சாப்ளினின் பயணங்கள்

Chaplin in Bali என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். 2017ல் வெளியானது. ரஃபேல் மில்லட் இயக்கியுள்ளார்.

மௌனப்படங்களின் யுகம் முடிந்து பேசும் படங்கள் வரத்துவங்கிய போது சார்லி சாப்ளின் தனது இடம் பறிபோனது போலவே உணர்ந்தார். பேசும் படத்திற்கு ஏற்ப எப்படித் தனது நடிப்பை மாற்றிக் கொள்வது, தனது குரலை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டது. அத்துடன் திருமண உறவில் ஏற்பட்ட சிக்கல். விவாகரத்து. பத்திரிக்கையாளர்களுடன் ஏற்பட்ட மோதல் எனத் தொடர்ந்து பிரச்சனைகளால் சூழப்பட்டிருந்தார்.

ஆகவே 1932ம் ஆண்டு ஒரு நீண்ட பயணத்தைச் சாப்ளின் தனது சகோதரன் சிட்னியுடன் இணைந்து மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் அவர் பாலி தீவிற்குச் சென்று தங்கினார். அதனை மையமாகக் கொண்டே இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது

தனது பயணத்தினைச் சாப்ளினே சிறிய கேமிரா மூலம் பதிவு செய்திருக்கிறார். நிறையப் புகைப்படங்களையும் எடுத்திருக்கிறார். பயண அனுபவத்தை ஒரு தொடராகவும் சாப்ளின் எழுதினார். A Comedian Sees the World என அது தனி நூலாகவும் வந்துள்ளது

சாப்ளினின் ஆசியப் பயணம் அவருக்குள் நிறைய மாற்றங்களை உருவாக்கியது. பரபரப்பான அமெரிக்க வாழ்க்கைக்கு மாற்றாக இயற்கையான தீவு வாழ்க்கை அவரைச் சந்தோஷப்படுத்தியது

சாப்ளினின் இந்தப் பயணம் எப்படித் துவங்கியது. எங்கெல்லாம் பயணம் செய்தார். யாரைச் சந்தித்தார், எப்படி வரவேற்றார்கள் என்பதை இந்த ஆவணப்படம் விரிவாகப் பதிவு செய்துள்ளது.

பாலித் தீவு இயற்கை அழகுடன் அமைதிப் புகலிடமாக விளங்கக்கூடியது. இன்று அது உலகின் முக்கியச் சுற்றுலா மையம். ஆனால் சாப்ளின் சென்ற நாட்களில் இவ்வளவு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை.

பிப்ரவரி 1932 இல், லான்ஸ்பெர்ஜ் கப்பலில், சார்லி தனது மூத்த சகோதரர் சிட்னி உடன் பயணம் செய்தார், சுவிட்சர்லாந்திலிருந்து புறப்பட்டு, சூயஸ் கால்வாய் வழியாகச் சிங்கப்பூர் சென்றார். பின்பு அங்கிருந்து பாலித் தீவிற்குச் சென்றிருக்கிறார். செல்லுமிடமெல்லாம் அவரை மக்கள் பெருந்திரளாகக் கூடி வரவேற்றார்கள். கொண்டாடினார்கள். விதவிதமான விருந்து நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

கப்பலிலிருந்தபடியே சாப்ளின் கைகளை அசைக்கிறார். பத்திரிக்கையாளர்கள் அவரைப் புகைப்படம் எடுக்கப் போட்டிப் போடுகிறார்கள்.

1908 இல் டச்சுக்காரர்கள் வசம் பாலித் தீவு இருந்தது. அவர்களை அதை முக்கியச் சுற்றுலா மையமாக மாற்றினார்கள். பாலித் தீவைப் பூவுலகின் சொர்க்கம் என்பது போல விளம்பரப்படுத்த அரை நிர்வாண பெண்களின் படங்களை வெளியிட்டார்கள்.

சாப்ளின் வடக்கு பாலிக்குச் சென்று டச்சு அதிகாரிகளின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். அங்கே ஆளுநர் மற்றும் டச்சு அதிகாரிகள் வசித்து வந்தனர் – சீனர் மற்றும் இந்தியர்களால் நடத்தப்படும் சந்தை ஒன்று இருந்தது. .அவற்றையும் சாப்ளின் பார்வையிட்டார்

பின்பு தெற்கு பாலிக்குச் சென்று தங்கினார். அங்கே அவரை மன்னர் வரவேற்றுக் கௌரவித்து இரண்டு பகல் மற்றும் இரண்டு இரவு நடைபெறும் பாரம்பரிய திருவிழாவை ஏற்பாடு செய்தார்.

கோயில் முகப்பின் முன்பு இந்த விழா நடைபெற்றது., பராம்பரிய இசைக்கருவிகளை வாசிக்கும் வாத்திய குழுவினர்களும் அழகான அலங்காரத்தில் நடனமாடும் பெண்களுமாக அந்த விழா பெரும் கொண்டாட்டமாக இருந்தது

நடனமாடும் பெண்களுடன் இணைந்து சாப்ளின் ஆடினார். ராமாயணக் காட்சியின் சிறு பகுதியை மையமாகக் கொண்டு 10-12 வயது சிறார்களால் நிகழ்த்தப்பட்ட மரபு நடனத்தைச் சாப்ளின் ரசித்துப் பார்த்தார்,

மூன்று முறை சாப்ளின் பாலித்தீவிற்கு வருகை தந்திருக்கிறார். அந்த மக்களையும் அவர்களின் பண்பாட்டுச் சிறப்புகளையும் பற்றி ஒரு திரைப்படத்தை எடுக்கவும் முனைந்திருக்கிறார். ஆனால் அந்தப் படம் உருவாக்கப்படவில்லை.

இந்த எட்டு மாத பயணம் அவருக்குள் ஏற்படுத்திய மாற்றமே மார்டன் டைம்ஸ் திரைப்படத்தை எடுக்கக் காரணமாக இருந்திருக்கிறது. இப்படம் இயந்திரமயமாகிப் போன நவீன வாழ்க்கையை விமர்சனம் செய்கிறது.

மௌனப்படங்களுக்கெனத் தான் உருவாக்கிய பாணியை மாற்றிக் கொண்டு பேசும்படங்களில் சாப்ளின் புதிய அவதாரத்தை எடுத்தார். இன்றும் உலகம் கொண்டாடும் The Great Dictator படமே அவரது முதல் பேசும் படமாகும்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2022 23:25
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.