Jeyamohan's Blog, page 584

May 7, 2023

ஞானி, கடிதங்கள்

ஞானி நூல் வாங்க ஞானி மின்னூல் வாங்க ஞானி – தமிழ் விக்கி

ஜெ,

கோவை ஞானி அவர்களைப் பற்றிய உங்களது நூலில் கீழ்க்கண்ட வரிகள் வருகின்றன.

‘அன்றாடத்தில் உள்ளது நம் மனம். ஆழ்மனம் தொன்மையில் உள்ளது. மனிதர்கள் அன்றாடத்தால் இழுக்கப்பட்டு தங்கள் தொன்மையில் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். அன்றாடத்தில் உழல்கிறார்கள். அன்றாடத்தை கடந்து தொன்மைக்குச் செல்வதே தியானம் என்பது. அந்த தொன்மை பலவற்றுடன் இணைந்தே உள்ளது. ஆனால் அடையாளம் காணமுடியாமல் அது மாற்றப்பட்டிருந்தால் எவரும் ஆழ்நிலைப் பயணத்தில் ஆழத்திற்கு திரும்பிச் செல்லவே முடியாதபடி ஆகிவிடும். ஆகவே தொன்மையை சென்றடைய தனித்தன்மை அவசியம்.

தமிழரின் மெய்யியலை வகுப்பது உரிமைக்காக மட்டும் அல்ல. பொருளியல் உரிமை, பண்பாட்டு உரிமை எல்லாம்கூட அடிப்படையில் மெய்யியல் உரிமைக்காகத்தான். வீடுபேறு என்று சொல்லப்படும் பெருநிலை மனிதர்களுக்கு உண்டு. அது இயற்கையுடன் இயைந்து மொத்தப் பிரபஞ்சமாகவும் தன்னை உணரும் பெருமனதை அடைதல். அதற்கு தொன்மைதேவை, அத்தொன்மையானது தனித்தன்மைகொண்ட தேசியத்தாலேயே பேணப்படமுடியும், அந்த தேசியம் தன் பொருளியலுரிமையை தக்கவைத்துக்கொண்டால் மட்டுமே நிலைகொள்ளமுடியும். அவ்வாறு தன்னுரிமை அடையும் தேசியத்திற்குள்ளே மட்டுமே உழைப்பாளர் உரிமைகொள்ள முடியும்’

பொதுவுடைமை என்பது பொதுவாக முழுக்க முழுக்க நடைமுறை உலகாயதம் சார்ந்ததாக கருதப்படும் சூழலில் ஞானியின் இந்த கருத்து பெரும் பாய்ச்சல்.  மெய்யியல் சார்பான தனிமனித தேடல் – தமிழர் மெய்யியல் – தமிழர் சுயநிர்ணயம் மற்றும் பொருளியல் சுயசார்பு என சரியான இணைப்பை அளிக்கிறார். செறிவான, தனித்துவமான சிந்தனை பாய்ச்சல்களை கொண்ட நூலை அளித்ததற்கு நன்றிகள் பல.

இ.ஆர்.சங்கரன்

***

அன்புள்ள ஜெ

ஞானி பற்றிய புத்தகத்தை வாசித்து முடித்தேன். பல நண்பர்களிடம் பேசினேன். எவருமே இந்நூலை வாசிக்கவில்லை. அவர்களெல்லாம் ஞானியை மறக்கவே விரும்புகிறார்கள். ஆகவே ஓர் அஞ்சலி செலுத்தியபின் அவரைப்பற்றிப் பேசவே இல்லை. உங்கள் நூலில் அவரைப்பற்றிய நினைவுகள் இருக்கும் என்று பலர் நினைப்பதாகத் தோன்றியது. இந்நூலில் நினைவுகள் குறைவு. ஞானி வாழ்ந்த காலகட்டத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனைகளும் இந்நூலில் உள்ளன. அவருடைய சிந்தனைகள் முழுக்கவே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 1960 முதல் 2020 வரையிலான அறுபதாண்டுக்காலத்தில் தமிழ்நாட்டில் சிந்தனையளவில் என்னென்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள மிக உதவியான நூல். சிந்தனைகளை கொள்கைகளாக வாசிக்கையில் உருவாகும் சலிப்பு இல்லை. சரளமான உரையாடல்களாக அவை வெளிப்படுவதனால் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கவும் முடிகிறது.

செல்வராஜ் அருள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2023 11:31

ஜெயக்குமார், ஆலயக்கலை- சாம்ராஜ் கடிதம்

[image error]

அன்புமிக்க ஜெயமோகன் , 

சமயக்கலை, ஆலயக்கலை வகுப்பு குறித்து நீங்கள் தளத்தில் எழுதிய கடித்ததில் இருந்த ஒரு வரி துணுக்குறச் செய்தது. “பார்வையற்றவர்களைப் போலத் தான் கோயிலுக்கு போய் வருகிறார்கள்” என்ற வரி தொந்தரவாய் இருந்தது. 

நான் கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் அற்றவன் என்றாலும் இலக்கியத்தின் வழி எனக்குக் கிடைத்த அழகியல் கோயில்களை நோக்கியும், சிற்பங்களை நோக்கியும் எப்பொழுதும் உந்தித் தள்ளுவதாகவே இருந்தது. எப்பொழுதும் எங்கோ ஒரு கோயில் பிரஹாரத்தில் நிற்க விரும்புகின்றவனாகவே இருக்கிறேன். கனவில் சீரான இடைவெளியில் கோட்டயம் திருனக்காரா அம்பலம் வந்துகொண்டே இருக்கும். ஹம்பி நான் எப்பொழுதும் போக விரும்புகின்ற / போய்க்கொண்டிருக்கிற நிலப்பரப்பு. இதற்கு எனக்கு கூட்டாளிகள் மிகச் சொற்பம். பெரும்பாலும் தனித்த பயணம். 

மழைக்காலத்தில் ஹம்பியை பார்க்கும் ஆன்மீக அனுபவத்தை எப்படிச் சொல்ல, விஷ்ணுபுரத்தை வாசிக்க அதைவிடச் சிறந்த இடம் கிடையாது. LIVE LOCATION எனும் தேய்ந்த, தேய்ந்துகொண்டிருக்கும் சொல்லை மிக தயக்கத்தோடு பயன்படுத்துகிறேன். 

இந்த இரண்டரை நாள் ஜே.கே-வின் வகுப்பு அவர் வார்த்தைகளிலேயே சொன்னால் “சிற்பிகள் தெய்வத்தின் சிலையில் கண்களைத் திறக்கும் பொழுது பின்னிருந்து தங்க ஊசிகளால் அதன் கண்களைத் திறப்பார்கள்” என்றார். அதையே தான் ஜே.கே வகுப்பில் நேர்முகமாகச் செய்தார். 

இந்த இரண்டரை நாளும் நான் அனாதிக் காலத்தில்தான் இருந்தேன். சிற்பங்கள், கோயில்கள், பழந்தமிழ் பாடல்கள், பாசுரங்கள், தொன்மங்கள், புராணங்கள் என ஜே.கே எங்களை ஆழ்த்திவைத்தார்.

இரண்டாம் நாள் மாலை மின்சாரம் இல்லாமல் இருட்டில் அமர்ந்து பாடம் கேட்டோம். ஒரு தீப்பந்தம் மாத்திரம் இருந்திருந்தால் சுலபமாக இரண்டாம் நூற்றாண்டிற்கு போயிருக்கலாம். 

ஜே.கே அணுக்கமான ஆசிரியர். யாவரின் சந்தேகத்தையும் மதிப்புடன் அணுகினார். 

பழந்தமிழ் பாடல்கள், சிற்பம், தொன்மம், வரலாறு என எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தார் ஜே.கே. 

வகுப்பில் கலந்துகொண்ட தேர் தச்சர் முருகேசன், அவர் பங்கிற்கு வளப்படுத்தினார். மிக அணுக்கமான நண்பர்கள். வகுப்புகள் மிகுந்த ஒத்திசைவோடு நடந்தது. 

அபாரமான நினைவாற்றல், பொருத்தமான பாடல்கள், புராணிகம், புத்தகங்கள், சமகால சம்பவங்கள் என இரண்டரை நாளும் ஜே.கே வகுப்பை தரையிறங்க அனுமதிக்கவேயில்லை. 

குடவாயில் பாலசுப்ரமணியன், கணபதி ஸ்தபதி, சிற்பி நாகசுவாமி, சா.பாலுச்சாமி, ஆதீனங்கள், சி.மீனாட்சி, ரொமிலா தாபர், ஜெயமோகன் என கடந்தகால, நிகழ்கால ஆசிரியர்கள் வகுப்பிற்குள் குறுக்கும் நெடுக்குமாக வந்துபோய்க்கொண்டிருந்தார்கள். 

”அர்னால்டின் ஓவியங்களுக்குப் பிறகு ஐரோப்பிய மலைகள் மேலும் அழகாகத் திகழ்ந்தன” என்றொரு வாக்கியமுண்டு. ஜே.கே-வின் இந்த வகுப்பிற்கும் அது பொருந்தும். இனி கோயில்களோ சிற்பங்களோ பழையது போல் இல்லை. வேறொன்றாக, புதிதாக, அலம்பிவிட்டது போல இருக்கிறது மனது. 

ஜே.கே வகுப்பு நடத்த நடத்த சிலவற்றை நான் என் சொந்த கற்பனையில் விரித்துக் கொண்டேன். மதுரைப்பக்கம் இருக்கும் பாறைகள் செதுக்குவதற்கு தோதான தன்மைகொண்டவை அல்ல, கடினமானது என்ற புவியியல் சார்ந்த தரவை, நான் அதை மதுரையின் வன்முறையோடு சேர்த்து வாசிக்கும் பொழுது வேறொன்று துலங்குகிறது.

கொற்றவைக்கு பலிகொடுக்கும் தொன்மம் பற்றி அவர் பேசும் பொழுது “வெட்டப்படுகின்றவர்களின் தலை முடியின் நுனி மூங்கிலில் கட்டப்பட, தலை வெட்டப்பட்டவுடன் மூங்கிலோடு தலை மேலே போக, சுற்றி நிற்பவர்களின் மீது இரத்தம் பீறிடுகிறது” என்று அவர் முடிக்கையில் நான் துயரத்தோடு கடல் கடந்து நின்றேன்.

“TEMPLE IS MELODIC EXPRESSION OF RHYTHM” அறிஞர் நாகசுவாமியின் வரி உள்ளுக்குள் சுழன்றுகொண்டிருக்கிறது. 

நனவுக்கும் கனவுக்கும் இடையே நடப்பது போன்ற சிந்தனைகள். இருப்பியல் கேள்விகள், சாஸ்வதம், நிலையாமை, மரணம், மகத்தானவைகள் என எங்கெங்கோ அலைந்து திரிந்த இரண்டரை நாட்கள்.

இதை சாத்தியப்படுத்திய உங்களுக்கும், அருகிருந்து பிரியத்துடன் கற்றுத்தந்த ஆசிரியர் ஜே.கே-விற்கும் நன்றி. 

நிறைய தூரம் போகவேண்டும் கொற்றவை துணையிருப்பாள் என்றே நம்புகிறேன். 

அன்புடன் 

சாம்ராஜ்.  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2023 11:31

When I first came to Mumbai….

பிரியங்கா சிங் என்ற வாசகர் ‘The Abyss’ பற்றிய இந்த வாசிப்பை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இவர் ஒர் தொடர்பயணி. (புகைப்படத்தில் எகிப்தின் கீஸா பிரமிடுகளுக்கு முன்னால் அமர்ந்தபடி புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறார்). இவர் மும்பையில் சிலகாலம் வீடில்லாமல் தெருவில் வாழ்ந்த அனுபவத்தை பற்றி எழுதியிருக்கிறார். இத்தகைய அரிய வாசகர்கள் இன்று ஒருவர் ஆங்கிலத்தினூடாக அன்றி அடையமுடியாது

ஜெ

 

When I first came to Mumbai, I was homeless within a month. That’s when I discovered a whole different world I would otherwise mock and flinch away from. When I used the last 10 rupee note to feed a sibling duo outside one of the Mumbai stations; a few nights later, it was them who offered to share their cardboard piece because it wasn’t safe for me to be out alone. For them, who had nothing, they still chose to share the warmth and little morsel they had.

Jeyamohan writes of how he lived his life as a beggar when ran away from home and had nothing to fall back upon. He too discovered a world on the other side of the abyss that very few dare to venture or even have the least inclination to do so. He experienced a family deeper than blood and bonds no discord could break. I was quickly whisked back in time to days I have chosen to forget and lock away.

Cracking open the spine of The Abyss, the opening chapters invoked a vestigial memory of Beggar-master and his retinue. India is a country where even dirt sells. Humans are just another prime commodity. Suffering sells best. Know how to milk it.

In a few chapters, Jeyamohan delivers a horrific, flinching tale of debased human experience. A tale where disability is exploited and encashed. Money passes through hands like water. The levels of cruelty and pain are horrific.

The circle of pain and suffering comes to a full circle. As the proverb goes, “as you sow, so shall you reap.” Jeyamohan has written a parable of karmic completion in the most realistic manner possible. Try as you may, you won’t inure yourself to this horrific miasma that’s playing out for real, but we turn a blind eye to.”

The Abyss- Amazon 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2023 11:30

May 6, 2023

சனாதனம், திருமாவளவன்

அன்புள்ள ஜெ,

திருமாவளவன் பேட்டி ஒன்று கண்டேன். நீங்கள் இன்னொரு பேட்டியில் அவரைப்பற்றிச் சொன்னதை அவரிடம் கேட்கிறார்கள். அவர் பதில் சொல்கிறார். 

நல்லது. நான் கேட்பதெல்லாம் அவருடைய  ‘சனாதன எதிர்ப்பு’ கொள்கைகள் மீது உங்களுக்கு ஈடுபாடுண்டா? அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? அல்லது அதை அவர் சமனம் செய்துகொள்ளவேண்டுமென விரும்புகிறீர்களா?  அவர் சாதி பற்றி சொன்ன கடுமையான கருத்துக்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

செல்வா ராஜமாணிக்கம்

*

அன்புள்ள செல்வா,

திரும்பவும் சொல்கிறேன். நான் இன்றைய கட்சியரசியலைப் பற்றிப் பேசவில்லை. அவ்வளவு தொடர்ச்சியாக என்ன நடக்கிறதென்று நான் பார்ப்பதில்லை. எழுத்தாளர்கள் அப்படி பார்க்கக்கூடாது. சென்ற இரண்டு மாதமாக நான் பாம்புகள், புராணங்களில் பாம்புகள், உலக இலக்கியத்தில் பாம்புகள் தவிர எதைப்பற்றியும் வாசிக்கவோ கவலைப்படவோ இல்லை. இதுவே என் இயல்பு. இப்படித்தான் எழுத்தாளர்கள் இருக்கவேண்டும் என்பதும் என் எண்ணம். ( ஒரு நாவல் எழுதுகிறேன். மயிர்க்கூச்செறிய வைக்கும் படைப்பு — அதாவது எனக்கு)

திருமாவளவனின் சனாதன எதிர்ப்பை அவர் சமனம் செய்துகொண்டால் அதன் பின் அவர் எதற்கு? அது அவருடைய கொள்கை, அவருடைய ஆளுமை. அதைத்தான் நான் ஏற்கிறேன்.

சனாதன எதிர்ப்பு என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே முக்கியமான அரசியல்தரப்பு. இன்றல்ல, மகாபாரதகாலம் முதலே. (வெண்முரசு படியுங்கள். அல்லது திசைகளின் நடுவே கதை மட்டுமாவது படியுங்கள்). 

சனாதன எதிர்ப்பு அல்லது மைய வைதிக மரபின்மீதான எதிர்விமர்சனத் தரப்பு என்பது ஒற்றைப்படையானது அல்ல. அதற்கு நடைமுறைத் தளம் ஒன்றுண்டு. அதை திருமாவளவன் பேசுகிறார். இன்னொரு தத்துவத்தளமும் உண்டு. அந்த தளம் பல உட்பிரிவுகள் கொண்டது, மிக விரிவானது. ஆறு தரிசனங்களில் முதல்நான்கு, அதன்பின் சமணம், பௌத்தம் , அதன்பின் புறச்சைவ சமயங்களில் நான்கு என அது பல கிளைகளாக பிரிந்தும் உரையாடியும் வளர்ந்துள்ளது. (விரிவாக அறிய இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் படியுங்கள்)

வைதிகத்தரப்பில் கிளைத்த சிந்தனைகளிலேயே நீண்ட உரையாடல் வழியாக சனாதன எதிர்ப்புச் சிந்தனைகளின் செல்வாக்கு அடைந்தவை உண்டு. அந்த இணைவும் ஏற்பும் தத்துவத்தின் அடிப்படை இயல்பு. வேதாந்தம் வைதிகமரபை சேர்ந்தது. ஆனால் அதில் ஒரு பகுதி வேதஎதிர்ப்புத் தன்மை கொண்டது. மூலவேதாந்த நூலாகிய கீதையிலேயே வேதத்தை எதிர்க்கும் குரல் உண்டு.  நாராயணகுருவின் அத்வைதம் சனாதன எதிர்ப்புத் தன்மை கொண்டது. சங்கரமடத்தின் வேதாந்தை அதற்கு எதிர்நிலை. ஆனால் இரண்டும் அத்வைதமே.

நான் நாராயணகுருவின் மரபுவழி வந்தவன். அதில் எந்த ஐயமும் ரகசியமும் இல்லை. என் சென்ற 35 ஆண்டுகால வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும்,என் ஒவ்வொரு சொல்லும் ,நான் ஈட்டும் ஒவ்வொரு பணமும் குருசமர்ப்பணம் மட்டுமே. என்னை அறிந்த எவருக்கும் அது தெரியும். நாராயணகுரு, நடராஜகுரு, நித்யா, முனி நாராயணப்பிரசாத், வியாசப்பிரசாத் என்னும் வரிசையே என் மரபு. 

இந்த எதிர்நிலைகளை அரசியல்களத்தில் பார்ப்பதற்கும் தத்துவக்களத்தில் பார்ப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. அதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். ஒரு நூறுபேருக்கு இதை புரியவைத்துவிட்டால் என் வாழ்க்கை அர்த்தம்பெறும்.

தத்துவத்திலுள்ள நிலைபாடுகளின் இயல்புகள் சில உண்டு

அ.  அதிதீவிர எதிரெதிர் நிலைகள் (binary) தத்துவத்தில் இருக்கமுடியாது. தத்துவத்தில் அது ஒரு சிந்தாமலம் (சிந்தனை அழுக்கு) என்றே கொள்ளப்படும். ஏனென்றால் தத்துவம் உரையாடிக்கொண்டே இருக்கிறது. உரையாடல் வழியாக அது வளர்கிறது. 

எதிரெதிர் நிலைபாடுகள், மூர்க்கமான பற்றுகள், அதைச்சார்ந்த தீவிர உணர்வுநிலைகள் எல்லாம் இரண்டு களங்களில்தான் இருக்கமுடியும். ஒன்று அரசியல், இன்னொன்று மதம். அரசியல் மதம் இரண்டுமே ஏறத்தாழ ஒரே மனநிலை கொண்டவை. தன் தரப்பின் மீதான ஆவேசமான நம்பிக்கை. எதிர்த்தரப்பின் மீதான வெறுப்பு. 

தத்துவத்தை அதிகமாக பயன்படுத்துபவை அரசியலும் மதமும்தான். ஆகவே தத்துவம் பலருக்கும் அரசியல், மதம் வழியாகவே அறிமுகமாகிறது. தத்துவத்தை அவற்றிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும். அது ஒரு அறிவியக்க நெறி. எளிதில் அது இயலாது. ஏனென்றால் அரசியலும் மதமும் அன்றாடவாழ்க்கை முழுக்க நிறைந்திருப்பவை. அவற்றிலுள்ள வெறுப்பும் பற்றும் உக்கிரமானவை. 

மேலும் மிகப்பெரிய நிறுவனங்கள் அவற்றை பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கின்றன. தத்துவத்தை பிரச்சாரம் செய்ய அமைப்புகளே இல்லை. ஆகவே நாராயணகுருகுலம் போன்ற தூயதத்துவத்திற்கான அமைப்புகள் புயலில் சுடர்போல பெரும்பாலும் கைகளால் பொத்திப்பொத்தி வைக்கப்பட்டுள்ளன. தேடிச்சென்றாலொழிய வெளிச்சம் கண்ணுக்குப்படாது

தத்துவத்தின் வண்ணவேறுபாடுகள் நுட்பமானவை. மிகமிக மெல்லிய வேறுபாடே வெவ்வேறு தத்துவநிலைபாடுகள் நடுவே இருக்கும். பயின்றாலொழிய அவ்வேறுபாடு கண்ணுக்குப் படாது. அப்பட்டமான திட்டவட்டமான நிலைபாடுகளும், எதிர்நிலைபாடுகளும் தத்துவத்தில் கிடையாது.  உதாரணமாக, பௌத்ததின் சனாதன எதிர்ப்பும் நாராயணகுரு மரபின் அத்வைதத்தின் சனாதன எதிர்ப்புக்கும் இடையேயான வேறுபாடு மிக நுணுக்கமானது. 

ஆ. முரணியக்கம் (dialectics) வழியாகவே தத்துவம் செயல்படும். ஆகவே எதிர்த்தரப்பின் இருப்பை ஏற்கும். எல்லா தரப்பின் இருப்பையும் அது ஏற்கும். எந்த ஒரு தரப்பு பலவீனமாக ஆனாலும் அது ஓர் இழப்பே என்றுதான் கருதும். விவாதம் வழியாக எதிர்த்தரப்பை மாற்றிக்கொண்டிருக்கும், தானும் மாறிக்கொண்டுமிருக்கும். 

திருச்சி கல்யாணராமன் என்பவர் பேசிய சில காணொளிகளை எனக்கு அனுப்பி சிலர் கருத்து கேட்டனர். ‘அது என்றும் இங்கே இருக்கும் ஒரு குரல்’ என்று நான் சொன்னேன். அது நண்பர்கள் சிலருக்கு அதிர்ச்சி அளித்தது. அவரை நான் ஏன் எதிர்க்கமாட்டேன் என்கிறேன் என ஒருவர் கண்ணீர்க்கடிதம் எழுதினார். ஏன் எதிர்க்கவேண்டும்? அது இங்கே உள்ள ஆதாரக்குரல்களில் ஒன்று. அதையே சிலசமயம் நம் சொந்த அப்பாவில் இருந்தும் கேட்க முடியும்.

அதுவும் கூட ஒற்றைப்படையானது அல்ல. சந்திரசேகர சரஸ்வதி போன்ற பேரறிஞர்கள் அதன் மிகச்சிறந்த முகம். மறுபக்கம், கல்யாணராமன் மிக அடித்தள முகம். அறிவமுகம், அறிவில்லா முகம் என இரண்டு பட்டை அதற்கு. அந்த தரப்புக்கு அழிவில்லை. அது இந்திய சிந்தனைமரபின் நிலைச்சக்தி (Static Force) செயல்சக்திகள் அதை எதிர்கொண்டபடியே இருக்கும் (Dynamic Force)  

அது விவாதத்தில் ஒரு குரலாக இருந்துகொண்டிருக்கவேண்டும். கீழ்த்தட்டில் அது வெறும் ஆசாரவாதம். அத்துடன் சாதிய மேட்டிமைவாதம். ஆனால் உயர்த்தட்டில் அது தொன்மையான ஞானநூல்களையும், ஆழ்படிமங்களையும் பேணி நிலைநிறுத்திய ஓர் அறிவுத்தரப்பு. பல்லாயிரமாண்டுக்கால தொடர்ச்சி கொண்டது. பேணுவது அதன் இயல்பு. ஆகவே மாற்றமின்மை அதன் அடிப்படை. ஆகவே எல்லாவகை முன்னகர்வுகளுக்கும் அது எதிரானது.

சனாதன மரபு என நாம் இன்று சொல்லும் இந்த மரபு அதன் நம்பிக்கைகள், ஆசாரங்கள் ஆகியவற்றால் தேக்கநிலை கொண்டது. தத்துவார்த்தமாகவும் அது நிலைபெயராமையை தன் கொள்கையாகக் கொண்டது, ஆகவே மறுக்கத்தக்கது. ஆனால் அது தத்துவத்தளத்தில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை நிகழ்த்திய ஒன்று. கலையிலக்கியங்களில் அதன் கொடைகள் மகத்தானவை. அனைத்துக்கும் மேலாக பல்லாயிரமாண்டுகளாக , பழங்குடிமரபில் இருந்தே பெற்றுக்கொண்ட ஏராளமான ஆழ்படிமங்களையும் தொன்மங்களையும் அது பேணி முன்னெடுத்து கொண்டுவந்து சேர்த்துள்ளது. அவற்றை  வெறும் தகவல்பதிவுகளாக கொண்டுவராமல் அவற்றை வாழும் படிமங்களாக, ஆழ்மனத்தில் நீடிக்கும் தொன்மங்களாக தன் ஆசாரங்கள், வழிபாட்டுமுறைகள், புராணங்கள் வழியாக நிலைநிறுத்தியுள்ளது. அது மானுட இனத்திற்கே பெரும்கொடை. அவை கலையிலக்கியங்களுக்கு மிகப்பெரிய ஆதாரங்கள். அதற்கும் மேலாக ஆன்மிகப் பயிற்சிகளுக்கும் அகப்பயணங்களுக்கும் மிகமிக இன்றியமையாத கருவிகள். அக்கொடையை கருத்தில்கொண்டே நாராயணகுருவின் நவீன அத்வைத மரபு அத்தரப்பை எதிர்க்கிறது. அந்த தொன்மங்கள், ஆழ்படிமஙகளை எடுத்துக்கொண்டு, தனக்கான அகப்பயிற்சிகளுக்கு உரியவகையில் உருமாற்றிக்கொண்டு முன்னகர முயல்கிறது. ஆகவேதான் எளிமையான எதிர்ப்புநிலைகள், அதன்விளைவான காழ்ப்ப்புகள், அவற்றின் அரசியல் கூச்சல்கள் ஆகியவற்றை நிராகரிக்கிறது.

நான் சனாதனத்துக்கு எதிரான தரப்பினன். நித்யா போல. நாராயணகுரு போல. அது விவாதங்களில் தோற்கடிக்கப்படவேண்டுமென விரும்புபவன். திருமாவளவன் பேசுவதை விட தீவிரமான சனாதன எதிர்ப்புக்குரல் என் படைப்புகளில் உள்ளது. சொல்லப்போனால், தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பின் வலிமையான, தத்துவார்த்தமான சனாதன எதிர்ப்புக்குரல் நவீன இலக்கியத்தில் என் கதைகளிலேயே உள்ளது– ஒரு ஐம்பது கதைகளை சுட்டிக்காட்டமுடியும். நேரடியாக வெளிப்படும் மாடன்மோட்சம், திசைகளின் நடுவே, நூறு நாற்காலிகள் போன்றவை முதல் நுட்பமாக வெளிப்படும் நீரும் நெருப்பும் வரை.

ஆனால் நான் பிராமண வெறுப்பாளன் அல்ல. அத்தகைய எந்த வெறுப்பும் ஆன்மிகப்பயணத்திற்கு எதிரானது என்றே நான் நினைக்கிறேன். பிராமணர்களின் கல்விப்பற்று, பயிற்றுவிக்கும் திறன், வன்முறையற்ற தன்மை என நான் பெரிதும் மதிக்கும் பண்புகள் பல. ஒட்டுமொத்தமாக  நான் பிராமணர்களை மதிப்பவன் என்றே சொல்வேன். அவர்களுக்கு எதிரான எந்த வகை வெறுப்புக்குரலையும் ஏற்கமாட்டேன், எதிர்ப்பேன். அதுவே நாராயண குருகுலத்தின் வழிமுறை.

திருமாவளவனும் சனாதன எதிர்ப்பாளர், ஆனால் எந்த சாதிக்கும் எதிரானவர் அல்ல. சராசரி திராவிட அரசியல்வாதிகளுக்கு பிறப்பால் பிராமணர்கள் அனைவருமே எதிரிகள்தான். சுந்தர ராமசாமியாக இருந்தாலும் அசோகமித்திரனாக இருந்தாலும் அவர்கள்  ‘பார்ப்பனர்கள்’ மட்டுமே. திருமாவளவன் அந்த காழ்ப்புக்கு அப்பாற்பட்டவராகவே வெளிப்பட்டுள்ளார். தமிழில் பிறப்பு காரணமாகவே எந்த ஒரு அங்கீகாரமும் பெறாது மறைந்த பிராமணச் சமூக எழுத்தாளர்கள் மறைந்தபோது பெருமதிப்புடன் எழுந்த முதல் அஞ்சலி அவருடையதாகவே இருந்துள்ளது என்பது வரலாறு.

நான் சனாதனத் தரப்பின் எதிர்ப்பாளன். ஆனால் அந்தத் தரப்பு அழியக்கூடாதென்றும் நினைப்பேன். அழிந்தால் தத்துவத்தில் ஒரு தரப்பு இல்லாமலாகும். அது எனக்கு முக்கியம். அந்த தரப்பு உருவாக்கிய கலைகள் இலக்கியங்களும் எனக்கு முக்கியம்.

நித்யா இ.எம்.எஸின் மார்க்ஸியத்தையும், அப்துல் சமது சமதானியின் சூஃபிசத்தையும், கிறிஸ்தவத்தையும் அவைதிக– அதாவது சனாதன எதிர்ப்பு தத்துவங்களாகவே பார்த்தார். அந்த தரப்புகளின் தத்துவ அறிஞர்களுடன் என்றும் விவாதத்தில் இருந்தார். அவை நூல்களாகியுள்ளன. அவர்களுக்கும் நாராயணகுருவின் அத்வைதத்துக்குமான பொதுப்புள்ளிகளை அந்நூல்களில் விவரிக்கக் காணலாம். நான் என் நூல்களில் தொடர்ச்சியாக அந்த நோக்கையே முன்வைக்கிறேன். பலநூறு பக்கங்கள் எழுதியுள்ளேன்.

என் தரப்பு கொஞ்சம் சிக்கலானது.  இங்கே பொதுக்களத்தில் பேசும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் இந்த தத்துவத்தின் குரலை மூர்க்கமாக எதிர்ப்பார்கள். எல்லா சாராரும் தங்கள் எதிர்த்தரப்பாகவே என் குரலை விளக்குவார்கள். என்னை பிராமண எதிர்ப்பாளன் என பிராமணர்களில் ஆசாரவாதிகளும், பார்ப்பன அடிவருடி என அரசியல்வாதிகளும் ஒரே சமயம் சொல்வார்கள். ஏனென்றால் அரசியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் அவர்களின் எதிரிகளிடம் பேசும் வெறுப்பின் மொழி  மட்டுமே உண்டு.

ஆகவே தமிழ்ச்சூழலில் இதைப்புரியவைப்பது கடினம். நாராயணகுரு முதல் முனி நாராயணப் பிரசாத் வரை நூறாண்டுகளில் கேரளத்தில் செய்து ஓரளவு வெற்றிபெற்ற ஒரு முயற்சி. அதை நான் ஒருவனே இங்கே செய்யவும் முடியாது என அறிவேன். ஆனாலும் நான் அடைந்த வெற்றி மிக அதிகம்  என்னும் நிறைவு எனக்குள்ளது.

*

ஆக திரும்பச் சொல்கிறேன். இந்தியச் சூழலில் அரசியலில் சனாதன எதிர்ப்பு ஒரு முதன்மைச் சக்தியாக மூவாயிரம் நாலாயிரம் ஆண்டுகளாக இருந்துள்ளது. மகாபாரதமே அதற்குச் சான்று. இனியும் இருக்கும். அதன் அதிகாரம் இருந்தாகவேண்டும். அது ஒரு விடுதலைச் சக்தி என்றே நான் நினைக்கிறேன். (விவேகானந்தர் சொன்னதுதான் அது) ஆகவே அதன் முகமாக திருமாவளவன் இருப்பதில் எனக்கு ஏற்பே உள்ளது. அவர் வென்றால் அது ஒரு விடுதலைநிகழ்வே. அவர் ஆற்றுவது ஓர் அரசியல்விடுதலை இயக்கப்பணியையே. 

மற்றபடி அதன் நடைமுறை அரசியலை நான் கவனிப்பதில்லை. நான் அதை விவாதிக்கும் தத்துவ தளம் என்பது முழுக்க இன்னொரு மனநிலையில் நிகழ்வது. அங்கே எதிர்த்தரப்பே உள்ளது— எதிர்ப்பு இல்லை. நான் ஏன் அரசியல்தரப்புக்குள் செல்லவிரும்பவில்லை என்றால் அந்த உணர்வுநிலைகளே தத்துவத்திற்கு நேர் எதிரானவை என்பதனால்தான். அவற்றை முழுமையாக தவிர்க்காமல் தத்துவத்தின் நுண்ணிய தளங்களை பேசவே முடியாது. 

ஜெ

திசைகளின் நடுவே வாங்க திசைகளின் நடுவே மின்னூல் வாங்க  இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் மின்னூல் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2023 11:35

அரிமதி தென்னகன்

தமிழில் எனக்கு பிடித்த புனைபெயர்களிலொன்று அரிமதி தென்னகன். அக்காலத்தில் மரபிலக்கியம் வெளியிடும் சிற்றிதழ்களில் நிறைய எழுதுவார். ஒரு கவிதைகூட என் நினைவில் இல்லை. அப்பெயர் இல்லையேல் அவரை நினைக்கவும் ஒன்றுமில்லை என்பது என் எண்ணம்.

அரிமதி தென்னகன் அரிமதி தென்னகன் அரிமதி தென்னகன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2023 11:34

வல்லினம், மலேசியாவின் குரல்

மலேசியாவின் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் குரலாக இன்று திகழும் முதன்மையான ஊடகம் வல்லினம் இணைய இதழ். பொதுவாக தமிழ் ஊடகங்களில் இருக்கும் மிகையும் பாவனைகளும் இல்லாத விமர்சனப்பார்வை கொண்டது. இலக்கியம் மற்றும் கலை சார்ந்த பார்வையும் துல்லியமானது. வல்லினம் இன்று இந்தியத் தமிழிலக்கியத்திற்கும் மலேசியத் தமிழிலக்கியத்திற்கும் இடையேயான ஓர் உரையாடலாகவே நிகழ்கிறது.

வல்லினம் மே 2023 இதழில் உமா பதிப்பகத்தின் உலகத்தமிழ்க் களஞ்சியம் பற்றிய அ.பாண்டியனின் கறாரான விமர்சனம் தெளிவான அறிவியக்க அளவுகோல் கொண்டது. சிங்கப்பூரின் மூன்று அண்மைக்கால படைப்புகள் பற்றி லதா எழுதியுள்ளார். சு.வேணு கோபால், கலைச்செல்வி, இராஜேஷ் ராமசாமி, அர்வின்குமார்,ஐ.கிருத்திகா, விஜயகுமார், சியாமளா கோபு ஆகியோரின் கதைகள் உள்ளன.

வல்லினம் இணைய இதழ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2023 11:33

கள்வன், காதல் – கடிதம்

வணக்கம் ஜெ,

நலம்தானே? உங்கள் பிறந்த நாள் அன்று மலர்த்துளி சிறுகதை தொகுப்பைப் பற்றிய உங்கள் குறிப்பை பார்த்தவுடன் படிக்க ஆர்வம் கொண்டு இன்று படித்து முடித்துவிட்டேன்.

“கொலைசோறு”, இத்தொகுப்பின் முதல் கதை காதலின் உறுதியையும், எப்படி காதல் ஒரு மனிதனை உலகநியதிகளுக்கு அப்பால் தள்ளுகிறது என சிந்திக்க வைத்தது. சிறிது கண்கலங்க வைத்தது. எந்த நொடியில் எவர் மேல் காதல் ஏன் வருகிறது என்ற கேள்வியை சற்று தள்ளிவிட்டு, காதலின் இனிமையை அசைபோட வைத்தது.

“கருவாலி, யமி, பெருங்கை, என்னை ஆள” ஆகிய கதைகள் மயிலிறகால் வருடுவது போன்ற இனிமையானகதைகள்.இவை அனைத்தையும் புன்னகையுடன் வாசித்து முடித்தேன். உங்கள் வர்ணனைகள் காட்சியை கண்முன் கொண்டுவந்தன, அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. கதையின் நேர்த்தன்மை மற்றும் உணர்ச்சிகளின் நுட்மான வெளிப்பாடு இரண்டும் போட்டிபோட்டுக் கொண்டு மனதில் மகிழ்ச்சியை வரவழைத்தன.

காதல் என்பது ஒரு நிமிடம் தோன்றும் உணர்ச்சியா? அல்லது அந்த ஒரு நிமிடத்தை நமக்குள் பல மணிநேரமாக மாற்றி நமது தனிமையை தொலைக்கும் விளையட்டா? எதுவாய் இருந்தால் என்ன இன்னொறு உயிரின் நலனில் அக்கறை கொண்டு செயலாற்ற உந்தும் காதல் சற்று கடுமையாக இருந்தால் என்ன என்று நினைக்க வைத்த “சுவை” மற்றும் ஆசாரியைபோல் ஒருவர் நம் வாழ்வில் வந்தால் எப்படி இருக்கும் என ஏங்கவைத்தது “பரிசு”

காதலை உணர்வதற்கு இருவர் தேவையா, அது என்ன மாற்ற முடியாத விதியா? “மலர்த்துளி” மற்றும் “கேளாச்சங்கீதம்” இந்த இரண்டு கதைகளும் சத்தமாக இக்கேள்விக்கு பதில் அளித்தன. காதல் என்ற உறவில் இருவர் இருந்தாலும் உணர்வு என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட அணுபவம் மட்டுமே. வயதான காதலைப்பேசும் “கல்குருத்து”; “கள்ளத்தனத்தை” பேசும் கள்வன் (கள்ளியும் தான்) என வரிசையாக படித்து வரும்போது கண்ணைக் குளமாக்கியது “ஒரு மிக எளிய காதல்”. இக்கதை புத்தகத்தின் கடைசிக் கதை, உள்ளத்தை உருகவைத்த கதை, காதலின் உண்ணதத்தையும் அதன் அழுத்தத்தையும் உணரவைத்த கதை.

படிமங்கள் இல்லாத உங்கள் கதைத் தொகுப்பைப் படிக்க புதுமையாகத் தான் இருந்து. பல கதைகளில் காதலிக்கும் கதாபாத்திரங்களுக்கு பெயரே இல்லை ஆனாலும் ஒவ்வொருவரும் மிக அணுக்கமாகிவிட்டனர். இத்தொகுப்பை அளித்தமைக்கு நன்றி ஆசானே.

புவனேஸ்வரி

பெங்களூர்

மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்க பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2023 11:31

ஒரு சொல்லுயிரி தந்த வாசிப்பு அனுபவம் – அமிர்தம் சூர்யா

குமரகுருபரன் விருது இந்த ஆண்டு சதீஷ்குமார் சீனிவாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகச்சிறந்த தேர்வு. நவீன கவிதை வெளியில் இயங்கும் யாரும் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு ஜெயமோகன் எழுதிய அவர் கவிதையை முன்வைத்து எழுதிய கட்டுரையை வாசித்திருந்தால் மனம் விட்டு பாராட்டியிருப்பார். அப்படியொரு பார்வை அவதானிப்பு. கவிதையின் இயங்குலகம் பற்றிய புரிதல். புதிய வாசகனுக்கு வழிநடத்தும் கைகாட்டி மரங்கள் எனலாம்.

சமீபத்தில் சதீஷ்குமார் சீனிவாசன் எழுதிய இரு கவிதைகள் குறித்து எனது அபிப்பிராயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த சமூக புது புத்தி சொல்லும் – தனிமனித பிரச்சனை, உளவியல் சிக்கல், மன இறுக்கம் இதையெல்லாம் எழுதாதவனை கவிஞனாக ஏற்க முடியாது. சமூகம் பிரச்சனை குறித்து என்ன எழுதினாய் என்று கேட்கும். ஒரு முறை ஜெயமோகன் சொன்னார். கவிஞன் நேரடி களப்பணியாளன் அல்ல அவன் எழுத்தின் மூலம் மொழியின் மூலம் அதையே தான் செய்கிறான். கோஷம் போடாததால் உனக்கு அது புரிவதில்லை. தமது வீட்டு அறைக்குள் எந்த சமூக தொடர்பும் இன்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி சமுக பொறுப்பற்றவனா? அவனும் கோஷம் போடவேண்டுமா? அவன் பணி சமூகத்துக்கானது இல்லையா என்று கேட்டார்.

அப்படியே ஒரு கவிஞன் சமூக பிரச்சனையை பிரச்சார நெடி இன்றி எழுதினாலும் அதை உள்வாங்கும் திறன் கருத்து கந்தசாமிகளுக்கு இருக்காது. ஆனால் குமரகுருபரன் விருது பெறும் சதீஷ்குமார் சீனிவாசன் சமூக பிரச்சனையை அல்லது அதன் மீதான எதிர்வினையை எழுதுவதிலும் கில்லாடி. கீழேஇருக்கும் கவிதை சிகரெட்டை முன்வைத்து எழுதிய கவிதை படியுங்கள், அதற்கு முன்…

நான் அதிகம் பழகிய இருவர். ஒருவர் சந்ரு மாஸ்டர். இன்னொருவர் பிரபஞ்சன் இருவரும் தொடர்ந்து சிகரெட் புகைப்பவர்கள். நான் இவர்களை சந்திக்க போனால் சட்டென ஒரு சிகரெட்டை எடுத்து நீட்டுவர். உண்மையில் சொன்னால் எனக்கு சரியா சிகரெட் பிடிக்க தெரியாது அதை விட அதில் ஒரு சுகம் இருப்பதாகவும் தெரியல. சீனியர் சிகரெட்டை கொடுக்கும் போது ச்சேச்சே நான் பிடிக்கமாட்டேன் பழக்கம் இல்லை என்றால் அது அவர்களை தரம் குறைப்பதாக ஆயிடுமேன்னு நானும் பற்றவைத்து அந்த புகையை இழுத்து தொண்டைக்குள் அனுப்பாமல் வாய்க்குள் வைத்திருந்து தேர்ந்த சிக்ரெட் கலைஞன் போல் பாவனை செய்து புகையை விடுவேன். ஒருவேளை சிகரெட் பிடிக்காதவனை நவீன கவிஞன் இல்லைன்னு சொல்லிடுவாங்களோன்னு ஒரு ஐயமும் ஓடும். சரி இந்த சிகரெட் கவிதைக்கு வருவோம்…

சதிஷ்குமார் சீனிவாசன் எழுதிய நாங்கள் பொறுக்கிகள் என்ற தலைப்பிலான கவிதையில் வரும் குரல் இது யாரின் குரல்? ஒரு விளிம்புநிலை மக்களின் பிரதிநிதிகளின் குரல். சிகரெட் எங்கு எந்த இடத்தில் பிடிக்கப்படுகிறது என்பதைக் கொண்டே பிடிப்பவனின் தரத்தை தீர்மானிக்கிறது அதிகாரம். காரிலிருந்து இறங்கி நகரும் ஒருவன் வெளியிடும் சிகரெட் புகையும் வியர்வை நெடி வீசும் ஒருவன் பிளாட்பாரத்திலிருந்து வெளியிடும் சிகரெட் புகையும் ஒன்றல்ல. அவன் ஸார், இவன் பொறுக்கி.

ஆனால் அந்த விளிம்பு மக்கள் தங்கள் சுதந்திரத்தின் குறியீடாக தங்களை ஆசுவாசப்படுத்தும் காரணியாக தங்கள் கோபத்தை மட்டுபடுத்தும் அல்லது தணிக்கும் சிகிச்சையாக சிகரெட் இருக்கிறது எனலாம்.

எந்த நேரமும் காவலர்களால் சாலையிலிருந்து விரட்டப்படலாம். வீட்டு முதலாளிகளால் வாடகை வீட்டிலிருந்து கூட. அட வாழ்க்கையிலிருந்து கூட விரட்டப்படலாம். நிச்சயமற்ற பயம் சூழ்ந்த வாழ்வில் அவர்களின் ஒரே ஆதரவு, ஆறுதல் சிகரெட் தான். காவலர்கள் இவர்களை பொறுக்கிகள் என்பதாக கவிதை முடியும்.

காவலர்கள் யார் போலீஸா அதுமட்டுமல்ல, இந்த சமூகத்தின் ஆதிக்க சாதி, அதிகார வர்க்கம் எல்லாம் காவலர்களின் குறியீடு தான். அந்த கவிதையில் ஒரு வரி வரும்

‘நாங்கள் ஒரு சாதாரண காதலைக்கூட சம்மதிக்கச் செய்யும் லாயக்கியற்றவர்கள்.’ அந்த லாயக்கை எது தரும் பொருளாதாரமா சாதியா என்பது விவாதத்துக்குரியது. கூடவே ஆணவ கொலையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த கவிதைக்கு இது கோனார் உரை தான். இது அவசியம் இல்லை என்றாலும் வெங்கட்சாமிநாதன் போல் என் ரசனை சார்ந்த வெளிப்பாடு இது தான்.

நாங்கள் பொறுக்கிகள்
இன்று காவலர்கள்
அப்படித்தான் சொன்னார்கள்

தெருவின் ஒரு ஓரத்தில்
சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தபோது
நாங்கள் பொறுக்கிகளாகியிருந்தோம்

எங்கள் சுதந்திரங்களில்
சிகரெட்டும் ஒன்று
எங்களுக்கு அரசியல் பிரமுகர்களை தெரியாது
பெரிய இடங்களின் எந்தத் தொடர்பும் கிடையாது
நாங்கள் ஒரு சாதாரண காதலைக்கூட
சம்மதிக்கச் செய்யும் லாயக்கயற்றவர்கள்
எங்கள் தரித்திரியங்கள்
எங்களையே கூச்சமடையச் செய்பவை
எங்கள் கனவுகள்
பதட்டங்களின்
துர்க்கனவுகளாக விரிந்தன
எந்நேரமும்
சாலைகளிலிருந்து
துரத்தப்படும் பதட்டம்
எந்நேரமும் வாடகை வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பதட்டம்
எந்நேரமும் யாராவது
வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள்
என்ற பதட்டம்
எங்களுக்கு இருந்த
ஒரே சுதந்திரம் சிகரெட் பிடிப்பது
எங்களுக்கிருந்த
ஒரே சொகுசு எங்களை நாங்களே அழித்துக்கொள்வது
நாங்கள் பொறுக்கிகள்
காவலர்கள் இன்று
அப்படித்தான் சொன்னார்கள்

*

நல்லவேளை சதிஷ்குமார் சீனிவாசன் சமூக பிரச்சனையை எழுதி பிரச்சார நெடியின்றி பிரக்ஞை பூர்வமாக ஆக சிறந்த கவிஞனாக தன்னை முன் நிறுத்தியுள்ளார்.

இன்னொரு கவிதை ‘தனதலகில் சூடி’ என்ற தலைப்பில். நண்பர்களே ஒரு மனிதனின் குறிப்பாக சமூகத்தில் நாடோடிதனம் கொண்ட அல்லது பொது புத்தியிலிருந்து விலகிய அல்லது சமூகம்போதித்த மதிப்பீடுகளை நிராகரித்த ஒருவன் யாராக இருக்க முடியும் எழுத்து கலைஞனாகத்தான் இருப்பான். அவன் பார்வையிலிருந்து இந்த கவிதையின் நுண்குரல் ஒலிக்கும். தத்துவ ஞானி ஜே.கே சொல்வார் ஜன்னலை திற காற்றும் வெளிச்சமும் இயல்பாய் உள்ளே வரட்டும். ரொம்ப எளிய ஆத்ம பயிற்சி இது ஜன்னல் என்பது எது என்பதிலிருந்தே உன் திறவுகள் திறக்கும். இந்த கவிதையும் நான் ஜன்னல்களை மூடுவதே இல்லை என்று தொடங்குகிறது. ஜன்னல் என்பது ஒரு அறிதல் கருவி. பறவை, காற்று எல்லாம் வாழ்வின் வினையால் கிடைக்கும் பொருள்கள் அல்லது வாழ்வை அவதானிக்கும் படிநிலைகள் எனலாம். காற்றுக்காக காத்திருந்தாலும் எந்த பறவையும் தன் அலகில் காற்றுக்களை சூடி வரவில்லை எனக்கு. ஆயினும் இன்னும் காத்திருக்கிறேன் எனக்கான காற்று வரும் என்று வீம்பில்… என்பதாய் முடியும் கவிதை இது.

சரி இந்த கவிதையில் கோடி காற்றுகள் என்று ஒரு வரி வரும். காற்று எப்போது பன்மை ஆனது. உலகம் என்பது ஒற்றை தன்மையானது அல்ல. அறிந்த உலகம் அறியாத உலகம், மூதாதையர் உலகம் ஆவிகளின் உலகம் இப்படி பல உலகங்களின் சேர்க்கை தான் நாம் பார்க்கும் உலகம். ஆக உலகங்கள் என்பதே சரி. இதுக்கு கூட யாராவது இலக்கணம் தெரியுமான்னு கேட்பாங்க. அதற்கு இன்னொரு பதில். தமிழ் மொழி என்று குறிப்பிடக் கூடாது தமிழ்மொழிகள் என்று தான் சொல்லவேண்டும் தமிழ் ஒரே மொழிஅல்ல சென்னை தமிழ், கொங்கு தமிழ், மதுரை தமிழ் என்று பல்வேறு வேறுபாட்டில் ஒலிப்பதால் தமிழ் மொழிகள் என்றுதான் சொல்லவேண்டும் என்று அ.மார்க்ஸ் ஒரு கூட்டத்தில் பேசியதை இங்கு நினைவு கூறுகிறேன். முடிக்கும் போது ஒரு சொல் வரும்… வீற்றிருந்தேன் என்று வரும். ஏன் உட்கார்ந்திருந்தேன், அமர்ந்திருந்தேன் சப்பணமிட்டிருந்தேன் குந்தியிருந்தேன் என்ற பதங்களை போடாமல் ஏன் வீற்றிருந்தேன்? வீம்பாக ஏதுமற்றவனாக இருந்தாலும் என் மனதில் நான் சிம்மாசனத்தில் தான் வீற்றிருக்கிறேன் என்கிற மனவெளிப்பாட்டின் சொல் அது. முக நூலில் ஒரு நண்பர் சதிஷ்குமார் சீனிவாசனை நீ ஒரு சொல்லுயிரி – என்று குறிப்பிட்டது மிக சரிதான். மிக சரியான சொல்லில் உயிர்வாழும் கவிஞன்… சரி

காற்று வரும் என இருந்துவிட்டேன்
ஜன்னல்களை
நான் மூடுவதே இல்லை

சாளர விளிம்பில்
அமரும்
எந்தப் பறவையும்
ஒருகொத்து காற்றை
தனதலகில் சூடி வரவில்லை
இதற்கெல்லாம் யார் என்ன செய்ய முடியும்
செய்தாலும்
முழுதாக சூட முடியாத
கோடி அலகுகள்
கோடி காற்றுகள்
இருந்தும்
ஒரு வீம்பில்
காற்று வருமென வீற்றிருந்தேன்

நல்ல கவிதை வாசிப்பு இன்பத்தை தந்த இந்த பொழுதுக்கு நன்றி கவிஞனுக்கு வாழ்த்துக்கள் விழாவில் சந்திப்போம் நண்பரே

அமிர்தம் சூர்யா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2023 11:30

May 5, 2023

இன்றைய முதற்பெருங்கலை

பொன்னியின் செல்வன் விவாதங்கள், வாங்க

பொன்னியின் செல்வன் விவாதங்கள் நூலை நான் சிவா அனந்த் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்தது பற்றி சில கடிதங்கள் வந்தன. அது ஒரு எளிமையான நிர்வாகவேலை தானே என்பதே கடிதங்களின் சாரம். அப்படத்தின் உருவாக்கத்தில் அவருக்கு அத்தனை முக்கியமான இடமுண்டா?

நீங்கள் வெட்டி முகநூல் அரசியல் பேசிக்கொண்டிருப்பவரல்ல என்றால் இங்குள்ள நடைமுறை யதார்த்தம் உங்களுக்குத் தெரியும். இந்தியாவின் மிகப்பெரிய சிக்கலே இங்கே ஒருங்கிணைந்து வேலைசெய்யும் பயிற்சி நம் மக்களிடமில்லை என்பதுதான். நிர்வாகம் என்பது இந்தியாவில் ஒரு மிகமிகப்பெரிய சவால்.

பிரபல சிற்பி லாரி பேக்கர் இந்தியா வந்தபோது இரண்டுபேர் வேலைபார்க்க அதை மேஸ்திரி வேலைபார்க்க ஒருவர் இருப்பதைக் கண்டு திகைத்து எவ்வளவு மானுட நேரம் வீணடிக்கப்படுகிறது என எண்ணி அதை மாற்ற முயன்றார். வேறுவழியே இல்லை என கண்டுகொண்டார். அதை அவர் பதிவுசெய்துள்ளார்.

என்ன பிரச்சினை? இங்கே, வேலைகளுக்கு எவரும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. ஒரு வேலையை ஒப்படைத்தால் அதை சிறப்பாகச் செய்து முடிக்கவேண்டும், அதில் நிறைவடையவேண்டும் என்னும் எண்ணம் மிக அரிது. சமாளிக்கும் மனநிலைதான் பொதுவாக இருக்கும். ஏன் வேலை முடியவில்லை, ஏன் வேலை சரியாக இல்லை என கேட்டால் மிக எளிதாக வேறு சிலரைக் குற்றம் சாட்டுவார்கள். எந்த அலுவலகத்திலும் இரவுபகலாக நடைபெறுவது இந்த குற்றம்சாட்டும் அரசியல்தான். அதற்கு பஞ்சாயத்து செய்தே நிர்வாகிகள் ஓய்வார்கள்.

பொறுப்பேற்றுக் கொள்ளாமையின் முகங்கள் பல. முதன்மையாக நேரப்பொறுப்பு. சென்ற முப்பதாண்டுகளில் நான் பழகியறிந்த ஒன்றுண்டு. இங்கே ஒருவர் ஏழுமணிக்கு வருகிறேன் என்றால் அவர் வருவது பாதிப்பாதிதான் சாத்தியம். ஏதாவது சாக்கு சொல்வார். ‘வரமுடியலை சார்’ என்பதையே ஒரு காரணமாகச் சொல்வார். ஆச்சரியமென்னவென்றால் அது அவருடைய தேவையாகவேகூட இருக்கும். நாம்தான் காத்திருக்கவேண்டும்.

அத்துடன் ஒரு வேலையை மேலும் மேலும் கற்றுக்கொள்ளும் வழக்கம் மிகமிக அரிது. ‘அதெல்லாம் வேலைக்காவாது’ என எந்த வகையான புதிய விஷயத்தையும் எளிதாகத் தவிர்த்துவிடுவார்கள்

இந்தியாவில் அறவே இல்லாமலிருப்பது நிர்வாகவியல். நிர்வாகவியல் படிப்புகள் இந்தியா அளவுக்கு உலகளவில் எந்த நாட்டிலும் இருக்காது. ஆனால்  பெரும்பாலும் எவருக்கும் நிர்வாகத்தின் அடிப்படைகள் தெரிந்திருக்காது.

சில நாட்களுக்கு முன் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி அவருடைய தேவைக்காக என்னிடம் நேரம் கேட்டிருந்தார். காலையில் வருவதாக இருந்தது, அவர் வந்தது மாலையில். அவர் சொன்ன காரணம் ”இன்னொரு அவசர வேலையா போய்ட்டேன்.” அதற்கு அடுத்து சொன்னார் ”இப்ப நான் ஃபைல் எடுத்திட்டு வரலை… நாளைக்கு பாக்கலாமா?” நான் அவரிடம் “இனி எப்போதுமே நாம் சந்திக்கக்கூடாது” என்றேன்.

ஆகவே இங்கே பலரை ஒருங்கிணைத்து ஒரு காரியத்தைச் செய்வதென்பது எளிய விஷயமல்ல. மிகக்கறாரான நெறிகளுடன் மட்டுமே எதையாவது ஒருங்கிணைத்து நிகழ்த்தமுடியும். நீங்கள் ஒரு கட்டிடம் கட்டிப் பார்த்திருந்தால் தெரியும். கண்ணில் ரத்தம் வந்துவிடும். இங்கே வட இந்தியத் தொழிலாளர் இல்லையேல் கட்டுமானமே நிகழாது என்பதே நடைமுறை உண்மை.

நிர்வாகவியல் என்பது ஒரு திறமை அல்ல. ஒரு தொழில் அல்ல. அது ஒரு கலை. இந்தியா அடுத்த இருபதாண்டுகளில் கற்றுக்கொண்டே ஆகவேண்டிய கலைகளில் அதுவே முதன்மையானது என்பதே என் எண்ணம்.

சினிமா மற்ற வேலைகளைப் போல அல்ல. அதில் குறைந்தது பத்து தொடர்பற்ற துறைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவை இணைந்து பணியாற்றவேண்டும். ஒரு நாள் வேலை கூடினால்கூட லட்சக்கணக்கில் இழப்பு உருவாகிவிடும். ஆகவே அது தன் நிர்வாகவியலை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது.

நான் கஸ்தூரிமான் படப்பிடிப்புக்குச் சென்றபோது எண்ணிக்கொண்டேன். அங்கே வேலைநடக்கும் ஒத்திசைவுடன் தொலைபேசித்துறையில் நடந்திருந்தால் ஐந்திலொரு பங்கு ஊழியர்களே போதும் என்று. அன்று அதை எழுதியிருந்தேன். லோகி வெடித்துச் சிரித்தார்.

சினிமாவின் படப்பிடிப்பு நிர்வாகிகள் நீண்ட கள அனுபவம் கொண்டபின்னர்தான் அப்பொறுப்புக்கு வரமுடியும். ஒவ்வொரு நாளும் அதற்கு முன்னர் எப்போதும் எங்கும் எழாத சிக்கல்கள் எழும். எழுந்தபடியே இருக்கும். எந்த சாக்கும் சொல்லமுடியாது, தீர்த்தே ஆகவேண்டும்.

பொன்னியின் செல்வன் மிகப்பிரம்மாண்டமான படம். வெறும் வரைகலைப்படம் அல்ல. எல்லாமே அசல். பல நூறுபேர், விலங்குகள் பங்கெடுத்த படப்பிடிப்பு நாட்கள். வெளிநாட்டில், இந்தியாவில் பல ஊர்களில் படப்பிடிப்பு. கூடவே கோவிட். தொடர்ந்து படப்பிடிப்பின் இடங்கள் மாறின.

கோவிட் கால படப்பிடிப்புக்காக ஒரு செயல்முறையையே பொன்னியின் செல்வன் உருவாக்கியது. இந்தியாவில் எந்த தொழிற்சாலையும் அப்படியொன்றை உருவாக்கியதாக நானறியவில்லை. ஒவ்வொரு துறையும் தன் பங்களிப்பைச் செய்தபின் இடம்  தூய்மையாக்கப்பட்டது. அடுத்த துறை அவ்விடத்தை கையகப்படுத்திக்கொண்டது.  ஒரு துறை இன்னொரு துறையை சந்திக்காமலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு மாபெரும் இயந்திரம் அதன் ஒரு பகுதி இன்னொன்றை தொடாமலேயே இயங்கியது. மூன்றுமுறை இதயச்சிக்கல் வந்த மணி ரத்னம் படப்பிடிப்பை நடத்தினார். பெரும்பாலும் எவருக்கும் கோவிட் வரவில்லை.

அந்த சாதனை என்னை பிரமிக்கச் செய்கிறது. நான் காட்ட விரும்பும் முன்னுதாரணம் சிவா போன்றவர்கள்தான். நடிகர்கள், பாடகர்கள் எல்லாம் திறமையான கலைஞர்கள்தான். ஆனால் அவர்களுக்கு புகழும் உள்ளது. பலகோடிப்பேர் அவர்களை முன்னுதாரணமாகக் கொள்கிறார்கள். ஆனால் மாபெரும் நிர்வாகிகளை நாம் அப்படிக் கொண்டாட, முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டிய காலம் வந்துவிட்டது.

’பொன்னியின் செல்வன், விவாதங்கள்’- ஒரு நூல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2023 11:35

அந்தகக்கவி

அந்தகக்கவி வீரராகவ முதலியார் ‘கண்ட சுத்தி’ என்னும் திறமை பெற்றிருந்தார் என்ற குறிப்பு அபிதான சிந்தாமணியில் காணப்படுகிறது. ஒருவர் மனதில் உள்ளதை மற்றொருவர் தன் மனதால் கண்டுணர்ந்து சொல்வது ‘கண்ட சுத்தி’ அல்லது’ கண்ட சித்தி’ எனப்பட்டது. ஈழ மன்னனின் அவைக்குச் சென்றபோது அவனது மனதில் இருந்த இரு கேள்விகளுக்குத் தன் பாடல் மூலம் விடை கூறினார். மன்னன் தன் மனைவி தன் மீது ஊடல் கொண்டதற்கும், அரண்மனைச் சோலையில் கிளிகள் தன் கூட்டிலிருந்து வெளிவர மீண்டும் மீண்டும் முயன்று, மீண்டும் உள்ளே செல்வதற்குமான காரணத்தைத் தன் மனதில் யோசித்துக் கொண்டிருந்தான். அதை தன் கண்ட சுத்தியால் உணர்ந்து ஒரு  பாடலைப் பாடி அவனது ஐயத்தைப் போக்கினார் என்று அபிதான சிந்தாமணி குறிப்பிடுகிறது.

அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தகக்கவி வீரராகவ முதலியார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2023 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.