Jeyamohan's Blog, page 596
May 2, 2023
அனந்தமூர்த்தியின் ‘பிறப்பு’
அன்பின் ஜெ,
வணக்கம்.
யு.ஆர்.அனந்தமூர்த்தியின் “பிறப்பு” குறுநாவல் வாசித்தேன். கன்னடத்தில் முதன்முதலாக வெளிவந்த போது, “பிறப்பு”, அக்காலகட்டச் சமூகத்தில் எத்தகைய அதிர்வுகளையும், சலசலப்புகளையும், விவாதங்களையும் உருவாக்கியிருக்கும் என்று இப்போது வாசித்தபின் புரிந்துகொள்ள முடிகிறது.
“பிறப்பு” நாவல், பழங்கால கேரள நாயர்/நம்பூதிரி தரவாடுகளில் நாம் உணரும், தொன்மையின் ஒருவித பூடக/மந்திரத் தன்மையைக் கொண்டிருப்பதாக எனக்குப் பட்டது (லோகியின் “தனியாவர்தனம்” ஞாபகம் வந்தது). திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்புகளை நாவலின் சில பாத்திரங்கள் வைத்துக் கொண்டிருக்கின்றன. காமத்தின் அலைதலும், பிறப்பின் கேள்வித் தத்தளிப்புகளும், சென்றமர்வதற்கான நிம்மதியான இலக்கின் தேடலும் கொண்டு கதையின் முக்கிய மாந்தர்கள் வாழ்வில் பயணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அழுத்தத்தின் மூச்சு முட்டலிலிருந்து, சுவாசம் பெற, தப்பிக்கும் ஜன்னலாகவே, ஆன்மீகத்தை அவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன் சரியான, பொருத்தமான தலைப்பை நாவலுக்கு இட்டிருக்கிறார் (கன்னடத்தில் “Bhava”). அவரின் மொழிபெயர்ப்பில் வாசிப்பனுபவம் செம்மையாக அமைந்தது. நிதானமாக, ஒரு ரயில் பயணத்தில் துவங்குகிறது நாவல். செல்லச் செல்ல, சாஸ்திரியின், தந்திரியின், தினகரின் இறந்த கால நினைவோடைகளாக விரியும்போது படு வேகமெடுக்கிறது. வாசிப்பனுபவத்திற்காக எழுதிப்பார்த்து மனதில் தொகுத்துக்கொண்டேன்.
தொடர்ந்து, அம்மா, அப்பா, சித்தி, அண்ணி… என்று ஒருவர் பின் ஒருவராக இறந்து போகிறார்கள்; அண்ணனும் ஆஸ்துமாவினால் அவதிகொண்டு படுத்த படுக்கையாகி விட, வீடே வெறுத்துப் போகிறது விஸ்வநாத சாஸ்திரிக்கு. வீடு உடுப்பி அருகில், கிராமத்தில் நட்டநடுக் காட்டில் இருக்கிறது. வீட்டில், முன்காலத்தில், மூதாதையர் பெற்ற சாபத்தினால், எதிர்மறை சக்திகள் சிலவற்றின் நடமாட்டம் உணரப்படுகிறது. சாஸ்திரி, தன் இருபதாவது வயதில் சொத்தைப் பிரித்து, பணத்தை எடுத்துக்கொண்டு பம்பாய் வந்து “பகவதி கிருபா” ஹோட்டல் துவங்குகிறார். இளமைத் துடிப்பு, கையில் பணம்…சாஸ்திரி, குடி, புகை, பெண் சகவாசம் என்று திசைமாறுகிறார்.
தன் இருபத்தைந்தாவது வயதில், ஒரு விலைமாதுவின் வீட்டில், தான் சந்தித்த, துளுவில் பேசிய 17 வயது கன்னடப் பெண் ராதாவை சாஸ்திரிக்குப் பிடித்துப் போகிறது. ஊரிலிருந்து அண்ணன் இறந்துவிட்டதாகத் தகவல் வர, ஹோட்டலை மூடிவிட்டு, ராதாவையும் கூட்டிக்கொண்டு ஊருக்கு வருகிறார். உடுப்பியிலிருந்து பத்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் (தன் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவில்) வீடு வாங்கி ராதாவைக் குடியமர்த்தி, அடிக்கடி வந்து போய்க்கொண்டிருக்கிறார்.
வாரிசுக்காக, ஒரு திருமணம் செய்துகொள்ள ராதா சொல்ல, பெண் தேடுகிறார். சாஸ்திரியின் வீட்டின் சாபறிந்த யாவரும் அவருக்குப் பெண் கொடுக்கத் தயங்குகிறார்கள். தன் குடும்பத்தின் ஏழ்மை நிலையினால், சரோஜா, நானூறு ஏக்கர் தோட்டம் வைத்திருக்கும் சாஸ்திரிக்கு மனைவியாகிறாள்.சரோஜாவிற்கு சாஸ்திரியின் மேல் சிறிதும் அன்பில்லை. சரோஜாவின் அலட்சிய சுபாவம் சாஸ்திரிக்கு மிகுந்த கோபம் தருகிறது. திருமணம் நடந்து ஐந்து வருடங்களாகியும் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. உடுப்பியில் ஆயுர்வேத மருந்துக்கடை நடத்தும், கன்னடம் பேசும் மலையாளப் பண்டிதன் கருணாகரன் பரிச்சயமாக, அவனை ஒருநாள் வீட்டிற்கு, சாப்பிடக் கூட்டிக்கொண்டு வருகிறார்.
சாஸ்திரியின் வீட்டிற்கு வரும் கருணாகரப் பண்டிதன், வீட்டில் துர்சக்திகள் இருப்பதாகவும், அவைகளை விரட்ட, 30 நாட்கள் சில மாந்திரீகப் பூஜைகள் செய்யவேண்டும் என்றும் சொல்கிறான். சாஸ்திரி சம்மதிக்கிறார். சரோஜா, பண்டிதனுக்கு நட்பாகிறாள். சரோஜாவிற்கு பண்டிதன் பாட்டு சொல்லிக் கொடுக்கிறான். சரோஜா தாய்மையுறுகிறாள். சாஸ்திரியின் மனதில், குழந்தைக்குத் தகப்பன் தானா, பண்டிதனா என்ற சந்தேகப் பேய் புகுந்து கொள்கிறது.
ஒரு புதன்கிழமை அமாவாசை நாளன்று இரவில் சாஸ்திரியின் உடலிலும், மனத்திலும் முழு ஆதிக்கம் கொள்ளும் தீய சக்தியினால், உக்கிரமாகிறார் சாஸ்திரி. சில கொடூரமான சம்பவங்கள் நடந்தேறுகின்றன.
சாஸ்திரி இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்துகொண்டது மகாதேவியை. அவர்களுக்கு ஒரு மகள், மங்களா. மங்களா, தன் உடன் படிக்கும், கம்யூனிஸ்ட் சிந்தனைகள் கொண்ட, திம்மையா என்ற சார்வாகனை வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறாள். எழுபது வயதாகும் விஸ்வநாத சாஸ்திரி, இப்போது ஒரு பிரபலமான “ஹரிகதா” பாகவதர்.
டில்லியிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் மத்திம வயதிலிருக்கும் தினகரைச் சந்திக்கிறார் சாஸ்திரி. தினகர் அய்யப்பனுக்கு மாலை போட்டு கேரளாவிற்குச் செல்லும் பயணத்திட்டத்தில் இருக்கிறான்.தினகர் டில்லியில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பிரபலம். அவன் ஐந்து வயது சிறுவனாயிருக்கும்போது, அவனின் அம்மா, ஹரித்துவாரில் கங்கையில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார். அம்மா தினகரை, பால்யத்தில் செல்லமாக “புட்டாணி” என்று கூப்பிடுவது இன்னும் அவன் நினைவில் பசுமையாக இருக்கிறது. ஹரித்துவாரில் ஏழை யாத்திரிகர்களுக்கு இலவச தங்கும் சத்திரம் நடத்தும் செல்வந்தரான திரிபாதிதான் தினகரின் வளர்ப்புத் தந்தை.
கேரளா செல்லுமுன், மங்களூர் அட்வகேட் நாராயண தந்திரியையும், அவரின் அம்மா சீதம்மாவையும் சந்திப்பதற்குத்தான் இப்போதுமங்களூர் சென்றுகொண்டிருக்கிறான் தினகர். ஒருமுறை ஹரித்துவாருக்கு யாத்திரை வந்தபோது தந்திரியும், அவரது அம்மா சீதம்மாவும், தந்திரியின் மகன் (தந்திரியின் மனைவி காலமாகி விட்டார்) குழந்தை கோபாலைப் பார்த்துக்கொள்ளும் பணிப்பெண் கங்குவும் (கங்கு தாசி குலத்தைச் சேர்ந்தவள்), தினகர் வீட்டில் சுமார் ஒரு மாதம் தங்கியிருந்திருக்கிறார்கள். அப்போது தினகருக்கு இளம் வயது; தந்திரிக்கும் சம வயதுதான். சீதம்மாவிற்கு தினகர் மேல் மிகுந்த அன்பு. தன் ஐந்து வயதில், கங்கையில் மூழ்கி இறந்து போன தன் அம்மாவை சீதம்மாவின் உருவில் காண்கிறான் தினகர்.
தந்திரியின் மகன் கோபாலும் இப்போது லாயர்;உள்ளூர் முனிசிபாலிட்டியின் பிரெஸிடெண்டாக இருக்கிறான். அவனுக்கு அரசியலில் மேலே செல்ல விருப்பம். கங்குவிற்கும் திருமணமாகிவிட்டது; கணவன் சந்திரப்பா. இப்போது கங்குவிற்கும் ஒரு பையன்; பெயர் பிரசாத். இளைஞனான பிரசாத் நல்ல பாடகன், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவன். கங்கு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இப்போது ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறாள். தினகரின் மனைவியின் பெயர் ரஞ்சனா. தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்வதால், தினகருக்கும் வெவ்வேறு ஊர்களில் (டில்லியில், லக்னோவில், அலகாபாத்தில், லண்டனில்…என்று) பல பெண் தோழிகள் உண்டு (சுதர்ஷனி, ப்ரீதி, மமதா). சென்னை அருகே ஆசிரமம் நடத்தும், சாமியாரிணி மகாமாதா, தினருக்கு முன்பொரு காலத்தில் ரயிலில் அறிமுகமானவர்.
ரயிலில் தினகரை முதன்முதலாகச் சந்திக்கும் சாஸ்திரி, அவனுக்கு தன் முதல் மனைவி சரோஜாவின் சாயல் இருப்பதைக் கண்டுஅதிர்கிறார்; தினகரின் கழுத்திலும், ஸ்ரீசக்ரம் பதித்த சரோஜாவின் தாயத்தைப் பார்க்கிறார். பிரசாத்தின் உண்மையான அப்பா யாரென்றும் நாவலின் இறுதியில் தெரியவருகிறது.
வெங்கி
“பிறப்பு” (குறுநாவல்) – யு.ஆர். அனந்தமூர்த்தி (1994)
கன்னட மூலம்: “Bhava”
ஆங்கில மொழிபெயர்ப்பு: Judith Kroll
தமிழில்: நஞ்சுண்டன்
காலச்சுவடு பதிப்பகம்
May 1, 2023
நீதியின் காதல்
பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வள்ளுவர் என்னும் கவிஞர் என்னும் தலைப்பில் ஓர் உரை ஆற்றியிருக்கிறேன். தேர்ந்த ரசனை கொண்டவரான எம். வேதசகாயகுமாரே துணுக்குற்றார். அவருடைய ஆசிரியரான பேராசிரியர் ஜேசுதாசன் என் கருத்தை தீவிரமாக மறுத்தார். “நீதி சொல்றது, அறிவுரை சொல்றது, கருத்துக்களைச் சொல்றது எல்லாம் கவிதைன்னா இண்டியன் பீனல்கோடு கவிதைதானே?” என்றார்.
நான் காமத்துப்பால் பற்றி கேட்டேன். “காமத்துப்பால் கவிதைதான். ஆனா அது ஒரிஜினல் கவிதை இல்லை. அதுக்கு முன்னாடி ஒரு ஐநூறு வருஷமா அகத்துறை பாடல்களை எழுதிட்டிருக்காங்க தமிழிலே. அந்த அகத்துறைப் பாடல்களை ரெஃபெரென்ஸா வைச்சுக்கிட்டு ஒவ்வொரு இமோஷனுக்கும் ஒரு மாடல் மாதிரி காமத்துப்பாலை எழுதியிருக்கார் வள்ளுவர். அது கவிதையா எழுதப்படலை. ஒரு இலக்கண மாடல் மாதிரி எழுதப்பட்டதுதான்…ஒண்ணுமே புதிசா இல்லை”
வள்ளுவர் மேல் ஜேசுதாசனுக்கு மதிப்புண்டு. “அவரு ஒரு ஜெய்ன் முனிவர். அவரு புதிசா நீதிகளை உருவாக்கலை. அதுவரை தமிழ்ச்சமூகத்திலே பேசப்பட்ட நீதிகளையும், ஜெயின் நீதி மரபையும் இணைச்சு ஒரு நீதிநூலை உருவாக்கினார். அது நீதிக்கு இலக்கணம் வகுத்த நூல். அதனாலே ஒரு கிளாஸிக். எதிக்ஸ் நூல்களிலே உலகளவிலேயே ஒரு கிளாஸிக். ஆனா அதுக்கு இரண்டாயிரம் வருஷம் முன்னாடி சாலமோன் நீதிகளும் ஹாமுராமி நீதிகளும் வந்தாச்சுங்கிறதை நாம மறந்திரக்கூடாது”
ஏறத்தாழ பேராசிரியர் சொன்னதை ப.சிங்காரம் அவருடைய புயலிலே ஒரு தோணி நாவலில் ஓர் உரையாடலில் சொல்லியிருப்பார். அது பரவலாக ஏற்கப்பட்ட கருத்தாகவே இருந்திருக்கிறது. புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரை வள்ளுவர் ஒரு நீதிநூலாசிரியராகவே கருதப்பட்டிருக்கிறார்.
நான் அக்கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. வள்ளுவரின் காமத்துப்பால் மட்டுமல்ல, மொத்த நூலே கவிதைதான் என்பதே என் எண்ணம். அதை நீதிக்கவிதை அல்லது கவிதையின் நீதி எனலாம். ’இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றியான்’ என்ற கொதிப்பும் ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை’ என்னும் விவேகமும் உயர்கவிதையேதான். அதைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன்.
*
கவிஞர் இசை மரபிலக்கியப் படைப்புகளுக்கு நவீனக் கவிதைசார்ந்த ரசனைநிலையில் நின்றபடி எழுதும் உரைகளை நூல்களாக்கியிருக்கிறார். அவை ரசனைக்குறிப்புகள் என்றும் சொல்லத்தக்கவை. அவ்வரிசையில் குறள் பற்றி அவர் எழுதிய குறிப்பிடத்தக்க நூல் மாலை மலரும் நோய். உயிர்மையில் தொடராக எழுத தொடங்கி பின்னர் தன் வலைப்பூவில் இசை இதை எழுதி முழுமையாக்கியிருக்கிறார்.
‘தமிழ்ச்சூழலில் வள்ளுவர் ஒரு குட்டித் தெய்வமாகத் தோற்றம் அளிக்கிறார். அல்லது ஒரு அரசியல்பாதைக்குத் தலைமை ஏற்கிறார். இந்த இரண்டு பாத்திரங்களையும் விடுத்து தமிழின் ஆகச்சிறந்த கவியாக அவரை முன்னிறுத்துபவை காமத்துப்பால் பாடல்கள்’ என கூறும் இசை ’துவராடை களைந்து அவரை கபிலரோடும் வெள்ளிவீதியாரோடும் சரியாசனத்தில் அமர்த்தும் முயற்சி இது’ என தன் நூல் பற்றிக் குறிப்பிடுகிறார்.
காமத்துப்பால் கவிதைகளில் வள்ளுவரின் சந்தம் பிற குறள்களில் உள்ளதை விட நோக்கமும் எழிலும் கொள்கிறது.
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்து
(எமனோ, பெண்ணின் கண்ணோ, மான்விழியோ இவள் பார்வை மூன்றுமாகவும் உள்ளது)
என்னும் கவிதையை நான் கவிதை வாசிக்கும் வழக்கப்படி ‘கூற்றமோ கண்ணோ’ என்னும் ஒரு சொல்லாட்சியாக மாற்றி நினைவில் வைத்திருக்கிறேன். சொல்லச் சொல்ல மந்திரம்போலாகி விரிவது அது. ஆனால் இன்று என் நெஞ்சில் அது பெண்ணின் விழிகள் அல்ல. தமிழகத்தின் ஆலயங்களில், அரையிருள் நிறைந்த பிராகாரங்களில், சிலைகளில் அந்த கொல்லும் பார்வை கூடுவதைக் கண்டிருக்கிறேன்.
சிலசமயம் கவிதையில் இருந்து பிரிந்து வேறொரு உணர்வுநிலைக்கான சொல்லிணைவாக கவிதையின் ஒரு துளி உருமாறுவதுமுண்டு.
புல்லிக்கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள்வற்றே பசப்பு
தழுவிக்கிடந்தேன். சற்றே பிரிந்தேன். அவ்வளவிலேயே மேனி நிறமழியும் பசலை என்னை தழுவிக்கொண்டது.
என் நினைவில் ‘புல்லிக்கிடந்தேன் புடைபெயர்ந்தேன்’ என்ற சொல்லாட்சியாக இக்குறள் நீடிக்கிறது. தழுவிக்கிடந்த அனைத்தையும் பிரிந்து நகரும் வாழ்க்கையின் தருணங்கள் தோறும் உடன் வருகிறது.
இசையின் இந்நூல் காமத்துப் பால் கவிதைகள் மீதான சுருக்கமான ரசனையாக மட்டுமே உள்ளது. கவிதையில் இருந்து வாசகன் செல்லத்தக்க தனித்த பயணத்தை பெரும்பாலும் எங்கும் காணமுடியவில்லை. ஆனால் அவருடைய ரசனை ஒவ்வொரு பாடலாக தொட்டுச் செல்வதை வாசிப்பது காமத்துப் பால் கவிதைகளை மீண்டுமொருமுறை ரசிப்பதற்கு வழிவகுக்கிறது.
கார்த்திகேசு சிவத்தம்பி
தமிழின் கவிதையியல் குறித்தும், தமிழிலக்கியம் திரட்டி முன்வைக்கும் சமூக அறம் குறித்தும் விரிவாக எழுதியவர் கா.சிவத்தம்பி. தமிழ் இலக்கியங்கள் வழியாக தமிழ்ச்சமூகம் வேட்டைக்குடிகளில் இருந்து மருதநிலத்து வேளாண்குடிகளாக மாறிய பரிணாமத்தையும், அதன் விளைவான சமூக மோதல்களையும் ஆராய்ந்து சித்தரித்தார். தமிழியலாய்வு என்பது சமூகவியல், பொருளியல், வரலாறு, இலக்கியம் ஆகிய அனைத்தையும் இணைத்து ஒரு பொதுப்பார்வையை உருவாக்கிக்கொள்வதாகும் என்று கருதினார்.
கார்த்திகேசு சிவத்தம்பி
கார்த்திகேசு சிவத்தம்பி – தமிழ் விக்கி
ராஜா நினைவுகள்
2004 ஆகஸ்டில் நான் இளையராஜாவை முதன்முதலாக லோகிததாஸுடன் சென்று சந்தித்தேன். கஸ்தூரிமான் படத்தில் பாடல்களுக்காக. லோகிததாஸ் அப்போதுதான் அந்தப்படத்தை தொடங்கியிருந்தார். சொல்லப்போனால் அப்போது அவர் தயாரிப்பதாகவே இல்லை. சும்மா ஒரு சந்திப்பு அது.
இப்போது சொன்னால் சிலருக்கு ஒருவகை அதிகப்பிரசங்கித்தனமாக தெரியலாம், இருக்கட்டும். நான் அவரை முதன்முதலில் பார்த்ததுமே எண்ணியது ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற ஜெயகாந்தனின் தலைப்பைத்தான். நான் அதுவரை பலரை நேரில் சந்தித்திருக்கிறேன். மேதைகள், பெரும்சாதனையாளர்கள் என அறியப்பட்டவர்கள். ஆனால் பற்றி எரியும் செயலூக்கம் என நான் என்னுள் உணர்ந்த ஒன்றை அவர்களிடம் காணவில்லை. அல்லது நான் காணும்போது அவர்கள் அனைந்துவிட்டிருந்தனர். ராஜா ஒரு பிழம்பாகத் தெரிந்தார்.
ராஜா வேலைபார்ப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கு அவரே ஆர்மோனியம் வாசித்தபடி பன்னிரண்டு மெட்டுகளை பாடி அனுப்பினார். அதில் லோகித்தாஸ் தேர்ந்தெடுத்தவற்றை உடனே பாடலாக ஆக்கினார். பாட்டுக்கு நோட் எழுதுவது, கலைஞர்களை பயிற்றுவிப்பது, ஒலிப்பதிவு எல்லா இடத்திலும் அவர் விளையாடுகிறரா வேலைபார்க்கிறாரா என்றே தெரியாது. முற்றிலும் தன்னை மறந்து மூழ்கியிருந்தார். அப்படித்தான் நான் எழுதும்போது இருந்தேன், இன்றும்.
ஆச்சரியமாக லோகித்தாஸ் என்னை அறிமுகம் செய்யும்போது “உங்களைப்போல ஒருவர்” என்று மலையாளத்தில் சொன்னார். ராஜா சிரித்து “நல்லது, அப்டியே இருங்க” என என்னிடம் மலையாளத்திலேயே பேசலானார். என் ஊர், என் மலையாள வேர் ஆகியவற்றை பற்றி விசாரித்தார். நான் பத்மநாபபுரம் குலசேகரம் பற்றியெல்லாம் அவரிடம் சொன்னேன். அவர் அங்கெல்லாம் தன் அண்ணனின் இசைக்குழுவுடன் வந்திருந்தார்.
அவர் இல்லாதபோது இளையராஜாவின் நூலகத்திற்குள் சென்றேன். அங்கே அவர் எவரையுமே விடுவதில்லை என உதவியாளர்கள் பதறினர். திட்டுவாரென்றால் திட்டட்டும் என நான் சொன்னேன். ஆனால் ராஜா வந்ததுமே அவருடைய அரிய நூல்களை, சித்தர் பாடல் தொகுப்புகளை எடுத்து எனக்குக் காட்ட ஆரம்பித்தார். சித்தர் பாடல்களைப் பற்றி அன்று பேசினோம்.
அதன்பின் நான் கடவுள். அதன் இசையமைப்பின்போது நண்பர், இயக்குநர் சுகா இருந்தார். சுகாவுடன் பலமுறை ராஜாவைச் சந்தித்திருக்கிறேன். கோவிட்டுக்குப் பின் சந்திக்கவில்லை.
இந்தக் காணொளி பழைய நினைவுகளை கொப்பளிக்கச் செய்கிறது. சினிமாவின் முதன்மை சிறப்பே அது நினைவுகளின் மாபெரும் பெட்டகம் என்பதுதான்
சதீஷ்குமார் சீனிவாசனுக்கு விருது, கடிதம்
அன்புள்ள ஜெ,
நல்ல தேர்வு. அவருக்கு கவிதை இயல்பான வெளிப்பாட்டுக் கருவியென அமைந்திருக்கிறது. உயரமான கட்டிடங்களின் நிழல் தாங்கும் இலை ஒன்று, உதிர்வதற்காகவே வீசும் காற்றிலேறியாயினும் மண் தொடும் முன் சுழன்றிறங்கும் அந்த விடுதலையைக் கொண்டாடத் துடிப்பதைப் போல, கருவறைத் தனிமைக்கும், அத்தனிமையில் இருந்து வெளியேறி வாழ்தல் என்னும் கொண்டாட்டமான விடுதலைக்கு ஏங்கியலைதலுக்கும் இடையேயான உணர்வுகளே அவரது கவிதையுலகு. இத்தகைய உணர்வுகள் சற்றேனும் நுண்ணுணர்வும், தன்னுணர்வும் உடைய எந்தவொரு இலக்கிய வாசகனுக்கும் இருப்பது தான். உணர்வை மொழியில் சொல்லுகையில் அது கெட்டிப்பட்டு, வரையறுக்கப்பட்டு, செறிவூட்டப்பட்டு ஒரு பெருங்கடல், கையளவு படிகமாகக் குறுக்கப்படும் விபத்து நிகழும். இவ்வளவு தானா என்ற ஒரு வியப்பும், அதையடுத்து அதைக் கடந்து போவதும், இறுதியாக ஒரு வெறுமையுணர்வும் நிகழும். அது ஒரு வகையில் இலக்கியத்தின் வழிநிலை. ஆனால் அதே உணர்வுகள் கவிதையென ஆகும் போது, ஒரு கோப்பை நீரே ஆவியென ஆகி இவ்வகல் விசும்பெங்கும் வியாபித்து நிற்பதென ஆகும். இதனாலேயே என்னால் கவிதையை இலக்கியத்தின் ஒரு பகுதியென குறுக்க இயல்வதில்லை. இலக்கியம் அளவிற்கே ஒரு தனித்த இருப்பென, தன்னை நிறுவிக் கொள்வது கவிதை. அத்தகைய ஒரு நிலையை எய்த இவருடைய கவிதைகளுக்கு இயன்றிருக்கின்றன.
நம் விஷ்ணுபுர விருதுகளில் குமரகுருபரன் விருதுக்கென ஒரு தனிச்சிறப்பு உண்டு. பிற விருதுகள் சாதனையின் அங்கீகாரமென வழங்கப்படும். இவ்விருதோ சாதிப்பதின் பயணத்தில் இருக்கிறீர்கள் என நினைவுட்டி, இனி வருங்காலங்களில் எல்லாம் அப்பயணத்தைக் கைவிடாமல் கொள்ள, தடும் மாறும் போது திசைகாட்ட, இருள் சூழும் போது கைவிளக்காக மாற என பெறுபவரின் உடன் நின்றிருக்கும் ஓர் இருப்பென உடன்செல்வது. இவ்விருது பெற்ற ஒவ்வொரு இளங்கவிஞர்களுக்கும் இது பொருந்தும். ஒருவகையில் இவ்விருது ஒரு பெரும் பொறுப்பு. பெறுபவர்களால் சுமந்து, நிறைவேற்றத் தக்க பொறுப்பு. சதிஷ்குமாருக்கு அத்தகைய ஒரு பொறுப்பைச் சுமக்கும் திறன் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்
சதீஷ்குமார் சீனிவாசன் எனக்கு ஜெவின் கட்டுரைகள் வழியாக அறிமுகமானவர். அவரின் “ஆடை களைதல்” கடிதமும் ஜெவின் விளக்கமும் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக அணுக்கமானது. நண்பர்களின், கவிதை வாசகர்களின் கட்டுரைகளை எதிர்நோக்கியிருக்கிறேன். குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருதுவிழா வழியாக அவரை மேலும் அணுகி அறியமுடியும். வாழ்த்துகள் சதீஷ்..
அழகியமணவாளன்
மாயக்கொந்தளிப்பு, கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நீங்கள் என் கட்டுரையை பற்றி எழுதியது மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது. கதகளியை நான் அழகியல்ரீதியாக அறிந்துகொண்டது உங்களாலும்; எழுத்தாளர், நண்பர் அஜிதன் வழியாகத்தான். நாங்கள் பாலிவிஜயம் கதகளி பார்க்கும்போது அஜிதன் அதன் நுட்பங்களை சுட்டிக்காட்டியபடியே இருக்க சட்டென கதகளி எனக்கு அணுக்கமாக ஆன அந்த இரவு இன்றும் நினைவிலிருக்கிறது. அதைப்பற்றி விரிவாக கதகளி அனுபவம் என்ற கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்த கட்டுரைக்கு எழுத்தாளர், நண்பர் விஷால்ராஜாவின் பங்களிப்பு முக்கியமானது. கதகளி சார்ந்து நான் பரவசத்துடன் அவரிடம் பேசினேன். அவருடன் உரையாட தொடங்கியதும் அவர் என்னால் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை அளித்தார். இந்த எழுத்துவடிவத்தை அவரிடம் பேசிப்பேசி தான் நான் உருவாக்கிக்கொண்டேன், அந்த கட்டுரையை வெவ்வேறு வடிவங்களில் திரும்பதிரும்ப எழுதி அவருக்கு அனுப்பினேன், ஒவ்வொன்றையும் வாசித்து விரிவாக்க வேண்டிய இடங்களை, மாற்றங்களை சொன்னார். உரைநடையை கச்சிதமாக ஆக்க வழிமுறைகள் சொன்னார். அவர் புனைவாசிரியர், அந்த நேரத்தை நான் மிகையாக எடுத்துக்கொள்கிறேன் என்ற குற்றவுணர்வு எனக்கு இருந்தது. அகழ் இதழின் ஆசிரியர், எழுத்தாளர் அனோஜனின் சில ஆலோசனைகளும் கட்டுரையை முழுமையாக்க உதவியது.
என் கலைசார்ந்த நுண்ணுணர்வின் அடிப்படைகளை வளர்த்துக்கொண்டது நண்பர் ஈரோடு கிருஷ்ணனிடம் தொடர்ச்சியாக பேசி, உரையாடியது வழியாகத்தான். கலை சார்ந்த அவருடைய வாசிப்பையும், எண்ணங்களையும், கேள்விகளையும் அவர் பரிசீலித்துப்பார்க்க சொன்னவைவற்றையும் ஏற்றும் மறுத்தும்தான் நான் என் கலை சார்ந்த நுண்ணுணர்வை வளர்த்துக்கொண்டேன். அதைவிட என் ஆளுமையில் இருந்த காரணமற்ற தயக்கங்களிலிருந்து, தாழ்மையுணர்ச்சியிலிருந்து வெளிவந்தது ஈரோடு கிருஷ்ணனின் வழிகாட்டுதலால்தான். ஒருவன் பயணம் செய்ய முடியும் என்ற சாத்தியத்தை அறிந்துகொண்டதே அவர் அழைத்துச்சென்ற பயணங்களிலிருந்துதான்.
என் கலை சார்ந்த பயணத்தில் பாரியும் உடனிருந்தான். அவனும் நானும் இணையாகவே உரையாடி கலையை அறிந்துகொண்டோம். நல்ல கதகளிகளையும், சரியாக அமையாத கதகளிகளை சேர்ந்தே பார்த்தோம்.
அன்புடன்
மணவாளன்.
அன்புள்ள ஜெ
மாயக்கொந்தளிப்பு அழகான கட்டுரை. ஒரு நல்ல இலக்கியப்படைப்பை வாசிப்பதுபோல அதை வாசித்தேன். நக்ரதுண்டி கதாபாத்திரம் கம்பனின் சூர்ப்பனகைக்குச் சமானமாக கதகளியில் விரித்தெடுக்கப்பட்டுள்ளது. அழகு – கொடூரம் என்னும் இரு எல்லைகளுக்கு ஒரே கதாபாத்திரம் செல்லும் தீவிரத்தை அழகாக, மிகச்சிறப்பான மொழியில் அழகிய மணவாளன் எழுதியிருக்கிறார். அண்மையில் வாசித்த மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று இது. நீங்கள் சொன்னதுபோல கட்டுரையே ஒரு கலையனுபவமாக அமைந்துள்ளது
இளம் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
எம்,ராஜசேகர்
April 30, 2023
விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது மறைந்த கவிஞர் குமரகுருபரனின் மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்டது. இளம் கவிஞர்களுக்குரிய விருதாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் கவிதா சொர்ணவல்லி ஆகியோரால் அளிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் இவ்விருது 2023 ஆம் ஆண்டுக்கு இளம்கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாண்டு முதல் பரிசுத்தொகை ரூ ஒரு லட்சம். பாராட்டிதழும் கேடயமும் வழங்கப்படும். விருதுவிழா வரும் ஜூன் 10 குமரகுருபரன் நினைவுநாளை ஒட்டி நடத்தப்படும்.
சதீஷ்குமார் சீனிவாசன் திருப்பூரைச் சேர்ந்தவர். பின்னலாடைத்தொழிலிலும் சிலகாலம் உயிர்மை இதழிலும் பணியாற்றியவர். உன்னை கைவிடவே விரும்புகிறேன் என்னும் முதல் தொகுதி வெளியாகியுள்ளது.
சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி குமரகுருபரன் தமிழ் விக்கி விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுகள் தமிழ் விக்கி விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுகள் இதுவரைவிருது பெற்றவர்கள்…
சபரிநாதன் 2017
கண்டராதித்தன் 2018
ச. துரை 2019
வேணு வேட்ராயன் 2020
முகம்மது மதார் 2021
ஆனந்த்குமார் 2022
மாதுளை மலர்களின் தோட்டம்
மலர்த்துளி வாங்க
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள ‘மலர்த்துளி- 12 காதல்கதைகள்’நூலின் முன்னுரை. இதுவரை வெளிவராத கதைகள் கொண்ட தொகுதி இது)
அண்மையில் தத்துவ வகுப்பொன்றின் பகுதியாக பைபிளில் ’இனிமைமிகு பாடல்’ (பழைய மொழியாக்கம் உன்னத சங்கீதம்) பகுதியை வாசித்தோம். தொன்மையான யூதக் காதல் கவிதைகளின் தொகுதி அது. யூதர்களின் திருமணநிகழ்வுகளில் பாடப்படுவதாகவும் விளைச்சலுக்காக வயல்களில் பாடப்படுவதாகவும் அது இருந்திருக்கிறது.
விவிலியத்தில் அந்த காதல்பாடல்கள் இடம்பெறுவது பற்றிய விவாதம் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. அதை கடவுளின் மீதான காதலின் குறியீடு என்றும், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயான காதலின் அடையாளம் என்றும் விளக்கியிருக்கிறார்கள்.
உண்மையில் அதன் தொன்மையே அதை மகத்தான கவிதையாக ஆக்குகிறது. இந்த உலகை எதிர்கொண்டு போராடி வாழ்ந்த மனிதன் அடைந்த முதல் நுண்ணுணர்வுகள் இரண்டு. ஒன்று இயற்கையின் அழகை அறிதல், இன்னொன்று காதல். இயற்கையை நுகர்வதும், காமமும்தான் இயல்பானவை. நடைமுறை சார்ந்தவை. இயற்கையழகு, காதல் ஆகியவை நடைமுறையில் பயனற்றவை. கற்பனையுலகு சார்ந்தவை. நடைமுறை மனநிலைகளில் இருந்து அந்த நுண்மனநிலைகளை நோக்கி மானுடன் எழுந்தமைக்குச் சான்றாக தொன்மையான பாடல்கள் உள்ளன.
உலகின் எல்லா மொழிகளிலும் இயற்கையும் காதலுமே மிகத்தொன்மையான பேசுபொருட்கள். பசி, காமம் இரண்டும் அவற்றின் மிக உன்னத நிலையை அடைந்திருப்பது இயற்கையழகிலும் காதலிலும்தான். இலக்கியத்தின் தொடக்கம் அங்கிருந்துதான். ஆன்மிகத்தின் தொடக்கமே அதுதான். தெய்வங்கள் உருவான விளைநிலம் அதுவே.
அன்று அந்த விவாதத்திற்குப்பின் சில காதல்கதைகளை எழுதும் எண்ணத்தை அடைந்தேன். வேறெந்த நுண்ணிய அர்த்தங்களும் அற்றவை. ஆழ்பிரதியோ படிமஅடுக்குகளோ இல்லாதவை. எத்தனை முடியுமோ அத்தனை எளிதாக அமைபவை. மலர்களைப்போல அத்தனை மென்மையானவை. மலர்கள் எத்தனை அப்பட்டமானவை. வண்ணங்கள், வடிவங்கள், மணங்கள் எல்லாவற்றையும் முழுமையாக வெளிப்படுத்திக்கொள்கின்றன. வெளிப்படையாகவே கவர முயல்கின்றன.
மலரினும் மெல்லிது என்று காதலைச் சொன்னார் மூதாதை.காதல் என்பது மானுட உள்ளங்கள் தொட்டுக்கொள்ளும் மிக நுட்பமான, மிகப்பூடகமான, மிகத்தற்செயலான ஒரு புள்ளி மட்டும்தான். அந்தப் புள்ளியை வெவ்வேறு வகையில் சொல்லிவிட முயன்றிருக்கும் கதைகள் இவை. அந்த புள்ளியில் இருக்கும் பாவனைகள், கரவுகள், கண்டடைதல்கள், பரவசங்கள். அதைச் சொல்லிவிடவே எல்லா புனைவு உத்திகளும் இவற்றில் கையாளப்பட்டுள்ளன. சொல்லச் சொல்ல அகலும் மாயமும் அதற்குத் தெரியும். ஆகவேதான் கபிலன் சொன்னபின்னரும் நான் சொல்லவேண்டியிருக்கிறது. என்றும் சொல்லப்படும்.
இத்தொகுதியின் கதைகளில் பெருங்கை, கேளாச்சங்கீதம், கல்குருத்து ஆகியவை மட்டுமே இணையத்தில் வெளியாகியுள்ளன. மற்றவை முதல்முறையாக வெளியிடப்படுகின்றன.
தமிழில் பல நுண்ணிய தருணங்களை எழுத்தாக்கிய வண்ணதாசனுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெ
வாதுமைச் சோலைக்குள் சென்றேன்
பள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப் பார்க்கச் சென்றேன்
திராட்சை பூத்துவிட்டதா என்றும்
மாதுளைகள் மலர்ந்துள்ளனவா என்றும்
காணச்சென்றேன்
என்னவென்றே தெரியவில்லை எனக்கு
மகிழ்ச்சியில் மயங்கினேன்
இளவரசனுடன் தேரில் செல்வதுபோல் உணந்தேன்.
(இனிமைமிகு பாடல் 11. திரு விவிலியம் )
பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள் இன்னொரு பிறந்தநாள் மலர்த்துளி வாங்க
ரெவெ. ஸ்வார்ட்ஸ்
ரெவெ.ஸ்வார்ட்ஸ் பல நூல்களில் சுவார்சு ஐயர் என்று குறிப்பிடப்படுபவர். வேதநாயகம் சாஸ்திரியாரின் ஞானத்தந்தை, கிளாரிந்தாவை மதம் மாற்றியவர் என அறியப்படுபவர். திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி (இன்று கல்லூரி) நிறுவுனர்களில் ஒருவர். தமிழக வரலாற்றில் தனி இடம் உடையவர்
ரெவெ. ஸ்வார்ட்ஸ்
ரெவெ. ஸ்வார்ட்ஸ் – தமிழ் விக்கி
தத்துவ முகாம், கடிதம்
முதன்மை ஆசிரியரிடம் நேரடியாக கற்பது என்பது மிக அரிய வாய்ப்பு. பருந்து தன் குஞ்சுகளை தூக்கிக் கொண்டு வெகுதூரத்தை பறந்து கடப்பது போல பலமடங்கு விஷயத்தை காலம் செல்வது தெரியாமல் கற்றுக்கொள்ளலாம். இந்த மூன்று நாட்களில் ஐந்து அமர்வுகளில் வேதங்கள் குறித்த விரிவுரை அற்புதமானது. உங்களது உரைகளின் தனித்தன்மை என்பது வெவ்வேறு தகவல்கள் மற்றும் கருதுகோள்களை இணைத்து முன்சென்று புதிய புரிதல்களை உருவாக்குவது. பழங்குடி மக்களுக்கு இந்த பிரபஞ்சமே உயிர்வெளி என நீங்கள் சொன்னது இன்னும் நினைவிற்கு வந்து கொண்டே இருக்கிறது. அதுபோல அக்னிதேவனுக்கான வழிபாடு பிரபஞ்சத்தின் அடிப்படை கருதுகோளான பிரம்மம் குறித்தான பரிணாமத்தை காட்டும் சித்திரமும் அற்புதமானது. ஒவ்வொரு புதிய அறிதலும் அளிக்கும் பரவசத்திற்கு இணை எதுவும் இல்லை.
முழு வகுப்புகளிலும் உங்களது கவித்துவமான வாக்கியங்களை குறிப்பெடுக்கவே எனது முழு ஆற்றலையும் செலவழித்தேன். முதல் மற்றும் இரண்டாம் அமர்வின் குறிப்புகளை வைத்து கட்டுரை எழுத ஆரம்பித்தது நிறைவடையாமல் உள்ளது. அடுத்த அமர்விற்குள் இந்த வேலையை முடித்து விட வேண்டும்.
உபநிஷதங்கள் குறித்தான அடுத்த அமர்வினை பேரார்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.
சங்கரன் ஈ.ர
*
அன்புள்ள ஜெ
தத்துவ வகுப்புகள் இரண்டாம் கட்ட நகர்வை அடைந்திருப்பதை அறிந்தேன். என்னைப்போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு இது ஓர் இழப்புதான். அதைப்பற்றிக் கேட்டபோது ஆன்லைனில் இவ்வகை வகுப்புகளை நிகழ்த்துவதில்லை என்றீர்கள். இவற்றை நிகழ்த்துவதே பழைய நேரடி ஆசிரியர் மாணவர் உறவுசார்ந்த கற்றல் நிகழவேண்டும் என்பதற்காகவே என்றீர்கள். அந்த மரபு தொடரவேண்டும் என்பது உங்கள் விருப்பம் என புரிகிறது. அந்த முறையிலுள்ள அழகும் தீவிரமும் புரிகிறது. ஒன்றை கற்பதற்காக கிளம்பிச் சென்று மூன்றுநாட்கள் தங்குவதும், ஆசிரியருடன் உடனுறைவதும் பெரிய கொடுப்பினை.
நல்லது. என்றாவது எங்களூரிலும் ஒரு சந்திப்பை நிகழ்த்துங்கள்
விஜய்ராஜ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


