அன்பும் நன்றியும்.
புத்தகக் கண்காட்சியில் ஏன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள். உடல் நலமில்லையா என்று பலரும் அன்போடு விசாரிக்கிறார்கள்.
மூட்டு அழற்சி காரணமாக எனது வலது முழங்காலில் வீக்கம் ஏற்படுகிறது. அதனால் நாற்காலியில் அமர்ந்து வாசகர்களைச் சந்திக்கிறேன். அதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறாக நினைத்து கண்டனக்குரல் எழுப்பி வருகிறார்கள்.
நின்றபடியே புத்தகங்களில் கையெழுத்துப் போடுவது சிரமமானது. மேலும் தொடர்ந்து நிற்பதால் கால் வீக்கம் அதிகமாகிறது
என் அருகிலே இரண்டு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. விரும்புகிறவர்கள் அதில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் புத்தகக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்திக்கிறேன். அவர்களின் அன்பு நெகிழச் செய்கிறது.
இந்த அன்பும் ஆசியும் தான் என்னை எழுத வைக்கிறது. என்றும் உறுதுணையாக இருக்கிறது.
இவர்கள் தான் எனது உலகம். எனது மனிதர்கள். என் எழுத்தையும் என்னையும் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை நேரில் அறிந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியானது.
நான் அன்றாடம் புத்தகக் கண்காட்சிக்கு வருவதைச் சிலர் கேலி பேசுகிறார்கள். அவர்களுக்கு இந்த அன்பின் மகத்துவம் புரியாது.
புத்தகக் கண்காட்சி என்பது வெறும் வணிகச் சந்தையில்லை. அது எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்தித்து மகிழும் பண்பாட்டுவெளி.
ஒரே இடத்தில் ஓராயிரம் பறவைகள் ஒன்று கூடியிருப்பதைக் காணுவது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அதை விடவும் மகிழ்ச்சியானது இத்தனை வாசகர்களை ஒரே இடத்தில் காணுவது.
புத்தகம் என்பது ஒரு சுடர். ஆயிரமாயிரம் சுடர்கள் உயர்த்திப் பிடிக்கப்படும் போது எந்த இருளும் விலகி ஒடிவிடும்.







••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
