அருண்மொழி உரை, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

திருவாரூர் புத்தக விழாவில் அருணாவின் உரையை கேட்டேன்.  அருணா முன்பெப்போதும் எந்த புகைப்படத்திலும் இத்தனை அழகு மிளிர இருந்ததில்லை. தாய் மண் அப்படி கூடுதல் அழகாக்கிவிடுகிறது போல. பிறந்த ஊரில் வேண்டியவர்கள் முன்பு ஒரு மேடை என்பது அளித்த நிறைவின் வெளிப்பாடே இந்த கூடுதல் அழகு. அதே உணர்வு தான்  துவக்கத்தில் அவரை  கொஞ்சமே கொஞ்சம் தடுமாற வைத்திருக்கிறது. 

இசை சிற்பம் ஓவியம்  பரதம் என்று  பல கலையை சேர்ந்த பிரபல ஆளுமைகளை சொல்லி திருவாரூரின் பெருமைகளை துவக்குகிறார். சமையலில்  ஃபில்டர் காபியில் தொடங்கி  சரபோஜி மன்னரின் அவையிலிருந்து கிடைத்த சாம்பாரிலிருந்து இட்லி வரை ஊரின் பெருமையை மணக்க மணக்க சொல்லும் அருணா இவற்றையெல்லாம் ஒரு கலைஞன் அவசியம் அறிமுகமாவது கொண்டிருக்க வேண்டிய உபகலைகள் என்றபோதுதான் அவர் எதிலிருந்து மையப்புள்ளிக்கு  வருகிறார் என்று புரிகிறது. 

மரபிலக்கியம், நவீன இலக்கியம் பேசத்துவங்குகையில் அவை அவரது ஹோம் கிரவுண்ட் என்பதால்  உரை நிதானமாக அழுத்தம் திருத்தமாகிவிட்டது. மரபிலக்கியத்தில் திருவாரூரின் கணிசமான  பங்கையும் எப்படி மணிக்கொடி தீவிர இலக்கியத்துக்கு விதையூன்றியது என்பதையும் சொல்கிறார்.

பெட்டிக்கடை கவிதை எப்படி ஆரம்பத்தில் கவனிக்கப்படாமல் போனது பின்னர் எப்படி அது புதிய கவிதை மரபாக வரவேற்கப்பட்டது என்பதையும் அருணா சொல்லித்தான் அறிந்துகொண்டேன்.பின்னர்  கு ப ரா, மெளனி ஆகிவர்களை உதாரணமாக கொண்டு சிறுகதை வடிவத்துக்கு வருகிறார். மெளனியின் இருத்தலியல் சிக்கலை சொல்லிய பிரபஞ்ச கானத்தை,  கு ப ராவின் விடியுமாவை  பேசுகையில்   அருணா மேடைப் பேச்சுக்களில் தன்னை மறந்து மூழ்கும் பழைய அருணாவாகி விட்டிருந்தார்.தந்தி அனுப்பப்பட்ட சென்னையை, அது வந்து சேர்ந்த கும்பகோணத்தை, போய்க்கொண்டிருக்கும் ரயிலையெல்லாம் கைகளாலே சுட்டிகாட்டி செங்கல் ஒன்றை அங்கிருந்து எடுத்து அதை கார்பன் கணக்கீடு செய்து காண்பித்து அபிநயம் பிடித்து சொல்லும் அதே அருணா.

தி ஜா, லாசாரா, எம் வி வி, க நா சு, இ பா என்று பட்டியலிட்டு ஒவ்வொருவரின் படைப்பிலிருக்கும் நுட்பங்களையும் அவை எழுதப்பட்ட காலத்தை ஒப்புநோக்கி அலசுகிறார்.அந்த கதைகளை முன்பே வாசித்திருந்தாலும் அருணாவின் உரைக்கு பிறகு  மீள வாசிக்க வேண்டும் என்று தூண்டல் உருவாகிறது. 

மோகமுள்ளின் மெளன இடைவெளிகளை, இளைஞர்கள் யமுனாவை போன்ற பெண்ணை தேடி அலைந்த அளவுக்கான அதன் தாக்கத்தை, கதை முடிவை எல்லாம் சொல்லிய அருணா, பின்னர் அடுத்த தலைமுறை இலக்கியவாதிகளை சுட்டிக்காட்டுகிறார். அவர்களில் பலர் எதிரிலமர்ந்திருப்பதை அருணாவின் கண்கள் வழியே பார்க்க முடிந்தது. தான் முன்பே எழுதியிருக்கும் தன் பால்ய கால கூண்டு வண்டி பயணத்தை சொல்லுகையில் அருணா மானசீகமாக அதில் பயணித்த படியே அல்லிக் குளங்களையும் காவிரியையும் கடந்தபடியே பேசுகிறார்.

 உரையில் நான் மிக ரசித்தது எங்க அப்பா அம்மா என்று சொல்கையில் அருணா நெஞ்சில் கை வைத்துக்கொண்டதை. சிறு குழந்தைகள் இப்படி ’’ எங்க வீடு எங்க அப்பாம்மா’’ என்று அவர்களுக்கு  சொந்தமென்பவற்றை சொல்லுகையில் எல்லாம் அப்படி நெஞ்சில் கை வைத்து கொள்வார்கள்.தஞ்சையின் மாற்றம், அங்கிருக்கும் கோவில்கள் என்று அவரது நினைவுகளின் வழி உரை  ஒழுகி செல்கிறது.

எந்த சமுதாயமும் சரிவை நோக்கி போவதில்லை என்றும் கடந்த காலங்கள் எல்லாம் பொற்காலங்கள் நிகழ்காலங்கள் எல்லாம் அப்படி இல்லை என்பதில் அருணாவுக்கிருக்கும் ஆட்சேபத்தையும், போதாமைகளையும் பெருமைகளையும் உணர்ந்து சமநிலையில் எழுதுபவனே கலைஞன் என்பதையும் சொல்லி,அம்மண்ணைக்குறித்து இன்னும் எழுதப்படாத, எழுத திராணியில்லாதவற்றை குறிப்பிடுகிறார்.மூழ்கி துருவேறிய ஒரு கப்பலை கண்டு டைட்டடானிக் படைக்கும் அவர்களையும் ஒரு நகரமே காலடியில் புதைந்து கிடக்கையில், கண் முன்னே ஒரு மாபெரும் களமொன்று திறந்து எழுதப்பட காத்துக் கிடக்கயில்  அவை எழுதப்படாததன் ஆதங்கத்தையும் சொல்கிறார்.

பன்முகத்தன்மை கொண்ட அந்த கலாச்சாரத்தின் எழுதியாக வேண்டிய பல மரபுசார்ந்த  தளங்களையும் உதாரணங்களுடன் சுட்டுகிறார்.ஒரு தேக்கரண்டி வாழ்விலிருந்து கொண்டு வரம்பிற்குட்பட்டவற்றை திரும்ப திரும்ப எழுதிக்கொண்டிருக்காமல் வானளாவிய களங்களிலிருந்து எழுதவேண்டுமெனச்சொல்லி  உரையை அழகிய விரிந்த  புன்னகையுடன் முடிக்கிறார். 

இவற்றை எழுதாமல் இருப்பதன் பேரிலான குற்றச்சாட்டை தன் மீதும் சுமத்திக்கொள்ளும் அருணா நிச்சயம் இவற்றில் அவருக்குகந்தவற்றை விரைவில் எழுதுவார் என்று நினைக்கிறேன், எழுதட்டும் என எதிர்பார்க்கிறேன்

அன்புடன்

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2023 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.