Jeyamohan's Blog, page 593

April 20, 2023

பரிவின் கடல்

வெண்கடல் மின்னூல்  வாங்க வெண்கடல் வாங்க

2022 டிசம்பர் 9 ல் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படம் ரத்தசாட்சி. அதன் மூலக்கதை வெண்கடல் என்னும் இந்த தொகுதியில் அடங்கியிருக்கும் ‘கைதிகள்’. அறம் கதைகளில் ஒன்றாக அதை எழுதினேன். அதன் முதல் வடிவம் அப்போது அதை வாசித்த அரங்கசாமிக்கு பிடிக்கவில்லை. அதில் அறம் கதைகளில் உள்ள ஆழம் இல்லை, உணர்ச்சிகரம் மட்டுமே இருந்தது என நினைத்தார். ஆகவே அக்கதையை தூக்கி வைத்துவிட்டேன். (வெண்கடல் தொகுதியில் இன்னொரு கதையும் திரைப்பட உரிமை அளிக்கப்பட்டுள்ளது)

பின்னர் மீண்டும் அக்கதையை எழுத ஓர் உந்துதல் வந்தது. அந்தக்கதையின் சாராம்சமான நிகழ்வை நான் கேட்டது ஒரு நாட்டுப்புறப் பாடகியின் பாடல் வழியாக. அவள் நினைவில் அக்கதை பதிவாகியிருந்தது. அவளை ஒரு குருவியாக அப்போது உருவகம் செய்தேன். காட்டின் கண் அக்குருவி. அது அறியாமல் அங்கே ஏதும் நிகழமுடியாது. அதனால் ஏதும் செய்துவிடமுடியாது. ஆனால் அது ஒரு மாபெரும் சாட்சி. அதன் சிறகோசை பிழைசெய்தவர்களை விடுவதே இல்லை. அக்குருவி கதைக்குள் வந்ததுமே கதை இன்னொரு தளத்திற்குச் சென்றுவிட்டது. இலக்கியமாகிவிட்டது. இன்று இத்தொகுதியின் முதன்மைக் கதையாக ஆகிவிட்டிருக்கிறது.

இதில் பலவகையான கதைகள் உள்ளன. பலநிலங்களில் பல மனிதர்கள் வழியாக நிகழ்பவை. பெரும்பாலான கதைகள் உணர்ச்சிகரமானவை. மண்ணுக்கும் மனிதர்களுக்குமான பற்றை, வரண்ட நிலத்தில் வாழ்பவர்களின் உயிர்ப்போராட்டத்தை சொல்லும் கதைகள் இதிலுள்ளன. அறம் கதைகளின் உணர்வுநீட்சியாக அமைந்தவை பல கதைகள். அறம் தொகுதியின் நெகிழ்வுநிலையில் இருந்து நான் முன்னகர்வதையும் சில கதைகள் காட்டுகின்றன.

இந்நூலை முதலில் வெளியிட்ட வம்சி பதிப்பகத்திற்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி

ஜெ

 

வெண்கடல் பற்றி ஒரு விமர்சனம்

வெண்கடல் கடிதம்

வெண்கடல் -கடிதம்

வெண்கடல் – விமர்சனங்கள்

வெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்

வெண்கடல் – கீரனூர் ஜாகீர்ராஜா

வெண்கடல்- கடிதங்கள்

வெண்கடல் ஒரு கடிதம்

வெண்கடல்-கடிதம்

வெண்கடல்-கடிதங்கள்

வெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்

வெண்கடல் வண்ணதாசன்

வெண்கடல்- கடிதங்கள்

வெண்கடல் – கடிதங்கள்

வெண்கடல்- கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2023 11:35

வ.வெ.சுப்ரமணிய ஐயர்

இயல்,இசை,நாடகம் என்னும் முத்தமிழ் என்ற வழக்கு பொதுவானதே தவிர சாகுந்தலம், மிருச்சகடிகா போன்ற நாடகங்கள் தமிழில் இல்லை என்பதை முதலில் கூறியவர் வ.வே.சுப்ரமணிய ஐயர். பிற இந்திய மொழிகளில் காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு வந்துவிட்டது என்பதைத் தமிழ்ப் பண்டிதர்கள் உணரவில்லை என்பதும், தமிழறிந்த ஆங்கில அறிஞர்கள் தமிழ் வளர்ச்சியில் பங்கு கொள்வதில்லை என்பதும் வ.வே.சுப்ரமணிய ஐயரின் நிலைப்பாடாக இருந்தது.சமகால இலக்கியத்தை இவர் புத்திலக்கியம் என்ற சொல்லால் குறித்தார். மூன்றாம்தர இலக்கியத்தின் தன்மைகளில் ஒன்று அறக்கருத்துக்களைச் சொல்லிக்கொண்டே போவது என்ற கருத்தக் கொண்டிருந்தார். புத்திலக்கியத்தில் உபதேசம் (பிரச்சாரம்) மீறி ஒலிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

வ.வெ.சுப்ரமணிய ஐயர் வ.வெ.சுப்ரமணிய ஐயர் வ.வெ.சுப்ரமணிய ஐயர் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2023 11:34

வழி, பயணத்துக்கான ஓர் இணைய இதழ்

[image error]அன்பு நிறை ஜெ,

எனக்கு என் மூன்று வயதிலியே சாலை மார்கமாக செல்லும் நெடுந்தூர பயணங்கள் அறிமுகமாகி விட்டது. என் நினைவில் நிறைந்த என் முதல் பயணம் என்பது 1996இல் எங்கள் பெரியப்பாவின் அம்பாசிடர் காரில் முன் இருக்கையில் அப்பாவின் மடியில் அமர்ந்து சென்னையிலிருந்து திருப்பதி வரை சென்றது. 1998 இல் அப்பாவின் புல்லட் வண்டியில் டேங்கின் மீது அமர்ந்து, ஆங்காங்கே ஆலமரங்கள் நிறைந்த சாலையில் அறுபது கிலோமீட்டர் தூரம் பயணித்து, என் தம்பியை கருவுற்றிருந்த அம்மாவை காண சென்றது. குடும்பத்தில் நிலவிய வன்முறை சூழல் காரணமாக ஆறுமாத கை குழந்தையாக இருந்த என் தம்பியையும், ஆறு வயதான என்னையும் அழைத்துக்கொண்டு அப்பாவும் அம்மாவும் சில மாதங்கள் தலைமறைவு வாழ்வை சந்திக்க வேண்டி இருந்தது. சென்னையிலிருந்து  திருவள்ளூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் அங்கிருந்து கோவை பின்னர் ஊட்டி, கூடலூர், மைசூரு என சுற்றி அலைந்த நாட்கள் அவை.

பின்னர் நான் பள்ளி, கல்லூரி படிக்கையில் என்னை அதிகம் பயணம்  செய்ய ஊக்கப்படுத்தியவர் என் அப்பா, தொழ்ற்சாங்க போராட்டங்களுக்காக முழக்கங்கள் எழுதப்பட்ட வெள்ளை பதாதைகளை தூக்கி இரவும் பகலும் தமிழகம் எங்கும் அலைத்தவர் எப்போது பயணம் போகிறேன் என்று வந்து நின்றாலும் அதற்கு தேவையான பொருளும் ஊக்கமும் தந்தவர், என் கல்லூரி முடித்து நன் பூட்டான் வரை தனியாக பேக் பேக்கிங் பயணம் செய்ய தயாராகி கிளம்பும் தருவாயில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டார். நான் அவராகி விடுவேன் என அவர் அஞ்சி இருக்கலாம், அது என்னை மிகவும் சீண்டியது. மிச்சமில்லாமல் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை சுற்றி அலையவேண்டும் என்று எனக்கு நானே கட்டளை இட்டு கொண்டேன். யார் தடுத்தாலும், உணவோ பொருளோ இல்லாமல் போனாலும் பயணிப்பேன். வருடத்தில் மூன்று மாதமாவது பயணம் செய்வதில் மட்டும் கவனம் செலுத்துவேன் என தீர்மானித்து கொண்டேன்.

போட்டி தேர்வுகளுக்காக தயாராகி கொண்டிருந்த நாட்களில் இந்திய நிலப்பரப்பின் வரலாறும், நிலவியலும்  டி.டி கோசாம்பி, எ.எல் பாஷம், பிபின் சந்திரா ஆகியோரின் மூலம் அறிமுகம் ஆகின. அதுவரை நான் கற்றிருந்த பொறியியல் படிப்பு இந்திய பெருநிலத்தின் தோற்றத்தை என் அக விழிகள் எட்டும் தூரத்திலிருந்து மறைத்து விட்டிருந்ததை அறிந்தேன், அன்று என் நினைவில் நான் சென்று குடியேற வேண்டும் என்று திட்டமிட்டிருந்த டப்ளின் நகரின் நிலவியலும், சூழியலும் பதிந்திருந்தன. மாமல்லையும் காஞ்சியும் எங்கோ புதைந்து அழிந்த நகரங்களாக என்னுள் பதிவாகி இருந்தது, ஆய்வாளர் நாகசுவாமி, பேராசிரியர் பாலுச்சாமி ஆகியோரின் உரைகளும் எழுத்துக்களும் கேமரா லென்ஸில் போகஸ் அட்ஜஸ்ட் செய்வதை போல் என் சிந்தனையும், நான் பயணிக்கும் நோக்கையும், நுண்ணோக்கி இயங்கும் அக விழிகளை அளித்தன.

என்னுள் உருவாகி வந்த அறிவு ஜீவி  சிந்தனைகளை அடித்து நொறுக்கியது சமஸின் எழுத்துக்கள் “யாருடைய எலிகள் நாம்”. அன்று நான் சமஸின் என்னும் அலையில் மிதந்தேன் குடும்பமாக சமஸ் உரையாற்றும் கல்லூரி, மேடை பேச்சுகளுக்கு சென்றேன். சமஸின் இந்திய வண்ணங்கள், சாப்பாட்டு புராணம் ஆகிய நூல்கள் தமிழகத்தை பற்றியும் இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் பற்றியும் அறிமுகம் செய்தன. சுஜாதா, மதன், இறையன்பு ஆகியோர் பயணம் சார்ந்து எழுதியவற்றை வாசிக்க தொடங்கி, எஸ்.ரா வை கண்டுகொண்டேன், மீள மீள எஸ்.ரா வின் எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்திய, பிற பயண நூல்களை வாசித்து தள்ளினேன், இந்திய தீபகற்பத்தின் அக வரைபடம் என் சிந்தனையுள் பதிவாக தொடங்கியது, பயணம் என்னும் கலை வடிவத்தின் பிடி கிட்டியது.

இந்த ஐந்து ஆண்டுகளில் ஐம்பதாயிரம் கிலோமீட்டருக்கு மேல் பயணித்து விட்டேன், என் வாழ்வில் முக்கிய திருப்பங்களும், சந்திப்புகளும் பயணத்தின் வழியே எனக்கு கிடைத்தவை. ஒரு வருடம் நண்பர்களாக இருந்த நிக்கிதாவும் நானும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது மே மத உச்சி வெயிலில் மாமல்லை சென்று, அர்ஜுனன் தபசு முன் வேர்வை சொட்ட சொட்ட நின்று ஒரு மணி நேரம் சிற்பத்தை பற்றி அவளுக்கு விளக்கிய பின்பே. கல்லூரி முடித்து ஆறுவருடங்கள் கழித்து முதல் முறை வேலைக்கான நேர்காணலில் நான் தேர்வாக உதவியதும் நேர்காணல் செய்தவரிடம் நான் கூறிய பயண கதைகளே. எல்லோரும் இசை புயல் ரகுமானை இசைக்கும் போது ரசித்ததுண்டு, அவர் கானக பரப்பில் தென்றல் வீச, இயற்கையில் தன்னை மூழ்க்கி கொண்டிருக்கும் ஒரு பயணத்தில் நான் அவரை கண்டேன். ஹிப்பிகளின் உலகில் சில நாட்கள், ஒட்டகம் மேய்ப்பவருடன் ஓர் இரவு, கயிற்றின் மேல் நடந்து, பாம்பை போல் சுருண்டு வளையும் கல்பேலியா ஜிப்சிகளுடன் சந்திப்பு, மான்களுக்கும் தாய்ப்பாலூட்டும் பிஷனாய் பழங்குடியுடன் ஒரு வன உலா என சிலருக்கு முயன்றும் கிடைக்காத புது அனுபவங்கள் பலவற்றை பயணங்கள் எனக்கு கையளித்தன.

எனக்கு பயணம் செய்யும் ஊக்கம் என் வாழ்க்கை சுழலில் இருந்தும் பல நூல்களின் மூலமும் வந்திருந்தாலும், என் ஆற்றலும், பயணத்தின் ஜீவனும் உங்களின் ஒவ்வொரு சொற்களிலிருந்து பிறக்கிறது. புறப்பாடு, முகங்களின் தேசம் தொடங்கி உங்களின் படைப்பு எதுவானாலும் என்னை மேலும் பயணிக்க கட்டளை இடுகின்றன. வண்ணக்கடல் எனக்கு வாசித்து முடிக்கையில் பயண காப்பியம் என்ற அனுபவத்தை தந்தது , இளநகன் என்னும் வழிகாட்டி இட்டுச்சென்ற பாரத வெளி அந்த படைப்பு.  என்றுமே உங்கள் அடிச்சுவட்டை பின்தொடரும் பயண சீடனாகவே இருக்க விழைகின்றேன். பயணத்தை சொற்களாக மாற்றி கதை சொல்லும் உத்தியை உங்களிடமிருந்தே பயின்று வருகிறேன். பயண கட்டுரையின் வடிவு உங்களின் ஆக்கங்களிலேயே மிக தெளிவாக அமைகின்றது. இயல்பான நிகழ்வுகளையும், பயண துணைவர்களையும் அறிமுகம் செய்து பயணத்தின் களத்தை அமைத்து கடந்து செல்லும் ஒவ்வொரு இடத்தின் வரலாற்றையும் உங்கள் அவதானிப்புகளையும் ஒரு சேர பதிவு செய்து அதனுடன் நீங்கள் அந்த தருணங்களில் அடைந்த தரிசனங்களையும் உங்கள் பயண கட்டுரைகள் பதிவு செய்கின்றன. நான் தொகுத்து கொண்டிருக்கும்  150 வருட பயண இலக்கிய ஆக்கங்களின் அடிப்படையில் தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் பயணித்து அதை பதிவு செய்த ஒரே எழுத்தாளர் நீங்கள் மட்டுமே, பதிப்பில் வந்த பயண கட்டுரைகள் மட்டுமே ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கும் என எண்ணுகின்றேன். உங்கள் பயணக்கட்டுரையின் வடிவம் தமிழ் இலக்கிய சூழலில் தனித்துவமான ஒன்று, அதை அடிப்படையாக கொண்டே என் பயண அனுபவங்களை எழுத தொடங்கியுள்ளேன். காட்சி மொழி மலிந்து ஒவ்வொரு பயணியின் விரல் தீண்டும் தூரத்தில் புகைப்பட கருவிகள் இருக்கும் போதிலும் எழுத்தின் வழியே வாசகனை பயணிக்க செய்ய  மொழியால் மட்டுமே இயலும் என நிரூபணம் ஆகியுள்ளது.  நீங்கள் பகிரும் உங்கள் பயண படங்களுக்கும், காணொளிகளுக்கும் உங்கள் எழுத்தை நம்பியே பிழைக்கின்றன.

[image error]

இன்றைய பயண சூழலில் நிலவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் கடந்த அறுபது ஆண்டுகளில் பயணம் செய்பவர்கள் அதிகமாகி உள்ளனர், பயணத்திற்கான வழிகளும் இலகுவாகி உள்ளது, ஆனால் பயணம் சார்ந்து பதிவு செய்யப்படும் எழுத்துக்கள் குறைந்து வருகின்றது. இன்று பயணிப்போர் பெரும்பாலோனோர் பயணத்தை அகத்தில் நிகழ்த்தி கொள்ளாதவர்களாக உள்ளனர், அலைபேசியில் எடுக்கும் புகைப்படத்தையோ, காணொளியையோ எடுக்கும் ஆர்வம் கூட அந்த பயணத்தை ரசிப்பதில் இல்லை என்றே தோன்றுகின்றது. இவர்கள் ஒரு லிஸ்ட் போட்டு சும்மா டிக் அடிப்பதற்காக செய்யும் பயணம் ஒரு வகை பாழ் செயல் மட்டுமே என எண்ணத்தோன்றுகிறது .

இருபது ஆண்டுகளுக்கு முன் பயணம் செய்தவர்கள் மொழியின் மூலம் மட்டுமே அவர்கள் கண்ட நிலப்பரப்பையும், மனிதர்களையும், அனுபவங்களையும் நினைவில் சேகரித்துக்கொண்டனர். இன்று கைலாய யாத்திரையே முப்பது வினாடி காணொளியில் சுருங்கி விழுகின்றது. பயண வழிகளிலும், பயணத்தை பதிவு செய்யும் முறைகளிலும் கடந்த இருபது ஆண்டுகளில் பல மாற்றம் வந்துள்ள  போதிலும் பயணத்தை பதிவு செய்வதில் மொழியின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்று என நான் எண்ணுகிறேன்.

உதாரனாமாக, எங்கள் திருமணம் முடிந்து நானும் நிக்கிதாவும் திருவரங்கம் சென்றோம் அதற்கு முன் தினம் அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை புத்தகத்திலிருந்து எதேர்ச்சியாக “கண் மலர்தல்” என்னும் பதிவை படித்திருந்தேன், அன்று காலை விஷ்வரூப தரிசனம் செய்வதற்காக காலை நான்கு மணி வாக்கில் பிரகாரத்தை அடைந்திருந்தோம், ஆட்டோவில் காவேரியை கடந்து வரும் வழி எங்கும் ரங்கபுரத்தை எண்ணிகொண்டே பின்வரும் பாடலை கேட்டு கேட்டு கரைந்துருகி  வந்தோம் –

“பச்சை மா மலை போல் மேனி

பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே

ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச் சுவை தவிர யான் போய்

இந்திரலோகம் ஆளும்

அச் சுவை பெறினும் வேண்டேன்

அரங்க மா நகருளானே”

கும்பமும், வேழமும், பாரியும், பசுவும் தொழுது அகன்றதும், நாங்கள் இருவரும் அரங்கனை காண கண் கோடி வேண்டி உள்ளே சென்றோம் எங்கள் முன்  ஒரு வைணவ முதியவரும், பட்டு பாவாடை சட்டை அணிந்து ரெட்டை ஜடை பின்னலிட்ட  வளரிளம் கன்னி ஒருத்தியும் நின்றிருந்தனர் . நாங்கள் கடந்துவந்த ஆறும், ஏழு நிலை பிரகாரமும், செவி கேட்ட இன்மொழியும், புலனறிந்த உணர்வும், ஆட்டுவிக்கும் அறிவும், இந்த புவி மிதக்கும் பிரபஞ்சமும் ஒன்று திரண்டு கருவறை நிறைத்து கால் நீட்டி சயனித்திருந்தது, ஆயர் கள்வன் அச்சுதன் அங்கே எங்கோ மறைந்திருந்திருப்பான். தொண்டரடிப்பொடியாழ்வாரும், அருள்மொழி நங்கையும், நிக்கிதாவும், நானும் ஒரு சேர கண்ணீர் மல்கி கை தொழுதோம். யுக யுகமாக ரங்கபுரம் என்னும் பயணம் அங்கே சென்று வந்தவர்களுக்குள் நிகழவேண்டும் அதுவே பயணமாக இருக்க முடியும் என உணர்ந்து கொண்டேன். இந்த வகை முடிவிலா பயன அனுபவம் கைகூட பயணத்தை பற்றி எழுதுவதும், பயணத்தை பற்றி வாசிப்பதும்  மிகவும் உதவுகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு வரை நான் சென்ற பயணங்களை பற்றி ஒற்றை வரி பதிவை கூட எழுத முடியவில்லை. முயற்சித்து கொண்டே இருந்தேன், நீங்கள் என்னிடம் ஏற்கனவே சொல்லிய துண்டு என்றோ ஒரு நாள் அவை உங்களிலிருந்து வெளிப்படும் அதுவரை காத்திருங்கள் என்று. நான் என் தொடர் அலைந்தழியும் பயணங்களை முடித்து, ஐந்து வருடம் கழித்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நான் பயணங்களை பற்றி எழுதுவதற்கு மொழி திரண்டு வர தொடங்கி உள்ளது, என்னிலிருந்து மீள இன்று ஒரு வழி கிடைத்துள்ளது.

பயணத்தை பற்றி எழுதுகையில் நான் மீண்டும் ஒரு முறை பயணிக்கிறேன், விட்டுவந்த பொக்கிஷங்களை கொண்டுவந்த நினைவுகளுடன் முடிந்து வைத்துக் கொள்ள புதிதாய் என் முன் ஒரு பாதை தெரிகின்றது, அந்த தடத்திலேயே சென்று சென்று மேலும் புதிய வழிகளை கண்டடைகிறேன், பயணத்தை பற்றி எழுதுவதே நான் சென்று வந்த பயணத்தை முழுமை செய்கின்றது என்பதை எழுத எழுத தெரிந்து கொள்கின்றேன். பயணத்திற்கு முன் பயணம் செய்யும் இடத்தை பற்றி குறைந்தபட்ச வாசிப்புடனாவது செல்வது எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் எழுத்துக்களும், என் அனுபவமும் எனக்கு கற்பித்துள்ளன.

சென்ற மாதம் உங்களை சந்தித்த போது மனிதனை மகிழ்வுடன் வைத்திருப்பது புதிதாய் எதையாவது அறிந்து கொள்வதும் (Knowing) அதை செயல்படுத்துவதும் (Making it into action) தான் என்று கூறினீர்கள். ஆம் உண்மைதான், நான் பயணத்தில் புதிதாய் எதோ ஒன்றை காண்கிறேன், அல்லது புதிதாய் காண கற்றுக்கொள்கிறேன். கற்றுக்கொண்டதை நான் எழுதுவது மூலமே நான் தெளிவையும் மகிழ்வையும் அடைகிறேன். அதற்காகவே பயணம் சார்த்த எழுத்துக்களை பதிவு செய்வதற்கு “வழி” என்ற பெயரில் புதிய இணையதளம் ஒன்றை தொடங்க இருக்கின்றேன்.  அந்த தளத்தில் இதுவரை நான் செய்த பயணத்தையும் அனுபவத்தையும் பதிவுசெய்வது என் முதல் இலக்கு, என்னை போல் பலர் பயணம் செய்துள்ளனர் அவர்களையும் பயணம் சார்ந்து எழுதவைப்பது மற்று மோர் இலக்கு. இந்த தளத்தின் தொலைநோக்கு இலக்கு ஒன்று உண்டு, அது உலகில் உள்ள அத்தனை நிலப்பரப்பை பற்றியும் தமிழில் ஒரு கட்டுரையாவது அங்கே பயணித்தவர்கள் இந்த தளத்தின் வழியே எழுதவேண்டும் என்பது.

இந்த தளம் வழக்காமான பயணம் சார்ந்த வலைப்பூக்கலிருந்து சற்று வித்யசமானது, இதன்  அடைப்படை செயல்படுகளாக சிலவற்றை திட்டமிட்டுள்ளேன்

1)  சிறந்த பயண அனுபவங்களை தமிழில் ஆவண படுத்துதல்.

2)  பிற தளங்களில் வெளியாகி கவனம் பெறாமல் போன பயண பதிவுகளை மறுபிரசுரம் செய்தல்.

3)  அச்சில் இல்லாத பழைய பயண நூல்களை தொகுத்து இந்த தளத்தில் பகிர்ந்து வாசகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்.

3) ஆங்கிலத்தில் வந்த சுவாரசியமான பயண நூல்களை, கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுதல்.

4) அணைத்து தரப்பு பயணிகளும் பயன் பெரும் வகையில் ஊர், இடம் சார்ந்து வழிகாட்டி நூல்களை தயாரித்து இலவசமாக அளித்தல்.

5) ஊடக வெளிச்சம் பெறாத பயணிகளை பற்றியும் அவர்களின் கதைகளையும் பதிவு செய்தல்.

6) பயண இலக்கியத்திற்கான சரியான அமைப்பையும், நெறிமுறைகளையும் வகுத்தல்.

7) ஆங்கிலத்தில் இருப்பது போன்று சர்வதேச தரத்தில் பயண எழுத்தாளர்களை உருவாக்குதல்.

தற்போது வரை 160கும் மேற்பட்ட தமிழில் வெளியான பயண நூல்களின் பட்டியலை தயாரித்துள்ளேன், ஈழ பயணிகளின் நூல்களும் அதில் உள்ளது. நூல்களை இலவசமாக வாசிக்கவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் சுட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாத வெளியீடாக 1926ல் திரு.வி.க எழுதிய எனது இலங்கை பயண செலவு என்ற பயண கட்டுரையும், நான் எழுதியுள்ள “கானகமும் கயமுனியும்” என்ற ஊட்டி, மசினகுடி பயண அனுபவமும் தலத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

நானும் நிக்கிதாவும் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம், ஆர்வம் உள்ள நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்.

வரும் ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு அன்று தளத்தை வெளியிடலாம் என எண்ணியுள்ளேன்.  அமைந்தவர்கள் அலைய துவங்கவும், அலைந்தவர்கள் அமைந்து கொள்ளவும் இந்த வழி என்றும் திறந்து இருக்கும்.

உங்கள் ஆசிகளையும், வழிகாட்டுதலையும் வேண்டுகிறேன்.

வழி இணையதளம் https://www.vazhi.net/ 

பணிவன்புடன்,

இளம்பரிதி.

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2023 11:33

Exploitative World Hidden in Plain Sight

Years ago, Tamil novelist Jeyamohan wrote Ezham Ulagam, which he says, in the foreword to the book’s English translation, sent him back into a world he had forced himself to forget. This English translation, he called The Abyss. Published in April by Juggernaut Books, The Abyss hurls its reader into a world hidden in plain sight — an exploitative world of begging cartels; a world where physical disabilities become currency not by empowering, but by reducing disability into commodities.

Jeyamohan’s The Abyss hurls readers into an exploitative world hidden in plain sight The Abyss- Amazon 

 

Tamil Nadu | Writer-critic B. Jeyamohan draws on his experiences living as a beggar in his 20s in new book The Abyss

‘The Abyss’ – an English translation of Jeyamohan’s Tamil novel ‘Ezhaam Ulagam’

Jeyamohan interview: Ezhaam Ulagam, or The Abyss, is a spiritual inquiry into beggars’ lives

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2023 11:30

April 19, 2023

அரசியல் விவாதங்களின் எல்லை

அன்புள்ள ஜெ,

முதல் முறையாகத் தமிழில் எழுதுகிறேன்; பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். தங்கள் எழுத்துக்களைக் கடந்த சில மாதங்களில் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதற்கு முன் அதிகமாகத் தமிழில் வாசிக்கும் வாய்ப்பு அமையவில்லை. நான் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிவதால் என் இலக்கிய வாசிப்பு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே தொடங்கி முடிந்து விட்டிருந்தது. கிளாசிக்கல் இலக்கியம் என்பதையும் சமகால அரசியல் என்பதையும் வெவ்வேறு பகுதிகளாக மனதிற்குள் compartmentalise செய்து வைத்திருக்கிறேன் என்பதே உண்மை. அதனால் பெரும்பாலும் என் அரசியல் நிலைப்பாடுகளில் ஆங்கிலத்தில் மையநீரோட்ட ஊடகங்களும், அவற்றின் இதழியலாளர்களும் முன்னிறுத்தும் பரப்புரைகளின் தாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஏனோ இவர்கள் அன்றன்றைய அரசியல் நடப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நீடித்த கருத்தியல் விசாரணைகளுக்கு அளிப்பதில்லை.

இன்று நாட்டில் பெருகிவரும் அடிப்படைவாத வன்முறையும் அரசியல்-கலாசார polarisation போக்கும் எனக்குக் கவலை அளிக்கின்றன. இந்த ஆபத்தான கருத்தியல்களை எதிர்கொள்ள வலுவான தர்க்கரீதியான வாதங்களை முன்வைப்பதற்கான தளங்கள் குறைந்து வருகின்றன என்றே தோன்றுகிறது. இந்நிலையில்  எளிமையான என் கட்சி vs. எதிர்க்கட்சி என்ற எல்லைகளுக்கு அப்பால் நின்று சாவர்க்கரின் கருத்தியல் வேர்கள் எவ்வாறு ஐரோப்பிய வரலாற்றின் தோல்வியுற்ற சோதனைகளிலிருந்து நீள்கின்றன என்று நீங்கள் விளக்கியிருந்தது எனக்கு ஒரு பெரிய திறப்பாக இருந்தது. வரலாற்றின் ஆழங்களை அறியாமல் எளிதாகப் புறந்தள்ளிவிட்டு இன்றைய சிக்கல்களுக்கு விடைகாண முடியாது என்பது எவ்வளவு உண்மை!  நீங்கள் எழுதியிருப்பது போல நாயக வழிபாட்டு மனநிலையிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

வரலாற்றில் ஈடுபாடு காட்டாத என் தலைமுறையுடனும் பொறுமையாக நீங்கள் நடத்திவரும் இந்த உரையாடலுக்கு நன்றி!

வணக்கத்துடன்,

ஐஸ்வர்யா

 

அன்புள்ள ஐஸ்வர்யா,

நான் எழுதுவதே உங்களைப் போன்ற வாசகர்களுக்காகத்தான். இருபத்துநான்கு மணிநேரமும் அரசியல்சர்ச்சைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக அல்ல. அவர்களின் சிக்கல் என்னவென்றால் அவர்களால் புதியதாக எதையும் புரிந்துகொள்ள முடியாது என்பதே. ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்த தரப்புகளில் ஒன்றாக எந்தக் கருத்தையும் உடனடியாக மாற்றிக்கொள்வார்கள். அத்துடன் தொடர்ச்சியாக இந்த சர்ச்சைகளில் திளைப்பதனால் அபாரமான தன்னம்பிக்கையும் கொண்டிருப்பார்கள். அந்த தன்னம்பிக்கையை உடைத்து உள்ளே செல்ல எவராலும் இயலாது.

இது எப்படி நிகழ்கிறது? தொடக்கத்தில் மெல்லிய ஆர்வத்துடன் அரசியல் விவாதங்களைக் கவனிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். ஏதேனும் ஒரு கருத்து அல்லது தரப்பு கொஞ்சம் சரிதானே என நினைக்கிறார்கள். அதைச் சொன்னதும் நாலைந்துபேர் பாய்ந்துவந்து அவர்களை குதறி எடுப்பார்கள். அது இவரைச் சீண்டும். இவருடைய ஆணவம் புண்படும். இவர் தான் சொல்வதை ஆவேசமாக அழுத்திச் சொல்லி, அதுவே சரி என வாதிடுவார்.

இவ்வாறு ஒரு நிலைபாடு எடுத்துவிடுவார். அதன்பின் அந்த நிலைபாட்டை பேணி நிலைநிறுத்தியாக வேண்டிய பொறுப்பு வந்துவிடும். வாசிப்பு, சிந்தனை, பேச்சு எல்லாமே அந்த நோக்கம் கொண்டதாக மாறிவிடும். இவர் நிலைபாடு எடுத்துவிட்டால் உடனே அத்தரப்பைச் சேர்ந்தவர்கள் வந்து இவருக்கு ஆதரவளிப்பார்கள். ஒரு குழுவில் இணைந்துவிடுவார். அதன்பின் அந்நிலைபாட்டை சற்று ஐயப்பட்டால்கூட நண்பர்களே நெஞ்சில் மிதிப்பார்கள். ஆகவே வேறுவழியே இல்லை.

அத்துடன் மனித உள்ளம் விசித்திரமானது. ஒரு வகையில் உலகைப் பார்க்க ஆரம்பித்துவிட்டால் உலகமே அப்படித்தான் தெரிய ஆரம்பிக்கும். அதுவே உண்மை என முழுமையாகவே தோன்றும். அந்த மாயை ஏதேனும் ஒன்று நிகழ்ந்து கிழிபட்டாலொழிய அதிலிருந்து வெளியே வரவே முடியாது. வெளியே வந்ததும் எப்படி அப்படிப்பட்ட மாயையில் மூழ்கியிருந்தோம் என்னும் பெருந்திகைப்பும் உருவாகும்.

நான் ஒரு குறிப்பிட்ட தரப்பைச் சொல்லவில்லை. எல்லா அரசியல் தரப்பும், கருத்தியல் தரப்பும் இந்த மூழ்கடிக்கும் தன்மை கொண்டதே. கருத்தியலின் ஆட்கொள்ளல் என்பது சாமானியமானது அல்ல. நவீன யுகத்தின் மாபெரும் பொதுவெளி விசை என்பது கருத்தியலே. முந்தைய யுகத்தில் அது மதம். அதற்கு முந்தைய காலகட்டத்தில் அது இனம். பின்தொடரும் நிழலின் குரல் என்னும் நாவலே கருத்தியலின் எல்லையற்ற ஆற்றலை விளக்கும் படைப்புதான்.

இந்த மாயைக்குள் இருக்கையில் பல உளப்பிரமைகள் உருவாகின்றன. ‘நான் இருப்பதே சரியான தரப்பு’ என்பது முதல் பிரமை. ‘என்னைப்போலவே பிற அனைவரும் ஏதேனும் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள்’ என்பது இரண்டாவது பிரமை. ‘என் தரப்பை மறுப்பவர்கள் என் எதிரித்தரப்பினராகவே இருக்க முடியும்’ என்பது மூன்றாவது பிரமை. ‘என் தரப்பின் காவலன் நான். அதற்காக போரிடும் பொறுப்பு கொண்டவன்’ என்பது நான்காவது பிரமை.

இப்பிரமைகளில் மூழ்கியிருப்பவர்களிடம் விவாதிக்க முடியாது. அதனால் பயனே இல்லை. எந்த ஒரு கருத்தையும் தன் தரப்பா, எதிரித்தரப்பா என்னும் கேள்வியுடன் அணுகி இரண்டில் ஒன்றாக அடையாளப்படுத்திக் கொள்வார்கள். புதிய ஒன்றை அவர்களால் கவனிக்கவோ புரிந்துகொள்ளவோ அறவே இயலாது. அதை தனக்குத்தெரிந்த மிக எளிய ஒற்றைவரித் தரப்பாக மாற்றிக்கொள்வார்கள். வேறு எவ்வகையிலும் அவர்களால் சிந்திக்கவே முடியாது.

இரண்டுவகையில் அந்த ஒற்றைப்படுத்தலைச் செய்வார்கள்.

ஒன்று: எந்த தரப்பிலும் ஒற்றைவரியை பிடுங்கி அதைக்கொண்டு அந்த தரப்பே அதுதான் என வரையறைசெய்துகொண்டு மேலே பேசுவார்கள். அந்த ஒற்றைவரி பலசமயம் அக்கட்டுரையின் மையத்துக்கு நேர் எதிரானதாகக்கூட இருக்கும். அதைப்பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அக்கட்டுரை அதையே சொல்கிறது என ஆவேசமாக நம்புவார்கள்.

இரண்டு: எந்தக் கட்டுரையானாலும், அது எந்த தரப்பை எப்படி தர்க்கபூர்வமாகச் சொன்னாலும் அதன் உள்ளடக்கம் தான் அதற்கு அளிக்கும் ஒற்றைவரி மையம்தான் என வாதிடுவார்கள். ‘அதெல்லாம் பூடகமா நுட்பமா ஒளிஞ்சிருக்கு. நாமதான் அதை வெளியே எடுக்கணும்’ என்பார்கள். ‘அப்டித்தான் சூட்சுமமா சொல்லுவாங்க, அது ஒரு தந்திரம்’ என்பார்கள்.

இது அவர்களுக்கு இருக்கும் அபாரமான தன்னம்பிக்கையின் விளைவு. இதைச் சொல்பவர் தன்னை பிறரைவிட ஒருபடி மேலான சிந்தனையாளர் என நினைக்கிறார். அதாவது ஒரு கட்டுரையை வாசிக்கும் மற்ற எவருக்கும் அதில் ’ஓளித்து வைக்கப்பட்டிருக்கும்’ உண்மையான தரப்பை எடுக்கத் தெரியாது என்றும், தன்னால் மட்டுமே அது முடியும் என்றும், ஏனென்றால் தான் அரிதான ஓர் அரசியல்பார்வை கொண்டவர் என்றும் அவர் நம்புகிறார்.

முதல் கேள்வி, ஓர் அரசியல்கருத்தை ஏன் அப்படி திருமந்திர்ப்பாடல் போல பூடகமாக ஆக்கவேண்டும் என்பதே. அப்படி ஓர் அதிநுட்பருக்கு மட்டுமே தெரியும்படி புதைத்துவைக்க அது என்ன சிவரகசியமா?  முதல்வகையினரை விட இரண்டாம் வகையினரே பெரிய அடிமடையர்கள். ஆனால் இவர்களே அதிகம் பேசுவார்கள். நூல்களைக்கூட எழுதுவார்கள்.

இந்தச் சூழலில்தான் நாம் அரசியல்பேசவேண்டியிருக்கிறது. அரசியலின் அன்றாட நிகழ்வுகள் சார்ந்த முடிவில்லாத விவாதங்களில் எழுத்தாளரோ சிந்திப்பவரோ சிக்கக்கூடாதென்றே நான் நினைக்கிறேன். அது அவர்கள் சம்பந்தமே அற்ற அரசியல்கும்பலுடன் விவாதிக்கும் கட்டாயத்தை உருவாக்கிவிடும். அவர்களுடன் பேசப்பேச அவர்கள் தங்கள் உணர்வுச் சமநிலையை இழப்பார்கள். காலப்போக்கில் வேறேதும் சிந்திக்கவோ செயல்படவோ முடியாதபடி ஆவார்கள்.

அரசியல் அல்லது சமூகவியலில் உள்ள அடிப்படைக் கருதுகோள்களைப் பற்றிய விவாதம் சிந்திப்பவர்களுக்கு தேவை. ஆனால் அதை அவர்கள் அன்றாட அரசியலில் மூழ்கியிருப்பவர்களிடம் செய்ய முடியாது. அரசியல் சார்ந்த கவனம்கொண்ட பொதுவாசகர்களிடமே செய்ய முடியும். நான் மிக அரிதாகவே அரசியல் சார்ந்து ஏதேனும் சொல்கிறேன். அப்போது அந்த வாசகர்களை மட்டுமே கருத்தில் கொள்கிறேன்.

 

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2023 11:35

கொங்கு மண்டல சதகம்

தமிழகத்தின் மையஓட்ட வரலாறான சேர சோழ பாண்டிய மன்னர்கள் மற்றும் அவர்களின் நகரங்களின் வரலாற்றுக்கு அப்பால் அடுத்தநிலை வரலாறுகள் எழுதப்படுவதற்கு அடிப்படையாக அமைந்திருப்பவை சிற்றிலக்கியங்கள். அவற்றில் நேரடியாகவே ஒரு நிலப்பகுதியின் வரலாற்றைச்சொல்லும் கொங்குமண்டல சதகம் போன்றவை முக்கியமானவை. கொங்குமண்டல சதகம் கொங்கு நிலப்பகுதியின் வரலாற்றுச் சான்றாக மதிக்கப்படுகிறது. அதன் எளிய சந்தநடையும், நாட்டார்ப்பாடல்களுடனான அணுக்கமும் இலக்கியநோக்கில் குறிப்பிடப்படுகின்றன

கொங்கு மண்டல சதகம் கொங்கு மண்டல சதகம் கொங்கு மண்டல சதகம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2023 11:34

தில்லை பேட்டி, கடிதம்

தியானமுகாம், தில்லை – கடிதம் தில்லை செந்தில்பிரபு – ஒரு பேட்டி

அன்பு ஜெ.,

நலம்தானே? தில்லை செந்தில் பிரபு அவர்களை  விஜயகுமார் சம்மன்கரை எடுத்த பேட்டி மிகவும் அருமை. சாதாரணமான உரையாடலாக தென்பட்டாலும் செந்தில் பிரபு அவர்களின் ஆளுமையை குறுக்குவெட்டு தோற்றமாக சித்தரித்து உள்ளார். அவரின் கருத்துகளை, வாழ்க்கை பார்வையை அற்புதமாக படம் பிடித்தார். கட்டாயங்களை(compulsions) தவிர்ப்பதற்கு யோக சாதனை என்ற கருத்தின் மையமாக செல்லும் பேட்டி… ‘பின் தொடரும் நிழலின் குரல்’ தரும் கசப்புக்கு உக்கியாக ‘குமரி துறைவி’யை பரிந்துரைக்கும்  இடங்கள் அலாதியானவை.

ஒரு பத்திரிக்கையாளனாக என்னால் சொல்லமுடியும்… இப்படி ஒரு பேட்டியை எழுதுவது அவ்வளவு சுலபமல்ல. அமெரிக்க பத்திரிக்கைகளில் narrative முறையாக இப்படி வடிவமைப்பார்கள்.  நம்மிடம் அந்த முயற்சிகளே இல்லை. கேட்டால்… அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும் என்பார்கள். உண்மையில், அது மட்டுமே காரணம் அல்ல… narrative-ஸ்டைல் எழுதுவோர் எழுத்தாளுமையாக இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் பல்லிளித்துவிடும். இது ஒரு நல்ல எழுத்தாளுமை எடுத்த போட்டியாகவே அமைந்தது. விஜயகுமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

மிக்க அன்புடன்,
ராஜு

ஹைதராபாத் அன்புள்ள ராஜூவிஜயகுமார் சம்மங்கரை கதைகள் எழுதி வருகிறார். மிருகமோட்சம் மற்றும் பிற கதைகள் என ஒரு தொகுதி வெளியாகியுள்ளது.ஜெ மிருகமோட்சம் மற்றும் பிற கதைகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2023 11:32

ரங்கனும் அவருடைய மொழியாக்கங்களும்

தமிழ் விக்கி – விந்தியா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். ஹூஸ்டன் மீனாட்சியம்மன் கோவிலில் 64 நாயன்மார்களின் வரலாறையும், 12 ஆழ்வார்களின் வரலாறையும் சுருக்கமாக ஓவியங்கள் சகிதமாக, சுவற்றில் ஆங்கிலத்தில் எழுதிவைத்திருப்பார்கள். சஹா அதை வாசிக்கட்டும் என்று பிப்ரவரி முதல் வார கோவில்பயணத்தில் உடன் அழைத்துச் சென்றோம். நான் வாசித்தால் நாள் முழுக்க வேண்டும். அவன் அரை மணி நேரத்தில் எல்லாம் வாசித்துவிட்டு, அப்புறம் என்றான்.

அந்தக் கோவில் வளாகத்தில் , தமிழ் நூல்கள், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் கிடைக்கும் ஒரு நூலகம் உண்டு. அந்த நூல்களை வாங்கிக்கொள்ளவும் செய்யலாம். கடிதம் எழுதி அணுக்கமாக உங்களை அறியும் முன் உங்களது நூல்களையெல்லாம் அங்கிருந்துதான் வாங்கி வாசித்தேன். அந்த நூலகத்திற்கு அவனை அழைத்துச் சென்றோம். இந்த மொழியாக்கப் புத்தகத்தில் இருக்கிற இராமாயணம் எனக்குத் தெரியும், இந்த மொழியாக்கத்தில் வந்துள்ள  பாண்டவர்கள் / கௌரவர்கள் கதை எனக்குத் தெரியும் என்று சொல்லிக்கொண்டே , ஜெயகாந்தன் என்ற பெயரை பார்த்ததும் அந்த ஆங்கில மொழியாக்க நூலை எடுத்துக் கொஞ்சம் வாசித்துவிட்டு இதை வாங்கலாம் என்றான்.

Trial By Fire And Other Stories என்று தலைப்பிட்ட நூலில் பன்னிரெண்டு கதைகள் இருந்தன. பின்பக்க அட்டையில் ஜெயகாந்தன் கருப்பு மீசையுடன் இருந்தார். ரவிசுப்பிரமணியன் ஆவணப்படத்தில் இருந்த வெள்ளை மீசை ஜெயகாந்தன்தான் அவனது நினைவில் இருப்பதாக சொன்னான். வீட்டிற்கு வந்ததும், அந்தக் கதைகளை மொழியாக்கம் செய்த Andy Sunderasan-ஐத் தேட ஆரம்பித்தேன்.  நண்பர் விசுவிற்கு ஆண்டி சுந்தரேசன், ஜெயகாந்தன் கதைகளை மொழியாக்கம் செய்தது தெரிந்திருந்தது. ஆனால், அவரைத் தொடர்பு கொண்டு பலவருடங்கள் இருக்கும் என்றார். Google-ன் உதவியில் அவரது வலைதளத்தை கண்டுபிடித்து, அவர் இதுவரை மொழியாக்கங்கள் செய்த நூல்களின் பட்டியலைக் கண்டதும், தங்கப்புதையலைக் கண்டவனைப்போல மகிழ்ந்தேன்.

ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்புகள் மூன்று. எழுத்தாளர் விந்தியா அவர்களின் சிறுகதைகள் மற்றும் அவரது நாவலை மொழியாக்கம் செய்திருந்தார்.  ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை , The Show Never Ends என்று மொழியாக்கம் செய்திருந்தார்.  நாஞ்சில் நாடனின் பதினான்கு கதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு அவரது தளத்தில் ஆங்கிலத்தில் வாசிக்க கிடைக்கின்றன. ஆங்கிலம் மட்டுமல்லாது தெலுங்கு பேசும்(வாசிக்கும்)  மக்களிடமும் தமிழ்க்கதைகள் சென்றடைய, ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், சூடாமணி படைப்புகளை தெலுங்கில் மொழியாக்கம் செய்திருந்தார்.

தளத்தில் இருந்த ஒரு அறிவிப்பு (A note from the Surviving KNS family members) எனக்கு வேறு ஒரு விதமான ஆர்வத்தை கொடுத்தது. . தமிழ் விக்கியின் மூலம்  நன்கு அறிமுகமாகிவிட்ட, எழுத்தாளர் விந்தியா அவர்களின், ஒரே ஒரு நாவலான  ராஜேஷ்வரி பற்றிய குறிப்பு அது.   அந்த நாவலை  ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்வதின் அவசியம், சுருக்கமான முன்னுரை உள்ள அந்தக் குறிப்பின் கீழே நால்வரின் பெயர்களை பார்த்ததும், மனதில் நான் கண்டது புதையல்தான் என உறுதியாகிவிட்ட மகிழ்ச்சியின் படபடப்பு.. மேற்கொண்டு எதுவும் தாமதிக்காமல் , அமெரிக்க விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் பிரதிநிதியாக. Trial By Fire And Other Stories  பிரதிகளை வாங்க என்ன செய்யவேண்டும் என்று மின்னஞ்சல் செய்தேன். .அவர் தற்போது வேறு எதுவும் பிரதிகள் இல்லை. வேண்டுமெனில் அவரிடம் இருக்கும் போட்டோ காப்பியை அனுப்புகிறேன் என்றார்.

இப்படியே மின்னஞ்சல்கள், முன்னும் பின்னும் செல்ல,  தயங்கி தயங்கி எழுத்தாளர் விந்தியா அவர்கள் உங்களது சகோதரியா என்று கேட்டேன். ஆம், அவர் எனது சகோதரி, அனைவரிலும் மூத்தவர், இயற்பெயர் இந்தியா தேவி என்று பதில் வந்தது. ஆர்வமாகி, கைபேசியில் உங்களை அழைக்கவா என்று கேட்க, அவரது சகோதரர் சீனு ஆஸ்டினில்தான் உள்ளார், அவரை தொடர்புகொள்ளுங்கள் என்று அவரது எண்ணைப் பகிர்ந்தார். தன்னை ரங்கன் என்று அழைத்தால் உரிமையாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார்.

நாஞ்சில் நாடன் கதைகள் பற்றி ரங்கன் எழுதியதை ஆங்கிலத்தில் அப்படியே கொடுக்கிறேன். I admire நாஞ்சில் நாடன் writing. He is brilliant in evoking scenes and images. He’s widely travelled and writes on various topics. He makes facts ‘sit up and breathe’ I liked his piece on the Gujarat Famine in யாம் உண்போம். 2013-ல்  நீல பத்மநாபனின் இலை உதிர் காலம் நாவலை, ரங்கன் Autumn Reveries என ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய சாகித்ய அகாதமி அதை வெளியிட்டுள்ளது. 2016-ல் அதற்கு , நல்லி திசையெட்டும் பரிசு , சிறந்த மொழியாக்கத்திற்கென கிடைத்துள்ளது. 2018-ல் 800 பக்கங்கள் கொண்ட நீல பத்மநாபனின் தேரோடு வீதி  நாவலை மொழியாக்கம் செய்துள்ளார் இது அகாதமியின் மேற்பார்வையில் உள்ளது. இந்தவருடத்தில் வெளிவர சாத்தியங்கள் உள்ளது என ரங்கன் நம்புகிறார்.

சகோதரி விந்தியாவின் அனைத்து நூல்களையும் சென்ற வருடம் தெலுங்கில் மொழியாக்கம் செய்துள்ளார். மூன்று வால்யும்கள் அந்த நூலை Telugu Department of the Emory University, Atlanta-விற்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். ரங்கன் தெலுங்கில் மொழியாக்கம் செய்த தமிழ் படைப்புகள், ஹூஸ்டனிலிருந்து வெளிவரும் Madhuravani, இணையப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

சீனுவை அழைத்து மறு நாள் உரையாட, விந்தியாவின் கதைகள்,  வெளி மாநிலத்தில் வாழ்ந்தாலும், அப்பா சுந்தரேசன், அவர்கள் அனைவரையும் தமிழ் படிக்க வைத்தது, தன் சம்பளத்தைவிட இருமடங்கு விலையில் (ரூ 150) கொடுத்து  வாங்கிய டைப்ரைட்டர், அதை தமிழ் எழுத்துக்களுக்காக மாற்றியமைத்தது,  திருச்சி பக்கத்தில் இருக்கும் கிராமத்து வீட்டில் அப்பா சேமித்துவைத்திருக்கும் புத்தகங்கள், அவற்றை பாதுக்காக்கவேண்டிய முக்கியத்துவம் என சுவாரஷ்யமாக சென்றது.. அவர்களின் தந்தை, மகளின் கதைகள் பத்திரிகைகளில் பிரசுரம் ஆக ஆக , வெட்டி எடுத்து சேகரித்து , பைண்ட் செய்து ஒரு புத்தகம் போல் வைத்துள்ளார். எழுத்தாளர் அம்பை அவர்கள் அதை மின்வடிவமாக்கி தனது SPARROW அமைப்பின் மூலம் சேமித்துவைத்துள்ளார்.

சீனு 1968-ல் அமெரிக்கா வந்துள்ளார். IBM-ல் முப்பது வருடங்கள் பணியாற்றியுள்ளார் தம்பி ரங்கன் 1975-ல் அமெரிக்கா வந்துள்ளார். இப்பொழுது கலிபோர்னியாவில் வசிக்கிறார். சீனுவின் கணினி பின்னனியும், ரங்கனின் எழுதும் திறனும் மற்றும் மொழியாக்கத் திறனும், நாரணன் எனும் சென்னையில் வசித்த சகோதரரின் தட்டச்சுத் திறமையும் ஒருங்கே உதவ விந்தியாவின் நூல்கள் எல்லாம் மின்வடிவங்களாக மாற்ற முடிந்திருக்கிறது (https://vindhiya.com)

ரங்கன் (Andy Sunderasan)- மொழியாக்கம் செய்த நூல்கள் பற்றிய விபரங்கள்  https://www.kurinjipubs.com-ல் கிடைக்கின்றன. சீனுவின் மகள் திவ்யா என்பவர் குழந்தைகளுக்கான நூல்கள் எழுதுபவர். ஆண்டி மொழியாக்கம் செய்த Made in Heaven and Other Stories என்ற ஜெயகாந்தன் நூலுக்கு அட்டைப்படத்தை வடிவமைத்துள்ளார். இந்த தளம் இப்பொழுது, நூல் விற்பனை செய்யும் செயல்பாட்டில் இல்லை. தகவல்களுக்காகவும், ஆன்லைனில் இருக்கும் நூல்களை வாசிக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உரையாடலின் ஊடே , ஜெயமோகனின் தமிழ் விக்கி முன்னெடுப்பு, எழுத்தாளர் விந்தியாவின் கட்டுரை என அறிமுகம் செய்தேன். சீனு அவர்களுக்கு  நான் கூறிய விபரங்கள் எதுவும் புதிதாக இல்லை. பின்னர் எழுதிய ஒரு குறுஞ்செய்தியில், தமிழ் விக்கிப் பதிவில் தனது சகோதரியின் கணவர் பெயர் ஸ்ரீனிவாசன் என்று தவறாக உள்ளதாகவும், சுப்ரமண்யன் என்று மாற்றச் சொல்லியும் கேட்டுக்கொண்டார். ரம்யா, அதை உடனே சரிசெய்துவிட்டார்.

ரம்யா நீலியில் எழுதிய கட்டுரையை அவரிடம் பகிர்ந்தேன். விந்தியாவின் தேர்ந்தெடுத்த கதைகளை ரம்யாவிற்கு மீண்டும் நூலாக கொண்டுவரும் ஆவல் உள்ளது எனத் தெரிவிக்க , சீனு, ஆண்டி சுந்தரேசன், சகோதரி செல்வி (நியூ மெக்ஸிகோ) மூவரும், உரிமை தருகிறோம் என எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள்.

இந்தப் பாரம்பரியமிக்க குடும்பத்தை அறிந்துகொள்ளும் சூழலில் விந்தியாவின் சகோதரர் நாரணன் 2019-ல் மரணமடைந்துவிட்டார் என்று  அறிய எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டேன். சீனுவையும் அவரது மனைவி சுகந்தாவையும் சென்ற வார இறுதியில், நானும் ராதாவும் , Summer Moon Café-யில் திறந்தவெளி முற்றத்தில் வைத்துச் சந்தித்தோம். அவர்கள் மகள், திவ்யாவின் அறிவுரைப்படி, இப்பொழுதும் Covid-19 protocols கடைப்பிடிக்கிறார்கள்.

ரம்யா, விந்தியாவின் கதைகளை நூலாக கொண்டுவரும் சமயம் கோபுலுவின் படம் கதைகளின் இடையே இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். ரங்கன் மொழியாக்கம் செய்த ஜெயகாந்தனின் Till Death Do us Part, Made in Heaven and Other Stories இரு ஆங்கில நூல்கள், Ganga Thapas (தெலுங்கு) பரிசாக கொடுத்தார்கள். விந்தியாவின் Rajeshwari நாவலை எங்களுக்கு பரிசாகக் கொடுக்கலாம் என்றுதான் சீனு எடுத்து வந்திருந்தார். அவரது சகோதரியின் படத்தை பின் அட்டையில் இருப்பதைப் பார்த்ததும், படித்துவிட்டு திருப்பிக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

சீனுவிடம், ஏனோ தெரியவில்லை, விந்தியா அம்மாவின் படத்தை முதல் நாள் பார்த்தபொழுது என் கண்களில் கண்ணீர் கொட்டியது என்றேன்.  நீங்களும் எங்களில் ஒரு சகோதரர் என்றார். இதனுடன், சீனு, சுகந்தா தம்பதிகளுடன் நானும் ராதாவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், எழுத்தாளர் விந்தியா அவர்களின் தந்தை/தாய் படமும் ரங்கனின் புகைப்படமும் இணைத்துள்ளேன்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2023 11:31

A Conversation with Suchithra 

சுசித்ரா[ ஆசிரியர் ஒளி சிறுகதை தொகுதி]Harshaneeyam Speaks to Suchitra Ramachandran in this episode. She is the author of the new novel ‘The Abyss’. It’s a translation of the Tamil novel ‘Ezham Ulagam’ Written by Jeyamohan.

A Conversation with Suchithra 

 

 

The Abyss- Amazon

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2023 11:30

April 18, 2023

பனியில் தெரிபவை

பனிமனிதன் மின்னூல் வாங்க பனிமனிதன் வாங்க

இந்த நவம்பர் 19, 20 ஆம்தேதிகளில் ஃபின்லாந்தில் ஆர்ட்டிக் வட்டத்தில் உள்ள ரோவநாமி என்னும் சுற்றுலாக் கிராமத்திற்குச் சென்றுவந்தேன். உறைபனியால் சூழப்பட்ட ஊர். உறைநிலைக்கு கீழே 11 பாகை வரை வெப்பநிலை இறங்கியிருந்தது. பனியால் போடப்பட்டவை போல சாலைகள் தெரிந்தன. காடுகளில் மரங்கள் பனியால் செய்யப்பட்டவை போல் இருந்தன. புல்வெளிகள் பனிமூடி அலையலையாக தெரிந்தன. ஒவ்வொரு புல்லிலும் பனி படிந்திருந்தது. பனியாலேயே புல்லை செய்து பரப்பியிருப்பதுபோல் இருந்தது. வெண்ணிறம் மட்டும்தான் எங்கும். நாம் அப்படி நிறங்கள் இல்லாத உலகை பார்த்திருக்கவே மாட்டோம். பொட்டல் காட்டில் நிலவொளியில் நின்றால் நிறங்கள் இல்லாமல் தெரியுமே, அதுபோல. ஆனால் வெண்பனி ஒளிவிடுவது. ஆகவே கண்கள் கூசிக்கொண்டும் இருந்தன. கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.

நான் அதற்கு முன்பு நாலைந்து முறை உறைபனியைப் பார்த்திருக்கிறேன். முதல்முறையாக 1982-ல் என் இருபதாவது வயதில் பார்த்தேன். நான் துறவியாக அலையும் காலம் அது. இமையமலைக்குச் சென்றிருந்தேன். பிப்ரவரியில் கேதார்நாத் செல்லும் வழி. நான் சாமியார் கூட்டத்துடன் சென்றேன். பனி மிகுதியாக இருந்தமையால் திரும்பி விட்டேன். அன்று அந்த பனியின் குளிர் அளித்த துன்பம் மட்டும்தான் தெரிந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் ஒருமுறை ஆங்கில நாளிதழில் இமைய மலையில் மீண்டும் பனிமனிதனின் காலடித்தடம் தெரிந்தது என்ற செய்தியை வாசித்தேன். நான் கண்ட பனிவெளி நினைவில் எழுந்தது. மனம் ஆழமான பரவசத்தை அடைந்தது. அந்த பனிமனிதனின் காலடிகளையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

அறிவியல் அறிஞர்கள் அந்த காலடித்தடங்கள் உண்மையில் என்ன என்று கண்டடைந்துள்ளனர். இரண்டு வகையில் அவை நிகழ்கின்றன. ஒன்று உண்மையாகவே மனிதர்கள் நடந்து சென்ற காலடித்தடங்கள் அவை. பனி உருகி விரிவடையும்போது அவை மிகப்பெரியதாக அகலம் அடைகின்றன. பின்னர் பனி மீண்டும் இறுகும்போது அவை பெரிய காலடித்தடங்களாகத் தெரிகின்றன.

இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இமையமலையில் பனி அலையலையாக மேலிருந்து இறங்கி படிந்துகொண்டிருக்கிறது. ஆகவே பனிப்பரப்பு பனிப்பாளங்களால் ஆனது. சமவெளியில் உள்ளது போல ஒரே பரப்பு அல்ல அது. அந்தப் பனிப்பாளங்களுக்கு நடுவே உள்ள இடைவெளி ஒரு விரிசல் போன்றது. அந்த விரிசலில் காற்று உள்ளது. மேலும் மேலும் பனி விழும்போது விரிசல்கள் மூடிவிடுகின்றன. உள்ளே உள்ள காற்று பனிப்பாளத்திற்கு அடியில் மாட்டிக்கொள்கிறது. சிறு சிறு குமிழிகளாக பனித்தரைக்கு அடியில் அந்தக் காற்று உள்ளது. பனி கூடுதலாகி குளிர் அதிகரிக்கும்போது உள்ளே அந்த காற்று சுருங்குகிறது. அப்போது மேலே படிந்த மென்மையான பனிப்பரப்பை அது உள்ளிழுக்கிறது. அந்த இடங்களில் மெல்லிய பள்ளங்கள் உருவாகின்றன. அந்தப் பள்ளங்கள் கீழே உள்ள விரிசலின் நேர்மேலே வரிசையாக விழுகின்றன. அவை காலடித்தடங்கள் போல தெரிகின்றன.

ஆனால் பனிமனிதன் பற்றிய கற்பனைகள் இமையமலைப் பகுதி மக்களிடம் உள்ளன. அவர்கள் அவனை யெதி (Yeti) என்று சொல்கிறார்கள். இந்திய கதைகளில் அந்த பனிமனிதன் யதி என சொல்லப்படுகிறான். இந்திய மொழிகளில் யதி என்றால் துறவி, ஆன்மிக ஞானி என்று பொருள். என் குருநாதரின் பெயர் நித்ய சைதன்ய யதி. இந்த உலகத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு வாழ்பவர்களின் பெயர் அது. இங்கிருந்து கூட இமையமலை மக்களுக்கு அந்தச் சொல் சென்று சேர்ந்திருக்கலாம்.

நான் இந்நாவலில் பனிமனிதர்களின் ஓர் உலகை உருவாக்கினேன். இங்கே நாம் உருவாக்கி வைத்திருக்கும் மனித நாகரீகத்திற்கு முற்றிலும் அப்பாலுள்ள ஓர் உலகம் அது. மனித நாகரீகத்திற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகள் வயது ஆகிறது. கற்காலத்தில் இருந்து நாம் இப்படி உருவாகி வந்துள்ளோம். வேறுவகையில் நாம் சென்றிருந்தால் என்ன ஆகியிருப்போம்? நம் பண்பாடு என்னவாக இருக்கும்? அதுதான் இந்தக் கதை. இந்தக்கதையில் நம்முடைய மனிதப் பண்பாடு செல்லும் வழி சரியா என்ற கேள்வி உள்ளது. அதைப்பற்றி நாம் சிந்திக்கவேண்டும்.

இந்நாவல் 1998ல் தினமணி நிறுவனத்தின் சிறுவர்மணி இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. அதில் பணியாற்றிய மனோஜ் இதை எழுத என்னை ஊக்குவித்தார். இந்நாவல் வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவதார் படம் வந்தது. அது ஏறத்தாழ இதேபோன்ற கதை. இதிலுள்ள பலகாட்சிகள் அவதார் படத்திலும் உள்ளன. அது மனித உள்ளங்கள் எப்படி ஒன்றுபோலவே சிந்திக்கின்றன என்பதையே காட்டுகிறது.

இந்நாவலை முதலில் வெளியிட்ட கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம், பின்னர் வெளியிட்ட கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி, இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஆகியவற்றுக்கு நன்றி.

ஜெ

(விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள பனிமனிதன் நாவலுக்கான முன்னுரை)

—————————————————————————————

அகச்சாகசம்…. பனிமனிதன்

பனிமனிதன் – கடிதம்

பனிமனிதன் வாசிப்பு

பனிமனிதன் வாசிப்பு

பனிமனிதன் மதிப்புரை- மகிழ்நிலா

பனிமனிதன் – வாசிப்புரியா ரோஷன்

பனிமனிதன், கடிதம்

பனிமனிதன் சிறுமியின் விமர்சனம்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் – கடிதம்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் -ரெங்கசுப்ரமணி

பனிமனிதன் – சுனில்கிருஷ்ணன்

பனிமனிதன்

பனிமனிதன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2023 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.