Jeyamohan's Blog, page 594

April 18, 2023

கல்பற்றா நாராயணன்

கல்பற்றா நாராயணன் மலையாளத்தில் உரைநடைத்தன்மையும் படிமங்களற்ற நுண்சித்தரிப்புத் தன்மையும் கொண்ட புதியவகை கவிதையை அறிமுகம் செய்த முன்னோடி கவிஞர். மாபெரும் மேடைப்பேச்சாளர் என அறியப்படுபவர்

கல்பற்றா நாராயணன் கல்பற்றா நாராயணன் கல்பற்றா நாராயணன் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2023 11:34

அதிகார அமைப்பா? -கடிதமும் விளக்கமும்

அதிகார அமைப்பா?

அன்பிற்குரிய திரு ஜெயமோகன்,

பலரின் சந்தேகங்களை, அறிவற்ற கேள்விகளை, மிக அழகிய முறையில் நுண்மையான தகவல்களுடன் தாங்கள் கூறிய பதிலை படித்தேன். உங்களின் மேன்மையான நோக்கத்தை அறியாமல் பலர் செய்யும் செயல் அதீத கவலைக்குரியது. உங்களின் கனவு, நீங்கள் பெற்ற அரிய அனுபவங்கள், பல ஆளுமைகளின் சிந்தனைகள் போன்றவை என்னைப்போன்ற வாசகனிடம் உண்மையான தேடலின் மூலம் புரிந்து, அறிந்து கற்று மேலும் அவனின் தேடலை வலுப்படுத்தும் என்பதில் எனக்கு சிறு ஐயமும் இல்லை.

உங்களின்  பயணம், பணி, இயக்கம் அனைத்திலும் அதீத வளர்ச்சியை பெறுவீர்கள் என உறுதியுடன் நம்புகிறேன். அது தான் நடக்க வேண்டும் என்று விழைகிறேன். உங்களின் பல படைப்புகளை படித்து வியந்த எண்ணங்கள் எண்ணற்றவை. புதிதாக ஒரு  படைப்பு எப்போது உங்களிடம் இருந்து வரும் என்று அதீத ஏக்கம் கொண்ட வாசகன் நான்.

உங்களைப் பற்றிய அனைத்து விமர்சனங்களையும் தவிர்த்து உங்களை அறிய உங்களின் எழுத்துக்களின் மூலம் முயன்று கொண்டே இருக்கிறேன். உங்களின் மொழி நடை மிகவும் தனித்துவமான ஒன்று. என்னால் யாருடனும் ஒப்பீடு என்ற எண்ணம் தோன்றவே இல்லை.

அன்புடன்

பழனியப்பன் முத்துக்குமார்

***

அன்புள்ள பழனியப்பன் முத்துக்குமார்,

உண்மையில் இந்த விமர்சனங்களை நுண்ணுணர்வுள்ள, அடிப்படையில் அறிவுத்திறனுள்ள எவரும் ஐயப்படவே செய்வார்கள். இவற்றை முன்வைப்பவர்களின் தரமென்ன, அவர்கள் சாதித்தவை என்ன என்பதையே அவர்கள் பார்ப்பார்கள். செயலில் சாதனை புரிந்தவர்களையே செயலில் ஆர்வமுடையோர் செவிமடுப்பார்கள்.

அதேபோல இந்த இணையதளத்தை, அல்லது இந்த இலக்கிய இயக்கத்தை ஏதேனும் வகையில் அறிந்தவர்களுக்கு இங்கே நிகழ்வதென்ன என்று தெரிந்திருக்கும். அவர்களுக்கு விளக்கங்கள் தேவையுமில்லை.

ஆனால் தொடர்ச்சியாக இங்கே புதிய வாசகர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏராளமான உளத்தடைகளை இந்த அற்பப்பிரச்சாரகர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு சிறிய இலக்கிய இயக்கம்கூட இங்கே நிகழ்ந்து விடக்கூடாது, ஒரு சிறிய அளவில்கூட வாசகர்சூழல் உருவாகிவிடக்கூடாது என நினைக்கும் சுயநலப் பார்வை கொண்ட பேராசிரியர்கள், அரசியலாளர்கள் அவர்கள்.

தமிழில் எந்த ஒரு இலக்கியப் படைப்பாளி பற்றியும் ஒரு நல்ல கட்டுரை இவர்களால் எழுதப்பட்டதில்லை. தமிழிலக்கிய வரலாறு பற்றி ஒரு நூல் எழுதப்பட்டதில்லை. அதற்கும் எழுத்தாளனே வரவேண்டும். அதற்கு மூளையோ நேரமோ இங்குள்ள கல்வித்துறை ஆசாமிகளுக்கு இல்லை.

(அண்மையில் சிவசங்கரி தொகுத்த இலக்கியம் வழியாக இந்திய இணைப்பு நூலை வாசித்தேன். அதில் மற்ற அத்தனை மொழிகளிலும் அந்தந்த மொழி இலக்கிய அறிமுகம் எழுதியிருப்பவர்கள் பேராசிரியர்கள். தமிழில் மட்டும் இலக்கியவாதிகள். அப்படி எழுதத்தெரிந்த ஒரு பேராசிரியர்கூட இங்கில்லை)

ஆனால் ஓர் இலக்கிய வாசிப்பு வட்டம் உருவானால் அதை அழிக்க இரவுபகலாக அமர்ந்து எழுதுவதற்கு இவர்களுக்குச் சலிப்பே இல்லை. அவர்களால் குழப்பப்படுகிறார்கள் எளிய தொடக்கநிலை வாசகர்கள். அவர்களுக்கான விளக்கங்களை இங்கே சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

உண்மையில் அந்த உளத்தடைகளைக் கொண்டவர்கள் இரு சாரார். ஒரு சாரார் உளத்தடை காரணமாக இங்கே வரவே மாட்டார்கள். அவர்கள் பொருட்படுத்தத் தக்கவர்களல்ல. அவர்கள் மேலோட்டமான இளைஞர்கள். அவர்கள் வராமலிருப்பதே நன்று. இன்னொரு சாரார், உளத்தடை இருந்தாலும் சரி என்ன சொல்கிறார் இதற்கு என்று பார்ப்போம் என வருபவர். அல்லது விவாதிப்பவர். அவருக்கு இந்த பக்கத்தின் சுட்டியை இன்னொருவர் அளிக்கமுடியும்.

அத்துடன் இந்த விவாதங்கள் வழியாக நாம் க.நா.சு முதலான இலக்கிய முன்னோடிகளை மீண்டும் மீண்டும் நினைவுகூர்கிறோம் அல்லவா?

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2023 11:31

பாகதர்ப்பணம் – ஒரு வாசிப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

வழக்கம் போலவே வெண்முரசு மீள் வாசிப்பில் இருக்கிறேன். வரிசைக்கிரமமாக  நூல் நிரைகளை வாசிப்பதும், ஏதோ ஒரு சொல்லை தொடர்ந்து சென்று வாசிப்பதும் உண்டு. ஆனால் எல்லா நாட்களுமே வெண்முரசால் அருளப்பட்டவைகள்தான். வெறும் வாசிப்பு என்னும் சொல்லில் மட்டும் வெண்முரசுக்கும் எனக்குமான நெருக்கத்தை வரையறுத்துவிட முடியாது

அன்று வாசித்த அத்தியாயம் அன்றைய நாளை வடிவமைத்து விடும். எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொருமுறையும் புத்தம் புதிதாக என்முன்னே விரியும் வெண்முரசின் கதை என்பதுதான் புதிர்.  50 first dates என்னும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகிக்கு அன்றாடம் நடந்தவைகள் மறந்து ஒவ்வொரு நாளையும் புதிதாக துவக்குவாள். அதுபோல ஒவ்வொரு மீள் வாசிப்பும் விதம் விதமான உணர்வெழுச்சிகளுடன் புத்தம் புதிதாக அமைந்துவிடும்,

சென்ற வாரம் பன்னிரு படைக்களத்தில் பீமனும் மாயையும் சூளுரைக்கும் அத்தியாயம் வாசித்துவிட்டு புதிதாக அதை வாசிப்பதுபோல  உணர்வெழுச்சியில் கதறி அழுது கொண்டிருந்தேன்.வெண்முரசில் பீம பாகம் குறித்து சொல்லும் ஒரு அத்தியாயத்தில்  ’ஒவ்வொரு நாளும் தெய்வமெழும் அடுமனைத்தொழில்’ என்று சொல்லபட்டிருக்கும், அப்படி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தெய்வமெழும்  வாசிப்பு எனக்கு.

மாணவர்களுக்கு எப்படியும் வெண்முரசின் சில துளிகளையாவது கொண்டு சேர்க்க எப்போதும் பிரியப்படுவேன் சமயம் கிடைக்கையில் எதனோடாவது வெண்முரசை இணைத்து சொல்லுவேன். வெண்முரசில் சொல்லப்படாதவைகள் இல்லை என்பதால் எப்படியும் வாரமொரு முறையாவது அதன் ஏதோ ஒரு பகுதியைப்பற்றி வகுப்பில் பேசிவிடுவேன்.

தாவரவியல் பாடங்களில்  பல்துறைகளின் பங்களிப்பும் இருக்கும். ஒரு பாடம்  ஆயுர்வேத, சித்த, யுனானி போன்ற மூலிகைத்தாவரங்களை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைக ளை பற்றியது. அந்த பாடத்தை பல வருடங்களாக கற்றுக் கொடுக்கிறேன்.  எனக்கு பிடித்தமான பாடங்களில் அதுவுமொன்று.

ஆயுர்வேத பாடத்தில் தினசரி அனுசரிக்க வேண்டியவைகளை  குறித்த தினச்சரியம், பருவகால வாழ்வு முறைகளுக்கான பரிந்துரைகளை சொல்லும்  ருதுச்சரியம் ஆகியவற்றை குறித்து விரிவாக சொல்லப்பட்டிருக்கும், அவற்றை சொல்லுகையில், நீர்க்கோலத்தின் அன்னநிறைவு பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் நளபாகம் குறித்த விவரணைகள், நளரசனா, நளபதார்த்தமாலிகா போன்ற நூல்கள், உணவு சமைக்கையில் கடைக்கொள்ளப்படும் முதன்மை ,இரண்டாம் நெறிகள்,

//நளபாகம் என்பதே குறைவாக சமைப்பதன் நுட்பம்தான். அச்சமையலை பல மடங்காக்கலாம். ஆயினும் அது குறைவான அளவுகளால் கற்பனை செய்யப்பட்டதே//ஆகியவற்றில் நுழைந்து ஆயுர்வேதம் சொல்லும் பத்தியம், அபத்தியம் என நீண்டு நேரம் போனதும் அந்த வகுப்பு முடிந்த மணி அடித்ததும் தெரியாமல் வகுப்பிலிருந்த நாட்களும் உண்டு.

நீர்க்கோலத்தின் அன்னநிறைவு பகுதி வாசிப்பு அளிக்கும் நிறைவு தனிப்பட்டதுட, அதை வாசிப்பென்றே கூட என்னால் எண்ன முடியாது, கருணையும் கனிவுமான உணர்வுக்கலவையுடனே அதை அணுகமுடிந்திருக்கிறது.

இந்தியப் பயணத்தில் கடும்பசியுடன் இருந்த உங்களுக்கு குருத்வாராவில் உணவளிக்கப்பட்டது அப்போது நினைவுக்கு வரும். சரண் சென்ற வாரம் அவன் பல்கலை கழகத்திற்கருகிலிருந்த குருத்வாராவுக்கு நண்பர்களுடன் சென்றிருந்த போது அவர்களனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து சென்ற பின்னர் அவன்  உண்ட முதல் முழு நிறைவான உணவு அது என்றும் அப்படி அள்ளி அள்ளி அவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கையில் தொடந்து சாப்பிட குற்ற உணர்வு வந்துவிடும் போலிருந்தது ’எப்படிம்மா இப்படி கொடுக்கறாங்க? என்றான்.

அப்போதும் நான் வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும்//ஆற்றலாகும் உணவு நிறைவடைகிறது. அறிவென்றாகும் உணவு மேன்மையடைகிறது. கருணையென்றாகும் உணவே முழுமைகொள்கிறது// என்பதையே உதாரணம் காட்டினேன்.அவர்கள் அளிப்பதில் நிறைவு கொள்பவர்கள்

அந்த அத்தியாயத்தில் மரத்தாலத்தில் குரங்குகளுக்கு உணவை கலந்து எடுத்துச்செலும் பீமனின் விழிகளை பூரணர் சந்திக்கும் கணத்தில் ஒவ்வொரு முறையும் எனக்கு உடல் மெய்ப்புக்கொண்டு கண்கள் நனையும். அன்னநிறைவில் துவங்கி, புஷ்கரனின் மணவுறவை கொண்டாடும் உண்டாட்டும் அதில் அன்னத்தை உதைத்த சீர்ஷரின் தலையை நளன் சீவியெறிவது வரையும் தொடர்ந்து வாசிக்காமல் நூலை கீழே ஒருமுறை கூட வைத்ததில்லை.

வெண்முரசு உண்டாட்டுகளில் பலவகையான உணவுகளின் செய்முறைகளும், உண்ணுகையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒடுக்கு நெறிகள், செலுத்து நெறிகளும் உள்ளன. அவற்றை குறித்து கல்லூரியில் தமிழ்த்துறை ஏற்பாடு செய்து நடத்திய சர்வதேச கருத்தரங்கில் உங்கள் அனுமதியுடன் ’அன்னம் பிரம்மம்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றியிருக்கிறேன்.

பன்னிரு படைக்களத்தில் ஒரு உண்டாட்டில் அனல்தொடா உணவுகள், உயிர்கொல்லப்படா உணவுகள், பாலை நில அரசர்களுக்கு , குளிர்நிலத்து அரசர்களுக்கு, கோதுமை உணவு,மீன் உணவு, அரிசி உணவு, எரியெழும் தென்னகத்து உணவு,பீதர் யவன நாட்டு உணவுகள் என தனித்தனியே பல வகை பந்திகள் விவரிக்கப்பட்டிருக்கும்.

வெண்முரசில் நளபாகம் குறித்தவை மிக அதிகம் இல்லை. வியாசமாகாபாரத்தை  தன் ஆய்வின் பொருட்டு வாசிக்கும் சம்ஸ்கிருத ஆய்வில் ஈடுபட்டிருக்கும் எனக்கு வேண்டிய ஒருபெண் அதிலும் நள பாகம் விரிவாக சொல்லப்படவில்லை என்றாள். எனக்கு நளபாகம் குறித்த விரிவாக வாசிக்க விருப்பம் இருந்தது .

டாக்டர் எல்.மகாதேவனின் உணவே மருந்து நூல் குறித்து மருத்துவர் சுனில் தனது மரணமின்மை என்னும் மானுடக்கனவு நூலில் எழுதியிருப்பார்.  இந்திய சமையல் மற்றும் ஆயுர்வேதம் தொடர்பான ஒரு நூல் குறித்து சந்தேகம் கேட்க சுனிலின் தொடர்பு எண்ணை கேட்க என்னை அணுகிய ஒரு பெண் மூலமாக ’’பாக தர்ப்பணம்-  நளா’’ என்னும்  நளன் எழுதிய ஒரு நூல் குறித்து அறிந்தேன், உடனே அதன் ஆங்கிலப்பதிப்பை  வாங்கினேன்.

இந்திய சமையலை குறித்த விரிவான பண்டைய நூல்கள் பல உள்ளன. ரகுநாத பண்டிதரின் போஜனகுதூகலம்,ஷேமசர்மரின் ஷேமகுதூகலம், பாக சந்திரிகை மற்றும் சிவத்துவ ரத்னாகாரம் ஆகியவை அவற்றில் முக்கியமானவைகள்.  நள மகாராஜனின் இந்த பாகதர்பணமும் பண்டைய இந்திய சமையலை ஆயுர்வேதத்துடன் இணைத்து  மிக சுவாரஸ்யமாக விரிவாக சொல்கிறது,

பாக தர்ப்பணம்  ’’சமையல்கலையின் கண்ணாடி’’ என்று பொருள் படும் இந்நூல், 11 ப்ரஹரணங்களாக பிரிக்கபட்ட அத்தியாயங்களில் பலவகையான உணவு வகைகள், அதை உருவாக்க தேவையானவைகள், அவற்றை எப்படி உணவுக்கேற்ப தயாரிப்பது, அரைப்பது அவற்றினால் விளையவிருக்கும்  உடல்நலன்கள் என் மிக விரிவாக சொல்கிறது.

சாஸ்திரம், சம்ஸ்காரம், வர்க்கம், சரகம் என ஒவ்வொரு தலைப்பாக பிரித்து விஷயங்கள் அலசி ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. எந்த காலத்தில் மூல நூல் எழுதப்பட்டது என்று அறிந்து கொள்ள முடியவில்லை எனினும் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தாவரங்களை கொண்டு இந்நூலின் காலத்தை சிலர் 13ம் நூற்றாண்டு என கணிக்கிறார்கள். பாக தர்ப்பணத்தில் எங்குமே மிளகாய்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால் அவை அறிமுகமான 16-17ம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்நூல் உருவாகி இருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது. ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் உள்ள உபசம்ஹாரத்தில் தானே அவற்றை எழுதியதாகக் நளன் குறிப்பிட்டிருக்கிறார்.

சமஸ்கிருத மூல நூலான இது இந்தியிலும் ஆங்கிலத்திலும்  மொழிபெயர்க்கப்பட்டு வரணாசியில் வெளியானது. முழு நூலும் பாகுகனான நளனும் ருதுபர்ணனும் உரையாடுவதாக அமைந்திருக்கிறது.

முதல் அத்தியாயமான கிரந்தோபகர்மம் ஒரு நல்ல அடுமனையாளர் மற்றும் பரிவேஷகனின் இயல்புகளை விவரிக்கிறது, 16 வகையான அசைவ சைவ உணவுகளை மிக விரிவாக விளக்கும் இந்த பகுதியில் வேகவைக்கப்பட்ட அரிசி சோறு, தோல் நீக்கப்பட்ட சமைக்கப்பட்ட பருப்பு வகைகள்,நெய், தொடு கறிகள், இறைச்சி, காய்கறிகள், மென்று தின்னப்படும் இலைகள் போன்ற    உணவுப் பொருட்கள், பல வகை பானங்கள், கிச்சடி வகைகள், பாயசங்கள், உடலுக்கு ஊட்டம் கொடுக்கும் உணவு (ரசாயனா) வகைகள், நக்கி உண்ணும் லேகிய வகைகள், நீர்ம உணவுகள்,பால் மற்றும் மோர் உணவுகள் மற்றும் தயிர் சாதம் நெய் சாதம் ஆகியவற்றின் தயாரிப்புக்களை விளக்குகிறது. இதே பகுதி அன்னம் எனப்படும் வேகவைக்கப்பட்ட அரிசிச் சோற்றின் 63 வகையான  சுவைகளையும்  8 அன்னக் குற்றங்களையும் விவரிக்கிறது.

அன்னக்குற்றங்களில் அந்த பருவத்திற்கேற்றதல்லாத, இயல்பு மாறி கெட்டுவிடும்  அஸ்திரன்னம், அதிகமாக வேகவைக்கப்பட்ட பசைத்தன்மை அதிகமான பைச்சில்லியன்னம்,  மிக குறைவான அளவில் அரிசி  எடுத்து வேகவைக்கப்படும் க்வாதிதன்னம், மிக காய்ந்துபோன சுஸ்கன்னம், கருகிப்போன தக்தன்னம், ஒத்த அளவுகளில் இல்லாத அரிசியில் சமைக்கப்பட்ட  விருப்பன்னம், பருவம் தவறிய அரிசியில்  சமைக்கப்பட்ட அல்லது கெட்டுப்போன அனர்துஜன்னம் தவறான பருவத்தில் விளைந்த நெல்லில் இருந்து உண்டாக்கப்பட்ட  நர்துஜன்னம் ஆகியவை சொல்லப்பட்டிருக்கின்றன.

மேலும் அரிசியை எப்படி சமைப்பதென்னும் வழிமுறைகளும் உள்ளன நன்கு உலர்ந்த பழைய அரிசியை கொதி நீரில் கழுவி. ஒரு பங்கு அரிசிக்கு மூன்று பங்கு நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை அடுப்பில் ஏற்றி லேசாக நீர் சூடானதும் கழுவிய அரிசியை அதில்கொட்டி, நன்கு அரிசி நீரில் கொதிக்கையில் கரண்டியால் திரும்ப திரும்ப கலக்கிக்கொண்டே மோர், பால் அல்லது நீரை தேவையான அளவு கொஞ்சமாக சேர்க்க வேண்டும்.பின்னர் அரிசி மென்மையாக வேகும் வரை சமைக்கப்பட்டால் அந்த சோறு நீளாயுளுக்கான உணவாகும் என்கிறது இந்த பகுதி

இதே பகுதியில் நமது பிரியாணி என்கிற  இறைச்சி கலந்த உணவை தயாரிப்பது சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்றிற்கு மூன்று பங்கு நீர் சேர்த்த அரிசி வேக துவங்குகையில் அரிசி அளவுக்கே நறுக்கபட்ட, முன்பே வேகவைத்த அல்லது வேகவைக்கப்படாத இறைச்சியை நெய், கல்உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நீர் வற்றும் வரை வேக வைத்து  தயாரிக்கப்படும் அந்த ஊனுணவில் தாழை மலர். பற்பாடகம், புத்துருக்கு நெய் மற்றும் தேங்காய்ப்பால்  சிறு பச்சைக்கற்பூரம் ஆகியவைகளும் சேர்க்கப்படுகையில் மேலும் அதன் சுவை கூடுகின்றது என்னும் குறிப்பும் இருக்கிறது,  மேலே ஒரு தட்டு வைத்து மூடி சிறிது நேரம் சூடாக்கப்பட்ட அந்த  அன்னத்தை சூடாக இருக்கும் போதே பரிமாற வேண்டும் என்று விரிவான ஏறக்குறைய நாம் இப்போது தம் பிரியாணி செய்யும் முறையைபோலவே செய்முறை விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாம்ஸோதனா என்னும் அசைவ பிரியாணி சுவையானது, பாலுணர்வை தூண்டுவது, முழுமையான உணவு மற்றும் எளிதில் ஜீரணமாகும் என்னும் குறிப்பும் உள்ளது. இதே அசைவ உணவு பகுதியில் சிட்டுக்குருவி பிரியாணி பச்சைப்பயிறு அரிசி இறைச்சி பிரியாணி மற்றும் கோழி பிரியாணி செய்யும் முறைகள் உள்ளன.’

இந்த பகுதியிலேயே சரியாக தயாரிக்கப்படாத,  தவறான இடுபொருட்களை சேர்த்து சமைக்கப்பட்ட உணவுகள் எவ்வாறு நஞ்சாக மாறும் என்னும் விளக்கங்களும் உள்ளது. உதாரணமாக தனித்து மருந்தாக செயல்படும் நல்லெண்ணெய் மற்றும் கற்பூரம் இவை இரண்டும் கலந்தால் அந்த உணவு நஞ்சாகும், சரியாக அமைக்கப்படாத அமுதும் நஞ்சாகும், முறையாக தயாரித்தால் நஞ்சும் அமுதாகும் என்னும் குறிப்பும் உள்ளது. ஊட்டி குரு நித்யா ஆசிரமத்தில் ஒரு காவிய முகாமில் திரு நாஞ்சில் நாடன் மண்டோதரி சீதையை ’நஞ்சென்னும் அமுது அவளால் இலங்கை பஞ்சு எரி உற்றதென அழியும்’ என்பதாய் ஒரு கம்பராமாயணப்பாடலை விளக்கியது நினைவுக்கு  வந்தது.

தோல் நீக்கிய பயிறு வகை உணவுகளை சமைப்பது குறித்தும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. பச்சை பயறு, கொள்ளு, கருப்பு உளுந்து மற்றும் கொண்டை கடலை ஆகியவற்றை சல்லடைகளில் சலித்து கல் குப்பைகளை நீக்கி உபயோகிக்கவேண்டும் என்னும் குறிப்புடன் இந்த பகுதி துவங்குகிறது ஒரு பங்கு பச்சை பயறுடன் சமஅளவு நீர் சேர்த்து வேகவைத்து உப்பிட்டு மஞ்சள்,  கற்பூரம், பெருங்காயம் சேர்த்து கடைந்து  தயாரிக்கப்படும் பருப்புக்குழம்பு பசி உணர்வை தூண்டி பித்த தோஷத்தை சமன் செய்யும் எனச்சொல்லப்பட்டிருக்கிறது.

அதுபோலவே  திரிகடுகங்களான கடுக்காய், தான்றிக்காய் நெல்லிக்காய் ஆகியவற்றையும் மேலும் சில மூலிகைகளையும் பொடித்துப்போட்டு தயாரிக்கப்படும் பலவிதமன மோர் வகைகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.

வெண்ணெய் தயாரிப்பை சொல்லும் பகுதி அரைப்பங்காக சுண்டக்காய்ச்சிய பாலை தயிராக்கி அதை கடைந்து எடுக்கப்படும் வெண்ணெயை பத்து முறை நீரில் கழுவி நுண்துளைகள் கொண்ட துணியால் வடிகட்டி மீண்டும் கழுவி நறுமண மலர்களிடப்பட்ட நீர் கொண்ட பாத்திரத்தில் சேர்த்து வைத்து பயன்படுத்தினால் அது உடல் பொலிவை அதிகரித்து, ஆற்றலை அளித்து, பாலுணர்வை தூண்டி ஐம்புலன்களில் ஆற்றலையும் மேம்படுத்தும் என்கிறது

நெய் தயாரிப்பை சொல்லும் பகுதி வெண்ணிற வெண்ணெய் மஞ்சளாகும் வரை நீரில் கழுவி மிதமான தீயில் நுரை அடங்கும் வரை காய்ச்சி வடிகட்டி மீண்டும் செந்நிறமாகும்  வரை உருக்கி  சிறிது கோதுமை மாவும் நறுமண மலர்களும் மோரில் நனைத்த வெற்றிலை, கற்பூரம் ஆகியவற்றையும் சேர்த்து  சேமித்து வைக்கலாம் என்கிறது.

மேலும் வாழைக்காய், தட்டைப்பயிறு, சேனைக்கிழங்கு,முள்ளங்கி, பலா, கொண்டை கலை, கொண்டை கடலை செடியின் இலை போன்ற பல்வேறு தாவர உணவுகளும் அவற்றின் தயாரிப்பு முறை, அவ்வுணவுகளின் உடல்நலப் பயன்கள் ஆகியவற்றையும் பாகற்காய் மூக்கிரட்டை, பலாசம், முருங்கை, ஆடாதொடை ஆகிய பல தாவரங்களின் உணவு பயன்பாடுகளையும் இந்த முதல் பகுதி விரிவாக எடுத்துரைக்கிறது.

இரண்டாவது பகுதி ரிது தர்ம நிரூபணம் ஒவ்வொரு பருவத்திற்குமான முழு உணவுகளை  சொல்கிறது ஒவ்வொரு பருவத்திலும் ஒருநாளின் காலை மாலை இருவேளைகளிலும் மாறும் பருவநிலைக்கேற்ற உணவுகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.இது அப்படியே ஆயுர்வேதம் சொல்லும் ருதுச்சர்யங்கள்தான்.இதில் ஆச்சர்யப்படத்தக்க விதமாக பருவங்களுகேற்ற ஆசைவ உணவுகள் மிக குறிப்பாக சொல்லப்பட்டிருக்கையில் சைவ உணவுகள் அத்தனை குறிப்பாக இல்லாமல் பொதுவாகவே விவரிக்கப்பட்டிருக்கின்றன.

மூன்றாவது பகுதி விபின்ன பாக்‌ஷய பதார்த்தானம் நிர்மான ப்ரகார நிருபணம். இது தேங்காய், கோதுமை, பால் நறுமண மலர்களின் உணவுப் பயன்பாட்டையும் மென்று தின்னக் கூடிய உணவுகளையும் விளக்குகிறது

நான்காவதான பாயஸ ப்ரகார நிரூபணம் பால் பாயஸம், பூண்டு பாயஸம்,கோதுமை பாயஸ தயரிப்புகளை விளக்குகிறது

ஐந்தாவது பகுதி பானக பேத நிரூபணம் பலவிதமான நீர்மை உணவுகளை விவரிக்கிறது மா ,எலுமிச்சை, தடச்சி, புளி, நாவல், வாழை போன்ற கனிகளிலிருந்தும், அரளி புன்னை மற்றும் மகிழ மலர்களிலிருந்து பானகங்கள் தயாரிப்பதையும் இந்த பகுதி விவரிக்கிறது

ஆறாவது பகுதி விவித அன்ன யுச பாக ப்ரஹரனம். அரிசியைக்கொண்டு செய்யப்படும் பல வித கிச்சடி வகைகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் தயிர்கிச்சடி, எலுமிச்சை கிச்சடி போன்ற வகைகளும் இருக்கின்றன

ஏழாவதில் க்ரிதஅன்ன  பாக ப்ரஹரனம்  என்பது நெய் சோறு வகைகளை விவரிக்கிறது அந்த செய்முறைகள் நாம் இப்போது உண்டாக்கும் நெய்ச்சோற்றின் முறைகளை அப்படியே ஒத்திருக்கிறது

எட்டாவதான லேகிய ப்ரஹரனம் சாஸ் போன்ற தயாரிப்புக்களுக்கானது, மாம்பழம் போன்ற சதை கனிகளிலிருந்து சர்க்கரை சேர்த்து காய்ச்சி பிழிந்து செய்யப்படும் இனிப்புக்கூழ்ம வகைகளின் செய்முறையை சொல்லும் பகுதி இது,

ஒன்பதாவது பாகம் மிக சுவாரஸ்யமானது  சைத்ய ஜல நிர்மாண ப்ரஹரனம் என்னும் இப்பகுதி குடிநீரை குளிர்விக்கும் பலவேறு முறைகளை விவரிக்கிறது நீர் நிரம்பிய பாத்திரத்தை வெட்டவெளியில் காற்றில் திறந்து வைப்பது, மணலில் வடிகட்டுவது, பலவித நறுமண மலர்களை கலப்பது, குளிர்ச்சி உண்டாக்கும் மூலிகைகளை கலந்து குளிர்விப்பது, தேற்றாங்கொட்டையை சேர்ப்பது என மிக எளிய, நாம் அனைவரும் கோடைக்காலங்களில் எளிதாக பின்பற்ற முடிந்த செய்முறைகள் இருக்கின்றன.

பத்தாவது பகுதி முழுக்க பால் பொருட்கள் தயாரிப்பதை பற்றியது இதில் எருமைப்பாலை எப்படி காய்ச்சி எடுப்பது என்னும் பலவித வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன,

இறுதிப்பகுதியும் 11 ம் பாகமான தஹி பேத ப்ரஹரனம் தயிர் உருவாக்கும் வகையை சொல்கிறது பேதம் என்று வகைகளை குறிக்கும் சொல் தலைப்பில் இருப்பினும் இதில்  பாலிலிருந்து தயிர் உறைய செய்வதற்கு ஒரே ஒரு வழிமுறையே சொல்லப்பட்டிருக்கிறது. கோவையின் ஒரு பிரபல தொடர் உணவக அடுமனையாளர் உறை ஊற்றப்படும் பாலில் கொஞ்சமாக அரிசிக்கஞ்சியை கலப்பதை  சொல்லித்தந்தார்

இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் பலவித உணவுகள் இந்தியக்கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்த, நாம் இப்போதும் தயாரித்து உண்ணும் பலவகை உணவுகளின் செய்முறைகள் கொண்டிருக்கிறது.

உணவை தயாரிப்பது, உண்பது என்னும் அடைப்படையில் ஐந்து வகைகளாக பிரித்து நறுக்கி மென்று உண்ணப்படுபவை, நறுக்காமல் அப்படியே மென்று உண்ணப்படுபவை, உறிஞ்சி உண்ணப்படுபவை, நக்கியுண்ணப்படுபவை மற்றும் அருந்தப்படுபவை என பிரிக்கப்படுகிறது

சைவ வகைகளில் கிழங்குகள், இலைகள், தண்டுகள், மலர்கள்,  கனிகள் என பலவகை தயாரிப்புக்களை விவரிக்கும் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊமத்தை இலை தயாரிப்புக்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. ஊமத்தையை நாம் ஒருபோதும் இப்பொது உணவில் சேர்ப்பதே இல்லை.அப்படியே அசைவத்திலும் பலவிதமான விலங்குகளின் இறைச்சி, பறவை இறைச்சி, மீன் உணவுகள் என விரிவான விளக்கங்கள் கொண்டிருக்கும் நூல் இது. இந்த பிரதேசத்தின் பிரதான உணவு அரிசிச்சோறு என்று  இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெண்முரசில்   வஹ்னர் கூற்றாக ‘’இங்கு சூழ்ந்துள்ள பொருட்களே நாம் அறியக்கூடிய மெய்மை. அப்பொருட்களுடன் நாம் கொண்டுள்ள உறவு துயரற்றதாகுதலே விடுதலை. நோய், பசி, மிடிமை எனும் மூன்றையும் வெல்லுதல் மட்டுமே மீட்பு என நாங்கள் நம்புகிறோம்’’ என்று சொல்லப்பட்டிருக்கும். பாரம்பரிய மருத்துவ முறைகளும் அந்தந்த பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு அந்த நிலத்தில், அந்த காற்றில், அந்த நீரில் விளையும் தாவரங்களில் இருந்து உருவாகும் உணவே உகந்தது என்கின்றன. பாக தர்ப்பணம் அவ்வகையில் நம்மைச்சுற்றியுள்ள நாம் ஏற்கனவே உணவாக புழக்கத்தில் இருக்கும் பலவற்றின் புதிய உபயோகங்களையும், நாம் அறிந்திருக்காத பல தாவர உணவுகளையும் கற்றுத்தருகிறது.

அமேஸானில் இதன் ஆங்கில மொழியாக்க அச்சுப்பிரதிகள் கிடைக்கின்றன. இலவச  பிடிஎப் வடிவம் ஆங்கிலத்தில் இல்லை இந்தியில் மட்டுமே இருக்கிறது.

முதலாவிண்ணின் பலி நிகழ்வுக்கு பின்னரான உண்டாட்டில் ஏழு வகை கலவைச்சோறுகளும், கைம்பெண்களுக்கான நோன்புணவு, ஊனுணவு, காய் உணவு என தனித்தனியே சமைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற நீத்தோர் கடன்களை செய்கையிலான உண்டாட்டுகளுக்கென தனி நெறிகளும் சொல்லப்பட்டிருக்கும். அந்த பகுதியில் கைம்பெண்களும் துயருற்றவர்களும், நூல் மறந்து அந்தணர்களும் பலியிட வந்த பிறருமாக உணவை அனைத்து துயர்களையும் மறந்து மகிழ்ந்து  உண்டு கொண்டிருப்பார்கள்.

அன்று திருதராஷ்டிரர் கடும் பசியில் உணவுண்பார்.அந்தப்பகுதியில் “வைஸ்வாநரன்! இப்புவியை ஆளும் மெய்யான தெய்வம்! இங்கு அறம், நெறி, அளி, அறிவு அனைத்தையும் ஆள்பவன்”

“அன்னத்திற்கு மேல் அனைத்தும் சூட்டப்படுகின்றன. காலத்தின் போக்கில் அன்னத்திலிருந்து அனைத்தும் உதிர்ந்துவிடுகின்றன. அன்னம் அன்னத்தை மட்டுமே அறியும்” என்று சொல்லப்பட்டிருக்கும்.

இந்நூல் சமையல்கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும்,  விதம் விதமான உணவுகளை ருசிக்க விருப்பம் கொண்டவர்களுக்கும், வீட்டில் என்ன சமைப்பது என்பதே பெரும் கேள்வியாக தினம் எதிர்கொள்ளும் பெண்களுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும்.பண்டைய இந்தியாவின் ருசியை  அறிந்து கொள்ள நல்ல வழியை இந்நூல் காட்டுகிறது. (சமஸ்கிருத சொற்களின் ஆங்கில உச்சரிப்புக்கள் என்னால் பிழையாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் சாத்தியங்களும் இக்கட்டுரையில் இருக்கலாம் மன்னிக்கவும்)

’’அன்னம் பிரம்மம், அன்னத்திலிருந்தே அனைத்தறங்களும் ’’

 

அன்புடன்

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2023 11:31

Exploring The Human Condition in the Darkest

The translation of Suchithra needs a special mention, it is a very challenging work to translate as the prose is filled with proverbs, rejoinders, and funny conversations and she has done a commendable job in translating it and providing an amazing reading experience.

Abyss – Exploring The Human Condition in the Darkest The Abyss- Amazon 

 

Tamil Nadu | Writer-critic B. Jeyamohan draws on his experiences living as a beggar in his 20s in new book The Abyss

‘The Abyss’ – an English translation of Jeyamohan’s Tamil novel ‘Ezhaam Ulagam’

Jeyamohan interview: Ezhaam Ulagam, or The Abyss, is a spiritual inquiry into beggars’ lives

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2023 11:30

தியானப் பயிற்சி முகாம்

தில்லை செந்தில்பிரபு அவர்கள் நடத்தும் இரண்டாவது தியானப்பயிற்சி முகாம் மே மாதம் 19,20 21 (வெள்ளி சனி ஞாயிறு) நாட்களில் நிகழும். எற்கனவே கலந்துகொண்டவர்கள் விரும்பினால் மீண்டும் கலந்துகொள்ளலாம். முந்தைய தியான நிகழ்வு மிக அரிதான ஓர் அனுபவமாக இருந்தது என பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே முன்னரே வருபவர்களுக்கு இடம் என்னும் வகையில் இடம் உறுதி செய்யப்படும்.

விரும்புபவர்கள் தங்கள் பெயர், தொலைபேசி எண், வயது , ஊர் ஆகிய தகவல்களுடன் எழுதவும்

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com 

தில்லை செந்தில்பிரபு – ஒரு பேட்டி

தியானமுகாம், தில்லை – கடிதம்

தியானம், திரளும் தனிமையும்

தியானப்பயிற்சி, கடிதம்

தியானம், கடிதம்

தியானம், கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2023 11:30

April 17, 2023

இமையம் சொல்லும் அவதூறு…

அன்புள்ள ஜெ

ஆனந்தவிகடன் பேட்டியில் இமையம் இப்படிச் சொல்லியிருக்கிறார்

ஜெயமோகன் எப்போதெல்லாம் எழுத்தாளர்களின் பட்டியலைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம் பிற சமூகத்து எழுத்தாளர்களை ஒரு பட்டியலாகவும், தலித் எழுத்தாளர்களை ஒரு பட்டியலாகவும் எழுதுவார், பேசுவார். தவறிக்கூடப் பிற சமூகத்து எழுத்தாளர்களின் எழுத்துகளோடு, தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை ஒப்பிட்டுப் பேச மாட்டார்.

நான் இமையம் பற்றி 2000 முதல் நீங்கள் சொல்லியிருப்பனவற்றை கூர்ந்து பார்த்து வருகிறேன். நீங்கள் சொல்வனவற்றுக்கு நேர் எதிராக, முற்றிலும் தலைகீழாக நீங்கள் சொல்லியிருப்பதாக இமையம் சொல்கிறார். ஆச்சரியமாக இருந்தது. உங்கள் பார்வைக்கு இதைக் கொண்டு வருகிறேன்.

செல்வராஜ் ராஜேந்திரன்

 

அன்புள்ள செல்வராஜ்,

இமையம் பற்றி பவா.செல்லத்துரை திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்த ஒரு கூட்டம் 29 செப்டெம்பர் 2021 ல் நடைபெற்றது. அதில் நான் பேசினேன் (பார்க்க காணொளி). அந்த உரையில் இமையத்தை எப்படி வரையறை செய்துள்ளேன் என்று எவரும் பார்க்கலாம்.

அவரை அன்றிருந்த மிகைக்கற்பனை சார்ந்த எழுத்துவகைகளுக்கு எதிராக இயல்புவாதத்தை முன்வைத்தவர், அன்றிருந்த தனிமனித அகத்தை மட்டுமே எழுதும் போக்குக்கு பதிலாக சமூகயதார்த்தத்தை முன்வைத்தவர் என்று மிகத்தெளிவாக மதிப்பிடுகிறேன். அதுவே அவருடைய இலக்கிய இடம் என வரையறை செய்கிறேன். தலித் எழுத்தாளர் என்று அல்ல.

அவ்வுரையில் அவர் ஏன் பொதுவாகச் சொல்லப்படுவதுபோல ஒரு ‘தலித் எழுத்தாளர்’ அல்ல என்றே விளக்குகிறேன். அவருடைய முதல்நாவலான கோவேறு கழுதைகள் சர்வதேச அளவிலேயே தலித் நாவல் என்னும் அடையாளத்துடன்தான் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் நான் அந்த உரையில் அது தலித் நாவல் அல்ல என்கிறேன். அதை ஒரு பெண்ணிய நாவல் என்றும் பார்க்கலாம் என்கிறேன். என் பார்வையில் அல்லது இருத்தலிய நாவல் என்றே கூறுகிறேன்.  ’என்றும் எப்போதும் தமிழில் மையத்தில் நிற்கும் படைப்பாளி’ என்று மிகத்தெளிவாக அவரை மதிப்பிடுகிறேன்.

அந்த உரையிலேயே அவருடைய இயல்புவாத அழகியலை முன்வைத்ததுமே அந்த அடையாளத்தைக் கொண்டும் அவரை வகுத்துவிடலாகாது என்று சொல்லி, அவர் அதை மீறும் தருணங்களைச் சுட்டிக்காட்டுகிறேன். அவருடைய நாட்டாரியல் கூறுகளை பற்றிப் பேசுகிறேன். அவருடைய படைப்புகளில் அரசியல் அடையாளமோ அரசியல் சரிநிலைகளோகூட இல்லை என்றே மதிப்பிடுகிறேன். கலை என்பது ஒரு பக்கம் கொண்டதல்ல, முடிவிலாத பக்கங்கள் கொண்டது என்று சொல்லி அவரை கலைஞன் என மதிப்பிடுகிறேன்.

அந்த கூட்டம் முடிந்தபின்பு இமையம் என்னை தழுவிக்கொண்டு மிகுந்த நெகிழ்ச்சியுடன் ‘என்னைப் பற்றி இப்படி ஒரு முழுமையான பார்வையை எவருமே வைத்ததில்லை’ என்று பலமுறை பல சொற்களில் சொன்னார்.அன்று இரவு மீண்டும் தொலைபேசியில் அழைத்து ‘நீங்க பேசினது எனக்கு மிகப்பெரிய அடையாளம். தலித்திலக்கியம்னு சொல்லி என்னை ஒதுக்கிடறாங்க. நீங்க எனக்கான அழகியல் என்னன்னு மட்டும் பாக்கிறீங்க. நாம சந்திக்கணும், விழுப்புரத்திலே எங்கூட ஒருநாள் இருங்க…’ என்று ஒருமணிநேரம் பேசினார். அன்று சந்திக்க முடியவில்லை. (திருவண்ணாமலையில் பாராட்டுவிழா)

அந்தச் சொற்களுக்கு நேர் எதிரான கருத்து இப்போது அவர் சொல்வது. அதை அவர் அறியாமல் சொல்லவில்லை. இது ஓர் அரசியல் உத்தி மட்டுமே. அரசியலில் இருப்போர்க்கு அச்சூழ்ச்சி என்றும் தேவைப்படுகிறது. எனக்கெதிரான கசப்பு கொண்டுள்ள சிலர் (எவரென்றே தெரியும் எனக்கு) அவரையும் என்னையும் இணைத்துப் பார்க்கிறார்கள். அவர் அவர்களைச் சமாதானப்படுத்த விரும்புகிறார். என்னிடமிருந்து ஒரு விலகலை பதிவுசெய்ய விரும்புகிறார்.அவருடைய அரசியலில் அதற்கான தேவை உள்ளது. அரசியலில் இன்று அவ்வளவு உச்சகட்ட கெடுபிடிச்சூழல் நிலவுகிறது.சில நாட்களுக்கு முன் மனுஷ்யபுத்திரன் இதை தொடர்ச்சியாகச் செய்து தன்னை எவருக்கோ நிரூபித்தார். இனியும் பலர் செய்வார்கள் என நினைக்கிறேன்.

*

இன்று ஒரு பொதுப்போக்கு தென்படுகிறது. பலரும் அவசர அவசரமாக தங்கள் கடந்தகாலத்துடன் ‘கணக்குதீர்த்து’ புதிய தீவிரங்களை அடைந்து கொண்டிருக்கிறார்கள். திமுக அரசு பதவி ஏற்றபின் நிகழும் ஒரு விசுவாசப்பிரமாணம், கற்பை நிரூபித்தல் மட்டும்தான் இது.

இமையம் க்ரியா ராமகிருஷ்ணனாலும், சுந்தர ராமசாமியாலும், காலச்சுவடாலும் முன்வைக்கப்பட்டவர். பெருமாள் முருகன் காலச்சுவடாலும், கண்ணனாலும் முன்வைக்கப்பட்டவர். அவர்கள் வழியாகவே இவர்களின் முன்னேற்றமும் அங்கீகாரமும் நிகழ்ந்தது. அவர்களின் நூல்களை தரமான வெளியீடுகளாக கொண்டுவர, சர்வதேச அளவில் அவர்களை கவனப்படுத்த க்ரியா ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, காலச்சுவடு எனும் ஆளுமைகளும் அமைப்புகளும் எடுத்த முயற்சி சாதாரணம் அல்ல. எல்லாவகையிலும் இமையத்துக்கும் பெருமாள் முருகனுக்கும் நிகரான படைப்பாளியான கண்மணி குணசேகரன் என்ன அடைந்தார் என்பதுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவும்.

க்ரியா , காலச்சுவடு இரு அமைப்புகளுக்கும் மாறிவரும் உலகச்சூழலில் ‘மாற்று எழுத்து’ எனப்படும் தலித், பழங்குடிகள் மற்றும் பிற எழுதப்படாத சமூகங்கள் பற்றிய எழுத்தின் வணிகமதிப்பு தெரிந்திருந்தது. ஆகவே இமையமும் ,பெருமாள் முருகனும் அவர்களுக்கு தேவைப்பட்டனர். அவர்களுக்கு லாபமும் ஈட்டித்தந்தனர். ஆனால் அவ்வாறு முன்கணிப்பதும், அதைப் பயன்படுத்திக் கொள்வதும்தான் ஒரு வணிக நிறுவனத்தின் திறன். ஆகவே அதை அவர்களின் வெற்றி என்றே நினைக்கிறேன். தமிழுக்கு அவர்கள் அதனூடாக ஒரு பங்களிப்பை ஆற்றினர் என்றும் மதிப்பிடுகிறேன்.

சுந்தர ராமசாமியைப் பொறுத்தவரை இந்த வணிகக் கணிப்பு அவரிடம் இல்லை. அவருக்கு உகந்த அழகியலாக இருந்தது இயல்புவாதம்தான். 1990களில் அவருக்கு அடுத்த தலைமுறையில் நான், கோணங்கி,சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் மிகுபுனைவு, மையமற்ற எழுத்துமுறை என சென்றபோது சுரா இயல்புவாத எழுத்தை முன்வைக்கும் பொருட்டு இமையத்தை ஆதரித்தார்.

க்ரியா, காலச்சுவடு ஆகியவை பிராமண அமைப்புகள். சுந்தர ராமசாமி,  க்ரியா ராமகிருஷ்ணன், காலச்சுவடு கண்ணன் ஆகியோர் பிராமணர்கள். இவர்களை நான் நன்கறிவேன். இவர்களில் சுந்தர ராமசாமியை என் ஆசிரியராக எண்ணுகிறேன். க்ரியா ராமகிருஷ்ணன் மேல் எனக்கு மதிப்பு இல்லை. ஆனால் இவர்கள் எவரையும் பிராமணியச் சாதிமனநிலை கொண்டவர்கள் என நான் நினைக்கவில்லை. சுந்தர ராமசாமி அதற்கு நேர்எதிரான மனநிலை கொண்டவர் என்றே மதிப்பிடுகிறேன்.

இமையம், பெருமாள் முருகன் போன்றவர்கள் நான்கொண்டுள்ள இந்தவகையான மதிப்பீடுகள் கொண்டவர்களல்ல. அவர்கள் மனிதர்களை சாதியை மட்டும்கொண்டே மதிப்பிடும் அரசியலையே இதுவரை வெளிப்படுத்தியவர்கள். பிறப்பால் பிராமணர்கள் அனைவருமே அவர்களுக்கு ‘பார்ப்பனர்கள்’ மட்டுமே. ஆனால் ‘பார்ப்பன’ அமைப்புகளிடமும் ‘பார்ப்பனர்’களிடமும் சரண் அடைந்து அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு மேலே செல்ல எந்த தயக்கமும் அவர்களுக்கு இருக்கவில்லை.

அவ்வாறு மேலே சென்றபின் அடுத்த நிலைக்கான தாவலில் இன்று முந்தைய காலகட்டத்தை நிராகரித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இமையமும் பெருமாள் முருகனும் முன்வைக்கும் அண்மைக்கால ’அதியதிதீவிர’ பார்ப்பனிய எதிர்ப்பின் ரகசியம் இதுவே. அது மனுஷ்யபுத்திரனின் பாதை. அவருக்கு முன் சல்மா சென்று வென்ற பாதை. இனி பலரும் செல்லவிருக்கும் பாதை. வாழ்க என்று மட்டுமே சொல்லவிழைகிறேன்.

சில காலம் முன்பு இமையம் அசோகமித்திரன் பற்றி மிகக்கடுமையான ஓர் மதிப்பீட்டை முன்வைத்தார். அது இலக்கிய மதிப்பீடு அல்ல, சாதியக் காழ்ப்பு மட்டுமே. அதைப்பற்றி என்னிடம் கேட்கப்பட்டபோது நான் சொன்னது இதுவே ‘இமையத்திற்கு இப்போது ஒரு பார்ப்பனிய எதிர்ப்பு முகம் தேவையாகிறது. ஓர் எளிய இலக்கை தெரிவுசெய்கிறார். அவ்வளவுதான்.நான் முன்வைக்கும் இமையம் இவர் அல்ல. இவர் ஓர் எளிய அரசியல்வாதி. நான் நாவலாசிரியர் இமையத்தை முன்வைக்கிறேன்’.இன்று அதேபோல ஓர் இலக்காக என்னை எடுத்துக் கொள்கிறார். இன்றும் அதையே நான் சொல்கிறேன்.

இமையம் எழுதவந்த காலம் முதல் அவருடைய எல்லா நாவல்களுக்கும் வரவேற்புடன் மதிப்புரைகள் எழுதியிருக்கிறேன். தமிழின் முக்கியமான எழுத்தாளராகவே அவரை தொடர்ந்து முன்வைத்து வருகிறேன். நீல பத்மநாபன், பூமணி, இமையம் என்னும் இயல்புவாத அழகியல் வரிசையை பற்றி விரிவாகப்பேசியிருக்கிறேன்.

இமையம் சாகித்ய அக்காதமி விருது பெற்றபோது நான் எழுதியது இது. ’தமிழ் இயல்புவாத எழுத்தின் உச்சங்களில் ஒன்று இமையத்தின் எழுத்து. புகைப்படத் துல்லியத்துடன் வாழ்க்கையைப் பதிவுசெய்வது, அதனூடாக ஆழ்ந்த சமூகவியல் உசாவல்களுக்கு வாசகர்களைக் கொண்டுசெல்வது’ . அவரை அங்கு அல்ல எங்குமே ஒரு தலித் எழுத்தாளர் என்று சொல்லவில்லை. அதற்கு எதிராகவே சொல்லியிருக்கிறேன். .(இமையத்திற்குச் சாகித்ய அக்காதமி) 

அதற்கு முன் 2018ல் இமையத்திற்கு இயல் விருது அளிக்கப்பட்டபோது நான் எழுதியது இது. ‘தமிழின் இயல்புவாத இலக்கியப்போக்கின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். தமிழில் 1990 களில் தலித் அரசியலும் தலித் பண்பாட்டாய்வும் உருவாகி வந்தன. தொடர்ந்து தலித் இலக்கிய அலை எழுந்தது. அந்த அலை உருவாக்கிய இரு பொரும்படைப்பாளிகள் இமையம், சோ.தர்மன். அடித்தளமக்களின் வாழ்க்கையை இயல்புவாத அழகியலுடன் சொல்லும் இவர்களின் கதைகள் சமூக விமர்சனமாக கூர்கொள்பவை. ஆனால் அதற்கும் மேலே சென்று மானுட வாழ்க்கை, வரலாறு சார்ந்து ஆழ்ந்த வினாக்களையும் எழுப்பிக்கொள்பவை. அவ்வகையில் எந்த ஒரு பெரும்படைப்பாளியின் படைப்புக்களையும்போல அழகியல் – சமூகவியல் அடையாளங்களைக் கடந்துசெல்பவை அவை’. அவர்கள் மேல் பிறர் சூட்டும் அடையாளத்தை அவர்கள் கடந்திருப்பதையே சுட்டுகிறேன். (இமையத்திற்கு இயல் விருது)

சில மாதங்களுக்கு முன் இமையத்தின் கட்சியரசியலைச் சுட்டிக்காட்டி என்னிடம் ஒரு கேள்வி வந்தது. அதற்கு அன்று சொன்ன பதிலே இன்றும். அது வேறு இமையம். அந்த இமையத்தை நான் பேசவில்லை. நான் பேசுவது தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான இமையத்தைப் பற்றி மட்டுமே. இலக்கியவாதியின் படைப்புமனநிலையில் வெளிப்பட்டவை மட்டுமே அவனுடைய சொற்கள். (தெய்வச்சொல்)

*

என் இலக்கிய அளவுகோல்கள் என்ன? பல ஆயிரம் பக்கங்கள் இலக்கிய விமர்சனம் எழுதியிருக்கிறேன். அவற்றில் பல ஆயிரம் சொற்களில் திரும்பத் திரும்ப எழுதியவை இவையெல்லாம். ஆனால் இன்றைய சமூகவலைத்தளச் சூழலில் எவரும் எதையும் உளறிவைக்கலாம், அவற்றை ஏந்திச்செல்ல  சிலர் இருப்பார்கள் என்னும் நிலை உள்ளது. அத்துடன் இமையம் சார்ந்த தரப்பின் அச்சுறுத்தும் பிரம்மாண்டம் கொண்ட பிரச்சார வல்லமையை எதிர்கொள்வதும் எளிதல்ல.

ஆகவே இக்குறிப்பு. இதை அவர்கள் வாசிக்க மாட்டார்கள். ஒற்றைவரிகளுக்கு அப்பால் செல்லவும் மாட்டார்கள். இலக்கிய வாசகர்களுக்காகவே இதைப் பதிவுசெய்கிறேன்.

என் இலக்கிய அணுகுமுறை ரசனை சார்ந்தது. நான் கருத்தில்கொள்பவை மூன்று மட்டுமே.

அ. வாழ்க்கைக்கும் இலக்கியப்படைப்புக்குமான உறவு

ஆ. இலக்கியவாதியின் தனிப்பட்டபார்வை அவ்விலக்கியப் படைப்பில் வெளிப்படும் விதம்

இ. அவ்விலக்கியப்படைப்பின் வடிவம், மொழி.

நான் இதுவரை இலக்கிய விமர்சனம் எழுதியுள்ள அத்தனை ஆளுமைகளுக்கும் இந்த அளவுகோல்களையே பயன்படுத்தியிருக்கிறேன். இதை அழகியல் விமர்சனம் என்று குறிப்பிடுகிறேன்.

வாழ்க்கைக்கும் இலக்கியப் படைப்புக்குமான உறவைப் பற்றிப் பேசும்போது அதற்கு இரு தளங்கள் உள்ளன.

ஒன்று, நானறிந்த வாழ்க்கையை, என் வாழ்க்கையனுபவத்தைக் கொண்டு அப்படைப்பை மதிப்பிடுவது. இதை எல்லா வாசகர்களும் இயல்பாகச் செய்கிறார்கள். இலக்கியவிமர்சகன் இன்னும் கூர்மையாக, தர்க்கபூர்வமாக அதைச் செய்கிறான்.

இரண்டு,  அந்த இலக்கியவாதி எழுதும் சமூகக்களம் பற்றிய பிற புனைவுகள், மற்றவகை நூல்கள் ஆகியவற்றைக்கொண்டு அந்த இலக்கியப்படைப்பை மதிப்பிடுதல். உதாரணமாக, பாவை சந்திரன் எழுதிய நல்லநிலம் நாவலை  கு.ப.ரா முதல் தி.ஜானகிராமன் உள்ளிட்டோர் எழுதிய தஞ்சையின் சித்திரத்தை பயன்படுத்திக்கொள்கிறோம்.

அதேபோல அந்த எழுத்தாளரின் தனிப்பட்ட பார்வையை மதிப்பிடுகையில் அவருடைய தனிப்பட்ட ஆளுமையையும் கருத்தில்கொள்வது அழகியல்விமர்சன மரபு. மேலைநாட்டில் அந்தவகையில் எழுத்தாளனின் தனிவாழ்க்கையை மிகமிக விரிவாகவும், மிக உட்புகுந்தும் எழுதியுள்ளனர். எழுத்தாளனின் படைப்புகளிலுள்ள கதைமாந்தரின் மூலச்சாயல்களைத் தேடி அவருடைய உறவு,நட்புச்சூழல் ஆகியவற்றை மிக விரிவாக ஆராய்ந்து பதிவுசெய்கின்றனர். மேலைநாட்டு விமர்சனத்தை கொஞ்சம் வாசிப்பவர்களுக்கு இது தெரியும்.

அழகியல் விமர்சனத்தின் வழி அது என எனக்குத் தெரியும். ஆனால் இந்தியச் சூழலில் அதற்கு இன்னும் இடம் அமையவில்லை என நான் நம்புகிறேன். இங்கே எழுத்தாளன் இன்னும் சமூக மதிப்பிற்குரிய ஆளுமை அல்ல. அவனை இழிவுசெய்ய தருணம் பார்த்திருக்கும் சமூகம் இது. ஆகவே எழுத்தாளனின் தனிவாழ்க்கையை ஆராயக்கூடாது என்பது என் கொள்கை. ஓர் எழுத்தாளன் தன் எழுத்துக்கள் வழியாக அவனே பொதுச்சூழலில் முன்வைக்கும் அவனுடைய தனிப்பட்ட ஆளுமை மற்றும் பார்வை ஆகியவற்றை மட்டுமே கருத்தில்கொள்கிறேன்.

இலக்கியத்தை வகைப்படுத்தி, பகுப்பாய்வு செய்வது இலக்கிய விமர்சனத்தின் வழிமுறை. எந்த இலக்கிய விமர்சனம் ஆயினும் அதுவே வழி. ஆனால் அழகியல் விமர்சனத்தின் வகைப்பாடுகள் மற்ற விமர்சன மரபுகளின் வகைப்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை.  அவை பெரும்பாலும் அப்படைப்பின் வடிவம், மொழி ஆகியவற்றைச் சார்ந்தவை. பேசுபொருள் சார்ந்தவை அல்ல.

அத்துடன் கோட்பாட்டு விமர்சனமரபும், கல்வித்துறை சார்ந்த விமர்சன மரபும் அவர்களின் வகைபாடுகளை ’அறுதியாக’ முன்வைக்கும். அழகியல் மரபு அப்படி அறுதியாக முன்வைக்காது. ஒரு வகைப்பாட்டை அப்படைப்பைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தும். உடனடியாக அதை ரத்து செய்து விடும்.

உதாரணமாக, பூமணியை நான் தமிழ் இயல்புவாத அழகியலின் முதன்மை ஆளுமை என்று வகைப்படுத்துகிறேன்.அது அவருடைய எழுத்தை புரிந்து கொள்வதற்கான முயற்சி மட்டுமே. அவரை இயல்புவாத எழுத்தாளர் என அறுதியாக அடையாளப்படுத்தக் கூடாது என்று உடனே சொல்லிவிடுவேன். அந்நூலில் இதைக் காணலாம். (பூக்கும் கருவேலம்- பூமணியின் புனைவுலகம்) அதையே மேலே காட்டிய உரையில்கூட இமையத்திற்கும் செய்கிறேன்.

ஆகவே, அரசியல் மற்றும் சமூகவியல் சார்ந்து இலக்கியம் மேல் போடப்படும் எந்த அடையாளமும் அழகியல் விமர்சனத்திற்கு ஏற்புடையது அல்ல. தலித் இலக்கியம், முற்போக்கு இலக்கியம், மார்க்ஸிய எழுத்து, திராவிட எழுத்து, மூன்றாமுலக எழுத்து, பின்காலனிய எழுத்து, பெண்ணிய எழுத்து என எந்த அடையாளமும் அழகியல் விமர்சனத்த்தால் ஏற்கப்படுவன அல்ல. நான் எந்த எழுத்தாளரையும் இவ்வடையாளங்களால் மதிப்பிடுவதில்லை.

என் இலக்கிய விமர்சனத்தின் மையச்செயல்பாடே இந்த அடையாளங்களை நிராகரிப்பதுதான். இந்த அடையாளங்கள் இலக்கியத்திற்கு எதிரானவை, இலக்கியத்தை அணுகத் தடையானவை, இவற்றை கடந்தே இலக்கியத்தை உள்வாங்கமுடியும் என்றே நான் முப்பதாண்டுகளாக அனேகமாக எல்லா இலக்கிய கட்டுரைகளிலும் சொல்லிவருகிறேன்.

ஆகவே, தமிழில் எழுதிவரும் எந்த படைப்பாளியையும் தலித் எழுத்தாளர் என்றோ அல்லது வேறு சமூகவியல் அல்லது அரசியல் அடையாளத்துடனோ நான் முன்வைத்ததில்லை. அவரே தன்னைப்பற்றி அந்த அடையாளத்தை முன்வைத்தால்கூட நான் அதை கருத்தில் கொள்வதில்லை. ராஜ் கௌதமன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் தங்களை தலித் ஆய்வாளர்கள் என்றே முன்வைப்பவர்கள். ஆனால் நான் அவர்களை பண்பாட்டு ஆய்வாளர்கள் என்றே குறிப்பிடுகிறேன்.

கண்மணி குணசேகரன் தன்னை ஒரு வன்னிய எழுத்தாளர் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொள்கிறார். அவருடைய எதிரிகளும் அவரை அதைச் சொல்லி விமர்சிக்கிறார்கள். அவர்சார்ந்தும் என் நிலைபாடு ஒன்றே. நான் அவரை தமிழின் இயல்புவாத அழகியல்மரபில் இமையத்திற்குப் பின் வந்த ஒரு முக்கியமான எழுத்தாளர் என்றே மதிப்பிடுவேன். வன்னியச் சாதிச்சூழல் அவருடைய புனைவுலகின் பேசுபொருள். வன்னியர் என்பது அவருடைய தனிப்பட்ட அடையாளம். இலக்கியத்தில் அவரை அந்த அடையாளத்தை அவரே கோரினாலும் நான் அளிக்கப்போவதில்லை.

*

’தலித்’ அல்லது ‘முற்போக்கு’ அல்லது ‘திராவிட’ எழுத்துக்கள் என்னும் வகைப்பாடு அழகியல் விமர்சனம் உருவாக்குவது அல்ல. ஆனால் பிறர் அந்த வகைப்பாட்டை உருவாக்கி முன்னிறுத்தும்போது அதை அழகியல் விமர்சனம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும். எதற்காக? அந்த எழுத்தாளரின் இலக்கியப்படைப்பில் உள்ள சமூகச் சூழலை புரிந்துகொள்வதற்காக மட்டும். அதையும் ஓர் அடையாளமாக அது கருத்தில் கொள்ளாது, ஒரு பேசுபொருளாகவே கருத்தில்கொள்ளும். அவ்வளவுதான்.

அதாவது அழகியல்விமர்சனம் இமையத்தை ‘தலித் எழுத்தாளர்’ என அடையாளப்படுத்தாது. இமையத்தின் பலநாவல்களில் தலித் வாழ்க்கை பேசுபொருளாகியிருப்பதை மட்டுமே அது கருத்தில்கொள்ளும். அவ்வாறு மட்டுமே நான் கருத்தில் கொண்டிருக்கிறேன். அவற்றில் தலித் என்னும் சொல்லை ஏன் பயன்படுத்துகிறேன் என்றால் வேறு எல்லா சொற்களையும் அவர்கள் அரசியல்சரி கொண்டவை அல்ல என நினைக்கிறார்கள் என்பதனால்தான்.

இமையத்தை பற்றிப் பேசும்போது தலித் என்னும் பேச்சை ஒரே ஒரு வகையில் மட்டுமே நான் முன்வைத்திருக்கிறேன். தமிழில் தலித் இலக்கியம் உருவாகவேண்டும் என வாதிட்ட முன்னோடிகள் ராஜ் கௌதமன், தமிழவன், அ.மார்க்ஸ் மற்றும் ரவிக்குமார். அவர்கள் அனைவருமே உருவாகவேண்டிய தலித் இலக்கியம் என்பது மாயயதார்த்த அழகியல், பின்நவீத்துவப் பார்வை கொண்டவையாக இருக்கவேண்டும் என்று வாதிட்டனர். ஆனால் இமையம், சோ.தர்மன், அழகியபெரியவன் ஆகியோர் வழியாக தலித் வாழ்க்கை எழுதப்பட்டபோது அவை யதார்த்தவாத, இயல்புவாத எழுத்தாகவே இருந்தன.

இந்த யதார்த்தவாத அழகியல் அல்லது இயல்புவாத அழகியல் ஏன் தலித் வாழ்க்கையைச் சொல்ல உதவியாக இருக்கிறது, ஏன் இவர்கள் அதை தேர்வுசெய்தனர் என்ற அளவிலேயே நான் விவாதித்துள்ளேன். அத்தனை கட்டுரைகளிலும். கூடவே, அவர்களில் முதல் இருவரும் தங்கள் எழுத்தை தலித்திய எழுத்து என்று சொல்லிக்கொள்வதில்லை, ஆகவே அவர்களை அவ்வகையில் அடையாளப்படுத்தலாகாது என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்த விவாதமே இமையம் எழுதவந்தபோது , அவர் அன்றிருந்த தலித் கோட்பாட்டாளர்களின் கொள்கைவகுப்புக்கு ஏற்ப எழுதவில்லை என்பதனால் அவர் எழுதுவது தலித் வாழ்க்கையை அல்ல என்றும், அவர் பார்ப்பனர்களின் கையாள் என்றும், அவர் தலித் ஒற்றுமையை குலைப்பவர் என்றும் அ.மார்க்ஸ் உள்ளிட்டோரால் கடுமையாக பழிக்கப்பட்டபோது அதற்கு எதிராக கலைஞனின் தன்னிச்சையான பயணத்தை வலியுறுத்தும்பொருட்டு சொல்லப்பட்டதுதான்.

என் பார்வையில் இமையத்தை நீல பத்மநாபன், பூமணி ஆகியோரின் தொடர்ச்சியாக இயல்புவாத அழகியலை முன்வைத்தவர் என்றே மதிப்பிட்டிருக்கிறேன். அவருடைய தொடர்ச்சியே கண்மணி குணசேகரன். இவ்வண்ணம் சொல்லும்போது கூடவே, அப்படி இவர்களை இயல்புவாத அழகியல்வாதிகள் என்று பார்ப்பதேகூட ஒரு வகை புரிந்துகொள்ளும் முயற்சியே ஒழிய அறுதியான அடையாளம் அல்ல என்றும் கூறியிருக்கிறேன்.

அழகியல் விமர்சன நோக்கில் இலக்கியவாதியின் தனிப்பட்ட பார்வையை ஆராய்வது மிக முக்கியமானது. அதற்கு அந்த இலக்கியவாதியின் தனியாளுமை, சமூகப்பின்புலம் ஆகியவற்றை கருத்தில்கொள்வது அவசியம். உலகம் முழுக்க அப்படித்தான். ஓர் யூத எழுத்தாளரின் எழுத்தை மதிப்பிடுவதில் அவருடைய யூதப்பின்னணி கருத்தில்கொள்ளப்படாமல் இருந்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை.

அந்த அணுகுமுறையே என்னுடையதும். மேலைநாடுகள் போல தனிவாழ்க்கைக்குள் நான் செல்வதில்லை. ஆனால் சமூகப்பின்னணியை கருத்தில்கொள்வேன். மௌனி, லா.ச.ரா, தி.ஜானகிராமன் ஆகியோரின் ஸ்மார்த்த பிராமணப் பின்புலத்தை அவர்களைப் பற்றிய கட்டுரையில் மிக விரிவாகவே ஆராய்ந்துள்ளேன். அவர்களின் பார்வையிலுள்ள ‘உக்கிரமான பெண்மை’ என்னும் கருத்துரு, அல்லது அவர்களின் ஒலியிசைவு மற்றும் இசை சார்ந்த ஈடுபாடு ஆகியவை அப்பின்னணியில் வைத்து மதிப்பிடத்தக்கவை. ஆனால் அது அவர்கள் பிராமண எழுத்தாளர்கள் என்னும் அடையாளப்படுத்தல் அல்ல.

எனக்கு நீல பத்மநாபன் ஏழூர் செட்டியார் என்னும் சிறிய சாதிக்குழுவைச் சார்ந்தவர் என்பதும், ஆ.மாதவன் வேளாளர் என்பதும், பூமணி தேவேந்திரர் குலத்தவர் என்பதும் அவர்களின் உலகைப் புரிந்துகொள்ள முக்கியமானவை. ஆனால் அவர்களை அந்தந்த குலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என மதிப்பிட்டதில்லை. அவ்வகை அடையாளங்களை கடப்பதே அழகியல் வாசிப்பு என்பது.

உண்மையைச் சொல்லப்போனால் அந்த அளவுக்கு இமையம் போன்றவர்களின் இலக்கியப்படைப்பை அளவிட அவருடைய சாதிப்புலத்தை நான் கருத்தில் கொண்டதில்லை. ஏனென்றால் அவருடைய படைப்புகளில் அவருடைய சாதிப்புலம் சார்ந்த நுண்ணிய தகவல்களோ, நுண்ணிய உளவியல்களோ, அரிய பண்பாட்டுக்கூறுகளோ வெளிப்படவில்லை. பூமணியின் பிறகு நாவலுடன் ஒப்பிட அதை உணரலாம். அவருடைய எழுத்து புறப்பதிவுகளாலானது. ஆகவே அந்த கலாச்சாரப் பின்னணியை விரிவாகக்  கருத்தில் கொள்ளவேண்டிய தேவை எழவில்லை.

இத்தனைக்கும் அப்பால் மீண்டும் அதே கேள்வி. இமையத்தை நான் எப்படி மதிப்பிடுகிறேன்? தமிழில் நீல பத்மநாபனில் தொடங்கி கண்மணி குணசேகரன் வரை நீளும் இயல்புவாத எழுத்தின் நீட்சியாக. வடதமிழக வாழ்க்கையை , அதில் தலித் வாழ்க்கையை முன்வைத்தவராக, மெல்லிய நாட்டார் அழகியலம்சம் வழியாக இயல்புவாதத்தை மீறிச்சென்றவராக. அவ்வகையில் தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவராக.

அவருடைய இந்த அரசியலை எப்படி பார்க்கிறேன்? சரிதான், இந்த அரசியலில்தான் அவர் என்றும் இருந்துகொண்டிருக்கிறார். இதில் அவர் ஏற்கனவே விற்பன்னர். இந்த அரசியல்வாதியான இமையம் அல்ல அக்கதைகளை எழுதிய இலக்கியவாதி.

————————————————————————–

 

விருதுகள், அடையாளங்கள்

இமையத்தின் செல்லாத பணம் – டெய்ஸி பிரிஸ்பேன்

இமையத்தின் ‘பெத்தவன்’ – உஷாதீபன்

இமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்

இமையம் வல்லினம் சிறப்பிதழ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2023 11:35

செ.இராசு 

தமிழக வரலாற்றெழுத்தின் இரண்டாம் கட்டம் என்பது மைய ஓட்ட வரலாற்றுக்கு நிகராக வட்டாரவரலாறுகளை பதிவுசெய்வதும் ஆராய்வதும். கொங்குவட்டார வரலாற்றை மிகவிரிவாக ஆராய்ந்து பதிவுசெய்த செ.இராசு அதில் முன்னோடியாகக் கருதப்படுகிறர். கல்வெட்டுகள், பழந்தமிழ் நூல்கள் ஆகியவற்றுக்கு நிகராக நாட்டாரியல் தரவுகளையும் கருத்தில்கொண்டு எழுதப்பட்ட அவரது நூல்கள் நுண்வரலாறு என்னும் வகைமையைச் சார்ந்தவை.

செ.இராசு செ.இராசு செ.இராசு – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2023 11:34

குருகு இதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு,  ‘‘குருகு’’ மூன்றாவது இதழ் வெளிவந்துள்ளது. சென்ற மாதம் வெளியான  “தியோடர் பாஸ்கரன் சிறப்பிதழுக்கு” வந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.இந்த இதழில் பௌத்த தத்துவ அறிஞர் ஓ. ரா. ந. கிருஷ்ணனின் நேர்காணல் இடம் பெறுகிறது, இன்றுள்ள தமிழ் பௌத்த அறிஞர்களில் கிருஷ்ணன் முதன்மையானவர். நாராயண குரு இயற்றிய தத்துவ பாடல்களில் ஒன்றான ‘தெய்வ தசகம்’  பிரபஞ்சம் தழுவிய பிரார்த்தனைப்  பாடல்.  அதே குரு மரபைச் சேர்ந்த  ‘நித்ய சைதன்ய யதி’  தசகத்திற்கு எழுதிய உரை ஆனந்த் ஶ்ரீநிவாசனால் இந்த இதழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.‘ஆடல்’ தொடர் குழந்தை முருகனின் ஆடலை அணுகி நோக்கும் கட்டுரையாக விரிந்துள்ளது. ஓவியர் ஜெயராம் அழியக்கூடிய பொருள்களால் ஆகும் கலை பற்றிய   கட்டுரையை எழுதியுள்ளார்.அன்புடன் குருகு] குருகு இதழ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2023 11:31

சவார்க்கர், கடிதங்கள்

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)

அன்புள்ள ஜெ,

சாவர்க்கர் பற்றிய த்ங்கள் பதிவு இன்றியமையாத மற்றும் முக்கியமான விவாதத்தை தோற்றுவிக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்தை மிக தைரியமாக வைத்திருப்பதை கண்டு எனக்கு உங்களிடத்தில் இருந்த மதிப்பு மேலும் கூடுகிறது. இதே அளவு காத்திரத்துடன் இதை எதிர்த்துவரும் கட்டுரைகளுக்காகவும் விவாதங்களுக்காகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றேன்.  அவ்வாறு நிகழுமாயின் அது ந்ம் சமூகத்தின் அறிவு மட்டத்தை உயர்த்தும். இதை இடையறாது செய்ய தாங்கள் நெடுங்காலம் நல்ல உடல் மற்றும் மன நலம் பெற்று வாழ அவா.

 

நன்றி,

முத்து.

 

அன்புள்ள ஜெ

சாவர்க்கர் பற்றிய கட்டுரை பல முக்கியமான திறப்புகளை அளித்தது. அரசியல் களத்தில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு வசைகளும், ஏளனமும், அவதூறும் எல்லாமே ஆயுதங்கள்தான். தங்கள் தரப்பிலுள்ள அடிப்படைவாதத்தை கொண்டாடியபடி எதிர்த்தரப்பின் அடிப்படைவாதத்தை வெறுப்பார்கள்.

ஆனால் பொதுவாசகன் எந்த ஒரு தரப்பையும் எடுக்காமல் வேல்யூஸ் மட்டுமே அடிப்படையாகக்கொண்டு விஷயங்களைப் பார்க்கவேண்டும். அவனுடைய முடிவுகள் அப்படி எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அந்த வகையில் ஒரு அடிப்படை வேல்யூவின் அடிப்படையில் சாவர்க்கரை நிராகரிக்கும் கட்டுரை அதே வேல்யூவின் அடிப்படையில் காந்தி,நேரு, அம்பேத்கர் ஆகியோரை ஏற்கிறது. அரசியல்வாதிகளுக்கு strategy உண்டு. தேவையும்கூட. ஆனால் பொதுவானவர்களுக்கு அப்படி ஒன்று இருந்தால் சிந்தனையே இல்லாமலாகிவிடும்.

காந்தியை காப்பாற்றியது அவருக்கு பகுத்தறிவை விட கான்ஷியஸ் மேல் நம்பிக்கை இருந்தது என்பதுதான்.

செந்தில்ராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2023 11:30

When the void stares right back at you

Despite the filth and the moral turpitude that underlies this topic, human grace and hope gleam through. The superlative craftsmanship of the writer and his intimate knowledge of topography is entrenched in his own reflections as a beggar at Pazhani…

Read more at: https://www.deccanherald.com/sunday-h...

When the void stares right back at you 

Nandita Bose  

The Abyss- Amazon 

 

Tamil Nadu | Writer-critic B. Jeyamohan draws on his experiences living as a beggar in his 20s in new book The Abyss

‘The Abyss’ – an English translation of Jeyamohan’s Tamil novel ‘Ezhaam Ulagam’

Jeyamohan interview: Ezhaam Ulagam, or The Abyss, is a spiritual inquiry into beggars’ lives

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2023 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.