S. Ramakrishnan's Blog, page 100
January 18, 2022
காலத்தின் நிழல்.
மகிழ் ஆதன் நான்கு வயதிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறான். இப்போது அவனது வயது 9. அவனது முதற்தொகுப்பு நான் தான் உலகத்தை வரைந்தேன். அந்தத் தொகுப்பில் வியப்பூட்டும் கவிதைகள் நிறைய உள்ளன. பாடப்புத்தகங்களே உலகம் என்றிருக்கும் சிறார்களுக்கு நடுவே இந்த உலகையும் அதன் திகைப்பூட்டும் நிகழ்வுகளையும் மகிழ்ஆதன் எளிதாக எதிர்கொண்டு சிறப்பாக கவிதைகளில் வெளிப்படுத்தி வருகிறான்.

இப்போது அவனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. காலத்தைத் தாண்டி வரும் ஒருவன் என்ற இந்தக் கவிதை நூலை எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். வெ.சந்திரமோகன் வரைந்துள்ள அழகான ஒவியங்கள். சுந்தர் சருக்கையின் சிறந்த அறிமுகத்துடன் வெளியாகியுள்ளது.

காலம் என்றால் என்ன என்ற விடைகாண முடியாத கேள்வியை மகிழ் ஆதன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதே தொகுப்பின் மையம்.
காலத்தைப் புரிந்து கொண்டும் புரியாமலும் அதனுள் பயணிக்கிறான். காலம் அவனுக்கு ஒரு கருத்துருவாக்கமில்லை. அது ஒரு மாயப்பொருள். அவன் காலத்தை பற்றிச் சிந்திப்பதில்லை. மாறாக காலத்துடன் முடிவில்லாத விளையாட்டினை நிகழ்த்துகிறான். அதுவே இத் தொகுப்பின் சிறப்பு.
காலம் நமக்குப் புற உலகின் செயல்கள் வழியாக ஒருவிதமாகவும் உடல் வழியாக இன்னொரு விதமாகவும் நினைவின் வழி வேறு விதமாகவும், சமயம், அறிவியல், தத்துவம், வரலாறு வழியே மற்றோர் விதமாகவும், இயற்கையின் வழியே புதிராகவும் அறிமுகமாகிறது. தேவையான தருணங்களில் இதில் தேவையானதை தேர்வு செய்து நாம் காலத்தைப் புரிந்து கொள்கிறோம். செயல்படுகிறோம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு காலம் குறித்து விரிவான ஆய்வினை கவிஞர் ஆனந்த், தேவதச்சன் மற்றும் நண்பர்கள் இணைந்து மேற்கொண்டார்கள். அது முடிவில்லாத தேடல். தனது கவிதைகளின் வழியே இதற்கான விடைகளை, புரிதல்களை அவர்கள் கண்டறிந்தார்கள். வெளிப்படுத்தினார்கள். இன்றும் அவர்கள் கவிதைகளில் காலம் வெளி பற்றிய அசலான பார்வைகள் புரிதல்கள் இருப்பதை காணமுடியும்.
மகிழ்ஆதன் உண்மையில் காலத்துடன் விளையாடுகிறான். தண்ணீருடன் விளையாடுவது போல. நீர்குமிழிகளை பறக்கவிடுவதைப் போல. காலம் அவனை அச்சப்படுத்தவில்லை. புதிர்பாதை போல உணரப்படவில்லை. காலம் அவனுக்கு எடையற்ற விநோத பொருளாக இருக்கிறது.
காலம் என்றால் என்ன
அது ஒரு பூ
அந்தப் பூவுக்குள்
ஒரு உலகம் இருக்கிறது
என்றொரு மகிழ் ஆதனின் கவிதையிருக்கிறது. எளிய கவிதை ஆனால் காலத்தின் சரியான அடையாளமாகப் பூவை முன்வைக்கிறது. மலர்தல் தானே காலத்தின் நிரந்தர செயல்பாடு. ஜப்பானிய கவிதைகளில் மலர்கள் இடம்பெறுவது இதன் காரணமாகவே.
காலத்திற்கு நிழல் இருப்பதாக மகிழ் ஆதன் சொல்கிறான். காலத்தை நிறுத்திக்காட்டுகிறான். காலத்திடம் உரையாடுகிறான். தானே காலத்தை முழுங்கி காலமாய் மாறுகிறான். அறிவின் வழியே நாம் பகுத்தும் தொகுத்தும் வைத்திருந்த காலம் பற்றிய புரிதல்களை அவன் கண்டுகொள்வதில்லை.
கலைடாஸ்கோப்பினுள் இருக்கும் உடைந்த வண்ணச்சில்லுகளை மாற்றி மாற்றிப் புதிய தோற்றங்களை உருவாக்கிக் கொள்வது போலவே காலத்தை கையாளுகிறான்.
காலம் எனக்கு வானத்தில்
வீடு கட்டியது
நான் காலத்தைப் பார்த்து வரைந்து
காற்றில் மாட்டினேன்
என்ற கவிதையின் ஒரு வரியில் அவன் சிறுவனாகவும் மறுவரியில் கவிஞனாகவும் உருமாறுகிறான்.
காலம் ஒரு கற்பனை என்றொரு வரி மகிழ் ஆதனிடம் வெளிப்படுகிறது.
பலாச்சுளையின் இனிப்பு என்னை நேற்றைக்குக் கொண்டு போனது என்ற அவனது கவிதை வரியில் நினைவில் ஒளிரும் காலம் வெளிப்படுகிறது.
அவன் சொல்லும் நேற்றும் நாம் சொல்லும் நேற்றும் ஒன்று தானா என யோசித்துக் கொண்டிருந்தேன்.
காலம் நீரனின்
சிரிப்புப் பை
••
நான் கட்டிய
போர்வை வீடு
அந்த வீட்டுக்குள்
நீர் தூங்கிக் கொண்டிருக்கிறது
••
காலம்
நிழலின் குளிர்ந்த பூ
••
காலம்
என் கனவில் வந்த பொம்மை
••
காலத்தின் ஒளி
நிலாவைத் தூங்க வைக்கும்.
••
இப்படி காலம் குறித்து அவன் தீட்டிய சித்திரங்கள் அபூர்வமானவை.
மகிழ் ஆதன் காலத்தை நமது தினசரி நிகழ்வுகளிலிருந்து துண்டிக்கிறான். மனிதர்களின் செயல்பாடுகளின் மீது அவனுக்கு விருப்பமில்லை. இயற்கையின் இயக்கமாக காலத்தைக் காணுகிறான். மரம், செடி, மலர் தண்ணீர், ஆகாசம், நட்சத்திரம், ஒளி, சூரியன், நிலவு இவை தான் அவனது உலகம்
ஏன் அவனது உலகில் பள்ளிக்கூடமில்லை. மணிச்சப்தமில்லை. கடிகாரம் ஒலிக்கவில்லை. பசியை காலமாக அறியவில்லை. அலுவலகமோ, பேருந்துகளோ வரவில்லை. பண்டிகை, பிறந்தநாள் வரவில்லை. இவை எல்லாம் உருவாக்கபட்ட காலங்கள். அவன் அந்த காலத்தை ஏற்கவில்லை. அவனுக்குள் ஒரு கவிஞன் தீவிரமாகச் செயல்படுகிறான் என்பதன் அடையாளமாகவே இந்த தேர்வைக் காணுகிறேன்.
மகிழ் ஆதன் வயதில் ஒரு சிறுவன் அல்லது சிறுமி சர்வதேச அளவிலான சதுரங்கப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறுகிறான். கொண்டாடப்படுகிறான். அதை உலகம் இயல்பாக ஏற்றுக் கொள்கிறது. ஆனால் ஒன்பது வயதுச் சிறுவன் கவிதை எழுதும் போது சந்தேகத்துடன் கேள்விகள் எழுப்புகிறது. அறிவுரைகள் சொல்கிறது. அது பொதுப்புத்தியின் விளைவு
மகிழ் ஆதன் கவிதைகள் எழுதுவதால் மகிழ்ச்சியடைகிறான். அது அவனது கவிதைகளில் முழுமையாக வெளிப்படுகிறது.
காலத்தைப் பெருஞ்சுமையாக மாற்றிச் சுமக்கும் நமக்கு இந்த விளையாட்டினைக் காண ஏக்கமாகவே இருக்கிறது.
அது தான் மகிழ்ஆதனின் கவிதைகளின் வெற்றி
.
புத்தகத் தயாரிப்பு
தமிழில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றன. ஆனாலும் புத்தகம் தயாரிப்பது எப்படி என்பது பற்றி முறையான வழிகாட்டும் புத்தகம் நம்மிடம் இல்லை

இன்று உருவாகியுள்ள நவீனத் தொழில்நுட்பம், மற்றும் அச்சிடுவதில் உருவாகியுள்ள மாற்றங்கள். வண்ணத்தில் அச்சிடல். காகிதங்களின் வகைகள். பைண்டிங் செய்யப்படும் விதம் என்பது பற்றி ஒரு இளம் பதிப்பாளர் அல்லது வாசகர் அறிந்து கொள்வதற்குச் சரியான புத்தகம் எதுவுமில்லை.


1967ல் புத்தகத் தயாரிப்பு என்றொரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. இதை எழுதியவர் பி.ந. வெங்கட்டாச்சாரி. தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் ஆதரவில் வெளியாகியிருக்கிறது.

எழுத்தின் வரலாற்றில் துவங்கி காகிதத்தின் கதை, அச்சு மையின் கதை, இந்தியாவிற்கு அச்சுக்கலை அறிமுகமானவிதம், அச்சிடும் முறைகள். பைண்டிங் செய்யும் முறை போன்றவற்றை விளக்கி அழகாக எழுதப்பட்டிருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகம் என்பதால் அன்றைய தொழில்நுட்ப சாத்தியங்களை மட்டுமே கணக்கில் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இன்று அச்சுத் தொழில் அடைந்துள்ள வளர்ச்சி வியப்பூட்டக்கூடியது.
புத்தக வடிவமைப்பு, அச்சாக்கம், எழுத்துருக்களின் விதம். அட்டை வடிவமைப்பு, விநியோகம் போன்றவற்றைத் தெளிவாக விளக்கி ஒரு புத்தகம் எழுதப்பட்டால் அது பலருக்கும் உபயோகமாக இருக்கும். பபாசி போன்ற அமைப்புகளே இந்தப் பணியினை முன்னெடுக்கலாம்.
••
January 16, 2022
டால்ஸ்டாய் ஓவியம்
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலை வாசித்த சுரேஷ் என்ற வாசகர் டால்ஸ்டாயின் ஓவியம் ஒன்றை வரைந்திருக்கிறார். ஒரு நாவல் இப்படியான மனஎழுச்சியைத் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது

January 15, 2022
பிடித்த புத்தகங்கள்
பெப்பர்ஸ் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் திருப்புகழ் IAS தனக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இதில் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
திருப்புகழ் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி
நன்றி
பெப்பர்ஸ் டிவி
January 14, 2022
வகுப்பறையில் ஒரு யாக்
Lunana: A Yak in the Classroom என்ற பூட்டானிய திரைப்படத்தைப் பாவோ சோய்னிங் டோர்ஜி இயக்கியிருக்கிறார். பூட்டானில் மிகக் குறைவான திரைப்படங்களே உருவாக்கப்படுகின்றன. The Cup என்ற Khyentse Norbu இயக்கி 1999ல் வெளியான பூட்டானிய படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. அவரது உதவியாளரான பாவோ இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படமும் பன்னாட்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது.

லுனானா பூட்டானின் தொலைதூர மலைக்கிராமம். 56 பேர் மட்டுமே அங்கே வசிக்கிறார்கள். அந்த இடத்திற்குச் சென்று சேர இரவு பகலாக மலையின் மீது நடக்க வேண்டும். காசா என்ற இடம் வரை சாலை வசதியிருக்கிறது. அங்கேயிருந்து மலையேற்றம் மேற்கொண்டு இடையில் ஒரு இரவு தங்கி மீண்டும் நடந்தால் லுனானாவை அடையலாம்.
மலைச்சிகரங்களுக்குள் அடங்கிய பேரழகான இடம். அங்கு ஒரு ஆரம்பப் பள்ளி நடைபெறுகிறது. அந்தப் பள்ளிக்கு ஆசிரியராகச் செல்லும் உக்யென் என்ற இளைஞனின் பார்வையில் படம் விரிகிறது.
பன்கர்வாடி என்ற மராத்தி நாவலை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன். அதுவும் இதுபோல ஆடு மேய்கிறவர்கள் வாழும் மலைக்கிராமத்திற்குச் செல்லும் பள்ளி ஆசிரியரின் கதையே. அந்த நாவலைத் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். தேசிய விருது பெற்றபடமது. இந்தப் படம் துவங்கியதுமே பன்கர்வாடி நினைவில் வந்தது. இது போலவே Pretty Big Feet, Not One Less, The First Teacher போன்ற படங்களும் நினைவில் வந்து போயின.
உலகின் மிகவும் தொலைதூரத்தில் இயங்கும் பள்ளி ஒன்றையும், அங்குப் பயிலும் மாணவர்கள் கல்வியின் மீது கொண்டுள்ள விருப்பத்தையும். ஆசிரியர் பணியின் முக்கியத்துவத்தையும் இப்படம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது

பள்ளி ஆசிரியராக வேலை செய்யும் உக்யென் ஒரு பாடகன். ஆசிரியராக வேலை செய்து வருகிறான். அந்த வேலை அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்பா அம்மா இல்லாத அவனைப் பாட்டி தான் வளர்க்கிறாள். பாட்டிக்கு அவன் அரசாங்க ஆசிரியராக வேலை செய்வதே பிடித்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பாடகராக வேண்டும் என்று கனவு காணுகிறான் உக்யென். பராம்பரியத்திலிருந்து விடுபட்டு நவீன வாழ்க்கையை வாழ விரும்பும் இளைஞனாக உக்கெய் எப்போதும் கையில் ஐபாட், ஹெட்போன் சகிதமாக இருக்கிறான். மதுவிடுதிகளில் பாடுகிறான்.
கல்வி அமைச்சகத்தில் காத்திருக்கும் போது கூட அவன் ஹெட்போனை கழட்டுவதில்லை. அவனுக்குப் பராம்பரியம், சடங்குகள். வழிபாடுகள் எதிலும் நம்பிக்கையில்லை. பூட்டானிலிருந்து வெளியேறி வெளிநாடு போனால் மட்டுமே எதிர்காலம் என்று நம்புகிறான்.
இந்நிலையில் கல்வி அமைச்சகம் அவனைப் பூட்டானின் மற்றும் உலகின் மிகத் தொலைதூர கிராமங்களில் ஒன்றான லுனானாவிலுள்ள ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியராக நியமனம் செய்கிறது.

அங்கே போக இயலாது என்று உக்யென் மறுக்கிறான். ஆனால் அவனது ஒப்பந்தப்படி போயாக வேண்டும் என்ற கட்டாயத்தால் விருப்பமின்றித் தனது பயணத்தைத் துவக்குகிறான்
அந்தப் பயணமும் வேலையும் அவனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடுகிறது. உக்யெனுடன் இணைந்து நாமும் மலைக்கிராமத்தினை நோக்கிச் செல்லும் சிற்றுந்து ஒன்றில் பயணிக்க ஆரம்பிக்கிறோம். பசுமை படர்ந்த மலைப்பாதையில் அந்தப் பேருந்து செல்கிறது. ஈரக்காற்று நம் முகத்தில் அடிக்கும் உணர்வு ஏற்படுகிறது.
உக்யென் இந்தப் பயணத்தில் எவருடனும் பேசுவதில்லை. பரவசமூட்டும் இயற்கைக் காட்சிகள் எதையும் காணுவதில்லை. வேறு ஒலி எதுவும் தன் காதில் கேட்டுவிடக் கூடாது என்பவன் போல ஹெட்போனை மாட்டியிருக்கிறான். நீண்ட பயணத்தின் பின்பு காசாவில் இறங்குகிறான். அங்கே அவனை வரவேற்கக் காத்திருக்கும் மிச்சென் இரவு அங்கேயே தங்கி காலையில் புறப்படுவோம் என்கிறான்.
பள்ளிக்கு ஒரு புதிய ஆசிரியர் வரப்போகிறார் என்பதால் ஊரே மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது.
மலைப்பாதையில் நடக்க நடக்கத் தூரம் குறையவேயில்லை. தன்ன ஏமாற்றி நீண்ட தூரம் நடக்க வைக்கிறார்கள் என்று உக்யென் கோபம் கொள்கிறான். பகல் முழுவதும் நடந்து அவர்கள் மலையின் உச்சியிலிருந்த ஒரு வீட்டில் இரவு தங்குகிறார்கள். அந்த வீடு இவர்களைப் போன்று வரும் மலையேற்ற பயணிகளை உபசரிப்பதற்காகவே இயங்குகிறது. அந்த வீட்டிலிருப்பவன் வெறுங்காலுடன் நடமாடுகிறான். குளிரவில்லையா என உக்யென். கேட்கும் போது பழகிவிட்டது. மேலும் என்னிடம் காலணிகள் வாங்குமளவு வசதியில்லை என்கிறான். முதன்முறையாக அப்போது தான் புற உலகின் யதார்த்தம் உக்யெனுக்குப் புரிகிறது.

விளம்பரங்களில் காட்டப்படும் காலணியை அணிந்து கொண்டு சகதியுள்ள பாதையில் மலையேற முடியாது என்பதை உக்யென் உணர்ந்து கொள்கிறான்.
வளைந்து உயர்ந்து செல்லும் பாதையில் அவர்கள் முடிவில்லாமல் நடக்கிறார்கள். மலையுச்சியிலிருந்த கடைசி நுழைவாயிலில் உடன் வந்தவர்கள் சடங்குகள் செய்து வழிபடுகிறார்கள். உக்யென் தனக்கு அதில் நம்பிக்கையில்லை என்கிறான்
நடந்து களைத்து முடிவில் லுனானாவை அடைகிறான். லுனானாவின் மக்கள் தொகை 56 பேர், உயரம் 4,800 மீட்டர்கள் உயரத்திலுள்ளது. மிக அழகான ஊர்.
அங்கே ஊர்மக்கள் ஒன்று கூடி பராம்பரியமுறையில் வரவேற்பு தருகிறார்கள். அது லாமாக்களுக்கு அளிக்கப்படும் மரியாதைக்குச் சமமானது. பள்ளியைக் காட்ட அழைத்துப் போகிறார்கள்
சின்னஞ்சிறிய ஆரம்பப் பள்ளி. மண் சுவர்கள், தூசி படிந்து போன மேஜைகள். சிறிய தங்குமிடம். பனிக்காலத்தில் பள்ளி மூடப்பட்டுவிடும். பாதைகளில் பனி உறைந்து போவதால் யாரும் மலையிலிருந்து கீழே செல்ல முடியாது.
தனக்கு ஆசிரியர் பணியில் விருப்பமில்லை. தன்னால் அங்கே வேலை செய்ய இயலாது. திரும்பிப் போய்விடுகிறேன் என்று வந்தவுடனே உக்யென் சொல்கிறான்.
சில நாட்கள் இங்கே தங்கியிருங்கள். பிடிக்காவிட்டால் திரும்பிப் போகலாம். இந்தப் பள்ளிக்கு ஆசிரியர்களே கிடையாது. ஆனால் மாணவர்கள் படிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்கிறார் ஊர்த் தலைவர்

விருப்ப மேயில்லாமல் லுனானாவில் தங்குகிறான் . மிகக் கடுமையான குளிர். மின்சார வசதியில்லை. ஆகவே செல்போன் ஹெட்போன் எதையும் சார்ஜ் செய்ய இயலவில்லை. ஆழ்ந்து உறங்குகிறான். விடிகாலையில் பள்ளி மாணவி பெம் ஜாம் கதவைத் தட்டி எழுப்பி மணி ஒன்பதாகிவிட்டது. பள்ளி காலை எட்டரை மணிக்குத் துவங்க வேண்டும் என்கிறாள்.
அவசர அவசரமாகப் பள்ளிக்குப் போகிறான். முதல் நாள் வகுப்பில் மாணவர்களிடம் அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் என்று கேட்கிறான். ஒரு பையன் தான் ஆசிரியராக விரும்புகிறேன். என்கிறான். காரணம் கேட்கையில் ஒரு ஆசிரியர் உங்கள் எதிர்காலத்தைத் தொடுகிறார், என்கிறான். மாணவனின் எதிர்காலத்தை ஆசிரியரே வடிவமைக்கிறார், அந்த வகையில் அவர் எதிர்காலத்தைத் தொடக்கூடியவர் என்பதை அழகாக விளக்குகிறார்கள். அந்தப் பதில் உக்யெனை விழிப்படையச் செய்கிறது. அந்தப் பதிலே அவன் மேற்கொள்ள வேண்டிய பணியைத் தீவிரமாக்குகிறது
கரும்பலகை, நோட்டுப் புத்தகங்கள் எதுவுமின்றி உக்யென் தனது கற்பிக்கும் திறனை மட்டுமே நம்பி, அனைத்து பாடங்களையும் நேரடியாக மண் சுவர்களில் கரித் துண்டுகளைப் பயன்படுத்தி எழுதி கற்றுத் தரத் துவங்குகிறான்
எழுதும் காகிதம் தீர்ந்துவிடும் போது குளிரிலிருந்து காப்பதற்காகத் தனது வீட்டின் ஜன்னல்களுக்கு மேல் ஒட்டியிருந்த கையால் செய்யப்பட்ட காகிதங்களை வெட்டி எழுதுவதற்குத் தருகிறான். அந்த மாணவர்களே அவனை நல்லாசிரியராக உருமாற்றுகிறார்கள்.
பெம் ஜாமின் தந்தை ஒரு குடிகாரன். அம்மா ஓடிப்போய்விட்டாள். பாட்டியோடு வசிக்கும் அவள் கல்வியின் வழியாக மட்டுமே தனக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதை நம்புகிறாள். அதை உக்யென் நன்றாக உணர்ந்து கொள்கிறான். அவளைப் போன்ற மாணவிகள் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான்.
அந்த மலைக்கிராமத்தில் ஒரு நாள் இனிமையான பாடல் ஒன்றைக் கேட்கிறான். அப்பாடலைப் பாடும் சால்டன் என்ற.இளம்பெண்ணைச் சந்திக்கிறான் அவள் இயற்கை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகப் பாடுகிறேன் என்கிறாள். அந்தப் பாடலின் இனிமையில் மயங்கி அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
பின்பு ஒரு நாள் அந்தப் பாடலை சால்டன் அவனுக்குக் கற்றுக் கொடுப்பதுடன் அந்தப் பாடல் எப்படி உருவானது என்ற கதையைச் சொல்கிறாள். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியது. மிகுந்த கவித்துவ அழகுடன் படமாக்கியிருக்கிறார்கள்.
லுனானா மாணவர்களுக்காகத் திம்புவிலுள்ள தனது நண்பர்களிடம் உதவி கேட்டுக் கடிதம் எழுதுகிறான் உக்யென். அவர்கள் பாடப்புத்தகங்கள். சுவரொட்டிகள். கூடைப்பந்து மற்றும் அவனது கிட்டார் உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள். அந்தப் பொருட்களைக் கண்டு மாணவர்கள் அடையும் சந்தோஷம் வானவில் தோன்றியது போலிருக்கிறது.

உக்யென் கித்தார் வாசித்து மனப்பூர்வமாகப் பாடுகிறான். அவனது பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து நடனமாடுகிறார்கள். உண்மையான மகிழ்ச்சியது.
பனிமூட்டம் நிறைந்த காலைப் பொழுதுகள், சலசலத்து ஓடும் ஆறு பனி மூடிய மலைகள். அன்பாக உபசரிக்கும் மக்கள். நீலமேகங்களுடன் விரிந்துள்ள பள்ளத்தாக்கு. உயரமான இடத்திலிருந்து தன்னை மறந்து பாடும் பெண். என லுனானா நம்மை வசீகரிக்கிறது
வகுப்பறையில் ‘C for Car’ என்ற கரும்பலகையில் எழுதும் போது, மாணவர்கள் எவருக்கும் கார் என்பதன் அர்த்தம் தெரியவில்லை. ஒருவர் கூடக் காரை நேரில் கண்டதில்லை. மாணவர்களுக்குப் புரியும் படி உடனே அதை cow என மாற்றுகிறான், அது அவர்களுக்குத் தெரிந்த வார்த்தை – “நாம் பசுவிலிருந்து பால் பெறுகிறோம்,” என்று ஒரு பையன் சொல்கிறான். இப்படிக் கற்றலின் புதிய வழிகளையும் படம் அறிமுகம் செய்கிறது
தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொள்ளும் ஒரு இளைஞன் சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த உலகம் என்பது நான் மட்டுமில்லை என்பதை எவ்வாறு உணருகிறான் என்பதைப் படம் விளக்குகிறது
பூட்டானிலுள்ள உக்யென் மட்டுமில்லை. எந்தப் பெரிய நகரில் வசிப்பவராக இருந்தாலும் நவீன வசதிகளும் அதன் இன்பங்களும் தான் வாழ்க்கை, தன்னைத் தவிர வேறு எவரையும் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை என்றே நடந்து கொள்கிறார்கள். அது மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயம் என்கிறது திரைப்படம்.
தொலைதூர கிராமத்திலுள்ள அந்த மக்களின் பொருளாதாரத்தை உக்யெனால் மாற்ற முடியாது. ஆனால் கல்வி அளிப்பதன் மூலம் அவர்களைப் புதிய வாழ்க்கைக்குப் புதிய கனவுகளுக்குத் தயார்ப் படுத்த முடியும்.
ஒரு காட்சியில் தான் ஒருவேளை முற்பிறவியில் இந்த மலைப்பிரதேசத்தில் யாக் மேய்க்கிறவனாக இருந்திருக்கக் கூடும் என்கிறான் உக்யென். அதற்குக் கிராமத்தலைவர் ஆஷா “ இல்லை நீங்கள் ஒரு யாக்காகப் பிறந்திருக்கக் கூடும். யாக் உயிருடன் இருக்கும் போதும் இறந்தும் பிறருக்குப் பயன்படுகிறது. அதன் வாழ்க்கையே மற்றவர்களுக்குப் பயன் தருவது தான்“ என்கிறார். அது உண்மை என்பதை அவனும் உணருகிறான்.
இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் அத்தனை பேரும் மலைகிராமவாசிகள். அவர்களுக்கு வெளியுலகம் தெரியாது. சினிமா என்றால் என்னவென்றே தெரியாது. அவர்களைக் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பாவோ

குழந்தைகள் முதன்முறையாக டூத் பிரஷால் பல்துலக்கும் காட்சி ஒன்று படத்தில் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் அன்று தான் அந்த மலைகிராம மாணவர்கள் டூத் பேஸ்ட் டூத் பிரஷை பார்த்தார்கள் என்று குறிப்பிடுகிறார் பாவோ
சால்டன் ஆசிரியருக்காக ஒரு யாக்கைக் கொடுக்கிறார். நோர்பு என்ற அந்த யாக் வகுப்பறையிலே இருக்கிறது. உக்யென் அதற்கும் சேர்ந்து பாடம் எடுக்கிறார். நோர்பு என்ற பெயர் The cup என்ற பூட்டானிய படம் எடுத்த இயக்குநரின் பெயராகும். அவரது உதவியாளராக இருந்தவர் இயக்குநர் பாவோ என்பதால் இந்தப் பெயரை யாக்கிற்கு வைத்திருக்கிறார்.. .
யாக்-மேய்ப்பவர்கள் அனைவரும் நன்றாகப் பாடுகிறார்கள் என்று மிச்சென் கூறுகிறார். மலைக் கிராமம் யாக்களால் நிரம்பியுள்ளது, ஒரு யாக் மற்றும் அதன் மேய்ப்பனுக்கு இடையிலான பிணைப்பு மிகவும் வலுவானது என்று கூறும் சால்டன் அந்த உறவின் அடையாளமாd பாடலைப் பாடுகிறாள். அவள் பாடும் விதமும் அந்த நிலவெளியும் மயக்கமூட்டுகிறது.
பணம் சம்பாதிப்பது. புகழ் அடைவது என்பது தான் மகிழ்ச்சி என நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையான மகிழ்ச்சி என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டியது. சந்தோஷம் நம்மைத் தேடி வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அர்த்தமற்றது. நமக்குப் பிடிக்காத வேலையாக இருந்தாலும், மனப்பூர்வமாக நம்மை அர்ப்பணித்துக் கொண்டால் அதில் மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படும் என்பதையே இப்படம் விவரிக்கிறது.
உக்யெனின் மனமாற்றம் இயல்பாக நடைபெறுகிறது. அது போலவே அவன் முடிவில் தான் விரும்பிய கனவை அடைவதும். இரண்டிலும் மிகை நாடகம் கிடையாது.
மின்சாரமில்லாமல். செல்போன் இல்லாமல். நாளிதழ்கள். தொலைக்காட்சி, பேஸ்புக் என நவீனவசதிகள் எதுவும் இல்லாமல் மலையுச்சியில் வாழ்ந்து வருபவர்கள் உலகின் பார்வையில் பின்தங்கியவர்கள். ஆனால் அது உண்மையில்லை. அவர்கள் மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை வாழுகிறார்கள். பொருளாதார ரீதியாக அவர்கள் மேம்பாடு அடையவில்லை. ஆனால் தேவையானதை மட்டுமே சம்பாதித்து மனநிறைவான வாழ்க்கையை வாழுகிறார்கள். தூய்மையான இதயம் அவர்களிடமிருக்கிறது என்கிறார் இயக்குநர் பாவோ.
மேகங்களுடன் நம்மையும் அழைத்துப் போகும் நேர்த்தியான ஒளிப்பதிவு, இனிமையான இசை, நெருக்கமான காட்டுக்கோணங்கள், சிறப்பான நடிப்பு எனப் படம் தேர்ந்த கலைப்படைப்பாக உருவாகியிருக்கிறது.
இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது பட்டியலில் இப்படமும் இடம்பெற்றிருக்கிறது
—
January 13, 2022
விடுதலை என்பது வேறு
இடக்கை நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்
சபரிராஜ் பேச்சிமுத்து

ஒளரங்கசீப்பின் இறுதிநாளில் தொடங்குகிறது நாவல். அதனைத் தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்படுகிறார்கள். ஒருவர் ஒளரங்கசீப்பின் விசுவாசி. அரசியல் கைதி. கைதான உடனே விசாரணை என்கிற தண்டனை தொடங்குகிறது. இன்னொருவர் சாமானியன். தாழ்த்தப்பட்டவர். காத்திருப்பு என்கிற தண்டனை தொடர்கிறது. இந்த இழையில் இருந்து இந்தியாவின் கடந்த காலத்தின், நிகழ்காலத்தின் நீதியை, நீதிமுறையை விசாரணை செய்கிறது இந்த நாவல்.
மரணம் பற்றிய பயம். அதிகாரத்தின் கருணையற்ற இரும்பு கை. முட்டாள்களின் அரசாட்சி. நீதிக்காகக் காத்திருத்தல். எந்த அரசாட்சியிலும் பெண்களின் நிலை. பசி. ஆட்சியாளர்களுடைய கவிதை பற்றிய பயங்கள். அரசியலில் வியாபாரம். வியாபாரிகளின் அரசியல். காதல். சாதியத்தின் கொடூரங்கள். அன்பிற்காக ஏங்கும் மனித மனங்கள் மற்றும் அதனுடைய இருள் எனப் பல தளங்களில் இந்த நாவல் விரிந்து பரந்து செல்கிறது.
பொதுவாக எஸ்.ரா அவர்களுடைய எழுத்தில் திருடர்கள், பெண்கள், குழந்தைகளின் உலகங்கள் கவித்துவமாக வெளிப்படும் அதுவும் மாய யதார்த்த களம் என்பது அவருக்குச் சொந்த மைதானத்தில் சிக்ஸர் அடிப்பது போன்றது.
பள்ளி காலங்களில் முகலாய வரலாற்றைப் படித்த போது, அதில் ஒளரங்கசீப் மட்டும் தனித்துத் தெரிந்தார். அரசு பணத்தைக் கட்டிடம் காட்டுகிறேன் என்று வீணாக்காமல். போதை எடுத்துக் கொள்ளாமல். தன் தேவைக்குக் குல்லா தைய்த்து, குரான் படி எடுத்த, இளமையில் தன்னுடைய அப்பாவாலும் முதுமையில் தன்னுடைய மகனாலும் வீழ்த்த முடியாத ஒரு ‘டேவிட் பில்லா’ என்கிற படிமத்துடனேயே இத்தனை நாள் என் மனதில் இருந்த ஒளரங்கசீப்பின் முதுமையை முற்றிலும் வேறு கோணத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர்.
உதாரணமாக, தன்னுடைய இறுதிக் காலத்தில் மரணம் பற்றிய பயம் தன்னைச் சூழ்ந்திருக்கும் போதிலும் ஒளரங்கசீப் மனதில் நினைத்துக் கொள்வார்.
‘மரணத்தின் காலடி ஓசைகள் கேட்கிறது. ஆனாலும், அது என் அறைக்குள் வர என் அனுமதி கேட்டு காத்திருக்கிறது.” இந்த ஒருவரி ஒளரங்கசீப் என்ற மனிதனின் கதாபாத்திரத்தை அவனது மொத்த வாழ்க்கையை விவரிக்கிறது.
ஒரு புத்தகத்தில் ஏதேனும் சில வரிகள் அருமையாக இருந்தால், அதனை அடிக்கோடிட்டுப் படிப்பது வழக்கம். என் பிரதியில் முதல் அத்தியாயம் முழுக்கவே இப்போது அப்படி அடிக்கோடிடப்பட்டுள்ளன. இந்த முதல் அத்தியாயத்தை மட்டுமே தனியாகப் பிரித்து ஒரு சிறுகதையாக வெளியிடலாம்.
நேராக ஒரு விஷயத்தைச் சொல்வதை விட ஆசிரியர் தன் கதையில் ஒன்றை ஒளித்து வைத்து அதனை வாசகன் கண்டடைவது என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. அப்படி இந்தக் கதையில் எஸ்.ரா பல விஷயங்களை ஒளித்து வைத்திருக்கிறார்.

நாவலின் ஒரு அத்தியாயத்தில் ஒரு கதை சொல்லி புராணக் கதை ஒன்றை சொல்கிறார். அதில் ஒரு புழு நீதி கேட்டுச் செல்கிறது. ஒரு தேரோட்டிக்குத் தண்டனை தரப்படுகிறது. புழு சொல்கிறது, குற்றம் செய்தவள் ராணி அவளைத் தண்டிக்க வேண்டும். அரசு புழுவை வெளியேற்றுகிறது. பின்னர் அந்தப் புழு கடவுளை நீதி கேட்க அழைத்து வருகிறது. பின்னர் ராணி குற்றவாளி எனத் தீர்ப்பு வந்த பிறகு புழு அவளை மன்னித்து விடுகிறது.
இந்தக் கதையைக் கதைசொல்லி சொல்லி முடித்ததும். விசாரணைக் கைதிகள் தனக்கு ஒருநாள் நீதி கிடைக்கும் என்ற செய்தியை எடுத்துக் கொள்கிறார்கள். நீதி கிடைக்க வேண்டுமானால் இறைவனே நேரில் வர வேண்டும் என்கிற செய்தியை கதாநாயகன் எடுத்துக்கொள்கிறான். மன்னிப்பே பெரிய தண்டனை என்பதனை வாசகன் கொள்கிறான்.
அதையும் தாண்டி, அடுத்த அத்தியாயத்தில் சிறையில் ஒரு பெண் சொல்கிறாள். அவளுடைய கணவன் கொஞ்ச நாள் முன்பு மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தான் என்று. அவன் ஒரு தேரோட்டி. மேலே சொன்ன கதையில் புழு, ராணி, கடவுள் என்ற பலரும் தங்கள் வேலையை முடித்துக் கிளம்பிய போதும், “எதற்கு நான் தண்டிக்கப்பட்டேன்?” என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் நின்று கொண்டிருந்த தேரோட்டியின் பிம்பம் இந்த அத்தியாயத்திற்கு வருகிறது.
இன்னும் சில அத்தியாயங்கள் தாண்டி ஒருவனின் பிணம் ஆற்றில் மிதந்து வருகிறது. அவன் ஒரு பிரபுவின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தவன். அவன் யார் எப்படி இறந்தான் என்கிற விசாரணை நடக்கிறது. அதைப் படிக்கப் படிக்க ‘ஆந்தோன் செகாவ்’ வின் ‘பச்சோந்தி’ என்கிற சிறுகதை நியாபகம் வந்தது.
ஆக, நீதி என்பது புராண காலத்திலும், ஒளரங்கசீப் காலத்திலும், ஆந்தோன் செகாவ் காலத்திலும், இன்றைக்கும் எளியவர்களை நசுக்குவதையே செய்து வருகிறது. இன்றும் சஞ்சய் தத்கள் வெளியிலேயும் ஏழு தமிழர்கள் உள்ளேயும் இருப்பதைக் காணலாம்.
இந்தியாவின் எமர்ஜென்சி காலத்தில் சிறு சிறு வழக்குகளில் உள்ளே சென்றவர்கள் விசாரணைக்கே அழைக்கப்படாமல் பல நாள் சிறையில் இருந்தனர். அதைப் போலவே இந்த நாவலிலும் காலா என்றழைக்கப்பட்ட திறந்தவெளி சிறையில் பல விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டனர். குற்றங்களில் சாதி இல்லை என்பதால் அனைத்து சாதியினரும் உள்ளே இருந்தனர். ஆனால், குற்றவாளிகளுக்குச் சாதி உண்டு என்பதால் அங்கேயும் தீண்டாமை கொடுமை இருந்தது. அங்கே கொண்டு வரப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களும் கழிவுகளை அகற்றும் வேலைகளைத் தான் செய்தனர், சாதிய கொடுமைகளுக்கு ஆட்பட்டனர். இது அப்படியே மனதிற்குள் ஒரு பிரிட்டிஷ் இந்தியாவை வரைகிறது. மொத்த இந்தியாவும் அடிமை அதிலும் சிலர் இந்தியர்களுக்கு அடிமை. கீழே இருந்தவனுக்குச் சமூக விடுதலையைக் கொடுக்காமல் எப்படிப் பிரிட்டிஷ்காரர்களிடம் இவர்கள் அரசியல் விடுதலையைக் கேட்டார்கள் என்பது புரியவில்லை. தாழ்த்தப்பட்டவனுக்குச் சிறையும் விடுதலையும் ஒன்று தானே. பின்னர். எதற்கு அவன் விடுதலை கேட்க வேண்டும்?
இந்தக் கதையின் நாயகன் ஒளரங்கசீப் அல்ல. மொத்தக் கொடுமைகளையும் அனுபவித்த சாமானியன் தூமகேது தான் இந்தக் கதையின் நாயகன். அவன் இந்தப் பக்கங்களில் ஏதோ ஒரு பக்கத்தில் காணாமல் போய் விடுகிறான். இந்திய மக்கள் கடலில் எங்குக் கரைந்து போனான் என்று தேடிக் கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு கலவரத்தில் கையில் கத்தியுடன் நிற்கிறான். கொஞ்ச நேரம் கழித்துப் பல்லாயிரம் மைல் தூரம் கடந்த ஆற்றில் பிணமாக வருகிறான். அவனைப் புதைத்து விட்டு வீட்டிற்குப் போனால் அங்கே எடுபுடி வேலை செய்துகொண்டிருக்கிறான். பின்னர் ஒரு விபச்சார விடுதியில் விளக்குத் தூக்குகிறான். இது என்ன இப்படிக் கதையில் சுற்றிக் கொண்டிருக்கிறானே என்று நினைக்கும் போது தான் தெரிகிறது. இது ஒரு தூமகேதுவின் கதை அல்ல. இந்நாட்டில் உள்ள அனைத்து சாமானியனும் தூமகேது தான்.
இதற்கெல்லாம் முடிவாக இறுதியில் தூக்குக் கயிற்றை விற்றுக் கொண்டு வருகிறான். மிக முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறான். ‘தப்பித்தல் என்பது வேறு விடுதலை என்பது வேறு’ இது புறத்திற்கு மட்டுமல்ல அகத்திற்கும் சேர்த்தே சொல்லி நகர்கிறான்.
அடையாளம் துறத்தல் தான் எவ்வளவு ஆனந்தமானது என்பதற்கு இந்த நாவலில் ஒரு அருமையான காட்சி வருகிறது. ஒளரங்கசீப் ஒருநாள் மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறார் அப்போது ஒருவர் அவரை ஒருவர் “சகோதரா!” என்று அழைக்கிறார். அதுவரை அவரை யாரும் அப்படி அழைத்தது இல்லை. இதை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன்.
உண்மையில் மனிதர்கள் அனைவரும் விக்ரமன் படத்தில் வருவது போன்ற அன்பானவர்கள் தான். எந்தத் தயக்கமும் இன்றிப் புதிதாக யார் அறிமுகம் ஆனாலும் அவரைப் பெரும்பாலனோர் சகோதரனாகவே பார்க்கிறோம். அவனது அடையாளம் தெரியும் வரை. அவனது மதம், மொழி, சாதி தெரிந்தவுடனே தான் அவன் நண்பனாகவோ எதிரியாகவோ ஆள்பவனாகவோ அல்லது அடிமையாகவோ மாறி விடுகிறான்.
இதில் பிஷாடன் என்கிற ஒரு அரசன் வருகிறார். இன்று மீம்களில் வரும் அரசியல்வாதிகளுடன் கொஞ்சம் சேடிஸம் சேர்த்தால் வரக்கூடிய உருவம் தான் பிஷாடன். “ஒரு அரசனுக்குத் தன் மக்களைத் தன் நாட்டை அழிக்கக் கூட உரிமையில்லையா?” எனக் கேட்பவன். வரலாறு நெடுக கொடுங்கோலர்களுக்கு என்ன நடந்ததோ அதே முடிவு பிஷாடனுக்கும் வருகிறது.
இந்த நாவலில் அரசியல், நீதி, கொடுங்கோண்மை என்று பேசப்பட்ட புற விஷயங்களைப் போலவே மனித உணர்வுகளையும் மிக அழகாகக் கையாண்டுள்ளார்.
கணவனுக்கு உடல் சுகம் தர முடியாத மண்ணாலான பெண் தன் உடலைக் கரைத்து மதுவாக மாற்றிக் கணவனுக்குத் தருகிறாள். அவன் குடிக்கிறான், நண்பர்களுக்கும் கொடுக்கிறான். மதுவின் வெறி அதிகமாக அதிகமாக அவளை மொத்தமாகக் கரைத்து குடித்து விடுகிறான். இப்போது அவனிடம் கிணறு நிறைய மது இருக்கிறது. ஆனால், மனைவி இல்லை .குற்றவுணர்வு அதிகமாக இப்போது கிணற்றை மூடிவிட்டு ஒரு மதுபானக்கடைக்குப் போய்க் குடிக்கிறான்.
ஏதாவது ஒன்றை அடைய நினைக்கிறோம். அதை அடைய வேண்டும் என்ற வெறியில் அறத்தை கவனிக்காமல் எப்படியாவது அடைந்து விடுகிறோம். பின்னர் முழுவெற்றியை ருசிக்க முடியாமல் குற்றவுணர்வில் தவிக்கிறோம். ஆனால், அதே குற்றவுணர்விலேயே அதனை அனுபவிக்கவும் தொடங்குகிறோம்.
ஊரின் மிக அழகான விலைமகள். அந்த ஊரின் அத்தனை பெரிய மனிதர்களையும் பார்த்தவள் ஒரு ஓவியன் மீது காதல் கொள்கிறாள். அப்படியென்றால் காதல் என்பது காமம் கடந்ததா? ஆனால், அவன் தன் தோழியின் காதலன். அப்படியென்றால் காதலில் துரோகம் சரியா? அந்த ஓவியன் அவளை ஒரு வியாபாரியிடம் விற்று விட்டுச் செல்கிறான். இப்போது எது காதல்?. ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொண்டாலும் இவர்களைத் தான் இந்தச் சமூகத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள் என்கிறோம்.
அந்தத் தோழி இப்போது தற்கொலை செய்து கொள்கிறாள். தன்னைச் சார்ந்தவர்கள் தனக்குத் துரோகம் செய்யும் போது, அவர்களைத் தண்டிக்க முடியாத போது வெள்ளந்திகளின் மனம் தங்களையே தண்டித்துக் கொள்கிறது.
“அள்ளிக் கொள்ளுங்கள்” என்று வாசகன் முன்பு ஒரு பெரும் கடலை விரித்து வைத்துள்ளார் ஆசிரியர். இதனை எழுதிய எஸ்.ரா அவர்களுக்கு அவருடைய இடது கையில் முத்தங்கள்.
,
பொங்கல் நல்வாழ்த்துகள்
அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். உங்கள் வாழ்வில் எல்லா வளங்களும் பெருகட்டும்.

January 12, 2022
இயற்கையின் காதலன்
In Search of Walt Whitman என்ற அமெரிக்க கவிஞர் வால்டர் விட்மன் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

அமெரிக்காவின் நிகரற்ற கவிஞரான வால்ட் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார்.
சிறு வயதில் அச்சகத்தில் பணியாற்றிய விட்மன் பல்வேறு நாளிதழ்களில் கட்டுரைகள். செய்திக்குறிப்புகள் எழுதியிருக்கிறார்., பதினேழு வயதில் பள்ளி ஆசிரியராக வேலை செய்திருக்கிறார். 27 ஆவது வயதில் புரூக்லின் செய்தி இதழின் ஆசிரியரானார்.
விட்மன் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய தலைமுறைக்கு மகத்தான கவிஞனின் வாழ்க்கையினையும் அவரது காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளையும் நினைவூட்டுகிறது.
வால்ட் விட்மனின் தோற்றம் மிகவும் வசீகரமானது. தாகூரையும் அவரையும் மனம் ஒருசேரவே நினைத்துக் கொள்கிறது. இருவரும் ஒரே திசைப்பயணிகள்.

வால்ட் விட்மனின் பால்யகாலத்தை விவரிக்கும் போது இயற்கை அவருக்கு அறிமுகமான விதத்தையும் இயற்கையோடு அவருக்குள்ள நெருக்கத்தையும் அழகாக விவரிக்கிறார்கள்.
சிறுவயதில் இயற்கையை ஒருவன் அறிந்து கொள்ளும் போது அது ஒரு மாயவெளியாக இருக்கிறது. சூரிய வெளிச்சமும் மரங்களும் பறவைகளின் பாடல்களும் புல்லின் நடனமும் வண்ண வண்ண மலர்களும் வியப்பூட்டும் அழகுடன் தீராத வசீகரத்துடன் அறிமுகமாகிறது. தானும் ஒரு நீர்த்துளி போலச் சிறுவன் உணருகிறான். நீர்ப்பூச்சிகள் குளத்தின் மீது நடப்பது போலத் தானும் நடக்க ஆசைப்படுகிறான். இயற்கைக்கு ரகசிய கதவுகள் இருப்பதைச் சிறுவன் உணருகிறான். அந்தக் கதவு எப்போது திறந்து கொள்ளும் என்றோ, அதன் வழியே எந்த விந்தையைத் தான் அறிந்துகொள்வோம் என்றே அவனுக்குத் தெரியாது.
விட்மனுக்கும் அப்படியான அனுபவமே ஏற்படுகிறது. விட்மனின் தந்தை ஒரு தச்சர் , விவசாயப்பணிகளையும் மேற்கொண்டு வந்தார். தீவிரமான தேசபக்தர். தனது பிள்ளைகளுக்குத் தேசத்தலைவர்களின் பெயர்களை வைத்திருக்கிறார். அம்மாவோடு விட்மன் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார். விட்மனின் நான்கு வயதில் அவர்களின் குடும்பம் புரூக்லின் இடம்பெயர்ந்திருக்கிறது.

விட்மன் பள்ளியில் வழங்கப்படும் தண்டனைகளைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதியிருக்கிறார். 11 வயதுடன் அவரது பள்ளிப்படிப்பு முடிந்துவிட்டது. வேலைக்குச் செல்லும்படி குடும்பத்தால் நிர்பந்திக்கபட்டிருக்கிறார். சுயமாகக் கற்றுத்தேர்ந்து அமெரிக்காவின் தேசிய கவியாக விட்மன் உயர்ந்த வரலாற்றையும் அவரது காலத்தின் கொந்தளிப்பான நிகழ்வுகளையும் ஆவணப்படம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது
1838ல் விட்மன் துவங்கிய the Long Islander என்ற செய்தித் தாள் இன்றும் வெளியாகி வருகிறது. அந்த இதழை அவரே அச்சிட்டு வெளியிட்டதுடன் விநியோகம் செய்ய ஊர் ஊராக அலைந்திருக்கிறார்.
1855ல் விட்மன் தனது முதற்கவிதைத் தொகுப்பான Leave of Grass வெளியிட்ட போது பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த கவிதைகள் மிகவும் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று பலராலும் நிராகரிக்கப்பட்டன தானே சொந்தமாக இந்தத் தொகுப்பினை வெளியிட முயன்ற சிரமங்களையும் ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது.
விட்மனின் கவிதை நூலை வாசித்த எமர்சன் அதைப் பாராட்டி எழுதியிருக்கிறார். இந்தப் பாராட்டு விட்மனை இலக்கிய உலகில் அங்கீகாரம் பெறச் செய்தது. கவிதைத் தொகுப்பின் அடுத்த பதில் விட்மன் எமர்சனின் பாராட்டினை பின்னட்டையில் இடம்பெறச் செய்திருக்கிறார்.
எமர்சனுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த விட்மன் தனது கவிதைத்தொகுப்பு குறித்து அவருடன் ஆலோசனைகள் மேற்கொண்டிருக்கிறார். பாலுணர்வு கொண்ட கவிதைகளை தொகுப்பில் சேர்க்க வேண்டாம் என்ற எம்ர்சனின் ஆலோசனையை விட்மன் கேட்கவில்லை.
ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான் என்பதன் புறச்சூழலை படம் அழகாக சித்தரித்துள்ளது. ஆனால் அகத்தில் அவன் எவ்வாறு வளர்ச்சி அடைகிறான். அதன் படிநிலைகள் மற்றும் அவனது தனித்துவமான பார்வைகள் உருவான விதம் பற்றி படத்தில் விவரிக்கப்படவில்லை.
19ம் நூற்றாண்டு கவிஞனாக இருந்தபோதும் அவரது கவிதைக்கான இடமும் அங்கீகாரமும் இருபதாம் நூற்றாண்டில் தான் கிடைத்தது. ஏன் சமூகம் ஒரு கவிஞனை இவ்வளவு தாமதமாக அங்கீகரிக்கிறது என்பது ஆராயப்பட வேண்டிய கேள்வி.
இரண்டு பகுதிகளாக மூன்று மணி நேர அளவில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கண்காணிப்பின் நிழல்
பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி என்றொரு அரிய நூலை பாரதியியல் அறிஞர் சீனி.விசுவநாதன் வெளியிட்டிருக்கிறார். இது பாரதியாரைப் பற்றிய காவல்துறையின் ரகசிய அறிக்கைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கைகள் மற்றும் குறிப்புகளைக் கி.அ.சச்சிதானந்தம் மற்றும் இரா. சுப்பராயலு இருவரும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்
பாரதியை எப்படியெல்லாம் காவல்துறைக் கண்காணித்தது, தொந்தரவு செய்தது என்பதற்கு இந்நூல் நேரடி சாட்சியமாகும்.

இந்தியச் சுதந்திரப் போரில் எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். ஆனால் எவரையும் கண்டு பிரிட்டிஷ் அரசு இவ்வளவு பயப்படவில்லை.
காவல்துறை அதிகாரிகள் பாரதியை நிழல் போலப் பின்தொடர்ந்தார்கள். அவரது பாடல்கள். கேலிச்சித்திரங்கள். சொற்பொழிவுகளை உடனுக்குடன் அறிக்கையாகத் தயாரித்து அரசிற்கு அனுப்பி வைத்தார்கள்.
பாரதியின் ஸ்வதேச கீதங்கள் 1908ல் பதிப்பிக்கப்பட்டது. இந்த நூல் அச்சாவதற்கு முன்பாகவே காவலர்கள் ரகசியமாகப் பதிப்பகத்திலிருந்த பிழை திருத்தப் பயன்படுத்தப்பட்ட பிரதியைக் கைப்பற்றினார்கள். அத்தோடு ஆட்சேபகரமான பகுதிகள் என்று கருதியதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தலைமைச் செயலரின் பார்வைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இது போலவே சென்னை மூர் மார்க்கெட்டில் நடைபெறும் கூட்டங்களில் பாரதியும் சுரேந்திரநாத் ஆர்யாவும் ஆற்றும் சொற்பொழிவுகள் அரசுக்கு எதிராக இருப்பதாகவும் சட்டத்தை மீறும் செயலென்றும் சென்னை நகரக் காவல்துறை ஆணையர் அன்றைய தலைமைச் செயலர் அட்கின்சனுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இதற்குப் பதில் அளித்த அட்கின்சன் அவர்களால் பொது அமைதிக்கு கேடு உருவாகிறது என்பதற்குப் போதிய சான்றுகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.
இந்தியா இதழில் வெளியான ஒரு கருத்துப்படத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வின்ச் வெடிமருந்துக் குவியல் அருகில் நின்று சுருட்டுப் புகைப்பது போல வரையப்பட்டிருந்தது. இதைக் கண்ட போலீஸார் இக் கருத்துப்படம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்கள் வெடிமருந்து போன்றவர்கள் அதை அறியாமல் மாவட்ட ஆட்சித்தலைவர் நடந்து கொள்கிறார் என்பதைக் குறிப்பதாக அறிக்கை அனுப்பி வைத்தார்கள். மேலும் இந்தக் கருத்துப்படத்தை வெளியிட்டதற்காக இந்தியா பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பு எழுதினார்கள்.
திருநெல்வேலியில் வ.உ.சி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட சூழலில் 1908ல் பாரதி திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அவர் யாரைச் சந்திக்கிறார். என்ன பேசுகிறார் என்பதைக் கண்காணிக்கப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ரயில் நிலையத்திலிருந்து பின்தொடர்ந்தார்கள்.
அவர்கள் கொடுத்த அறிக்கையில் பாரதி சிறைக்குச் சென்று வ.உ.சியைச் சந்தித்த விபரமும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் பங்குபெறவே அவர் வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
காவல்துறை தன்னையும் தேசபக்தர்களையும் இடைவிடாமல் கண்காணிப்பதைக் கண்டு கோபமுற்ற பாரதி 1908ல் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற கூட்டத்தில் அதைக் கண்டித்து உரையாற்றினார்.
அந்த உரையில் “நேர்மையான மனிதர்களை நிழல்போலப் பின்தொடர்ந்து கண்காணிப்பது ஈனமான, காட்டுமிராண்டித்தனம் அல்லவா“ எனக் குறிப்பிடுகிறார்.
இந்தக் கண்டன உரையின் காரணமாகப் பாரதியாரைக் கைது செய்யக் காவல்துறை முனைப்புக் காட்டியது. அத்தோடு அவர் கடற்கரையில் நடத்த இருந்த பொதுக்கூட்டத்திற்கும் தடைவிதித்தது.
இத்தோடு நிற்காமல் காவல்துறையே கடற்கரையில் சுதந்திர எழுச்சிப் பொதுக்கூட்டம் நடக்க இருப்பதாகப் பொய்யாக ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு விநியோகம் செய்தது. கடற்கரையில் மக்கள் ஒன்று திரண்டவுடன் அங்கே கலகம் உருவாக்கவும் காவல்துறை திட்டமிட்டிருந்தது என்றும் குறிப்பிடுகிறார் பாரதியார்.
திலகர் கைது செய்யப்பட்டதை அறிந்து பாரதி, ஆர்யா மற்றும் முத்தையா தாஸ் மூவரும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலிருந்து வந்தேமாதரம் என்று முழக்கம் செய்து கொண்டு ஊர்வலம் வந்தார்கள். இரவு பத்துமணிக்குக் கோவில் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. அன்று கூட்டம் முடிய இரவு 11:45 மணியானது என்கிறது இன்னொரு காவல்துறை அறிக்கை.
இந்தியா பத்திரிக்கையை அச்சிடும் அச்சக உரிமையாளர் காவல் துறையினரால் மிரட்டப்பட்டார். இதழின் ஒட்டுமொத்த பிரதிகளையும் கிழித்து அழித்துவிட்டதாகவும் இனி பாரதியின் பத்திரிக்கையை அச்சிட முடியாது என அச்சக உரிமையாளர் மறுத்துவிட்டதாகவும் காவல்துறை அறிக்கை விவரிக்கிறது.
அயர்லாந்தின் விடுதலைக்குத் துணை நின்ற காயலிக் அமெரிக்கன் என்ற ஆங்கிலப் பத்திரிக்கைக்குப் பாரதி சந்தா கட்டி பெற்றுவந்தார். அந்த இதழ் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்து.

பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு பத்திரிக்கையைப் பாரதி வாங்கிப் படித்து வருவதைக் குற்றமாகக் கருதியது காவல்துறை. இதைக் காரணமாக் காட்டி அவரை ஏன் கைது செய்யக்கூடாது என்று காவல்துறையின் இன்னொரு அறிக்கை கூறுகிறது
காவல்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களில் சிலர் நண்பர்களைப் போலப் பாரதியோடு பழகி அவரது வீட்டிற்குச் சென்று உரையாடி வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அவர்கள் தன்னைக் காணிக்கிறார்கள் என்பதைப் பாரதி அறிந்தேயிருந்தார்.
அவர்களிடம் வெளிப்படையாகத் தனது அரசியல் செயல்பாடுகளைத் தெரிவித்து இதை அப்படியே ரகசிய அறிக்கையாக அனுப்பி வையுங்கள் என்றும் பாரதி தெரிவித்திருக்கிறார்.
1908 ஆகஸ்ட் 21 அன்று இந்தியா பத்திரிக்கை அலுவலகம் மற்றும் பதிப்பாளர் திருமலாச்சாரியின் வீடு சோதனை செய்யப்பட்டது. பெருநகர நடுவர் உத்தரவின் பேரில் எம்.சீனிவாசன் கைது செய்யப்பட்டார். இந்தியா அலுவலகமும் சீல் வைக்கப்பட்டது என்கிறது இன்னொரு காவல்துறை அறிக்கை.
பாரதியாரும் கைது செய்யப்படுவார் என்ற நிலையில் அவரும் திருமலாச்சாரியும் மண்டயம் ஸ்ரீஸ்ரீ ஆச்சாரியாரும் புதுச்சேரியில் அடைக்கலமானார்கள். அங்கிருந்து இந்தியா இதழ் மீண்டும் துவங்கப்பட்டது
அங்கும் பிரிட்டிஷ் இந்திய ஒற்றர்களின் தொல்லை குறையவில்லை. பிரெஞ்சு எல்லைக்குள் சென்று பாரதியைக் கைது செய்வது இயலாது. ஆகவே ஏதாவது ஒரு பொய் வழக்கினை உருவாக்க வேண்டும் என முனைந்த பிரிட்டிஷ் இந்திய போலீஸ் அச்சகத்தில் பணியாற்றியவரைக் கட்டாயப்படுத்தி உளவு சொல்பவராக மாற்றினார்கள். 1909ல் இது பற்றிப் பாரதியின் கடிதம் ஒன்று இந்தியா பத்திரிகையில் வெளியாகியுள்ளது
அதில் வரவர காவல்துறையினர் பொய்ச் சாட்சியம் சொல்லுதல். வழக்குகளை ஜோடித்தல் போன்ற அற்ப வேலைகளைச் செய்யத் தலைப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கே அரசாங்கம் உதவி புரிந்து வருகிறது என்று பாரதியார் குறிப்பிடுகிறார்
1918 ஆம் ஆண்டுப் புதுச்சேரியிலிருந்து பாரதி வெளியேறினார். தமிழக எல்லையான கடலூரில் காலடி வைத்தவுடன் அவர் கைது செய்யப்பட்டார். சிறைச்சாலையில் அவரது எண் 253. நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 வரை சிறையில் வைக்கப்பட்டார். 25 நாட்களுக்குப் பிறகு நிபந்தனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டுக் கடையம் சென்றார்.
நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூதாவை சீலே நாட்டின் காவல்துறை எப்படி கண்காணித்தது. துரத்திச் சென்றது என்பதை முழுநீள திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். இந்த காவல்துறை அறிக்கைகளைக் காணும் போது இதை வைத்து அரியதொரு ஆவணப்படத்தை உருவாக்கலாம் என்றே தோன்றுகிறது
.
உதயம்.
ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு உதயம்.

1952 முதல் 54 வரை அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலை அவரே அச்சுக் கோர்த்து பவானி பிரஸ் எனும் அச்சகத்தில் டிரெடில் மிஷினில் தானே அச்சிட்டிருக்கிறார். இப்படி ஒரு எழுத்தாளரின் முதற் தொகுப்பு அவராலே அச்சடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமானது.
அட்டை ஓவியம் வரைந்திருப்பவர் ஓவியர் ஆனந்தன். இந்தத் தொகுப்பில் சாந்தி பூமி, சுமை பேதம், கண்ணன் பிறந்தான், உதயம் பிழைப்பு மீனாட்சி ராஜ்யம், காந்தி ராஜ்யம் என ஏழு சிறுகதைகள் உள்ளன.

ரிக்ஷாக்கார மருதையாவிற்குப் பூர்வீகம் தென்னாற்காடு ஜில்லாவைச் சேர்ந்த விக்கிரவாண்டி எனத்துவங்கும் சுமை பேதம் கதையில் மனுசன் மாட்டையும் குதிரையையும் காட்டி மட்டமாவா பூட்டான். மாடு வலிக்கறதெங்காட்டியும் குதிரை வலிக்கற வண்டி ஒஸ்தின்னா மனுஷன் இஸ்க்கற வண்டி எல்லாத்தியுங் காட்டியும் ஒஸத்தி இல்லியா சாமி என்று கேட்கிறான் மருதையா. ரிக்ஷா ஒட்டுகிறவர்களைப் பற்றி ஜேகே நிறையக் கதைகள் எழுதியிருக்கிறார். அந்த வாழ்க்கையை விவரிக்கும் முதற்கதை என்றே இதைச் சொல்ல வேண்டும்
அந்தக் கதையில் மருத்தையா தன் கை ரிக்ஷா வண்டியில் ஏறுகிறவர்களைத் தான் மனிதனாகவே மதிப்பதில்லை. அவர்கள் நம்மை மனிதனாக நினைக்காத போதும் நாம் மட்டும் ஏன் அவர்களை மனிதனாக நினைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அது ஒரு மூட்டை தான் என்கிறான்.
இந்தக் கதைகள் புதுமைப்பித்தனின் பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன. ஜேகே கதைகளுக்கே உரித்தான உணர்ச்சிப்பூர்வமான உரையாடல்கள். விவாதங்களை ஆரம்பக் கதைகளிலே காணமுடிகிறது.
காந்தி ராஜ்யம் கதையில் காந்தி கண்ட கனவு என்னவானது என்பதை விமர்சனப்பூர்வமாக எழுதியிருக்கிறார். மீனாட்சி ராஜ்யம் புதுமைபித்தனின் பொன்னகரம் கதையினை நினைவுபடுத்துகிறது.
ஆரம்பத்தில் தவளைக் குஞ்சுகள் மீன் குஞ்சுகளைப் போல தானிருக்கும் அது போலவே எனது ஆரம்பக் காலக் கதைகள் என்று பெர்னாட்ஷா சொன்னாராம். இதை சற்றே மாற்றி புதுமைப்பித்தன் இவை மீன் குஞ்சுகளாக தோற்றமளிப்பினும் பின்னால் உருவாகப்போகும் தவளையை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் தவளைக் குஞ்சுகள் தாம் என்று ஆரம்பக் காலக் கதைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். அதையே தானும் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது என முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார்.
இந்த தொகுப்பு 1954ல் வெளியாகியுள்ளது. அதன் மறுபதிப்பு 1995ல் வந்திருக்கிறது. எத்தனை ஆண்டுகள் இடைவெளி பாருங்கள். முதற்தொகுப்பிலே ஒரு எழுத்தாளன் அடையாளம் காணப்பட்டு அங்கீகாரம் பெற்றுவிடுவது அபூர்வமானது. சிலருக்கே அப்படி நடந்திருக்கிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
