ஆலயக்கலை, கடிதம்

[image error]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஆலயக்கலை பயிற்சி முகாம் ஆலயத்தை வழிபாட்டிடமாக அணுகுவதில் இருந்த மனத்தடையை குறைத்தது. ஆலயம் பன்முக கலை பண்பாட்டு தொகை, அவை தொல்லியல் எச்சங்கள் அல்ல என அறிய உதவிய ஜெயக்குமார் அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றி. இந்த பயிற்சி முகாமின் அனுபவங்களை நான் இப்படி தொகுத்து கொள்கிறேன்.

ஆலயங்களின் முக்கியதுவம்

கோவில்கள் என்பவை வழிபாட்டு தலம். அவை ஒற்றை சிலையென மரத்தின் கீழ் அமைந்தோ அல்லது மிகப்பெரிய சிக்கலாக அமைந்த கற்றளியாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றை வழிபாட்டிடங்கள் என மட்டும் குறுக்கி அறிவது தவறு. அவை பன்முக பண்பாட்டு பரிமாணங்கள் கொண்டவை.

1. கலை மற்றும் கலை வரலாறு: கோயில்கள் என்பவை சிற்ப தொகுதிகள், கட்டுமானங்கள், ஓவியங்கள் மற்றும் வழிபாட்டுடன் இணைந்த இசை, நடன, நாடக மரபுகளை கொண்டவை. அவை வரலாற்றின் கலை பரிணாமத்தின் தொகுதிகளாகவும் பார்க்க இயலும்.

2. ஆன்மீக தத்துவ மரபுகள்: கோயில் என்பது தத்துவத்தின் பௌதிக வெளிபாடே. அவை தத்துவ மரபின் வளர்ச்சியையும் அவற்றின் வரலாற்று பரிணாமத்தையும் பின்புலமாக கொண்டவை. தஞ்சை கோயிலின் வாயில் சிற்பமும், விமானமும், கருவறை தெய்வமும் எதை சுட்டுகின்றன என இலக்கிய தத்துவ பின்புலத்துடன் விளக்கியது மிகவும் அருமை.

3. வரலாற்று ஆவணங்கள்: கல்வெட்டுகள், செப்பேடுகள், இறையிலி நிலங்கள் என கோயிலுடன் இணைந்த வரலாற்று ஆவணங்கள் என கொள்ளலாம். பண்டைய கோவில்கள் அரசதிகாரத்திலும், பண்பாட்டிலும் மையத்தில் இணைந்த இடம். அவற்றின் வழியாக நிர்வாகமும் எப்படி இணைக்கப்பட்டது என்பது சுவாரசியமானது

4. தொன்மங்கள்: கோயில்கள் தொன்ம வரலாறுகளின் தொகையும் கூட. அவை வரலாற்று இருப்பையும் மீறி அமைபவை. அவற்றின் இருப்பு தொன்ம காலத்தில் தொடங்கி வரலாற்று காலம் வரை பல அடுக்குகளின் நிலைப்பவை. ஆலயங்களின் இருப்பு அதை அறிவோறின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப மாறுபடலாம்.

5.விழாக்கள்: கோயிலுடன் இணைந்த விழாக்களும் வரலாற்றின் முக்கியத்துவம் கொண்டவை. அவை தன்னளவில் ஒரு வணிக செயல்பாடு கொண்டது. மற்றும் அவை வரலாற்றில் வளர்ந்து வந்தவை என்பதால் அவற்றை ஒருங்கிணைப்பதும் எளிது. மேலும் அவை கோயில் மரபுடன் இணைந்த பல கலைகளுக்கும் இடமளிப்பது.

6. வழிபாடு: கோவில்கள் வழிபாட்டு  தலங்களே. அவற்றுடன் இணைந்த சடங்குகளும், கலைகளும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவை.

இத்தகைய பன்முக பரிமாணம் கொண்டதால் அவை எல்லோருக்குமான பண்பாட்டு மரபுரிமையை அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவருக்கேயான வாழ்க்கை நோக்கிற்கு இடமளிப்பவை. அவற்றை ஆன்மீகமாகவோ, கலையாகவோ, தத்துவத்ததிற்காகவோ, வரலாற்றிகாகவோ அல்லது அவை எல்லாவற்றிற்காகவும் அணுகலாம். அங்கே கடவுளின் இருப்பும் இன்மையும் அவரவரின் நோக்கை  பொறுத்தது    .

உருவவழிபாடு: சிலைகள் என்பவை உருவழிபாட்டை சுட்டுபவையா? இந்த கேள்வியின் வழியான உரையாடல் மிக முக்கியத்துவமானது. ஒரு நூலின் வழியே அறிந்த கருத்துதான். உருவம் அருவத்தை சுட்டி நிற்கிறது. ஆனால் இவ்வுரையாடல் மிகபெரிய திறப்பை அளித்தது. உருவம் தியானத்தில் தோன்றியது, தத்துவ பின்புலம் கொண்டது. அவ்வனுபவம் சொற்களாக்கி அளிக்கப்படுகிறது. அச்சொற்களுக்கான உருவம் சிற்பியால் அளிக்கபடுகிறது. அச்சிற்பம் ஒரு குறியீடென அந்த தியானத்தில் அடைந்த அனுபவத்தை சுட்டி நிற்கிறது. அப்படியென்றால் இது கவிதைக்கான வரையறையே கொண்டுள்ளது. ஞானியின் அனுபவத்தை, நோக்குபவனும் அறிய அக்குறியீடு நிலைபெற்றுள்ளது. இது தன்னளவில் நுண்மையாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் இடமளிக்கிறது. அப்படியெனில் படைப்பூக்க நிலையிலே சிற்பம் அர்த்தபடலாம், அர்த்தங்கள் நுண்மையாக வேறுபடலாம், வளர்ந்து செல்லலாம். பக்தனுக்கும் தத்துவ அறிஞருக்கும் மட்டுமல்ல, படைப்பூக்க மனத்திற்கு கோயில் ஒரு படிம தொகையையே அளிக்கிறது.

சிற்பமும் கலைகளும், இலக்கியமும்: ஆலயகலை தனித்து இயங்குவதில்லை. ஆலயம் ஓவிய இசை நடன நாடக  கலையுடன் இணைந்து பரிணாம மாற்றம் அடைவது. நாடக, இசை நாடக கலை, சிற்ப கலையின் படிமவியலுடன்  (முத்திரைகள், ஆயுதங்கள், ஸ்தானம், ஆடை, நகைகள்) கொண்டும் கொடுத்தும் வளர்வதை ஜெயக்குமார் சிறப்புடன் விளக்கினார். அவரின் கலாஷேத்ரா அனுவபம்  அவ்விணைப்பை     சிறப்புடன் கூற உதவியது. கிருஷ்ணனை காட்ட குழலை பயன்படுத்தும் பரத மரபும், பீலியை காட்டும் ஒடிசி மரபும் எப்படி வேறுபடுகிறது என முத்திரைகளின் மூலம் காண்பித்தார்.

இலக்கியதுடனான ஆலய கலையின் உறவு அஜிதன் அவர்களின் வினாவினால் விரிவடைந்தது. தாரசுரத்தின் ஐராவதேஸ்வர கோவில் சிற்பதொகைகளை பற்றிய வகுப்பில், பெரியபுராணமும் தாராசுர கோயிலும் கிட்டதட்ட சமகாலத்தவையென்றால், இலக்கிய பிரதி  படைத்த காலத்திலேயே புகழ்பெற்றிருந்ததா என்றதற்கு, அதன் முன்னோடி இலக்கியங்களான திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி அக்காலத்தில் சிற்பிகளின் பொது அறிவு பரப்பில் இருந்திருக்கலாம் என்றார் ஜெயக்குமார். மேலும் தஞ்சை கோயிலின் நாட்டிய சாஸ்திர நடன கரணங்களை கொண்ட சிற்ப தொகைகள், சிற்பிகளின் பல்கலை அறிவிற்கு சான்றாக அமைபவை.  அப்படியெனில் ஒரு சிற்பிகளின் குழு கோயிலின் கட்டுமான பணியின் காலம் முழுவதும் (6 வருடம் தஞ்சை பெரிய கோயிலுக்கு) படைப்பூக்க மனநிலையுடன் தொடர்ந்து செயல்படுவது ஒரு பெருங்கனவே. அதுவும் ஆயிரக்கணக்கான சிற்பிகள் ஒரு குழுவாக, சிற்ப கலையும் தத்துவத்தையும் இலக்கியங்களையும் மற்ற கலைகளை பற்றி உரையாடியும் களித்தும் செயல்புரிவது போன்ற கற்பனை மனதிற்கு இனியதாகும். இந்தப் பின்புலத்தில் ’ஆலயங்கள் அடிமைகளால் அமைக்கபட்டதா’ என சிறு நகைப்புடன் கூறப்பட்டது. மேலும் கருவறை சுற்றிய கோஷ்டங்களில் அமைக்கும் சிற்பங்களில், உள்ளுர் பண்பாட்டு சிற்பங்களுக்கும் இடமளிக்கும் ஆகம விதிகள் சிற்பிகளுக்கு அளிக்கும் சுதந்திரத்தையும் பன்முகதன்மையும் கொண்டது. ஆகவே ஆலயங்கள் அனைத்திந்திய தன்மையும், உள்ளூர் பண்பாட்டு சிறப்புகளும் ஒருங்கே கொண்டது.

ஆலய கலை பயிற்சி முகாமின் மூலம், ஆலய கலையை அணுகுவதற்கான அடிப்படைகளை விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது. கட்டுமான மற்றும் சிற்ப கலை விதிகள், விழாக்கள், மற்ற கலைகளின் பங்களிப்பு ஆகியவற்றை அறிய முடிந்தது. இத்தகைய சிறப்பு மிக்க இப்பயிற்சி முகாமை ஒழுங்கு செய்ததற்காக ஜெயக்குமார், அந்தியூர் மணி மற்றும் தங்களுக்கு நன்றி. களப்பயிற்சி பயணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இணையுள்ளங்களுடன் பயணிப்பது மகிழ்வான செயல்தான்.

அன்புடன்

ஆனந்தன்

பூனா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2023 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.