Jeyamohan's Blog, page 595
April 16, 2023
எழுத்தாளர்களும் சினிமாவும்
ஏ வின்செண்ட், பஷீர், எம்.டி.வாசுதேவன்நாயர்
என்றும் பஷீர்
வணக்கம் ஜெ…
பஷீர் அவர்களில் ஆக சிறந்த படைப்பான மதிலுகள் படம் பார்த்தேன்… வழக்கமான கேள்வி தான் நம் தமிழில் இது போல் ஒரு படம் வெளிவர எத்தனை வருடம் பிடிக்குமோ..?
எழுத்தாளனின் வாழ்க்கை படமாக்க எவரும் முன் வர வில்லையோ என்ற கேள்வி வந்து போகிறது. தமிழ் ஆளுமைத் திறன் கொண்டவராக புதுமைப்பித்தன் பற்றிய ஒரு படம் வெளிவர நாட்கள் பல காத்திருக்க வேண்டும் போல…
தங்கள் கருத்துக்களை ஏற்கும் சிறந்த திரைப்பட இயக்குனர் களிடம் இது பற்றி பேசி பார்க்கலாம்.. மேலும் புதிய வெளிச்சம் நோக்கிய பயணமாக தமிழ் திரைப்பட உலகம் அமையும் என்பது என் சிறு புத்திக்கு எட்டிய யோசனை…
நன்றி..
கண்ணன் ந.பா
கொட்டாரம்,
கன்னியாகுமரி மாவட்டம்.
அன்புள்ள கண்ணன்,
1964ல் பஷீர் மேல் பெருமதிப்பு கொண்ட வாசகராக ஏ.வின்செண்ட் இருந்தார். (படத்தில் அவர் பஷீர் அருகே அமர்ந்திருக்கும் பணிவை பாருங்கள்) தமிழில் புதுமைப்பித்தனுக்கு அவ்வாறு ஒரு சூழல் அமையவில்லை. அன்று எவருக்கும் நவீன இலக்கியம் மீது மதிப்பில்லை. இலக்கியம் மீதே மதிப்பில்லை. ஏனென்றால் இலக்கியமே அன்று பெரிதாக அறியப்படவில்லை. அன்றைய நட்சத்திரமான அகிலன் சினிமாவுக்கு எழுதப்போய் அவமானப்பட்டு திரும்பினார். அதை பதிவு செய்துள்ளார்.
இன்று, இலக்கியம் மேல் பெருமதிப்பு கொண்ட இயக்குநர்கள் பலர் உள்ளனர். அது சென்ற முப்பதாண்டுகளில் நவீன இலக்கியம் ஈட்டிக்கொண்ட மரியாதை. அத்துடன் இலக்கியவாசகரும், இலக்கியவாதிகள் மேல் மதிப்புள்ளவருமான பாலு மகேந்திரா தனிப்பட்டமுறையில் உருவாக்கிய மாற்றம். அத்துடன் சென்ற முப்பதாண்டுகளில் பொதுவெளிக்கு வந்து தன்னை நிறுவிக்கொண்ட இலக்கிய மதிப்பீடுகளும் அதற்கு உதவின. அதுவே என்னைப் போன்றவர்களுக்கு சினிமாவில் இடமும் மதிப்பும் உருவாகக்க் காரணம்.
ஆனால் உண்மையில் இன்னமும்கூட பார்கவிநிலையம் போன்ற ஓர் இலக்கியப்படத்தை தமிழில் எடுக்கமுடியாது. எழுத்தாளனை கதைநாயகனாக்கிய ஒரு படத்தை கற்பனை செய்யவே முடியாது. என்னிடம் எவராவது கேட்டால், வேண்டாம், நஷ்டம் வரும், விஷப்பரீட்சை என்றே சொல்வேன்.
ஏன்? நம் மக்களில் ஏதேனும் வகையில் இலக்கிய அறிமுகம் கொண்ட எத்தனைபேர் உள்ளனர்? மிகப் புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் பெயராவது தெரிந்தவர்கள் எத்தனை சதவீதம்? அவர்களை நம்பி ஒரு சினிமாவை எடுக்கமுடியுமா?
சரி, இங்கே சினிமா விமர்சனம் செய்பவர்களில் இலக்கியத்தில் மிகமிக மெல்லிய அறிமுகமாவது கொண்டவர்கள் எத்தனைபேர்? அவர்கள் இங்கே சினிமா ரசனையை தீர்மானிக்கிறார்கள் அல்லவா? இன்றைய சூழலில் தமிழில் வணிகப்படங்களே எடுக்கமுடியும், அவற்றில் கொஞ்சம் கலையைச் சேர்க்கமுடியும், அவ்வளவுதான்.
பஷீர் பற்றி எடுக்கப்பட்டதுபோல் ஒரு படத்தை இன்று தமிழில் எடுக்கமுடியாது என்பதற்கு காரணம் இங்குள்ள மனப்பதிவுகள். எழுத்தாளன் என்னும் ஆளுமையையே இன்னமும் நம்மில் மிகப்பெரும்பாலானவர்கள் மிகமிக எளிமையாகக்கூட அறிமுகம் செய்துகொண்டிருக்கவில்லை. இதுவரை எழுத்தாளனை சினிமாவில் காட்டிய போதெல்லாம் அவனை மேடைப்பேச்சாளனாகவே காட்டவேண்டியிருக்கிறது என்பதை நினைவுகொள்ளுங்கள்.
எழுத்தாளனின் தனிமை, கொந்தளிப்பு, பித்து எதையும் நம்மவர் அறியமாட்டார்கள். தங்களுக்கு உவப்பான ‘நல்ல’ கருத்துக்களைச் சொல்லியபடி, எல்லாஇடங்களிலும் ‘நல்லவனாக’ வாழும் ஒருவனே எழுத்தாளன் என்ற அசட்டுநம்பிக்கையே இன்று இணையச்சூழலில் பேசிக்கொண்டிருக்கும் அனேகமாக அனைவரிடமும் உள்ளது. எழுத்தாளன் எழுதுவது ’கருத்து’ அல்ல, அவன் உருவாக்குவது வாழ்க்கையின் நிகரனுபவத்தை என்பதை அவர்கள் அறிவதில்லை. அவர்களில் பலர் ஓரளவு கல்வி கற்றவர்கள்.
இச்சூழலில் சாமானியர்களைப் பற்றி என்ன சொல்லமுடியும்?
ஜெ
அழகாபுரி அழகப்பன்
அழகாபுரி அழகப்பன் என்ற பெயரை எழுபது எண்பதுகளில் குமுதம் இதழை வாசித்தவர்கள் மறந்திருக்க முடியாது. மாதம் ஒரு கதையாவது வெளியாகிவிடும். குமுதம் ஆசிரியருக்கு அவர்மேல் ஒரு கனிவு இருந்தது. ஏனென்றால் அழகப்பனும் செட்டிநாடுதான். சினிமாவில் நடித்திருக்கிறார். முந்நூறுக்கும் மேல் நாவல்களை எழுதியிருக்கிறார். குறைவானவற்றின் பெயர்களே இன்று கிடைக்கின்றன.
அழகாபுரி அழகப்பன் – தமிழ் விக்கி
சந்தித்தல், கடிதம்
பிப். 9 அன்று நீங்கள் பதிவிட்டு இருந்த பால முருகன் என்பவரின் கடிதத்தையும், அதற்கான உங்களது பதிலையும் படித்தேன். பால முருகன் அவர்கள் குறிப்பிட்டு இருத்த, ‘மறுபடியும் உங்ககிட்ட பேசணும்னு ஆசப்பட்டு இன்னொரு Book வாங்கி மறுபடியும் உங்க கிட்ட கையெழுத்து வாங்க நீட்டினேன். நீங்க என்ன பாத்து ஒரு நொடி சிரிச்சுட்டு அந்த Bookல கையெழுத்து போட்டு கீழ உங்க Mobile Number எழுதி “Call பண்ணிட்டு ஒரு நாள் என்ன நேர்ல வந்து பாருங்க” னு சொன்னீங்க. எனக்கு சந்தோஷம் தங்கல‘ என்ற நிகழ்வு எனக்குள் சிறு அதிர்வு, மகிழ்வை உருவாக்கி இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் நான் மேலும் ஓரடி உங்களை நெருங்கி நிற்பதாய்த் தோன்ற செய்தது.
உங்களை நான் நேரில் கண்டதில்லை. ஆனால், அந்த ஆவல் நான் புத்தகக் கண்காட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் என்னிடம் உண்டு. விஷ்ணுபுரம் பதிப்பகத்தை நெருங்கும்போதே எனக்குள் ஒரு படபடப்பு உருவாகுவதை என்னால் உணர முடிகிறது. உங்களை நேரில் கண்டால் ஒருமுறை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும். அதேநேரம் அது அதிகப்பிரசங்கித் தனமாக இருக்கும் என்றும் தோன்றும். அப்படி தோன்றித்தான் நான் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களைக் கண்டபோது கையெழுத்தை மட்டும் பெற்றுக் கொண்டு கடந்து வந்தேன். அவரைவிட்டு விலகும் வரை, ‘ஒரு ஹக் பண்ணிக்கலாமா சார்’ என்ற சொற்றொடர் எனக்குள் சுழன்று கொண்டே இருந்தது.
நீங்கள் என்னுடைய ஆசிரியர்கள். எழுத்து சார்ந்து எனக்குள் இருக்கும் கேள்விகளுக்கு ஏதோ ஒரு வழியில் தொடர்ந்து எனக்குப் பதில் அளித்து வருபவர்கள். உங்களை நெருங்க எனக்கு எப்பொழுதும் தயக்கமாக இருக்கிறது. ‘நான் எப்படி அவர்களை’ என்ற எண்ணம் மேலோங்குகிறது. இந்த எண்ணம், நீங்கள் அலைபேசி எண் எழுதிக் கொடுத்ததாகப் படித்தபோது மட்டுப்பட்டிருக்கிறது. அதுதான் அந்த அதிர்விற்கும், மகிழ்விற்கும் காரணம் என்று நம்புகிறேன். உங்களையும் ஒரு நாள் நேரில் கண்டு, என் எழுத்து சார்ந்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்வேன் என்றும் நம்புகிறேன். நன்றி ஆசானே!
– தினேஷ்
அன்புள்ள தினேஷ்
நான் எப்போதும் எனக்கு என ஒரு நெறியை வைத்திருக்கிறேன். சிந்தனையை அறியவிரும்பும் எவருக்கும் அணுகக்கூடியவனாகவே இருக்கவேண்டும் என்பது அதன் முதல் நெறி. ஆனால் வீணாக ஒருபொழுதையும் செலவழிக்கலாகாது எவருக்காகவும் என்பது என்னுடைய இரண்டாவது நெறி.
உங்கள் ஆர்வம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் தயங்கவேண்டியதே இல்லை. நான் என் ஆசிரியர்களை தேடிச்சென்றது நான் தகுதிபெறும்பொருட்டே ஒழிய எல்லா தகுதிகளையும் அடைந்தபின்பு அல்ல.
ஜெ
முழுமையெனும் மாயப்பொன் – கடிதம்
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
உங்களுடைய மாயப்பொன் சிறுகதையை வாசித்தேன். இந்தக் கதையை எனக்கு கொடுத்த உங்களுக்கு என்னால் மட்டும் எழுத முடிந்திருந்தால் குறைந்த பட்சம் நான் நினைப்பதை நல்ல முறையிலாவது எழுதிக் கொடுத்திருப்பேன்.
என் வேலையை செய்வதால் மட்டும் தான் நான். இந்த வேலையை செய்ய வில்லையென்றால் அது நான் இல்லை, என்று நான் செய்கிற வேலை மீது கிறுக்கு கொண்டவன் என்கிற முறையில் எனக்கு இந்தக் கதை மிக ஆழமாக connect ஆனது.
நீங்கள் நான் வாசித்த வரையில் குறைந்த பட்சம் ஒரு பத்துக் கதைகளாவது ஒரு அசாத்திய படைப்பாளியாக இருப்பதை பற்றி அல்லது ஒரு படைப்பாளியின் மனதைப் பற்றி நீங்கள் எழுதி இருப்பீர்கள். ஆனால், நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.
மாயப்பொன் கதை மட்டும் ஒருவேளை ஒரு வேளை ஒரு மனிதனாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டால், அது உங்களிடம் இப்படி சொல்லும்,
“நீயே நினைத்தாலும் என்னைப் போன்ற இன்னொரு கதையை எழுத முடியாது” என்று.
நான் உங்கள் படைப்புதிறனை சீண்டுவதற்கு இதைச் சொல்லவில்லை. உங்களை என் ஆசிரியராக பல முறை நினைத்திருக்கிறேன். அதனால், உங்களை வணங்கி மிகத் தாழ்மையுடன் சொல்கிறேன். உங்களின் மிகச் சிறந்த படைப்பு இந்தக் கதை தான்.
இந்தக் கதை வசிப்பதற்கு முன்பு இன்று 10 மணி வரை கொற்றவை தான் உங்களது சிறந்த படைப்பு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதனால் என் மதிப்பீடுகளை serious ஆக எடுத்துகொள்ள வேண்டாம். ஆனால், இந்த வார்த்தையை இந்தக் கதைக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் சொல்கிறேன்.
நான் நன்றாக வேலை செய்தும், நான் செய்த வேலைகளை அவர்கள் செய்ததாக சொல்லி அதன் மூலம் பலன்களை பெற்றுக் கொண்டும், என் பதவி உயர்வை என் உயர் அதிகாரிகள் தாமதப்படுத்துவதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அதிலிருந்து வெளியேற நேற்று தான் ஒரு திட்டமிட்டேன். இன்று அந்த திட்டப்படி செயல்பட தொடங்கினேன். உறங்கப் போகும் முன் தான் இந்தக் கதையை படித்தேன்.
சாகப்போனவன் ராஜா பாடலைக் கேட்டு சாவை விட்டு வந்தான் என்று சொல்வதுண்டு அது போல இந்தக் கதை எனக்கு மிகப் பெரிய ஒரு ஆறுதலை. எவனுமே என்னை recognise பண்ணாட்டியும் நான் என் வேலைல கெத்து. Promotion என் success இல்லை, வேலையில்ல இருக்கிற மாயப்பொன்னை அடிக்கிறது தான் என்னோட success ன்னு ஒரு தெளிவோட தூங்கப்பபோறேன்.
விடிந்தவுடன் இந்த motivation மாறிடும் அதனால் இதனை இப்போதே பகிர்ந்து கொள்ள இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறேன்.
மீண்டுமொருமுறை இந்தக் கதையை எழுதிய உங்களுக்கும், இந்தக் கதையை சொல்லி அறிமுகப்படுத்திய பவாவிற்கும் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
சபரிராஜ் பேச்சிமுத்து,
இயந்திரவியல் பொறியாளர்,
கோயமுத்தூர்.
அன்புள்ள சபரிராஜ்
முழுமை என்பது எங்கோ ஒரு புள்ளியில், இயற்கையைப் படைத்த சக்திகளிடம் , உள்ளது. நாம் அதைநோக்கிச் சென்றுகொண்டே இருப்பது வரைக்கும்தான் செயலூக்கம் கொண்டவர்களாக இருப்போம். செயலூக்கமே மகிழ்ச்சி என்பதே நான் கண்டுகொண்டது.
ஜெ
மழையில் சொல்லப்பட்டது…
[image error]முதற்கனலின் வெம்மை தணிந்து, மழையில் நனைந்து இதயம் குளிர்கிறது இரண்டாம் பாகத்தில்!!
இத்தனை பக்கங்களா (1013) என்று வாசிக்கத் தொடங்கும் போது தோன்றி, அதற்குள் முடிந்துவிட்டதா என்று வாசித்து முடித்தத்தபின் தோன்றியது!! அத்தனை விறுவிறுப்பாக கதை நகர்கிறது.
பொதுவாக புத்தக தலைப்பின் பெயரின் காரணம் கதையில் வருவதை வாசிக்கும் போது ஒரு நெகிழ்வு வரும். “சூழ்ந்திருந்த அனைத்துப் பனிமலைப்பரப்புகளும் ‘வெண்முரசுகளாக’ மாறி அதிர்ந்து ஓய்ந்தன” என்று வாசித்த போது அதே நெகிழ்வு.
நமக்கு நன்கு தெரிந்த மகாபாரதக் கதையையே இத்தனை சுவாரசியமாக வாசிக்க வைத்த ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் எழுத்துநடை, மொழி வளம், கதைக்குள் நம்மை கட்டுண்டு கிடக்க வைக்கும் திறன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவை.
[image error] ஓவியம்: ஷண்முகவேல்அம்பையின் அணையா நெருப்பின் வஞ்சம் சுடர்விட்டு முதல் பாகம் எரிய, இரண்டாம் பாகத்தின் கதை இரண்டாம் தலைமுறைக்கு நகர்கிறது.
மழைப்பாடல் என்று கதையின் பெயர் இருப்பதாலோ என்னவோ கதை நெடுக மழையும் பொழிகிறது அனைத்து முக்கிய தருணங்களிலும்.
முதற்கனலில் நாகங்களின் உவமைகள் அதிகம் தோன்ற, மழைப்பாடலில் யானையின் உவமைகள் நிறைய இருப்பதாக தோன்றியது.
நாம் கேட்ட கதைகளில் நல்லவர்கள் தீயவர்கள் என்று மனம் ஏற்கனவே வகுத்து வைத்துவிட்ட கதாப்பாத்திரங்களின் மறுபக்கம் வாசிக்கும் போது, நன்மை தீமையை உருவாக்குவது சந்தர்ப்பங்களும்,அவர்கள் அனுபவங்கள் மட்டுமே என்று உணர முடிகிறது.
காசி நாட்டு இளவரசிகள் அம்பிகை அம்பாலிகைக்கும், சூதப் பெண் சிவைக்கும் வியாசர் மூலமாக அறப்புதல்வர்களாக திருதிராஷ்டன், பாண்டு, விதுரன் பிறக்கிறார்கள் . நான் அறிந்த கதைக்கு நுழையப்போகும் ஆர்வம் வாசிப்பை வேகம் கொள்ளச் செய்தது.அவர்கள் வளர, அவர்கள் வாழ்க்கை ஒருபுறம் நிகழ, மறுபுறம் காந்தாரி, குந்தியின் வாழ்க்கைக் கதை விரிகிறது.
காந்தாரத்தின் சுடுமணல் பாலைகள் ஆசிரியரின் வார்த்தைகளில் கோடையின் வெம்மையாக தகிக்கிறது. நாம் அறிந்த வெறுக்கும் நயவஞ்சகன் சகுனியை, நாம் அறியாத ஒரு திறன் வாய்ந்த மதியூகி சௌபாலராக வாசிக்க முடிந்தது.காந்தாரத்தில் பிறந்ததனால் இளவரசிகள் 11 பேரையும் காந்தாரிகள் என்று பிறந்த ஊரைக் கொண்டு அழைக்கப்படுகிறார்கள் என்பது வசுமதியை மட்டுமே காந்தாரி என்று நினைத்திருந்த எனக்கு, அழகான நான் அறிந்திராத தகவலாக தோன்றியது.
பிருதை என்ற யாதவ குலச் சிறுமியை, குந்திபோஜன் மன்னன் மகள் கொடையாக பெற்றதனாலே குந்தியானாள். அமைதியான, தன் குழந்தைகளுக்காக மட்டும் வாழ்பவள் என்று அறிந்த அவளை ஒரு தலைசிறந்த அரசியல் மதியூகியாக பிருதையாக ஜெ.மோவின் வார்த்தைகளில் காணமுடிந்தது.
திருமணங்கள் என்பவை அரசியல் காரணங்களுக்காக, நாட்டின் பாதுகாப்புக்காக மட்டுமே. திருதிராஷ்டன் காந்தாரிகள் திருமணம், பாண்டு குந்தி சுயம்வரம் என எல்லாம் நடந்து பின் அரியணை பிரச்சனையும் தொடங்குகிறது.
பிருதைக்கு திருமணத்துக்கு முன் பிறந்த மைந்தன். நல்ல நிமித்தங்கள் கொண்டு வனத்தில் பிறக்கும் பாண்டவர்கள்,தீயநிமித்தங்கள் கொண்டு அஸ்தினாபுரியில் பிறக்கும் கௌரவர்கள் என பாரதப்போர் நிகழ்விடத்தை நிறைக்கும் அனைவரின் பிறப்பும், பாண்டு மாத்திரி மரணமும், அரசியர் வனம் புகுதலுடன் நிறைவு பெறுகிறது புத்தகம்.
மழை வழிந்தோடி இறுதியில் கடலில் சேரும். மழைப்பாடலைத் தொடர்ந்து வண்ணக்கடல் இருப்பது அதனால் தானோ
அனிதா பொன்ராஜ்
(முகநூலில் இருந்து)
மழைப்பாடல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)
மழைப்பாடல் வாங்க
வெண்முரசு நூல்கள் வாங்க
மழைப்பாடல் மின்னூல் வாங்க
வெண்முரசு மின்னூல் வாங்க
April 15, 2023
கனவுகளின் காலத்தில் வாழ்தல்
1984 இறுதியில் நான் காசர்கோடு தபால்-தந்தி ஊழியர் சங்கத்தின் கம்யூனில் தங்க ஆரம்பித்தபோது தோழர் நந்தகுமார் எனக்குப் பரிந்துரைத்த நூல்களில் ஒன்று செறுகாடு எழுதிய வாழ்க்கை வரலாறு. வாழ்க்கை வரலாறுகளில் எனக்கு அப்போது பெரிய ஆர்வமிருக்கவில்லை. நான் புனைவுகளில் வெறிகொண்டிருந்த வயது. அத்த்துடன் நான் செறுகாடு யார் என்று அறிந்திருக்கவுமில்லை.
ஆனால் எதையும் வாசிக்கும் வயதென்பதனால் செறுகாடு எழுதிய தன் வரலாற்றை வாசித்தேன். நுணுக்கமான, விரிவான புனைவுகளுக்குச் சமானமாக என்னை உள்ளிழுத்துக்கொண்டது. நான்குநாட்களில் வாசித்து முடித்த அந்நூலை இந்த நிமிடம் வரை நினைவில் வைத்திருக்கிறேன்.
மலையாள இலக்கியத்தின் மாபெரும் தன்வரலாறுகள் சில உண்டு. கொடுங்காற்றின் எதிரொலி (ஏ.கே.கோபாலன்) கண்ணீரும் கினாவும் (வி.டி.பட்டதிரிப்பாடு )நான் (என்.என்.பிள்ளை) ஆகியவற்றைச் சொல்வேன். (எல்லாமே இடதுசாரியினரால் எழுதப்பட்டவை) அவற்றுடன் இணைவைக்கத்தக்கது செறுகாடின் இந்த தன் வரலாறு.
செறுகாடு என்ற பெயரில் எழுதியவர் செறுகாடு கோவிந்த பிஷாரடி. கேரள இடதுசாரி இயக்கங்களின் நிறுவனர்களில் ஒருவர். அவர் எழுதிய முத்தச்சி என்னும் நாவல் மலபாரின் மார்க்ஸிய எழுச்சியின் ஆவணம். தாய் நாவலின் இன்னொரு வடிவம் எனலாம். கட்சி அனுதாபிகளுக்கு முதலில் அதைத்தான் கையில் கொடுப்பார்கள்.
செறுகாடின் இந்த தன்வரலாறு மலபாரில் இடதுசாரி இயக்கங்கள் உருவான சூழலை மிக விரிவாகச் சித்தரிக்கிறது. மலபாரின் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் அமைத்து ஒருங்குதிரள்வதன் வழியாகவே இடதுசாரி இயக்கம் வலுப்பெற்றது. இதை ஓர் ஆவணம் என்று திரும்பத் திரும்ப மேடைகளில் சொல்வார்கள்.
ஆனால் நான் இந்நாவலை இன்றும் நினைவுகூர்வது இது ஒரு அழகிய நாவலாகவும் வாசிக்கத்தக்கது என்பதே. புனைவுக்குரிய நுண்செய்திகள் நிறைந்த நூல். கதைநாயகனின் (செறுகாடின்) உள்ளம் வெளிப்படும் பல அரிய தருணங்கள் உண்டு. வாழ்க்கையின் திருப்புமுனை புள்ளிகள் தீவிரமான மொழியில் எழுதப்பட்டுள்ளன.
பழைய மலபாரின் மருமக்கள்தாய முறையை விரிவாகச் சொன்னபடி ஆரம்பிக்கிறார் செறுகாடு. அன்றைய பல தன்வரலாறுகளில் தாய்மாமன்களின் ஊழல், பொறுப்பின்மையே பேசப்பட்டிருக்கும். செறுகாடு அவருடைய குஞ்சு அம்மாவன் மேல் பெரும் பிரியத்துடன் இருக்கிறார். தன்னை உருவாக்கியவர் அவர் என நினைக்கிறார். குடும்பச் சூழல், வறுமை போன்ற எதனாலும் செறுகாடு இடதுசாரி ஆகவில்லை. அவரை இடதுசாரி ஆக்கியது அவருடைய இயல்பான கற்பனாவாதப் பண்புதான் என்று படுகிறது.
சிறுகதைக்கு நிகரான தருணங்கள் வந்துகொண்டே இருக்கும் வரலாறு இது. கறுத்தபட்டேரி என்னும் நம்பூதிரி செறுகாடின் வீட்டுக்கு வருகிறார். உடனே அவருக்கு செறுகாடின் தமக்கை மாளுவை திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர் அங்கேயே தங்குகிறார். உள்ளூர் கோயிலில் பூஜை செய்கிறார். மாளுவுக்கு குழந்தை பிறக்கிறது. அவளுக்கு கண்நோய் வருகிறது. கண்நோய் தீரும்வரை பட்டேரி மனைவியை பார்க்கக்கூடாது என வைத்தியர் சொல்கிறார். ‘படுக்கையை உதறிச் சுருட்டி’விட்டுச் செல்லும் பட்டேரி சென்றவர் சென்றவர்தான். சுருக்கமான கதை. ஆனால் பட்டேரி சுரண்டல்காரர் அல்ல. அவர் சுதந்திரப்போராட்ட வீரர். அன்றைய நம்பூதிரிகளின் வாழ்க்கை அதுதான். ஒருவகை நாடோடிகள்.
இந்நூலில் என்னை அன்று கவர்ந்து இன்றும் நினைவில் இருப்பது இதிலுள்ள ஒரு காதல் கதை. கேரளத்தின் வரலாற்றுக் காதல்கதைகளில் இதற்கிணையானது சி.வி.ராமன்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றில் வருவதுதான் (ஆசிரியர் பி.பரமேஸ்வர பிள்ளை)
செறுகாடின் அத்தை பாருக்குட்டியும் தன் இரண்டாவது மகளான இரண்டு வயது லட்சுமி பிஷாரஸ்யாரை ஏழுவயதான செறுகாடுக்கு திருமணம் செய்து கொடுப்பதைப் பற்றிப் பேச அவர் அம்மா அதை உறுதி செய்கிறார்கள். அன்று குடியேறிய அந்தக் காதல் அவர் உள்ளத்தில் வளர்கிறது. ஆனால் குடும்பங்களில் பிளவு. வெவ்வேறு இடங்களில் லட்சுமி என்ற கரிய பெண்ணை பார்த்திருந்தாலும் செறுகாடு அவள்மேல் தன் காதலைச் சொல்லவில்லை. அவளுக்கு வேறு இடத்தில் திருமணம். அதை இன்னொருவர் சொல்லி அறிகிறார்.
ஆனால் உடைந்துபோகவில்லை. துயரம் இருக்கிறது. அதைவிடப் பெரிய கனவுகள். காங்கிரஸின் கதரியக்கத்தில் தீவிரமாக இருக்கும் காலகட்டம் அது. சட்டமீறல் இயக்கம், தலைவர்களுடனான உறவுகள், கொள்கைசார்ந்த உரையாடல்கள்… கொந்தளிப்பான நாட்களில் காதலை எண்ணிக் கலங்க நேரமே இல்லை.
பின்னர் குறுவட்டூர் என்னும் இடத்தில் பதினேழுவயதான லட்சுமியை மீண்டும் சந்தித்தார் செறுகாடு. அப்போது அவளுடைய அந்த திருமண உறவு முடிந்துவிட்டிருந்தது. படித்து ஆசிரியை ஆகிவிடவேண்டும் என நினைத்து அதில் ஈடுபட்டிருந்தாள். செறுகாடு அவளுக்கொரு கடிதம் எழுதி கொடுக்கிறார். அதில் தன் காதலைத் தெரிவிக்கிறார்.
மிகக்குறைவான சொற்களில் அந்தக் காதல் சொல்லப்படுகிறது. “அவள் அந்த கடிதத்தை எடுத்து உள்ளே போனாள்” எந்த உணர்ச்சியும் இல்லாமல் மீண்டும் சந்திக்கிறாள். கடிதத்தை படித்தாயா என்ற கேள்விக்கு படித்தேன் என்று பதில். என்ன சொல்கிறாய்? பதில் தருகிறேன். பதிலில் சம்மதம், ஆனால் வீட்டாரின் சம்மதம் தேவை என்கிறாள். நான் சம்மதம் வாங்குகிறேன், அதுவரை காத்திருப்போம் என்கிறார் செறுகாடு. அதன்பின் அவளை மணக்கிறார்.
இந்த எளிமையான காதல் ஒருவகை அமரகாதலாகவே எழுதப்பட்டுள்ளது. அந்த எளிமையால்தான் அது அமரகாதலாகிறது. நேரடியான ஒரு வகை சித்தரிப்பு. தான் தற்பாலுறவு கொண்டிருப்பதாகவும், விபச்சாரியிடம் ஒருமுறை சென்றிருப்பதாகவும் செறுகாடு பதிவு செய்கிறார். அதே நடையில் இந்தக்காதலையும் எழுதுகிறார். செறுகாடு உருவாக்கிய யதார்த்தவாதம் இது.
நிர்மால்யா அதே எளிமையான நேரடிநடையை மொழியாக்கத்திலும் கொண்டுவந்துள்ளார். முக்கியமான ஒரு வாசிப்பனுபவமாக இந்நூல் ஆவது அந்த நடையால்தான்.
இன்று பார்க்கையில் அந்த வாழ்க்கையின் ’அளவு’ பிரமிக்கச் செய்கிறது. போராட்டங்கள், சிறைவாசங்கள், உயர்ந்த இலட்சியக்கனவுகள், சோர்வுகள், மீட்சிகள், வெறிகொண்ட வாசிப்பும் எழுத்தும், ஓயாத பயணங்கள்…எவ்வளவு நிகழ்வுகள். இந்திய சுதந்திரம், கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள், கட்சி தடைசெய்யப்படுதல், கட்சி ஆட்சியைப் பிடித்தல்…அதன் நடுவே ஒரு அமரகாதல் இல்லையென்றால்தான் குறைவு. அந்த தலைமுறை கனவுகள் நூறுமேனி விளைந்த காலத்தில் வாழும் நல்லூழ் கொண்டது.
அருணாச்சல புராணம்
பொதுவாக தமிழ்நூல்களுக்கு ஆங்கில மொழியாக்கங்கள் வருவது அரிது. நல்ல மொழியாக்கங்கள் அதனினும் அரிது. இன்று பெரும்பாலும் வாசிக்கப்படாத சைவ எல்லப்ப நாவலரின் அருணாச்சலப் புராணத்திற்கு மிகச்சிறந்த ஒரு மொழியாக்கம் உள்ளது. ராபர்ட் பட்லர் மொழியாக்கம் செய்தது
அருணாசல_புராணம்
அருணாசல_புராணம் – தமிழ் விக்கி
வாழ்ந்து தீர்வது – நாராயணன் மெய்யப்பன்
நா. சுகுமாரன் தமிழ் விக்கி
கவிதை வடிவம் இல்லாதபட்சத்தில் ஒரு நொடிப்பொழுதை பற்றி அதிகம் பேசுவது காதலாகத்தான் இருக்கிறது அதுவம் வெகுஜன ஊடகங்களில் பிரச்சாரமாகி நம்மிடம் சேருகிறது.
சற்று நிதானித்து கவனித்தால் சில மலையாள படங்களில் ஒன்றரை மணி நேர படத்தினை ஒரே வசனம் தாங்கி நிற்கும், ‘டிரைவிங் லைசன்ஸ’ல் கடைசியாக நடிகர் ஹரிதரன் வாகன அலுவலக அதிகாரி குருவில்லா ஜோசப் காப்பாற்றி அழைத்துக்கொண்டு செல்கையில் ஒரிடத்தில் குருவில்லா சொல்வார் ‘….நீங்கள் நாடறிந்த கதாநாயகன் ஆனால் என் பிள்ளைகளுக்கு நான் தான் நாயகன்’ மொத்த படமுமே இந்த வரி தான் அதற்கான கூடுதல் சம்பவங்கள் தான். அதே போல் ‘ஹேளன்’ படத்தில் கடைசியாக காவல் அதிகாரி அந்த காவல்கார தாத்தாவிடம் கேட்பார் ‘…இத்தனை நபர்கள் வந்த போகும் இடத்தில் எப்படி குறிப்பாக அந்த பெண் இன்று மாலை இந்த வளாகத்தை விட்டு திரும்பி செல்லவில்லை என்பதை உறுதியாக சொல்கிறீர்கள்?’, அதற்கு அவர் தினமும் கூட்டம் வருவது தான் ஆனால் இந்த பெண் வரும் போதும் செல்லும் போதும் நலம் விசாரிச்சிட்டு போகும் என்று.
மனம் படைத்ததால் மனிதன் என்கிறோம். ஜேம்ஸ் ஆலன் அவர்களின் ‘மேன் திங்கத்’ என்ற புத்தகத்தில் மனம் சுற்றத்தையும் சூழலையும் எப்படி எதிர்கொள்கிறது கையாளுகிறது என்ற ஆளுமையினாலேயே மனிதன் ஆகலாம் என்றார். அப்படியென்றால், ஒரு மனம் பல சூழல்களையும் பல மனங்கள் ஒரே சூழலையும் நித்தம் நித்தம் சந்திக்கிறது. எத்தனை எத்தனை நொடிப்பொழுதுகள் அதில் எத்தனை இந்த வாழ்வை அர்த்தப்படுத்துகிறது. இந்த புரிதலுக்கு பிறகு ஒருவர் மிதான அபிப்பிராயம் என்பது அவசியமற்றதாகிறது, அதலால் ஏற்றுக்கொள்ளும் பக்குவும் வருகிறது அத்துடன் புரிந்து கொள்ளும் ஆற்றலும் வளர்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் கவனிக்க தவறிய நமக்கான கனங்களை அப்போதே எதிர்க்கொண்டிருக்கவேண்டிய கனங்களை செய்யாமல் தவறியதிலிருந்து கிடைத்த அனுபவம் வரப்போகும் சூழல்களில் நமக்கான அந்த கனங்களை உணர்ந்து உள்வாங்கிக்கொள்வது என்பது கேள்வியாகவே இருந்து தேடல்கள் நோக்கி நகர்த்துகிறது.
சில வருடங்களுக்கு முன், ஊரில் பேருந்திற்காக காத்திருந்த நேரத்தில் சாலையை கடக்க முயன்ற பாட்டியை ஒரு பைக் திருப்ப தெரியாமல் திருப்பி பாட்டியை இடிக்க பயந்து கீழே விழந்தவர் எந்த சேதாரமில்லாமல் இறந்து போனார். இடித்த அந்த நொடி கீழே விழுவதற்கு முன்பாக ஏதாவது செய்திருக்கலாமே ஓடி பிடிக்க முயற்சித்திருந்திருக்கலாம் என்று பல நாட்கள் நினைத்து உண்டு, குற்றவுணர்ச்சி அல்ல ஆனால் ஏன் முன் வரவில்லை.? அதே போல் பல பல சந்தர்ப்பங்கள் பல காரணங்கள்.
ஆயுள் கணம்
சொற்பப் பொழுதே ஜீவிதமென்றறியாமலா
கொல்லென்று பூத்துக் சிரிக்கிறது பொற்கொன்றை?
ஒற்றைப் பருவத்தின் களிப்பென்றுணராமலா
வேர்களில் உறைந்த காலம் வெளிவந்து சிலிர்க்கிறது?
சிலசமயம் ஒரு நொடிக்குள்ளேயே
வாழ்ந்து தீர்வதில்லையா பிறவியின் மொத்த ஆயுள்?
– சுகுமாரன்
’மேன் திங்கத்’ கொடுத்த புரிதலை இந்த கவிதை மீண்டும் நினைவுபடுத்தியது. கடைசி வரியில் வாழ்ந்து என்பதை தொடர்ந்து ‘தீர்வதில்லையா’ என்ற சொல் தான் இந்த கவிதையின் பிறவி பயண் என்று பட்டது. வாழ்ந்து என்றால் ஒரு தொடர்ச்சி அதனை அடுத்த வார்த்தை கொண்டு இந்திய ஆன்மீகம் உபதேசிக்கும் விடுதலை நோக்கி நகர்த்துகிறது. மனிதன் கண்ட மாயம் இந்த காலம் அதன் ஒவ்வொரு நொடிகளும் அந்த மாயத்தை கடந்த புரிதலை உணர்த்த அத்தனை வாய்ப்புகளை தந்துக்கொண்டே தான் இருக்கிறது. நேற்று காலை இந்த கவிதையை வாசித்தம் ஒரு சிலிர்ப்பு.
ஒரு புழுவின் ஓளியை கண்ட அந்த ஒரு நொடிக்குள் வாழ்ந்து தீர்த்ததால் ஒரு குருவின் ஆற்றல் எல்லைகள் அற்று பிரபஞ்சமாக விரிந்துக்கொண்டே இருக்க அதில் தனக்கான சரணாகதியை கண்டடையும் அந்த நொடிப்பொழுதை, கவனிக்க, ஏற்றுக்கொள்ள, கற்று தெளிய, சரணம்!
நாராயணன் மெய்யப்பன்
அம்மா இங்கே வா வா யார் எழுதிய பாடல்?
மே.வீ.வேணுகோபால பிள்ளை தமிழ் விக்கி
எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
என் பணிவான வணக்கங்கள்.
பொருள் : [Primary section பாடநூலில் ஆசிரியர் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பம் ]
நான் மாநிலத்தின் சிறந்த தமிழறிஞர் என்று புரட்சித் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்றைய பிரதர் திருமதி. இந்திரா காந்தி அவர்களிடம் உலகத்தமிழ் மாநாட்டில் விருதும் பரிசுகளும் பெற்ற மகாவித்வான். தமிழ் இலக்கணத்தாத்தா டாக்டர். மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை (ஆசிரியர் அம்மா இங்கே வா வா) அவர்களின் பெயர்த்தி. நான் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. கல்வியாளர். சிறந்த பயிற்சியாளருக்கான விருதுகளைக் காவல் ஆணையாளர்களிடமும், தமிழக ஆளுநர்களிடமும் பெற்றிருக்கிறேன்.
தமிழ் நாட்டுப் பாடநூல் குழுவால் வெளியிடப்பட்டுள்ள primary தமிழ்ப் புத்தகத்தில் “அம்மா இங்கே வா வா” என்ற பாடலின் ஆசிரியர் அழ. வள்ளியப்பா என்று பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இது தவறு. அது என் பாட்டனார் மே வீ. வேணுகோபாலப்பிள்ளையவர்களின் பாடல். இப்பாடல் 1965 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பாடநூல் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு primary (Lkg to III std ) பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. (இது ஒரு சிறந்த சாதனை – record break ) நீங்களும் இப்பாடலைப் படித்திருப்பீர்கள். இந்த ஆண்டும் இதே பாடல் தேர்வு செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் ஆசிரியர் பெயர் மாற்றப் பட்டிருக்கிறது. இது திருத்தப்பட வேண்டும். இதற்கான சாட்சியங்களைச் சேகரிக்கவே நான் இத்தனை நாள்கள் பொறுத்திருந்தேன். சாட்சியங்களைக் கீழே வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். தயவு செய்து இம் மாபெரும் பிழையைத் திருத்தி உதவுமாறு உங்களை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
அன்புடன்
திருமதி. கீதாலட்சுமி ஸ்ரீநிவாசன்
சான்றுகள்
———————-
It is proved that Author of the Tamil poem,( “அம்மா இங்கே வா வா“) “amma inge vaa vaa ” is Mahavidwan, Dr.M.V.Venugopal pillai
Evidences
No 1
Tamil Rhymes and Songs.
Hindu Temple and Cultural Society of USA.Inc.
HTCS- December 2012.
47 pages.Tamil Rhymes and Songs.
No 2
Professor . Marudhur arangaraasan’s (பேராசிரியர். மருதூர் அரங்கராசன் )edition “yaapparindhu paappunaiya” (யாப்பறிந்து பாப்புனைய )
No 3
Already I have sent. Professor. Muththukrishnan who worked in text book society till 2013 and took the caste name Pillai out of the name Venugopal Pillai.
With best regards
Mrs. Geethalakshmi Srinivasan
முதற்கனலில்…
sdrஎப்படித் தொடங்குவது? என்ன எழுதுவது என்று அறியாத ஒரு மனநிலை வெண்முரசு என்ற இந்த நெடுங்காவியத்தின் முதல் புத்தகமான முதற்கனல் வாசித்து முடித்த பின்.
கதைகள் வாசித்திருக்கிறேன். கவிதைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் இத்தனை கவிதை நடையில் கற்பனைத் தேனாக சொட்டச் சொட்ட உவமைகள் நிறைய கொண்டு எழுதப்பட்ட கதையை வாசிப்பது இதுவே முதல் முறை.
சில நேரங்களில் இத்தனை வர்ணனை தேவை தானா? இத்தனை விவரங்கள் தேவை தானா என்ற எண்ணம் எழும்போது, அதை எழுதிய ஆசிரியரின் முயற்சி மனதில் தோன்றி சிலிர்க்க வைப்பதோடு, மகாபாரதக் கதையின் மீதுள்ள ஆர்வமும் கலந்து கொண்டு பக்கங்களை வேகமாக கடக்கச் செய்கிறது.
ஒரு புத்தகத்திலே இத்தனை கதைகள், கதைக்குள் கதை என முடிவிலியாக நீண்டு கொண்டு இருக்க, இன்னும் 25 புத்தகங்கள் இந்த தொடரில் உள்ளது என்று என்னும் போது மனம் திகைத்து மீள்கிறது.மகாபாரதமே ஒரு நெடுங்காவியம், அதை மேலும் நெடுங்கதையாக, தினமும் எழுத வேண்டும் என்று தீர்மானத்தோடு 26 புத்தகங்கள், 26,000 பக்கங்கள் எழுதிய ஆசிரியரின் முயற்சி, எழுத்து வல்லமை, கற்பனைத் திறனை பாராட்டவும், நெகிழ்ந்து தலை வணங்கவும் வைக்கிறது.
சிறு வயதில், நீதிக்கதையாக கேள்விப்பட்ட மகாபாரதக் கதைகளும், அதன் உவமைகளும் கேட்டு வளர்ந்த எனக்கு அதைத் தழுவி வந்த புத்தகங்கள் தேடி வாசிப்பதில் ஆர்வம் அதிகம். விஜய் தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடராக வெளிவந்த போது, அதன் கதையோட்டத்தில் மந்திரங்களால் நிகழும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது எதார்த்தமான நடையில் இது எப்படி நிகழ்ந்திருக்கும் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. நான் கேட்ட கேள்விகளுக்கும், கேட்காத பல கேள்விகளுக்கும் இந்த புத்தகம் பதிலளிக்கிறது.
நாகர் குலத்தலைவியான மானசாதேவியிடம் தொடங்கும் கதையில் கால் இல்லாத நாகங்களின் கால்தடங்கள் புத்தகம் நெடுக!! கதை முடிவதும் அவரிடமே!
நாம் அறிந்த மகாபாரதக் கதையின் பின்னால் தொடங்கி, முன்னோக்கி நகர்கிறது கதைக்களம்.முதற்கனல் அம்பையிலிருந்து தொடங்குகிறது.அவளின் சினத்தில் வளர்கிறது காவியம்.
திரௌபதியின் சிரிப்புதான் பாரதப்போரின் காரணம் என்று எங்கள் ஊரில் கதைகளில் சொல்லக் கேட்டதுண்டு. நானோ,இல்லை அது அவளின் கண்ணீரால் நிகழ்ந்த போர் என்று எண்ணுவதுண்டு. ஆனால் உண்மையில் அதன் மூலம் அம்பையின் சினம்!! நிராகரிப்பு தந்த ஏமாற்றம், பழிவாங்கும் உணர்வாக மாறிய பீஷ்மர் மீதுள்ள காதல்தான் என்று இப்போது தோன்றுகிறது.
இதுவரை மகாபாரதக் கதையில் பெயர் மட்டுமே கேள்விப்பட்ட சிறுசிறு கதாப்பாத்திரங்களின் முழுக்கதையும், அவர்கள் பக்க நியாகங்களையும்,கேள்விப்படாத பல கிளைக்கதைகளையும் வாசிக்க கிடைக்கும் என்று நான் இதற்கு முன் நினைத்ததில்லை. அதை சாத்தியப்படுத்திய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
ஆசிரியரின் வார்த்தைகளே கண்முன் உயிரோவியமாக விரிந்திருக்கிறது என்று எண்ணும் போது, அதை நான் மேலும் வண்ணமூட்டுகிறேன் என ஓவியர் ஷண்முகவேலின் ஓவியங்கள் கதைக்கும் நம் கற்பனைக்கும் வண்ணமூட்டுகின்றன்.
முதற்கனலின் வெம்மை நீங்கி, மழைப்பாடலில் நனையப் போகிறேன்
அனிதா பொன்ராஜ்
(முகநூலில்)
முதற்கனல் வாசிப்பு- லெட்சுமிநாராயணன்
முதற்கனல் வாசிப்பு- ஜெகதீஷ்குமார்
முதற்கனல், மழைப்பாடல் வாசிப்பு
இதிகாசமா ? புனைவா ?- முதற்கனல்
அழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்
வெண்முரசு – முதற்கனல் முதல் பிரயாகை வரை-சுரேஷ் பிரதீப்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

