S. Ramakrishnan's Blog, page 98
February 1, 2022
வாழ்த்துகள்
2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுராஸ்கார் விருது கார்த்திக் பாலசுப்பிரமணியன் எழுதிய நட்சத்திரவாசிகள் என்ற நாவலுக்காக வழங்கப்படுகிறது.

இராஜபாளையத்தை சேர்ந்த கார்த்திக் பாலசுப்ரமணியன் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். நட்சத்திரவாசிகள் நாவல் மென்பொருள் துறை சார்ந்த வாழ்க்கையை சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
குளிர் மிகுந்த வரிகள்
மண்டியிடுங்கள் தந்தையே – வாசிப்பனுபவம்
தேவராஜ் விட்டலன்
ரஷ்ய இலக்கியங்கள் எப்போதும் மனித நேசத்தை உயிர்ப்புடன் காட்டுபவையாகவே இருக்கின்றன. அந்த மகத்தான இலக்கியங்களை அளித்தவர்களில் முக்கியமானவர் லியோ டால்ஸ்டாய். லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அறிந்து, புனைவாகக் கொடுத்துள்ளார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்.

குளிர் மிகுந்த, பனிபடர்ந்த ஜனவரி மாதத்தில்தான் மண்டியிடுங்கள் தந்தையே புத்தகத்தைப் படிக்கத்துவங்கினேன். எஸ். ரா அவர்களின் புத்தகங்கள் எனக்கு எப்பொழுதுமே மனதிற்கு நெருக்கத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. இராணுவத்தில் சேர்ந்த காலகட்டத்தில் அவர் விகடனில் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம் தொடர்கள் வரும் விகடன் புத்தகத்தை வாங்குவதற்காக மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் அலைந்து திரிந்த நினைவுகள் மனதில் இன்னும் பசுமையாகப் பதிந்துள்ளது.
இராணுவ வீரர், எழுத்தாளர், சமுதாயச் சிந்தனையாளெனப் பன்முக ஆளுமைமிக்க மனிதரின் வாழ்க்கையைப் புனைவாக்குவது எளிதான விசயமில்லை. ரஷ்யப் பனியின் குளிரை எஸ்.ராவின் ஒவ்வொரு வரியைப் படிக்கும்போது நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
டால்ஸ்டாயின் வாழ்க்கையில் அவருக்கு மனதிற்கு நெருக்கமான அக்ஸின்யாவின் வாழ்க்கையை ஒட்டியே நாவலில் அதிகம் விவரிக்கப்பட்டுள்ளது. நாவலைப் படித்து முடிக்கும்போது “சிவப்பு அங்கி அக்ஸின்யா” கதாபாத்திரம் நம் மனதில் ஒரு மகத்தான ஆளுமையாக நின்றுவிடுகிறாள்.
தந்தை கண் முன்னே இருந்தும் அவரின் அன்பிற்காகவும், அவரின் பார்வைக்காகவும் ஏங்கும் மகனாக இருக்கும் திமோஃபியின் ஏக்கம் ஞாயமான ஒன்றாகவே வாசகனுக்குப் படுகிறது. ஆனால் சமுதாயத்தில் அங்கீகாரம் அளிக்க முடியாத சூழலில் டால்ஸ்டாய் உள்ளார். நாவலின் இறுதியில் அக்ஸியாவின் புதைமேட்டில் மலர்களை வைத்துவிட்டு மண்ணை வருடும் டால்ஸ்டாய் மனதில் அக்ஸின்யாவின் மேல் வைத்திருக்கும் காதலை அறிந்துகொள்ள முடிகிறது.
தன் கணவரின் கருத்துகளில் முரண்பாடுகள் இருந்தாலும் சோபியா , டால்ஸ்டாயின் மீது அதீதமான அன்பைக் கொண்டவராக உள்ளார் என்பதை நாவலைப் படிக்கும்பொழுது பல தருணங்களில் அறிந்துகொள்ள இயலுகிறது.
நாவலில் வரும் முட்டாள் டிமிட்ரியின் கதாபாத்திரத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது, முட்டாள் டிமிட்ரியின் ஒவ்வொரு வாசகமும் ஞானியைப் போலவே சொல்லப்பட்டிருக்கிறது.
டால்ஸ்டாயின் வாழ்க்கையை அறிந்துகொள்ளவும், ரஷ்ய நிலவியலை எழுத்தில் கொண்டுவரவும் எஸ்.ரா அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை நாவலைப் படித்து முடிக்கும்போது வாசகர்கள் உணர்வதுதான் நாவலின் வெற்றியாக நினைக்கிறேன்.
January 30, 2022
காரந்தின் உலகம்
மகாகவி ரவீந்திரநாத் தாகூரைத் தனது ஆதர்சமாகக் கொண்டவர் கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த். இளமையில் சாந்தி நிகேதனுக்குச் சென்று கலைகள் மற்றும் புதிய கல்வி முறை பற்றி அறிந்து வந்திருக்கிறார். பின்னாளில் காரந்தின் செயல்பாடுகளைப் பாராட்டி விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டமளித்துச் சிறப்பித்திருக்கிறது.

காரந்தின் பன்முகச் செயல்பாடுகளைப் பற்றி அறியும் போது வியப்பளிக்கிறது. அவர் தொடாத விஷயமேயில்லை. கன்னட இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்திருக்கிறார். வைதீகமான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் நாத்திகராக வாழ்ந்திருக்கிறார். தனது சொந்த செலவில் ஐரோப்பாவிற்குச் சென்று அங்குள்ள கலைக்கூடங்களை, இசை, நாடகங்களைக் கண்டு வந்திருக்கிறார். யுனெஸ்கோவோடு இணைந்து ஆரம்பக் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் செயல்பட்டிருக்கிறார். சிறார் கல்விக்கான நூல்களை எழுதியிருக்கிறார். மரபுக்கலையான யக்ஷகானாத்திற்குப் புத்துயிர்ப்புத் தந்திருக்கிறார். அவரே ஒரு சிறந்த நடிகர். நடனக்கலைஞர். இந்தியாவின் புகழ்பெற்ற நாடக, நடனக்கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். மிசாவை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார். தேர்தலில் போட்டியிருக்கிறார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சிவராம காரந்த் பற்றி அவரது பிள்ளைகள் மாளவிகா கபூர், உல்லாஸ் காரந்த், குசுமா ராவ் மூவரும் இணைந்து Growing up Karanth என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள். தங்களின் தந்தை மற்றும் தாயின் நினைவுகளையும் அவர்களின் குடும்பச் சூழலையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
காரந் தனது சுயசரிதையை Ten Faces of a Crazy Mind என்று எழுதியிருக்கிறார். அதிலுள்ள சில தகவல்கள், நிகழ்வுகள் இதில் மாறுபட்ட கண்ணோட்டத்தில் விவரிக்கப்படுகின்றன
உல்லாஸ் காரந்த் இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் அறிஞர். புலிகளைப் பற்றி ஆய்வு செய்வதில் உலக அளவில் தலைசிறந்தவர்.

சிவராம் காரந்த் 1902 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி கர்நாடகாவின் உடுப்பிக்கு அருகிலுள்ள கோட்டாவில் பிறந்தார். குந்தாபுரா மற்றும் மங்களூரில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால் கல்லூரி படிப்பைப் பாதியிலே கைவிட்டிருக்கிறார். 45 நாவல்களை எழுதியுள்ள காரந் தனது புத்தகங்களின் அட்டை ஓவியங்களைத் தானே வரைந்திருக்கிறார். தானே பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். 31 நாடகங்கள், 4 சிறுகதைத் தொகுப்புகள். 6 கட்டுரை தொகுப்புகள். 13 கலைகள் குறித்த கட்டுரை தொகுதிகள், 240 சிறார் நூல்கள். நான்கு தொகுதி அறிவியல் களஞ்சியங்கள். 6 பயண நூல்கள், இரண்டு பறவையியல் நூல்கள், மூன்று சிறார் கலைக்களஞ்சியத்தொகுதிகள். என 417 புத்தகங்களை எழுதியிருக்கிறார். .இன்றும் கன்னட இலக்கியத்தின் நிகரற்ற படைப்பாளியாகக் கொண்டாடப்படுகிறார்.
தங்கள் அப்பா அம்மாவின் காதல் கதையை மூவரும் மிக அழகாக விவரித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது அப்பா அம்மாவின் காதல்கதையைப் பற்றி எழுதியதை நினைவுபடுத்துகிறது. காரந்த் மீதான காதலை லீலா தான் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் லீலா. சிறுவயதிலே அம்மாவை இழந்தவர். மங்களூர் வரும் வரை அவருக்குக் கன்னடம் தெரியாது. அவரது குடும்பம் மங்களூருக்கு இடம் பெயர்ந்த போது பள்ளிப்படிப்பிற்காகப் பெசன்ட் பெண்கள் பள்ளியில் சேர்ந்து படித்திருக்கிறார். அந்தப் பள்ளியில் நடைபெறும் நாடகம் மற்றும் நடன நிகழ்வுகளுக்கு ஒருங்கிணைப்பு செய்யும் மாஸ்டராகச் சிவராம காரந்த் இருந்திருக்கிறார்.

அவரது கோபத்தைக் கண்டு ஒதுங்கியிருந்த லீலா ஒரு நாள் நாடக ஒத்திகையின் போது அவர் காகிதத்தில் அலங்கார நகைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் செய்யும் மாயத்தைக் கண்டு அந்தக் கைகளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தார். தன் மனதிலுள்ள காதலைத் தனது தந்தையிடம் தெரிவித்துத் தான் மாஸ்டரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகக் கூறினார்.
லீலாவின் தந்தை அதை ஏற்கவில்லை. ஆனால் மகளின் பிடிவாதம் கண்டு சிவராம காரந்தை வீட்டிற்கு அழைத்து வரும்படி சொன்னார்.
லீலா தங்கள் வீட்டிலுள்ள அழகான தோட்டத்தைக் காணுவதற்காகக் காரந்த்தை அழைத்தார் அவரும் லீலா வீட்டிற்கு வந்து பூந்தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது அவரைத் தான் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக லீலா கூறினார். அதைக் காரந்த் எதிர்பார்க்கவில்லை. தன்னைப் போன்ற ஒரு முரடனை, வேலையில்லாதவனை, முன்கோபியைத் திருமணம் செய்து கொள்வது பிரச்சனைக்குரியது எனச் சொல்லி மறுத்திருக்கிறார். ஆனால் லீலா விடவில்லை. சம்மதிக்க வைத்திருக்கிறார்
அதன்பிறகு லீலாவின் தந்தையிடம் பேசி சம்மதம் பெற்றிருக்கிறார். இருவரும் வேறு சாதி என்பதால் திருமணத்தை ரிஜிஸ்தர் அலுவலத்தில் வைத்து எளிமையாக முடித்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அப்படித் தான் அவர்களின் திருமணம் நடந்தேறியது.
சம்பளம் வரக்கூடிய எந்த வேலையும் செய்யாத ஒரு மனிதரை நம்பி வந்த அம்மா தன் வாழ்நாள் முழுவதும் தந்தைக்கு உற்ற துணையாக இருந்தார் என்று மூவரும் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறார்கள்
திருமணம் நடந்த பிறகும் பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக லீலா பள்ளி விடுதியில் தங்கியிருந்தார். வாரம் ஒருமுறை அவரைக் காண கார்ந்த் வருகை தருவார். அப்போது செலவுக்குப் பணம் வேண்டுமா என்று கேட்டு தன் பையிலிருந்த சில்லறை நாணயங்களை அவரது கையில் கொட்டுவார். அது ஐம்பது பைசாவிற்குள் தானிருக்கும். இதனால் லீலா ஏமாற்றம் அடையவில்லை. ஒரு போதும் அவரைக் கோபித்துக் கொள்ளவில்லை..
திருமணத்திற்கு முன்பாகச் சிவராம காரந்த் அநாதைச்சிறுவர்களுக்காகப் பாலவனா என்றொரு பள்ளியைத் தனது வீட்டிலே நடத்தி வந்திருக்கிறார். அந்தப் பள்ளியைக் கவனித்துக் கொண்டு உதவி கேட்டு வருகிறவர்களுக்கு இல்லை எனச் சொல்லாமல் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டு லீலா திறமையாக வாழ்க்கையை முன்னெடுத்திருக்கிறார்.

அம்மா யாருடைய மனதையும் புண்படுத்தியதில்லை. இருப்பினும் தன் கண்முன்னே ஒரு அநியாயத்தையும் காணும் போது அவருக்குக் கோபம் பொங்கி எழுந்துவிடும். யாராக இருந்தாலும் பயமின்றி உண்மையை நிலைநாட்டக் கடுமையாக வாதிடுவார். அவருக்குக் கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. தனது மகன் ஹர்ஷா 23 வயதில் புற்றுநோய் வந்து இறந்து போனதை மட்டும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இறந்து போன மகனுக்காக அம்மா கவிதை எழுதியிருக்கிறார். அந்தத் துயரம் அவரது மனதை ஆழமாகப் பாதித்தது என்கிறார் மாளவிகா
அப்பா தனது புதிய திட்டங்கள், செயல்பாடுகள் யாவற்றையும் அம்மாவிடம் விளக்குவார். நிறையக் கடன் வாங்கிப் பொதுசேவைகள் செய்வார். அம்மா எதையும் தடுக்கவில்லை. அப்பாவை அவர் ஆழ்ந்து புரிந்து கொண்டிருந்தார் என்கிறார் உல்லாஸ்
தனது பிள்ளைகள் வீட்டிலே ஆரம்பக் கல்வி பயின்ற பின்பு அரசுப்பள்ளியில் கன்னட மொழி வழியாகவே கல்வி பெற வேண்டும் என்பதில் காரந்த் உறுதியாக இருந்திருக்கிறார். அரசுப்பள்ளியில் தான் அவர்கள் படித்திருக்கிறார்கள்.
பெண் வேஷமிட்டு நடிப்பதில் காரந் திறமைசாலி. அவர் சூர்ப்பனகையாக நடித்த போது மீசையை மறைத்து ஒட்டியிருந்த நாடா அவிழ்ந்து வரவே அதைத் தான் எப்படிச் சரிசெய்தேன் என்பதை மாளவிகா வேடிக்கையாக நினைவு கொள்கிறார்
சாதிக்கட்டுபாடுகளை மீறியவர், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர் என்பதால் காரந்த்தின் வீட்டில் அவரது இளைய சகோதரர்கள் உணவு உண்பதோ, தண்ணீர் குடிப்பதோ கிடையாது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். உறவினர்களின் எதிர்ப்பை பற்றிக் காரந்த் கவலைப்படவேயில்லை. அவரது உலகம் நண்பர்களால் நிரம்பியது.
இரண்டாம் உலகப் போரின் நெருக்கடியால் இந்தியா முழுவதும் உணவுப் பொருட்கள் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது வீட்டிலிருந்த நாய்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக அம்மா புத்தூரின் உதவி ஆணையர் திம்மப்பாவிடம் வாதாடிக் கூடுதல் ரேஷன்களைப் பெற்றார். என்கிறார் உல்லாஸ் காரந்த்.
தந்தையின் வழியாக அவருக்கு எப்படி வனவிலங்குகள் மீதான ஆர்வம் உருவானது. புலிகளை ஆராய்ச்சி செய்வதற்கு எப்படி அது காரணமாக இருந்தது என்பதையும் விளக்குகிறார் ராஜாஜியின் சுதந்திரா பார்ட்டி சார்பாக வேலை செய்த நிகழ்ச்சிகள். ஆச்சார்யா கிருபளானியின் பிரஜா சோசலிஸட் பார்ட்டி சார்பில் தேர்தலில் போட்டியிட்டது. எமெர்ஜென்சியை எதிர்த்து குரல் கொடுத்தது. பத்மபூஷன் விருதைத் திரும்பிக் கொடுத்த நிகழ்வு. இந்திரா காந்தியை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டது.. ஓவியர் கே.கே ஹெப்பருடன் ஏற்பட்ட நட்பு என நிறைய நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
நூலில் காரந்த்தின் சித்திரத்தை விடவும் லீலாவின் ஆளுமை சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. நினைவு தவறிய நிலையில் அவரது இறுதி நாட்கள் கழிந்த விதம் பற்றியும் அம்மாவின் இறப்பை அப்பா எதிர்கொண்ட மனநிலை பற்றியும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்கள்
தனது எழுத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதையும் பொதுக்காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று காரந்த் உயில் எழுதியிருக்கிறார். இன்றும் அவரது பெயரில் அமைந்த அறக்கட்டளை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களுக்கு உதவி செய்து வருகிறது.
••
January 29, 2022
புனைவெழுத்தின் அதிசயம்
மண்டியிடுங்கள் தந்தையே – நாவல் குறித்த விமர்சனம்
– மணி செந்தில்
வெக்கையும், வறட்சியும் நிலவும் நிலப்பகுதியில் அமர்ந்து கொண்டு, பனி பொழியும் ஊசியிலைக் காடுகளைப் பற்றியும், ஸ்டெபி புல்வெளி பற்றியும், பனி படர்ந்த ஜன்னல் கதவுகளைப் பற்றியும், குளிர் இரவின் ஊதற்காற்றினை பற்றியும் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிவதற்கு டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி, புஷ்கின், துர்கனேவ், போன்ற கால, தேச எல்லைகள் கடந்த தீவிர எழுத்தாளர்களின் உயிர்ப்பு மிகுந்த எழுத்துக்கள் காரணமாய் அமைந்து இருக்கின்றன.

குறிப்பாக ரஷ்ய இலக்கியங்கள் தமிழ் நிலத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மகத்தானவை. சோவியத் ரஷ்யா உயர்ந்து மிளிர்ந்து விளங்கிய காலகட்டங்களில், ஏராளமான ரஷிய செவ்விலக்கியங்கள், தமிழில் மொழிப்பெயர்ப்பாகி வெளிவந்தன. மாஸ்கோ பதிப்பகம், ராதுகா பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் உயர்ந்த தாளில், அழகிய ஓவியங்களில், தரமான மொழிபெயர்ப்பில், ரஷ்ய இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் வாசகனுக்கு அளித்தன.
தமிழ் நிலப்பரப்பின் பருவநிலை, பண்பாட்டு கூறுகளுக்கு நேர் எதிரான பண்புகள் கொண்டது ரஷ்ய நிலப்பரப்பு. ஆனாலும் தாஸ்தாவெஸ்கியின் ’வெண்ணிற இரவுகள்’ படித்துவிட்டு தமிழ் வாசகனால் காதல் மயக்கத்தோடு ‘கனவுலகவாசியாக’ எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் திரிய முடிந்தது.
ரஷ்ய இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களில் எண்பதுகளின் தலைமுறையினர் பார்த்து வியந்தது அதன் தாள்களின் தரம், செய்நேர்த்தி கெட்டி அட்டை போன்றவை. குறிப்பாக சிறுவர் இலக்கியங்களில் ரஷ்ய கதைகள் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. ஆயிரக்கணக்கான ரஷ்ய சிறுவர் கதைகள் அப்போது வெளியானது. அதையெல்லாம் யாராவது சேகரித்து வைத்திருந்து, இப்போது அதே தரத்தில் வெளியிட்டால் மிகுந்த வரவேற்ப்பைப் பெறும் என்பது மட்டும் உறுதி.
சில வருடங்களுக்கு முன்பாக உலக இலக்கியப் பேருரைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் “டால்ஸ்டாயின் அன்னாகரீனினா” நூலைப்பற்றி பேசிய பேச்சின் ஒலி வடிவத்தை ரஷ்ய இரவு போன்ற ஒரு குளிர் இரவில் கேட்டபோது, நான் ஒரு காலத்தில் படித்த டால்ஸ்டாயின் அன்னாகரீனினா வேறொரு பெண்ணோ என்கின்ற திகைப்பினை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. காரணம் எஸ்.ரா., டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவை சதையும் ரத்தமும் கொண்ட ஒரு அசல் பெண்ணாக தனது பேச்சின் மூலமாக உருவாக்கியிருந்தார்.
ஏற்கனவே நான் படித்த அன்னா கரீனினா என்பவளை விட, எஸ்.ரா. நிறுவிய அன்னா கரீனா இன்னும் வலி மிகுந்தவளாக, நிராகரிப்பின் வேதனை சுமப்பவளாக மாறி நின்றாள். எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் ரஷ்ய இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாசிக்க வாய்ப்பு கிடைத்த தமிழ் வாசகர்கள், தாங்கள் எந்த காலத்திலிலேயோ சந்தித்த தங்கள் மனம் கவர்ந்த அன்னாகரீனினாவை மீண்டும் நிகழ்காலத்தில் ரத்தமும் சதையுமாக சந்திக்க நேர்ந்தது போல ஒரு வாய்ப்பினை எஸ்.ரா. தமிழ் வாசகர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.
குறிப்பாக டால்ஸ்டாய் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் நிறைய எழுதியிருக்கிறார். ஒரு எழுத்தாளனின் தனிமனித வாழ்க்கைக்கும், அவனது புனைவு எழுத்துக்கும் உள்ள இடைவெளியை எஸ்.ரா., டால்ஸ்டாய் மூலம் இந்த நூலில் ஆய்வு செய்கிறார்.
உலகின் மகத்தான எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் வாழ்வில் போகிற போக்கில், இரண்டே சொற்களில் அடங்கி விடுகிற அக்ஸின்யா, திமோஃபி என்கிற இருவரைப் பற்றி எழுத்தாளுமை எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய பெருங்கதைதான் “மண்டியிடுங்கள் தந்தையே”.
அவர் சொன்னது போல தமிழில் எழுதப்பட்ட முதல் ரஷ்ய நாவல் இது என்பதாக உணர்வதற்கான அனைத்து வசீகரங்களையும், படைப்பாக்கத் திறன்களையும் உள்ளடக்கிய புனைவெழுத்து அதிசயமாக இந்த நூல் திகழ்கிறது.
நாவல் தொடங்கும் முதல் புள்ளியிலேயே, நாம் ரஷ்யாவின் போல்யானா பண்ணைக்கும் , பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்கும் சென்று விடுகிறோம். கிறிஸ்மஸ் மாத பனி இரவில் டால்ஸ்டாய் தனது அறையில், தனிமையில், மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் எழுதிக் கொண்டிருக்கின்ற காட்சி நம் கண்முன்னால் விரிகிறது.
முதல் சில பத்திகளிலேயே, டால்ஸ்டாய்க்கு மிக அருகில் தமிழ் வாசகன் ஒருவன் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு, அவரை உற்றுநோக்கி கவனிக்கிற அனுபவம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.
எந்த பண்டிகை கொண்டாட்டங்களிலும் பெரிதாக ஆர்வம் இல்லாத டால்ஸ்டாய் எழுதுவது ஒன்றையே நிரந்தர கொண்டாட்டமாக, நிகரற்ற சந்தோஷமாக கருதுகிறார். பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் விரியும் தனது கதாபாத்திரங்களின் குணநலன்கள் குறித்த புதிரான எதிர்பாராமைதான் அவரது ஒரே சுவாரசியம்.
சூதாடி இழந்த பெரும் சொத்துக்களில் இருந்து மிஞ்சிய அவரது பண்ணையையும், அங்கே வேலை செய்கின்ற பண்ணை ஆட்களையும் நிர்வகிக்கின்ற அவரது மனைவியான சோபியாவிற்கு, டால்ஸ்டாய் குறித்தான சந்தேகங்கள் எப்போதும் உண்டு.
குறிப்பாக டால்ஸ்டாயின் திருமணத்திற்கு முந்தைய தனது உறவுகள் குறித்தும் டால்ஸ்டாயே தன் மனைவியிடம் தெரிவித்திருந்தார். அந்த உறவுகளில் ஒன்றுதான் அக்ஸின்யா. அந்த உறவில் பிறந்தவன்தான் திமோஃபி. இந்த விபரங்கள் அனைத்தும் சோபியாவுக்கும் தெரியும்.
அக்ஸின்யாவின் மரணச் செய்தியோடு தொடங்கும் நாவல், முன்- பின் காலங்களில் பயணித்து, மனித உளவியல், ரஷ்ய நிலத்தின் பருவ நிலை சூழல்கள், அக்காலத்து அரசியல் போக்குகள், டால்ஸ்டாய் காலத்து சக எழுத்தாளர்கள், அவர்களது எழுத்து முறைமைகள் , எனப் பல செய்திகளை உரையாடல்கள் மூலமாக வழங்கி அக்ஸின்யாவின் மரணத்தை எவ்வாறு டால்ஸ்டாய் எதிர்கொள்கிறார் என்பதோடு முடிவடைகிறது.
எந்த சூழ்நிலையிலும் பழுதடையாத இலக்கிய ஆன்மாவை கொண்ட மாபெரும் எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். அவர் சொந்த வாழ்வில் எப்பேர்ப்பட்ட மனிதனாக இருந்தார், அவரது அகச் சிந்தனைகள் எவ்வாறு இருந்திருக்கும், அக்காலத்து ரஷ்ய நாட்டின் பண்ணை முறைமைகள் எவ்வாறானது என்பது போன்ற நுட்ப செய்திகள் பல இதில் உண்டு.
இதையெல்லாம் தாண்டி கொடும்பாலையில் தாகத்தை சுமக்கின்ற ஒட்டகம் போல, நிகழ்காலத்தில் தனது கடந்தகாலத்தைச் சுமக்கின்ற எளிய மனிதனாய் டால்ஸ்டாய் அடைகிற குற்ற உணர்வும், வாழ்வு பற்றிய போதாமையும் நம்மில் ஒருவராக அவரை பார்க்கச் செய்கிறது.
“காலம்தான் மனிதர்களின் பிரச்சனை. ஒருபோதும் நிகழ்காலத்தில் மனிதர்களால் வாழ முடியாது.” என ஒலிக்கும் எஸ்.ரா.-வின் எழுத்து வீச்சுகள் நாவல் முழுக்க சிதறிக் கிடக்கின்றன.
“ஒருவன் மற்றவர்களுக்கு இல்லை என்றாலும், தனக்குத் தானே உண்மைகளைச் சொல்லி கொள்ளத்தானே வேண்டும்..” என இந்த படைப்பு முழுக்க நிரம்பி தளும்பும் இது போன்ற கேள்விகளால் மனம் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
“ரகசியங்கள் இல்லாத மனிதன் யார்.. மனிதர்கள் புதைக்கப்படும்போது அவர்களது ரகசியங்களும் புதைக்கப்படுகின்றன” என்றெல்லாம் வரிகள் தென்படும்போது படிப்பவரின் உள்மனம் அதனதன் ரகசியங்களை எடை போட தொடங்கிவிடுகிறது.
உண்மையில் ஒரு படைப்பின் வேலைதான் என்ன என்ற கேள்விக்கு, எஸ்.ரா இந்த நாவலில் சொல்வது போல “ஒரு கலையின் வேலை, மனிதர்களை மகிழ்ச்சி படுத்துவது மட்டுமல்ல.., நெறிப்படுத்துவதும், வழிகாட்டுவதும், மேம்படுத்துவதும்தான்.”
“மண்டியிடுங்கள் தந்தையே” என்கின்ற இந்த உயரிய படைப்பு சாதித்திருப்பது என்னவென்றால், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ரகசியங்களை புதைத்துக்கொண்டு, நிகழ்கால சமரசங்களோடு வாழக்கூடிய ஒரு டால்ஸ்டாய் இருக்கிறார் என்பதை உணரச்செய்வதுதான்.
இலக்கியம் என்கின்ற உயரிய கருவியால் மட்டுமே, ரஷ்யாவில் என்றோ வாழ்ந்த டால்ஸ்டாய் என்ற இலக்கிய ஆளுமையோடு, நம்மை பொருத்திப் பார்க்க தூண்ட முடிகிறது.
காயங்களும், ஏக்கங்களும், நிரம்பிய மனித வாழ்வில் குற்ற உணர்வும், வாதைகளும் நிரம்பி இருக்கின்றன என்பதை யோசிக்கும் அதே நேரத்தில், அவல காலதேச மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பொதுமைவயப்பட்டவை என்பதோடு மட்டுமில்லாமல், அவைகள்தான் உலக இலக்கியத்தின் ஊற்றுக் கண்களாக திகழ்கின்றன என சிந்திக்க வைப்பதுதான் இந்த நாவலின் உச்சப்புள்ளியாக கருதுகிறேன்.
Hell is empty; all devils are here. (நரகம் காலியாகி விட்டது. எல்லா சாத்தான்களும் இங்கேதான் இருக்கின்றன) என்பார் ஷேக்ஸ்பியர். ஆனால் இந்த நாவலில் வரும் டால்ஸ்டாய் மனிதர்களின் மனம் சொர்க்கத்தில் நுழைவாயிலாக இருக்கிறது என்கிறார்.
’மனிதர்களின் மனம் ஒரே சமயத்தில் சொர்க்கத்தின் நுழைவாயிலாகவும், நரகத்தின் இருப்பிடமாகவும் திகழ்வதைத்தான் நாம் மானுட வாழ்வு என அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்’ என நாம் நமக்கு நாமே உணரும் புள்ளியில்தான் கலையின் மேன்மை ஒளிர்கிறது.
thanks :
Dots Media
**
January 27, 2022
நூலகம் என்பது
போஜே போஜன்
நூலக மனிதர்கள் குறித்த வாசிப்பனுபவம்.
நூலக மனிதர்கள் : இதை ஒரு கட்டுரை தொகுப்பு என்று சொல்வதை விட வாசிப்பு குறித்த அனுபவங்களின் தொகுப்பு என்று தான் சொல்ல வேண்டும்

புத்தகத்திற்குச் செல்வதற்கு முன்னாள் இந்தப் புத்தகம் பேசும் நூலகம் பற்றிய செய்திகள் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது . தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நூலகம் என்பது ஒரு வெற்றுச் செலவு என்கிற மனநிலை உள்ளது குறிப்பாகச் சில எல்லாம் தெரிந்த அறிவு ராமன்கள் ட்விட்டர் மற்றும் முக நூலில் வந்து இந்தச் சென்னை நூலகம் எதற்கு மதுரை நூலகம் எதற்கு டிஜிட்டல் தொழில்நுட்ப காலத்தில் ஈபுக் போதுமே இது வீண்செலவு எதற்கு என்பது போல் பேசுகிறார்கள்
ஆனால் அவர்கள் ஒரு முறை கூடச் சென்னை அண்ணா நூலகம் பக்கமோ இல்லை கன்னிமாரா நூலகம் பக்கமாகக் கூடச் சென்று இருக்க மாட்டார்கள். அப்படிப் பட்ட மனிதர்களுக்கு இந்தப் புத்தகம் நூலகத்தின் அவசியத்தைப் புரிய வைக்கும்.
மொத்தம் 32 தலைப்புகளும் 208 பக்கங்களும் கொண்ட இந்தப் புத்தகம் நான் மேலே குறிப்பிட்டது போலவே இது ஒரு அனுபவ தொகுப்பு என்று தான் சொல்ல வேண்டும். முதல் கட்டுரையான படிப்பதற்குப் பரிசு தொடங்கிக் கடைசித் தலைப்பான ரகசிய விளையாட்டு வரை ஒரு ஒரு கட்டுரையும் ஒரு அனுபவம் என்றே சொல்லலாம்.
உண்மையில் நூலகம் என்றாலே ஒரு சாதாரண மக்களுக்குத் தோன்றுவது ஒரு குடிமைப் பணி சார்ந்த தேர்வுகளுக்குப் படிக்கும் இடம் ஆகவும் , எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திக்கும் இடமாகவும் மட்டுமே தெரியும் .உண்மையில் இதற்கு அப்பால் நூலகம் எத்தனை பரிமாணங்கள் கொண்டது என்பதற்கான பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
இந்தக் கட்டுரைகளில் வரும் சம்பவங்கள் 60களில் இருந்து தொடங்கித் தற்போது வரை நடைபெறும் கால நிகழ்வாக இருக்கிறது குறிப்பாகப் படிக்கும் புத்தகத்தில் பணம் வைக்கும் நபர் , லா .சா ராவின் தீவிர வாசகி , புத்தகத்தைத் திருடும் புத்தகத் திருடன் , புத்தகத்தின் முடிவு பிடிக்காமல் பக்கத்தைக் கிழிக்கும் வாசகர் , சமையல் குறிப்புகளுக்காகப் புத்தகத்தைத் தேடி வரும் காவல் அதிகாரி , புத்தகம் கிடைக்க வேண்டும் என்று திண்டுக்கல் வரை சென்று வாங்கி வந்த வாசகர் , தமிழ்ப் புத்தகம் மற்றும் கவிதைகளைக் கற்றுத் தேர்ந்த மலையாளி , புத்தகமே துணை என வாழும் ஒரு மனிதர் , முதல் பாகத்தைப் படிக்காமல் இரண்டாம் பாகத்தைப் படிக்கும் வாசகர் , நூலகத்தில் அடி வாங்கிய வாசகன் , இலங்கைத் தமிழர்கள் புத்தகத்தைப் படிக்கப் பட்ட கஷ்டங்கள் , ஒரு நாவல் போன்றே மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் , சிறுவன் செய்த சேட்டைகள் அதனால் அவனுக்குக் கிடைத்த தண்டனை போன்றவை தவிர மேலும் தலைப்புகளும் இதில் இருக்கின்றன.
தமிழில் நூலகம் சம்பந்தமான கட்டுரைகள் மிகவும் குறைவு அதை இந்தப் புத்தகம் தீர்த்து வைக்கிறது என்றே சொல்லலாம். கண்டிப்பாக இந்தப் புத்தகம் ஒரு புதுமையான வாசிப்பு அனுபவம்
••
மறக்க முடியாத நாள்
இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகள் போடப்பட்டதைத் தொடர்ந்து, நிபந்தனையற்ற சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டது.

இந்தச் சரணடையும் முடிவிற்குப் பின்னால் என்ன நடந்தது என்பதை மிக விரிவாக Japan’s Longest Day என்ற திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். 1967 ல் வெளியான திரைப்படமிது. யுத்த திரைப்படங்களில் இப்படம் தனித்துவமானது.
போட்ஸ்டாம் பிரகடனம் எனும் ஜப்பான் சரணடைதலுக்கான விதிமுறைகளை வரையறுக்கும் பிரகடனத்தை . ஜூலை 26, 1945 இல், அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமன், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் சீனா அதிபர் சியாங் கை-ஷேக் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டார்கள். ஒருவேளை இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து ஜப்பான் சரணடையவில்லை என்றால் அது முழுமையான அழிவைச் சந்திக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய இராணுவம் படுதோல்வி அடைந்து வந்த போதும் தனது கடற்தாக்குதலையும் வான்வெளி தாக்குதலையும் நிறுத்தவில்லை. போரின் முடிவு தங்களுக்குச் சாதகமாக அமையும் என்றே நம்பினார்கள்.
நேசப்படைகளால் ஜப்பானின் ஆயுதம் தாங்கிய கப்பல்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கில் ராணுவவீரர்கள் போர்முனையில் இறந்து போனார்கள். நிலைமை கைமீறிப்போனதை ராணுவ தலைமை உணர்ந்து கொண்டது.
இன்னொரு பக்கம். இதற்கு மேல் காத்திருந்து பயனில்லை. ரஷ்யா படையெடுத்து வந்து ஜப்பானைப் பிடித்துக் கொண்டுவிடும் என்று ஜப்பானிய அரசு பயந்தது. ஆகவே உடனடியாக நேசநாடுகளிடம் சரணடைந்துவிட வேண்டியது தான் என்று ஜப்பான் முடிவு எடுத்தது.

ஜப்பானின் வரலாற்றில் அந்த முடிவு ஒரு முக்கியமான திருப்புமுனை. . அரசின் முன்னால் நான்கு முக்கியச் சவால்கள் இருந்தன.
ஒன்று இந்த முடிவை ஜப்பானிய ராணுவம் எப்படி ஏற்றுக் கொள்ளப்போகிறது. இரண்டாவது இதில் மன்னரின் நிலைப்பாடு என்ன. மூன்றாவது ஒருவேளை ஜப்பான் சரணடைந்தால் போர்முனையிலிருக்கும் ராணுவவீரர்களின் கதி என்னவாகும். நான்காவது இந்தத் தோல்வியை ஜப்பானிய மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள். இந்த நான்கு கேள்விகளுக்குமான பதிலை தேடும்விதமாக படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு தேசம் எடுக்கும் ஒரு முடிவின் பின்னே எத்தனை அறியப்படாத கண்ணிகள் இருக்கின்றன. யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். எவ்வாறு பிரச்சனை கையாளப்படுகிறது என்பதை மிகவும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்
அரசின் கோணத்தில் இந்த நான்கு சவால்கள் இருந்தது போலவே இந்தச் சரணாகதியை விரும்பாத ராணுவ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் கோணத்தில் மன்னரைத் தடுத்து நிறுத்துவது எப்படி, திடீர் தாக்குதல் நடத்தி அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்டால் என்னவாகும்., உண்மையான தேசப்பற்றுக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து தாங்களாகப் போரைத் தொடர்ந்தால் எப்படியிருக்கும் என்பது போன்ற முனைப்புகளும் இருந்தன. அதையும் படம் விவரிக்கிறது
நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து சரணடைதல் அறிவிக்கப்பட ஆறு நாட்கள் ஆனது. அந்த நேரத்தில், டோக்கியோ உட்பட ஜப்பானிய நகரங்களில் வழக்கமான குண்டுவீச்சுத் தாக்குதல்களைத் தொடர்ந்தது ஆகஸ்ட் 15க்கு முன்பும் அன்றுமாக பகலிரவுகளே படத்தில் விவரிக்கப்படுகின்றன. யுத்த அமைச்சராகத் தொஷிரோ மிபுனே பிரமாதமாக நடித்திருக்கிறார். ராணுவ உயரதிகாரியாக அவர் நடந்து கொள்ளும் விதம் அபாரம். ராணுவ பெருமிதம் ஒரு பக்கம், ஏமாற்றம் மறுபக்கம். இரண்டிற்கும் நடுவில் அவர் இந்த முடிவினை கடைசி வரை எதிர்க்கிறார், .வீழ்ச்சியடைகிறார்

படத்தில் ஜப்பானிய மன்னர் ஹிரோஹிட்டோ சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அவரது முகம் காட்டப்படுவதில்லை.
ஜப்பானியப் பிரதமர் தலைமையில் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டங்களும் அதில் நடக்கும் வாதபிரதிவாதங்களும் உண்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
முடிவை ஏற்றுக் கொள்ளச் செய்தால் மட்டுமே ஒப்பந்தம் தயாரிக்க முடியும். அந்த ஒப்பந்தம் ஒவ்வொரு சொல்லாக சரிபார்க்கப்பட்டு பின்பு தான் கையெழுத்திடப்படும். இதற்காக உதவியாளர்கள். எழுத்தர்கள் பகலிரவாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தி கொடுப்பவர்கள் கண் உறக்கமின்றி வேலை செய்கிறார்கள்.
வயதிலும் அனுபவத்திலும் மூத்த அமைச்சர்கள் இந்த முடிவினை ஏற்க மறுக்கிறார்கள். கடைசிவரை போரில் ஈடுபட்டு மரணமடைவோம் என்கிறார்கள். ஆனால் யுத்தம் தொடர்ந்தால் பொதுமக்களுக்குப் பெரிய பாதிப்பு வரும் என்பதால் இந்த முடிவை ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. மன்னர் சரணடையும் முடிவினை அறிவிக்கும் போது அவர்கள் தங்களை அறியாமல் கண்ணீர் விடுகிறார்கள். கதறி அழுகிறார்கள்.
மன்னர் ஹிரோஹிட்டோ நாட்டுமக்களிடம் இந்த முடிவினை ரேடியோ மூலம் அறிவிப்பது என முடிவு செய்கிறார்கள். இதற்கான சிறப்பு ஒலிப்பதிவு நடக்கிறது. ஜப்பான் சரணடைகிறது என்பதை மன்னர் வருத்தத்துடன் அறிவிக்கிறார். அவரது குரலை இசைத்தட்டில் பதிவு செய்து கொள்கிறார்கள். எப்போது இதை ரேடியோவில் ஒலிபரப்புச் செய்வது என்பது குறித்து அடுத்த பிரச்சனை உருவாகிறது. அதற்கான நாள் நேரம் முடிவு செய்யப்படுகிறது
இன்னொரு பக்கம் இந்த முடிவை அறிந்து கொண்ட ராணுவ அதிகாரிகளில் சிலர் ஒன்றுகூடி அரண்மனையைக் கைப்பற்றி மன்னரின் ஒலிபரப்பைத் தடுத்து நிறுத்த முனைகிறார்கள். இதற்கான அதிரடி தாக்குதல் துவங்குகிறது. அவர்களுடன் ராணுவம் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறார்கள்.

இந்தத் தாக்குதலை அறிந்து மன்னர் ஹிரோஹிட்டோ கவலை கொள்கிறார். அரண்மனை சூறையாடப்படுகிறது. மன்னரின் குரல் பதிவுள்ள இசைத்தட்டினை ராணுவ வீரர்களால் கண்டறிய முடியவில்லை.
சரணடையும் முடிவை எடுக்கக் காரணமாக இருந்த பிரதம மந்திரியின் வீட்டினை கிளர்ச்சியாளர்கள் தாக்குகிறார்கள். அந்த நேரம் பிரதம மந்திரி வீட்டில் இல்லாத காரணத்தால் உயிர் தப்புகிறார். கடற்படை அமைச்சர் தங்களால் கடைசிவரை போரிட முடியும் என்று உறுதியாகச் சொல்கிறார்.
இன்னொரு பக்கம் அமெரிக்கக் கடற்படைக்கு எதிராகக் கடைசி வான்வெளி தாக்குதலுக்கு விமானிகள் புறப்படுகிறார்கள். மக்கள் ஆரவாரத்துடன் அவர்களுக்கு விடை தந்து அனுப்பி வைக்கிறார்கள்.
கோழைத்தனமான அரசியல்வாதிகள் பேரரசரை வளைத்துவிட்டதாக நம்பி, கிளர்ச்சியாளர்களில் இருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஓலமிட்டபடியே செல்லும் அவர்களின் இறுதி நிமிஷங்கள் அதிர்ச்சியானவை. சரணடைவதை விட மொத்தமாகத் தற்கொலை செய்து கொள்வதே ராணுவ அதிகாரிகளின் ஒரே தீர்வு என்று சிலர் நம்புகிறார்கள். அட்சுகி விமானப்படைத் தளபதி மலேரியாவால் பாதிக்கப்படுகிறார், அவர் மரணம் வரை தான் போராடப் போவதாகச் சபதம் செய்கிறார். இப்படி ஆயிரம் குழப்பங்கள்.
கிளர்ச்சியாளர்களில் ஒருவர் வானொலி நிலையத்திற்குச் சென்று, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒலிபரப்பைத் தடுத்த நிறுத்த முயலுகிறார். முடிவில் கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தால் ஒடுக்கப்படுகிறார்கள். மன்னரின் உரை ரேடியோவில் ஒலிபரப்பாகிறது. படம் நிறைவு பெறுகிறது
75 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த ஒரு விஷயத்தை இத்தனை பரபரப்புடன் ஆவலுடன் காணச் செய்கிறது என்பதே இப்படத்தின் சிறப்பம்சம்.
படத்தின் துவக்கத்தில் போரில் ஜப்பானுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் கோப்புக் காட்சிகளின் வழியே காட்டப்படுகின்றன. இவ்வளவு அழிவிற்கும் உயிரிழப்புகளுக்குப் பின்பும் ஜப்பான் போரிடவே விரும்புகிறது என்பதையும் காட்டுகிறார்கள்.
ஜப்பானின் கோணத்தில் அதன் தேசப்பற்றை விவரிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான வரலாற்றுக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் ராணுவம் செய்த குரூரங்களும் கொலைகளும் தாக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் மிக மோசமானவை. ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் ஜப்பானிய ராணுவத்தின் தாக்குதலால் பல லட்சம் மக்கள் மாண்டுபோனதைப் பற்றிப் படத்தில் சிறுகுறிப்போ, வருத்தமோ கூடக் கிடையாது.

இவ்வளவு கொந்தளிப்பான சூழலுக்கு நடுவிலும் படத்தில் மன்னர் ஹிரோஹிட்டோ நிதானமாக நடந்து கொள்கிறார். மென்மையான குரலில் நாட்டுமக்களிடம் உரையாற்றுகிறார். அந்த உரை ஒலிப்பரப்பானதை நேரில் கேட்ட அகிரா குரசேவா தனது வாழ்க்கை வரலாற்றில் அதைப் பற்றி எழுதியிருக்கிறார். உண்மையில் ஜப்பானிய மக்கள் மன்னர் தாங்கள் இன்னமும் யுத்தம் செய்யப்போகிறோம். வெற்றிபெறப்போகிறோம் என்று அறிவிப்பார் என்றே நம்பினார்கள். அறிவிப்பு வெளியான போது குரல் சரியாக ஒலிப்பதிவு செய்யப்படவில்லை என்பதால் ரேடியோவில் தெளிவாக கேட்க முடியவில்லை.
இரண்டு நாட்களுக்குள் எவ்வளவு நிகழ்வுகள். எத்தனை கதைகள். 157 நிமிஷங்கள் ஓடக்கூடிய இத் திரைப்படம். டாக்குடிராமா போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. கிஹாச்சி ஒகமோட்டோ இதனை இயக்கியுள்ளார்.
முழுப் படத்திலும் ஒரேயொரு பெண் தான் வசனம் பேசுகிறார். அவர். பிரதம மந்திரி சுஸுகி வீட்டில் உள்ள வேலைக்காரி .ஒரு வரி வசனமது.
சில காட்சிகளில் பெண்கள் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள். உணவளிக்கிறார்கள். பெண் கதாபாத்திரம் எனத் தனியே எவரும் கிடையாது. யுத்தம் என்பதே ஆண்களின் உலகம் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் தான். பாதிக்கப்படுகிறவர்கள் தான் பெண்கள்.
யுத்த காலத்திய ஜப்பானிய ராணுவத்தின் குழப்பமான மனநிலையினையும் வீரர்களிடம் வெளிப்பட்ட மூர்க்கத்தையும் படம் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது.
ஒரு துப்பறியும் படம் போல அடுத்து என்ன நடக்கும் என்ற பதைபதைப்பினை படம் உருவாக்குகிறது.

War Room படம் முழுவதும் ஒரு குறியீடு போலவே காட்டப்படுகிறது. காட்சிக்கோணங்களும் ஒளிப்பதிவும் மிகச்சிறப்பானவை . அந்த அறையில் எவரும் தன்னுடைய முடிவுகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை.. மாறாக ஒத்துக் கொள்வதும் மறுப்பதும் என நாடகமாடுகிறார்கள். ஒவ்வொரு முடிவும் கட்டாயத்தாலே ஏற்கப்படுகிறது. அரசின் முக்கிய முடிவுகளுக்குப் பின்னால் எண்ணிக்கையற்ற சிக்கல்கள். தடைகள், சரிபார்த்தல்கள் இருக்கிறது என்பதை வியப்போடு அறிந்து கொள்கிறோம்.
நாலரை நிமிஷங்கள் கொண்ட மன்னரின் ரேடியோ உரை தெளிவற்ற குரலில் இன்றைக்கும் கேட்கக் கிடைக்கிறது. உணர்ச்சிப்பூர்வமான நாடகமாகப் படத்தைச் சித்தரிக்க வேண்டும் என்பதே இயக்குநரின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. அது நிறைவேறியிருக்கிறது
வரலாற்று நிகழ்வுகள் ஒரு நாளை நீண்டதாக்கிவிடுகின்றன. அப்படியான ஒரு நாளை துல்லியமாக மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள் என்ற வகையில் இப்படம் முக்கியமானதே..
காழ்ப்புணர்வின் வடு
உறுபசி (நாவல்) – வாசிப்பனுபவம்
முனைவர் ப. சரவணன், மதுரை.
‘உறு’ என்பது, ‘மிகுதி’ என்ற பொருளில் வரும் ஓர் உரிச்சொல். மிகுதியான ‘பசி’ என்ற பொருளில் இந்த நாவலின் தலைப்பு அமைந்துள்ளது. இந்தப் பசி எதைக் குறிக்கிறது?. நிச்சயமாக உணவை அல்ல. எல்லாவற்றின் மீதான ‘காழ்ப்புணர்வு’தான் இந்தப் ‘பசி’ என்று நான் கருதுகிறேன்.
அந்தக் காழ்ப்புணர்வு மிதமிஞ்சிப் போய்விடுகிறது. அதனால் ‘உறுகாழ்ப்புணர்வு’ என்றும் நாம் இந்த நாவலுக்குத் தலைப்பிடலாம். சரி, ‘இது யார் மீதான, எதன் மீதான காழ்ப்புணர்வு?’ என்பதை இந்த நாவலை மையப்படுத்தி நம்மால் வகைப்படுத்திக்கொள்ள இயலுகிறது.

தன் மனத்தின் மீதான காழ்ப்புணர்வு, தன் இயலாமையின் மீதான காழ்ப்புணர்வு, எதிரிகளின் மீதான காழ்ப்புணர்வு, நண்பர்களின் மீதான காழ்ப்புணர்வு, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதான காழ்ப்புணர்வு, உறவினர்களின் மீதான காழ்ப்புணர்வு என இந்தக் காழ்ப்புணர்வு மண்ணடி வேராகப் படர்ந்துகொண்டே இருக்கிறது.
‘எல்லாவற்றையும் துறந்துவிட்டுக் காட்டுக்குச் சென்று தியானம் செய்தல்’ என்பது, அகவிடுதலைக்கான முதற்படியாக முற்காலத்தில் நம்பப்பட்டு, பின்பற்றப்பட்டது. இந்த நாவலில், நண்பர்கள் அழகர், ராமதுரை, மாரியப்பன் ஆகிய மூவரும் கானல்காட்டுக்குச் செல்வதும் இதுபோன்ற மனநிலையில்தான்.
அவர்கள் துறக்க நினைப்பது, தம்முள் நிறைந்துவிட்ட காழ்ப்புணர்வைத்தான். அதனை மெல்ல மெல்ல துறந்துகொண்டே கானல்காட்டுக்குள் நுழைகிறார்கள். அவர்கள் அடையவிரும்பும் ‘அகவிடுதலை’ என்பது, மீண்டும் தமது இனிய கல்லூரி வாழ்க்கையாகத்தான் இருக்கிறது.
அந்த வாழ்க்கைதான் இவர்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. மீண்டும் தொட்டிலுக்குத் திரும்புதல் என்பதும் மீண்டும் கிளைக்குத் திரும்புதல் என்பதும் எந்தக் குழந்தைக்கும் எந்தப் பூவுக்கும் நிகழாதே!
இவர்கள் எந்தக் கல்லூரி வாழ்க்கை தமக்கு இனிப்பானதாக இருந்ததாகக் கருதுகிறார்களோ அந்தக் கல்லூரி வாழ்க்கையில்தான் இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொருவருக்கிடையிலும் காழ்ப்புணர்வினை வளர்த்துக்கொண்டார்கள். இவர்கள் மட்டுமல்ல யாழினியும்தான்.
இவர்கள் விரும்பும் அகவிடுதலையை அடைந்தவராக, எந்தவிதமான காழ்ப்புணர்வும் அற்றவராக நமக்குத் தெரிபவர் சன்னாசிதான். இவர்கள் சன்னாசி போல வாழ்ந்துவிடலாம்தான். ஆனால், இவர்களுக்கு அடிப்படையிலேயே நிலையற்ற மனது வாய்த்துவிட்டதால், இவர்களால் சன்னாசியைப் போல ஒரு கணம்கூட வாழ முடியாது. இவர்களின் மனம் இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.
தன்னுடைய மனத்தாலும் தனக்கான விதியாலும் அலைக்கழிக்கப்படும் மனிதர்களாகவே இந்த நாவலில் இடம்பெற்றுள்ள பல கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, சம்பத்தும் ஜெயந்தியும்.
என்னைப் பொறுத்தவரை இந்த இருவருக்கும் பெரிய அளவில் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. வாழ்க்கை முழுவதும் இருவருமே ஆதரவற்ற நிலையில்தான் இருக்கிறார்கள். இருவரும் ‘இக்கணம்’ மட்டுமே வாழக்கூடியவர்களாகத் திகழ்கிறார்கள்.

இவர்கள், ‘கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்ததால் மட்டுமே இந்த நிலைக்கு ஆளானார்கள்’ என்று நாம் கூறிவிட முடியாது. இவர்களால் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமையையும் நாம் இங்குச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சம்பத் விரும்பித்தான் தமிழ் இலக்கியத்தைப் படிப்பதற்காகக் கல்லூரியில் சேர்கிறான் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
“காற்றில் அடித்துச் செல்லப்படும் இறகைப்போலச் சம்பத் ஏதேதோ திசைகளில் சுற்றியலைந்து கொண்டிருந்தான்.”
சம்பத் வெவ்வேறு திசைகளிலும் மற்றவர்கள் ஒரே திசையிலும் சுற்றிக்கொண்டிருந்தார்கள். யாருக்கும் எந்த இலக்கும் வலுவாக இல்லை. அவர்கள் எந்தப் பிடிப்பும் இல்லாமல் தன்னைத் தன்போக்கில் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.
வாழ்க்கை ஒவ்வொருவரையும் அல்லது நண்பர் குழுவினரை ‘கேரம்போர்டு காயின்கள்’ போலக் கலைத்துப் போட்டுவிடுகிறது. ஆட்டம் தொடக்கும்போது ‘கேரம்’ பலகையின் மையத்தில் அடுக்கப்பட்ட ‘காயின்’கள் வலுவான முதல் அடித்தலில் மூன்று திசைகளுக்கும் சிதறுவதுபோல, இவர்கள் காலத்தால் சிதறடிக்கப்படுகிறார்கள். தெறித்து விழும் வாழிடச்சூழலில், இவர்கள் தாமாகவே காலூன்றி முன்னேறுகிறார்கள்.
அந்த முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. அந்த முன்னேற்றத்தில் ஏற்பட்டுவிட்ட சமமின்மையே இவர்களுக்குள் காழ்ப்புணர்வு எழ பெரிய காரணமாகி விடுகிறது. சம்பத் தான் ‘கொலைகாரனாகிவிடுவேனோ?’ என்று அஞ்சுவதுகூட ஒருவகையில் சமுதாயத்தின் மீது தான்கொண்ட காழ்ப்புணர்வுதான். கானல்காட்டில் எம்.ஆர். எம். செட்டியாரின் குண்டு இல்லாத வேட்டைத் துப்பாக்கியை ஏந்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் குறிபார்த்துக்கொள்வதும் இந்தக் காழ்ப்புணர்வின் வெளிப்பாடன்றி வேறு என்ன?
இந்த நாவலில் சம்பத்தின் மனப்போக்கு மிக முக்கியமானது. அதற்கு இணையானவைதான் அழகர், மாரியப்பன், ராமதுரை ஆகிய மூவருக்கும் சம்பத் பற்றிய மனப்போக்குகள். இவர்கள் நால்வரும் நல்ல நண்பர்கள்தான். ஆனால், அதேநேரத்தில் இவர்கள் நால்வரும்தான் நால்வருக்கும் உளவியல் சார்ந்த எதிரிகள்.
இவர்கள் ஒவ்வொருவரும் மற்ற மூவரைப் பார்த்தே தம்மை எடை போட்டுக்கொள்கிறார்கள். இவர்களுக்குரிய உலகம் என்பது, இந்த நாவல்கூட்டணியாக மட்டுமே இருக்கிறது. அதுதான் சிக்கல். இந்தச் சிக்கலின் மையத்திலிருந்து விடுபட இவர்கள் பணியிடத்தை மாற்றிச் சென்றாலும்கூட, இவர்களின் மனம் இந்தச் சிக்கலில் விரும்பியே அகப்பட்டுக்கொள்கிறது.
இறுதிவரை இச்சையிலிருந்து விடுபட முடியாத மனிதனாகச் சம்பத் இருக்கிறார்.
“அடிபட்டுக் காயம் உலராத மிருகம் தன் மூர்க்கம் குறையாமல் அலைந்துகொண்டிருப்பது போன்று சம்பத் சுற்றிக்கொண்டே இருந்தான்.”
சம்பத்தின் தொடர்ச்சியை நாம் மாரியப்பனிலும் காணமுடிகிறது. சம்பத் அந்த இச்சையை வெளிப்படுத்திக்கொண்டார். மாரியப்பன் மறைத்துக்கொண்டார். மறைத்துக்கொள்வதால் மட்டும் ஒரு மனிதர் நல்லவராகிவிட முடியுமா, என்ன?
இச்சையை வெளிப்படுத்திக்கொள்பவர் ஒரு தவறு செய்கிறார். இச்சையை மறைப்பவர் மறைத்தலாகிய மற்றொரு தவறையும் செய்கிறார் என்றுதான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பார்த்தால், சம்பத்தைவிட மிகவும் தாழ்வானவராக நான் மாரியப்பனையே மதிப்பீடு செய்வேன்.
“சம்பத், “நான் ஒரு தக்கை. கிணற்றில், ஆற்றில், கடலில் என்று எவ்வளவு தண்ணீரில் தூக்கிப்போட்டாலும் மிதக்கும் தக்கை” என்றான்.”
சம்பத்தை நம்மால் சமாளித்துவிடமுடியும். ஆனால், மாரியப்பனைப் போன்றோரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர் யாழினியின் மீது கொண்டது வெறும் காமம் மட்டுமே என்பதை நிறுவுவதற்கு, இந்த நாவலின் இறுதியில் அவரும் யாழினியும் சந்திக்கும் காட்சியே போதுமானது.
சம்பத், மாரியப்பன் ஆகிய இருவருக்கும் எதிர்நிலையில் ராமதுரை இருக்கிறார். அவருக்கும் ஜெயந்திக்குமான உறவு எத்தகையது? தோழனின் மனைவியும் தோழிதானே! அதை உணந்தவர் ராமதுரை மட்டும்தான்.
இந்த நாவலை நமக்குச் சொல்லும் கதைசொல்லியாக வரும் அழகர் இந்த மூவரையும்விட எந்த விதத்திலும் உயர்ந்தவரும் அல்லர்; தாழ்ந்தவரும் அல்லர். ஒருவகையில் அழகரும் அயோக்கியர்தான். அவர் எப்போதும் ராமதுரையைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார். பொதுவாகவே சமூகம் அப்படித்தான் இருக்கிறது. அத்தகைய சமூகத்தின் ஒரு பிரதிநிதியாகவேதான் அழகர் இருக்கிறார்.
‘வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்தல்’ என்பது, எவ்வளவு மனஅழுத்தம் நிறைந்தது என்பதை இந்த நாவல் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளது. ‘சம்பத் தானே விரும்பி விரும்பி வறுமைக்கோட்டுக்குக் கீழே சென்றுவிடுகிறானோ?’ என்றும்கூட எண்ணத்தோன்றுகிறது.
வறுமையில் இருக்கும் ஒவ்வொருவரும் வளமையை எட்டிப் பார்த்தபடியே இருக்கிறார்கள். அதுவே அவர்களை மேலும் மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் வளமையாக இருப்பவர்கள் எட்டிப் பார்க்கின்றனர். வளமையாக இருப்பவர்கள் தனக்கும் மேலாக வளத்துடன் இருப்பவர்களை எட்டி எட்டிப் பார்க்கின்றனர். இது சங்கிலித்தொடர்போல நீள்கிறது. இதற்கு முடிவே இல்லைபோலும். எவ்வளவு பணத்தைப் பெற்றாலும் எவ்வளவு வசதிவாய்ப்புகளை அடைந்தாலும் மனம் அமைதிகொள்ளாது போலும்.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் தன்னுடைய வாழ்க்கையை ஒரேயடியாக வளமைக்குக் கூட்டிச்செல்ல நினைத்துத்தான் சம்பத் ‘லாட்டரி டிக்கெட்’ (பரிசுச்சீட்டு) வாங்குகிறான். உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்பத் தொடங்கிவிடுகிறான்.
அவனுடைய கல்லூரிக்காலக் கொள்கைகள் அனைத்தும் காலவோட்டத்தில் அவனைவிட்டு நழுவிவிடுகின்றன. அவன் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றிச் சென்றவர்கள் சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கும்போது, இவன் மட்டும் தடுமாறிவிழுந்துவிட்டதுதான் வியப்பைத் தருகிறது.

அதற்குக் காரணங்களாக, ‘அவன் இளமையில் மேற்கொண்ட அதீத துடிப்புத்தனம்தான் காரணமோ?’ என்றும் ‘அவனை முறையான வழியில் நடத்த சரியான நபர்கள் கிடைக்கவில்லையோ?’ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
அவன தன் வீட்டுச்சூழலிலிருந்தும் சமுதாயச் சூழலில் இருந்தும் எடுத்துக்கொள்ளும் கட்டற்ற சுதந்திரம்தான் அவனை வாழ்க்கையில் கட்டற்று வாழச் செய்துவிட்டது. முன்னோர்கள் ‘கால்கட்டு’ என்று திருமணத்தைக் குறிப்பிடுவது, இவ்வாறு கட்டற்று வாழ்வதைத் தடுப்பதற்குத் தானோ? ஆனால், திருமணத்திற்குப் பின்னரும் சம்பத் தொடர்ந்து கட்டற்று வாழவே செய்கிறான்.
அவன் ஒரே பிறவியில் எண்ணற்ற பிறவில் வாழ்ந்து அடையும் வெவ்வேறு விதமான இன்ப, துன்பங்களை அடைந்துவிடத் துடிக்கிறான் போலும். தான் இவ்வாறெல்லாம் இருப்பதற்கு அடிப்படைக்காரணமாக அவன், தான் மிகவும் கோழை என்றும் தனக்கு எல்லாவற்றைப் பற்றியும் அச்சம் இருக்கிறது என்றும் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவே தான் முரடனாகப் பிறர் முன்னிலையில் காட்டிக்கொள்வதாகவும் குறிப்பிடுகிறான்.
அவன் தனக்குள் ஒருவிதமாகவும் தனக்கு வெளியில் வேறுவிதமாகவும் இருக்கிறான். அவனுடைய மனம் அவனுக்குள்ளும் அவனுக்கு வௌியிலும் மாறி மாறி ஊடாடுகிறது. இந்த ஊடாட்டம்தான் எதிலும் அவனுடைய நிலையற்ற அவனுடைய செயல்பாடுகளுக்குக் காரணமாக அமைகிறது.
குழம்பிய மனம் உடையவர்களால் அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் என்றுமே சிக்கல்களை உருவாக்கியபடியே இருப்பர். இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தாமே காரணம் என்பதை உணர்ந்தாலும் அதிலிருந்து அவர்களால் விடுபட முடியாது.
அவனுடைய மனம் ஒரு கணம் தெளிந்தும் மறுகணம் குழம்பியும் விடுகிறது. அவன் மனத்தெளிவாக இருக்கும்போது மட்டுமே எல்லாவற்றையும் சிறப்பாகச் சிந்திக்கிறான். அவன் மனம் குழம்பும்போது, அவன் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சீரழித்துவிடுகிறான்.
“மனிதன் கண்டுபிடித்தவற்றிலேயே மிகவும் மோசமானவை ‘சுவர்கள்’ ” என்றான் சம்பத். “நாம் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாததுமான எத்தனையோ சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கிறோம்.”
ஆம்! எல்லோரும் எண்ணற்ற சுவர்களால் பிரிக்கப்பட்டுள்ளார்கள். சம்பத் போன்றோர் வெளியில் தெரிந்த அயோக்கியர்கள். அழகர், மாரியப்பன் போன்றோர் வெளியில் தெரியாத அயோக்கியர்கள். இவர்களின் கூட்டிணைவுதான் இந்தச் சமூகம்.
இந்தச் சமூகத்தில்தான் யாழினியும் ஜெயந்தியும் வாழநேர்கிறது. இவர்களையெல்லாம் வேடிக்கை பார்த்தபடியே நிம்மதியாகச் சுவர்கள் அற்ற கானல்காட்டில் இருக்கிறார் சன்னாசி.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நாவல்களிலேயே இந்த நாவல்தான் பக்க அளவில் சிறியது. ஆனால், எண்ணற்ற ‘சிடுக்குகள்’ உடைய நாவல் இது. படித்து முடித்ததும் நம் மனத்தை உலுக்கியெடுக்கும் கதைமாந்தர்கள் நிறைந்த நாவல் இது.
– – –
காதல் மீதான பெருங்காதல்
‘மண்டியிடுங்கள் தந்தையே’ (நாவல்)
ந. பிரியா சபாபதி மதுரை.

மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் வழியே டால்ஸ்டாய் மாறுபட்ட மனிதராகக் காணப்படுகிறார். சோபியாவின் பார்வை வழியாக நாம் அவரை அன்பில்லாத மனிதராகவே எண்ணுவோம். ஆனால், அக்ஸினியாவின் பார்வை வழியே டால்ஸ்டாயைக் காணும்பொழுது, நாம் பிறிதொரு டால்ஸ்டாயைத்தான் கண்டடைகிறோம்.
டால்ஸ்டாய் அன்பிற்கு ஏங்கிய மனிதர் மட்டும் அல்ல; அன்பு நிறைந்தவரும் கூட. அக்ஸினியா மீது அவருக்குக் காதலைத் தாண்டிய தீராத அன்பு இருந்தது. காமம் கொண்ட காதலாக இருந்திருந்தால், அது என்றோ மறைந்திருக்கும். ஆனால், டால்ஸ்டாய் – அக்ஸின்யா ஆகியோருக்கு இடைய இருந்த காதல், ‘காதல் மீதான பெருங்காதல்’. அது, வற்றாத நீரூற்றுப் போன்றது
டால்ஸ்டாய்க்குத் தன் மனைவி சோபியா மீது தீராக் காதல் உண்டு. அதை அவர் பலவழிகளில் உணர்த்தியிருந்தாலும் சோபியாவின் மனம் ஊஞ்சல் போல முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டே இருக்கிறது. பெண்களின் மனத்தினை மட்டுமல்ல, பல நேரங்களில் ஆண்களின் மனத்தினையும் யாராலும் புரிந்து கொள்ள முடியாதுதான்.
டால்ஸ்டாயின் எண்ணம் முழுவதும் சமுதாய முன்னேற்றத்தில் குவிந்துள்ளது. இதனாலேயே டால்ஸ்டாய் பலரின் எதிர்ப்புகளை நேரிடையாகவும் மறைமுகமாகவும் சந்திக்க நேரிடுகிறது. ஆயிரம் கைக்கொண்டு ஆதவனை மறைக்க இயலுமா?. இயலாது. அது போலத்தான் டால்ஸ்டாயின் ஆளுமையும். அவர் கொண்ட கொள்கையில் உறுதியாகவே இருக்கிறார். அவரின் ஆளுமை யாராலும் மறைக்க இயலாதவாறு சுடர்ந்து கொண்டே இருக்கிறது.
இலக்கியத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்திருக்கும். ஆனால், டால்ஸ்டாயின் கண்ணோட்டம் அனைவரையும் விட்டு வெகு தொலைவில் உள்ளது. அதனால் , ‘பிறருடன் முரண்பட்டவரோ, இவர்? என எண்ண வேண்டாம். இது முரண் அல்ல; இலக்கியத்தைப் பற்றிய சரியான உற்றுநோக்கல்..
‘எழுத்துப்பணியை மட்டும் தன் பணி’ என எண்ணாமல், பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் மக்களுக்காகப் பல உதவிகள் புரிந்தார் டால்ஸ்டாய். இதனால், அரசாங்கம் அவரைக் கண்டிக்கிறது. அரசினை எதிர்த்துக் குரல் எழுப்புகிறார். எதற்கும் அஞ்சாமல் செயல்படுகிறார்.
நாவலின் கடைசியில் டால்ஸ்டாய் அக்ஸின்யாவின் சமாதியைத் தேடிச் செல்கிறார்.
“ டால்ஸ்டாய் தன்னுடைய கையிலிருந்த மஞ்சள் சிவப்புப் பூக்களை அக்ஸின்யாவின் புதைமேட்டின் மீது வைத்தார். அக்ஸின்யாவிடம் எதையோ சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால், வார்த்தைகள் வரவில்லை. மௌனமாக அந்தப் புதைமேட்டினைப் பார்த்தபடியே இருந்தார்.
இந்த இடத்தில் இந்த நாவலின் தலைப்புப் பொருத்தமாகிவிடுகிறது. டால்ஸ்டாய் மண்டியிடுகிறார். ஆனால், நேரடியாக அல்ல; தன் மனத்தால். அதுவும் எல்லோரும் பார்க்கும்படியாக அல்ல; மறைமுகமாகத்தான். மறைந்துவிட்ட அக்ஸின்யாவிடம் அவரால் மறைமுகமாகத்தானே மண்டியிட முடியும்?
என் அகத்திற்கு ஒரு ‘குரு’ என இந்நாவலில் ஒருவர் உள்ளார். அவரை ‘முட்டாள் டிமிட்ரி’ என்றே அனைவரும் அழைக்கின்றனர். ஆனால், அவர் ‘முட்டாள்’ அல்லர். அவர் கூறும் ஒவ்வொரு சொல்லும் அகவிடுதலையைத் தரக் கூடியதாகும். ‘அகவிடுதலையை விரும்பாதவர்களே அவரை ‘முட்டாள்’ என்று அழைத்தனர்’ என்றுதான் நான் எண்ணுகிறேன். அவருக்கும் தியோஃபிகான நட்பு போற்றத்தகுந்ததாகும். அவர் திமோஃபியின் மனம் பிறழும் போதெல்லாம் அந்த மனத்தினை இறுக்கிப் பிடித்து, மீண்டும் திமோஃபியிக்குள்ளேயே கொண்டு சேர்க்கிறார்.
தியோஃபிக்குத் தன் தந்தையைப் பற்றிய எண்ணம் அவன் மனத்திற்குள்ளும் சொல்லுக்குள்ளும் அலைக்கழிக்கும்போது, டிமிட்ரிதான் தன் சொல்லின் வழியாக அவனுக்கு வழி காட்டுகிறார். காலம் பல நேரங்களின் அன்பானவர்களை எப்போதும் நம்முடன் இருக்கச் செய்வதில்லை. டிமிட்ரியை காலம் அழைத்துச் சென்று விடுகிறது.
சோபியாவை டால்ஸ்டாயின் மனைவியாகக் காணும்பொழுது கணவன் மீது ஐயம்கொண்ட பெண்ணாகவே நமக்குத் தோன்றும். ஆனால், அவர் அதைத் தாண்டி மனவலிமை கொண்ட பெண்ணாகவே தோன்றுகிறார். டால்ஸ்டாயின் இத்தகைய மிகப் பெரிய வளர்ச்சிக்கு அவர் உறுதுணையாகவே இருந்துள்ளார். டால்ஸ்டாயின் எழுத்துக்கு எப்பொழுதும் தோள் கொடுத்துள்ளார்.
இலக்கியவாதிகளுக்குப் பெரும்பாலும் தன்னையும் தன் எழுத்தையும் நேசிக்கும் காதலி கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், மனைவி கிடைக்க வாய்ப்பில்லை. ‘காதலி’ என்பது, ஓர் எல்லை. காதலிக்கும் பொழுது குடும்பம் நடத்துவதில்லை. மனைவியானவள் குடும்பம் நடத்த வேண்டும். அவரையும் அவர் எழுத்தையும் நேசிக்கும் ‘அன்புள்ளம்’ டால்ஸ்டாக்கு ஒருசேரக் கிடைத்துள்ளது. சோபியா கோபக்காரராகவே நம் பார்வைக்குத் தோன்றினாலும் அவர் தன் கணவர் மீதும் தன் கணவரின் எழுத்தின் மீதும் ஆழ்ந்த அன்பும் மதிப்பும் கொண்டவர்.
தன் கணவரையும் தன் கணவரின் எழுத்தையும் நேசிக்கும் மனைவி எத்தனை எழுத்தாளர்களுக்குக் கிடைத்துள்ளது? அதே போலத் தன் மனைவியையும் தன் மனைவியின் எழுத்தையும் நேசிக்கும் கணவர் எத்தனை பெண் எழுத்தாளர்களுக்குக் கிடைத்துள்ளது? அந்த வகையில், டால்ஸ்டாய் கொடுத்துவைத்தவர்; சோபியா போற்றுதற்குரியவர்.
‘ஒருவருடைய முழுமையான அன்பு நமக்குக் கிடைத்த பின்போ அல்லது முழுமையான அன்பினை ஒருவருக்குக் கொடுத்த பிறகோ அந்த அன்புள்ளம் நம்மை விட்டு வேறெங்கும் செல்லக் கூடாது’ என எண்ணுவது மனித இயல்பு. இந்த இயல்புதான் சோபியாவிடமும் உள்ளது.
இந்நாவல், ‘பிறரது துயர்களைத் தன்னுடைய துயராக எண்ணுதல் மட்டுமே போதுமானது அல்ல; அவர்களின் துயர்களை நீக்க ஏதாவது செய்ய வேண்டும்’ என்பதை உணர்த்துகிறது.
தன் எழுத்தின் வழியாக டால்ஸ்டாய் பற்றிய அழகான கண்ணோட்டத்தை அளித்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பான நன்றி.
– – –
January 25, 2022
சோமனின் உடுக்கை
சோமனதுடி என்ற கன்னடத் திரைப்படத்தை தூர்தர்ஷனில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக பார்த்திருக்கிறேன். அப்போது ஞானபீடம் பரிசு பெற்றுள்ள கன்னட எழுத்தாளரான சிவராம காரந்த் நாவல்கள் எதையும் வாசித்ததில்லை. சோமனதுடி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சிவராம காரந்தின் அழிந்த பிறகு, மண்ணும் மனிதர்களும் படித்த பிறகு தான் அவர் மிகப்பெரிய இலக்கிய ஆளுமை என்பதை உணர்ந்தேன். சிவராம காரந்த் நாற்பது நாவல்கள் எழுதியிருக்கிறார். நாடகம், நாட்டுப்புற ஆய்வு, யட்சகானம், குழந்தை இலக்கியம், கலைவரலாறு சுற்றுச்சூழல் ஆய்வு என்று பல்வேறு தளங்களில் தீவிரமாக இயங்கியிருக்கிறார்.

சோமனின் உடுக்கை என்ற இந்த நாவலை 1931ல் சிவராம காரந்த் எழுதியிருக்கிறார். இந்நாவல் தலித் இலக்கியங்களின் முன்னோடி படைப்பாகக் கருதப்படுகிறது. 71ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவல் 2002ல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தி.சு. சதாசிவம் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். (இந்நாவலின் இரண்டாம் பதிப்பு இன்று வரை வெளியாகவில்லை)
சோமனதுடி படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தைச் சிவராம காரந்த் எழுதியிருக்கிறார். ஆனால் படத்தை விடவும் நாவல் நெருக்கமாக உள்ளது. குறிப்பாக நாவல் சோமனின் உடுக்கையொலியில் தான் துவங்குகிறது. சோமனுக்கு உடுக்கை என்பது இசைக்கருவியில்லை. அவனது இயலாமையின் வெளிப்பாடு. பசியின் குரல். நிராதரவான தனது இருப்பின் வலியினை அவன் உடுக்கின் வழியே வெளிப்படுத்துகிறான்.

இருட்டென்றால் இருட்டு அப்படியான இருட்டு என்ற முதல்வரி சோமனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குறியீடு போலவே எழுதப்பட்டிருக்கிறது. அடர்ந்த காட்டினுள் உள்ள போகனஹள்ளி என்ற கிராமத்தில் வசிக்கும் சோமன் ஒரு பண்ணை அடிமை. அவனுக்குச் சொந்தமாக இரண்டு எருமைகள் இருக்கின்றன. வாழ்நாளில் தனக்கெனச் சொந்தமாக ஒரு துண்டு நிலத்தைப் பெற்று விவசாயம் செய்ய வேண்டும் என்று கனவு காணுகிறான் சோமன். ஆனால் அது எளிதாக நிறைவேறுகிற விஷயமில்லை என்பதை நாவல் விவரிக்கிறது
போகனஹள்ளியில் ஐம்பது அறுபது வீடுகளே இருக்கின்றன. நூறு இருநூறு பேர் தான் அங்கே வசிப்பவர்கள். சோமன் சிறிய குடிசை வீட்டில் வசிக்கிறான். அவனுக்கு ஐந்து பிள்ளைகள். அவன் மனைவி இறந்துவிட்டாள். பெள்ளி என்ற மகள் தான் வீட்டினை நிர்வாகம் செய்து வருகிறாள். சனிய, குருவ, காள, நீல என்று நான்கு பையன்கள். சோமனுக்குத் தனது வயது எவ்வளவு என்று கூடத் தெரியாது, நான் இன்னும் நூறு வருஷம் பொழச்சிருக்க மாட்டனா என்று கேட்கிறான். அவனுக்கு நூறு என்றால் எவ்வளவு என்றே தெரிந்திருக்காது என்கிறார் காரந்த்.
போகனஹள்ளியின் பக்கத்துக் கிராமத்தில் திருவிழா நடக்கிறது. ஊரே திரண்டு அந்தத் திருவிழா காணச் சென்றிருக்கிறார்கள். திருவிழாவில் சாப்பாடு கிடைக்கும் என்பது தான் முக்கியக் காரணம்
திருவிழா நாளில் சாப்பிடும் நாக்கிற்குச் சுவையறியும் சக்தியே கிடையாது என்று காரந்த் எழுதியிருக்கிறார். உண்மை அது. திருவிழாவின் போது காலை உணவும் மதிய உணவும் கிடைத்துவிடும் ஆனால் இரவு உணவு கிடைக்காது. சோமனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் அப்படியான நிலை தான் ஏற்படுகிறது
திருவிழா முடிந்து தீப்பந்தங்களை ஏந்தியபடியே ஆட்கள் ஊரை நோக்கி வருகிறார்கள். அது திரைப்படத்தில் துவக்க காட்சியாக வருகிறது. ஆனால் நாவலில் இந்த காட்சி திரைப்படத்தை விட விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.
சோமன் கள் குடிப்பவன். அதுவும் கடன் சொல்லிக் குடிப்பவன். போதையில் தன்னை மறந்து உடுக்கை வாசிக்கக் கூடியவன். வீட்டில் உறங்கும் பிள்ளைகளை எழுப்பிவிடாதே என்று மகள் கண்டிக்கிறாள். சோமன் அதைக் கேட்டுக் கொள்வதில்லை. அவன் உடுக்கை வாசிக்கும் போது மனதிலுள்ள வேதனைகள் தீர்ந்து போவதாக உணருகிறான்.
சோமனின் குடும்பத்தில் நீலனும் காளனும் எப்போதும் நோயாளியாக இருக்கிறார்கள். அடிக்கடி குளிர்காய்ச்சல் வந்துவிடுகிறது. சவலைப்பிள்ளைகள். பெள்ளி காட்டிற்குள் சென்று புல்வெட்டுகிறாள். சுள்ளி பொறுக்கி வந்து சமையல் செய்கிறாள். கல்யாண வயது வந்த மகன்களை இன்னமும் சிறார்களை போலவே சோமன் நினைக்கிறான்.
என்றோ வாங்கிய ஐந்து ரூபாய்க் கடன் வளர்ந்து இருபது ரூபாய்க் கடனாகிவிட்டதாகச் சொல்லி காபி எஸ்டேட் கங்காணி மன்வேல் அவன் வீடு தேடி வந்து மிரட்டுகிறான். வாங்கிய கடனுக்கு வேலை செய்யச் சனிக்கிழமை காபி எஸ்டேட்டுக்குப் புறப்படும் படி கட்டளை இடுகிறான். பிள்ளைகளைத் தனியே விட்டுப் போகச் சோமனுக்கு விருப்பமில்லை. தனது மாடுகளை விற்று அந்தப் பணத்தில் கடனை அடைக்கவும் அவன் விருப்பமில்லை. ஆகவே என்ன செய்வது எனத் தெரியாத குழப்பத்தில் தடுமாறுகிறான்
இந்த சூழலில் ஒரு நாள் மழையில் நனைந்து வீடு திரும்புகிறான் சோமன், காலையில மகள் எழுப்பும் போது காய்ச்சல் கண்டு படுத்துக் கிடக்கிறான். கங்காணி வீடு தேடி வந்து மிரட்டவே தனது இரண்டு மகன்களையும் காபி தோட்டத்து வேலைக்கு அழைத்துக் கொண்டு போகும்படியாகச் சொல்கிறான்
சனியனும், குருவனும் கங்காணியோடு காபி எஸ்டேட் வேலைக்குப் போகிறார்கள். தோட்டத்தொழிலாளிகள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை மிகத் துல்லியமாக காரந்த் எழுதியிருக்கிறார். அவர்கள் மீதான ஒடுக்குமுறை, கிறிஸ்துவ மதமாற்றம், சுரண்டல், நோய், நெருக்கடியான வாழ்க்கைச் சூழல் இவற்றை விரிவாகச் சித்தரித்துள்ளார்.
எஸ்டேட் வேலைக்குப் போன மகன்களின் வாழ்க்கை திசைமாறிப் போய்விடுகிறது. இன்னொரு பக்கம் கஷ்டத்திலிருக்கும் சோமனைக் கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய முயற்சி நடக்கிறது. அவன் ஏற்க மறுக்கிறான். அவனது இளைய மகன் கிறிஸ்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள மதம் மாறிவிடுகிறான். மகள் பெள்ளி குடும்பத்தின் கடனுக்காகத் தன்னை அழித்துக் கொள்கிறாள்
காட்டின் மழைக்காலம் அவர்களின் அன்றாட வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதை ஒரு அத்தியாயத்தில் சிறப்பாக விவரித்திருக்கிறார்.
தனது உழைப்பிற்கு ஏற்ப கூலி கிடைக்கவில்லை. பலரும் தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று சோமன் உணர்ந்தபோதும் அவன் அவர்களை எதிர்க்கவில்லை. அவர்கள் மீது புகார் சொல்வதில்லை. அவன் நல்லது நடந்துவிடும் என நம்புகிறான். பூசாரி பெள்ளியை ஏமாற்றுகிறான். சாமிக்கு நேர்ந்து கொண்டு பலி கொடுக்க வேண்டும் என்கிறான். காச்சல் தீர சாந்திகழிப்பு செய்துவிட்டால் போதும் என்கிறான் இன்னொருவன். இப்படி அறியாமையில் ஊறிக்கிடந்த அன்றைய வாழ்க்கையை நிதர்சனமாகக் காரந்த் எழுதியிருக்கிறார்.
பெள்ளி கங்காணி மன்வேலோடு நெருங்கிப் பழகுவதைச் சோமனால் ஏற்க முடியவில்லை. தன் வீட்டிலே அவர்கள் ஒன்றாக இருப்பதைக் கண்டதும் கோபத்தில் மன்வேலை தாக்குகிறான். ஆத்திரத்தில் மகளை என்ன செய்வது எனத் தெரியவில்லை. அவளது கழுத்தை கையால் இறுக்கிப்பிடித்து வெறிபிடித்தவன் போல அவளை முத்தமிட்டுப் பித்தனைப் போலச் சிரிக்கத் துவங்கினான் என்ற வரி நம்மை உலுக்கிவிடுகிறது.
அந்த முத்தமும் சிரிப்பும் பெள்ளியை உலுக்கிவிடுகிறது. புதுமைப்பித்தனின் கதை ஒன்றிலும் இது போல முதலாளியின் பணத்தை அபகரித்துக் கொண்டு தலைமறையாக ஒடப்போகும் தந்தை வயது வந்த மகளை முத்தமிடுவார். சோமன் அந்த முத்ததின் மூலம் அவள் இன்னமும் சிறுமியே என்று அடையாளம் காட்டுகிறான்.
சோமன் சிரிக்கும் விதமும் அவனது முத்தமும் நாவலின் மகத்தான தருணம் என்பேன்.
கோபம் தீராமல் மகளைக் குடிசையை விட்டு வெளியே தள்ளி கதவை மூடுகிறான் சோமன். தனக்கு இனி உறவென யாரும் வேண்டாம் என்று முடிவு செய்து புலம்புகிறான்.
மறுநாள் ஆத்திரம் தீராமல் பண்ணையார் நிலத்தை உழுகிறான். கலப்பையையும் நுகத்தடியினையும் உடைத்துச் சுக்கு நூறாக்குகிறான். அப்படியும் கோபம் அடங்காமல் அவற்றிற்குத் தீ மூட்டுகிறான். பிறகு தனது உடுக்கையை எடுத்து அடிக்கத் துவங்குகிறான். குடிசையின் கதவை மூடிக்கொண்டு ஆங்காரத்துடன் உடுக்கை அடிக்கிறான்.
நாவலின் துவக்கத்தில் கேட்ட அதே உடுக்கை ஒலி தான் முடிவிலும் ஒலிக்கிறது. ஆனால் இந்த முறை அது சோமனின் ஏமாற்றத்தை, தாங்க முடியாத இருப்பின் வேதனையை ஒலிக்கிறது.
திருவிழா முடிந்து திரும்பி வரும் போது பண்ணையார் இருட்டில் கேட்கும் உடுக்கை ஒலி கேட்டு திடுக்கிட்டுப் போவதைப் போல நாமும் சோமனின் இந்த உடுக்கை ஒலி கேட்டுப் பதற்றம் கொள்கிறோம். சோமனுக்காக வருந்துகிறோம்.
சோமனின் கனவு கடைசிவரை நிறைவேறவேயில்லை. அவன் தன் பிள்ளைகளை இழக்கிறான். சொல்லமுடியாத கஷ்டங்களை அனுபவிக்கிறான். வாழ்க்கை அவனுக்குப் பரிசாக எதையும் அளிக்கவில்லை. இந்தத் துயரங்களிலிருந்து அவனைக் காப்பாற்றுவது உடுக்கை மட்டுமே.
கடைசியில் அது ஒன்று தான் எஞ்சியிருக்கிறது
••
வாழ்த்துகள்
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
