Jeyamohan's Blog, page 588
April 29, 2023
பொன்னியின் செல்வன் -2, நிறைவில்
பொன்னியின் செல்வன் படத்தை இன்று மாலை 430 காட்சியாக வடபழனி ஃபாரம் மாலில் உள்ள ஐமாக்ஸ் திரையில் பார்த்தேன். ஜா.ராஜகோபாலன், சண்முகம், அன்பு ஹனீஃபா, செந்தில் ஆகியோர் உடன் வந்தனர். அகன்ற திரையில் விரிந்த காட்சிகளை காண்பது அரிய அனுபவம். முதன்முதலாக ஐமாக்ஸ் திரையில் ஒரு படத்தை அமெரிக்காவில் பார்த்தபோது உருவான பரவசம் நினைவில் நீடிக்கிறது. ஆனால் அண்மைக்காட்சிகளும், மிக அண்மைக்காட்சிகளும் (குளோஸப், டைட் குளோஸப்) அவ்வளவு பெரிய திரையில் பார்க்கும்போது அதைவிர பிரம்மாண்டமான அனுபவம் உருவாகுமென பொன்னியின் செல்வன்2 பார்க்கும் போது தோன்றியது.
‘சினிமா அண்மைக்காட்சிகளின் கலை’ என்பார்கள். ஆனால் மிகமிக கவனமாக பயன்படுத்தவேண்டியது அண்மைக்காட்சி. நடிகர்கள் உண்மையாக உளமுணர்ந்து நடிக்கவில்லை என்றால் அண்மைக்காட்சிகள் காட்டிக்கொடுத்துவிடும். மனிதக் கண்களை, முகத்தின் மெய்ப்பாடுகளை அவ்வளவு நெருக்கமாகப் பார்க்க சினிமாபோல வேறொரு வழியே இல்லை. நடிகர் மனதில் வேறொரு எண்ணம் ஓடினால், நடிகர் அண்மையிலுள்ள வேறெதைப்பற்றியாவது கொஞ்சம் கவனம் கொண்டிருந்தால் அண்மைக்காட்சி காட்டிக்கொடுத்துவிடும்.
ஆகவே பெரும்பாலான அவசர -வணிகப் படங்களில் அண்மைக்காட்சிகளை நீட்டிக்க மாட்டார்கள். இரண்டு நொடிகள் முதல் பத்து நொடிகள் வரையே பெரும்பாலும் அண்மைக்காட்சிகள் நீடிக்கும். பொன்னியின் செல்வன் மிக அதிகமாக அண்மைக்காட்சிகளை பயன்படுத்தியிருக்கும் படம். மிகநெடுநேரம் அண்மைக்காட்சிகள் ஓடுகின்றன. பெரும்பாலும் அனைவருக்குமே அண்மைக்காட்சிகள் உண்டு. அப்படி வைக்க இயக்குநர் நடிகர்களை நம்பவேண்டும், தன்னையும் நம்பவேண்டும்.விக்ரம் ,ஐஸ்வர்யா ராய் இருவரின் அண்மைக்காட்சிகளாக ஓடும் அந்த சந்திப்புக் காட்சி ஓர் உச்சம்.
பொன்னியின் செல்வனில் முழுமையாக எந்தப்பாட்டும் இல்லை. பாடல்காட்சியே இல்லை. ஆனால் பாடல்கள் பின்னணியிசையாகவே ஒலிப்பது ஓர் அபாரமாக அனுபவத்தை அளிக்கிறது. படம் ஒரு இசைநாடகத்தன்மையின் உச்சங்களை பாடல்கள் வழியாக அடைகிறது. பாடல்கள் படத்தில் பெரும்பாலும் தேவையற்ற இணைப்பாகவே இருக்கும். அரிதாக ஒரு சூழலை காட்டவோ, ஒரு படிப்படியான மாற்றத்தைக் காட்டவோ பாடல்களைப் பயன்படுத்துவதுண்டு. இப்படி பின்னணியிசையாக பாடல்களை பயன்படுத்துவதே மிகச்சிறப்பானது என்று தோன்றியது.
பொன்னியின் செல்வன் பாடல்களில் சோழர் பெருமை சொல்லும் பாடல் மில்லியன் காட்சிகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. படத்திலும் இதுவே முக்கியமானதாக இருக்குமென எண்ணியிருந்தேன். அவ்வாறே ஆகியிருக்கிறது.
இப்போது சட்டென்று இதிலிருந்து முற்றாக விடுபட்டதன் வெறுமை தோன்றுகிறது. எல்லா சினிமாக்களும் கனவுகள்தான். விழித்துக்கொண்டே ஆகவேண்டும்
இந்தப்பாடல் தமிழிலும் சிறப்பாக உள்ளது. ஆனால் தெலுங்கில் ஒரு படி மேல். தெலுங்கில் எதுகைமோனை இயல்பாக அமைகிறது. ரா ரா என அடிகள் தொடங்கவும் முடியவும் முயல்கின்றன. ‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாரதி சொன்னது ஏன் என புரிகிறது.
இப்படம் ஒரு தொடக்கம்தான். இதையொட்டி இளையதலைமுறை நடுவே தமிழ் வரலாறு சார்ந்து ஓர் ஆர்வம் உருவாகுமென்றால், இங்கே சமூக ஊடகங்களில் நிறைந்திருக்கும் எதிர்மறை மனநிலைகளுக்கு அப்பால் சென்று ஒரு நேர்நிலைமனநிலை உருவாகுமென்றால் அதுவே மெய்யான சாதனை. நீடிக்கும் சாதனையும் அதுவே.
*
பொன்னியின் செல்வன் 1 வெளிவந்தபோது உருவான விவாதங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட நூல். வரலாறு, திரைக்கலை, புனைவுக்கலை சார்ந்தது
பொன்னியின் செல்வன் விவாதங்கள், வாங்கஆ. சிவசுப்ரமணியன்
ஆ.சிவசுப்ரமணியம்ஆ.சிவசுப்ரமணியன் கிறிஸ்தவ வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு முதலான தமிழ் வரலாறு, நாட்டாரியல், பண்பாட்டாய்வு ஆகிய களங்களில் பங்களிப்பாற்றிய ஆய்வாளர். நாட்டாரியலில் அவருடைய வழிமுறை தரவுகளை சேகரித்து வரலாற்றுப்பதிவை நிகழ்த்துவதல்ல. அவருடைய அரசியல்பார்வைக்கு ஏற்ப அவற்றில் இருந்து கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதும்கூடத்தான். நா. வானமாமலையின் வழிமுறை அது
ஆ. சிவசுப்ரமணியன்
ஆ. சிவசுப்ரமணியன் – தமிழ் விக்கி
இமையம் சொல்லும் அவதூறு…கடிதங்கள்
அன்பிற்குரிய திரு ஜெயமோகன்,
தங்களுடைய பதிலில் நீங்கள் மிக தெளிவாக, துல்லியமாக சுந்தர ராமசாமி, இமையம், மற்றும் பதிப்பகம் அதன் உரிமையாளர்கள் பற்றிய உங்களுடைய விமர்சனம் எனக்கு மிக நல்ல புரிதலை வழங்கியது. மேலும் நான் இமையம் அவர்களின் கோவேரி கழுதைகள் படித்து அடைந்த உவகை சொல்லில் கூற முடியாதவை. ஆனால் வாசிக்கும்போது என் மனதில் எந்த வித சாதிய எண்ணமும் எழவில்லை. நான் ஒரு வாசகனாக கதையை வாசித்து ஒரு அரிய அனுபவத்தை பெற்றேன்.
உங்கள் பதிலில் இருந்து உங்களின் திறந்த மனதை உணர்ந்தேன். எனக்கு தோன்றுபவை, இலக்கியத்தில் இருப்பவர்கள் ஏன் அரசியலை தங்களுடைய அழகிய படைப்புகளின் விமர்சகர்கள் மீது திணிக்க எத்தனிக்கிறார்கள் என்பது பெரும் வியப்பாக இருக்கும் நிலை. அதுவும் தாங்கள் மிக அன்புடன் பழகி அவருடைய படைப்புகளை நல்ல திறந்த மன நிலையில் விமர்சனம் செய்த பிறகு, இத்தகைய உங்களைப் பற்றிய விமர்சனங்களை வைப்பது மிகவும் கீழ்மையான செயலாகவே எண்ணுகிறேன்.
ஒன்று மட்டும் மிக தெளிவாக புரிகிறது, வணிகம் என்ற ஒரே நோக்கில், தங்களை மதிக்காவிடிலும் அவர்களின் படைப்புகளை பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டும் அமைப்புகளை எண்ணும் போது வியப்பாக இருக்கிறது. உங்களின் வாசகர்களின் கேள்விகளுக்கு அளிக்கும் தெளிவான விளக்கமான ஆழமான பதில்களிலிருந்து நான் பலவற்றை உணரவும் கற்கவும் எத்தனிக்கிறேன்.
இலக்கியத்தை வைத்து, பல நல்ல படைப்புகளை தந்த பிறகு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி என்பது எனக்கு முற்றிலும் புரியாத புதிராக இருக்கிறது.நான் ஒரு எழுத்தாளரின் பெயரை கூற விரும்பவில்லை, அவர் இலக்கியவாதிகளை பேசும்போதெல்லாம் உங்கள் பெயரை கூறி, அவதூறு செய்வது வழக்கமாக இருந்தது. இப்போது ஏனோ அமைதியாக இருக்கும் நிலை.
இந்த எழுத்தாளர்களுக்கு ஒன்றை கூற விழைகிறேன், நல்ல படைப்புகள் மூலம் வாசகனை அடைய எத்தனியுங்கள். இங்கும் வந்து அரசியல் பண்ணாதீர்கள். இந்த அரசியல் என்ற அமைப்பால் நல்ல பண்புள்ளவர்கள் அனைவரும் அதீத அருவருப்புடன் நமது மாநிலத்தில் வாழும் நிலை.
அன்புடன்
பழனியப்பன் முத்துக்குமார்
அன்புள்ள ஜெ
இமையம் செய்த அவதூறு பற்றிய கட்டுரை படித்தேன். நான் ஒன்றை கவனித்திருக்கிறேன். ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களுக்கான ஒரு narrative ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தனிப்பட்ட முறையிலும் பலர் கூட்டாகவும் அந்த narrative வழியாகவே தங்களை முன்வைக்கிறார்கள். ‘என்னை எல்லாரும் ஒதுக்குகிறார்கள்’ என்பது ஒருவரின் narrative என்றால் அவர் நீங்கள் என்ன சொன்னாலும் அதை மாற்றிக்கொள்ள மாட்டார். ஏனென்றால் அது அவருடைய asset. அதில் அவர் நீண்டகாலமாக invest செய்து வந்திருக்கிறார். ‘நான் ஒடுக்கப்பட்ட சாதி’ என்பது ஒரு பெரிய அடையாளம். நீங்களே பார்க்கலாம். இன்னொருவர் நான் ஒடுக்கப்பட்ட சாதி என்று சொன்னாலுடனே இவர்கள் சண்டைக்குப் போய்விடுவார்கள். அது இவர்களுக்கான credit அதை பங்குபோட விரும்ப மாட்டார்கள். இமையம் செய்திருப்பது இதுவே. இன்னும் சொற்பநாட்களில் சுந்தர ராமசாமி, க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோரால் அவர் தான் ஒடுக்கப்பட்டதாகச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்.
என்.ஆர்.ராமகிருஷ்ணன்
கோயில் யானையின் திமிர்
வணக்கம்.
பல மாதங்கள் என் “வாசிக்க வேண்டிய புத்தகங்கள்” பட்டியலிலிருந்த ஓம்சேரி என்.என். பிள்ளையின் “கோயில் யானை”யை (நாடகம்) சமீபத்தில் வாசித்தேன்.
“கோயில் யானை” சிறிய நாடகம்தான். ஆனால் பக்கத்திற்குப் பக்கம், அங்கதமும்/பகடியும்/எள்ளலும் தெறிக்கின்றன. ஸ்ரீலால் சுக்ல-வின் “தர்பாரி ராக”த்திற்குப் பிறகு, படிக்கும் நேரம் முழுவதும் நான் மனம்விட்டு வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தது “கோயில் யானை” வாசிப்பின் போதுதான். வாசகர்கள் தவறவிடக்கூடாத நூல்.
ஒன்பது முழுநீள நாடகங்களும், 80 ஓரங்க நாடகங்களும், சில நாவல்களும் எழுதியிருக்கும் ஓம்சேரி என்.என். பிள்ளை, இருமுறை “கேரள சாகித்ய அகாடமி” விருதும், கேரள மாநில அரசின் உயரிய கௌரமான “கேரள பிரபா விருது”ம் பெற்றிருக்கிறார். ஓம்சேரி, கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் பிறந்தவர். “கோயில் யானை”க்கு, திருவனந்தபுரம் பி.கே. வேணுக்குட்டன் நாயர் நல்ல முன்னுரை ஒன்றைத் தந்திருக்கிறார். இளம்பாரதியின் தமிழாக்கம் மிகச்சிறப்பு.
மலைக்காட்டில் சுதந்திரமாக மகிழ்ச்சியாகத் திரிந்து கொண்டிருந்த யானைக்குட்டி ஒன்று, தந்திரமாக, குழி வெட்டி பொறி வைத்து பிடிக்கப்பட்டு, நாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது. செய்தித் தாள்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டு, அக்குட்டி யானை ஏலம் விடப்பட, செல்வந்தர் ஒருவர் வாங்குகிறார். கொச்சாம்பள்ளி தெய்வத்தின் அனுக்கிரகத்தினால் தனக்குக் கிடைத்த சௌபாக்கியங்களுக்குக் கைம்மாறாக, அவர் அந்த யானைக்குட்டியை கோயிலுக்கு கொடுத்து விடுகிறார். ஜமீன்தார் யானைக்குட்டிக்கு, “கேசவன்” என்று பெயரிடுகிறார். கேசவனுக்கு மாவுத்தனாக சங்குநாயர் நியமிக்கப்படுகிறான்.
யானை கேசவன் அடிமைத்தனத்தை வெறுக்கிறான். அதிகாரகட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறான். திருவிழாக்களில் தன் மேல் ஏற்றிய விக்கிரகத்தையும், குடை பிடிப்பவனையும், பூசாரிகளையும் இரண்டு/மூன்று முறை விசிறியடித்திருக்கிறான். அதனால் உற்சவங்களுக்கு யாரும் கேசவனைக் கூப்பிடுவதில்லை. கேசவன் ஒழுங்காக மரத்தடிகளும் தூக்குவதில்லை. கொச்சாம்பள்ளி மனய்க்கல் ருத்ரநாராயணன் நம்பூதிரி, உள்ளூர் கிராம பஞ்சாயத்தில் கேசவன் அட்டூழியங்கள் செய்வதாக கம்பிளெய்ண்ட் கொடுக்கிறார். கேசவனுக்கு வருமானம் மிகக் குறைவாகக் கிடைப்பதால், அதற்கு போதிய அளவு உணவு கொடுக்கப்படுவதில்லை. பசிக்கொடுமையினால் நாளடைவில் அவன் உடல் தளர்வுறுகிறான்.
உள்ளூர் பத்திரிகை நிருபர் சு.ம., கேசவன் நோய்வாய்ப்பட்டிருப்பதாக, பத்திரிகையில் கட்டுரை எழுதுகிறார். “ஆல் கேரளா கவுன்சில் ஃபார் த ட்ரீட்மெண்ட் ஆஃப் கேசவன்” என்ற சபை ஆரம்பிக்கப்பட்டு, அதன் சார்பாக கேசவனைப் பரிசோதித்து, சிகிச்சையளிக்க டாக்டர் ஒருவர் வருகிறார். “அகில இந்திய கேசவ பாதுகாப்புக் கழகம்”-ம் அமைக்கப்பட்டு, கழகத்தின்வேண்டுகோளுக்கிணங்க, பிஷகாச்சார்யா ஜோசிய பூஷணம் கிட்டுப்பணிக்கர், சோழி உருட்டிப் பார்த்து கேசவனின் பிரச்சனையை அறியவும், கேசவனுக்கு பரிகார பூஜைகள் பரிந்துரைக்கவும் வருகிறார். டாக்டருக்கும், பணிக்கருக்கும் இடையே கேசவனுக்கான வைத்தியம் குறித்து வாக்குவாதம் வலுக்கிறது.
பி.ஏ. படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பாஸ்கரன் என்ற பாஸ்கர் குமார், கோயில் கலைஞர்களான மிருதங்கக்காரர், பாகவதர், வீதிகளில் பொருடகள் விற்கும் கம்பர் ராமகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து கேசவனைப் பற்றி ஒரு கதாகாலட்சேபம் நடத்தத் திட்டமிடுகிறான் (பின்னணி இசை கானபூஷனம் கொச்சாம்பள்ளி மதன் & பாலக்காடு பத்மநாபன்). கேசவன், பாஸ்கருக்கு நண்பன். சில சமயம் வலதுசாரியாகவும், சில சமயம் இடதுசாரியாகவும் மாறி மாறி சொற்பொழிவாற்றும் அரசியல்வாதி “காட்டாங்குளத்து குட்டி”, கள்ளுக்கடை மத்தாயி, டீக்கடைக்காரன் பரமு நாயர் அனைவரும் நாடகத்தில் வருகிறார்கள்.
நாடகத்தின் முதல் காட்சியே அபாரமாய் துவங்குகிறது. கையில் விளம்பரப் பலகையுடன் வரும் கம்பர் ராமகிருஷ்ணனின் விற்பனைக் குரல்…
#“முந்திரிப் பருப்பேய்…, லாட்டரி சீட்டேய்…, பிண்டத்தைலம், சவுரி முடி, கண் மை, காதுக் குரும்பி, கம்பராமாயணம், காமசூத்திரம், பகவத்கீதை, தேர்தல் அறிக்கை, பஞ்சாங்கம், பல்பொடி, தீர்த்த யாத்திரை டிக்கேஏஏஏட்…”#
இங்கு தொடங்கும் ஓம்சேரியின் அங்கதமும், எள்ளலும் நாடகத்தின் இறுதிக் காட்சி வரை சரவெடியாய் வெடிக்கின்றன.
*
கோயில் யானை கொச்சாம்பள்ளி கேசவனின் மாவுத்தன் சங்குநாயர் கள் குடித்திருக்கிறான். பாஸ்கரன் நக்கலும் நையாண்டியும் கொண்ட எழுத்தாளன். பாஸ்கரனுடன் சங்குநாயரின் உரையாடல்…
சங்குநாயர்: நீதாண்டா சரியான மரமண்டை. மரத்தைத் தூக்கறதுக்கும், சாமி ஊர்வலத்துக்குப் போறதுக்கும் இல்லாம, வேறெ எதுக்குடா யானை பொறந்துருக்கு? (பாஸ்கரனுக்குப் பக்கத்தில் சென்று) மனுஷன் பொறந்தது எதுக்காக?
பாஸ்கரன் : சாகிறதுக்கு
சங்குநாயர்: போடா மடையா. மனுஷன் பொறந்தது கள்ளு குடிக்கவும் கல்யாணம் கட்டிக்கவும்தான். ‘மகளிரவர் முகத் தாமரை, மகளிரவர் பாதத்தாமரை‘. (சிறிது நடந்துவிட்டு சட்டென்று திரும்பி வருகிறான்) டேய் கேள்விப்பட்டியாடா பாஸுகரா, நீ வாசிச்சயாடா, பத்திரிகைகளிலேயெல்லாம் வெண்டைக்காய்த்தனமா வழவழான்னு என்னன்னமோ எழுதியிருக்கானாமே, கேசவனுக்கு உடம்பு சரியில்ல–ஆபத்து அப்படின்னு. இதையெல்லாம் பத்திரிகைல எழுதனவன் எவன்டா?
பாஸ்கரன்: பத்திரிகைகாரங்களுக்கு எழுதறதுக்கு ஏதாச்சும் பெரிய சங்கதி வேணாமா சங்குமாமா? சர்க்காரைப் பத்தி எழுதினா ஜெயில்லே போட்டுருவாங்க. பெரிய ஆளுங்களைப் பத்தி எழுதினா கோர்ட்டுக்குப் போகணும். கேசவனுக்கு சீக்கு வந்தா செய்தி. இல்லியா பின்னே!. செத்தா அதைவிடப் பெரிய செய்தி!. நம்ம பத்திரிகை நிருபர் சு.ம. எழுதி அனுப்பிச்சதா இருக்கும்.
சங்குநாயர்: எனக்கு இடுப்பு வலி எடுத்து எத்தனை வருஷமாச்சு! அதை அந்த சு.ம.கிட்ட சொல்லவும் செஞ்சோம். ஆனாஅவரு இதுவரைக்கும் இதைப்பத்தி ஏதாச்சும் எழுதினாரா?
பாஸ்கரன்: அது குஞ்சியம்மா பத்திரிகை நடத்தினாத்தான் நடக்கும் (குஞ்சியம்மா, சங்குநாயரின் தொடுப்பு).அப்போ சங்குமாமாவோட சீக்கு, டூர் புரோக்ராம், கள்ளுக்கடைப் பிரசங்கம்… ஆக எல்லாமே செய்தியா வெளிவருமில்லே?
*
முப்பது வருடங்களுக்கு முன்னால், ருத்ரநாராயண நம்பூதிரி, கோயில் யானை கேசவன் மேல் கொடுத்த புகாரையும், அது சம்பந்தமான ஃபைல்களையும் டுத்துக்கொண்டு மாவுத்தன் சங்குநாயரை விசாரிக்க கிராம அதிகாரி வருகிறார்.
கி. அதிகாரி: புகார்…(ஃபைலைப் புரட்டுகிறார்) புகார் இதோ இதுதான் (வாசிக்கிறார்). சில வருஷங்களாக இவன் (கேசவன்) மரியாதைக்குரிய நாட்டாமைக்காரரோடும், மாவுத்தனோடும் அனுசரணையாக இல்லாமலும், அவர்களுடைய அதிகாரத்தைத் தட்டிக் கேட்கும் விதத்திலும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், நேற்று இரவில் தெய்வ விக்கிரகத்தை மனப்பூர்வமாகவும், கெட்ட நோக்கத்துடனும் தலையிலிருந்து இரண்டு தடவை கீழே தூக்கி எறிந்துவிட்டு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தலை நிமிர்த்திக் கொண்டிருந்ததும் கண்டிக்கத் தக்கதாகும். அதிகாரத்தைக் கேள்வி கேட்கறதுக்கும், யாருக்கும் அடங்காமல் இருக்கறதுக்கும் யானையை அனுமதிப்பதென்பது சட்டதிட்டங்களுக்கெதிரான அச்சுறுத்தல் என்பதாலும் பொதுப் பாதுகாப்பை முன்னிறுத்தியும் ஆயுதம் ஏந்திய இரண்டு வீரர்கள் மேற்பார்வையிட்டுச் சட்டதிட்டத்தைப் பராமரிக்க அவசரமாக வேண்டிக் கொள்ளப்படுகிறது.
பாஸ்கரன்: அப்போ போலீஸ்காரர்களுடைய நடத்தை நன்றாக இருக்க யாரை மேற்பார்வைக்கு வைப்பது? (கிராம அதிகாரி முறைக்கிறார்)
சங்குநாயர்: புகார் மனு கிடைச்ச பிறகும் போலீஸ்காரங்களைக் கூப்பிடாம இருக்கறது ஏன்?
கி. அதிகாரி: அப்படியெல்லாம் போலீஸ்காரங்களை அமர்த்திட முடியுமா? அது அனுமதிக்கத் தக்கதுதானா என்று உள்துறைக்கு எழுதிக் கேட்டோம். உள்துறை, வனத்துறையின் அபிப்ராயத்திற்காக அனுப்பி வைத்திருக்கிறது. வனத்துறையின் பதில் இதோ இந்தா இருக்கு (ஃபைல் பிரித்து முணுமுணுத்தபடி படிக்கிறார்). வனத்துறை நடைமுறைச் சட்டம் 5ஆம் பிரிவு-7ஆம் உட்பிரிவு…18ஆம் பிரிவு, 20ஆம் பிரிவு…54ஆம் பிரிவு-37ஆம் பிரிவு…அல்லாத பட்சத்தில், இப்போதுள்ள நடைமுறைச் சட்டதிட்டங்களிலுள்ள முரண்பாடுகளைக் களைவதற்காக ஒரு விசாரணைக் ழுவை நியமிப்பது…
பாஸ்கரன்: அர்த்தம் புரியலயே…
கி. அதிகாரி: தமிழிலே சொன்னாக் கூடப் புரியலயா?. நான் சொன்னதோட அர்த்தம்… (சுருக்கமாய் சொல்கிறார்)
பாஸ்கரன்: இதைச் சொல்லத்தானா இப்படி ஊரை வளைச்சிப் பேசினீங்க?
*
சோழிகள் போட்டுப் பார்த்துவிட்டு பணிக்கர் சொல்கிறார்…
“கேசவன் மேல தெய்வக் கோபம் ஏராளமா இருக்கு. செவ்வாய் லக்கினத்துல இருக்கு. எட்டாம் இடத்தானுக்கு பலமில்லாதாக்கும். நாலாம் இடத்தானும், ஆரோக்கியக்காரனுமான புதன், பகை ஸ்தானத்துல இருக்கான். இப்படியெல்லாம் இருக்கறப்போ அஜீரணம், குன்மம் முதலானவை உண்டாகும். ப்ரமாணம் இப்படிச் சொல்லுது…
“அஜீர்ணி குன்மாமயமூலமேதி
கஜே விலக்னே விபலேரி நாதே“...
நான் சிரித்து ஓய பல நிமிடங்களானது.
வெங்கி
“கோயில் யானை” (நாடகம்) – ஓம்சேரி என்.என். பிள்ளை
மலையாள மூலம்: “Thevarutu Aana”
தமிழில்: இளம்பாரதி
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
‘The Abyss’ is frightening, funny, and everything in between
The Abyss cannot be easily digested. And the climax, when it arrives on its haunches, will knock the wind out of you since it is shockingly constructed on the hills of greed and oppression.
‘The Abyss’ is frightening, funny, and everything in between
The Abyss- Amazon
‘As a writer I’m apolitical and spiritually free’: Jeyamohan
Why the Anglophone reader should know Jeyamohan
‘The Abyss’ – an English translation of Jeyamohan’s Tamil novel ‘Ezhaam Ulagam’
Jeyamohan interview: Ezhaam Ulagam, or The Abyss, is a spiritual inquiry into beggars’ livesExploitative World Hidden in Plain Sight
Exploring The Human Condition in the Darkest
When the void stares right back at you
April 28, 2023
பொன்னியின் செல்வன், கேள்விகள்
பொன்னியின் செல்வன் 2 வெளிவந்ததும் பலவகையான கடிதங்கள். பல விமர்சனங்களை அனுப்பியிருந்தனர். எந்த சினிமாக்காரரையும்போல நானும் தேர்ந்தெடுத்த சில விமர்சனங்களைத் தவிர எஞ்சியவற்றை படிப்பதில்லை.
டிவிட்டரில் முகம் தெரியாத ஏராளமான ரசிகர்கள் கூர்மையான வசனங்களில் ஒவ்வொரு கதைமாந்தரும் வெளிப்படுவதை பாராட்டியிருந்தார்கள். குறிப்பாக வேற்றுமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வசனங்களை அங்குள்ளோர் பெரிதும் பாராட்டியிருந்தனர். தமிழ் விமர்சகர்கள் எவரும் ஒருவரியும் பாராட்டாகச் சொல்லப்போவதில்லை, எதிர்மறையாகவோ கேலியாகவோ சிலர் எழுதுவார்கள்.
இங்கே சினிமா விமர்சனம் என்பது இரண்டாம்நிலை எழுத்தாளர்கள், எழுத்தாளர் ஆக ஆசைப்படும் இதழாளர்களால்தான் அதிகமும் செய்யப்படுகிறது. அவர்களுக்கு பொதுவே என் மேல் நல்லெண்ணம் இல்லை. (நான் செய்த இலக்கிய விமர்சனங்களுக்குப்பின் அப்படி ஒரு நல்லெண்ணம் இருந்தால்தான் அது ஆச்சரியம்) அண்மையில் ‘இலகு ரக’ அரசியல்வாதிகளும் முழுநேர சினிமா விமர்சகர்களாக ஆகியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை தோறும் சினிமா பஞ்சாயத்துக்கு அமர்கிறார்கள்.
அத்துடன் வசனத்துக்கான பாராட்டுக்கள் இந்தப்படத்திற்கு அதிகம் வராது. இது காட்சிகளாலான படம். வசனங்கள் காட்சியழகை மறைப்பவை. பேசும் கதாபாத்திரங்கள் இருந்தால் அந்த காட்சியின் ஒளியை, சட்டகத்தை ரசிகர்கள் கவனிக்கவே மாட்டார்கள். ஆகவே சுருக்கமான, தேவையான சொற்கள் மட்டுமே அடங்கிய வசனங்கள்தான் உள்ளன. ஏறத்தாழ புதுக்கவிதையின் இலக்கணம்.
நான் வசனகர்த்தாதான், ஆனால் சினிமா வசனத்தாலானது என நம்புபவன் அல்ல. சினிமாவை விட்டு உந்தி நிற்கும் வசனங்களை எழுதுவதுமில்லை. என் வசனங்கள் நினைவில் நீடிக்கும், ஆனால் கொஞ்சகாலம் ஆகும். நான் கடவுள், அங்காடித்தெரு படங்களுடன் வந்த மற்ற படங்கள் எவையென்றே இன்று எவருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் ‘தீயிலே என்னடா சுத்தமும் அசுத்தமும்’ ‘விற்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்’ ‘யானை வாழுற காட்டிலேதா எறும்பும் வாழுது’ போன்ற வரிகள் இன்று பழமொழிகளாகவே ஆகிவிட்டன.
சினிமாக்களில் கதைக்கட்டமைப்பில், கதாபாத்திர அமைப்பில் என் பங்களிப்பும் பெரிதாக வெளித்தெரியாது. சினிமா என் தொழில். இதில் பணம், அதை அளிக்கும் மதிப்பு தவிர எதையுமே நான் எதிர்பார்ப்பதுமில்லை. ஆகவே முதல் மூன்று படங்களுக்குப்பின் விமர்சனங்களை பெரும்பாலும் வாசிப்பதில்லை. 16 ஆண்டுகளில் என் சினிமாக்கள் பற்றி வந்த விமர்சனங்களில் மிகமிகச் சிலவற்றையே வாசித்திருக்கிறேன். இருந்தாலும் இந்த டிவிட் பாராட்டுக்கள் கொஞ்சம் உற்சாகத்தை அளித்தன.
பெரும்பாலும் சினிமா வெளியாகும் நாளில் தீவிரமான வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு அதில் மூழ்கியிருப்பேன். அந்த சினிமாவையே பல நாட்கள் கழித்துத்தான் பார்ப்பேன். இன்று இன்னொரு சினிமாவுக்கான வேலையாக மிக அவசரமாகச் சென்னை வந்தேன். இரு சந்திப்புகள். மூன்று காணொளிப் பேட்டிகள். அவ்வளவுதான் நாள் கடந்துவிட்டது. பொன்னியின் செல்வனை நானும் கடந்துவிட்டேன். இன்று மணி ரத்னத்திடம் ஐந்து நிமிடம் பேசினேன். அவர் சிரித்ததில் இருந்த உற்சாகம் நிறைவளித்தது. சினிமாவில் உள்ள அழகிய தருணங்களில் ஒன்று இது. இந்த நாளுக்கு இது போதும்
*
கேள்விகள் பற்றி…
இக்குறிப்பை புனைவுக்கலை, திரைக்கலை ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே எழுதுகிறேன். எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாமல் ஏற்கனவே எல்லாமறிந்தவர்களாக எண்ணிக்கொள்பவர்களுக்காக அல்ல.
பொன்னியின் செல்வனில் சில மாற்றங்கள் இருப்பதையே பலர் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.அவை ஒரு நாவல் சினிமாவாக ஆகும்போது தேவையானவை. அவற்றைச் செய்யவே எழுத்தாளன் திரைக்கதைக்குத் தேவையாகிறான்.
ஏன் மணிமேகலை முதலியோர் இல்லை?
ஒரு சினிமா அதன் உச்சத்திருப்பக் காட்சிக்குப் பின் நேராக இறுதியுச்சம் (கிளைமாக்ஸ்) நோக்கித்தான் செல்லமுடியும். அதுவரை போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்கவேண்டும். கதாபாத்திரங்களுக்கெல்லாம் ஒரு உச்சகட்டமும் முடிவும் தேவை. ஆகவே மேலும் புதிய முடிச்சுகளை, புதிய பிரச்சினைகளை, புதிய கதைகளை அது எடுத்துக்கொள்ள முடியாது.
நாவலுக்கும் இது நிபந்தனையே. ஆனால் பழைய நாவல்கள், குறிப்பாகத் தொடர்கதைகளாக வெளிவந்தவை இவற்றை கவனத்தில் கொள்ளவில்லை. அன்றைய வாசகர்களுக்கும் அது சிக்கலாகப் படவில்லை. அன்று தமிழில் மொத்தமே மூன்று வார இதழ்களிலாக ஏழு புனைவுகளே வாசிக்கக்கிடைத்தன என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும்.
ஆதித் தகரிகாலன் கொலைதான் பொன்னியின் செல்வனின் உச்சத் திருப்பம். அதன்பின் எஞ்சியிருப்பது ஏறத்தாழ ஒருமணி நேரம். அதாவது முப்பது அல்லது முப்பத்தைந்து காட்சிகள். அந்த நேரத்தில் மணிமேகலையின் காதல், கந்தமாறனின் வாழ்க்கை என புதிய கதைகளைச் சொல்ல முடியாது. அவர்களில் நாவலில் துணைக்கதாபாத்திரங்கள்தான். அருண்மொழி- வானதி காதலுக்கே பெரிய அளவில் இடமிருக்கமுடியாது. வானதி மையக்கருவுடன் நேரடியாக தொடர்பில்லா துணைக்கதாபாத்திரம்தான். ஒரு சினிமா ’கிளைமாக்ஸை’ ஒட்டி துணைக்கதாபாத்திரங்கள் வழியாக திசைதிரும்ப முடியாது. இப்போது அவர்கள் எங்கே என்று கேட்பவர்களே, அவர்களின் கதைகள் வந்திருந்தால் ’படம் கிளைமாக்ஸ் முன்னாடி கன்னாபின்னான்னு ஓடுது, கதை இழுக்குது’ என்று சொல்லியிருப்பார்கள்.
மையக்கதை அருண்மொழி – ஆதித்த கரிகாலன் – நந்தினி சார்ந்ததுதான். படம் அவர்களை மையமாக்கி ஓடி உச்சம்நோக்கிச் செல்கிறது. ஒரு கட்டத்தில் குந்தவை, பழுவேட்டையரையர் உட்பட அனைவருமே கொஞ்சம் அகன்று அந்த மையம் மட்டுமே முன்னகரும். எந்த தொழிலறிந்த திரைக்கதையாளனும் இதையே செய்வான்.
ஆனால் படத்தில் இடம்பெற்ற அத்தனை கதாபாத்திரத்திற்கும் ஓர் உச்சதருணம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவர்கூட அந்தரத்தில் விடப்படவில்லை. ஒரு முடிச்சுகூட கவனிக்காமல் விடப்படவில்லை. ஒரு சிக்கல்கூட கைவிடப்படவில்லை. இடைவேளைக்குப்பின் போர் எல்லாம் போக கதைசொல்ல கிடைப்பது 45 நிமிடங்கள் மட்டும்தான். அதற்குள் இத்தனை விஷயங்கள் சொல்லப்படவேண்டியிருக்கிறது. ஒரு பெரிய படத்தின் முதன்மைச் சவாலே அந்த முழுமை தான். அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏன் கூத்திகன் போன்ற புதிய கதாபாத்திரங்கள் உள்ளன?
ஒரு வரலாற்றுப்படம் போர் நிகழாமல் உச்சம் கொள்ள முடியாது. போர் என்பது ஒரு காட்சிவிருந்து. அதற்காகவே இளைஞர் அரங்குக்கு வருகிறார்கள். போரில்தான் கதாபாத்திரங்கள் தீவிரமாக வெளிப்பட முடியும். ஆனால் பொன்னியின் செல்வன் நாவலில் நேரடியாகப் போர் இல்லை. போரைப்பற்றிய பேச்சுகளே உள்ளன. ஆகவே உண்மை வரலாற்றில் மேலும் இருபதாண்டுகள் கடந்து சோழம் மீது படைகொண்டு வந்த ராஷ்ட்ரகூட மன்னன் கூத்திகன் இப்படத்தில் உச்சத்தில் படைகொண்டு வருகிறான். அதற்கான காரணம் முதல் படம் தொடங்கும்போதே சொல்லப்பட்டுவிட்டது. ஆகவே அந்தக்கதையும் ஒட்டவைத்ததுபோல் இல்லை.அருண்மொழிக்கு ஆதித்த கரிகாலன் மிச்சம்விட்டுச்சென்ற கடமை அது. அதையே அவன் முடிக்கிறான்.
மேலும் ஒன்றுண்டு. நாவலில் உள்ளதுபோல சிற்றரசர்களும், குடிகளும் அளித்த அரசை அருண்மொழி மதுராந்தகனுக்கு அளித்தால் அதில் அவனுடைய மாண்பென ஏதுமில்லை. இப்படத்தைப் பொறுத்தவரை அருண்மொழியே போரில் சோழநாட்டை வென்று அடைகிறான். அவன் வென்ற நாடு எல்லா நியாயப்படியும் அவனுக்கு முற்றிலும் உரியது, அதை மதுராந்தகனுக்கு அளிக்கையில்தான் அவனுடைய முழுமையான தியாகமும் மேன்மையும் வெளிப்படுகிறது. ஆகவேதான் போர்.
அந்த போரை அருண்மொழிக்கும் பழுவேட்டரையருக்கும் இடையே நடப்பதாக அமைக்க முடியாது. அருண்மொழி சோழ வீரர்களை போரில் கொல்வதுபோல காட்ட முடியாது. ஆகவேதான் கூத்திகன் படைகொண்டு வருகிறான்.
நாவலில் மதுராந்தகன் ஏன் மன்னன் ஆகிறான்? ஏன் சேந்தன் அமுதன் மன்னன் என காட்டப்படவில்லை?
நாவலிலுள்ள இளவரசர் ஆள்மாறாட்டம் என்னும் கரு சினிமாவில் இல்லை. அதற்கும் காரணம் ஒன்றே. அது நாவலின் மையம் அல்ல. அது ஒரு துணைக்கரு. ஒரு சினிமா கிளைமாக்ஸில் துணைக்கருக்களை நோக்கிச் செல்லமுடியாது. அருண்மொழி என்ன ஆனான், நந்தினி என்ன ஆனாள் என்பதே படம்.
அந்த ஆள்மாறாட்டக்கதையை கல்கி ஏன் கொண்டுவந்தார்? நாவலின் கதையில் முன்பு அதற்கான எந்த உணர்த்துதல்களும் இல்லை. ஏனென்றால் பொன்னியின் செல்வன் தொடர்கதை அடைந்த பெருவெற்றியால் அதை நிறுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. கல்கி சதாசிவம் மேலும் நீட்ட தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் பல பிழைகள் அமைந்ததாகவும், அதை திருத்த முடியவில்லை என்றும் கல்கி சொல்லியிருக்கிறார். நீட்டும்பொருட்டு சேந்தன் அமுதன் – மதுராந்தகன் ஆள்மாறாட்டக்கதை கொண்டுவரப்பட்டது.
அந்த ஆள்மாறாட்டக் கதை அலக்ஸாண்டர் டூமாவின் The Man in the Iron Mask போன்ற நாவல்களின் செல்வாக்கில் எழுதப்பட்டது. அந்நாவல் பலமுறை புகழ்பெற்ற சினிமாக்களாக வந்துள்ளது. அதைத் தழுவி நாடோடிமன்னன், உத்தமபுத்திரன் போன்ற படங்கள் வந்துவிட்டன. அதைப் பகடி செய்யும் இருபத்துமூன்றாம் புலிகேசி படமும் வந்துவிட்டது. சமூகக்கதைகளாகவும் அந்தக்கதை வெளிவந்துவிட்டது. அந்த ஆள்மாறாட்டக் கதையை இன்று படத்தின் உச்சமாக அமைக்க முடியாது. மேலும் கதைநாயகன் அருண்மொழிதான். உச்சம் அவனிலேயே நிகழவேண்டும். சினிமா சட்டென்று இன்னொருவரின் கதையாக ஆகமுடியாது.
ஆள்மாறாட்டத்தை கல்கி கொண்டுவந்தமைக்கு பலகாரணங்களுண்டு. அவர் நாவலில் மதுராந்தகனை கொடும் வில்லனாகவும் தகுதியற்றவனாகவும் காட்டிவிட்டார். கடைசியில் மணிமுடியை அவருக்கே அளிப்பது அபத்தம் என சொல்லப்பட்டது. ஆகவே அவர் சட்டென்று, சேந்தன் அமுதனை அரசனாக காட்டுகிறார். ஆனால் வரலாற்றிலுள்ள உத்தமசோழனின் கதாபாத்திரத்திற்கும் சேந்தன் அமுதனுக்கும் சம்பந்தமில்லை. பூகட்டுபவன் நேரடியாக அரசனாவது எல்லாம் கொஞ்சம் குழந்தைக்கதை. அதை உலகமெங்கும் உள்ள ரசிகர்களை ஏற்கவைப்பது இந்தக்காலத்தில் நடக்காது.
ஆனால் நாவலில் கல்கிக்கு இன்னொரு குழப்பம் வந்தது. அருண்மொழி மேல் காதல்கொண்ட பூங்குழலி கடைசியில் அவனுக்கு அண்ணியாகிறாள். அது இன்னும் சங்கடமானது. நாவலில் பலநூறு பக்கங்கள் நடுவே உள்ளன. வாசகர்கள் கவனிக்கவில்லை. சினிமாவில் பத்து நிமிடங்களுக்குள் இந்த மாற்றம் நிகழும் என்றால் அது ஒவ்வாமையை உருவாக்கும்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த சினிமாவில் மதுராந்தகன் கெட்டவனாக காட்டப்படவில்லை. ஆகவேதான் வில்லன் நடிகர் அல்லாமல் கொஞ்சம் சாத்வீகமான ரகுமான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதிலுள்ள மதுராந்தகன் பிடிவாதமான ஒரு பழமைவாத சைவநம்பிக்கை (சைவப்புறச் சமயங்களில் ஒன்று) கொண்டவனாகவும், எந்த அரசகுமாரனுக்கும் உரிய அதிகார ஆசை கொண்டவனாகவுமே காட்டப்பட்டுள்ளான். ஆகவே அவன் மணிமுடி சூடுவதில் பிழையில்லை.
இப்படத்தில் எங்கும் சேந்தன் அமுதன் இளவரசனாக காட்டப்படவில்லை. மதுராந்தகன் உண்மையில் பாண்டியவாரிசு, அது அரண்மனையில் எவருக்குமே தெரியாது என்பதெல்லாம் கூட கல்கி வைத்த கடைசிக்கண அவசரமான ‘டிவிஸ்டுகள்’ . அவற்றை சினிமாவில் வைத்தால் நாவல் வாசித்த சிலர் தவிர எஞ்சியோர் ஒவ்வாமையே கொள்வார்கள். அதெல்லாம் இப்படத்தில் இல்லை. இதில் மதுராந்தகன் தகுதி கொண்ட அரசகுமாரனேதான்.
உத்தமசோழன் தமிழகத்தில் தாந்த்ரீகசைவம் வளர வழிவகுத்தான். உத்தமசோழனுக்குப்பின் அரசனான ராஜராஜ சோழன் தாந்த்ரீக அடிப்படை கொண்ட சைவ புறச்சமயங்களை ஏறத்தாழ அழித்து ஆகமமுறையிலான மையச் சைவத்தை நிறுவினான் என்பது வரலாறு.
நாவலில் இல்லாத புதிய காட்சிகள் ஏன்?
அருண்மொழி, குந்தவை, ஆதித்த கரிகாலன் ஆகிய மையக் கதாபாத்திரங்கள் சந்திப்பது என்பது நாவலில் இல்லை. ஆனால் அது சினிமாவுக்கு தேவை. சினிமாவுக்கு உணர்ச்சிநாடகத் தன்மையே பலம். அடுக்கடுக்காக நாடகீய காட்சிகள் வேண்டும். ஆனால் நாடகம்போல் இல்லாமல் சினிமாவாக, காட்சிகள் வழியாக காட்டப்படவேண்டும். மையக்கதாபாத்திரங்கள் சந்திக்கும்போதுதான் நாடகீயத்தன்மை உருவாகும்.
ஆனால் நாவலில் அந்த நாடகீயத்தன்மையை தவிர்க்கலாம், ஒத்திப்போடலாம். ஏனென்றால் நாடகீய உச்சங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவற்றின் உச்சநிலைகளை மட்டுமே வெளிப்படுத்தும். முழுமையாக வெளிப்படுத்த முடியாது. அக்காட்சி அதற்குரிய நீளம் கொண்டதல்ல. ஆகவே நாவலாசிரியர்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியாக முழுமையாக அகவெளிப்பாடு கொள்வதாக எழுதுவார்கள். எண்ணங்கள், நீண்ட தன்னுரைகள், உரையாடல்கள் வழியாக அது நிகழும். கதாபாத்திரங்கள் சந்திப்பதை கூடுமானவரை தள்ளிப்போடுவார்கள். அது சினிமாவுக்கு சரிவராது. சினிமாவுக்கு இருப்பதே சில நிமிடங்கள்தான்.
சென்ற பகுதியில் ஆதித்தகரிகாலன் – நந்தினி சந்திப்பு அத்தகையது. இந்த பகுதியிலும் அத்தகைய காட்சிகள் உள்ளன. நாவலுக்கும் சினிமாவுக்குமான வேறுபாடுதான் அவற்றை தேவையாக்குகிறது.
சினிமாவை, நாவலை புரிந்துகொள்ள விழையும் அடுத்த தலைமுறையினர் இவற்றை யோசிக்கலாம். இன்னும் என்னென்ன செய்யலாம் என்றுகூட யோசிக்கலாம். எழுதிக்கூட பார்க்கலாம்.
ஆதித்தகரிகாலனை கொன்றது யார்?
கடைசியாக, எஞ்சும் கேள்வி. ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? இன்று ஒரே நாளில் இருவர் தொலைக்காட்சிக்காகக் கேட்டனர். ஒருவர் ‘ஏன் சார் நந்தினி ஆதித்த கரிகலானை கொன்னாங்க?’ என்றார். நான் மறுக்கவில்லை. “ஆமா, அப்டிக் கொல்றதா காட்டினா என்ன தப்பு?” என்றேன். ஆதித்த கரிகாலனின் நிறைவு அவள் கையால் கொல்லப்படுவதுதானே? அது அவனுடைய காதல் அவன் நெஞ்சில் கத்தியாக இறங்குவதுதானே?
இன்னொருவர் கேட்டார். “அவனேதானே சார் குத்திக்கிட்டான்?” நான் மறுக்கவில்லை. “ஆமா, அப்டித்தானே இருக்க முடியும்? அவன் பல ஆண்டுகளா அந்த உச்சம் நோக்கித்தானே வந்திட்டிருந்தான்?”
இரண்டுமே சரிதான். ஆனால் அதை கல்கி ஒரு அதிகாரப்போட்டியில் நிகழ்ந்த கொலையாக காட்ட விரும்பவில்லை. அது ஒர் அதிதீவிரமான, சிக்கலான உறவின் உச்சமாகவே காட்ட விரும்பியிருந்தார். அந்நாவலின் உள்ளுறை அதுதான். அதுதான் சினிமாவிலும் நாடகீயமாகச் சொல்லப்பட்டுள்ளது.
அடிப்படையில் ஒரு நாவலை எப்படி புரிந்துகொள்வது என்பதில்தான் அதன் சினிமாவடிவின் கட்டமைப்பு உள்ளது. சினிமாவாக ஆக்கப்பட்ட டாக்டர் ஷிவாகோ போன்ற நாவல்களை ஒட்டி இதை யோசிக்கலாம். பொன்னியின் செல்வன் அடிப்படையில் ஒரு காவியக்காதலாகவே மணி ரத்னத்தால் உள்வாங்கப்பட்டுள்ளது. நெஞ்சில் தீயாக எரியும் ஒரு காதல். ஒரு பெருங்கருணையாளனின் குற்றவுணர்ச்சியும் அதனுடன் சேர்ந்துகொள்கையில் அது உயிர்கொல்லும் நோய். அது அவர்கள் இருவர் நடுவே தொடங்கி அவர்கள் இருவர் நடுவேதான் முடிய முடியும்.
*
பொன்னியின் செல்வன் 1 சார்ந்து நடந்த விவாதங்களை தொகுத்து நூலாக்கியிருக்கிறேன். வரலாறு, நாவல், சினிமா ஆகியவறை அறிய விரும்புபவர்களுக்காக.
பொன்னியின் செல்வன் விவாதங்கள், வாங்க
தஞ்சை பிரகாஷ்
தஞ்சை பிரகாஷின் பற்றி எரிந்த தென்னைமரம் என்னும் சிறுகதை அவர் மீதான இலக்கியக் கவனத்தை திருப்பியது. கும்பகோணம் அருகே மெய்யாகவே வாழ்ந்த ஒரு பெண்மணி பற்றிய சிறுகதை அது எனப்படுகிறது
தஞ்சை பிரகாஷ்
தஞ்சை பிரகாஷ் – தமிழ் விக்கி
நோயும் மருந்தும், கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்;
என் மனதில் இருப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்!அஜிதனின் மைத்ரி-யை இன்னும் படிக்கவில்லை. அதற்கான அற்பக் காரணங்கள்;ஜெயமோகனின் மகன் என்பதால் எல்லோரும் மைத்ரியை பாராட்டுகிறார்கள் ?அஜிதன் எழுதியதை ஜெயமோகன் திருத்தியிருப்பார் ? அதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிவு சொன்னாலும், மனம் சஞ்சலம் கொள்கிறது.ஒரு வேளை ஜெயமோகனை விட நன்றாக எழுதியிருந்து, எனக்கு ஜெயமோகனைப் பிடிக்காமல் போய்விட்டால் ? – இது கொஞ்சம் அதிகம்?
புத்தகக் கண்காட்சியில் அஜிதனைப் பார்த்தேன் – விஷ்ணுபுரம் நாவலை வாங்கிவிட்டு அதற்கு பணத்தை அஜிதனிடம் தான் கொடுத்தேன். ‘அப்பா வரவில்லையா’ என்று கேட்டுவிட்டு வந்துவிட்டேன். கூட வந்திருந்த என் மகனிடம், இவர் தான் ஜெயமோகனின் மகன் என்று சொன்னதற்கு அவன் ‘ஆரஞ்சுப் பழத்தின் சாறை மட்டும் சாப்பிட்டவர்தானே (தன்னறம்)’ என்று கேட்டான். அவன் அதை நினைவில் வைத்திருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
அஜிதன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே தான் மைத்ரி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒன்றை வாங்கி அஜிதனிடம் கையெழுத்து வாங்கியிருந்தால் குழந்தை மகிழ்ந்திருப்பானென்று தோன்றியது. ஒருவகையில் நான் அவனுக்கு சித்தப்பாவல்லவா என்றும் தோன்றியது. ஆனால், அஜிதன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக சிரித்த முகத்துடன் இருந்தார். இன்றுபோல் என்றும் சிரித்த முகத்துடன் இருக்கவேண்டுமென மனதிற்குள் வாழ்த்தினேன்.
விஷ்ணுபுரம் இது மூன்றாவது முயற்சி – இரு முறை நூலகங்களில் எடுத்து இருபது முப்பது பக்கங்களைத் தாண்ட முடியவில்லை. வீட்டிலேயே கையருகில் இருந்தால் முடித்துவிடுவேனென்று நினைக்கிறேன். இன்னொரு பெரிய கடிதம் எழுதி பாதியில் இருக்கிறது, அஜிதன் முந்திவிட்டார்.
அன்புடன்,
கணேசன்.
அன்புள்ள ஜெ
அஜிதனின் மைத்ரி நாவலை சற்றுமுன்னர்தான் வாசித்து முடித்தேன்.சில நாவல்கள் வாசிப்பில் அப்படியே ஈர்த்து உள்ளே வைக்கும். சில நாவல்கள் நம்மை நாமே செலுத்திக்கொள்ளவேண்டும். மைத்ரி அப்படிப்பட்ட நாவல். ஒரு ரொமாண்டிக் நாவல். கவித்துவமானது. அந்தக் கவித்துவத்தை நின்று நிதானித்து நம்மை செலுத்திக்கொண்டுதான் வாசிக்கமுடியும். அப்படி வாசித்தால்தான் அது நம் கைக்குச் சிக்கும். ரொமாண்டிக் நாவல்களுக்கு பொதுவாக கதை என்பது ஒரு broader template தான். இந்த வகை நாவல்கள் உலகமெங்கும் பெரிய கிளாஸிக்குகள்கள் உள்ளன. கதேயின் The Sorrows of Young Werther னட் ஹாம்சனின் Victoria எல்லாம் மிகச்சிறந்த கிளாசிக்குகள்.. அவை எளிமையான கதைக்குள் கவித்துவமான சிலபடிமங்கள் வழியாகச் செல்பவை.
ஃப்ரோஸ்டின் இந்த வரியை நினைத்துக்கொண்டேன். காலம் பூரா மனிதன் இப்படி ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறான்
Nature’s first green is gold,
Her hardest hue to hold.
Her early leaf’s a flower;
But only so an hour.
Then leaf subsides to leaf.
So Eden sank to grief,
So dawn goes down to day.
Nothing gold can stay.
பாரதியின்
சென்றதினி மீளாது,மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
வரிதான் முறிமருந்து
அஜிதனுக்கு ஒரு hugs
அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி
ராஜகோபாலன், டான் யுவான்
ஜா.ராஜகோபாலன் சிறந்த மேடைப்பேச்சாளர். அவரை மிகவும் பாதித்த ஒரு நூல் பற்றி பேசுகிறார். டான் யுவான் (கார்லோஸ் கஸ்டநாட) ஒரு காலகட்டத்தில் பலருடைய பார்வையை பாதித்த சிந்தனையாளர். உண்மையில் டான் யுவான் என ஒருவர் இல்லை, அது ஒரு புனைவு என பின்னாளின் ஆய்வாளர் சொல்லியிருக்கிறார்கள். அந்தப்புனைவு காரணமாகத்தான் அது அத்தனைபெரிய செல்வாக்கைச் செலுத்தியதோ என்னவோ?
மலம், வெண்முரசு- கடிதம்
அன்புள்ள ஜெ
ஜெயராமின் மலம் என்ற ஊடகம் கட்டுரையை குருகு இதழில் வாசித்த பின்னர் அவருடன் சில நாட்கள் உரையாடினேன். இன்று தளத்தில் சுட்டியை பார்த்தவுடன் உங்களுக்கு எழுத வேண்டும் என தோன்றியது.
பியாரோ மன்சோனி என்ற கலைஞனை அறிமுகப்படுத்தி ஒரு சிறிய சரியான சீண்டலுடன் தொடங்கும் கட்டுரை வரலாற்றின் வழியாகவும் மானுட இயல்புகளின் வழியாகவும் தான் எடுத்து கொண்ட கருத்தை தெளிவாக வரையறுத்து அடிப்படை கேள்விகளை உருவாக்கி விடுகிறது. மலத்தை குழந்தைகள் கையாள்வது குறித்த அவதானிப்பு புத்தம் புதியதும் கூரியதுமாகும். அதனுடன் பியரோ மன்சோனி என்ற கலைஞனையும் பைத்தியக்காரன மனோநிலையையும் இணைத்து அவர் விளக்குவது அக்கருத்தை முற்றிலுமாக ஏற்க செய்கிறது. மொத்த கட்டுரையையும் வாசித்த பின்னர் கலையில் என்றால் என்ன என்னும் கேள்வி அலையாக எழுந்து நிற்கிறது.
அந்த கேள்விக்கு இப்படி விடை சொல்லி பார்க்கலாம் என முயன்றேன். சற்று பைத்தியக்காரத்தனமாக எண்ணமே தான். ஜெயராம் அண்ணா ஒரு கட்டத்தில் என்ன சொல்கிறாய் புரியும்படி சொல்லுங்கள் என்று கேட்டே விட்டார். உங்களிடமாவது புரியும்படி சொல்கிறேனா என்று பார்ப்போம். அதாவது குழந்தை உணவு உண்ணுகிறது, மலம் கழிக்கிறது. குழந்தையின் அறிவுக்கு தர்க்கப்படுத்தி உணவு உண்ணுவதால் மலம் கழிகிறது என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதன் ஆழம் அறியும். கழிக்கப்பட்ட மலத்திலிருந்து தான் காணப்பட்ட உலகத்தை உருவாக்க முனைகிறது. இங்கே இணைப்பாக பொதுவாக குழந்தைகள் ஆரம்பத்தில் உலகமே ஒரு உண்ணும் பொருள் என்று நினைக்கின்றன என்பதை கருத்தில் கொள்வோம். அடுத்து கலைஞர்களின் கலை செயல்பாட்டிற்கு வருவோம். கலைஞர் ஒரு அனுபவத்தை எதிர்கொள்கிறான். அது வயிற்று சோற்றை போல உள்ளத்திற்கு ஊக்கம் கொடுக்கிறது. பின்னர் காலம் கடந்த பின்னர் அவ்வனுபவம் மறைந்து – சோறு தின்ற சுகம் கரைந்து – மலம் போல நினைவுகள் மட்டுமே கையில் கிடைக்கின்றன. இப்போது கையில் கிடைக்கும் நினைவுகளை வைத்து அவை உருவாக்கிய அனுபவங்களை மீண்டும் புதிதாக உருவாக்க நினைக்கிறான். ஒவ்வொரு கலைஞனும் தனக்கேயுரிய வெவ்வேறு ஊடகம் ஒன்றை தேர்ந்தெடுக்கிறான். ஆக இந்த இடத்தில் நினைவுகளை மலத்துக்கு இணையாக்கி வைத்தேன். இது கொச்சைப்படுத்தல் போலவே தோன்றலாம். நான் என்ன சொல்கிறேன் என்றால் மலம் கழிக்காமல் வாழ முடியாது. சோறு போலவே அதுவும் முக்கியம். நினைவுகள் இல்லாமல் வாழமுடியாது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் முழுக்க அதை தூக்கி செல்லவும் முடியாது. எனவே மலத்தை மண்ணிட்டு மூடுவது போல பெரும்பாலான நினைவுகளை குழி தோண்டி புதைத்து விட்டு முளைத்து விதைகளை கையில் வைத்து செலவு செய்கிறோம். கலைஞர்கள் அதை படைப்பூக்கமிக்க வகையில் முற்றிலும் வேறொன்றாக மாற்றி விடுகிறார்கள்.
இப்போது ஓரளவு சரியாக சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் இங்கே ஒரு கேள்வி எழுந்து நிற்கிறது. சரி நீ சொல்வது போல் வைத்து கொண்டால் கூட எந்த கலைஞனும் அவன் காணும் உலகத்தை அப்படியே உருவாக்க விரும்புவதில்லையே ? ஆம் எனினும் இங்கே முற்றிலும் இல்லாத ஒன்றை உருவாக்கப்படுவது கலையென ஏற்று கொள்ளப்படுவதில்லை. அவன் செய்வதெல்லாம் இருப்பவற்றை கற்பனையால் செறிவாக்கி அர்த்தமுள்ள இணைவை தானே! மறுபக்கம் மலத்தை தொடும் குழந்தை அப்படியாக நினைக்கிறது என்று கேட்டால் ஜெயராம் அவர்கள் சொல்வது போல வளரும் குழந்தை வேறொரு ஊடகத்தை தேர்ந்தெடுத்து கொள்கிறது போல் கலைஞனும் செய்கிறான் என்று நினைக்கிறேன்.
இந்த சிந்தனையே ஒருவகை கோளாறு கொண்டதாக இருப்பதாகவே படுகிறது. எனக்கு தோன்றிவிட்டது என்பதனாலேயே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற பதட்டமாக இருக்கலாம். இதை பார்த்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜெ ?
அடுத்து இக்கட்டுரையை தொட்டு இன்னொரு விஷயத்தையும் பேச வேண்டும். கட்டுரையின் பிற்பகுதியில் நுகர்வு கலச்சாரத்தின் பாதிப்புகளால் இன்று பிரம்மாண்டமான கலைப்படைப்புகளை உருவாக்குவதில் சிக்கல்களை பேசுகிறார். அதை வெல்லும் வழியாக குறுகிய நேர படைப்புகளை கலைஞர்கள் கையாளும் முறைகளை விவரிக்கிறார். இந்த பகுதியை அண்மையில் நீங்கள் ராஜமாணிக்கம் அவர்களின் பொறியாளர் சங்க தலைமை ஏற்பு விழாவில் பேசிய விஸ்வகர்மா மயன் சிற்பி உருவகத்துடன் இணைத்து பார்க்க முடியுமா என யோசித்தேன். அந்த உரையில் எளிமையான காலங்கடந்து நிற்கும் படைப்புகளை உருவாக்கும் முறைக்கு விஸ்வர்மாவையும் அதற்கு உதாரணமாக அமராவதியும் அளகாபுரியும் இருக்கிறது என்றும் காலத்தை எதிர்த்து ஒரு அறைகூவலாக பெரும் படைப்புகளை உருவாக்கும் முறைக்கும் மயனையும் அதற்கு உதாரணமாக அசுர நகரங்களும் மனிதர்களின் நகரங்களும் இருக்கின்றன என்றீர்கள். புராணங்கள் மயனால் கட்டப்பட்ட கோட்டைகள் அனைத்தும் அழிவதையே காட்டுகின்றன என்று கூறினீர்கள். சிங்கப்பூரில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரும் கட்டிடங்கள் இடித்து கட்டப்படுவதை எடுத்துகாட்டி இது மயன்களின் காலம் என்று சொன்னீர்கள்.
ஜெயராம் அவர்கள் குறிப்பிடும் கலைஞர்களை விஸ்வகர்மாக்கள் என்று குறிப்பிட முடியுமா என கேட்டு கொண்டு அவரிடம் சொன்னேன். அப்படி குறிப்பிடுவது பொருத்தமில்லாததாக தனக்குப்படுவதாகவும் ஏனெனில் விஸ்வகர்மா செய்பவை அழிவற்றவை என்று குறிப்பிடுகின்றன. இவர்கள் செய்வது அப்படியல்ல. எனவே இக்கட்டுரையுடன் ஜெ கூறிய உருவகம் பொருந்தவில்லை என்று விளக்கினார்.
இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது கட்டுரைக்கு வெளியில் இணையாக ஒரு சிந்தனை எழுந்து வந்தது. அதை நீங்கள் சொன்ன உருவகத்துடன் கூறினால் குழப்பமே எஞ்சுகிறது. விஸ்வகர்மா மயன் உருவகத்தை உடன் இணைக்காமல் தனியாக பார்த்தால் முக்கியமானதாகப்படுகிறது என்று ஜெயராம் அண்ணா அடையாளப்படுத்தி காட்டினார். அது என்னவெனில் வரலாற்றை பழங்காலம் முதல் இன்றுவரை ஓட்டி பார்க்கையில் அதன் வளர்ச்சியில் ஒரு மாற்றம் தெரிகிறது. பழங்காலத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் ஏதோ ஒருவகையில் பண்பாட்டுடனும் மதம் மற்றும் ஆன்மீகத்துடனும் இணைக்கப்பட்டிருந்தன. என் எளிய அறிவில் இரு உதாரணங்களை சொல்லி பார்க்கிறேன். எகிப்திய பரோக்களின் அரண்மனையை விட மறு உலக வாயிலாக கருதப்பட்ட பிரமீடுகள் பிரம்மாண்டமானவையும் உறுதியானவையும் ஆகும். ராஜராஜனின் அரண்மனையை விட தஞ்சை பெரிய கோவில் வானளாவிய கலை சிறப்புமிக்கதுமாகும். ஆனால் இந்த அம்சம் நூற்றாண்டுகள் செல்லச்செல்ல பிரம்மாண்ட தன்மையும் நுட்பமும் அதிகமும் உலகியல் பயன்பாடு மிக்க அரண்மனைகளுக்கு இடம் பெயர்கிறது. இன்று அது நுகர்வின் மையமாக விளங்கும் புர்ஜ் கலிப்பாவாக வானோங்கி நிற்கிறது எனலாம்.
அப்புறம் உங்கள் உருவகத்திற்கு வருவோம். ஜெயராம் அண்ணா தன் கட்டுரையுடன் இந்த உருவகத்தை இணைக்க வேண்டாம் என்று சொன்னதுடன் உங்களுடைய உருவகத்திலேயே ஒரு பிரச்சனை இருப்பதாக கூறினார். அதாவது விஸ்வகர்மா கட்டிய அமராவதியும் அளகாபுரியும் பொன் மணியும் இழைத்து உருவாக்கப்பட்டவை என்று தான் குறிப்பிடுகின்றன. அவற்றை எப்படி எளிமையானவை என்று எடுத்து கொள்ள இயலும் ? மேலும் எளிமையான ஒன்று காலத்தால் அழியாத ஒன்று என்றால் என்ன ?
வெண்முரசு நூல்கள் வாங்கஇந்த கேள்வி உங்கள் பார்வைகளையும் படைப்புகளையும் குறித்து சற்று சிந்திக்க செய்தது. என்னை பொருத்தவரை ஒரு நல்ல படைப்பாளி கருத்திலிருந்து படைப்பிற்கு செல்வதில்லை. மாறாக படைப்பிலிருந்து கருத்துகளை அடைகிறார். எனவே உங்களுடைய பார்வைக்கான வெண்முரசில் இருப்பதாக நினைக்கிறேன். குறிப்பாக கிராதம் அத்தியாயம் 25. அவ்வத்தியாயத்தில் இடம்பெறும் பின்வரும் பகுதிகள்,
“ அங்கிருந்து இங்கு வந்து அமர்ந்தேன் . வேதத்தின் அச்சொல்லை மட்டுமே இங்கு நான் ஓதிக்கொண்டிருக்கிறேன் . அச்சொல்லாக நிறைந்துள்ளது இக்காடு ” என்றார் சௌம்யர் . அர்ஜுனன் நீள்மூச்சுடன் உடல் எளிதாக்கி புரண்டு படுத்தான் . அவன்மேல் பனிக்கால நிலவு செம்பொன்னொளியுடன் நின்றது . “ அச்சொல் எது ?” என்று அவன் கேட்டான் . “ ஹிரண்ய ” என்றார் சௌம்யர் . “ பொன் எனும் சொல் . வேதம் பிரம்மத்தையும் கூழாங்கல்லையும் அனலையும் இளந்தளிரையும் அதைக்கொண்டே குறிக்கிறது .”
*
விழிப்பு வந்தபோது அந்தி ஆகிவிட்டிருந்தது . தன்னைச்சூழ்ந்த பொன்னொளியைக் கண்டு திகைத்தபடி எழுந்தான் . சூழ்ந்திருந்த அத்தனை மலைகளும் பொற்கூம்புகளாக ஒளிவிட்டன . முகில்கள் பொற்சுடர்களாக எரிந்தன . அவன் நின்றிருந்த மண்ணும் அருகிருந்த சேறும் கூழாங்கற்களும் பொன்னென்றாகிவிட்டிருந்தன . அவன் மெல்ல நடந்து அச்சுனையை அணுகினான் . அது பொன்னுருகி ததும்பியது .
அவன் அதனருகே நின்று குனிந்து நோக்கினான் . உள்ளே பொன்மலைகள் எழுந்த ஒரு வெளி தெரிந்தது . அதை ஊடுருவிச்சென்றது பொன்னாலான பாதை ஒன்று . அவன் கால்கள் நடுங்கின . தன் கட்டுப்பாட்டை இழந்து உள்ளே குதித்துவிடுவோம் என அவன் அஞ்சினான் . ஆனால் பின்னகரக்கூடவில்லை . பொன் அவன் சித்தத்தை நிறைத்தது . அனைத்து எண்ணங்களும் பொன்னென்றாயின .
அவன் விழிகளை மூடித்திறந்தான் . நீரில் எழுந்த அவன் பாவை அவனை விழி மூடாது நோக்கியது . “ விலகு … நான் உன்பாவை ” என்றது . “ தன் பாவைகளால்தான் ஒவ்வொருவரும் ஆழங்களுக்குள் கவரப்படுகிறார்கள் .” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான் . “ பொன்னொளிர் பாவை ! இதுநாள் வரை எங்கிருந்தது இது ?” அது சிரித்தது . “ நான் நீ ….” அவன் பின்னகர விரும்பினான் . ஆனால் அப்புன்னகை அவனை கவ்வி வைத்திருந்தது . “ நீ விலகு என்கிறாய் . ஆனால் என்னை ஈர்க்கிறாய் .” அது நகைத்தது . “ ஆடிப்பாவைகள் அனைத்துமே அப்படித்தான் .”
அவன் இருமுறை தள்ளாடினான் . விலகு விலகு . இதுவே தருணம் . விலகிவிடு . அவ்வெச்சரிக்கை ஒலியே அவனைச் சீண்டி முன் செலுத்தியது . எம்பி அந்நீரில் பாய்ந்தான் . நீர் என அவனை அள்ளி அணைத்து குளிரக்குளிர இறுக்கி உள்ளிழுத்துக்கொண்டது அது . பின்னர் அவன் இருபக்கமும் பொன்னிற அலைகளாக மலைகளை காணத்தொடங்கினான் . எரிந்தபடி பொன்முகில்கள் நெளிந்தன . பொன்னாலான பாதை சுருளவிழ்ந்து நீண்டு அவனை கொண்டுசென்றது .
இந்த பயணம் ஒருபுறம் குழந்தைகளின் கனவுக்குரிய மிகுபுனைவு தன்மையை கொண்டிருந்தாலும் அர்ஜுனனின் பயணம் இயற்கையில் அமைந்த பொற்தருணத்தின் ஊடாக அகப்பயணம் என்பது குறிப்புணர்த்தப்பட்டு விடுகிறது. இதன் அடிப்படையில் விஸ்வகர்மா என நீங்கள் குறிக்கையில் இயற்கையில் அமைந்த பொற்தருணத்தை குறிப்பிடுகிறீர்கள் என புரிந்து கொண்டதாக விளக்கினேன். இருப்பினும் அழிவற்ற தன்மையை சொல்கிறாரே அதற்கு என்ன சொல்வது என்றார் ஓவியர் அண்ணா. அப்போதைக்கு என்னிடம் பதில் இல்லை. நம் இருவரில் முதலில் யார் ஜெ வை சந்தித்தாலும் கேட்டு தெரிந்து கொண்டு பிறருக்கு பகிர்வோம் என முடிவு செய்து உரையாடலை நிறைவு செய்தோம். இப்போது ஒரு பதில் தோன்றுகிறது. பொதுவாக அழிவற்ற ஒன்று எளிமையானதாக நம்முன் வர இயலாது என்ற கற்பிதம் சமூகத்தால் வழங்கப்படுகிறது. இக்கருத்து நம் ஆணவத்தை நிறைவு செய்வதால் ஆழப்பதிந்து விடுகிறது. ஆனால் இயற்கையின் மகத்தான விஷயங்கள் அனைத்தும் நம்முன் மிக எளிய உருவில் அல்லவா வந்து நிற்கிறது. உதாரணத்திற்கு மாலை கதிரணைதலை எடுத்து கொள்வோம். ஒவ்வொரு மாலை கதிரணைவின் ரேகையும் என் வீட்டு முற்றத்தில் இருந்து பார்க்கையில் என்னை நிறைவுற செய்பவை. நாளொரு மேனி என புதிய வண்ணங்களுடன் பொலிவது. அது எனக்கு மட்டுமே உரியதல்ல, உயிர் குலம் அனைத்திற்கும் வழங்கப்படுகிறது. தன்னளவில் மகத்தானது. ஆனால் அது என்றும் வரும் எப்போதும் இருக்கும் என்ற எளிமையினாலேயே மனிதர்களால் புறந்தள்ளப்படுவது.
இப்படிப்பட்ட ஒரு விளக்கத்தை தான் நீங்கள் வழங்குவீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்தை சொன்னால் உங்களுக்கும் படைப்புகளுக்கும் உள்ள உறவை அறிய வாசகர்களாகிய எங்களுக்கு ஒரு வாசல் திறக்கும்.
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள சக்திவேல்
ஒரு படைப்பின் மீதான வாசகனின் எண்ணங்கள் முற்றிலும் அவனுக்குரியவை. அவனுடைய பயணம். அதில் ஆசிரியர் கருத்து கூற ஏதுமில்லை.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


