வெண்முரசின் அருகே

venmurasu ஜெயமோகன்

வெண்முரசு மின்னூல்கள் வாங்க

வெண்முரசு நூல்கள் வாங்க

அன்புள்ள ஆசிரியருக்கு,

வாழ்வில் இருள் கூர் கொண்டிருந்த ஒரு தருணத்தில் வென்முரசை வந்து அடைந்தேன். இன்று இங்கு நின்று பார்க்கையில் எவ்வளவு அழகு நிரம்பியிருக்கிறது என் வாழ்வில்! வாசிப்பின் நிறைவை, செய்வதன் ஊக்கத்தை, கற்றுக்கொள்ளும் மகிழ்வை மீண்டும் அடைந்து இருக்கிறேன். என்னதான் நினைத்து கொண்டாலும், எவ்வளவுதான் உறுதி கொண்டாலும் எண்ணம் போல வாசிக்க முடிவதில்லை என்று இன்றுதான் யோசித்து கொண்டிருந்தேன். அப்போதுதான் சரியாய் உங்கள் வாசிப்பு சவால் கட்டுரையை வாசித்தேன். என்றும் என் கேள்விக்கான விடையை உங்கள் தளத்தில் தான் அடைகிறேன்.

எத்தனையோ முறை உங்களுக்கு கடிதம் எழுத தொடங்கி விட்டுவிடுவேன், மீண்டும் மீண்டும் வேறொரு உடை பூண்டு வரும் நன்றி நீர்த்து போய்விடுகிறது என்கிற அச்சம். ஆனால், இன்று அதற்கும் சொல்லி வைத்தது போல, இரு வருடங்களுக்கு முன்பு உங்களுக்கு தாளில் கைப்பட எழுதிய பழைய கடிதம் கிடைத்தது, தொலைத்து விட்டேன் என்று நினைத்தது. வழியில் நிறுத்தி, கை தொட்டு, இதழ் விரித்து செய் என்கிறது தெய்வம், அதை மறுப்பது தவறு இல்லையா? அதுதான் உடனே எழுதி விட்டேன். உங்களுக்கு நூறோடு நூற்றியொன்றாய் போனாலும், என் நன்றி அப்படியே நிற்கட்டும், இன்னொரு புன்னகையாக. 

கடந்தவைக்கு நன்றிகளும், 

புத்தாண்டுக்கு வாழ்த்துக்களும்,

அன்புடன்,

மதுமிதா.

அன்புள்ள ஆசிரியருக்கு,

எனது மகனும் நானும் இந்த புத்தாண்டிலிருந்து தினமும் காலை எழுந்து ஒரு மணி நேரம் வாசிப்பது என்று முடிவு செய்தோம். என் வாழ்வில் இத்தனை இனித்த காலை பொழுதுகள் உண்டா என்று வியக்கிறேன். இத்தனைக்கும் இப்போது இந்த மாதம் கடுங்குளிர். முன்பெல்லாம் 7 மணிக்கு கூட விழிப்பது அத்தனை கொடுமையை இருக்கும். ஆனால் இப்போது இவ்வளவு மகிழ்ச்சியுடன் எழுந்து, அதுவும் கிருஷ்ணா எவ்வளவு உற்சாகத்தோடு எழுகிறான்! போலாமா மா, படிக்கலாமா, என்று கை பற்றி இழுத்து செல்கிறான். இத்தனைக்கும் இதற்கு முன்பும் நாங்கள் அருகமர்ந்து ஒன்றாய் வாசித்தது உண்டு. ஆனால், காலை முதல் வேலையாய் ஓடி சென்று, வாசித்து, நாளின் தொடக்கமாக கொண்டதில்லை. காலங்கார்த்தால முதல்ல ஸ்கூலுக்கு படிக்கணும், அதை விட்டுட்டு என்ன புக்கு வேண்டிகிடக்கு, என்ன பழக்கம் என சின்ன வயசில் வாங்கிய திட்டு கொஞ்சம் நிறையவே பதிந்து நூல் வாசிப்பது என்பது பொழுதுபோக்கு, உன்னத கடமை இல்லை என்ற மடத்தனமான மனத்தடையை உடைக்க என் 9 வயது மகன் போதி மரமாக வேண்டியுள்ளது எனக்கு. கடகடவென எழுந்து, மிக ஆர்வமாய் படிக்கிறோம், இருவருமே. நிறைய வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க இதோ 4 நூல்கள் முடித்துவிட்டேன் இந்த 22 நாட்களுக்குள். என்னளவில், இதை அப்படியே தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே இப்போதைய முதல் குறிக்கோள். இந்த நான்கு நூல்களில் மாமலர் மறுவாசிப்பு (முதல் முறை அப்படியே தளத்தில் தொடர்ந்து வாசித்தது, ஆக இதுவே முதல் தொடர் வாசிப்பு) கூடியது எனக்கு ஆழ்ந்த மனநிறைவை கொடுத்தது. 2021 வருடம் ஊருக்கு வந்த போது ஆசை ஆசையாய் செம்பதிப்பு வாங்கிக்கொண்டு வந்தது (இந்த தலகானி எல்லாம் எதுக்கு தூக்கற என்ற திட்டுகளோடு), இதோ இப்போதுதான் வாசிக்க முடிந்தது! 

அன்புடன்,

மதுமிதா.

அன்புள்ள மதுமிதா,

இருவருக்கு இடையே நல்லுறவு உருவாக மிகச்சிறந்த வழி இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரு செயலைச் செய்வதே. எவராயினும், எதுவாயினும். அறிவுச்செயல்பாடு அதில் முதன்மையானது. sublime  அம்சம் கொண்ட செயல்பாடு இன்னும் மேலானது. உங்கள் மகனுக்கும் உங்களுக்கும் இடையேயான உறவின் இனிமையை நான் புரிந்துகொள்கிறேன்.

வாழ்க்கையின் சிக்கல்கள் பெரும்பாலும் அகன்றால் சிறிதாகிவிடுபவை. பெரும்பாலானவை காலத்தால் அகன்று நாம் கடந்து செல்பவை. செவ்விலக்கிய வாசிப்பு கருத்துரீதியாக, உணர்வுரீதியாக அகல்வை அளித்து சமநிலையை கொடுக்கிறது. பண்டைய மரபில் புராணங்களை வாசிப்பதன் பயன்களில் ஒன்றாகச் சொல்லப்படுவது ‘விரக்தம்’. பற்றின்மை

ஜெ 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2023 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.