முகாம்கள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

குருஜியின் யோகா வகுப்பு முதல்முறை நடந்தபொழுதே பங்குபெற முடியாமல் போய்விட்டது. மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி.

வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டால் தாமதமாகிவிடுமோ என்று வியாழனன்றே சென்றுவிட்டேன்.  நான் பாதி வழியில் திரும்பிவிடாமல் இருக்கவேண்டி ஶ்ரீநிவாசன் என்னை அழைத்துச்சென்று, அப்போதுதான் வந்துசேர்ந்த குருஜியிடமும் மணியிடமும் ஒப்படைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பிப்போனார்.

10ஆம் தேதி காலை 9 மணிக்கு புத்தரையும் சாரதாவையும் பூஜித்து வகுப்பை ஆரம்பித்தார் குருஜி.

பஞ்சகோஷம் பற்றியும் பஞ்சப்ராணன் பற்றியும் ஒரு சிறு அறிமுகத்தோடு வகுப்பு தொடங்கியது. யோகப்பயிற்சியின் அவசியத்தை எளிமையாக எடுத்துக்கூறினார். ஆஸனங்கள் செய்யும்போது மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது முறைப்படி அமையவேண்டும் என்பதை வலியுறுத்தினார். 

முதல் இரண்டு நாட்களில் மொத்தமாக 9 ஆசனங்கள், 4 மூச்சுப்பயிற்சிகள் மற்றும் 2 தியான பயிற்சிகளை கற்பித்தார். நிறைவு நாளன்று மொத்த பயிற்சிகளையும் ஒரு முறை செய்யவைத்த பின்னர் பஞ்ச மஹா யக்ஞம் என்பதை பற்றி விளக்கினார்.

எல்லா பயிற்சிகளுக்கும் அவரது மனைவி சாரதா செயல்முறைவிளக்கம் செய்தார். முக்கியமாக ஏகபாத ப்ரணாமாஸனா. அவர்கள் இருவரும் சேர்ந்து அதை செய்தபொழுது ‘சிவசக்தி நடனம் போல இருக்கு‘ என்று அஜி கூறினான். ‘அட, இவ்வளவுதானே‘ என்று நினைத்து செய்யும்பொழுது ஆடிப்போன எங்களை ‘பழகப்பழக சரியாயிடும்‘ என்று ஊக்கம் கொடுத்தார். அந்த நம்பிக்கையில் நாங்களும் ‘வாங்க பழகலாம்‘ என்று அப்பயிற்சிகளை தினமும் அழைத்துக்கொண்டிருக்கிறோம்.

யோகப்பயிற்சி தொடர்ந்து செய்வதனால் உடல், மனம், ஆத்மா எவ்வாறு பயன்பெறுகிறது என்று விளக்கினார். இன்றுள்ள பல நோய்கள் psychosomatic நோய்கள்தான் என்றும் யோகப்பயிற்சி அவற்றை எப்படி குறைக்கும் என்றும் விளக்கினார். 

இந்தியாவில் உள்ள 4 முக்கிய யோகா பள்ளிகளையும் குறிப்பிட்டார். இது போன்ற முகாம்களின் நோக்கம் யோக சாதகர்களை உருவாக்குவதே என்றார். 

இந்த பயிற்சிகளில் பாதி ஏற்கெனவே எனக்கு தனிப்பட்ட முறையில் குருஜி, குறிப்பிட்ட நிவாரணங்களுக்காக, கற்றுக்கொடுத்தவைதான். ஆனால் இந்த முகாமில் யோகமரபின் பின்னணி மற்றும் யோகாவின் ஒட்டுமொத்த பலன்கள் என்று ஒரு holistic approach கிடைக்கப்பெற்றது.

உங்களுக்கும் குருஜிக்கும் மீண்டும் நன்றிகள்.

சுதா

[image error]

அன்புள்ள ஜெ,

ஆலயக் கலை முகாம் இனிய நிகழ்வாக அமைந்தது. கலந்து கொண்ட அனைவருக்குமே ஆலயம் குறித்த அவரவர் பார்வையை இம்முகாம் மாற்றியிருக்கும் என்று தோன்றுகிறது. 

இந்த மூன்று நாட்கள் கற்பிப்பதற்கான சட்டகத்தை உருவாக்க ஜெயகுமார் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது. ஆலயக்கல்விக்கென முறைமை சார்ந்த சிறப்பான பாடத்திட்டத்தை  அவரால் உருவாக்க இயலும். அவர் கற்பித்த விதமும் அணுக்கமானதாக இருந்தது. எதிர்மறைக் கருத்துகள், வம்புகள், சுவாரசியத்துக்கென சில்லறை நகைச்சுவை என எதுவும் கலக்காமல் கற்றலின் இனிமையை உணரச் செய்வதாக இருந்தன அனைத்து வகுப்புகளுமே. வீணாக ஒரு சொல் கூட அந்த அரங்கில் ஒலிக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு.

முடிந்து விடைபெறும்போது நண்பர் ஒருவர் ஜெயகுமாரிடம் ‘எனக்கு மகாபலிபுரத்துக்கு உங்களோட ஒரு முறை போகணும். அது எப்படினா, காதலிய கூட்டிட்டு போற மாதிரி‘ என்று சொன்னார். ஆம், ஆலயத்தை இனி காதலிக்க மட்டுமே முடியும்.

இந்த வாய்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கும் அருமையாக நடத்திக்கொடுத்த ஜெயகுமாருக்கும் நன்றிகள் பல.

அன்புடன், 

 ஸ்ரீனிவாசன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2023 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.