Jeyamohan's Blog, page 608

March 24, 2023

ஆலயம் அறிதல், தாராசுரம்- கடிதம்

ஆலயம் அறிதல், கடிதம்

உளம் கனிந்த ஜெவுக்கு,

தங்கள் நலம் விழைகிறேன். ஆலயக் கலை வகுப்பைத் தொடர்ந்து  தாராசுரம் கோவிலுக்கு தலபயணத்தை 19.3.23 அன்று அஜி ஒருங்கிணைத்தார். காலை 8.20 மணி அளவில் ஜெயக்குமார் அவர்கள் வந்ததும் அந்த இனிய பயணம் தொடங்கியது. கோவிலுக்குள் செல்லும் முன்பு வெளிய உள்ள கோபுரத்தை பார்க்க வேண்டுமென்று அழைத்து சென்றார். மற்ற கோவில்களுடன் ஒப்பிடும் பொழுது தாராசுரம் எப்படி வேறுபடுகிறது, அதன் சிறப்புகளாக  ஜாலகம், miniature சிற்பங்கள் ,சைவமும் சாக்தமும் இணைந்த தன்மை, அம்மனுக்கு தனி சன்னதி மற்றும் பெரியபுராண சிற்பங்கள் இருப்பதை  கூறினார்.  சிதிலமடைந்த அவ்விடத்தில் நடமாடும் திருஞானசம்பந்தரை கண்டதும் உள்ளம் கூத்தாட தொடங்கியது,  குழல் கொண்டு கண்ணனையும் சம்பந்தரையும் வேறுபடுத்தலாம் என்றும், ஒன்பது வகை நிதியங்களில் சங்க நிதி பதும நிதி இருவரையும் வளத்தின் குறியீடாக காண்பித்தார். கோவிலில் உத்தர காமிக ஆகமம் பின்பற்றபட்டதும் வெவ்வேறு  சக்தி வடிவங்களை விளக்கி கூறினார், அவற்றில்  சில சிற்பங்கள் இப்போது இல்லை.

பின்பு பலிபீடம் ( சலிலாந்த்ரம்), சோபனம் ஆகியவற்றை பார்த்து கோவிலுக்குள் சென்றோம். முகமண்டம் (ராஜகம்பீர திருமண்டபம்), மகா மண்டபம் , அர்த்தமண்டபம், அந்தராளம் & கருவறையை வேறுபடுத்திக் காட்டினார். தாரசுர அம்மை அப்பரை வணங்கினோம். உபபீடம், அதிஷ்டான பந்தங்கள், கண்டபாதம்,குமுதம், யாளம் போன்றவற்றை ஒவ்வொரு இடத்திலும் விளக்கினார். முகமண்டப சோபனத்தில் இருந்து இடமாக ஒவ்வொரு சிற்பங்களாக மன்மத தகனம், தக்கன் வேள்வி தகர்த்தது, கோஷ்ட சிற்பங்கள் அவற்றின் ஸ்தானகம், மகுடம்,கை அமைதி, ஆபரணங்கள் & கம்போடியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளைக்கல் பற்றியெல்லாம் விவரித்துக் கூறினார். சரபேஸ்வரர்  மற்றும் தட்சிணாமூர்த்தி சிற்பம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று, அழகில் உச்சங்களைத் தொட்டு மனதை கொள்ளை கொள்பவை. சரபேஸ்வர சிற்பத்திற்கு அடித்தளம் ” மடங்கலானைச் செற்றுகந்தீர் மனைகள் தோறும் தலை கையேந்தி விடங்கராகி திரிவதென்ன வேலை சூழ் வெண்காடனீரே”  எனும் திருமுறை பாடலே என்றார்.

அடுத்ததாக அப்பர் கயிலை பெருமானை தரிசித்த பொழுது அருளிய பதிகத்தை  காந்தார பண்ணில் ஜெயக்குமார் அவர்கள் பாடிய பின் சிற்பங்களாக காணத் தொடங்கினோம், திருவையாறில்  கடந்த வருடம் ஆடி அமாவாசை தினத்தன்று அப்பர் கயிலை காட்சி விழா காணச் சென்றிருந்தேன். ஒருமித்த குரலில் ஓதுவார்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் *மாதர்பிறை கண்ணியானை*பதிகம் பாட கயிலை பெருமான் காட்சியளித்த தருணத்தை ஒத்தது, கற்சிற்பம் அளித்த காட்சி. அப்பர் நடந்து,விழுந்து, தவழ்ந்து, புரண்டு பல தடைகளை கடந்து அவனை தரிசித்தேயாக வேண்டும் என செல்லும் பெரிய புராண காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. அவருக்கு கயிலாயத்தில் கிடைக்காத காட்சி திருவையாறில் கிடைத்தது.காணும் ஒவ்வொரு இணையையும் அம்மை அப்பராக கண்டார் களிறு, கோழி, வரிக்குயில், அன்னம்,மயில், பகன்றில், ஏனம், கலை, நாரை, பைங்கிளி, ஏறு  என ஒவ்வொன்றிலும்…. அப்பரின் உள்ளம் சொல்லாகியது சிற்பியின் உள்ளம் கல்லாக்கியது மீண்டும் கண்ட எங்களின் உள்ளமும் ஆகியது. 5,12, 21 என மூன்று வெவ்வேறு நூற்றாண்டு உள்ளங்கள் இணைந்த தருணம். அந்த தருணத்தில் இருந்து மீள்வதன் முன் முகமண்டபத்தில் உள்ள கந்த புராணச்சிற்பங்களை

குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவின் நூல் கொண்டு முருகனுக்கும் அசுரர்களுக்கும் எப்பொழுது போர் வரும் என்ற ஆர்வத்துடன் வளைத்து வளைத்து கீழிருந்து மேல் மேலிருந்து கீழ் என குதூகலமாகப் பார்த்தோம். மதிய உணவிற்குப் பின் மாலையில் மீண்டும் கூடி சிறுதொண்டர் புராணத்தை விவரிக்கும் சிற்பங்கள், தனித்திருக்கும் அம்மன் சன்னதி அதன் சிறப்புகளாக கர்ண கூடம், மகாநாசிகை, சாலை ஆகியவற்றை பார்த்த பின்பு சுந்தரர் அருளிச் செய்த திருத்தொண்டத் தொகை வரிசையில் அமைந்த நாயன்மார்கள் வாழ்க்கை  வரலாற்றை ஒவ்வொரு குறுஞ்சிற்பங்களாக பார்க்க தொடங்கினோம். ” தில்லை வாழ் அந்தணர்  தொடங்கி இசைஞானியர் வரை, நாயன்மார்கள் ஒவ்வொருவரையும் பெருமான் தனித்தனி வழியில் ஆட்கொண்ட முறையை கண கச்சிதமாக பார்த்த பொழுது விழிப்பாவை விரிந்தது மட்டுமே இப்பொழுது ஞாபகம் இருக்கிறது.நாவுக்கரசரை காட்டுமிடத்தில்  பெருமானால் திருவடி தீட்சை அளிக்கப்பட்ட நிகழ்வு காட்டப் பெற்றிருந்தது. அந்நிகழ்வு நடந்த திருநல்லூரில் கூட சித்திரம் மட்டுமே உள்ளது.  ஆனால், இங்கு கண்ட  அழகிய குறுஞ்சிற்பம் கண்ணை விட்டு அகலாமல் உள்ளது. நாயன்மார்களை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரதோச மூர்த்தி உலா வந்து காட்சியளித்தார். அடியார்கள் தரிசனத்தின் பரிசாக நினைத்துக் கொண்டேன். நிறைவாக 108 ஒதுவார் சிற்பங்களை பார்த்து மீண்டுமொரு முறை மூலவரை வணங்கி வெளிவந்தோம். பயணம் முடிந்தவிட்டதே என ஏங்கி ஆசிரியரிடம் நன்றி கூறும் பொழுது அடுத்து ஹொய்சாளம் போவோமா என்றார், மனம் குதூகலமானது. அழகான இந்த பயணத்தில் சற்றும் சோராமல் இன்முகத்துடன் விளக்கிய  ஜெயக்குமார் அவர்களுக்கும், சிறப்பாக ஒருங்கிணைந்த அஜீக்கும், அச்சாணியாக இருக்கும் தங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் பொழுதும் சிற்பங்களை பார்க்க பார்க்க மனம் அலைபாயும் இது என்ன சிற்பமாக இருக்கும், ஏன் இப்படி இருக்கிறது, என பல கேள்விகள் எழும், மூலவரை நிறைவுடன் வணங்கி வந்தாலும் கோவிலை விட்டு வரும்பொழுது ஏதோ பார்க்காமல் விட்டு வருகிறோம் என்ற எண்ணமே மேலெழும். ஆசிரியர் உடனிருந்து விளக்கினால் நன்றாக இருக்குமே என தோன்றும், தங்களால் அது நிகழ்ந்தேறியதில் மிக்க மகிழ்ச்சி.ஒன்று மட்டும் புரிந்தது இன்னும் கண்டடைய வேண்டிய தேடல் நிறைந்துள்ளதென..

பிரியமுடன்

பவித்ரா, மசினகுடி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2023 11:30

March 23, 2023

மரபின்மைந்தனுக்கு வாழ்த்துக்கள்


நண்பர் மரபின்மைந்தன் முத்தையா இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.

‘வணக்கம். சிவம் பெருக்கும் தருமை ஆதீனத்தின் நட்சத்திர குருமணிகள் திருவார் திரு குரு மகா சன்னிதானம் அவர்களின் திருக்கரங்களால் மயிலாடுதுறை குமார கட்டளை அருள்மிகு வள்ளி தேவசேனா சமய சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கில் 24.03.2023 அன்று தருமை ஆதீனப்புலவர் எனும் விருது பெறுகிறேன்.

மாதவம் ததும்பும் தருமபுர ஆதீனத்திற்கு வழிவழியாய் தொண்டாற்றும் மரபில் பிறந்ததன் பயன் அடைந்ததாகவே கருதி மகா சன்னிதானங்களின் திருவடி மலர்களை மனம் மொழி மெய்களால் வணங்குகிறேன்

இந்த இனிய வேளையில் தங்கள் நல்லாசிகளை நாடுகிறேன்

தங்கள் அன்புள்ள
மரபின் மைந்தன் முத்தையா’

மரபின்மைந்தன் முத்தையா மரபிலக்கியங்களில் பயிற்சி கொண்டவர். சைவ பக்தி இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். இப்பதவி அவருக்கு பெரிய கௌரவம். பதவிக்கு அவரும் சிறப்பு சேர்ப்பார் என நம்புகிறேன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2023 19:33

அதிகார அமைப்பா?

அண்மையில் ஒரு  கேள்வி வெவ்வேறு வாசகர்களால் முன்வைக்கப்பட்டது. அவற்றுக்கு தனிப்பட்ட முறையில் அளித்த பதில்களின் தொகை இது.

முதல் கேள்வி, விஷ்ணுபுரம் வட்டம் ஓர் அதிகார அமைப்பா? எழுத்தாளர் ஜெயமோகன் ஓர் அதிகார அமைப்பா? பொதுவாகவே எழுத்தாளர்கள் அதிகார அமைப்பாக ஆகிறார்களா?

இணையத்தில் பலர் பலவகைகளில் இக்கேள்விகளை முன்வைக்கிறார்கள். அவற்றை முன்வைக்கிறவர்கள் தாங்கள் ’அதிகாரத்தை எதிர்க்கும் சிந்தனையாளர்கள்’ என்ற பிம்ப உருவாக்கத்துக்கு முயல்கிறார்கள்

முதல் கேள்வி. இதற்கு முன்னால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எழுத்தாளர்கள்மேல் வந்துள்ளனவா?

இலக்கியவரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். நான்கு பேர் மேல் அடிவயிற்று ஆவேசத்துடன் இக்குற்றச்சாட்டு பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது.

சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அவர்களுக்கு முன்பு க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா. நால்வருமே ஆள்திரட்டி அமைப்பை நடத்துகிறார்கள், இலக்கிய அதிகாரம் செலுத்துகிறார்கள் என வசைபாடப்பட்டனர். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் இருவருடைய இல்லங்களும் ‘மடம்’ என்று கேலி செய்யப்பட்டன. க.நா.சுப்ரமணியம் ’பரமார்த்தகுரு’ என இழிவுசெய்யப்பட்டார். க.நா.சு, சி.சு.செல்லப்பா இருவருமே அமெரிக்க நிதிபெற்று இலக்கிய அதிகாரத்தை உருவாக்குகிறார்கள் என அவதூறு செய்யப்பட்டார்கள். இவையெல்லாம் அச்சிலேயே வாசிக்கக் கிடைப்பவை.

அதைச் சொன்னவர்கள் எவர்? அன்றைய பேராசிரியர்கள் மற்றும் அரசியலமைப்பினர். அந்தப் பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் பணம்கொழிக்கும் கல்வித்துறையில், அந்த ஊழலில் உழன்றவர்கள். இலக்கியமே அறியாமல் இலக்கியம் கற்பித்தவர்கள். தாங்களே கதையும் கட்டுரையும் எழுதி தங்கள் கல்லூரிகளிலேயே இலக்கியபாடமாக்கி பணம் அள்ளியவர்கள். அரசியல்வாதிகளுக்கு புளிக்கப்புளிக்க புகழ்பாடி பதவிகளை அடைந்தவர்கள். அரசியலமைப்பினர் கட்சியின் ஆணைப்படி இலக்கியம் பேசியவர்கள். அவர்கள்தான் கால்நடையாக நடந்து, தலையில் புத்தகம் சுமந்து விற்று, சிற்றிதழ்நடத்தி இலக்கியம் வளர்த்த க.நா.வையும் சி.சு.செல்லப்பாவையும் ‘அதிகாரம் செலுத்தும் ஐந்தாம்படை’ என்றனர்.

ஏன்? வெறும் அச்சம், பதற்றம். எல்லா காலகட்டத்திலும் அந்த பதற்றம் கல்வித்துறையினரை, அரசியலாளர்களை ஆட்கொள்கிறது. உண்மையில் அவர்களிடம்தான் எல்லாமே இருக்கிறது. இன்று ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒரு மணிநேர உழைப்புக்கு சராசரியாக இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு வகை பூர்ஷுவா. பல்கலைக்கழகம் ஒருவகை நிகர் அரசு. எல்லாவகையான அதிகாரமும், அந்த அதிகாரத்திற்குரிய ஊழல்களும் கொண்டது. அரசியல்கட்சியினரின் ஊடக அணிகளிடம் அரசாங்கமே இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தீவிர இலக்கியத்தை அஞ்சுகிறார்கள். முடிந்த வரை இழிவுசெய்து எதிர்க்கிறார்கள்.

ஏனென்றால் தங்களுடைய உள்ளீடின்மை அவர்களுக்கு தெரியும். யானைமேல் அமர்ந்தாலும் அந்த பாதுகாப்பின்மை அகல்வதே இல்லை. எந்நிலையிலும் தீவிர இலக்கியம் இவர்களுக்கு எதிரானதாகவே இருக்குமென இவர்கள் அறிவார்கள். இவர்களின் அதிகாரமும் பணமும் இவர்களிடம் நூறுபேரை ஈர்க்கலாம், ஆனால் மெய்யான தேடலுடன் நுண்ணுணர்வும் அறிவுத்திறனும் கொண்ட ஒருவன் இலக்கியம் நோக்கிச் சென்றுகொண்டே இருப்பான் என இவர்களுக்கு தெரியும்.

எழுத்தாளர்கள் என்ன அதிகாரத்தைக் கொண்டுள்ளோம்? எவர்மேல் நாங்கள் ஆதிக்கம் செலுத்த முடியும்? எழுத்தால் சிலர்மேல் செல்வாக்கு செலுத்துவோம். ஆனால் எழுத்தின் நோக்கமே அதுதான். அச்செல்வாக்கைச் செலுத்துவதற்காகவே இலக்கியம் செயல்படுகிறது. மேலோட்டமாக வாசித்துச் செல்வதற்குரியதல்ல இலக்கியம். அது வாழ்க்கையை ஊடுருவுவது. வாசிப்பவனின் பார்வையை கட்டமைப்பது. தன்னிடமுள்ள ஒன்றை வாசகனுக்கு அளிக்கிறான் எழுத்தாளன். அவன் முன்னோடிகளிடமிருந்து பெற்றுக்கொண்டது அது. அவன் வழியாக அடுத்த தலைமுறைக்குக் கடந்துசெல்வது.

பல்கலைக்கழகங்களும் அரசியல்கட்சிகளும் அரசாங்கமும் இங்கே என்றும் கோட்டைகளை கட்டி கொடிபறக்கவிட்டு அமர்ந்திருக்கும். அவற்றை எவரும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் இந்த சின்னஞ்சிறு தற்கொலைப்படையும் என்றும் இருந்துகொண்டிருக்கும். ஒருபோதும் சரண் அடையாது. ஒருபோதும் முற்றாகத் தோற்காது.

நான் உருவாக்க நினைப்பது அமைப்பை அல்ல. நான் உருவாக்குவது ஓர் இயக்கத்தை. இணையான எண்ணம் கொண்டவர்கள் தன்னியல்பாகத் திரண்டு செய்யும் ஒரு கூட்டுச்செயல்பாட்டை. இங்கே தலைவர்களோ தொண்டர்களோ எவருமில்லை. எந்த பொறுப்பாளரும் இல்லை.

இந்த இயக்கம் க.நா.சு கனவு கண்டது. இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் என அவர் எழுதிக்கொண்டே இருந்தார். அதற்காக சிற்றிதழ்கள் நடத்தி தன் தந்தை அளித்த மொத்தச் சொத்தையும் இழந்து பணமில்லாதவராக மறைந்தார். இறுதிக்காலத்தில் ஒரு காடராக்ட் அறுவைசிகிழ்ச்சை செய்ய காசில்லாமல் இருந்தார். செல்லப்பா தன் சொத்துகளை சிற்றிதழ் நடத்தி இழந்தார். சுந்தர ராமசாமி காகங்கள், காலச்சுவடு என்னும் பெயர்களில் உருவாக்க எண்ணியது இந்த இயக்கமே. ஜெயகாந்தன் இலக்கியவட்டம் என்னும் பெயரில் உருவாக்க எண்ணியது இந்த இயக்கமே.

ஏன் இந்த இயக்கம் தேவையாகிறது? ஏனென்றால் இங்கே இலக்கியவாதி அனைத்து அமைப்புகளாலும் தனித்துவிடப்பட்டிருந்தான். கல்வியமைப்புகளில் பேராசிரியப் பெருச்சாளிகள் ஏறி அமர்ந்து தின்று கொழுக்கின்றன. அரசியலாளர்களுக்கு இலக்கியம் ஒரு பொருட்டே அல்ல. இலக்கியத்தைக் காக்க வேண்டியது இலக்கியவாதியின் வேலை என்றார் க.நா.சு. அவர் உருவாக்க எண்ணிய இயக்கம் அதற்காகவே.

ஆனால் அவர்களின் முயற்சிகள் வெல்லவில்லை. சிற்றிதழ் இயக்கம் மிகுந்த செலவேறியது. சுந்தர ராமசாமியாலேயே சிற்றிதழை நடத்த முடியவில்லை. அது அவர்களை வீழ்த்தியது. நானும் சிற்றிதழ் நடத்தி பண இழப்பை அடைந்தவனே.

க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் கனவுகண்டதையே நான் செய்கிறேன். 1991ல் நான் எழுதவந்த காலம் முதல் இந்த இயக்கத்தை உருவாக்க முயல்கிறேன். நான் நடத்திய எல்லா இலக்கியக் கூட்டங்களும், சந்திப்புகளும் பிற படைப்பாளிகளுக்காகவே. இலக்கியத்தை முன்வைப்பதற்காகவே. எனக்காக அல்ல.

இணையம் வழியாக பொதுமக்களிடம் குறைந்த செலவில் பேசமுடிந்தபோது இந்த இயக்கம் கொஞ்சம் வலுப்பெற்றது. இத்தனை ஆண்டுகளில் நாங்கள் செய்தது என்ன என எவரும் பார்க்கலாம். ஆ.மாதவனுக்கு முதல் இலக்கியக் கூட்டத்தை அவருடைய எழுபதாம் வயதில் நாங்கள்தான் நடத்தினோம். அன்றுவரை எந்த ஒரு பல்கலைக் கழகமும், எந்த ஒரு அரசியலமைப்பின் இலக்கியக் கிளையும் அவரை பொருட்டாக நினைக்கவில்லை.

அவ்வாறு நாங்கள் அடையாளப்படுத்திய பின்னரே மூத்த படைப்பாளிகள் கவனம்பெற்று விருதுகள் வாங்கினர். பலருக்கு அவர்களுக்குக் கிடைத்த அங்கிகாரமே நாங்கள் அளித்தது மட்டுமே. இந்த இயக்கம் உருவான பின்னரே வெவ்வேறு தனியார் விருதுகள் உருவாயின. இன்று எழுத்தாளர்களுக்கு ஏதேனும் பண ஆதரவு உண்டு என்றால் அது இவ்விருதுகளே.

இலக்கியவாதிகளாகிய நாங்கள் எங்களுக்காக உருவாக்கிக் கொள்ளும் இயக்கம் இது. கொரோனா காலகட்டத்தில் இலக்கியவாதிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல உதவிகளை நாங்களே செய்தோம். இன்றும் அத்தகைய உதவிகள் தொடர்கின்றன. ஏனென்றால் இலக்கியவாதிக்கு இங்கே வேறவரும் உதவிக்கு இல்லை.

ஆனால் அதுகூட பேராசிரியர்களுக்கும் அரசியலடிமைகளுக்கும் கசக்கிறது. அந்தச் சிறிய இயக்கம்கூட இருக்கலாகாது என்கிறார்கள். இது அதிகாரமாம், இவர்கள் எதிர்க்கிறார்களாம். இலக்கியவாதிகள்மேல் அதிகாரம் என்றால் இலக்கியவாதி எதிர்க்கட்டும், இவர்களுக்கு என்ன வேலை இங்கே?

இவர்கள் அமைப்புக்கும் அதிகாரத்துக்கும் எதிரிகளாம். தமிழகத்தில் எந்தப் பேராசிரியராவது பல்கலைக் கழகம் என்னும் அமைப்பின் அதிகாரம், அது சிந்தனைமேல் செலுத்துத்தும் ஆதிக்கம், அங்குள்ள ஊழல் பற்றி எப்போதாவது ஒரு வார்த்தையாவது பேசி நாம் அறிந்திருக்கிறோமா? எந்தக் கட்சியடிமையாவது கட்சியின் ஆதிக்கம், ஊழலுக்கு எதிராக ஒரு சொல்லாவது பேசிவிட முடியுமா? கட்சிகளின் இலக்கிய அணிகளுக்கு இலக்கியமறியா அரசியல்வாதிகள் தலைமை வகித்து வழிகாட்டுவதைப்பற்றியாவது ஒரு முனகல் எழுப்பிவிட முடியுமா?

அவர்களின்  எதிர்ப்பெல்லாம் ஆயிரம் வாசகர்கொண்ட சிற்றிதழெழுத்தாளர்களிடம் மட்டும்தான். ஏனென்றால் அதிகாரமென்றால் என்னவென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எழுத்துச்சூழலில் உண்மையான எந்த அதிகாரமும் இல்லை என அதைவிட நன்றாகத் தெரியும். அதிகாரத்தின் எந்த எதிர்விளைவையும் சந்திக்காமல் அதிகார எதிர்ப்பு பிம்ப உருவாக்கத்துக்கான எளிய வழி இது.

இலக்கிய இயக்கங்களுக்குரிய செயல்முறை அதற்கான ஜனநாயகம் கொண்டது. அது அழகியல்கோணங்களின் ஜனநாயகம். நான் முன்வைக்கும் எழுத்தாளர்கள் எவரும் நான் எழுதும் அழகியலை கொண்டவர்கள் அல்ல. எனக்கு முற்றிலும் எதிரான அழகியல் கொண்ட  சாரு நிவேதிதாவோ, எனக்கு முற்றிலும் அன்னியமான அழகியல் கொண்ட இரா முருகனோ அவ்வாறுதான் என்னால் ஏற்கப்படுவார்கள். அழகியல்களின் உரையாடல் வழியாக நிகழும் ஒரு செயல்பாடு இது. எல்லா தரப்புகளும் இடம் பெறும் ஒரு களம் இது.

இப்படித்தான் சிற்றிதழியக்கம் என்றும் இருந்துள்ளது. இனியும் அவ்வாறே இருக்கும். இங்கே அதிகாரம் உண்டா? ஆம், உண்டு. அது இலக்கியம் வழியாகவே உருவாகும் செல்வாக்கு. உலகமெங்கும் அது அவ்வாறே. எழுத்தின் வழிமுறையே அதுதான். ஓர் எழுத்தாளன் தான் அடைந்த வாழ்வனுபவங்கள், அவற்றிலிருந்து பெற்ற சிந்தனைகள், அவற்றினூடாகச் சென்ற அகப்பயணங்களை எழுத்தில் முன்வைத்து தன் காலகட்டம் மீது முடிந்தவரைச் செல்வாக்கு செலுத்த கடமைப்பட்டவன். ஒவ்வொரு எழுத்தாளனும் செய்வது அதையே. அதில் அவரவர் ஆற்றலும் வாய்ப்பும் அவரவருககான இடத்தை அளிக்கின்றன.

இந்த அதிகார எதிர்ப்புக் குரலுக்கு இன்னொரு நேரடிப் பின்புலமும் உண்டு. மிக அண்மைக்காலமாக தமிழக அரசு இலக்கிய விழாக்களில் நவீன எழுத்தாளர்களுக்கு அளிக்கும் இடம் இவர்களை பதறச் செய்கிறது. அது இவர்கள் அமர்ந்திருந்த இடம். இவர்கள் வெட்டிப்பேச்சு பேசி தேய்த்த பழைய திண்ணை. ஏதோ நிகழ்கிறது, இலக்கியவாதிகள் உள்ளே நுழைகிறார்கள் என அஞ்சுகிறார்கள். இவர்கள் வசதியாக வைத்து தின்றுகொழுக்கும் எதையோ இலக்கியவாதிகள் பிடுங்கிக்கொள்ளப் போகிறார்கள் என கற்பனைசெய்கிறார்கள்.

அபத்தமான பயம். இத்தனைக்குப் பின்னரும் இங்கே இலக்கியத்திற்கு இருப்பது சில ஆயிரம்பேர் மட்டும்தான். இது இன்னமும்கூட ஒருவகை தலைமறைவு இயக்கம்தான். சி.சு.செல்லப்பா காலத்தைவிட நிலைமை ஒன்றும் மேலெழுந்துவிடவில்லை.  ஆகவே எவரும் கற்பனை பயங்களை வளர்க்கவேண்டியதில்லை. அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அந்த அதிகாரமும் பணமும் அப்படியே சிந்தாமல் அவருக்குக் கிடைக்கும். ஆசுவாசமடையலாம்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2023 11:35

கோவை அய்யாமுத்து

[image error]

கோவை அய்யாமுத்து தமிழகத்தில் காந்திய இயக்கத்தின் தலைமகன்களில் ஒருவர். ஈ.வெ.ராமசாமி பெரியார் பற்றிய விரிவான (மெய்யான) சித்திரங்கள் பதிவுசெய்யப்பட்ட அவருடைய தன்வரலாற்றுநூல் எனது நினைவுகள். தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான தன்வரலாற்றுநூல்களில் ஒன்று

கோவை அய்யாமுத்து கோவை அய்யாமுத்து கோவை அய்யாமுத்து – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2023 11:34

மதங்களின் ஆழமும்; அறிவியலின் எல்லையும்- கடலூர் சீனு

இனிய ஜெயம்

12,000 வருடத்துக்கு முன்பான கோபக்ளி டெபெ ஆலயத்தை முன்வைத்து,  மார்க்சிய அறிதல் சட்டகத்துக்கு வெளியே நிற்கும் அதன் பின்புலம் குறித்து வைகுண்டம் அவர்களின் வினாவும் அதற்கு உங்கள் பதிலும் வாசித்தேன். இதே ஆலயம் குறித்து முன்னர் நான் இந்த தளத்தில் இதே வினாவுடன் எழுதி இருக்கிறேன். அது ஒரு புதிர் மிகுந்த தேடல் வெளி.

(செவ்வியல்) மார்க்சிய அறிதல் முறை, அகவயம் என்ற ஒன்று  அதுவும் புறவயத்தால் உருவாக்கப்பட்டதே என்று வரையறை செய்யும். எனில் ஹெலன் டெமுத் மீதான காமத்துக்கு அதன் சட்டகத்தில் என்ன பொருள்? லெனின் காலத்தில் பனி வெளியில் வீசி எறியப்பட்டு உயிரை உறைய வைத்து கொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான விவசாயிகள், அதன் பின்னுள்ள குரோதம் அதற்கு மார்க்சியத்தில் என்ன பொருள்? இதோ இன்று ரஷ்யா நிகழ்த்திக்கொண்டிருக்கும் நாடு பிடிக்கும் போர் அந்த அதிகார மோகத்துக்கு என்ன பொருள்?

தனி மனித ஆழமான இதற்கு எப்படி மார்க்சியத்தில் விடை இல்லையோ ( எரிக் ஹாப்சம் சுட்டிக்காட்டும் அசிங்கமான மார்க்சியர் வசம் இதற்கு திட்டவட்டமான விடை உண்டு) அப்படித்தான் வரலாற்றுக்கு முந்தய பண்பாடு சார்ந்த ஆழம் கொண்ட விஷயங்களிலும் அதனிடம் விடை கிடையாது.

இன்றைய வரலாற்றுப் போக்கிலேயே கூட பண்பாட்டு அசைவில் உள்ள புதிர்களை நோக்கி மார்க்சியத்துக்கு வெளியே நிற்கும் பார்வை வழியே சில பாதைகளை திறந்து காட்டினார் ஜாரட் டைமண்ட்.  (துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு-எனும் தலைப்பில் அந்த நூல், பாரதி புத்தகாலய வெளியீடாக தமிழிலும் உண்டு சுமாரான மொழியாக்கத்தில் ) ஐரோப்பிய மேட்டிமைவாதி, நிற வெறியர், அறிவியல் அறியா அறிவிலி என்று மார்க்சியர் உட்பட அனைவராலும் வசைபாட பட்டார்.

அப்படி ஒருவராக இத்தகு வரலாற்றுக்கு முந்திய களங்களை ஆய்வு செய்து, சில புதிய பாதைகளை திறக்க முயற்சிக்கும் வகையில், பல்வேறு அறிவியல், தொல்லியல், மார்க்சிய, தரப்பினராலும் மோசடிக்காரர் இவர் என்பது உள்ளிட்டு எல்லா வகையிலும்  விமர்சிக்கப்படும் மற்றொருவர் பத்திரிக்கையாளர் கிரஹாம் ஹான்காக்.

https://grahamhancock.com/

இவர், கோபக்ளி டெபெ ஆலயத்தின் காலம் உறுதி ஆனதும், அப்படி ஒரு காலம் வரை தொன்மை கொண்ட, 2014 ல் தொல்லியல் ஆய்வுகள் மேம்போக்கான பதில்களை கூறி ஆய்வை முடித்துக்கொண்டு ஜாவா தீவின் குணாங் படாங் பிரமிட்டை அதன் ஆய்வுகளை பின் தொடர்ந்தார்.

https://www.sciencealert.com/the-world-s-oldest-pyramid-is-hidden-in-an-indonesian-mountain-scientists-claim

இதன் வழியே வெளியான முக்கிய தகவல், இந்த மலை குன்று உண்மையில் ஒரு பிரமிட். பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டது. உள்ளே புதைந்து இருக்கும் மூன்று  சேம்பர்களில் மூத்தது 11000 ஆண்டுகள் வயது கொண்டது.

இதே போல கிரஹாம் கோபக்ளி டெபெ, மற்றும் மால்டா தீவின் தொல் பழங்கால பெருங்கல் கட்டுமானத்தையும்

https://whc.unesco.org/en/list/132/

மெக்சிகோ ப்ரமிடுகள் கட்டுமானத்தையும், படாங் கட்டுமானத்தையும் அங்கே உள்ள பழங்கதைகளின் வழியே பொருள் கொள்ள முயல்கிறார்.

ஆச்சர்யமாக எல்லாமே பெருஊழி வெள்ளத்தில் மீட்பனாக வந்த தேவன் ஒருவன் கட்டிய கோயில் என்பதில் ஒற்றுமை கொண்டிருக்கிறது. இந்த பிரளய கால வெள்ள கதைகள் மானுட ஆழுள்ளத்தில் உள்ளது. இங்கே சிதம்பரம் அருகே சீர்காழியில் உள்ள பெரிய கோயில் நாயகன் பெயர் தோணியப்பர். பெருவெள்ளம் வந்து உலகே மூழ்க, எஞ்சிய இந்த சீர்காழியில் சிவன் தோணி வழியே வந்து சேர்ந்து, பிரணவம் சொல்லி மீண்டும் உலக உயிர்களை படைத்தார் என்பது இக்கோயில் ஐதீகம்.

மனு என்ற மன்னன் பிரளய வெள்ள சூழலில் ஒரு மீனின் வழி காட்டலில் படகு வழியே எஞ்சிய நிலத்தை அடைந்து மனு குலத்தை மீண்டும் உயிர்பித்தான் என்பது இந்திய தொன்மங்களில் ஒன்று. இப்படி பைபிளின் நோவா படகு மிகுந்த பிரபலமான கதை.

எல்லா கதையிலும் உள்ள ஒற்றுமை, அது மானுட பொது ஆழுள்ளம் வழியே உருவானது என்பது. இதில் நான் கண்ட மற்றொரு ஒற்றுமை, அப்படி நாயகன் வந்து சேர்ந்த படகு எதுவும் மனித ஆற்றல் கொண்டு இயக்கப்பட வில்லை என்பது. நோவா கப்பல் வெள்ளம் போன வழியில் மிதக்கிறது. மெக்சிகோ தொல் கதையின் நாயகன் வரும் கப்பலை பாம்பு இரண்டு இழுத்து வருகிறது. இந்திய மனு கதையில் மனு படகை வழிகாட்டும்  மீன் கொம்பில் கட்டி வைக்கிறான்.மீன்தான் இழுத்து செல்கிறது. ஆக தனது ஆற்றலுக்கு வெளியே உள்ள ஆற்றலை தனக்காக பயன்படுத்தி கொள்ள தெரிந்த மனிதனே அந்த தலைவன். மானுடம் முழுமையும் தனது ஆழத்தில் அறிந்து வைத்திருக்கும் அவன் யார்? அவன் எவ்விதம் இந்த கோயில் பணிகளுக்கு முன் நின்றான்? தெரியாது.

இத்தகு கோயில்கள் ஏலியன்கள் பனி யுகத்தில் இங்கே இருந்தமைக்கான சான்று என்றொரு வினோத ஆய்வும், அதன் மீதான பல ஆவணப்படங்களும்  இங்கே உண்டு. இப்படி ஒரு ஹைப்போ தீஸிஸை உருவாக்கி யோசிக்க காரணம் என்ன? முதல் காரணம் இத்தகு கோயில்கள் பனி யுகம் முடிந்த மிக சில ஆண்டுகளிலேயே உருவாகி விட்டது. ( பனியுகம் எவ்விதம் இங்கே சந்தேகம் கிளம்பி, யூகிக்கப்பட்டு, ஆய்வுகள் வழியே ஊர்ஜிதம் ஆனது என்பதன் சுருக்கமான வரலாறு பில் பிரைசன் எழுதிய அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு நூலில் உண்டு. இந்த நூலும் அதே பாரதி புத்தகாலயத்தில் அதே சுமார் மொழியாக்கத்தில் கிடைக்கிறது). 12 000 ஆண்டுகள் முன்னால், ஒரு பேராலயம் உருவாக அதற்கு பின்புலமாக தேவையான சமூகமோ விவசாயமோ, உபரியோ இரும்போ, கருவிகளோ, தொழில்நுட்ப அறிவோ உருவாகி வளர நெடுங்காலம் தேவை. அப்படி ஒரு காலம் இத்தகு ஆலயங்களின் பின்னே இல்லை. இந்த ஆலயங்கள் பின்னே உள்ள ஒரே காலம் எல்லாமே உறைந்து நின்று போன பனி யுகம் மட்டுமே. எனில் பனி யுகம் முடிந்த மறு கணமே இத்தகு பிரம்மாண்ட ஆலயங்கள் உருவான வகைமைக்கு மனிதனுக்கு வெளியே உள்ள ஏலியன் போன்ற ஆற்றல்களுக்கு மட்டுமே சாத்தியம்.

இரண்டாவது முக்கிய காரணம் இத்தகு கோயில்களுக்கும் விண் கோள்களின், விண் மீன்களின் அசைவுக்கும் உள்ள ஒத்திசைவு. கிரஹாம் இந்த கோபக்ளி டெபெ, மால்டாவின் பேராலயம் இரண்டின் வாயில்களும் எப்படி விண்மீன்களின் இருப்புக்கு ஒத்திசைந்து அமைந்திருக்கிறது என்று, இத்தகு இடங்களை விண்மீன்களின் இருப்பு வழியே ஆராயும் ஆய்வாளர்கள் வழியே விளக்குகிறார். இது ஒன்றும் புதிய முறை அல்ல. இந்திய வேதங்களின் காலம், அதில் உள்ள விண் மீன் இருப்பு சித்தரிப்பு வழியே மேலும் உறுதி ஆனது. அப்படி இந்த ஆலயங்களின் குறிப்பிட்ட விதிகள் எவ்விதமேனும் விண்மீன்கள் அமைப்புடன் ஓதிசைக்கிறதா என்று ஆய்ந்த வகையில், கச்சிதமாக ஒத்திசைகிறது. அப்படி ஒரு விண்மீன் மண்டலம் வானத்தில் இருந்த காலம் என்பது, விண்மீன் அசைவுகளின் கணக்குப்படி இன்றிலிருந்து 11000 வருடங்கள் முன்னே.

இப்போதும் ஜெய்ப்பூர் சென்றால் பெரும் மைதானத்தில் விண் மீன் நகர்வுகளை கணிக்கும் ஆய்வகத்தின் காட்சி அரங்கம் உண்டு. இப்போதும் ஆண்டில் குறிப்பிட்ட பருவத்தில்,  கோயில் மூலவர் மீது மிக சரியாக சூரிய உதய முதல் கிரணம் விழும் கோயில்கள் உண்டு. அஸ்தமனம் அக் கோயில் கோபுரத்தின் நிலை வரிசை சாளரம் ஒவ்வொன்றின் வழியே இறங்குவதை காணலாம். நானே காத்திருந்து கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் அதை படம் பிடித்திருக்கிறேன். ஆக இந்த தொல் வரலாற்று பேராலயங்கள் வானம் நோக்கிய ஏதோ ஒன்றின் ஆய்வாக, அல்லது வானம் நோக்கிய மானுடத்தின் வணக்கமாக, அல்லது ஏலியன் போன்ற ஏதோ ஒன்றின் சிக்னல் ட்ராங்ஸ் மீட்டராக, இப்படி பல பத்து சாத்தியங்களில் ஏதோ ஒன்று.

அதை அறிய அறிவியலால் கைவிடப்பட்ட, வேறு ஏதோ அறிதல் முறை தேவை. அது மதத்தில் மட்டுமே உண்டு. அத்தகு விஷயங்கள் சிலவை இன்னமும் அழியாமல் எஞ்சி நிற்கும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே. விடை  அல்லது விடை நோக்கி செல்லும் பாதை ஏதும் இருந்தால் அது இங்கிருந்து வந்தால் மட்டுமே உண்டு. எத்தனையோ அறிய சாத்தியங்களை விதை என கொண்டிருக்கும் வெளி இது. அது முளைக்கும் வரை இதைக் காப்பது நமது கடமை.

கடலூர் சீனு

பின்குறிப்பு:

மேற்கண்ட விஷயங்கள் குறித்து கிரஹாம் ஹான்காக் கின் தேடுதல் பயணம் இப்போது ஏன்ஷியண்ட் அப்போகலிப்ஸ் எனும் தலைப்பில் ஆவணத் தொடராகவும் வெளியாகி உள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2023 11:31

அகச்சாகசம்…. பனிமனிதன்

பனி மனிதன் வாங்க

அன்புள்ள ஜெ,

சிலவருடங்களாகவே பனிமனிதன் நாவலை வாங்கி பசங்களுக்குக் கதை சொல்ல வேண்டும் என அவ்வப்போது நினைப்பேன். ஆனாலும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நற்றிணையின் சிறப்புச் சலுகையில் தான் உங்களின் 15 புத்தகங்களில் ஒன்றாக அதை வாங்கினேன். முதலில் குழந்தைகளை என்னுடன் இருத்தி வார்த்தை வார்த்தையாகப் படித்துக் கதை சொல்லிக் கொண்டிருந்த நான், பிறகு அவர்களை விட்டு விட்டு இரண்டு நாட்களில் படித்து முடித்தேன். என் ஆமை வேக வாசிப்பு வரலாற்றில் இது ஒரு அசுர சாதனை. அந்த உற்சாகத்தில் உடனடியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இமயமலையை ஒட்டிய நிலப்பகுதியில், சிறுவன் கிம், ராணுவ வீரர் பாண்டியன், டாக்டர் திவாகர் மூவரும் பனி மனிதனைத் தேடிப் பயணிக்கிறார்கள். பல்வேறு இடர்களுக்கு உள்ளாகி, மரண விளிம்பு வரை சென்று பனிமனிதனைக் கண்டு மீள்கிறார்கள். அவர்களின் சாகசப்பயணங்களும், அந்த பயணம் வழி அவர்கள் அடையும் மாற்றமுமே நாவலின் பொதுவான கதை. பனிமனிதனைத் தேடிச் செல்ல மூவரின் நோக்கமும் வேறு வேறு என்றாலும் புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிம் என்ற ஆன்மீக தேடல் கொண்ட சிறுவனுக்கு ஏற்படும் சோதனைகளும் அதை அவன் கடத்தலுமே கதையின் உள்ளுறைப் பயணம்.

பரிணாம வளர்ச்சியில் இரு வேறு திசைகளில் சென்ற இனங்கள் மீண்டும் சந்தித்துக் கொள்வது என்பதே மிக சுவாரஸ்யமான கற்பனை. அதில் நீங்கள் விவரிக்கும் நிலக் காட்சிகளும், பனி மனிதனின் காடு, விலங்குகள், அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய விவரணைகளும் வாசிக்கும் போது ஒரு கனவுத் தன்மையை உண்டாக்குகின்றன.

தினமணி சிறுவர்மணியில் தொடர்கதையாக வெளிவந்த நாவல், எழுதப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகும் வாசிப்பு சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது. துப்பறியும் தொடர்கதையின் இலக்கணப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.  அதும் வலியத் திணித்தது போல் இல்லாமல் கதையோட்டத்துடனே வருகிறது. ஒரு ஆங்கில 3D சாகச சினிமாவைப் பார்ப்பது போல நாவலின் அனைத்து பக்கங்களும் செல்கின்றன. The Croods, Avatar போன்ற சினிமாக்களில் வரும் கையடக்க யானை, ஆறு கால் குதிரை, பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கலப்பின சோதனை விலங்கு வடிவங்கள், பிற உயிரினங்களுடன் உணர்வுகளால் இணைந்திருத்தல், அனைத்து உயிர்களுக்குமான ஒற்றை மனம், போன்றவை எல்லாம் 1998 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நாவலில் வருவது உங்களின் ஆராய்ச்சியையும் எழுத்திற்கான மெனக்கெடலையும் காட்டுகிறது.  நாவலில் வரும் Fantacy சம்பவங்களை உங்களின் மிகு கற்பனை என்று நினைத்து வாசித்து, அதே அத்தியாயத்தின் இறுதியில் அதற்கான  அறிவியல் விளக்கங்களும், ஆராய்ச்சிக் குறிப்புகளும் படித்து, இணையத்தில் தேடி, மீண்டும் முதலிலிருந்து வாசிக்கும் போது அந்த சம்பவங்கள் மேலும் பிரம்மாண்டமாக விரிகின்றன.

சிறுவர்களுக்கான சாகசக் கதையில், எந்த மிகு கற்பனையையும் எழுதலாம் என்றில்லாமல், ஒவ்வொரு சம்பவத்திற்குமான அறிவியல் சாத்தியங்களை நீங்கள் கொடுத்திருப்பது, ஆதர்ச சிறுவனுக்காக கதை சொல்வது போன்ற பல காரணங்களால், சுந்தர ராமசாமி காந்தியை வெஸ்டர்ன் மைண்ட் செட் உள்ளவர் என்று அவதானிப்பதைப் போல, நீங்களும் வெஸ்டர்ன் மைண்ட் செட் உள்ளவர் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. கொற்றவை வாசித்தபோது முதலில் தோன்றியது இது.

மீண்டும் வார்த்தை வார்த்தையாக குழந்தைகளுக்கு கதை சொல்ல புத்தகத்தை எடுத்திருக்கிறேன். நன்றி ஜெ.

ரதீஷ் வேணுகோபால்

***

அன்புள்ள ரதீஷ்,

நலம்தானே?

எனக்கு எப்போதும் ஓர் எண்ணம் உண்டு. ஆன்மிகப்பயணிகள் போல சாகசக்காரர்கள் வேறு உண்டா என்று. ஆன்மிகமே ஒரு சாகசப்பயணம்தான். அகத்தும், புறத்தும். அதை ஒரு சிறுவர்நாவலாக எழுதினேன். அதுதான் பனிமனிதன். உங்கள் வாசிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2023 11:31

தியடோர் பாஸ்கரன் மலர், கடிதங்கள்

குருகு தியடோர் பாஸ்கரன் மலர்

அன்புள்ள ஜெ,

தியடோர் பாஸ்கரன் மலர் ஒரு முக்கியமான முயற்சி. தமிழில் அவர் ஒரு முன்னோடி. தமிழில் சுற்றுச்சூழல் பற்றி பலர் முன்பு எழுதியிருந்தாலும் சீராக கலைச்சொற்களுடன் அதை ஓர் அறிவியல் போல எழுதியவர் தியடோர் பாஸ்கரன் அவர்கள்தான். சினிமா ஆய்வுக்கும் அவருடைய பங்களிப்பு முக்கியமானதுதான். ஆனால் அதை இன்று பல்வேறு பல்கலைகழகங்களே செய்கின்றன. சுற்றுச்சூழல் தான் தமிழகத்திற்கு தேவையான ஞானம். தமிழகம் பேசியாகவேண்டிய விஷயம். அதை அற்புதமாக முன்வைத்தவர் தியடோர் பாஸ்கரன் அவர்கள். அவருக்கு ஓர் இணைய இதழ் மலர் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

ராஜ்குமார் அர்விந்த்

***

அன்புள்ள ஜெ

குருகு இணைய இதழில் தியடோர் பாஸ்கரன் மலரில் முக்கியமாக சொல்லவேண்டியவை அவருடைய பேட்டியும் லோகமாதேவி அவர்களின் கட்டுரையும். சிறந்த வெளியீடு.

இதேபோல தமிழுக்கு அறிவுப்பங்களிப்பு செய்த பி.ல்எ.சாமி, பிலோ இருதயநாத், தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான் ஆகியோர் பற்றியும் நல்ல மலர்கள் வெளியிட்டு கௌரவிக்கப்படவேண்டும். அவர்களை தமிழ் இளைய சமூகம் மறந்துவருகிறது.

குமார் முருகேஷ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2023 11:30

கோவை சொல்முகம் உரையாடல்- 26

 நண்பர்களுக்கு வணக்கம்.

கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 26வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.

முதல் அமர்வில், வெண்முரசு நூல் வரிசையின் எட்டாவது படைப்பான “காண்டீபம்” நாவலின் பின்வரும் அத்தியாயங்களை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

பேசுபகுதி:

பகுதி 5 – தேரோட்டி – அத்தியாயம் 1 முதல் 15 வரை

இரண்டாவது அமர்வில், தாராசங்கர் பந்த்யோபாத்யாயா அவர்களின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ நாவல் மீது கலந்துரையாடல் நிகழும்.

ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 26-03-23, ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : காலை 10:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன் – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2023 11:30

March 22, 2023

கைவிலங்கும் பக்த குசேலாவும்

நான் சின்னப்பையனாக இருந்தபோது பிரேம் நசீர் என் விருப்ப கதைநாயகன். பின்னர் சோட்டா அறிவுஜீவி ஆனபோது நசீரை ஏளனம் செய்ய கற்றுக்கொண்டேன். நிஜமாகவே சிலவற்றை எய்தியபின் மீண்டும் சிறுவனாக நசீருக்கு திரும்பினேன். ஒருநாளில் என் கதைநாயகனின் அழகிய, கள்ளமற்ற முகத்தை காணாமல் உறங்குவதில்லை. நசீருக்கு யேசுதாஸின் குரல். நஸீர் இக்காவின் முகம் தாஸேட்டனின் குரலும் எனக்கு ஒவ்வொருநாளும் தேவை.

நடிகர் முகேஷ் ஒரு யூடியூப் சேனல் நடத்துகிறார். Mukesh Speaking அதில் அவர் சினிமா அனுபவங்களை பகிர்கிறார். இந்த காணொளியில் நசீர் பற்றிய சுவாரசியாமான மூன்று நிகழ்வுகளைச் சொல்கிறார்.

முப்பதாண்டுகளுக்கு முன் நஸீர் துபாய்க்குச் செல்கிறார். திரும்பும்போது நடிகர்குழுவுக்கு தனி வரிசையில் பாஸ்போர்ட் பரிசோதனை. ஓர் அரேபியர் ஒவ்வொரு பெயராக அழைக்கிறார். “மிஸ்டர் அப்துல் காதர்! மிஸ்டர் அப்துல் காதர்!”

ஒருங்கிணைப்பாளர் சென்று “அப்படி எவரும் இங்கில்லை” என்கிறார்.

“பின்னே, இந்த பாஸ்போர்ட் எப்படி இந்த வரிசையில் வந்தது? மிஸ்டர் அப்துல் காதர்! மிஸ்டர் அப்துல் காதர்”

“அப்படி எவரும் எங்களுக்குள் இல்லை”

நஸீர் ஒருங்கிணைப்பாளரின் தோளில் மெல்லத் தொட்டு “அஸே, நான்தான் அப்துல் காதர். அது என் இயற்பெயர்”

அப்போதுதான் நஸீரின் பெயரே மற்றவர்களுக்கு தெரியவருகிறது. நஸீரின் இயல்பும் அதில் உள்ளது. அவர் எந்நிலையிலும் நிதானமாகவே இருப்பார். கூச்சலிடுவதோ அவசரப்படுவதோ இல்லை.

ஒரு நாளில் 16 மணிநேரம், மூன்று ஷிப்டுகளிலாக நஸீர் நடித்துக்கொண்டிருந்த காலம். நஸீர் பணத்திற்காக அப்படி நடிக்கவில்லை. அவர்தான் உச்ச நட்சத்திரம். ஆனால் ஒரு படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு அடுத்த படம் இலவசம். படம் ஓடும் வரை இலவசம். நண்பர்களுக்கு இலவசமாக நடித்துக்கொடுத்தார். நஸீரால் ஒரு காலத்தில் மலையாள சினிமாவுலகமே வாழ்ந்தது.

ஒரு காலையில் படப்பிடிப்பு. மதியம் 12.30க்கு நஸீர் அடுத்த படப்பிடிப்புக்குச் செல்லவேண்டும். நஸீரை கைதுசெய்து விசாரிக்கும் காட்சி. கைவிலங்கு போட்டு நஸீர் சம்பந்தமான காட்சிகளை எடுக்கிறார்கள். அன்றுமின்றும் கைவிலங்கில் டம்மி என்பதே இல்லை. அசல் விலங்குதான். அதை பூட்டினால் சாவி இருந்தால் மட்டுமே திறக்க முடியும். உடைக்கவே முடியாது. வெல்டிங் ராடால்கூட உருக்க முடியாது.

படப்பிடிப்பு முடிந்து நஸீர் கிளம்பத் தயாரானபோது தெரியவருகிறது, கலை இயக்குநர் அந்த விலங்கின் சாவியுடன் எங்கோ போய்விட்டார். எங்கே என தெரியாது. ஏதோ வாங்கச் சென்றிருந்தார்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. பதறி குழம்பி ஒருவழியாக இயக்குநரே நஸீரிடம் விஷயத்தைச் சொன்னார். நஸீர் கோபப்படும் வழக்கம் இல்லை. “பரவாயில்லை அஸே, மனிதன் தவறு செய்பவன்தானே… நான் இப்படியே வீட்டுக்கு செல்கிறேன். சாவி கிடைத்தால் கொடுத்தனுப்புங்கள்”

நஸீர் கைவிலங்குடன் காரிலேறி வீட்டுக்குச் சென்றார். ஒருமணிநேரம் கழித்து கலை இயக்குநர் வந்தார். குழுவே அவரை அடிக்க பாய்ந்தது. அவர் பதறிவிட்டார். அப்படியே செத்துவிடலாமா என நினைக்குமளவுக்கு. அழுகை, புலம்பல்.

“நீ போய் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேள்” என்றார் இயக்குநர்.

கலை இயக்குநர் நஸீரின் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் சோபாவில் நஸீர் கைவிலங்குடன் அமர்ந்திருந்தார். சென்றதுமே அவர் காலில் விழப்போனார் கலை இயக்குநர்.

“சேச்சே, மனிதன் காலில் மனிதன் விழக்கூடாது… பூட்டை திற” என்றார் நஸீர்.

பூட்டை திறந்துவிட்டு கலை இயக்குநர் கண்ணீருடன் நின்றார்.

“ஏன் அழுகிறாய்?”

”என்னை திட்டுங்கள், என்னை அடியுங்கள்… நான் தவறு செய்துவிட்டேன்”

“நீ என் நண்பன்… நான் உனக்கு நன்றி சொல்லவேண்டும்” என்று நஸீர் கலை இயக்குநரின் கையைப் பற்றிக் குலுக்கினார். அவர் திகைத்தார்.

“என் மனைவி தேனிலவுநாட்களில் எனக்கு சோறு ஊட்டிவிட்டிருக்கிறாள். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் மீண்டும் ஊட்டிவிட்டாள்… அது உன்னால்தான். நீ என் நண்பன், உனக்கு நன்றி” என்றார் நஸீர்.

நஸீரின் அபாரமான பொறுமை, நம்பமுடியாத அளவுக்கு விரிந்த மனிதாபிமானம், நகைச்சுவை உணர்ச்சி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அது நடிகர்கள் ஓர் அதிகாரமையமாக இருப்பதனால் உருவாகும் வழக்கமான புகழ்மாலை அல்ல. நஸீர் இன்று நான்காம் தலைமுறையினரால் நினைவுகூரப்படுகிறார். நஸீரிடமிருந்தது மெய்யான ’மாப்பிளாப் பண்பாடு’. கேரள முஸ்லீம்கள் ஒரு காலத்தில் பெரும்பாலும் அனைவருமே அப்படித்தான் இருந்தனர். மலபாரில் நான் சந்தித்த அத்தனை மாப்பிளா முஸ்லீம்களும் அதே குணத்தவர்கள்தான்.

நஸீர் அவருடைய சிறையின்கீழ் கிராமத்திற்கு வந்தபோது ஒரு பள்ளித்தோழர் பார்க்க வந்தார். அவருடைய மகனுக்கு அரசுவேலைக்கு அரசு செக்ரடரி ஒருவர் கையெழுத்திடவேண்டும். நஸீர் சிபாரிசு செய்தால் நடக்கும். அவர் கோரியபோது நஸீரால் மறுக்கமுடியவில்லை. நஸீர் தன்னைப்பற்றி நினைப்பவர் அல்ல. செகரடரியின் அலுவலகத்திற்குச் சென்றால் செய்தி ஆகும். ஆகவே வீட்டுக்குச் சென்று சொல்லும்படி நண்பர் கோரினார்.

ஆகவே மறுநாள் காலை கிளம்பி நண்பரின் மகனுடன் திருவனந்தபுரம் சென்றார். நஸீரை பார்த்ததும் அந்த அதிகாரியின் வீடிருக்கும் பகுதியே விழாக்கோலம் கொண்டது. தெருவெங்கும் மக்கள். நஸீர் அவருடைய வீட்டுக்குள் நுழைந்தார். அதிகாரியின் மனைவியால் நம்பவே முடியவில்லை. அவரும் அவர் பிள்ளைகளும் வந்து சூழ்ந்துகொண்டனர். அனைவருக்கும் பரவசம். நஸீர் வீட்டுக்கே வருவதென்பது கடவுளே வருவதுபோல.

அதிகாரியின் மனைவி உள்ளே போய் கணவரிடம் நஸீர் வந்திருப்பதைப் பற்றி பொங்கிக்கொந்தளித்தபடி சொல்ல அவர் எரிந்துவிழுந்தார். அவர் பழமைவாதி, பக்தர், கொஞ்சம் இஸ்லாமிய வெறுப்பும் உண்டு.

“எனக்கு சினிமாவே பிடிக்காது. நான் சினிமா பார்த்ததே இல்லை. கூத்தாடிகளையும் பிடிக்காது. அவர்கள் என் வீட்டுக்கு வரவேண்டியதில்லை” என்று கூச்சலிட்டார்.

“வீடு தேடி வந்துவிட்டார்… வந்து முகத்தையாவது காட்டுங்கள்” என்று மனைவி சொன்னாள்.

“நான் பூஜை செய்யப்போகிறேன் என்று சொல்லி அந்த ஆளை அனுப்பிவை” என்றார் அதிகாரி

அந்த அம்மாள் வந்து சொன்னதும் நஸீர் எழுந்து “அவர் பூஜையறைக்குள் செல்வதற்குள் பார்த்துவிடுகிறேனே” என உள்ளே சென்றுவிட்டார்.

அவர் அதற்குள் ஓடி பூஜையறைக்குள் நுழைந்து அதி தீவிரமாக கண்களை மூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.

பூஜையறையைப் பார்த்த நசீரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அப்படியே திரும்பி வந்தார். ”பரவாயில்லை அம்மா, நான் போனில் பேசுகிறேன்” என்று அந்த அம்மாளிடம் விடைபெற்று சென்று காரில் ஏறிக்கொண்டா.

நண்பரின் மகன் அவரிடம் அவர் ஏன் சிரித்தார் என்று கேட்டார்.

“இல்லை சிரிப்பை அடக்கமுடியவில்லை” என்றார் நஸீர் உரக்கச் சிரித்தபடி.

“அதுதான் ஏன்?” என்றான் பையன்

நஸீர் என்ன நடந்தது என்று விளக்கினார். கிருஷ்ண பக்தனான அந்த அதிகாரி பூஜையறையில் சட்டமிட்டு மாட்டி மாலையணிவித்து ஊதுவத்தி கொளுத்தி கும்பிட்டுக் கொண்டிருந்தது இருபதாண்டுகளுக்கு முன்பு பக்த குசேலா என்ற படத்தில் நஸீர் கிருஷ்ணனாக வந்த தோற்றம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2023 11:35

சாந்தி

தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த சாந்தி சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் ஆகியோர் எழுதிய இதழ். முற்போக்கு இலக்கியத்தை தமிழில் உருவாக்கியதில் இவ்விதழுக்கு தொடக்கப்  பங்களிப்பு உண்டு.

சாந்தி சாந்தி சாந்தி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2023 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.