Jeyamohan's Blog, page 597
April 13, 2023
தில்லை செந்தில்பிரபு – ஒரு பேட்டி

தில்லை செந்தில்புரபு அவர்கள் என்னை தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். நான் பொது இடத்தில் சந்திக்கலாம், எனக்கு அது சவுகரியமாக இருக்கும் என்றேன்.
சரவணம்பட்டிக்கும் குரும்பபாளயத்துக்குமிடையில் உள்ள ஒரு குளிரூட்டப்பட்ட தேநீர் விடுதியில் சந்திப்பதாக முடிவெடுத்து நான் முன்னமே அங்கு போய் நின்று அவருக்கு அழைத்தேன்.
“சார், நான் வீட்ல இருந்து கிளம்பிட்டேன்”
தில்லை, “நானும் கிளம்பிட்டேன் உன்னோட போனுக்குத்தான் வைட்டிங் விஜி. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுவேன். நீ பொறுமையா வா…” என்றார்.
அவர் வருதற்குள் ஒரு டீ அடித்துவிடலாம் என்று மனம் சொல்லிகொண்டே இருந்தது. அதற்குள் தில்லை அந்த பழைய காரில் வந்திறங்கினார். நாங்கள் இருவரும் தேநீர் விடுதியில் உள்ளே சென்று அமர்ந்தோம். “என்ன திடீர்னு பேட்டியெல்லாம் வேணும்முன்னு சொல்ற? ஜெ க்கு கடிதம் ஏதேனும் எழுத எண்ணமா?” என்றார்.
“ஆமா சார்..”
மெலிதாக புன்னகைத்துவிட்டு “சரி ஓகே.. எனக்கும் இது புதுசு தான்..”
“எனக்கும் தான் சார்..”
“இரு டீ சொல்லிடுவோம்.. பயிற்சி தினமும் செய்யறீயா?” என்று அவர் கேட்டுக்கொண்டு வரும் போது நான் போனில் உள்ள ரெகார்டரை அமுத்தி அவர் முன் தள்ளி வைத்தேன். “ஆமா சார்..”
“என்ன, நெத்தில இவ்ளோ பெரிய பட்டை? நீ invocation song, குரு பூஜை எல்லாம் தேவை இல்லைன்னு வாதாடுன ஆளாச்சே?” என்றார்.
“என் மனைவி ஏதோ சித்தர் சமாதிக்கு போயிட்டு வந்தா. அந்த விபூதீங்க இது… இப்பெல்லாம் சித்தர் சமாதிக்கு என்ன கொறச்சல்…” என்றேன்.
“இப்போ சுத்துவட்டார பத்து கிலோமீட்டருக்குளாகவே நான் நாலு அப்படிப்பட்ட சமாதிகளை காமிக்க முடியும். என்னையே எடுத்துக்க எங்க வீட்டுல நான் நாலாவது குழந்தை. மூணு அக்காங்க. பையன் வேணும்னு இங்க உள்ள சித்தர் சமயத்தில வேண்டிக்கிட்டு தான் என்ன பெத்தாங்க. இப்போ அந்த சமாதி ஒரு கோயிலா ஆகிடுச்சு” என்றார்.
நான், “இதை எப்படி புரிஞ்சிக்கிறது? இதெல்லாம் தேவைதானா? கோயில் எனக்கு புரியுது. இந்தமாதிரி சித்தர் சன்னதி எல்லாம் கொஞ்ச டூ மச். எனக்குத் தெரியவே கணக்கன்பட்டி சித்தர் ஆசிரமம் இப்போ பெருசா வளர்ந்து போச்சு… நான் அவரை நேருல பாத்துருக்கேன். ரொம்ப சாதாரணமான வயசானவர். நான் பாக்குறப்ப அவருக்கு உடல் கோளாறுகள் இருந்தது” என்றேன்.
“பழனி பக்கத்துல இருக்குதே? அதுதானே. இங்க எல்லாம் அப்படித்தான் நடக்கும். இருந்திட்டு போகுது. அது தேவைப்படும். அந்த மாதிரி செட் அப் இங்க இல்லைன்னா, வேற எந்த செட் அப் மக்களுக்கு லௌகீக சமாதானமும் மீட்பும் தரும்? தெருவுக்கு ஒரு psychiatrist வைக்கமுடியாதுல்ல?”
“அப்போ இதெல்லாம் சரின்னு சொல்லறீங்களா? விட்டா கணக்கன்பட்டிக்கு பால் காவடியே தூக்குவீங்க போல” சொல்லிக்கொண்டு வரும்போதே என் அதிக பிரசங்கித்தனத்தை கண்டுகொண்டேன். ஆனாலும் அதை முடித்தாக வேண்டியதாயிற்று.
“தூக்கினாலும் தப்பில்ல. நான் தூக்கக்கூடிய ஆள் தான். ஏன் சொல்றேன்னா. தவறான சந்நிதியாக இருந்தாலும் தேடலில் உள்ள சாதகனை அவனது தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்டு செல்லும். It will deliver him.”
“கொண்டுசெல்லும்னா? எங்க சார்? முக்தி மோக்ஷம்-ன்னு சொல்லப்போறீங்களா?”
“அவ்வளவு பெருசு இப்போ வேண்டாம். மேலும் நமக்கு தெரியாததை பத்தி பேச வேண்டாம்ன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு விடுதலைன்னு வெச்சுக்குவோம். விடுதலைன்னா… எதிலிருந்து ன்னு ஒரு கேள்வி வரும். நம்மோட கட்டாயத்திலிருந்து. இப்போ காலைல எழுந்த உடனேயே காப்பி குடிச்சே ஆகணும்ன்னு கட்டாயம் மாதிரி. இதெல்லாம் நாம் வகுப்பிலேயே பாத்தோமே… அதை தான் கர்மான்னு சொல்றோம். கர்மான்னா ஏதோ பெருசா நினைக்க வேண்டாம். எது அனுபவ வட்டத்துக்குள்ள இப்போ என்ன இருக்கோ அதை மட்டும் பாக்கலாம். யோக பயிற்சி தொடர்ந்து செய். மீதிய அப்புறம் பாத்துக்கலாம்” என்றார்.
நான் சாய்ந்து அமர்ந்தவாறே கேட்டேன், “அப்போ யோகா தியானம் செஞ்சா நம்மோட கட்டாயத்தில் இருந்து விடுபடலாம்ன்னு சொல்றீங்க. அதுக்கு will power போதுமே. எதுக்கு சார் யோகா?”
“will power எத்தனை நாளைக்கு? வைராக்கியம் வேலை செய்யும். இல்லைன்னு சொல்லலை. நான் வைராக்கியத்தை பயிற்சி செஞ்சவன் தான். அது என்னோட கட்டாயத்தை அழுத்தித்தான் வெச்சது. ஒருநாள் அழுத்தம் தாளம வெடிச்சது. ஆனா யோகா கட்டாயத்தை உதிர்ந்து போக வைக்குது. I see my compulsions withering away. I do all my actions out of my own choice.”
“எங்கையோ படிச்சிட்டு வந்து பேசுற மாதிரி இருக்குங்க சார்..”
“கரெக்ட் தான்.. நான் மறுப்பேன்னு நினச்சு இதெல்லாம் சொல்றன்னு எனக்கு புரியாமல் இல்லை. படிச்சிட்டு வந்துதான் பேசுறேன். நான் படிச்சத validate பண்ணிட்டுதான் பேசுறேன். அதாவது என் அனுபவ உண்மைய மட்டும்தான் பேசுறேன். அப்புறம் படிச்சதை எல்லாம் கொண்டுவந்து இங்க பேசல. பெரும்பாலும் நான் இதையெல்லாம் பேசுறதில்லை. அது கேக்கறவங்க கற்பனைய பொறுத்து வளந்துக்கிட்டே போகும். இதோ இந்த ‘கர்மா’ என்ற சொல் மாதிரி. அதனால இதை மாதிரி கேக்கறவங்க கிட்ட நான் சொல்றது யோக பயிற்சி செய். இடைவிடாமல்..”
“சார்.. எல்லா கேள்விக்கும் பயிற்சி செய்ன்னு தான் நீங்க முடிக்கிறீங்க..” என்றதுக்கு சிரித்தார்.
டீ வந்தது. சிறிய சக்கரைப் பை இரண்டை பிரித்து டீ கோப்பையிலிட்டு கலக்கினார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் நிமிர்ந்து என்னை பார்த்தார். “சார் நான் இப்போ கட்டாயத்தின் பேர்ல ஒன்னும் டீ குடிக்கலை” என்றேன். மீண்டும் அழகாக சிரித்து, “வெளில சொல்லமாட்டேன் குடி” என்றார்.
ஒரு மிடறு அருந்தியதும், “சார்.. நாம அனுபவ உண்மையும் நூல் உண்மையும் பத்தி பேசிட்டு இருந்தோம். இப்போ உங்க அக அனுபவத்தை எந்த text ல கண்டுக்கிட்டீங்க?”
டீ கோப்பையை கீழே வைத்துவிட்டு என்னை நோக்காமல், “சைவ சித்தாந்தத்தில்..” என்றார்.
“சார்.. சைவத்திலா? நீங்க பௌத்த தத்துவம் அல்லது யோகா சூத்திரம்.. அப்படீன்னு சொல்வீங்கன்னு பாத்தேன்.”
என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு கண்களை மூடி பேசலானார். “உண்மைய சொன்னா, எது நமக்கு எப்படி அர்த்தம் ஆகும் எப்படி connect ஆகும்ன்னு சொல்ல முடியாது. நான் யோக சாதகனா ஆனதற்கு அப்புறமா தத்துவத்தின் மீது ஒரு ஆர்வம் வந்து படிச்சேன். எனக்கு எந்த தத்துவத்தை விடவும் என் அனுபவத்துக்கு நியாயம் செய்யறது சைவம் தான்னு படுத்தது. அப்புறம் தத்துவத்தை அறிவுச் சேகரமா செய்துகிட்டு போறதுல என்ன இருக்கு?”
“சைவ சித்தாந்தத்துல இந்த மாதிரி பயிற்சிகள் ஏதாவது வெகுஜனத்துக்கு சொல்லித்தரங்களா? வழிபாடற்ற பயிற்சி அதுல இருக்குதா?”
“இருக்குற மாதிரி எனக்கு தெரில. அப்படிப்பட்ட பயிற்சிகள் ஒரு காலத்துல இருந்துருக்க வேணும். அதன் கண்ணி எப்படியோ அறுந்து போச்சுங்கறது என்னோட ஊகம். இல்லைன்னா இவ்ளோ விலாவரியா எழுதீருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.”
“சித்தர் மரபு மாதிரி ஏதாவது…”
“சித்தர் மரபை பற்றி நான் தேடி போயிருக்கிறேன். எனக்கு நம்பத்தகுந்த ஆதாரம் எதுவும் என் கண்ணுக்கு படல. அதாவது அது வாழும் மரபாக இருந்திருந்தால் அதிலிருந்து ஒரு ஆசிரியர் புறப்பட்டு வந்திருப்பார்.”
“அப்போ சைவ ஆதீனங்கள்?”
“அவர்கள் மரபானவர்கள். நவீன காலத்துக்கு ஏத்த மாதிரி தங்களை மறுவரையறை செய்துகொள்ளவில்லை ன்னு நான் நினைக்கிறேன்.”
“மறுவரையறை செய்தா அந்த மரபான ஞானம் என்ன ஆகும்?”
“ஒன்னும் ஆகாது. உதாரணமா, இப்போ நான் சொல்லிக்கொடுக்குற methods கூட எதுவும் புதுசு இல்ல. தியானம் என்பது நவீன ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது கிடையாது. இந்த காலத்து ஆசிரியர்கள் இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி அந்த ஞானத்தை கடத்துறாங்க. அவ்வளவு தான். Diifferent packaging. It is catchy, it is trendy. So it is working.”
“இந்த மாதிரி உயர் ஆன்மீக அனுபவங்கள் எல்லாம் கஞ்சா lsd போன்ற வஸ்துக்களால உண்டாக்கிட முடியும்.”
“அப்படியா? எனக்கு தெரில…”
“என்ன சார் தெர்ல ன்னு சொல்லறீங்க?”
“சரி அப்படி எடுத்துக்கற வஸ்த்துக்களோட வீரியம் நேரம் ஆகா ஆகா குறைஞ்சுடுச்சுன்னா? வீரியம் குறையாத வஸ்த்து இந்த பயிற்சிகள்.”
“சரி நான் பயிற்சி பண்றேன். நீங்க பயிற்சி சொல்லித் தாறீங்க. இதுக்கு எதுக்கு ஆனந்த சைத்தன்யம் ன்னு ஒரு நிறுவனம்?”
“நிறுவனம் என்பது ஒரு வசதிக்குத்தான்.”
“அந்த நிறுவனம் வளந்துக்கிட்டு வருது. அது உங்கள மீறி வளந்துடுச்சுனா? அதுல இருந்தும் வெளியேறுவீங்களா?”
“நீ பின் தொடரும் நிழலின் குரல் சமீபமா வாசிச்சது எனக்கு தெரியும். படிச்சதையெல்லாம் இங்க கொண்டுவந்து போட்டு பேசுறது யார்? நீயா? நானா? நீ வீரபத்திர பிள்ளை அருணாச்சலத்தை எல்லாம் என்கிட்டே தேடாத. என்னை எந்த இயக்கமும் வெளீல தள்ளல. என்னோட பணி அந்த அந்த இயக்கங்களில் முடிந்தது. நான் வெளியே வந்தேன்.”
“அப்படீன்னா உங்க செயல்பாட்டை எப்படி புரிஞ்சிக்கிறது?”
“நான் அறிந்ததை அறிவிக்கிறேன்னு சொல்வது கொஞ்சம் அதிக பிரசங்கித்தனம். அதனால நான் எப்பவுமே சொல்றது, நான் கத்துக்கிட்டது பிறருக்கு சொல்லித்தருவது. என்னால சிறப்பா இந்த யோக தியான கருவிகளை சொல்லித்தர முடியும். யோக ஆசிரியராக எனக்கு பல வருட பயிற்சி இருக்கு. இதுதான் நான் செய்வது.”
“நீங்க சொல்றத பாத்தா, நீங்க ஏதோ பொன்னுலகத்தை கற்பனை பண்ற மாதிரி தெரியுது”
“பொன்னுலக கற்பனை யாருக்குத்தான் இல்லை. எனக்கும் இருக்கு. நான் தலைமை தாங்கி அந்த உலகத்தை பண்ணி காமிக்கணும் அப்படின்னு சிறுபிள்ளை தனமான கற்பனையெல்லாம் எனக்கு இல்ல. நான் செய்யக்கூடிய செயலை நான் தொடர்ந்து விடாப்பிடியா செய்யறேன். அதற்கான ஊக்கத்தை என் ஆசிரியர்களிடம் இருந்து நான் எடுத்துகிறேன். அவ்ளோ தான்.”
“சார், மேலான உலகத்தை உருவாக்கிட சோசலிசம் மாதிரியான உலக இயக்கங்கள் முயன்றும் முடியாம போயிருக்கிறத நாம பாக்குறோம். அப்படி இருக்கைல நீங்களும் உங்கள மாதிரி இருக்கவங்களும் உலகத்துக்கு யோகா தியானம் சொல்லிக்கொடுத்து இந்த உலகத்தை நல்ல முறைல மாத்திட முடியும்ன்னு நினைக்கிறீங்களா?”
சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “மனிதன் உள்ளும் புறமுமாக பரிசுத்தம் அடையணும். அவனது கட்டாயங்கள் ஆறணும். அதற்கு அப்புறம் நாம் கற்பனை பண்ற பொன்னுலகத்தை பத்தி பேசலாம்.”
நான் தலையை மட்டும் லேசாக பின்னிழுத்து கண்களை லேசாக சுருக்கி “ஜே ஜே சில குறிப்புகள் சமீபமா படிசீங்களோ?”
“ஹாஹா.. ஹாஹா.. கண்டு பிடிச்சிட்டியா?” என்றவர் தன்னை திரட்டிக்கொண்டு பேசினார். “நமக்கு உள்ளே ஆழமா தெரிஞ்ச ஒன்னை மொழியாக மாற்றத் தெரியாத அந்த ஒன்றை நாம் இலக்கியத்திலே அடையாளம் காண்கிறோம். அந்த மாதிரிதான் இது.”
“கரெக்ட் தான் சார். சில படைப்புகளை நாம படிக்கும் போது அதுக்கு ஆமா.. ஆமா.. சொல்லிப் படிப்போம். ஜே ஜே சில குறிப்புகள் எனக்கு அப்படித்தான் இருந்தது. சில படைப்புகளை “இல்லை.. இல்லை..ன்னு சொல்லிப் படிப்போம். பின் தொடரும் நிழலின் குரல் மாதிரி.”
“அப்படியா..” என்று கேட்டவர் தரையை பார்த்து தனக்குள் சிறிது ஆழ்ந்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். நிமிர்ந்து என்னைப் பார்த்தவர், “இயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனமா மாறிப்போகிறத அந்த நாவல்ல பாக்கலாம். அது சோகமான விஷயம். ஒருவேளை தவிர்க்க முடியாதோன்னு தோணும்.”
நான் அமைதியாக இருந்தேன். அவரும் அதையே செய்தார். “அந்த நாவல்ல இருந்து இப்போ வெளியே வந்திட்டியா?” என்று கேட்டார்.
“இல்ல சார்..’ என்றேன்
“மறுபடியும் குமரித்துறைவி படி. சரியாகிடும்.”
“இல்லீங்க… கொஞ்ச நாள் நான் அதிலேயே இருக்க விருப்பப்படுறேன்.”
எங்கள் இருவருக்கும் இடையில் ஏதோ அசௌகரியமான ஒன்று வந்து அமர்ந்தது போல் உணர்ந்தேன். “என்ன சார் டீ அதுக்குள்ள தீந்து போச்சு..” என்று கேட்டு அதை தாண்டி வர முயற்சி செய்தேன்.
“நல்ல டீ..” என்றார்.
இந்த உரையாடல் முழுதும் ஏதோ முரண்பாட்டின் அடிப்படையில் செல்வது போல் உணர்ந்தேன். உடன்பாடான கேள்விகள் என்னென்ன என்று நான் எழுதிக் கொண்டு வந்திருந்த தாளில் பார்த்தேன். “நீங்க ‘கற்கை நன்றே’ திட்டத்தை பத்தி எதுவுமே சொல்லல? சொல்லக்கூடாதுன்னு ஏதாவது தீர்மானமா?” என்று கேட்டேன்.
ஆசிரியர் நிமிர்ந்து அமர்ந்தார். “உனக்கு எல்லாம் தெரிஞ்சது தானே.. கற்கை நன்றே மூலம் நண்பர்கள் எல்லாரும் ஒன்னு சேர்ந்து ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி செய்றோம். இதுவரைக்கும் சுமார் ஐம்பது மாணவர்கள் இதனால பயன் அடைந்தவர்கள்.”
“உங்களுக்கு இந்த எண்ணம் முதல்ல எப்படி வந்தது?”
“நான் ஈடுபட்டுள்ள தொழில்துறைல பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறேன். எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் எதிர்கால சமூகத்தை நிர்ணயம் செய்யறவங்க. அவங்க ஒரு வகை, நான் ஈடுபட்டுள்ள யோகா நிகழ்ச்சி மூலமா பல ஊர்களில் கிராமங்களில் நான் சந்திக்கிற மனிதர்கள் இன்னொருவகை. நான் என்னை அடையாளப் படுத்திக்கொள்வது இந்த கிராம மனிதர்களிடம் தான். அடிப்படையான கல்வி அவர்களுக்கு கிடைத்தால் அவர்கள் வாழ்வு பல மடங்கு உயர்வதை நான் நேர்ல பார்த்துருக்கேன். அந்த இடைவெளி என் கண்ணுல படுது. நான் அதில செயல் செய்றேன். அந்த செயல் மூலமா நான் சந்தோசமாக இருக்கேன்.” அவர் கண்களில் ஈரப்பதம் நிறைவது போல் இருந்தது. எதோ சொல்ல வந்தவர் நிறுத்திக்கொண்டார்.
“அப்போ நீங்களும் புரட்சிதான் பண்றீங்க?”
மெலிதாக சிரித்து, “புரட்சிதான். சந்தேகம் வேண்டாம். இது கொஞ்சம் மெதுவா நடக்கிறப் புரட்சி. இந்த புரட்சியின் வித்தை நான் எனக்கு முன்னாடி செயல் செஞ்சவங்க கிட்ட இருந்து எடுத்துக்கிட்டேன். எனக்கு அடுத்து வர்றவங்களுக்கு இதை செய்வாங்க. நானும் இதில ஒரு கண்ணி. அவ்ளோதான்.”
நான், “கற்கை நன்றே வருடம் இரண்டு முறை விழாவாக செய்யறீங்க. ஏன் ஒருதடவை கூட எந்த எழுத்தாளரையும் அழைக்கவில்லை.?”
“வாழ்க்கைல ஏதோ ஒரு விதத்துல சாதிச்சவங்களை அழைத்து மாணவர்களிடம் பேச வைக்கிறேன். அது அந்த மாணவர்களுக்கு பெரிய ஊக்கமா இருக்கும். ஜெ வை அழைக்கும் எண்ணம் இருக்கு. அதைப் பத்தி நான் உன்கிட்ட ஏற்கனவே பேசி இருக்கேன்.”
நான் ஆமோதிக்கும் வண்ணம் தலையசைத்து புன்னகைத்தேன். ஆசிரியரும் புன்னகைத்தார்.
“காந்தி மீது உங்களுக்கு உள்ள ஈடுபாடு பத்தி?”
“எல்லாருக்கும் உள்ள ஈடுபாடுதான். சத்திய சோதனைல அவரை அறிமுகம் செஞ்சுக்கிட்டேன். இன்றைய காந்தி மூலம் ரொம்ப நெருங்கி வந்தேன். இப்போ சுனில் கிருஷ்ணனுடைய காந்தி டுடே இணையதளம் மூலம் மீண்டும் மீண்டும் காந்திய பல விதமா கண்டடைந்து கிட்டே இருக்கேன். காந்தி எதிர் தரப்பு இல்லாமல் போகனும்னு நினைக்க மாட்டார். அதனோடு உரையாட எப்போவும் ரெடியா இருப்பார். இதுகூட என்னோட பதில் இல்லை. நான் படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா அந்த பதிலை என்னோட பதிலா மாத்திக்கிட்டேன்.”
“உங்களோட எதிர்கால திட்டம்?”
“யோகா ஸ்டூடியோ ஒன்னு கட்டணும்… சரி விஜி, போலாமா? பேசிகிட்டு இருந்தா நேரம் போறதே தெரியமாட்டேங்குது. நெறைய அலுவல் இருக்கு. நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்குறது ஒரு போதை தான். அதுவும் நம்ல பத்தி நாமே பேசுறது பெரிய போதை தான்.” என்று விட்டு சிரித்தார்.
பில் கட்டிவிட்டு எழுந்தோம். புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வெளியே வந்து சிறிது நேரம் வேறு ஏது ஏதோ பேசிவிட்டு கிளம்பினார். அவர் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். சென்றுவிட்டார் என்று ஊர்ஜிதம் ஆனதும் மீண்டும் உள்ளே சென்று அமர்ந்தேன். உமா போனில் அழைத்தாள். எடுத்து இன்னும் ஆசிரியருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு துண்டித்தேன். அவசர அவசரமாக ஒரு டீ ஆர்டர் செய்தேன். வந்த டீயை நிதானமாக குடித்தேன்.
– விஜயகுமார் சம்மங்கரை
‘The Abyss’ – an English translation of Jeyamohan’s Tamil novel
The novel is full of such electric moments. The novel shocks us less with what it shows of the outside world; rather, it shocks us more with what it reveals to us of ourselves. There are very few books being written in India today that gets into this zone, with such intensity.
‘The Abyss’ – an English translation of Jeyamohan’s Tamil novel ‘Ezhaam Ulagam’ The Abyss – AmazonApril 12, 2023
ஆசிரியர்களும் மாணவர்களும் இன்று
அன்புள்ள ஜெ,
உங்கள் ‘சிஷ்யர்’ ஒருவர் எழுதிய குறிப்பு இது. மிகவும் முகம்சுழிக்க வைத்தது. ஆசிரியர்களைப் பற்றி இப்படி எழுதுபவர் எப்படி ஒரு நல்ல எழுத்தாளராக இருக்க முடியும்? இதை நீங்கள் சுட்டிக்காட்டவேண்டும். வாட்ஸப்பில் இந்த செய்தியை என் நண்பர் ஒருவர் பகிர்ந்தபோது கொதிப்பாக இருந்தது. நானும் ஓர் ஆசிரியன் என்பதனால் இதை எழுதுகிறேன்
என் கல்லூரி (பல்கலைக்கழகம்) ஆசிரியர்கள் பொறுப்பற்றவர்கள். முழுமையான மூடர்கள். அங்கு துணை வேந்தராக இருந்த ஆளின் மீது எனக்கு ஒரு வகையான அருவருப்பே இருந்தது. ‘டீன்’ என்ற சொல்லின் மீது மயிரளவும் மரியாதை இல்லாமல் போனதற்கு அங்கு ‘டீன்’ ஆக இருந்த ஆள் தான் காரணம். இன்றுவரை வாழ்க்கையில் பெரிய இழப்பாக நான் கருதுவது இத்தகைய மூடர்கள் என் கல்லூரி ஆசிரியர்களாக அமைந்ததுதான். வாழ்க்கை பற்றிய பல கசப்புகளை உருவாக்கியது அந்த மூடர் கூட்டம்தான் என்று இன்று யோசிக்கும்போது தோன்றுகிறது.
எஸ்.வைத்திலிங்கம்
அன்புள்ள வைத்திலிங்கம் அவர்களுக்கு,
அது என் நண்பர் சுரேஷ் பிரதீப் எழுதிய குறிப்பு. அவர் என் சிஷ்யர் அல்ல. அவர் அடுத்த தலைமுறை எழுத்தாளர். பொதுவாக இலக்கிய உலகில் மூத்த எழுத்தாளர்களிடமிருந்து ஊக்கம்பெறுவதும், அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் வழக்கம். அதேபோல அடுத்த தலைமுறையின் எழுத்தாளர்களில் கலைத்திறன் கொண்டவர்களை அடையாளப்படுத்தி முன்னிறுத்தி அவர்களுக்கு ஒரு தொடக்கத்தை உருவாக்குவது முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் வழக்கம். இது தலைமுறை தலைமுறையாக இவ்வாறுதான் நிகழ்ந்துவருகிறது. இது ஒன்றும் குருசீட உறவு அல்ல. அப்படிப்பட்ட கட்டுப்பாடோ, ஆதிக்கமோ இலக்கியத்தில் இருப்பதில்லை.
ஒருவரை ஆசிரியர் என உணரவேண்டியவர் தன்னை மாணவரென உணர்பவர் மட்டுமே. அது அவருடைய அந்தரங்கமான ஓர் உணர்வு. நான் ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, ஞானி, பி.கே.பாலகிருஷ்ணன் ஆகியோரை அப்படி எண்ணுகிறேன். அது என் உணர்வுநிலை மட்டுமே. இலக்கியத்தில் அது நிபந்தனையோ மாறாவழக்கமோ அல்ல. ஒருபோதும் எந்த எழுத்தாளரையும் இன்னொருவரின் நீட்சியாக, இன்னொருவருடன் இணைத்துப் பார்க்கக்கூடாது.
சுரேஷ் பிரதீப் நான் நடத்தும் இளம்வாசகர் சந்திப்பில் 2016ல் எனக்கு அறிமுகமானவர். என் தளத்தில் அவரை அறிமுகம் செய்தேன். அவருடைய வாழ்க்கைநோக்கும் அழகியலும் முற்றிலும் வேறானவை. அவற்றை அவர் எப்படி கண்டடைந்து கூர்மைப்படுத்திக் கொள்வது என்பதில் மட்டுமே என்னுடைய பங்களிப்பு சிறிது உள்ளது. இன்று தமிழின் முக்கியமான இளம்படைப்பாளி அவர்.
உங்களுக்கு வாசிக்கும் வழக்கம் இல்லாமலிருக்கலாம். வாட்சப் வழியாக செய்திகளை அறிபவராக இருக்கலாம். சுரேஷ் பிரதீப் யூடியூபில் நவீனத் தமிழிலக்கியத்தை மிக விரிவாக அறிமுகம் செய்து உரைகளை ஆற்றிக்கொண்டிருக்கிறார். இளம் வாசகர்களுக்கும், இலக்கிய அறிமுகம் தேடுபவர்களுக்கும் மிகவும் உதவியானவை அவை. ஆழ்ந்த இலக்கியவிவாதங்களில் ஈடுபடுபவர்களுக்கும் உகந்தவை. நீங்கள் தேடிப்பார்க்கலாம். அவரை புரிந்துகொள்ள முயலலாம். அந்தப்பின்னணியில் அவர் என்ன சொல்கிறார் என்று விளங்கிக்கொள்ளலாம். ( தமிழ் இலக்கிய உரைகள். சுரேஷ் பிரதீப்)
*
நான் தொடர்ச்சியாக இளம் வாசகர்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். இளையோரின் கடிதங்களை ஒவ்வொரு நாளும் பெறுகிறேன். திகைப்பூட்டும் உண்மை, அவர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு ஆசிரியர் என்றாலே கசப்பு என்பதே. அவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு நல்ல ஆசிரியரைக்கூட சந்தித்ததில்லை என்பது மட்டுமல்ல; தங்கள் வாழ்நாளில் சந்தித்த மிக அருவருப்பூட்டக்கூடிய, மிகக்கீழ்மையான, மிகக்கொடிய மனிதர்கள் ஆசிரியர்களே என எண்ணுகிறார்கள். பள்ளியிலும் கல்லூரியிலும் ஒரே நிலை. ஆனால் கல்லூரி ஆசிரியர்கள் மேல் மிகமிகக் கடுமையான கசப்பு உள்ளது.
மிகச் சிலநாட்களுக்கு முன்னர் சந்தித்த இறுதியான இளம்வாசகர் சந்திப்பிலும் அது சொல்லப்பட்டது. ஒரு வகுப்பு சுவாரசியமாக இருக்கமுடியும், கற்றலென்பது இனிய அனுபவமாக இருக்கமுடியும் என்பதையே முதல்முறையாகத் தெரிந்துகொள்வதாகச் சொன்னார்கள்.
என் அனுபவம் அப்படி அல்ல. திறனற்றவர்களும், சிறுமை கொண்டவர்களுமான ஆசிரியர்கள் சிலரை நான் அறிவேன். குறிப்பாக குமரிமாவட்ட மாணவர்கள் பள்ளிகளில் கடும் மதவெறுப்பை வெளிப்படுத்தும் ஆசிரியர்கள் சிலரையாவது பார்த்திருப்பார்கள். ஆனால் பெருமதிப்புக்குரிய வழிகாட்டிகளான ஆசிரியர்கள் எங்கள் வாழ்க்கையில் வந்துள்ளனர். இலக்கியத்திற்கு என்னை ஆற்றுப்படுத்திய பலர் உண்டு. என் பொறுப்பின்மைகளை மன்னித்து என்னை ஓர் எதிர்கால இலக்கியவாதி என்றே அணுகிய பேராசிரியர் மனோகரன் என்னுடைய நினைவில் நீடிப்பவர்.
இளையதலைமுறைக்கு ஏன் இந்த உளப்பதிவு உருவாகிறது? இன்றைய ஆசிரியர்கள், இன்றைய கல்விமுறை வகுப்பாளர்கள் யோசிக்கவேண்டிய விஷயம் இது. எல்லாவற்றிலும் ஏதாவது அரசியல்சரிகளைச் சொல்லிக்கொண்டு எகிறிக்குதிக்கும் போலிக்கும்பல்கள் இங்கே நிறையவே உண்டு. அவர்கள் உடனே பிலாக்காணத்தை ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் தெரியும். நான் பேசுவது உண்மையான ஆசிரியர்களிடம்
(முன்பொருமுறை அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் நடத்தை பற்றி ஒரு குறிப்பை எழுதியிருந்தேன். முகநூல் வம்பர்கள் பொங்கிக்குதித்தனர். ஆனால் சில மாதங்களிலேயே ஏராளமான செய்திகள் வரத்தொடங்கின. நான் சொன்னதை அதைவிட தீவிரமாகக் கல்வியமைச்சரே சொன்னார். ஆணைபிறப்பித்தார். நியாயப் பொங்கலாளர்கள் ஓசையே எழுப்பவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அதிகாரம் என்றால் என்னவென்று தெரியும். பொங்கல்கள் முழுக்க எழுத்தாளனுக்கு எதிராகவே. அந்த வெட்டிக்கும்பலைக் கடந்தே இங்கே அடிப்படைகளையே யோசிக்கவேண்டியிருக்கிறது.)
இன்றைய தலைமுறையினரில் கல்வி என்பது கடுமையான போட்டி நிறைந்ததாக ஆகிவிட்டது. இன்று கல்வி பயிற்றலுக்குப் பதில் தேர்வுக்குப் பயிற்சி அளித்தலே நிகழ்கிறது. ஆகவே கற்றலின்பமே மாணவர்களுக்கு இல்லை. இன்றைய கசப்புகளுக்கு அது முதன்மையான காரணம், மறுக்கவில்லை.
ஆனால் மேலும் பிரச்சினைகள் உள்ளன. முதன்மையானது, கற்பித்தலில் ஆர்வமே அற்றவர்கள் ஒரு வேலை என்ற அளவிலேயே ஆசிரியர் பணிக்கு வருவது. அத்துடன், பெரும்பணம் கையூட்டாகக் கொடுத்து ஆசிரியர்களாக ஆவது. சென்ற முப்பதாண்டுகளாகத் தமிழகத்தில் கையூட்டில்லாமல் ஆசிரியப்பணிக்கு செல்வது அரிதினும் அரிதாகிவிட்டது. கல்லூரி ஆசிரியப் பணிக்கு ஒருகோடி வரை இன்றைய விலை என்கிறார்கள்.
தனியார்க் கல்லூரிகளில் தலைகீழ் நிலைமை. ஓரு கடைநிலை அரசூழியர் வாங்கும் ஊதியத்தில் பத்திலொன்றுதான் அங்கே ஆசிரியரின் ஊதியம். அவர்கள் ஆசிரியர்களே அல்ல, கொத்தடிமைகள்.
கையூட்டு கொடுத்து ஆசிரியராகிறவர் ஆசிரியப்பணியையே எதிர்மறையாகப் பார்க்கிறார். நான் பணம்கொடுத்து வந்தவன், எனக்கு மேற்கொண்டு எந்தப் பொறுப்பும் இல்லை என நினைக்கிறார். லாபக்கணக்கு பார்க்கிறார். காலப்போக்கில் தன் வேலையையே வெறுக்கிறார். மாணவர்களை வெறுக்கிறார்.
கையூட்டுதான் ஆசிரியப்பணிக்கான ஒரே தகுதி என வரும்போது தகுதியானவர்களுக்கு வாய்ப்பு அமைவதில்லை. சில்லறை மனிதர்களுக்கு வாய்ப்பமைகிறது. அவர்களிடம் அறிவுத்திறனையோ, அர்ப்பணிப்பையோ எதிர்பார்க்கமுடியாது.
ஊதியம் மிகக்குறைவாக இருக்கையில் ஆசிரியரிடம் அர்ப்பணிப்பையோ தகுதியையோ எதிர்பார்க்க முடியாது. அவர்களின் உணர்வுநிலைகள் மிகையாக ஆவதைக்கூட நம்மால் தடுக்கமுடியாது.
ஆசிரியர்பணியில் இன்று முதன்முதலாக நிகழும் பணித்தேர்வு முதல் இறுதிவரை எந்த தகுதிப்பரிசீலனையும் இல்லை. ஆகவே ஆசிரியர்கள் பெரும்பாலும் வாசிப்போ, அடிப்படை அறிவோகூட அற்றவர்களாகவே இருக்கிறார்கள். கல்லூரி ஆசிரியர்கள் குறிப்பாக எதையுமே அறியும் ஆர்வமற்றவர்கள். அத்தகையோருக்கு ஒரு தாழ்வுணர்ச்சி, பாதுகாப்பின்மையுணர்ச்சி இருக்கிறது. அவர்கள்தான் கூர்மையான மாணவர்களை வெறுப்பவர்கள். அவர்களை அழிக்கக்கூட முயல்பவர்கள்.
உண்மையிலேயே ஒரு பெரிய பிரச்சினை கூர்கொண்டிருக்கிறது. மேலும் மேலும் வளர்கிறது. ஆசிரியமாணவ உறவே அற்றுப்போகும் ஒரு சமூகம் மிகப்பெரிய அறிவார்ந்த வீழ்ச்சியைச் சந்திக்கும். அதைச் சுட்டிக்காட்டவேண்டியது மட்டுமே எழுத்தாளனின் பணி.
ஆசிரியர்களிடம் இன்று எந்த அறிவுஜீவியும் பேசமுடியாது, அவர்கள் எதையுமே படிப்பதில்லை. அரசாணை மட்டுமே அவர்களிடம் சென்றுசேரும். ஆயினும் ஒன்று மட்டும் சொல்லவேண்டியிருக்கிறது. ஆசிரியர் பிற ஊழியர்களைப்போன்றவர் அல்ல. அவர் எதிர்காலத் தலைமுறைமுன் நின்றிருக்கிறார். அவரை கவனித்துக் கொண்டிருப்பவை வரும்காலத்தின் கண்கள். அவருடைய ஒவ்வொரு பிழையும், சிறுமையும் அடுத்த அரைநூற்றாண்டுக் காலத்திற்கு நினைவில் நீடிப்பவை. அந்த உணர்வாவது அவர்களுக்கு வேண்டும்.
ஜெ
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் என்றுதான் பரவலாக அறியப்படுகிறார். மனோன்மணியம் அவருடைய நாடகம். ஆனால் அவருடைய முதன்மைப் பங்களிப்பு தமிழிலக்கியத்திற்கு இலக்கியச் சான்றுகளைக் கொண்டு காலநிர்ணயம் செய்ததிலும், தமிழ்ப்பண்பாட்டை கல்வெட்டுச்செய்திகள் வழியாக ஆராய்ந்து எழுதும் முறைக்கு முன்னோடியாக அமைந்ததிலும்தான்
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை – தமிழ் விக்கி
தியானமுகாம், தில்லை – கடிதம்
2020ல் பெரியநாயக்கன்பாளையத்தில் புதிய வாசகர் சந்திப்பு நடந்தது. நான் வெகு நாட்களாக எதிர்பார்த்து நடந்த சந்திப்பு. அதில் பல பேர் கலந்து கொண்டார்கள். இன்று யோசித்துப் பார்த்தால் அந்த வகுப்பில் கலந்து கொண்ட பலர் இலக்கியத்திலும் பிற துறைகளிலும் பெரிய பெரிய செயல்களை முன்னெடுத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
உதாரணமாக ஸ்ரீனிவாஸ் மற்றும் பார்கவி இருவரும் இம்பர்வாரி என்ற அமைப்பை உருவாக்கி அதில் கம்பராமாயணம் தொடர்ந்து பயின்று வருகிறார்கள். இதுவரையில் சுமார் 3500 பாடல்களை முழுமையாக முடித்துள்ளார்கள். இன்னும் சில வருடங்களில் பத்தாயிரம் பாடல்களையும் பயின்று முடித்து விடுவார்கள்.
அதே வகுப்பில் எழுத்தாளர் ரம்யாவும் கலந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழ் விக்கிக்கு ஆற்றி வரும் பணிகள் நாம் அறிந்ததே. அவர் ஆரம்பித்த நீலி இதழ் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. மேலும் சில சிறுகதைகள் எழுதியுள்ளார். வெகு விரைவில் அது தொகுப்பாக வரும் என்று நினைக்கிறேன்.
வகுப்பில் எங்களுடன் கலந்து கொண்ட மற்றொருவர் ராஜேஷ் கண்ணன். அவர் புகைப்படம் எடுப்பதில் வல்லுனராக உருவாகியுள்ளார். இப்படி பலர் அந்த புதிய வாசகர் சந்திப்பிற்கு பிறகு சொல்லத் தகுந்த ஆளுமைகளாக உருவாகி கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஆதார ஊக்கத்தை அந்த வகுப்பில் இருந்து நாங்கள் அனைவரும் பெற்றுக் கொண்டோம்.
இதில் நான் முக்கியமாக கூற விரும்புவது தில்லை அவர்களைப் பற்றி. அவர் எனது யோக ஆசிரியர். பத்து வருடங்களுக்கு முன்பே அவரிடம் நான் யோகம் பயின்று உள்ளேன். புதிய வாசக சந்திப்பின் மூலம் அவரை மீண்டும் நான் அறிமுகம் செய்து கொண்டது எனது நல்லூழ் என்றே நினைக்கிறேன். அந்த வகுப்பிற்கு பிறகு தில்லை அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளேன் அவர் எனக்கு ஆசிரியராகவும் நண்பராகவும் இருக்கிறார். நாங்கள் இருவரும் சொல்முகம் மாதாந்திர கூடுகைக்கு இணைந்து சென்று வருவோம். மேலும் தங்களின் அனைத்து படைப்புகளையும் அவர் வாசித்துள்ளார். வெண்முரசை முழுமையாக படித்தவர். வெண்முரசு பற்றி என்னிடம் மணிக்கணக்கில் ஆர்வமாக பேசக் கூடியவர். அவர் பேசுவதை கேட்கவே பிரதிவாரம் அவரை சந்திக்கும் வழக்கம் எனக்கு உண்டு.
கடந்த 20 வருடங்களாக பல்வேறு யோக வகுப்புகளை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். இதற்காக பிரத்தியேக கட்டணம் ஏதும் அவர் பெறுவதாக எனக்குத் தெரியவில்லை. பல்வேறு இலவச வகுப்புகள் அவர் எடுப்பது எனக்கு தெரியும். இதெல்லாம் அவர் சொந்த ஆர்வத்தின் காரணமாக செய்து கொண்டு வருகிறார். தனக்கு கிடைத்ததை மற்றோருவருக்கு பகிரும் அவரது ஆர்வமும் அர்ப்பணிப்போம் வணங்கத் தக்கதாக நான் கருதுகிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று மணி நேரமாவது இதற்காக அவர் உழைக்கிறார். இதனால் கிடைக்கின்ற அகநிறைவையே இதற்கான ஊதியமாக அவர் கருதுகிறார் என்பதை நான் அருகில் இருந்து கண்டிருக்கிறேன்.
ஆனந்த சைதன்யம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் யோகம் பயிற்றுவித்து வருகிறார். மேலும் அந்த அமைப்பின் மூலம் பல ஏழை கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்திற்காக நிதியுதவி செய்து வருகிறார். அதற்கான நிதியை அவரும் அவருடைய நண்பர்களும் தங்களுடைய தனிப்பட்ட சேமிப்பிலிருந்தே செய்து வருகிறார்கள். தங்களது வருமானத்தில் ஒரு பெரும் தொகையை இதற்காகவே செலவிடுகிறார்கள். தன்னலமற்ற இந்த செயலை வெளியே இவர் சொல்வதே இல்லை.
இதை அனைத்தும் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்துகொண்டே செய்கிறார். நாளொன்றுக்கு சராசரியாக பனிரெண்டு முதல் பதினைந்து மணி நேரம் அவர் எதேனும் ஆக்கப்பூர்வ செயலுக்காகவே செலவிடுகிறார் என்பதை நான் அருகில் இருந்து கண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் நான் நேரமின்மை என்று குறைபட்டுக் கொள்வதே இல்லை.
ஒரு தகுதியுடைய மாணவனை தேர்வு செய்ய இவர் எடுத்துக்கொள்ளும் அவகாசமும் உழைப்பும் பெறுமதிப்பிற்குரியது. அந்த குழந்தை தமிழகத்தில் எங்கு இருந்தாலும் சென்று கண்டு வருகிறார். நல்ல மதிப்பெண் உடைய பல குழந்தைகள் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்விக்கட்டணம் இல்லாமையால் நின்று விடுகிறார்கள். தில்லை கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் விடுத்திக்கட்டணம், புத்தகங்கள், உடைகள் என்று ஏற்பாடு செய்கிறார்.
வருடம் இரண்டு முறை நடக்கும் இந்த ‘கற்கை நன்றே’ என்ற நிதியுதவி ஒரு நிகழ்ச்சியாக அல்லாமல் ஒரு விழாவாக கோவையில் நடைபெறுகிறது. அதற்காக மாணவர்களை தங்கள் பெற்றோருடன் கோவை வரவழைத்து அவர்களை சிறப்பாக உபசரித்து கல்விக்கான நிதியை அந்த மாணவர்கள் கையிலோ அல்லது அவர்களது கல்லூரி வங்கிக்கணக்கிலோ ஒப்படைக்கிறார்.
அவர்கள் உதவி பெறுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றாமல் அது ஒரு பெரும் கொண்டாட்டமாகவே நடைபெறுகிறது. கூட்டு தியானம், கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, வாசிப்புப் போட்டி, எழுத்துப்போட்டி, மதிய உணவு, அனுபவ பகிர்வு, மேற் கல்விக்கான கலந்தாலோசிப்பு என்று அந்த விழா ஒரு ஆக்கபூர்வ நிகழ்வாக இருக்கும். குறிப்பாக அந்த குழந்தைகள் வெளிப்படுத்தும் கல்விக்கான நல்வாழ்வுக்கான விருப்பு அவர்களது விழிகளில் தழலாடும். அன்று அந்தியில் அந்த குழந்தைகள் கண்ணீருடன் விடைபெறுவதை பல முறை கண்டிருக்கிறேன்.
நான் இதுவரை எந்த நிதியுதவியும் செய்ததில்லை. எனது பங்கு இந்த மகத்தான நிகழ்வில் வெறும் கைங்கரியம் என்ற அளவிலேயே இதுவரை இருந்து வந்துள்ளது. எனக்கு தில்லை அவர்கள் இந்த கைங்கரியத்தையே கர்ம யோகமாக சொல்லாமல் சொல்லிக் கொடுத்துள்ளார். இதனாலேயே அவர் எனக்கு ஆசிரியராக மாறிப்போனார்.
கல்விக்கான நிதியுதவி செய்யும் இவருக்கு கல்லூரி படிக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மூளையில் என்னதான் நடக்கிறது என்று நான் நினைப்பதுண்டு. நீங்கள் ஏன் இப்படி இருந்து என்னை போன்றோரை தொந்தரவு செய்கிறீர்கள்? பேசாமல் எங்களைப் போல் இருந்துவிட்டு போனால் என்ன? என்று நான் அடிக்கடி மனதிற்குள்ளேயே கேட்டுக்கொள்வேன். அவரிடம் ஏதேனும் குறை கண்டுபிடிக்க முடியுமா என்று நான் நினைப்பதுண்டு. முடியாமல் என்ன, கண்டிப்பாக முடியும். பூத்துக்குலுங்கும் மலர் தோட்டத்தில் முற்செடியை தேடிச்சென்றால் கிடைக்காமல் போகுமா என்ன?
வியாழனன்று மதியம் நான் தில்லை அவளின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றேன். சிறிது நேரத்திலேயே கதிர் மற்றும் ஹரி வந்து சேர்ந்தார்கள். ஹரியைப் பற்றி பிறகு கூறுகிறேன். யாருடைய காரில் செல்வதென்று சின்ன வாக்குவாதத்திற்கு பிறகு தில்லை அவர்களின் பழைய காரில் செல்லலாம் என்று முடிவானது. பூஜை சாமான்கள் , முப்பது பேர் அமர்ந்து செய்ய தகுந்த பெரிய ஜமுக்காளம், மைக், ஸ்பீக்கர் என்று எல்லாம் உள்ளே ஏற்றி அகல்யாவுக்கு டாட்டா காட்டி விட்டு புறப்பட்டோம். கதிருடன் சண்டையிடக்கூடாது என்ற சங்கல்பம் முப்பது கிலோமீட்டருக்குள்ளாகவே காலாவதியாகிப் போனது. ஆசிரியர் அருகில் இருக்கிறார் என்ற எண்ணமே எங்களை அடக்கி வாசிக்க வைத்தது. அவர் பெரும்பாலும் எங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டும் மட்டுப் படுத்திக்கொண்டும் வந்தார். ஹரி அமைதியாக கவனித்த வண்ணம் வந்தார்.
நிகழ்விடத்திற்கு அருகில் வரும்போதே நகரின் ஒழுங்கை கைவிட்டு வேறொரு ஒழுங்கிற்கு மனம் தயாராவதை உணர்ந்தேன். வந்து சேர்ந்ததும் அந்தியூரார் எங்களை வரவேற்றார். எனக்கும் கதிருக்கும் ஒரே அறை தான் வாய்த்தது. ஆசிரியரும் ஹரியும் ஒரு அறை எடுத்துக்கொண்டனர். பயணக் களைப்பை நீக்கியவுடன் நிகழ்வரங்கிற்கு நாங்கள் கொண்டு வந்த ஜாமானங்களை எடுத்து சென்றோம். ஆசிரியர் மைக் மற்றும் ஸ்பீக்கரை பொருத்தி சோதித்தார். ஹரி மேடையை சுத்தம் செய்து வெண்வஸ்த்திரம் விரித்து அதன் மீது விளக்கு பொருத்தி ஒரு சிறிய சந்நிதியை உருவாக்கினார். நானும் கதிரும் அரங்கை கூட்டி சுத்தம் செய்து, நாற்காலிகளை துடைத்து மூன்று வரிசைகளாக வைத்து, நிகழ்விற்கு தேவையில்லாத பொருட்களை அகற்றி வைத்தோம். வகுப்பிற்கு தேவையான ஒரு புறச்சூழல் இன்னும் இன்னும் மெருகேறி வருவதைக் கண்டோம்.
அறைக்கு சென்றதும் அன்றைய பயிற்சியை முடித்து விடுவோம் என்றார் ஹரி. ஆசிரியரும் ஹரியும் பாயை விரித்து அதில் வஜ்ராசனத்தில் அமர்ந்தனர். நானும் சேர்ந்து கொண்டேன். அன்று ஆசிரியருடன் எனது யோக பயிற்சியை சேர்ந்து செய்தேன். முடித்தவுடன் நான் செய்யும் சில தவறுகளை சரி செய்தார். எல்லாம் முடித்தவுடன் தான் தெரிந்தது அன்று சமையல் செய்பவர் வரவில்லை என்றும் வகுப்பிற்கு வந்திருந்த பாண்டுரங்கன் அவர்கள் சமையல் செய்து முடித்திருந்தார் என்றும். பாண்டுரங்கன் அன்று எங்களுக்கு அன்னமிட்டார்.
இரவுணவு முடித்து எல்லோரும் அவரவர் அறைக்கு சென்றார்கள். நாங்கள் ஆசிரியர் அறைக்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம், அவ்வப்போது நானும் கதிரும் வாக்குவாதம் செய்தோம். ஆசிரியர் முறைத்ததால் அமைதியானோம். அந்தியூரார் வந்தார். சுவாரசியமாகவும் சிரிப்பாகவும் பேசிக்கொண்டே சென்றோம். எப்படியோ சைவ சித்தாந்த மூல நூல் விவாதம் வந்தது. ஆசிரியருக்கு சைவ சித்தாந்தத்தின் மீது இவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று நான் இதுவரை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்று. அந்தியூராரும் ஆசிரியரும் சேர்ந்து ஒரு சிறிய வகுப்பையே அன்று எடுத்து முடித்தார்கள். நான் கதிர் ஹரி அன்று வாய்பொத்தி கவனித்துக்கொண்டிருந்தோம். அது நல்ல பாடம்.
நானும் கதிரும் எங்கள் அறைக்கு வந்து சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கினோம். இருவர் சண்டையிடுவதற்கு ஒரு பார்வையாளராவது தேவையல்லவா?
அடுத்தநாள் பத்து மணிக்கு வகுப்பு ஆரம்பித்தது. நாங்கள் இருபது பேர் இருந்தோம். ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். ஆசிரியர் யோகத்தைப் பற்றி சிறிய அறிமுகம் செய்து வைத்தார். எளிய முறை உடற்பயிற்சியில் ஆரம்பித்து, பிராணாயாமம், மற்றும் சில யோகா கருவிகள் எங்களுக்கு பயிற்றுவித்தார். கூட்டு தியானம், நுண்ணோக்கு பயிற்சி என்று முதல் நாள் சென்றதே தெரியவில்லை.
அடுத்த நாள் சில அகக்கருவிகள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்து அதில் பயிற்சி கொடுத்தார். முறையாக தியானம் நடப்பதற்கான கருவியை பயிற்றுவித்தார். நாங்கள் அனைவரும் அன்று தியானத்தில் அமர்ந்திருந்தோம். அது ஒரு பொண்ணனான அனுபவம். நான் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் ஆசிரியரால் பயிற்றுவிக்கப் பட்டுள்ளேன். பல ஆண்டுகள் யோகக் கருவிகளை பயன்படுத்தியும் வந்துள்ளேன். கண்கள் மூடி பல முறை அமர்ந்துள்ளேன். என் வாழ்நாளில் மொத்தமாக தியானம் இரண்டு முறை தான் நடந்துள்ளது. அதுவும் ஒரு சில வினாடிகள் மட்டும்தான். ஆனால் அது ஒரு தரிசனம். அது மட்டும் தான் நான் உண்மையில் அடைந்த தரிசனம். இனி யார் எத்தனை கோடி வார்த்தைகளில் தியானம் என்பது பொய் என்று சொன்னாலும் எனக்கு தெரியும் தியானம் என்பது என்னவென்று. அந்த ஒரு சில வினாடிகள் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.
தியான வகுப்பில் தியானம் நடந்ததா என்று கேட்டால், உறுதியாகச் சொல்ல முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இருக்கும் நிலையில் இருந்து மேலான நிலையில் கண்டிப்பாக இருந்தேன். இந்த தியான கருவிகள் தொடர்ந்து பயிற்சி செய்தால் இது வேலை செய்யும் என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்.
அமைதியாக இருந்த ஹரிக்கு அன்று தியானம் நடந்தது என்று என்னால் சொல்ல முடியும். அவருடைய பொலிவு அதை காட்டிக்கொடுத்தது.
இதற்கிடையில் பல கூட்டுத் தியானம் நடந்ததும். ஓஷோவின் டைனமிக் தியானத்தைப் பற்றி படிக்கையில், என்ன பைத்தியக்காரத்தனம் இது என்று நினைக்கத் தோன்றும். ஆனால் ஆசிரியர் அதை சரியான முறையில் எங்களை அதில் ஈடுபடுத்தினார். எத்தனை சொற்களினாலும் சொல்லிவிட முடியாத அனுபவம் தான். அதை சிறிய அனுபவம் என்றார் ஆசிரியர்.
கடைசி நாள் தியான கருவிகளை மீண்டும் பயிற்சி செய்து அதை எங்கள் மனதில் எழுதினார். ஒரு கூட்டு தியானத்திற்கு பிறகு குருபூஜை நடந்தது. இறுதியில் அவரது குரு பரம்பரைக்கு ஆசான்களுக்கு உங்களுக்கு, எங்களுக்கு என்று எல்லோருக்கும் நன்றி தெரிவித்து வகுப்பை முடித்தார். அனைவரும் பொலிவுடன் காணப்பட்டார்கள். மனித முகம் உண்மையிலேயே அழகானதுதான்.
மொத்தத்தில் இந்த மூன்று என்ன நடந்தது?மனதால் மனம் பார்க்க வைத்தார். மனதிற்கு அப்பால் உள்ள ஒரு வெளியை அடையாளம் காட்டினார். ஆசை காட்டினார். அது அங்கிருக்கிறது என்று இனி எங்கள் எல்லோருக்கும் தெரியும்.புகைப்படம் எடுத்து உணவுண்டு பிரியாவிடை பெற்றோம்.
ஏற்கனேவே ஹரியைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அவர் யோக சாதகர். இப்படியான ஒரு வகுப்பு நடக்கிறது என்பதை அறிந்து உதவிலாளராக தொண்டு செய்ய வந்தார். இந்த வகுப்புப்பிற்கு அவருடைய தொண்டு முக்கியமானதாக தெரிகிறது. பெரும்பாலான நேரம் அனைவரும் கண்மூடி அமர்ந்திருக்கும் நிலையில் எந்த இடையூறும் வராமல் இருக்க வேண்டும். பெரும்பாலானோர் முதல் முறை தியானம் செய்பவர்களாதலால் அவர்கள் எந்த அசௌகர்யமும் வந்துவிடாமல் பார்க்க வேண்டும். புறத்தில் நடக்கும் சிறு சத்தமோ தொந்தரவோ அவர்கள் அகவெளியில் இருந்து வெளியே வந்து விழுந்துவிடுவார்கள். அது நடக்காமல் பார்ததுக்கொள்ள வேண்டும்.
எங்களுக்கும் முன்னமே வந்து அரங்கை சுத்தம் செய்து விளக்கேற்றி சம்புராணி போட்டு காத்திருப்பார். வகுப்பு முடிந்து அனைவரும் சென்ற பிறகு அடுத்த நாளுக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வருவார். பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். அவரது அமைதியும் அமைந்த நிலையம் அவரோடு இருக்கையில் எங்களுக்கும் பற்றிக்கொள்ளும். அந்த மலை வாசஸ்த்தலம் அவருக்கு மிகவும் பிடித்த விட்டது. எல்லோரை விடவும் அவ்விடத்தில் மகிழ்திருந்தவர் அவரே.
அமைதியாகவே இருக்கிறார், அவருள் அவர் ஆழ்ந்திருக்கிறார், ஆகையால் நாங்கள் பேசுவது எதுவும் அவர் வரை சென்று சேர்வதில்லை என்று நினைத்திருந்தோம். திரும்பி வரும் வழியில் ‘கருத்து, எண்ணம் எண்ணங்களுக்கு இடையில் உருவாகும் இடைவெளி’ என்று ஏதோ விவாதித்துக் கொண்டு வந்தோம். அப்போது ஹரி தனது அவதானிப்பை சொன்னார். கதிர் பரவசத்தில் துள்ளி எழுந்துவிட்டார். அகவெளி அனுபவங்களில் நிரூபணவாதம் சாத்தியமே அதற்கான அடிப்படை விதிகளின் ஏற்புடைத்தன்மைதான் இங்கு பிரச்சனை. இங்குள்ள இன்றைய நிரூபணவாதம் வெகு சமீபத்தியது என்றார்.
நான் ஆசிரியரைப் பார்த்து “உங்கள் மாணவன் மீது உங்களுக்கு பெருமையாக இருக்கிறதா?” என்று கேட்டேன். அவர் “பெருமைதான், ஹரி இப்படி ஏதாவது பேசுவதினால் அல்ல அவர் தொடர்ந்து செய்துவரும் யோக சாதகத்தினால் நான் பெருமை கொள்கிறேன்” என்றார். புறவெளி அகவெளியை எப்படி மாற்றி அமைக்க முடியுமோ, அதேபோல் அகவெளி புறவெளியை மாற்றியமைக்கும் என்பதை ஹரி எங்களுக்கு அன்று சொல்லாமல் நிரூபித்தார்.
கோவை வந்து எல்லோரும் சொல்லிக்கொண்டு பிரிந்து சென்றோம். இதோடு வகுப்பு முடிந்ததா என்றால் இல்லை. பயிற்சியை சரிபார்த்துக்கொள்ள மேலும் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல மாதம் ஒருமுறை நேரிலும் ஆன்லைனிலும் சத்சங்கம் கூட்டுகிறார். அதற்கான அட்டவணை அனுப்பி வைத்தார். ஆர்வமுள்ளவர்களுக்கு மேல்நிலை வகுப்பு அவரிடம் செய்யலாம்.
ஒரு சொல் கூடாமலும் குறையாமலும் தன் எல்லைக்குள் நின்று ஆசிரியர் எங்களுக்கு சிறப்பாக பயிற்றுவித்தார். அவர்க்கு எங்கள் நன்றிகள். இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்த உங்களுக்கும் எங்கள் நன்றிகள்.
ஒவ்வொருவருக்குள்ளும் திரிசிரன் இருக்கிறான். முத்தலையன். ஒரு தலையன் ஓயாது செயல் புரிகிறான். இன்னொரு தலையன் ஓயாது போகத்தில் மயங்குகிறான். மூன்றாவது தலையன் இவர்கள் இருவரையும் ஓயாது பார்த்துக்கொண்டிருக்கிறான். இந்த மூன்று நாட்களிலும் இந்த மூன்றாவது தலையனை சிறிது அறிமுகம் செய்துகொண்டோம். அறிந்துகொண்டோம்.
விஜயகுமார் சம்மங்கரை
விடுதலை, இடதுசாரிகள் – கடிதம்
திருமாவும் விடுதலை சினிமாவும்
வணக்கம் அய்யா ,
2020 ல் எம்.எல். அமைப்புகளின் தலைமைச் சிந்தனையாளரும், எம்.எல் அமைப்புகளையே நிறுவியவருமான மருதையன் அவதூறு செய்யப்பட்டு, ஆளுமைக்கொலை செய்யப்பட்டு இன்று உளமொடுங்கி அமர்ந்திருப்பதை நினைவுகூருங்கள்.
இந்த கட்டுரையில் மருதையன் பற்றி சொல்லி இருப்பது தவறான கருத்தாகும். இன் றைக்கு நடுநிலையோடு அரசியல் கருத்துக்களை படிக்க, தெரிந்து கொள்ள உங்கள் தளமே பயன்படுகிறது (point of reference). பல்லாயிரம் இளைஞர்கள் வரலாறை உங்கள் வழியாகவே அறிந்து கொள்கிறார்கள் . கீழே உள்ள சுட்டி soc, மகஇக ஆகியவற்றின் வரலாற்றை விளக்குகிறது . (பார்க்க)
மாலெ அமைப்புகள், கருத்துக்களோடு பரிச்சயம் உடையவர்கள் நன்கு அறிந்த விவரங்கள் தான் மேற்கண்ட சுட்டியில் உள்ளவை.
ஆளுமை கொலை பற்றிய கருத்து முற்றிலும் உண்மையானதே. பின் தொடரும் நிழலின் குரல் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை எந்த மார்க்சிய அமைப்பும் (வழக்கமான முத்திரை குத்துதல் தாண்டி ) பதில் சொல்லவில்லை. அவர்களுக்கு நாவல் எழுப்பும் கேள்விகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு நுண்உணர்வு இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது
பிரசன்னா
துணைவன்: மின்னூல் வாங்க துணைவன் நூல் வாங்கஅன்புள்ள ஜெ
உங்கள் கட்டுரை மிக விரிவான ஒரு பார்வையை அளிக்கிறது. உண்மையில் 37 வயதான எனக்கே இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியும் மாறிமாறி கொலை செய்துகொண்டதும், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி நக்சலைட் வேட்டையில் காங்கிரஸுக்கு ஆதரவளித்ததும் எல்லாம் புதிய செய்திகள்.
விடுதலை சினிமா வெவ்வேறு காலகட்டங்களை இணைக்கிறது என்பதே எனக்கு புதிய செய்திதான். 1980களில் எம்.எல் குழுக்கள் தமிழகத்தில் செயல்பட்டன. வாச்சாத்தி 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் நடைபெற்றது. அதைக்கூட இங்கே பேசுபவர்கள் வெளிப்படுத்துவதில்லை. வாச்சாத்தி சம்பவத்துக்கு சிபிஎம் தான் முன்னணியில் நின்று போராடியது. அந்த அறிக்கையை ஒட்டியே வாச்சாத்தி என்ற சினிமாவும் வந்துள்ளது. அதையெல்லாம் ஒட்டியே விடுதலை சினிமா எடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் தெரியாமல் வாச்சாத்தி விஷயத்தை எதிர்த்து எம்.எல் குழுவினர் போராடினர் என்றும், வீரப்பன் வேட்டையில் நிகழ்ந்தவை எல்லாம் நாவல்கள் வழியாகத்தான் வெளியே வந்தன என்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு விரிவான சித்திரத்தை அளித்தமைக்கு நன்றி
ஜே.சிவபாலன்
An excerpt from ‘The Abyss’
Pothivelu Pandaram swayed as he got up. He steadied himself for a second by gripping the wooden frame around the bed from which the mosquito net hung. Once his dizziness passed, he groped his way along the wall to the right to fetch the matchbox he usually kept in the crescent-shaped hollow gouged into the wall, when his foot made contact with a small copper water-pot at the foot of the bed. It toppled over with a clang and rolled noisily across the floor.
An excerpt from ‘The Abyss’, by Jeyamohan, translated from the Tamil by Suchitra Ramachandran.The Abyss – Amazon
April 11, 2023
தும்பி நிதியுதவி
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,சிறுவர் இலக்கிய எழுத்தாளர் வாண்டுமாமா (வி.கிருஷ்ணமூர்த்தி) அவர்களை அவரது இறுதிக்காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்துசென்று அவ்வப்போது சந்தித்து வந்தோம். சென்னையில் இருந்த அவருடைய வீட்டில் அந்த சந்திப்புகள் நிகழ்ந்தன. அங்கு நிகழ்ந்த உரையாடல்கள் அனைத்திலும் தனது அகவிருப்பமாக தெரிவித்த கனவு ஒன்றே ஒன்றுதான். ‘குழந்தைகளுக்கான நல்ல தரமான கதைப்புத்தகம் தமிழில் அச்சாக மாத இதழாகவோ, வார இதழாகவோ வெளிவர வேண்டும். நிச்சயம் அது வண்ணப்புத்தகமாக உருவாக்கப்பட வேண்டும். அதில் சமரசமே கூடாது. உலக உருண்டையில் எங்கு நல்ல கதை இருந்தாலும் அதை நம் குழந்தைகள் தமிழில் வாசித்து அறிய வேண்டும். கற்பனையும் மாயவுலகும் நம் பிள்ளைகளிடம் துளிர்விட்டு காடாகப் பரவ வேண்டும். எனது இறுதிமூச்சு அந்தப் பிரார்த்தனையில்தான் கழிகிறது’ என்றுரைத்து கண்கலங்கினார் வாண்டுமாமா.புற்றுநோய் உயிர்த்திசுக்களைத் தின்றுகொண்டிருந்த ஓர் படைப்பாளியின் இறுதிக்கால வார்த்தைகள் எங்களை கலங்கடித்தது. அறுபதாண்டுகளுக்கும் மேலாக இதழியலில் பணியாற்றிய ஓர் மூத்த ஆசிரியமனதின் ஆத்மக்கட்டளை என்றே நாங்களனைவரும் அதை உளமாற ஏற்றுக்கொண்டோம். அந்தக் கனவின் நிறைவேற்றமாகவே தும்பி குழந்தைகள் மாத இதழைத் துவக்கினோம். இடைநின்றுவிடாத ஓர் அச்சிதழ் முயற்சியாக இதை தமிழில் நிகழ்த்திட வேண்டும் என்கிற தவிப்பில், இந்தியாவில் குழந்தைகளுக்காகச் செயலாற்றும் படைப்பாளுமைகளை நேரில்சென்று சந்தித்து அவர்களது அனுபவ அறிவுரைகளைக் கேட்டுப்பெற்றோம்.இந்திய அறிவியலாளர் பத்மஸ்ரீ அரவிந்த் குப்தா போன்ற மூத்த ஆசிரியர்களின் துணையிருப்பும் வழிநடத்துதலும் தும்பி இதழுக்கு திசைதிறந்தது. ‘விதவிதமான நிலப்பரப்புகளை, வெவ்வேறு வாழ்வவுச்சூழல்களை, பூகோளத்தின் எண்ணற்ற உயிரினங்களை முழுவண்ண ஓவியங்களாக வெளிப்படுத்தும் கதைகளாக அச்சுப்படுத்தலாம்’ என்பதே அவர்களின் முதற்கட்ட அறிவுறுத்தலாக இருந்தது. வண்ணம் என்பதுதான் இவ்விதழின் பிரதானமாக இருத்தல் வேண்டும் என்கிற முடிவை அதன்பொருட்டே நாங்களடைந்தோம். குழந்தைகளின் வாசிப்புலகு சார்ந்த நிறைய வருடங்கள் களப்பணியாற்றிய ஆசிரியர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிகளில் கதைகளை ஒவ்வொரு மாதமும் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும் புத்தகமாக தும்பி இதழை உருவாக்குவது என நண்பர்கள்கூடி முடிவுசெய்து அச்சாக்கத் தொடங்கினோம்.இதுவரையில் எழுபது இதழ்கள் தும்பியில் வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு இதழையும் நினைத்தவாறு அச்சுப்படுத்தி வெளியிடுவதற்கான உற்பத்திச் செலவு, பதிப்பக இடத்திற்கான வாடகை, பணிசெய்யும் நண்பர்களுக்கான மாதாந்திரத் தொகை, தூதஞ்சல் செலவுகள் என தும்பி இதழ் அச்சில் நிகழ்வதற்கு பெருந்தொகை செலவாகிறது. சமரசமின்றி தரமான காகிதத்தில், தேர்ந்த வடிவமைப்பு நேர்த்தியில் முழுவண்ணமாக இவ்விதழ் அச்சாகிறது. முன்பக்க ஓவிய அச்சு பின்பக்கம் பதியாதவாறும், பல ஆண்டுகள் வரைக்கும் ஓவியங்கள் நிறமிழக்காமலும் நீடிக்க அச்சுக்காகித தேர்வு என்பது மறுதலிக்க முடியாத அவசியத் தேவையாக மாறிவிட்டது.ஒருசில கதைகளுக்கான ஓவியங்களை ஓவியர்களிடம் வரைந்துபெற்று அச்சாக்க முயலும்போது அவர்களுக்கான அடிப்படை ஊதியச்செலவு எங்களால் தொடர்ந்து அளிக்கக்கூடியதாக இல்லை. ஆகவே, தும்பி இதழுக்காக ஒரு ஓவியரைத் தொடர்ந்து தக்கவைக்க இயலாத சூழ்நிலைதான் யதார்த்தமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் இந்த அழுத்தங்களை வென்றுகடந்து தும்பியை குழந்தைகளிடம் சென்றுசேர்ப்பிக்க நண்பர்களிடம் உதவிகளையும் கடனையும் தேடித்திரட்டியே சாத்தியப்படுத்துகிறோம். தாமதம் ஏற்பட்டாலும்கூட, பிரதிமாதம் இவ்விதழை வெளியிடுவது என்பதே பெரும் சவாலாகத்தான் இன்றளவும் உள்ளது.இத்தகைய நெருக்கடிச்சூழலிலும்கூட, தும்பி இதழை தெலுங்கு மொழியில் வெளியிடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு சிலமாதங்களாக தெலுங்கில் தும்பி இதழ் வெளியாகி வருகிறது. மேலும், விழித்திறனற்ற குழந்தைகள் விரல்தடவி வாசித்தறியும் பிரெய்ல் அச்சுமுறையிலும் தும்பியின் சில கதைகள் அச்சாக்கப்பட்டு இலங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள பார்வையற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன. ‘கண்பார்வையற்ற பிள்ளைகளுக்கான ப்ரெய்ல் மாத இதழ்’ எனும் தீராக்கனவு இன்னும் பரிசோதனை முயற்சி என்றளவிலேயே நீடிக்கிறது. இந்தியச் சூழலில் வடிவமைப்பு, அச்சாக்கம் எனும் செயற்பாடுகளின்வழி நாம் நினைத்த கலை – அழகியல் வெளிப்பாடுகளை அடைவதற்கு அதற்குரிய தொகையை தந்தாகவேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது.தும்பி இதழ் துவங்கப்பட்டு ஏழு ஆண்டுகளாகிவிட்ட சூழ்நிலையில், அவ்வப்போது பெரும் கடன் நெருக்கடிகளை ஏற்பதும் தவிர்க்கமுடியாத ஒன்றாக நீடிக்கிறது. இதற்குமுன்பு, அதுபோலான இரு இக்கட்டுச் சூழ்நிலைகளில் பொதுவெளியில் ‘மீண்டெழ’ எனும் உதவிகேட்பு வாயிலாக நண்பர்களின் ஒருமித்த துணைநிற்றலும் உதவியளிப்புமே எங்களைக் காப்பாற்றி வந்திருக்கிறது.தற்போது, தும்பி இதழ் அத்தகையதொரு பெரும் கடன்சுமையை மீண்டும் எட்டியிருக்கிறது. தொகை ரீதியாக இதுவும் எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றுதான். தும்பி இதழுக்கான சந்தா எண்ணிக்கையும் நினைத்தவாறு கைகொடுக்கவில்லை. தமிழ் வாசிப்புலகில் சிறார் இதழுக்கு இது நேரக்கூடியதுதான் என்பதே பொதுவிதியாக உள்ளது. அண்டைய மாநிலமான கேரளாவில் குழந்தைகளுக்கு அத்தனை சிறார் இதழ் முயற்சிகள் பல்வேறு வடிவங்களில் நிகழ்கின்றன. ஆனால், தமிழில் ஒவ்வொரு சிறாரிதழும் தன்னிருப்பைத் தக்கவைப்பதற்குப் பேராடுவதே வழமையாகிவிட்டது. ஆனாலும், தும்பி இதழ் கூட்டுழைப்பின் பகிர்வாலும், நம்பிக்கை கொண்ட மனிதர்களின் நல்லுதவியாலும் தன் பற்றுக்கொடியை இக்கணம்வரை பற்றிக்கொண்டு வளர்ந்துவருகிறது.ஆனந்த விகடன் போன்ற முன்னோடி நிறுவனங்கள் சுட்டி விகடன் போன்ற சிறந்த இதழ்களை நிறுத்திவிடுவதும், கோகுலம் போன்ற நெடுங்கால இதழ்கள் உரிய சந்தாக்கள் இல்லாததால் கைவிடப்படுவதும் தமிழ் இதழியலில் சமகால யதார்த்தம். இந்தப் பொருளாதார அழுத்தங்களைத் தாங்கியே தும்பி இதழும் தத்தளித்து ஒவ்வொருமுறையும் கரைசேர்கிறது. இம்முறையும் கரைசேர நண்பர்கள் கரமிணைவு ஒன்றுதான் உறுதுணை என்று நாங்கள் நம்புகிறோம். மீளமீள பொதுவெளி உதவிகளின் வழியே அச்சில் சாத்தியமாகும் இத்தகைய இதழ் முயற்சிகள் அடுத்த தலைமுறையிலாவது அரசாங்கப் பங்களிப்புடன் நிகழவேண்டும் என்கிற கனவும் தவிப்பும் எஞ்சுகிறது.எனவே, நண்பர்கள் மற்றும் அமைப்புகளின் உதவியளிப்பு தும்பிக்கு நிகழ்ந்தால் சமகால பொருளியல் இடர்களிலிருந்து மீட்சியடைந்து தொடர்ந்து அச்சாகும் வாய்ப்பு உருவாகும். தமிழகத்தில் அத்தனை அரசுப்பள்ளிகளும் குழந்தைகள் சார்ந்த நலனமைப்புகளும் உள்ளன. ஆகவே, அத்தகைய பள்ளிக் குழந்தைகளுக்கு தனித்தனியாக தும்பி இதழ் சென்றடைய, இயன்ற தோழமைகள் அனைவரும் உதவ வேண்டுகிறோம். ஓரிரு சந்தாக்கள் என்றளவினைத் தாண்டி ‘கூட்டுச்சந்தா’ என்ற முன்னெடுப்பு மூலம் பள்ளிகளுக்கோ சிறாரமைப்புகளுக்கோ மொத்தமாக தும்பி இதழ்களை வழங்கும் முயற்சிக்கு எல்லோரின் பரிந்துரையையும் வேண்டுகிறோம். நிதிப்பங்களிப்பு செய்தவரின் பெயரிலேயே இதழ்களை குழந்தைகளிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பினையும் இத்துடன் உறுதியளிக்கிறோம்.நன்கொடை வாயிலாக தும்பி இதழுக்குத் துணைநிற்கும் நண்பர்களின் பேருதவியை வேண்டிநிற்கிறோம். தனிநபராகவோ நிறுவனப் பங்களிப்பாகவோ தும்பிக்கு நிதியளிக்க 80G வருமான வரிவிலக்கு சான்றிதழ் குக்கூ காட்டுப்பள்ளி வங்கிக்கணக்கில் நடைமுறையில் உள்ளது. ஆகவே, கூட்டுச்சந்தா முறையிலோ அல்லது குக்கூ குழந்தைகள் இயக்கத்திற்கான நிதப்பங்களிப்பு மூலமாகவோ தோழமைகள் தங்கள் உதவிக்கரத்தை அளிக்கலாம். பெற்றடையும் ஒவ்வொரு சிறுதொகைக்கான நன்றிக்கடனையும் நிச்சயம் செயல்வழியாக நிறைவேற்றக் காத்திருக்கிறது தும்பி.குக்கூ காட்டுப்பள்ளி, தன்னறம் பதிப்பகம், தும்பி சிறார் இதழ் வெளியீடு உள்ளிட்ட முன்னெடுப்புகளின் மூலம் திரள்கிற தொகை அனைத்தும் பல்வேறு நிகழ்வுகளுக்காகச் செலவிடப்படுகிறது என்பதையும் அறியச்செய்ய விரும்புகிறோம். அதாவது, தன்னறம் இலக்கிய விருது, குக்கூ முகம் விருது ஆகிய இலக்கிய நிகழ்வுக்கான விருதுத்தொகை மற்றும் நிகழ்வுச்செலவுகள், மூத்த எழுத்தாளர்களின் நெருக்கடிச்சூழலில் உதவிபகிர்வது, விலையில்லா புத்தகப் பிரதிகளை வாசகர்களுக்கு அனுப்புவது… இம்மாதிரியான அகநிறைவுச் செயல்பாடுகளுக்கே நாங்களடைகிற பொருளியல் தொகைகள் கரைகின்றன. எனவேதான் மீளமீள உதவிகளின் நீட்சியைச் சார்ந்தே நாங்கள் இயங்கவேண்டியுள்ளது.பூந்தளிர் எனும் சிறார் இதழை தொழில்நுட்ப வளர்ச்சி பெருமளவு இல்லாத முந்தைய காலகட்டத்திலும்கூட, வாண்டுமாமா மிகச்சிறந்த அச்சு இதழாகக் கொண்டுவந்தார். இன்றிருக்கும் பல ஆளுமைகளின் முதல் ஈர்ப்புவாசிப்பு பூந்தளிரில் துளிர்த்தது. துணை ஆசிரியராக, ஓவியராக, இதழ் வடிவமைப்பாளராக, மொழிபெயர்ப்பாளராக, இன்னும் எத்தனையோ பங்களிப்பின் வாயிலாக பூந்தளிர் இதழின் தொடர் வருகைக்காகத் தன்னை முற்றளித்துக் காற்றில்கரைந்த வாண்டுமாமாவின் அர்ப்பணிப்பினை தொழுது வணங்கி தும்பி இதழ் தொடர்ந்த அச்சில் நிகழ உங்கள் உதவியைப் பணிவுடன் வேண்டுகிறோம். வாண்டுமாமா போன்ற பேராசானின் சொற்களை எங்களின் இந்தக் கையேந்தலும் காப்பாற்றி நிறைவேற்றும் என தீர்க்கமாக நம்புகிறோம்.தோழமைகள் தும்பி இதழுக்குத் துணைநில்லுங்கள்!~தும்பி கூட்டுச்சந்தா நிதிப்பங்களிப்புக்கான விபரங்கள்:தும்பி ஆண்டுசந்தா (தமிழகம்) : ரூ 1000தும்பி சந்தா (பிறமாநிலம்) : ரூ 1250THUMBICurrent A/c no: 59510200000031Bank Name – Bank of BarodaCity – ERODEBranch – MoolapalayamIFS Code – BARB0MOOLAP (Fifth letter is “Zero”)Gpay : 9843870059—80G வருமான வரிவிலக்கு பெறும் நிதிப்பங்களிப்புக்கான விபரங்கள்: CuckooAccount no : 6762513706Bank : Indian BankBranch : SingarapettaiIFSC code : IDIB000S062MICR code : 635019022(For clarifications please mail to cuckoochildren@gmail.com or call on +91 82702 22007)~நன்றிகளுடன்,தும்பி சிறார் இதழ்9843870059www.thumbigal.com
இடித்துரைப்போர்
தங்களின் அறம் தொகுப்பு, ஊமைச்செந்நாய் சிறுகதை தொகுப்பு படித்திருக்கிறேன். இரவு, வான் நெசவு, குமரித்துறைவி, காடு வாங்கி வைத்திருக்கிறேன். வெண்முரசு முதற்கனல் வாசிப்பு முடியும் தருவாயில் உள்ளது. என் வாசிப்பு விரிவடைந்தவரை நாஞ்சில் நாடன், வண்ணதாசன், லஷ்மி மணிவண்ணன், யூமா வாசுகி,திருச்செந்தாழை ஆகியோரின் படைப்புகள் என்னை செறிவூட்டுவதாய் நம்புகிறேன். தங்களின் தெளிவான இயங்குதளம் வியப்பு என்று ஒற்றை சொல்லில் கடக்க இயலாது. ஆளுமைத்திறன் கண்டு நான் வியந்தவர்களில் தாங்களும் , ஜக்கிவாசுதேவும் அடக்கம்.
என்னுடைய கேள்வி : அறிவுசார் இயக்கம் ஒன்றை வழிநடத்திச் செல்லும் தங்களுக்கு / தங்களை போன்றோருக்கு உங்களை சுற்றி உள்ளவர்களில் ‘கடிந்து அறிவுரை சொல்பவர்’ எவரேனும் உள்ளனரா? இல்லை சொல்வன யாவற்றையும் தொழுது பின்செல்பவர்களா யாவரும். ஏனெனில் எவ்வளவு அறிவுசார்ந்த இயக்கம் என்றாலும் அதில் துதிபாடும் மனிதர்கள் இருப்பார்கள். இசைபட வாழ யாருக்கும் தயக்கம் இருக்காது. தாங்களும் அறிவீர்கள் ‘ இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்….திருக்குறளை. அப்படி கடிந்து அறிவுரை சொல்பவர்’ எவரும் இல்லாத அல்லது இருந்தும் சொல்லாத நிகழ்வுகளில் ஒருவர் தான் சொல்வது யாவும் சரி என எண்ணத் தோன்றும் அல்லவா. அம்மாதிரியான தருணங்களில் தங்களின் எண்ணங்களை அகத்தணிக்கை எவ்வாறு செய்கிறீர்கள்?
அன்புடன்
ம.பார்த்திபன்
காரைக்கால்
***
அன்புள்ள பார்த்திபன்,
நான் ஓர் அறிவியக்கத்தை தொடங்கி இன்று அது விரியத்தொடங்கியுள்ளது என்பது உண்மை. ஆனால் அதன் ‘தலைவன்’ அல்ல நான். அதில் என்னுடன் இருப்பவர்கள் என் தொண்டர்களும் அல்ல. மிக வயது குறைந்தவர்கள்கூட நண்பர்கள்தான்.
இந்த அறிவியக்கம் ஓர் இயக்கமே ஒழிய, அமைப்பு அல்ல. அமைப்புசார்ந்த பொறுப்புகள், பதவிகள் இங்கில்லை. எல்லாரும் இணையானவர்களே. எவருக்கும் தனியான இடமோ , எந்தவகையான மேல் கீழ் அடுக்கோ இல்லை.
ஆகவே தலைமைவழிபாடு, அடிபணிதல் என்பதெல்லாம் இல்லை. ஒரு முறை விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்த எவரும் அதை உணர்ந்துவிடமுடியும். இங்கே நான் பிறருடன் ஒருவனாகவே இருக்கிறேன்.
ஆகவே ‘இடித்துரைப்பதை’ ஏறத்தாழ எல்லாருமே எப்போதுமே செய்துவருகிறார்கள். இடித்துரைப்பதையே முழுநேர வேலையாகச் செய்துவருபவர் நண்பர் கிருஷ்ணன் – எல்லாரையும். அதைக்கண்டு சிதறி ஓடியபலர் உண்டு. எங்கள் வட்டத்திற்கு வெளியே உள்ள எழுத்தாளர்கள் உட்பட. அதையே மென்மையாகச் சிரித்தபடி செய்யும் ராஜகோபாலன் ஜானகிராமன் அனைவராலும் கொண்டாடப்படுகிறார். குவிஸ் செந்தில், ராம்குமார், வழக்கறிஞர் செந்தில், அரங்கசாமி,ஆஸ்டின் சௌந்தர் ஆகியவர்கள் எப்போதுமே அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் வழங்குபவர்கள்.
ஆனால் இந்த இயக்கத்தின் செயல்முறைகள் என்னால் முன்னெடுக்கப்படுவன அல்ல. நான் எதையுமே செய்வதில்லை என்பதே உண்மை. ஒவ்வொருவரும் அவரவர் களத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும் வழிகாட்டிக்கொண்டும் செயல்படுகிறார்கள். ஆகவே எனக்கு ‘ஆலோசனை’ சொல்லவேண்டிய தேவை பெரும்பாலும் எழுவதில்லை. நான் எழுதுவதுடன் சரி. அதிலும் எப்போதும் ஸ்ரீனிவாசன்- சுதா இணையரின் வழிகாட்டுதல் உண்டு. தனிப்பட்ட முறையில் யோகா குரு சௌந்தரின் வழிகாட்டுதல் உண்டு. பொருளியல் ஆலோசனைகள் உட்பட.
பலருடைய ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் இடித்துரைகள் வழியாகவே இது செயல்படுகிறது என்பதற்கு முதன்மைச் சான்று பதினைந்தாண்டுகளாக மேலும் மேலும் தீவிரம்கொண்டபடியே இந்த அமைப்பு வளர்கிறது என்பதுதான். தமிழ்ச்சூழலில் அப்படி எத்தனை கலாச்சார அமைப்புகள் வளர்ச்சியடைந்துள்ளன என்பதை கணக்கிட்டுப்பாருங்கள். பிளவுகள், கசப்புகள் இல்லாத அமைப்புகள் அனேகமாக இல்லை என்பதைக் காண்பீர்கள்.
ஏனென்றால் அதிகாரப்படிநிலை இல்லை. எல்லாருமே நண்பர்கள்தான். எந்தச் சந்திப்பும் சிரிப்புக் கொண்டாட்டமாக மட்டுமே அமையவேண்டும், நல்ல நினைவுகள் மட்டுமே எஞ்சவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இடித்துரைப்பதென்பது ஒருபோதும் உளக்கசப்பு, ஆணவப்பூசலுக்கு இட்டுச்செல்லலாகாது என்பதில் மேலும் உறுதிகொண்டிருக்கிறோம்
ஜெ
இராம. சுப்பையா
இராம. சுப்பையா மலாயா பல்கலைக்கழக இந்தியதுறை தலைவராக பொறுப்பு வகித்தவர். கல்வியாளராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றியதோடு பல்வேறு சமூகச்செயல்பாடுகளிலும், மலேசிய தமிழ் இலக்கியம் சார்ந்த ஆய்வுப்பணிகளிலும் முக்கியப் பங்காற்றியவர்.
இராம. சுப்பையா
இராம. சுப்பையா – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



