Jeyamohan's Blog, page 582

May 28, 2023

கவிதையும், ரசனை மதிப்பீட்டின் எல்லையும்

இனிய ஜெயம்

மற்றும் ஒரு இனிமை நிறைந்த காவிய முகாம். மூன்று நாட்கள் இரவு பகல் முழுக்க உரையாடல்கள். முகங்களின் பெருக்கின் ஊடே மனம் வழக்கமாக வரும் ஆனால் இம்முறை வர இயலாமல் போன நண்பர்களின் முகங்களைத் தேடியது.

முகாமில் எனக்கு அளிக்கப்பட்ட நவீன கவிதைகள் மீதான அமர்வை நான் சரியாகவே கையாண்டேன் என பின்னர் அஜிதனின் மதிப்பீட்டின் வழியே அறிந்து கொண்டேன். 

அமர்வில் முதல் பகுதியாக என் கவிதை வாசிப்பு பரிணாம பாதையின் 8 அலகுகளை குறிப்பிட்டேன்.

1. எவை இரண்டாம் நிலை கவிதைகள். எந்த அம்சம் அவற்றை இரண்டாம் நிலை கவிதை என்று ஆக்குகிறது.

2. கவித் தன்னிலை என்பதன் இயல்பு.

3. ஏன் கவிதைகள் வாசிக்கப்படுகிறது. கவிதையின் செயற்களம் என்ன.

4. போலி கவிதைகள் எவை. அது எவ்விதம் இயங்குகிறது.

5. அசல் கவிதையின் ஊற்று முகம் எது.

6. நவீன கவிதை கைகொள்ளும் மொழி.

7. அந்த மொழி வழியே அது உருவாக்கும் காட்சியும் படிமங்களும் உலகும்.

8. அசல் கவிதைக்கும் அதன் வாசகனுக்கு இடையே நிகழ்வது என்ன? இத்தகு வரையறைகளுக்கு வந்து சேர கோட்பாட்டு மதிப்பீடு கடந்த ரசனை மதிப்பீட்டின் இன்றி அமையாத தேவை என்ன? கோட்பாடு, ரசனை இந்த இரண்டு மதிப்பீடுகளுக்கு இடையிலான பண்பு பேதம் என்ன?.

இரண்டாம் பகுதியில் ச. துரை, போகன், ஆனந்த் குமார், சதீஷ்குமார் சீனிவாசன் இவர்கள் எழுதிய 4 கவிதைகளை முன் வைத்து அந்த கவிதைகள் மீதான என் ரசனை பார்வையை முன் வைத்தேன். சிறப்பான கலந்துரையாடல் நிகழ்ந்தது.

இந்த உரையாடலில் நான் விவாத முகத்தை திறக்க சில அலகுகள் இருப்பினும் நேரம் கருதியும், அந்த விவாதம் நான் முதல் பகுதியில் பேசியவற்றை வாசகர்கள் பின்னர் தங்களுக்குள் தொகுத்துக் கொள்வதில் ஏதேனும் இடரை உருவாக்கலாம் என்று உத்தேசித்தும் அவற்றை தவிர்த்து விட்டேன். அவற்றில் இரண்டை அதில் எனது தரப்பை இங்கே குறிப்பிட விழைகிறேன்.

முகம்

_______

உறங்கும்போது மட்டும் பழுப்பு நிறமாக மாறியிருந்த எனது முகத்தை அன்று பார்த்தேன் 

உண்மையிலே நித்திரையில்

எனது முகம் எவ்வளவு சாந்தம் 

யாரையும் எதிர்பார்க்காத எதன் மீதும் பொறுப்பற்ற

அந்த மயானத்தனமான அமைதி முகத்தை நினைத்தால் இப்போதும் குளிர்ச்சி பரவுகிறது 

உதிரவோ அழுகவோ போகாத அந்தக் கனி முகத்தை அப்படியே 

உடல் மரமாகத் தாங்கி வைத்திருந்தால்

எத்தனை அழகான காலமோட்சம்

ஆனால் துரதிர்ஷ்டம் பாருங்களேன் 

அந்தத் திவ்ய சொரூப முகத்தை பார்த்து மயங்கியிருக்கையில், எல்லாம் பறிக்கப்படுவது போல, எல்லாம் பின்னோக்குவது போல,

ஒரு பெரும் மின்னல் நீண்ட நேரம் வானில் தொங்குவது போல

பழுத்த முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த என்னை

உறக்கம் கலைந்த நானே பார்த்துவிட்டேன்

பின்பு அந்தப் பழுத்தக் கனி

உதிர்ந்தேவிட்டது.

ச.துரை

சங்காயம்.

முதலாவதாக

மேற்கண்ட  கவிதையை சில உதாரணங்கள் விவரணைக்குப் பிறகு அதை மரண அனுபவம் மீதான கவிதை என்று வரையறை செய்தேன். மரணம் எனில் மீண்டும் மீள நிகழ வாய்ப்பே இல்லாத ஒன்று முற்ற முடிவாக விட்டுப் போய் விடுவது. அந்த வகையில் இக் கவிதையை நேரடி மரணம் என்பதை விட ஆத்மீகமான ஒன்றின் மரணம் என்று வாசிக்க மேலதிக கற்பனை சாத்தியங்களை உள்ளடக்கிய கவிதை இது என்று சொன்னேன். 

இக்கவிதை குறித்த எனது பார்வையை அது ‘கடலூர் சீனு‘ என்ற வாசகனாகிய உங்களின் தனிப்பட்ட பார்வை. இதுதான் இந்த கவிதை பேசுகிறது என்ற பொது வாசிப்பு வரையறையை அதன் மேல் சுமத்த வேண்டாம் என்று சொன்னீர்கள். 

நான் முன்வைத்தது ‘எனது‘ வாசிப்பு மட்டுமே அல்ல. அந்த கவிதை வழியே எவரும் சென்று சேர வாய்ப்பு உள்ள ‘அடிப்படை‘ வாசிப்பு. உங்களுக்கும் எனக்கும் அது பொதுவாகவே இருக்கும்.  உதாரணமாக நான் உதாரணம் சொன்ன சு ரா வின் இயற்கையின் சுயம் கவிதையை  நான் சொன்ன இருத்தலியல் அழகியல் வரையரையையே அதன் அடிப்படை வாசிப்பாக எவரும் அளிப்பார்கள். அதன் படி எழுவதே அக் கவிதை மீதான அடுத்தடுத்த ‘மேலதிக‘ கற்பனை சாத்திய வாசிப்புகள். இந்த ‘அடிப்படை‘ வாசிப்பின் பிறகே அவை எழ முடியும்.  அந்த வகையில் இந்த முகம் கவிதை, பழுப்பு முகம், மயானத் தனமான முகம், உடல் மரத்திலிருந்து உதிரும் கனி முகம், (மரம் விதைக்கு திரும்ப முயல்வது போல) எல்லாமே பின்னோக்கி திரும்புவது, நிரந்தரமாக நின்றுவிட்ட மின்னல் போன்ற (gloomy) இருண்ட சித்திரங்கள் வழியே, (gothik) அமானுஷ்ய உணர்வு ஒன்றில் நிலைக்கும் கவிதை. எனது அடிப்படை வாசிப்பு இதன் மேல் அமைத்ததே. இந்த அடிப்படை வாசிப்பு எவருக்கும் பொதுவானதே. இந்த பதிலை நான் சொல்லவேண்டும் என்பதன் பொருட்டே நீங்கள் விவாத முகத்தை துவங்கி இருக்கலாம், அதன் படி அங்கே நேரமின்மை காரணமாக எனது இந்த பதிலை இங்கே தெரிவிக்கிறேன்.

இரண்டாவதாக 

நான் முன்வைத்த ச துரை கவிதை உள்ளிட்டு சில கவிதைகளில் அதன் வார்த்தைகளை நீங்கள் மாற்றி அக் கவிதை குறி வைத்த இலக்கை நோக்கி அதை எய்தீர்கள். நன்றாகவே இருந்தது. இருப்பினும்  அது உங்கள் வழிமுறையே அன்றி அதை பொது வழிமுறையாக கொள்ள இயலாது. நீங்கள் கம்பனை நிகர்த்தவர் நீங்கள் அவ்விதம் செய்யலாம் அதை பொதுவிலும் சொல்லலாம். அதை பொது கவிதை வாசகன் தனது வழிமுறையாக கொள்ள இயலாது. காரணம், அப்  படைபாளியால் பின்னர் எப்போதேனும் சீர் செய்து மீண்டும் வெளியாகும் சிறுகதை நாவல் போலன்றி, கவிதை எப்போதும் முற்ற முடிவான முழுமை வடிவம் என்றே இதுவரை கவியால் வாசகனுக்கு அளிக்கப்படுகிறது. இன்று கவிதைக்குள் நுழையும் புதிய வாசகன் இது முழுமையான ஆக்கம்தானா எனும் ‘சந்தேகத்தோடு‘ தான் கவிதை வாசிப்பை துவங்க வேண்டும் எனில் விளைவுகள் பார தூரமாகவே அமையும்.

இதில் கவிதை வாசகனுக்கு வெளியே, ரசனை மதிப்பீட்டு விமர்சகர் என்றாலும் கூட அவரது கூற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. அதிக பட்சம் இது முழுமை கூடாத கவிதை என்று சொல்லி, அதன் காரணத்தை கவிதையின் பலவீன சொல் இணைவில், படிம சீர் குலைவில், வைத்து சுட்டிக்காட்ட மட்டுமே முடியும். ரசனை விமர்சகனின் பணி அவனுக்கு அளிக்கப்பட்ட கவிதை வடிவத்துக்குள் நிற்கும் குண விசேஷங்கள் பண்பு நிலைகள் தனிதன்மைகள் இவற்றின் விரிவும் ஆழமும் நோக்கி செல்வதாக மட்டுமே இருக்கும். அவனுக்கு அளிக்கப்பட்ட கவிதைகளின் வரிகளை நீக்கவோ, மாற்றவோ செய்து, கவிஞர் உத்தேசித்த கவிதையை ‘வெளியே‘ கொண்டு வருவதல்ல அவனது பணி. ஞானியின் கவிதையில் அந்த ஞானத்தின் சாரம் சேர்ந்திருப்பது போல, (அவன் ஞானி அல்ல என்றாலும்)  நவீன கவிஞனின் கவிதையிலும் அதே ஞானத்தின் ஒரு துளி இடம்பெறவே செய்யும். அந்த வகையில் ஒரு ரசனை மதிப்பீட்டு விமர்சகர்  கவிதைகளின் வார்த்தைகளை மாற்றுவது அதை மறு உருவாக்கம் செய்வது என்பது, அந்த கவி கவிதை வழியே அக்கணத்தில் ப்ரக்ஞயால் தொட்டெடுத்த மெய்ம்மை மீது ‘தனது‘ ரசனையால் வன்முறையை செலுத்துகிறான் என்பதே அதன் பொருள். நன்றி.

நட்புடன்.

 கடலூர் சீனு.

(குரு நித்யா காவியமுகாம் 2023ல் பேசிய உரை)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2023 11:30

பீத்தோவன் இசை அறிமுகம்

மேலையிசையில் பீத்தோவன் ஒரு திருப்புமுனை. ஐரோப்பிய மறுமலர்ச்சியின் சிற்பிகளில் ஒருவர். மேலைச்சிந்தனை மரபுடன் இணைத்து புரிந்துகொள்ளப்பட வேண்டிய கலைஞர்.

அஜிதன் பீத்தோவனயும் அவரது இசையையும் அறிமுகம் செய்யும் பொருட்டு நடத்திய பயிற்சிவகுப்பு ஏற்கனவே நிகழ்ந்தது. மிக வெற்றிகரமான ஒரு நிகழ்வு அது. அதை மீண்டும் நிகழ்த்தவேண்டும் என்னும் கோரிக்கை வந்தது.

ஆகவே வரும் ஜூன் 9 10 11 தேதிகளில் அவ்வகுப்பு மீண்டும் நிகழும். மிகத்தொடக்க நிலையில் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். பணம் கட்ட முடியாத இளைஞர்களுக்கு புரவலர் கண்டடையப்படுவார்கள்.

விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பெயர், வயது, ஊர் ஆகிய தகவல்களுடன் எழுதவும்

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2023 06:33

May 27, 2023

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா

குமரகுருபரன்

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா வரும் ஜூன் 10 அன்று சென்னையில் நிகழ்கிறது. வழக்கம்போல காலைமுதலே நிகழ்ச்சிகள் உண்டு . இளம் படைப்பாளிகளின் ஆக்கங்கள் பற்றிய அரங்குகள். மாலையில் விழா. நண்பர்கள் வருகைக்கான முன்பதிவுகள் செய்துகொள்ளலாம்.

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2023 19:00

விவாதிப்பவர்களைப்பற்றி

அன்புள்ள ஜெயமோகன்

உங்களுடன் உரையாடுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். அது ஒரு அகங்காரத்தின் குரலாக எனக்கு தோன்றியது. பொதுக்கருத்துகக்ளை சொல்பவர்கள் இபப்டி சொல்வது முறையா? நாம் நம்மை பொருட்படுத்துபவர்களை பொருட்படுத்துவது தானே முறை?

முரளி கணேஷ்

அன்புள்ள முரளி

‘கல்வெட்டு பேசுகிறது’ பிப்ரவரி மாத இதழில் ஒரு செய்தி. பிரமிளுக்கான அஞ்சலிக்கூட்டத்தில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் அவரைக் கண்டித்துவிட்டு ‘செத்தபாம்பு என்பதனால் மேற்கொண்டு அடிக்காமல் விடுகிறேன்’ என்றாராம்.

இதில் வியப்படைய ஏதுமில்லை. நவீன இலக்கியத்தின் ஒரு முன்னோடியான நகுலன் இறந்தபோது ஐந்து சிற்றிதழ்கள் அவரைப்பற்றி செய்தி வெளியிட்டன என்று, ஒரு முற்போக்கு இதழ் செத்த பிணத்தை தூக்கிவைத்து அலைகிறார்கள் என்று தலையங்கம் எழுதியது. முற்போக்கு முகாமைச் சேர்ந்த தோழர்கள் இறந்தால் வருடக்கணக்கில் அவர்களுக்காக கூட்டங்கள் போட்டு மலர்கள் பிரசுரித்து இலக்கியப்போட்டிகள் வைத்து கௌரவிக்கும் அவர்களின் நகுலனைப்பற்றிய நோக்கு இது.

இலக்கியவாதிகளைப்பற்றிய வசைகள் தமிழ்நாட்டில் புதிது அல்ல. வசைகளுக்கு அப்பாற்பட்ட நல்ல எழுத்தாளர் எவருமில்லை. சமீபத்திய உதாரணங்களையே பார்ப்போம். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒருவரி தன்னைப்பற்றியது என்று குட்டி ரேவதி என்ற கவிஞருக்குத் தோன்ற, அவரை அவரது தோழிகள் கண்டிக்கிறார்கள். அதற்கு ஒரு கண்டனக் கூட்டம். பேசியவர்கள் பெரும்பாலும் பெண்ணியம்போன்ற எதனுடனும் தொடர்பில்லாதவர்கள். ராமகிருஷ்ணனை நாய் என்று சொல்லி வசைபாடினார்கள். அவர் எழுத்தாளரே அல்ல என்றார்கள். அவரை இனிமேல் தமிழில் எழுதவிடக்கூடாது என்றார்கள். அதேகூட்டத்தில் யுவன் சந்திரசேகரும் அதேபோல வசைபாடப்பட்டார்.

அதற்கு சிலநாட்கள் முன்புதான் அசோகமித்திரன் அவர் ஆங்கில இதழில் சொன்ன ஒரு கருத்துக்காக அனைத்து எல்லைகளையும் கடந்து வசைபாடப்பட்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் சுந்தர ராமசாமி ‘பிள்ளைகெடுத்தாள்விளை’ கதைக்காக வசைபாடப்பட்டார். அதற்கு முன் ஜெயகாந்தன் தமிழ் பற்றி அவர் சொல்லிய கருத்து ஊடகங்களால் திரிக்கப்பட்டு, ஊர் ஊராக நாய் என்றும் பேய் என்றும் வசைபாடப்பட்டார். அதற்கு முன்னர் சுஜாதா. ஒன்று கவனிக்கலாம். இதில் எல்லாம் வசைபாடியவர்கள் அனேகமாக ஒரே நபர்கள்!

வசைகளின்போதெல்லாம் இப்படைப்பாளிகள் தமிழுக்கு அளித்த கொடை, இவர்களின் இலக்கிய ஆளுமை ஒரு கணம்கூட நினைக்கப்படவில்லை. மாறாக அவர்களின் படைப்புகளும் சேர்த்து வசைபாடப்பட்டன. அவற்றையும் சேர்த்து குப்பையில்போடவேண்டும் என்ற குரல் எழுந்தது. அவர்களை எழுதவிடக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது.

நான் இவர்களை எதிர்கொண்டது என் இருபத்தெட்டாம் வயதில் ‘ரப்பர்’ வெளிவந்தபோது. அதன் பரிசளிப்புவிழாக் கூட்டத்தில் நான் பேசும்போது தமிழ் நாவல்கள் நாவல் என்ற விரிவும் விவாதத்தன்மையும் கொண்ட வடிவத்தை அடையவில்லை என்று சொல்லி என் நாவல் அதற்கான ஒரு முயற்சி என்று சொன்னேன். அதில் வெற்றிபெற்றதாக எண்ணவில்லை என்றும் ஆனால் எவருமே புறக்கணிக்க முடியாத வெற்றியை எதிர்காலத்தில் பெறுவேன் என்றும் சொன்னேன். தமிழில் படிக்க ஏதுமில்லை என்று நான் சொன்னதாக அது திரிக்கப்பட்டு அச்சாக, விவாதங்கள் தொடங்கின.

அதன் வழியாக வந்த வசைக்குரல்கள் என்னை வேதனையுற வைத்தன. பெரும்பகுதி நான் தமிழில் எழுதக்கூடாது, எழுதினாலும் பிரசுரிக்கக் கூடாது என்ற வகை தாக்குதல்கள். சுந்தரராமசாமியிடம் என் வருத்தத்தைச் சொன்னேன். ”நான் எழுதிய நாவலின் சிலபகுதிகளிலேனும் சிறந்த படைப்பூக்கம் உள்ளதே, அதை இவர்கள் ஏன் பொருட்படுத்தவில்லை” என்றேன்.

”உங்கள் மீது இலக்கியக் கவனம் குவிகிறது என்பது மட்டுமே இதற்குப் பொருள். இவர்களில் பெரும்பாலானவர்கள் உங்கள் எழுத்து எதையுமே படிக்காதவர்கள். படித்தாலும் திறந்தமனத்துடன் அணுகாதவர்கள். இவர்களின் குரலை நீங்கள் பொருட்படுத்தக் கூடாது” என்றார் ராமசாமி.

சுந்தர ராமசாமி எக்காரணத்தாலும் படைப்பாளி அவற்றைப் படிக்கக்கூடாது என்று சொன்னார். படித்தால் மானசீகமாக எதிர்வினையாற்ற ஆரம்பித்துவிடுவோம். அது மெல்லமெல்ல நம் மனநிலையை எதிர்மறையாக பாதித்து நம் படைப்புநிலையைக்கூட மாற்றியமைக்கும்.

‘முக்கியமான கருத்துக்கள் இருந்தால்?’ என்றேன். ‘அவை முக்கியமான கருத்துக்கள் என்றால் எப்படியும் நம்மைத்தேடி வந்துவிடும்’ என்றார் ராமசாமி. பலவருடங்கள் கழித்து சொல்புதிதுக்காக ஜெயகாந்தனிடம் ஓரு பேட்டி எடுத்தேன். அதில் இக்கேள்விக்கு இதேபதிலை ஜெயகாந்தனும் சொன்னார்.

குரோதமும் உள்நோக்கமும்கொண்ட கருத்துக்கள் எழுத்தாளனை மானசீகமாகத் தளர்த்தும் நோக்கம் மட்டுமே கொண்டவை. அவன் சூழலில் தீவிரமாகச் செயல்படும்தோறும் அவை மேலும் மேலும் உக்கிரமாக ஒலிக்கும். வசைகள், மூர்க்கமான தாக்குதல்கள் அவற்றில் நிறைந்திருக்கும். அவற்றின் அபத்தத்தை ஒரு பொதுவாசகன் எளிதில் உணரலாம்.

ஜெயகாந்தன், ஒருவர்  தமிழ்வெறியுடன் செயல்படுவது நாய் தன்னைத்தானே நக்குவதுபோல என்று சொன்னார் என்று கேள்விப்பட்டு ‘எப்படி அப்படிச் சொல்லலாம்’ என பொங்கி எழுந்தவர்கள் அவரைப்பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் நாய் நாய் என்று திட்டினார்கள், கவிதைகள் எழுதினார்கள்.

நான் கண்டுவரும் ஒன்று உண்டு. நான் ஒரு விமரிசனக்கருத்தை அழுத்தமாகச் சொல்லும்போது சிலர் பொங்கி எழுவார்கள் ‘இவன் எப்படி அப்படிச் சொல்லலாம்? சொல்வதற்கு இவன் யார்? தன்னை அதிகமாக எண்ணிக்கொள்கிறான்’ என்றெல்லாம் சொல்லி வசைகளும் முன்முடிவுகளும் கலந்து ‘தூக்கிவீசும்’ கட்டுரைகளை எழுதித்தள்ளுகிறார்கள்.

ஆனால் பொருட்படுத்தத்தக்க எந்தப் பங்களிப்பும் இல்லாத தாங்கள் இந்த அளவுக்கு அழுத்தமாக முடிவான கருத்துக்களையும் தீர்ப்புகளையும் சொல்லலாம் என்றால் இருபதுவருடம் தர்க்கபூர்வமாக இலக்கியவிமரிசனத்தை எழுதிவரும் நான் ஏன் ஒருகருத்தை திடமாகச் சொல்லக்கூடாது என்று இவர்கள் யோசிக்கமாட்டார்கள்.

இவர்கள் பெரும்பாலும் எழுத்தாளனின் எழுத்தின் தீவிரத்தையும் நுட்பங்களையும் அறியாதவர்கள். அதனால் அவனுக்கு வரும் முக்கியத்துவத்தை மட்டும் கண்டு காழ்ப்பு கொள்கிறார்கள். அக்காழ்ப்பை வெளிப்படுத்த மூன்று வழிகளை தமிழில் தெரிவுசெய்கிறார்கள்.

ஒன்று தன்னை ஒரு அதிதீவிர முற்போக்காக காட்டிக் கொள்வது. எழுத்தாளன் முற்போக்குக்கு எதிரான எதையாவது சொல்லிவிட்டான் என்று எடுத்துக் கொண்டு ‘சமூகக் கோபத்துடன்’ அவனை கீழிறங்கிச் சாடுவது.

இரண்டு, ஏதாவது கோட்பாடுகளை எடுத்துக் கொண்டு அதைவைத்துக் கொண்டு வசைபாடுவது, நகையாடுவது.

மூன்று, அதீதவாசகனாக தன்னை உருவகம் செய்துகொண்டு ‘மேலை’ நாட்டில் தான் வாசித்த பெரும்படைப்புகளை வைத்து எழுத்தாளனை எள்ளவும் வசைபாடவும் முயல்வது.

அத்துடன் என் எழுத்துக்களை வாசிக்காதவர்கள் மத்தியில் நான் உயர்சாதி, இந்துமத நோக்கு உள்ளவன் என்ற சித்திரம் உருவாக்கபப்ட்டிருப்பதனால் என்னைப்பற்றிய வசைகளில் எப்போதும் சாதி, மதவெறிக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. வேறு பல காரணங்கள் வெளியே ஒலிக்கும், உள்ளே கீழ்த்தர மதவெறியும் சாதிவெறியும் மட்டும் நுரைத்துக் கொண்டிருக்கும்.

சமீபத்தில் இணையம் ஒரு பொதுவெளியாக ஆனபின் இத்தகைய எழுத்துக்கள் பலமடங்கு பெருகியுள்ளன. ஒரு எழுத்தாளன் வசைபாடப்பட்டால் உடனே வந்துசேர்ந்துகொண்டு என்ன ஆனந்தமாக கும்மியடித்து மகிழ்கிறார்கள்! யார் இவர்கள்? இவர்களை ஏன் பொருட்படுத்த வேண்டும்? இவை எழுதபப்ட்ட சில மாதங்களிலேயே சருகுகள் போல உதிர்ந்து மறைகின்றன. என் இலக்கிய வாழ்க்கையில் இப்படி எத்தனையோ சருகுப்புயல்களை கடந்துவந்திருக்கிறேன். அவற்றை எழுதியவர்கள்கூட பலர் இன்று மறக்கப்பட்டுவிட்டார்கள்.

தன் எழுத்தை பொருட்படுத்தி ,அது உருவாக்கும் அறிவார்ந்த தளத்திற்குள் வந்து, நேர்மையுடன் சொல்லப்படும் கருத்து அல்லாத எதையுமே பொருபடுத்தக்கூடாது என்றுதான் எனக்குச் சொல்லபட்டது. அதையே இன்று எழுதவரும் ஓர் இளம் எழுத்தாளனுக்கும் சொல்வேன். அவனும் தன் வாழ்நாள் முழுக்க இத்தகைய வசைகளையும் எக்காளங்களையும் தன்னைச்சுற்றி கேட்டுக் கொண்டுதான் இருக்கவேண்டும். தன் எழுத்தைப்பற்றி ஆழமான ஒரு கருத்தையேனும் சொன்ன ஒருவர் சொல்லும் விமரிசனங்களை, அல்லது அவர் மேற்கோள் காட்டும் விமரிசனங்களை மட்டும் அவன் பொருட்படுத்தினால் போதும்.

நீங்கள் எழுதக்கூடியவரென்றால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். என்னிடம் எல்லா மூத்த எழுத்தாளர்களும் சொன்னது இது. உங்கள் முக்கியத்துவத்தைப் பற்றிய உறுதி உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் எழுதியவை சார்ந்து மட்டுமல்ல, எழுதப்போகும் படைப்புகள் சார்ந்தும் உங்களுக்கு ஓர் அடிப்படைப் பெருமிதம் இருக்க வேண்டும். அதுவே எழுத்தாளனின் ஆற்றலின் ஊற்றுக்கண். அந்த தன்னம்பிக்கையை தகர்க்கவே சூழ ஒலிக்கும் இக்குரல்கள் தொடர்ந்து முயல்கின்றன. அவற்றுக்குச் செவிகொடுக்கும் கணமே உங்கள் ஆற்றல் நுரையடங்குவதைப்போல சரிவதை உணர்வீர்கள்.

எந்த ஒரு எழுத்தாளனும் மனநிலையின் இரு உச்சங்களிலேயே இருக்க இயலும். ஒன்று மனச்சோர்வு. இன்னொன்று மன எழுச்சி. இரண்டுநிலைகளுக்கும் மாறிமாறி அலைவது அவன் வழக்கம். ஒருவகையில் இது எளியவகை மனநோய்போல. அவன் மனஎழுச்சி சார்ந்து தன்னை வைத்துக் கொள்ள எப்போதும் முயலாவிடில் சோர்வுக்குத் தள்ளப்பட்டு அழிவான்.

சமகால எழுத்தாளர்கள் பலரும் மனச்சோர்வின் மடிப்புகளுக்குள் புதைந்துபோகும் கணங்களையே மீண்டும் மீண்டும் என்னிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.நம்மைச்சூழ்ந்துள்ள இக்குரல்கள் நம்மை அங்கே கொண்டுசென்று அடைக்க முயல்கின்றன. அவற்றுடன் போராடி படைப்பூக்கத்துடன் இருக்க ஒரேவழி நம்மில் ஊறும் சுய உணர்வை வலுப்படுத்துவதே.

‘நான் படைப்பாளி , நான் காலத்தின் குழந்தை’ என்ற உணர்வை.[ இணையான வரிகளை ஜே.ஜே.சிலகுறிப்புகளில் காணலாம்.] ஒரு எழுத்தாளன் என்ற நிலை மிக அபூர்வமானது, அங்கிருந்து கொண்டு நாம் பொருட்படுத்தத்தக்கவை சிலவே.

என்னைப்பொறுத்தவரை ஒன்று ஒருவர் ஏதேனும் ஒரு தமிழ்படைப்பைப்பற்றி ஒரு நல்ல கட்டுரையேனும் எழுதியிருக்க வேண்டும். அல்லது ஒரு நல்ல கதையாவது எழுதியிருக்க வேண்டும். அவரது எல்லா கருத்துக்களும் எனக்கு முக்கியமே. என்னை ஒவ்வொரு வரிக்கும் கடுமையாக விமரிசிக்கும் அ.மார்க்ஸின் ஒருவரியைக்கூட நான் வாசிக்காமல் விட்டதில்லை. என் விமரிசகர்களான பொ.வேல்சாமி போன்றவர்களிடம் நட்பும் மதிப்பும் இருந்து வருகிறது.

அல்லது நேர்மையான ஆர்வத்துடன் என் இலக்கிய உலகுக்குள் நுழையும் எந்த வாசகனும் எனக்கு முக்கியமானவனே. அவர்களின் ஐயங்களும் விமரிசனங்களும் நிராகரிப்புகளும்கூட. இன்று தமிழில் எழுதிவரும் பலர் அப்படி என்னுடன் எதிர்த்து உரையாடி வந்தவர்கள்தான்.

கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. யாரும் எழுதலாம். அவற்றைப் பொருட்படுத்தமாட்டேன் என்று சொல்வதற்கும் கருத்துச் சுதந்திரம் உண்டல்லவா? விமரிசனம் எழுதுபவர்கள் தங்கள் எழுத்துக்களை எழுத்தாளன் புறக்கணிக்கவே முடியாதென்ற தரத்துடன் எழுதலாமே.

 மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 27, 2008

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2023 11:35

வீ.செல்வராஜ்

[image error]மலேசிய அச்சு இதழ்களில் இருந்து படைப்புகளைத் தேர்வு செய்தாலும் வீ. செல்வராஜ் தனது ரசனைக்கு ஏற்றதையும் தரமான படைப்பு என தான் நம்பும் படைப்புகளையும் மட்டுமே நூலாக்கியுள்ளார். அதன் பொருட்டு பத்து ஆண்டுகள், அமைப்புகள் செய்ய வேண்டிய பணியை தனியொருவராக செய்துள்ளார் வீ. செல்வராஜ், ‘மலேசியத் தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்புடன் படைப்புகளை தேர்வு செய்து தொகுத்து நூலாக்கியதன் நோக்கம் மலேசிய இலக்கியம் குறித்து வெளிநாட்டு தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதாக இருந்துள்ளது. மலேசியாவுக்கு வந்து செல்லும் வெளிநாட்டு தமிழ் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அனைவரிடமும் இந்நூல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

வீ.செல்வராஜ் வீ.செல்வராஜ் வீ.செல்வராஜ் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2023 11:34

நான்காவது கொலை வாசிப்பு

நான்காவது கொலை மின்னூல் வாங்க

நான்காவது கொலை வாங்க

இனிய ஜெயம்

மாயப்புன்னகை முடித்து அப்படியே கைவாட்டத்தில் அடுத்த புத்தகமாக இருந்த நான்காவது கொலை நாவலை வாசித்தேன். முன்னர் வாசித்தது. இப்போது வாசிக்கையிலும் பக்கங்கள் தோறும் புன்னகை எழ வைக்கும் தருணங்கள் அவ்வாறே அதே புன்னகையை கிளர்த்தியது.

எழுத்துத் கலையில் ஒரு பகுதியாக தொழில்நுட்பதேர்ச்சியும் இருக்கிறது. அந்த தொழில்நுட்பத்தை மட்டும் பிரித்தெடுத்து, கேளிக்கை இலக்கியமும் தீவிர இலக்கியமும் அந்த தொழிநுட்பத்தின் அடிப்படையில் மாறி மாறி ஒன்றன் மீது ஒன்று நிகழ்த்திக்கொள்ளும் விமர்சனப் பகடி மீது நிகழும் முற்றிலும் கேலிக்கூத்தான நாவல். இதன் ஒரு பகுதியாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் சூப்பர் மேன் படங்கள் போன்றவற்றின் திரை கதைகளும் நாவலுக்குள் சல்லி சல்லியாக நொறுக்கப்படுகிறது. 

கோவளத்தில் ஒரு உயர்தர விடுதியில்  நடக்கும் மூன்று கொலைகளை தொடர்ந்து அதை துப்பறிந்து மர்மத்தை விலக்க, பத்திரிக்கை பகுதியில் இருந்து திகம்பர சாமியார் தொட்டு, சாம்பு, அப்புசாமி, சங்கர்லால் தொடர்ந்து கணேஷ் வசந்த் வரை பலர் உள்ளே வந்து ‘இந்த பிரதியில்‘ மாட்டிக் கொள்கிறார்கள். ஷார்லக் ஹோம்ஸ் பாடு இன்னும் திண்டாட்டம். கோணங்கியின் பிதிரா நிலத்தை உயிர்ப் பீதியோடு கடந்து வந்து விஷ்ணுபுரத்துக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இறுதியாக சாகச வீரர் ஜேம்ஸ் பாண்ட் கொலையாளியை கண்டு பிடிக்கும் முயற்சியில் பாகங்கள் கழற்றப்பட்ட சூப்பர் மேன், பேரீச்சம்பழத்துக்கு இரும்புக்கையை இழந்த மாயாவி வரிசையோடு, நாகர் கோவிலில் அதுவும் பார்வதி புறத்தில் அதிலும் குறிப்பாக சாரதா நகர் 93 ஆம் எண் வீட்டில் வந்து சிக்கிக் கொள்கிறார். தொடர் கொலைகளின் காரணம் என்ன? கொலையாளி பிடிப்பட்டானா? சாகச நாயகர்கள் அனைவருக்கும் விடுதலை கிடைத்ததா என்பதை வாசகர்கள் இந்த போஸ்ட்மார்டன் உட்டாலக்கடியை ( தில் இருந்தால்)   வாசித்து  அறியலாம்.

சுஜாதா முதல் தேவன் சங்கர்லால் பாக்கியம் ராமசாமி ஆர்தர் கேனான் டாயில் என வெவ்வேறு மொழிப் பிராந்தியம்  அடுத்தடுத்து உள்ளே புகுந்து ஏழாம் அத்யாயம் வருகையில் வெவ்வேறு ஸ்டேஷன் ஒலி பரப்பபை ஒரே ரேடியோவில் கேட்டது போல தலையே சுற்றி விட்டது.  பாஸ் இது கால்குலேட்டர் கேஸ் எனும் வசந்த் துவங்கி, உள்ளே மெட்றாஸ் பாஷயில் எரிந்து விழும் சங்கர்லால் தொட்டு, இப்படி மொழியாக்க தமிழ்ல பேசும்படிக்கு சீரழிஞ்சு போனேனே என விம்மும் வாட்சன் வரை எத்தனை எத்தனை மொழி வேறுபாடுகள். அதில் ஃபாண்ட் மாறி ஜனு கினு &$ என்றெல்லாம் நிகழும் குழப்பம் வேறு. இதையெல்லாம்தான் ஒரு காலத்தில் விறுவிறுப்பு தாங்காமல் ஓடி ஓடி வாசித்திருக்கிறேன் என்று நினைக்கும்போது பப்பி ஷேம் ஆ இருக்கு. 

எனக்கு பிடித்தது ஜெயமோகன் மீதான கணேஷ் இன் புலம்பல். ஆத்மீக துயரம் பாழடஞ்ச கோயில்னு இறக்கி விடாம அந்தாள் நம்மளை இங்க விட்டு வெச்சிருக்கானே அப்டின்னு சந்தோஷ படு என்று சொல்லி கணேஷ் அடையும் ஆருதல். அந்த ஆருதலும் ஷர்லாக் ஜோடிக்கு இல்லை. அவர்கள் விஷ்ணுபுரம் கோயிலுக்குள்ளேயே சென்று சிக்கிக்கொள்கிறார்கள்.

முற்றாத தேங்காயில் செய்த சட்னி போல வெலவெலத்து போகும் நாயர், தலையில் துப்பாக்கியால் சுட்டு செத்து போகும் மூளை இல்லாத நாயர் என சுவாரஸ்ய தருணங்களுடன் நகரும் இந்த அபத்த சூழல் உச்சம் பெறுவது ஜேம்ஸ் பாண்ட் என்டர் ஆனதும்தான். கடவுள் சொந்தமாக பிளாட் போட்டு விற்கும் கேரள நிலம்  ஷ்ர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ் பாண்ட் இருவரையும் கிட்டத்தட்ட பாலியல் தொழில் புரோக்கர் போல (இங்கிலிஷ் அங்கிள்)ஆக்கி விடுகிறது. தாளவே இயலாத கேலிக்கூத்துகளின் முடிவில் ( என்னய்யா பெரிய இரும்பு கைய்யி இங்க சாரு நிவேதிதான்னு ஒருத்தர்கிட்ட எட்டு மணி நேரம் வேலை… ) எல்லோரும் தோற்கும் இடத்தில் இறுதியாக ஜேம்ஸ் பாண்ட் வென்று ஒரு வழியாக அந்த கொலையாளியை கண்டே பிடித்து விடுக்கிறார். அப்போது (ம்) அந்தக் கொலையாளி கொலைவெறியுடன் எழுதிக்கொண்டு இருக்கிறார். பதினாலாவது அத்தியாயத்தில் இந்த நாவல் முடிந்து விடும், அதன் பிறகு எல்லோருக்கும் விடுதலை என்று ஜேம்ஸ்பாண்ட் துப்பறிந்து கண்டு பிடித்து வைத்திருந்த உண்மை மீது எழுத்தாளர் ஈவு இரக்கமே இன்றி குண்டு போடுகிறார். “பதினாலு அத்யாயம் அப்டிங்கறது சரிதான் ஆனால் இப்பதான் முதல் அத்தியாயத்தின் பதினாலாம் பகுதியை முடிச்சிறுக்கேன். இப்படி இன்னும் ஒரு ஆயிரத்து நானூறு பக்கம் …” என்று எழுத்ததாளர் சொல்லக் கேட்டு ஜேம்ஸ் கதறி அழுது விடுகிறார். 

வாசகன் கடந்து வந்த மொழிப் பிராந்தியம் மீது சிரிக்க சிரிக்க ஒரு குறுக்கு வெட்டுப் பயணத்தை நிகழ்த்தும் இந்த நாவலில், முதலில் வாசித்த அன்று இல்லாமல் இன்று நான் காணும் ஒரு மெல்லிய இடர் ஒன்று உண்டு. 2000 கு பிறகு வாசிப்பு உலகுக்குள் நுழைந்து தீவிர இலக்கியத்துக்கு வந்து இந்த நூலை தொடும் ஒருவர் பெரும்பாலும் இதில் உள்ள பாத்திரங்களில் சுஜாதாவை தவிர எவரையும் படித்திருக்க வாய்ப்பு இல்லை. நானே இளம் வாசகர் ஒருவருக்கு கேனான் டாயில் குறித்து அறிமுகம் செய்திருக்கிறேன். இன்னொருவருக்கு பரத் சுசீலா குறித்து. சாம்பு, சங்கர்லால் அப்புசாமி போன்ற பாத்திரங்கள் ‘தோன்றும்‘ சில கதைகளையாவது வாசித்திருந்தால் மட்டுமே அந்த கதாபாத்திரங்கள் என்ன விதத்தில் இங்கே இந்த நாவலில் அபத்தத்துக்கு உள்ளாகிறதோ அதை ரசிக்க முடியும். மற்றபடிக்கு இவ்வளவு சுவாரஸ்யமான page turner அபத்தக் களஞ்சியம் வேறு வாசித்த நினைவு இல்லை. மற்றப்படிக்கு இந்த புத்தகத்துக்கு அடுத்ததாக க சீ சிவகுமாரின் ஆதிமங்கலத்து விசேஷங்கள் கிடக்கிறது. அடுத்து அதைத்தான் வாசிக்கப் போகிறேனா அல்லது வேறு எதாவதா என்பதை இன்று இரவின் மனநிலையே தீர்மானிக்கும்.

கடலூர் சீனு

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2023 11:31

ராஜா – கடிதம்

அன்புள்ள ஜெ

இளையராஜா பற்றிய உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. அவரை பற்றிய சர்ச்சை வரும்போதெல்லாம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அந்த பதிவுகளில் உலவுவது மிகவும் உதவும். குறிப்பாக, ‘விண்ணளக்கும்போதே அது பறவை!’ என்ற சொல்லாடல். நான் வாய்விட்டு அடிக்கடி சொல்லும் வாக்கியம் அது. அந்த ஒரு சொல்லாடல் இதுவரை இளையராஜா அவர்களை பற்றி விளக்க சொல்லப்பட்ட எல்லாவாற்றையும் விட சிறப்பானது.

என்னுடைய ஆரம்பகால வேலையின் பொது உடன் பணியாற்றிய மூத்த பொறியாளர் எனக்கு கிட்டத்தட்ட இந்த துறையில் குருவாக இருந்தார். ஐரோப்பிய வெள்ளையர். அவர் வேலை பார்க்கும் விதமே ஒரு தனித்துவமானது. யாரிடமும் பேசமாட்டார். கணினி முன் அமர்ந்து மணிக்கணக்கில் வேலை பார்ப்பார். எங்களுக்கு onjob ட்ரைனிங் என்று அவரிடம் வேலை பார்க்க சொன்னார்கள். அவர் வேலையின் பொது ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் எரிந்து விழுவார். இது கூட தெரியாதா? என்ற சீண்டல்கள் ஏராளம். மெதுவாக அனைவருமே வேறு டீம் – மாறிவிட்டார்கள். நான் கொஞ்சம் புரிந்து கொண்டு அவர் கூடவே அமர்ந்திருப்பேன். இரண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை புகைக்க வெளியில் நடப்பார். அதுவே எனக்கு பொற்காலம். என்னுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் நேரம். அப்போது ஒரு முறை அவர் கூறியது “நீ பூனை சாப்பிடும்போது கவனித்து இருக்கிறாயா?” “பார்த்திருக்கிறேன், ஆனால் கவனமாக இல்லை” என்றேன். அவரே தொடர்ந்தார் “பூனைக்கு சாப்பிடுவது தியானம் போல. அது அனுபவித்து சாப்பிடும் வேறு எந்த கவனசிதறலும் அதனை எரிச்சல் படுத்தும் அதற்குள் இருக்கும் புலியை வெளியே கொண்டுவரும்…” ஒரு முறை புகையை இழுத்துவிட்டு சொன்னார். “நானும் அதுபோல தான். வேலை செய்யும்போது நான் சஞ்சரிக்கும் உலகம் வேறு. எனக்குள்ளே நான் உரையாடி கொள்ளும் தருணம் அது. வேறு எந்த கேள்வியும் என்னை கீழிறக்கி எரிச்சல் ஏற்படுத்தும். என்னை சகித்து கொண்டால் உனக்கு நல்லது!” நான் சகித்துமட்டும் கொள்ளவில்லை. புரிந்து கொண்டேன். அவர் இன்றும் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். மாறாமல். இளம் பொறியாளர்கள் என்னிடம் அவரை பற்றி புகார் சொல்லும்போதெல்லாம் நான் சொல்வது ஒன்றுதான். “அவரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பிறகு சிலவருடம் கழித்து இதை சொன்னதற்காக எனக்கு நன்றி சொல்லுங்கள்” :). என்னால் வார்த்தையால் விளக்க முடியாமல் இருந்த விஷயத்தை உங்கள் ‘விண்ணளக்கும் பறவை’ விளக்கியது.

ராஜா அவர்களை பற்றி நான் உணர்ந்த மற்றொரு விஷயம் உண்டு. என்னை போன்ற செவ்வியல் இசையின் (கர்நாடக மற்றும் மேற்கத்திய) வாசமே அறியாத பாமரர்களின் செவிகளை அந்த இசையை கேட்க பழக்கப்படுத்தியது அவரின் இசைதான். ராஜாவின் வெறித்தனமான ரசிகர்களிடம் உள்ள ஒரு பொதுமை இது. வெறித்தனமான ரசிகர்கள் என்றால் அவரின் சினிமா பாடல்களை கேட்பவர்கள் அல்ல. அவரின் ஆல்பங்களையும் தேடி ரசிப்பவர்கள். how to name it , nothing but wind , the mussic messiah , ரமணமாலை, கீதவழிபாடு, திருவாசகம் pandavas திரைப்பட பின்னணி கோர்ப்பு போன்ற அனைத்தையும் தேடி கேட்பவர்கள். ராஜாவின் பாடல்களை கேட்டுக்கொண்டே, how to name it வழியாக செவ்வியல் இசைக்கு நுழைந்த பலருடன் நான் பார்த்திருக்கிறேன். how to name it மற்றும் nothing but wind கேட்டுவிட்டு Mozart , பீத்தோவன், Bach என்று உலாவி பாலமுரளிகிருஷ்ணா, MS சுப்புலட்சுமி போன்றோர்கள் இசையை பலமுறை நாள்கணக்கில் கேட்டிருக்கிறேன். பலநாட்களுக்கு பிறகு மீண்டும் இளையராஜா வழியாகவே திரையிசை பாடல்களுக்கு திரும்பி இருக்கிறேன். இந்த செவ்வியலுக்கு செவிகளை பழக்கப்படுத்தும் விதத்தை வேறு எந்த நிகழ்கால திரையிசை மேதையின் தீவிரமான ரசிகர்களிடமும் நான் கண்டதில்லை. ராஜாவின் மரபு பயிற்சி இதற்கு முக்கிய காரணம் என்றே நான் கருதுகிறேன்.

பெரும்பாலான ராஜா பற்றிய விமர்சனங்கள் ஒரு வகையான வெறுப்பின் மூலம் வெளிவருபவை. இதே ராஜா கொஞ்சம் நாத்திக வேடம் அல்லது முற்போக்கு வேடம் அணிந்தால் இந்த விமர்சனங்களில் பெரும்பாலானவை காணாமல் போகி விடும். :). ராஜாவின் பக்தி ஒரு உறுத்தலாகவே பெரும்பாலான முற்போக்குவாதிகளிடம் நான் பார்க்கிறேன். ஆனால் ராஜாவின் ரசிகர்கள் அவர் மூலமாக உணர்ந்த மரபு ஒன்று உண்டு. அதுவே ராஜாவை கிட்டத்தட்ட கடவுளுக்கு இணையாக அவரை வைக்க தூண்டுகிறது என்றே நான் புரிந்து கொள்கிறேன். என்னையும் சேர்த்துதான்!.

என்னை போல் ஒருவன்.. என்று நீங்கள் ராஜாவை பார்த்த முதல் சந்திப்பை பற்றி எழுதி இருந்தீர்கள். கிட்டத்தட்ட இதே வார்த்தைகளை நீங்கள் இங்கு வந்திருந்தபோது நாங்கள் பேசியிருக்கிறோம். கூடவே கமல்ஹாசன் அவர்களையும் சேர்த்து. அவரும் உங்களை போன்றவரே. அவருடைய துறையில்.

இளையராஜாவின் திரையிசை பாடல்களின் வரிகள் மீதான அவர் குறைவான கவனத்தை பற்றி எழுதி இருந்தீர்கள். அதை பற்றிய ஒரு நல்ல கட்டுரையை நான் இதுவரை படித்தது இல்லை.

நீங்கள் குறிப்பிட்ட படி..பெரும்பாலான பாடல்களுக்கும் வரிகள் அப்படி ஒன்று சிறப்பாக அமையவில்லை. அவரின் மெட்டுக்களை மேம்படுத்த என்று அல்ல, அதை கீழிறக்காத பாடல் வரிகள் அவருக்கு பெரும்பாலும் அமைய வில்லை என்றே நானும் கருதுகிறேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வேலை விஷயமாக ஐரோப்பா சென்றிருந்த பொது ராக்கம்மா கைய தட்டு பாடல் மட்டும் என்னுடைய கணினியில் இருந்ததால் அது மட்டுமே கிட்டத்தட்ட 24 மணிநேரமும் நான் தங்கியிருந்த வீட்டில் ஒலித்து கொண்டு இருந்தது. வீடு உரிமையாளரான வயதான பிரெஞ்சு தம்பதிகள், அந்த பாடலை என்னுடன் அமர்ந்து கேட்டு விட்டு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அதன் நுட்பங்களை சிலாகித்து பேசியதை இப்பொது நினைத்தாலும் மனம் மகிழும். கடைசியாக அவர்கள் பாடல் வரிகளுக்கு வந்து வரி வரியாக நான் மொழி பெயர்த்தபோது என்னை கூச செய்தது அந்த வரிகள். சாமானியர்களுக்கு அந்த பாடலின் மெட்டமைப்பு புரியாமல் இருக்கலாம். ராஜாவுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் அல்லவா? இந்த பாடல் வரிகளை அவரால் எப்படி ஏற்று கொள்ள முடிந்தது. வரிகளுக்கு இடையில் எந்த தொடர்பும் இல்லாமல்..ஒரு just tune fillers என்ற வகையிலேயே அவருக்கு பாடல் வரிகள் அவருக்கு தோன்றுகிறது போலும். கிட்டத்தட்ட இதே சூழலில் வந்த இரு பாடல்கள் “வீரபாண்டி கோட்டையிலே..” என்ற திருடா திருடா பாடல், மற்றும் “எடுடா அந்த சூரிய மேளம்” என்ற புதிய மன்னர்கள் பட பாடல். ஒப்பு நோக்க அவை சிறப்பான வரிகள் என்றே தோன்றுகிறது.

இதற்கு முக்கியமான காரணமாக நான் நினைப்பது..ராஜாவின் மெட்டமைக்கும் வேகம். துரதிருஷ்டவசமாக கண்ணதாசன் அவர் காலத்தில் எழுதவில்லை. ராஜாவின் வேகத்திற்கு கிட்டத்தட்ட எல்லா பாடலாசிரியரும் திணறி இருப்பதாகவே நான் கருதுகிறேன். வாலி அவர்கள் ராஜாவை நன்கு உணர்ந்தவர் என்றே கருதுகிறேன். பெரும்பாலான பாடல்களுக்கு இசைக்கு தோதாக ஏதாவது வார்த்தைகளை பயன்படுத்தி ராஜாவிற்கு பிடித்ததை செய்தவராகவே நினைக்கிறேன். நல்ல கர்நாடக மெட்டுக்களை வாலி அவர் வார்த்தைகள் மூலம் வேறு உயரத்திற்கு கொண்டு செய்திருக்கிறார். குறிப்பாக “ராம நாமம் ஒரு வேதமே” , “தூது செல்வாதாரடி!”, “கமலம் பாத கமலம்” போன்ற பாடல்கள். ஆனால் மற்றொரு புறம் பாடல்களை பாதிக்கும் வரிகளும் எல்லா கவிகளும் செய்திருக்கிறார்கள். பக்தி பாடல்களுக்கு வரிகள் ராஜாவுக்கு அமைந்தது போல் வேறு யாருக்கும் அமைய வில்லை என்று நினைக்கிறன். ஒரு சோறு பதமாக “எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ” என்ற பாரதி பட பாடல். அது போலவே ரமணமாலை என்ற ஆல்பத்தில் இருந்த எல்லா பாடல்களும். இதற்க்கு ராஜாவின் பக்தியும் ஒரு காரணமாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். மற்ற பாடல்களில் அவர் பாடல் வரிகளை பற்றி கவலை பட்ட எந்த தடமும் இல்லை. அவரது இசைக்கு அது தேவை இல்லை என்று நினைத்ததாகவே தோன்றுகிறது. தேவை இல்லை என்பதை கூட ஒரு விதத்தில் என்னால் ஏற்று கொள்ள முடியும்..ஆனால் மோசமான வரிகளை உபயோகப்படுத்துவது அந்த இசையை சிறிதளவேனும் கீழிறக்கம் செய்யும் என்றே எனக்கு தோன்றுகிறது.

என்னுடைய விருப்பம் பாடலின் தரத்தை பாதிக்கும் வரிகளை பயன்படுத்துவதற்கு பதில், வரிகளே இல்லாமல் கருவிகளோ அல்லது ஸ்வரங்களையோ பயன்படுத்துவது சிறப்பானது என்றே கருதுகிறேன். ராக்கம்மா கைய தட்டு பாடலை அப்படி கேட்க வேண்டும் என்று எனக்கு பல வருட ஆசை :)

ராஜாவின் பாடல்கள் பல நூற்றாண்டுகள் வாழும். அதில் பாடல் வரிகளின் முக்கியத்துவம் சிறிதாகவே இருந்தாலும் அது முற்றிலுமாக இல்லாமல் ஆவதில்லை.. 300 ஆண்டுகள் வாழும் ஒரு பாடல் மேலும் ஒரு நாள் பாடல் வரிகளுக்காக வாழும் என்றால், அந்த வரிகளை பயன் படுத்துவதே அந்த பாடலுக்கு செய்யும் நியாயம் என்றே நினைக்கிறேன்.

இவையெல்லாம் வருத்தமே தவிர, விமர்சனம் அல்ல. அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது நம் பாக்கியம் என்று நான் நினைக்கிறன். மனதில் எந்நாளும் ராஜா அமர்ந்த சிம்மாசனத்தில் வேறு யாரையும் கற்பனை கூட செய்ய முடியாமல் இருக்கும் பல லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன்.

பாடல் வரிகளுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றி என் அனுபவம் சார்ந்த ஒரு நிகழ்வு.

அப்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன். உடன் அறையில் ஒரு நாற்பதை தாண்டிய நண்பர் இருந்தார். நீண்ட நாட்களாகியும் குழந்தை பேறு இல்லாத வருத்தம் அவரிடம் எப்போதும் உண்டு. ஒரு முறை தமிழகத்திற்கு விடுமுறையில் சென்று விட்டு திரும்பும்போது மிக்க மகிழ்ச்சியுடன் அவர் மனைவி கருவாகி இருப்பதை தெரிவித்தார். அவரை நான் அவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்தது இல்லை. ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் மணிக்கணக்கில் மனைவியிடம் பேசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு இருந்தார். திடீரென்று ஒரு நாள் மனைவியின் கரு கலைந்ததாக தெரிவித்தார். அன்று இரவு நீண்ட நாள் கழித்து அதிகமாக மது அருந்திவிட்டு அவர் மனைவியிடம் பேச வெளியில் சென்று விட்டு வந்து.. “என்னடா வாழ்க்கை! அவளால தூங்கவே முடியலை.. புள்ள பொறந்து அதுக்கு தாலாட்டு பாடுவோம்னு நெனைச்சா அவளுக்கு நான் பேசி தூங்க வைக்க வேண்டியதாயிடுச்சு..” என்றவர் அவசரமாக எதையோ கணினியில் தேடி ஒரு பாடல் ஒலிக்க விட்டார். “தாலாட்டு மாறி போனதே..” என்ற பாடல். முதல் வரியை கேட்டதும் அழுக ஆரம்பித்தவர் தொடர்ந்து பெருங்குரலெடுத்து அழுது கொண்டே இருந்தார். அன்று இரவு முழுக்க அந்த ஒரு பாடல்தான். இதுதான் ராஜாவுக்கும் ரசிகருக்கும் உள்ள தொடர்பு. நான் அந்த பாடலை இது வரை பார்த்ததில்லை. பார்க்கவும் விரும்ப வில்லை. அந்த முதல் வரியோடு கூடிய ராஜாவின் இசை என் மனதில் இன்றும் ஒரு மாபெரும் கலைஞனை அவரின் கலைக்கும் சாமானியருக்கும் உள்ள தொடர்பை நினைவூட்டி கொண்டே இருக்கிறது.

ஏதோ ஒரு youtube பின்னூட்டத்தில் படித்தது..”ஒரு காலத்திலே , ஒரு ஊர்ல ராஜா ஒருத்தர் இருந்தாராம்..! இப்ப வரைக்கும் அவர் மட்டுமே ராஜாவாம்!” :)

அன்புடன்,

காளிராஜ்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2023 11:31

இரண்டாம் கட்ட யோகப்பயிற்சி- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

யோக முகாமில் நான் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

வீட்டில் த்தரயக் தடாசனம் செய்து முடித்துவிட்டு உடம்பை கவனிக்கும் போது,  “உங்கள் கைகள் இரண்டும் தளர்வாக இரு பக்கமும் தொங்கும் படி இருக்கட்டும்”  என்ற சௌந்தர் குருஜியின் வார்த்தைகள் மனதில் ஒலித்தது. ஆசனங்களுக்கு இடையில் உடல், உள்ளம் சார்ந்த அவதானிப்பை(awareness) பற்றி எனது கவனமின்மையை குருஜி முழுமையாக மாற்றினார்.

அவதானிப்பு என்றால் என்ன அதன் நிலைகள் என்ன அதன் அவசியமென்ன அதனால் என்ன பலன்கள் என்ன என எளிமையாகவும் கூர்மையாகவும் விளக்கினார்.இந்த அவதானிப்பு பயிற்சி யோகப் பயிற்சிகளில் மட்டுமல்ல, வாசிப்புகளில், பிற அறிவார்ந்த செயல்களில், நாம் நாளும் செய்யும் செயல்களில்  பேருதவியாக இருக்கும் என பின்னர் எனக்குப் புரிந்தது.

இந்த மூன்று நாட்களும் ஏதோ ஒரு குறுநாவலை ஒவ்வொரு அத்தியாயமாக இடைவெளி விட்டு படிப்பது போல சுவாரஸ்யமாகவும், கருத்தாழம் கொண்டதாகவும் இருந்தது.

நம் இந்தியா மரபில் ஞானம் என்பது செவி வழியாகவே ஒருவரிடம் இன்னொருவருக்கு ஆதி காலம் தொட்டே வந்தடைந்து கொண்டிருந்தது. நடுவில் ஏட்டுச்  சுவடியும் பிறகு காகிதங்களும் இப்பொழுது மென்பொருள் வழியாகவும் நம் அதனை தேடிக் கொண்டிருக்கிறோம்.இருந்தாலும் செவி வழியாக ஞானம் பெறுவது என்பதும், அதுவும் ஒரு மிகச்சிறந்த ஆசிரியர் மூலமாக அடைவது என்பதும் மிகுந்த இன்பத்தையும் ஆழமான கற்றலையுமே அளிக்கிறது.

முதல் கட்டம் பயிற்சி முடிந்து இரண்டாம் கட்டம் பயிற்சி என்பது மரபில் எப்படி குறிப்பிடப்படுகிறது என்று குருஜி கூறினார்.

Basic course அதாவது பிரதம சாதகம், Indermediate course என்ற   மத்யம சாதகம் மற்றும் Advanced course உத்தம சாதகம் என்றால் என்ன, இவற்றால்  ஒருவருக்கு கிடைப்பது என்ன அதை எப்படி அடைவது என்று அறிந்து கொண்டோம்.

மிக முக்கியமாக ஒருவர் பிரதம சாதகனாக இருப்பதில் தவறேதும் இல்லை ஆனால் அடுத்த கட்டமாக பயிற்சியை தொடங்கினால் அவருக்கு கிடைக்கும் பலன்களையும் அனுபவங்களையும் விளக்கி மிகுந்த ஆர்வத்தை உருவாக்கினார்.

முந்தைய யோக  முகாமில் கற்றுக் கொண்ட யோகப் பயிற்சிகளை ஓரளவு தொடர்ந்து செய்வதால்,புதிய பயிற்சிகளை செய்ய உடம்பும் மனமும் இலகுவாக இருந்தது.  இப்பொழுது முகாமில் குருஜி கூறியவற்றுக்கும் நான் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் உடனடியாக எனது கவனத்திற்கு வந்தது.  இந்த வித்தியாசத்தை உடனடியாக குருஜியுடன் கூறி அதற்கான திருத்தங்களையும் பெற மிக வாய்ப்பாக இந்த முகம் அமைந்தது.

ஆரம்ப நிலை முகாமின் போது போது  தொடர்ந்து 90 நாட்கள் பயிற்சி செய்வது மிகவும் நல்லது என்று குருஜி கூறியிருந்தார் ஆனால் வெகு சில, பல காரணங்களால்  தொடர்ச்சியாக 90 நாட்கள் செய்ய முடியவில்லை என்று நானும் வேறு ஒரு சிலரும், அதனால் குற்ற உணர்ச்சி இருக்கிறது என்றும் அவரிடம் பகிர்ந்து கொண்டோம்.

அதற்கு அவர் எங்களை கடிந்து கொள்ளவில்லை. மிக எளிமையாக முக்கியமான எவற்றைச் செய்வதால் நாம் தினமும் ஏதாவது ஒரு வகையில் யோகப் பயிற்சியில் ஈடுபட முடியும், அப்படி செய்யும்போது அந்த தொடர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது, திரும்ப வாய்ப்பு கிடைக்கும் ஒரு நாளில் முழு யோகா பயிற்சியையும்  செய்யும்போது அது ஒரு பெரிய சவாலாக இல்லாமல் இருக்கும் என்று மிக அழகாக எங்களுக்கு ஊக்கமூட்டினார்.

நாம் நம் யோக பயிற்சியில் முன்னேற்றமடைந்தோமா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? நம் உள்ளும் புறமும் உள்ள  புலம்பல்கள்  குறைவதே முன்னேற்றத்தின் அறிகுறி எனக் குறிப்பிட்டு காட்டினார்.

நாம் உறக்கத்திலிருந்து எழும் முதல் 15 நிமிடங்கள் எப்படி நம்முடைய முழு நாளையும்  தீர்மானிக்கிறது என்பதை மிக அழகாக விளக்கி அதை எப்படி சரியாக எடுத்துச் செல்வது என்று நாத யோகத்தையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஒரு சில புதிய சற்று கடினமான பயிற்சிகளின் போது இடையிடையே திரிஷாவும், பூஜா ஹெக்டேயும் வந்து கலகலப்பு மூட்டி களைப்பைக் குறைத்தனர்.

அது மட்டுமல்ல, அடிக்கடி யுவால் நோவா ஹராரியும்,  நியூரோ சயின்டிஸ்ட்களும் வகுப்புகளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர்.

ஏப்ரல் 22,  உங்களுடைய பிறந்த நாளை வகுப்பில் கொண்டாடினோம்.உங்களுடைய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை குருஜி எங்களுக்கு வகுப்பில் வாசித்தார்.  பெரியோர்களின் பிறந்த நாளை இப்படியும் கூட கொண்டாடலாம் என எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நிறைவு நாளில்,  நாம் கற்றுக் கொண்டதை தொடர்ச்சியாக பயிற்சி செய்தால்  நாம் நம் பிரணாசக்தியை பெருக்கிக் கொள்ள முடியும், அதனை சேமித்துக் கொள்ள முடியும், அதனை மிகச் சரியாக ஒரு உயர்ந்த லட்சியத்தை அடைவதற்கு சங்கல்பத்தை உள்ளடக்கிய யோக நித்ரா என்ற பயிற்சியும் பயன்படுத்திக் கொள்ளும் போது ஒரு முழுமை கிடைக்கிறது என்று விளக்கினார்.

இந்த மூன்று நாட்களும் அழகிய மலைத் தங்கும் இடத்தில், மயில்களுடனும், சிறந்த பயிற்றுநருடனும், ஆர்வம் மிக்க யோகா சாதகர்களுடனும், அக்கறை உள்ள அந்தியூர் மணி அவர்களுடனும், பரிவுள்ள சமையல் பாட்டிகளுடனும்   மகிழ்ச்சியாக மிகுந்த பயனுள்ளதாக அமைந்தன.

நம்முடைய கற்றல் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கும். ஒருவர் 2 மணி நேரம் 40 நிமிஷம் ஒரு ஆசனத்திலோ  அல்லது ஒரு கூர்ந்த பயிற்சியிலோ ஈடுபட்டால் அவர் உத்தம சாதகன் அல்லது தபஸ்வி என தன்னை கூறிக் கொள்ளலாம் என்று எங்களிடம் பகிர்ந்து இருந்தார் குருஜி.

இதை கவனித்துக் கொண்டிருந்த சிறுவன் ப்ரத்விக்,  நான் ஒரு  வீடியோ கேமையும் 2 மணி நேரம் 40 நிமிஷம் பார்த்துக் கொண்டிருந்தால் நானும் தபஸ்வி அல்லவா என்று  நண்பர் வெற்றியிடம் வேறொரு சமயத்தில் கேட்டான்!

இதற்குப் பதில் உங்களுக்குத் தெரியும்.தெரியாதவர்களுக்கு?குருஜியின்  யோக முகாம் இரண்டாம் நிலையில் பதில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.இப்படியான ஆழமான அபூர்வமான கற்றலை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்

சகுந்தலா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2023 11:31

May 26, 2023

பாரதத்திற்கான பாதை

பத்மவியூகம் வாங்க பத்மவியூகம் மின்னூல் வாங்க

1987 என நினைவு, பி.கே.பாலகிருஷ்ணனை அவர் வழக்கமாக அமரும் உதாரசிரோமணி சாலையில் அமைந்த மதுக்கடையில் சந்தித்தபோது இனி நான் உறங்கலாமா பற்றிய விவாதம் எழுந்தது. அந்நாவல் அளித்த புகழின் உச்சியில் அவர் அப்போது இருந்தார். மது அருந்துவதை நிறுத்திவிட்டாலும் நண்பர்களைச் சந்திக்க வந்துகொண்டிருந்தார்.

நான் கேட்டேன், ‘இனி நான் உறங்கலாமா நாவலில் கர்ணனை முன்னிறுத்த அர்ஜுனனை கொஞ்சம் கீழிறக்கிவிட்டீர்கள் அல்லவா? என்னதான் இருந்தாலும் அர்ஜுனன் அல்லவா யோகி? அவனுக்குத்தானே கீதை சொல்லப்பட்டது?”

பி.கே.பாலகிருஷ்ணன் சொன்னார். “உண்மை, ஆனால் எல்லா கதாபாத்திரத்திற்கும் நியாயம் செய்யவேண்டும் என்றால் மகாபாரதத்தை முழுமையாக எழுதவேண்டும்”

நான் சற்று துடுக்காக “நான் எழுதுகிறேன்” என்றேன்.

நான் சொன்னது பாதி வேடிக்கையாக. ஆனால் பி.கே.பாலகிருஷ்ணன் என்னை தழுவி “நீ எழுதுடா… உன்னால் முடியும். ஒன்றுமில்லையென்றாலும் நாமெல்லாம் திருவிதாங்கூர்காரர்கள்” என்றார்.

அது ஓர் ஆணை. அதை ஒரு கனவாக எடுத்துக்கொண்டேன். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள். அது வரை ஒவ்வொரு நாளும் இந்த எண்ணம் என்னுள் கனன்றுகொண்டிருந்தது. மகாபாரத நூல்களை சேகரித்தேன். இந்து புராணங்கள், அறநூல்கள் என வாங்கிச்சேர்த்து படித்துக்கொண்டே இருந்தேன். மகாபாரதம் நிகழ்ந்த நிலங்களுக்கு பயணங்கள் மேற்கொண்டேன்.

நடுவே இந்தச் சிறுகதைகளை எழுதினேன். 1988ல் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் திசைகளின் நடுவே என்னும் கதை வெளியாகியது. நான் எழுதிய முதல் மகாபாரதக் கதை. அதுவே என் முதல் சிறுகதை தொகுதியின் தலைப்புக்கதையும்.

அதன்பின் பல கதைகள். பத்மவியூகம் மனுஷ்யபுத்திரன் ஆசிரியராக இருந்த காலச்சுவடு இதழில் 1996ல் வெளிவந்தது. இந்தக்கதைகள் நான் மெல்ல மெல்ல மகாபாரதத்தை உள்வாங்கிக் கொள்வதன் தடையங்கள். அந்த மாபெரும் கதையை இன்றைய வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்ள இக்கதைகள் வழியாக முயல்கிறேன். பத்மவியூகமே உதாரணம், அதன் உண்மையான களம் போரில் பாழ்பட்ட இலங்கை. விதவைகளின் நிலம்.

இக்கதைகளை நூலாக்கிய சொல்புதிது பதிப்பகம் கடலூர் சீனுவுக்கும் இப்போது மறுபதிப்பாக கொண்டுவரும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2023 11:35

உத்தமசோழன்

தஞ்சை, திருத்துறைபூண்டி மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் முன் வைப்பவர் உத்தமசோழன். தஞ்சை மண்ணின் வளத்தையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும் பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றையும், கீழ்த் தஞ்சை மண்ணின் வட்டார வழக்குப் பேச்சையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். மண் சார்ந்த வட்டார வழக்கில் எளிமையான மொழியில் எழுதி வருகிறார்.

உத்தமசோழன் உத்தமசோழன் உத்தமசோழன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2023 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.