S. Ramakrishnan's Blog, page 95

February 18, 2022

சென்னை புத்தகத் திருவிழா -1

கடந்த இரண்டு நாட்களாக சென்னை புத்தகத் திருவிழாவிற்குச் சென்று வந்தேன். நேற்று நல்ல கூட்டம். நிறைய இளம் வாசகர்களைக் காண முடிந்தது.

புகைப்படம், நன்றி : சீனிவாசன் நடராசன்

தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 317 318ல் வாசகர்களைச் சந்தித்துப் புத்தகங்களில் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன்.

மண்டியிடுங்கள் தந்தையே நாவல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு பதிப்பு விற்று முடிந்து அடுத்த பதிப்ப வெளியாகியுள்ளது.

தினசரி மாலை நான்கு மணிக்குப் புத்தக் கண்காட்சிக்கு வருகை தருவேன். எட்டு மணி வரை இருப்பேன்.

வழியில் சந்தித்து புதிய புத்தகம் ஒன்றைக் கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறவர்கள் அடுத்த ஐந்து நிமிஷத்தில் நான் அந்த நூலை வெளியிட்டேன் என்று முகநூலில் பகிர்ந்து விடுகிறார்கள். இப்படி நான் அறியாமலே தினமும் நாலைந்து நூல்களை வெளியிட்டு வருகிறேன்.

கண்காட்சி வளாகத்தினுள் எந்தக் கடை எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடிப்பது பெரிய சிரமமாக இருக்கிறது.

இதற்காக ஒரு மொபைல் ஆப் உருவாக்கியிருந்தால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். தேவையான புத்தகங்களைதேடிச் சென்று வாங்கலாம்.

உள்ளே நெட்வொர்க் சரியாக இல்லை என்பதால் வங்கி அட்டைகளைச் செலுத்தி வாங்கச் சிரமப்படுகிறார்கள்

மிக மோசமான கழிவறை. உள்ளே கால் வைக்க முடியவில்லை.

சென்ற முறை அரங்கிற்குள்ளாகவே காபி, டீ விற்பனை செய்யும் தள்ளுவண்டி வருவதுண்டு. இந்த முறை அதை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. தேநீர் அருந்த அரங்கை விட்டு வெளியே போக வேண்டும். மிக மோசமான காபி. டீ. இதற்கு தினமும் ஒரு விலை.

சாகித்ய அகாதமியில் நீண்டகாலத்தின் பின்பு ஜீவன் லீலா நூலை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த நூலைத் தேடிக் கொண்டிருந்த வாசகர்கள் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

இது போலவே புகழ்பெற்ற உருது எழுத்தாளரான ராஜீந்தர் சிங் பேடியின் சிறுகதைகளை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. மிகச் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு

பவேந்திரநாத் சைக்கியா எழுதிய அன்புள்ள அப்பா என்ற புத்தகம் நேஷனல் புக் டிரஸ்டில் கிடைக்கிறது. மிக நல்ல நாவல்

இந்திரா கோஸ்வாமி எழுதிய தென் காமரூபத்தின் கதை மிகச்சிறந்த இந்திய நாவல். சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது

பழைய புத்தகக் கடைகளில் தேடி வாங்கிய அபூர்வ நூல்களை பற்றி விட்டல்ராவ் எழுதிய வாழ்வின் சில உன்னதங்கள் சிறந்த புத்தகம் நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது

நேற்று புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 18, 2022 23:29

சொல்லப்படாத வாழ்க்கை.

தி.லட்சுமணன்.

நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையைப் பற்றி நாவல்கள் எழுதப்படுவது மிகவும் குறைவு. இத்தகு சுழலில் எஸ்.ராமகிருஷ்ணன் “நிமித்தம்” என்ற சிறப்பான நாவலைப் படைத்துள்ளார்.

அந்த நாவலில் வரும் தேவராஜ் காதுகேளாத மாற்றுத்திறனாளி, அவன் தன் வாழ்க்கையில் காது கேளாத காரணத்தால் எவ்வளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டி வருகிறது என்பதைச் சிறப்பாக விளக்குகிறார்.

நாவலின் முதல் அத்தியாயத்திற்கு “அவனது இரவு” என்ற தலைப்பிட்டு ஆசிரியர் கதையைத் துவக்குகிறார். அந்த ஒர் இரவுதான் அவனுடைய (தேவராஜ்) வாழ்க்கையின் கடந்த கால நிகழ்வுகளை எண்ணிப்பார்ப்பதாகவுள்ளது. மொத்த நாவலும் அவனது பிளாஷ்பேக் தான். திரைப்படம் காணுவது போல அவனது வாழ்க்கையை நாம் காணத் துவங்குகிறோம்.

இப்போது அவனுக்கு நாற்பத்தியேழு வயது. இந்த வயதில்தான் அவனுக்குத் திருமணம் நடக்கப்போகிறது. இவனைக் கணவனாக ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ள பெண்ணுக்கு வயது 34

ஏன் தேவாராஜுக்கு 47 வயது ஆகும் வரை திருமணம் ஆகவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலே நாவலின் யைம்.

அவனுக்குப் பெண் கிடைக்காமல் போனதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள், ஒன்று அவனுக்குக் காது கேட்காது, இரண்டு அவனுக்கு நிரந்தர வேலையோ, வருமானமோ இல்லை என்பதுதான்.

பொதுவாகவே மாற்றுத்தினாளிகளுக்கு அவ்வளவு லேசில் திருமணம் நடைபெறுவதில்லை அப்படியே நடந்தாலும், நடக்கும் அந்தப் பெரும்பான்மை திருமணங்களில் இரண்டுபேருமே ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளிகளாகவே இருப்பார்கள். இதில் அப்படியான திருமணம் நடக்கவில்லை. பெண் மாற்றுதிறனாளியில்லை. ஆனால் குடும்பக் கஷ்டம் காரணமாகத் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கிறார்.

விடிந்தால் திருமணம். ஆனால் ஏதோஒரு காரணத்தால் திருமணம் நின்றுவிடுமோ என்ற பயம் அவன் மனத்திற்குள் இருக்கிறது.

நாவலில் வரும் கதைநாயகன் தேவராஜன் எதையும் எளிதாகப் பழகிக்கொள்ள முடியாதவனாக இருக்கிறான். காது கேளாதது ஒரு குறை என்றால் அதைவிடப் பெரிய குறை அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையிருப்பது. குரங்கு தன் புண்களைச் சதா நோண்டிக் கொண்டிருப்பது போல் அவனது மனசு சதா தாழ்வுணர்ச்சியைக் கிளறிக் கொண்டே இருக்கிறது.

தான் எதற்கும் லாயக் கற்றவன் என்று பல நேரங்களில் நினைக்கிறான். அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு நாவலில் விவரிக்கபடுகிறது

வீட்டில் பதுங்கிக்கொண்டிருந்த எலி திடீரென ஒரு நாள் யார் கண்ணிலாவது பட்டுவிடும். அதை அடிக்க மக்கள் விரட்டுவார்கள். எங்கே ஓடி ஒளிவது என்று தெரியாமல் வீதிக்கு ஓடிவிட்டால் என்ன கதி? அங்கேயும் மக்கள் தடிகளோடு, கல்லுகளோடு அடிக்க ஓடுவார்கள். திடீரென எலிக்கு உலகம் சுருங்கிவிடும். அவ்வளவுதான் அதன் வாழ்க்கை. திடீரென ஒரு குண்டாந்தடி அதன் தலையில் விழ, ரத்தம் கசிய செத்துப்போகும். இப்படித்தான் இந்த உலகம், இது ஒரு வேட்டைக்களம். ஓடினால் துரத்திக்கொண்டே இருக்கும், அதன் கண்ணில் ஒளிந்து வாழ்வது சுலபமல்ல. தன்கதியும் இபப்படி ஆகிவிடுமோ எனத் தேவராஜ் அஞ்சுகிறான்

.தேவராஜிற்கு உதவி செய்வதற்காக அவனது நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். ராமசுப்பு பல்வேறு விதங்களில் உதவி செய்கிறான். திருமணமும் அவனது ஏற்பாட்டில் தான் நடக்கிறது. ராமசுப்புவிடம் காணப்படும் நம்பிக்கை தேவராஜிடம் காணப்படுவதில்லை.

வயது வளர வளர தொடச்சியாக அவமானங்களும் கசப்பான நிகழ்வுகளும் அவனை வீட்டில் தங்கி வாழமுடியாதபடி துரத்துகின்றன

.தேவாராஜின் வாழ்க்கையில் அவனுடைய இளமைக்கால நண்பன் ராமசுப்பு மட்டுமல்ல, சுதர்சனம் என்கிற ஓவிய ஆசிரியரும் அவர் மனைவி – ஆசிரியை அங்கயற்கண்ணியும் தேவராஜனுக்குக் கிடைத்த அற்புதமான மனிதர்கள்.

அவனைச் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஆசிரியர் சுதர்சனம் ஓட்டிச் சென்றபோது ஒரு நாள் கூடத் தன் தகப்பனார் இப்படி என்னை அழைத்துச் செல்லவில்லையே என ஏங்குகிறான்..

டீச்சரைப் போல் எனக்கு ஒரு அம்மா கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவனுக்குள் ஆழமாக உள்ளது.

தேவராஜ் கனவுகளில் மட்டுமே சந்தோசமாக இருக்கிறான். அவனது கனவுகளில் சில தொடர்ச்சியாக வருகின்றன. கனவில் அவனுக்குக் காது கேட்கிறது. அழகான பெண்களுடன் சுற்றியலைய முடிகிறது. ஒரு மனிதன் வளரும்போது கூடவே அவனது கனவுகளும் வளர்கின்றன. கனவுகளை நாம் வளர்த்தெடுக்க முடியாது என்று சொல்லுவது பொய். சிலரால் அது முடியக்கூடும். தேவராஜ் அப்படிப்பட்ட ஒருவன். .

கனவுகள் மனதின் நிறைவேறாத ஆசைகள் என்பதெல்லாம் வெறுங் கதை. கனவுகள் இன்னொரு வாழ்க்கை. உண்மையிலே ஒருவன் கனவின் வழியே மட்டுமே முன்னறியாத விசித்திர அனுபவங்களைப் பெறுகிறான். பிரச்சனை அவன் விழித்துக்கொள்ளுவதே. விழிப்புற்றவுடன் மனம் இன்னொரு வாழ்க்கையை நம்ப மறுக்கிறது. அதைப் பொய் என்று ஒதுக்கி வைக்கிறது. கனவு என்று சொல்லி சுருங்கிவிடுகிறது. வாழ்க்கையில் நாம் கண்ட முதல் கனவு எதுவென நமக்குத் தெரியாது.

சமூகத்தில் மற்றவர்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தரப்பட வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கையுட்ன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் புறக்கணிக்கபடும் போது தேவராஜ் போன்ற வாழ்க்கையைத் தான் வாழுவார்கள் என்பதை இந்த நாவல் மூலம் சிறப்பாக உணர்த்தியிருக்கிறார். அதற்காக எஸ் ராமகிருஷ்ணனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 18, 2022 00:10

February 16, 2022

கிடைக்காத புத்தகங்கள்

புத்தகக் கண்காட்சிக்கென புதிய புத்தகங்கள் நிறைய வெளியாகியுள்ளன.

நான் எப்போதும் கிடைக்காத அரிய நூல்களைத் தான் முதலில் தேடி வாங்குவேன்.

எனது சேமிப்பிலிருந்து காணாமல் போனவை. இரவல் கொடுத்துத் திரும்பி வராதவை எனப் பல அரிய நூல்களை மறுபடி வாசிக்கத் தேடிவருகிறேன்.

சிறந்த இந்த நூல்களை புத்தகக் கண்காட்சி அரங்கில் தேடிப் பாருங்கள். கிடைத்தால் அவசியம் வாசியுங்கள்.

மீட்சி வெளியீடு
மிகச் சிறந்த பயண நூல்சிறந்த கவிதைத் தொகுப்புசிறந்த புனைகதைசிறந்த இந்திய நாவல்

3 likes ·   •  2 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2022 23:47

ஆங்கில மொழியாக்கம்

டான்டூனின் கேமிரா என்ற எனது சிறார் நூலின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகவுள்ளது

தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

விலை ரூ 150

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2022 22:34

கதாவிலாசம்

தமிழின் சிறந்த நூல்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்வதற்காகத் தமிழக அரசு புதிய திட்டத்தினை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் சார்பில் நடைபெறும் இத்திட்டத்தில் சிறந்த தமிழ்ப் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.

தமிழக அரசு இத்திட்டத்துக்குப் பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. பழைய பாடநூல்கள் மறுபதிப்பு, நாட்டுடைமை ஆக்கப்பட்ட அச்சில் இல்லாத நூல்களின் பதிப்பு, ஆங்கிலப் பதிப்பகங்களுடன் இணைந்து தமிழ் இலக்கிய ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது போன்ற பணிகள் இத்திட்டத்தின் மூலம் நடைபெற்று வருகின்றன

இந்த ஆண்டு ஆறு நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டுள்ளார்.

அதில் எனது கதாவிலாசம் கட்டுரைத் தொகுப்பு புகழ்பெற்ற Taylor & Francis நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரும்பணிக்குக் காரணமாக அமைந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, உதயச்சந்திரன் ஐஏஎஸ், பாடநூல் கழகத்தலைவர் லியோனி, பாடநூல் கழக இயக்குநர் டாக்டர் சங்கர சரவணன், மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மினி கிருஷ்ணன். மொழிபெயர்ப்பாளர்கள் மாலினி சேஷாத்ரி, P.C.ராமகிருஷ்ணன், வெளியீட்டுப் பிரிவு ஆலோசகர் அப்பணசாமி உள்ளிட்ட அனைவருக்கும் நிறைந்த அன்பும் நன்றியும்.

இந்த நூல் புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகப் பாடநூல் கழக அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கிறது

****

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2022 18:52

மூன்று மௌனங்கள்

இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள CODA என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். Sian Heder என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ளார். CODA என்றால் காது கேளாத பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தை என்று பொருளாம். (child of deaf adults)

இப்படத்தின் கதாநாயகி ரூபி அப்படியான இளம்பெண். அவளைச் சுற்றியே கதை நிகழுகிறது. ரூபியின் அப்பா, அம்மா, அண்ணன் என மூவரும் காது கேளாதவர்கள். ரூபியின் அப்பா ஒரு மீனவர். தலைமுறையாக அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் ரூபியும் மீன்பிடிப்பிற்குச் செல்கிறாள். அதிலிருந்து தான் படம் துவங்குகிறது

ரூபியின் அப்பா அம்மா இருவருக்கும் காது கேட்காது என்பதால் சைகை மொழியில் பேசிக் கொள்கிறார்கள். மிகச் சந்தோஷமான தம்பதிகள்.

ரூபி படத்தின் ஒரு காட்சியில் “அவள் பிறந்த போது அவளுக்குக் காது கேட்காது என்று அம்மா நினைத்தாளா“ எனக் கேட்கிறாள்.

அதற்கு சைகைமொழியில் பதில் சொல்லும் “அம்மா, நீ பிறந்த போது உனக்குச் செவித்திறன் இருக்கிறதா என்று மருத்துவர்கள் சோதனை செய்தார்கள். அந்த நிமிஷம் உனக்குக் காது கேட்கக் கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால் உனக்கு நன்றாகக் காது கேட்கிறது என்று மருத்துவர் சொன்னது ஏமாற்றமளித்து“ என்கிறாள்.

“ஏன் எனக்குக் காது கேட்கக் கூடாது என்று ஆசைப்பட்டாய்“ என்று கோபமாக அம்மாவிடம் ரூபி கேட்கிறாள். அதற்கு அவளது அம்மா, “காது கேட்கிற உன்னால் காது கேட்காத எங்களைப் புரிந்து கொள்ள முடியாது. என் அம்மாவிடம் அதை நான் உணர்ந்திருக்கிறேன். காது கேட்காத என்னை அவர் புரிந்து கொள்ளவேயில்லை. அதே நிலை எனக்கும் ஏற்படக்கூடாது என்று நினைத்தேன்“ என்கிறார்.

அதைக் கேட்ட ரூபி சொல்கிறாள். “என்னால் உங்களை நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். உங்களுக்குக் காது கேட்கவில்லை என்பது எனக்குப் பிரச்சனையாக இருந்ததேயில்லை. “

அதைக்கேட்ட அம்மா சொல்கிறாள். “உன்னைச் சீண்டுவதற்காகவே இப்படிச் சொன்னேன். உண்மையில் நீ எங்களை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறாய். என்னை விடத் தைரியமாக இருக்கிறாய். உன் வாழ்க்கையை நீயே தேர்வு செய்து கொள்கிறாய். உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்“ என்கிறாள். மறக்கமுடியாத காட்சியது.

ரூபியின் அம்மாவிற்கு அவள் வளர்ந்த பெண்ணில்லை. இன்னமும் ஒரு சிறுமியே. அவள் எங்கே தோற்றுப்போய்விடுவாளோ என்று பயப்படுகிறாள். ஆனால் தந்தை அவள் இப்போது இளம் பெண். அவளாக முடிவு எடுக்க முடியும் என்று சொல்கிறார். பெற்றோர்களின் இயல்பை படம் முழுவதும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ரூபி நன்றாகப் பாடக்கூடியவள். எப்போதும் இசைகேட்டபடியே இருக்கிறாள். ஒரு நாள் அவளது பள்ளியில் நடைபெறும் சேர்ந்திசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் பெயர் கொடுக்கிறாள்.  இசை ஆசிரியர் பெர்னார்டோ அவளது குரலின் இனிமையை அறிந்து கொண்டு அவளுக்குத் தேவையான பயிற்சிகள் அளிப்பதுடன் அவள் இசைக்கல்லூரியில் இணைந்து படிக்க வேண்டும் என்றும் ஆலோசனை சொல்கிறார்

தன்னை விட்டால் குடும்பத்தினருக்கு வேறு துணையில்லை என்பதை உணர்ந்த ரூபி பெற்றோர்களை விட்டு எப்படிப் பாஸ்டனில் உள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்து படிப்பது என்று குழப்பமடைகிறாள். இன்னொரு பக்கம் குடும்பத்தின் பொருளாதாரச் சிரமம். பெர்க்லி இசைக்கல்லூரியில் இடம் கிடைக்கப் போராட வேண்டிய சூழல். என்ன செய்வது எனத் தெரியாத தடுமாற்றம்.

ஒரு பக்கம் குடும்பத்தின் தேவைகள் மறுபக்கம் அவளது இசைக்கனவு இரண்டுக்கும் இடையில் ஊசலாடுகிறாள். இந்தச் சூழலுக்குள் அவளுக்கும் காதல் பிறக்கிறது. மைல்ஸ் அவளை விளையாட்டாகக் கேலி செய்யவே அது உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது.

பள்ளியில் சக மாணவர்களால் ரூபி பரிகசிக்கப்படுகிறாள். இசை ஆசிரியர் பெர்னார்டோ அவளது குரலைச் சோதிக்க வேண்டிப் பாடச்சொன்ன போது அவள் பயந்து ஒடிவிடுகிறாள். ஆனாலும் பெர்னார்டோ அவளுக்கு உதவி செய்கிறார். ரூபி இசைக்கல்லூரியில் சேருவதற்காக அவளைத் தயார் படுத்துகிறார். பெர்னார்டோ கதாபாத்திரம் தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இறுதிக்காட்சியில் தான் படித்த கல்லூரிக்கே வந்து அவளுக்காக இசை வாசிப்பது சிறப்பானது.

படம் முழுவதும் மெல்லிய நகைச்சுவை கலந்திருக்கிறது. சரியான இடத்தில் அது வெளிப்படுகிறது.

கல்லூரி சேர்ந்திசை நிகழ்ச்சியைக் காணுவதற்காக ரூபியின் குடும்பம் வந்து சேருகிறது. அவர்களுக்கு அவள் எப்படிப் பாடுகிறாள் என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று குழப்பம். தங்கள் அருகில் இசை கேட்பவர்களின் முகங்களை உற்றுப் பார்க்கிறார்கள். ரூபி பாடுவதைக் கேட்டு ஒரு பெண் கண்ணீர் விடுவதைக் கண்டவும் அவளது அப்பாவின் முகம் மாறுகிறது. அவளது குரலின் இனிமையை அவர்கள் பிறரது முகத்தில் வெளிப்படும் சந்தோஷம் வழியாகவே அறிந்து கொள்கிறார்கள்.

வீடு திரும்பிய இரவில் ரூபியின் தந்தை அவளை அருகில் அழைத்து அந்தப் பாடலின் அர்த்தத்தைக் கேட்கிறார். பின்பு தனக்காக அதே பாடலை மீண்டும் பாடும் படியாகச் சொல்கிறார். அபாரமான காட்சியது. அதில் ரூபி பாடும் போது அவளது முகத்தை. குரல்வளையைத் தடவித்தடவி பார்க்கிறார் தந்தை. அதில் தான் எத்தனை மகிழ்ச்சி. பெருமிதம்.

ரூபியின் தந்தை பிராங்க் துணிச்சலானவர். புதிய கட்டணங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் போது அவர் தன்னை வணிகர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்து நேரடியாக மீன் விற்பனை செய்ய இறங்குகிறார். அந்த முடிவை அவர் அரங்கத்தில் வெளிப்படும் விதம் அற்புதம்.

இது போலவே ரூபியின் அண்ணன் லியோ. உறுதியானவன். அவன் பாரில் ஒருவனுடன் சண்டையிட்டு அடிவாங்குகிறான். தான் வீட்டிற்கு மூத்தவன். தன்னால் சுயமாக முடிவு எடுக்க முடியும் என்று பெற்றோர்களுடன் சண்டை போடுகிறான். பாரில் வேலை செய்யும் இளம்பெண்ணின் அன்பைப் பெறுவதும் அவர்களின் காதலும் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காட்சியில் தங்களைப் புரிந்து கொள்ளவில்லை என நினைத்த லியோ தங்கையின் மீது கோபம் கொண்டு நீ பிறக்கும் முன்பு வரை நாங்கள் சந்தோஷமாகத் தான் இருந்தோம் என்கிறான். அவனது கோபத்திலுள்ள அன்பை ரூபி உணர்ந்து கொள்கிறாள். அவனைச் சமாதானப்படுத்துகிறாள்.

இசை நிகழ்ச்சியின் போது லியோ தனது காதலியின் கரங்கள் வழியே இசையின் சிறப்பை அறிந்து கொள்வது அழகு.

பிராங்கின் மௌனம், லியோவின் மௌனம். ஜாக்கியின் மௌனம் என மூன்று வகையான மௌனமும் ரூபியால் புரிந்து கொள்ளப்படுகிறது. அவர்களின் குரலாகவே அவள் ஒலிக்கிறாள்.

ஒரு நாள் மீன்பிடிக்கும்போது கடலோரக் காவல்படையின் எச்சரிக்கையை மீறியதாக ஃபிராங்க் மற்றும் லியோ தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அவர்களின் மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் மேல்முறையீடு செய்து, தங்கள் உரிமத்தைத் திரும்பப் பெற முயற்சிக்கும் போது நன்றாகக் காது கேட்கக் கூடிய ஒருவர் அவர்களுடன் படகில் முழுநேரமும் உதவியாக இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்கிறார்கள்.

இதற்காக ரூபி தனது கனவை மறந்து அப்பாவிற்குத் துணையாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் பிராங்க் தனது மகளின் இசைக்கனவை நிறைவேற்றத் துணை நிற்கிறார். முடிவில் இவரைப் போல செவித்திறன் குறைந்தவர்களுக்கு உதவி செய்ய மற்றவர்களுக்கு சைகை மொழி கற்பித்தல் நடைபெறத் துவங்குகிறது.

ரூபி மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்கிறாள். பேசுகிறாள். காதலை அவள் வெளிப்படுத்துவம் அப்படியே நடைபெறுகிறது. படத்தின் முக்கியக் காட்சிகள் சைகை மொழியிலே உருவாக்கப்பட்டுள்ளன. புற உலகிற்கும் பெற்றோர்களுக்கும் இடையில் ரூபி மொழிபெயர்ப்பாளராகச் செயல்படுகிறாள்.

பாடும் போது நீ எப்படி உணருகிறாய் என்று பெர்னார்டோ அவளிடம் கேட்கும் போது அவள் சைகை மொழியில் தான் பதில் தருகிறாள். அவர் அதை உணர்ந்து கொண்டு அவளைப் பாராட்டி உற்சாகப்படுத்துகிறாள். இப்படிக் கவிதை போன்ற காட்சிகள் படத்தில் நிறையவே இருக்கின்றன.

மைல்ஸ் ஒரு காட்சியில் ரூபியிடம் சிறுவயதில் நீ உன் பெற்றோர்களை வழிநடத்தியபடி கடைவீதிக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன், அப்பாவிற்காக நீ பியர் வாங்குவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன் என்று அவளே மறந்து போன நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறான். டூயட் பாடலுக்காக இணையும் அவர்கள் மெல்லக் காதலர்களாக உருமாறுகிறார்கள். இருவரும் ஒன்றாக நீந்திக் குளிக்கும் காட்சியில் இருவரும் இரண்டு மீன்களைப் போலத் துள்ளுகிறார்கள்.

இறுதிக் காட்சியில் அவள் நேர்காணல் நிகழ்வில் பாடுவதைக் குடும்பத்தினர் பால்கனியில் அமர்ந்து பார்க்கிறார்கள். அவர்களால் அந்தப் பாடலைக் காண முடிவது போல முகபாவம் வெளிப்படுத்துகிறது.

காது கேளாத குடும்பத்திலிருந்து ஒரு பெண் பாடகியாக விரும்புகிறாள் என்பது பழைய கதைக்கரு. ஆனால் அதைத் திரைக்கதையாக உருவாக்கியுள்ள விதமும் காட்சிப்படுத்திய விதமும் கேமிராக் கோணங்களும் இனிமையான இசையும் தேர்ந்த நடிப்பும் இப்படத்தைச் சிறந்த திரைப்படமாக மாற்றியிருக்கிறது. CODA ஆஸ்கார் விருது பெறுவதற்குத் தகுதியான படம் என்பதில் சந்தேகமில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2022 05:22

நாதஸ்வரத்தின் பின்னால்

கோபாலகிருஷணன் கணேசன்

சஞ்சாரம் நாவல் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு முறை எஸ். ரா வின் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போதும் மனதில் விட்டில் பூச்சிகள் அலைவதைப் போல நினைவுகளும் வலிகளும் அலையத் துவங்கிவிடுகிறது.

திடீரென்று எனது ஊரில் யாராவது நாதஸ்வரம் வாசித்திருக்கிறார்களா? என்று யோசித்துப் பார்த்தேன். கோவில் கொடையில் நாயனம் வாசித்தது நினைவிற்கு வந்தது. மற்றபடி எங்கள் ஊர் முருகன் கோவிலில் அன்றாடம் சிறிது நேரம் ஒருவர் நாயனம் வாசிப்பது வழக்கம். அதைத்தவிர வேறு எதுவும் நாதஸ்வரம் பற்றித் தெரியாது

நாதஸ்வரக் கலைக்குப் பின்னர் இப்படியான மனிதர்களின் அவல வாழ்க்கை ஒளிந்து கொண்டுள்ளதை நாவலின் வழியே தான் உணர முடிகிறது.

சாலையில் எதாவது ஒரு நிகழ்ச்சியில் நாம் கடந்து போகையில் நாதஸ்வரம் வாசிக்கும் யாரையாவது பார்த்தால் வெள்ளை வேஷ்டி சட்டை, பாகவதர் மாதிரி படிய வாரிய தலை முடி, வாயில் வெற்றிலை பாக்குச் சிவப்புக் கறை, கையில் மோதிரம், நகை தவிர வேறெதுவும் தெரியாது. ஆனால் அந்த இசை அதன் புனிதம், ராகக் கீர்த்தனைகள், அந்தக் கலைஞர்களின் திறமை என நாவலில் எஸ். ரா மாபெரும் பிரமாண்ட சித்திரமே வரைந்து காட்டுகிறார்.

ரத்தினம் மிக இயல்பாக நாதஸ்வர கலைஞனாக உருவாக்கப் பட்டிருக்கிறார். உண்மையில் அவமானப் படுத்தப்பட்ட, ஆதரிக்கப் படாத கலையின் வலியும் வேதனையும் கொண்ட கலைஞனின் குரலாகவே பக்கிரி வருகிறான் .

நாவலின் தொடக்கத்தில் சூலக்கருப்பசாமி கோவில் முன்பாக அவர்கள் அவமதிக்கப் படுவது நாம் என்றோ வாழ்வில் அந்தச் சம்பவங்களைப் பார்த்திருப்போம் ஆனால் எதுவும் செய்யாமலே அவர்களை ஆதரிக்காமல் கடந்து வந்திருப்போம். அதுமட்டுமில்லாமல் கரகாட்டம், நாடகக் கலைஞர்கள், யானைப்பாகன் எனப் பல மனிதர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகிறார். கிட்டத்தட்ட இன்றைக்கு வாசிக்கையில் இது ஒரு பின் நவீனத்துவ நாவல் எனச் சொல்ல முடித்தாலும் இந்தப் புத்தகம் சொல்கிற உண்மை என்றைக்கும் பொருந்தும் தான்.

ஏன் அனைத்து கலைகளுக்கும், புறக்கணிக்கப்பட்ட கால மாற்றத்தால் நலிவடைந்து போன தொழிற் கலைஞர்களும், நாட்டுப் புற கலைஞர்களின் வாழ்க்கையும் கூட இப்படியான நிலைமைக்கு உள்ளாக்கப் பட்டிருப்பதும் நிதர்சனம். கிராமப் புறங்களில் இன்றும் கோவில் திருவிழாக்களில் நாதஸ்வரம், வில்லுப்பாட்டு, கரகாட்டம், தெருக்கூத்து போன்ற பண்பாட்டுக் கலைகள் மிகச் சொற்பமாகவே வழக்கத்தில் உள்ளன .

சமகாலத் திரைப்படங்கள் கிராமப் புற வாழ்வியலைச் சாதிக் கொடுமைகளை, அங்குள்ள நில ஆக்கிரமிப்பு மற்றும் கார்பொரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தைப் பற்றிப் பரவலாகப் பேச ஆரம்பித்து விட்டன. ஆனால் கிராமியக் கலைகள், நாட்டுப் புற கலைஞர்களின் அவல வாழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றால் இல்லைதான் என்று சொல்ல வேண்டும் . நாடோடித் தானமான அவர்கள் வாழ்க்கை வறுமை, என நிலைகொள்ளமைதான் இந்தப் படைப்புச் சொல்கிறது .

நாவலில் பல இடங்களில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்கள் அவமதிப்புக்குள்ளாகிறார்கள். இன்றைய வாழ்க்கையில் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் மேற்கத்திய பாணியில் அல்லது சினிமாத்தனமான கொண்டாட்டங்கள் பெருகிப் போய்விட்டன. ட்ரம்ஸ், நடனம், கும்பலாகச் சேர்ந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்கிறார்கள் . ஆனால் கூடவே இந்த மேளம், நாதஸ்வர கலைஞர்களை ஏற்பாடு செய்து அவர்களை அவமானப் படுத்துகிறார்கள் . வெளி நாடு போய் வாசிக்கச் செல்லும் ரத்தினம், பக்கிரி, பழனி குழுவினர் எத்தனை இடர் பாடுகளைச் சந்திக்கின்றனர் என்பது கண் முன்னே காட்சியாக விரிகிறது. பலவிதமாக வாழ்ந்து மறைந்த மகத்தான நாதஸ்வர வித்துவான்களின் வாழ்க்கையும் இந்த நாவலில் சொல்லப் படுகிறது.

இசையுடன் பண்பாடு நாகரீகத்தைப் பற்றிய எழுதப் பட்டிருந்தாலும் நாவலில் சாதிக் கொடுமைகள், சிதைந்து போன கிராமங்களையும் அதன் மனிதர்களும் நினைவுகளும் நமக்குக் கண்ணீரை வரவழைத்துவிடும். நல்ல புத்தகம் ஒரு மனிதனை உற்சாகப் படுத்தி நம்பிக்கை ஏற்படுத்திச் சுயசிந்தனை கொண்டவனாக மாற்றும் அதே சமயத்தியதில் சக மனிதத் துயரத்தைக் கொண்டு கண்ணீர் விட வைப்பதும் அடங்கும். அந்த வகையில் இந்தப் புத்தகம் மிக இன்றியமையாத முக்கியமான படைப்பு.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2022 03:58

வேம்பலையும் இன்றைய உலகச் சவால்களும்

”நெடுங்குருதி” பற்றிய பார்வை

சுரேஷ் பாபு

நெடுங்குருதி நாவலைப் பற்றி எழுத நினைக்கும்போது The Origins of Political Order எழுதிய Francis Fukuyama இந்தியா மற்றும் சீனாவைப் பற்றிச் சொன்ன ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது. சீனாவின் சர்வாதிகாரமோ அல்லது இந்தியாவின் ஜனநாயகமோ திடீரென இன்று உருவாவனதில்லை, மாறாக இந்த இயல்புகள் பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் நீடிக்கின்றன, பல ஆட்சியாளர்கள் மாறியபோதும் இந்த நாடுகள் அவற்றின் ஆதார குணம் மாறாமல் தான் இருக்கின்றன. Three Gorges போன்ற ஒரு மாபெரும் அணையைப் பல நகரங்களையும் ஊர்களையும் பலிகொடுத்து எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சீனாவால் அமைக்க முடிகிறது. அதே சமயம் இந்தியாவில் கடும் எதிர்ப்புகளும் மக்கள் எழுச்சிகளும் இரு தரப்பு உரையாடல்களும் சமரசங்களும் இணைந்தே ஒவ்வொரு பெரிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதே போல இன்னொன்று சொல்வதென்றால் அமெரிக்கச் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய நிகழ்வு பாஸ்டன் டீ பார்ட்டி. அன்னிய வரிவிதிப்பை எதிர்த்துச் செய்யப்பட்ட வன்முறையான போராட்டம் அது, கிட்டத்தட்ட அதே போன்ற அன்னிய அதிகாரத்துக்கு எதிரான ஒரு நிலையில் இந்தியாவில் செய்யப்பட்டது உப்புச் சத்தியாகிரகம். போலீஸ் அடித்தாலும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வாங்கி வன்முறையில்லா போராட்டத்தின் ஒரு சான்றாக அந்த நிகழ்ச்சி வரலாற்றில் நிற்கிறது.

ஒரு நிலத்துக்கென்று ஒரு பண்பு எப்போது உருவாகிறது, அது எங்கு உறைகிறது. அது காலச்சூழலில் எப்படித் தன்னை மாற்றிக்கொண்டு தாக்குப்பிடிக்கிறது. அந்த மாற்றங்கள் நடக்கும் போதும் அதன் ஆதார குணம் எப்படிக் கடத்தப்படுகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக நம்முன் நிற்கிறது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் நெடுங்குருதி என்ற இந்த நாவல் வேம்பலை என்ற கிராமத்தின் வழியாக இந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நாவலுக்குப் பல வாசிப்புகள் வந்திருக்கும். மாறிவரும் இன்றைய உலகச் சூழ்நிலையில் நிற்கும் ஒரு இலக்கிய வாசகனாக என் பார்வையை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறேன்

வேம்பலை:

கதையில் மைய நிலமான வேம்பலையின் கதை நமக்கு இரண்டு வழிகளில் சொல்லப்படுகிறது. ஒன்று யதார்த்தவாத சம்பவங்கள் வழியாக, இன்னொன்று வேம்பலை பற்றிய தொன்மங்கள் வழியாக. அப்படி ஒரு தொன்மம் இந்தக் கிராமம் உருவான கதையைச் சொல்கிறது. கொள்ளையடிப்பதைத் தொழிலாகக் கொண்ட கூட்டம் ஒன்று காயமுற்று கையறு நிலையில் இருக்கும்போது வேப்ப மரங்கள் சூழ்ந்த இந்த நிலம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. அப்படியே அது அவர்கள் வாழும் கிராமம் ஆகிறது.

கொள்ளையடிப்பதற்கும் அதன்பின் உலகத்தின் கண்ணில் படாமல் தனியே மகிழ்ந்து இருப்பதற்கும் வெயிலும் வேம்பின் கசப்பும் இருக்கும் அந்தக் கிராமம் அவர்களுக்குப் பொருத்தமாக அமைகிறது.

வெள்ளையனான வெல்சி துரை அவர்களை வேட்டையாடும் வரை வெற்றியை மட்டுமே பார்த்த அவர்களின் மனத்தில் பயம் என்பதைக் குடியேற்றுவது ஒரு பெரும் நிகழ்வு. 42 வேம்பர்களைக் கொன்று பெண்கள், குழந்தைகள் குரல்வளையைக் கூட அறுக்கும் கொடும் நிகழ்வு அது. கிட்டதட்ட வெல்சி துரைக்கு முழு வெற்றியாக அமைந்திருக்க வேண்டிய அந்தச் சம்பவம் அப்படி முடிவதில்லை, அந்தத் துரையின் மனத்தில் ஒரு வேம்பனும் அரூபமாகக் குடியேறுகிறான். உடனடி வெற்றி அதன்பின் பதவியுயர்வு எல்லாம் கிடைத்தாலும் அவர் மர்ம மரணத்துக்குக் காரணமாக அவன் மனத்தில் ஏறிய வேம்பன் காரணமாக இருக்கின்றான். வெல்சி துரை வேம்பர்களை வென்றாலும் அவர்களது உக்கிரம் அவனை வெல்கிறது.

வேம்பலையில் சிங்கி ஒரு தனிப் பாத்திரம். அவன் கொள்ளையடிப்பதில் கில்லாடி. நிறைய மக்கள், மாடுகள் எல்லாம் இருப்பது போல அவனே குரலால் மாயம் உருவாக்கத் தெரிந்தவன். அவன் ஒரு வியாபாரிக் குடும்பத்தை மடக்கி கொள்ளையடிக்க முற்படும்போது தங்கள் நகைகளைப் பெண் குழந்தைகளுக்கு அணிவிக்கிறார்கள். எந்த நிலையிலும் அவன் பெண் குழந்தைகளிடம் கொள்ளையடிப்பதில்லை என்பதை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவனை வென்று அவர்கள் செல்லும்போது அந்தக் குடும்பப் பெண்கள் இவனை வணங்கிச் செல்கிறார்கள். அவர்கள் அங்கு வணங்குவது சிங்கி என்ற கொள்ளையனை அல்ல, வேம்பர்களின் அறத்தை.

வேம்பலையின் வேம்பர்களின் முரட்டுத்தனமும் அவரகளுக்கேயான குழு அறமும் இங்கு வெளிப்படுகின்றன. பொதுவாக இயற்கை என்று நாம் நினைக்கும்போது பனி சார்ந்த மலைகளும் ஆறுகளும் நம் மனதில் வரும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் வெயிலும் இயற்கை தான். அது நமக்குத் தரும் வாழ்வும் காத்திரமானது என இங்குக் காண்கிறோம்.

எந்த அளவு Bird’s eye view முக்கியமோ அதே அளவு Worm’s eye view-ம் முக்கியம். பறவைக்கோணம் ஒரு பெரிய சித்திரத்தை அளித்தாலும்.. வார்ம்ஸ் ஐ எனப்படும் கீழிருந்து பார்க்கும் பார்வை தனிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது. இங்குக் கீழிருந்து பார்க்கும் பார்வையான வார்ம்ஸ் ஐ என்பதை எறும்புப் பார்வை என்று கூட நாம் வைத்துக்கொள்ளலாம்.

இந்த நாவலில் நாம் நாகு என்ற சிறுவனின் வழியாக அந்தப் பார்வையை அடைகிறோம். அவனும் எறும்புகள் சாரை சாரையாக ஊரைவிட்டுப் போவதை பார்த்துக் கொண்டிருப்பதாக நமக்கு அறிமுகம் ஆவதே அவன் நமக்கு ஒரு கூரிய பார்வையைத் தரப்போகிறான் என்று அறிவிப்பதாக இருக்கிறது. கடவுளின் சடையில் இருக்கும் எறும்புகள் பூமிக்கு வரும்வரை பேசிக்கொண்டேயிருக்கும். இப்போதும் மீண்டும் அவை சாமியிடம் போக வழிதேடிக் கொண்டுதான் இப்படி வேக வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன என நாகுவும் அவன் தோழி ஆதிலட்சுமியும் சேர்த்து உருவாக்கும் ‘உண்மை’ மிகச் சுவையானதாக இருக்கின்றது.

பொறுப்பில்லாத அப்பா, வீட்டைப் பார்த்துக்கொள்ளும் அம்மா மற்றும் இரு அக்காக்களுடன் வளரும் அவனுக்கு மிக நெருங்கிய நட்பாக இருப்பது ஆதிலட்சுமி தான். கிராமத்தின் மாயங்களைக் குழந்தை மனம் கொண்டு இந்த இருவரும் உருவாக்குகிறார்கள். இரு அக்காக்களில் நாகுவுக்கு நெருக்கமாக இருப்பது நீலா தான். அப்பா சண்டையிட்டு வீட்டை விட்டுப் போனபோது அம்மா மற்றும் பெரிய அக்கா வேணி ஆகியோருக்கு நியாயமான கோபம் இருந்தபோதும் அவரிடம் சென்று நீலா பேச நினைப்பது அன்பினால் மட்டுமே. நாகுவும் அவளுக்காக அதை ஏற்கிறான். அவளது திடீர் மரணம் எல்லாச் சமன்பாடுகளையும் குலைத்துவிடுகிறது. அதுவே வேம்பலையின் விளையாட்டாக இருக்கிறது.

அதன் பின் அந்தக் குடும்பம் கிட்டத்தட்ட சிதைந்து வேம்பலையில் இருந்து வெளியேறினாலும் வேம்பலையின் கைதொடும் துரத்தில் தான் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சில சமயம் விரும்பி திரும்பி வருகிறார்கள் வருகிறார்கள், சில சமயம் வலுக்கட்டாயமாக.

வேம்பலை கிராமத்தைப் பற்றி இன்னொரு சுவையான நிகழ்வு. வேம்பலைக்கு வழக்கமாக வரும் பரதேசிகள் ஒருமுறை வேம்பலையைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். பயந்து ஓடுகிறார்கள். பின்னர்த் தான் தெரிகிறது அது இன்னொரு வேம்பலை என்று தெரிகிறது. இப்போதைய வேம்பலையில் இங்கு அழிந்தவை அங்கு வாழ்கின்றன.

ஒரு நிலத்தில் இருந்து மறைபவை நிஜமாகவே மறைகிறதா. அவை எங்கே வாழ்கின்றன என்ற சிந்தனையை இது அளிக்கிறது. நாம் வாழும் நகரங்களுக்கு உள்ளேயும் இப்படி அழிந்த நகரங்கள் இருப்பதைக் கவனிக்க முடியும்.

பாத்திரங்கள்:

இந்த நாவலில் வரும் சின்னப் சின்னப் பாத்திரங்களைப் பற்றிக் கூட, அவர்களுக்கான முழு வாழ்க்கைச் சித்திரத்தை இந்த நாவல் காட்டுகிறது. உதாரணமாகச் சில பாத்திரங்களைப் பார்க்கலாம்.

நாகுவின் அப்பா – மிகவும் பொறுப்பற்ற தந்தையாக, நம்பி வந்த பக்கீரின் மரணத்துக்கும் காரணமானவராக அறிமுகமாகும் நாகுவின் அப்பா, பின்னர் ராமேஸ்வரத்தில் ஒரு பிச்சைக்காரராக இருந்து இளைஞனான நாகுவால் மீட்கப்படுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் நாகுவின் தாத்தா கோபத்தில் அவரைக் கொல்ல முற்படும்போது தயவு செய்து கொன்றுவிடுங்கள், சாகத் தைரியம் இல்லாமல் தான் வாழ்கிறேன் என்று முழுத் தோல்வியடைந்த மனிதனான இருக்கிறார். ஆனால் அவரே நாகுவின் மரணத்துக்குப் பின் அவன் மனைவி மல்லிகாவை ஒரு தந்தையைப் போல் பார்த்துக்கொள்கிறார். அகால மரணடைந்த நீலா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஒரு மண்புழுவை கையில் எடுத்து வந்து வீட்டில் இருந்துக்கொம்மா என்று வீட்டில் விடும் இடத்தில் அவர் முழு நிறைவை அடைகிறார்.

குருவன் – திருவிழாவுக்குத் தாயுடன் செல்லும்போது போலீசால் அவமானப்படுத்தப்படும் சிறுவனாக இருந்து, பெரும் கொள்ளையனாக மாறி, காயம் பட்டு, பின் தெய்வானையின் காதலில் கனிகிறான் குருவன். தெய்வானை இறந்த பின் அவன் அவள் கையில் இருந்து இவன் கைக்கு ஏறும் தேள் ஒரு அபூர்வ அனுபவம். அவன் மரணத்துடன் விளையாடும் ஆடு புலி ஆட்டம் ஒரு புது அனுபவம்.

ரத்னாவதி – பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவளுக்கு நாகு மீது இருப்பது உண்மையான காதல். ஆனால் இருவருமே அதைச் சொல்லிக் கொள்வதில்லை. தன் திருமணம் முடிவான போதும் நாகு ரத்னாவதியைத் தேடுகிறான். குழந்தை பெற்ற பின் அவள் நாகுவைத் தேடி வருகிறாள். நாகுவின் மரணத்துக்குப் பின், இன்னொரு திருமணம் அதுவும் அகாலமாக முடிந்த பின், பழைய வாழ்க்கை என அவளது வாழ்க்கை திசைமாறிச் செல்கிறது. முன்பு அறத்துடனும் நம்பிக்கையுடனும் இருந்தவள் கடைசியில் எல்லா நம்பிக்கைகளையும் இழந்தாலும் தன் வைராக்கியம் தளராமல் இருக்கிறாள். இந்த நாவலில் பல மரணங்கள் வந்து கொண்டேயிருந்தாலும், துல்லியமாகத் திட்டமிடப்பட்ட மரணம் ரத்னாவதியின் மரணம் மட்டும் தான்.

மனித பாத்திரங்களுக்கு நிகராகவே உயிரற்ற பாத்திரங்களும் இந்த நாவலைக் கொண்டு செல்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு குணத்தில் இருக்கும் வெயில், ஆமை, கொள்ளைக்கு அதிசய சக்தி தரும் ஆட்டு நாக்கு, அணையா விளக்கு, வேம்படி, வனத்துடன் காத்திருக்கும் ஊமை மரம், அரவணைக்கும் வேப்ப மரம் எனப் பல சொல்லலாம்.

வேம்பலையின் வெளியாட்கள்:

என்னதான் வேம்பர்கள் இந்தக் கிராமத்தை அமைத்திருந்தாலும் அங்கு மாற்றங்களைக் கொண்டு வருவதில் வேம்பலையின் வெளியாட்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. கனவில் வந்த ஒரு தெய்வம் இங்குக் கண்டடையப்பட்டு வளரும்போது அதை வைத்து தானும் வளரும் காயம்பு கிட்டத்தட்ட இந்தக் கிராமத்துக்கு வெளியாள் தான். மின்சாரம் முதன்முதலில் வரும்போது அவனே கிராமத்துக்கு மின்சாரம் வர காரணமாக அமைகிறான். ஆனால் அந்த மின்சார வெளிச்சம் அந்தக் கிராமத்தின் இயல்பான பிசுபிசுத்த இருட்டை வெளியேற்ற, அந்தக் கிராமத்தினர் அமைதியிழக்கிறார்கள். அடுத்தக் கோயில் திருவிழாவில் சாமி கோபமாக இருப்பதை உணர்ந்த காயம்பு தானே அந்த விளக்குகளை அடித்து நொறுக்கி சமநிலையை உருவாக்குகிறான். படிப்படியான மாற்றத்தின் ஒரு படிக்கு அவன் காரணமாக அமைந்தாலும் அவனும் அந்தக் கிராமத்துக்காரன் தான் என்ற உணர்வை அளிக்கிறான்.

இரு பெண் குழந்தைகளுடன் அபலையாக வரும் பக்கீரின் மனைவியும் இன்னொரு உதாரணம். உதவி கேட்டுவரும் அவளே பலருக்கும் உதவியாக இருக்கிறாள். அவளே தன் செலவில் கிராமத்துக்கு மணிக்கூண்டு அமைத்துத் தரும் அளவுக்கு அங்கு வேர்பிடித்து முன்னேறுகிறாள்.

கிராமத்தின் வாழ்விலும் நாகுவின் குடும்ப வாழ்விலும் இவளது பங்கு இதே போல் தொடர்கிறது. காயம்புவின் மனைவியின் தம்பிக்கும் நாகுவின் அக்காவான வேணிக்கும் ஒரு சின்னக் காதல் அரும்பு விடுகிறது. அதையும் அவளே கையாள்கிறாள். நீலாவின் மரணத்தின் பின் நிலைகுலைந்து இருக்கும் நிலையில் தெளிவாக முடிவெடுத்து வேணியின் திருமணத்துக்குக் காரணமாக அமைவதும் அந்தப் பக்கீரின் மனைவி தான்.

இந்த அன்னிய பாத்திரங்களும் ஒரு மாயக் கணத்தில் வேம்பலைக்காரர்களாக மாறிவிடுகிறார்கள்.

இங்குக் குருதி என இந்த நாவல் இதை உருவகிக்கிறது என்ற சிந்தனையைத் அளிக்கிறது. மைய பாத்திரமான நாகுவின் மகன், பின்னர்க் கம்யூனிசம் எல்லாம் படித்த பின் வேம்பலைக்குத் திரும்ப வந்தால் அவனே அன்னியனாக இருப்பானோ என்றும் தோன்றுகிறது. இதுவும் தற்செயலல்ல, அவனது அம்மாவான ரத்னாவதி வேறொரு குருதியின் தொடர்ச்சியாக அவனை வளர்க்க முடிவெடுக்கிறாள் என்று வாசிக்கவும் இடம் இருக்கிறது.

இது எந்த நாடுக்கும் பொருத்திப் பார்க்க முடிவதாக இருக்கின்றது. இன்றைய தமிழ்க் கலாச்சாரத்தை உருவாக்கியதில் விஜயநகரப் பேரரசர்கள் உடட்படப் பலரின் பங்கும் இருக்கிறது. ஆன்னிபெசண்ட், பெரியார் தொடங்கி இன்றைய ரஜினி வரை பல “வெளியாட்கள்” பண்பாட்டிலும் அரசியலிலும் கலையிலும் உருவாக்கும் பதிவுகள் கவனிக்கத் தக்கவை.

மனிதகுலத்தின் சவால்கள் – மகிழ்ச்சியும், மரணத்தை வெல்வதும்:

வேம்பின் கசப்பும் சுட்டெரிக்கும் வெயிலும் எந்த நேரத்திலும் மரணத்தைத் தரும் கடும் விஷப்பூச்சிகளும் இருக்கும் இந்தக் கிராமத்தை விட்டு விலகினாலும் ஏன் அதன் மக்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கிறார்கள் என்பது ஒரு விடை தெரியா கேள்வியாக இருக்கிறது.

இந்த நாவலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வருகிறது. அந்தத் தூர கிராமத்துக்கு வித்தியாசமான வெளியாள் ஒருவன் வருகிறான். அவன் தூக்கத்தை ஆராய்ச்சி செய்பவன். முதலில் கிராமத்தினர் அவனைச் சந்தேகப்பட்டாலும் பிறகு அவனது ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனை அன்று தூங்க அனுமதிக்கிறார்கள்.

ஒரு நாள் தூங்கி ஆராய்ச்சி செய்த அவன் அதிர்ச்சிடைகிறான். இந்த ஊரில் பகலை விட இரவு மிக உக்கிரமாக இருக்கிறது, களவு செய்பவர்களைத் தவிர மற்றவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது போல என்று சொல்லி அதிர்ச்சியாகி ஊரை விட்டு ஓடுகிறான். அது அவனுக்குத் தான் அதிர்ச்சி, அந்த முடிவை கிராமத்தினர் மிக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

இங்கே எது மகிழ்ச்சி என்ற ஒரு கேள்வியை இது எழுப்புகிறது

இந்த நூற்றாண்டு மனிதன் முன் இருக்கும் கேள்வியே அது தானே. ஹோமோடியஸ் என்ற முக்கியமான புத்தகத்தில் யுவால் நோவா ஹராரி, மனிதன் போன காலகட்ட பிரச்சனைகளான பஞ்சம் போர் மற்றும் பெரும் நோய்களை வென்ற மனிதனின் முன் இருக்கும் முக்கிய இரு சவால்கள் மகிழ்ச்சியும் மரணத்தை வெல்வதும் தான் என முன்வைக்கிறார்.

இந்த நாவல் இந்தப் பிரச்சனைகளை இதன் போக்கில் எதிர்கொள்கிறது.

காட்டில் இருக்கும் மிருகங்களை விடப் பண்ணை மிருகங்கள் பாதுகாப்பானவை. ஆனால் அவை அதில் மகிழ்ச்சியாக இருக்குமா? பிறந்ததில் இருந்து கூண்டில் இருந்து வெளியே செல்ல முடியாத கால்நடை எத்தனை வருடம் வாழ்கிறது என்பது அதன் வெற்றியாகக் கொள்ள முடியுமா?

இந்தப் பார்வையில் உக்கிரமான வேம்பலை அவர்களுக்கு ஒரு மகிழ்சியைத் தருகிறது என்று கொள்ளலாம். வெயில் அதிகமாக இருக்கும் இடத்தில் தான் நிழலும் காத்திரமாக இருக்கிறது. கடுமையான கொள்ளையர்கள் இருக்கும் இடத்தில் தான் அதிக அன்பின் வெளிப்பாடும் அமைகின்றது. பக்கிரியின் மனைவி, செல்லையா, மல்லிகா, அவளைப் பார்த்துக் கொள்ளும் நாகுவின் அப்பா எனக் காத்திரமான அன்பின் இடங்கள் பல நினைவுக்கு வந்துகொண்டே இருக்கின்றன.

ரத்னாவதி-நாகு காதலுக்கு உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டும்.

நடைமுறையில் பாலியல் சார்ந்ததாக இருந்தாலும் இவர்கள் உறவில் அதைத் தாண்டிய தருணங்கள் வெளிப்படுகின்றன. தனது தோழியின் கனவு தனது குழந்தைக்கு முடியிறக்குதல் என அறிந்து, தனக்காக எதுவும் கேட்காமல் தன் தோழியின் விருப்பத்தை நிறைவேற்ற நாகுவுக்கு ஆணையிடுகிறாள். நாகு நிறைவேற்றுகிறான். அந்தத் தாய் கை கூப்புகிறாள். ஒவ்வொருவரின் அற உணர்வு மட்டுமல்ல காதலின் உச்சமும் அங்கே வெளிப்படுகிறது.

இந்த நாவலின் வாழ்வில் மரணங்கள் மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அதைத் தாண்டியும் வாழ்வு சென்று கொண்டேயிருக்கிறது. இன்றைய அறிவியலில் மரணம் என்பதே ஒரு டெக்னிகல் விஷயம் என மூளை மாற்றுச் சிகிச்சை அளவுக்குப் பேசப்படுகின்றது. ஆனால் இந்த நாவல் மரணத்தைப் பல இடங்களில் தன் வழியில் வெல்கிறது.

சாயக்கார சென்னன்மா உடல்குருகி குடுவையில் இட்டபின் அவள் மரணத்தை வெல்கிறாள். திடீர் மரணமடைந்த நீலாவின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அவளது அப்பா ஒரு மண்புழுவை கையில் எடுக்கிறார். வீட்டில் இருந்துக்கோம்மா எனப் பாசத்துடன் வீட்டுக்கு கொண்டுவந்து விடுகிறார், நீலா மரணத்தை வென்று வாழ்கிறாள். இன்னும் சொல்லப்போனால் வேம்பலையில் மறந்தவை எல்லாம், பரதேசிகள் பார்க்கும் இன்னொரு வேம்பலையில் வாழ்கின்றன, அந்தக் கிராமமே மரணத்தை வெல்கிறது. நாகுவும் கடைசியில் மரணத்தை வெல்கிறான் அவனது மகளான வசந்தா தனது கணவனின் குழந்தைக்க்கு நாகு என்று பெயர் வைத்து வேம்பலைக்குத் திரும்புவதுடன் நாவல் நிறைவடைகிறது.

வசந்தா பள்ளியில் படிக்கும்போதே அவளுக்கு ஜெயக்கொடியுடன் உருவாகும் நட்பு வேம்பலையின் அழைப்பாகத் தோன்றுகிறது. தான் மனம் குழம்பியிருக்கும் நிலையில் வெள்ளைப் பறவைகள் வரும் அனுபவம் நாகுவை நேரடியாகப் பார்த்திராக வசந்தாவுக்கும் வருவதும் அவளே வேம்பலையால் தேர்ந்தடுக்கப்பட்டவள் என்று தோன்றுகிறது. நெடுங்குருதியாகத் தொடர்ந்து வரும் தொடர்பில், நேரடி குருதித் தொடர்பில்லாத குழந்தை நாகு என்று பெயரிடப்பட்டுத் திரும்ப வேம்பலை கதை ஆரம்பமாவது குருதி என்பதற்கே அர்த்தம் தருவதைக் கவனிக்க முடிகிறது.

“வேம்பலை விரிந்த உள்ளங்கை ரேகைகள் போலத் தன் சுபாவம் அழியாமல் அப்படியே இருந்தது. கொக்குகள் நிசப்தமாக வானில் இருந்து வேம்பலையில் இறங்கிக் கொண்டிருந்தன’

கடும் வெயிலும் கசப்பும் பல மரணங்களும் தொடரும் இந்த நாவல் நாவல் நிறைவடையும்போது நாகுவின் பார்வையில் பார்க்கும் நமக்கு மிக நிறைவான வாழ்க்கையாகவே தெரிகிறது.

அத்துடன், நாவல் வெளிவந்து பதினாறு வருடங்களுக்குப் பின்னரான வாசிப்பில், இன்றைய புதிய உலகம் எதிர்கொள்ளும் பல சவால்களையும் இந்த நாவலில் போட்டுப் பார்க்கும்போது இன்னும் புதியதாக இருப்பதும் நிறைவளிக்கிறது.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2022 03:45

February 14, 2022

பிறமொழிகளில்

கடந்த இரண்டு ஆண்டுகளில் பிறமொழியில் வெளியாகியுள்ள எனது படைப்புகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2022 22:08

ஐந்து வருட மௌனம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய 32 சிறுகதைகளின் தொகுப்பு. 404 பக்கங்கள்

இதிலுள்ள பஷீரின் திருடன் குறுங்கதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு செய்தவர் எழுத்தாளர் ஷாஜி.

ஐந்து வருட மௌனம் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. வங்காளத்தில் வெளியாகவுள்ளது.

தேவகியின் தேர்,இரண்டு ஜப்பானியர்கள், வெயிலில் அமர்தல் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன

கடைசிக் குதிரைவண்டி சிறுகதை குறும்படமாக உருவாகி வருகிறது. அஸ்வின்குமார் என்ற இளம் இயக்குநர் இதனை உருவாக்குகிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2022 21:49

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.