Jeyamohan's Blog, page 592
April 22, 2023
ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்’ – கடிதம்
பஷீரிய அழகியலைக் கையிலெடுத்த இளம் தலைமுறைப் புனைவு எழுத்தாளர்கள் தமிழில் குறைவே. வாசிப்பதற்கு எளிமையாகத் தோன்றும் அவை எழுதுபவருக்கு அத்தனை எளிமையான ஒன்றாக இல்லாமலிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அஜிதனின் ‘ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்’ பஷீரிய அழகியலில் அமைந்த ஒரு அழகிய குறுநாவல்.
இந்தக் குறுநாவல் முழுக்க வரும் மனிதர்களும், பிராணிகளும் ஒருவர் மற்றொருவருக்கு அளிக்கும் நிபந்தனையற்ற கனிவென்னும் வலைப்பின்னலால் சூழப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கனிவு எந்த பாவனைகளோ நாடகீய உச்சங்களோ இல்லாமல் இயல்பாக மண்ணின் ஈரமென அவர்களில் சுரந்தவண்ணம் இருக்கிறது. கதையின் மொத்த சாரத்தையும் குட்டன் ஒரு கீற்றாய் சொல்லிவிடுகிறது. அதன் அன்பின் புற வெளிப்பாடு இரண்டு இன்ச் வாலசைப்பு மட்டுமே. குழந்தைகளுக்கும் பிராணிகளுக்கும் உணவளித்த வண்ணம் இருக்கும் நிஷா மாமி; இட்லிப் பூவை தங்கையிடம் பகிர்ந்து தேனுண்ணும் போது அவள் முகத்தின் மலர்வை ரசிக்கும் அஜி; அரைக்கண் மூடினாலும் முழு நோக்கையும் பாப்புவின் மேல் வைத்திருக்கும் குட்டன்; வெள்ளத்தில் மீண்ட குட்டனின் நெற்றியை வருடும் அஜியின் தொடுகை; தேன் சுரப்பதற்காகவே தினமும் பூத்துக் குலுங்கும் இட்லிப் பூச்செடி; அடிக்கும் பாவனையில் மெலிதாய் தொட்டுச் செல்லும் குழந்தை பாப்பு; இனிக்கும் தென்னையின் நுனியை குழந்தைக்கு கொடுத்து மகிழும் முதிய தொழிலாளி; Tree of Life போல சகல உயிர்களுக்கும் இடமளிக்கும் கொய்யா மரம்; குழந்தையிடத்திலும் ‘கொள்ளாமா’ என்று பரிவுடன் விசாரிக்கும் ஊர் மக்கள்; இவை அனைத்தையும் பத்திரமாக பொதிந்து வைத்திருக்கும் பத்மநாபபுரம் கோட்டை; அன்பின் அரவணைப்புடன் வாழ்வின் நிதர்சனங்களை வாஞ்சையுடன் கற்பிக்கும் அம்மா – அப்பா; இப்படிக் குறுநாவல் நெடுக, கதை மாந்தர்கள் மழை நீரை சேகரித்து கீழேயுள்ள இலைகளுக்குக் கையளிக்கும் அந்த யானைக்காதுச் செடிகளைப் போல் கனிவைக் கைமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
வானம் மழையாய் புரக்க, மண் ஈரமாய் ஊற்றெடுக்க, மனிதர்கள் எந்த அலட்டலுமின்றி அன்பைச் சுரந்தவண்ணம் இருந்தாலும், இவை எதுவும் புனிதப்படுத்தப்படவோ, ‘எல்லாம் இன்பமயம்’ என்று பீடத்திலேற்றப்படவோ இல்லாமல் நீர் செல்லும் திசையில் ஒழுகிச் செல்லும் அஜியின் கப்பல்கள் போல எந்த எடையுமின்றி வாழ்வெனும் நதியில் ஒழுக்கிச் சென்றவண்ணம் இருக்கின்றன. வாழ்வின் சுழற்சியில் மறைதலும், மரணமும், இழப்புகளும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. கிணற்றில் விழும் பூனை, காயங்களால் மரிக்கும் குட்டன், இடி விழுந்து சரியும் தென்னை, இசையை நிறுத்தி மறையும் கிரீட்டிங் கார்ட், நீர் வற்றிப்போகும் குளமும் கிணறும், கோடையின் வெம்மையில் கருகி மறையும் செடி கொடிகள் என மனதை கனக்க வைக்கும் இழப்புகளும், மரணங்களும் கதை நெடுக வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் எல்லா இழப்புகளையும் கதைமாந்தர்கள் அவர்களின் அன்பின் ஈரத்தில் உதிர்க்கும் சில துளிக் கண்ணீருக்குப் பின் இயல்பாகக் கடந்து செல்கிறார்கள். அது போல் ஸ்ரீதேவி டீச்சர், குட்டனைக் குதறிப் போடும் மற்ற நாய்கள், பரணில் பூசலிடும் பூனைகள் என வாழ்வின் இருண்ட மூலைகளும் இயல்பாகக் காட்டப் பட்டிருக்கின்றன. ஆனாலும் மனிதர்கள் பெரும்பாலும் எந்த எதிர்மறைத்தன்மையோ இருண்மையின் சுவடோ அண்டாமல் நகர்ந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள். எல்லோரும் பாப்புவிடம் சொல்லத் தயங்கும் குட்டனின் மரணத்தை பாப்பு கடந்து செல்வது இக்கதையின் அபாரமான இடம் – “அவள் உலகில் காணாமல் போன ஒவ்வொன்றுக்கும் பதில் புதிய ஒன்று தோன்றியது, செத்துப்போனவை எல்லாம் மேலும் அழகாக மீண்டும் பிறந்தன, தீர்பவை அனைத்தும் ஓயாது நிரப்பப்பட்டன”.
ஒரு வாசகனாக இந்தக் குறுநாவல் என்னை முழுமையாக உள்ளே இழுத்துக் கொள்வதற்கு முக்கியமான காரணம் இதன் மொழியும் வடிவமும். எழுதப்பட்ட கதையாக இல்லாமல் ஒரு கதைசொல்லியால் சொல்லப்பட்ட கதையாக இருப்பதே இதன் வெற்றி. பஷீர், கி.ராஜநாராயணன் போன்ற மேதைகள் தேர்ந்தெடுத்த வடிவம். குறிப்பாக பஷீரில் அனாயாசமாக நிகழ்ந்த அற்புதமான அழகியல். இந்தக் கதையில் அஜிதன் தன் வாழ்க்கைப் பயணத்தின் வழி அந்த அழகியலைத் தனதாக்கிக் கொண்டு ஒரு தேர்ந்த கதைசொல்லியின் இருக்கையில் இயல்பாக அமர்ந்து கூறிச்செல்கிறார்.
குழந்தைகளின் பார்வையில் உலகையும், வாழ்கையையும் உற்று நோக்கி, அதை எந்தக் செயற்கைத் தன்மையுமின்றி எளிய சிடுக்குகளில்லாத மொழியில் சொல்லிச் செல்வது பஷீரின் மேதமை. பஷீரின் படைப்புகள் மனித வாழ்வின் துயரங்களையும், சுரண்டல்களையும், இழப்புகளையும் அப்பட்டமாகச் சொல்லிச் செல்லும் அதே நேரம், எவரையும் குற்றவாளியாக்கி தண்டிப்பதோ, நியாயத் தீர்ப்பு வழங்குவதோ இல்லை. சுய பகடி, அங்கதம் கொண்ட புன்னகைக்க வைக்கும் சித்தரிப்பால் அவை மீள மீள மன்னிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். குறும்பு செய்யும் பேரனை புன்னகைத்தபடி பார்த்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் தாத்தாவின் மனநிலைதான் எப்போதும். பஷீர் அந்த இடத்தை வந்தடைந்தது அவரின் அனுபவத்தின் மலர்வால். வாழ்க்கையின் அலைக்கழிப்புகளும், பயணங்களும், அவர் செய்த நூற்றுக் கணக்கான வேலைகளும் தந்த பழுத்த அனுபவங்களின் வழி அடைந்த ஞானம் அது. இந்திய ஞான மரபும், சூஃபி ஞானமும் அவருக்கு கையளித்த கனிவு அது. வாழ்வின் மீது பற்றும், விலக்கமும் ஒரு சேர அமையப்பெற்ற பஷீரின் படைப்புகளில் அந்த மெய்மை கனிவென வெளிப்பட்டவாறே இருக்கிறது.
ஞானத்தின் மூலம் பஷீரின் படைப்புகள் தொட்ட அந்தக் கனிவை, குழந்தை மனங்களின் களங்கமின்மையால் இயல்பாகச் சென்று அடைந்திருக்கிறது ‘ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்’. மழலையரின் உலகம் மிக நேர்த்தியாக காட்டப்பட்டிருக்கிறது. வாசிக்கும் போது புன்னகைக்கவும், வாசிப்புக்குப் பின் வாழ்வின் மீதான ஒட்டுமொத்த அறிதலையும் நிகழ்த்தியவண்ணம் இருக்கிறது. பெரியவர்கள் போல் பேதம் பார்க்காத பாப்புவின் உலகில் ராஜா ராணிக்கு இணையாக டான்ஸ் அக்காவுக்கும் இடமிருக்கிறது – “இங்க பாரு இந்த ஓட்டை வழியாதான் ராஜா ராணிலாம் டேன்ஸ் அக்கா ஆடுறத வேடிக்கை பாப்பாங்க”
வாழ்வின் சாரத்தை தன் சாய்வு நாற்காலியில் புன்னகைத்தபடி அமர்ந்து விரலிடுக்கில் பீடி புகைய பஷீர் தன் அனுபவத்தின் விலக்கம் கொண்டு பார்த்தவாறிருக்கிறார். பஷீர் கண்டடைந்த அந்தப் புள்ளியை குழந்தை அஜி தன் அறிதலுக்கான தனிமையை கொய்யா மரத்தின் மேலமர்ந்து கீழே தெரியும் உலகை விலகியிருந்து பார்ப்பதின் மூலம் அடைகிறான். அஜி சொல்லிச்செல்லும் சம்பவங்களின் வழியே வாழ்வின் மீதான ஒட்டுமொத்த தரிசனம் வாசகருக்குள்ளும் மலரத் தொடங்குகிறது.
அணுக்கமான ஒரு தோழனின் மரணம் போலவே அந்த வாழ்த்து அட்டையின் இசை நின்று போவது கவித்துவமாகக் நிகழ்கிறது. ஆனால், அது ஒரு தரிசனமாக உச்சம் கொள்வது அப்பா அஜியை மடியில் அமரவைத்து “தீராத பேட்டரினு ஒன்னு உலகத்துல உண்டா?… இதுன்னு இல்ல வாழ்கையில எல்லாமே சின்ன விஷயம் தான்.” என்று சொல்லும் இடம். சொற்களின் எளிமையால், மொழியின் அழகால், படிமத்தின் கூர்மையால் இவ்வரிகள் வாழ்க்கையின் ஒட்டுமொத்த தரிசனத்தை இனிய கவிதை வரிகளென ஒளிகொள்ள வைக்கின்றன. லார்ட் டென்னிஸனின் ‘மனிதர் வருவார் மனிதர் போவார்…’ என்ற வரிகளை மனதின் ஆழத்திலிருந்து கிளர்ந்தெழ வைக்கிறது. கூடவே ரூமியின் பின்வரும் ஆழமான வரிகளையும்.
Death has nothing to do with going away
The sun sets and the moon sets, but they’re not gone
Death is a coming together
கவிஞர் தேவதேவனின் ‘சிறுகுருவி’ கவிதை சென்றடையும் உச்சமும் இதுதானே!
என் வீட்டுக்குள் வந்து
தனி கூட்டைக் கட்டியது ஏன்?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்து தவ்விப் பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக் கடலை நோக்கி
சுரீரெனத் தொட்டது அக்கடலை, என்னை,
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்தப் பெருமிதத்துடன்.
நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன்வீட்டை.
ஒட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர்சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்
இந்தக் கதையைப் படித்தால், சொர்க்கத்தில் தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பொப்பூர் சுல்தான் மென்முறுவலுடன் தன் பேரனை ஆசீர்வதித்திருப்பார். அஜிதனுக்கு வாழ்த்துக்கள்!
பழனி ஜோதி
ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்: அஜிதன்’வெயில்’ மூன்று கவிதைகள், சதீஷ்குமார் சீனிவாசன்
வெயில்
வெயில் ஒரு பிரிவுணர்ச்சிபோல
எங்கும் பரவியிருந்தது
சிமென்ட்டால் ஆன பறவைகள்
சுற்றுசுவர்களில் சமைந்து நின்றன
நீர்மோர் பந்தல்களில்
மதிய நேர கூட்டம்
டயர்களின் மணம் சாலைகளில்
மிதந்துகொண்டிருந்தது
இந்த வெயிலில்
யாருக்கும்
எந்த தீங்கும் நிகழவேண்டாமென
விரும்பாத எதுவும் நடக்க வேண்டாமென
ஒரு கணம் நினைத்துக்கொண்டேன்
அந்திவரையிலாவது
எல்லோரையும் காப்பாற்று வெயிலே
பறிகொடுத்த வெயில்
இன்று பார்க்க கிடைத்தது வெயில்
இன்று உணர கிடைத்தது வெட்பம்
இன்று நாளெல்லாம்
உடன் இருந்தது தாகம்
யாரையும் நினைவூட்டாத வெயிலை
ஒரு மாலையில்
பறிகொடுத்தேன்
இசையற்ற வெயில்
வெயிலுக்கு ஏதேனும்
இசைமை இருக்கிறதா
ஆயிரம் மௌனங்களின் மனம்போல
விழுகிறது நிலத்தில்
ஈரமற்ற பொழுதுகளில்
வாடின உயிரின் தாவரங்கள்
இவான் இல்யிச்சின் மரணம், கடிதம்
அன்பின் ஜெ,
வணக்கம்.
மரணம் குறித்தான பயமும், அது சார்ந்த கேள்விகளும்தான் என் தேடலைத் துவக்கிய முக்கியப் புள்ளிகளாய் இருந்தன. யோசித்துப் பார்த்தால், “சுய மரணம்” கூட அல்ல, நாம் மிகுந்த பிணைப்பு கொண்டிருக்கும், அன்பு செலுத்தும்/அன்பைப் பெறும் ஒருவரின் சட்டென்ற “இல்லாமை” ஏற்படுத்தும் வெற்றிடம், தாங்க முடியாத மன அழுத்தத்தையும், அச்சூழலை நேருக்கு நேர் சந்திக்க முடியாத அதிர்வையும், சூன்யத்தையும், “இது என்ன?” என்ற கேள்வியையும், “இனிமேல் என்ன?” என்ற விரக்தியையும், அதுவரை வாழ்வைப் பற்றி, கொண்டிருந்த வரையறைகளையெல்லாம் சிரிப்பாக்கி, பொசுக்கி முற்றிலும் வேறு கோணத்தில், மாற்றுப் பாதையில் பயணப்பட வைக்கிறது.
அப்பா இறந்தபோது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் (அம்மா இன்னும் 30 வயதைக்கூட எட்டவில்லை). அப்போது கிராமத்தில் (மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி அருகே ஓடைப்பட்டி) வசித்தோம். நள்ளிரவில் அப்பாவின் உடல், மதுரை இராஜாஜி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டபோது நானும், தம்பிகளும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்தோம். மலங்க, மலங்க விழித்துக்கொண்டு அழுகையில் கரைந்த அந்த இரவு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அப்பா இல்லாத வெற்றிடத்தை அம்மா அன்பின் திடத்தைக் கொண்டு சாதுர்யமாக நிரப்பியதால் அந்த வயதில், அப்பாவின் இழப்பு அதிகமாய் அதிர்வுண்டாக்கவில்லை.
வளர, வளர, எங்கள் மூவரையும் வளர்த்துப் படிக்க வைக்க, அம்மா படும் கஷ்டங்களைப் பார்த்து, மூத்த பையனாகிய நான் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போய் சம்பாதித்து அம்மாவை நன்றாகப் பார்த்துக்கொளவேண்டும் என்ற உறுதி கொண்டிருந்தேன். கல்லூரி முடித்து, 23 வயதில், ஓசூரில் முதல் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே அம்மா நோய்வாய்ப்பட்டார். செங்கப்படை அரசுப்பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை செய்துகொண்டிருந்த அவர் (அப்பா இறப்பிற்குப்பின் அவருக்குக் கிடைத்த வேலை), வார இறுதிகளில் சிகிச்சைக்கு மதுரை வந்து போய்க்கொண்டிருந்தார். நோய் முற்ற, மருத்துவமனையில் அட்மிட் செய்யவேண்டியதாயிற்று. தம்பி சத்யன் உடனிருந்தான். இன்னொரு தம்பி மூர்த்தி அப்போது பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தான்.
நான் ஓசூரிலிருந்து இரு வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு மதுரை மருத்துவமனைக்குப் போயிருந்தேன். அம்மாவினால் சரியாகப் பேசமுடியவில்லை. இரண்டாம் நாள் படுக்கையிலிருந்த அம்மா “வேலையெல்லாம் எப்படியிருக்கு? ஒழுங்கா சாப்பிடறயா? கஷ்டமாருந்தா வந்துருப்பா. வீட்ல இரு. மெதுவா வேற வேலை தேடிக்கலாம்” என்றார். எனக்கு கண்கள் நிறைந்து உடைந்து அழ வேண்டும் போலிருந்தது. பக்கத்தில் தம்பி இருந்ததால் அடக்கிக் கொண்டேன். முந்தைய நாள் முன்னிரவில்தான், ராஜாஜி மருத்துவமனையின் மொட்டை மாடியில் அம்மாவின் நிலையை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பதால் கலங்கி தோளில் சாய்ந்து அழுத சத்யனைத் தேற்றியிருந்தேன்.
அம்மா கொஞ்சம் தேறி, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அவசரத்திற்கு மறுபடியும் மருத்துவமனை செல்லவேண்டுமென்றால், வசதியாயிருக்குமென்று, தல்லாகுளத்தில் மாமா வீட்டில் இருந்தார். சத்யனை உடன் விட்டுவிட்டு நான் ஓசூர் திரும்பினேன்.
1997 ஜனவரி 1; மார்கழியின் இன்னும் புலராத அதிகாலை. மணி இரண்டு/இரண்டரை இருக்கும். அலுவலகத்தின் இரவு காவல்காரர் கதவு தட்டி மதுரையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக சொன்னார்.
பெரும் இருள் சூழ்ந்த, சூன்யத்தில் நடமாடிய, அதன்பின்னான நாட்களை/மாதங்களை, இப்போது நினைத்துப் பார்க்கவும் பயமாக இருக்கிறது. பல நாட்களுக்கு மூச்சுத் திணறல் இருந்தது. இப்போதும் பேருந்தில் மதுரை கோரிப்பாளையம் கடக்கும்போதெல்லாம், ராஜாஜி மருத்துவமனையைப் பார்க்கும்போது, கண்கள் நிரம்பும். அந்த இரவில் என்ன நடந்தது என்பதை சத்யனிடம் முழுமையாகக் கேட்கும் தைரியம் கூட எனக்கில்லை அப்போது. மணி ராத்திரி பதினொன்று/பனிரெண்டு இருக்கும்; மூச்சு விடச் சிரமமாயிருக்கிறதென்று அம்மா சொல்ல, அவசரமாக தல்லாகுளத்தில் ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குப் போயிருக்கிறார்கள். தல்லாகுளத்திலிருந்து கோரிப்பாளையம் செல்லும் சாலையெங்கும் புது வருடப் பிறப்பின் கொண்டாட்ட வண்ண விளக்குகள்…மருத்துவமனை சென்று ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு வருவதற்குள் அம்மா அடங்கி காலத்தில் கரைந்திருக்கிறார்.
“இவான் இலியிச்சின் மரணம்” எழுதப்பட்டு 135 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னும், இன்னும் அது புத்தன்மையோடு, நிகழ்காலத்தின் உணர்வாகத்தான், மனஓட்டமாகத்தான், சிந்தனையாகத்தான், ஒளியில் பிரகாசிக்கிறது. இனிமேலும் வரும் நுற்றாண்டுகளிலும் அதன் வெளிச்சம் சிறிதும் மங்காது என்றுதான் நினைக்கிறேன். பேராசிரியர் ந. தர்மராஜ் ஐயாவின் மொழியாக்கம் சிறப்பாக இருந்தது. தளத்தில் தேடி, 2009-ல் பேராசிரியர் பற்றி நீங்கள் எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன்.
கவுன்சிலர் “இலியா கலவீன்”-க்கு மூன்று மகன்களும் ஒரு மகளும். மூத்தவன், அரசின் வேறொரு துறையில் கவுன்சிலராயிருக்கிறான். “இவான் இலியிச்” இரண்டாவது மகன். மூன்றாவது மகன் ரயில்வே இலாகாவில் வேலை செய்கிறான். மகள் கிரேஃப், செல்வம் மிக்க ஒரு பிரபு குடும்பத்தின் கனவானைத் திருமணம் செய்துகொண்டு உயர்குடி மருமகளாகி விட்டாள்.
இவானும், தம்பியும் ஒன்றாக, ஒரே கல்லூரியில்தான் சட்டப்படிப்பு படித்தார்கள். ஆனால், தம்பி படிப்பை முடிக்கவில்லை. இவான் படிப்பை முடித்து, ஒரு கவர்னரின் காரியதரிசியாக வேலைக்குச் சேர்கிறான். இவானின் உற்சாகமான, இனிய சுபாவமும், திறமையும், மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகக்கூடிய தன்மையும் பணியிடத்தில், இவானுக்கு நல்ல பெயரும், மதிப்பும் பெற்றுத் தருகிறது. ஐந்து வருடங்கள் கழித்து, நீதிமன்ற கவுன்சிலின் உறுப்பினராகி, பின்னர் அரசு உதவி வழக்கறிஞராகவும் ஆகிறான். உயர்மட்ட விருந்துகளில் சந்தித்த இளம்பெண் “பிரஸ்கோவியா”வைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறான். நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட, இரண்டுதான் தங்கியது. இப்போது ஒரு மகனும், மகளும். மகள் “லீசச்கா”-விற்கு இப்போது 16 வயது. திமித்ரி இவானோவிச்சின் மகன், இளம் விசாரணை நீதிபதி பெத்ரோவிச், லீசாவைக் காதலிக்கிறான். அவனுக்குத்தான் லீசாவைத் திருமணம் செய்துவைப்பதாக ஏற்பாடு. இளையவன் “வசீலி இவானோவிச்” உடற்கல்வி படிப்பு படித்துக்கொண்டிருக்கிறான்.
ஃபியோதர் இவானோவிச், இவானின் நெருங்கிய நண்பர்; உடன் படித்தவர். ஷவார்த்ஸ்-ம், ஃப்யோதர் வசீலியெவிச்-சும் கூட இவானின் நண்பர்கள்தான். இயல்பாக போய்க்கொண்டிருக்கிறது வாழ்வு. சில வருடங்கள் கழிந்தபின், இவானுக்கும், மனைவிக்குமிடையில் ஈர்ப்பு குறைந்து, இல்வாழ்க்கை கசப்புகள் நிறைந்ததாக மாறுகிறது. பணியிடத்திலும், தலைமை நீதிபதி பதவிக்கு கோப்பேயுடன் போட்டி போட்டு, தோற்கிறார் இவான். வருமானம், குடும்பத்தை நடத்தப் போதவில்லை. சில காலம் கிராமத்தில் பிரஸ்கோவியாவின் சகோதரன் வீட்டில் தங்கியிருக்கிறார்கள்.
மந்திரி சபையில் மாற்றம் வர, அரசுப் பதவியில் இருக்கும் இன்னொரு நண்பர் (கல்லூரியில் உடன் படித்தவர்) ஸஹார் இவானோவிச்சின் உதவியால், அவரின் சட்ட இலாகாவிலேயே இருமடங்கு அதிக மாத சம்பளத்தில் இவானுக்கு வேலை கிடைக்கிறது. ஏற்பாடுகள் செய்துவிட்டு பின்னர் குடும்பத்தை அழைத்துச் செல்லாம் என்று மைத்துனன் சொல்கிறான். மனைவி, குழந்தைகளை கிராமத்தில் விட்டுவிட்டு வேலை கிடைத்த நகருக்குச் சென்று ஒரு வீட்டை வாங்கி, அதன் உள் அலங்காரங்களை மனைவிக்கும், மகளுக்கும் பிடித்த மாதிரி பார்த்துப் பார்த்துச் செய்கிறார் இவான். ஒருமுறை உள்ளறையில் ஏணி வைத்து திரைச்சீலை மாட்டிக்கொண்டிருக்கும் போது ஏணி வழுக்கி விழுந்து இடது விலாப் பகுதியில் சிறிய சிராய்ப்புக் காயம். குடும்பம் வீட்டிற்கு வந்தபின், மனைவியிடம், வீட்டு வேலையின் போது தான் எப்படி வழுக்கி விழுந்தேன் என்று நடித்துக் காட்டி சிரிக்கிறார்.
சில வருடங்கள் கழித்து, சிராய்ப்புக் காயம் உண்டான இடத்தில் மெல்ல வலி துவங்குகிறது. வலி வரும் நேரத்தில் வாயில் கசப்பான உணர்வு. பல டாக்டர்களைப் பார்த்தும் பயனில்லை. நாளாக நாளாக வலி அதிகரிக்கிறது. குணமாகி விடும் என்ற நம்பிக்கையும் ஏமாற்றமுமாக இவானின் நாட்கள் கழிகின்றன. இவான் நோய்வாய்ப்படுகிறார். மருந்துகளினாலும், மனநிலையினாலும் வீட்டிலும், வேலையிடத்திலும் இவானின் செயல்களால் சூழல் துணுக்குறுகிறது. நோயும், மரண பயமும் இவானை அலைக்கழிக்கின்றன. இவான் படுத்த படுக்கையாகிறார். பால்யத்திலிருந்து, தற்போது வரையிலான தன் வாழ்வை மீண்டும் பின்னோக்கிப் பார்க்கிறார். ஆனந்தம் என்பதற்கும், வாழ்வு என்பதற்கும், மரணம் என்பதற்கும், உறவு என்பதற்குமான அவரின் இதுவரைக்குமான கருதுகோள்களில் முற்றிலும் நேரெதிர் மாற்றம் உண்டாகிறது. வேலைக்காரன் கெராஸிம் மட்டுமே அவரின் ஓரே ஆறுதல் இப்போது.
1882 பிப்ரவரி 4-ஆம் தேதி, தன் நாற்பத்தைந்தாவது வயதில் இறந்து போகிறார் “இவான் இலியிச்”. மூச்சு முட்டும் இருட்டுப் பொந்திலிருந்து விடுபட்டு ஒளியை நோக்கி பயணிக்கிறார். அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு…இருளிலிருந்து ஜோதிக்கு…
வெங்கி
“இவான் இலியிச்சின் மரணம்” (குறுநாவல்) – லேவ் தல்ஸ்தோய் (1886)
தமிழில்: பேரா.நா. தர்மராஜன்
ராதுகா பதிப்பகம், மாஸ்கோ/NCBH
April 21, 2023
பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்
சின்ன வயதில் படித்த ஒரு நிகழ்வு. தகழி சிவசங்கரப் பிள்ளை வைக்கம் முகமது பஷீரிடம் சொன்னார். “நான் ஒரு காதல் கதை எழுதப்போகிறேன்.”
பஷீர் பீடியை ஆழ இழுத்தபடி சொன்னார். “நாற்பத்தைந்து வயது கடக்காத எவர் எழுதிய காதல்கதையையும் நான் படிப்பதில்லை… காதல்கவிதை இளமையில் எழுதலாம். காதல் கதை எழுத ஒரு வயதுமுதிர்வு வேண்டும்.”
நாற்பத்தைந்து கடந்ததும் தகழி ‘செம்மீன்’ எழுதினார். பஷீர் அதன்பின்னர்தான் ’அனுராகத்தின்றே தினங்கள்’ என்னும் காதல் கதையை எழுதினார். பஷீரின் புகழ்மிக்க காதல்கதையான ’மதிலுகள்’ அதன்பின் எழுதப்பட்டது.
சென்ற ஆண்டு எனக்கு 60 ஆனபோது இயக்குநர், நடிகர், நண்பர் அழகம்பெருமாள் ஒரு வாழ்த்து அனுப்பியிருந்தார். கூடவே சொன்னார். “வாழ்த்தி வாழ்த்தி உங்கள வயசானவனாக்கிப் போடுவானுக பாத்துக்கிடுங்க… நல்லா காதல்கதைகள் நாலு எளுதி விடுங்க.”
அது ஒரு நல்ல எண்ணம் என்று தோன்றியது. ஆகவே எழுதலாமென எண்ணினேன். சென்ற அக்டோபரில் எழுத தொடங்கி இப்போது எழுதி முடிந்திருக்கிறது 12 காதல் கதைகள். இவற்றில் மூன்று கதைகள் மட்டுமே இணையத்தில் வெளியானவை. எஞ்சியவை எல்லாம் புதியவை.
காதல் என்று சொல்கிறேன். ஆனால் இவை ஒரு கணத்தின் கதைகள் மட்டுமே. ஆண் பெண்ணை கண்டடையும் கணம். ஆணும் பெண்ணும் அகம் தொட்டுக்கொள்ளும் கணம். ஒரு மாயக்கணம் அது. பின்னர் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க நினைத்துக்கொள்ளப்போகும் வாழும்தருணம்.
அது அடிப்படையில் ஒரு மனித உள்ளம் இன்னொரு மனித உள்ளத்தை அணுகியறியும் ஒரு தருணம். ஆசிரிய மாணவ உறவை விட்டால் முற்றிலும் அயலான இருவர் அணுகி இணையும் தருணங்களில் மிக மிக நுட்பமானதும், ஆழமானதும் அதுவே. அதைத்தான் எழுத முயன்றிருக்கிறேன்.
இன்று என் பிறந்தநாள். இன்று அந்நூல் வெளியாகிறது. நல்லதுதான், நான் எங்கே சாமியாராகிவிடுவேனோ என்று சதா அஞ்சிக்கொண்டிருக்கும் அருண்மொழிக்கு மிக ஆறுதலளித்த நூல் இது. இப்போது அருண்மொழியுடன் எர்ணாகுளத்தில் இருக்கிறேன்.
தமிழில் மிக நுண்ணிய சில மானுடத்தருணங்களை எழுதிக்காட்டிய வண்ணதாசனுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட நூல் இது.
ஜெ
டி.என்.சேஷாசலம்
டி.என்.சேஷாசலம் பலருக்கும் தெரியாத பெயர். அவர் பலரும் அறிந்த பரணீதரனின் தந்தை. நாடக ஆசிரியர், நடிகர் என்னும் வகையில் புகழ்பெற்றவர். கலாநிலையம் என்னும் வார இதழை நடத்தியவர்.
பேயும் தர்க்கமும் -கடிதம்
ஜெ,
நாவலுக்கு அடிப்படையாக தர்க்க முறை ஒன்று இருக்கிறது என்பதை கதாநாயகியை வாசிக்கும் போது உணர முடிந்தது. அது பேய் கதையே ஆனாலும் இந்த தர்க்க முறை மிக அவசியம் போலும். நாவலில் உணர்ந்த அந்த கருத்தியல் நிலைக்கு விமர்சன பூர்வமாக அல்லது கோட்பாட்டளவில் மொழியில் ஒரு வடிவத்தைக் கொடுக்க இப்போது இயலாது. உருவப் படுத்திக் கொள்ள அதனிடம் அருகே செல்ல செல்ல உருவம் சிதைந்து அது கரைந்து காணாமல் போய் விடுகிறது. கதை நாயகன், மெய்யன் பிள்ளை, விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையில் அவன் கண்ட Fanny Burneyஇன் புனைவு உலகத்தை போன்று இந்த தர்க்கம் என்ற கருத்தியலும் தொந்தரவு செய்யப்படாமல் அப்படியே கனவு நிலையில் இருக்கட்டும். கொஞ்சம் விழிப்பு வந்தாலும் கதாநாயகி ஹெலனா காணாமல் போய் விடுவாள்.
பேய் கதைக்கு மித மிஞ்சிய கற்பனை போதுமே logic அவசியமா? அல்லது logic என்பது எதார்த்தவாத கதைகளுக்கு மட்டுமே உரியதா? கதையை வாசிக்கும் போது இந்த கேள்விகள் இந்த நாவலை மையமிட்டு இருந்தன. கலைஞன் ஒருவன் யதார்த்தவாதத்திற்கு வலிந்து logic ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர் எதிராக பேய் கதைகளின் மாய புனைவுக்கு உறுதிப்பட்ட அடித்து உருவாக்கிய தர்க்க முறைமை ஒன்று அவசியம். அது கல் சிற்பம் ஒன்று தான் தாங்கி நிற்கும் உருவம் தெரியாத கலைஞனின் இருப்பைப் போன்றது. நம்ப முடியாத பேய் கதையின் நம்பகத்தன்மை ஆசிரியன் கட்டமைக்கும் தர்க்க முறைமையினால் சாத்தியப்படுகிறது. தர்க்கத்திற்கு வெளியில் கட்டமைக்கப்படும் பேய் கதைகள் ஒருவேளை திகிலையும் பயத்தையும் ஏற்படுத்தலாம் ஆனால் நாவல் வடிவத்தில் உயர் கலை வடிவமாக இருக்குமா என்பது ஐயத்திற்கு உரியது.
இங்கே ஒரு பேய் கதையில் திருவாங்கூர் வரலாறும் இங்கிலாந்தின் காலனிய ஆதிக்க வரலாறும் காட்டின் நடுவில் கேப்டன் மெக்கன்சி கட்டிய சிறிய வேட்டை பங்களாவில் 18ம் நூற்றாண்டின் Fanny Burnney நாவலில் சந்திக்கின்றன. அந்த வீட்டின் கதவை திறப்பதும், ஜெயமோகனின் கதாநாயகி நாவலை திறப்பதும், வீட்டின் உள் உள்ள Fanny Burnney நாவலை திறப்பதும் ஒரே நேரத்தில் நிகழ்பவைகள்.
கதாநாயகி + வேட்டை பங்களா + Fanny Burnneyயின் நாவல் = Endless Labyrinth.
ஒருமுறை இந்த சுழலுக்குள் நுழைந்து விட்டால் அதில் இருந்து வெளியேறவே முடியாது. மூன்று வாசிப்புகள் கதாநாயகியை திறந்தவுடன் ஆரம்பித்து விடுகின்றன. ஒன்று முதலில் கண் இருக்கும் தொடக்கூடிய நாவலான கதாநாயகியை வாசிப்பது, பின்பு அந்த முதல் வாசிப்புக்கு உள்ளே இன்னொரு சலிப்படையச் செய்யும் 18ம் நூற்றாண்டின் நாவலை வேறொருவர் வாசிப்பது. மீண்டும் அந்த இரண்டாவது வாசிப்புக்கு உள்ளே நடக்கும் ஹெலனாவின் மூன்றாவது வாசிப்பு. இதில் காலங்களின் குழப்பம் வேறு. நிகழ்வில் இருந்து கடந்த காலமும் கடந்த காலத்தில் இருந்து நிகழ் காலமும் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன. அந்த வீட்டில் காலங்களின் இடைவெளிகள் அற்று அனைத்தும் ஒன்றாகி விடுகின்றன. சிக்கிக் கொண்டால் வெளியில் மீள முடியாத Labyrinth இது. கதாநாயகியை வாசித்துக் கொண்டிருந்த எனக்கும் ஓர் இடத்தில் இந்த நாவல் Labyrinth ஆக மாறி விட்டது. ஹெலனா வேட்டைக்காக கொதையாறுக்கு வரும் காட்சி அது. இக்காட்சி இந்த நாவலுக்கு முன் நான் வாசித்த அல்லது வாசித்து கொண்டிருந்த இன்னொரு ஆங்கில நாவலின் சம்பவத்தோடு சேர்ந்து குழம்பி விட்டது. வாசித்த அந்த ஆங்கில நாவலின் கதாநாயகியின் பெயர் Ragna of Normandy (Ken Follett’s The Evening and the Morning). Regna Normandyயில் இருந்து தான் காதலித்த Earl ஒருவனை திருமணம் செய்து கொள்ள இங்கிலாந்து வருகிறாள். 1000 வருடங்களுக்கு முன் இங்கிலாந்தின் சில நகரங்கள் நம் கோதையாறு போன்றதுதான் இருந்திருக்கின்றன. Ragna என்ற அந்த கதாநாயகியை சற்று முந்தைய அதிகாரத்தில் ஹெலனாவாக வாசித்த குழப்பம் ஏற்பட்டு விட்டது. Fanny Burnney இன் நாவல் மட்டுமல்ல அதற்குள் நுழைய வாசலாக நிற்கும் ஜெயமோகனின் வேட்டை பங்களாவான கதாநாயகி நாவலே கூட ஒரு வகையில் Labyrinth என்று சொல்ல வேண்டும். அல்லது போர்ஹேஸின் மொழியில் இந்த வாசிப்பு ஒரு Aleph தருணம். இந்த Alephல் நிகழ் காலம், கடந்தகாலம், பரந்துபட்ட முழு உலகமும் என அனைத்தும் ஒரே நேர் கோட்டில் ஒருமித்து நம் கண் முன் காட்சியாக விரிய ஆரம்பித்து விடுகின்றன.
பொதுவாக உங்கள் கதைகளில் யானையின் கம்பீர நடை அப்படியே வியக்க வைக்கும். வழக்கத்திற்கு மாறாக இங்கே புலியின் ராஜ கம்பீரம் யானையை விட அபாரமாக காட்டப்படிருக்கிறது. இதுவரை கற்பிக்கப்பட்ட புலியின் எதிர்மறை கருத்துக்கள் அனைத்தையும் கதாநாயகியில் சுக்குநூறாகிவிட்டன. வாசிப்பில் சில நேரங்களில் Rudyar Kipling நினைவுக்கு வந்தார். “Kipling, you are dead wrong about Shere Khan in your Jungle Book” என்று சொல்ல தோன்றியது. காலங்களையும் இடங்களையும் மனிதர்களையும் விலங்குகளையும் ஒரே புள்ளியில் இணைக்கும் கதாநாயகி ஜெயமோகனின் Aleph என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்புடன்
இரா. அருள்
மரபுக்கவிதைகள் சிறப்பிதழ்
அன்புள்ள ஜெ,
ஏப்ரல் மாத கவிதைகள் இதழ் ‘மரபு கவிதைகள்’ சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இவ்விதழில் ‘செய்யுளிலிருந்து கவிதைக்கு’ என்ற தலைப்பில் கடலூர் சீனுவும், கம்பராமாயணம் குறித்த வாசிப்பனுபவத்தை ஸ்ரீநிவாஸும் (மினல் மணிக் குலம்), காலைக்கால் அம்மையாரின் பாடல் பற்றி பாண்டிச்சேரி தாமரைக்கண்ணனும் (ஆடவல்லானின் ஊர்த்துவம்), காளிதாசனின் ரகுவம்சம் குறித்து ஆனந்த் ஸ்ரீனிவாஸும் (தூண்கள் இல்லா தோரணங்கள்) எழுதியுள்ளனர். சி.சு. செல்லப்பாவின் எழுத்து இதழில் 1960 ஆம் ஆண்டு சி. கனகசபாபதி எழுதிய ‘புதுப் பார்வையில் பழைய தமிழ்க் கவிதை’ என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.
http://www.kavithaigal.in/நன்றி,
ஆசிரியர் குழு
“குமரித்துறைவி” அன்பளிப்பு விழா, ஜெ பிறந்த நாள் விழா
அன்பிற்கினிய ஜெ,
வணக்கம், நலம், நலம்சூழ வேண்டுகிறேன் உங்களுக்கு எங்கள் குடும்பத்தார் அனைவரின் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்நாளில் உங்கள் ஆசியை வேண்டுகிறேன்.
புதுவை வெண்முரசு கூடுகை கடந்த ஒரு ஆண்டு முழுவதும் ஜெ 60 சிறப்பு ஆண்டாக கொண்டாடியது. ஆண்டு முழுமையடையும் அந்த நாளில் என் தங்கை கலைவாணி@செல்வி அழகானந்தம் ஆகியோரின் மகளுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. (21.04.2023 – 23.04.2023) மூன்று நாள் நிகழ்வாக ஒருங்கி இருக்கிறது ஒரு நல்லூழ். அதில் 22.04.2023 அன்று மாலை 6:00 மணிக்கு ஒரு சிறு கலாச்சார விழவாக உங்கள் பிறந்த நாள் கொண்டாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. நண்பர் கடலூர் சீனு உங்களின் “ குமரித்துறைவி” நூலை அறிமுக படுத்தியும், நவீன இலக்கியம் குறித்தும் சிறு உரை நிகழ்த்த இருகிறார். அதைத் தொடர்ந்து “குமரித்துறைவி” நூல் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவதுடன் அந்நிகழ்வு நிறைவடைகிறது.
இதில் மகிழ்வென நான் உணர்வது “குமரித்துறைவி” நாவல் துவக்கமான “சித்திரை வளர்பிறை நான்காம் நாள் இன்று” எனத் தொடங்குகிறது. புத்தகம் மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் அனைவருக்கும் அன்பளிப்பாக அளிக்கப்பட இருக்கிறது.
குமரித்துறைவி படித்த வேகத்தில் ஓராண்டிற்கு முன்பு கோர்வை இல்லாத உணர்சிகரமான கடிதம் எழுதியிருந்ததை இப்போது நினைவுறுகிறேன். இரண்டு முறை வாசித்த பிறகும் அந்த உணர்ச்சிநிலை அப்படியே நீடிக்கிறது. அது ஏன் என கேட்டுக் கொண்டதுண்டு. இரு காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்று உதயன் செண்பகராமனுடன் என்னை மிக இணக்கமாக உருவகித்துக் கொண்டது. நான் அதுபோல முன்னெடுத்த அத்தனை இயக்கத்திலும் (அரசியல், ஆன்மீகம், இலக்கியம்) அது போல ஒன்றை தொடர்ந்து செய்து சிலரின் கடும் வெறுப்பினால் அலைக்கழிக்கப்பட்டாலும் அந்த செயல்பாடுகள் வழியாக இறுதியில் நான் கண்டடைந்தது என்னை. பாதுகாக்கப்பட்டதாக தனது அரண்மனையில் சென்றமர்வதுடன் அந்த நாவல் முடிவிடைகிறது. இத்தனை செயல்களின் முரணியகத்தின் பின்னும அவனுக்கு அது தேவைப்படவில்லை என்பது எனது உணர்வெழுச்சியை உருவாக்கியது.
இரண்டு நான் அந்த மாபெரும் அமைப்புகளை உருவாக்கி அதன் வெற்றியை உணர்ந்து தருக்கி நின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அடைந்த “கர்வபங்கம்”. அது கண்ணீரல்லாமல் படிக்க என்னை முடியமலாக்கியது.
அந்த நாவல் படித்த பிறகு எதாவது செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன் இதைவிட சிறப்பான தருணம் மறுமுறை வாய்க்காது. நன்றி. என் ஆசிரியரென விழவிற்கு உங்கள் ஆசியை வேண்டுகிறேன். சரியான நேரத்தில் புத்தகங்களை அனுப்பி உதவிய மீணாம்பிகைக்கும் எனது நன்றிகள்.
நன்றி
ஆழ்ந்த நட்புடன்
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
April 20, 2023
ஜெயகாந்தன் இசைவட்டு – வெளியீட்டு விழா
தமிழ் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் பொருட்டு, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடர்ந்து இசைக்கோவையும், ஆவணப்படங்களும் எடுத்து வருகின்றன. அந்தத் தொடர் முயற்சியில் இப்பொழுது, தமிழர்களின் சிந்தனையை கூர்மைபடுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தனை , கொண்டாடும் பொருட்டு, ராஜன் சோமசுந்தரம் இசையில் புதிததாக ஒரு இசைவட்டு வெளிக்கொணர்கிறது. அரைத்தூக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் வழியே, சிறு புன்னகையுடன் சித்தர் ஒருவர் நடந்து செல்வதாக, ஒரு சந்தர்ப்பத்தை உருவகித்துக்கொண்டு , ஜெயகாந்தன் எழுதிய மூன்று கவிதைகளை எடுத்துக்கொண்டு இசையமைத்துக் கொடுத்துள்ளார். பாடகர் சத்யப்ரகாஷ் அவர்கள் அதை உணர்ந்து பாடியுள்ளார். ஷயர்லி கஸுயோ (Shirley Kazuyo) அவர்கள் கோட்டோவும், தென்னமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்மரி ரிவேரோ (Osmary Rivera) மாண்டலினும், மிதுன் அவர்கள் புல்லாங்குழலும் வாசித்துள்ளார்கள்.ஜெயகாந்தன் பிறந்தநாள் ஏப்ரல் 24 என்பதால், இதுவே சரியான தருணம் என, அவரை அணுக்கமாக வாசித்த, தனது கதைசொல்லல் வழியாக இன்று வரை வாசகர்களிடம் அவரை எடுத்துச்செல்லும் எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்களை இந்த இசைவட்டை, ஏப்ரல் 22 அன்று இணையவழி நிகழ்வில் வெளியிடும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். இளையராஜா அவர்கள் இசையில் ஜெயகாந்தனை ஆவணப்படம் எடுத்த இயக்குனர் ரவிசுப்பிரமணியன், அவர் கதைகளை வாசித்து வளர்ந்த, தமிழ்ச்சிறுகதைகளை தனது சிறப்பான பேச்சால் எடுத்துச் செல்லும் பாரதி பாஸ்கர் அவர்கள், தமிழிலக்கிய முன்னோடிகளின் சிறப்பை இலக்கிய அரங்கில் தொடர்ந்து முன்வைக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவிருக்கிறார்கள். இப்பொழுதும் ஜெயகாந்தனை வாசிக்கும் இள வாசகன் ஒருவர் உண்டா என்ற தேடலில் கிடைத்த R.S. சஹாவையும் பேச அழைத்திருக்கிறோம். நண்பர்கள் இணையவழி நடக்கும் இந்த இசைவட்டு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.Date : Apr 22, 2023
Time : 8:00 PM IST/ 9:30 AM CST / 10:30 AM EST
Zoom Link : https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09(allowed first 100)
YouTube : https://www.youtube.com/@vishnupuramusa
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா).ஒரு பிறந்தநாள் வாழ்த்து
நாளை 22 ஏப்ரல் 2023 அன்று என்னுடைய பிறந்தநாள்.61 ஆம் அகவையை கடக்கிறேன். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஏதுமில்லை. சென்ற ஆண்டு இந்த நாளில் அமெரிக்கப் பயணத்தின் பரபரப்பு. இம்முறை அருண்மொழியுடன் கேரளத்தில் எர்ணாகுளம் பக்கமாக ஒரு பயணம். ஒரு குட்டி தேனிலவுப்பயணம் என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.
நண்பர் ஒருவர் 17 ஏப்ரல் 2023 அன்று அனுப்பிய மின்னஞ்சலில் இந்த போஸ்டரின் புகைப்படம் இருந்தது,. நிலக்கோட்டை மு.வ.மாணிக்கம் அண்ட் கோ தங்க நகை விற்பனையாளர்கள் என் பிறந்தநாளை ஒட்டி வாழ்த்துச் சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டியிருக்கிறார்கள். அறம், கொற்றவை நூல்களின் படங்கள் உள்ளன. நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, மதுரை முழுக்க ஒட்டப்பட்டுள்ளது.
19 ஏப்ரல் 2023 அன்று வத்தலக்குண்டு பத்மலதா விளம்பர நிறுவனம் நடத்தும் சிவா அவர்கள் என்னை வந்து சந்தித்து அந்த போஸ்டரை வழங்கினார். நான் வசிக்கும் ஊர் என்பதனால் நாகர்கோயிலிலும் ஒட்டுவதாகச் சொன்னார்கள்.
இந்தச் செயல் உண்மையிலேயே மகிழ்வளிக்கிறது. எனக்கான வாழ்த்துக்கள் என்பதனால் மட்டுமல்ல. இத்தகைய செயல்பாடுகள் வழியாக இலக்கியம் சமூக ஏற்பு பெறுகிறது. இலக்கியவாதிகள் மேல் சமூக மதிப்பு உருவாகிறது. கர்நாடகத்திலும் கேரளத்திலும் மட்டுமே கண்டுவந்த ஒரு வழக்கம் இது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

