Jeyamohan's Blog, page 598
April 11, 2023
புதியவாசகர் சந்திப்பு, ஒரு கதை- கடிதம்
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். புதிய வாசகர் முகாமும் உங்களுடன் தங்கிய நாட்களும் உங்களின் ஆற்றொழுக்கான பாடங்களும் வீட்டிற்கு திரும்பிய பிறகும் என்னைப் பல நாட்கள் இயல்பில் இருந்து பிரித்து வைத்திருந்தது. அங்கு குறித்து கொண்ட அத்தனை விஷயங்களையும் குறிப்பேட்டில் இருந்து கணினிக்கு கோர்வையாக மாற்றிக் கொண்டேன். இந்தச் செயலில் என் மனத்துக்குள்ளாகவே ஒருமுறை திரும்ப பார்த்துக் கொண்டேன்.
ஒவ்வொரு இலக்கிய வகைமைக்கும் நுட்பத்துக்கும் நீங்கள் கொடுத்த கதைகள் முதற்கொண்டு நினைவில் இருந்து எழுந்து வந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பள்ளி வகுப்புகளில் முதல் மாணவன் தான் என்ற போதும் கல்லூரி பாடங்களோ அதன் பிறகான தொழில்முறை படிப்புக்கான வகுப்புகளோ எனது கவனத்தில் இத்தனை ஆழமாக பதிந்ததில்லை. எனது ஆர்வம் தாண்டி உங்களது சொல்முறை முக்கிய காரணம் என எண்ணுகிறேன்.
அந்தப் பயிற்சி வகுப்புக்கு பிறகு (வாசகர் சந்திப்பு எனச் சொல்வதை விட இது தான் பொருத்தமாக இருக்கிறது) நான் வாசிக்கிற சிறுகதைகள் முதல் வாசிப்பிலேயே அதன் நுட்பம் புரிபடுகிறது. நாம் விவாதித்த கதைகளில் அங்கு வந்திருந்த அறிமுக எழுத்தாளர்களின் கதைகளும் அடக்கம். அதில் என் கதையையும் நீங்கள் வாசித்து அதனை மேம்படுத்தச் சொன்ன குறிப்புகளும் அந்தக் கதையின் மீதான மற்றவர்களின் வாசிப்பும் புதிதாக எழுத வருகிற யாருக்கும் அத்தனை எளிதாக கிடைத்துவிடுவதில்லை. அந்த வகையில் மகிழ்ச்சியாக இருந்தது.
அந்தக் கதை இந்த வார விகடனில் வெளி வந்திருக்கிறது (அப்படியே அல்ல. சில திருத்தங்களுக்குப் பிறகு) அந்த இணைப்பையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மிக நன்றி, ஜெ!
அன்புடன்,
பிரபாகரன் சண்முகநாதன்
அன்புள்ள பிரபாகரன்
வாழ்த்துக்கள். கதைகளை தொடர்ந்து எழுதுங்கள். நல்ல எழுத்தாளன் எப்போதும் எழுதும் மனநிலையில் இருப்பான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்களுடன்
ஜெ
The Abyss, is a spiritual inquiry into beggars’ lives
Through his stories, he says, he wants to create a philosophical universe where we are all part of the global life system, with the right to be happy and self-assured of our lives: “The global system consists of me and the beggar, me and the dog,” he says
Jeyamohan interview: Ezhaam Ulagam, or The Abyss, is a spiritual inquiry into beggars’ lives The Abyss _ AmazonApril 10, 2023
சிவசங்கரியின் இந்திய தரிசனம்
நேற்று என்னிடம் ஓர் ஆங்கில இதழாளர் பேட்டி கண்டபோது இந்திய இலக்கியம் பற்றி நான் இவ்வாறு சொன்னேன். இந்திய இலக்கியம் என்பது இந்திய ஆங்கில இலக்கியம் அல்ல. ஆங்கிலம் வழியாக அறியவரும் இந்திய இலக்கியமும் அல்ல. இந்திய இலக்கியம் இந்திய மொழிகளில் உருவாவது, தனக்கென சுயமான அறிவுத்தளமும், அழகியலும், ஆன்மிகத்தேடலும் கொண்டது. அது இந்திய ஆங்கிலத்தில் வெளியாவதில்லை.
ஏன்? இந்திய ஆங்கிலத்தின் மிகப்பெரிய இரு சிக்கல்கள்தான் காரணம். ஒன்று போலிமுற்போக்கு. இரண்டு செயற்கைப்பாவனை எழுத்து. முதல்வகைக்கு முல்க்ராஜ் ஆனந்த் முதல் அருந்ததி ராய் வரை உதாரணம். இரண்டாம் வகை எழுத்துக்கு ராஜாராவ் முதல் சல்மான் ருஷ்தி வரை உதாரணம்.
இவ்விரு வகைமைகளுமே நாம் மேலைநாட்டு வாசகர்களை திருப்திப்படுத்த முயல்வதனால் உருவாவன, அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது எளிமையான சமூக விமர்சன, முற்போக்கு எழுத்தை. நாம் அதை சமூகவிமர்சனமாக எழுதுகிறோம். அவர்கள் அதை இந்திய விமர்சனமாக எடுத்துக்கொண்டு ரசிக்கிறார்கள். அல்லது உத்திச்சோதனைகளைக்கொண்டு அவர்களை ஏமாற்றிவிடவேண்டும். இன்னமும் கூட ஐரோப்பிய வாசக உலகம் இந்திய அழகியலை, இந்திய அறிவியக்கத்தை புரிந்துகொள்ள முற்படவே இல்லை.
இதுவே மொழியாக்கத்திலும். இந்திய மொழிகளில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்படும் படைப்புகள் ‘ஐரோப்பியர் விரும்புவார்களா?’ என்னும் கேள்வியை அடிப்படையாகக்கொண்டே தேர்வாகின்றன. கவனிக்கப்படுவதற்கான அளவுகோலும் அதுவே. ஆகவே ஆங்கிலம் வழியாக நமக்குக் கிடைக்கும் இந்திய மொழி ஆக்கங்கள் பெரும்பாலும் மேலோட்டமானவை.
நமக்கு இந்திய மொழி இலக்கியங்கள் சாகித்ய அக்காதமி, நேஷனல் புக் டிரஸ்ட் வழியாகவே அறிமுகமாயின. அவை இந்திய மொழிகளுக்குள் நிகழ்ந்த மொழியாக்கங்கள். அல்லது வட இந்திய மொழிகள் அனைத்துக்கும் அணுக்கமான மொழியான இந்தி வழியாக நிகழ்ந்தவை,அவற்றின் தெரிவுக்கு அவை சாகித்ய அக்காதமி உள்ளிட்ட விருதுகள் பெற்றதே அளவுகோல்.
தமிழ், தெலுங்கு போன்ற சில மொழிகளில் சாகித்ய அக்காதமி பெருமளவுக்கு தரமிழந்ததாகவே உள்ளது. இங்குள்ள பேராசிரியர்களின் தரம் மிகக்குறைவு என்பதே காரணம். ஆனால் பொதுவாக இந்திய அளவில் அவ்வாறல்ல. ஆகவே சாகித்ய அக்காதமி, நேஷனல் புக்டிரஸ்ட் வழியாக நாமறியவந்த எழுத்தாளர்கள் மிக முக்கியமானவர்கள்.
கே.எம்.ஜார்ஜ்(ஆனால் அண்மையில், இன்றைய பாரதிய ஜனதா அரசு, தொடர்ச்சியாக இந்தப் பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கான நிதியை குறைத்துக்கொண்டே இருக்கிறது. நூல்களின் தெரிவில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் இப்போது அனேகமாக நூல்களை வெளியிடுவதில்லை. சாகித்ய அக்காதமி மிகக்குறைவான நூல்களை, மிக அதிகமான விலையில், மிகக்குறைவான தரத்துடன் வெளியிடுகிறது)
சென்ற எழுபதாண்டுகளாக மாத்ருபூமி வார இதழ் ஆண்டுதோறும் குடியரசு தின மலரை இந்திய இலக்கியமலர் ஆக வெளியிட்டு வருகிறது. இந்திய தீவிர இலக்கியத்தை அறிமுகம் செய்யும் கனமான நூல்கள் அவை. அவற்றில் பெரும்பகுதியை இளமைமுதலே படித்திருக்கிறேன். இந்திய இலக்கியம் பற்றிய என் புரிதலை அவை உருவாக்கின.
இன்று இந்திய இலக்கியத்தில் என்ன நிகழ்கிறது என்று அறிவது மிகப்பெரிய சவால். உதிரியாக நூல்கள் நமக்குக் கிடைக்கும். முழுச்சித்திரம் மிக அரிது. அண்மைக்காலம் வரை டாக்டர் கே.எம்.ஜார்ஜ் தொகுத்த இந்திய இலக்கிய அறிமுக நூல் மட்டுமே இருந்தது. நான் முதல்முறை வாங்கிய தொகுதிகள் பழையதாகி அழிந்தபின் இன்னொரு பிரதி வாங்கிய நூல் அது. அதன்பின் அத்தகைய ஒரு நூல் வெளிவரவில்லை.
சிவசங்கரி தினமணிக் கதிர் இதழில் முன்பு தொடர்ச்சியாக இந்திய இலக்கியங்களை அறிமுகம் செய்து கட்டுரைகளும், பேட்டிகளும் எழுதிவந்தார். கூடவே கதைகளின் மொழியாக்கங்களும் வெளிவந்தன. முழுநூலாக அவற்றை நான் பார்க்க நிகழவில்லை. அண்மையில் அந்நூலின் மூன்று பெருந்தொகுதிகளைக் கண்டேன். உண்மையில் இந்திய மொழிகளிலேயேகூட அண்மையில் நிகழ்ந்த மாபெரும் இலக்கியச் செயல்பாடு என ஐயமின்றி இதைச் சொல்லமுடியும்.
‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்னும் இந்நூல் சிவசங்கரியின் வாழ்நாள் சாதனைப் படைப்பு.முதல் தொகுப்பில் மலையாளம் கன்னடம் தெலுங்கு தமிழ் ஆகிய தென்னிந்திய மொழிகளின் படைப்புகள். இரண்டாம் தொகுப்பில் அஸாமி, வங்காளி, மணிப்பூரி,,நேபாளி, ஒரியா ஆகிய கிழக்கிந்திய மொழிப்படைப்புகள். மூன்றாம் தொகுதியில் கொங்கணி, மராத்தி, குஜராத்தி, சிந்தி என்னும் மைய இந்திய மொழிகள். நான்காம் தொகுப்பில் வடக்கிந்தியாவின் காஷ்மீரி, பஞ்சாபி, உருது, இந்தி மற்றும் சம்ஸ்கிருதம்.
இந்திய நவீன இலக்கியத்தின் முழுமையான சித்திரத்தை அளிக்கும் இதைப்போன்ற இன்னொரு நூல் நானறிய இந்தியாவின் எந்த மொழியிலும் உருவாக்கப்படவில்லை. பல்கலைக்கழக உதவி, அமைப்புப்பின்புலம் இல்லாமல் தனிமுயற்சியால் இதை சிவசங்கரி நிகழ்த்தியிருப்பது வணங்கத்தக்கச் சாதனை. நான் மலையாள டி.சி.புத்தக நிறுவனத்திடம் இந்நூலை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்யும்படி பரிந்துரைத்தேன்.
சிவசங்கரியின் தெரிவுகள் மிகச்சிறப்பாக உள்ளன. உதாரணமாக, மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர், கமலாதாஸ், தகழி சிவசங்கரப்பிள்ளை, வைக்கம் முகமது பஷீர், சுகதகுமாரி, சேது, பாலசந்திரன் சுள்ளிக்காடு ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.சிவசங்கரி சுருக்கமாக கேரளம் பற்றிய ஓர் அறிமுகத்தை அளிக்கிறார். எம்.டி.வாசுதேவன் நாயர், கமலாதாஸ், தகழி சிவசங்கரப்பிள்ளை, வைக்கம் முகமது பஷீர்,சுகத குமாரி, சேது, பாலசந்திரன் சுள்ளிக்காடு ஆகியோரின் பேட்டிகள் இடம்பெற்றுள்ளன.
யதார்த்தச் செவ்வியல், நவீனத்துவம் என இரு அலைகளும் மிகச்சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக ஐயப்பப் பணிக்கர் மலையாள நவீன இலக்கியம் பற்றி எழுதிய விரிவான ஓர் ஆய்வுக்கட்டுரையும் உள்ளது.
மலையாள இலக்கியம் மட்டுமே ஆல்பம் அளவில் 120 பக்கங்கள். சாதாரண அளவு என்றால் இருநூறு பக்கமுள்ள தனிநூல். மலையாள இலக்கியம் பற்றி ஒட்டுமொத்தமான புரிதலை அளிக்கும் ஒரு நூலாக அதை கருதமுடியும். அத்தகைய ஒரு நூல் இன்னொன்று இன்னமும் தமிழில் எழுதப்படவில்லை. கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளுக்குக் கூட முழுமையான அறிமுகச்சித்திரம் இப்பகுதி என மலையாள இலக்கியம் அறிந்தவன் என்னும் வகையில் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.
நானறிந்த இன்னொரு இலக்கிய உலகையும் ஒப்பிட்டுப்பார்த்தேன். கன்னடத்தில் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, சிவராம் காரந்த்,எஸ்.எல்.பைரப்பா,தேவனூரு மகாதேவா, சதுரங்க, எல்.எஸ்.சேஷகிரி ராவ் ஆகியோரின் பேட்டியும் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. காரந்த், பைரப்பா ஆகியோர் யதார்த்தவாத மரபைச் சேர்ந்தவர்கள். சதுரங்க, அனந்தமூர்த்தி இருவரும் நவ்யா எனப்படும் நவீனத்துவர்கள். தேவனூரு மகாதேவா தலித் இலக்கியத்தின் பெரும் படைப்பாளி. சேஷகிரி ராவ் மரபான அறிஞர்.
கன்னட இலக்கியத்தின் எல்லா பகுதிகளும் மிகச்சரியாகவே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன. இந்நூலில் உள்ள கட்டுரைகளிலேயே நவீனக் கன்னட இலக்கியம் பற்றி கே.நரசிம்ஹமூர்த்தி எழுதியது மிகவிரிவானது, முழுமையானது. ஒரு சிறு நூல் அளவுக்கே பெரியது.
சட்டென்று தமிழ் வாசகன் தமிழிலக்கியப் பகுதிகளையே எடுத்துப் பார்ப்பான். அப்துல் ரகுமான், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், சு.சமுத்திரம், பிரபஞ்சன், பொன்னீலன், தமிழ்க்குடிமகன் ஆகியோரின் பேட்டிகளும் மாலன், நீல பத்மநாபன் ஆகியோர் எழுதிய தமிழிலக்கிய அறிமுகக் கட்டுரைகளும் உள்ளன. நவீனத் தமிழின் சாதனையாளர்களான அசோகமித்திரனோ, சுந்தர ராமசாமியோ, பிரமிளோ இல்லாத இது என்னவகை தொகுப்பு என்னும் அவநம்பிக்கை எளிமையாக அவனுக்கு வரக்கூடும்.
ஆனால் அது இயல்பானதே. ஏனென்றால் இத்தொகுப்பு உருவான காலகட்டத்தில் 1992-1997 ல் தமிழ் நவீன இலக்கியம் சிற்றிதழுலகுக்குள் இருந்து அப்போதுதான் வெளிவரத் தொடங்கியிருந்தது. இலக்கியவிமர்சனக் கருத்துக்கள் வேரூன்றத் தொடங்கியிருக்கவில்லை. இன்று நவீன இலக்கியத்தின் விமர்சன அளவுகோல்கள் பரவலாக ஏற்கப்பட்டுவிட்டன. இன்று, சு.சமுத்திரம் அல்லது மாலன் போன்ற ஒருவர் இத்தகைய தொகுப்பில் இடம்பெற இயலாது.
நான் வாசித்தவரை இந்நூலில் உள்ள மிகப்பலவீனமான கட்டுரை மாலன் எழுதிய தமிழிலக்கிய அறிமுகம். அவருக்கு நவீன இலக்கிய அழகியல், அதன் அறிவுச்சூழல் முற்றாகவே அறிமுகமில்லை. அவர் புழங்கிய சாவி -குமுதம் மனநிலையில் நின்று இலக்கியத்தை அணுகியிருக்கிறார்.
இத்தகைய தொகுதி எவருக்காக உருவாக்கப்படுவது என்னும் எளிய பொதுப்புத்தியும் மாலனுக்கு இல்லை. ஒரு வணிக வார இதழில் நவீன இலக்கியம் பற்றி எழுதப்படும் வம்புக்கட்டுரை ஒன்றை அவர் எழுதியிருக்கிறார். இத்தொகுதியில் உள்ள எல்லா கட்டுரையும் தரவுகள் வழியாக என்ன நடந்தது என்பதன் சித்திரத்தை அளிக்கின்றன. அதுவே இலக்கியவரலாற்று வாசகனுக்கு அவசியமானது.
மாறாக இக்கட்டுரை மட்டும் சம்பந்தமே இல்லாமல் இவருடைய காழ்ப்புகள், கசப்புகள் மட்டுமே வெளிப்படும் எதிர்மறைத்தன்மை கொண்டுள்ளது. இத்தகைய ஒரு மதிப்புமிக்க தொகுப்பில் அதற்கான அறிவுத்தகுதி இல்லாத, அதைப்பற்றிய எந்தப்புரிதலுமில்லாத ஒருவர் எழுத நேரிட்டது துரதிருஷ்டவசமானதே.
நல்ல வேளையாக நீல பத்மநாபனின் கட்டுரை விரிவாக தமிழிலக்கிய அலைகள் அனைத்தைப் பற்றிய தரவுகளையும் அளிக்கிறது. இண்டியன் லிட்டரேச்சர் இதழுக்காக அவர் முன்னரே எழுதிய கட்டுரை ஒன்றின் தமிழாக்கம் அது.
ஆந்திர இலக்கியம் பற்றிய தொகுப்பிலும் இச்சிக்கல் உள்ளது. அங்கே இலக்கியவிமர்சனம் கூரானது அல்ல. ஆகவே கல்வித்துறை சார்ந்து எல்லா இடங்களிலும் இடம்பெறுபவர்களே இதில் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆருத்ரா மட்டுமே இலக்கிய மதிப்பு கொண்டவர்.
வட இந்திய எழுத்து நமக்கு பெரும்பாலும் இந்தி வழியாகவே அறிமுகமாகியிருக்கிறது. அந்த இரண்டாவது கை மொழியாக்கத்தால் மொழிபெயர்ப்பாளரின் தனித்தேர்வு என ஒன்று இல்லாமலாகிறது. காஷ்மீரி, பஞ்சாபி, கொங்கணி, சிந்தி, குஜராத்தி இலக்கியம் பற்றிய நம் அறிவு மிக மேலோட்டமானதுதான். மராட்டிய இலக்கியத்தில் இதிலுள்ள தெரிவுகள் சிறப்பானவை என்று சொல்லமுடியும் பாலசந்திர நொமாடே, திலீப் சித்ரே , லட்சுமண் கெய்க்வாட் ஆகியோர் எனக்கு நன்கு தெரிந்தவர்கள்.
வடகிழக்கு இலக்கியம் இந்தி அல்லது வங்காளி வழியாகவே தமிழில் பெரும்பாலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள்ளது. அஸாம் மொழியில் இருந்து சில மொழியாக்கங்கள் வெளிவந்துள்ளன. ஒரிய மொழி அதைவிட குறைவாக. மற்ற வடகிழக்கு மொழிகளின் இலக்கியங்கள் நாம் அறியாதவை. ஆனால் வடகிடக்குக்கு ஒரு பெரிய சாதக அம்சம் உள்ளது. அவர்களின் பல மொழிகள் ஆங்கில எழுத்துருவில் எழுதப்படுவன. அங்கே ஆங்கிலக் கல்வியும் வலுவானது. ஆகவே பல ஆசிரியர்கள் அண்மையில் ஆங்கிலம் வழியாக இந்தியா முழுக்க அறியப்பட்டவர்கள் ஆகியுள்ளனர்
வங்க இலக்கியத்தில் சுனில் கங்கோபாத்யாய, மகாஸ்வேதா தேவி, பிமல் கர் ஆகிய அறியப்பட்ட முகங்கள் உள்ளன. அஜித்குமார் கோஷ் வங்க மொழி பற்றி எழுதியிருக்கும் கட்டுரையும் முக்கியமானது ஒரிய இலக்கியப் பகுதியிலும் ரமாகாந்த் ரத், பிரதீபா ராய், மனோஜ் தாஸ் அறியப்பட்டவர்கள். இத்தொகுதியில் அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா, மேகாலயா போன்ற எல்லையோர மாவட்டங்களின் இடம் குறைவே. இத்தொகுதி வெளிவந்தபின் சென்ற இருபத்தைந்தாண்டுகளாகவே அவை தங்கள் இலக்கிய இடத்தை இந்திய இலக்கியச் சூழலில் அடைந்துள்ளன.
இந்திய இலக்கியம் பற்றிய ஒரு முழுமையான பார்வையை அளிக்கும் மிக முக்கியமான தொகுதி இது. 1998ல் முதல் பதிப்பு வந்தபின் இப்போது வானதி பதிப்பகம் மூன்றாம் பதிப்பை வெளியிடுகிறது. எந்த ஒரு இலக்கிய நூலகத்திலும் இருந்தாகவேண்டிய ஒரு ஆக்கம். உண்மையில் ஒரு பயணத்தின்போது அந்த ஊர் பற்றிய ஓரிரு இலக்கியப்படைப்புகளை வாசித்துவிட்டுச் செல்வது மிகப்பெரிய ஓர் அனுபவத்தை அளிக்கிறது. அதை எங்கள் பயணங்களில் செய்துபார்த்துள்ளோம். அதற்கு இத்தகைய தொகுதிகள் உதவியானவை.
சிவசங்கரியின் தனிப்பெரும் இலக்கியச் சாதனை என இந்தத் தொகுதியை ஐயமில்லாமல் சொல்லமுடியும். இந்த எண்ணமும் பிரமிப்பூட்டும் அர்ப்பணிப்புடன் பல்லாண்டு உழைப்பில் இதைச் செய்து முடித்துள்ளமையும் பெருமதிப்புக்குரியவை.
இராவுத்தர் சாஹிபு
இராவுத்தர் சாஹிபு (வலி) (மறைவு: பொ.யு. 1613) புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினத்தில் அடங்கப் பெற்றிருக்கும் இஸ்லாமிய மதஞானி.
இராவுத்தர் சாகிப் (வலி)
இராவுத்தர் சாகிப் (வலி) – தமிழ் விக்கி
சவார்க்கர், கடிதங்கள்
ஜெ
வசுமித்ர முகநூல் பதிவு இது. காந்தி படுகொலையில் சவார்க்கர் குற்றவாளி அல்ல. அம்பேத்கர்.இதை வாசித்தபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. இன்றைய சவார்க்கர் இரண்டாம் பாகம் வழியே அம்பேத்கார் மீதான புரிதல் தெளிவாகியது. மிகச் சரியான விதத்தில் தர்க்கமும், உள்ளுணர்வும் கலந்த எழுத்து. மிக்க நன்றி.
ராஜகோபால்.
அன்புள்ள ராஜகோபால்
அம்பேத்கருக்கு இந்துமகாசபையுடன் பலவகையிலும் நல்லுறவு இருந்தது. அதெல்லாம் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டவை. அவர்களின் சாதிசார்ந்த பார்வைகள், தேசியம் சார்ந்த பார்வைகள் அவருக்கு உவப்பானவையாக இருக்கவில்லை. இருந்தும் அந்தப் புரிதல் உருவானது அவர்களுக்கிடையே இருந்த நவீனத்துவம் சார்ந்த பொதுவான அம்சத்தால்தான். அது மிகமுக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு கூறு. அதை தவிர்த்தால் சவார்க்கரைப் புரிந்துகொள்ள முடியாது.
ஜெ
அன்புள்ள ஜெ
சாவர்க்கர் பற்றிய கட்டுரையை அதற்குள் அரைகுறையாக வாசித்து, துண்டு துண்டாகப் பிய்த்து, தங்களுக்குத் தோன்றியதை எழுத ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு வேறுவழியே இல்லை. அவர்களை குழப்புவதையே நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அறிந்தவை எல்லாம் ஒற்றைமுத்திரை அடிப்பது. ஏனென்றால் அவர்கள் அதற்கு முன் தங்களுக்கு ஒற்றைமுத்திரை அடித்துக்கொண்டவர்கள். அவர்களால் சிக்கலான, பல தளங்கள் கொண்ட எதையும் புரிந்துகொள்ளவே முடியாது.
சாவர்க்கர் பற்றிய புரிதலில் அவருடைய நவீனத்துவப்பார்வை என்பது ஒரு புதிய அம்சம். அவரிடமிருந்தது அவர் ஐரோப்பாவில் இருந்து பெற்றுக்கொண்ட கலாச்சாரத்தேசியப் பார்வை. அதற்கு இந்து மத கலாச்சார அம்சங்களை அவர் எடுத்துக்கொண்டார். இன்னொரு வகையில் அதைத்தானே மொழித்தேசியம், இனத்தேசியம் பேசுபவர்களும் செய்தார்கள்? சாவர்க்கர் பேசிய வெறுப்பின் மொழிக்கும் ஈ.வெ.ரா பேசிய மொழிக்கும் என்ன வேறுபாடு?
சாந்தராஜ்
அன்புள்ள சாந்தராஜ்,
பொதுவாக இத்தளங்களில் பேசுபவர்கள் ஒரு வெறுப்புத்தரப்பை எதிர்க்கையில் இன்னொன்றின் சார்பில் நின்றிருப்பார்கள். தங்கள் தரப்புக்கான வெறுப்புக்கு வரலாற்று நியாயம் உண்டு, சமூகநியாயம் உண்டு, அது நன்மைதந்த வெறுப்பு என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் ஒரு வெறுப்புத்தரப்பை ஆதரிப்பவர் இன்னொரு வெறுப்புத்தரப்பு செயல்படுவதற்கான நியாயத்தை அளித்து விடுகிறார்.
எந்த விஷயத்துக்கும் வரலாற்று நியாயங்களை உருவாக்க முடியும். அதையே வரலாற்றுவாதம் ( Historicism) என்கிறோம். அவ்வாறு எல்லாவற்றுக்கு வரலாற்று நியாயம் உருவாக்குவதையே நவீனத்துவ சிந்தனையின் அடிப்படை என சொல்லி அதை பின்னவீனத்துவர் நிராகரிக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை எல்லா வகையான வெறுப்புசார்ந்த பார்வையையும், எல்லாவகையான கலாச்சாரத்தேசியப் பார்வையையும் (மதம் இனம் மொழி எதுவானாலும்) எதிர்ப்பதையே முப்பதாண்டுகளாகச் செய்து வருகிறேன். இந்த தளத்தில் 2002 முதல் தொடர்ச்சியாக அதையே எழுதி வருகிறேன்
ஜெ
மழித்தலும் நீட்டலும் -கடிதம்
அன்புள்ள ஜெ,
நான் கூந்தல் தொகுப்பை இதுவரை வாசிக்கவில்லை. அந்த தொகுதி நீண்டகாலமாக எங்கேயும் கிடைக்காமலிருந்தது என நினைக்கிறேன். அந்தக்கதைகளும் பரவலாக கிடைப்பதில்லை. அக்கதைகளில் கூந்தல் குமுதம் இதழில் வெளிவந்திருக்கிறது. ஆச்சரியம்தான். மிக வித்தியாசமான வடிவமும் நுட்பமான பேசுபொருளும்கொண்ட கதை இது. இதை குமுதம் வெளியிட்டது ஓர் ஆச்சரியம்தான்.
எனக்கு கூந்த்தல் மிகவும் ஆழமாக பாதித்த கதை. 1999ல் நான் என் கூந்தலை வெட்டிக்கொண்டேன். அன்றைக்கு பாப் வெட்டிக்கொள்வது எங்களூரில் ஒரு பெரிய புரட்சி. அமங்கலமான விஷயம். என்னை பல கல்யாணங்களில் பின்னால் போய் நில் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் டெல்லியில் எனக்கு அது ஒரு தன்னம்பிக்கையையும் அடையாளத்தையும் அளித்தது.
அண்மையில் கல்யாணராமன் என்ற ஆள் இந்திராகாந்தி பாப் வைத்திருந்ததனால் அவரை மொட்டைப்பிராமணப்பெண் என்று சொல்லி காஞ்சி சங்கராச்சாரி பார்க்க மறுத்தார் என்று சொல்லியிருந்தார். இந்த மாதிரி ஆசாமிகளெல்லாம் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம். ஆனால் ஒன்றைச் சொல்லவேண்டும். இந்த கல்யாணராமன் என்ற பிரகிருதி ஏதோ வாய்தவறி தப்பாய்ச் சொல்லிவிட்டார் என்று பொங்கும் பிராமணர்கள் ஒன்று நினைக்கவேண்டும். அவர் ஒன்றும் அப்படி வாய்தவறிச் சொல்லவில்லை. இந்த பிராமணர்கள் கொண்டாடும் காஞ்சி சங்கராச்சாரியும் அதைத்தான் சொல்லியிருக்கிறார். இவர் சொல்வதெல்லாம் அவர் சொன்னதைத்தான். அவர் கடவுள் இவர் உளறுவாயர் என்பதெல்லாம் பிராமணர்களின் இரட்டைவாக்கு ஜாலம்.
சரி, கதைக்கு வருகிறேன். நான் பிராமணக்குடும்பத்தில் பிறந்தவள். பிராமணரை கல்யாணம் செய்துகொண்டவள். ஆனால் என்னை பிராமணர்கள் ஒதுக்கிவைத்தார்கள். அன்றைக்கு அதைச்செய்த அத்தனைபேருடைய மகள்களும் இன்றைக்கு கூந்தலைவெட்டிக்கொண்டு அமெரிக்காவில் இருக்கிறார்கள். எனக்கு முன் பாட்டிகளின் கூந்தலை வெட்டி இருட்டறைக்குள் தள்ளியவர்களின் பேரக்குழந்தைகள் அவர்களெல்லாம். ஆனால் கூடவே காஞ்சி சங்கராச்சாரி மனித தெய்வம் என்று பசப்புவார்கள். மிகக்கூர்மையான கதை அது. எனக்கு அந்தக்கதையை கடந்துபோக இன்னும் ரொம்பநாள் ஆகும்
மைதிலி ராகவன்
IN THE BEGINNING
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்களது 2015 ஆம் ஆண்டு அமெரிக்க பயணத்திற்கு ஆறு மாதங்கள் முன்பு போர்ட்லாண்ட் பல்கலைக் கழகத்திற்கு வந்த போது இரு மனதாகத் தான் இருந்தது. பொறியியல் பயில ஆர்வம் இல்லை. உடன் வந்த நண்பன் படிப்பை பாதியில் நிறுத்தி நம் ஊருக்கு திரும்பி விட்டிருந்தான். இளங்கலை பயில்களில் அவன் தான் உங்கள் படைப்பை எனக்கு அறிமுகம் செய்தது. அவனுக்கு தக்க சூழல் அமையவில்லை.
எழுத்து, இலக்கியம் என்ற கனவுடன் நானும் இந்தியா திரும்பிவிடு வதாகவே இருந்தேன். என் குடும்ப பொருளாதாரச் சுழல் மட்டுமே தடுத்தது. பிள்ளையார்பட்டிக்கு அருகே உள்ள சிராவயல் எனது கிராமம். விவசாயக் குடும்பம். ஊரில் அப்பா சில சிறு தொழில்கள் செய்ய முயற்சித்து தோல்வி அடைந்திருந்தார். என் படிப்புக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. வட்டியோடு வட்டியாக ஆகட்டும் என அவர் வயலை அடகு வைத்து கந்து வட்டிக்கு நான்கு லட்சம் வாங்கித் தந்திருந்தார். அதை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு தைரியத்தில் வந்து விட்டேன். மூன்று மாதங்கள் தான் சமாளிக்க முடிந்தது.
அரங்கா விஷ்ணுபுர நண்பர்கள் விசு, அரவிந்த் இருவருடனும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களது ஆலோசனைகள் உதவியாக இருந்தன. கொஞ்ச நாட்களிலேயே உங்களது பயணமும் உறுதியானது. கலிபோர்னியாவில் உங்களை சந்திக்க வருகையில் வெண்முகில் நகரம் முடித்து இந்திர நீலம் எழுதிக் கொண்டிருந்தீர்கள் என நினைவு. நானும் அது வரை வெண்முரசு வாசித்திருந்தேன். என் குழப்பங்களை சொன்னதும் ‘வெண்முரசு, இலக்கியம் எல்லாம் இப்போது வேண்டாம். படிப்பை முடித்து வேலையில் சேருங்கள் பிறகு தொடரலாம்’ என்றீர்கள். அவற்றில் இருந்து கொஞ்ச காலம் நானும் விலகியே இருந்தேன்.
கலைப் படங்கள் பார்க்கத் தொடங்கியது அந்த இடைவெளியில் தான். எதர்சையாக போர்ட்லாண்டில் உள்ள ஹாலிவுட் திரையரங்கில் சத்திய ஜித் ரே யின் ‘பதேர் பாஞ்சாலி’ புதிய 4K ரெஸ்டோரேஷனில் திரையிடப்படுவதாக செய்தி கண்டு சென்றவன் அவர்களுது திரையிடல்களுக்கு தொடர்ந்து செல்லத் தொடங்கினேன். பெர்க்மென், குரசோவா, ராபர்ட் ப்ரெஸ்ஸோன் , கிரிஸ்டோப் கிஎஸ்லோவ்ஸ்கி என பல இயக்குனர்களின் படங்கள் அறிமுகம் ஆகின.
ஒரு சிறந்த இலக்கியப் படைப்பை ஒத்த அழுத்தத்தை எனக்கு முதலில் திரையில் தந்தது தார்காவஸ்கியின் ‘ஆண்ட்ரேய் ரூப்ளாவ்’. ஒரு கலைஞன் தன் வளர்பாதையில் எதிர் கொள்ளும் அறச் சிக்கல்களை, அலைக்களிப்புகளை கடந்து செல்லுதல் என பல பாகங்களாக விரிந்து செல்லும் படம். ரஷ்ய இலக்கியம் வாசிக்கும் அதே அனுபவத்தை தந்தது. சினிமாவில் டால்ஸ்டாயின், தாஸ்தாவெஸ்கியின் இலக்கிய ஆளுமைகளை ஒத்தது தார்கோவஸ்கியின் ஆளுமை.
அமெரிக்காவில் இருந்து கொண்டு இப்படி ருசியக் கலைஞர்கள் மீது பித்து கொண்டு அலைகிறாய் என எனது ரூம் மேட் விவேக் மண்டையில் குட்டாத குறையாக அமர வைத்து அமெரிக்க இயக்குனர்களின் படங்களை அறிமுகப் படுத்தினான். விவேக் சென்னையில் வளர்ந்தவன். சினிமா பிரியன். இந்தியாவில் இருந்து வரும் போதே ஒரு ஹார்ட் டிஸ்க் முழுதும் படங்கள் தரவிறக்கி கொண்டு வந்திருந்தான். நூறு படங்களாவது இருக்கும்.
ஸ்டான்லி குபிரிக்கின் ‘2001, ஏ ஸ்பேஸ் ஒடிசி’, மார்ட்டின் ஸ்கோர்ஸிஸே, ஹிட்ச் காக்கின் ‘birds’ என நீண்ட வரிசை. வாரம் இரண்டு படங்களாவது பார்த்துவிடுவோம். அந்தப் படங்கள் பிடித்திருந்தன ஆனால் ‘ஆண்ட்ரேய் ரூப்ளாவ் ‘ போன்ற தாக்கத்தைத் தரவில்லை என்றேன்.
‘அதிகம் பேசாதே! இந்த வாரம் பரீட்சை முடியட்டும் உனக்கு டெரன்ஸ் மாலிக்கின் படம் ஒன்றை காண்பிக்கிறேன், அதன் பின்னும் நீ ருஷ்ய துதி பாடுகிறாயா என பார்ப்போம்’ என்றான்.
டெரன்ஸ் மாலிக் என்ற பெயர் மட்டும் உங்கள் வழியே அஜிதன் குறித்து நீங்கள் பேசும் போது அறிமுகமாகி இருந்தது. அதே பெயரை விவேக் சொன்னது மேலும் ஆர்வத்தை தூண்டியது. அவனும் ‘ட்ரீ ஆப் லைப்’ தான் போட்டுக் காண்பித்தான். முதல் முறை பார்த்ததுமே டெரன்ஸ் மாலிக்கின் படங்கள் என்னுடன் என்றும் இருக்கும் என உணர்ந்து கொண்டேன்.
விவேக் ‘நீ அடிமையாகி விடுவாய் என எனக்குத் தெரியும் அதனால் தான் இந்தப் படத்தில் இருந்து தொடங்க வில்லை’, என்றான். அவனுக்கும் ‘ஆண்ட்ரேய் ருப்ளேவ்’ பிடிக்கும் என்னைச் சீண்டுவதற்காகவே அதை வெளிக் காட்டவில்லை. மாலிக் படங்களுக்கும், தார்காவ்ஸ்கியின் படங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை Grace vs Nature போன்ற தத்துவ முரண்களை அவை காட்சியாக்குகின்றன என்பதில் தான். சில மாதங்களிலே விவேக்கும் இந்தியா திரும்பி விட்டான்.
அஜிதனுடன் உரையாட தோன்றியது. அவரை 2012ல் விஷ்ணுபுர விருது விழாவின் போது ஓரே ஒரு முறை சந்தித்தது. பெங்களூரில் படிப்பை முடித்ததும் வந்திருந்தார். அதன்பின் அவரை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. அடுத்த முறை நான் இந்தியா வந்த போது கடலூர் சீனுவிடம் அஜிதனையும் இமையப் பயணத்திற்கு அழைத்துப் பாருங்கள் என கேட்டேன். அவர் தத்துவம் பயில சென்று விட்டதாகச் சொன்னார். அதன் பிறகு சென்ற வருடம் தான் அவரை நாகர் கோவிலிலும் , வெள்ளி மலையிலும் சந்திக்க முடிந்தது. அவருடன் உரையாட தொடங்கியதுமே நெடுநாள் பழகிய தோழன் போல உணர முடிந்தது. நேரடி தொடர்பில் இல்லை என்றாலும் உங்கள் தளத்தின் வழியாகவும், சீனுவின் வழியாகவும் அவர் என்னுடன் ஒரு தொடர் உரையாடலில் இருந்துள்ளார்.
ஜனவரியில் மீண்டும் சென்னையில் சந்தித்தோம். புத்தகக் கண்காட்சியின் போது. என் குறும்படம் IN THE BEGINNING ஐ அவருக்கு காட்டினேன். அமெரிக்க சிறையில் இருந்து வெளிவரும் ஒருவன் சந்திக்கும் இடர்கள் குறித்த படம். டெரன்ஸ் மாலிக்கின் சாயலில் உள்ளது. வாழ்த்துக்கள் என்றார். சீனுவும், கே பி வினோத்தும் பார்த்ததும் நிச்சயம் திரைத் திருவிழாக்களுக்கு அனுப்பச் சொன்னார்கள். அந்த முயற்சிகளை தொடங்கி உள்ளேன்.
நண்பர்கள் படத்தின் ட்ரைலரை இங்கு பார்க்கலாம்
போர்ட்லாண்டில் உள்ள ஹாலிவுட் திரையரங்கில் மார்ச் 26 மதியம் இரண்டு மணிக்கு படத்தின் முதல் திரையிடல் நிகழ உள்ளது. படத்தில் நடித்துள்ள பெரும்பாலானவர்கள் சிறைக்குச் சென்று விட்டு திரும்பியவர்கள். சிலர் சிறை தண்டனையின் போது நாடங்களில் பங்கேற்பதன் வாயிலாக நடிக்க கற்றுக் கொண்டவர்கள். திரையிடலைத் தொடர்ந்து அவர்களுடனான ஒரு உரையாடலையும் ஒருங்கிணைப்பதற்காக ஓரிகான் மாநிலத்தின் humanities fund ல் இருந்து நிதி அளித்திருக்கிறார்கள். நம் விஷ்ணுபுர நண்பர்கள் விசுவும், சுஜாதாவும் வருகிறார்கள். சௌந்தர் தொடர்ந்து உதவுகிறார். அவர்களுக்கு நன்றி. பிற நண்பர்கள் வாய்ப்பிருந்தால் வரவும்.
படம் குறித்து இங்குள்ள KXRW எனும் வானொலியில் நேர்காணலும், ஓரிகான் மாநிலத்தின் கலை சார்ந்த இனைய இதழில் அறிமுகக் கட்டுரையும் வந்துள்ளது.
எனக்கு கல்லூரியிலோ அல்லது சினிமாவில் வேலை பார்த்தோ கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. உங்கள் வழியாகவும், சீனு, சுனில் , அரங்கா, அஜிதன், மணிகண்டன் என விஷ்ணுபுர நாண்பர்கள் பலரிடத்தும் நான் பயின்றதன் வாயிலாகத் தான் இது போன்ற ஒரு முயற்சியை அமெரிக்காவில் முன்னெடுக்க முடிந்திருக்கின்றது. இன்றும் நான் அதிகம் பயில்வது ஸ்ரீனிவாஸ் , பார்கவி தொடர்ந்து ஒருங்கிணைக்கும் கம்பராமாயண வகுப்புகளிலும், விவாத அரங்குகளிலும் தான். விஷ்ணுபுர நண்பர்களுக்கும், இம்பர் வாரி நாண்பர்களுக்கும் என் நன்றிகள்.
இது ஒரு நல்ல தொடக்கமாக அமைய உங்கள் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வேண்டுகிறேன்!
-பிரபு முருகானந்தம்
April 9, 2023
திருமாவும் விடுதலை சினிமாவும்
“தம்பி காலம்பூரா மக்களை அடிமையா வச்சிருக்கிறது எது? அடியா, உதையா, சாவா என்ன? இல்லை. எத்தனை பேர அடிக்க முடியும்?எல்லோரையும் கொன்னா அடிமையே இருக்கமாட்டானா என்ன? அடிமைய கட்டி வைக்கிற சங்கிலின்னா அது பயம்தான். என்னமோ நடந்துரும்கிற பயம்.. அந்த பயத்த அறுத்தா போதும் விடுதலை தானா வரும். இப்ப அந்த பயத்தை அறுத்துட்டோம்ல. இன்னிக்கு ஒரு ஊருக்குள்ள நுழைஞ்சுருவீங்களா? என்ன? இன்னிக்கு உங்க எலும்புல குளிர் வருதுல்ல. அதை அவன் பார்க்கிறான். அப்ப நாம அடிச்சாலும் வலிக்கும்னு தெரிஞ்சுக்கிறான். நம்மளை பார்த்து அவனும் பயப்படுவானு தெரிஞ்சுகிட்டான்.”
விடுதலை சினிமாவுக்கு ஆதாரமான துணைவன் கதையில் வரும் வரிகள் இவை. 1992ல் இந்தக் கதை எழுதும்போது திருமாவளவன் ’அடங்கமறு, அத்துமீறு’ என்னும் கோஷத்துடன் தலித் மக்களை திரட்ட களமிறங்கியிருந்தார். நீங்கள் எழுதிய வாத்தியார் அல்லது கோனார் கதாபாத்திரத்தில் திருமா சாயல் உண்டா?
தமிழ்க்குமார்
அன்புள்ள தமிழ்க்குமார்,
விடுதலை சினிமா நேரடியான யதார்த்தச் சித்தரிப்பு அல்ல. கலைக்கு நேரடி யதார்த்தம் தேவை இல்லை. நேரடி வரலாறும் தேவை இல்லை. நேரடியான யதார்த்தம், நேரடியான வரலாறு ஆகியவற்றை கலையில் தேடுபவர்களுக்கு கலை என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் எப்போதும் அதை எளிய அரசியல்வாதிகள் செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
நேரடி யதார்த்தம், நேரடி வரலாறு ஆகியவை கலைக்கு ஒருவகையில் எதிரானதும்கூட. அதற்கு ஆவணமதிப்பு மட்டுமே உண்டு. கலை மதிப்பு இல்லை. ஏன்? நேரடியான வரலாற்றில் நிகழ்வுகளுக்கு ஓர் ஒழுங்கு உள்ளது. அந்நிகழ்வுகளை ஒட்டி பொதுவான ஒரு மனப்பதிவு அனைவரிடமும் இருக்கும். அந்த நிகழ்வுகளின் ஒழுங்கையும், அந்த மனப்பதிவுகளையும் மீறி எவராலும் நேரடி வரலாற்றையோ செய்தியையோ கதையாக எழுதவோ சினிமாவாக எடுக்கவோ முடியாது. அவ்வாறு எழுதினாலோ, சினிமாவாக எடுத்தாலோ அந்தப் படைப்பில் எந்த நாளிதழிலும் கிடைக்கும் செய்திகளே இருக்கும். விக்கிப்பீடியாவை சினிமாவாக எடுத்ததுபோல் இருக்கும்.
கலைப்படைப்பில் அதைப் படைப்பவனின் பார்வையும், அவன் முன்வைக்கும் கருத்துமே முக்கியமானவை. அவற்றை முன்வைக்கவே அவன் ஒரு கலைப்படைப்பை உருவாக்குகிறான். அதிலுள்ள புறவாழ்க்கைச் சித்தரிப்பு என்பது அதை உருவாக்கும் கலைஞனின் அகத்திலுள்ள பார்வையையும் கருத்தையும் முன்வைப்பதற்காக அவன் உருவாக்குவது மட்டுமே. ஆகவேதான் அதை புனைவு என்கிறோம். புனைவெழுத்தின் முதல் அடிப்படையே அதிலுள்ள உலகச்சித்தரிப்பும் சரி அதிலுள்ள வாழ்க்கைச் சித்தரிப்பும் சரி அந்த கலைஞனால் புனையப்பட்டவை என்பதுதான். அவன் உருவாக்கிய உலகம் அது.
அந்த உலகை உருவாக்க அவன் வெளியே நிகழ்ந்த வரலாற்றையும், செய்திகளையும் எடுத்துக் கொள்கிறான். அவற்றை தன் போக்கில் கலந்து, தனக்கு தேவையானவற்றை முன்வைத்து, தனக்கு தேவையானபடி சிலவற்றை மாற்றி தன் உலகை உருவாக்குகிறான். அந்த படைப்பின் நோக்கத்திற்கு ஏற்ப அவன் நிகழ்வுகளை அடுக்குகிறான். நிகழ்வுகளுக்கு ஒரு மையத்தை அளிக்கிறான்.
நிஜ வாழ்க்கையிலோ, நிஜ வரலாற்றிலோ நிகழ்வுகளுக்கு அப்படி ஒரு தர்க்கபூர்வமான ஒழுங்கு இருக்காது. அவற்றுக்கு மையம் என ஒன்று இருக்காது. அவற்றில் இருந்து எந்தக் கருத்தையும் நாம் அடைய முடியாது. அவற்றில் மையம் என்றும் கருத்து என்றும் தென்படுபவை முழுக்க நிஜவாழ்க்கையையோ வரலாற்றையோ விளக்குபவர்கள் சொல்வதுதான். அவர்கள் வாழ்க்கை மேலும் வரலாற்றின்மேலும் ஏற்றுவதுதான்.
அவ்வாறு வாழ்க்கையையும் வரலாற்றையும் விளக்குபவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப வாழ்க்கையையும் வரலாற்றையும் புனைந்துதான் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் சொல்வது ‘உண்மை’ என்று வாதிடுவார்கள். அதை ஏற்காதவர்களை வசைபாடுவார்கள். அந்த அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் எளிய தொண்டர்கள் வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் அவர்கள் சொன்னபடி அர்த்தமும் மையமும் உண்டு என நம்பி கூச்சலிடுவார்கள்.
ஆனால் கலைஞன் வாழ்க்கையையும் வரலாற்றையும் புனைந்து முன்வைப்பதாக அவனே சொல்கிறான். இது வரலாறு அல்ல, நான் புனைந்த வரலாறு என்றே அவன் சொல்கிறான். இதில் நான் முன்வைக்கும் பார்வை உள்ளது, அந்தப் பார்வையை நீங்கள் பரிசீலித்துப் பாருங்கள் என்று மட்டும்தான் அவன் சொல்கிறான். ஆனால் அரசியல்வாதி சொல்லுவதெல்லாம் ‘உண்மை’ என்று நம்பும் எளிய மனம் கொண்ட கும்பல்கள் கலைஞன் அதே ‘உண்மையை’ அப்படியே தானும் சொல்லாவிட்டால் வசைபாடுகின்றன.
*
விடுதலை சினிமாவுக்கு வருகிறேன்.
1967ல் வங்காளத்தில் நக்சல்பாரி என்னும் ஊரில் ஒரு ஆயுதம் தாங்கிய பழங்குடியினரின் கிளர்ச்சி நிகழ்ந்தது. அதை ஒருங்கிணைத்தவர்கள் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆகிய இரண்டில் இருந்தும் கருத்துமாறுபாடு கொண்டு பிரிந்து சென்ற ஒரு குழுவினர். அவர்கள் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்) என தங்களை அழைத்துக் கொண்டனர். 1969ல் அதை ஒரு கட்சியாக தொடங்கினர்.
அவர்களுக்கும் முந்தைய இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கும் என்ன முரண்பாடு? அதற்கு ஒரு வரலாற்றுச் சித்திரம் உண்டு. 1925 ல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தொடங்கப்பட்டது. உலகம் முழுக்க கம்யூனிஸ்டு இயக்கங்கள் மக்களை ஆயுதமேந்தச் செய்து, வன்முறைப்புரட்சி வழியாக அரசை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றி, கம்யூனிச அமைப்பை கொண்டுவருவதையே ஒரே செயல்முறையாக கொண்டிருந்தார்கள். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் அந்த வழியையே பின்பற்றியது.
1947ல் இந்தியா சுதந்திரம் பெற்று காந்தியின் வழிகாட்டலில் நேருவும் பட்டேலும் காபந்து அரசை அமைத்தனர். அந்த அரசு இன்னும் வலுவாக நிலைகொள்ளவில்லை, ஆகவே அந்த அரசை எளிதில் வீழ்த்தலாம் என கணக்கிட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி 1948 ல் கல்கத்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்திய அரசின்மேல் ஆயுதப்போரை அறிவித்தது. அப்போரை பட்டேல் போலீஸ் நடவடிக்கை வழியாக ஒடுக்கினார்.
விளைவாக இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி ஆயுதப்போராட்ட வழியை கைவிட்டு ஜனநாயக வழிமுறையை தேர்ந்தெடுத்துக் கொண்டது. 1957ல் கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி தேர்தல் வழியாக ஆட்சியைப் பிடித்தது. உலக அளவிலேயே ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டு, தேர்தல் வழியாக ஆட்சியை அடைந்த முதல் கம்யூனிஸ்டுக் கட்சி இந்திய கம்யூனிஸ்டு கட்சிதான்.
இந்நிலையில் 1961 முதல் சோவியத் ருஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எல்லைத் தகராறு மூண்டது. இரண்டு கம்யூனிஸ்டு நாடுகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. விளைவாக இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் இரண்டாகியது. கடுமையான மோதல்களுக்குப்பின் சீன ஆதரவு கொண்டவர்கள் 1964ல் பிரிந்து இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)ஐ தொடங்கினர். ரஷ்ய ஆதரவு கொண்டவர்கள் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியாக நீடித்தனர். சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ. என இரு கட்சிகளாக இன்றும் நீடிக்கின்றனர்.
இப்பிரிவினையின் போது கேரளத்திலும் வங்காளத்திலும் இவ்விரு பிரிவுகளும் கடுமையான ஆயுதம்தாங்கிய பூசல்களில் ஈடுபட்டனர். ஏராளமான கொலைகள் நிகழ்ந்தன. சி.பி.ஐ கட்சி கம்யூனிஸ்டுகளின் நேர் எதிரியான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. இச்சூழலில்தான் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சிக்குச் சென்றவர்கள் 1967ல் அதிலிருந்தும் விலகிச் சென்றனர். அந்த விலகலுக்கு ஓர் அமைப்பு உருவாக்கியளித்தவர் சாரு மஜூம்தார். அவருக்கு உதவியவர் பழங்குடித் தலைவரான கனு சன்யால்.
எம்.எல் கட்சிக்கும் மற்ற கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்குமான முரண்பாடு இதுதான். மார்க்ஸின் கொள்கைப்படி முதலாளித்துவம் அதன் உள்முரண்பாடுகளால் தானாகவே வீழ்ச்சி அடையும். ஒரு பெரிய மரம் பட்டுப்போகும்போது அந்த இடத்தை புதிய மரம் வளர்ந்து நிரப்புவதுபோல கம்யூனிசம் உருவாகி புதிய உலகை உருவாக்கும். முதலாளித்துவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தி, அதை மேலும் பலவீனப்படுத்தி, தொழிலாளர்களை திரட்டி, அமைப்பாக்கி, முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை பயன்படுத்திக்கொள்ளச் செய்வதே கம்யூனிஸ்டுகள் செய்யவேண்டியது.
மார்க்ஸின் இந்த பார்வையில் இருந்து லெனின் முரண்பட்டார். முதலாளித்துவம் முதிர்ந்து முரண்பாடுகளால் சிதையும்வரை காத்திருக்கவேண்டியதில்லை என்றார். மொத்த சமூகமும் மாறவேண்டிய தேவையும் இல்லை. ஆயுதமேந்திய ‘மக்கள் ராணுவங்களை’ உருவாக்கி, அவற்றைக்கொண்டு முதலாளித்துவ அரசை தாக்கி, அதை அழித்து, புரட்சி அரசை நிறுவலாம் என்றார். அதற்கு ஆதரவாக உள்ள எல்லா சக்திகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த முதலாளித்துவ அரசின் ராணுவத்தின் ஒரு பிரிவு உதவிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளலாம். அவ்வாறு அங்கே ஒரு புரட்சி 1917ல் வந்தது.
தேர்தல்பாதையை ஏற்றுக்கொண்ட இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி அதுவே மார்க்ஸின் வழிகாட்டல் என்றது. முதலாளித்துவம் தன் முரண்பாடுகளால் பலவீனமுறுவதற்கு முன் ஆயுதப்போர் செய்தால் பயனிருக்காது என்றும், படிப்படியாக மக்களை தயார்ப்படுத்துவதே செய்யக்கூடுவது என்றும் சொன்னது. ஆனால் லெனினின் பாதையே சரியானது என்றும், ஆயுதக்கிளர்ச்சி வழியாக இந்திய அரசை வீழ்த்தலாம் என்றும் நம்பியவர்களே தங்களை மார்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட் என்று சொல்லிக்கொண்டனர்.
அவர்களின் அந்த நம்பிக்கைக்குக் காரணம் சீனா. சீனாவில் மாவோ சே துங் கம்யூனிஸ்டு ஆட்சியை அமைத்திருந்தார். ஆனால் அவருடைய கனவு ஒரு ‘மகாசீனா’ என்ற பேரரசுதான். அதில் வடகிழக்கு இந்தியா முழுமையாக அடங்கும். அப்படியே வங்காள விரிகுடா வரை வந்து டாக்காவை கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. சீனா. ஆகவே சீனா எம்.எல் குழுக்களுக்கு உதவியது. இன்று எம்.எல் குழுக்கள் தங்களை ‘மாவோயிஸ்டுகள்’ என சொல்லிக்கொள்கின்றன.
இந்திய அரசு நக்சலைட் கிளர்ச்சியை போலீஸ் நடவடிக்கை வழியாக ஒடுக்கியது. அப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நக்சலைட் இயக்கத்தை ஒடுக்குவதில் மிகப்பெரும் பங்கு வகித்தது இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிதான். 1975ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமலாகியது. வங்கத்தில் கவர்னர் சித்தார்த்த சங்கர் ரே நக்சலைட்டுகளை வேட்டையாடியபோது இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி அவரை ஆதரித்து நக்சலைட் வேட்டையை முன்னின்று நடத்தியது. கேரளத்தில் சி.அச்சுதமேனன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் கூட்டணி அரசு இருந்தது. அதன் உள்துறையை ஆட்சி செய்தவர் காங்கிரஸ்காரரான கே.கருணாகரன். அந்த அரசுதான் நக்சலைட் வேட்டையை ஆடியது.
இந்த பின்னணிச் சித்திரம் மிக அடிப்படையானது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த எளிய புரிதல்கூட இல்லாமல்தான் இங்கே விடுதலை சினிமாவை ஒட்டி அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
*
வங்காளம், பிகார், ஆந்திரா, கேரளம் ஆகிய மாநிலங்களுடன் ஒப்புநோக்க தமிழகத்தில் எம்.எல் குழுக்களின் அரசியல் நடவடிக்கைகள் மிகமிக குறைவானவையே. வன்முறையை பொறுத்தவரை ஒரு தொடக்கம் மட்டுமே இருந்தது. அதன்பின் அவர்கள் வெறுமே பிரச்சார அரசியலே செய்தார்கள். அவர்கள் அனேகமாக நேரடி வன்முறை எதிலும் பெரிதாக ஈடுபடவில்லை. மிகச்சில இடங்களில் மிக மெல்லிய எதிர்ப்புகளே நிகழ்ந்தன. திருப்பத்தூரில் ஒரு காவலர் கொல்லப்பட்டிருக்கிறார்.
1987 ல் அரியலூர் மருதையாற்றுப் பாலத்தில் நடைபெற்ற ஒரு ரயில்கவிழ்ப்பு எம்.எல்.குழுக்களில் ஒன்றான தமிழர் விடுதலைப் படையின் நாசவேலையால் நிகழ்ந்தது. அது கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறது என்று குற்றம்சாட்டி கர்நாடகத்தை எச்சரிப்பதற்காக நடத்தப்பட்டது. கவிழ்க்கப்பட்டது சென்னையில் இருந்து திருச்சி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில். செத்தவர்கள் எல்லாமே தமிழர்கள். அதில் தண்டிக்கப்பட்ட தடா பெரியசாமி தூக்குத்தண்டனை பெற்று, பின்னர் விடுதலையானார். திருமாவளவனுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடங்கினார். இன்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கியமான தலைவராக திகழ்கிறார்.
1980 களின் இறுதியிலேயே நக்சலைட் (எம்.எல்) குழுக்கள் அரசுடன் மோதமுடியாமல் தேக்கமுற்றுவிட்டன. பல பிரிவுகளாக உடைந்தும் விட்டன. பின்னர் அவர்கள் குறிப்பிடத்தக்க எந்த வன்முறையையும் அதன்பின் நிகழ்த்தவில்லை. சில ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் மட்டுமே அவர்களின் செயல்பாடுகளாகச் சொல்லப்படுகின்றன.
1988 முதல் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி தொடங்கியது. அது எம்.எல். குழுவினர்கள் நடுவே அவநம்பிக்கையை உருவாக்கியது. ‘தேசிய இனப்பிரச்சினை’ சார்ந்த விவாதங்கள் உருவாயின. அதை தொடர்ந்து எம்.எல். இயக்கங்கள் உடைந்துகொண்டே இருந்தன. அதாவது இந்தியா என்பது ஒரு தேசிய இனமா, அல்லது தமிழர் தனி தேசிய இனமா என்னும் விவாதம். இந்தியாவில் கம்யூனிசத்திற்காக போராடவேண்டுமா, அல்லது தமிழகத்தில் கம்யூனிசத்துக்காகப் போராடவேண்டுமா என்ற விவாதம். ஆனால் இந்த விவாதத்தை ஒட்டி கடும் வசைபாடல்கள் நிகழ்ந்தன. பக்கம் பக்கமாக வசைகள் எழுதி குவிக்கப்பட்டன.
இத்தகைய விவாதங்கள் கம்யூனிஸ்டுகளின் மேலோட்டமான பாவனைகள் என்றே தோன்றும். உதாரணமாக, முன்பு டிராட்ஸ்கி உலகை முழுக்க கைப்பற்றியபின் ஒட்டுமொத்தமாகவே கம்யூனிஸத்தை கொண்டுவர முடியும் என்று சொன்னார். இல்லை, கைப்பற்றிய நாடுகளில் கம்யூனிசத்தை கொண்டுவந்தபின் படிப்படியாக உலகை கைப்பற்றலாம் என்றார் ஸ்டாலின். ஏராளமான விவாதங்கள் உலகமெங்கும் நிகழ்ந்தன. ஆனால் அது டிராட்ஸ்கிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான ஆணவப்போர் அல்லது அதிகாரப்போர்தான். அதில் டிராட்ஸ்கி தரப்பு தோற்கடிக்கப்பட்டது. டிராட்ஸ்கி தென்னமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். ஸ்டாலினின் உளவாளி அவரை தொடர்ந்து சென்று தேடிப்பிடித்து பனிக்கோடாரியால் மண்டையை அடித்து உடைத்து கொன்றார். டிராட்ஸ்கியின் மகனும் கொல்லப்பட்டார்.
இந்த விவாதங்களே இன்று மறக்கப்பட்டுவிட்டன. உதாரணமாக ஒன்று சொல்கிறேன். இன்று பொன்பரப்பி தமிழரசனை ஒரு எம்.எல். திருவுருவாக வழிபடுகிறார்கள். அவர் எம்.எல் குழுவைச் சேர்ந்தவர். வங்கி ஒன்றை கொள்ளையிட முயன்றபோது பொதுமக்களால் கொல்லப்பட்டார். அவரை இன்று வழிபடுபவர்களில் தமிழ்த்தேசியர்கள், தலித் செயல்பாட்டாளர்கள், பெரியாரியர்கள் எல்லாம் உண்டு. ஆனால் அவர் உழைப்பாளர் விடுதலைக்கு நிலப்பிரபுக்களையும் தரகுமுதலாளித்துவத்தையும் வெல்வதே முக்கியம் என்று சொன்னார்.
பார்ப்பனர்களுக்கு முன்னரே சாதிமுறை இருந்தது என்று சொல்லும் தமிழரசன் பார்ப்பனியம்தான் எதிரி என்று சுட்டிக்காட்டுபவர்கள் உள்ளூர் தரகுமுதலாளித்துவத்திற்கு ஆதரவாக பிரச்சினையை திசை திருப்புபவர்கள் என்கிறார். அம்பேத்கர், பெரியார் இருவருமே வர்க்க சமரசவாதிகள், உழைப்பவர்களை சுரண்டல்காரர்களிடம் காட்டிக்கொடுத்தவர்கள், வாய்ப்பேச்சு மன்னர்கள் என்கிறார். தமிழரசனின் ‘மீன்சுருட்டி ஜாதி ஒழிப்பு அறிக்கை’யிலேயே இவை தெளிவாக உள்ளன.
இது அன்றைய எம்.எல் இயக்கங்களின் பழைய நிலைபாடு. ஒரு சாரார் பிரிந்து தமிழ்த்தேசியம் பக்கம் சென்றனர். அவர்களுக்கு பெரியார் தமிழ் எதிரி. இன்னொரு சாரார் சாதியொழிப்பாளர்கள் ஆனார்கள். அவர்கள்தான் பெரியார், அம்பேத்கர் என பேசியவர்கள். அவர்கள் மாறி மாறி கடுமையாக தாக்கிக் கொண்டனர். தமிழரசன் வங்கிக்கொள்ளைக்கு முயன்று மக்களால் கொல்லப்பட்டபோது எதிர்முகாம் எம்.எல் குழுவினர் அது ‘தவறான கொள்கையின் விளைவான சாவு’ என்றுதான் சொன்னார்கள்.
1992 ஜூன் மாதம் வாச்சாத்தி என்னும் சிற்றூரில் வனத்துறையினரும் காவலர்களும் இணைந்து கூட்டுவன்முறையை நிகழ்த்தினர். வாச்சாத்தி ஒரு மலைக்கிராமம். அங்கே சில குற்றம்சாட்டப்பட்டவர்களை தேடி போலீஸ் சென்றது (அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் என்பது போலீஸின் தரப்பு) போலீஸை அந்த ஊரில் சிலர் சுற்றி வளைத்து பிடித்து அடித்தனர். அது போலீஸின் ஆணவத்தைச் சீண்டியது. போலீஸ் எப்போதுமே அந்த ஆணவம் கொண்டதுதான். போலீஸ்படை வாச்சாத்தியைச் சுற்றி வளைத்து பெரும் கூட்டுவன்முறையை நிகழ்த்தியது என செய்திகளும், பின்னர் விசாரணை அறிக்கையும் சொல்கின்றன.
வாச்சாத்திக்கும் எம்.எல்.குழுவினருக்கும் சம்பந்தமில்லை. அந்த கொடுமையை மக்கள் மத்தியில்கொண்டுவந்து அரசுடன் போராடியவர் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு அன்று எம்.எ.ஏ ஆக இருந்த மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியை சேர்ந்த அண்ணாமலை. பொதுவாக வாச்சாத்தி நிகழ்வுக்கு நீதிகேட்டு நடந்த போராட்டமே சி.பி.எம் நடத்தியதுதான். அன்று தருமபுரி மாவட்டத்தில் அரசூழியராகவும், சி.பி.எம் தொழிற்சங்க உறுப்பினராகவும் நான் இருந்தேன்.
வாச்சாத்தி வன்முறை, வீரப்பன் வேட்டை தொடர்பான வன்முறை ஆகியவை ஏறத்தாழ ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவை. அவற்றிற்கான எதிர்ப்பில் எம்.எல் குழுக்கள் ஆற்றிய பங்களிப்பென ஏதுமில்லை. அவர்களின் அமைப்பு வல்லமை இல்லாமலாகி பத்தாண்டுகள் கடந்துவிட்டிருந்தன. அவர்களின் உதிரிக்குழுக்கள் வழக்கமான ’ஜனநாயக பூர்வ’ எதிர்ப்பை சிறு அளவில் பதிவுசெய்தனர். அவ்வளவுதான்.
ஆகவே விடுதலை படம் காட்டும் யதார்த்தம் என்பது அதன் இயக்குநர் 1992ல் நிகழ்ந்த வாச்சாத்தி நிகழ்வையும், அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த எம்.எல் குழுக்களின் செயல்பாட்டையும் புனைவுச்சுதந்திரத்தைப் பயன்படுத்தி இணைத்துக்கொண்டு உருவாக்கியதுதான்.
வாச்சாத்தி சம்பந்தமான நிகழ்வுகளை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான விசாரணைக் குழுவினரின் அறிக்கையில் இருந்து எடுத்து கொஞ்சம் நாடகீயமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். கூடவே வீரப்பன் வேட்டைக்குச் சென்ற போலீஸார் நிகழ்த்திய கொடுமைகள் பற்றிய சதாசிவம் கமிஷன் அறிக்கையை ஒட்டியும் நிகழ்வுகளை அமைத்துக் கொண்டதாகச் சொன்னார்கள். விரிவான செய்திப் பதிவுகளும் உள்ளன.
விடுதலை சினிமா கார்ப்பரேட் அமைப்புகளின் நில அபகரிப்பை எம்.எல். குழுக்களின் தலைவர் ‘வாத்தியார்’ எதிர்ப்பதாகக் காட்டுகிறது. கார்ப்பரேட் நில அபகரிப்பு என்பது 2000த்துக்குப் பிந்தைய பேசுபொருள். எம்.எல் அமைப்பினர் போராடியது நிலவுடைமையாளர்களுக்கு எதிராகத்தான். கார்ப்பரேட் நிலக் கொள்முதல் செயல்பாடுகளை எம்.எல். அமைப்புகள் எதிர்ப்பது சட்டீஸ்கர், உத்தராகண்ட் பகுதியின் யதார்த்தமே ஒழிய தமிழக யதார்த்தம் அல்ல.
நான் எழுதிய துணைவன் கதையில் எம்.எல். அமைப்புகள் சிதைந்து தலைவர்கள் ஆளுமைப் படுகொலைக்கு ஆளாக்கப்படும் சூழலே காட்டப்படுகிறது. அது 1992ல் இருந்த நிலைமை. கோனார் என்ற பேரில் தலைமறைவாக இருந்து கைதான தோழர் ஒரு தனிமனித வன்முறையைச் செய்துவிட்டு அது ஏன் தவிர்க்கமுடியாதது என்றுதான் கதையில் சொல்கிறார். தன் செயலின் பயனாக எளியமக்கள் மேல் தாக்குதல் நடத்த அரசு அஞ்சும் என்று சொல்கிறார்.
உண்மையில் அப்படி எதிர்வன்முறை ஏதும் நிகழவில்லை. (ஆனால் அப்படி ஒரு செயல் திட்டமிடப்பட்டது என கேள்விப்பட்டேன்). கதையில் கோனார் என்ற பெயரில் போலீஸ் ஆவணங்களில் உள்ள தோழர் இயக்கத்தின் உள்சண்டை மற்றும் தலைமைமேல் நிகழும் ஆளுமைக்கொலைகளால் கசப்புற்றிருக்கிறார். அந்தக்கசப்பையே நையாண்டியாகவும் விரக்தியாகவும் வெளிப்படுத்துகிறார். சாவுதான் தனக்கு சிறப்பு என அவர் கருதுவது அதனாலேயே.
(2020 ல் எம்.எல். அமைப்புகளின் தலைமைச் சிந்தனையாளரும், எம்.எல் அமைப்புகளையே நிறுவியவருமான மருதையன் அவதூறு செய்யப்பட்டு, ஆளுமைக்கொலை செய்யப்பட்டு இன்று உளமொடுங்கி அமர்ந்திருப்பதை நினைவுகூருங்கள். மருதையன், வினவு, பின்தொடரும் நிழலின் குரல், அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு)
துணைவன் கதை எம்.எல். குழுக்கள் தங்களைப் பற்றி புனையும் கதைகளை திரும்பச் சொல்லும் ஒன்று அல்ல. அது இரு துருவங்களின் முரண்பாட்டைப் பேசுவது. ஓர் எளிய இளைஞன் எப்படி போலீஸ் மனநிலைக்குச் செல்கிறான், ஒரு புரட்சியாளர் எப்படி தன்னுள் இருக்கும் எளிய மனிதனை கண்டடைகிறார் என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.
இலக்கியம் எல்லா மொக்கைகளும் வாயலம்பிக்கொண்டிருக்கும் சில்லறை அரசியல் கருத்துக்களைச் சொல்வது அல்ல. அது போலீஸ், புரட்சியாளர் என இரு கதாபாத்திரங்களுக்குள்ளும் ஆழமாக உள்ளே நுழைந்து அங்கிருக்கும் மனிதர்களை கண்டடைவது. கொஞ்சம் இலக்கியம் வாசிப்பவர்களுக்கு அது தெரியும். அது அவர்களுக்காகவே எழுதப்பட்டுள்ளது. அரசியல் முச்சந்திக் கோஷங்களைப்போடும் அசடுகளுக்காக அல்ல.
*
இடதுசாரிகள், எம்.எல். குழுக்கள் எதைச் செய்ய நினைத்தார்களோ அதைச் செய்தவர் திருமாவளவன். வன்முறை இல்லாமல், தன் மக்களை போலீசுக்குக் காவுகொடுக்காமல், அனைத்து சட்டபூர்வ வழிகளையும் பயன்படுத்தி, ஜனநாயக பூர்வமாக தன் மக்களுக்கு அதிகாரத்தை எதிர்ப்பதென்றால் என்ன என்று கற்றுக்கொடுத்தார். ஒற்றுமையின் ஆற்றலைக் காட்டினார். தமிழ்ச்சமூகத்தின் அடித்தளம் அவரால்தான் மாறியது.
நான் ஏன் திருமாவை ஆதரிக்கிறேன் என பலர் கேட்கிறார்கள். துணைவன் கதையில் என் கசப்பும் அவநம்பிக்கையும் கோனார் வழியாக வெளிப்படுகின்றன. வாச்சாத்திக்கு தடியுடன் சென்ற போலீஸ்காரரும் எளியகுடியில் பிறந்தவர் அல்லவா, என்ன நிகழ்ந்தது அவருக்குள் என்பதே அந்தக்கதை. அந்தக் கசப்பும் அவநம்பிக்கையும் திருமா வந்தபின், அவர் செய்து காட்டிய மாற்றத்தைக் கண்டபின்புதான் மாறியது. அவ்வளவுதான் என் அரசியல். மற்றபடி நான் எந்த அரசியலும் பேச விரும்பவில்லை.
கோனார் மக்களின் நலம்நாடிய புரட்சியாளர். மக்களுக்காக வாழ்ந்து மடிந்தவர். ஆனால் மக்கள் தலைவர் அல்ல. திருமா மக்கள் தலைவர். கோனார் எண்ணியதை நிறைவேற்றியவர் திருமாதான்.
ஜெ
கி.ரா
கி.ராவின் நூற்றாண்டு இது. அவரே இருந்து நூற்றாண்டை கொண்டாடுவார் என நினைத்தோம், அந்த அதிருஷ்டம் இல்லை. ஏறத்தாழ நூறாண்டு வாழ்ந்த ஒரு மனிதர் மனதில் முதுமை அடையாமலேயே வாழ்ந்தார் என்பது புனைவுக்கு நிகரான ஓர் அற்புதமென தோன்றுகிறது
கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன் – தமிழ் விக்கி
கொற்றவை, நீலி- கடிதம்
அய்யா வணக்கம்..
என் பெயர் மு.மோகனப்பிரியா….நான் மயிலம் தமிழ்க் கல்லூரியில் முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்….எனக்கு ஒரு ஐயம் அய்யா…..தாங்கள் எழுதிய கொற்றவை நாவல் சிலப்பதிகாரம் மையமிட்டு காணப்படுவதால் நான் ஆய்வு செய்கிறேன்…..கொற்றவை நாவலில் கவுந்தியடிகளை முதன்மைப்படுத்தாமல் நீலியை ஏன் முதன்மைப்படுத்தினீர்கள்??……அதற்கான காரணம் வேண்டும் அய்யா….
மோகனப்பிரியா
அன்புள்ள மோகனப்பிரியா,
சிலப்பதிகாரம் சமணக்கருத்துக்களையும் பௌத்தக் கருத்துக்களையும் முன்வைப்பது. சமணக்கருத்துக்களை முன்வைக்கவே கவுந்தி அடிகள் அக்கதையில் வருகிறார். வஞ்சிக்காண்டத்தில் பௌத்தக்கருத்துக்கள் பேசப்படுகின்றன
கொற்றவை நாவல் சமணச்சார்பு அல்லது பௌத்தச்சார்பு கொண்டது அல்ல. அது பெண் சார்பு கொண்டது. கண்ணகியை அது கொற்றவையாகவே முன்வைக்கிறது. ஆகவேதான் கவுந்தி வரவில்லை.
கொற்றவையின் பரிவார தெய்வம் நீலி. அல்லது துணைத்தெய்வம். ஆற்றுகால் போன்ற கொற்றவை ஆலயங்களில் துணைத்தெய்வமாக நீலியை காணலாம். பெருந்தோழி என்றும் சொல்வார்கள். ஆற்றுகால் பகவதி கண்ணகி கோயில்தான். பின்னர் பகவதியாக ஆகியது. இன்றும் நல்லம்மத் தோற்றம் என்ற பெயரில் கண்ணகி கதை அங்கே பாடப்படுகிறது.
பகவதியின் துணைத்தெய்வமாகிய நீலிதான் கொற்றவையில் கண்ணகிக்கு துணையாக வருகிறாள். அது ஓர் இலக்கிய உத்தி. கண்ணகி கதையை முழுக்கமுழுக்க பெண் பார்வையில் சொல்வதற்கு அந்த உத்தி உதவுகிறது
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


