Jeyamohan's Blog, page 591
April 24, 2023
இரு வாழ்த்துக்கள்
உங்களின் வாசகி என அங்கு இருந்தது நான் மட்டுமே என உணர்ந்தேன். ஆனால் கிராமத்து மக்கள் “செயமோகன் பிறந்தநாளாம் அதனால செய்கூலி, சேதாரம் இல்ல” என மகிழ்வோடு சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன். அந்த நிகழ்வு மனம் நிறை ஒன்று ஆசானே.அந்த நிகழ்வில் நானும் கலந்து கொள்ளவே அங்கே சென்றேன் என சென்ற பின்னரே உணர்ந்தேன் ஆசானே.யானை டாக்டர் புத்தகம் பரிசாக தந்தார்கள்.அவர்களுக்கு என் நன்றிகள்.உங்களுக்கு என் வணக்கங்கள்சரண்யாநிலக்கோட்டை நகைமாலிகை.உளம் கனிந்த ஜெவிற்கு,
கடந்த வருடம் உங்கள் பிறந்த நாள் அன்று முதன் முதலாக கடிதம் அனுப்பி உங்களிடம் பதில் பெற்ற நாள் முதல் இன்று வரை உங்கள் சொல்லையும் செயலையும் நினைக்காது ஒரு நாள் கூட செல்வதில்லை. பல கோணங்களில் வாழ்வை அணுகவும் அதை இனியதாக வாழவும் உங்கள் அணுக்கம் உதவி செய்கிறது. அருகமைதல் எப்படி என்னை வழிநடத்தியது என்பது என்னால் மட்டுமே உணரக்கூடிய ஒன்று. ஆசானாக சில நேரங்களில் தந்தையாக வழிநடத்தும் உங்களுக்கு இந்நன்னாளில் நான் செய்ய கூடிய எளிய செயல் பட்டிபெருமானிடம் வணங்கச் செல்வது மட்டுமே. இரண்டு அர்ச்சனை சீட்டு வாங்கி தங்களுக்கும் அருண்மொழி நங்கைக்கும் அர்ச்சனை செய்து, திருமுறை பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்தேன். தீடீரென குருக்கள் செந்தாமரையை பிரசாதமாக தந்தார். பல முறை சென்று தரிசனம் செய்யும் இடம், இதுவரை பெற்றதில்லை, இன்று கிடைத்த செந்தாமரை மலர் மனதை மிக மங்கலமாகவும், மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் உள்ளாக்கியது. நிறை மாந்தருக்கு நிறை மலர் என்பது போல… என்றும் குழகனாக திகழும் ஆசானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன். பட்டிபெருமானின் அருளாசிக்கு என் பிராத்தனைகள் என்றுமிருக்கும்….*வண்டார்குழ லரிவையொடு பிரியாவகை பாகம்பெண்டான் மிகவானான் பிறைச் சென்னிப் பெருமானூர்தண்டாமரை மலராளுறை தவளந் நெடுமாடம்விண்டாங்குவ போலும் மிகு வேணுபுரமதுவே.*பிரியமுடன்பவித்ரா, மசினகுடிWhy the Anglophone reader should know Jeyamohan
Jeyamohan is not an easy writer. Nothing about his novels, short stories or essays is thrilling. He deliberately deals with tough topics, taking his reader through complex, yet fascinating and multilayered narratives—whether as novels, short stories or essays, they all demand a reader’s full dedication.
Why the Anglophone reader should know the work of Tamil writer Jeyamohan The Abyss- Amazon
‘As a writer I’m apolitical and spiritually free’: Jeyamohan
‘The Abyss’ – an English translation of Jeyamohan’s Tamil novel ‘Ezhaam Ulagam’
Jeyamohan interview: Ezhaam Ulagam, or The Abyss, is a spiritual inquiry into beggars’ livesExploitative World Hidden in Plain Sight
Exploring The Human Condition in the Darkest
April 23, 2023
இன்னொரு பிறந்தநாள்
மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்க பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்
சென்ற ஆண்டு அறுபது, ஆகவே கொஞ்சம் கொண்டாட்டம் கூடுதலாகவே இருந்தது. இந்த ஆண்டு இதை அப்படியே கடந்துபோகவே எண்ணியிருந்தேன். அதுதான் வழக்கம். ஆகவே எர்ணாகுளம் போகலாமென முடிவுசெய்து ரயிலும் விடுதியும் பதிவுசெய்திருந்தேன்.
ஆனால் நிலக்கோட்டை மு.வ.மாணிக்கம் ஆண்ட் கோ நகைக்கடையின் போஸ்டர்கள் மற்றும் விளம்பரம் கவன ஈர்ப்பாக ஆகிவிட்டது. இம்முறை தமிழின் பிரபல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. ஆகவே ஏராளமான வாழ்த்துக்கள்.
அதற்கு பின்னால் ஒரு மனநிலை உள்ளது. ஆண்டுமுழுக்க என்னை ஒரு சிறுகும்பல் வசைபாடுகிறது. அவர்களிடம் விவாதிக்கவேகூடாது என்பதே என் நண்பர்களுக்கு நான் போடும் நிபந்தனை. ஆகவே அது எப்போதுமே ஒற்றைப்படையாக நிகழ்கிறது. வசைபாடிகள் தங்களுடன் இணைந்து ‘தமிழகமே’ என்னை வசைபாடுவதாக எண்ணிக்கொள்கிறார்கள்.
பிறந்தநாள் போன்ற தருணங்கள் என் வாசகர்கள் நண்பர்களுக்கு என் மேல் தங்களுக்கு இருக்கும் பற்றை வெளிப்படுத்தும் தருணங்கள் மட்டுமல்ல, அந்த வசைகளுக்கு அவர்கள் அளிக்கும் ஆழமான எதிர்வினைகளும்கூட. அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
21 ஏப்ரல் காலையில் நாகர்கோயிலில் இருந்து ரயிலில் எர்ணாகுளம் சென்றேன். ஏதேனும் ஊருக்குச் செல்லலாம் என நினைத்ததும் எர்ணாகுளம் என முடிவுசெய்தமைக்குக் காரணம் ஆஷிக் அபு இயக்கிய நீலவெளிச்சம். என் பிரியத்திற்குரிய பஷீரின் உலகம். நான் ஒரு கிளாஸிக் என நினைக்கும் பார்கவி நிலையம் படத்தின் மறு ஆக்கம்.
மாலை 4 மணிக்கு எர்ணாகுளம் சென்றோம். கெண்ட் பேவாட்ச் என்னும் விடுதியில் இரண்டுநாட்களுக்கு அறை பதிவுசெய்திருந்தேன். புதிய, பிரம்மாண்டமான விடுதி. இடக்கொச்சியில் உள்ளது. இன்னும் வணிகம் சூடுபிடிக்கவில்லை, ஆகவே வாடகை அந்த வசதிக்கு மிகக்குறைவு. 3500 ரூ. ஒரு படுக்கையறை, விரிவான இன்னொரு கூடம், கடல்குடா நோக்கித் திறக்கும் பால்கனி, சமையல்கூடம் ஆகியவற்றுடன் கூடிய சூட்.
சற்று ஓய்வெடுத்துக்கொண்டு உடனே கிளம்பி லுலு மாலில் உள்ள பிவிஆர் அரங்குக்குச் சென்றோம். வண்டி ஓட்டுநர் விஷ்ணு உற்சாகமான பையன். வைக்கம் முகமது பஷீர் பெயர் தெரியாத தலைமுறை.
படம் என்னை கவர்ந்தது. பொதுவாக கறுப்புவெள்ளை படங்களின் கனவுத்தன்மை வண்ணத்தில் வருவதில்லை – ஏனென்றால் கறுப்புவெள்ளையே இயற்கையற்ற காட்சிவெளி என்பதுதான். அதிலும் கடல், பனி, பாலைவனம், நிலவு ஆகியவை கறுப்புவெள்ளையில் அபாரமாக இருக்கும். பார்கவிநிலையம் ஒரு கனவுபோன்ற படம்.
சன்னலுக்கு வெளியேவண்ணத்தில் அந்தக் கனவுத்தன்மையை கொண்டுவர ஆஷிக் அபுவால் இயன்றுள்ளது. டொவீனோ தாமஸ் பஷீரின் உடல்மொழியை அழகாக கொண்டுவந்திருந்தார். 1964ன் உலகம்.
படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு நடிகர் வில்லனாக நடித்த டாம் சாக்கோ. 1960-70 களில் வெட்டிப்பையன்களுக்கு ஓர் உடல்மொழி இருந்தது. ஆர்ப்பாட்டமான, சூழ்ச்சி நிறைந்த பாவனைகள். அதை மிகச்சிறப்பாக கொண்டு வந்திருந்தார்
பஷீரின் கனவுலகில் உருவாகி உள்ளேயே திரும்பிச்சென்றுவிட்ட பார்கவிக்குட்டியின் வாழ்க்கை. அந்த கனவின் மீளுருவாக்கம் அழகான ஓர் காட்சியனுபவமாக இருந்தது. எம்.எஸ்.பாபுராஜின் அதே பாடல்கள் புதிய இசையமைப்பில். ஆஷிக் அபுவுக்கு ஒரு பாராட்டு செய்தி அனுப்பினேன்.
மறுநாள் காலையில் ஆறுமணிக்கே கிளம்பி திருக்காக்கரை கோயிலுக்குச் சென்றோம். திருக்காட்கரை என பழைய பெயர். கேரளத்திலுள்ள பாடல்பெற்ற தலம். இந்த ஆலயத்தைப் பற்றிய நம்மாழ்வாரின் பதிகம் உள்ளது. திருக்காட்கரையப்பன் என்று பெருமாளையும் பெருஞ்செல்வநாயகி அல்லது வாத்ஸல்யவல்லி என தேவியையும் நூல்கள் குறிப்பிடுகின்றன. நம்மாழ்வார் பதிகம்
உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி,
பெருகுமால் வேட்கையும் எஞ்செய்கேன் தொண்டனேன்,
தெருவெல்லாம் காவி கமழ் திருக்காட்கரை,
மருவிய மாயன்தன் மாயம் நினைதொறே
எனத்தொடங்குவது.
நகருக்குள்ளேயே உள்ள ஆலயம். ஆனால் இங்கு நான் வந்ததில்லை. பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். மிகச்சிலரே ஆலயத்தில் இருந்தனர். வாமனமூர்த்தியாக பெருமாள் எழுந்தருளிய இடம். இங்கேதான் மகாபலியை பெருமாள் பாதாளத்திற்கு அழுத்தினார் என்பது தொன்மம்.
இந்த பிறந்தநாளுக்கு சிவகுருநாதன் வழக்கம்போல ஆடைகள் அனுப்பியிருந்தார். எனக்கும் அருண்மொழிக்கும். நீல நிற ஆடைகள். அதைத்தான் 22 காலையில் அணிந்துகொண்டு கோயிலுக்குச் சென்றேன். சிவகுருவின் ஆடைகளையே பெரும்பாலான தருணங்களில் இப்போதெல்லாம் அணிகிறேன். அவை தூய பருத்தியாலானவை. செயற்கை வண்ணங்கள் அற்றவை என்பதே முதன்மையான காரணம். ( நூற்பு )
எப்போதுமே காலையில் ஓர் ஆலயத்திற்குச் செல்வது அரிதான ஓர் உணர்வை அளிக்கிறது. புலரியொளி எல்லா கோயில்களையும் அழகாக ஆக்கும். அதிலும் மிக விரிவான சுற்றுமுற்றம் நடுவே அமைந்திருக்கும் பரபரப்பில்லாத கேரள ஆலயங்கள் மிகமிக அமைதியானவை, தூய்மையானவை.
எட்டு ஏக்கர் பரப்புள்ள விரிந்த நிலத்தின் நடுவே அமைந்த ஆலயம். வாமனமூர்த்தி ஆலயத்திற்கு தெற்காக சிறிய சிவன் கோயில். நீண்டகாலம் அரைகுறையாக கிடந்த இந்த ஆலயம் இப்போது புதியதாக கட்டப்பட்டுள்ளது. தொல்லியலாளர் இந்த ஆலயமே காலத்தால் பழையது என்கிறார்கள். மகாபலி சிவபக்தன் என்றும், அவன் வழிபட்ட சிவன் இது என்றும் சொல்லப்படுகிறது
வாமனமூர்த்தி ஆலயம் சேரக் கட்டிடக்கலை பாணியில் வட்டமாக அமைந்தது. பெரிய தூண்கள் கொண்ட நாலம்பலம், விரிந்த சுற்றம்பலம் கொண்டது. 160 அடி நீளமான வட்டவடிவ ஆலயம் செம்புத்தகடுகள் வேய்ந்த கூம்புவடிவக் கூரை உடையது. முக்கியமான மரச்சிற்பங்களும், கல்வெட்டுகளும் இங்குள்ளன. அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்குள் ஐந்து அறைகள் உண்டு. மேற்கு எல்லையிலுள்ளது கருவறை. கருவறை பிற அறைகளில் இருந்து ஐந்து படிகள் உயரத்திலுள்ளது. ஆகவே மண்டபத்திற்கு இப்பால் நின்றால் படிகளே தெரியும். மைய ஆலயத்தின் படியருகே நின்றால்தான் மூலச்சிலையை காணமுடியும். கரிய கல்லால் ஆன சிலை. வாமனன் என தொன்மம் என்றாலும் சங்கு. சக்கரம், கதை, தாமரை ஆகியவை நான்கு கைகளிலும் ஏந்தி நின்றிருக்கும். விஷ்ணுவின் சிலை அது
இந்த ஆலயம் பற்றிய தொன்மையான வரலாற்றுச் சான்று என்பது கொடுங்கல்லூர் (கொடுங்கோளூர். இன்னொரு பெயர் மகோதயபுரம் அல்லது மாக்கோதைபுரம்) தலைநகராக்கி ஆட்சி செய்த சேரமான் பெருமாளின் காலகட்டத்தில், அதாவது பொயு 10 ஆம் நூற்றாண்டுக்குப்பின் இப்போதிருக்கும் இடத்தில் ஓர் ஆலயம் கட்டப்பட்டது என்பதாகும். அதற்கு முன் சிற்றாலயமாக பொயு ஐந்தாம் நூற்றாண்டு முதலே இருந்திருக்கிறது. எட்டாம் நூற்றாண்டில் நம்மாழ்வார் இங்கே வந்திருக்கிறார். அன்று இது ஒரு சோலையாக இருந்தது.
பொயு 12 ஆம் நூற்றாண்டிலேயே இந்த ஆலயம் கைவிடப்பட்டு மறக்கப்பட்டது. ஆலயவளாகமே காடாகியது. ஆலயத்தின் அடித்தளம் மட்டுமே எஞ்சியது. 1921ல் அன்றைய திருவிதாங்கூர் மன்னரான ஸ்ரீ மூலம்திருநாள் ராமவர்மா மகாராஜா இந்த ஆலயத்தை இன்றிருக்கும் வடிவில் கட்டி மீண்டும் இறைநிறுவுகை செய்தார். 1949 முதல் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்ட் நிர்வாகத்திலுள்ளது.
திருக்காட்கரைதிருகாட்கரை ஓணத்துடன் தொடர்புடைய ஆலயம். சொல்லப்போனால் ஓணம் இந்த ஆலயத்தில் இருந்தே தொடங்குகிறது. சேரமான் பெருமாள் தன் சிற்றரசர்கள் தன்னை வந்து பார்த்து கப்பம் கட்டுவதற்கு ஓண நாளை வகுத்திருந்தார் என இங்குள்ள கல்வெட்டுகள் சொல்கின்றன. ஆடிமாதம் திருவோணநாள் முதல் ஆவணி மாதம் திருவோணம் வரை திருக்காக்கரை ஓணம் எனப்படுகிறது. அப்போதுதான் வாமனனால் பாதாளத்திற்கு அனுப்பப்பட்ட மகாபலி சக்கரவர்த்தி தன் மக்களைப் பார்க்க வருவதாக தொன்மம்.
ஓணக்கொண்டாட்டத்தின்போது முற்றத்தில் பூக்களால் கோலமிட்டு அதன் நடுவே களிமண்ணால் கூம்புவடிவில் திருக்காக்கரையப்பனை நிறுவி வழிபடுவது கேரள வழக்கம். திருக்காக்கரையப்பனின் உருவுக்கு மேல் காசித்தும்பை கிருஷ்ணதுளசி ஆகிய மலர்கள் சூட்டப்படவேண்டும். சேரமான் பெருமாள் திருக்காக்கரையப்பனை வழிபட நேரில் வராதவர்கள் ஓணக்காலத்தில் தங்கள் இல்லங்களில் நிறுவி மலர்வழிபாடு செய்தாகவேண்டும் என ஆணையிட்டதாகவும், அதன்பின்னரே ஓணம் தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
திருக்காக்கரையப்பன், ஓணக்கோலத்தில்…அங்கிருந்து காலையுணவுக்குச் சென்றோம். நீண்ட நாட்களுக்குப்பின் சம்பா அரிசிப்புட்டு, வேகவைத்த நேந்திரம்பழம், கடலைக்கறி, பப்படம் என கேரளத்து காலையுணவு. மிகச்சிறப்பாக இருந்தது. (நான் பல மாதங்களாக காலையுணவாக முட்டை மட்டுமே சாப்பிடுகிறேன்)
அங்கிருந்து திருப்பணித்துறை ஆலயம். அரண்மனையும் அருங்காட்சியகமும் ரம்ஸான் விடுமுறையில். திருப்பணித்துறை ஆலயத்திற்கு நான் சிலமுறை வந்திருக்கிறேன்.
திருப்பணித்துறைதான் பழைய கொச்சி சம்ஸ்தானத்தின் தலைநகர். கொச்சியும் எர்ணாகுளமும் இணைந்து ஒரே நகரமாயின. இன்று காக்கநாடு, இடக்கொச்சி, இடப்பள்ளி என பல இடங்களுக்கு கொச்சி விரிந்திருக்கிறது. திருப்பணித்துறையின் பூர்ணத்ரயீஸ ஆலயம் விஷ்ணுவுக்குரியது. கருவறையில் அனந்தன் மேல் அமர்ந்த கோலத்தில் விஷ்ணு உள்ளார்.
கல்வெட்டுகளின் படி பொயு 947 இரண்டாம் சேரசாம்ராஜ்ய காலகட்டத்தில் மகோதயபுரத்தை ஆட்சி செய்த சேர மன்னன் கோதை ரவி இதை கட்டினார் என தெரியவருகிறது. பொயு 1280ல் தான் இன்றிருக்கும் மூலச்சிலை நிறுவப்பட்டது. மேற்குக்கோபுரம் போன்றவை அதன் பின்னர் கட்டப்பட்டவை. பழங்காலத்தில் இருந்த குறியூர் என்னும் சிற்றரசின் ஆளுகைக்குக் கீழிருந்த இந்த ஆலயம் அந்தச் சிற்றரசின் அழிவுக்குப்பின்னர் கொச்சி அரசகுடியின் கட்டுப்பாட்டுக்கு வந்தது என சொல்லப்படுகிறது.
பழைய ஆலயம். சிவப்பான நான்கடுக்கு நாலம்பலம். மிக விரிந்த உள்முற்றத்தின் நடுவே முகப்பு மண்டபம். கல்லால் ஆன தூண்களுக்கு நடுவே சற்று இறங்கி உள்ளே செல்லவேண்டும். கல்லால் ஆன அடித்தளமும் செம்பு ஓட்டுக்கூரையும் கொண்டது. கல்லால் ஆன வட்டவடிவமான அடித்தளம் மீது சுதையாலான வட்டச்சுவர். சுவர் முழுக்க பித்தளைக் கவசங்கள். அவற்றில் சிற்பங்கள்.
சன்னலுக்கு வெளியேதிருப்பணித்துறை ஆலயத்தின் அருகே கூத்தம்பலத்தில் காலையில் செண்டை – தாயம்பகை வாசிப்பதற்கான பயிற்சி நடந்துகொண்டிருந்தது. கனமான கோல்களால் அடிமரக் கட்டைகளில் தட்டி பயிற்சி எடுத்தனர். வாய்த்தாரியை வாய்க்குள் சொல்லிக்கொள்ளவேண்டும். வழிகாட்டியான ‘மும்பன்’ காட்டும் சைகைகளை புரிந்துகொண்டு தாளத்தின் கதியை மாற்றவேண்டும். ஐம்பதுபேர் இருக்கும். முப்பதில் இருந்து ஐந்து வயதுவரை இருக்கும். பலரும் ஏற்கனவே நன்கு பயின்றிருந்தார்கள் என தெரிந்தது.
திருப்பணித்துறை ஆலயமுகப்பில் அரும்பொருட்கள் விற்கும் கடைவீதி உண்டு. அன்று விடுமுறையானதனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த ஒரு கடையில் ஒரு நாராயணகுரு படம் மட்டும் வாங்கிக்கொண்டேன். சட்டமிடப்பட்ட பெரிய படம்.
பதினொரு மணிக்கு அறைக்கு வந்தோம். வழக்கமாக பயணங்களில் முழுநாளையும் எங்காவது போய் செலவிடுவதுபோல் அன்றி அறைக்குள்ளேயே இருக்கலாமென முடிவுசெய்தேன். அற்புதமான அறை. அமர்ந்து வாசிப்பதற்குரிய, படுத்து வாசிப்பதற்குரிய வசதிகள். வெளியே வானமும் கடலும்.
திருப்பணித்துறைஇரண்டு புத்தகங்கள் கொண்டு வந்திருந்தேன். இவான் துர்க்கனேவின் மூன்றுகாதல்கதைகள். கே.ஸி.நாராயணனின் ’மகாபாரதம் ஒரு ஸ்வதந்த்ர சாஃப்ட்வேர்’ (மலையாளம்) இரண்டையும் மாற்றி மாற்றி வாசித்துக்கொண்டும் கடலைப்பார்த்தபடி சும்மா நின்றுகொண்டும், அங்கிருந்த சிறு சமையலறையில் சீனி இல்லாத கறுப்புதேநீர் போட்டு குடித்தபடியும் இரவு வரை இருந்தேன்.
வாழ்த்துக்கள் வந்து வாட்ஸப், மின்னஞ்சல்களை நிரப்பியிருந்தன. இருநாட்களிலாக எல்லாவற்றுக்கும் பதில் அளித்தேன். மூவாயிரம் மின்னஞ்சல்கள். எல்லாருக்கும் ஒரு வரியேனும் எழுதினேன்.
23 காலை கிளம்பி ரயிலில் நாகர்கோயில். அண்மையில் பெய்த மழையால் கோடையிலும் கேரளம் பசுமைகொண்டிருந்தது. பசுமை வழியாகச் சென்று பசுமை வழியாகவே மீண்டேன்.
மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்க பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்வேதநாயகம் சாஸ்திரியார்
நோவாவின் கப்பல் பாட்டு என்ற நூலை தஞ்சை சரபோஜி மன்னர் அரசவையில் அரங்கேற்றம் செய்தார். இவர் தஞ்சை சரபோஜி மன்னரைப் புகழ்ந்து பாடல்கள் புனைந்து அவரிடம் பல பரிசுகள் பெற்றார். இவரை மன்னர் பிரகதீஸ்வரரைப்பற்றி பாடச்சொன்னபோது மறுத்து இயேசுவின் பாடல்களை பாடியதால் மனவருத்தம் உண்டாகி பின்னர் சரிசெய்யப்பட்டது என தொன்மக்கதை உள்ளது.
வேதநாயகம் சாஸ்திரியார்
வேதநாயகம் சாஸ்திரியார் – தமிழ் விக்கி
பெண்ணெழுத்தாளர் பெயர் சூட்டுவது…
அன்புள்ள ஆசிரியரே,
நலம்தானே? உங்களிடம் ஒரு நற்செய்தி கூறவேண்டும் எங்களுக்கு இரண்டாவது குழந்தை வரும் செப்டம்பர்,2023 மாதம் பிறந்துவிடும்.
எங்களுடைய முதல் குழந்தை பெயர் அசோகமித்திரன், மூத்த தமிழ் எழுத்தாளர் பெயர் வைத்தோம்.
இரண்டாவது குழந்தைக்கும் தமிழ் எழுத்தாளர் பெயர் வைக்கவேண்டும் என்ற பெரும் ஆர்வத்தோடு இருக்கின்றோம்.
ஓர் உதவி. உங்களுக்கு பிடித்த பெண் பிரபலமான எழுத்தாளர்கள் பெயர் சொல்லுங்கள். அதைவைத்து நாங்கள் பெயர் வைத்துக் கொள்வோம்.
இப்படிக்கு,
தமிழ்ச்செல்வன்,
சேரன் மாநகர், கோவை
*
அன்புள்ள தமிழ்ச்செல்வன்,
முதன்மையான பெயர் அம்பை. அம்பா அல்லது அம்பா லட்சுமி என்று வைக்கலாம். அடுத்தபடியாக குமுதினி.
தமிழில் எனக்கு பிடித்த பெண் எழுத்தாளர்கள் பலர். பழைய தலைமுறையில் வை.மு.கோதைநாயகி, விந்தியா. முந்தைய தலைமுறையில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் முதன்மையானவர். சிவசங்கரி வாசந்தி இருவரையும் வெவ்வேறு கோணங்களில் பிடிக்கும்.
என் தலைமுறையில் பெருந்தேவி. எனக்கு அடுத்த தலைமுறையில் உமா மகேஸ்வரி, லீனா மணிமேகலை, அ.வெண்ணிலா, சந்திரா, கலைச்செல்வி என பலர்.
அதற்காக எழுத்தாளர் அருண்மொழி நங்கை கொஞ்சமும் குறைந்தவர் என்று அர்த்தமில்லை (ஸ்மைலி போட்டுக்கொள்ளவும்)
ஜெ
அக ஆழம், கடிதம்
அன்புள்ள ஜெ!
ஒரு சில எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகள் குறித்து பேசும்போது ’என்னால் மட்டுமே இது எழுதமுடியும்’ என சொல்லும்போது சீற்றம் ஏற்பட்டதுண்டு வாசிக்க புதிதாய் வந்த காலங்களிலும் அதன் பின்னரும். நாஞ்சில் நாடனின் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய அனுபவத்தைக் கொண்டு தன்னால் மட்டுமே சில விஷயங்கள் எழுதமுடியும் என்று சொல்லியிருந்தார். உதாரணத்திற்கு அவர் நாஞ்சில் நாட்டு உணவு பழக்கங்கள் குறித்து எழுதிக்கொண்டிருப்பதாகவும் அதை தன்னைத் தவிர வேறு எவராலும் எழுத இயலாது எனவும் சொன்னார். எனக்கு சரியாகப்பட்டது. இந்த புரிதலின் வழி சொல்கிறேன் ‘ அறம்’ தொகுப்பிலுள்ள கதைகளை தங்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு நேர்த்தியாக மனதில் நிறுத்தும் விதமாக சொல்ல இயலாது
அறச் சிந்தனை உடையவர்களில்கூட பெரும்பாலும் தாம் செய்யும் அறச்செயல்களை முன்னிறுத்தி அதனால் பலன் பெற விழைவதிலேயே குறியாய் நிற்பர். அந்த அனுகூலம் புகழில் முடிந்தால் தொடர்ந்து அறச்செயல்களில் முனைப்புடன் செயல்படுவர். பலனில்லை எனில் சோர்வின்கண் உழன்று அச்செயல்களை கைவிடவும் வாய்ப்புண்டு. புகழுக்காக தம்மைச் சார்ந்த நலன்களுக்காக செய்யப்படுபவை என்றாலும் அவ்வறச்செயல்களும் மேலானவைகளாக கருதப்படவேண்டும். அறச்செயல்கள் மானுட சமூகத்தின் மீது சக மனிதர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதாக உள்ளன. அப்படியான நம்பிக்கைகளை மீட்டெடுக்கும் மாபெரும் சாசனம் ‘ அறம்’ தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளும். ‘
நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை ‘ என்பது நம் ஔவையின் மொழி. மேற்படி கதை மாந்தர்கள் வாழ்ந்த காலத்தில் பெய்த மழை அவர்களின் நற்செயல்களினாலும் எனக் கருதலாம். இப்போது பெய்யும் மழையும் பல மனிதர்கள் செய்யும் அறச்செயல்களாலேயே. மாண்புமிகு அறத்தை உயரத்திப்பிடித்து உரக்கச் சொன்னதற்காக தங்களுக்கு இருகைகூப்பிய வணக்கங்களும் பலத்த கைதட்டல்களும்.
ஒவ்வொரு கதையும் அறத்தின்பால் படிப்போரை தீர்க்கமாக நகரச் செய்பவை. ‘அறம்’ கதையில் எழுத்தாளரின் அறப்பற்று மற்றும் பதிப்பாளர் மனைவியின் உறுதி, யானை டாக்டரின் ‘ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திண்மை, வணங்கான் , நூறு நாற்காலிகள் ஆகியவற்றில் சகமனிதன் மீதான சாதிய காழ்ப்புணர்வின் தாக்குதல்களால் ஏற்படும் வலிகள் , அவற்றை எதிர்கொள்ளும் மனம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
எல்லா கதைகளும் நம்முடைய அகத்தை ஆழ உழுது அவற்றில் அறம் எனும் வித்தை விதைத்துச்செல்கின்றது. அன்பு நீர் ஊற்றி வளர்த்தெடுப்பதும் விட்டுவிடுவதும் அவரவர் மனங்களை பொறுத்தது.
‘சோற்றுக் கணக்கு ‘ படித்து நீண்ட நேரம் அப்படியே மனம் நெகிழ்சியோடிருந்தது. இப்படியும் ஒரு மனிதரா? யாவருக்கும் அடிப்படையில் முதன்மையான தேவை உணவு. அவ்வுணவு அளிப்பதற்கு ஒருவர் முழுமூச்சோடு எவ்வித மனச்சுருக்கமுமின்றி பிரதிபலனுமின்றி செயல்படுகிறார் எனில் அவரல்லவோ வானுறையும் தெய்வத்திற்கு நிகர்.
‘பெருவலி’ சிறுகதையில் கோமல் அவர்களின் திடம் பெரும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. ஒரு சிறு தலைவலி என்றாலே வெளியில் செல்ல முடங்கும் மனம் கொண்டவர்கள் நம்மில் பலபேர். உயிர்கயிற்றை நித்தமும் தீயில் வாட்டும் வேதனையான நோயோடு ஒருவர் இமயமலை வரை செல்ல முனைவது Strongest of Strong, Indomitable determination என்பதை தவிர என்ன சொல்வதென தெரியவில்லை.
மத்தறு தயிர், தாயார் பாதம், மயில் கழுத்து, உலகம் யாவையும் – எல்லாமே செம்மை.
‘ கோட்டி’ சிறுகதையில் வரும் பூமேடை அவர்கள் தனியொரு மனிதனாக எவருடைய கேலியையும் பொருட்படுத்தாது கேலி செய்பவர்களுக்கும் சேர்த்து போராடுகிறார் தான் செல்லும் இடங்களிலெல்லாம். போற்றப்பட வேண்டிய மாபெரும் மானிடன் . கடைசிவரை தன் உறுதிமிக்க காந்தியக் கொள்கைகளின் பிடிப்பிலிருந்து ஒரு இம்மி கூட , ஒரு இமைப்பொழுதுகூட அகலாதவர். இன்று இல்லை எனினும் அவரை நினைத்து அவர் வாழ்ந்த திசையில் கும்பிடவே தோன்றுகிறது. அவரை ‘ கோமாளி’ என அடையாளப்படுத்துவதில் நாம் வெற்றி கண்டிருக்கலாம். ஈனப்பிறவிகளின் பின் கைதொழுது செல்வதால் உண்மையில் நாம்தான் கோமாளிகள். அகத்திற்கும் புறத்திற்கும் வேறுபாடு காட்டத்தெரியாத உள்ளம் பூமேடையினுடையது. எதார்த்தங்களை அவ்வளவு எளிதில் உணராத இவ்வுலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும்?. பெயருக்கேற்ப அவர் பூமேடையாகத்தான் இருந்திருக்கிறார். வாசனையை உள்வாங்குவதில் நாம்தான் தோற்றுப்போயிருக்கிறோம்.
என்னுடைய பார்வையில் ‘அறம்’ தொகுப்பு முழுமையும் பல்கலைகழக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டிய ஒன்று. வெளிவரும் இளையோர்கள் அறச்சிந்தையோடு வருதல் சாலச்சிறந்ததன்றோ!
மேலும் இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையையும் முடிந்தால் மலிவு விலை பதிப்பில் விஷ்ணுபுரம் நண்பர்கள் பதிப்பகம் வழி வெளியிட்டு அனைவருக்கும் கொண்டு சேர்க்கலாம். நாங்களும் துணை நிற்போம். மனிதம் வேரூன்றுவதற்கும் தழைப்பதற்கும் செய்யப்படும் எல்லா செயல்களும் மானுடம் வெல்ல உதவும். அறம் நனி சிறக்கும்.
மிக்க அன்புடன்
பார்த்திபன் .ம.
காரைக்கால்
‘As a writer I’m apolitical and spiritually free’: Jeyamohan
சுசித்ரா- பிரியம்வதா இருவரும் என்னை ஸூம் செயலி வழியாக எடுத்த நீண்ட பேட்டி ஒன்றின் முதல்பகுதி. ஆங்கிலத்தில் இத்தனை விரிவான ஒரு பேட்டி வெளிவந்திருப்பது முக்கியமான ஒரு நிகழ்வு என நினைக்கிறேன்
‘As a writer I’m apolitical and spiritually free’: Jeyamohan
The Abyss- Amazon
‘The Abyss’ – an English translation of Jeyamohan’s Tamil novel ‘Ezhaam Ulagam’
Jeyamohan interview: Ezhaam Ulagam, or The Abyss, is a spiritual inquiry into beggars’ livesExploitative World Hidden in Plain Sight
Exploring The Human Condition in the Darkest
April 22, 2023
விஜயா வாசகர்வட்ட விருதுவிழா
விஜயா வாசகர்வட்டம் வழங்கும் விருதுகள் கோவையில் அளிக்கப்படவுள்ளன.
இடம் பூ.சா.கோ. பொறியியல் கல்லூரி டி அரங்கம் பீளமேடு கோவை 4
நாள் 23 ஏப்ரல் 2023 ஞாயிறு மாலை 6 மணி
பங்குபெறுபவர்கள்
மு.பிரதாப் இ.ஆ.ப
கவிஞர் க.வை.பழனிச்சாமி
விருது பெறுபவர்கள்
விருது பெறுபவர்கள்
ஜெயகாந்தன் விருது
க. மோகனரங்கன்புதுமைப்பித்தன் விருது
ம. காமுத்துரைமீரா விருது
பொன்முகலிசக்தி வை கோவிந்தன் விருது
பி.ராஜேந்திரன்வானதி திருநாவுக்கரசு விருது
ஜி.ரவிமகிழ்ச்சிக் கணக்கு
அன்புள்ள ஆசிரியருக்கு,
ரம்யாவின் கடிதத்தை படித்தேன். (மதுமஞ்சரி – கடிதம் )
மஞ்சரி பற்றிய அவரின் எண்ணங்கள் என்னை என்ன செய்கிறது என தொகுக்க இயலவில்லை. நான் எண்ணுவதை எழுத்தாக்கும் வலிமை என்னிடம் இல்லை என்றே தோன்றுகிறது.
ஒரு கட்டத்திற்கு பிறகு வாழ்க்கையில் ஆசிரியர் மிகத் தேவை ஆகின்றார். இல்லையேல் அலைக்கழியும் அன்றாடம் தான் எஞ்சும்.
செய்வதற்கு ஏதாவது இருந்தாலே இந்த வாழ்வை கடந்து விடலாம் என்பதே நீங்கள் கற்று தந்தது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என நாம் தானே முடிவெடுக்க இயலும். உள்ளுணர்வு கொண்டு அதை செய்ய வேண்டும் தான்.
என் வாழ்வில் முழுதாக பத்து வருடங்கள் மருத்துவம் சார்ந்தே சென்றன. குழந்தையின்மை சிகிச்சை காலத்தையும் என்னையும் சேர்த்தே கரைத்தது. இன்னும் இன்னும் என நான் எழும்போதெல்லாம் மீண்டும் எழ முடியாத படி செய்தது ஊழ். இப்போது சிகிச்சை முடிந்து மகன் பிறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. மீண்டும் தொடங்கவே எண்ணுகிறேன்.
இம்முறை பின்னிழுக்கும் ஊழ் பற்றிய பயம் இருக்கிறது ஏனோ.எதையாவது செய்யத் தொடங்கினால் நிச்சயம் நிம்மதியாக நிறைவாக உணர்வேன்.ஆனால் என்ன செய்ய எப்படி செய்ய எனத் திட்டமிடவே இயலவில்லை.உள்ளுணர்வு எங்கோ தொலைவில் இருப்பது போலவே உணர்கிறேன். பயத்தினால் என எண்ணுகிறேன்.
எதுவோ சொல்ல வந்து என்னவோ சொல்லிவிட்டேன். மஞ்சரிக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய விருதுகள் விழாவிற்கும், இன்னும் சிலருக்கும் என்னால் ஆன உதவி செய்கிறேன். ஆனால் நான் என் கையால் செய்யும் ஏதேனும் மட்டுமே என் நிறைவு அல்லவா.
நன்றியுடன்
சரண்யா
திண்டுக்கல்
அன்புள்ள சரண்யா
நான் எனக்குநானே சொல்லிக்கொள்வது ஒன்றுண்டு. இதோ இன்று காலையில் எழுந்ததுமே சொல்லிக்கொண்டேன். ”நேரமில்லை. காலம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.”
செய்துமுடிக்கவேண்டிய கடமைகளுக்கான நேரம் அல்ல அது. கடமைகள் செய்யப்படவேண்டியவையே. ஆனால் மனிதன் வாழ்வது கடமைகளுக்காக அல்ல. மகிழ்ச்சிகளுக்காக.
விரைந்து சென்றுகொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கான நேரம். மகிழ்ச்சியைத் தேடிக்கொள்வதற்கு அவசியமான பிற செயல்களைச் செய்வதற்கான நேரம். அது இன்னும் சில ஆண்டுகள்தான் எனக்கு.
ஆகவே என் உள்ளத்திற்கு இனியவை அனைத்தையும் ஒத்திப்போடாமல் தயங்காமல் செய்துகொண்டே இருக்கிறேன். பயணங்கள். எழுத்துக்கள். நண்பர் சந்திப்புகள். எல்லா மகிழ்ச்சிகளையும் விடாமல் அடைந்துகொண்டிருக்கிறேன்.
எது எனக்கு உண்மையான மகிழ்ச்சி என கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறேன். வெறும் அகங்காரத்திற்காகச் செய்யப்படுபவை, நாலுபேருக்காகச் செய்யப்படுபவை அனைத்தையும் தவிர்க்க முடிந்தவரை முயல்கிறேன்.
நான் என்னைப் பார்க்கிறேன். எனக்கு உண்மையில் மகிழ்ச்சி அளிப்பவை மூன்று. எழுதுவது, வாசிப்பது, எதையேனும் நேரில் வருபவர்களுக்குக் கற்பிப்பது, பயணங்கள், நண்பர்களுடன் இருப்பது. அவையன்றி எல்லாமே செய்தாகவேண்டியவை மட்டுமே.
ஒரு கணக்குக்காக இந்த ஒருவாரத்தை எடுத்துக்கொண்டேன். (ஏப்ரல் 10 முதல் 16 வரை) 168 மணி நேரம். மணிநேரமாகக் குறுக்கினால் அவ்வளவுதானா என்னும் துணுக்குறல் ஏற்படுகிறது. (இதை அடைய உங்களுக்கும் இன்னும் கொஞ்சம் வயதாகவேண்டும். என் வாழ்க்கையின் சில கொந்தளிப்புகளால் நான் அதை கொஞ்சம் முன்னரே அடைந்தேன்)
எப்போதுமே நாளில் எட்டுமணி நேரம் தூங்குபவன் நான். நல்ல தூக்கமே எஞ்சிய பொழுதை உற்சாகமாக இருக்கச் செய்கிறது. காலையில் அன்றைய நாளை எண்ணியபடி உற்சாகமாகப் படுக்கையிலிருந்து துள்ளி எழுவது வரைத்தான் நான் வாழ்கிறேன். அதில் 56 மணிநேரம் சென்றுவிட்டது.
இந்த வாரத்தில் 4 நாட்கள் வீட்டில் இருந்து எழுதியிருக்கிறேன். ஒருநாளில் 5 மணிநேரம். தினம் 2 மணிநேரம் வாசித்திருக்கிறேன். ஆக, 28 மணிநேரம். வீட்டில் சிறுவேலைகளைச் செய்தது, அருண்மொழியுடன் பேசிக்கொண்டிருந்தது என ஒருநாளில் 3 மணி நேரம். அது மொத்தமாக ஒரு 12 மணிநேரம்.
மூன்றுநாட்கள் ஒரு கற்பித்தல் முகாம். (மேடையுடைப் பயிற்சி, உண்மையில் அது சிந்திப்பதற்கான பயிற்சிதான்). மலைப்பகுதியில் நடை. உரையாடல்கள். ஒருநாளில் 16 மணிநேரமும் முழுமையாகவே உச்ச மனநிலையில் இருந்தேன். 48 மணிநேரம்.
ஆகமொத்தம், 112 மணி நேரத்தில் 88 மணிநேரம் மகிழ்ச்சியாகக் கழிந்துள்ளது. முக்கால்பங்கு நேரம். (பயனுள்ளது என்ற சொல்லை நான் பயன்படுத்த மாட்டேன். பயன் என்றால் மகிழ்ச்சி மட்டுமே). எஞ்சிய 24 மணி நேரத்தில் 20 மணிநேரமாவது என் தொழிலுக்காகவே செலவழித்திருப்பேன். அதை வலிந்து செய்யவில்லை. ஆனால் அது மகிழ்ச்சியின் கணக்கிலும் வராது.
இந்தக் கணக்கை 1988 முதல் போட்டிருக்கிறேன். 1992 முதல் பல ஆண்டுகளுக்கு நாட்குறிப்புகள் எழுதி அவை இன்றும் கைவசமுள்ளன. ஒரு நாள் எத்தனை அரியது என்னும் எண்ணமே என்னை இயக்கியிருக்கிறது. அந்நாளில் என்ன செய்தேன் என குறித்திருக்கிறேன். ’இன்று சொல்லும்படி ஒன்றும் செய்யவில்லை’ என எழுதப்பட்ட நாட்கள் மிகமிகக்குறைவு. அலுவலகம் சென்ற நாட்களில் ஒரு நாளில் ஆறு மணிநேரம் வரை வேலைக்குச் செலவிட்டிருக்கிறேன். (என் வேலை அவ்வளவுதான். நான் அலுவலகத்திலேயே இரண்டு மூன்று மணிநேரம் வாசிப்பவனாக இருந்தேன்)
இன்று எண்ணும்போது நிறைவளிப்பது ‘ஆம், வாழ்ந்திருக்கிறோம்’ என்னும் எண்ணம்தான். அதையே திரும்பத் திரும்ப பிறருக்குப் பரிந்துரைக்கிறேன்.
எது சிறந்தது என்றல்ல, எது கடமை என்றல்ல, எது எல்லாரும் மதிப்பது என்றல்ல, எது உங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியானது என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். எல்லாரும் மகிழ்ச்சி என நம்புவது உங்களுக்கு மகிழ்ச்சி அல்லாமல் இருக்கலாம் (அறிவும் நுண்ணுணர்வும் உள்ளவர்களுக்கு அப்படித்தான் பெரும்பாலும் இருக்கும்)
மகிழ்ச்சியாக இருப்பதற்கு உங்கள் வாழ்க்கையை உடனடியாக முற்றிலும் தலைகீழாக மாற்றிக்கொண்டாகவேண்டும் என்பதில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு புதியதாக எதிலாவது இறங்கியாகவேண்டும் என்பதில்லை. அப்படிச் செய்பவர்கள் அசாதாரணமானவர்கள். சாமானியர்களுக்கு அதெல்லாமே ஒருவகை பகற்கனவுகளாகவே எஞ்சுவதற்கே வாய்ப்பு. அது அதீதமானது என்பதனாலேயே ஒத்திப்போட்டுக்கொண்டே இருப்போம்.
மகிழ்ச்சியாக இருப்பதற்கான முதல் வழி மகிழ்ச்சிதான் முக்கியம் என முடிவெடுப்பது. மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சமே என நினைப்பது. வெற்றி, லாபம், சமூகக் கௌரவம் என எதன்பொருட்டேனும் நாம் நமக்கு மகிழ்ச்சியளிக்காதவற்றில் மூழ்கியிருந்தால் கூடுமானவரை அவற்றிலிருந்து விலகுவது. நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றை நோக்கிச் செல்வது. எது மகிழ்ச்சி என கண்டுகொண்டபின் அதை செய்வது. அதைச்செய்ய தடையாக அமையும் தயக்கம், ஆணவம், பிறரின் மதிப்புக்கான ஏக்கம் ஆகியவற்றைக் களைவது.
அந்த தொடக்கத்தை அன்றே அப்போதே நிகழ்த்துவதுதான் முதலில் செய்யவேண்டியது. நமக்கு எது உண்மையான மகிழ்ச்சி அளிப்பது என்பதை எதையேனும் செய்து பார்க்காமல் எவரும் அறியமுடியாது. ஆகவே எல்லாவற்றையும் செய்து பார்க்கலாம். எதையாவது கற்கலாம். எதையாவது செய்ய தொடங்கலாம். அவற்றில் எது மிக அணுக்கமானதோ அதைத் தொடரலாம்.
ஊழ், அது எங்கோ உள்ளது. எப்படியிருந்தாலும் அது நம் அறிதலுக்கு அப்பாற்பட்டது. அதை எண்ணி அஞ்சுவதில் பயனில்லை. துளி ஈரமிருந்தால் எங்கும் கைப்பிடிப் புல் முளைத்துவிடும், அடுத்த துளி நீருக்காக அது நம்பிக்கையும் கொண்டிருக்கும். அதுவே நான் சொல்லும் வழி.
ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியைக் கொண்டே மதிப்பிடுவதே மகிழ்ச்சிக்கான வழி என நான் கண்டடைந்தேன். மகிழ்ச்சிக்கான வழிகளில் முதன்மையானது மகிழ்ச்சியற்றவற்றை விட்டு விலகும் துணிவும் பொறுமையும் என அறிந்தேன். செயலினூடாக மகிழ்ச்சி என்று வாழ்ந்து கற்றேன். திரும்பத் திரும்ப நான் சொல்வது அதையே.
இதுவே என் வாழ்க்கைச்சாதனை. என் வாழ்க்கையை நான் ஒரு பயிற்சியாகவே காண்கிறேன். யோகமுறையில் சாதனா என்பார்களே அது. இது மகிழ்ச்சிப்பயிற்சி. கற்றல், கற்பித்தல், கடந்துசெல்லுதல் என மூன்று நிலைகளில் அதை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.
ஜெ
பாலூர் கண்ணப்ப முதலியார்
தமிழில் கல்வி தொடங்கிய காலகட்டத்தில் நவீன உரைநடைக்கும் மரபிலக்கியத்திற்கும் பாலமாக அமைந்தவை அன்று எழுதப்பட்ட பாடநூல்கள்.அவற்றை எழுதியவர்களில் பாலூர் கண்ணப்பமுதலியார் முக்கியமானவர்.
பாலூர் கண்ணப்ப முதலியார்
பாலூர் கண்ணப்ப முதலியார் – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


