுத்தறிவுவாதமும் நவீனத்துவத்தின் வேறுமுகங்கள். நவீனத்துவத்தின் தர்க்கபூர்வத்தன்மை, உலகளாவிய பார்வை, மையத்தை வலியுறுத்தும் நோக்கு, தனிமனிதப்பார்வை, அதிகாரத்தை குவிக்கும் தன்மை ஆகியவை இவற்றுக்கும் உண்டு.
எந்த அடிப்படைவாதத்தையும் தர்க்கபூர்வமானது என்றும், சீர்திருத்த நோக்கம் கொண்டது என்றும் விளக்கிவிடலாம். ஆகவேதான் இந்தியப் பகுத்தறிவுவாதிகளுக்கும் மார்க்ஸியர்களுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதமான வஹாபியம் சீர்திருத்தத் தன்மை கொண்டதாக தோன்றுகிறது. அந்த மேடைக்குச் சென்று தங்களையும் அதனுடன் இணைத்துக்கொள்ள அவர்களால் இயல்கிறது.
சவார்க்கர் தர்க்கபூர்வமான பார்வை கொண்டவர். அறிவியல் நம்பிக்கை கொண்டவர். பகுத்தறிவுப்பார்வை கொண்ட நாத்திகர். ஈ.வெ.ராவும் சவார்க்கரும் சந்தித்திருந்தால் ஒரே ஒரு புள்ளி தவிர வேறு அனைத்திலும் அவர்கள் ஒத்துப்போயிருப்பார்கள். சவார்க்கரின் தேசியம் வேறு ஈ.வெ.ராவின் தேசியம் வேறு. மற்றபடி இருவருமே நவீனத்துவர்கள்.
சவார்க்கர் முழுக்க முழுக்க ஓர் ஐரோப்பிய உருவாக்கம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் உருவான ‘பண்பாட்டுத் தேசியம்’ என்னும் கொள்கையின் இந்திய வாரிசு அவர். பண்பாட்டுத்தேசியம் பின்னர் ஐரோப்பாவில் ஃபாசிசமும் நாசிசமுமாக ஆகி ஐரோப்பாவை அழித்தது. சவார்க்கரின் சிந்தனைமுறை, நம்பிக்கைகள் எல்லாமே பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவைச் சார்ந்தவை.
நவீனத்துவர்களின் பார்வையில் சவார்க்கருடன் ஒப்பிட காந்தி பலவகையிலும் ஏற்புடையவர் அல்ல. காந்திக்கு தர்க்கபூர்வப் பார்வை குறைவு. அவர் பலசமயங்களில் உள்ளுணர்வை நம்பியவர். காந்தியிடம் ‘மூடநம்பிக்கைகள்’ இருந்தன. காந்தி அறிவியலை சந்தேகப்பட்டார். உலகளாவிய சிந்தனைகளுக்குப் பதிலாக அந்தந்த பகுதிகளில் எழுந்துவரும் சிந்தனைகளை முன்வைத்தார். ஒற்றை மையத்தை மறுத்து பன்முகத்தன்மையை முன்வைத்தார். தேசத்தையே சுதந்திரமான தனித்தனி பொருளியல் அலகுகளின் கூட்டாக உருவகித்தார். காந்தி தன்னை ஒரு பழமைவாதி, சனாதனி என்றும் சொல்லிக்கொண்டார். ஆனால் நடைமுறையில் எல்லா சீர்திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டார். மாபெரும் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.
காந்தியுடன் கடும் முரண்பாடு கொண்டிருந்த அம்பேத்கருக்கு சவார்க்கர் மேல் நல்லெண்ணம் இருந்தது. பல்வேறு இடங்களில் அதை வெளிப்படுத்தியும் இருக்கிறார். சவார்க்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்சய்கீர் அம்பேத்கரின் வரலாற்றாசிரியர். ஏனென்றால் அம்பேத்கரின் பார்வை நவீனத்துவநோக்கு கொண்டது. அறிவியல்தர்க்கம், மையப்படுத்தும் பார்வை என்னும் அம்சங்கள் அவர் சிந்தனையில் வலுவாக இருந்தன. அவர் ஒரு சீர்திருத்த பௌத்தத்தை முன்வைத்தவர். ஆகவே சவார்க்கரின் தர்க்கப்பார்வையும், அறிவியல் ஈடுபாடும், மையநோக்கும், சீர்திருத்தப்பார்வையும் அவருக்கு ஓர் எல்லைவரை ஏற்புடையதாக இருந்தன.
அதுதான் நவீனத்துவர்கள் விழும் பொறி. நவீனத்துவர்களால் அடிப்படைவாதத்தை முழுமையாக எதிர்க்கமுடியாது. அவர்கள் அதை வளர்த்துவிடும் பிழையையும் செய்வார்கள். தாலிபானை ஆதரித்து ஐரோப்பிய அமெரிக்க நவீனத்துவ அறிவுஜீவிகள் எழுதிய பல கட்டுரைகளை 1990 தொடக்கத்தில் நான் வாசித்திருக்கிறேன். வாசிக்காதவர்கள் ராம்போ 3 படத்தையாவது பார்க்கலாம். தாலிபான்கள் தர்க்கபூர்வ பார்வை கொண்ட மதச்சீர்திருத்தவாதிகள் என்றும், பழமைவாத இஸ்லாமுக்கு எதிரான இளைஞர்சக்தி என்றும் ஐரோப்பிய அமெரிக்க அறிஞர்கள் எழுதினர்.
நவீனத்துவத்தின் கருவிகளான தாராளவாதம், பகுத்தறிவுவாதம், மார்க்ஸியம் ஆகியவற்றைக்கொண்டு காந்தியை எதிர்க்கலாம், சவார்க்கரை எதிர்க்க முடியாது. சவார்க்கரே பகுத்தறிவுவாதிதான், நாத்திகர்தான், அறிவியல் நம்பிக்கை கொண்டவர்தான் என்று சொல்லி அந்த எதிர்ப்பை உடனடியாக உடைத்துவிடுவார்கள்.
ஆகவே இங்கே அரசியல் ரீதியாக சவார்க்கரை எதிர்க்க விரும்புபவர்கள் வழக்கமான பாணியில் அவரை கோழை, தேசப்பற்றில்லாதவர் என்றெல்லாம் முத்திரையடித்து தாக்குகிறார்கள். அது உண்மை அல்ல என்பதனால் அந்த தாக்குதல்கள் வழியாக அவர் மேலும் வலிமை அடையவே செய்வார்.அல்லது சவார்க்கரை பழமைவாதி, மதவெறியர் என்று முத்திரை குத்தி தாக்குகிறார்கள். அதுவும் உண்மை அல்ல என்பதனால் அவரை அது நிராகரிப்பதில்லை, மாறாக வலிமைப்படுத்துகிறது.
சவார்க்கர் அடிப்படைவாதி. ஒரே சொல்லில் சொல்லவேண்டுமென்றால் ‘இந்து வஹாபி’ அவர். அவருடையது தேசிய அடிப்படைவாதம். இந்தியப் பழமையில் இருந்து ‘இந்துதேசியம்’ என்னும் கருத்துருவத்தை எடுத்துக்கொண்டு அவர் ஓர் அடிப்படைவாதத்தை கட்டமைத்தார். இந்திய நிலத்தில் உருவான முதல் அடிப்படைவாதம் சவார்க்கருடையதே. இந்து அடிப்படைவாதத்தின் தந்தை அவர்.
அடிப்படைவாதம் எப்போதுமே தான் மரபில் இருந்து எடுத்துக்கொண்ட கருத்துரு மேல் கண்மூடித்தனமான நம்பிக்கையை கொண்டிருக்கும். மற்ற அனைத்து மரபுக்கூறுகளையும் மறுக்கும், அல்லது தனக்கேற்ப மாற்றியமைக்க முயலும். வஹாபியம் செய்வது அதைத்தான். அவர்களும் சீர்திருத்த முகம் கொண்டவர்களே. சவார்க்கரும் அப்படித்தான். அவருடைய சீர்திருத்த முகமும் அவ்வாறு உருவானதே.
பொதுவாக அடிப்படைவாதிகள் எவராயினும் அவர்கள் மூர்க்கமான நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே ஈடிணையற்ற பிடிவாதம் அவர்களிடமிருக்கும். கொல்லவும் உயிர்விடவும் துணிந்திருப்பார்கள். விளைவாக அவர்கள் கடும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடலாம். மிகமிக வீரமாக அவற்றை எதிர்கொள்ளவும்கூடும். ஆனால் அந்த தியாகமும் வீரமும் எவ்வகையிலும் போற்றத்தக்கவை அல்ல.
அந்த தியாகத்தையும் வீரத்தையும் நம் நடுத்தரவர்க்க கோழைத்தனத்தாலோ சலிப்பாலோ நாம் கொண்டாட ஆரம்பித்தால் நாம் அடிப்படைவாதத்தை அரியணை நோக்கிக் கொண்டுசெல்கிறோம். இஸ்லாமிய அகிலம் அந்தப் பெரும்பிழையை சென்ற ஐம்பதாண்டுகளில் செய்துவிட்டது. ஜனநாயகப் பாதையில் பல வகையிலும் முன்னேறி வந்த பல நாடுகள் இன்று அடிப்படைவாதத்தின் பிடியில் சிக்கி அழிகின்றன. ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் ஈராக்கும் ஈரானும் சிரியாவும் லெபனானும் எல்லாம் அடிப்படைவாதத்தின் சாகசத்தன்மையையும் தியாகத்தையும் வீரத்தையும் கண்டு அதை நம்பிய பெரும்பிழையின் தண்டனையை கண்ணீராகவும் குருதியாகவும் அடைந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே அடிப்படைவாதியின் வீரம் அல்லது தியாகம் பற்றி எவர் பேசினாலும் அவர்கள் அழிவைக் கொண்டுவரும் தீயசக்திகள் என்றே எண்ணுவேன்.
பழமைவாதம் வேறு அடிப்படைவாதம் வேறு. அடிப்படைவாதத்தின் அறிவுத்தன்மையும் சீர்திருத்தத் தன்மையும் மேலோட்டமானவை. இந்த இரு அடிப்படைப்புரிதல்களுடன் மட்டுமே அடிப்படைவாதத்தை எதிர்க்கமுடியும். இல்லையேல் இரண்டு பிழைகள் நிகழும். எல்லா பழமைவாதத்தையும் கண்டபடி வசைபாடி, அவற்றையும் அடிப்படைவாதம் என முத்திரைகுத்தி நாமே அவற்றை அடிப்படைவாதம் நோக்கி தள்ளிவிடுவோம். அதேசமயம் நம்முடன் கைகோக்க வரும் அடிப்படைவாதத்தை சீர்திருத்த இயக்கம் என எண்ணி ஏற்றுக்கொள்வோம். இந்த இரண்டு பிழைகளையும் இங்குள்ள முற்போக்கினர், தாராளவாதப்பார்வை கொண்டவர்கள், மார்க்ஸியர் அனைவரும் அன்றாடம் செய்துகொண்டிருக்கிறார்கள். வஹாபிகளை மேடையேற்றிக்கொண்டு எவரும் சவார்க்கரை எதிர்க்க முடியாது. அது சவார்க்கரை பேருரு கொண்டவராக ஆக்கும். அதுதான் இன்று நிகழ்கிறது.
சவார்க்கர் எனக்கு கடும் ஒவ்வாமையை அளிப்பவர். இக்கட்டுரைக்காக அவருடைய படத்தை இணையத்தில் இருந்து எடுக்கையிலேயே அருவருப்பும் கசப்பும் அடைகிறேன். ஆனால் சவார்க்கர் கோழை என்று நான் நினைக்கவில்லை. அவருடைய ஆளுமைமேல் எனக்கு ஐயமும் இல்லை. அவர் பழமைவாதியும் அல்ல. ஆனால் இந்தியா உருவாக்கிய மிகக்கொடிய நஞ்சு அவரே. இந்தியாவின் அடிப்படைவாதத்தின் ஊற்றுமுகம் அவரே. அதன்பொருட்டே அவர்மேல் ஒவ்வாமை கொண்டிருக்கிறேன்.
சவார்க்கர் என்னும் நஞ்சின் எதிர்விசை காந்தி என்னும் மருந்து. ஆகவேதான் சவார்க்கரின் மறைமுகக் கை காந்தியை கொன்றது. என்னதான் சொன்னாலும் காந்தி கொலையின் பெரும்பழி நம் தேசம் மீது உள்ளது என்றே நான் நம்புகிறேன். அப்பெரும்பழியை நம் மீது சுமத்தியவர் சவார்க்கர். சிந்திக்கும் ஒரு நபர் தன் அனைத்துச் சொற்களாலும் நிராகரிக்க வேண்டிய மனிதர் சவார்க்கர். இந்தியாவில் உருவான ஆளுமைகளில் ஹிட்லர் போல உலகமே உலகமே வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய ஆளுமை அவர் ஒருவரே. எங்கும் எந்நிலையிலும் எதற்காகவும் இம்மிகூட மதிக்கப்படவேண்டியவர் அல்ல. இந்த தேசம் சவார்க்கருக்கு அளிக்கும் ஒவ்வொரு மெல்லிய ஏற்பும் காந்திக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு எதிரானது, ஒட்டுமொத்தமாகவே மானுடத்திற்கு எதிரானது.
ஜெ
பி.எஸ்.நடராஜ பிள்ளை, பலிக்காத பரிகாரங்கள்
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சுவாரசியமான நிகழ்வு. அவருடைய ஒரே மகன் நடராஜசுந்தரம் பிள்ளை என்னும் நடராஜ பிள்ளை. மகன் வறுமையில் வாடுவான் என்று சோதிடர்கள் சொன்னார்கள். சுந்தரம் பிள்ளை அதற்கு பரிகாரமாக வாரந்தோறும் பெரும் கொடைகள் செய்துவந்தார்.
சுந்தரம் பிள்ளை பெரும் பணக்காரர். வணிகக்குடியில் பிறந்து பெரும் பதவிகளில் இருந்தவர். மகனுக்கு திருவனந்தபுரம் பேரூர்க்கடை பகுதியில் ஆயிரம் ஏக்கர் நிலம் விட்டுச்சென்றார்.
ஆனால் நடராஜ பிள்ளை காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேசவிடுதலைப்போரில் ஈடுபட்டார். மொத்த நிலமும் அரசால் கையகப்படுத்தப்பட்டது. அதே பேரூர்க்கடையில் குடிசையில் வாழ்ந்தார். பின்னர் கேரள நிதியமைச்சர் ஆனார். பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். ஆயினும் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து பெரும் கடனாளியாக மறைந்தார்.
பி.எஸ்.நடராஜ பிள்ளை
பி.எஸ்.நடராஜ பிள்ளை – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

