Jeyamohan's Blog, page 615
March 9, 2023
கூத்தபிரான்
என்.வி. நடராஜன் வானொலி அண்ணா என்ற பெயரில் அறியப்பட்டவர். புகழ்பெற்ற நாடகாசிரியர், நடிகர். வானொலியில் பணியாற்றியவர்.என்.வி. நடராஜன் என்ற பெயரில், தி.மு.க. பிரமுகர் ஒருவர் இருந்ததால், அவருக்கான கடிதங்கள் அனைத்தும் இவருக்கு வந்தன. அதனால், தன் பெயரை மனைவியின் ஆலோசனைப் படி, ‘கூத்தபிரான்’ என்று மாற்றிக் கொண்டார். இவர்களுக்கு கணேசன், ரத்னம் என இரு மகன்கள்.இருவருமே நாடகக் கலைஞர்கள்.
கூத்தபிரான்
கூத்தபிரான் – தமிழ் விக்கி
விடுதலை, இசைவிழா உரை
விடுதலை படத்தின் இசைவெளியீட்டு விழா உரை. வழக்கம்போல ஓர் ஏழுநிமிட உரை. என் கதையின் கோனார் ஒரு வெள்ளந்தியான மனிதர். மார்க்ஸியம்கூட சரியாகத் தெரியாதவர். ஒரு சராசரிக்கும்கீழான தமிழாசிரியர். ஆனால் ஆத்மார்த்தமானவர். அவருடைய கசப்பும், நையாண்டியும் அசலானவை. குறிப்பாக என்ன என்ன என்று பேசும் அந்த நடை ஆசிரியர்களுக்குரியது.
இன்று யோசிக்கும்போது நிறைய வாசித்திருந்தவர்கள், நிறையப்பேசியவர்கள் எல்லாம் கொஞ்சம் சூதானமாக தப்பித்துக்கொண்டார்கள், வெள்ளந்திகள்தான் உண்மையாகவே நம்பி, வாழ்க்கையை பலிகொடுத்தார்கள் என்று தோன்றுகிறது.
கோவையில் இருந்து நாகர்கோயிலுக்கு 7 ஆம் தேதி காலை சென்று சேர்ந்தேன். அன்று மாலையே கிளம்பி சென்னைக்கு வந்தேன். வந்தே ஆகவேண்டிய விழா அல்ல.ஆனால் இளையராஜாவை பார்க்க விரும்பினேன். அவரை நேரில் பார்த்து நீண்டநாட்களாகிறது. கொரோனா சூழலில் நேரில் சென்று சந்திக்க பெருந்தயக்கம் இருந்தது.
நண்பர் சுகாவை நீண்டநாளுக்குப் பின் சந்தித்தேன். தந்தை நெல்லைக் கண்ணன் மறைவால் சோர்ந்திருக்கிறார். அவருக்கும் தந்தைக்குமான நெருக்கம் எனக்கும் தெரியும். கொஞ்சநாட்கள் புகைப்படம் எதையும் பார்க்கவேண்டாம் என்றேன். ‘ஆனால் எங்கு பார்த்தாலும் அவர் குரல் இருந்துகொண்டிருக்கிறதே’ என்றார். அது உண்மை. (நாளை நம் பிள்ளைகளுக்கும் இந்த சிக்கல் இருக்குமோ என நினைத்துக்கொண்டேன். எங்கும் நம் குரல் இருக்கிறது. எல்லாருமே ஆளுக்கு ஐம்பது வசை எழுதி வைத்திருக்கிறார்கள்)
சுகாவுடன் அந்த மாலை முழுக்கப் பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல பாலு மகேந்திரா, ஜெயகாந்தன், இளையராஜா மூவரையும் பற்றி. சுகா அண்மையில் ஜெயகாந்தனைப்பற்றி ஆற்றிய உரை மிகச்சிறப்பான ஒன்று.
ராஜீவ் மேனனை கடல் காலகட்டத்திற்குப் பின் இப்போதுதான் சந்தித்தேன். அதேபோல அழகாக இருக்கிறார். பம்பாய் படத்தில் அரவிந்தசாமி கதாபாத்திரதுக்குப் பதிலாக முதலில் மணிரத்னத்தால் நடிக்க அழைக்கப்பட்டவர். இப்போது இப்படத்தில் நடிக்கிறார். அன்று நடிகரானால் ஒளிப்பதிவுக்கு எவரும் அழைக்கமாட்டார்களோ என்னும் தயக்கம் இருந்ததாகச் சொன்னார். அது ஒரு பெரும்பண்பு. புகழ், பணம் இரண்டையும் விட தன் உள்ளத்திற்கு உகந்ததை மட்டும் செய்ய விரும்புவது. அதன்பொருட்டு நிலைகொள்வது. ஒளிப்பதிவில் ராஜீவ் மேனனின் இடம் இன்றும் பிறர் எண்ணி வியக்கும் இடத்தில்தான்.
வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி என அனைவரையும் சந்தித்தேன். ஓர் இனிய மாலை. ஆனால் மிக நீளமான ஒன்று. பதினொரு மணிக்குத்தான் அறைக்கு வந்தேன். இங்கிருந்து ஈரோடு.
அன்னம், வாசிப்பு – பிரபு மயிலாடுதுறை
’அன்னம்’’ சிறுகதை ஒரு மயானத்தின் பின்புலத்தில் விரிகிறது. இலுப்பையும் எருக்கும் மண்டிக் கிடக்கும் மயானம் சீரான புல்வெளிகள் கொண்ட கொன்றைப்பூக்கள் பூத்துக் குலுங்கும் குரோட்டன் செடிகள் வளர்க்கப்படும் இடமாக காலகதியில் பரிணாமம் பெற்றிருக்கிறது
Plumule -கடிதம்
ஜெ,
ஆச்சரியப்படவைக்கும் அறிவான பகுப்பும் முறையான தொகுப்பும் கொண்ட இப்பள்ளி மாணவியின் கட்டுரை மிகவும் பாராட்டுக்குறியது.
நன்றி!
முத்துக்கிருஷ்ணன். வே.
அன்புள்ள ஜெ
முதற்கனல் மாணவியின் கடிதம் ஆச்சரியமளித்தது. ஏற்கனவே கடிதமெழுதிய மாணவிதான். ஆனால் இந்தக் கடிதம் திகைப்பூட்டியது.
முதற்கனல் நாவலை நீங்கள் எழுத ஆரம்பித்தபோது எழுந்த எதிர்ப்புகள் ஞாபகம் வருகின்றன. இதை யார் படிப்பார்க? இந்த நடை பழைமையாக இருக்கிறது …இப்படியெல்லாம் நிறைய எழுதினார்கள். அவர்களெல்லாம் இப்போது எங்கே என்றே தெரியவில்லை. நாவல்கள் இன்றைக்குதான் முழுமையாக வாசிக்கவேபடுகின்றன.
இளம் வாசகர்கள் பலர் வெண்முரசு வாசிக்கிறார்கள் என்பதை கண்டிருக்கிறேன். ஆனால் ஒன்பதாம் வகுப்பு மாணவி வாசித்துவிட்டு இப்படி ஒரு அழகான கடிதமும் எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வெண்முரசு எல்லாரும் வாசிக்கமுடியுமா என்றால் முடியாது. ஒன்பதாம் வகுப்புப் பிள்ளைகள் ஒரு லட்சம் பேர் எடுத்துக்கொண்டால் அதில் ஒரு ஐம்பதுபேர்தான் படிக்க முடியும். ஆனால் அவர்கள்தான் கிரீம். அவர்கள்தான் அடுத்த தலைமுறைக்கு போகிறவர்கள்.
இதை நான் என் வகுப்புகளிலே சொல்வேன். ஒரு தலைமுறையில் வாழ்பவர்களில் லட்சத்தில் நாலைந்துபேர்தான் அடுத்த தலைமுறையை ஏதோ ஒருவகையில் உருவாக்குபவர்கள். அவர்களை தவிர மற்றவர்கள் அந்த தலைமுறையிலேயே அழிந்துவிடுவார்கள். மறக்கப்பட்டுவிடுவார்கள்.
அது இயல்பானதுதான். ஒரு தேங்காயிலே ஒரு சிறுபகுதிதான் முளைத்து அடுத்த தென்னை வருகிறது. மிச்சபகுதி அந்த முளைக்கும்பகுதிக்கு உணவாகிறது. அதைப்போலத்தான் மனிதர்களும். அதைத்தான் Plumule என்கிறோம்
சமூகத்திலும் அதைப்போல Plumule உண்டு. அந்த சிறிய பகுதிதான் தீவிரமாக வாசிக்கும். அந்த மாணவியின் கடிதம் அவர் அப்படிப்பட்டவர் என்று காட்டியது. வாழ்த்துக்கள்.
தே. அன்பரசு
உடையாள், கடிதம் மகிழ் நிலா
March 8, 2023
பாமரர்களும் பேராசிரியர்களும்
எழுத்தாளன், புனிதன், மனிதன் வாசித்தேன். மிகமிகமிக நேரடியான, விளக்கமான கட்டுரை. இலக்கியவாதியை அறிவுரைகூறி வழிநடத்துபவனாகவோ, சமூகத்தின் முன்னுதாரணமாகவோ கருதாதீர்கள் என்று சொல்கிறீர்கள். அவனுடைய நுண்ணுணர்வுதான் அவனை எழுத்தாளனாக்குகிறது, அது அவனை அலைக்கழிபவனும் நிலையற்றவனும் ஆக ஆக்குகிறது. ஆகவே அவன் சமூகமுன்னுதாரணமாக இருக்க முடியாது. இதுதான் நீங்கள் சொல்ல வருவது.
இலக்கியவாதிக்கு குற்றங்கள் செய்ய உரிமை உண்டு என்றோ, அவனை தண்டிக்கக்கூடாது என்றோ சொல்லவில்லை. மாறாக, தாராளமாக தண்டிக்கலாம் என்றே சொல்கிறீர்கள். ஆனால் இலக்கியவாதியின் வாழ்க்கையை வைத்து அவனுடைய இலக்கியத்தை நிராகரிக்க முடியாது. அவனுக்கு பண்பாட்டிலுள்ள இடத்தை மறுக்க முடியாது. ஒழுக்கம் சார்ந்த அளவுகோல்களைக் கொண்டு ஒட்டுமொத்தமாக இலக்கியத்தை மறுக்க முடியாது. இவ்வளவுதான் நீங்கள் சொல்வது. பாமரர்கள் எளிமையான ஒழுக்கவிதிகளைக் கொண்டு இலக்கியத்தையும் இலக்கியவாதியையும் வசைபாடி நிராகரிக்கும்போது இலக்கியமறிந்தோர் அதற்கு உடன்படக்கூடாது.
உலகமெங்கும் ஏற்கப்பட்டுள்ள மிக அடிப்படையான ஒரு கருத்து இது. இதைக்கூட இங்கே புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் அறிவுஜீவிகள். பிரபல நாளிதழில் ஒருவர் இலக்கியவாதிகளின் குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று நீங்கள் சொல்வதாக எழுதுகிறார். ‘அமைப்பை எதிர்த்துப் போராடினால்தான் நுண்ணுணர்வு உண்டு என்று அர்த்தம், இல்லையென்றால் ஒழுங்காக இருக்கவேண்டும்’ என ஒரு பேராசிரியர் எழுதுகிறார்.
தலையிலடித்துக்கொண்டு கூச்சலிடலாம் போலிருக்கிறது. அவர்களின் நிலைபாட்டில் எனக்கு பிரச்சினை இல்லை. அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் அவர்களின் புரிதல்திறன்தான் திகைக்க வைக்கிறது. இந்த அளவுக்கு dumbheads நடுவிலா வாழ்கிறோம்?
அருண் ஶ்ரீனிவாஸ்
***
அன்புள்ள அருண்,
நீங்களுண்டு உங்கள் ஆராய்ச்சி உண்டு என இருக்கலாம், இந்தியாவை அங்கிருந்து திரும்பிப்பார்ப்பது அங்குமில்லாமல் இங்குமில்லாமல் செய்துவிடும். உண்மை, அத்தனை dumbheads நடுவில்தான் நாங்கள் வாழ்கிறோம். நீங்கள் மானசீகமாக இங்கேதான் வாழ்கிறீர்கள்.
நான் எழுதியது நீங்கள் எழுதியதேதான். மிக எளிமையானது. அடிப்படையானது. நான் அதை பொதுவான வாசகர்களுக்காக எழுதவில்லை. இந்த இணையதளம் இலக்கிய – தத்துவ- மெய்யியல் வாசகர்களுக்காக மட்டும் நடத்தப்படுவது. அவர்களிடம் எனக்கு சொல்ல இருப்பதையே சொன்னேன்.
அதை எழுதியபோது நண்பர் கிருஷ்ணன் சொன்னார், அதற்கு கட்டணம் வைத்து இலக்கியவாதிகள் மட்டும் படிக்கும்படி செய்திருக்கவேண்டும் என்று. மற்றவர்கள் அதை படித்தால் பயனில்லை என்பது மட்டுமல்ல அது தேவையற்ற சிக்கல்களையும் உருவாக்கும். ஆனால் வேறுவழியில்லை, இது சமூக ஊடக உலகம்.
பாமரர் என நான் சொல்லும்போது பலவகையினரைச் சொல்கிறேன். தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதியவர் வாழ்நாளில் ஒரு புத்தகத்தைக்கூட கடைசி வரை படித்திருக்க வாய்ப்பில்லை. ஆங்கிலநாளிதழ் கட்டுரைகளில் இருந்து கட்டுரை தயாரிக்கும் ஆள். அவரெல்லாம் கருத்துச்சொல்லி இலக்கியத்தைத் தாக்கும் நிலை, இன்று கொஞ்சம்கொஞ்சமாக உருவாகி வரும் இலக்கிய வாசகர்களையும் வெளியே துரத்திவிடும் நிலை பற்றி மட்டுமே என் கவலை. நான் கட்டுரை எழுதியது அவரைப்போன்றவர்களை அஞ்சி மட்டுமே.
நமது பேராசிரியர்களைப் பொறுத்தவரை அவர்களால் என்ன வாசித்தாலும் இலக்கியத்தின் அழகியலை, பண்பாட்டு நுண்தளங்களை, மானுட அகத்தின் நுட்பங்களை மட்டும் கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முடியாது. (புரிந்தால் அவர்கள் ஏன் அந்தக் கோட்பாட்டுப் பீராய்தல்களைச் செய்யப்போகிறார்கள்) அவர்களின் புரிதல் எப்போதுமே ஒரு புள்ளி முன்னாலேயே நின்றுவிடும். இன்னொருவகை பாமரர்.
பழைய ‘பிளாக்’ அச்சு முறையில் வண்ணங்களை உருவாக்க ஒரே படத்தை இரண்டு தடவை வெவ்வேறு வண்ணங்களில் அச்சிடுவார்கள். நல்ல கம்பாசிட்டர் மிகச்சரியாக அவற்றை அமைக்கவில்லை என்றால் இரு அச்சுகளும் சற்று தள்ளி பதிந்து ஒரு வகை இரட்டைப்படம் உருவாகிவிடும். கலங்கிப்போன ஒரு படம். அதற்கு அன்று ‘புள்ளித்தப்பு’ என்பார்கள். பேராசிரியர்கள் இலக்கியம், கலை, மனித உள்ளம் , பண்பாடு பற்றி எது சொன்னாலும் அப்படித்தான் ஆகிறது. ஒரு புள்ளி எப்போதுமே தவறுதான். ஆனால் அவர்களின் அபாரமான தன்னம்பிக்கை, அதன் விளைவான இளக்காரம் அல்லது பரிவுப்பாவனை காரணமாக அவர்களிடம் நம்மால் பேசவே முடியாது.
நுண்ணுணர்வு என நாம் சொல்லும்போது அதை இப்பாமரர் எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பது திகைப்பூட்டுவதுதான். நுண்ணுணர்வு உடையவர்கள் எல்லாம் கலகக்காரர்கள் அல்லது குடிகாரர்கள் அல்லது பித்தர்கள் அல்ல. நுண்ணுணர்வு என்பது ஒரே வகையானதும் அல்ல.
நுண்ணுணர்வின் விளைவான தனிவாழ்க்கையின் அலைக்கழிப்பை முற்றிலும் கட்டுக்குள் நிறுத்திக்கொண்டு இயல்பான புறவாழ்க்கை வாழ்ந்தவர்கள் உண்டு- டி.எஸ்.எலியட் போல. மிக அசாதாரணமான நுண்ணுணர்வுடன் மிக உயர்ந்த அரசுப்பணிகளில் இருந்தவகள் பலநூறுபேர் உண்டு– மகாகவி கதே முதல் ஆக்டோவியோ பாஸ் வரை. ஆன்மிக, கல்வி அமைப்புகளை உருவாக்கியவர்கள் உண்டு- தல்ஸ்தோய் போல, தாகூர் போல. அரசை எதிர்த்துப் போராடிய பெருங்கலைஞர்கள் உண்டு- ஷோல்ஷெனித்ஸின் போல. அதே அரசுடன் சமரசமாகப்போன பெருங்கலைஞர்களும் உண்டு- மைக்கேல் ஷோலக்கோவ் போல.
நுண்ணுணர்வால் புரட்சியாளர்களாகி சிறையில், போரில் மாண்டவர்கள் உண்டு-கிறிஸ்டோபர் கால்டுவெல் போல. தற்கொலை செய்துகொண்டவர்கள் உண்டு- மயகோவ்ஸ்கி போல. குடிகாரர்களாகி தெருவில் மாண்டவர்களும் உண்டு- ஜி.நாகராஜன் போல. அதேசமயம் எஸ்ரா பவுண்ட் போல, போர்ஹே போல ஃபாசிசத்துக்கு ஆதரவாக நின்றவர்களும் உண்டு. இதெல்லாம் எளிமையான புறவயமான அடையாளங்களைக் கொண்டு வகுத்துரைக்கப்படக் கூடியவை அல்ல.
முசோலினியை ஆதரித்தார் என்பதற்காக எஸ்ரா பவுண்டின் இடமோ, சிறுவர்களிடம் ஓரினச்சேர்க்கை உறவுகொண்டிருந்தார் என்பதனால் ழீன் ழெனேயின் இடமோ மறுக்கப்பட்டதில்லை. அரசாங்க தூதராக பதவி வகித்தார் என்பதனால் ஆக்டோவியோ பாஸின் இடமும் மறுக்கப்படத்தக்கது அல்ல. நான் சொல்ல வருவது இதுவே.
ஃபாசிஸ்டு ஆட்சியை ஆதரித்த எஸ்ரா பவுண்டின் வாழ்க்கையிலும் அறமே இன்றி கைவிடப்பட்ட காதலிகளின் பட்டியல் உள்ளது. மாபெரும் புரட்சிக்காரரான பாப்லோ நெரூதாவின் வாழ்க்கையிலும் அதேபோல் அறமே இன்றி கைவிடப்பட்ட காதலிகளின் பட்டியல் உள்ளது. மாமன்னருக்கு அமைச்சராக இருந்த மகாகவி கதேயின் வாழ்க்கையிலும் மாபெரும் அமைப்புகளை உருவாக்கிய தாகூர் வாழ்க்கையிலும் ஆன்மிகவாதியாக மலர்ந்த தல்ஸ்தோய் வாழ்க்கையிலும் அவ்வாறு ஒரு பட்டியல் உள்ளது. நம்மூர் பாமரர்களின் பொது அறப்பார்வை, பேராசிரியர்களின் அதைவிடப் பாமரத்தனமான பொதுப்பார்வை கொண்டு அதை புரிந்துகொள்ள முடியாது.
நுண்ணுணர்வோ கலகமோ அந்த ஆசிரியனின் வாழ்க்கையைக் கொண்டு மதிப்பிடத்தக்கவை அல்ல. உதாரணமாக போகன் சங்கர். அவருடைய வாழ்க்கை மிகச் சாதாரணமான ஓர் அரசூழியருக்குரியது, அவருடைய அன்றாடமும் அவ்வாறே. ஆனால் அவருடைய புனைகதைகளில்கூட இல்லாத ஒரு மீறல், தத்துவார்த்தமான ஒரு கலகம், ஒரு முழுநிராகரிப்பு நோக்கு கவிதைகளில் உள்ளது. கவிதைகளில் மட்டும் அவர் ஒரு முழுக்கலகக்காரர். அதைப் புரிந்துகொள்பவனே வாசகன் என்பவன். புள்ளித்தப்புகள் சென்றடையமுடியாத இடம் அது. ஏன் அவர் கவிதையில் உள்ள அந்த திமிறல் கதைகளில் இல்லை என்பதை விளக்கமுடியாது, கூடாது என்னும் நுண்ணுணர்வு உடையவனே அழகியல் விமர்சகன்.
இறுதியாக, நான் சொல்ல வந்தது இது. என் வாழ்க்கையை நான் முழுமையாகவே ஒழுக்க நெறிகளின்படியே அமைத்துள்ளேன். புறவாழ்க்கையை முற்றிலும் ஒழுங்குக்கு உட்படுத்தி, சிதறல்கள் அனைத்தையும் ஒழுங்கமைத்து என் எழுத்தில் மட்டுமே என்னைக் குவிக்கிறேன். நான் எழுதும் படைப்புகள் அத்தகைய தவத்தை கோருபவை. என் இலக்குகள், நான் ஆற்றும் பணிகள் மிகப்பெரியவை. அவற்றை நோக்கிச் செல்கிறேன். எனக்கு நித்ய சைதன்ய யதி போல் ஓர் ஆசிரியர் அமைந்ததும், அவர் எனக்கு கற்றுத்தந்த அகப்பயிற்சிகளும் அதற்கு உதவுகின்றன. என் பித்துகளை என் ஆட்சிக்குள் நிறுத்துகிறேன்.
அவ்வாறன்றி, சிதறல்கள் வழியாகவே கலையை நிகழ்த்தும் பெருங்கலைஞர்கள் உண்டு. அவர்களின் வாழ்க்கையை வைத்து அவர்களின் கலை குறைத்து மதிப்பிடப்படலாகாது. குற்றமெனில் அரசு தண்டிக்கட்டும். ஆனால் அதை முகாந்திரமாகக் கொண்டு அக்கலைஞனை, அக்கலையை சிறுமைசெய்ய எவருக்கும் உரிமை இல்லை.
அதைச் சொல்லும் தகுதியை நான் அடைவது, என் தனிவாழ்க்கையைக் கொண்டு என்னை எவரும் எவ்வகையிலும் உயர்வாக மதிப்பிடவும் வேண்டாம் என்று நான் பொதுவெளியில் ஆணித்தரமாகச் சொல்லும்போது மட்டுமே.
ஜெ
எல்.கிருஷ்ணன்
எல் கிருஷ்ணன் மலாய் திரைத்துறையின் முன்னோடி.1942 முதல் 1970-க்கு உட்பட்ட காலத்தில் திரைப்படத் துறையில் தீவிரமாக இயங்கிய, எல். கிருஷ்ணன், முப்பது மலாய்ப்படங்களை தயாரித்தும் இயக்கியும், மலாய் திரைத்துறையில் பெரும் ஆளுமையாக செயல்பட்டார். 1960-களில் பெரும் புகழ் பெற்ற பி. ரம்லி, மரியா மெனடோ, கஸ்மா பூத்தீ, முஸ்தாஃபா மாரோஃப், எம். அமின், லத்திஃபா ஒமார், ரொஸ்னானி ஜமில் போன்ற கலைஞர்களை எல். கிருஷ்ணன் உருவாக்கினார்.
எல். கிருஷ்ணன்
எல். கிருஷ்ணன் – தமிழ் விக்கி
ஒரு கிறிஸ்தவ சபை, நூல்கள்
அன்புள்ள அண்ணன்,
எங்கள் திருச்சபையின் 40 ஆம் ஆண்டுவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விடுதலைப் பயணத்தில் சுமார் 40 ஆண்டுகள் இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் நடந்ததுபோல எங்கள் பயணம் 40 ஆண்டுகள் நிறைவுற்றதை கருத்தில்கொண்டு விடுதலைப்பயணம் என்றே இந்த கொண்டாட்டத்தை முன்னெடுத்தோம். 40 ஆண்டுகளைக் குறிக்கும் வண்ணமாக சுமார் 40 பொருட்களை வருகின்றவர்களுக்கு கொடுக்க தீர்மானித்தோம்.
இப்படியான நிகழ்வுகளுக்கு பெரும் பணம் தேவை. எளிய குடிசைவாழ்பகுதியில் இருந்துகொண்டு இப்படியான கனவுகளை சுமப்பது பெரும் பாரம். ஆகவே நான எனது நண்பர்களையும் குடும்பத்தினரையும் இந்த பணிக்கென தொடர்புகொண்டேன். திருச்சபை அங்கத்தினர்களின் பங்கும் இருக்கவேண்டும் என்பதையும் மக்களுக்கு அறிவுறுத்தினேன்.
அனைத்தும் சிறப்பாக அமைந்தன.யானை டாக்டர் மற்றும் நூறு நாற்காலிகள், இப்பகுதியிலுள்ள மக்களின் வாழ்விற்கு சற்று நெருக்கமானவைகள் என்பதை உணர்ந்ததால், இலக்கிய படைப்புகளில் இவைகளை இணைத்துக்கொள்ள முடிவுசெய்தேன். அதற்காக எனது நண்பர் சாகுல் ஹமீது அவர்களை அழைத்து உதவி கோரினேன். 15 நிமிடத்தில், எங்களுக்கான, அனைத்து உதவிகளும் வந்து சேர்ந்துவிட்டன. ஒரு மெதடிஸ்ட் திருச்சபையில், இலக்கியம் வழங்கப்படும் முதல் நிகழ்ச்சியாக இதுவே இருந்திருக்கும் என நம்புகிறேன். இந்த அறிமுகம், ஒரு சிலரையாவது வாசிப்பு சார்ந்து மேம்படுத்தும் என உறுதிபட நம்புகிறேன். உதாரத்துவமாக கொடுத்த சங்கர் பிரதாப், அருண்குமார், சிட்னி கார்த்திக் ஆகியோர் என வணக்கத்திற்குரியவர்கள். ஆண்டவரின் ஆசி தொடர்ந்து இக்குடும்பங்களுடன் தங்கியிருக்கும். போதகர்கள் இரு இலக்கிய நூல்களையும் பெற்றது மகிழ்ச்சி என என்னை அழைத்துக் கூறியபடி இருக்கிறார்கள்.
கிறிஸ்தவம் சார்ந்த உங்களது பல கட்டுரைகள் ஆழமானவைகள். கிறிஸ்தவம் சார்ந்த உங்கள் படைப்புகளை வழங்கும் வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். வரும்நாட்களில் அவ்விதம் ஏதேனும் வாய்ப்புகள் அமைந்தால், நான் மகிழ்வடைவேன். எங்கள் திருச்சபை, ஆரே பகுதியில் முதன் முறையாக ஒரு நூலகத்தையும் திறந்திருக்கிறது. அங்கே இந்த நூல்கள் என்றென்றும் இருக்கும்.
இந்த நிகழ்ச்சியில், 40 பொருட்களில் ஒன்றாக, மெதடிஸ்ட் திருச்சபையினை உருவாக்கிய ஜாண் வெஸ்லி அவர்களின் தோற்றத்தில் உள்ள ஒரு பனையோலை புக் மார்க் ஒன்றையும் நாங்களே செய்து வழங்கினோம். அதில், “படிக்கும் கிறிஸ்தவர்களே வளரும் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் படிக்க தவறும்போது அவர்கள் வளர்ச்சியும் நின்றுவிடுகிறது” என்கிற ஜாண் வெஸ்லியின் பொன்மொழியினைப் பதித்து கொடுத்தோம். இத்துடன் எனது மாமா அறிவர். டி எஸ் ஸ்பர்ஜன் அவர்கள் ஆங்கிலத்திலிருந்து தான் மொழிபெயர்த்த “அவருடைய மேன்மைக்கு என்னுடைய முழுமை” என்ற அனுதின தியானத்தியும் இலவசமாக வழங்கினார்கள். வேறு ஒரு நண்பரின் ஆதரவுடன், குமரி பேராயம், தென்னித்திய திருச்சபையின் “அருளுரைக் கையேடு” போதகர்களுக்கும், ஊழியர்களுக்கும் கிடைத்தன. தின்பண்டங்களும், பயன்பாட்டு பொருட்களுமாக அனைத்தையும் நண்பர்களின் உதவியுடனே, செய்தோம். எங்கள் திருச்சபையின் வாலிபர்கள் இணைந்து, காட்டில் வளர்ந்திருந்த நுரைப்பீர்க்கைகளை சேகரித்துக் கொடுத்தார்கள் அதனையும் இணைத்துக்கொண்டோம்.
இத்துடன் மூன்று முக்கிய பொருட்களை வழங்கியதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். 1. மக்கள் நெகிழி பயன்பாட்டைக் குறைக்கும் வண்ணமாக, துணிப்பையினை வழங்க தீர்மானித்தோம். கூடவே நெகிழியில் அடைக்கப்பட்ட குடிநீரினை தவிர்க்கும் வண்ணமாக ஸ்டீல் பாட்டில் ஒன்றையும் வழங்க தீர்மானித்தோம். இவ்விரண்டு பொருட்களுக்கும் ஆகும் தொகையினை, எனது மருமகன் தீபு பொறுப்பெடுத்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் சேகரித்துக் கொடுத்தார். அப்படியே விதைகள் தேவைப்படுகிறன என்று கேட்டபொது, பனையேறி பாண்டியன் தனது நண்பர்களிடம் கேட்டு எங்களுக்கு உதவிசெய்தார். சுமார் 33 கிலோ விதைகளை அவர் அனுப்பியிருந்தார். விதைகளை கண்டிப்பாக நேரம் எடுத்து தங்கள் சொந்த ஊரிலுள்ள நிலத்தில் விதைக்கவும், இயலாது போகும் பட்சத்தில், விதைகளை தேவைப்படுகிறவர்களுக்கு வழங்கவும் கேட்டுக்கொண்டோம். விதைகளை அனுப்பும் தபால் செலவினை உங்களது வாசகரான திருவனந்தபுரம் சுப்பிரமணி ஏற்றுக்கொண்டார். இப்படி உதவிகள் பல திசைகளிலுமிருந்து குவிந்தப்டி இருந்தன. சுமார் 300 நபர்களுக்கு தலா ரூ700/- பெறுமானமுள்ள பரிசுகளை வழங்கினோம்.
கடந்த 15 நாட்களுக்குள் எமது திருச்சபையின் பெண்கள் 13 பேர் இணைந்து, புதிய ஏற்பாட்டினை கைகளால் எழுதி அற்பணம் செய்தார்கள். அது எமது திருச்சபை பெண்களுக்கு ஒரு நெருங்கிய வாசிப்பை அளித்தது. நூற்றுக்கு மேற்பட்ட வசனங்களைச் சொன்ன சிறுவர்களுக்கும் திருமறையினை எழுதிய பெண்களுக்கும் எனது அம்மா திருமதி, கிறிஸ்டி சாமுவேல் அவர்களின் உதவியுடன் சில்லு கருப்பட்டியினை வழங்கினோம். அம்மா சமீபத்தில் தான் திருமறை முழுவதையும் தனது கரம்பட எழுதிமுடித்திருந்தார்கள்.
இப்படியான ஒரு மகிழ்வின் கொண்டாட்டத்தை மும்பை திருச்சபை இதுவரைப் பார்த்ததில்லை. நீங்கள் உங்கள் நூலின் வழியாக இதில் கலத்திருக்கிறீர்கள் என்பது எனக்கு நிறைவளிப்பது. எனது திருச்சபையில், நீங்கள் பேசும் நாட்களுக்காக காத்திருக்கிறேன். எங்களுக்காக தனித்துவ பிரதியினை வடிவமைத்து தந்த விஷ்ணுபுரம் பதிப்பகத்தாருக்கும், நேரத்துடன் எங்களுக்கு அதனை அனுப்பிய ஊழியர்களுக்கும், நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.எங்களுக்கு, செய்தி சொல்ல அமெரிக்காவிலிருந்து வந்த அருட்பணி. அறிவர். நெகேமியா தாம்சன் என்பவர் கூட, தனது செய்தியின் ஊடாக, புத்தகங்களின் மேன்மையினையும் வாசிப்பின் அவசியத்தையும் எடுத்துக் கூறினார். இனிவரும் காலங்களில் வாசிப்பு நிகழும் என எதிர்பார்க்கிறேன்.
இறுதியாக 40ஆம் ஆண்டினை முன்வைத்து தனித்துவமான ஒரு “திருச்சபை கீதம்” நான் எழுத திருநெல்வேலியைச் சார்ந்த ஹாரிஸ் பிரேம் அவர்கள் மெட்டமைத்து எங்கள் பாடகர்குழு சிறுவர்கள் பாடினார்கள்.
ஞான பாலென திடமுள்ளதாய்
தெளி தேனென சுவைமிக்கதாய்
கடல் அலையென ஆர்ப்பரிப்போம்
நெடும் பனையென உயர்ந்திடுவோம்
தூய பவுல் அடியவரின் சொல் நடந்து
வாழும் நிரூபங்களாய் நற்செய்தி பகிர்ந்து
மெத்தடிஸ்த் திருச்சபையின் நல் அங்கமாய்
மா திருச்சபையின் மெய் சங்கமாய்
இயேசு என்னும் அடித்தளமிட்டு
இப் பயணம் தொடர்வோம்
தூய பவுல் மெதடிஸ்த் தமிழ் திருச்சபை
ஆரே பால் குடியிருப்பு எங்கள் திருச்சபை
பசும் பாலும் தெளி தேனும் புரண்டோடும்’
கானான் செல்லும் பெரும் பயணம்
உம் வார்த்தை என்னும் அப்பம் பிட்டு
இப் பயணம் தொடர்வோம்
வந்த அனைவரும் பெரும் கொண்டாட்ட மனநிலையுடன் எங்களை வாழ்த்திச் சென்றார்கள். வெற்றியான ஒரு நாளாக இது அமைந்தது. உங்களின் “சிறு நூல்கள்” அவ்வகையில் ஒரு சிறந்த வாழ்த்துதல் என்றே கொள்ளுகிறேன்.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
போதகர்,
பிகு. தூய பவுல் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை ஆரே பால் குடியிருப்பு.
குறிப்பு: நாங்கள் ஆங்கிலிக்கன் திருச்சபையிலிருந்து கிளைத்தெழுந்தவர்கள் தான் ஆனால் மெதடிஸ்த் திருச்சபை என்றே அழைக்கப்படுகிறோம்
பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை
பனை இந்தியா! – ஒரு மகத்தான பயணம்
காட்சன்எழுகதிர்நிலம்- கடிதங்கள்
எழுகதிர் நிலம்,பட்டென்று முடிந்து விட்டது போல உணர்வு. ஆனால் -” எவ்வளவு பெரிது இந்நிலம். இங்கே எவரேனும் வாழ்ந்து நிறைய முடியுமா என்ன?” …. அதற்கு பதிலளித்தது போல முடிந்தது.
“பயணங்கள் போதும்” என்ற எண்ணம் நமக்கு வரவே வராதா ஆசானே?
உங்கள் பயண அளவில் 10000ல் ஒரு பங்காவது சுற்றியிருப்பேன். சென்றுள்ள பயணம் முடிந்து திரும்பும் போது மாபெரும் அடுத்த பயணம் கிளைக்கும் தருணம் உங்களுக்கும் உண்டென தெரியவருகிறது பயணக் கட்டுரையின் போக்கில்… உங்களோடு சேர்ந்து செல்ல இப்பிறவியில் வாய்ப்பு இல்லை என்று முடிவு செய்து உங்கள் பயணக்கட்டுரைகளை அச்சாக்கி அள்ளிக் கொண்டு கிளம்பி விடுவேன். ருகர்கள் பாதை…. ஒரு கனாக்காலம்.
இந்த கடனையெல்லாம் எப்படி அடைப்பது என்று தெரியாமல் ….
அலகிலா நன்றிகளுடன்
சு.செல்வக்குமார்
மதுரை.
குறிப்பு:
தவாங் , அதற்கு மேலே ஜமீதாங் வரை ஏற்கனவே சென்றிருந்ததால் கட்டுரை மூலம் உங்களுடனே பயணித்த உணர்வு. … 2015ல். அதுவும் ஜனவரியில்.
அன்புள்ள ஜெ
எழுகதிர்நிலம் அபாரமான ஒரு பயணத்தொடர். அதன் கவித்துவமும் நகைச்சுவையும் நுண்தகவல்களும் அதை ஓர் அற்புதமான வாசிப்பனுபவமாக ஆக்குகின்றன. அந்தமாதிரி ஒரு நிலம் ஐரோப்பாவில்தான் இருக்கமுடியுமென நினைத்திருந்தேன். பனிநிலத்தில் நீங்கள் சென்றதும் சரி, உறைந்த பனியேரிகளும் சரி ஒரு கனவுபோலிருந்தன. குறிப்பாக பனியருவிக்குக் கீழே நிற்கும் காட்சி ஒரு கிளாஸிக் ஓவியம்போலிருந்தது.
ராஜேந்திரன் ம
நற்றுணை கலந்துரையாடல், கடிதம்
சென்ற வாரம் சனியன்று நற்றுணை அமைப்பின் சார்பில் தோழர் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்கள் மற்றும் கம்பிக்குள் வெளிச்சங்கள் நூல்களை முன்வைத்து சிறை இலக்கியம் சார்ந்து ஒரு கூட்டம் நடந்தது. நம் தளத்திலும் அறிவிப்பு வந்திருந்தது. குழுமத்தில் ஒருமாதம் முன்பே அறிவிப்பு கொடுத்து விட்டார்கள். இவ்விரு நூல்களும் அச்சில் இல்லை என்பது பெருங்குறையாகவே இருக்கிறது. நான் காளியண்ணாவிடம் இருந்து சுவருக்குள் சித்திரங்கள் நூலை கடன் வாங்கி வாசித்தேன். கம்பிக்குள் வெளிச்சங்கள் நூலினை வாசிக்க வேண்டும். சுவருக்குள் சித்திரங்களை வாசித்த வரையில் அது மிக சிறந்த இலக்கிய பிரதிகளுள் ஒன்று. அபுனைவு வகைமை சார்ந்த இந்த நூலில் தியாகு தன் வாழ்க்கை தீவிரமான நேர்மையுடன் ஏராளமான நுண் தகவல்களை சேர்த்து சொல்லி செல்கிறார். எனவே ஒரே சமயம் அரசியல் – சமூகவியல் சார்ந்த கேள்விகளை எழுப்பி கொள்ளவும் புனைவெழுத்தாளர் கற்பனையில் கதைகளை விரித்து கொள்ளவும் இடம் தருகிறது. இத்தீவிரமே இவற்றிற்கு இலக்கிய தகுதியை வழங்குகிறது என்று நினைக்கிறேன்.
நூல்களை வாசித்த பின் கூடுகைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் சளி தொல்லைக்கு உட்பட்டு சென்ற வாரம் தான் சற்று தேறியிருந்தேன். படிப்படியாக குணமாகி வருகிறது. எனவே உடனடியாக ஏசி அறையில் நான்கு மணிநேரம் சென்று அமர்வது உடல் நலத்தை சீர்குலைக்கும் என்பதால் தவிர்த்து விட்டேன். அதற்கு மாறாக சுருதி டிவியில் நிகழ்வு வந்திருந்த அழைப்பாளர்களின் உரைகளை கேட்டேன். அவற்றை தொகுத்து கொள்ளவே இக்கடிதம்.
முதல் உரை கவிஞர் லிபி ஆரண்யா அவர்களுடையதாக அமைந்தது. பூனை போல மென்மையாக ஆரம்பித்தவர் புலி உறுமலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து தன் உரையை நிறைவு செய்தார். அவர் தான் இடதுசாரி இயக்கங்களில் பங்குபெற ஆரம்பித்த தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அதிகபட்சம் கல்யாண மண்டபம் என்பதாக நலிவுற்று விட்டிருந்த போராட்டங்களின் தீவிரத்தை சுட்டி காட்டி பேச ஆரம்பித்தார். தோழர் தியாகுவின் நூலில் நாம் பார்க்கும் காலக்கட்டம் முடிந்து போன ஒன்றாகவே தனக்கு படுவதாக சொல்கிறார். அதற்கு உதாரணமாக மணியன் பிள்ளை திருட்டை பற்றி சொன்னவற்றை எடுத்து காட்டி பேசினார். மணியன் பிள்ளை திருட்டு என்பதை ஒரு கலை என்கிறார். பிறர் அறியாது அவர்களின் பொருளை எடுத்து வருதலுக்கு பெயரே திருட்டு. அவ்வாறில்லாது கத்தியை காட்டி மிரட்டுவதெல்லாம் திருட்டில் சேர்த்தி இல்லை, அது கொள்ளை என்கிறார். இப்படி திருடுவதில் கூட ஓர் அடிப்படை நியாயம் இருந்த காலக்கட்டம் ஒன்றிருந்தது. தோழர் தியாகு அந்த காலக்கட்டத்தை சேர்ந்தவர். அரசியல் போராட்டங்கள் இலட்சியவாதத்தின் மேல் நின்று கனவு சமூகத்தின் உருவாக்கத்திற்காக நடத்தப்பட்ட காலம் அது. ஐம்பதாண்டுகளுக்கு பின்பு அந்நிலை முழுமையாக மாறிவிட்ட காலத்தில் அவற்றை நினைவுறுத்தும் இந்நூல் மிக முக்கியமானது என்றார்.
இரண்டாவதாக இந்நூல்களின் வழி அறியும் தியாகுவின் மனம் முழுக்க முழுக்க தர்க்கத்தால் இயங்குவதை நாம் காண்கிறோம். தர்க்கத்தில் இரண்டு வகை மாதிரிகள் உண்டு. ஒன்று தன் தரப்பை நிலை நிறுத்தவும் எதிர் தரப்பை மறுத்து ஒழிக்கவும் தர்க்கத்தை பயன்படுத்துவது. இதை நிறுவன தர்க்கம் எனலாம். மற்றொன்று தர்க்கத்தை கருவியாக கொண்டு புதிய விஷயங்களை அறிவதற்கான தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபடுதல். தியாகுவின் தர்க்கம் இரண்டாவது வகைமையை சார்ந்ததாக உள்ளது. அவர் தொடர்ச்சியாக தான் சார்ந்துள்ள நிறுவன தர்க்கத்துக்கு அப்பால் புதியவற்றை அறிய முயன்றபடியே இருக்கிறார். அதற்கு தர்க்கத்தை கருவியாக்கி கொள்கிறார். இந்நிலையில் தியாகுவின் நூலினை தான் மூன்றாக பிரித்து கொள்வதாக கூறினார் லிபி ஆரண்யா.
ஒன்று தியாகுவிற்கும் லெனிற்கும் இடையிலான நட்பு. இரண்டு இந்நூலில் வரும் பலவகைப்பட்ட மனிதர்களின் மாறுபட்ட வாழ்க்கை சித்திரங்கள். மூன்று நூலின் இறுதி பகுதியான மிசா சட்டம் குறித்தது. லிபி ஆரண்யா குறிப்பிடும் நூல் சுவருக்குள் சித்திரங்கள் என்பதை வாசித்தவர்கள் அறியலாம். இவ்வாறு மூன்று பகுதிகளாக பிரித்து கொண்ட பின் முதலிரு பகுதிகளில் வரும் வெவ்வேறு சம்பவங்களை குறிப்பிட்டு காட்டி அங்கெல்லாம் தியாகு நிறுவன தர்க்கத்துக்கு அப்பால் மனிதர்களை அறியும் நேர்மையான தீவிரத்தை கொண்டுள்ளார் என்பதை தொட்டு காட்டி பேசினார். இச்செயல்முறையை இந்நூல்களை இலக்கிய தகுதிக்குரியவையாக ஆக்குகின்றன என்று மொழிந்தார். மிசா சட்டம் குறித்து விவரிக்கும் நூல் பகுதிகளை சொல்லி சிட்டி பாபுவின் சிறை குறிப்புகளின் அடிப்படையில் இஸ்மாயில் கமிஷன் முன்வைத்த சீர்திருத்தங்கள் இன்று வரை கிடப்பில் போடப்பட்டிருப்பதையும் மிசாவால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தன் ஆட்சி காலத்திலாவது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதாவது இலக்கிய மேடையில் இலக்கிய உரையாற்ற தொடங்கிய கவிஞர் அதனை அரசியல் மேடையாக்கி தோழராக கோரிக்கை விடுத்து இருக்கையில் அமர்ந்தார். இது அரசின் காதுகளுக்கு சென்று சேரும் என்று நம்பிக்கை வைப்போம்.
அடுத்து பேசிய கவின்மலர் அவர்கள் இவ்விரு நூல்களின் ஆவணப்படுத்தும் முக்கியத்துவத்தை மையப்படுத்தி தன் உரையை அமைத்து கொண்டார். சுதந்திரத்திற்கு முந்தைய பெண்களின் அரசியல் போராட்டங்கள் குறித்து அவர்களது குழு நாடகம் ஒன்று இயக்க திட்டமிட்ட போது காங்கிரஸ் மற்றும் திராவிட இயக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை ஒப்பிட்டால் ஏறக்குறைய இடதுசாரிகளில் தரப்பில் ஆவணப்படுத்தலே இல்லை என்னும் என்ற தனியனுபவத்தை கூறி அத்தகைய நிலைகளில் இது போன்றதொரு நூலின் முக்கியத்துவத்தை சுட்டி காட்டினார். கட்சியில் இருந்து சொல்லும் போது ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் போன்ற கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் அடியோடு மறக்கப்பட்டிருப்பதையும் அக்கட்சியில் இருந்தும் சுவருக்குள் சித்திரங்கள் வழியாகவே தான் ஏ.ஜி.கே பற்றி அறிந்து கொண்டதை கூறினார். அதே போல் தன் தந்தை தீவிர திமுக கட்சி தொண்டராக இருந்தும் தஞ்சை பகுதியில் கீழ் வெண்மணிக்கு அருகிலேயே அவர்களது ஊர் பரங்கிப்பட்டி இருந்தாலும் கீழ் வெண்மணி படுகொலை செவி செய்தியாக மட்டுமே அவரை அடைந்திருந்ததை குறிப்பிட்டு கட்சிகளின் செயல்பாட்டு குறையையும் மக்களிடம் தகவல்களை கொண்டு சேர்க்காமை பற்றியும் குறிப்பிட்டார். இத்தகைய சமூக சூழ்நிலைகளில் தியாகுவின் நூல்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாக தான் கருதுவதாக சொன்னார். அடுத்து முன்பு கீழ தஞ்சை பகுதியில் நிலவிய ஒருவகையான நல்லிணக்கம் மறைந்து இன்று மேலும் மேலும் சாதி பெருமிதங்களால் ஏற்படும்ம் சம்மூக இறுக்கத்தையும் தொட்டு காட்டினார். மேலும் இந்நூல் இத்தகைய ஆவணப்படுத்தலை வறட்சியான தகவல்களாக அல்லாது உரையாடல் வடிவத்தில் மிகுந்த மனித நேயத்துடன் கையாள்வதால் இலக்கிய தகுதியையும் பெறுகிறது என்றார்.
இருவரின் உரையையும் அடுத்து சாம்ராஜ் அவர்களின் உரையை கேட்டேன். தமிழில் எழுதப்பட்ட சிறை இலக்கியங்கள் குறித்து பொதுவான ஒரு கோட்டு சித்திரத்தை அளித்து, அதில் இடம்பெறும் தியாகுவின் நூல்களின் தனித்துவம் என்ன என்பதை வரையறுத்து விட்டு பேசுவதாக சாம்ராஜின் உரை தொடங்கியது. பொதுவாக சுதந்திரத்திற்கு முன்னர் கிடைக்கும் சிறை குறிப்புகள் தலைவர்கள் சிறையில் சந்தித்த பிற முக்கியமான தலைவர்களை குறித்தும் சுவாரசியாமான சம்பவங்கள் அடங்கியதாகவும் உள்ளன. தியாகுவின் நூலே சிறைக்குள் நடக்கும் போராட்டத்தையும் அரசியல் வழியில் அவர்கள் நடத்திய போராட்டத்தையும் பதிவு செய்கிறது. அதுவே இதன் தனித்துவம் என்றார்.
அதன் பின் தியாகுவின் மூலதனம் மொழிப்பெயர்ப்பின் கடின தன்மையை அவர்கள் எத்தகைய நெருக்கடியில் அதை செய்தனர் என்றும் கேரளத்தில் கட்சி செலவில் அதற்கு செய்து கொடுக்கப்பட்ட ஏற்பாடுகளையும் விவரித்து விளக்கினார். இதன் தியாகு அவர்களின் தீவிர தன்மையை மறைபிரதியாக தொட்டு காட்டினார். இத்தகைய முகம் வேர்க்கும் தீவிர தன்மைக்கு பின் தோழர் தியாகு அவர்களின் கூர்ந்த அவதானிப்பு திறனையும் பகடியையும் வெளிப்படுத்தும் அவருடனான சாமின் தனி வாழ்க்கை அனுபவங்களையும் நூல் பகுதிகளையும் எடுத்து காட்டி தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் விவரித்தார். சிரிப்பில் தாராசு தட்டு தடுமாறியதால் சுவருக்குள் சித்திரங்களில் வெளிப்படும் வெவ்வேறு மானுட தருணங்களை எடுத்து காட்டி அதன் இலக்கிய தன்மையை காட்டினார்.
அடுத்து தோழர் தியாகுவின் நூல்கள் மேற்சொன்ன காரணங்களால் தன் வாழ்க்கை வழிகாட்டியாக முப்பதாண்டு காலம் உடன் இருக்கின்றன என்பதை நெகிழ்வுடன் உரைத்தார். இறுதியாக சுவருக்குள் சித்திரங்கள் நூலின் இறுதி பகுதியில் பாலு என்கிற பாலகிருஷ்ணனின் தூக்கு மேடை பகுதிகளை வாசித்து அந்நூல் எப்படியொரு மிக சிறந்த இலக்கிய பதிவாக திகழ்கிறது என்று சொல்லி தோழருக்கு தன் வணக்கத்தை தெரிவித்து இருக்கையில் அமர்ந்தார்.
முடிவாக இசையின் உரையை கேட்டேன். பொதுவாக தனிமனித அழகியலில் தொடங்கி விரியும் கவிதைகளை கொண்ட கவிஞர்கள் மேடையில் ஊமையாகி விடுகிறார்கள். அவர்களில் ஒரு அணங்கு கூடி விடுகிறது என்பது என் எண்ணம். நல்ல காலம் இசை அத்தகைய இம்சை அரசன் புலிகேசியாக உருமாறவில்லை. முன்னடியாக கட்டுரை வரைந்து கொண்டு வந்திருந்தார். கட்டுரையை இத்தனை சுவாரசியத்துடன் வாசிக்கவியலும் என்பது இசையின் உரையே சான்று.
தன் உரையை தோழரை அவரது நூல்களுக்கான திரைப்பட ஒப்பந்தம் போட சாம்ராஜுடன் சென்ற போது நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து தொடங்கினார். அதன் அச்சம்பவத்தை தம்பி விஷாலிடம் சொல்லி வியந்த போது, தம்பி சொன்ன அவர் தோழர் அவருக்கு அந்நியர் என்று எவருமில்லை என்ற சொல் மனதில் தைத்த கணத்தை சொல்லி ஆரம்பித்தார். அதன் பின் மார்க்ஸிய பின்னணி அல்லாது இந்நூலில் பயின்று வரும் மனித நேயமே தான் அணுக கூடியதாக இருக்கிறது என்று சொல்லி பேச தொடங்கினார். பொதுவாக பிறரது உரைகளில் வெளிப்பட்ட நெகிழ்வான தருணங்களை இசையும் தன் உரையில் தொட்டு காட்டினார். மேலதிகமாக மார்க்ஸியத்தின் அடிப்படையில் உள்ள வன்முறையை உண்டாக்கும் அந்த உத்வேகத்தை ஏன் கவித்துவம் என்று விளிக்கலாகாது என வினவி கவிக்குரிய வகையில் முடித்தார்.
அடுத்து தியாகு அவர்களுடனான உரையாடல் காண கிடைக்கிறது. இந்நூல் பதிப்பில் இல்லையாதலால் வாசித்த நண்பர்களே செறிவான கேள்விகளை கேட்டு சிறப்பாக நடத்தினர். அவற்றை சுருக்கி எழுத அவசியமில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் தியாகு அவர்களே கச்சிதமான பதில்களை அளித்தார். இறுதியாக ஏற்புரையில் தன் மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்து கொண்டு இந்நூல் கவனிக்கப்படுவது குறித்த இரண்டு அவதானிப்புகளை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் தொடங்கிய வரி அழகியல் தரப்பில் நின்றிருக்கும் வாசகர்களுக்கு மிக முக்கியமானது. உண்மை தான் அழகு. அது இந்நூலை ஒளிர செய்கிறது என்றார். பின்னர் நாமறியத மதில்களுக்கு பின்னால் உள்ள வாழ்க்கையை காட்டுவதால் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் போராட்டங்களில் ஈடுபடுகையில் நாமும் எப்போது வேண்டுமானலும் சிறைக்கு செல்ல நேரிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்நூலினை வாசிப்பதன் மூலம் சிறைக்கு குறித்த அச்சம் நீங்கியது என்றால் அதுவே இதன் வெற்றி என்பேன் என தன் ஏற்புரை வழங்கி முடித்தார்.
இவ்விரு நூல்களில் சுவருக்குள் சித்திரங்கள் வாசித்துள்ளேன். கம்பிக்குள் வெளிச்சங்கள் நூலை வாசிக்க வேண்டும். இவையிரண்டும் பலவகையிலும் முக்கிய நூல்கள். வாசித்து விவாதிக்கப்பட வேண்டியவை. அவ்வகையில் அதற்கொரு தொடக்கம் அமைத்து கொடுத்த நற்றுணை அமைப்புக்கு நன்றி.
அன்புடன்
சக்திவேல்
March 7, 2023
கோவையில்…
கோவையில் நண்பர் ஆனந்த்குமார் ஒரு புகைப்பட நிலையத்தை தொடங்கியிருக்கிறார். குழந்தைகளை புகைப்படம் எடுப்பது குறிப்பாக அவருடைய தனித்தன்மை. தன்னறம் அமைப்பின் தும்பி இதழில் ஆனந்த் குமார் எடுத்த பல நல்ல படங்கள் பிரசுரமாகியிருக்கின்றன.
திருவனந்தபுரத்தில் அதையே செய்துகொண்டிருந்தார். அதன்பின் கொரோனாவில் கொஞ்சகாலம் நாகர்கோயில் அருகே கொட்டாரத்தில் இருந்தார். மனைவி கோவையில் பணிநிமித்தம் சென்றமையால் அங்கே சென்றிருக்கிறார். அங்கே புதிய ஸ்டுடியோ தொடங்க எண்ணி ஓராண்டாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது ஆரம்பித்துவிட்டார்.
குழந்தைகளைப் புகைப்படம் எடுப்பது பற்றிய தெளிவு நம்மிடமில்லை. குழந்தைகள் மிகமிக வேகமாக வளர்ந்துவிடுபவை. ஆகவே புகைப்படங்களை எடுக்காவிடில் அப்பருவம் கண்ணிலிருந்து மறைந்துவிடும். 1997-1998 ல் வசந்தகுமார், யூமா வாசுகி எங்கள் வீட்டில் வந்து தங்கிய நாட்களில் சைதன்யா, அஜிதனை எடுத்தபடங்கள் எங்களுடைய முக்கியமான நினைவுச்செல்வங்கள்.
இன்று செல்பேசி வந்துவிட்டமையால் சரளமாக எடுத்து தள்ளுகிறார்கள். வீடியோ எடுக்கிறார்கள். உடனுக்குடன் வலையேற்றமும் செய்கிறார்கள். அவை முக்கியமானவை. ஏனென்றால் அரிய தருணங்கள் அவற்றில்தான் பதிவாகும்.
ஆனால் நிபுணர்கள் எடுக்கும் புகைப்படங்களும் முக்கியமானவை. அவை நல்ல ஒளியில், நல்ல சட்டகங்களில், சரியான தருணங்களில் எடுக்கப்படுபவை. அவற்றை நாம் நம் எளிய செல்போன் காமிராவால் எடுக்கமுடியாது. பெரும்பாலும் குழந்தைப்புகைப்படங்களை ஸூம் போட்டு குழந்தைக்கே தெரியாமல்தான் எடுப்பார்கள். அப்போதுதான் குழந்தை இயல்பாக இருக்கும். செல்போனில் ஸூம் மிகமிக குறைவு.
குழந்தையை அலங்கரித்து, திருஷ்டிப்பொட்டு போட்டு எடுக்கலாம். அது நம் மரபு. பிழையில்லை. ஆனால் பெரும்பாலும் குழந்தைகள் அவற்றில் மிக பிழையான முகபாவனையுடன் இருக்கும். அது அக்குழந்தையின் இயல்பாக இருக்காது. பெரும்பாலான புகைப்படங்களில் குழந்தைகள் திகைத்துப்போய் காமிராவை பார்த்துக் கொண்டிருக்கும். பல குழந்தைகள் அழுகையை நிறுத்திய முகபாவனையுடன் இருக்கும்.
குழந்தையை அவர்கள் வாழும் இயல்பான சூழலில் விளையாடவிட்டு எடுக்கப்படும் படங்களே சிறப்பானவை. அக்குழந்தையின் தன்னியல்பு புகைப்படங்களில் வெளியாகவேண்டும். குறும்புக்குழந்தைகள் உண்டு. பொறுமையானவை உண்டு. அவ்வியல்பு அற்புதமாக புகைப்படங்களில் வெளிவரும். வசந்தகுமார் எடுத்த ஒரு படத்தி அஜி எதையோ குறும்பும் ஆர்வமுமாக பார்க்கிறன். சைதன்யா அஜியை ‘அய்யோ எங்க அஜி எவ்ளோ பெரிய ஆளு!’ என்கிற பெருமிதத்துடன் பார்க்கிறாள். அதுதான் அவர்களின் இளமையின் தருணம். ஒரு புகைப்படத்தில் ஜட்டி மட்டும்போட்டு தலையில் கைவைத்து அமர்ந்திருக்கும் சைதன்யாவின் முகத்தில் அப்படி ஒரு குறும்பு. எழுந்த கணமே திகைபூட்டும் எதையோ கேட்கப்போகிறாள் என்பதுபோல.
ஆனந்த் குமாரின் ‘கிடு ஸ்டுடியோ’ வடவள்ளியில் அருகே இருக்கிறது வடவள்ளியே இப்போது விஷ்ணுபுரம் ஆட்களால் நிறைந்துவிட்டது. விஷ்ணுபுரம் அலுவலகம், சீனிவாசன் சுதா தம்பதியினரின் இல்லம், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் கிருபா தம்பதியினரின் இல்லம் எல்லாமே வடவள்ளியைச் சுற்றித்தான். நடந்து வரும் தொலைவில் எம்.கோபாலகிருஷ்ணனின் வீடு.
நானும் அருண்மொழியும் காலையில் கோவை எக்ஸ்பிரஸில் வந்திறங்கினோம். நவீன் வீட்டுக்குச் சென்று அங்கே குளித்து உடைமாற்றிவிட்டு நேரடியாக ஸ்டுடியோவுக்குச் சென்றோம். விளக்கேற்றி விழாவை எல்லாருமாக தொடங்கி வைத்தோம். விஷ்ணுபுரம் நண்பர்கள் வந்திருந்தார்கள்.
அங்கிருந்து நான் சீனிவாசன் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அருண்மொழியும் சைதன்யாவும் அஜிதனும் நவீனும் கிருபாவும் சத் தர்சன் சென்றனர். மறுநாள் மார்ச் 6 அன்று அருண்மொழிக்கு பிறந்தநாள். அதை அவர்கள் தடையின்றி கொண்டாட நான் கொஞ்சம் விலகியிருக்கலாமென தோன்றியது. அங்கே கேக் எல்லாம் வெட்டி லூட்டி அடித்திருக்கிறார்கள். இரவில் காட்டுக்குள் சென்று வந்ததாகவேறு அருண்மொழி சொன்னாள்.
மாலையில் நான் விஷ்ணுபுரம் அலுவலகத்தில் வாசகர்களைச் சந்தித்தேன். முப்பதுபேர் வந்திருந்தார்கள். பல கோணங்களில் கேள்விகள். தொல்லியல் முதல் இந்திய தத்துவம், ஆன்மிகம் வரை. கேள்விகளுக்கு எப்போதுமே ஒருவகை முழுமையான கட்டமைப்புடன் பதில்சொல்வது என் வழக்கம். நடுவே கொஞ்சம் கிண்டல் சிரிப்பு.
இரவு பத்துமணி வரை சந்திப்பு நீண்டது. அதன்பின் சீனிவாசன் வீட்டுக்குச் சென்றேன். சீனிவாசன் 1920களில் அச்சிடப்பட்ட நூல்கள் வைத்திருந்தார். வைணவ மணிப்பிரவாள உரை. இன்று தமிழகத்தில் எத்தனைபேர் அவற்றை வாசிக்கமுடியுமென தெரியவில்லை. பெரும்பகுதி சம்ஸ்கிருதச் சொற்கள். கூடவே சொற்களைச் சேர்த்து எழுதும் பாணி.
பலருக்குத் தெரியாத ஒன்றுண்டு. சொற்களை பிரித்து எழுதும் பாணி என்பது இந்தியமொழிகளில் இருந்ததில்லை. சொற்களை ஒன்றாகச்சேர்த்து எழுதுவதே வழக்கம். ஒரு சொல்லிணைவு என்பது ஒரு மூச்சுக்குள் சொல்லப்படுவது. அதை ஒரு பாதம் என்று மலையாள இலக்கணம் சொல்கிறது. அதுதான் அலகே ஒழிய ஒவ்வொரு சொல்லும் ஓர் அலகு அல்ல.
இது ஒரு சைவநூலின் ஒரு பாதம். ’இதென்னையோவெனினஃதுரைப்பாமிதுதருணம்’ (இது என்னையோ எனின் அஃது உரைப்பாம் இது தருணம்) ஏறத்தாழ இதுவே மலையாளத்தில் ‘வல்லதடிநினிகளாலாகட்டே சிலாதலபுஷ்பாதிவல்லரிகளாலாவட்டே ஆ அஹோரநிபிந்தவனாந்தரம்…’ (வல்ல தடினிகளால் ஆகட்டே, சிலா தல புஷ்பாதி வல்லரிகளால் ஆகட்டே, ஆ அஹோர நிபிந்த வனாந்தரம்) என்ற வகை சொல்லாட்சிகள். சம்ஸ்கிருதத்தில் ‘சிம்ஹவியாஹ்ரஸல்யாதிமிருககணநிக்ஷேபிதம்’ போன்ற சொல்லாட்சிகள். (சிம்ஹ வியாஹ்ர மிருக ஸல்ய ஆதி மிருக கண நிக்ஷேபிதம்)
சொல்பிரித்து எழுதுவது அச்சு வந்தபின்னர், ஆங்கிலத்தில் இருந்து செய்திகளை இந்திய மொழிகளுக்கு மொழியாக்கம் செய்ய வேண்டிய தேவை எழுந்தபின்னர், ஆங்கிலத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவானது. ஆங்கிலத்தில் இருந்து செய்தி, அரசுநிர்வாகம், சட்டம் போன்ற அன்றாடத்தேவைக்காக அம்மொழியாக்கங்கள் நிகழ்ந்தமையால் ஐம்பதாண்டுகளில் அந்த மாற்றம் உருவாகியது. அந்த மொழியாக்கம் நிகழாத சம்ஸ்கிருதத்தில் இப்போதும் அதே சொற்கூட்டு பாதம்தான் உள்ளது.
சொற்களை பிரித்து எழுதுவது 1850களில் தொடங்கி 1900 த்தில் ஏறத்தாழ பரவலாக ஆகிவிட்டபின்னரும்கூட ‘அறிவுச்சூழலில்’ பழைய சொற்கூட்டு முறையையே பிடிவாதமாக கடைப்பிடித்தனர். தமிழில் சைவர்கள் கொடுந்தமிழிலும் வைணவர்கள் மணிப்பிரவாளத்திலும் அப்படி எழுதினர். சீனிவாசனிடம் இருக்கும் ஒரு வைணவ இதழ் 1940ல் வெளிவந்தது. இதே மொழியமைப்பில்தான் இருக்கிறது.
இன்றைக்கும்கூட நமக்கு சொற்களைப் பிரிப்பது சார்ந்த குழப்பம் உள்ளது. 1850 தொடங்கிய அந்த சொல்பிரிப்பு முறை இன்றைக்கும் வளர்ந்து நிறைவடையவில்லை. அதற்கான பொது இலக்கணமுறைஉ உருவாகவில்லை. சொல்லிப் பார்த்துக்கொள்வது மட்டுமே ஒரே வழி. ஆனால் நாம் சொல்லும் முறை மாறிக்கொண்டிருக்கிறது. பிரித்து எழுதினாலும் சேர்த்தே வாசிப்போம். சேர்த்தெழுதினால் பிரித்தும் வாசிப்போம் (இவ்விரு சொற்றொடர்களையும் எப்படி வாசித்தீர்கள்?) தமிழ் உரைடநடையை எடுத்துப் பார்த்தால் காலந்தோறும் சொற்கள் மேலும் மேலும் அதிகமாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதைக் காணலாம். முப்பதாண்டுகளுக்கு முன்பு கூட முந்தையச் சொற்றொடரை ’காலந்தோறுஞ்சொற்கள் மேன்மேலுமதிகமாகப் பிரிக்கப்பட்டுக்கொண்டேயிருப்பதைக் காணலாம்’ என்று எழுதியிருப்பார்கள்.
(ஆனால் இன்றைய ’இணைய இலக்கணர்’ கள் பலர் இந்த சொற்பிரிப்புக்கான இலக்கணங்கள் எல்லாம் ஏதோ தொல்காப்பியம் முதலே இருப்பதாக நம்பிக்கொண்டிருப்பதை காண்கிறேன். வேடிக்கைதான்)
கேரளத்தில் பொது உரைநடை சொற்கூட்டு பாதங்களுடன் 1950 வரை எழுதப்பட்டது. அதன்பின் மரபுக்கவிதையில் இன்றைக்கும் அது தொடர்கிறது. ஆச்சரியமென்னவென்றால் தீவிரமான கோட்பாட்டு விவாதக் கட்டுரைகளிலும் அந்த மொழிநடை வழக்கமாக உள்ளது. அதைவிட ஆச்சரியம், சொல்பிரித்த உரைநடையில் கவிதைகளெழுதிய பி.ராமன் போன்றவர்கள் அண்மையில் இந்த கூட்டுச்சொல் நடையில் கவிதைகள் எழுதுகிறார்கள். காரணம், இந்த நடையே செறிவாகச் சொல்ல உதவுவதாகச் சொல்கிறார்கள்.
மலையாளத்தின் கூட்டுச்சொல் பழக்கமும், சம்ஸ்கிருத சொல்லறிமுகமும் இருந்தமையால் பழைய மணிப்பிரவாள நடையை வாசிக்க முடிந்தது. கொஞ்சம் வேடிக்கையாகவே இருந்தது. சீனிவாசனுடன் இரவு ஒரு மணிவரை மணிப்பிரவாள வாசிப்பில் ஈடுபட்டிருந்தேன்.
மறுநாள் காலை விஷ்ணுபுரம் பதிப்பகம் சென்றேன். அருண்மொழியும் பிறரும் மதியம் திரும்பி வந்தனர். சீனிவாசன்- சுதா வீட்டில் அருண்மொழியின் பிறந்தநாள் விருந்து. ஆனந்த்குமார் இங்கும் ஒரு கேக் வாங்கிவந்து வெட்டவைத்தார். மாலை நாகர்கோயில்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers




