Jeyamohan's Blog, page 606
March 25, 2023
வி.ஜீவானந்தம்
வி.ஜீவானந்தம், ஈரோடுஜீவானந்தம் தமிழகச் சூழியல் இயக்கங்களின் முன்னோடி. காந்திய சிந்தனையாளர். மார்க்ஸியத்திற்கும் காந்தியத்திற்குமான இணைப்புப் புள்ளி என தன்னை முன்வைத்தவர். மக்கள் மருத்துவமனை என்னும் இயக்கத்தின் முதல்வர். நான் என் இன்றைய காந்தி நூலை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்
வி.ஜீவானந்தம்
வி.ஜீவானந்தம் – தமிழ் விக்கி
கனலி, கதைகள்
கனலி இதழ் வெளியாகியுள்ளது. சரவணன் சந்திரன், தமயந்தி, சுரேஷ் கதைகள் இடம்பெற்றுள்ளன. அஜிதனின் நான்காவது கதை வழித்துணை வெளியாகியுள்ளது
கனலி இணைய இதழ்கங்கைப்பருந்தின் சிறகுகள் – வெங்கி
அன்பின் ஜெ,
வணக்கம். உங்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பு.
போராவின் “கங்கைப் பருந்தின் சிறகுகள்” வாசித்தேன். ஆம், மிகத் தாமதம்தான். வேலூர் லிங்கம் சார் சமீபத்தில் நினைவுறுத்தினார்.
அழகிய அந்த நிலப்பரப்பிற்காகவும், 50/60-களின் அஸ்ஸாமிய கிராமங்களின் அபாரமான, யதார்த்த/இயல்புச் சித்தரிப்புகளுக்காகவும், அரசியலும், பொருள்முதல் வாதமும் எங்கனம் கிராமங்களை ஊடுருவி அதன் இயல்புகளை அழித்து அவற்றின் முகங்களை மாற்றின என்பதன் வரைபடத்திற்காகவும், ஒரு எளிய கதையை எப்படி போரா தன் எழுத்தின் நடையழகால் உயர்த்தியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். துளஸி ஜயராமன் அம்மாவின் தமிழ் மொழிபெயர்ப்பு மிக அருமை.
இருபதாம் நூற்றாண்டின் மத்திம காலகட்டம். அஸ்ஸாமின் இரு பெரும் நதிகள் பிரம்மபுத்திராவும், பரக்கும்; பரக் ஆற்றில் கலக்கும் அதன் துணை நதியான சோனாய் ஆற்றின் கரையிலிருக்கும் கிராமம் சோனாய் பரியா. கிராமங்கள் இன்னும் சாலைகளால் நகரத்துடன் இணைக்கப்படாத காலம்.
இளம்பெண் வாசந்தியின் வீட்டின் பின்புறத்திலிருந்து பார்த்தால் நதி தெரியும். தண்ணீர் எடுக்க வாசந்தி நதிக்குதான் செல்வாள் (நதியின் “டனுவா கரை” அவளின் தாத்தாவின் பெயரால்தான் அழைக்கப்படுகிறது). ஓய்வான சமயங்களில் ஆற்றங்கரையில் இருக்கும் தோப்புகளில் நேரம் செலவிடுவது அவள் வழக்கம். வாசந்தியின் அண்ணன் போக்ராம், 1942 சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டனாக கலந்து கொண்டிருக்கிறான். இப்போது வணிகம் செய்கிறான். சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நெல், சணல், கடுகு போன்றவற்றை கொள்முதல் செய்து சைக்கிளிலும், வாடகை மாட்டு வண்டியிலும் நகரத்திற்கு கொண்டுசென்று விற்பான்; நகரத்திலிருந்து துணிமணிகள், கம்பளிகள் மொத்தமாக வாங்கி வந்து கிராமச் சந்தைகளில் விற்பான். போக்ராமின் மனைவி தருலதா. போக்ராமிற்கு மூன்று குழந்தைகள் – தேவகன், சிகூணி, மானஸ்.
வாசந்தியின் தாய் சுஜலாவிற்கு 85 வயது. போக்ராமின் தங்கை ரூபந்தி திருமணமாகி கஹீங்குரி கிராமத்தில் வசிக்கிறாள். போக்ராமின் நண்பன் தனஞ்செயன் பாப்சிலா கிராமத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவன். பாப்சிலாவிலும், சுற்றுவட்ட கிராமங்களிலும் அவனுக்கு மிக நல்ல பெயர். உதவி மனப்பான்மையும், நற்சுபாவமும் கொண்ட அவன்மேல் கிராம மக்கள் பெரும் மதிப்பு வைத்திருக்கிறார்கள். தனஞ்செயன் 1950 வாக்கில் பாப்சிலாவிற்கு வந்தவன். அவன் தங்கை மன்தரா, அன்பில்லாத அவன் பெரியப்பாவால் ஒரு கிழவனுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட சோகக் கதை அவன் பின்னணியில் உண்டு. தனஞ்செயனும், வாசந்தியும் காதலிக்கிறார்கள்.
ஷில்லாங் சபைக்கு தேர்தல் வருகிறது. கிராமங்களுக்கு சாலை வசதி செய்யப்படுகிறது. பொருள்மைய வாதமும், நகரத்தின் நுகர்வு கலாச்சாரமும், இயந்திரமையமும் கிராமங்களைத் தீண்டுகின்றன. பேருந்துகள் கிராமங்களுக்கு வந்து செல்வதால் பெருவணிகர்கள் தாங்களே அங்கு வந்து சந்தையில் வணிகம் செய்ய ஆரம்பிக்க, போக்ராமின் தொழில் நசிக்கிறது.
ஷில்லாங் சபைக்கு அந்த தேர்தலில் மூன்று பேர் போட்டியிடுகின்றனர் – வழக்கறிஞர் சுபோத் சைக்கியா, சஞ்சீவ் பருவா, லோக்நாத் தாமுலி. போட்டி பருவாவுக்கும், சைக்கியாவிற்கும் இடையில்தான். சஞ்சீவ் பருவா நாணயமானவர். அவருக்கு மக்கள் செல்வாக்குண்டு. தனஞ்செயன் அவரை ஆதரிக்கிறான். சுபோத் சைக்கியா, வாய் ஜாலத்தில், நேர்மையற்ற வழியில் ஜெயிக்க நினைப்பவர். போக்ராமிற்கு பண்மும், வீவிங்க் லோனும் ஏற்பாடு செய்து அவனையும், அவன் கீழ் இன்னும் சில இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு உபயோகிக்கிறார் சுபோத். தனஞ்செயனும், போக்ராமும் எதிரியாகிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுத்து, எதிர்க் கட்சியின் தேர்தல் ஏஜண்டுகளை விலைக்கு வாங்கி, தேர்தலில் சுபோத் வெற்றி பெறுகிறார். போக்ராமிற்கு அரசு காண்ட்ராக்டுகள் கிடைக்கின்றன. போக்ராம் செல்வந்தனாகிறான். பணத்தின் மீதான பேராசை அதிகரிக்கிறது. கள்ள வியாபாரம், புது பங்களா, புதுப்பணம், புதுப் பழக்கவழக்கங்கள். போக்ராம் குடிக்கப் பழகுகிறான்; டல்புரியா கிராமத்தில் ஒரு பெண்ணுடன் சகவாசம். தருலதாவின் நிம்மதி போகிறது.
தனஞ்செயன் மேலுள்ள கோபத்தினால், போக்ராம் தங்கை வாசந்திக்கு, தராங்கயால் கிராமத்தின் சூப்பிரண்டண்ட் பகீரதனின் மூத்த மகன் மதுராவுடன் (மன்தன் மண்டல்) திருமணம் நிச்சயிக்கிறான். பகீரதனின் மனைவி பனிதா. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் – மகன்கள் மதுரா, நந்தேச்வர், மகள்கள் பாரு, புத்லி. மனமொடிந்து போகும் வாசந்தி விரலில் அணிவிக்கப்பட்ட நிச்சயதார்த்த மோதிரத்துடன் சோகத்தில் வளைய வருகிறாள்.
கிராமத்தில் வீடு வீடாகச் சென்று பட்டுத் துணிகளும், போர்வையும் விற்கும் கிழவி ரூபாவிடம், வாசந்திக்கு இரகசியாமாக ஒரு கடிதம் கொடுத்து விடுகிறான் தனஞ்செயன்…
நாவலின் மீதிப்பாதியும் போராவின் எழுத்துகளால் மிகப் பிடித்திருந்தது. சிறந்த வாசிப்பனுபவம்.
நாவலில் தேர்தல் சித்திரம்… #தேர்தல் திருவிழா மார்கழி மாதத்து ஆரம்பத்திலேயே அமளி துமளிப்பட ஆரம்பித்தது. கிராமத்துத் தெருக்களிலெல்லாம் அழகான கார்கள் வரிசை வரிசையாக ஊர்வலம் வந்தன. சோனாய் நதியின் இக்கரை கூட, அதன் உலர்ந்த மணல் கூட நகரத்துச் சுகவாசிகளின் மென்மையான திருவடி ஸ்பரிசத்தைப் பெற்றது. இந்த அழகர்கள் கூட்டங்களில், மேடைகளில் அழகழகாகப் பேச ஆரம்பித்துவிட்டனர். சோனாய் பரியா கிராமத்து மக்கள் இந்த ஐந்தாண்டுகளாக ஏழையாக இருந்தனரே தவிர அவர்களுக்குள் ஒற்றுமைக்குக் குறைவிருக்கவில்லை. ஆனால் தேர்தல் அறிவிப்பு வந்ததும் நிலைமை மாறியது; மதம், மதத்தினுள் பிரிவுகள் இத்தனை இருக்கின்றன என்பதே இப்போதுதான் அவர்கள் அறிந்தார்கள். கல்பியா, பாப்சிலா போன்ற இடத்து மேமன்சிங் மக்கள் தனி மதத்தவர் என்பது கூட இப்போதுதான் அவர்களுக்குத் தெரிய வந்தது. கலிதா ஜாதியினரிடையிலும் பலதரப்பட்டவர் இருக்கின்றனர் என்பதை அநேகர் இப்போதுதான் தெரிந்துகொண்டுள்ளனர்#
அஸ்ஸாமின் “அறுவடைப் பண்டிகை”-யின் சித்திரம் நாவலில் வருகிறது. சோனாய் பரியா கிராமம் புத்துணர்ச்சியுடனும், கலகலப்புடனுடனும் தோன்றிற்று. “அறுவடை உற்சவ“க் கொண்டாட்டங்கள் (இந்த உற்சவத்தை மக்கள் ‘மாக்–பிஹு‘ அல்லது ‘போகாலிபிஹு‘ என்றழைப்பர்). உற்சவத்தின்போது நடக்கும் திருவிழாவும், மக்களின் கொம்மாளமும், அம்மாதத்து வானிலையும், இளைஞர்–இளம்பெண்களின் உள்ளங்களை இலவம் பஞ்சைப் போலாக்கி விட்டன. மெல்லிடையுடன் நடனமாடும் பெண்ணின் இளமை கவிதைச் சந்தம் போன்று துள்ளிப் பாய்ந்தது. இல்லாமையினின்றும் தற்காலிக ஓய்வு பெற்ற முதியோர், இளையவர் எல்லோரும் பக்தி ரசத்தில் மூழ்கி விட்டனர். தேவ்டா, பாப்சிலா போன்ற இடங்களில் எருமைகளின் சண்டை களியாட்டமாக நடத்தப்பட்டது. திருவிழாக் கூட்டம் பார்க்க ரம்மியமாக இருந்தது.
அஸ்ஸாமிய இலக்கியத்தின் தோற்றமும், வளர்ச்சியும் குறித்து பீரேந்திரகுமார் பட்டாச்சார்ய நல்ல முன்னுரை ஒன்றை அளித்திருக்கிறார். நாவல், 1976-ல், “பதம் பருவா” இயக்கத்தில் அஸ்ஸாமிய மொழியில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. நாவல் வாசித்து முடித்தபின் திரைப்படத்தையும் பார்த்தேன் (யு ட்யூபில் இருக்கிறது). நல்ல திரையாக்கம். வாசந்தியாக நடித்த அஸ்ஸாமிய இளம்பெண், நாவலின் வாசந்தியைப் போலவே பேரழகி!
வெங்கி
***
“கங்கைப் பருந்தின் சிறகுகள்” – லக்ஷ்மீநந்தன் போரா
அஸ்ஸாமிய மூலம்: Ganga Chilanir Pakhi
தமிழில்: துளசி ஜயராமன்
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு28
திருப்பூரில் ஓர் உரை
திருப்பூர் நண்பர் ராஜமாணிக்கம் எங்கள் அருகர்களின் பாதை பயணத்தில் உடன் இணைந்துகொண்டவர். அதன்பின் இன்றுவரை அணுக்கமான நண்பர். எவரும் எப்படியும் கேலிசெய்யலாம் என்னும் மனநிலையுடன் கூடிய நண்பர்கள் அமைவது மிக அரிது, ராஜமாணிக்கம் அவர்களில் முதல்வர்.
ராஜமாணிக்கம் தீராப்பயணி. கல்வெட்டு,தொல்லியலில் ஆர்வம் கொண்டவர். பிராமி எழுத்துரு அறிந்தவர். இந்த தளத்தில் தொல்லியல் சார்ந்து பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பழைய பண்பாட்டு அடையாளங்களைத் தேடி கிட்டத்தட்ட உலகமெங்குமே பயணம் செய்துகொண்டிருப்பவர்.
ராஜமாணிக்க கட்டிடப்பொறியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவராக பொறுப்பேற்கிறார். அவ்விழா 27 மார்ச் 2023 ல் திருப்பூரில் நிகழ்கிறது. அதில் கலந்துகொள்கிறேன்.
இடம்
திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி ஹால்
சாமிநாதபுரம்,டிடிபி மில் ரோடு
திருப்பூர்
நாள் 27 மார்ச் 2023.
பொழுது மாலை 6 மணி
மென்மலர் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
நெடுநாள் வாசகன். ஆனால் முதன்முறையாகச் சற்று தயக்கத்துடனே எழுதுகிறேன்.
இந்தப் பாடலை நினைவூட்டியதற்கு நன்றி. பள்ளி வயதில் பல முறை வானொலியில் கேட்டிருக்கிறேன். “மென்மலர் கை கொண்டு நீ தழுவு” என்று நாயகி பாடும் வரியைக் குறிப்பிட்டு அந்தக்கால குமுதம் அரசு பதில்களில் ஒருவர் “ஆண்மகனிடம் எப்படி மென்மலர் கை?” என்று வினவியிருந்தார்.
மீண்டும் நன்றி.
ரவி
***
அன்புள்ள ரவி
இதில் என்ன குழப்பம் இருக்கிறது. தழுவும்போது அது மென்மலர் கைதானே? காளிதாசனின் உவமை. பெண் மானின் கண்களில் விழுந்த துரும்பை ஆண்மான் தன் கொம்பினால் மெல்ல நீவி எடுக்கிறது. மான்கொம்பு அங்கே மென்மலர்த்தன்மை அடைகிறது. சந்தேகமிருந்தால் மன்மதன் கதை வாசிக்கவும் மன்மதன் [சிறுகதை]
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படுவார்
நம்மூரில் நக்கீரன்களுக்கு குறைவே இல்லை.
ஜெ
March 24, 2023
சக்தியும் செனெட்டும்
நண்பர் சக்தி கிருஷ்ணன் நெல்லைக்காரர். எங்கள் பயணத்துணைவர், தீவிர இலக்கிய வாசகர். சட்டத்தில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர். நகைவணிகம், வழக்கறிஞர் தொழில் செய்தபடியே கல்வித்துறையில் ஈடுபட்டு வென்றவர். கிட்டத்தட்ட மூடும் நிலையில் இருந்த தஞ்சை விவேகானந்தா கல்லூரியை மீட்டு அதை குறிப்பிடத்தக்க கல்விநிலையமாக ஆக்கியவர். இப்போது திருவண்ணாமலையின் அடையாளங்களில் ஒன்றான எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியை சர்வதேசத்தரத்தில் விரிவாக்கம் செய்து அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் பெருங்கனவுடன் நிர்வாகப்பொறுப்பேற்று செயல்பட்டுவருகிறார். அவருக்கு பாரதிதாசன் பல்கலையில் செனெட் குழு உறுப்பினர் பதவி அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.
மனைவியின் கடிதம்
(2009 ல் நான் எழுதிய குறிப்பு இது. அன்று இச்சிற்றிதழ்களின் இடத்தை இணைய ஊடகம், குறிப்பாக வலைப்பூக்கள் எடுத்துக்கொள்ளும் என எண்ணினேன். அதன்பின் ஒருவேளை சமூகவலைத்தளங்கள் எடுத்துக்கொள்ளும் என நினைத்தேன். மாறாக வலைப்பூக்கள் மிக விரைவிலேயே நின்றுவிட்டன. சமூகவலைத்தளங்கள் விவாதக்களங்களாக ஆனதுமே எல்லா வகையான தற்பெருமைகள், மேட்டிமைத்தனங்களும் பதிவாகத் தொடங்கின. சினிமா, அரசியல், சாப்பாடு, வம்பு தவிர வேறேதுமே பேசுவதற்கில்லாத சூழலாக மாறின. இன்று இச்சிற்றிதழ்கள் பற்றிய பதிவு ஓர் ஏக்கத்தையே அளிக்கிறது)
தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள் அபாரமான ஒரு தனியுலகம். தனியொருவர் தன் இருப்பை வெளிக்காட்டிக்கொள்வதற்காக நடத்தும் சிற்றிதழ்கள் முதல் சிறிய குழுக்கள் நடத்தும் சிற்றிதழ்கள் வரை எத்தனை வகைகள். எத்தனை எழுத்துக்கள்.
பொதுவாக தமிழின் சிற்றிதழ்களில் அறிதலுக்காக வாசிக்கத்தக்கவை குறைவே. எளிய வாசிப்பும் எளிய இலக்கியப்புரிதலும் கொண்டவர்கள் தங்கள் குரலைப் பதிவுசெய்வதற்காக நடத்தும் இதழ்களே அதிகம். ஆனால் இந்த முயற்சிகள் எவையுமே வீணல்ல என்பதே என் எண்ணம். தமிழ்ச்சூழலின் அறிவியக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் சலியாத முயற்சியின் சரடு ஒன்று இவற்றில் உள்ளது. அதிகாரம் பணம் எதனுடனும் சம்பந்தப்படாமல் தூய அர்ப்பணத்தாலேயே இவை நடத்தப்படுகின்றன
இவ்விதழகளை நடத்துபவர்களும் எழுதுபவர்களும் தனி சாதி. லௌகீகமாக ‘துப்பு கெட்டவர்கள்’. பலசமயம் கிராம ஆசிரியர் வேலை போன்ற சிறிய பணிகளில் இருப்பார்கள். அன்றாட வாழ்க்கையே பணச்சிக்கலுடன்தான் முன்னகரும். அதன் நடுவே நேரம் கண்டடைந்து இலக்கியம். அந்த எழுத்துக்களை கடன்வாங்கி பணம் சேர்த்து சுயமாக வெளியிடுவார்கள். எழுத்தாளன் என்ற சுய பெருமிதம் மட்டுமே மிஞ்சும். அதை எவருமே அங்கீகரிக்காவிட்டாலும்கூட, பெரும்பாலான சமயங்களில் அது கிண்டலுக்குள்ளாகும் என்றாலும் கூட, அது ஒரு ஆபரணம்தான் அவனுக்கு
அந்த உணர்ச்சி மிகவும் புனிதமானது என்றே நான் எப்போதும் எண்ணுவது. உலகம் முழுக்க இலக்கியமும் தத்துவமும் அந்த சுயபெருமிதத்தாலேயே இன்றுவரை சாத்தியமாகியுள்ளன. நான் காலத்தின் முன் நிற்கிறேன் என்ற பிரக்ஞையைப்போல மகத்தானதாக எது உண்டு அறிவுஜீவிக்கு?
‘கல்வெட்டு பேசுகிறது’ என்ற சிற்றிதழ் சொர்ணபாரதியை ஆசிரியராகக் கொண்டு சென்னையில் இருந்து வெளிவருகிறது. அதைச்சுற்றி சிறிய ஒரு நண்பர் குழு உள்ளது. அவர்களின் ஆக்கங்கள், சந்திப்பு நிகழ்ச்சிகள் பிரசுரமாகின்றன. அதில் வந்த இக்கடிதம் இதில் உள்ள உண்மை காரணமாக மனதைக் கவர்ந்தது.
கவிஞர் யாழினி முனுசாமி பிரசுரித்திருப்பது இக்கடிதம். தமிழில் கடந்த ஐந்தாண்டுகளாக கவிதைகள் எழுதி வருகிறார் யாழினி முனுசாமி.
*
அஞ்சல் செய்யப்படாத ஒரு கடிதம்
பணப்பற்றாக்குறை ஏற்பட்டு சமாளிக்க முடியாத இயலாமைப்பொழுதுகளில் எங்கள் வீட்டில் நடந்த சண்டைகளில் ஒன்றில் என் மனைவி எனக்கு எழுதி வைத்த கடிதம் இது
எனக்கு பேசறதுக்குக் கூட ஒரு சந்தர்ப்பம் தரமாட்டேங்கிறீங்க. அதனாலதான் எழுதி வைக்கிறேன். இதையாவது நீங்க முழுசா படிப்பீங்கன்னு நான் நம்புறேன். நான் என்ன கேட்டேன். நான் என்னங்க அதிகமா செலவு பண்ரேன்னுதான் கேக்குறேன். துணிக்கு சாப்பாடு இல்லை வெளியிலே சுத்துறதுன்னு எதுவுமே கிடையாது. இந்த 5 வருஷத்திலே நான் ஆசைப்பட்டு உங்ககிட்டே ஏதாவது கேட்டு இருக்கிறேனா சொல்லுங்க. நான் ஏதாவது அதிகமா செலவு பண்ணினா நீங்க சொல்லலாம். சாதரணமா செலவு கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாம்னு நீங்க சொல்லியிருந்தா பரவாயில்லை. கூலிவேலைசெய்றவங்க கூட திறமையா குடும்பம் நடத்துறாங்கன்னு நீங்க திட்டினதனாலதான் நான் வருத்தப்பட்டேன். உதாரணத்துக்கு நீங்க அண்ணியைச் சொல்றீங்க. உங்க அண்ணி மாதிரி இரண்டுநாளைக்கு புளிச்சாப்பாடு செஞ்சு வச்சா ஒத்துக்குவீங்களா? அவங்ககூட புடவை நகைன்னு எவ்ளவு மேக்கப் பண்றாங்க. நான் அப்படியாவா இருக்கிறேன்? நீங்க கடன் வாங்கி புக்ஸ் போட்டதை மறந்துட்டீங்களா? என்னால சராசரியான புருஷனா எல்லாம் இருக்கமுடியாதுன்னு சொல்லிட்டு இப்ப மொத்தப்பழியும் என் மேலே சொல்றது என்ன ஞாயம்? முன்னாடியெல்லாம் ஏதாவது பேசனாக்கூட முழுசாப் பேச விடுவீங்க. இப்ப பேசக்கூட விடமாட்டேங்கிறீங்க. நான் என்ன தப்பு பண்ரேன் ஏதாவது கேட்டு உங்களை தொல்லை பண்றேனா? இந்ததடவை என் மனசை ரொம்ப கஷ்டப்படுத்திட்டீங்க
-மேரி வசந்தி
*
இக்கடிதத்தில் உள்ள அந்த பெண்ணைப்போன்ற மனைவிகளை நான் மீண்டும் மீண்டும் சந்தித்திருக்கிறேன். அவர்கள் எளிய கிராமத்துப்பெண்கள். சுமாரான படிப்பு, எளிமையான கனவுகள், சாதாரணமான உலக நம்பிக்கைகள், எதிர்காலம் குறித்த நம்பிக்கை நோக்கு கொண்ட இனிய பெண்கள். சிறந்த மனைவிகளாவதற்காகவே வடிவமைக்கப்பட்டவர்கள். அவளை விட அறிவுத்திறன் மேலான கணவர்களால் முழுமையாக வசீகரிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். உள்ளூர அவர்களுக்காக பெருமிதம் கொண்டிருப்பார்கள். மேல்பேச்சுக்கு அவன் வெளியிட்ட கவிதை நூலை அவர்கள் நிராகரிக்கக் கூடும், உள்ளூர அது அவளுக்கு மிகமிக முக்கியமானதாக இருக்கும். அவள் கணவன் சாதாரணர்களில் ஒருவனல்ல என்பதற்கான ஆதாரம் அது. அதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
லௌகீக வாழ்க்கை குறித்த பதற்றம் அவர்களில் சிலருக்கு இருக்கும். கணவன் திட்டங்களற்றவனாக இருந்துவிடுவானோ என்ற ஐயம் இருக்கும். அவனை அதற்காக கட்டாயப்படுத்தவும் கூடும். ஆனால் அவனுடைய பலவீனங்களை சங்கடங்களை எளிதாக இயல்பாக உள்வாங்கிச் சமனம் செய்துகொள்பவளாக இருப்பாள்.
சில சமயங்களில் இந்த மனைவிகளுக்காக நான் அனுதாபப்பட்டதுண்டு. இந்தப் புரியாத இலட்சியவாதிகளுக்குப் பதிலாக அவளுடைய தளத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண கணவனை அடைந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பாளா என. ஆனால் இன்று அது அப்படியல்ல என்று உணர்கிறேன். இந்த இலட்சியவாதி அந்த இலட்சியவாதத்தால்தான் அவளை தோழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறான். அவளை புரிந்துகொள்கிறான். அவண்டைய உணர்வுகளையும் கௌரவத்தையும் மதிக்கிறான்.
ஆனால் ஒரு நடுத்தர வர்க்க சராசரி கணவன் அவளை அடிமை என்பதற்கு அப்பால் எண்ண போவதில்லை. அவளை ஒவ்வொரு கணமும் சிறுமைப்படுத்துவதன் மூலமே அவன் ஆணாக உணர முடியும். வெளியே அவன் எதிர்கொள்ளும் எல்லா சிறுமைகளையும் சமன் செய்ய முடியும். நான் சூழலில் காணும் தொண்ணூறு சதம் நடுத்தர வற்க்கப் பெண்களின் வாழ்க்கையும் நீடித்த அவமானமே வாழ்க்கையாக ஆகியதாகவே உள்ளது. பெண்ணை மதிக்க இன்னமும் தமிழ்சமூகம் ஆணுக்குச் சொல்லித்தரவில்லை. அடக்கவே அவனை தயாராக்குகிறது, அவனுக்கு ஒருவயதிருக்கும்போதிருந்தே.
அவ்வகையில் இவள் அதிருஷ்டசாலி . அவன் குடிகாரனாக இல்லாதது வரை அவள் இழக்க ஏதுமில்லை. அடைவதற்கு அவளுடைய எந்தத் தோழியும் அடையாத கௌரவமான இனிய வாழ்க்கை உள்ளது. அவனுடைய உள்ளத்துடன் அவள் நெருங்கும் இனிய சில தருணங்கள் உள்ளன. அவனுடைய அத்தனை சிக்கல்களையும் அவன் உருவாக்கும் இழப்புகளையும் அந்த ஒரு காரணத்துக்காகவே அவள் தாங்கிக்கொள்ளலாம்.
நமது எழுத்தாளர்களின், தீவிர இலக்கிய வாசகர்களின் மனைவிகளில் மனம் குறுகிப்போன சிலர் தவிர பிறர் எங்கோ ஒரு புள்ளியில் இந்த யதார்த்ததை உணர்வதை நான் கண்டிருக்கிறேன். என்னிடம் கண்ணீருடன் சிலர் சொல்லியிருக்கிறார்கள். இக்கடிதத்தில் நான் உணர்வது அந்த புரிதல் உள்ளூர ஓடுவதைத்தான்.
கல்வெட்டு பேசுகிறது நவம்பர் இதழ் 2009
924 அ 29 ஆவது தெரு
பக்தவத்சலம் நகர்
வியாசர்பாடி
சென்னை 600039
மறுபிரசுரம். முதற்பிரசுரம் Dec 3, 2009
skalvettu@yahoo.in
சுகுமாரன்
உலகமொழிகளில் பெரும்பாலும் அனைத்திலுமே அதன் மாற்றத்தின் காலகட்டத்தில் இளம்கவிஞர்கள் சட்டென்று ஒட்டுமொத்த இளைஞருலகின் குரலாக வெளிப்படுவதுண்டு. பின்னர் அவர்கள் அங்கிருந்து பெரிதாக முன்னகர்வதில்லை. ஆனால் அவர்களை அந்த மொழி என்றும் நினைவுகூரும். ஆங்கில இலக்கியத்தில் ஷெல்லியும், ருஷ்ய இலக்கியத்தில் மயகோவ்ஸ்கியும் அவ்வாறானவர்கள். மலையாளத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு, கன்னடத்தில் கே.வி.திருமலேஷ் என இந்திய உதாரணங்கள் பல. தமிழில் சுகுமாரன். இன்றும் அக்கால இளமையின் அனலை அக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன
சுகுமாரன்
சுகுமாரன் – தமிழ் விக்கி
ஜமீலா – வெங்கி
அன்பின் ஜெ,
அன்பும் வணக்கங்களும்.
குப்ரினின் “செம்மணி வளையலையும், சிங்கிஸின் ஜமீலாவையும் தவறவிடாமல் வாசிக்கும்படி வேலூர் லிங்கம் சார் அவருடனான வாட்ஸப் உரையாடல்களில் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பார். முதலில் ஜமீலா-வை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.
“ஜமீலா” அழகான குறுநாவல். காதல் கதைதான் என்றாலும் காதல் தாண்டிய மேல் சுட்டும் ஓர் இழை மனதில் பட்டுக்கொண்டேயிருந்தது. கிம் கி-டுக்கின் “3 Iron” மேலோட்டமாக பார்ப்பதற்கு எளிமையான படமாகத் தெரிந்தாலும் ஆழ்ந்தால் குறியீடுகள் விரவிக் கிடக்கும் ஆன்மீகத் தளம் ஒன்று உயிர்பெறும். “ஜமீலா”-வின் எழுத்து உயிரோட்டமான வழுக்கிச் செல்லும் நதி போன்றிருந்தது. சோமசுந்தரத்தின் மொழிபெயர்ப்பு சரளமாக மனதிற்கு இசைவாக இருந்தது.
***
சையது ஒரு ஓவியன். அவனுக்குப் பிடித்த அவனின் முதல் ஓவியம்தான் அவனுக்கு உற்ற தோழனும் வழிகாட்டியும். மனக்கிலேசம் எழும் நேரங்களிலெல்லாம் மானசீகமாக அவன் உரையாடுவது அந்த ஓவியத்துடன்தான். அதனைப் பார்ப்பதும், அதன் முன் அமைதியாக நின்றிருப்பதுமே அவனுக்கு ஆறுதலும், நிம்மதியும், ஆசுவாசமும் தரும். அவ்வோவியம் அவனை ஆசீர்வதிப்பதாக உணர்வான். மஞ்சுகள் நிறைந்த வானும், மழையில் நனைந்த புல்வெளியும், ஈரப் பாதையில் அடிவானம் நோக்கி நடந்து செல்லும் அழகான அவன் அண்ணி (ஜேனே) ஜமீலாவும், அவளின் காதலனும் அந்த ஓவியத்தில் இருக்கிறார்கள். சையது அக்காலத்தை நினைத்துப் பார்க்கிறான்.
இங்கிருந்து சையதின் பதின்பருவத்தின் கிராமத்தின் ஃப்ளாஷ்ஃபேக் துவங்குகிறது (இந்த இடத்தில் இருபக்க பசும்புல்வெளி இடைப் பாதையில் புழுதி பறக்க இரட்டைக் குதிரை வண்டியை ஓட்டி வரும் அழகான உற்சாகமான பதின்வயது ஜமீலாவிற்கு உயிரோட்டமான ஒரு “Intro” காட்சி திரையில் வைத்தால் எப்படி இருக்கும் என்று மனதில் எண்ணி புன்னகைத்துக் கொண்டேன்).
ஸ்தெப்பி வெளிகள் சூழ்ந்த ஆற்றோரக் கிராமம் குர்க்குரேவு. இரண்டாம் உலகப்போர் துவங்கி மூன்றாண்டுகள் ஆகியிருந்த காலம். சையதின் அப்பா ஒரு தச்சர். சையதின் மணமாகாத இரு அண்ணன்கள் ராணுவத்தில் போர்முனைக்குச் சென்றிருந்தனர். ஊரில் கூட்டுப்பண்ணை விவசாயம். பதினைந்து வயதாகும் சையதிற்கு ஒரு தங்கை உண்டு. முன்பு பக்கத்து வீட்டு சின்னம்மாவின் கணவர் இறந்துவிட்டதால் அவர்களின் இன வழக்கப்படி அவரை சையதின் அப்பாவிற்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைத்துவிட்டனர். சின்னம்மாவிற்கும் இரண்டு பையன்கள். அவர்களும் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார்கள். மூத்த பையன் சாதிக்கின் மனைவிதான் ஜமீலா. பக்கயிர் எனும் மலைக் கிராமத்தின் குதிரைப் பண்ணைக்காரர் ஒருவரின் மகள். திருமணமாகி நான்கு மாதங்களிலேயே ராணுவத்திற்கு சென்றுவிட்டான் சாதிக். சின்னம்மா இனிமையானவர். அவருக்கேற்ற மருமகள்தான் ஜமீலா. இரண்டு குடும்பங்களின் நிர்வாகத்தையும் சையதின் அம்மாதான் பார்த்துக்கொண்டார்.
சையதிற்கு தன் அண்ணி ஜமீலாவை மிகப் பிடிக்கும். ஜமீலாவும் அவன்மேல் மிகுந்த அன்பாயிருந்தாள். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. வீட்டின் முன் முற்றத்தில் கலகலவென்று சிரித்துக்கொண்டே துரத்திப் பிடித்து விளையாடுவார்கள். சையதிற்கு ஜமீலா அண்ணியின் ஆளுமையும், அழகும் எப்போதும் பெரும் வியப்பு. ஜமீலா குழந்தை போல குதியும் கும்மாளமுமாய் இருப்பவள். வேலையிலிருந்து திரும்பும் போது நிதானமாக நடக்க மாட்டாள். பாசன வாய்க்காலை எகிறித் தாண்டுவாள். பாடுவதில் ஜமீலாவிற்குப் பிரியம். குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவள் ஜமீலா. இரட்டைக் குதிரை வண்டியை அவள் அநாயசமாக ஓட்டும் அழகும், அவளின் கூர்மையான, அழுத்தமான சுபாவமும், உற்சாகமும் சையதை எப்போதும் ஆச்சர்யப்படுத்தும். சையதிற்கு ஜமீலாவைவிட மேலானவர்கள் உலகிலே எவருமில்லை என்று நினைப்பு.
சையதின் அம்மாவிற்கும் ஜமீலாவின் வெளிப்படையான ஒளிவு மறைவற்ற பேச்சும், மற்ற பெண்களைப்போல் புறம் பேசாத இயல்பும், நியாயமான போக்கும் மிகப் பிடிக்கும். ஊரில் உள்ள இளைஞர்களுக்கெல்லாம் ஜமீலாவின் மேல் ஒரு கண். அவர்களிடமிருந்து ஜமீலாவைக் காப்பது தன் கடமையென மனதில் எண்ணிக் கொள்வான் சையது.
போரில் காலில் அடிபட்டு சமீபத்தில்தான் குர்க்குரேவு கிராமத்திற்குத் திரும்பியிருந்தான் அநாதை இளைஞன் தனிமை விரும்பி தானியார். அவனுக்கென்று யாருமில்லை. இரவுகளை நதிக்கரையில் கழிப்பான். அவனும் கூட்டுப் பண்னையில் வேலை செய்தான். போர் நடைபெறுவதால் படை வீரர்களின் உணவிற்காக, எல்லாக் கிராமங்களிலிலிருந்தும் தானியக் கொள்முதல் செய்யப்பட்டு ரயில் மூலமாக போர் முனைகளுக்கு அனுப்பப்படுகிறது. குர்க்குரேவிலிருந்து ரயில் நிலையத்திற்கு இருபதுகிலோமீட்டகள் ஸ்தெப்பி வெளியைத் தாண்டி பாறைச் செறிவைக் கடக்கவேண்டும். தினமும் ரயில் நிலையத்திற்கு மூன்று தனித்தனி குதிரை வண்டிகளில் தானிய மூட்டைகள் எடுத்துச் செல்வது ஜமீலா, சையது, தானியார் மூவரின் பொறுப்பு.
அப்போதுதான் ஓர் ஆகஸ்ட் மாத முன்னிரவில் ரயில் நிலையத்திலிருந்து கிராமத்திற்குத் திரும்பும்போது தானியாரின் மேல் ஜமீலாவிற்கு காதல் உணர்வு உண்டாகிறது.
***
“ஜமீலா”…ஸ்தெப்பி புல்வெளியில், முன்னிரவின் அமைதியில் காற்றில் மிதந்து வரும் ஓர் இசைப்பாடல்.
வெங்கி
“ஜமீலா” (ருஷ்ய குறுநாவல்) – சிங்கிஸ் ஐத்மாத்தவ்
தமிழில்: பூ. சோமசுந்தரம்
முதல் தமிழ் பதிப்பு: அயல் மொழிப் பதிப்பகம், மாஸ்கோ
பின்பதிப்புகள்: அன்னம் – அகரம்/பாரதி புத்தகாலயம்
வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்- க.மோகனரங்கன்
ஓர் இலக்கியப்படைப்பு மகத்தானது என்று கருதப்பட அடிப்படையாக அமைகின்ற கூறுகள் எவை ?வேறு ஒருதேசத்தில் ,வேறு ஒரு சூழலில் ,வேறு ஒரு மொழியில் நிகழும் படைப்பு எவ்விதத்தில் அந்நியோன்னியமான ஒன்றாக நமக்குள் இடம் பெயர்கிறது, உறவுகொள்கிறது ? நாம் நேரில் கணும் மனிதர்களைக்காட்டிலும் படைப்பாளியின் கற்பனையில் உருக்கொள்கிற கதாபாத்திரங்கள் ஏன் நம்மை பாதிக்கிறார்கள் ? யதார்த்த வாழ்க்கையில் நாம் வெகு சுலபமாக உதாசீனம் செய்துவிட்டு போகும் விஷயங்கள் ,மதிப்பீடுகள் ஒரு படைப்பில் வெளிப்படுகையில் ஏன் மனம் நெகிழ்ந்து போகிறோம் ?ஏன் குற்ற உணர்வில் தவிக்கிறோம் ?
இவற்றுக்கெல்லாம் திட்டவட்டமான பதிகள் ஏதுமில்லை. ஒரு பெரும் படைப்பு என்பது அதைப்படிப்பவனின் எண்ணங்களின் வழியாக புலன்களுக்கு எட்டாத நுண்ணிய இடைவெளிகளை மெளனமாக ஊடுருவுகிறது. அவனது பார்வையை கனவுகளை சிந்தனையை மதிப்பீடுகளை அவனை அறியாமலேயே குலைக்கிறது , தலைகீழக்குகிறது , வரிசைமாற்றுகிறது.மண்ணின் புழுதியில் கால்களை அளைந்துகொண்டிருப்பவனை மனம் கூசச்செய்து விண்ணின் எல்லையின்மையை நோக்கி சிலகணமேனும் மேலெழும்பிப் பறக்கத் தூண்டுகிறது .இயற்கையின் படைப்பில் இப்பேரண்டத்தில் தானும் ஒரு மகிமை மிக்க துளி என்ற பேருணர்வால் இதயம் விம்மும்படிச் செய்கிறது . இவ்வகைபடைப்புகள்தமிழில் அரிதாகவே படிக்கக் கிடைக்கின்றன. அவ்வகை நாவல் ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல்
தனது முந்தைய நாவலில் காலத்தை ஊடுருவி நகரும் கற்பனையின் அறிதல் வழியாக தன் புனைவின் சாத்தியங்களை பரிசீலனை செய்த ஜெயமோகன் இந்த நாவலில் துல்லியமான விவரங்களுடன் கூடிய சமீபத்திய வரலாற்றின் ஒருபகுதியை பின்புலமாக் கொண்டு மனித இருத்தல் பற்றிய அடிப்படையான விசாரணைகளை மேற்கொள்கிறார் .
வரலாறு நெடுகிலும் மனிதன் கண்டவற்றுள் ஆகச்சிறந்தது என்று மதிப்பிடப்பட்ட கம்யூனிச சித்தாந்தம் அது முதலில் நிறுவப்பட்ட சோவியத் ரஷ்யாவிலேயே நொறுங்கிப்போனது இநூற்றாண்டின் பெரும் துக்கம். இலட்சியவாதம் என்ற நிலையில் அதுமனிதனின் பூரணத்துவத்தை முன்வைத்துப்பேசினாலும் நிறுவனமயமாகையில் அது இழைத்த குரூரங்கள் மறையாத கறையாக வே சரித்திரத்தில் படிந்துள்ளது .
எந்த வரையறுக்கப்பட்ட அமைப்பிற்குள்ளும் விசுவாசம் என்ற பேரால் மனசாட்சியை கைவிடசெய்யும் விஷயம்தான் வலியுறுத்தப்படவும் , கடைப்பிடிக்கப்படவும் செய்யப்பட்டுவருகிறது . நுட்பமான மேதைகள் பலரும்கூட சொந்த மனசாட்சியைவிடவும் தாம்சார்ந்துள்ள அமைப்பை முக்கியமாக கருதவும் நம்பவும் முற்படுவது அது தரும் அடையாளம் மற்றும் பாதுகாப்பு போன்ற லெளகீகமான லாபங்களுக்காக மட்டுமே என்று குறைத்துச் சொல்லிவிடமுடியாது .
மாறாக உலகத்தின் அல்லது வரலாற்றின் இயக்கத்தை தங்கள் மூளையால் அளந்து அவற்றின் சிக்கல்களுக்கு தம்மால் தீர்வுகாணவும் மாற்றிவிடவும் முடியும் என்ற அவர்களின் குருட்டு நம்பிக்கைதான் . அதை நம்பிக்கை என்றுகூட சொல்லிவிடமுடியாது தான். எல்லா தனிமனித பாவங்களை விடவும் இத்தகைய இலட்சிய வெறிபிடித்த அகம்பாவங்களால் விளைந்த பெருநாசங்கள்தான் மனித குல வரலாறாக நீண்டுகிடக்கிறது .
உலகமுழுவதிலும் மனிதாபிமானிகளால் நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட அக்டோபர் புரட்சியின் இலட்சியவாத அம்சங்கள் லெனின் மறைவோடு முடிந்துபோயின.ஸ்டாலின் காலத்தில் பிரம்மாண்டமான ஒரு வல்லரசாக ரஷ்யா கட்டமைக்கப்பட்டபோது அதன் பலியாடுகளாக பல்லாயிரக்கணக்கன அப்பாவிமக்கள் காவுகொள்ளப்பட்டனர் . அதை மனசாட்சியின் பேரால் எதிர்க்கமுற்பட்ட கலைஞர்கள் எழுத்தாளர்கள், அறிஞர்கள் பலருக்கும் பரிசாக உடனடிமரணம் அல்லது சாகும்வரையில் சைபீரியப் பனிவெளியும் விதிக்கப்பட்டது .அதில் புரட்சியை முன்னின்று நடத்திய முதல்கட்ட தலைவர்கள் பெரும்பாலோர் அடக்கம்.
அவ்வாறு துரோகி எனமுத்திரையிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட புகாரின் என்ற செம்படை முன்னணிதலைவரின் கதை பெரிஸ்த்ரோய்க்காவின்போது அவரது மனைவி அன்னா நிக்கலாயெவ்னா என்பவரால் வெளிக்கொணரப்பட்டது .அம்மாதிரி வெளியே தெரியாமலே இருட்டில் புதைந்துபோன அவலங்கள் எத்தனியோ இல்ட்சம். அதுவரையிலும் எல்லாமே ஏகாதிபத்திய கட்டுக்கதை என்று ஓங்கிச் சொல்லிவந்த கம்யூனிஸ்டுகள் தங்களைப்பற்றி சுயபரிசீலனைசெய்துகொள்ளவேண்டிய தார்மீக நெருக்கடிக்கு உள்ளனார்கள்.
புகாரினைமுன்வைத்து ரஷ்யாவிலிருந்து தொடங்கி இந்தியக் கயூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கம் வரையில் நிகழும் சித்தாந்தத் தேவையையும் , சந்தர்ப்பவாத அரசியலையும் ,இலட்சியக்கனவுகளின் காலம்போய் பேச்சுவார்த்தை என்ற பேரம் நடக்கும் அதிகார மையங்களையும் விவரித்துச் சொல்லும் இந்நாவல் மற்ற அரசியல் நாவல்களைவிட அந்த ஒற்றைப் பரிமாணத்துக்குள் நின்றுவிடவில்லை . அரசியலை ஒரு முகாந்திரமாகக் கொண்டு அசாதாரணமான ஓர் உத்வேகத்தோடு மனிதனின் அடிப்படை உரிமையான உயிர்வாழ்தலைக் கூட நிச்சயமற்றதாக்கும் நிறுவன அதிகாரம் பற்றியும் ஒரு சமூகத்தில் எந்தவிதமான அடக்குமுறைச்சூழலிலும் நிர்பந்தத்திலும் மெளனிக்கமறுக்கும் மனசாட்சியின் குரல் நீதியுணர்வு முதலியவற்றை பற்றியும் தீவிரமான வாதப்பிரதிவாதங்களை முன்வைக்கிறது .
இந்நாவலின் பலபகுதிகள் பிரக்ஞைபூர்வமான கச்சிதத்தைதாண்டி , கட்டற்ற ஆவேசத்தை ,பதற்றத்தை, தன்னிச்சையான உணர்ச்சி வேகத்தைக் கொண்டதாக பலவித நடைகளில் அமைந்துள்ளன. பிராந்தியப் பேச்சு மொழியிலிருந்து கவித்துவமிக்க செம்மொழிவரையிலும் பலவிதமான சாயல்களில் , புழங்குதளத்துக்கு ஏற்ப மொழி இயல்பாகப் பயின்றுவருகிறது . கனவுநிலைக்காட்சிகளாக வரும் பகுதிகளான புகாரின் அன்னா பிரிவு [பனிக்காற்று நாடகம் ]சைபீரிய வதைமுகாம் சித்திரங்கள் [மூடுபனி நாடகம் ] தல்ஸ்தோயும் தஸ்தவேவ்ஸ்கியும் சந்திக்கும் ரயில்நிலையக் காட்சிகள் [மனிதர்களும் புனிதர்களும் நாடகம் ] புகாரினுக்கும் பாதிரியாருக்கும் குளியலறையில் நடைபெறும் உரையாடல் [விசாரணைக்கு முன் சிறுகதை ]கிறிஸ்து புகாரினுக்கு காட்சிதரும் பகுதி [ உயிர்த்தெழுதல் ] முதலிய பகுதிகள் உரைநடைக்கும் கவிதைக்கும் இடையேயான இடைவெளியை பெரிதும் குறைத்துவிடுகின்றன.
இந்நாவலை வாசிக்கும்போது வாசிப்பின் போக்கிலேயே ஒரு உபபோதமாக இந்நாவல் இயங்கும் நிலப்பரப்பும் அதன் தட்ப வெப்பமும் புலன் வழி உணர்தலுக்கு இணையாக மூளைக்கு அனுபவமாகிறது. ஜெயமோகனின் பிற படைப்புகளில் இத்தனை அழுத்தமாக பதிவுபெறாத விஷயமாக இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மிகுந்த உயிர்ப்புடன் உள்ளனர் .நாகம்மையாகட்டும் , அன்னாவாகட்டும் , இசக்கியாகட்டும் மூவருமே அவர்கள் சார்ந்திருக்கும் ஆண்களின் ஆளுமையிலிருந்து விடுபட்டு தங்கள் சொந்த மனத்திடத்துட பிரச்சினைகளை தங்களுக்கே உரிய வழியில் எதிர் கொள்கிறார்கள் .அதன்மூலம் தங்கள் ஆண்களின் வாழ்க்கைக்கு ஒரு முழுமையையும் அர்த்தத்தையும் வழங்குகிறார்கள்.
அருணாச்சலத்தின் தந்திரமும் மனநெகிழ்வும் பேதலிப்பும் நிரம்பிய தேடல்களை விடவும் நாகம்மையின் தடுமாற்றங்கள் இல்லாத எளிமையும் மனசாட்சியின் தெளிவுமே கம்பீரம் மிக்கவையாகத் தோன்றுகின்றன.அவளால்ஒரே சமயத்தில் இருவேறு துருவங்களாகக் கருதப்படும் அருணாச்சலத்தையும் கெ .கெ . எம் மையும் தன் அன்புக்குக் கட்டுப்பட்டவர்களாக உணரச்செய்ய முடிகிறது . அதேபோல மனசாட்சியின் உறுத்தல் காரணமாக தான் சாகசத்துடன் விளையாடிவந்த அரசியல் சதுரங்கத்தில் அதிகார ஏணிப்படியிலிருந்து மரணத்தின் பாதாளத்துக்கு தள்ளப்படுகிற புகாரினைக்காட்டிலும் நம்பிக்கையின் பசுமைத்துளிகூட துளிர்க்காத சைபீரியப்பனிவெளியில் தனக்கான நாள்வரையில் காத்திருந்த அன்னாவின் பொறுமையே மதிப்பிற்குரியதாக படுகிறது.
ஆனால் சரித்திரத்தில் அருணாச்சலமும் புகாரினும் மீறினால் வீரபத்ரபிள்ளயுமே இடம் பெறுவார்கள் , நாகம்மையும் அன்னாவும் இசக்கியுமல்ல .
நாவலின் மற்றொரு முக்கியமானபகுதி மனநோய்விடுதியில் நடைபெறும் நாடகம். எழுதியவர் முதற்கொண்டு நடிப்பவர் வரையிலும் அனைவருமே மனநிலை பிறழ்வுற்றவர் என்பதால் நாடகத்தின் முதல் அங்கம் முதற்கொண்டே அபத்தமும் அதையொட்டிய கட்டுப்படுத்த முடியாத சிரிப்பும் துவங்கிவிடுகிறது .தமிழ் புனைகதையில் இப்பகுதிக்கு இணையான நகைச்சுவைக்காட்சிகள் குறைவே .நடுவில் திடாரென யோசிக்கும்போது அந்தச் சிரிப்பிற்கடியில் ஒரு கடுமையான துக்கம் இருப்பதை உணர முடிகிறது .அது இப்பூமியின் மீது ஆதியும் அந்தமும் இல்லாது கிடக்கும்காலத்தின் நகைப்பாகும்.
மகத்தான இலட்சியங்களை ,தலைமுறையின் கதாநாயகர்களை, அவர்களின் பெரும் கனவுகளை என எல்லாவற்றையும் சிதைத்துவிட்டு சிரிக்கும் சிரிப்பு அது . நுண்ணுணர்வு கொண்ட எவரும் அந்த கொடும்சிரிப்பின்முன் மனம் பதைத்து மண்டியிடத்தான் வேண்டும். இந்நாடகத்தில் சாக்ரட்டாஸ் , கிறிஸ்துவில் இருந்து மார்க்ஸ் ,இ எம் எஸ் வரை எவருமே அந்தக் குரூர நகைச்சுவைக்கு தப்புவதில்லை. ஓர் அதீதக் கணாத்தில் அந்நாடக நிகழ்வுகள் யதார்த்தமாகவும் அதற்கு வெளியே நடைபெறும் நிகழ்வுகள் பைத்தியக்காரத்தனமாகவும் உருமாறிவிடும் அபாயம் எப்போதும் இருக்கிறது.
தன் சக்திக்கு அப்பாற்பட்ட குருட்டுவிதிகளுக்கு அடிபணிய மறுத்து மெளனமான வன்மத்துட ன் குடிக்கத் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை அழித்துக் கொள்கிற வீரபத்ரபிள்ளையின் சித்திரம் நாவலில் மிக நுணுக்கமாகவும் இயல்பாகவும் துலக்கம் கொள்கிறது . தமிழ் கதைமாந்தரில் இத்தனை ஆழமான மன உந்துதல்களும் நிலைதடுமாற்றத்தின் தவிப்புகளும் கூடிய வேறொரு குடிகாரனை நாம் காணமுடியாது .அவனது முடிவு லெளகீக மதிப்பீடுகளின்படி முழுத்தோல்வியாகவும் யதார்த்தத்துக்கு சற்றும் பொருந்திவராத அபத்தமாக காணப்பட்டாலும் தார்மீக அடிப்படையில் அவன் தன் குடும்பம் ,சார்ந்திருந்த இயக்கம் ,சமூகம் என எல்லாருடைய மனசாட்சியையும் உறுத்தும் நிரந்தரமானதொருகுற்ற உணர்வாக நிலைத்துவிடுகின்றான்.
நாவலுக்குள் சொந்த மற்றும் எளிதில் ஊகிக்க முடிகிற கற்பனையான பெயர்களுடன் வருகிற சில நிஜமனிதர்களின் பாத்திரங்கள் புனைவுக்கும் நிஜத்துக்குமான அருவமான உறவை காட்டுவதோடல்லாமல் நாவலின் நம்பகத்தன்மையை துல்லியமாக்கிக் காட்டவும் உதவுகின்றன
இத்தனை தேய்வுக்கு பிறகும் நமது அரசியல்க் களத்தில் இன்னமும் பொருட்படுத்தக்கூடிய அளவுக்கு தத்துவ சித்தாந்தப் பயிற்சியும் , சுயக்கட்டுப்பாடுகளும் , தனிமனித ஒழுக்கங்களும் பேணப்ப்பட்டு வருவது கம்யூனிஸ்டு கட்சிகளில் மட்டும்தான் . ஆனால் நீதியுண்ர்வும் அறவுணர்வுமற்ற அதன் சித்தாந்தக் குருட்டுத்தனம் , ஆன்மீக பரிமாணங்களற்றவனாக மனிதனைக் குறைத்து மதிப்பிடும் அதன் அபத்தம் ஆகியவை அத்தத்துவத்தின் எல்லைகளை வெகுவாகக் குறுக்கி விடுகின்றன . இச்சுழலில்தான் இங்கு கீழைமார்க்ஸியம் விவாதிக்கப்படுகிறது.
ஆகவேதான் இந்நாவல் வரலாற்றைவிடவும் முக்கியமானது என முன்வைக்கும் அறம்சார்ந்த கேள்விகள் முக்கியத்துவமுடையதாகின்றன. இக்கேள்விகள் ஒருதலைப்பட்சமானவை என கட்சி சார்ந்த மார்க்ஸியர்கள் மறுக்கலாம். அப்படிமறுப்பதற்காக அவர்கள் முன்வைக்கும் வாதங்களைப் பொறுத்து நாவலுக்கு வெளியேயும் விவாதம் தொடரப்படலாம். அதற்கான சாத்தியங்களுக்கு உரியதாகவே நாவலின் வடிவம் உருவாகிவந்துள்ளது.
சிறுகதைகள், நாடகம் ,கவிதைகள், கடிதங்கள், நினைவுக்குறிப்புகள், என மொழியின் எல்லா வடிவங்களையும் நாவலுக்குள் கொண்டுவரும்போது அது கட்டமைப்பு பற்றிய ஓர் உத்தியாக மட்டும் சுருங்கிவிடாமல் பல்வேறு மாற்றுத்தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குரல்களாகவும் அவற்றுக்கு இடையேயான உரையாடல்களாகவும் விரிவாகப்பதிவு பெறுவது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக ஒன்றை குறிப்பிட்டு சொல்லவேண்டும் . புத்தகத்தின் வடிவமைப்பு மற்றும் அச்சாக்கத்தின் தரம் குறித்தது அது .பதிப்பாளர் புத்தகம் வெளியிடுவதை வெறும் வியாபாரமாகமட்டும் கருதாத பட்சத்தில் புத்தகத்தின் வெற்றியில் அதன் வெளியீட்டாளருக்கும் பங்கு உண்டு. அவ்வகையில் தமிழின் பதிப்பகத்தார் இந்நாவலுக்கு அதிகபட்ச கெளரவத்தை சேர்த்துள்ளனர் என்று கூறவேண்டும் .
[பின் தொடரும் நிழலின் குரல் , தமிழினி பதிப்பகம்,342 .டிடிகெ சாலை ,சென்னை,600014 .
பக்கங்கள் 723 விலை ரூ 290
‘வேட்கை ‘ காலாண்டிதழ் மே 2000 இதழில் வெளிவந்தது ]
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

