ஒரு கிறிஸ்தவ சபை, நூல்கள்

சிறுநூல்கள் ஒரு கட்டுரை 

யானை டாக்டர் வாங்க

வணங்கான் வாங்க

நூறு நாற்காலிகள் வாங்க

அறம் வாங்க 

அன்புள்ள அண்ணன்,

எங்கள் திருச்சபையின் 40 ஆம் ஆண்டுவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விடுதலைப் பயணத்தில் சுமார் 40 ஆண்டுகள் இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் நடந்ததுபோல எங்கள் பயணம் 40 ஆண்டுகள் நிறைவுற்றதை கருத்தில்கொண்டு  விடுதலைப்பயணம் என்றே இந்த கொண்டாட்டத்தை  முன்னெடுத்தோம். 40 ஆண்டுகளைக் குறிக்கும் வண்ணமாக சுமார் 40 பொருட்களை வருகின்றவர்களுக்கு கொடுக்க தீர்மானித்தோம்.

இப்படியான நிகழ்வுகளுக்கு பெரும் பணம் தேவை. எளிய குடிசைவாழ்பகுதியில் இருந்துகொண்டு இப்படியான கனவுகளை சுமப்பது பெரும் பாரம். ஆகவே நான எனது நண்பர்களையும் குடும்பத்தினரையும் இந்த பணிக்கென தொடர்புகொண்டேன். திருச்சபை அங்கத்தினர்களின் பங்கும் இருக்கவேண்டும் என்பதையும் மக்களுக்கு அறிவுறுத்தினேன்.

அனைத்தும் சிறப்பாக அமைந்தன.யானை டாக்டர் மற்றும் நூறு நாற்காலிகள், இப்பகுதியிலுள்ள மக்களின் வாழ்விற்கு சற்று நெருக்கமானவைகள் என்பதை உணர்ந்ததால், இலக்கிய படைப்புகளில் இவைகளை இணைத்துக்கொள்ள முடிவுசெய்தேன். அதற்காக எனது நண்பர் சாகுல் ஹமீது அவர்களை அழைத்து உதவி கோரினேன். 15 நிமிடத்தில், எங்களுக்கான, அனைத்து உதவிகளும் வந்து சேர்ந்துவிட்டன. ஒரு மெதடிஸ்ட் திருச்சபையில்,  இலக்கியம் வழங்கப்படும் முதல் நிகழ்ச்சியாக இதுவே இருந்திருக்கும் என நம்புகிறேன். இந்த அறிமுகம், ஒரு சிலரையாவது வாசிப்பு சார்ந்து மேம்படுத்தும் என உறுதிபட நம்புகிறேன். உதாரத்துவமாக கொடுத்த சங்கர் பிரதாப், அருண்குமார், சிட்னி கார்த்திக் ஆகியோர் என வணக்கத்திற்குரியவர்கள். ஆண்டவரின் ஆசி தொடர்ந்து இக்குடும்பங்களுடன் தங்கியிருக்கும். போதகர்கள் இரு இலக்கிய நூல்களையும் பெற்றது மகிழ்ச்சி என என்னை அழைத்துக் கூறியபடி இருக்கிறார்கள்.

கிறிஸ்தவம் சார்ந்த உங்களது பல கட்டுரைகள் ஆழமானவைகள். கிறிஸ்தவம் சார்ந்த உங்கள் படைப்புகளை வழங்கும் வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். வரும்நாட்களில் அவ்விதம் ஏதேனும் வாய்ப்புகள் அமைந்தால், நான் மகிழ்வடைவேன். எங்கள் திருச்சபை, ஆரே பகுதியில் முதன் முறையாக ஒரு நூலகத்தையும் திறந்திருக்கிறது. அங்கே இந்த நூல்கள் என்றென்றும் இருக்கும்.
இந்த நிகழ்ச்சியில், 40 பொருட்களில் ஒன்றாக,  மெதடிஸ்ட் திருச்சபையினை உருவாக்கிய ஜாண் வெஸ்லி அவர்களின் தோற்றத்தில் உள்ள ஒரு பனையோலை புக் மார்க் ஒன்றையும் நாங்களே செய்து வழங்கினோம். அதில், “படிக்கும் கிறிஸ்தவர்களே வளரும் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் படிக்க தவறும்போது அவர்கள் வளர்ச்சியும் நின்றுவிடுகிறது” என்கிற ஜாண் வெஸ்லியின் பொன்மொழியினைப் பதித்து கொடுத்தோம். இத்துடன் எனது மாமா அறிவர். டி எஸ் ஸ்பர்ஜன் அவர்கள் ஆங்கிலத்திலிருந்து தான் மொழிபெயர்த்த “அவருடைய மேன்மைக்கு என்னுடைய முழுமை” என்ற அனுதின தியானத்தியும் இலவசமாக வழங்கினார்கள். வேறு ஒரு நண்பரின் ஆதரவுடன், குமரி பேராயம், தென்னித்திய திருச்சபையின் “அருளுரைக் கையேடு” போதகர்களுக்கும், ஊழியர்களுக்கும் கிடைத்தன.  தின்பண்டங்களும், பயன்பாட்டு பொருட்களுமாக அனைத்தையும் நண்பர்களின் உதவியுடனே, செய்தோம். எங்கள் திருச்சபையின் வாலிபர்கள் இணைந்து, காட்டில் வளர்ந்திருந்த நுரைப்பீர்க்கைகளை சேகரித்துக் கொடுத்தார்கள் அதனையும் இணைத்துக்கொண்டோம்.

இத்துடன் மூன்று முக்கிய பொருட்களை வழங்கியதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். 1. மக்கள் நெகிழி பயன்பாட்டைக் குறைக்கும் வண்ணமாக, துணிப்பையினை வழங்க தீர்மானித்தோம். கூடவே நெகிழியில் அடைக்கப்பட்ட குடிநீரினை தவிர்க்கும் வண்ணமாக ஸ்டீல் பாட்டில் ஒன்றையும் வழங்க தீர்மானித்தோம். இவ்விரண்டு பொருட்களுக்கும் ஆகும் தொகையினை, எனது மருமகன் தீபு பொறுப்பெடுத்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் சேகரித்துக் கொடுத்தார். அப்படியே விதைகள் தேவைப்படுகிறன என்று கேட்டபொது, பனையேறி பாண்டியன் தனது நண்பர்களிடம் கேட்டு எங்களுக்கு உதவிசெய்தார். சுமார் 33 கிலோ விதைகளை அவர் அனுப்பியிருந்தார். விதைகளை கண்டிப்பாக நேரம் எடுத்து தங்கள் சொந்த ஊரிலுள்ள  நிலத்தில் விதைக்கவும், இயலாது போகும் பட்சத்தில், விதைகளை தேவைப்படுகிறவர்களுக்கு வழங்கவும் கேட்டுக்கொண்டோம். விதைகளை அனுப்பும் தபால் செலவினை உங்களது வாசகரான திருவனந்தபுரம் சுப்பிரமணி ஏற்றுக்கொண்டார். இப்படி உதவிகள் பல திசைகளிலுமிருந்து குவிந்தப்டி இருந்தன. சுமார் 300 நபர்களுக்கு தலா ரூ700/- பெறுமானமுள்ள பரிசுகளை வழங்கினோம்.

கடந்த 15 நாட்களுக்குள் எமது திருச்சபையின் பெண்கள் 13 பேர் இணைந்து, புதிய ஏற்பாட்டினை கைகளால் எழுதி அற்பணம் செய்தார்கள். அது எமது திருச்சபை பெண்களுக்கு ஒரு நெருங்கிய வாசிப்பை அளித்தது. நூற்றுக்கு மேற்பட்ட வசனங்களைச் சொன்ன சிறுவர்களுக்கும் திருமறையினை எழுதிய பெண்களுக்கும் எனது அம்மா திருமதி, கிறிஸ்டி சாமுவேல் அவர்களின் உதவியுடன் சில்லு கருப்பட்டியினை வழங்கினோம். அம்மா சமீபத்தில் தான் திருமறை முழுவதையும் தனது கரம்பட எழுதிமுடித்திருந்தார்கள்.
இப்படியான ஒரு மகிழ்வின் கொண்டாட்டத்தை மும்பை திருச்சபை இதுவரைப் பார்த்ததில்லை. நீங்கள் உங்கள் நூலின் வழியாக இதில்  கலத்திருக்கிறீர்கள் என்பது எனக்கு நிறைவளிப்பது. எனது திருச்சபையில், நீங்கள் பேசும் நாட்களுக்காக காத்திருக்கிறேன். எங்களுக்காக தனித்துவ பிரதியினை வடிவமைத்து தந்த விஷ்ணுபுரம் பதிப்பகத்தாருக்கும், நேரத்துடன் எங்களுக்கு அதனை அனுப்பிய ஊழியர்களுக்கும், நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.எங்களுக்கு, செய்தி சொல்ல அமெரிக்காவிலிருந்து வந்த அருட்பணி. அறிவர். நெகேமியா தாம்சன் என்பவர் கூட, தனது செய்தியின் ஊடாக,  புத்தகங்களின் மேன்மையினையும் வாசிப்பின் அவசியத்தையும்  எடுத்துக் கூறினார். இனிவரும் காலங்களில்  வாசிப்பு நிகழும் என எதிர்பார்க்கிறேன்.

இறுதியாக 40ஆம் ஆண்டினை முன்வைத்து தனித்துவமான ஒரு “திருச்சபை கீதம்” நான் எழுத திருநெல்வேலியைச் சார்ந்த ஹாரிஸ் பிரேம் அவர்கள் மெட்டமைத்து எங்கள் பாடகர்குழு சிறுவர்கள் பாடினார்கள்.

ஞான பாலென திடமுள்ளதாய்
தெளி தேனென சுவைமிக்கதாய்
கடல் அலையென ஆர்ப்பரிப்போம்
நெடும் பனையென உயர்ந்திடுவோம்

தூய பவுல் அடியவரின் சொல் நடந்து
வாழும் நிரூபங்களாய் நற்செய்தி பகிர்ந்து
மெத்தடிஸ்த் திருச்சபையின் நல் அங்கமாய்
மா திருச்சபையின் மெய் சங்கமாய்
இயேசு என்னும் அடித்தளமிட்டு
இப் பயணம் தொடர்வோம்

தூய பவுல் மெதடிஸ்த் தமிழ் திருச்சபை
ஆரே பால் குடியிருப்பு எங்கள் திருச்சபை
பசும் பாலும் தெளி தேனும் புரண்டோடும்’
கானான் செல்லும் பெரும் பயணம்
உம் வார்த்தை என்னும் அப்பம் பிட்டு
இப் பயணம் தொடர்வோம்

வந்த அனைவரும் பெரும் கொண்டாட்ட மனநிலையுடன் எங்களை வாழ்த்திச் சென்றார்கள். வெற்றியான ஒரு நாளாக இது அமைந்தது. உங்களின் “சிறு நூல்கள்” அவ்வகையில் ஒரு சிறந்த வாழ்த்துதல் என்றே கொள்ளுகிறேன்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
போதகர்,

பிகு. தூய பவுல் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை ஆரே பால் குடியிருப்பு.
குறிப்பு: நாங்கள் ஆங்கிலிக்கன் திருச்சபையிலிருந்து கிளைத்தெழுந்தவர்கள் தான் ஆனால் மெதடிஸ்த் திருச்சபை என்றே அழைக்கப்படுகிறோம்

போதகரின் வலைப்பூ

பனைக் கனவு திருவிழா – 2022

பனை மெய்யியல் 

பனைமோகன்- காட்சன்

பனை – கடிதங்கள்

பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை

பனைமரச்சாலையில் ஒரு போதகர்

காட்சன் – பனைமரப்பாதை

பனை இந்தியா! – ஒரு மகத்தான பயணம்

காட்சன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2023 10:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.