சென்னை புத்தகக் கண்காட்சி

இந்த சென்னை புத்தகக் கண்காட்சி 2023 பலவகையிலும் எனக்கு முக்கியமானது. என் நூல்களுக்கான தனி புத்தகக்கடை இவ்வாண்டு சென்னை  புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாக இருந்தது. முன்பு என் நூல்களுக்காக புத்தகக் கடைகளில் தேடி கண்டடைய முடியாமல் தடுமாறியதாக என் வாசகர்கள் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்குப் பின்னரும்  எழுதுவதுண்டு. அவர்களுக்கு நான் பொதுவான ஒரு பதிலை எதிர்வினையாக அனுப்புவேன். புத்தகக் கண்காட்சியில் நுழைந்தாலே ‘உங்க புக்ஸ் எங்க சார் கிடைக்கும்?’ என்ற கேள்வி வந்து சூழ்ந்துகொள்ளும்.

என் நூல்களை வெளியிடும் பதிப்பாளர்களில் முதன்மையான பதிப்பகம் தமிழினி, அங்கே என்னுடைய ஒரு படமோ என் நூல்கள் கிடைக்கும் என்னும் அறிவிப்போ இருப்பதில்லை. தமிழினி அவர்களுக்கு மட்டுமான எழுத்தாளர்களை முன்னிறுத்த விரும்பியது. ஒரு தனித்தன்மை கொண்ட ஓர் அறிவியக்கமாகச் செயல்பட எண்ணி அவர்கள் அவ்வாறு செய்வதில் பிழையும் இல்லை. கிழக்கு உட்பட புத்தகக் கடைகள் மிகப்பெரியவை, பல ஆசிரியர்களை வெளியிடுபவை. அங்கே என் நூல்களுக்கான ஒரு தனி பகுதியோ விளம்பரமோ வைப்பது நாகரீகம் அல்ல. சென்ற ஆண்டுகளில் என்னுடைய நூல்களுக்கான ஓர் அறிவிப்பு மிக அரிதாகவே புத்தகச் சந்தையில் கண்களுக்குப் படும். பெரும்பாலும் வம்சி பதிப்பகத்தில் அறம் தொகுதிக்கு ஓர் அறிவிப்பு தென்படும்.

சென்ற இருபதாண்டுகளாகவே நான் மிகவும் விற்கப்படும் நூல்களின் ஆசிரியனாகவே இருக்கிறேன். இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எல்லா புத்தகச் சந்தையிலும் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக அந்த விற்பனைத் தொகை பெரியது. என்னை புத்தகக் கண்காட்சியில் பார்க்கவே முடிவதில்லை என்னும் மனக்குறை என் நண்பர்களுக்கு இருந்தாலும் நான் அதை பொருட்படுத்தியதில்லை. வேண்டியவர்கள் தேடி வரட்டும் என்றே நினைத்தேன். என் நூல்களை முன்வைக்க சென்ற ஆண்டுகளில் நான் எதையும் செய்வதில்லை. நான் ஒருங்கிணைக்கும் எல்லா நிகழ்வுகளும் நவீனத் தமிழிலக்கியத்தை ஒட்டுமொத்தமாக முன்வைக்கவே.

என் நண்பர் செல்வேந்திரனும் அவர் துணைவி திருக்குறளரசியும் எனக்காக மட்டும் ஒரு கடையை கோவை புத்தகக் கண்காட்சியில் 2017ல் நடத்தினர். பிறபதிப்பகங்களில் இருந்து பெற்ற நூல்களை அங்கே விற்றனர். பத்துசதவீதம் மட்டுமே அதில் லாபம்  வரும், செலவுகளை கழித்தால் நஷ்டம் வரக்கூடும் என எண்ணியே அதற்கு முயன்றார்கள்.ஆனால் அந்த கடை லாபமாகவே இருந்தது.

அந்த கடைதான் தனி பதிப்பகம் தேவை என்னும் எண்ணத்தை உருவாக்கியது. என் வாசகர்கள் எல்லா நூல்களையும் ஒரே இடத்தில் வாங்க விரும்பினர். ஒரு நூலை வாங்கியவர்கள் அடுத்தடுத்த நூல்களை எங்களிடமே கேட்டனர். ஒரே ஒரு நூலை தேடிவந்த வாசகர்கள் கூட ஏதேனும் ஒரு புத்தகத்தை வாங்க வந்து மேலும் மேலும் நூல்களைக் கண்டு அவற்றை வாங்கினர். ஒரு நூலுக்கு மட்டும் பில் போடும் வாடிக்கையாளர் மிகமிகச் சிலராகவே இருந்தனர்.

ஆயினும் நான் ஒரு பதிப்பகம் தொடங்கத் தயங்கினேன், வணிகம் என் இயல்பல்ல. எனக்கு பொழுதுமில்லை. என் நண்பர்கள் அதற்கு முன்வந்தபோது அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டேன். விஷ்ணுபுரம் பதிப்பகம் அஜிதன், சைதன்யா இருவரும் நண்பர்களுடன் பங்குதாரர்களாக அமைந்து நடத்து நிறுவனம். தொடங்கிய நாள் முதல் மிக வெற்றிகரமான செயல்பாடாகவே இருந்து வருகிறது. பதிப்பகத்தையே இலக்கிய கூட்டங்கள் , உரையாடல்களுக்கான களமாகவும் மாற்றிக்கொண்டு ஓர் இயக்கமாக முன்செல்கிறது அது.

இவ்வாண்டு விஷ்ணுபுரம் நாவலின் 25 ஆவது பதிப்பு வெளிவந்துள்ளது. பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. அறம் சிறுகதைகளின் கெட்டி அட்டைச் செம்பதிப்பும் வெளிவந்துள்ளது. என் புனைவுக்களியாட்டுச் சிறுகதைகள் 13 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இன்னும் பல நூல்கள் வெளிவரவுள்ளன. விரைவில் எல்லா நூல்களுமே கிடைக்கும்.

நவீன் மற்றும் விக்னேஷ்

இந்த புத்தகக் கண்காட்சியிலும் விற்பனையில் உச்சம் அறம் தொகுதிதான். பதிப்பாளரின் கணிப்புகள் பொய்யாகி, முழுப் புத்தகக் கண்காட்சிக்காகவும் கொண்டுவந்த எல்லா பிரதிகளும் முதல் நாளே விற்றுப்போயின. அதன்பின் ஒவ்வொரு நாளும் அச்சகத்தில் இருந்து கொண்டு வந்து விற்றுக்கொண்டிருந்தார்கள். கெட்டி அட்டை என்பதனால் ஒட்டுமொத்தமாக அச்சிட்டு குவிக்கவும் முடியாது, கையால் அட்டை தைக்கவேண்டும். ஆகவே பலநாட்கள் காலையில் அறம் கிடைக்கவில்லை. பெரும்பாலான நாட்களில் மாலை ஏழு மணிக்குமேல்தான் அறம் கிடைத்தது.

அடுத்தபடியாக அஜிதனின் மைத்ரி. அதன் இரண்டாம் பதிப்பு இந்த புத்தகக் கண்காட்சியில் விற்று தீர்ந்தது. இணையாகவே குமரித்துறைவி. விஷ்ணுபுரம் விலை அதிகமான நூலாக இருந்தாலும் நூற்றுக்கும் மேல் பிரதிகள் விற்றது.பதிப்பாளரின் பார்வையில் மிக மனநிறைவான ஒரு புத்தகக் கண்காட்சி இது.

இந்த கண்காட்சியில் நான் கண்டடைந்தவை சில. நான் என் தளத்தில் பரிந்துரைக்கும் எல்லா நூல்களையும் விஷ்ணுபுரம் கடையில் எதிர்பார்த்தனர். ஆகவே கடைசிநாட்களில் அவற்றையும் வாங்கி வைத்து விற்றோம். எதிர்கால புத்தகக் கண்காட்சியில் இதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என தோன்றுகிறது. ஒரு பதிப்பகம் ஓர் அறிவியக்கமாகவே நிகழவேண்டும், அதற்கு இன்னும் பலதரப்பட்ட தலைப்புகளில் பலவகையான நூல்கள் தேவை.

இந்த புத்தகக் கண்காட்சியில் நான் நான்குநாட்கள் மாலையில் வாசகர்களைச் சந்தித்தேன். உணர்ச்சிமிக்க சந்திப்புகள் பெரும்பாலானவை. பலரிடம் என் எழுத்துக்கள் என்னவகையான செல்வாக்கைச் செலுத்தியுள்ளன என அறியமுடிந்தது ஓர் அரிய அனுபவம். புத்தகக் கண்காட்சி ஆசிரியனுக்கு அளிக்கும் இன்பமே இதுதான். நேரடியான வாசக உரையாடல். முகங்கள் திரண்டு பல்லாயிரம் முகங்கள் கொண்ட ஒரு விராடரூபமாக கண்முன் நின்றிருக்கும் தரிசனம் அது.

கல்லாப்பெட்டிச் சிங்காரங்கள்

புத்தகக் கண்காட்சியில் உதவியாளர்களாக வந்து பணிபுரிந்த நவீன், விக்னேஷ் இருவரும் மிகுந்த கவனத்துடன் அரங்கை கையாண்டனர். நல்ல வாசகர்களும்கூட. முழுப்பொறுப்பையும் ஏற்று பதிப்பகத்தை நடத்தியவர் மீனாம்பிகை, உடன் ‘குவிஸ்’ செந்தில். எல்லா நாட்களிலும் அரங்கு நண்பர்கள் கூடும் ஒரு மையமாக, உரையாடலும் சிரிப்பும் கொண்டாட்டமுமாகச் சென்றது .நான் சென்றநாட்களில் அன்பு, தங்கவேல் டாக்டர், சிறில் அலெக்ஸ், ராஜகோபாலன், செந்தில்,  அனங்கன், காளிபிரசாத், சண்முகம் என நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். உரையாடலும் சிரிப்புமாகவே அரங்கு அமைந்திருந்தது. 

சென்னை நண்பர்களைப் பொறுத்தவரை புத்தகக் கண்காட்சி என்பது பதினைந்து நாட்கள் நீடிக்கும் ஒரு பெருங்கொண்டாட்டம். சென்ற கால்நூற்றாண்டாக அவ்வாறே அது நீடிக்கிறது.

பல வியப்புகள். பன்னிரண்டு வயதுக்குக் குறைவான வாசகர்களில் பலர் முதற்கனல், மழைப்பாடல் வாசித்திருப்பது திகைக்க வைப்பதாக இருந்தது. என் புதிய வாசகர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் பவா செல்லத்துரை சொன்ன கதைகளின் வழியாக என்னை அறிமுகம் செய்துகொண்டு மேலே வாசிக்க ஆரம்பித்தவர்கள். பவா செல்லத்துரை உருவாக்கும் இலக்கிய அறிமுகம் எத்தனை வலுவானது என்று கண்டேன். பாரதி பாஸ்கர், பாத்திமா பாபு, கிராமத்தான் ஆகியோரின் யூடியூப் காணொளிகளும் என்னை பலருக்கு அறிமுகம் செய்து வாசகர்களாக ஆக்கியிருந்தன என்பதை கண்டேன். இத்தனை செல்வாக்கு இவற்றுக்கு உண்டு என எண்ணியிருக்கவே இல்லை.

மைத்ரி, இந்த புத்தகக் கடையில் விற்று முடிந்த பிரதி.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் பிற பதிப்பகங்கள் பலர் கூட்டம், விற்பனை குறைவு என்று சொல்லியிருந்தனர்.கடைகளின் எண்ணிக்கை கூடும்போது கூட்டம் பகிரப்படுவது ஒரு காரணமாக இருக்கலாம். கடலூர், திருப்பத்தூர் போன்ற சிறுநகரங்களில்கூட தொடர்ச்சியாக புத்தகக் கண்காட்சி நடைபெறுவது இன்னொரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக கூட்டமும் நூல்விற்பனையும் மிகுதி என்றே நினைக்கிறேன். 

அதற்கு இன்றைய அரசின் இரண்டு ஆண்டுக்கால நடவடிக்கைகள் மிக முக்கியமான காரணம். தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் இலக்கிய விழாக்கள் இலக்கியம்- வாசிப்பு சார்ந்த ஓர் ஆர்வத்தை உருவாக்கியிருப்பது கண்கூடாகவே தெரிகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியைப் பொறுத்தவரை சென்னை அண்ணாநூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இலக்கிய விழா ஒரு புதிய வாசகர் அலையை உருவாக்கியிருப்பதைக் கண்டேன். மிகவும் பாராட்டுக்குரிய ஒரு செயல்பாடு அது. அதேபோல இப்போது நடைபெற்ற சர்வதேசப் புத்தகக் கண்காட்சியும் மிகவும் வரவேற்கத்தக்கது. உலக இலக்கிய வரைபடத்தில் தமிழ் என ஒரு மொழி உண்டு என்பதையே இப்படித்தான் பதிவுசெய்யவேண்டியிருக்கிறது. இது ஒரு தொடக்கமே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2023 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.