Jeyamohan's Blog, page 590

April 26, 2023

அகழ், அழகிய மணவாளன்

புதிய அகழ் இதழ் வெளியாகியிருக்கிறது. இந்த இதழில் அழகிய மணவாளன் கதகளி பற்றி எழுதியிருக்கும் மாயக்கொந்தளிப்புஓர் அழகான கட்டுரை. கதகளி ஒரு செவ்வியல் கலை. நுணுக்கமான ரசனை வழியாக மட்டுமே அதை தொடரம்முடியும். அழகியமணவாளன் பல ஆண்டுகளாக கதகளிமேல் பித்து கொண்டிருக்கிறார். மெய்யான கலையை அறிந்தவர்கள் அதை கொள்கை, கோட்பாடு என அல்லிவட்டம் புல்லிவட்டமாக பிரிக்க மாட்டார்கள். அதன்மீதான எதிர்வினை இன்னொரு கலைவெளிப்பாடாக இருக்கும். இது அத்தகைய கட்டுரை

விஷால்ராஜா டெர்ரி ஈகிள்டனின் கட்டுரையை மொழியாக்கம் செய்துள்ளார். ஏ.வி. மணிகண்டனின்  வெற்றுவெளியில் ஒரு தோரணவாயில் கட்டுரையிலுள்ள அந்த வாசலை ஜப்பானில் நான் பார்த்திருக்கிறேன். உமாமகேஸ்வரியின் நித்யஜாதம் கதை வெளியாகியுள்ளது

அகழ் இணைய இதழ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2023 11:30

April 25, 2023

புதுவை வெண்முரசுக் கூடுகை-59

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம்

நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 59 வது கூடுகை 28-04-2023 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .

பேசு பகுதிகள் குறித்து நண்பர் திரு திருமாவளவன் உரையாடுவார் . நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001.

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306

https://venmurasu.in/indraneelam/

பேசு பகுதி: வெண்முரசு நூல் ஏழு – இந்திரநீலம் பகுதி. 6 . மணிமருள் மலர் – (1 முதல் 7 வரை)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2023 23:28

சலிப்பு, மீள்வு

மகிழ்ச்சிக்கணக்கு

அன்புள்ள ஜெ,

நான் பலமுறை உங்களுக்கு எழுதிய விஷயம்தான். என் வாழ்க்கை அர்த்தமில்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. வேலை கடுமையானது கிடையாது. குடும்பத்திலும் பெரிய சிக்கல்கள் ஒன்றுமில்லை. நான்தான் சிக்கல். குடும்பத்தில் நான் எரிந்து எரிந்து விழுகிறேன். அது மற்றவர்களுக்குப் பிரச்சினை. ஆனால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. காரணம் என்னுடைய சலிப்பு.

சலிப்பு எதனால் என்று தெரியவில்லை. சலிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. எதிலும் ஈடுபடமுடியவில்லை. நண்பர்களிடம் கலக்க முடியவில்லை. அவர்கள் பேசும் அரசியல் சினிமா சாப்பாடு எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கே இந்த பெரிய சலிப்பு இருக்கிறது என நினைக்கிறேன். ஆகவேதான் குடிக்கிறார்கள். குடிபற்றி சிந்தனைசெய்துகொண்டே இருக்கிறார்கள். குடிபற்றி கேலிபேசுவது மட்டும்தான் அவர்களின் ஒரே மகிழ்ச்சி. குடித்துவிட்டு சினிமாப்பாட்டுக்கு நடனம் ஆடுவதை மகிழ்ச்சி என நினைக்கிறார்கள்.

என்னுடைய பிரச்சினை என்ன என்று எனக்கு தெரியவில்லை. நானே அதையெல்லாம் யோசித்து சலிப்படைந்துவிட்டேன். இன்றைக்கு தீவிரமாக இருப்பவர்களில் 90 சதவீதம்பேர் நெகட்டிவாகத்தான் அப்படி இருக்கிறார்கள். பெரும்பாலும் அரசியலில் கடுமையான காழ்ப்புகளை வைத்திருக்கிறார்கள். அதை முடிந்தவரை கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். காலைமுதல் மாலை வரை கசப்பும் காழ்ப்புமாக இருக்கிறார்கள்.

இலக்கியவாதிகளிலேயே பலர் எழுதுவது எல்லாமே கசப்பும் நையாண்டியும் வெறுப்பும்தான். பத்தாண்டுகளாக பாசிட்டிவாக ஒரு வரி எழுதாத சிலரை பார்க்கிறேன். எப்படித்தான் உயிர்வாழ்கிறார்கள். நெகெட்டிவ்னெஸ் அளிக்கும் ஒரு நமைச்சல் தவிர அவர்களுக்கு சந்தோஷம் என ஏதாவது உண்டா? அவர்களைப்போல ஆவதைவிட தற்கொலை செய்துகொள்ளலாம்.

நான் திரும்பத் திரும்ப புலம்பி எழுதுகிறேன். நீங்கள் பெரும்பாலும் பதிலளிப்பதில்லை. ஆனாலும் இதை எழுதுவது ஓர் ஆறுதலை அளிக்கிறது.

ராம்குமார் பாலசுந்தரம்

அன்புள்ள ராம்,

இதைப்போன்ற ஒரு கேள்விக்கு இன்னொருவருக்கு எழுதிய பதில் இது. (மகிழ்ச்சிக்கணக்கு)  இக்கடிதம் அதன் நீட்சி.

நான் பார்த்தவரை மகிழ்ச்சியின் வழிகள் இரண்டே. ஆற்றலை அடைதல், ஆற்றலைச் செலவழித்தல். மிக எளிமையான உதாரணம் சொல்லவேண்டும் என்றால் நல்ல உணவை உண்ணுதலும் அவ்வுணவு முற்றிலும் செரிக்கும்படி உடலை செயல்படுத்துவதும்தான் உடல்சார்ந்த மகிழ்ச்சிகளாக உள்ளன. அதையே உள்ளத்திற்கும் போட்டுப்பார்க்கலாம். வாசித்தல், பயணம் ஆகியவை உள ஆற்றலை சேகரிக்கும் செயல்கள். எழுதுதல், சிந்தித்தல் ஆகியவை செலவழிக்கும் செயல்கள்

மூன்றாம் நிலை என்பது அடைதலும் அளித்தலும் இல்லாத வெறும் நிலை. கடத்தல். அது வேறொன்று. அதை இங்கே கலந்துகொள்ளவேண்டியதில்லை. எளிய தியானங்கள் உள ஆற்றலை சேகரிக்கும் செயல்பாடுகள்தான். அதற்கப்பாலுள்ளது யோகம்.

கற்றல் எப்போதுமே முதன்மை மகிழ்ச்சி. கற்றவற்றை எவ்வகையிலேலும் செயல்படுத்துதல் அடுத்தநிலை மகிழ்ச்சி. மிக எளிய அளவிலேனும் எதையேனும் கற்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை மீண்டும் மீண்டும் காண்கிறேன். இலக்கியம், கலைகள், தத்துவம், பண்பாட்டு மரபு எதுவானாலும். அவ்வாறு கற்றவற்றில் இருந்து முன்னகர்ந்து எதையேனும் தாங்களே செய்பவர்கள் மேலும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

உண்மையில் இப்படிப்பட்ட வினாக்களை பலரும் தொடர்ந்து எழுப்பி வந்தமையால்தான் அப்படி கற்றலுக்குரிய சில அமைப்புகளையும் முறைமைகளையும் உருவாக்கினோம். உதாரணமாக, இந்திய தத்துவம், ஆலயக்கலை, யோகம், மேடையுரை, மேற்கத்திய இசை, மேலைத்தத்துவம் என பல துறைகள் சார்ந்த பயிற்சிக்கான முகாம்களை நடத்துகிறோம். ஓராண்டாக அவை நிகழ்கின்றன.

அவை கற்றலுக்கான வாய்ப்புகள். ஒன்றைக் கற்பதே முதன்மை இன்பம். கற்றவற்றினூடாக செயலுக்குச் செல்வது மேலும் இன்பம். அத்துடன் இணையான சுவையும் மனமும் கொண்ட நண்பர்கள் அமைகிறார்கள். அந்த நட்புச்சுற்றம் மிகப்பெரிய ஒரு களம். மகிழ்வாக இருப்பதற்கு.

ஆலயக்கலை முகாமில் கலந்துகொள்ளும் ஒருவருக்கு இந்தியாவின் ஆலயங்களைப் பார்ப்பதற்கான ஒரு பார்வை சட்டென்று கிடைத்துவிடுகிறது. வேறெப்படியும் இன்று அப்படி ஒரு பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. அந்தப்பார்வை அமைந்தபின், அதில் ஒரு சுவை உருவானபின், ஒருவர் எங்கு வாழ்ந்தாலும் தன் ஊருக்கு மிக அருகே உள்ள ஆலயங்களை மட்டும் பார்த்தாலே பத்தாண்டுகள் கலையிலும் வரலாற்றிலும் திளைக்க முடியும். வாழ்நாள் முழுக்கக் கூடவரும் ஒரு மகிழ்வு அது.

நான் அளிக்கும் மேடையுரைப் பயிற்சி என்பது சிந்தனை, உரையாடல் இரண்டுக்குமான பயிற்சிதான். ஒரு கருத்தை தரவுகளில் இருந்து தொகுத்துக்கொள்வது, அதை தர்க்கபூர்வமாக முன்வைப்பது, அதை மேடையிலோ பேச்சிலோ வெளிப்படுத்துவது எப்படி என்று கற்பித்தேன். அது ஒருவரின் சிந்தனையையே மாற்றிவிடும். அவர் வாசிப்பவை குவியத் தொடங்கும். அதைப்போல சலிப்பை வெல்லும் வழி இல்லை.

ஆனால் அப்படி பயிற்சிகள் அறிவிக்கப்பட்டபோது ஒன்றைக் கவனித்தேன். பெரும்பாலானவற்றில் கலந்துகொள்பவர்கள் ஏற்கனவே செயலூக்கத்துடன், உற்சாகமாக வாழ்பவர்கள். மகிழ்ச்சிக்கான வழிதேடுபவர்கள் அல்ல. மகிழ்ச்சிக்கான வழி என்ன என்று என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்பவர்கள் அக்கற்றலுக்கு வருவதில்லை. பலர் ஆர்வத்தால் தகிப்பதுபோல, வெளியேற வழிதேடுவதுபோல ஒரு பாவனையை மேற்கொள்கிறார்கள். உண்மையில் ஆர்வமில்லாமை, சோம்பல்தான் அவர்களின் இயல்பாக உள்ளது.

ஆகவே மேடையுரைப் பயிற்சி போன்ற சிலவற்றை தொடரவேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். இப்படி ஒரு வாய்ப்பு எங்குமில்லை என இருக்கக்கூடாது என்பதனாலேயே இந்த பயிற்சியை வழங்க எண்ணினேன். ஆனால் பொதுவாக இங்கே ஆர்வமில்லை என்பதனால்தான் இங்கே வாய்ப்புகளும் உருவாகவில்லை என்று தெரிகிறது.

ஏன் என்று பார்த்தால் தவிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள் விந்தையானவை. ஒன்று, அதற்காக ஒரு பயணத்தைச் செய்வதற்குச் சோம்பல். ”அவ்வளவு தூரமா, இங்கே எங்களூரிலேயே அதற்கான வசதி உண்டா?” என்கிறார்கள். அவர்கள் ஊரிலேயே என்றால் அவர்கள் வீட்டுக்கே செல்லமுடியுமா என அடுத்த வினா எழும். அல்லது பணம். அதன்பொருட்டு பணம் செலவிடுவது வீண் என நினைக்கிறார்கள். அந்தப் பணத்திற்கு பத்துமடங்கை ஓர் ஆடைக்காகச் செலவிடுபவர்கள் அவர்கள். அதாவது அவர்களின் உள்ளத்தில் கற்றல் என்பது உண்மையில் மதிப்பிற்குரிய பொருளல்ல.

அதற்கப்பால் வழக்கமான சால்ஜாப்புகள். கிளம்பும்போது சிறு வேலை வந்துவிட்டது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என அஞ்சினேன். நினைத்தேன் ஆனால் கிளம்ப மனமே இல்லை. வீட்டிலே அன்றைக்கு கறி எடுத்து சமைத்தார்கள்… இப்படிப் பல. அதில் உச்சகட்ட பாவனை என்பது ‘எனக்கெல்லாம் அந்தத் தகுதி உண்டா என்ற சந்தேகம் வந்தது’ என்னும் சொற்றொடர். அதைச்சொன்னவர்களை உடனே என் நட்புப்பட்டியல், மின்னஞ்சல்பட்டியல் அனைத்திலிருந்தும் நீக்கிவிட்டேன். அந்த பாவனையை எந்த சுத்தியலாலும் உடைக்கமுடியாது.

ஒன்றின் பொருட்டு அதற்குத் தேவையான சிலவற்றைச் செய்யாத எவரும் அதை அடைய முடியாது. எல்லாவற்றுக்கும் விலை உண்டு. பயணம், நேரம், பணம் எல்லாமே. எதையுமே அளிக்காமல் ஒரு கல்வி நேரடியாகத் தேடிவரவேண்டும் என எண்ணுவதுபோல மடமை வேறில்லை.

ஆக, உண்மையான சிக்கல் என்பது மகிழ்ச்சிக்கான வழி தெரியாமலிருப்பதோ அதற்கான வாய்ப்பு இல்லாமலிருப்பதோ அல்ல. அதற்கான மனமில்லாமல் இருப்பதே. அதற்கான சிறு முயற்சிகளைக்கூட எடுக்காமலிருப்பதே.

அதற்கு இன்னொருவர் எந்த உதவியும் செய்யமுடியாது. ஒருவர் அவரே சோம்பியிருக்க, துயரும் சலிப்பும் கொண்டிருக்க முடிவெடுத்துவிட்டாரென்றால் இன்னொருவர் என்ன செய்ய முடியும்? பலர் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதே அதைப்பற்றி புலம்பும் பொருட்டுத்தான் என நினைக்கிறேன்.அப்புலம்பல் வழியாக அவர் ஒரு வகையான தன்னடையாளத்தை அடைகிறார். ஓர் ஆளுமைச்சித்திரம் உருவாகிறது. பேச தலைப்பு இருக்கிறது. மகிழ்ச்சி அடைந்துவிட்டால் புலம்ப ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமே என அஞ்சுகிறார்கள்.

அத்துடன் நம் காலகட்டத்தின் இயல்பான எதிர்மறை மனநிலை இங்கே பெரும்பாலானவர்களிடம் உள்ளது. ’ஒண்ணுமே உருப்படாது’, ’எதுவுமே சரியில்லை’, ’என்ன செய்றதுன்னே தெரியலை’, ’சலிப்பா இருக்கு’ ‘எல்லாருமே அயோக்கியப்பயல்கள்’ என்பதுபோன்ற சொற்றொடர்கள் மட்டுமே அவர்களிடம் உள்ளன. எல்லாவற்றிலும் உள்நோக்கம், சூழ்ச்சி ஆகியவற்றை கண்டடைவார்கள். (அதைக் கண்டடையும் தனித்திறன் தனக்கு உள்ளது என்ற பாவனையும் இருக்கும்.  ‘அதிலே சூட்சுமமா பாத்தீங்கன்னா ஒரு அரசியல் இருக்கு…’ என்பதுபோன்ற சொற்றொடர்களை சொல்வார்கள்)

இத்தகையோரால் நேர்நிலைகொண்ட செயல்களில் ஈடுபட முடியாது. எதற்காவது எதிர்வினையாற்றவே முடியும். இன்னொன்றுக்கு எதிராகவே ஒன்றைச் செய்யமுடியும். எதிர்ப்பு, கசப்பு, காழ்ப்பு, சீற்றம் ஆகியவற்றை உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ அடைவது மட்டுமே அவர்கள் அடையும் செயல்நிலை. ஆனால் அவை துயரளிப்பவை. நிலையழியச் செய்பவை. ஆகவே அவர்கள் செயலாற்றுந்தோறும் மேலும் கசப்பும் காழ்ப்பும் கொண்டவர்கள் ஆகிறார்கள். மேலும் துயர் அடைகிறார்கள். அவர்களை எங்கும் இழுக்க முடியாது.

ஆனால், இந்த உலகில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், அதன்பொருட்டு கற்றல்-செயலாற்றல் என வாழவேண்டும் என ஏதாவது நிபந்தனை உண்டா என்ன? மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை சிலருக்கு அவர்களின் தெரிவு என்றால் இருந்துவிட்டுப் போகட்டுமே என இப்போது நினைக்கிறேன். இந்த உலகம் பலவகைப்பட்ட மனிதர்களாலானது. இயற்கையில் எல்லாவற்றுக்கும் இடமும் நோக்கமும் உண்டு. சிலர் மகிழ்ச்சியாக இருக்கவே கூடாது என்பதுதான் இயற்கையின் நெறியோ என்னவோ. அந்த சோர்வு, சோம்பல், கசப்பு, துயர் இந்த உலகின் வலைப்பின்னலில் ஒரு கூறு ஆக இருக்கலாம். எல்லா சுவைகளும் இயற்கையில் உள்ளன இல்லையா?

மகிழ்ச்சியை நாடும் ஒருவர், அதற்கான வழி அமையாது தவிக்கும் ஒருவர் மட்டுமே என் முன்னிலையில் எப்போதுமிருக்கிறார். அவரிடமே பேசுகிறேன். மற்றவர்களின் குரல்களை நான் செவிகொள்வதில்லை. அவர்கள் வாழ்வது வேறு உலகில். திரும்பத் திரும்ப சலிப்பு சலிப்பு என்று சொல்பவர் ஒரு வகையில் சலிப்பைப் பரப்புபவர். சலிப்பு, கசப்பு, காழ்ப்பு போன்றவை வைரஸ்கள் போல. அவற்றின் கட்டமைப்பிலேயே பரவுவதற்கான விழைவு உண்டு. அவற்றை அடைந்தவர்களிடம் அவை ‘என்னை முடிந்தவரை பரப்பிக்கொண்டிரு’ என ஆணையிடுகின்றன. அவற்றையே அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் தவிர்க்கப்படவேண்டியவர்கள்.

நான் பொதுவாக  வெற்றுப் புலம்பல்களை கவனிப்பதில்லை. ஆகவேதான் உங்களுக்கும் எதிர்வினை ஆற்றவில்லை. ஏனென்றால் நான் செயலூக்கம் கொண்டவன், செயலில் நிறைவும் மகிழ்வும் காண்பவன். புலம்பல்கள் என்னை சலிப்படையச் செய்துவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2023 11:35

நா.பார்த்தசாரதி – இலட்சியக் கனவுகள்

திடீரென்று ஒருநாள் நள்ளிரவில் ஒரு விசித்திரமான ஏக்கம் எழுந்தது. நா.பார்த்தசாரதியின் ஒரு படத்தைப் பார்த்தேன். என் பத்தாவது வயதில் நான் நா.பார்த்தசாரதியின் நான்கு நாவல்களை படித்தேன். குறிஞ்சிமலர், பொன்விலங்கு, சமுதாயவீதி. அவற்றில் இருந்த இலட்சியமாந்தர் என்னை பெரும் பரவசத்திலாழ்த்தினர். அந்தக் கனவை நான் இன்னமும் நீட்டித்துக்கொண்டே இருக்கிறேன்.

அந்நாவல்களை இன்று என்னால் வாசிக்க முடியுமா, அந்த நாவல்களின் கற்பனாவாதமும் மிகையெளிமையும் என்னால் ரசிக்கப்படுமா என தெரியவில்லை. ஆனால் கனவுகள் நிறைந்த ஒரு காலகட்டத்தின் முழக்கம் அந்நாவல்கள் என இன்று நினைக்கிறேன். அத்தகையவர்கள் அன்று வாழ்ந்திருக்கின்றனர்.

பூரணி இன்று இருந்தால் எண்பது கடந்திருக்கும். கனிந்த முதியவராக இருப்பார்.

நா.பார்த்தசாரதி நா.பார்த்தசாரதி நா.பார்த்தசாரதி – தமிழ் விக்கி
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2023 11:34

சின்னஞ்சிறிய கிளி

இளங்கோ கிருஷ்ணன் தமிழ் விக்கி

பொன்னியின் செல்வன் 2 பாடல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. எனக்கு மிகப்பிடித்த பாடல் இது. இளங்கோ கிருஷ்ணன் போன்ற ஒரு கவிஞன் ஏன் சினிமாவுக்குத் தேவை என்பதைச் சுட்டுபவை இத்தகைய பாடல்கள். பாரதியின் சின்னஞ்சிறி கிளியே பாடலை நினைவுறுத்துகிறது. செவ்வியல் நடை, ஆனால் வரிகளைப்பார்த்தால் நவீனக்கவிதை

பொ.செ பாடல்களைப் பற்றி என்னிடம் ஊடகங்களில் அவ்வப்போது பலர் எதையாவது  கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பரவலான கருத்து முதல்பகுதியில் இருந்த இசை மேலையிசை, இரண்டாம்பகுதியில் அது சரிசெய்யப்பட்டுள்ளது, இது இந்திய இசையாக பொருத்தமாக உள்ளது என்பது.

நேற்று அதைச் சொன்ன ஊடகவியலாளரிடம் சொன்னேன். ‘பொசெ1 படத்திலுள்ள பாடல்களில் மேலையிசைச்சாயல் கொண்ட பாடல்  ‘பொன்னிநதி பார்க்கணுமே’ மட்டும்தான். அதுகூட கட்டமைப்பில் மேலையிசைச்சாயல் கொண்டது. மெட்டு தெம்மாங்குக்கு அணுக்கமானது. படம் ஏற்கனவே தமிழ்ப்பண்பாட்டில் ஊறியவர்களுக்காக எடுக்கப்படவில்லை. 5 வயது முதல் அதற்கு பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரங்குக்கு வரவேண்டும். படத்திற்குள் நுழையவேண்டும். ஆகவேதான் முதற்பாடல் அப்படி உள்ளது. பொசெ1 பெற்ற பெருவெற்றிக்கு பொன்னிநதி பாக்கணுமே சிறுவர்களிடம் அடைந்த மிகப்பெரிய வரவேற்பு ஒரு முக்கியமான காரணம்

ஆனால் அந்தப்படத்தில் எஞ்சிய பாடல்கள் எல்லாமே முற்றிலும் இந்திய இசை சார்ந்தவை. தேவராளன் பாடல், அமலையாட்டம் இரண்டும் நம்முடைய நாட்டார் மரபின் சாமியாடிகளின் மெட்டுகளுக்கு அணுக்கமானவை. சொல், ராட்சச மாமனே ஆகிய இரு பாடல்களுமே இந்திய ராகங்களின் அமைப்புக்குள் வருபவை.

பொசெ 2 நீளமான பாடல்களுக்கு இடமில்லாமல் விரைந்தோடும் படம். ஏராளமான நிகழ்வுகள். கதையே உண்மையில் இரண்டாம்பகுதியில்தான் நிகழ்கிறது. ஆகவே பலவகையான பாடல்கள் உள்ளன.”

இந்தப்பாடலை மீளமீள கேட்கிறேன். இளம் நந்தினியாக நடித்த அழகியைத்தான் கடல் படம் எழுதும்போது மனதில் கண்டிருந்தோம். இப்போது அமைந்துவிட்டது

பொன்னியின் செல்வன் விவாதங்கள், வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2023 11:31

மலம் என்ற ஊடகம் – ஜெயராம்

அண்மையில் வாசிக்க நேர்ந்த குறிப்பிடத்தக்க கட்டுரை இது. ஜெயராம் நான் நடத்திய பேச்சுப்பயிற்சிக்கு வந்தார். அது உண்மையில் சிந்தனைக்கான பயிற்சி. ஒரு கட்டுரை அல்லது உரையை கட்டமைத்துக் கொள்வதே சிந்தனைப்பயிற்சிதான். ஜெயராம் முதல் பேச்சில் உளறி பத்துக்கு இரண்டு மதிப்பெண் பெற்றார். ஆனால் இரண்டாவது பேச்சில் பத்துக்கு ஒன்பது பெற்றார். தெளிவாகத் திட்டமிடப்பட்ட அழகிய உரை, புதிய ஒரு கருத்து. அதையே இப்போது கட்டுரையாக்கியிருக்கிறார்

இக்கட்டுரை, அழகு என்றால் என்ன, கலை என்றால் என்ன என்னும் அடிப்படை வினாக்களை எழுப்பிக்கொள்கிறது. ஓவியக்கலை- சிற்பக்கலை சார்ந்து விரியும் இந்த உசாவல் இலக்கியத்துக்கும் பொருந்துவதே. ஜெயராம் அதை சுவாரசியமான தொடக்கமும் வாசிப்புத்தன்மையும் கொண்ட அழகிய கட்டுரையாக ஆக்கிவிட்டார்.

மலம் என்ற ஊடகம் – ஜெயராம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2023 11:30

April 24, 2023

’பொன்னியின் செல்வன், விவாதங்கள்’- ஒரு நூல்

பொன்னியின் செல்வன் விவாதங்கள், வாங்க

பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது மணிரத்னத்தின் நெடுங்காலக் கனவு. 2009ல் நான் மணிரத்னத்தை முதன் முதலாகச் சந்தித்ததே பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுதுவதற்காகத்தான். 2011 ஏப்ரலில் ஆந்திரத்தில் பிரம்மாவரம் அருகே ’எலமஞ்சிலி லங்கா’ என்னும் கோதாவரிக்கரை தீவில் ஒரு மாதம் தங்கி திரைக்கதையை உருவாக்கினேன். ஆனால் அப்போது இப்படத்தை எடுப்பதற்கான செலவுகள் மிகுதியாக இருந்தமையால் திட்டம் கைவிடப்பட்டது.

அன்று ஒரே படமாக எடுப்பதற்காக திட்டமிட்டிருந்தோம். திரைக்கதை அதற்காகவே எழுதப்பட்டது. ஆதித்த கரிகாலனாக விக்ரமும், ராஜராஜசோழனாக மகேஷ்பாபுவும், வந்தியத்தேவனாக விஜயும் நடிப்பதாக இருந்தது. அந்த திட்டம் கைவிடப்பட்டது வருத்தமளித்தாலும் வேறுவழியில்லை என்றும் தோன்றியது. அன்று உதவியாளராக உடன்வந்த நண்பர் தனா இன்று இயக்குநர்.

வரைகலை தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தபின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் கனவை மணி ரத்னம் மீண்டும் அடைந்தார். இம்முறை இரண்டு படங்களாக. புதிய நடிகர்கள், புதிய தொழில்நிபுணர்கள். அதே தனா இதிலும் இணை இயக்குநராகப் பணிபுரிந்தார். அன்று சின்னப்பையனாக இருந்த என் மகன் அஜிதன் இப்படத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தான்.

பொன்னியின் செல்வன் வெளியாவதற்கு முன்னரே பலவகையான வம்புகளும் சர்ச்சைகளும் கிளம்பின. பொன்னியின் செல்வனுக்கு கிடைக்கும் விளம்பரத்தில் ஒரு பகுதியை வென்றெடுக்கும் வணிகநோக்கம்தான் பெரும்பாலான கருத்துக்களுக்குப் பின்னாலிருந்தது. கூடவே இங்குள்ள எல்லா அரசியல்தரப்புகளும் பேச ஆரம்பித்தன. பெரும்பாலான கருத்துக்கள் கடும் விமர்சனங்கள்.

படம் வெளிவரும் முன்னரே விளம்பரங்களில் ராஜராஜசோழன் நெற்றியில் விபூதி இல்லை என்பதில் தொடங்கி இந்துத்துவ தரப்பு கண்டனங்களை ஆரம்பித்தது. தமிழ் வரலாற்றை மணிரத்னம் திரிக்கிறார் , திராவிட வரலாற்றை திரிக்கிறார் என வேறு அரசியல்குரல்கள். ராஜராஜ சோழன் ஆதிக்கசாதிகளை உருவாக்கியவன், ஏழைகளை சுரண்டிய கொடுங்கோலன் என வேறு சில தரப்புகள்.

திரைப்படத்தின் சார்பில் அதை எழுதியவன் என்னும் முறையில் நான் பேசவேண்டியிருந்தது. பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டுவிழாவில் என்னுடைய சுருக்கமான உரை எதிர்ப்புகளை பெரும்பாலும் அணையச்செய்தது. இது தமிழ்ப்பெருமன்னன் ஒருவரின் வரலாற்றைச் சொல்லும் கதை, இதை தமிழர் ஏற்று முன்னெடுக்கவேண்டும் என்னும் உணர்வு உருவானது. படம் மக்களால் மிகப்பெரிய அளவில் ஏற்கப்பட்டது.

ஆனால் வணிகவிமர்சகர்கள், அரசியல் கூச்சலாளர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். அவற்றுக்கு நான் என் இணையதளத்தில் எழுதிய பதில்களின் தொகுப்பே இந்நூல். பெரும்பாலும் கேள்விபதில் வடிவில் அமைந்துள்ளது. ஐயங்கள், மறுப்புகளுக்கான விளக்கமாக இவை உள்ளன.

எந்த ஒரு விவாதத்தையும் அடிப்படைகளைப் பேசுவதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்வது என் வழக்கம். அவ்வாறே இந்த தருணத்தையும் பயன்படுத்தினேன். இந்நூலில் சினிமாவுக்கும் இலக்கியத்திற்குமான உறவு, ஒரு நாவல் திரைவடிவமாகும்போது உருவாகும் மாற்றங்கள், சோழர்காலப் பண்பாடு, சோழர் வரலாற்றை அணுகவேண்டிய முறை, வரலாற்றாய்வின் வழிமுறைகள் என பலவற்றை பேசியிருக்கிறேன். அடிப்படையில் சினிமா பற்றிய ஒரு நூல் இது. ஆனால் சினிமா வழியாக வரலாற்றையும் பண்பாட்டையும் அறிய உதவுவது.

இந்நூலை என் நண்பர் சிவா ஆனந்த் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். பொன்னியின் செல்வன் போன்ற ஒரு மாபெரும் படம் அவரின்றி உருவாகியிருக்காது. மணிரத்னத்தின் முதன்மை உதவியாளர், திரைப்படத்தின் செயல்முறை தயாரிப்பாளர் அவர். சாதாரணமாகவே நூறுகைகள், ஆயிரம் கண்களுடன் பணியாற்றவேண்டிய தொழில் அது. சிவா ஆனந்த் கமல்ஹாசனின் மருதநாயகம் முதல் செயல்முறை தயாரிப்பாளராகப் பணியாற்றியவர்

பொன்னியின் செல்வன் தொடங்கியபோது கொரோனா தாக்குதல் தொடங்கியது. தொடர்ச்சியாக படப்பிடிப்பு இடங்களின் அனுமதி ரத்தாகியது. நோய்க்கட்டுப்பாடுகள் பெருகிக்கொண்டே சென்றன. என்னென்ன சிக்கல்கள் என்று சொல்லி முடிக்கவே முடியாது. ஆனால் இந்தியாவிலேயே மிகப்பெரிய சினிமாவான பொன்னியின் செல்வனின் படப்பிடிப்பு திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது. கொரோனாக் கால படப்பிடிப்புக்கான தனி வழிமுறைகளே பொன்னியின் செல்வன் படத்தினரால்தான் உருவாக்கப்பட்டன. சிவா ஆனந்த் அதில் மாபெரும் நிர்வாகியாகத் தன்னை வெளிப்படுத்தினார்.

சினிமாக்கள் அவற்றில் நடித்தவர்களால் பின்னர் அடையாளம் பெறுகின்றன. இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் நற்பெயர் பெறுகிறார்கள். சிவா ஆனந்த் போன்றவர்களின் பங்களிப்பை என்னைப்போன்ற எழுத்தாளர்கள் வரலாற்றில் பதிவுசெய்தால்தான் உண்டு. செயல்வீரரான அவரைப் பற்றி என்றாவது நான் நாவலே எழுதிவிடக்கூடும்.

ஜெயமோகன்

14 மார்ச் 2023

(பொன்னியின் செல்வன் விவாதங்கள் நூலின் முன்னுரை)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2023 11:36

ஜெயகாந்தன் இசை வடிவில்…வெளியீட்டு நிகழ்வு

ஜெயகாந்தன் தமிழ் விக்கி 

 

கொண்டபின் கொடுப்பவர் ஆகுக!

ஆஸ்டின் சௌந்தர்

கடந்த இரு நாட்களாக ஏப்ரல் 22, ஜெயகாந்தனின் கவிதைகளை இசைவட்டு வடிவில் வெளியிட்ட நிகழ்வு, நிறைவாக இருந்தது என்று வரும் செய்திகளை குனிந்த தலை நிமிராமல் வாசித்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.  எழுத்தாளர்களின் எழுத்தாளரைக் கொண்டாட ஆளுமைகளின் நிரை ஒன்று – பவா செல்லத்துரை, ஜெயமோகன், பாரதி பாஸ்கர் மற்றும் ரவிசுப்பிரமணியன். ஜெயமோகனின் பிறந்தநாளும் என்பதால் வாசகர்களுக்கு அவரைக் காண்பதில் கூடுதல் மகிழ்ச்சி. அது ஒவ்வொரு ஆளுமைகளின் உரையிலும் வெளிப்பட்டது.

இலங்கை, சிங்கப்பூர் என தொடர் பயணங்களை இரு நாட்களுக்கு முன்னரே முடித்து வந்திருந்த பவாவிடம், களைப்பு எதுவும் இல்லை. அதே உற்சாகம்.  தமிழ் எழுத்தாளர்களின் கதைகளையும், அவர்களது சொந்த வாழ்வையும் அணுக்கமாக அறிந்த பவா, தலைப்பைக் கொடுத்த நிமிடத்தில் பேசமுடியும் என்றாலும், அவர் எப்படி யோசிப்பார், அதிகாலையில் எழுந்து தயார் செய்வார் என ஒரு கதைசொல்லலின் முதல் நாள் அவர் வீட்டில் தங்கியிருந்தவனாக அறிந்திருக்கிறேன். இந்த நிகழ்வில் அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்களில் ஜெகே-வைப்பற்றி புதிதாக இவ்வளவு இருக்கா என்று, அவரைத் தொடர்ந்து கேட்கும் வாசகனுக்கும் புரிந்திருக்கும். ஜெகே-வின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ ஹென்றியாக இருக்கவேண்டும் என ஆசைப்படும் பவாவை தெரிந்த வாசகனுக்கு, அவர் இருக்கும் மேடையிலேயே ‘ஜெய ஜெய ஷங்கரா’ என்ற நாவல் தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார் என்பது அதிர்ச்சியாக இருந்திருக்கும். பவாவின் உரையில், சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் லச்சம் இறந்த துக்கம் தாங்காத, புத்தகம் வாசிப்பது சங்கீதம் கேட்டபதைப்போல என்று சொன்ன வாசகர் ஜெகே-வின் அறிமுகம் கிடைத்தது..  ஜெயகாந்தனுக்கு இசையின் மீது உள்ள ஆர்வத்தை, நேரடிப்பழக்கத்தில் அறிந்தவர் அவர் பாடிக் கேட்டவர், இந்த இசைவட்டை வெளியிட்டது, மிகவும் பொருத்தமாக இருந்தது.

பயணம் முடிந்து பவா இந்த நிகழ்வில் கலந்துகொண்டார் என்றால், பாரதி பாஸ்கர் அவர்கள் தனது பயணத்தின் இடையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். அமெரிக்கப் பயணம் வந்துள்ள பாரதி பாஸ்கர் அவர்கள், அட்லாண்டா செல்லும் விமானத்தை பிடிக்கும் முன்னர், ஹூஸ்டனில் காத்திருக்கும் இடைவெளியில் இணையத்தில் இணைந்து பேசினார். கவிதைகளுக்கு இசையா என்று கேள்விகேட்டுக்கொண்டு, அவரே வரலாற்றிலிருந்து ஒரு பதிலை சொன்னார். 70-களில் Beatles குழுவின் பிரபலமான ‘Lucy in the sky with diamonds’ பாடலைப் பற்றி ஒரு கட்டுரையாளர் இளைஞர்களிடம் கேட்டபொழுது, “பாட்டைக் கேட்கும்பொழுது இசையைக் காணமுடிகிறது என்றும் வைரங்கள் மின்னும் வானத்தை எங்கள் காதுகளால் கேட்கமுடிகிறது என்றும் “ பதில் சொன்னார்களாம்.  நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர் காளி குறிப்பிட்டதுபோல, ஜெகே கதைகளை வாசித்த வளர்ந்த அக்காக்கள் ஒருவர் பேசியதுபோல இருந்தது அவரது பேச்சு. ஜெகே பேசியதை ஒரே ஒரு முறை நேரில் கேட்டதாக கூறிய அவர், பயணத்தை முடித்துக்கொள்ளாமல் மேலும் தொடர்ந்து புதிதாக யோசிக்கும் வழியைக் கற்றுக்கொடுத்துவர் ஜெகே என்று நினைவு கூர்ந்தார்.

கவிஞர் / ஆவணப்பட இயக்குனர், ரவிசுப்பிரமணியன் சங்கப்பாடல்களுக்கும், அபி, ஞானக்கூத்தன் கவிதைகளுக்கும் மெட்டுப்போட்டு இசையமைத்து பாடல்களை வெளியிட்டவர். அவரிடம் இந்த ஒலிவடிவத்தை நிகழ்விற்கு முன்னரே பகிர்ந்திருந்து அவரின் விமர்சனத்தைக் கேட்கும் ஆவலில் காத்திருந்தோம்..  மேண்டலின் இசையுடன் ஆரம்பித்து நாட்டுப்புறத்தன்மையை கொடுத்ததை குறிப்பிட்டு, சத்யப்ரகாஷ் உணர்வுப்பூர்வமாக பாடியுள்ளார் என்று பாராட்டினார். சத்யப்ரகாஷின் ஆலாபனை ஆரம்பித்திலேயே ஒரு தளத்தை உருவாக்குகிறது என்றும், பாடல் முழுவதும் அவரது டெம்போ மாறவில்லை.என்றும் குறிப்பிட்டார். ராஜன், சத்யப்ரகாஷ் இருவரின் கடுமையான உழைப்பில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது என்றார். பிருந்தாவன சாரங்கா-வில் இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டுள்ளது, இதுவரை வந்த எந்த எந்த சினிமாப் பாடல்கள் இந்த ராகத்தில் பாடப்பட்டுள்ளன என்று ஒப்பிட்டுப் பேசுவதுபோல ஆரம்பித்து எங்கனம் வேறுபடுகிறது என்று சொன்னார். இந்த ராகம் எடுத்துக்கொண்ட பாடலின் பொருளுக்குப் பொறுந்துமா என்று யோசிக்கத்தேவையில்லை, இசையமைப்பாளர்கள் ராகத்தை தேர்ந்தெடுக்க எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை மேலும் சில உதாரணங்களுடன் விளக்கினார். எழுதிய பாட்டுக்கு மெட்டுப் போடுவதில் உள்ள கடினத்தை சொல்லி ராஜனின் இந்த முயற்சியை பாராட்டினார்.

ஜெயமோகன் உரையில் இருக்கும்பொழுதே, அவர் போட்டிருக்க சட்டை நல்லா இருக்கே என்று Mute போடாமல் பேசிய ஒருவரின் கமெண்ட் என் காதில் விழுந்தது. அவர் போட்டிருப்பது பிறந்த நாள் புதுச்சட்டை என்று நான் சொல்வது அவருக்கு கேட்டிருக்காது. நான் Mute-ல் இருந்தேன். புதுக்கவிதைகளை புதுக்கழுதைகள் என்ற சொன்ன புதுமைப்பித்தனையும், புதுக்கவிதைகளை ரசிக்காத ஜெயகாந்தனையும் அறிமுகப்படுத்தி, ஜெயகாந்தனுக்கு சந்தத்தின் மேல் உள்ள ஆர்வத்தை தொடர்புபடுத்தி, அவரது நாவல்களின் தலைப்பே கவிதைபோல் இருப்பதை சொல்லி, இந்த இசைவட்டு வெளியிட்டதின் முக்கியவத்தை கூறி தனது உரையை சுருக்கமாக முடித்தார். ராஜன் சோமசுந்தரத்தின் இதுவரை வந்துள்ள இசை படைப்புகளை கோடிட்டுக் காட்டி அவரது முயற்சிகளைப் பாராட்டினார்.

ஏற்புரையிலும், அதற்குப்பிறகு கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாகவும் பேசிய ராஜன் சோமசுந்தரம் பாடலை அமைத்த விதம், இசைக்கருவிகள், அதை வாசிப்பவர்களை தேர்ந்தெடுத்த விதம் என்று விளக்கமாக பதில் சொன்னார். அது காணொளி வடிவில் கிடைக்குமென்பதால், இந்தப்பாடலை வெளியிடும் முன் , தேர்ந்த இசைரசிகர்களுக்கு பகிர்ந்துகொண்டபொழுது எங்களுக்கு வந்த ஒரு விமர்சனத்தையும், ராஜனின் பதிலையும் இங்கே பதிவு செய்கிறேன்.

ஜா. ராஜகோபலன் : “இப்போதுதான் கேட்டேன். ராஜன் , நீங்கள் வரம் பெற்றவர். சத்யப்ரகாஷ் குரலில் இளமையும் பாவமும் சமமாக, வந்துள்ளன. பாடுபவன் இளம் சன்னியாசி தான். அந்த டொய்ங் டொய்ங் லாம் கேட்டு எவ்ளோ ஆண்டுகள் ஆகின்றன. வரிகளுக்குப் பொருந்தவில்லை எனில் அந்த இசை வெறும் நையாண்டி இசையாக  நிற்கும். வரிகளுக்குப் பொருத்தமான இசை. இசைக்குப் பொருத்தமான கருவிகள். ஒன்றே ஒன்று… சுடர் ஒன்று ஏற்றுக எனும் உச்சஸ்தாயியில் கண்மூடி ஒரு கணம். அனுபவிப்பதற்குள் வேர் என சரணம் ஆரம்பித்து விடுவதாகப்பட்டது. இசைக் கோர்ப்பில் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம். எனக்குப்பட்டதால் சொல்கிறேன். “

ராஜன்: “நன்றி! அபாரமான அவதானிப்பு !

முதலில் சுடர்தனை ஏற்றுக  என்று முடியும் இடத்தில் இன்னும் சில நொடிகள் செல்லும் ஒரு சிறிய சங்கதியை வைத்திருந்தேன். பின்னர் பின்வரும் காரணத்துக்காக அது நீக்கப்பட்டது.

சொல்லுவன சொல்லுக என்று தொடங்கும் சரணம், ஜெகே கொஞ்சம் உரத்து , ஆணித்தரமாக சொல்லும் கவிதை. அது இசையில் தெரியும்படி கொட்டும் பறையும் இருக்கும். கொஞ்சம் வேகம் எடுக்கும்படியான உணர்வும் இருக்கும். அந்த வேகத்தை இந்த சிறு ஆலாபனை குறைப்பதாக தோன்றியதால் அது நீக்கப்பட்டது. இதை எப்படி நீங்கள் உணர்ந்தீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது “

பவா தனது உரையில் அந்ததத் தலைமுறைகளில் வருபவர்கள், ஜெகே-வின் கதைகளை வாசித்துவிட்டு எந்தவிதமான விமர்சனம் வைத்தாலும் தான் ஏற்றுக்கொள்வேன் என்று அவர் சொன்னதாக தனது உரையில் சொன்னார். நிகழ்வின் முடிவில் உரையாற்றிய சஹா, ஜெயகாந்தனின் கதைகளை, ரங்கன் (Andy Sundaresan) அவர்களின் ஆங்கில மொழியாக்கத்தில் வாசித்த அனுபவத்தை, அவரது புரிதலை, 2023-லும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பேசினார். இன்று இருந்திருந்தால் 89-வயதடைந்திருக்கும் ஜெகே, சஹாவின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்திருப்பார் என்று பவா கூறியதையும், சஹா பேசியதையும் இணைத்துப் பார்க்கிறேன்.

ஜெயகாந்தன் கவிதையில், “கொள்ளுவன கொள்ளுக, கொண்டபின் கொடுப்பவர் ஆகுக” என்று சொன்னதுபோல , ராஜன் சோமசுந்தரம், தமிழ்க் கவிதைகளை வாசித்து தான் பெற்றுக்கொண்டதை இசையின் வழி ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டுள்ளார்.

–          ஆஸ்டின் சௌந்தர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2023 11:34

அழகியல்வாதம்

அழகியல்வாதத்தின் வேர்கள் ஜெர்மானிய கற்பனாவாத தத்துவ இயக்கத்தில் உள்ளன எனப்படுகிறது. ஏ.ஜி. பௌம்கார்ட்டன் ( Alexander Gottlieb Baumgarten) அழகியல் என்னும் கருத்துருவை வரையறை செய்தார். இம்மானுவேல் காண்ட் (Immanuel Kant ) அதன் தத்துவ அடிப்படைகளை தன் Critique of Judgment (1790) என்னும் புகழ்பெற்ற நூல் வழியாக நிலைநிறுத்தினார். ஷில்லர் (Friedrich Schille) தன்னுடைய Aesthetic Letters (1794) நூல் வழியாக அந்த கருத்தை விரிவாக்கம் செய்தார்.

அழகியல் வாதம் அழகியல் வாதம் அழகியல் வாதம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2023 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.