S. Ramakrishnan's Blog, page 97
February 9, 2022
நினைவுகளின் வழியே
டிசம்பர் 1943 இல் நாஜி ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட “கலாவ்ரிட்டா படுகொலை” எனப்படும் கிரேக்கப் படுகொலை நிகழ்வினை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Echoes of the Past.

2021ல் வெளியான இப்படம் கற்பனையான சித்தரிப்புகளுடன் இந்த உண்மை சம்பவத்தை விவரிக்கிறது.
படத்தின் துவக்கக் காட்சியில் கலாவ்ரிட்டா படுகொலை நிகழ்விற்கான இழப்பீடு கேட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கையை இன்றைய கிரேக்க அரசாங்கம் துவங்குகிறது.
அன்றிருந்த ஜெர்மன் இப்போது இல்லை. இது புதிய நாடு. புதிய அரசு ஆகவே நாஜி ராணுவத்தின் கொடுமைக்காக நாம் நஷ்டஈடு தரத் தேவையில்லை என அரசிற்குச் சட்ட ஆலோசகர் ஆலோசனை தருகிறார். பிரச்சனையை வளரவிடக்கூடாது. நாளை ஒவ்வொரு நாடும் இது போன்று நஷ்டஈடு கோரி வழக்கு தொடரக் கூடும் என நினைக்கும் அரசாங்கம் உண்மை நிலையை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி வழக்கறிஞர் கரோலினை அனுப்பி வைக்கிறது.
கரோலின் பயணத்தின் வழியே கடந்த காலத்தின் நிகழ்வுகள் விரியத் துவங்குகின்றன.

நாஜி எதிர்ப்பு போராளிகளை ஒடுக்குவதற்காக ஜெர்மன் ராணுவத்தின் 117வது பிரிவு கிரேக்கத்தின் கலாவ்ரிட்டா மலைப் பகுதியினைச் சுற்றி வளைத்துக் கொள்கிறது. வீடு வீடாகச் சோதனை நடைபெறுகிறது. இதற்கிடையில் நாஜி ராணுவத்தின் மீது கொரில்லா தாக்குதல் நடைபெறுகிறது. இதற்குக் காரணமாக இருந்த ஒட்டுமொத்த மக்களையும் கொன்று குவிக்க ராணுவம் முடிவு செய்கிறது
நகரத்தை கொள்ளையடித்து அதை எரித்த பிறகு ஊரில் வசித்த ஆண்கள் அனைவரையும் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்றுவிடுகிறார்கள். பெண்கள் குழந்தைகளை ஒரு பள்ளியில் அடைத்துத் தீவைத்து எரிக்கிறார்கள். ஆஸ்திரிய ராணுவ வீரன் ஒருவனின் உதவியால் அவர்கள் தப்பிப் பிழைக்கிறார்கள்.
இந்தக் கலாவ்ரிட்டா படுகொலையில் 438 பேர் கொல்லப்பட்டார்கள். சுமார் 1,000 வீடுகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன, மேலும் 2,000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டன.

இந்த நிகழ்வுகள் நடந்த போது சிறுவனாக இருந்த நிகோலாஸ் ஆண்ட்ரூவின் பார்வையில் பிளாஷ்பேக் விவரிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிகோலஸ் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதி கேட்கப் போராடுகிறார். மருத்துவருடன் அவர் நடந்து கொள்ளும் விதம். கடந்தகால நிகழ்வுகளுக்குத் தான் ஒருவனே சாட்சியாக இருக்கிறேன் என்பதை உணர்ந்து செயல்படும் விதம் என நிகோலஸின் கதாபாத்திரம் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரிய ராணுவ வீரன் உதவி செய்த சம்பவத்திற்கு எவ்விதமான சாட்சியங்களும் இல்லை என்று கரோலின் நினைக்கிறாள். ஆனால் அதற்கும் சாட்சியம் கிடைக்கிறது. உண்மையைத் தேடி பயணிக்கிறாள்.
கடந்த கால உண்மைகளை அறிந்து கொள்ளும் கரோலின் இந்தப் படுகொலையை மறைத்துத் தன்னால் பொய்யாக அறிக்கை சமர்ப்பிக்க முடியாது என்ற முடிவிற்கு வருகிறாள்.
உறைந்து போன கடந்தகாலம் உயிர்பெறுவதே படத்தின் மையப்புள்ளி. பற்றி எரியும் வீடுகள், புகைமூட்டமான வீதிகள். இறந்து கிடக்கும் உடல்கள். தீபற்றி அலையும் குதிரை என மறக்க முடியாத காட்சிப்படிமங்கள்.
இயக்குநர் டாம் சோலெல்ஸின் பெற்றோர் இருவரும் கலாவ்ரிட்டா மலைப்பகுதியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.ஆகவே நாஜிக் கொடுமைகளைக் கேட்டு வளர்ந்த இயக்குநர் இதைப் படமாக்குவதற்காக நிறைய ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார்.
இந்தத் தலைமுறையினர் போரின் கொடூரத்தைப் புரிந்துகொள்ளவும் மறுக்கப்பட்ட நீதியின் குரலை ஒலிக்கவும் இந்தப் படத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார்

நாஜி ராணுவத்தினைப் பின்தொடரும் சிறுவன் நிகோலாஸ் அவர்கள் ஊருக்குள் வருகிறவர்களை வழிமறித்து விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்வதைக் காணுகிறான். அப்போது ஆஸ்திரிய வீரன் தான் பரிவுடன் அவனுக்கு உதவி செய்கிறான். நிகோலாஸின் வீட்டினை ராணுவம் ஆக்கிரமித்துக் கொள்கிறது. அவனது அம்மா வெறுப்பை மறைத்துக் கொண்டு எப்படி நடந்து கொள்கிறாள் என்பதை நிகோலாஸ் கவனிக்கிறான். ஒரு நகரம் எப்படி ஆக்ரமிக்கபடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலையை இழந்து முடிவில் மரணத்தின் விளம்பிற்குத் தள்ளப்படுகிறது என்பதை மிகச் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்கள்
நாஜி ராணுவத்தினர் அவர்கள் வீட்டினை ஆக்கிரமித்துக் கொள்ளும் காட்சியில் சிறுவனுக்கு ஒரு சாக்லேட் பரிசாகத் தருகிறார்கள். அதைச் சாப்பிடுவதா, அல்லது தூக்கி எறிந்துவிடுவதா என்று நிகோலஸ் குழம்புகிறான். குற்ற நிகழ்வு ஒன்றை மறைத்துவிட்டு எதுவும் நடக்காதவன் போல அவன் அந்தச் சாக்லேட்டை பையிலிருந்து எடுத்துச் சாப்பிடும் காட்சி அழகானது. அவன் சூழ்நிலையைப் புரிந்து கொண்டிருக்கிறான் என்பதன் அடையாளமது.
ஊரைக் காலி செய்து வெளியேற்றும் ராணுவத்திடமிருந்து எப்படித் தப்பிப் போவது என நிகோலாஸின் அப்பா அம்மாவிற்குத் தெரியவில்லை. முக்கியமான பொருட்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகச் செல்கிறார்கள். தனது நகையை மறந்து வைத்துவிட்டதை அம்மா சொன்னவுடன் நிகோலஸ் வீட்டிற்கு ஓடுகிறான். அங்கே அவன் காணும் காட்சி அதிர்ச்சிகரமானது.
போர் என்பது ஆயிரமாயிரம் துயர நினைவுகளை உள்ளடக்கியது. 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டபோதும் அந்தத் துயரத்திலிருந்து விடுபட முடியவில்லை என்று தான் நிகோலாஸ் ஜெர்மன் அரசிற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுகிறார்.

கலாவ்ரிட்டா படுகொலையில் இறந்து போனவர்களின் புகைப்படங்களைக் காணும் கரோலின் கண்ணீர் விடுகிறாள். என்றோ நடந்து முடிந்துவிட்ட சம்பவம் என்று ஆரம்பக் காட்சியில் அவள் கேலி பேசுகிறாள். ஆனால் மறுக்கப்பட்ட நீதி என்றும் மறைவதில்லை என்பதை அவள் முடிவில் உணர்ந்து கொள்கிறாள்.
இதே கதைக்கருவில் இதே போன்ற காட்சிகளின் மூலம் நாஜிக் கொடுமைகள் பற்றி விவரிக்கும் படங்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. ஆனாலும் ஒவ்வொரு படமும் எழுப்பும் கேள்விகள் முக்கியமாகவே இருக்கின்றன. உண்மையை எத்தனை நாளைக்கு மறைத்துவைக்க முடியும் .
மலையுச்சிக்கு அழைத்துச் செல்லப்படுகிறவர்கள் தாங்கள் அநியாயமாகக் கொல்லப்படப்போகிறோம் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் கண்களில் நிர்கதி வெளிப்படுகிறது. ஒரேயொரு கிழவர் மட்டும் தன்னை விட்டுவிடும்படி மன்றாடுகிறார். ஆனால் துப்பாக்கிக் குண்டு அவர் மீதும் பாய்கிறது. அங்கிருந்த அத்தனை பேரும் கொல்லப்படுகிறார்கள். இறந்தவர்களை தேடி பெண்கள் பதற்றமாகச் செல்லும் காட்சி துயரத்தின் உச்சம்.
படத்தின் இறுதிக்காட்சியில் அங்கே அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தைக் காட்டுகிறார்கள். இன்று அந்த மலைப்பகுதி அமைதியாக உள்ளது. என்றோ நடந்த வரலாற்று நிகழ்வின் மௌனசாட்சியமாக இந்த நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன.
நடந்து முடிந்த போர்க்குற்றங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்று படம் எழுப்பும் கேள்வி முக்கியமானது. உலகெங்கும் இன்று நீதியின் குரலை ஒலிக்கும் படங்கள் தொடர்ந்து உருவாக்கபடுகின்றன. வரலாறு கேள்வி கேட்கப்படுகிறது. இன்றைய தேவையும் அதுவே
••
45 வது புத்தகக் காட்சி
சென்னை நந்தனத்தில் 45 வது புத்தகக் காட்சி பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை நடைபெறவுள்ளது.
காலை 11 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது.
தேசாந்திரி பதிப்பகம் இந்தக் கண்காட்சியில் பங்குபெறுகிறது.

தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் எனது நூல்கள் யாவும் கிடைக்கும்.

கற்பனையுலகின் வரம்பு.
செர்பிய நாவலாசிரியரான மிலோராட் பாவிக் நேர்காணலின் ஒரு பகுதி .
தமிழில்: லதா ராமகிருஷ்ணன்.

தானாஸிஸ்: கற்பனாதீதம் (fantasy) என்பது வாழ்க்கையின் உண்மைகளுக்கெதிராகப் போரிட ஒருவர் பயன்படுத்தும் ஆயுதமா?
பாவிக்: மெய்யுலகிற்கும், கற்பனையுலகிற்கும் இடையே தெளிவான, திட்டவட்டமான வரம்பெல்லைகள் என்று எதுவும் கிடையாது. ஒரு சுதந்திர மனிதன் அந்த இரண்டு உலகங்களுக்கும் இடையேயான வரம்பெல்லைகளை அழுத்தி, அடக்கி வைக்கிறான். ஒரு எழுத்தாளனாக இந்த உணர்வு எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது. ஒரு எழுத்தாளனிடம் இடம் பெற்றிருக்க வேண்டிய மிக முக்கிய ஆற்றல் மெய்ம்மையும், கற்பனாதீதமும் ஒரே உலகத்தைப் பிரதிபலிக்கக் கூடிய அந்தக் குறிப்பிட்ட புள்ளியை எட்டுவது தான் என்று உண்மையாக நம்புகிறேன். அப்படி எட்டிய பின்பு விஷயங்கள் இயல்பாக உருப்பெறும். அவை உருவாக வேண்டிய விதத்தில் தானே வளர்ச்சியடையும்
தானாஸிஸ்: சிந்தனையைத் தவிரப் படைப்பாளிக்கு வேறு என்ன தேவைப்படுகிறது?
பாவிக்: காதல்! வேறுவிதமாகச் சொல்வதென்றால் நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதன் மீது உங்கள் மனம் காதல் வயப்பட்டிருக்க வேண்டும். தவிர நீங்கள் எழுதிக் கொண்டிருப்பது அந்த அழிவற்ற சக்தியின் வழியாக மாறுவதற்கான சந்தர்ப்பம் இருந்தால் அதனை நீங்கள் முடக்கலாகாது. இந்தச் சக்தியை உங்களுடைய புத்தகத்தினூடாய் பாய்ந்தோட நீங்கள் அனுமதித்தால் அந்த படைப்பு வாசகனைச் சென்றடைவதற்கான வழியைத் தானே கண்டுபிடித்துக் கொள்ளும் என்பது உறுதி
••
நன்றி
அட்சரம் இதழ் 2002
February 8, 2022
நாடகப் பயணம்
எனது நாடக வாழ்க்கை என்ற அவ்வை தி.க.சண்முகம் நூலில் மல்லாங்கிணருக்கு நாடகம் போட வந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில் சங்கரதாஸ் சுவாமிகள் மல்லாங்கிணருக்கு வந்து நாடகம் நடத்திய செய்தி இடம்பெற்றுள்ளது.

எங்கள் வீட்டின் அருகிலுள்ள தேரடியில் தான் அந்தக் காலத்தில் நாடகங்கள் நடந்திருக்கின்றன.

மல்லாங்கிணரில் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏதாவது நடக்கிறது என்றால் வேட்டுப் போடுவார்கள். அந்தச் சப்தம் கேட்டு பக்கத்துக் கிராமத்து மக்கள் யாவரும் ஒன்று திரண்டு வந்துவிடுவார்கள். அந்த விளம்பர யுக்தியை வியந்து டிகே சண்முகம் எழுதியிருக்கிறார்.
ஆடல் இல்லாத நாடகத்தை மக்கள் எப்படி ரசித்தார்கள் என்பதைப் பற்றிய குறிப்பும் சுவாரஸ்யமானது.





கிராமப்புறங்களைத் தேடி இப்படி நாடகக்குழுக்கள் சென்று வந்த காலம் மறைந்துவிட்டது. இன்று தொலைக்காட்சி, சினிமா தவிர வேறு கலைநிகழ்ச்சிகள் இல்லை.
கோவில் திருவிழாவிற்கு நாடகம் ஏற்பாடு செய்கிறவர்கள் கூட இப்போதெல்லாம் மெல்லிசை நிகழ்ச்சி அல்லது ஆடல்பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துவிடுகிறார்கள்.
விடிய விடிய வள்ளி திருமணம் நாடகம் நடந்த நாட்கள் நினைவில் பசுமையாக இருக்கின்றன. நாடகம் முடிந்த பிறகு நடிகர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அப்போது விவசாயிகள் தங்களின் நிலத்தில் விளைந்த காய்கறிகள். பழங்கள். கம்பு, சோளம் போன்ற தானியங்கள். நாட்டுக்கோழிகளை அன்புப் பரிசாகக் கொடுப்பதைக் கண்டிருக்கிறேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் பண்பாட்டுச் சூழலையும் நாடக் குழுக்களின் செயல்பாடுகளையும் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார் டி.கே.சண்முகம். ஒரு காலப்பெட்டகமாகவே இதைக் கருதுகிறேன்.
February 5, 2022
கற்பனைக் குமிழிகள்
சில படங்கள் முதல் காட்சியிலே நம்மை உள்ளிழுத்துக் கொண்டுவிடக்கூடியவை. அப்படியான ஒரு திரைப்படம் தான் Asino vola.( DONKEY FLIES) 2015ல் வெளியான இத்தாலியத் திரைப்படம்.

மொரிசியோ என்ற இசைக்கலைஞரின் பால்ய நினைவுகளை விவரிக்கும் இப்படத்தின் முதற்காட்சியில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக மொரிசியோ செல்லும் போது அவர் கூடவே ஒரு கோழியும் செல்கிறது. அவருடன் அந்தக் கோழி பேசுகிறது. அவருக்காக ஒரு முட்டையைத் தருகிறது. மொரிசியோவும் அந்தக் கோழியுடன் உரையாடுகிறார். அதன் முன்னே இசை நிகழ்த்துகிறார். அந்தக் கோழி உன்னை உன் அம்மா தேடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறது. அதன் வழியே அவரது கடந்த கால நினைவுகள் ஒளிரத் துவங்குகின்றன
தெற்கு இத்தாலியிலுள்ள சிறிய ஊரில் வாழும் ஏழு வயது மொரிசியோ வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த பையன். புத்திசாலித்தனமான கழுதை மற்றும் குரல் கொடுக்கும் கோழி தான் அவனது நண்பர்கள்.
சதா சிறார்களுடன் விளையாடித் திரியும் மொரிசியோவை அடித்து வீட்டிற்கு இழுத்து வருவதற்காக அவனது அம்மா கையில் ஒரு குச்சியோடு அலைந்து கொண்டிருக்கிறாள்.
மொரிசியோ குப்பைமேட்டில் கிடக்கும் பழைய பொருட்களைக் கிளறிக் கொண்டு திரிகிறான். அங்கே அவனைத் தேடி அம்மா வருகிறாள். அம்மாவின் அடிக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொள்கிறான்.

வழியில் நிற்கும் கழுதையோடு பேசுகிறான். அவன் பூனை, கோழி, கழுதை என எல்லா விலங்குகளுடன் பேசக்கூடியவன். அந்த விலங்குகளும் அவனுக்கு அறிவுரை கூறுகின்றன. உண்மையில் அந்த விலங்குகள் தான் அவனைப் புரிந்து கொண்டிருக்கின்றன. வழிகாட்டுகின்றன.
கற்பனை, நிஜம் என்று நாம் பிரித்து வைத்துள்ள கோட்டினை அழித்து எல்லாமும் நிஜம் என்கிறான் மொரிசியோ.
ஒரு நாள் மொரிசியோ உள்ளூர் இசைக்குழு ஒன்றில் இணைந்து பயிற்சி எடுக்கத் துவங்குகிறான். மற்ற சிறுவர்களைப் போல அவனிடம் இசைக்கருவியில்லை. இதனால் அவன் பின்தங்கிய மாணவனாக நடத்தப்படுகிறான்.
அவனது அம்மா இசை கற்பதெல்லாம் வீண் என்று நினைக்கிறாள். இசை கற்கவோ, இசைக்கருவி வாங்கவோ பணம் தர மறுக்கிறாள். ஆனால் இசை ஆசிரியர் அவன் மீது அன்பு கொண்டு தேவையான உதவிகளைச் செய்கிறார்.
உள்ளூர் இசைக்குழுவினை நடத்தி வரும் கிழவர் இறந்து போன தனது மகனின் நினைவாக அவன் வாசித்த இசைக்கருவி மற்றும் அவனது இக்குறிப்புகளைப் பாதுகாப்பாக ஒரு பெட்டியில் வைத்துப் பராமரித்து வருகிறார். அதிலுள்ள இசைக்கருவியை மொரிசியோவிற்குத் தரலாம் என்று அவரது மகன் முனையும் போது பெரியவர் கோபம் கொள்கிறார்.
எப்படியாவது தனக்கென ஒரு இசைக்கருவியைப் பெற வேண்டும் என்பதற்காக மொரிசியோ மேற்கொள்ளும் முயற்சிகள் வேடிக்கையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
வாத்தியக்குழுவில் டிரம்ஸ் வாசிக்கத் துவங்கி தனது இசைப்பயணத்தை எப்படி மொரிசியோ துவங்கினான் என்பதே படம்.

குப்பை மேட்டில் கிடக்கும் பொருட்களை ஒரு சூட்கேஸில் நிரப்பிக் கொண்டு தன் வீட்டிற்கு மொரிசியோ கொண்டு வருவதும், தானே பழைய டிரம் ஒன்றைச் சரி செய்ய முயல்வதும். டிரம்ஸ் வாசிக்கக் கற்றுக் கொள்ளும் போது அவனது நடையும். கடைசியில் இசைக்குழுவின் சீருடை அணிந்து மிடுக்காகச் செல்வதும் அழகான காட்சிகள்.
ஒரு காட்சியில் அவனது வீடு தேடி இசை ஆசிரியர் வருகிறார். அப்போது மொரிசியோவின் அம்மா அவரை வரவேற்று உபசரிக்கிறாள். அன்று தான் தனது மகன் உண்மையில் இசையில் ஆர்வம் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்கிறாள்,
படத்தின் முடிவில் மொரிசியோ அவளிடம் தனக்குக் கிடைத்த பணத்தைத் தரும் போது அவள் பெருமைப்படுகிறாள். மொரிசியோவின் அம்மா ஒரு அபூர்வமான கதாபாத்திரம்.
இசை கற்றுக் கொள்ளத் துவங்கிய பிறகே தனது குடும்பச் சூழல். பணத்தின் மதிப்பு. உதவி செய்கிறவர்களின் இயல்பு, தனக்கானவற்றைப் பெறுவது உள்ள சங்கடம் இவற்றை மொரிசியோ உணர்ந்து கொள்கிறான். உண்மையில் அவன் பெரியவர்கள் உலகில் அப்போது தான் அடியெடுத்து வைக்கிறான். அவனுடன் சேர்ந்து இசையமைப்பவர்கள் அத்தனை பேரும் பெரியவர்கள். மொரிசியோ தனது ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்கிறான். இசை கற்க முடியாது என்ற சூழல் வரும்போதெல்லாம் அவன் தைரியமாக இசை கற்பதே தனது ஆர்வம் என்பதில் உறுதியாக இருக்கிறான். அவன் இசையின் மூலமாகத் தன்னை நிரூபித்துக் கொள்ள முனைகிறான்.
பால்ய வயதின் கனவுகளை மிக இயல்பாக, கவித்துவமாகப் பதிவு செய்துள்ளது இப்படம். காமிக்ஸ் புத்தகத்தில் வரும் உரையாடல் போல அவன் மனவோட்டங்கள் சிறிய குமிழ்களாக வெளிப்படுகின்றன. அதில் வேடிக்கையான சித்திரங்கள் தோன்றி மறைகின்றன.
“All grown-ups were once children… but only few of them remember it.” என்றொரு வரி குட்டி இளவரசனில் வருகிறது. இந்தப் படமும் நம்மை அப்படிச் சிறுவனாக உணர வைக்கிறது.
February 4, 2022
வங்காளத்தில்
வங்காளத்தில் வெளியாகவுள்ள சிறந்த இந்தியச் சிறுகதைகள் தொகுப்பில் எனது ஐந்து வருட மௌனம் சிறுகதை இடம் பெற்றுள்ளது. இந்தக் கதையை மொழியாக்கம் செய்திருப்பவர் கிருஷ்ணசாமி.

நகரம் அழைக்கிறது
Empty Eyes 1953ல் வெளியான இத்தாலியத் திரைப்படம்

காஸ்டெலூசியோவில் வசிக்கும் இளம் பெண் செலஸ்டினா பேருந்தைப் பிடிப்பதற்காக ஓடிவருவதில் படம் துவங்குகிறது. அப்பா அம்மா இல்லாத செலஸ்டினா கிராமப்புறத்திலிருந்து ரோம் நோக்கிச் செல்கிறாள். அவளை வழியனுப்ப வந்துள்ள சகோதரர்கள் தைரியம் சொல்லி பேருந்தில் ஏற்றிவிடுகிறார்கள்.
முதன்முறையாக வீட்டை விட்டு தனியே பயணம் செய்கிறோம் என்ற பயம். இனி ஊர் திரும்பி வரமுடியாதோ என்ற குழப்பம் எனப் பேருந்தினுள்ளும் அவள் அழுகிறாள். பேருந்தின் ஒட்டுநர் அவளிடம் விசாரிக்கிறார்.
வீட்டு வேலைக்காகத் தன்னை ரோமிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். யார் வீட்டிற்குப் போகிறோம். என்ன வேலை என்று எதுவும் தெரியாது என்கிறாள். ரோமிற்குச் சென்றவர்கள் பின்பு ஊர் திரும்பவே மாட்டார்கள். கவலைப்படாதே என்று அவர் சமாதானப்படுத்துகிறார்

ரோமிற்கு வந்து இறங்கும் செலஸ்டினா கன்னியாஸ்திரீகள் உதவியோடு ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேருகிறாள். அந்தக் குடும்பம் அப்போது தான் புதிதாக வீடு மாறி வந்திருக்கிறது. அவர்கள் வீட்டை செலஸ்டினாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. கிளை பிரியும் பாதைகள். ஒன்று போலிருக்கும் வீடுகள் அவளை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.
கைக்குழந்தையைக் கவனித்துக் கொண்டு வீட்டு வேலைகள் யாவையும் பார்க்க வேண்டும். குழந்தை இரவெல்லாம் அழுகிறது. அதை அவளால் சமாளிக்க முடியவில்லை. எஜமானி காரணமின்றி அவளைக் கோவித்துக் கொள்கிறாள். அவசரத்தில் பீங்கான் பாத்திரங்களைக் கவனமின்றி உடைத்துவிடுகிறாள். தண்ணீர் குழாயை உடைத்துவிடுகிறாள். அதைச் சரி செய்ய வந்த பிளம்பர் அவளைக் கட்டி அணைக்கிறான். முகத்தில் அறைந்துஅவனை வெளியே துரத்திவிடுகிறாள். இப்படி விதவிதமான நெருக்கடிகள்.
நகரவாழ்க்கை அவளுக்குப் பிடிபடவேயில்லை. அறைக்குள்ளாகவே அடைந்து கிடக்கிறாள். அந்தக் குடியிருப்பில் அவளைப் போலப் பணிப்பெண்ணாக உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் ஒன்று சேர்ந்து சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். செலஸ்டினாவிற்கோ அணிந்து கொள்ள நல்ல உடைகள் இல்ல. காலணிகள் இல்லை. ஆகவே அவள் வெளியே போகத் தயங்குகிறாள்.
பக்கத்துவீட்டுப் பெண் அவள் மீது பரிவு கொண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை வெளியே அழைத்துப் போகிறாள். அன்று அவளது தலை அலங்காரத்தை மாற்றி அழகுபடுத்தி நடனக்கூடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.. அங்கேயும் நடனத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருக்கிறாள்.

ஆனால் முதல் நாள் அவளுடன் சண்டையிட்ட பிளம்பர் பெர்னாண்டோ இன்று ஆசையோடு நெருங்கி நடனமாட அழைக்கிறான். அந்த நடனத்தில் அவனுடன் நட்பாகிறாள். அன்று தாமதமாக வீடு திரும்பி எஜமானியின் கோபத்திற்கு ஆளாகிறாள்.
இரவில் அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தத் தெரியாமல் அடுப்பில் உள்ள சமையல் வாயுவைத் திறந்துவிட்டு குழந்தையைச் சுவாசிக்கச் செய்கிறாள். அதைக் கண்டு பதறிய எஜமானி குழந்தையைக் கொல்ல முயன்றாள் என்று குற்றம் சாட்டி வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறாள்.
அவளது வேலை பறிபோகிறது. வேறு வேலை தேடிப் போகிறாள். பின்பு ஓய்வுபெற்ற தம்பதியரால் பணியமர்த்தப்படுகிறார், அங்கும் பெர்னாண்டோ அவளைத் துரத்துகிறான். பெர்னாண்டோவுடன் காதல் பிறக்கிறது. அப்பாவிப் பெண்ணாக ரோமிற்கு வந்த செலஸ்டினா எப்படி நகரத்துப் பெண்ணாக மாறுகிறாள். அவளது வாழ்க்கையின் பாதை எப்படித் திசை மாறிப் போகிறது என்பதை இப்படம் மிக அழகாக விவரிக்கிறது.
அன்டோனியோ பீட்ராஞ்செலியின் இயக்கிய முதற்படமிது. போருக்குப் பிந்திய ரோம் நகர வாழ்க்கையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை காட்டியிருக்கிறார். தேர்ந்த ஒளிப்பதிவு. இயல்பான நடிப்பு. பெரிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதை. சிறிய கதாபாத்திரங்களை கூட தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்ட அழகு என படம் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது
கிராமத்திலிருந்து நகரிற்கு வரும் இளம்பெண்ணின் கதை சினிமாவில் பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ரோமிற்கு வரும் போது செலஸ்டினாவிடம் கனவுகள் எதுவுமில்லை சகோதரர்கள் அவளைப் பார்க்க வரும் நாளில் கூட அவள் சொந்த ஊருக்குத் திரும்பிப் போய்விட வேண்டும் என்றே சொல்கிறாள். அவர்கள் பிழைப்பிற்காக ஆஸ்திரேலியா புறப்படுகிறார்கள். படியில் அவர்கள் இறங்கிச் செல்லும் போது இனி அவர்களைக் காண முடியாதோ என்ற பயத்தால் ஓடிவந்து கண்ணீருடன் செலஸ்டினா விடை தருகிறாள். மிக அழகான காட்சியது.
ரோம் நகர வாழ்க்கை அவளுக்குள் சாதுரியத்தையும் ஆசைகளையும் உருவாக்குகிறது. அவளது தோற்றம் மற்றுமின்றி இயல்பும் மாறிவிடுகிறது. உண்மையில் செலஸ்டினா ஏமாற்றப்படுகிறாள். அவளை நம்பியவர்களே அவளை ஏமாற்றுகிறார்கள். ஆனால் முன்பின் அறியாதவர்கள் உதவி செய்ய முன்வருகிறார்கள். அடைக்கலம் தருகிறார்கள். அவளது பாவங்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்குப் பாதிரியாருக்குக் கூட நேரமில்லை.
முதன் முறையாகச் சம்பளம் வாங்கிய செலஸ்டினா அந்தப் பணத்தை வியப்போடு தோழிகளிடம் காட்டுகிறாள். இன்னும் அதிகம் சம்பளம் கேள் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவளோ இவ்வளவு பணத்தை இதற்கு முன்பு கண்டதேயில்லை என்று பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறாள்.

நகரில் ஏன் இவ்வளவு வம்பு பேசுகிறார்கள். காரணமின்றி ஒருவரை வெறுக்கிறார்கள். சிறு விஷயங்களுக்குக் கூடச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று செலஸ்டினாவிற்குப் புரியவேயில்லை. உன்னை மற்றவர்கள் ஏமாற்றும் போது நீ ஏன் அடுத்தவரை ஏமாற்றக்கூடாது என்று தோழிகள் கேட்கிறார்கள். தன்னால் அப்படி நடந்து கொள்ள முடியாது என்கிறாள் செலஸ்டினா. ஆனால் வாழ்க்கைச் சூழல் அவளை நெருக்கடியில் தள்ளிவிடுகிறது. களங்கமில்லாத அவளது முகத்தில் குழப்பம் படர்ந்துவிடுகிறது. கயிறு அறுந்த பட்டம் போலாகிவிடுகிறது அவளது நிலை.
இத்தாலிய நியோ ரியலிச திரைப்படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் செலஸ்டினாவும் மறக்க முடியாதவள்.
••
,
February 3, 2022
வண்ணதாசனின் ஓவியங்கள்
வண்ணதாசன் சிறந்த கவிஞர் சிறுகதையாசிரியர் மட்டுமில்லை. தேர்ந்த ஒவியரும் கூட.
கதைகளிலும் கவிதைகளிலும் அவர் விவரிக்கும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் துல்லியமும் நிகழ்விடத்தின் நிறங்களும் நுட்பங்களும் ஓவியனின் கண்களால் பார்த்து எழுதப்பட்ட சொற்சித்திரங்களே.

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென், மகாகவி தாகூர், விக்டர் ஹுயூகோ, ஃபெடெரிகோ கார்சியா லோர்கா ,ஹெர்மன் ஹெஸ்ஸே, சில்வியா பிளாத். குந்தர் கிராஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிறந்த ஓவியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் முழுநேரமாக ஓவியம் வரைவதை முன்னெடுக்கவில்லை. ஆனால் தனது குறிப்பேடுகளில் தான் கண்ட காட்சிகளை, தன்னைச் சுற்றிய உலகைக் கோட்டோவியமாக வரைந்திருக்கிறார்கள். தனிமையை, பிரிவைத் தைல வண்ண ஓவியங்களாக வரைந்திருக்கிறார்கள். அவை காட்சிக்கு வைக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
நான் அறிந்தவரைக் கவிஞர் தேவதச்சன் மிக அழகாகக் கோட்டோவியங்கள் வரையக்கூடியவர். கவிஞர் பிரமீள் அழகாக ஓவியம் வரையக்கூடியவர். கவிஞர் எஸ் வைத்தீஸ்வரன் முறையாக ஓவியம் பயின்றவர். கவிஞர் யூமா வாசுகி சிறந்த ஓவியர்.
வண்ணதாசன் சமீபத்தில் வரைந்த கோட்டோவியங்களை முகநூலில் பதிவிட்டு வருகிறார். அவரது தீவிர வாசகரான பாஸ்கரன் அவற்றைத் தொகுத்து எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.





அழுத்தமான கோடுகளில் துல்லியமாக உணர்ச்சியை வெளிக்காட்டும் முகங்கள். குறிப்பாகக் கண்களை அவர் வரைந்துள்ள விதம் அபாரமானது. மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தும் பெண் முகங்கள். வண்ணதாசன் தனித்துவமான முக அமைப்புக் கொண்டவர்களை வரைகிறார். பெரும்பாலும் நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் முதியவர்கள். அந்த முகங்களில் தான் வாழ்க்கையின் பிரகாசமும் துயரமும் ஒன்று போல வெளிப்படுகின்றன போலும்
ஆச்சியின் மூக்குத்தியினை, பெண்ணின் கூந்தல் மலர்களை, நெற்றிப்பொட்டினை, கழுத்து சங்கிலி, சேலை மடிப்புகளை எத்தனை அழகாக வரைந்திருக்கிறார்.
இந்த ஓவியங்களும் அவரது கவிதைகளும் வேறுவேறில்லை. ஓவியங்களை ஒரு சேரப்பார்க்கும் போது கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற வண்ணதாசனின் தலைப்பு தான் நினைவில் வந்தது.
புகைப்படங்கள் தராத நெருக்கத்தை இது போன்ற ஓவியங்கள் உருவாக்குகின்றன. இந்த ஓவியத்திலிருப்பவர் யார் என அறியாத போதும் அவர்கள் என் வீட்டைச் சேர்ந்தவர்கள். எனக்கு நெருக்கமானவர்கள் என்ற உணர்வே ஏற்படுகிறது.
இந்த ஓவியங்கள் மிகச்சிறப்பாக இருப்பதைப் பற்றி அவரிடம் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்தேன். இவற்றை பின்பு தனிநூலாகக் கொண்டு வர வேண்டும் என்று ஆசையிருப்பதாகச் சொன்னார்.
ஜப்பானில் ஜென் ஓவியங்கள் கையடக்கமான அழகான பதிப்பாக வெளியாகின்றன. அது போன்ற நேர்த்தியுடன் இந்த ஓவியங்களும் வெளியிடப்பட வேண்டும்.

எம். சுந்தரன் வரைந்த வண்ணதாசனின் ஓவியம் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கோடுகளில் வண்ணதாசனின் கண்களும் முகபாவமும் வெகு நேர்த்தியாக வரையப்பட்டிருக்கும். அதில் வெளிப்படும் வண்ணதாசனின் மௌனம் வசீகரமானது.
அந்த ஓவியத்தோடு பேரன்பு தான் வண்ணதாசனின் கதையுலகத்தை இயக்கும் விசை. தெரிந்தவர் தெரியாதவர் என்று யார் மீது வேண்டுமானாலும் அது படரும். அது உண்மையான அன்பின் விதி. ஏற்கனவே மனதில் நிரம்பித் ததும்பிக் கொண்டிருக்கும் பிரியம் வழிந்து பாய ஒரு சிறு சம்பவம் போதும் என்ற குறிப்பை எழுதியிருப்பார்கள்.
இந்த ஓவியங்களும் அவரது பிரியத்தின் சாட்சியங்களே.
தெலுங்கு மொழிபெயர்ப்பு
அவளது வீடு கதையின் தெலுங்கு மொழிபெயர்ப்பு ஈமாட்ட இணையபத்திரிகையில் வெளியாகியுள்ளது.

இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் அவனி பாஸ்கர்
இணைப்பு: ஆமெ இல்லு
ఆమె ఇల్లు
இந்த கதையினை பாராட்டிதெலுங்கின் முதுபெரும் இலக்கிய விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான திரு.கணேஸ்வர் ராவ் அவர்கள் எழுதிய குறிப்பு
உங்கள் மொழிபெயர்ப்பு எங்கேயும் மொழிபெயர்ப்புபோல் தோன்றவில்லை, காரணம் மூலக்கதையின் நேர்த்தியாக இருக்கலாம். ‘Home'(இந்தப் பொருளில் தெலுங்கு சொல் இல்லை) என்ற கதைக்கருவை வைத்து உலக அளவில் கதைகள் இருக்கின்றன, புதினங்கள் இருக்கலாம. தீவிர பெண்ணீய எழுத்தாளராக இருந்திருந்தால் இந்தக் கதைக்கு அகல்யாவுக்கு பிடித்த வீட்டில் தான் தனியே வாழ்வது போன்றதொரு முடிவை கொடுத்திருப்பார். Home எல்லோருக்கும் ஒரு அடையாளம், அது பெண் ஆனாலும் ஆண் ஆனாலும்… ஏன் பிள்ளைக்கும் கூட… அவரவருக்கான ஸ்பேஸ் அவரவருக்கு இருக்க வேண்டும். இந்த சத்தியத்தை எந்தக் கதையும் இதைவிட சிறப்பாக சொல்ல முடியாமல் போகலாம்.”
February 1, 2022
இசையின் சித்திரங்கள்
அழிசி வெளியீடாக வந்துள்ள ரா. கிரிதரன் எழுதியுள்ள காற்றோவியம் என்ற கட்டுரைத் தொகுப்பினைப் படித்தேன். மேற்கத்திய செவ்வியல் இசை, அதன் வகைகள் , இசைமரபு, இசையின் வரலாறு. இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் கர்நாடக இசைக்கலைஞர்களின் ஆளுமை என விரியும் மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு. தமிழில் இது போன்ற கட்டுரைகள் இதுவரை வந்ததில்லை.

மேற்கத்திய இசையினை அறிந்து கொள்வதற்கும் ரசிப்பதற்கும் ஒரு கையேடு போலவே இக்கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. புனைவெழுத்திற்கு நிகரான சுவாரஸ்யத்துடன் இக் கட்டுரைகளை கிரிதரன் எழுதியிருக்கிறார்.
மேற்கத்திய இசைமேதைகளின் வரலாறு, இசையில் அவர்கள் ஏற்படுத்திய சாதனைகள். கர்நாடக இசைமேதைகள் பற்றிய கட்டுரைகள். இசைஞானி இளையராஜாவின் தனித்துவமிக்க How to name it. Nothing but wind போன்ற இசைக்கோர்வைகளின் முக்கியத்துவம், இசைக்கலைஞர் நரசிம்மனின் இசைத்தொகுப்புகள், சுபின் மேத்தா, ஜீன் சிபேலியஸ், பான்சுரிக்கலைஞர் க்ளைவ் பெல்லின் நேர்காணல் என இந்த தொகுப்பிலுள்ள கட்டுரைகள் யாவும் மிகச்செறிவாகவும் கவித்துவ மொழியிலும் எழுதப்பட்டுள்ளன.
இக் கட்டுரைகளை வாசிக்கும் போது பக்கத்திலிருந்து கிரிதரன் நம்மோடு உரையாடுவது போன்ற தொனி மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. மேற்கத்திய செவ்வியல் இசை மட்டுமின்றி கர்நாடக இசை, ஜாஸ், ஆபரா, ரவிசங்கரின் சிம்பொனி, Fusion இசைத்தொகுப்புகள் என ஆழ்ந்து கேட்டு வந்தவர் என்பதைக் காணமுடிகிறது.
லண்டனில் வசிக்கும் கிரிதரன் அங்கு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளைக் காண ஒவ்வொரு தேவாலயமாகச் செல்கிறார். அவருடன் நாமும் இணைந்து பயணித்து இசை கேட்கிறோம். நம்மையும் ஒரு இசைப்பயணியாக்குவதே அவரது தோழமை. தேவாலயத்தின் அமைப்பு, அங்கு இசைக்கபடும் இசையின் வகை, அதன் வரலாற்று பின்னணி, அந்த இசையை அணுக வேண்டிய விதம், பார்வையாளர்களின் நிசப்தம் என தேர்ந்த இசை ஆசிரியரைப் போலவே நம்மை வழிநடத்துகிறார்.
பாப்லோ கசல்ஸ் பற்றிய கட்டுரையை வாசிக்க துவங்கிய சில நிமிஷங்களில் ஒரு ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வை அடைந்தேன். பாக்கின் ஆறு செல்லோ இசைக்குறிப்புகள். அதை மீள்உருவாக்கம் செய்யும் பாப்லோ கசல்ஸின் வாழ்க்கை, அவரது இசைப்பயணம். இதன் ஊடாக அவரது சொந்த மண்ணில் நடந்த அரசியல் மாற்றங்கள். ராணுவ ஆட்சியின் கொடுமை. இசைப்பதிவிற்காக லண்டன் சென்றது. நிறைவேறாத அவரது இசைக்கனவு. முடிவில் பிரான்ஸின் பிரதேஸ் கிராமத்தில் வாழ்ந்து வந்த அவரது நாட்கள், அவருக்காக நிகழ்த்தப்பட்ட இசைநிகழ்ச்சி. அதன் பிரம்மாண்டம் என பாப்லோ கசல்ஸின் வாழ்க்கை வழியாக பிரம்மாண்டமான மானுட நாடகத்தையே நாம் காணுகிறோம். தமிழில் எழுதப்பட்ட நிகரற்ற இக்கட்டுரைக்காக கிரிதரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்தக் கட்டுரையின் முடிவில் காணொளிஇணைப்புகளை கொடுத்திருக்கிறார். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உடனடியாக இந்த இணைப்பை காணத்துவங்கினேன். ஆஹா.. செல்லோ இசை கடல் அலையைப் போல உள்ளிழுத்துக் கொள்கிறது. நிகரில்லாத அனுபவம்.
இந்த கட்டுரையில் காற்றில் ஊசலாடும் மெழுகுவெளிச்சம் பேல தத்தளித்த கசல்ஸின் தன்னம்பிக்கை என்றொரு கவித்துவமான வரியை எழுதியிருக்கிறார். . அபாரமான அந்த வரியை கடந்து செல்ல முடியவில்லை. இசைக்கலைஞனின் ஆன்மாவை தொட்டு எழுதப்பட்ட வரியது. கிரிதரனுக்குள் ஒரு தேர்ந்த கவிஞனிருக்கிறார்.

இருபதாண்டுகளாகத் தொடரும் மௌனப்புரட்சி கட்டுரையில் மேற்கத்திய இசையில் இசைஞானி இளையராஜாவின் ஞானம் மற்றும் அவர் உருவாக்கிய திசையிசை பாடல்களின் செவ்வியல் இசையினை எப்படி உருமாற்றுகிறார் என்பதையும் அவரது இசைத்தொகுப்பில் உருவாக்கியுள்ள இசைக்கோலங்களின் தனித்துத்தையும் கிரிதரன் விவரிக்கும் போது இதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் அந்த இசைத்தொகுப்புகளை கேட்டிருக்கிறோமே என்று தோன்றியது.
சமாதானத்தின் இசை என்ற சுபின் மேத்தாவின் இசைப்பங்களிப்பு பற்றிய கட்டுரை ஒரு திரைப்படம் போலவே கண்முன்னே விரிகிறது. கிரிதரன் சுபின் மேத்தாவாக உருமாறிவிடுகிறார். நான் சுபின் மேத்தா நடத்திய இசைநிகழ்ச்சியை நேரில் கேட்டிருக்கிறேன். மும்பையில் நடந்தது. மறக்கமுடியாத அற்புத அனுபவமது. இந்த கட்டுரையில் சுபின் மேத்தா உருவான விதம் மற்றும் அவரது ஆளுமையின் சிறப்பம்சங்கள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரைத் தொகுப்பு வாசிப்பதற்கானது மட்டுமில்லை. இதிலுள்ள இணைப்புகளின் வழியே மிகச்சிறந்த இசை நிகழ்ச்சிகளை கேட்கவும் ரசிக்கவும் உறுதுணையாக இருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு.
இசை குறித்து நிகரற்ற நூலை எழுதியதற்காக ரா.கிரிதரனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
அழிசி ஸ்ரீனிவாசன் மிக அழகிய வடிவமைப்புடன் இந்த நூலை வெளியிட்டிருக்கிறார். தமிழ் பதிப்புலகிற்கு அழிசி செய்து வரும் பங்களிப்பு பெரும் நன்றிக்குரியது. அவருக்கு என் அன்பும் பாராட்டுகளும்
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
