Jeyamohan's Blog, page 583

May 26, 2023

ஆலயக்கலை- கடிதம்

அன்புள்ள ஜெ,

ஏப்ரல் 28, 29, 30 தேதிகளில் நடைபெற்ற ஆலயக்கலைப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, நானும் என் நண்பர் பா.கா.முருகேசனும் காலை 6 மணிக்குக் கோவையிலிருந்து காரில் கிளம்பினோம். ஈரோட்டில் உள்ள வழக்கறிஞர் செந்திலின் பண்ணை வீட்டில் இரண்டு சந்திப்புகளுக்கு நான் முன்னரே வந்திருக்கிறேன். வெள்ளிமலை நித்யவனத்திற்கு இதுவே முதல் முறை. அந்தியூர் மணி தெளிவாக வழி அனுப்பியிருந்தார். எந்தக் குழப்பமும் இல்லாமல் 9.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். காலை உணவிற்குப் பின் 10 மணிக்குப் புத்தர்,  வாக்தேவி சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்கியபின்,அஜி, ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களைப் பாடச் சொல்ல, அவர் சரஸ்வதி துதிப்பாடலுடன் வகுப்பைத் தொடங்கினார்.

ஆலயம் என்பது என்ன, எதற்காக, ஆலயம் அமைக்க என்னென்ன விதிகள் உள்ளன எனச் சொல்லத்தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே இந்த வகுப்பின் முக்கியத்துவத்தை உணர வைத்துவிட்டார். எத்தனையோ தடவை கோயிலுக்குச் சென்றிருந்தாலும் அதன் அமைப்பை கோபுரம், பலிபீடம், துவஜஸ்தம்பம், முகமண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபம், அந்தராளம், கருவறை, விமானம் என்றெல்லாம் முழுவதுமாக கவனிக்கத் தெரிந்ததில்லை. ஆசிரியர் ஜெயக்குமார் சிறு பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது போல எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும், நிதானமாகவும் வகுப்பெடுத்தார். ஆலய அமைப்புகளையும், சிற்பங்களையும் விளக்க அதன் வரலாறு, புராணங்கள், தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், சிலப்பதிகாரம் எனத் தொடங்கி இன்றைய விஷ்ணுபுரம், வெண்முரசு என  எல்லாவற்றையும் துணைக்கெடுத்துக் கொண்டார். பல புத்தகங்கள், நிறையத் தகவல்கள். அவர் சொல்லச்சொல்ல அவரின் பரந்துபட்ட அறிவையும், தேடலையும் வியந்தபடி நாங்கள் சுமார் 40 பேர் அங்கே இருந்தோம். 

வந்திருந்தவர்கள் அனைவரும் நல்ல ஆர்வத்துடன் இருந்தனர். சாம்ராஜ், அருண்மொழி நங்கை இருவரும் முதல் வரிசையிலிருந்து உற்சாகத்துடன் பங்கெடுத்தனர். இந்த இடத்தில் என் நண்பர் பா.கா.முருகேசன் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். தச்சுக்கலையை குலத்தொழிலாகக் கொண்டவர். இலக்கிய வாசகர் அல்ல. அவரை அறம் வாசிக்க வைக்க என்னால் முடியவில்லை. ஒருநாள் உங்களின் ‘கானகம்‘ வீட்டைப் பற்றிய கட்டுரையைப் படித்து ஊக்கம் பெற்று, சில ஆராய்ச்சிகள் செய்து, தன் வீட்டை லாரி பேக்கர் முறையில் கட்டியிருக்கிறார். 

குடவாயில் பாலசுப்ரமணியனின் ‘தமிழக கோபுரக்கலை மரபு‘ என்ற நூலைப் படித்தபிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேர் கட்டுமானம் தொடர்பாகத் தேடி வருகிறார். ஆலயக்கலைப் பயிற்சி வகுப்பிற்கு நான் அவரை அழைத்தபோது சற்று அவநம்பிக்கையுடனே வந்த அவர் இப்போது ஆசிரியர் ஜெயக்குமார் பற்றி விதந்தோதிக்கொண்டே இருக்கிறார். 

ஆசிரியர் ஜேகே பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, அதன் ஆலயங்கள், சிற்பங்கள், புத்தகங்கள், ஆவணப்படங்கள், பழந்தமிழ் பாடல்கள், கட்டுரை, கவிதை எனச்சொல்லிச் செல்கையில், மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு, தஞ்சை பெரிய கோயில் சந்தியா நடனம் எனத் தேடலின் வழி அவர் அடைந்த தரிசனங்களை (என்றுமுள காலம்) எங்களுடன் பகிர்ந்து கொண்டார். எழுத்தாளர் சாம்ராஜ் அதை உள்வாங்கி இருவேறு தருணங்களில் எங்களிடம் மெய் சிலிர்த்தார். ஆசிரியர் பேசும்போது ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் அவரின் ஆசிரியர் நாகசாமியை குறிப்பிடாமல் இருப்பதில்லை,  ஏதோ ஒரு நிகழ்ச்சி, ஏதோ ஒரு உரையாடல். நீங்கள் நித்ய சைதன்ய யதி அல்லது சுந்தர ராமசாமியை குறிப்பிடுவதைப் போல பெருமிதத்துடன், காதலுடன்.

வெள்ளி, சனி இரவுகளை சாம்ராஜ் தன் உரையாடலால் சுவாரஸ்யமாக்கினார். அவருக்கு அமைந்த தலைப்புகள், ‘மதுரை மனிதர்களின் குணாதியசியங்கள்‘, ‘மலையாள சினிமாவில் பகடி‘. தொடர்ந்து நகைச்சுவைகளாக சொல்லிக்கொண்டே சென்றார். நாயனார், ஈ.எம்.எஸ், கமல், சிவாஜி, இன்னொசென்ட், மம்முட்டி, மோகன்லால், ஜெகதி, அவரின் சில அனுபவங்கள் என. தொடர் சிரிப்பு. ஞாயிறு மதியத்துடன் வகுப்பு முடிந்து, சாம்ராஜுடன், அன்புராஜின் ஐந்திணை ஆர்கானிக் கடைக்கு வந்து அங்கிருந்து, கோவைக்குக் கிளம்பினோம். சாம்ராஜ், பா.கா. முருகேசனை பாரம்பரிய தச்சுகலைத் தொடர்பாக எழுதும்படி உற்சாகப்படுத்தினார். 

ஆலய, சிற்பக் கட்டுமானத்தின் பல்வேறு அங்கங்களின் பெயர்களை நினைவில் நிறுத்திக் கொள்வது கடினம். தொடர் நேரடிப் பயிற்சியின் வழி வர வேண்டியது அது. ஆனாலும் வகுப்பிற்கு வந்த யாருக்கும் இனிமேல் வெறுமனே ஒரு கோயிலுக்குள் சென்று தொழுது வரவோ, சிற்பங்களைக் கடந்து செல்லவோ முடியாது. கற்றலின் இனிமை நிறைந்த மூன்று நாட்கள். 

நன்றி ஜெ.

ரதீஷ் வேணுகோபால்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2023 11:31

மதுமஞ்சரி- கடிதம்

நீரின் நிறைவு

அன்பு ஜெ.

மதுமஞ்சரி முகநூலில் பகிர்ந்திருந்த குறிப்பு. உங்களிடம் பகிர்ந்து கொள்ள தோன்றியது.

*

சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டிற்கு அருகில் உள்ள அவல் பூந்துறை எனும் கிராமத்திற்கு சென்றிருந்தேன்.

அங்கு உள்ள ஒரு தலித் காலனியில் உள்ள கிணற்றினை புனரமைக்க முடிவு செய்து வேலைகளை திட்டமிட்டோம். அப்போது எனக்கு தெரியாது இதுவரை செய்த வேலைகள் எல்லாவற்றையும் விட கடும் நெருக்கடிகளையும் கற்றலையும் இந்த கிணறு தரப்போகிறது என்று. 

கிணறு புனரமைப்புக்கான தொகையை திரட்டுவது ஒரு பக்கத்தில் சிரமம் இருந்த போதிலும், அதை விட மிகுந்த சிரமம் தந்தது அந்த ஊரை சுற்றியுள்ள மக்களின் அணுகுமுறை. வழக்கமான கூலித்தொகையை விட அதிகம் தருகிறோம் என்று போதிலும் அங்கு வந்து வேலை செய்வதற்கு மறுக்கிறார்கள். 

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் உள்ள சாதி பாகுபாட்டிற்கும் இங்கு உள்ள பாகுபாட்டிற்கும் உள்ள வித்தியாசம் இரவு பகல் போல.

எங்கெங்கோ இருந்து நண்பர்கள் சிறுக சிறுக தொகையை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த வேலையை அவ்வளவு எளிதாக துவங்க இயலவில்லை. 

அந்த காலனியை சுற்றியுள்ள வெவ்வேறு மட்டங்களில் இருந்து வெவ்வேறு குரல்கள் அனைத்தும் எதிர்மறை குரல்கள்‌. 

வேணு அண்ணன் சந்திரமோகன் அய்யா ஆகியோரின் கடுமையான முயற்சிக்கு பிறகு வேலைகளை துவங்கினோம். அந்த காலனியின் இளைஞர்கள் காலை வேலைக்கு சென்றுவிட்டு இரவுகளில் உடன் நின்று தொண்டாற்றினர்.

சொல்வதற்கு மிகவும் கசப்பாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும். 

கிணறு வேலை கால் பங்கு முடிந்த நிலையில் அந்த ஊரின் முக்கிய பிரமுகர் கிணற்றை பார்வையிட்டு விட்டு, என்னை குறித்த தகவல்களை தொழில் குல தெய்வம் என ஏதேதோ தகவல்களை கேட்டுக்கொண்டிருந்தார். பின்பு ஒரு 500ரூபாய் கையில் தந்த பின் அவர் பேசிய வார்த்தைகள் என்னை சுக்குநூறாய் உடைத்து போட்டது.

கண்ணு நீ செய்யற வேல ரொம்ப பெருசு. ஆனா இவனுங்க எல்லாம் அரசாங்க வேலை வாங்கிட்டு வசதியா தான் இருக்கானுங்க ஞாயித்துக்கிழம தவறாம மாடு அடிச்சி சாப்பிறாங்க. கண்ணு வேற எங்காவது கஷ்டப்படுற மக்களுக்கு போயி வேல செய்யு கண்ணு. இந்த கிணறை இவனுக ஒழுங்கா பயன்படுத்த மாட்டாங்க கண்ணு. 

இப்படி அடுத்தடுத்து அவர் பேசிய வார்த்தைகளை பொது வெளியில் எழுத முடியாது. முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தை தனது சட்டை பையில் வைத்திருந்த அவர் ஒருவர் அல்ல. அந்த ஊரின் டீ கடை துவங்கி பலரது வார்த்தைகள் அதுதான். 

ஆனால் அந்த ஒட்டு மொத்த அவல் பூந்துறையின் கழிவுகளை சுமக்கும் தூய்மை செய்யும் மனிதர்கள் வாழும் குடியிருப்பு அது. அவர்கள் சொன்ன கவர்மென்ட் வேலை அது தான். 

அவர் பேசியது ஒரு நடுக்கத்தை கோபத்தை அழுகையை வரவழைத்தது. 

தாங்க இயலாமல்  கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அம்மாவை  அழைத்து பேசியபோது, மஞ்சரி பக்கத்தில் உள்ள எல்லா அருந்ததியர் குடியிருப்புகளுக்கும் சென்று பார்.  குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் அங்கு நின்று கவனி. அங்குள்ள வயோதிகர்களிடம் எந்தவித தயக்கமும் இன்றி பேசு மஞ்சரி என்றார். ஏன் சொன்னார் என தெரியவில்லை.ஆனால் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் அழைந்து திரிந்தேன். வெய்யிலின் கடுமை ஒருபக்கம் இருக்க ஒவ்வொரு நாளும் ஒருவித அதிர்ச்சியை சந்தித்துக் கொண்டே இருந்தேன். 

ஈரோடு எராளமான கல்வி நிறுவனங்களால் மிகப்பெரிய தொழிற்சாலைகளால் நிரம்பி வழிகிறது ஆனால் இங்கு நான் உணர்ந்த சாதி என்னும் தீண்டாமையை வேறு எங்கும் கண்டதில்லை. 

என்னுடன் வந்த அண்ணனுக்கு பேப்பர் டம்பளரில் டீயும் எனக்கு கண்ணாடி டம்பளரில் டீயும் தந்தார்கள். அவர்களிடம் கேள்வி கேட்டபோது அந்த அண்ணனை ஒருமையில் திட்டுகிறார்கள். எதுவும் பேசமுடியாமல் அந்த அண்ணன் என்னையும் அமைதி ஆக்குகிறார். 

எழுவது வயதிற்கும் மேற்பட்ட பெரியவரை கூட அந்த ஊரின் சிறுவன் ஒருமையில் தான் பேசுகிறான். ஆனால் அந்த பெரியவர் எசமாங் என்று சாதியை குறிப்பிட்டு அத்தனை மரியாதையாய் பேசுகிறார்‌. இப்படி அடுத்தடுத்து நிகழ்ந்த படியே இருந்தன.

இந்த ஊர்களில், சாதி என்பது நிறைய பல்கலைக்கழகங்களில் படித்து தேர்ந்திருக்கிறது. அத்தனை நவீனமயமாக இருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாய் இந்த மக்கள் இந்த அவலத்தில் சிக்கித்தவிக்கிறார்கள் என்பதை நினைக்கும்போதெல்லாம் மனம் பொங்கிய படியே இருந்தது. ஒரு வைராக்கியம் வந்தது. இந்த மக்களின் வாழ்வில் ஒரு சிறு நம்பிக்கையை உருவாக்கிய தீர வேண்டும். அவர்களுக்கு செய்த அத்தனை அநீதிகளுக்கும் பாவங்களுக்கும் பதிலாக இந்த வாழ்வு அமைய வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

அதுவரை இல்லாத தீவிரத்தில் வேலையை செய்தோம். கிணறு பணி முழுமை அடைந்தது. பக்கத்தில் உள்ள எல்லோர்க்கும் ஒரு சத்தத்ததை எழுப்பி இந்த வேலை முடிந்துவிட்டது பார் இனி அடுத்தடுத்து இவர்களுக்குக் தான் வாழ்வும் வெற்றியும் என்பதை சொல்ல வேண்டும் என்பது போல் இருந்தது. வணக்கத்துக்குரிய மாதண்ணன் அவர்களின் குழந்தைகள் பறை இசைத்து துவக்கினர். கால் வலிக்க வலிக்க அக்குழந்தைகளின் நடனம் வரப்போகும் நன்மையை மனதிற்கு சொன்ன படியே இருந்தது. 

ஊனமுற்ற குழந்தைகளின் வாழ்வை காக்க தன் வாழ்வை அளித்த லூர்து மேரி அம்மா , எல்லோர்க்கும் அம்மாவான கண்ணம்மா  அவர்கள் கிணற்று நீரை மக்களுக்கு அர்ப்பணித்தார்.

வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த நண்பர்கள், கொடையாளர்கள் , ஊர் மக்கள் எல்லோரும் ஒரு விதத்தில் நிம்மதி அடைந்தோம். 

ஆனால் இரவு மீண்டும் மீண்டும் இந்த சாதி , நவீன தீண்டாமை அவர்கள் நடத்தப்படும் விதம் எல்லாம் தூங்கவிடவில்லை . ஒரு சுடரை ஏற்றிவிட்டு கேவி கேவி அழுதேன்.

உண்மையாகவே தாங்கமுடியவில்லை. எதேனும் செய்ய வேண்டும். 

ஒரு முடிவெடுத்துள்ளோம். முதல் கட்டமாக அவல் பூந்துறை அதை சுற்றியுள்ள பத்து கிராமங்களில் உள்ள கிணறுகளை புனரமைக்க உள்ளோம். 

 கிணறு புனரமைப்பு  சார்ந்த தொழில் நுட்பங்களையும் ஆவணப்படுத்தி அரசுக்கு ஒப்படைக்கவுள்ளோம். நண்பர்கள் இணைந்து ஒரு கிணற்றினை தத்தெடுத்துக் கொள்ளலாம். தங்களுக்கு தெரிந்த நிறுவனங்கள் மூலம் ஒரு கிணற்றினை தத்தெடுத்து உதவலாம்.

எப்படி இந்த காரியத்தை செய்து முடிக்கப்போகிறோம் என்று தெரியாது. ஆனால் செய்தே ஆக வேண்டும். இந்த காரியம் முழுமைப் பெற்றால் தமிழக அளவில் ஒரு பெரிய விழிப்பு வரும் என நம்புகிறோம்.

தீண்டாமை ஒழிப்பு தண்ணீரில் இருந்து துவங்கட்டும்.

தீண்டாமை ஒழிப்பு தண்ணீரில் இருந்து துவங்கட்டும்.

அந்த உழைக்கும் மக்கள் துணிகள் துவைப்பதற்கும் , சாயந்திரம் அமர்ந்து ஊர்க்கதைகள் பேசுவதற்கும், குழந்தைகள் நீச்சல் அடித்து விளையாடுவதற்கும், வருடத்திற்கு ஒரு முறை தனது குல சாமிக்கு தீர்த்தம் படைப்பதற்கும் அந்த கிணறுகள் பயன்படட்டும். நாம் அவர்களுக்கு செய்துக் கொண்டிருக்கும் பாவங்களுக்கு மன்னிப்பாக மாறட்டும்.

ஆனந்தகுமார்

தொடர்ப்புக்கு 9600713701

Gpay 9600713701

Name. Madhumanjari

A/c no. 2981001500005744

Branch. DINDIGUL

IFSC. PUNB0298100

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2023 11:31

பெண்,கல்வி, விடுதலை- கடிதம்

 

அன்புள்ள ஜெ

அண்மையில் தளத்தில் வெளிவந்த லோகமாதேவி டீச்சரின் கல்வி விடுதலை கடிதத்தை தொடர்ந்து கமலதேவி அவரது வலைப்பக்கத்தில் பெண் கல்வி, விடுதலை மற்றும் தன்னறம் என்ற தலைப்பில் தன் அனுபவத்தையும் அவதானிப்புகளையும் எழுதியிருக்கிறார். அதை படித்த ஒரு உந்துதலில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம். நான் எழுதிய கடிதத்தை இக்கடிதத்தின் முடிவில் இணைக்கிறேன்.

அதற்கு முன்னதாக டீச்சரின் கடிதத்தை குறித்து சொல்ல வேண்டும். அன்று நள்ளிரவு பதிவு வெளியானவுடனே வாசித்தேன். இயல்பாக வாசிக்க தொடங்கி இரு சொட்டு கண்ணீருடன் முடித்தேன். என் அம்மாவை வீட்டில் உள்ள மற்றவர்களை விட அணுக்கமாக பார்ப்பவன் என்ற முறையில் அவள் தன்னை கணவனால், சுற்றத்தால் தோற்கடிக்கப்பட்டவள் என்று எண்ணுபவள். அதன் விளைவான திரிபுகளும் அவள் ஆளுமையில் உண்டு. அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் மகனாக இந்த வெற்றிக்கதை உளம் பொங்க செய்தது. ஒருகணம் நினைத்து கொண்டேன், டீச்சரும் என் அன்னையரில் ஒருவர். வென்று நின்றவர் என்று.

அன்புள்ள கமலதேவி

அகாலத்தின் கனவானவள்

 

அவள் வேறு ஒன்றுமே செய்யவில்லை

அந்த ஒன்றைத் தவிர

எல்லோராலும் கைவிடப்படுவதற்கு

அந்த ஒன்றே போதுமானதாக இருந்தது

கழைக்கூத்தாடிபோல தனிமையின் சரடில்

பொழுதெல்லாம் நடப்பவளுக்கு

எந்த அன்பும் சில கணங்களுக்கு வேடிக்கைப்பார்க்கும்

இடையில் அவ்வப்போது கைதட்டும்

யாரோ ஒருவர் என்று மட்டுமே தோன்றியது

 

இதை எழுதிக்கொண்டிருக்கும் என்னை

அவளுக்குத் தெரியாது

அதுபோலவே அவளை எனக்கும்

ஆனால்

அவள் அகாலத்தின் கனவாய்

என் பிரக்ஞையின் வெளியில்

சதா நெளிந்துகொண்டிருப்பவள்

இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்

இந்த இரவில் அவள் தனது அறைக்கும் திரும்பிக்கொண்டிருக்கலாம்

அன்றாடம் யாருமில்லாத அறைக்கு திரும்பிப்போவது

அவளுக்கு சங்கடமாக இருப்பதில்லை

மொட்டை மாடியில்

எல்லா இரவுகளிலும் நேரம் தவறாமல்

பறக்கும் அந்த ஒற்றைக் காக்கையும்

இறக்குமதி செய்யப்பட்ட அரியவகை பூந்தொட்டிகளும்

வாசலின் முன்னே பசிய இலைகளுடன் விற்றிருக்கும் புங்கையும்

சதுர வடிவக் கண்ணாடித்தொட்டியின் மீன்களும்

தனக்காக காத்திருக்கின்றன என

தனது திரும்புதலுக்கு ஒரு நியாயமிருக்கிருக்கிறதென தான் நம்புவதாக

நம்புகிறாள் அவள்

 

அந்த ஒன்று

அவள் அவளுக்குப் பிடித்தவற்றை மட்டுமே செய்ய

விரும்பினாள்செய்தாள் என்பதுதான்

உண்மையில்

எல்லோராலும் கைவிடப்பட

அந்த ஒன்றே போதுமானதாக இருந்தது

நான் உட்பட

:-  சதீஷ்குமார் சீனிவாசன்

இன்று உங்களுடைய மணிகதவில் பெண் கல்வி, விடுதலை மற்றும் தன்னறம் பதிவை வாசித்த பின் அண்மையில் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது அறிவிக்கப்பட்ட சதீஷ்குமார் சீனிவாசனின் உன்னை கைவிடவே விரும்புகிறேன் கவிதை தொகுதியில் வாசித்த மேற்காணும் கவிதை நினைவில் எழுந்தது.

சதீஷ்குமாரின் இக்கவிதை இக்காலக்கட்டத்து பெண்களின் சிக்கலை பேசுபொருளாக்கியுள்ளது. அவரது முதல் தொகுப்பில் உள்ள மிக சிறந்த கவிதைகளில் ஒன்றாக குறிப்பிட முடியாது. முதல்முறை வாசிக்கையில் கடந்து சென்றுவிட்டேன். உங்கள் பதிவை வாசிக்கையில் நினைவில் மின்னியது. நினைவில் மின்னுவது வெற்றியடைந்த கவிதைகளின் இயல்புகளில் ஒன்று. இக்கவிதையில் திரண்டு வரும் அக்கேள்வியும் அதன் உணர்வுநிலையும் முக்கியமானவை.

இன்றைக்கு தன் தன்னறத்தை தொடர்ந்து செல்லும் பெண்ணை குடும்பமும் சமூகமும் அத்தனை எளிதில் விட்டுவிடுவதில்லை. நம் அம்மாக்களின், பாட்டிகளின் காலத்தில் இருந்து பலபடிகள் ஏறியிருக்கிறோம். என் பாட்டி பூப்பெய்தவுடன் பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டார். அம்மா திருமணமான பின் வேலையை கைவிட்டார். இன்று திருமணமான பின் வேலையை கைவிட்டே ஆக வேண்டும் என்று தடலாடியாக கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால் இப்போதும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நம் குடும்பங்கள் முயன்று கொண்டே தான் உள்ளன. ஆனால் சற்று உறுதியான பெண்கள் சமாளித்துவிட முடிகிறது. மேலும் நவீன உலகின் பொருளியல் சுமையும் நுகர்வு கலச்சார கூறுகளும் பெண்ணின் வருமானம் வசதியான வாழ்க்கைக்கு அவசியமானது என்ற எண்ணத்தை சமூக மனதில் ஏற்படுத்துவது பெண்களுக்கு பக்கபலமாக அமைகிறது.

ஆனால் தன்னறம் என்று வந்துவிடுகையில் தடிகளும் தண்டங்களும் மட்டுமே எழுந்து வருகின்றன. நாம் அடைய வேண்டிய தூரம் நிறையவே உள்ளது. முன் சொன்ன வேலைக்கு செல்லுதல் என்ற விஷயத்திலேயே நிறைய நேரம் தடைகள் தான் வந்துவிழுகின்றன. அங்கேயும் கடந்து வென்று வர படிகள் உள்ளன. இன்று தன்னறத்தை கைக்கொள்ளும் பெண், அதனை பிரகடனப்படுத்தி கொள்ள முடிவதில்லை. லோகமாதேவி டீச்சர் வெளியே தெரியும் முகம் எனில், தெரியாதவர்கள் பலர். அவர்கள் தங்கள் புற சமூக அடையாளத்தை பேணிய படியே விரும்பியவற்றை நோக்கி பயணப்பட வேண்டியுள்ளது.

உங்கள் கட்டுரையில் பெண்களுக்கு அளிக்கும் வசதியான வாழ்க்கையும் கல்வி முடிந்தவுடன் திருமணம் செய்து கொடுப்பதையும் குறிப்பிட்டிருந்தீர்கள். அது முக்கியமான அவதானிப்பு. இன்று கல்வியை கொடுக்கிறார்கள். ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தில் இந்த கல்வியை கூட நம் பெற்றோர்கள் ஒருவகையான வரதட்சணை கணக்கில் வைத்தே செயல்படுகிறார்கள் என்று சொல்வேன். மேலும் இந்த வசதியான வாழ்க்கையை காரணம் காட்டியே வசதியான புகுந்த வீடெனில் ஏன் வேலைக்கு சென்று வீண் சிரமம் என்று பேச்செடுத்து வேலைக்கு செல்வதை நிறுத்துவிடுகிறார்கள். இந்த சொகசுக்கு பழகி நின்று விடும் பெண்கள் ஏராளம். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வேலை என்பது பணம் மட்டுமல்ல, அதனுடாக வரும் அதிகாரம் என்று. தன்னறம் என்பது நம் ஆளுமை.

அடுத்து உங்கள் தம்பியை பற்றி கூறியிருந்தீர்கள், அவரை போன்ற சென்ற தலைமுறை ஆட்கள் மட்டுமல்ல, என் தம்பியும் அப்படிப்பட்ட மனநிலையில் வளர்வதையே பார்க்கிறேன். ஜெ சொல்வது போல இவர்கள் படித்த அசடுகள் என்றே கொள்ள வேண்டும். உலகியலுக்கு அப்பால் துளியும் எண்ணும் திராணியற்றவர்கள். ஒருவகை மடையர்கள் என்றே கொள்ள வேண்டும். இப்படியிருக்கும் ஒரு சமூகத்தில் பெண்கள் எழுந்து நிற்பது மூச்சுமுட்ட செய்யும் அனுபவமே.

அன்புடன்

சக்திவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2023 11:30

May 25, 2023

வாட்ஸப் வரலாறு

IMG-20190311-WA0007

அன்பு ஜெயமாகனுக்கு,

உங்களின் ” உலகின் மிகப்பெரிய வேலி” எனும்  கட்டுரையை படித்தேன் மிகுந்த கிளர்ச்சியையும்  என்னுடைய பழைய சந்தேகம் ஒன்றையும் தூண்டிவிட்டது.கடந்த இரண்டு வருடங்களாக நான் இந்த பதிவை எனது வலைதளத்தில் படித்து வருகிறேன்.அந்த பதிவு நாம் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற தருணம்.

வலைத்தளப்  பதிவை முழுவதும் பதிவிட்டுள்ளேன்.இதன் உண்மை தன்மை பற்றியும் விளக்கங்களையும் தருமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

கிருத்திகேசன்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு

மறைக்கப்பட்ட வரலாறு….

1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம். மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம் அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க நேருவுக்கு குழப்பமாக இருந்தது. எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது…..(பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு  சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை).

உடனே நேரு  மூதறிஞர் ராஜாஜியை அணுகி,”எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது, அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்”என்று கூற,உடனே ராஜாஜி  “கவலை வேண்டாம், எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர். நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்”, என்றார்.

நேருவும் “நேரம் குறைவாக உள்ளது.. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்”, என்று உத்தரவிட்டார்.ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு  விஷயத்தைச் சொல்ல,அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம் அவர்கள், உடனே முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி, இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து, கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் உடன் அனுப்பி வைத்தார். (தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பதினோரு பாடல்களை குறித்துக் கொடுத்தார்–இந்த பாடல்களை அப்போது ஓதுவார் மூர்த்திகள்  பாட வேண்டும்).

ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் அவர்கள் செங்கோலுடன்  டில்லி போய் சேர்ந்தனர்.அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையில் இருந்து, பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர். அந்த சுதந்திர வைபவ தினத்தில் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை குரு மகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று, செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், வேயிறு தோளிபங்கன் என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தைப் பாட, பதினோராவது பாடலின் கடைசி வரி,

“அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே”–

இந்த வரியைப் பாடி முடிக்கும் போது தான், சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார். அந்த நிகழ்வைத் தான் நாம் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை..இந்த வரலாற்று விஷயத்தை பாடப் புத்தகத்தில் வெளியிட்டு, நாடறிய செய்யாமல் சதி செய்யப்பட்டது.நண்பர்களே இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாடறியச் செய்வோம்.

திருவாவடுதுறை ஆதீன மடத்தில், இந்த செங்கோல் வைபவம், கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது. புகைப்படத்தில் 15.8.1947 என்று தேதியிட்டு இருப்பதையும்,நேரு, கையில் செங்கோலுடன் இருப்பதையும், தம்பிரான் பண்டார ஸ்வாமிகள் அருகில் உள்ளதையும்  காணுங்கள்….

independence-kvr024

அன்புள்ள கிருத்திகேசன்

இன்னும் பத்தாண்டுகளில் வாட்ஸப் வரலாறு என ஒரு தனித்துறையே உருவாகிவிடும்போலும். இந்தமாதிரி நாளுக்கு இருபதாவது வந்துகொண்டிருக்கிறது. இதில் எனக்கு சுவாரசியமாக இருந்தது அந்த செங்கோல்கொடுக்கும் படம். இல்லையேல் முதல் நான்கு வரிகளுக்குமேல் வாசித்திருக்க மாட்டேன்

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த நாட்களில் நாடெங்கிலுமிருந்து மடங்களின் தலைவர்களும் ஆன்மிகத்தலைவர்களும் வெவ்வேறு வகையில் நேருவுக்கு வாழ்த்து தெரிவித்து குறியீட்டுரீதியான பரிசில்கள் அளித்தனர். அவற்றில் ஒன்றே இந்தப்படம் என நினைக்கிறேன். இதைப்போன்ற வேறு படங்களையும் நான் கண்டிருக்கிறேன். இப்படி ஒரு பரிசு அல்லது ஆசி அளிக்கப்பட்டது வரலாறு. அது ராஜாஜி கோரியமையால் அளிக்கப்பட்டது என்பதற்கும், அதன் மூலமே ஆட்சிமாற்றம் நிகழ்ந்தது என்பதற்கும் சான்றுகள் இல்லை . அது வாட்ஸப் வரலாறு.

மேலே சொன்ன வாட்ஸப் செய்தியிலுள்ள சில விஷயங்களைக் கவனிக்கவேண்டும். நீங்கள் ஆர்வத்துடன் கேட்டிருப்பதனால் இதை எழுதுகிறேன். முதலில் ‘வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது’ என்னும் வரி. நூற்றுக்குத் தொண்ணூறு வாட்ஸப் வரலாறுகளில் இந்த வரி உள்ளது. முதல் விஷயம் இது வாசிப்பவருக்கு பிறருக்குத் தெரியாத ஏதோ தனக்குத்தெரியும் என்னும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. ஆகவே ஆர்வத்துடன் வாசித்து பகிர்ந்துகொள்கிறார்.

அதைவிடக் குறிப்பிடத்தக்க இன்னொரு உளநிலை இதற்குள் உள்ளது. இப்படி மறைப்பவர்கள் நம்மைச்சூழ்ந்து இருக்கிறார்கள், எதிரிகளிடமிருந்து நாம் போராடி நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும் என்ற எச்சரிக்கை. இது தமிழகத்தில் அத்தனை மேடைகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஒரு கூப்பாடு. எதிரிகளிடம் ஜாக்ரதையாக இருக்கவேண்டும், நம் மண்ணை திருடுகிறார்கள், நம் பண்பாட்டை அழிக்கிறார்கள், நம் பெண்களைக் கொண்டுசெல்கிறார்கள்… இந்தியாவிலேயே வேறெந்த பகுதியிலும் இந்தக் கூப்பாடு இப்படி எங்கும் நிறைந்து ஒலிப்பதில்லை

நம் குறைகளை, பிரச்சினைகளை பேசுபவர்களை நாம் கவனிக்கமாட்டோம். ஆனால் நம்மை எதிரிகள் அழிக்கவிருக்கிறார்கள் என்றால் ஆமாம் என்போம். அந்த எதிரி இலுமினாட்டியாக இருக்கலாம். வடவராக இருக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியமாக இருக்கலாம். ஐ.எஸ்.ஐ.எஸ் ஆக இருக்கலாம். செவ்வாய்கிரகத்தவராகவே இருக்கலாம். சொன்னால் அப்படியே கவ்வி தலைமேல் சூடிக்கொள்வோம். மாற்று மருத்துவர்கள், இயற்கைவேளாண்மையாளர்கள், சூழியல்போராளிகள் அத்தனைபேரும் இதைத்தான் சொல்கிறார்கள்

இதை ஒருவகை பழங்குடி மனநிலை என்று சொல்லலாம். வரலாற்றை, உலகச்சூழலை கொஞ்சம் கூட அறிந்து வைக்காமல் ஒரு நண்டுவளைக்குள் வாழ்வதிலிருந்து உருவாகும் புரிதல் இது. சற்றேனும் பொதுநாகரீகமும் வாசிப்பறிவும் கொண்ட ஒரு சமூகம் இத்தகைய பிரமைகளைக் கொண்டிராது. குறைந்தபட்சம் இத்தகைய அசட்டுத்தனங்களுக்கு அறிவியக்கத்திலிருந்தாவது எதிர்ப்பு எழும். இங்கே அறிவியக்கம் என்பதே இந்தக் கேவலம்தான்.

மேலே சொன்ன மனநிலையின் இன்னொரு பகுதிதான் ‘நாம் ரொம்ப ஒசத்தி’ என்ற நம்பிக்கை. நம் இனம் தூயது, நம் மொழிதான் பழையது, நம் இலக்கியங்கள்தான் உயர்ந்தவை, நம்மிடம் மட்டுமே மருத்துவமும் கலையும் உள்ளது, நம்மைப்போல் எவருமே இல்லை… இந்தப் பிலாக்காணங்களை கேட்டுக்கேட்டு நம் தலைமுறைகள் வளர்ந்து மண்ணாந்தைகளாக நின்றுகொண்டிருக்கின்றன. மனம்விரிந்து வெளியே உள்ள எதையுமே படிக்கவும் தெரிந்துகொள்ளவும் திராணியற்றவர்களாக ஆகியிருக்கிறார்கள்.

சரி, நாமே சொல்லிக்கொள்ளும் நமது பெருமைகளை எல்லாம் இப்போது நாம் கற்றுக்கொண்டிருக்கிறோமா? பேணிக்கொள்கிறோமா? தமிழின் இலக்கண இலக்கியங்களை தெரிந்த எத்தனைபேர் இங்குள்ளனர்? தமிழரின் கலைச்செல்வங்கள் எந்த லட்சணத்தில் பேணப்படுகின்றன? தமிழரின் கலையும் அறிவும் இன்று கற்கப்படுகின்றனவா? அதற்கு ஆளே இல்லை. ஏனென்றால் நாம் இதையெல்லாம் பேசுவோம், ஆனால் நம்ப மாட்டோம். நமக்கு பிழைக்கும் வழி நன்றாகவே தெரியும். நமக்குத்தேவை வெற்றுப்பீற்றல். அதற்குரிய சில பொட்டுபொடி செய்திகள், அதற்குத்தான் வாட்ஸப் வரலாறு

இந்தியச் சுதந்திரப்போராட்ட வரலாறு எல்லா தரப்பிலிருந்தும் எழுதப்பட்டுள்ளது. ராஜாஜி எழுதியிருக்கிறார். தமிழர்கள் பலர் எழுதியிருக்கிறார்கள். எல்லாருமே மோசடியாளர்கள் என்று நம்ப எவ்வளவு டன் அறியாமை தேவை. ஆதீன வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன . அவற்றிலும் இந்த அதிகாரக் கைமாற்றக்கதை இல்லை.  சுதந்திரம் எப்படி சட்டபூர்வமாக கைமாறப்பட்டது என்பதை சும்மா கூகிள் செய்தாலே அறியமுடியுமே. இந்தத் தகவல்யுகத்தில்கூட இந்த வாட்ஸப் வரலாறு சுற்றுகிறது என்றால் நம் அசட்டுத்தனத்தின் எல்லைதான் என்ன?இந்தியாவில் எத்தனை மடங்கள் உள்ளன, எவ்வளவு மதநிறுவனங்கள் உள்ளன, ஒவ்வொன்றுக்கும் உரிய இடம் என்ன என்றாவது இதைச் சொல்பவர்கள் எண்ணியிருப்பார்களா?

வரலாற்றில் தெளிவாகவே உள்ளது. 1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்தியாவின் வெவ்வேறு மடங்களைச் சார்ந்த மடாதிபதிகளும் அவர்களின் பிரதிநிதிகளும்  நேருவைச் சந்தித்து வாழ்த்து அளித்து தங்கள் மடங்களின் சம்பிரதாயங்களின்படி அவரை ஏற்றுக்கொள்ளும் சடங்குகள் நடந்தன. அதன்பின்னரே நேரு அந்த புகழ்பெற்ற ‘விதியுடனான ஒப்பந்தம்’ உரைக்காக வானொலிக்குச் சென்றார்.

இது செய்திகளின் யுகம், எல்லாமே எளிதில் கிடைக்கும் காலம். கொஞ்சம் படிப்போம். கொஞ்சம் தர்க்கபூர்வமாகச் சிந்திப்போம். நம்மைநாமே முட்டாள்களாக ஆக்கிக் கொள்ளாமலிருப்போம்.

ஆனால் ஒன்றுண்டு, இந்த புகைப்படம் எனக்குக் காட்டும் ஒரு வரலாற்றுத் தருணம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இங்கிருந்து சைவத்தின் வாழ்த்தும் சென்றிருக்கிறது. அந்த மாபெரும் தருணத்தில் தமிழகமும் உடனிருந்திருக்கிறது. அது எனக்குப் பெருமையளிப்பதுதான்

ஜெ

https://dheivamurasu.org/sambanthar-kolarupathigam-indiaindependence/ 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் மே 9 2019

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2023 11:36

இலக்கியத்தில் கொள்பவை

அன்புள்ள ஜெ

“வாழ்வெனும் மாபெரும் புதிரான சதுரங்க ஆட்டத்தில் விழும் பகடைகளின் நிகழ்தகவுகள் நம் கணிப்பிற்கு அப்பாற்பட்டவை, எண்ண ஒண்ணாதவை, எண்ணில் அடங்காதவை. ஆனாலும் பெருநியதி என்னிடம் கருணையோடிருந்தது, கருணையோடிருக்கிறது, கருணையோடிருக்கும் ஆம் அது அவ்வாறேயிருக்கும்”

தீவிர மனச்சிதறல்களின் உச்சமாக விபத்தில் சிக்கி முகத்தில் அறுவை சிகிச்சை செய்த அவ்விரவு தற்கொலை எண்ணங்கள் தலைதூக்க கண்டிப்பாக எதாவதொரு வழி கிடைக்குமென அழுத்தமாக அவ்விரவை கடந்து பின் தேட ஆரம்பித்தபோது உங்களை அடைந்தேன். உங்கள் படைப்பின் ஒரு பக்கத்தில் மேலிருந்த அவ்வரிகளின் தரிசனம் கிடைக்கப்பெற்றது. அவ்வரிகள் என்னை தூய்மையாக்கி எழச் செய்தன. அங்கிருந்து ஒவ்வொரு நாளும் உங்கள் படைப்புகளில் நீங்கள் எனக்காக ஏதேனும் பக்கங்களை வைத்திருப்பீர்கள் அதை பற்றிக்கொண்டு எப்படியாவது நான் இங்கு பூரணமானதொரு வாழ்வை வாழ்ந்து விடுவேன் என தீவிரமாக வாசித்து கொண்டிருக்கிறேன்.

நான் ஒவ்வொரு நாளும் புதிய உயிராக பிறந்து இறந்து மீண்டும் அடுத்த நாளின் ஒளியில் பூவென பூக்கிறேன். இவையனைத்தும் நீங்கள் செய்ததே, மாயக் கிணறுகளிலும் வயல் புதையல்களிலும் நம்பிக்கை வந்துள்ளது, இனி சிறுமைகளுக்கு இடமேயில்லை உச்சம் அடைவதே ஒரே நோக்கமென பயணித்துக் கொண்டு பயணத்தை கணத்துக்கு கணம் ரசித்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தந்தையின் ஞானம் கிடைக்காதது குறித்து எத்தனையோ  இரவுகளில் அழது தீர்த்திருக்கிறேன், அக்குறையும் நீங்கியது உங்களால். இவையனைத்திற்கும் நன்றி நன்றி ஆசிரியரே. இனிய அகவை தின வாழ்த்துகள்

சக்திவாசா

*

அன்புள்ள சக்திவாசா

இங்கு ஒவ்வொரு கணமும் வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை. அது வெறுமே திகழ்வது மட்டுமல்ல. இங்குள்ள ஒவ்வொருவரும் செயலாற்றவே வந்துள்ளனர். செயல்வழியாகவே நிகழ்கின்றனர், வளர்கின்றனர், கடந்துசெல்கிறனர். செயல்களம் ஒன்றை கண்டடைக.

ஜெ

*

அன்புள்ள ஆசிரியருக்கு

2011 முதல் என நினைக்கிறேன், வழக்கம் போல அனல் காற்று இணையதளத்தின் ஊடே வாசிக்க (ஒரு குட்டி நோக்கியா கீ-பேட் ஃபோனில்) வாசித்து உங்கள் தளத்திற்கு வந்திருந்தேன். பின் இருக்கும் எல்லா கட்டுரைகளையும் வாசித்துக்கொண்டே இருந்தேன். மூன்று ஆண்டுகள் இருக்கலாம். என் வாசிப்பு திறன் மிக குறைவாகவே இருந்தது. உள்வாங்கும் திறனும் அவ்வளவு தான் இருந்திருக்க கூடும். பின் உங்கள் நூல்கள் ஒவ்வொன்றாக படிக்கத் தொடங்கி கொற்றவை மற்றும் வெள்ளையானை தவிர அனைத்து புனைவுகளும் படித்திருப்பேன். மிக சமீபமாக உங்களை படிப்பதை முற்றிலும் விட்டு விட்டேன். கிட்டத்தட்ட வெறுக்கிறேன் என சொல்லலாம். காரணம் என் பலவீனம் தான். முதல் முறை கோமல் சுவாமிநாதன் (அறம் தொகுப்பில்) உள்ள சிறுகதையை படித்து எனக்கு அப்போது கிட்னி ஸ்டோன் இருந்தது (குஜராத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்) நோயை பற்றிய பெரும் கற்பனைகளை நானே உருவாக்கி அந்த வேலையை விட்டு வர முயன்றேன்.

பெரிய திறமைகள் ஏதும் இல்லாமல் சிறிதளவு வாசிப்பு மட்டும் வைத்துக்கொண்டு மலையளவு ஈகோவை வளர்த்து வைத்துக்கொண்டு இருந்திருக்கிறேன். அதை உணர பத்தாண்டுகள் ஆகியிருக்கிறது. காரணத்தை ஆராய்ந்த போது உங்கள் ஆளுமையின் செல்வாக்கு என்னில் குறுகலான வாசிப்பினால் நிகழ்ந்து இருக்கலாம் என தோன்றியது. (உங்கள் ஆபாரமான வாசிப்பும் உழைப்பும் திறனும் இன்றி வெறும், (உங்கள் சொற்களில் சொல்வதென்றால் அகங்காரம் மட்டும்) பெரும் லௌகீக சிக்கலை எனக்கு  தோற்றுவித்துகொண்டு இருந்திருக்கிறது. இவையெல்லாம் என்னுடைய தவறுகள் தான். என்னுடைய பலவீனம் தான். உணர வெகு நாட்கள் ஆகிவிட்டது. நோயை பற்றிய என் பயமும், வெவ்வேறு ஆளுமை சிதைவுகளும் நானே உருவாக்கி கொண்டது தான் என்றாலும் என் பெர்சனல் வாழ்வு பெரும் வலிகள் கொண்டதாக நானே மாற்றிக்கொண்டேன்.

விளைவாகவே 40 களின் அருகில் உள்ள நான் முடிவெடுத்தேன் “இனி வாசிப்பே வேண்டாம், மிச்சம் உள்ள வாழ்வை எளிமையாக ஈகோ இன்றி எல்லோரையும் போல வாழ்ந்து கடப்போம்”. இந்த கடிதம் தனிமையில் உங்கள் பிறந்த நாள் என்பதால் எழுதுகிறேன். நீங்கள் என்னுள் வெறும் ஈகோவை மட்டும் விதைக்கவில்லை, உங்களிடம் கற்றுக்கொண்டதை விவரிக்க இக்கடிதத்தில் இயலவில்லை. இந்த உணர்தல் நிகழ்ந்த தருணத்தையும் கூறி முடித்துக்கொள்கிறேன்.

சமீபத்தில் அருணாச்சல பிரதேச பயணத்தில் ஓரிடத்தில் சொல்லியிருப்பீர்கள் “நான் நன்றாக உறங்கும் காரணத்தால் தான் இந்த வயதிலும் நன்றாக ஓட முடிகிறது” அதை எனக்கே உரிய பலவீனத்தால் (நான் இரவு ஷிப்ட் பார்ப்பவன், கூடவே மன ஒருமையும், அமைதியும் இல்லாதவன், அதன் காரணம் போதுமான உறக்கம் இல்லாதவன்) நோயைப்பற்றிய ஆரோக்கியத்தை பற்றிய பயத்தை ஊதி பெருக்கி கொண்டேன். அதை உணர்ந்து மீள இரண்டு மாதம் ஆகியது.

அதன் பின் தான் தீர்மானித்தேன் இலக்கியம் வாசிப்பு மிக எளிதாக என்னில் செல்வாக்கை நிகழ்த்துகிறது எனவே இவையேதும் வேண்டாம், அமைதியான எளிமையான வாழ்வு, நல்ல உறக்கம் இவையே அவசியம்

உங்களுக்கு சில முறை எழுதியிருக்கிறேன், அவை உங்கள் ஸ்பெமில் இருக்கக்கூடும். இக்கடிதமும் அவ்வாறே ஆகும் என விழைகிறேன்.

*

அன்புள்ள அ

எனக்கு இரண்டு வகை கடிதங்கள் வருகின்றன. என் எழுத்துக்களில் இருந்து ஊக்கமும் நம்பிக்கையும் பெற்றவர்கள் எழுதுவது. இன்னொரு வகை என் எழுத்துக்களில் இருந்து தாழ்வுணர்ச்சியை, அல்லது பொய்யான நம்பிக்கையை அடைந்தவர்கள் எழுதுவது. இரண்டாம் வகை கடிதங்கள், நீங்கள் எழுதிய இக்கடிதம்போல, ஆண்டுக்கு ஒன்றிரண்டு உண்டு.

இவ்விரண்டும் அல்லாத ஒருவகை உண்டு, நான் முன்வைக்கும் அறிவியக்கப்பரப்பைக் காண்கையில் அச்சம் கொண்டு, உடனே ஆணவம் சீண்டப்பட்டு எழுதுபவர்கள்.

இவை மூன்றுக்குமே நான் பொறுப்பல்ல. நான் வழிகாட்டல்களை எழுதுவதில்லை. ஆலோசனை சொல்வதுமில்லை. நான் எழுதுவது என் வாழ்க்கையை, என் அனுபவ உலகை. நான் வாழும் அறிவுலகை முன்வைக்கிறேன். அதிலிருந்து ஒவ்வொருவரும் அவரவர் இயல்புக்கும் உளநிலைக்கும் ஏற்ப எடுத்துக்கொள்கிறார்கள்.

இதை இத்தனை தீவிரமாக முன்வைப்பதற்கான காரணம் ஒன்றே. தமிழ்ச்சூழலில் இப்படி இலக்கியம், கலை, தத்துவம் சார்ந்த ஓர் உலகம் வேறெங்கும் முன்வைக்கப்படுவதில்லை. எல்லா இடத்திலும் இலக்கியம் என்றபெயரில் முன்வைக்கப்படுவது உண்மையில் அரசியல்தான். அரசியலுக்கு ஆள் திரட்டுவதற்கு இலக்கியம் கருவியாக்கப்படுகிறது (அவர்களுக்கு மற்றவர்களும் அதைத்தான் செய்கிறார்கள் என்று மட்டுமே எண்ணவும் முடியும்)

தமிழ்ச்சூழலில் ஓர் இளைஞன் இயல்பாக இலக்கியத்தை, கலையை, தத்துவத்தை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. கல்விக்கூடங்களில் ஓர் எழுத்தாளர், ஒரு நூல் பெயர் உச்சரிக்கப்படுவது அரிதினும் அரிது. வெளியே பொதுச்சூழலில் பிழைப்புக்கு அப்பால், கேளிக்கைக்கு அப்பால் எதுவுமே பேசப்படாது. ஆகவே முப்பது வயது வரை இலக்கியம், கலை, தத்துவம் சார்ந்து ஓர் உலகம் இருக்கிறதென்பதையே அறியாமல் வாழ்ந்து அதன்பின் அறிமுகம் கிடைப்பவர்களே இங்கே மிகுதி.

அவர்களுக்கு ஓர் அறிவியக்க அறிமுகத்தை அளிப்பதே என் நோக்கம். இணையம் ஒரு பெரிய வசதி. இது இலவசம். பகிர எளிது. ஆகவே எப்படியும் ஆர்வமுள்ள ஒருவரை ஒருமுறையேனும் சென்று தொட்டுவிடும். ஆயிரத்தில் ஒருவருக்கே மெய்யான ஆர்வமிருக்கும். எஞ்சியவர்களுக்கு ஆர்வமிருக்காது. சிலருக்கு எளிய வம்புகள் மட்டுமே கவர்வனவாக இருக்கும்.

ஆகவே இணையத்தில் ஒரு தொடர் உரையாடலாக இதை இருபதாண்டுகளாக நிகழ்த்தி வருகிறேன். அது பல ஆயிரம் பேருக்கு அறிமுகமாகப் பயன்பட்டுமுள்ளது. இதை ஒருவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பது அவருடைய சொந்தப்பிரச்சினை.

உதாரணமாக, அதீத தாழ்வுணர்ச்சி கொண்ட ஒருவர் இந்த தளத்தின் வழியாக அறிவியக்கம் சார்ந்த அறிமுகம் பெறும்போது மலைப்புற்று, தாழ்வுணர்ச்சி மிகுந்து, இது தனக்கு அப்பாலுள்ள ஓர் உலகம் என நினைக்கக்கூடும். ஆகவே இதை நிராகரிக்கும் மனநிலைக்கும் செல்லக்கூடும்.

அதேபோல எதுவும் பெரிதாக தெரியாமல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் வலம்வரும் ஓர் இளைஞர் இந்த சூழலுக்குள் நுழைந்து இங்கே அவருடைய உள்ளீடற்ற தன்னம்பிக்கைக்கு இடமே இல்லை, அது வெறும் அறிவின்மையாகவே பார்க்கப்படும் என அறிந்து சீண்டப்படலாம்.

இளைஞர்களில் சிலர், தங்கள் உலகியல் சோம்பலையோ செயலின்மையையோ நியாயப்படுத்திக் கொள்ள அறிவுஜீவிப் பாவனையை சூடிக்கொள்கிறார்கள். குடி முதலிய போதைகளுக்கு அடிமையானவர்களும் அறிவுஜீவியாக நடிப்பதுண்டு. அது வெறும் தப்பித்தல் அன்றி வேறேதுமல்ல. அவர்கள் சோம்பேறிகளும் போதையடிமைகளும் மட்டும்தானே அன்றி அறிவுஜீவிகள் அல்ல.

அறிவுசார்ந்த செயல்பாடுகள் சோம்பேறித்தனத்தால் இயல்வன அல்ல. தீவிரமான, அர்ப்பணிப்புள்ள தொடர் செயல்பாடுகள் வழியாக அமைபவை. மனிதவரலாறு முழுக்க அபப்டித்தான் இருந்துள்ளது, இனியும் அப்படித்தான். அறிவைத்தேடி பல்லாயிரம் காதம் நடந்து தேசங்களைக் கடந்து சென்றவர்களின் வரலாறாலானது மானுட அறிவியக்கம்.

இன்றைய அறிவியக்கம் என்பது மிகமிக சிக்கலானதும் உலகம் தழுவியதுமாகும். அது விழிப்புற்ற மூளையால் மட்டுமே சற்றேனும் தொடரச் சாத்தியமானது. எந்தவகையான உடல்சார்ந்த போதையும் அறிவியக்கத்திற்கு தகுதியற்றவர்களாக நம்மை ஆக்கிவிடும். உணவின்மீது கொள்ளும்போதைகூட. நவீன மருந்துகள் கூட.

போதையடிமைகள் தொடர்ச்சியாக, பல ஆண்டுகள் உழைத்து பயில முடியாது. கற்பனவற்றை நினைவில் நிறுத்தி தொடர்ச்சியை பேணிக்கொண்டு ஓர் அகக்கட்டுமானத்தை உருவாக்கிக்கொள்ளவும் முடியாது. அவர்களுடைய அறிவு உதிரிவரிகளின், உதிரிக்கருத்துக்களின் சிதைவுற்ற தொகுப்பாகவே இருக்கும். எல்லா வகையிலும் பயனற்றது அது. பொருளற்ற ஒரு சிடுக்கு. அறிவுப் பாவனைக்காக மட்டுமே உதவுவது.

நான் பேசவிரும்புவது அறிவுத்தேடல் கொண்ட, அறிவுக்காக தன்னை அளிக்கும் மனநிலைகொண்ட, அதற்கான அறிவுத்தகுதி கொண்ட ஒரு சாராரிடம் மட்டுமே. அவர்களிடம் அறிவியக்கத்தை அறிமுகம் செய்கிறேன். அதில் செயல்பட வழிகாட்டுகிறேன்.  என் அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

அடிப்படை அறிவுத்தகுதி அற்ற ஒருவர் என்னை தற்செயலாகக் கண்டடைந்து வாசிக்கக்கூடும். அடிப்படையில் சோம்பல் கொண்ட ஒருவர், அல்லது போதையால் மழுங்கிப்போன ஒருவர் என்னை வாசிக்கக்கூடும். அவர்கள் நான் காட்டும் அறிவுலகைக் கண்டு அஞ்சலாம், எரிச்சல் கொள்ளலாம். நான் என்ன செய்யமுடியும்? அவர்களையும் கருத்தில் கொண்டு அறிவுலகை முன்வைக்கமுடியுமா என்ன? அது சாத்தியமா?

அவர்கள் இது அவர்களுக்குரிய உலகமல்ல எனக்கண்டு விலகிச் செல்வதே சிறந்த வழி. அவர்கள் வாழ்வதற்குரிய பலநூறு களங்கள் இங்குள்ளன. மானுடரில் மிகமிகச் சிறிய அளவினரே அறிவியக்கத்தில் செயல்படுபவர்கள். என்றும் அப்படித்தான். எஞ்சியோர் அவர்களுக்கு வாய்த்த, அவர்களுக்கு உகந்த வாழ்க்கையை தேடி அடைந்து வாழவேண்டியதுதான்.

அந்த தகுதியின்மை காரணமாக அவர்கள் அறிவியக்கம் மீது ஒவ்வாமை கொண்டிருப்பார்கள் என்றால், அறிவியக்கத்தை வசைபாடுவதை செய்துகொண்டிருப்பார்கள் என்றால் அது அவர்களுக்கே தீங்கானது. அந்த பொருமலால் அறிவியக்கத்திற்கு ஒன்றுமில்லை. அறிவியக்கம் அதை பொருட்படுத்தவே போவதில்லை. அது அறிவியக்கத்தினர் கண்களுக்குப் படவும் படாது. ஆனால் பொருமுபவர் தன் உலகியல் வாழ்க்கையையும் இழப்பார். அங்கு சென்றும் அவரால் நிம்மதியாக இருக்கமுடியாது.

நான் எப்போதும் முற்றிலும் நடைமுறை சார்ந்த ஒரு வழியையே சுட்டிக் காட்டுகிறேன். எவருக்கும் அவருடைய உலகியலை துறக்க அல்லது உதாசீனம் செய்ய வழிகாட்டுவதில்லை. உலகியல் வாழ்க்கையில் குறைந்த அளவுக்கேனும் ஓர் அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளவே அறிவுறுத்துகிறேன். அந்த அடித்தளமே கலையிலக்கியம், தத்துவம் ஆகிய தளங்களில் சுதந்திரமாகச் செயல்பட அவசியமானது என வலியுறுத்துகிறேன். கலைக்காக உலகியலை துறப்பவர் ஒரு கட்டத்தில் உலகியலுக்காக கலையைத் துறக்கவேண்டியிருக்கும் என்பதே என் வரி.

மெய்யான அறிவியக்க ஆர்வம் கொண்டவர்களுக்கு உலகியல் வேலை பெரிய சிக்கலாக இருக்க வாய்ப்பில்லை. அவர்களால் வாழ்க்கைக்காக ஏதேனும் ஒரு வேலையை மிக எளிதாகச் செய்ய முடியும். டி.எஸ்.எலியர் காப்பீட்டுத்துறை குமாஸ்தாவாகப் பணி புரிந்தார். புதுமைப்பித்தன் பிழைதிருத்துநராக இருந்தார். சுந்தர ராமசாமி துணிக்கடை வைத்திருந்தார். அதெல்லாம் அவர்களின் துறை அல்ல. அவர்களின் பணிகள் இருந்தது அதற்கப்பால் அவர்களின் அகத்தில்தான்.

அவர்களுக்கு குமாஸ்தாவோ வணிகரோ அல்ல தாங்கள் என தெரியும். தங்கள் துறை என்ன, அதில் தங்கள் சாதனை என்ன என்று தெரியும். ஆகவே உலகியல் தளத்தில் தேவையான அளவு உழைத்தபடி தங்கள் அகவுலகை , அறிவுலகை சுதந்திரமாகவும் அந்தரங்கமாகவும் வைத்துக்கொள்ள அவர்களால் முடியும்.நானும் அப்படி வாழ்ந்தேன். அப்படித்தான் இருக்கிறேன்

ஆகவே ஒன்றுமே செய்யாமல் புறச்சூழலில், தொழிலில் முட்டிக்கொண்டிருப்பவர்கள் இயல்பாகவே தொழிலுக்கும் புறவாழ்வுக்கும் தேவையான தகுதிகள் அற்ற எளிய மனிதர்கள் மட்டுமே. அறிவுத்தகுதி, உணர்வுத்தகுதி என இரண்டு உண்டு. அறிவுத்தகுதி கொண்ட சிலர் உணர்வுத்தகுதி அற்றவர்களாக இருக்ககூடும். அவர்கள் தங்கள் தகுதியின்மையை மறைக்க இலக்கியத்தையோ தத்துவத்தையோ குற்றம்சாட்டுவார்கள்.

கலையிலக்கிய தத்துவச் செயல்பாட்டை பலவீனர்களுக்காக நான் முன்வைக்கவில்லை. தன்னை ஆளவும், தன்னைத்தானே செலுத்திக்கொள்ளவும் தகுதியற்றவர்களுக்காக பரிந்துரைக்கவுமில்லை. அவர்களுக்கான இடம் அல்ல இது. உடல்நலமில்லாதவனை விளையாட்டுப்போட்டிக்கு கொண்டுசெல்வதுபோன்றது உளவல்லமை இல்லாதவர்கள் கலையிலக்கியம், தத்துவம் ஆகியவற்றுக்குள் நுழைவது. அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். அத்தகையோரிடம் இது உங்கள் இடமல்ல என்றே சொல்வேன்.

கலையிலக்கியமும் தத்துவமும் அடங்கிய அறிவியக்கம் என்பது அறிவும் அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கான களம். இப்படி ஒன்று அத்தகுதி கொண்டவர்களுக்கு தெரியாமல் இருக்கலாகாது என்பதனாலேயே இந்த இணையதளத்தில் அவற்றை தொடர்ந்து முன்வைக்கிறேன்.

ஒருவர் தன்னுடைய சொந்த பலவீனங்கள், தவறுகள் ஆகியவற்றை நியாயப்படுத்திக்கொள்ள இலக்கியத்தை அல்லது கலையை அல்லது தத்துவத்தை சுட்டிக்காட்டுவதுபோல அபத்தமான பிழை வேறில்லை. தகுதியற்றவர்கள் விலகிக்கொள்ள என்ன தடை? அறிவியக்கம் உங்களுக்கு ஒவ்வாமை அளிக்கிறதென்றால் ஏன் மீண்டும் இதை எழுதுகிறீர்கள்?

தமிழகத்தில் இத்தகையோர் உருவாக்கும் சிக்கல் சாதாரணமல்ல. உண்மையான சாதனையாளர்கள் நிமிர்வுடன், நம்பிக்கையுடன் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்கள். எதையுமே சாதிக்காமல், எதையுமே கற்றுக்கொள்ளவும் செய்யாமல் , தங்கள் சொந்த சிக்கல்களை பெரிதாக்கிக்கொண்டு, தோல்விகளை வலிந்து ஏற்றுக்கொண்டு, அதற்காக அறிவுச்செயல்பாட்டை பழிசொல்பவர்கள் எங்கும் சென்று தங்கள் வீழ்ச்சிக்கு அறிவுச்செயல்பாடே காரணம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அதிநுண்ணுணர்வு கொண்ட கவிஞரான தேவதச்சன் நகைக்கடையாளராக வெற்றிகரமாக திகழ்வார். அதே ஊரில் ஒருவன் குடித்துவிட்டு சாலையில் கிடப்பான். நாலைந்து கவிதைநூல் படித்து அப்படி ஆகிவிட்டதாகச் சொல்வான். தேவதச்சனை எவரும் சுட்டிக்காட்டமாட்டார்கள். அடுத்த தலைமுறைக்கு அந்தக்குடிகாரனை சுட்டிக்காட்டி அவர்களை அறிவியக்கம் பக்கமே வராமல் தடுப்பார்கள்.

நான் உங்கள் கடிதங்களை ஏன் தவிர்த்தேன் என்பதை உணர்ந்திருப்பீர்கள். உங்களுடையது சோம்பல் மற்றும் உளத்தயக்கம்.  அதற்கு ஒரு சாக்கு இலக்கியம் அல்லது என் எழுத்து. என் எழுத்தில் இருந்து எந்த நல்ல விஷயத்தையும் பெற்றுக்கொள்ளாமல், எவ்வகையிலும் தன்னை வளர்த்துக்கொள்ளவோ மாற்றிக்கொள்ளவோ செய்யாமல் இலக்கியத்தை வாசித்தாலென்ன பயன்? அதன்பின் உங்கள் சிக்கல்களுக்கு இலக்கியத்தை பழிசொல்லி கடிதம் வேறு. இதை நூறு இடங்களில் சொல்லிச் சொல்லி நீங்களே நம்ப ஆரம்பித்திருப்பீர்கள்.

எனக்கு உண்மையான சிக்கல்களை அறிவதில், விவாதிப்பதில் ஈடுபாடுண்டு. தங்கள் சோம்பல் அல்லது பிற சிக்கல்களுக்கு செய்துகொள்ளும் பாவனைகளுடன் விவாதிப்பதில் ஆர்வமே இல்லை. அந்த முக்காட்டை கிழிக்கவே முடியாது

ஜெ

பிகு: உங்கள் முடிவு மிகச்சிறந்தது. உங்களுக்கு மிக உகந்தது. அவ்வழியே தொடர்க. அதற்கு இந்தவகை கடிதங்கள் எழுதி அறிவித்துக்கொள்ளுவதுகூட தேவையற்றதே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2023 11:35

அருட்செல்வப்பேரரசன்

அருட்செல்வப்பேரரசன் –மகாபாரதத்தை தமிழாக்கம் செய்துகொண்டிருப்பவர்

தமிழில் முழுமகாபாரதம் சம்ஸ்கிருதத்தில் இருந்து 1948-ல் தி.ஈ.ஸ்ரீனிவாசாச்சாரியாரால் மொழியாக்கம் செய்யப்பட்டு ம.வீ.இராமானுஜாச்சாரியாரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது கும்பகோணம் பதிப்பு எனப்படுகிறது. வேறு எவ்வகையிலும் மகாபாரதத்தின் முழுவடிவம் தமிழில் வெளிவரவில்லை. அருட்செல்வப்பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் அதன்பின் வெளிவந்த முழுமையான வடிவம். ஆங்கிலத்தில் இருந்து சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்யப்பட்டது. இணையத்தில் இருப்பதனால் ஆய்வாளர்களுக்கு உதவியானது.

அருட்செல்வப்பேரரசன் அருட்செல்வப்பேரரசன் அருட்செல்வப்பேரரசன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2023 11:34

குருதிப்புனல் வாசிப்பு

இந்திரா பார்த்தசாரதி

குருதிப்புனல் வாங்க

அன்புள்ள ஜெ,

வரலாற்றில் கொடூரங்களுக்கு பஞ்சம் எதுவும் இல்லை. தர்மம் என்றும் அறம் என்றும் மானுடம் தனக்கு விதித்துக் கொண்ட உயர் லட்சியங்களுக்கும் அதன் பேராசை மற்றும் சுயநலத்திற்கும் இடையே நிகழும் நிரந்தர போராட்டத்தின் வழியே வரலாறு செல்கிறது. ஒவ்வொரு நிலையிலும் நியாயமும் தர்மமும் வெல்கிறது என்றாலும் அந்த வெற்றிக்கு ஈடாக அது அளிக்கும் விலை அதிகம்.

சுதந்திர இந்தியாவில் அடித்தட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒவ்வொன்றும் குலை நடுங்க வைப்பவை. 1968ல் தஞ்சாவூரில் கீழ்வெண்மணி கிராமத்தில் பெண்களும் குழந்தைகளுமாக 44 பேர் நிலவுடைமையாளர்களால் குடிசைக்குள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். விவசாய கூலிகளான தலித்துகள் கம்யூனிஸ்ட்கள் ஆதரவுடன் தங்களது கூலியை உயர்த்திக் கேட்டதே இந்த கொடூரத்திற்கான முகாந்திரம். அன்றைய நெல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவரான கோபாலகிருஷ்ண நாயுடு முதன்மை குற்றவாளி.இந்த நிகழ்விற்கு மிகச் சில நாட்கள் முன்பு நாயுடுவின் ஆட்களில் ஒருவர் தொழிலாளிகளுடனான கைக்கலப்பில் கொல்லப்பட்டார். இந்த இரு கொலை வழக்குகளும் இணையாக நடத்தப்பட்டு 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட முதல் வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாமல் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மாறாக ஒருவர் இறந்த அந்த இன்னொரு வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது . மற்றவர்களுக்கு சிறு சிறு தண்டனைகள் அளிக்கப்பட்டன.

இந்த பெரும் தீய நிகழ்வை மையப்படுத்தி இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதப்பட்ட நாவல் குருதிப்புனல். இரு கல்வி கற்ற இளைஞர்களின் பார்வையில் இந்த நிகழ்வு சொல்லப்படுகிறது.  

டெல்லியில் கல்வி கற்ற சிவா தன் சக மாணவனும் தோழனுமான கோபாலை தேடி அவன் வசிக்கும் கிராமத்திற்கு வருகிறான். அங்கு ஆசிரியரும் கம்யூனிஸ்டுமான ராமையாவின் வீட்டில் தங்கியிருக்கும் கோபாலுடனே சேர்ந்து தங்குகிறான். ஏற்கனவே கூலி உயர்வு சம்பந்தமாக விவசாய கூலிகளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பண்ணையார்களுக்கும் இடையே பிரச்சினை கனன்று கொண்டிருக்கிறது. கோபால் தினமும் உணவருந்தும் வடிவேலுடைய சிறிய கடையை காலி செய்ய சொல்லி மிரட்டும் நிலவுடைமையாளர்களின் தலைவரான கண்ணையா நாயுடுவை ,அதுகுறித்து பேசுவதற்காக ராமையாவின் எச்சரிக்கையையும் மீறி நாயுடுவின் வீட்டிற்கு செல்லும் கோபால், திரும்பி வரவில்லை. ராமையாவும் சிவாவும் தமது சகாக்களுடன் நாயுடுவின் வீட்டிற்கு சென்று விசாரிக்கையில் நாயுடு ஊரிலேயே இல்லை என்றும் கோபால் அப்போதே திரும்பி சென்று விட்டதாகவும் அவரது வேலையாட்கள் சொல்கிறார்கள். ஆனால் கோபால் தலையில் பலமாக அடிபட்டு பாப்பாத்தி என்னும் இளம் விதவையின் வீட்டருகே கிடப்பதை பிறகு கண்டுபிடிக்கிறார்கள். அது போக பாப்பாத்தியும் வடிவேலுவும் காணாமல் போகிறார்கள். அவர்களை தேடும் கோபாலும் சிவாவும் ராமையாவும் எடுக்கும் முயற்சிகளும் அதற்கு நாயுடுவின் எதிர்வினையும் என அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இறுதியாக அந்த படுகொலைகளில் வந்து முடிகிறது.

கோபால், சிவா இருவரும் கல்வி கற்ற லட்சியவாதிகள். கோபால் சமூகவியலிலும் சிவா அறிவியலிலும் பட்டம் பெற்று டில்லியில் ஆசிரியராக பணிபுரிகின்றனர். கோபாலின் தந்தை நாயுடு , அருகிலிருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். ஒரே பிராமண பெண்னை காதலித்து அவளுடன் டெல்லிக்கு சென்றுவிடுகிறார். கோபால் திடீரென்று தனது வேலையை விட்டு விட்டு இந்த கிராமத்தில் வந்து தங்கியிருக்கிறான். இரண்டு வருடங்களாக அவனது கடிதங்களுக்காக காத்திருந்த சிவா தோன்றியபடி கிளம்பி வந்துவிடுகிறான்.

நாவல் முழுவதும் இருவரது நுட்பமான மனவோட்டங்களும் உரையாடல்களும் விரவிக் கிடக்கின்றன. மனித அகம் சமூக மதிப்புகளின் பாதிப்பினால் ஏற்படும் ஒன்று என்பது கோபாலின் கொள்கை. மனித மனம் அவ்வாறு இயந்திரத்தனமாக இயங்கக்கூடியது அல்ல என்பது சிவாவின் கொள்கை. அது நிகழ்வின் முன்னோட்டத்தை ஒட்டி எவ்வாறு மறுபரிசீலனை செய்கிறார்கள் என்பதும் நாவலில் சொல்லப்பட்டது. உண்மையில் இருவருமே வெளி உலகம் அறியாத அப்பாவி சாய்வு நாற்காலி அறிவுஜீவிகள். சோவியத் ரஷ்யாவின் புரட்சி என்னும் கருத்தாக்கம் இருவரையுமே கவர்ந்திருக்கிறது. கோபாலைத் தேடி பண்ணையார் நாயுடு வீட்டிற்கு கூட்டமாக செல்லும் போதும், பிறகு வேலைநிறுத்ததில் வெளியூர் விவசாய கூலிகளை இணைத்துக் கொள்வதற்காக செல்லும் போதும், இருவருக்குமே இந்த நிகழ்வுகளை ரஷ்யப் புரட்சியுடன் ஒப்பிட்டுக் கொள்ளவே தோன்றுகிறது. மற்ற ‘படித்த‘ கதாபாத்திரங்களான டாக்டர் கனகசபையும் வழக்கறிஞர் சுந்தரவதனமும் சற்றேனும் ‘தரையில் கால் பாவிய‘ மனிதாபிமானிகளாக இருக்கிறார்கள். மற்றபடி ராமையா, விவசாய கூலிகளான பழனி போன்றோர் கொந்தளிப்பான ஆளுமை கொண்டவர்கள். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் சிவாவும் குடிசையில் எரியும் உயிர்களை காப்பாற்ற முடியாமல் பார்க்கும் கோபாலும் உணர்வது சுதந்திரம் பெற்று 20 ஆண்டுகளாகியும் எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக காவல்துறையோ அரசோ இல்லை என்னும் உண்மை.

நாவலின் இன்னொரு மைய ஓட்டம் கதை மாந்தரின் காமமும் அதன் மீதான ஃபிராய்டிய அனுகுமுறையும்.

எதிர்நாயகனான கண்ணையா நாயுடுவின் ஆண்மையின்மை, அதை குத்திக் காட்டும் கோபாலால் சீண்டப்பட்டு வடிவேலுவையும் பாப்பாத்தியையும் நாயுடு பாலியல் சித்திரவதை செய்வது, இந்த இருவரையும் தேடும் கோபால், நாயுடுவின் ஆசை நாயகியான பங்கஜம் வீட்டிற்கு சென்று உறவு கொண்டாடி உளவு பார்த்து காப்பாற்றுவது , அங்கு நடக்கும் மோதலில் நாயுடுவின் ஆள் கொல்லப்படுவது என ஒரு தனி பாதை செல்கிறது. காமம் சார்ந்த இந்த ஆய்வுகள் நாவலின் இலக்கிய பெறுமதியை வெகுவாக குறைந்துவிடுகிறது. 

இ.பா பெரும்பாலும் உரையாடல் மூலமே நாவலை முன்னகர்த்துகிறார். பல வசனங்கள் மிக கூர்மையானவை. ஆனாலும் இன்றைய பார்வையில் நாவலில் கலையமைதியும் கவித்துவமும் கைகூடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  

மிகச் சமீபத்தில் ஊர்க்கிணறு புணரமைப்பு இயக்கத்தின் மதுமஞ்சரி  தான் கண்டுணர்ந்த சாதி ஏற்றத்தாழ்வு குறித்து பதிவிட்டிருந்தார். அதனையும் வேங்கைவயல் நிகழ்வையும் நினைத்துக் கொண்டேன்.

இ.ஆர்.சங்கரன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2023 11:31

கோவை சொல்முகம் – தேவிபாரதி

நண்பர்களுக்கு வணக்கம்.

நமது சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாவது இலக்கிய கருத்தரங்கு வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. அதில் எழுத்தாளர் திரு. தேவிபாரதி அவர்களின் முன்னிலையில் அவரது படைப்புகள் மீதான வாசிப்பனுபவங்கள் முன்வைக்கப்படும். இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்விற்கு வரவேற்கிறோம். ஆசிரியருடன் உரையாடி மகிழ வேண்டுகிறோம்.

நாள் : 28 மே, 2023, ஞாயிற்றுக்கிழமை,

நேரம் : காலை 10:00 – 2:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9 

தொடர்பிற்கு: 

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன் – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2023 11:31

செல்லும் வழிகள், கடிதங்கள்

புறப்பாடு வாங்க

ஜெ.

வணக்கம்,

என் பெயர் புஷ்பநாதன், பண்டசோழநல்லூர் கிராமம், புதுச்சேரி மாநிலம்… நான் உங்களை தொடர்ந்து வாசிப்பவன்…. நான் உங்களது ஒவ்வொரு நூலையும் வாசிக்கும்போதும் நீங்கள் எனக்கு வேறு வேறு நபராக தெரிகிறீர்கள்… அறம், உலோக மனிதன், ரப்பர், பின்தொடரும் நிழலின் குரல், இரவு, காடு என ஒவ்வொரு நூலிலும் எனக்கு வெவ்வேறு விதமான ஜெ தெரிகிறார்.நான் உங்களை விரும்பி வாசிப்பதற்கு நீங்கள் கையாளும் உவமைகள்தான் பெரும் காரணம்…

நான் சமகால எழுத்தாளர்களின் நூல்களையும் வாசிக்கிறேன். ஆனால் அவர்களைவிட ஒருபடி மேலாக உங்களை எண்ணத் தோன்றுவதற்குக் காரணம் நீங்கள் கையாளும் உவமை தான்… மற்றொன்று எழுத்தில் உள்ள சத்தியம்…புறப்பாட்டிலும் அத்தகைய உவமைகள் நிறைந்திருக்கிறது… எடுத்துக்காடட்டாக ஒன்று : ஜானின் தங்கையின் கண்களும் உங்களின் கண்களும் சந்திக்கையில் ஒரு உவமையைக் கையாண்ட இருக்கிறீர்கள்.. “இரு கூரிய கத்தி முனைகள் நுனியில் மட்டும் உரசிக்கொள்வது போல” என்று… எனக்கு அதிர்ச்சி இப்படியெல்லாம் கூட ஒரு மனிதனால் சிந்திக்க முடியுமா என்று… பின்பு எருமை மாட்டின் நாவை வாழைப்பூ வின் இதழாக உருவகப் படுத்தியிந்தீர்கள்.. எனக்கு ஆச்சரியம்.. ஒரு மனிதனால் எப்படி எல்லாவற்றையும் நுணுக்கமாக அணுக முடிகிறது என்ற கேள்வி என்னைச்சுற்றி வந்த படியே இருக்கிறது…

கடல் நிகழ்ந்து கொண்டே இருந்தது என்று ஒரு வரியை எழுதிய இருந்தீர்கள்… அதைப் படித்ததும் எனக்குள்ளிருந்து சிறுகவிதைபோல் ஒன்று தோன்றியது…

“என்னுள் படைப்பு நிகந்துகொண்டே இருக்கிறது.. நொடிப் பொழுதில் நிகழும் பெருவெடிப்பாய் “

என்று எழுதினேன்.. ஏனென்று தெரியவில்லை உங்களின் அந்த வரியைப் படித்தவுடன் எனக்குள்ளிருந்நது இப்படி ஒரு வரி எழுந்து வந்தது..புறப்பாட்டை கட்டுரை நூலாக எழுதியிருக்கிறீர்கள்… ஆனால் அது எனக்கு உங்களின் இளமைக்கால சுயசரிதையாகவும்… ஒரு நாவலாக வம் எனக்குப் படுகிறது…. புறப்பாடு எனக்குள் நிகழ்ந்த பெரிய திறப்பு…

நன்றி..

புஷ்பநாதன் சீனு

*

அன்புள்ள ஜெ

உங்கள் எழுத்துக்களில் மூன்று நூல்கள் புனைவுக்குச் சமானமான உச்சநிலைகளும் ஆழமும் கொண்டவை. நிகழ்தல் அனுபவக்குறிப்புகள் ஒரு அருமையான சிறுகதைத் தொகுப்பு. சுந்தர ராமசாமி நினைவின் நதியில் நூல் அவருடைய ஜே.ஜே.சில குறிப்புகள் போலவே வாசிக்கத்தக்கது. புறப்பாடுதான் அதில் உச்சம். அது ஒரு மகத்தான நாவல் என்றுதான் எனக்கு படுகிறது. எருமைப்பலி கொடுக்கும் இடம் போன்றவை எனக்கு கூஸ்பம்ப் மொமெண்ட்ஸை உருவாக்கியவை

சி.ராஜேந்திரன்

புறப்பாடு, ஒரு கடிதம்

புறப்பாடு, கடிதம்

புறப்பாடு வாசிப்பு

புறப்பாடு -கடிதம்

புறப்பாடு கடிதம்

புறப்பாடு ஒரு கடிதம்

புறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்

புறப்பாடு கடிதங்கள்

புறப்பாடு – கடிதங்கள்

புறப்பாடு – வறுமை – கடிதம்

புறப்பாடு-கடிதங்கள் 5

புறப்பாடு – கடிதங்கள் 4

புறப்பாடு – கடிதங்கள் 3

புறப்பாடு – கடிதங்கள் 2

புறப்பாடு – கடிதங்கள் 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2023 11:31

May 24, 2023

தொடுதிரையின் மேல் விரல்கள்

தொடுதிரை நூல் வாங்க

(கல்பற்றா நாராயணனின் கவிதைகளின் தொகுதியான தொடுதிரைக்கு எழுதிய பின்னுரை)

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு குற்றாலத்தில் ஒரு கவிதைக்கூடலில் கல்பற்றா நாராயணனின் கவிதைகளை வாசித்து விவாதித்தபோது அன்று கவிதைகள் எழுதத்தொடங்கியிருந்த ஒரு பெண் கவிஞர் என்னிடம் வந்து “இவையெல்லாம் எப்படி கவிதையாகின்றன என்று சொல்லமுடியுமா?” என்று கேட்டார்.

உண்மையில் கவிதைகளைப் பற்றி அப்படி ஒரு விளக்கத்தை அளித்துவிடமுடியாது. ஒரு வரி ஏன் கவிதை, இன்னொன்று ஏன் கவிதையல்ல என்பதற்கு கவிதையை உணராதவரும் ஏற்கும்படி ஒரு புறவய விளக்கம் இயல்வதே அல்ல.

இருந்தாலும் நான் சொன்னேன். ”அவற்றில் ஒரு விளையாட்டுத்தன்மை உள்ளது. முரண்நகை வெளிப்படுகிறது. ஆனால் ஆழத்தில் அவை வாழ்க்கைநோக்கி விரிகின்றன. வாழ்வின் பொருளையும் பொருளின்மையையும் நம்மில் உணர்த்தி நிற்கின்றன. ஆகவே அவை கவிதை. கவிதை என்பது வரையறுக்க முடியாதவற்றைச் சொல்லாமல் உணர்த்தும் ஒரு கலை”

அவருக்கு அந்த விளக்கம் பிடிகிடைக்கவில்லை. ’இவற்றில் கவித்துவமே இல்லையே.நேரடியான பேச்சு போலிருக்கின்றன’ என்றார்

நான் மீண்டும் “இந்தவகையான கவிதைகள் இன்று உலகமெங்கும் உருவாகி வந்துகொண்டிருக்கின்றன. படிமச்செறிவோ உருவகத்தன்மையோ கொண்ட கவிதைகள் பின்னடைகின்றன. இவை நுண்சித்தரிப்புகள், அல்லது சற்றே முரண் ஏற்றப்பட்ட கூற்றுக்கள். இவற்றை plain poetry என்கிறார்கள். தமிழிலும் இவை வரும்” என்றேன்.

மீண்டும் அதே கேள்வி. “இவற்றை வெறும் பத்திகளாகவே வாசிக்கமுடிகிறது”

நான் “சரி, விட்டுவிடுங்கள்” என்றேன். “என்றாவது உங்களுக்கு புரியலாம். புரியாவிட்டால் இவை உங்களுக்கானவை அல்ல என்று பொருள். அவ்வளவுதான்”

ஆனால் வெறும் பத்தாண்டுகளுக்குள் இவ்வகை கவிதைகள் தமிழில் உருவாகி தமிழின் மையப்போக்காகவே மாறின. படிமங்களையும் உருவகமொழியையும் நம்பாத கவிதைகள் எனலாம்.  அன்றைய அந்த புரிதலின்மையை விளக்குவது எளிது. அன்று தமிழில் வரிக்குவரி படிமங்களை அடுக்குவதும், படிமங்கள் வழியாகவே பேசுவதும்தான் கவிதை என்றே கொள்ளப்பட்டன. மலையாளத்தில் அந்தப் படிமமொழிக்கு ஓர் இசைத்தன்மையும் தேவை என்னும் நம்பிக்கை இருந்தது.

அச்சூழலில் கல்பற்றா நாராயணன் கவிஞராகவே ஏற்கப்படாமை புரிந்துகொள்ளத் தக்கதே. கல்பற்றாவின் குரு என சொல்லத்தக்க ஆற்றூர் ரவிவர்மாவுக்கே அந்த இடர் இருந்தது. அவர் தொகுத்த புதுமொழிவழிகள் என்னும் நூல் மிக முக்கியமான ஒன்று. மலையாளத்தில் உருவாகி வந்த புதிய கவிதையை அடையாளப்படுத்தி தொகுத்தது அந்நூல். பி.ராமன், பி.பி.ராமச்சந்திரன், அன்வர் அலி உள்ளிட்ட அன்றைய அடுத்த தலைமுறையை சுட்டிக்காட்டியது. அதில் கல்பற்றா நாராயணன் கவிதைகள் இடம்பெறவில்லை.

நான் அதைப்பற்றி ஆற்றூரிடம் கேட்டேன். “அவை கவிதையின் சொற்சுவை கைகூடாதவை” என்று அவர் சொன்னார்.

“கவிதைக்குரிய சொற்சுவை பாவியல்பு (Lyricism) மட்டுமாக இருக்கவேண்டிய தேவை இல்லை. நகைமுரண் கவிதைக்குரிய சொற்சுவைகளில் முக்கியமானது. இசைத்தன்மை நேரடியான உணர்ச்சிகள் நோக்கி கொண்டுசெல்கிறது. நுட்பமான பூடகமான சொல்வெளிப்பாட்டுக்கு எளிய உரைநடையே வாய்ப்பளிப்பது” என்றேன்.

ஆற்றூர் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் என் கருத்தை அன்றே மலையாளத்தில் எழுதினேன். கல்பற்றா மலையாளம் உருவாக்கிய மாபெரும் கவிஞர்களில் ஒருவர் என்று சொன்னேன். அதன்மேல் எழுந்த விவாதங்களை எதிர்கொண்டேன்.

உண்மையில் கல்பற்றா நாராயணனுக்கே அவர் ஒரு கவிஞர் என்னும் நம்பிக்கை இருக்கவில்லை. 1980 முதல் கல்பற்றா இலக்கிய விமர்சனங்கள்தான் எழுதிக்கொண்டிருந்தார். 1986 ல் அவர் அன்று கோழிக்கோட்டில் இருந்து தாஸ் என்பவர் நடத்திக்கொண்டிருந்த வைத்யசஸ்த்ரம் (சாஸ்திரம் அல்ல) என்னும் இதழில் ‘ஒழிஞ்ஞ விருக்ஷசாயயில்’ (தனித்த மரநிழலில்) என்னும் தொடரை எழுதிக்கொண்டிருந்தார். அதில்தான் அவர் கவிஞராக மாறினார், தன்னையறியாமலேயே.

வைத்யசஸ்த்ரம் ஒரு வைத்திய இதழாக நடந்தது. நின்றுபோன அவ்விதழின் பதிவுஎண்ணை  வாங்கிய தாஸ் அதை சூழியல் இதழாக நடத்திக்கொண்டிருந்தார். அன்று இருநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட அவ்விதழில் வெளிவந்த அக்கவிதைகளை எவரும் கவிதையாக எண்ணவில்லை. கல்பற்றாவே அவ்வாறு எண்னவில்லை. அதை தனிப்பட்ட குறிப்புகள் என்னும் வடிவிலேயே எழுதினார்.

அதை வாசித்துவிட்டு அவை முதன்மையாகக் கவிதைகள் என நான் அவருக்கு எழுதினேன். எனக்கு அப்போது 24 வயதுதான். ஆனால் வெறிகொண்டு உலகளாவிய நவீனக் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அன்றைய உலகக் கவிதைப்போக்குகளைப் பற்றிய ஒரு புரிதலும், அன்றிருந்த தமிழ் மலையாள கவிதைச்சூழல் பற்றிய விமர்சனமும் என்னிடமிருந்தன. ஆனால் நான் கவிஞனல்ல என்னும் புரிதலும் இருந்தது.

“நீங்கள் எழுதுவது இன்று உலகளாவ எழுதப்படும் நுண்சித்தரிப்பு வகைக் கவிதைகளின் பாணி. நீங்கள் முதன்மையாக ஒரு கவிஞர். உங்கள் கவிதைகளை நோக்கி மலையாளக்கவிதை வந்துசேர தாமதமாகும். ஆனால் கவிதைகள் எழுதிக்கொண்டிருங்கள்” என அவருக்கு எழுதினேன். அவர் எனக்கு பதில் அளித்தார். என் கடிதம் அவருக்கு பெரிய ஊக்கமாக அமைந்தது.

நான் கோழிக்கோடு அருகே கொயிலாண்டியில் அவருடைய பழைய இல்லத்திற்கு அவரைத்தேடிச் சென்றேன். அவருடைய முதல்மகன் அன்று சிறு குழந்தை. அவன் மேட்டில் நின்று “யாரைப் பார்க்கவேண்டும்?” என்றான். “கல்பற்றா நாராயணனை” என்றேன். “அது என் அப்பாதான்” என்று கூட்டிச்சென்றான். அன்று கல்பற்றாவுடன் அருகிலிருக்கும் கடற்கரைக்குச் சென்று அந்தி இருள்வது வரை புதியவகை கவிதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.

இன்று கல்பற்றா மலையாளக் கவிதையின் திசையை மாற்றிய முன்னோடி என அறியப்படுகிறார். அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் முகப்புக்குறிப்பு அப்படித்தான் சொல்கிறது. அவரை மலையாளச்சூழல் ஏற்கவைக்க நான் ஒரு பங்காற்றியிருக்கிறேன். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் (இந்தியன் எக்ஸ்பிரஸ்) அவரைப்பற்றி எழுதியிருக்கிறேன்.

தமிழில் முப்பதாண்டுகளாக கல்பற்றா நாராயணன் பற்றி எழுதி வருகிறேன். அவருடைய கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். தமிழ் இலக்கியக்கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார். தமிழ் மலையாளக் கவிதையரங்குகளில் அவர் கவிதைகளை வாசித்திருக்கிறோம். தமிழில் வெளிவந்த மலையாளக் கவிதைத் தொகுதிகளில் அவர் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவருக்காக ஒரு கவிதை உரையாடல் அரங்கையே விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்திருக்கிறோம். (கேரளத்தில் ஆலப்புழா அருகே மங்கொம்பு என்னும் ஊரில் 3 மார்ச் 2013) .

இன்று கல்பற்றா நாராயணனின் கவிதைகளுக்கு தமிழிலேயே பெரிய வாசகர் வட்டம் உள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலை புத்தர் என்னும் அவருடைய கவிதை கவிதைவாசகர் அனைவருமே அறிந்த ஒன்று. இன்னொரு புகழ்பெற்ற கவிதை டச் ஸ்க்ரீன். (தொடுதிரை)

இக்கவிதைகளின் உலகம் தனியானது. ‘ஆறுதல்’ என்னும் கவிதை ஓர் உதாரணம். அம்மா இறந்தபோது நிம்மதி ஆயிற்று’ என ஆரம்பிக்கும் அந்தக் கவிதையில் உள்ளது நகைமுரண் அல்ல. அங்கதம் அல்ல. ஆழ்ந்த துயரம்தான், ஆனால் மொழிதல் அவ்வாறு தன்னை திருகிக்கொண்டு நிலைகொண்டிருக்கிறது. ஆனால் பூதனை கவிதை அதே உணர்வின் மறுபக்கத்தை குரூரமாகவே சித்தரிக்கிறது

உடற்பயிற்சி கவிதை நேரடியாகவே பகடித்தன்மை கொண்டிருக்கிறது. இன்றைய நவீன உலகின் மீதான ஒட்டுமொத்தமான விமர்சனம் அது. வாழ்வதை விட வாழ்வது பற்றிய கொள்கைகளும் பாவனைகளும் மிகுந்துவிட்ட உலகை நோக்கிச் சிரிப்பது.

கல்பற்றா நாராயணனின் கவிதைகள் எளியவை. எளியமொழி, எளியவடிவம். பேசுபொருள் அன்றாடம் சார்ந்தது. உக்கிரமான தருணங்கள் இல்லை. அரிய அல்லது உச்சகட்ட உணர்வுநிலைகளும் இல்லை. ஆனால் அவை மிக இயல்பாக மிக நுணுக்கமான தரிசனநிலைகளை அடைகின்றன. உதாரணம், காலத்தலைவன். அது சாவின் பேரழகு பற்றியது என நான் வாசித்தேன். உறுதியான நிலமல்லவா பயங்கரம் என்னும் கவிதை புன்னகைக்க வைக்கும் அபத்தம் கொண்டது. ஆனால் இவ்வாழ்க்கையின் இரும்புவிதிகளைப் பற்றியது அது.

கல்பற்றா நாராயணனின் அரிய ஒரு கவிதை டச் ஸ்கிரீன் (தொடுதிரை) இன்று அது மலையாளத்தின் ஒரு ‘கல்ட் கிளாஸிக்’ ஆகவே மாறிவிட்டிருக்கிறது. இன்றைய வாழ்க்கையின் தாங்கமுடியாத எளிமையை, அல்லது மேலோட்டமான தன்மையை சுட்டும் கவிதை அது. The Unbearable Lightness of Being என மிலன் குந்தேரா சொன்ன அந்நிலை பற்றியது. எல்லாமே எளிமையாகிவிட்ட ஓர் உலகின் பெருந்திகைப்பை வெளிப்படுத்துவது. ஆகவே மேடைதோறும் வெவ்வேறுவகையில் பேசப்படுகிறது.

ஆனால் அக்கவிதை கல்பற்றா நாராயணனின் கவிதையின் அழகியலுக்கும் வேறொருவகையில் பொருந்துவது. அவர் கவிதையின் வாசல்களை முட்டி உடைப்பதில்லை. தட்டுவதுகூட இல்லை. தொடவே இல்லை. அவை திறந்துகொள்கின்றன. தொடுதிரையில் உலவும் விரல்களை நீர்மேல் நடக்கும் ஏசு என சொல்லும் ஒரு நுண்பகடி அக்கவிதையில் உண்டு. அவருடைய கவிதைகளை பொறுத்தவரை அது நேர்ப்பொருளிலேயே கொள்ளத்தக்கது.

கவிதைக்கு எப்போதும் ஒரு தீவிரம் உண்டு. தீவிர்பாவனையும் உண்டு. ஒரு மலர் உதிர்ந்துவிட்டதைக் கண்டு ‘ஓ மலரே மிக உயர்ந்த இடத்தில் எத்தனை சுடர்ந்திருந்தாய் ஒரு பேரரசியைப்போல!” என்று பாடிய குமாரன் ஆசானின் தீவிரம் அது (விழுந்த மலர்) உலகையே நோக்கிப் பேசும் பாவனை, மிகமிக அரிதானவற்றைச் சொல்லும் பாவனை, மிகநுட்பமானவற்றை புரியவைக்க முயலும் பாவனை, உலகை மறுத்து அப்பாலுள்ள ஒன்றைச் சொல்லும் பாவனை எப்போதும் கவிதைக்கு உண்டு.

அந்த அத்தனை பாவனைகளையும் மறுத்து மிக அன்றாடமான, மிக இயல்பான, மிக மேலோட்டமான சிலவற்றைச் சொல்லும் பாவனை கொண்டவை கல்பற்றா நாராயணன் கவிதைகள். அவருக்கு ஒரு நகரமோ ஒரு நாடோ உதிர்ந்தாலும் மெல்லிய தற்கேலி கொண்ட ஒரு சில வரிகளாகவே அதைச் சொல்லமுடியும்  அவருடைய விரல்கள் கவிதையை மிகமிக மென்மையாகவே தொடுகின்றன என்று தோன்றும்.

ஆனால் அது உண்மை அல்ல. வீணையை ஒருவர் மீட்டுவதைக் கண்டால் அவருடைய விரல்கள் வீணைக்கம்பிகள் மேல் மலர்மேல் வண்ணத்துப்பூச்சிகள் போல அமர்ந்தெழுந்து விளையாடுவதாகவே தோன்றும். ஆனால் இழுத்துக்கட்டப்பட்ட வீணையின் கம்பி வாள்முனை போன்று கடினமானது. அதை வாசிப்பவர் அதன்மேல் தன் விரல்களால் அழுத்தமான விசையை அளித்தாகவேண்டும். அவருடைய உள்ளிருந்து அந்த விசை வெளிவந்தாகவேண்டும். அவர் கைகளைப் பார்த்தால் அவை காய்ப்படைந்திருப்பதைக் காணலாம். ஆனால் பார்ப்பவருக்கு தெரியலாகாது. கல்பற்றா நாராயணன் வாசிப்பது வீணை.

தொடுதிரை நூல் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 24, 2023 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.