Jeyamohan's Blog, page 589
April 27, 2023
பொன்னியின் செல்வன், இன்று
இன்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பகுதி வெளியாகிறது.இந்த ஆண்டின், இந்த மாதத்தின் இரண்டாவது படம் இது. விடுதலை இன்னும் திரையரங்குகளில் அதே விசையுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்று நான் நாகர்கோயிலில்தான். அருகே எங்காவது சென்று படத்தைப் பார்க்கலாமென்று எண்ணம். படம் வெளியாகி மூன்றுமணிநேரத்தில் அதன் ரசிகவெளிப்பாடும், வணிகமதிப்பும் தெரிந்துவிடும். அதன்பின் விமர்சனங்கள் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள ஏதுமில்லை. இணையக் ’கருத்தாடல்’களில் என்னென்ன பேசப்படும் என முன்னரே தெரியும்.
ஆகவே 29 அன்று கிளம்பி வழக்கமான மலைத்தங்குமிடத்துக்கே சென்று அங்கே இருக்கலாமென திட்டமிட்டிருக்கிறேன். அங்கே மின்னஞ்சல்கள் மட்டுமே பார்க்கமுடியும். ஒரு வாரம் கழித்து மீண்டும் சினிமா உலகில் நுழையலாமென்று திட்டம்.
சினிமா உருவாக்கும் இந்த பதற்றத்தில் சினிமாக் கலைஞர்கள் திளைப்பதைக் கண்டிருக்கிறேன். சினிமாவில் தையல்கலைஞர், சமையற்கலைஞராக பணியாற்றுபவர்களுக்குக் கூட இந்தப் பதற்றம் இருக்கிறது. ஏனென்றால் மக்கள்ரசனை என்பது சமகாலம் என்பதன் இன்னொரு பெயர். என்னென்ன விரும்பப்படுகிறது, எப்படி ரசிக்கப்படுகிறது என்று முன்னரே சொல்லிவிடமுடியாது. ஏன் என்பதை எவராலும் விளக்கமுடியாது.
’பொன்னியின் செல்வன், விவாதங்கள்’- ஒரு நூல்மலர்த்துளியின் பொருள்?
அன்புள்ள ஜெ
மலர்த்துளி அழகிய தலைப்பு. ஆனால் அதன் பொருள் என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. சின்னஞ்சிறிய மலரா? மலரின் ஒரு துளி என்றால் சிறிய இதழா? அல்லது மலரின் மகரந்தமா?
ஆர்.கருணாகரன்
மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்கஅன்புள்ள கருணாகரன்,
போகிறபோக்கில் வைத்த பெயர். பெரிதாக யோசிக்கவில்லை. அதற்குள் உள்ள ஒரு கதை மலர்த்துளி. அதில் மலர்த்துளியாக ஆவதுதான் அட்டையிலும் உள்ளது. மலரின் ஒரு துளி அவ்வளவுதான். மலர் ஒரு மதுக்கிண்ணம் என்றால் அதில் இருந்து சொட்டுவது.
மலர்த்துளி என்றால் தேன் என்றும் பொருள் உண்டு. அருணகிரிநாதரின் திருப்புகழ் வரி இது
ஓடி யோடி அழைத்துவர சில
சேடிமார்கள் பசப்ப, அதற்குமுன்
ஓதி கோதி முடித்து, இலைச்சுருள் அது கோதி
நீடு வாசம் நிறைத்த அகிற்புழுகு
ஓட மீது திமிர்த்த தனத்தினில்
நேசமாகி அணைத்த சிறுக்கிகள் உறவாமோ?
நாடி வாயும் வயல் தலையில் புனல்
ஓடை மீதில் நிலத்ததில் வேட்கையின்
நாத கீத மலர்த்துளி பெற்று அளியிசை பாடும்
கோடுலாவிய முத்துநிரைத்த வைகாவூர்
நாடதனில் பழநிப்பதி கோதிலாத
குறத்தியணைத்த அருள் பெருமாளே.
ஓடி ஓடி அழைத்துவந்து சில சேடிமார்கள் பசப்ப
அதற்கு முன் கூந்தல்சுருளை கோதி
வெற்றிலைச் சுருளை நீவி எழுந்து வந்து
நீடிக்கும் வாசனை கொண்ட அகில்புகை பெற்று
திமிர்த்து எழுந்த முலைகளின்மேல்
அணைத்துக் கொள்ளும் சிறுக்கிகளின்
உறவு ஒர் உறவாகுமோ?
நாடி வளம் வந்துசேரும் வயல்வெளியும்
நீர் பெருகும் ஓடையும்
கொண்ட அழகிய நிலத்தில்
நாதம் நிறைந்த பாடலின்
மலர்த்துளியைப் பெற்று
வண்டுகள் இனிய இசைபாடும்
மலைத்தொடர்கள் அணிந்த
முத்தாரம் என திகழும் வைகாவூர் நாட்டில்
பழனி என்னும் ஊரில்
குறையற்ற குறத்தியை மணந்த
அருள்புரியும் பெருமாளே?
*
எளிமையாக இதை காமத்திற்கு எதிராக பக்தியை நிறுத்தும் பாடல், காமத்தை விடுத்து இறைவனை நாடச்சொல்லும்பாடல் என கொள்ளலாம். ஆனால் இதை கவிதை என எடுத்துக்கொண்டால், காமத்தில் இருந்து நுண்மையான உணர்வுகளை நோக்கிச் செல்லும் பயணம் இதிலுள்ளது என்று படுகிறது. உலகியல் காமத்தில் இருந்து காதலின் sublime நோக்கிச் செல்லும் கவிதை.
காமத்தை அளிக்கும் பெண்களின் உறவு ஓர் உறவாகுமா? அடுத்த பகுதி வெறுமே பழனி வர்ணனை அல்ல. வயல்கள், ஓடைகள், நிலம், மலை ஆகியவற்றின் மிகநுண்மையான வெளிப்பாடு அவற்றில் மலரும் மலர்கள். அம்மலர்களின் தேன். அத்தேனை நாதமும் கீதம் ஆக்கும் வண்டுகள்.
இப்பாடலில் நாத கீத மலர்த்துளி என்ற சொல்லாட்சி ஓர் அழகிய அனுபவம். நாதமும் கீதமும் இனிமையும் அழகுமான ஒரு துளி. நான் எழுத முயன்றது அத்துளிகளையே
ஜெ
பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார்
தமிழகத்தில் சுவாரசியமான ஒரு மரபுத்தொடர் அமைப்பு உள்ளது. தஞ்சை வேதநாயக சாஸ்திரியாருக்கு 1818ல் தஞ்சை டேனிஷ் மிஷன் திருச்சபை அவருடைய வாரிசுகளும் வேதநாயகம் சாஸ்திரியார் என அழைக்கப்பட்டு, சபை கௌரவங்களை அடைவார்கள் என பத்திரம் ஒன்றை எழுதியளித்தது. அதன்படி தலைமுறைகளாக வேதநாயகம் சாஸ்திரியார்கள் வருகிறார்கள். இப்போதைய வேதநாயகம் சாஸ்திரியார் கிளமெண்ட். இவர் சென்னையில் கமஸ் என்னும் இசைக்குழுவை நடத்தும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்
கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார்
கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார் – தமிழ் விக்கி
தலித் இலக்கியம், இலக்கிய அளவுகோல்கள்…
எண்ணியதுபோலத்தான். ‘நீ அப்படித்தான் சொல்வாய். ஏனென்றால் உன் சாதி அது. உன் அரசியல் அது. உன்னால் வேறுமாதிரி பார்க்கமுடியாது. உங்கள் அளவுகோல்களை எங்கள் மேல் போடவேண்டாம்’ என்றவகை வசைகள் வந்துவிட்டன.
இத்தகைய விவாதங்கள் நிகழும்போது ஒவ்வொரு முறையும் சொல்லப்படுவதுதான் இது. இலக்கியம் அல்லது கலை பற்றிய அறிதலே இல்லாத அரசியலாளர்களும், அவர்களை தொழுது பின்செல்லும் முதிராப்படைபபளிகளும் சொல்வது அது. அதை இவ்வாறு சுருக்கிக் கொள்ளலாம். ‘புறவயமான அழகியல் பார்வை இருக்கமுடியாது. வாசிப்பவரின் சாதி, வாசிப்பவரின் அரசியல் சார்ந்துதான் அது முடிவாகிறது’
ஒரே ஒரு இலக்கியப்படைப்பை உளமொன்றிப் படித்த எவருக்கும் இது எந்த அளவுக்கு அபத்தமானது என்று தெரியும். தெரியாதவர்களிடம் விவாதிக்கவே முடியாது. இலக்கியம் மானுடர் உருவாக்கியுள்ள சாதி, மதம், இனம், மொழி, நிலம், வட்டாரம், பால் சார்ந்த எல்லா அடையாளங்களையும் கடக்கும். மொழி வழியாகவே அது ஆசிரியனின் உள்ளம் வாசகனைச் சென்றடையச் செய்யும். அப்படி நிகழ்ந்தால்தான் அது இலக்கியம்.
வாசகனின் ஆழுளத்துடன் உரையாடும் வல்லமை இலக்கியத்திற்கு உண்டு. அந்த வல்லமை இலக்கியத்திற்கு உள்ளது என்பதனால்தான் இலக்கியமென்னும் செயல்பாடு இன்றுவரை மானுடக்குலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நான் பலமுறை சொன்னது இது. ஆர்ட்டிக் எஸ்கிமோ மக்களின் வாழ்க்கையை யூரி பலாயன் எழுதினால், ஆப்ரிக்க மக்களின் வாழ்க்கையை பென் ஓக்ரி எழுதினால் நான் அந்த வாழ்க்கையை வாழமுடியும். அதுவே இலக்கியம்.
அவ்வாறல்ல, இலக்கியம் அவரவர் அரசியலால் மட்டுமே வாசிக்கப்பட முடியும் என ஒருவர் உண்மையில் நம்பினால் அவர் எழுதவேண்டியதே இல்லை. அரசியல் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்தால்போதும். அவர் என்னதான் எழுதினாலும் அதில் அவரவர் அரசியலே படிக்கப்படுமென்றால் அவர் புனைவு எழுதி ஏன் நேரத்தை வீணடிக்கவேண்டும்?
இலக்கியத்தை இலக்கியமறிந்தோரிடம் மட்டுமே விவாதிக்க முடியும். அரசியலாளர்களுக்கு அது அரசியல் மட்டுமே . வம்பர்களுக்கு அது வம்பு மட்டுமே. அவர்களின் கூச்சல்களை என்றுமே இலக்கியம் பொருட்படுத்தியதுமில்லை.
இலக்கியத்தின் வழி மூளையூடாக அல்ல. அது உணர்வுகள் வழியாக, கனவுகள் வழியாக தொடர்புறுத்துகிறது. அது வெளியே நின்று ஆராய்ந்தறியும் பார்வையை கோரவில்லை. புனைவுக்குள் புகுந்து தன்னையும் அக்களத்தில் அக்கதைமாந்தருடன் வாழச்செய்யும் கற்பனையை வாசகனிடம் கோருகிறது. அழகியல்விமர்சனம் என்பது அப்படி வாழச்செய்கிறதா அந்த புனைவு என்று பார்ப்பது மட்டுமே
முரண்களின் தொகை – சுப்ரமண்ய ராஜு புனைவுலகம்- ரம்யா
“அவனது அணுகுமுறைகள் உணர்ச்சிபூர்வமானதா அறிபூர்வமானதா என்பதை இன்றளவும் தீர்மானிக்கமுடியவில்லை; எல்லாவற்றையும் எளிதாக்கிச் சிரித்தாலும் உணர்ச்சிபூர்வமான ஆசாமி ராஜு. உணர்ச்சி பசப்பல் கிடையாது. ஆனால் உணர்ச்சி வசப்படுவது உண்டு” என தேவகோட்டை வா. மூர்த்தியும்; “அவன் மிகைஉணர்ச்சிகள், சென்டிமெண்ட்ஸ் ததும்புகிற மனிதன் இல்லைதான். ஆனால் அவனுள் குடும்பம் எப்போதும் நிரம்பியிருந்தது. ஆனால் அதை விட அதிகமாய் அவன் நண்பர்கள் மனதில் தங்கியிருந்தார்கள், திருவல்லிக்கேணி மேன்ஷன்களில் தங்கியிருப்பதைப் போல நெருக்கியடித்துக் கொண்டு.” என மாலனும் சுப்ரமண்ய ராஜு பற்றி குறிப்பிடுகின்றனர்.
தன் அன்னை இறந்த இரண்டாம் நாள் மாலனுக்கு எழுதிய கடிதத்தில் “எனக்கு வாழ்க்கையின் அபத்தம், குரூரம்,irony எல்லாம் புரிந்துவிட்ட மாதிரி இருக்கிறது மாலன். ஆனால் இது அல்ல சாஸ்வதம். எதுவுமே அல்ல” என சுப்ரமண்ய ராஜு எழுதியிருந்தார். உண்மையில் அவரின் கதைகளின் வழி முழுவதுமாக வாழ்க்கையின் முரண்களை, அபத்தத்தை, குரூரத்தை எழுதிப்பார்த்தார் எனலாம்.
ராஜுவுக்கு பாலகுமாரன், தேவக்கோட்டை வா. மூர்த்தி, மாலன், கமல்ஹாசன், அசோகமித்திரன், பிரபஞ்சன் என நண்பர்கள் குழாம் அதிகம். அசோகமித்திரன் அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த புதியரக புகைப்படக் கருவியில் எடுத்த குடும்பப் புகைப்படம் தான் இன்றளவும் ராஜு குடும்பத்தில் இருக்கும் குடும்பப்புகைப்படம். முடிந்தவரை தவறாமல் அசோகமித்திரன் மாலைகளில் சந்திக்கும் நபராக ராஜு இருந்தார். டிடிகே நிறுவனங்களில் பணிபுரிந்தார். தன் நண்பர் கமல்ஹாசனை சந்தித்து உரையாடுபவர். தன் நண்பர்களிலேயே தன்னிடம் சினிமா சார்ந்த உதவி கேட்காத நபராக ராஜுவை கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார். காபி கடைகளில் இலக்கிய அரட்டைகளில் எப்போதும் உடனிருக்கும் நண்பர்களாக மாலன், பாலகுமாரன் ஆகியோர் இருந்துள்ளனர்.
ராஜுவின் உதவும் குணத்தை நண்பர்கள் விமாலதித்த மாமல்லன், பிரபஞ்சன் ஆகியோர் சுட்டிக் காட்டியுள்ளனர். ”உதவி கேட்பவர்கள் எழுத்தாளர்களாக இருந்துவிட்டால், ராஜு கிட்டத்தட்ட ஒரு குறு நில மன்னன் தான்” என மூர்த்தி குறிப்பிடுகிறார். ஆனால் அதன் நிமித்தம் அவரைப் புகழும்போது,“இது மாடஸ்டி இல்லை, மூர்த்தி. நீ வக்கீல் வீட்டுப்பிள்ளை. எனவே இளமையில் வறுமை என்பதன் கொடூரம் பற்றி உனக்குத் தெரியாது” என ராஜு அவற்றை மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்.
சுப்ரமண்ய ராஜுவின் படைப்புகள் என நமக்குக் கிடைப்பது 2006-ல் கிழக்கு பதிப்பகம் தொகுத்த சுப்ரமண்ய ராஜுவின் இருபத்தி ஒன்பது சிறுகதைகளும், மூன்று குறு நாவல்களும் அடங்கிய தொகுப்பு மட்டுமே.
ராஜு விடுதலைக்குப்பின்னான காலகட்டத்தில் 1948- பாண்டிச்சேரியில் பிறந்தவர். இயற்பெயர் விஸ்வநாதன். நண்பர்கள் அழைக்கும் பெயரும் அதுவே. அந்தப்பெயரில் அவர் விமர்சனக்கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள் எழுதியுள்ளார். ராஜு என வீட்டில் அழைக்கும் தன் பெயருடன் தன் தந்தையின் பெயரையும் இணைத்து சுப்ரமண்ய ராஜு என்ற பெயரில் புனைவுக்கதைகள் எழுதினார்.
எழுபதுகள், எண்பதுகளில் ராஜு தன் இலக்கியப்பயணத்தை ஆரம்பித்தார். காதலித்து திருமணம் செய்து கொண்டவர். சரோஜா ராமமூர்த்தி, து.ரா என எழுத்தாளர் குடும்பத்தில் மருமகனாக இருந்தவர். சரோஜாவிற்கும் ராஜுவிற்கும் அணுக்கமான உறவு இருந்ததாக அவரின் மனைவி பாரதி குறிப்பிடுகிறார். சென்னையில் தன் இளமைக்காலத்தைக் கழித்தவர். தன் குடும்பம், அலுவலகம், இலக்கியம் என யாவும் சென்னையை மையமாகக் கொண்டே அமைத்துக் கொண்டவர்.
ராஜு தன் கதைகளில் காண்பிப்பது அந்த காலகட்டத்து சென்னையைத்தான். தான் வாழ்ந்த வாழ்க்கையை எழுதுவதையே அவர் இலக்கியமாகக் கருதினார். கற்பனைக் கதைகள், எதார்த்த கதைகள் பற்றிய விவாதத்தை வைக்கும் ’முதல் கதை’ என்ற சிறுகதையை எழுதியுள்ளார். அக்கதையில் எழுத்தாளராக விரும்பும் துருதுருப்பான ஒரு உறவுக்காரப்பெண்ணை எதார்த்தவாதக் கதைகள் எழுதும் ஒருவர் சந்திக்கிறார். அப்பெண் கற்பனைக் கதைகள் எழுதுபவள். ஆவலாக அவனிடம் வந்து காண்பிக்கும் அவளிடம் அக்கதைகள் எவ்வாறெல்லாம் நல்ல கதை இல்லை என்று சொல்லி அவள் வாழ்க்கையிலிருந்து எழுதச் சொல்கிறார். அவள் ’இந்த நான்கு சுவர்கள் தான் என் வாழ்க்கை இதை மட்டும் வைத்து எப்படி கதை எழுதுவது’ என்று கேட்ட போது இந்த நம் சந்திப்பும் கூட புனைவு தான் என்று சொல்கிறான். அவர்களுக்குள் காமம் நிகழ்கிறது. அவன் எந்த ஒரு குற்றவுணர்வுமில்லாமல் தன் அடுத்த பயணத்தை நோக்கிய பாதையில் செல்கிறான். அவள் பால்கனியில் நின்று கொண்டு நீண்ட நேரமாக அவனுக்காக அழுகிறாள். அன்றிரவு அவள் தன் முதல் கதையை எழுதினாள் என்ற வரி கதையின் இறுதியில் வருகிறது.
இதன் வழியும் ராஜுவின் புனைவுலகத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ராஜு தன் காலகட்டம், இடம், தன் வாழ்க்கை, தான் சந்தித்த மனிதர்கள், மனங்கள் யாவற்றையும் புனைவு வழி ஆராய்ந்து பார்த்துள்ளார். அக்காலகட்ட எழுத்தாளனின் நிலைமையை மாலன் சொல்லும்போது ”கடை, ஆஃபீஸ், ஃபாக்டரி என்று அலைந்துவிட்டு, அழுக்கும் பிசுக்குமாக வேலை செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி கவிதை எழுதும் காலம் நமக்குத்தான் வந்திருக்கிறது. ஸ்பானரை எடுத்து மிஷினை முடுக்குகிற கையில்தான் பேனாவையும் எடுத்து கதை, நாவல் எழுதுகிற காலம்.” என்கிறார்.
இந்தக்கால கட்டத்தைச் சேர்ந்த ஒர் படித்த பட்டதாரி இளைஞன், வேலை தேடுபவன், அலுவலகத்தில் அவனைச் சுற்றிய அல்லல்கள், ஆண்-பெண் உறவுச்சிக்கல்கள், இளமை, துள்ளல், காமம், பெண், ஆணின் பெண், ஆண் பார்த்து பரிதாபப்படும் பெண், திருமணமான ஆண், அவன் குடும்பம், கள்ள உறவுகள், பிறழ்வுறவுகள் என தன் புனைவின் பேசுகளத்தை இதைச் சுற்றியே பெரும்பாலும் வைத்திருக்கிறார்.
அவர் எழுதியவை யாவும் இளமைத் துடிப்புள்ள கதைகள். விறுவிறுப்பானவை லாஜிக்கானவை, அறிவார்ந்த உரையாடல்களால் அமைந்தவை. பெண்களும் நண்பர்களும் இக்கதைகளில் தவிர்க்க முடியாதவர்கள். கதையுலகம் சற்றே சிகெரெட்டின் புகையாலும், மதுவின் வாசனையாலும் நிறைந்துள்ளது எனுமளவு ராஜுவின் ஆண்கள் இருக்கிறார்கள்.
ராஜுவின் கதைகளில் சுதந்திரத்திற்கு பின் பிறந்து எழுபது எண்பதுகளில் மத்தியத்தர இளைஞர்களாக இருந்தவர்களின் எதார்த்த வாழ்க்கையே பிரதிபலிக்கிறது. அன்றாடத்தில் மூழ்கி சலிக்கும் வாழ்க்கையை வாழ்பவர்களின் மேல் அவருக்கு இருக்கும் ஒவ்வாமையை கதைகள் பதிவு செய்கின்றன. அவர்களின் ரசனையைச் சாடுகிறார். ராஜுவின் சென்னை என்று சொல்லுமளவு நம்மை அவர் கண்கள் வழியாகத் தெரியக்கூடிய ஒரு புதிய சென்னையை தன் புனைவுப் பிரபஞ்சத்தின் வழி கட்டியெழுப்புகிறார். சென்னை ரயில், திருவல்லிக்கேணி, ராமாவரம், லெவல் க்ராஸிங் கேட், பெசண்ட் நகர், தாம்சன் கம்பெனி என யாவும் சென்னையை மையமாகக் கொண்ட கதைகள். ராஜுவின் கதைகளில் தவிர்க்க முடியாத அம்சமாக ரயில் உள்ளது. காதல் தோல்வி, காதல் நினைவுகளை மீட்ட, அலுவலகத்திற்கு செல்லும் ஒரு வாகனமாக என கதைகளின் ஊடே அதன் சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
*
உரையாடல் வழியாக கதையைக் காட்சிப்படுத்துவது ஒருவகை எழுத்து. உரையாடல் வழியாக கருத்துக்களை முன்வைப்பது இன்னொரு வகை. ராஜு இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். சூழ்நிலை, கதாப்பாத்திரங்கள், பிரச்சனைகள், அறச்சிக்கல்கள் உருவாகிய பின் அவற்றைத் தீர்ப்பதற்காக கதாபாத்திரங்களை அறிவார்ந்து உரையாட விடுபவர். ஆனால் அந்த கதாபாத்திரங்கள் எந்தப்பாதையைத் தேர்வு செய்கிறது என்பது உணர்வு சார்ந்து அமைந்து விடுகிறது.
சரளமான உரையாடல் தன்மையுடன் கூடிய கதைசொல்லல் முறை ராஜுவினுடையது. கதையின் வடிவங்களில் சில பரிசோதனை முயற்சிகள் செய்திருக்கிறார். ’இருட்டில் நின்ற’ சிறுகதையில் கொலையின் காரணமாக ரயில் நிற்க அதிலிருக்கும் நாயகன் எழுந்து வெளியில் வந்து நின்று மெல்ல தன் சொல்லப்படாத காதலையும், காதலியையும் எண்ணிக் கொண்டே இருப்பதும், தொடர்பில்லாமல் அந்த ரயில் பெட்டியிலிருந்த இன்னொரு பெண்ணின் அவனைப் பற்றிய அவதானிப்புகளும், பிற மனிதர்களின் நின்று போன ரயில் பற்றிய பேச்சரவங்களையும் மோதவிடும்படி சிறுகதையை அமைத்திருக்கிறார். அகக்குரல்களும் புறக்குரல்களும் மோதவிடும்படி அமைக்கப்பட்ட கதை.
’இன்னொரு கனவு’ சிறுகதை அதன் கூறுமுறையைக் கொண்டும், பேசுபொருளைக் கொண்டும் வித்தியாசமான சிறுகதை. தான் கனவு கண்டது நிஜத்தில் நடக்கிறது என்ற வியாதியைக் கொண்டவன் மருத்துவரை சந்திப்பதாக வரும் கதையில் அதுவும் கனவாக முடியும் ஒரு நல்ல திருப்பம் அமைந்த கதை. கதை வளர்கிறது.
’தாகம்’ கதை ஒரு லூப் கதை. இரண்டே பக்கங்கள் கொண்ட சிறிய கதை. வாசகர் தங்கள் உள்ளத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொள்ளக் கூடிய கதை. ராஜுவின் கதைகளில் திடீரென எங்கோ நடுவழியில் பெரிய வயல்களினூடே சிறு குடிசையைக் கொண்ட வீடிருக்கும் இடத்தில் நின்று போகும் ரயில் கொண்ட சித்திரம் வருகிறது. அது ராஜுவின் கனவின் படிமம் என்று சொல்லுமளவு நினைவில் நின்றுவிடுகிறது.
’தூண்டில்’ சிறுகதை ஜனவரியில் ஆரம்பித்து ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர் எனத் தொடர்ந்து மீண்டும் ஜனவரியில் முடியும் கதையாக உள்ளது. ஜனவரியில் ஒரு பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்தி, தன்னை தானே அவளை அவனிடம் கொடுக்க வைத்து, அவளாகவே பிரிந்து செல்லும்படி சூழ்நிலையை உருவாக்கி, உதிர்த்துச் சென்று மீண்டும் புதுக்காதலியைத் தேடி தூண்டில் போடும் பெண் விரும்பி பற்றிய கதை. ஏமாற்றும் ஒரு தரப்பின் மனதின் அப்பட்டத்தை துல்லியமாகக் காண்பித்த கதை.
*
எல்லா கதைகளிலும் நாயக பிம்பம் ஆண். ராஜுவின் கதைகளில் வரும் ஆண் படித்த பட்டதாரி இளைஞன், பிழைக்கத் தெரிந்தவன், லாஜிக்காக யோசிப்பவன், அறிவார்ந்தவன், பெண் விரும்பி, சென்னையின் ஏதொவொரு நல்ல கம்பெனியில் வேலை செய்பவன், நண்பர்கள் அதிகம் கொண்டிருப்பவன். புகைப்பழக்கம் கட்டாயம் உள்ளவன், மதுப்பழக்கம் உள்ளவன் ஆனால் குடிகாரன் இல்லை என்ற பதாகையைத் தாங்கிக் கொண்டு.
லட்சியவாதம் ஆன்மீகம் இவற்றையெல்லாம் கடந்து நிதர்சனத்தின் முன் அப்பட்டமாக நின்றால் பெரும்பான்மை ஆண்களின் உலகம் காமத்தை மையமாகக் கொண்டதாக உள்ளது. எந்த அறிவுஜீவி ஆணும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஓர் ஆணுக்கு காமம் துளிர்த்தெழும் பருவம் தொடங்கி அது அடங்கி அமிழும் பருவம் என ஏதும் உண்டானால் அது வரை அவன் உலகின் நடு நாயகமாக அதுவே உள்ளது. காமத்தைப் போக்கிக் கொள்ளும் ஊடகமாக இவர்களுக்குப் பெரும்பாலும் பெண்கள் தான் இருக்கின்றனர்.
பெண்ணை ஓர் ஆண் எவ்வாறு காமத்தை நோக்கி செலுத்துகிறான், ஆணின் ஆழுள்ளம் அவர்களைப் பற்றி நினைப்பதென்ன எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் ஒரு பெண்ணை ஏமாற்ற முடிகிறது என பல வகையான பேசு பொருட்களை ராஜூவின் கதைகள் பேசுகின்றன. ஆண் மனத்தின் அப்பட்டங்களை கதை நெடுக பதிவு செய்துள்ளார். குறிப்பாக ஆணின் கீழ்மைகளை. பெரும்பாலும் ராஜு காண்பித்த ஆண்கள் பெண்ணைக் காதல் வலையில் விழ வைத்து ஏமாற்றுபவர்கள். ஆண்களின் உலகத்தில் உண்மையில் பெண் என்ன பேசுபொருளாக இருக்கிறாள், அவர்கள் மத்தியில் அவளுக்கு என்ன மதிப்பு என அப்பட்டமாகக் காண்பிக்கிறார்.
சில காதல் தோல்விக் கதைகள் வருகின்றன தான். அதில் கிடந்து உழலும் ஆளாக ஆண் இருக்கிறான். மனைவி-ம்மா பிரச்சனையில் அல்லல்படும் குடும்பக் கணவனாக ஆண் வருகிறான். திருமணமான ஆண் எவ்வாறு இரவின் நிமித்தம் மனைவிக்கு அடிமையாகிறான் என்பது பற்றிய சித்திரங்கள். ஒரு குடும்பத்தில் மனைவியின் அழுத்தங்கள் எவ்வளவு தொலைவு ஒரு கணவனின் ஒட்டுமொத்த வாழ்க்கையை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்ற சிந்தனையை பல இடங்களில் பதிவு செய்கிறார்.
‘கொடி’ சிறுகதை வரதட்சிணையை மையமாக வைத்து பேசும் சிறுகதை. அத்தனை வரதட்சிணை கேட்கும் ஒரு ஆளை ஏன் திருமணம் செய்ய வேண்டும் அதற்காக இத்தனை கடன் செய்து திருமணம் செய்ய வேண்டுமா என கேட்கும் முதலாளியிடம் தன் மனைவியின் அழுத்தத்தை பதிவு செய்யும் ஒரு அலுவலக ஆள். அவரின் பண்பின் நிமித்தமும், ஏற்கனவே சந்தித்திருந்த அவரின் மகளைப் பிடித்திருந்ததாலும் அவளை திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் அதன் பின் அவனுடைய அறிவார்ந்த லாஜிக்குகள் அவளின் உணர்வு ரீதியான மிரட்டல்களால் காலம் முழுமைக்கும் எப்படி அடிமையாக்குகிறது என முடித்திருக்கிறார். பொதுவாகவே பெண் சார்ந்த சமூகப் பிரச்சனைகளுக்கு எதிர் தரப்பு ஆண் மட்டுமல்ல. வரதட்சிணை போன்ற கொடுமைகளுக்கு பெண்ணும் ஒரு முக்கியமான காரணம் என்பதை உள்ளார்ந்து உணர்த்தும் ஒரு ஆண் தரப்பு.
அதே போல வீட்டில் பணம் வாங்க வரும் நண்பர், அவர்களை அலட்சியமாகப் பார்க்கும் மனைவி, பொதுவாகவே நண்பர்கள் நிமித்தம் ஏமார்ந்து போகும் கணவன், பிழைக்த் தெரியாத ஆண் வரும் கதைகளும் அதிகம்.
இதிலுள்ள சிக்கல் ராஜு இன்னும் அதை அடுத்த கட்ட தளத்தை நோக்கி எடுத்துச் செல்லாமல் விட்டது தான். ராஜு சொல்லும் ஆணின் உலகம் இன்றளவிலும் மாறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தலைவனின் பிரிவில் ஏங்கும் தலைவிகளை விட்டுச் சென்ற தலைவன்களின் உலகத்தையே ராஜுவின் கதைகள் காட்டுகின்றன. ஆனால் அவற்றைப் பற்றிய ஆழமான விசாரணையை அவை நிகழ்த்தவில்லை என்பதால் பெரும்பாலும் மேலோட்டமான கதைகளாக உள்ளன.
*
ராஜுவின் பெண்கள் பெரும்பாலும் ஆண்களால் ஏமாற்றப்படும் அபலைகள். ‘கேள்விகள்’ சிறுகதை தன் மனைவியின் கற்பை சந்தேகப்படும் கணவனின் எண்ணவோட்டங்களாகப் பதிவு செய்யப்பட்ட கதை. ஒரு மொட்டைக் கடுதாசியை கையில் கொண்டு அவளின் சொந்த ஊருக்கு அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை அறியச் சென்றவன் அலைக்கழிப்புடன் இருக்கையில் அவன் தங்கியிருந்த லாட்ஜில் இருந்த வேலை செய்யும் பையன் ”வேற ஏதாவது வேணுமா சார்?” என்கிறான். அந்த இரவு ஒரு ப்ராஸ்டியூட்டுடன் உறவு கொண்ட பின் பல நாட்களாக இருந்த அந்த அலைக்கழிப்பு பற்றிய எண்ணத்தை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்குச் செல்வதாக அமைந்த கதையில் திருமணத்திற்கு முன் தன் மனைவிக்கு இன்னொருவருடன் உறவு இருப்பது சரியா தவறா என லாஜிக்காக விவாதித்துக் கொண்டே இருப்பதாக கதை நகர்கிறது.
பெண்ணை உடல் கொண்டு மதிப்பிடும் ஆண்களே ராஜுவின் கதைகளில் உள்ளனர். ”உடம்பை நன்றாக வைத்துக் கொண்டிருந்தாள். கணவனுடன் இருந்திருந்தால் குழந்தைகளால் வீண் ஆகியிருக்கும்; நல்ல நாட்டுக் கட்டை என மனதிற்குள் அவளைப் படுக்க வைத்தான்.; மாயா –ஹேமாவைவிட உயரம். லதாவைவிட அழகு. பிருந்தா மாதிரி சிவப்பு” என்பன போன்ற விவரணைகளே அதிகம் பெண்ணைப் பற்றி வருகின்றன. உடலைத் தாண்டிய ஒன்றை ராஜுவின் ஆண்கள் பெண்களில் கண்டறிவதேயில்லை எனலாம். ஒருவகையில் அது உண்மையும் கூட.
தன் கணவனால் கண்டுகொள்ளப்படாத அலுவலகம் செல்லும் மனைவி தன் மேலாளருடன் கொள்ளும் உறவு பற்றிய கதை ’நேற்றுவரை’ சிறுகதையில் வருகிறது. உறவுகளின் ஆரம்பத்தில் நிகழும் பித்து நிலையயும் அதை அவள் கடக்கும் விதத்தையும் எடுத்துச் சொல்லும் கதை.
ராஜுவின் கதைகளில் திருமணத்திற்கு பிறகு வரும் பிறழ்வுறவுகள் பற்றிய கதைகள் உள்ளன. ஆண்களுக்கு அப்படி ஏற்படும் உறவுகளை எப்படி மனைவிகள் எதிர்கொள்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும் கதைகள் உள்ளன. தீர்வாக முறிவுகள் அமையவில்லை. மாறாக குடும்ப அமைப்புக்குள் கணவன் –மனைவிக்கு பங்கமற்ற தீர்வுகளே முன் வைக்கப்படுகின்றன. படித்த அலுவலகம் செல்ல ஆரம்பித்துவிட்ட பெண்களின் காதல் வாய்ப்புகள், சலனங்களையும் கதைகளில் காண்பிக்கிறார்.
*
ஆண்பெண் உறவுச்சிக்கலைப் பேசும் கதைகளில் உரையாடல்கள் அறிவார்ந்து நிகழ்கின்றன. ஆனால் இயல்பும் முடிவும் உணர்வை நோக்கியே செல்கின்றன.
’இன்னொரு பக்கம்’ சிறுகதை ஓர் அருமையான காதல் தோல்வி கதை.
“டில்லிக்கு தினம் போகும்
நீ போன ரயிலும்”
என்ற கவிதை இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கும் கதை. அறிவார்ந்து எத்தனை உரையாடினாலும் அந்தக் கவிதை மீண்டொலித்துக் கொண்டே நித்தமும் டெல்லிக்குச் செல்லும் அந்த ரயிலை பார்த்துக் கொண்டே இருக்கும் நாயகனைப் பற்றிய கதை.
ஒரு ஆணுக்கு பெண் மேல் ஏன் ஈர்ப்பு வருகிறது? என்ற கேள்வி இந்த மனித இனம் தோன்றியதிலிருந்தே எழும் கேள்வி தான். இந்தக் கதையில் ஆண்களுக்கு இடையே நடக்கும் ஓர் அறிவார்ந்த உரையாடல் மூலம் அதை அணுக முற்படுகிறார்கள். “ஒரு ஆண் எதற்காக ஒரு பெண்ணிடம் போக வேண்டும்? அது அவனுக்கு எல்லாரிடமும் கிடைப்பதில்லை. ஷாவும் ஷேக்ஸ்பியரும் நாம் அவர்களிடம் நெருங்க உபயோகிக்கும் வழிகள்; பொம்பள நமக்கு ஏற்படும் தேவைகளில் ஒன்று. அதுக்கு அவசியம் ஏற்படும்போது வாங்கிக்கறோம்; எந்த ஆணுமே ராத்திரியில் தான் உண்மையான ஆம்பளையா இருக்கான்; நாம் பெண்ணை ஒரு பொருளாகத்தான் நினைக்கிறோம். இந்தக்காதல் என்பது உடம்போட நெருக்கமான ஒன்றுதான்” போன்ற சிந்தனைப் போக்குகள் இந்தக்கதைகளில் உரையாடலாக வருகிறது.
ஆனால் இதை அறிவார்ந்து அணுகும் நாயகன் அந்தக் கவிதை வரிகளை மீள சொல்லிக் கொண்டு மீண்டும் மீண்டும் அந்த ரயிலில் தன்னைப் பிரிந்து சென்ற காதலியையே நினைத்து மருகுகிறான் என்ற முரண் உள்ளது. உணர்வும் அறிவும் ஒன்றுக்கொன்று முரணாகும் கதை. எத்தனை தொகுத்துக் கொண்டாலும் பேசித்தீர்த்தாலும் உணர்வின் கரவுப்பாதையை கட்டுப்படுத்தவியலாத மனிதனின் இயலாமையை பல கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
*
ராஜூவின் பெரும்பானமையான கதைகளில் ஒரு அறச்சிக்கலை முன்வைக்கிறார். அதற்கான தீர்வை வெறும் பரிவுடன் அல்லாமல் தன்னை அந்நிலையில் வைத்து பொருத்திப்பார்க்க ஏதுவான ஓர் எதிர்த்தரப்பை உருவாக்கி ஒரு முடிவை எடுக்கிறார். இப்படியான பல கதைகள் திடமான தீர்வுகளுடன் திட்டவட்டத்தன்மையுடன் முடிந்துவிடுவதால் கதை பெரும்பாலும் வளர்வதில்லை.
’சாமி அலுத்துப்போச்சு’ சிறுகதையில் நோய்வாய்ப்பட்ட மனைவியை விட்டுவிட்டு சலனத்துடன் துறவு மேற்கொள்ள கோயில் நகரத்துக்கு வரும் கணவன் அங்கு சாமி அலுத்துப்போச்சு என்று பூசாரியான தன் கணவனைச் சொல்லும் ஒரு மனைவியைச் சந்திக்கிறான். அவள் வழியாக பெண்கள் நினைத்தால் இந்த குடும்ப அமைப்பை விட்டு இத்தனை விரைவாக அவனைப் போல வெளிவர முடியாது என்பதைப் புரிய வைத்து அவன் வீடு திரும்பும் ஒரு கதையாக முடிக்கிறார்.
கடன் வாங்கி கட்ட முடியாமல் தவிக்கும் வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் வெங்கடேசன். அவர்கள் குடும்பத்தில் ஏழைகளுக்கு அன்னமிடுகையில் அதை தடுத்த அவனின் மனைவியின் சொல் வழியாக தரித்திரம் நுழைந்த கதையை வெளிப்படுத்துகிறார். அந்த பணத்தை வசூல் செய்யச் செல்லும் கதைசொல்லி அவர்கள் வறுமையைக் கண்டு அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்கிறான். வெங்கடேசனின் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ”இவாளாம் ஒட்டுண்ணி மாதிரி. யாராவது கிடைக்கமாட்டாளானு காத்துண்டு இருப்பா. உங்கள மாதிரி ஒருத்தர் கிடைச்சா போரும் ஒட்டிண்டு விடுவா. நாம என்ன சத்திரமா வச்சிருக்கோம்” என கதைசொல்லியின் மனைவி சொல்கிறாள். அப்போது அவளுக்கு ஓர் அறை விழுகிறது. அந்த அறை முன்பு இதே போல் சொன்ன வெங்கடேசனின் மனைவிக்கும் விழுந்த அறை, ஒரு படி மேலே போய் வெங்கடேசனிடம் கடனை வாங்க வர்புறுத்திய கதைசொல்லியின் முதலாளி கோபலனுக்கு விழுந்த அடியாகவும் கொள்ளும்போது அதன் கணம் கூடுகிறது.
”வாழ்க்கையில் பல படிகளைக்கடந்து வந்தவர். அதனாலேயே எல்லாரும் அப்படியே வர வேண்டும் என்று நினைப்பவர்.” என முதலாளி கோபாலனைப் பற்றிய சித்திரம் ஒன்று வருகிறது. நன்கு வாழ்ந்த வெங்கடேசனின் குடும்பத்தைக் கண்டவர். அவர்கள் வழி உதவிகளைப் பெற்றவர். ஆனாலும் அந்த மனித நேயம் இல்லாமல் அவர் பெற்ற கடன்தொகையைக் கேட்டு நித்தமும் நச்சரிப்பவர். ஆனால் கதைசொல்லி வெங்கடேசனின் கதையை அறிந்தபின் அவருடைய கடன்தொகையை அவனே கட்டிவிட்டு பட்டினியால் அவர்கள் இருப்பது கண்டு விருந்தும் வைக்கிறார். இந்த முரண்களின் மனிதர்களை அவர் காட்டத் தவறுவதே இல்லை.
’மீண்டும் ஓர் ஆரம்பம்’ சிறுகதையில் கதைசொல்லி தன் முதலாளியிடம் எப்படியெல்லாம் நடித்து, நல்ல தன்மையாக காட்டிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுகிறான் என்பதைக் காண்பிக்கிறார்.“என்னோடு ஒருமுறை பேசியவர்கள் இன்னொருமுறை பேசும் கவர்ச்சி என்னிடமுண்டு” என தன் பேச்சின் துணைகொண்டு முன்னேறும் கதைசொல்லி ஒருபுறம். அதற்கு இணையாக ”இந்த அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்கிற உறவுகளே நாம் பழகுவதால் ஏற்படுகிற இணைப்புகள் தான்” என்று கூறி தன் சொந்தக் கால்களில் நிற்க ஆசைப்படும் வைராக்கியம் கொண்ட முதலாளியின் பையனையும் காண்பிக்கிறார். அவனைக் கண்டபின் அவன் சொற்களைக் கேட்டபின் தன் வாழ்க்கையை மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கும் கதைசொல்லியைப் பதிவு செய்கிறார்.
”ஜாதகம்” சிறுகதையில் நோய்வாய்ப்பட்ட மாமியார் இனி வைத்தியம் பார்த்தாள் பிழைத்துக் கொள்வாளா என அவளை கவனித்துக் கொள்ளும் மருமகள் தன் கணவனை ஜாதகம் பார்த்து வரச் சொல்கிறாள். செல்லும் இடத்தில் தன் அம்மா அவனை வளர்த்த விதத்தை நினைவு கூறும் சிறு சம்பவம் இன்னொரு அம்மாவின் வழியாக நிகழ்கிறது. இம்முரண்களை ராஜு பல கதைகளில் காண்பித்துள்ளார். இந்த முரண்களின் சமன்தன்மை கதையை ஒரு முழுமைக் கதையாக மாற்றுகிறது. ஆனால் மனதில் வளர ஏதுவான வாசக இடைவெளி இல்லாமல் சாளரத்தைச் சார்த்திவிடுகிறது.
*
“Am I aHypocrite?” இந்தவரி ஒரு சிறுகதையின் முடிவில் வருகிறது. ராஜுவின் பெரும்பானமையான கதைகளை இதற்குள் அடைக்கலாம். இந்த கேள்வி அவருக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. “அப்பாவிகள் ஏமாற்றப்படுகிறார்கள்” என பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. எல்லா உயிருக்குள்ளும் ஒரு விழைவு உண்டு. அது வாழ வேண்டும் என்ற விழைவு. மனிதனில் அது பல வகைகளில் உள்ளது. வாழ்வதற்கு தேவையானது பணம், உணவு, உடை, காமம், வேலை, உறவு, மகிழ்ச்சி என சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை அடைய எதை வேண்டுமானாலும் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்று ஒரு தரப்பு. இவை பற்றிய பிரக்ஞையின்றி உண்மையாகவே விழைவுகளின்றி இந்த லாஜிக்காக சிந்திப்பதெல்லாம் இல்லாமல் வாழ்ந்து ஏமாற்றம் கொண்டு மாண்டு போகும் இன்னொரு கூட்டம்.
இதற்கு இடையில் இருக்கும் ஒரு தரப்பு உண்டு,”ஊசலாட்ட தரப்பு”. அவர்களை Hypocrite எனலாம். பாசாங்கு செய்பவர்கள் என எளிதில் எதிர்மறையாக விலக்கிவிட முடியாதவர்கள். ராஜுவின் கதைகளில் இத்தகைய மனிதர்கள் பற்றிய விசாரணை அதிகம் உள்ளது.
*
பொதுவாகவே நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் அறிவார்ந்த விவாதங்களையே ராஜு கையாள்கிறார். ஆனால் அதன் இறுதி பெரும்பாலும் ”ஊழ்” என்பதன் மேல் நம்பிக்கை கொண்டே முடிகிறது. இத்தனை நிகழ்த்தகவுகளை யோசித்த பின்னும் இது இப்படித்தான் நடந்திருக்கும் என்பதோ அல்லது எது நடந்தாலும் அது நன்மைக்கே எனும் படியாகவே கதைகளின் இறுதி அமைந்துள்ளது. ஆண்-ண் உறவுச் சிக்கல் என பல விசாரணைகளுக்குப் பின்னும் விளக்க முடியாத ஒன்றை அவர் உணர்ந்திருப்பது போலவே இறுதிகள் அமைந்துள்ளன.
இலக்கியப் பத்திரிக்கை தொடங்கும் திட்டம் வைத்திருந்து அதை வேலைப்பளுவின் காரணமாக நிறைவேற்றமுடியாமல் போனவர்.“அவனை இன்று ஆஃபீஸ் தின்றுவிட்டது. லேடக்ஸ் பீப்பாய்களுக்கும் கணக்குப் புத்தகங்களுக்கும் ஆஃபீஸ் ஃபைல்களுக்கும் நடுவே அவனுடைய கவிதையும் இலக்கியமும் விழுந்துவிட்டன. அவன் அந்தப் பெரிய ஆஃபீஸின் இன்னொரு இயந்திரம் ஆகிப் போனான்.” என மாலன் சொல்கிறார். ஏதோவகையில் குடும்பமும், அலுவலகமும் மனிதன் தான் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதையை கை கொண்டிருக்கும் தத்துவத்தை மறு விசாரணைக்கு ஆளாக்கிக் கொண்டே இருக்கின்றன. எல்லா ஊசாலாட்டத்தையும் மனதின் அப்பட்டத்தையும் உண்மையாக எந்த பாசாங்கும் இல்லாமல் வெளிப்படுத்திய தன்மைக்காகவும், ஒரு காலகட்டத்தின் மனித மனங்களை பிரதிபலித்ததற்காகவும் நினைவுகூறப்பட வேண்டியவர் சுப்ரமண்ய ராஜு.
ரம்யா
குரு நித்யா காவிய முகாம்
குரு நித்யா காவிய முகாம் நித்ய சைதன்ய யதி வாழ்ந்த காலத்திலேயே தொடங்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப்பின் 1999 முதல் தொடர்ச்சியாக ஊட்டி குருகுலத்தில் நடைபெற்றது. தமிழ் – மலையாளக் கவிதைகளுக்கான உரையாடலாக தொடங்கப்பட்டமையால் அப்பெயர் பெற்றது
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் உருவான பின்னர் 2010 முதல் இலக்கிய கூடுகையாக நடைபெறத்தொடங்கியது. கோவிட் தொற்று தொடங்கியபின் 2020, 2021, 2022 ஆண்டுகளில் நடைபெறவில்லை.
இப்போது மே இரண்டாம் வாரம் 12, 13 மற்றும் 14 தேதிகளில் (வெள்ளி,சனி, ஞாயிறு) ஈரோடு அருகே மலையில் அதை மீண்டும் தொடங்கி நடத்தலாமென நினைக்கிறோம்.
பங்கேற்க ஆர்முள்ளவர்கள் programsvishnupuram@gmail.com என்னும் விலாசத்திற்கு எழுதலாம்
முன்னரே பதிவுசெய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பெயர்
வயது
ஊர்
தொலைபேசி எண்
ஆகியவற்றை மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்
ஜெ
April 26, 2023
இமையம், தலித் இலக்கியம் பற்றி மீண்டும்…
வணக்கம்,
சில நாட்களுக்கு முன்பு இமையம் தன்னை தலித் எழுத்தாளர் என்று அழைக்க கூடாது என்றார். இப்போது தலித் இலக்கியம் பற்றி பேசப் போகிறார்.
இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற பிரிவு அவசியம்தானா? அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
இராஜீவ்
இமையம் சொல்லும் அவதூறு…அன்புள்ள இராஜீவ்,
இமையம் அதில் தன்னைத்தவிர மற்றவர்களெல்லாம் தலித் இலக்கியவாதிகள் என முத்திரையடிக்கப்போகிறாரோ என்னவோ?
(தெளிவத்தை ஜோசப் தலித் எழுத்தாளர் என்று எவருமே இதுவரை சொன்னதில்லை. பலருக்கு இப்போதுதான் அவருடைய சாதியே தெரிந்திருக்கும். அந்த அடையாளத்தை முழுமையாக ஏற்க மறுத்தவர் அவர். அதை மட்டுமேனும் இமையம் சுட்டிக்காட்டலாம் என எதிர்பார்க்கிறேன்)
என்னை குற்றம்சாட்டிய இமையத்தின் பேச்சு என்பது ஓர் அரசியல்நாடகம். அவருடைய படைப்புகளின் மொழியாக்கங்கள் எல்லாமே தலித் அடையாளம் கொண்டுதான் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர் தன்னை தலித் எழுத்தாளர் என சொல்லிக்கொண்டு பல அரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறார்.
அவர் எவருக்கோ தன்னை ஒரு வகையில் காட்ட விரும்புகிறார். அதற்கான இலக்காக என்னை எடுத்துக்கொண்டு வசை. அவருக்கு அவர் நினைத்தது அமையட்டும்.
*
இந்த விவாதங்களில் ஒன்று கவனித்தேன். பலர் ‘தலித் பின்னணி கொண்ட எழுத்தாளகளை தலித் இலக்கியவாதிகள் என்று சிலர் முத்திரை குத்தி ஒதுக்குகிறார்கள்’ என்று குமுறியிருந்தனர். இமையமும் இப்போது அவ்வப்போது அப்படி சொல்கிறார்..
தமிழகத்தில் தலித் இலக்கியம் என்ற வகைப்பாட்டை உருவாக்கியவர்கள் ’பிற’ எழுத்தாளர்கள் அல்ல. அது முழுக்க முழுக்க தலித் எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டது. 1980 களில் குஜராத்திலும், மராட்டியத்திலும், பின்னர் கர்நாடகத்திலும் தலித் இலக்கிய அலை உருவானது. அங்கே உருவான தலித் அரசியலின் ஒரு பகுதியாக அது பிறந்தது. அதற்கு தேசிய அளவில் அங்கீகாரம் அமைந்தது. தலித் என்ற பெயர் அவர்கள் தங்களுக்குச் சூட்டிக்கொண்டது.
பல முக்கியமான படைப்பாளிகள் அந்த வரிசையில் உருவாகி வந்தார்கள். அவர்களில் பலருடைய எழுத்துக்கு தலித் வாழ்க்கையைப் பதிவுசெய்தார்கள் என்னும் ஆவண மதிப்பு மட்டுமே உண்டு. ஆனால் அவர்களில் தேவனூரு மகாதேவா (கன்னடம்) ஒரு மகத்தான இந்தியப் படைப்பாளி. எந்த பெரும் படைப்பாளியையும் போல தனக்கான மொழியுலகை உருவாக்கிக்கொண்ட மேதை அவர்.
அப்படி ஒரு தலித் இலக்கிய இயக்கம் தமிழிலும் உருவாகவேண்டும் என்ற அறைகூவல் தொடர்ச்சியாக சில கோட்பாடாளர்களால் முன்வைக்கப்பட்டது. ராஜ் கௌதமன், ரவிக்குமார் இருவரும்தான் தமிழகத்தில் தலித் இலக்கியம் என ஒன்று உருவாகவேண்டும் என குரல் கொடுத்த முன்னோடிகள். அவர்கள் எழுதிய பல நூல்கள் வாசிக்கக்கிடைக்கின்றன.
தலித் இலக்கியம் என தனியாக ஒன்று உருவாக வேண்டும் என்பதற்கு முன்னோடிகளான அவர்கள் சொன்ன காரணங்கள் கீழ்க்கண்டவை
அ. தலித் இலக்கியம் பிறப்பால் தலித்துக்கள் எழுதுவது
ஆ. தலித் வாழ்க்கையின் அக உண்மையை தலித்துக்களே எழுதமுடியும். ஆகவே சமூகப்பதிவாக தலித் இலக்கியம் உருவாகவேண்டும்.
இ. தலித் மக்களுக்கு முற்றிலும் தனித்துவம் கொண்ட மொழியும் பண்பாடும் உள்ளது. அவர்கள் அதிலேயே பிறந்து வளர்ந்தவர்களாதலால் அவர்களே அதை எழுதமுடியும்.
இந்த அறைகூவலை ஒட்டி தமிழில் உருவான இலக்கிய அலையே தலித் இலக்கியம். அது தன்னியல்பாக தனக்கான அழகியலாக இயல்புவாதத்தை கண்டுகொண்டது. அதில் முக்கியமான படைப்பாளிகள் உருவானார்கள்.
இவ்வண்ணம் ஒரு புதிய அலை உருவாகும்போது அதன்மேல் வாசகர் கவனம் குவிகிறது. அந்த கவனக்குவிப்பை இந்தப் புதிய படைப்பாளிகள் பயன்படுத்திக் கொண்டனர். அந்த கவனத்தை தாங்களும் பெறுவதற்காக தலித் அல்லாத சிலர் தங்களையும் தலித் என சொல்லிக்கொண்டு, உண்மை வெளிப்பட்டதும் ‘நான் உணர்வால் தலித்’ என சமாளித்ததுண்டு.
தலித் இலக்கியவாதிகள் என்று அவர்களை எவரும் ‘முத்திரை’ குத்தவில்லை. அவர்களே தங்கள் எழுத்துக்கு இட்ட பெயர் அது. அவர்கள் கோரிய தனிக்கவனம் அது. தலித் அல்லாதவர்கள் தலித் வாழ்க்கையை எழுதினால் சீற்றம்கொண்டு அவர்கள் ‘ஒரிஜினல்’ தலித்துக்கள் அல்ல என்றும் எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் நேர்மாறாக சுந்தர ராமசாமியோ, வெங்கட் சாமிநாதனோ, நானோ எங்கள் அழகியல் கொள்கைகளின் அடிப்படையிலேயே எல்லா எழுத்துக்களையும் போல அவர்களையும் பார்த்தோம். வடிவம், மொழி, படிமக்கோப்பு, வாழ்க்கையுடனான தொடர்பு, உள்ளார்ந்த தரிசனம் ஆகியவையே எங்கள் அளவுகோல்கள். முற்போக்கு, தலித், பெண்ணியம் போன்ற ‘லேபிள்’களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவற்றை அளவுகோலாகக் கொள்ளவுமில்லை.
அந்த அடையாளங்கள் அந்தப் படைப்பின் சமூகவியலையோ, அரசியலையோ புரிந்து கொள்ள ஓர் எல்லைவரை உதவலாம். ஆனால் இலக்கியப்படைப்பு சமூகவியல், அரசியல் பேசுபொருட்களால் நிலைகொள்வதில்லை. கலைத்தன்மையால்தான் நிலைகொள்கிறது. தலித்தியமோ பெண்ணியமோ பேசியதனால் மட்டுமே ஒரு படைப்பு இலக்கியத்தரம் வாய்ந்தது ஆகிவிடாது. அதன் அழகியல்கூறுகளே அதை இலக்கியமாக்குகின்றன.
இவ்வாறு சொன்னதன் பொருட்டு சுந்தர ராமசாமியும் நானும் கடுமையாக வசைபாடப்பட்டிருக்கிறோம். தலித் இலக்கியத்தின் இருப்பை அங்கீகரிக்க மறுக்கிறோம் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம். ’தலித் வாழ்க்கை என்றல்ல எந்த வாழ்க்கையும் எழுதப்படவேண்டியதே, எப்படி எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம்’ என நான் பதிலளித்திருக்கிறேன்
வேதனை என்னவென்றால் இப்போது அதே எழுத்தாளர்கள் ’எங்களை தலித் எழுத்தாளர்கள் என்று சொல்கிறார்கள், அடையாளப்படுத்தி ஒதுக்கிறார்கள்’ என்று கூவுகிறார்கள். அவர்களே இன்னொரு பக்கம் இதேபோல தலித் இலக்கிய அரங்குகளை ஒருங்கிணைக்கிறார்கள். தலித் இலக்கியவாதியாக தங்களை மேடைகளில் முன்னிறுத்துகிறார்கள்.
என்ன உளச்சிக்கல் இது? மிக எளிது. தொடர்ச்சியாக ஒரு victim play யை இவர்கள் செய்தாகவேண்டியிருக்கிறது. தாங்கள் ஒடுக்கப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம் என்று சொல்லியாக வேண்டியிருக்கிறது. அதுதான் இந்த எழுத்தாளர்கள் அங்கீகாரங்களைப் பெறும் வழி. எத்தனை ஏற்புகள், விருதுகள் அமைந்தாலும் இமையம் போன்றவர்களின் உள்ளம் நிறைவடைவதில்லை.
தமிழில் தலித் வாழ்க்கை இன்னமும் கூட ஒடுக்கப்பட்டதாக, ஒதுக்கப்பட்டதாகவே உள்ளது. இன்னமும்கூட அரசியல், சமூக அதிகாரம் தலித்துகளுக்கு அமையவில்லை. உடனடியாக அதற்கான வழிகளும் தென்படவில்லை. ஆனால் தமிழ் இலக்கியச் சூழலில் தலித் பின்னணி கொண்ட எழுத்தாளர்கள் எவரும் எந்நிலையிலும் ஒதுக்கப்பட்டதில்லை. மாறாக, கூடுதல் கவனமும் மரியாதையும் விருதுகளுமே அவர்களுக்குக் கிடைத்துள்ளன.
இமையத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய நாவல்களை தமிழின் முதன்மைப் பதிப்பகமான க்ரியா வெளியிட்டது. என்.சிவராமன் போன்ற தலைசிறந்த எடிட்டர்கள் அதை மேம்படுத்தினர். அவருடைய முதல்நாவலுக்கே சுந்தர ராமசாமி மிக நீளமான மதிப்புரை எழுதினார் – வேறு எவரைப்பற்றியும் அவர் அப்படி எழுதியதில்லை. இமையத்தின் படைப்புகள்தான் தமிழில் இருந்து முதல்முறையாக ஆங்கிலத்திற்குச் சென்றவை. மேலும் முப்பதாண்டுகள் கழித்தே என்னுடைய ஒரு நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இமையம் தமிழில் ஓர் எழுத்தாளர் அடையத்தக்க அத்தனை விருதுகளையும் பெற்றுவிட்டார். ஞானபீடம் மட்டுமே மிச்சம்.
ஆனாலும் அவர் அந்த ‘அய்யய்யோ ஒடுக்குகிறார்களே’ என்ற கோஷத்தை அவர் தொடர்ந்து போடவேண்டியிருக்கிறது. தமிழில் இமையத்தைவிட தீவிரமான படைப்புகள் பலவற்றை எழுதிய ’மாஸ்டர்’ எனத்தக்கோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவர் அடைந்த ஏற்புகளில் நூறிலொன்றாவது அமைந்துள்ளதா? பல முன்னோடிகளுக்கு அவர்கள் அடையும் ஒரே விருதே விஷ்ணுபுரம் விருதாகவே உள்ளது.
ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். யுவன் சந்திரசேகர் தமிழின் மாபெரும் படைப்பாளி என்று சொன்னால் எவரும் மறுக்கப்போவதில்லை. அவர் எழுத வந்து நாற்பது ஆண்டுகளாகின்றன. இன்றுவரை அவருக்கு கிடைத்த விருதுகள் என்ன? ஒன்றுகூட இல்லை. ஆம், ஒன்றே ஒன்றுகூட இல்லை. பிராமணர் என்பதனாலேயே அவர் ஒதுக்கப்படுகிறார் என்பதே அப்பட்டமான உண்மை. ஆனால் தன் கலையையும் காலத்தையும் நம்பி நிலைகொள்ளும் கலைஞனுக்குரிய நிமிர்வு அவருக்கு உள்ளது.
*
தலித் இலக்கியம் என்னும் இந்த அடையாளம் தேவையா? ஓர் அமைப்பாக, ஓர் இயக்கமாக தலித் படைப்பாளிகள் திரள்வது சரியா?
தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், மார்க்ஸிய இலக்கியம் போன்றவை சமூகவியல் -அரசியல் அடையாளங்கள். அறிவியல்புனைவு, வரலாற்றுப் புனைவு, மானுடவியல் புனைவு போன்றவை உள்ளடக்கம் சார்ந்த அடையாளங்கள். இந்த எந்த அடையாளமும் ஒருவகையில் உதவியானதே. ஒரு குறிப்பிட்ட வகையான பேசுபொருள் மேல் கவனத்தை ஈர்க்கவும், தீவிரமான உரையாடல் வழியாக ஒருவரை ஒருவர் செறிவாக்கிக் கொள்ளவும் அவை உதவும்.
உலகம் முழுக்க இவ்வாறு பல இலக்கிய இயக்கங்கள் தோன்றி, பங்களிப்பாற்றியிள்ளன. கன்னட இலக்கியத்தில் நவ்யா, தலித் -பண்டாயா என்னும் இரு இலக்கிய இயக்கங்கள் உண்டு. நவ்யா என்றால் நவீனத்துவ இலக்கிய இயக்கம். அது அழகியல் சார்ந்தது. தலித் இலக்கிய இயக்கம் அரசியல் -சமூகவியல் சார்ந்தது. அவை ஒவ்வொன்றும் தங்களுக்கான பங்களிப்பை ஆற்றியுள்ளன.
கேரளத்தில் இன்று ‘கோத்ர கவிதா’ என்னும் இயக்கம் உள்ளது. பழங்குடி மக்கள் தங்கள் தனிமொழியில் கவிதைகளை எழுதுகிறார்கள். (அதற்கான ஓர் அரங்கையே நாங்கள் கூட்டியிருக்கிறோம் ) அந்த மொழி மலையாளம் அல்ல. தமிழும் அல்ல. அதில் கவிதைகளும் புனைவுகளும் எழுதப்படுகின்றன.பி.ராமன் அவற்றை ஒருங்கிணைக்கிறார்.
அதைப்போல ஓர் இயக்கம் தமிழில் வரவேண்டும். இருளர், பளியர், சோளகர் போன்றவர்கள் தங்கள் பேச்சுமொழியில், தாங்கள் அறிந்த உலகை எழுதவேண்டும். சோளகர்களுக்கு செடிகளைப் பற்றி இருக்கும் பிரமிப்பூட்டும் அறிவை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களின் இலக்கியம் வருமென்றால் தமிழிலக்கியத்தின் முகமே மாறிவிடும்.
அதேபோல தமிழில் ஓர் இலக்கிய இயக்கமாக உருவாகவேண்டியது அறிவியல் புனைவு. அரூ இதழ் அதற்கான சில முயற்சிகளை எடுத்தது. அது வெற்றிபெறவில்லை. ஓர் இயக்கமாக அது நிகழ்ந்தால் மட்டுமே அதில் பலவகையான எழுத்தாளர்கள் இணைவார்கள். அவர்கள் கவனிக்கப்படுவார்கள். அவர்களிடையே உரையாடல் நிகழும். அவ்வகையில் எல்லா இலக்கிய இயக்கங்களும் நல்ல பங்களிப்பை அளிப்பவை. ஆகவே வானம் அமைப்பின் இந்த முயற்சி மிக முக்கியமான ஒன்று. இது தொடரவேண்டும்.
ஆனால் எந்த இலக்கிய இயக்கமும் இலக்கியத்தை அறுதியாக அடையாளப்படுத்திவிட முடியாது. வெறுமே அடையாளங்களைத் தான் அளிக்கிறதென்றால் அந்த இலக்கிய இயக்கத்திற்குப் பொருளுமில்லை. உதாரணமாக, ஒரு கதையை ‘அறிவியல் புனைவு’ என்று சொல்வது ஒரு வசதிக்காகவே. அது அந்தப்படைப்பின் முழுமையான அடையாளம் அல்ல. அப்படி நினைத்தால் நாம் அதன் இலக்கியத் தகுதியை காணமுடியாமலாகும்.
தொடர்ச்சியாக இந்த விஷயத்தை எழுதியிருக்கிறேன். உதாரணமாக ஐசக் அஸிமோவின் ’அமைதியான மாலைப்பொழுதில்’, உர்சுலா லெ குவின் எழுதிய ’ஓமெல்லாஸை விட்டு போகிறவர்கள்’ போன்ற கதைகளை எம்.எஸ். அவர்களைக்கொண்டு மொழியாக்கம் செய்து சொல்புதிது இதழில் வெளியிட்டோம். அதை அறிவியல் புனைகதை என்றுதான் ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அந்தக் கதைகளின் அழகு அவை அறிவியலைப் பேசுகின்றன என்பதனால் அல்ல. அவற்றின் வடிவம், அவற்றில் வெளிப்படும் வாழ்க்கைத் தரிசனம் ஆகியவற்றால்தான். அதுவே எல்லாக் கதைகளுக்கும் எப்போதுமுள்ள அளவுகோல்.
இலக்கிய இயக்கங்களுடன், அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் எழுத்தாளர்கள் அவை அளிப்பது ஒரு புறச்சூழலை மட்டுமே என புரிந்துகொள்ளவேண்டும். அவற்றின் பகுதியாக தங்களை உணர்ந்தால் அது பேரிழப்பு. வாசகர்கள் அந்த இயக்கங்களும் அமைப்புகளும் இலக்கியப்படைப்புக்கான களங்களையும் வாய்ப்புகளையும் மட்டுமே அளிக்கின்றன என்றும், அவை இலக்கியத்தை அறுதியாக வரையறைசெய்ய முடியாது என்றும் புரிந்துகொள்ளவேண்டும்.
ஜெ
பொன்னியின் செல்வன் உருவாக்கக் காட்சிகள்
பொன்னியின் செல்வன் படத்தின் உருவாக்கம் பற்றிய வீடியோக்கள் வரத்தொடங்கியபோது எனக்கு வந்த கடிதங்களில் சில எங்கோ வாசித்தவற்றை முன்வைத்து ஒரு விமர்சனத்தைக் கூறின. ‘ஒரு சினிமாவின் உருவாக்கத்தில் அப்படி என்ன இருக்கிறது? நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சினிமாக்காரர்கள் கடுமையாக உழைத்தோம் என்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எல்லாரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள்.”
அப்படி அவர்கள் சுட்டிக்காட்டும் ‘எவ்வளவோ’ விஷயங்கள் ஒன்றும் அறிவியலாய்வோ அறிவுச்செயல்பாடோ படைப்புநிகழ்வோ அல்ல. எளிமையான அரசியல் நிகழ்வுகள்தான். அதை பகலிரவாக, ஆண்டாண்டாக பேசிக்கொண்டிருப்பதில் சலிப்பில்லை. இது அவர்களுக்குச் சலிப்பூட்டுகிறது. இச்சலிப்பு பெரும்பாலும் அரசியல்வாதிகளுக்குரியது. அவர்கள் மிகச்சிறிய அளவிலேனும் அவர்களைவிட்டு கவனம் விலகுவதை விரும்புவதில்லை.
உண்மையில் ஒரு சினிமாவின் உருவாக்க காட்சிகளில் அப்படி என்ன இருக்கிறது? ஏன் லட்சக்கணக்கானவர்கள் அதைப் பார்க்கிறார்கள்? அது வெறுமொரு கட்டுமானச் செயல் அல்ல. அது கலை. ஒரு கனவை புறநிகழ்வாக ஆக்குகிறார்கள். இல்லாத ஒன்றை உருவாக்குகிறார்கள். சிற்பம், ஓவியம் ஆகியவற்றின் உருவாக்கமும் அதே அளவுக்கு ஈர்ப்பானவை.
ஆனால் சினிமா ஒரு படி மேல். அதில் எல்லா கலைகளும் உள்ளன. இலக்கியம், நாடகம், இசை, ஓவியம், சிற்பம். அனைத்துக் கலைகளையும் ஒருங்கிணைக்கும் மாபெரும் நிர்வாகமும் உள்ளது. ’சினிமா என்பது ஒரு தொழிற்சாலையின் ஓசையை இசையாக மாற்றும் கலை’ என்பார்கள். அத்தனை விதமான மக்கள், அத்தனை தனித்திறமைகளும் ரசனைகளும் கொண்டவர்கள், ஒத்திசைந்து ஒரு விஷயத்தைச் செய்து முடிப்பதே ஒரு சமூகச்சாதனைதான்.
அந்தவகையான ஒத்திசைவை எப்போதுமே சமூகம் கொண்டாடி வருகிறது. உலகமெங்கும் பலநூறுபேர் மேலே மேலே ஏறிநின்று மானுடக்கோபுரங்களை அமைப்பது போன்ற விளையாட்டுகள் உள்ளன. பல ஆயிரம் பேர் சுட்டுவிரலை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரிய கல்தூண்களை தூக்கும் விளையாட்டுகள் உள்ளன. அவை எல்லாமே ஒரு சமூகம் தன் ஒத்திசைவைக் கொண்டாடுவதன் சான்றுகள்.
ஒரு சமூகம் ஒன்றாகத் திரண்டு உண்டுபண்ணும் கலை என்பது ஒரு படி மேலான ஒத்திசைவு தேவையானது. தொழில், அல்லது விளையாட்டில் ஒத்திசையவேண்டியது உடல். இங்கே உள்ளம். கனவுகள் ஒன்றாகவேண்டும். ஒரு கனவை பலநூறுபேர் சேர்ந்து உருவாக்குறார்கள். பார்வையாளர்களும் அக்கனவுடன் இணைகிறார்கள்.
அத்தகைய கொண்டாட்டங்கள் முன்பு ஊருக்கு ஊர் இருந்தன. வடமாநிலங்களில் அர்ஜுனன் தபசு போன்ற கூத்துநிகழ்வுகளில் ஊர் முழுக்கவே ஈடுபடும். ஊரே அஸ்தினபுரி ஆகிவிடும். அத்தனைபேரும் மகாபாரதகால குடிமக்கள் ஆகிவிடுவார்கள். தென்தமிழகத்தின் கூத்துக்கலைகளில் ஊரிலிருக்கும் அனைவருக்குமே இடமிருக்கும். அந்த ஒத்திகைகளில் ஊரார் அனைவருமே பங்குபெறுவார்கள். கூத்து அளவுக்கே ஒத்திகைகளுக்கும் கூட்டமிருக்கும்.
இப்படித்தான் உலகமெங்கும் சமூகங்கள் திரண்டு கொண்டாடி தங்களை தொகுத்துக்கொண்டிருக்கின்றன. கனவுகளை கூட்டாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அக்கனவுகளே அவர்களை இணைக்கும் விசை. தங்கள் கடந்தகாலம் பற்றிய கனவுகள், வரலாற்று நினைவுகள், தொன்மங்கள், கதைகள், கலைகள் என அக்கனவுகள் பரந்துள்ளன. சோழர்காலம் என்பது அத்தகைய ஒரு கனவு. அதை தமிழ்ச்சமூகம் கூட்டாக சேர்ந்து உருவாக்குவதே பொன்னியின் செல்வன்.
’பொன்னியின் செல்வன், விவாதங்கள்’- ஒரு நூல்ராஜ் கௌதமன்
ராஜ் கௌதமன்தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம், ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவி செய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும் தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் நூல்கள். தமிழ்ப்பண்பாட்டை வழிபாட்டுப்பார்வை இல்லாமல் அணுகி அதன் உள்ளீடாக ஆதிக்கக் கருத்தியல்கள் பரிணாமம் அடைந்து வந்ததை விளக்கியது அவருடைய அறிவுலகப் பங்களிப்பு.
ராஜ் கௌதமன்
ராஜ் கௌதமன் – தமிழ் விக்கி
பன்னிரு காதல்கள், கடிதம்
அன்புள்ள ஜெ
பிறந்தநாள் குறிப்பு கண்டேன். (இன்னொரு பிறந்தநாள்)
அதில் என்னை மகிழ்ச்சியடையச் செய்தது பிறந்தநாளை ஒட்டி வெளிவரும் 12 காதல்கதைகள் என்னும் தொகுப்புதான். நான் பெருங்கை கதையை வாசித்தபோதே இத்தகைய இனிமையான சில கதைகளை நீங்கள் எழுதினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அந்தக்கதை மிகமிக நுட்பமானது. ‘அழுத்தமான’ கதைகளை தேடும் வாசகர்களுக்கும், கதைகளில் சிடுக்குகளைத் தேடுபவர்களுக்கும் அது அவ்வளவு உவப்பாக இருக்காது. ஆனால் அந்தவகையான கதைகள் காலத்தைக் கடந்து நிலைகொள்பவை. பலருக்கும் அது தெரிவதில்லை.
அத்துடன் எழுத்தாளர்களின் இளம் வயதில் அவர்கள் கொந்தளிப்பான கதைகளை எழுதுகிறார்கள். அதன்பின்னர் அவர்கள் வாழ்க்கை என்பது ஒரு சின்ன பூவின் தேன் போல (அஜிதனின் ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள் கதையில் அந்த உவமையை எடுத்துக்கொண்டேன்) அழகானது என்று புரிந்துகொள்கிறார்கள். சின்னவிஷயங்களில் வெளிப்படும் பெரிய தரிசனங்களை நோக்கிச் செல்கிறார்கள். அந்தச் சின்னத்தேனை எழுதுவதுதான் கலையின் உன்னதமான தருணம். சின்ன விஷயங்களை எழுத ஒரு கனிந்த பார்வை வேண்டும். அதை அடைய ஒரு வயசும் தேவை.
அந்த கதைகளை வாசிக்கக் காத்திருக்கிறேன்
செ.ராஜகோபாலன்
அன்புள்ள ஜெ
பிறந்தநாள் அன்று துர்க்கனேவின் மூன்றுகாதல்கதைகள் என்ற அழகான ரஷ்ய புத்தகம் உங்கள் வாசிப்பில் இருப்பதை கண்டேன். நீங்கள் இருக்கும் மனநிலையை காட்டுகிறது. 12 காதல்கதைகள் என்ன, நூறு கதைகள் எழுத உங்களால் முடியும். மிக எளிய, மிக நுட்பமான கதைகளாக அவை இருக்கும். புனைவுக்களியாட்டு கதைகளிலேயே பல கதைகள் அழகான காதல்கதைகளாக இருந்தன
செல்வகுமார்
மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்க பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

