அன்பு மட்டுமே எல்லாம்
‘மண்டியிடுங்கள் தந்தையே’ வாசிப்பனுபவம்
டாக்டர் மதன்குமார்

தந்தை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மகனின் ஒரு வித்தியாசமான போராட்டத்தையும் (இளம் வயதில் ஒருவாறாக வயது முதிர வேறொரு விதமாக), தன்னைக் காதலித்துப் பிள்ளையைக் கொடுத்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ளாத ஒருவரை எந்தவித கோபமும் வெறுப்பும் இல்லாமல் அணுகும் ஒரு பெண்ணையும், தன் கணவனின் கடந்த காலத்தை அறிந்து அவர் இப்போது அப்படியில்லை என்று அறிந்தும் அவர் எங்கே தன்னைப் பிரிந்து விடுவாரோ என்ற ஏக்கமும் அவரின் மீது அளவற்ற அன்பும் அக்கறையும் கொண்டு அதே சமயத்தில் பொறுப்பும் கடமையும் கொண்ட சோபியா என்ற பெண்ணைப் பற்றியதுமாக இருக்கிறது இந்நாவல்.
இதில் தந்தை, ஏமாற்றியவர், கணவன் ஆகிய மூன்றுமே லியோ டால்ஸ்டாய் தான். இருந்தாலும் டால்ஸ்டாய் அவரின் உண்மையான இயல்புகளாலும் சிறந்த பண்புகளினாலும் இரக்கமும் உதவும் குணமும் அவரை வேறொரு பரிணாமத்தில் அணுக வைக்கிறது. தன் தந்தை டால்ஸ்டாய், அம்மா அக்ஸின்யாவின் கல்லறையில் நின்று பூக்கள் வைத்து வருந்துவதைக் கண்டு திமோஃபி அமைதியாய் நிற்கிறான் என்பதோடு கதை முடிவடைகிறது.
இது தமிழில் எழுதப்பட்ட இரஷ்ய நாவல் என்று நண்பர் ஒருவர் சொல்லியதாகவும் அதையே எஸ்.ரா அவர்கள் விரும்பியதுமாக முன்னுரையில் குறிப்பிட்ட போது வித்தியாசமான சூழலுக்கு நுழைகிறோம் என்றே படிக்க ஆரம்பித்தேன்.
பெயர்களை மட்டும் மாற்றி விடுவதால் அது ரஷ்ய இலக்கியமாக மாறிவிடாது கதாப்பாத்திரங்கள் அதன் இயல்புகள், சூழல், உணவு, ஊர்கள் என்று பல விடயங்களைக் கவனிக்க வேண்டும் அதை ரஷ்யாவிலே வசித்து அதன் அத்தனை நிகழ்வுகளையும் கூர்ந்து நோக்கிய ஒருவரால் தான் நாவலை முழுமை அடையச்செய்யும். அப்படிப் பார்க்கையில் உண்மையாகவே நம்மை ரஷ்யாவில் உள்ள யாஸன்யா போல்யானவின் பண்ணைக்கே கூட்டிச்சென்று சுத்திக்காட்டுகிறது இந்நாவல்.
இந்நாவலில் ஒரு கடிகாரத்தின் மையமாக லியோ டால்ஸ்டாய் இருக்கிறார் அதில் திமோஃபி மற்றும் அக்ஸினியா நொடி முள்ளாகச் சூழலுகிறார்கள். இக்கடிகாரத்தின் முள் முன்னும் பின்னுமாகச் சுழன்று சோபியா, செர்ஜி, முட்டாள் டிமின்ட்ரி என்ற பல கதாப்பாத்திரங்களைக் காட்டுகிறது.
இந்நாவலை கூர்ந்து கவனித்தால் படிக்கும் நமக்கு டால்ஸ்டாயாகவும், சோபியாவிற்கு லிவோச்சாவாகவும், இளமை காலத்தில் லெவ்வாகவும், அக்ஸின்யாவிற்கு நல்லுள்ளம் கொண்ட உயர்ந்த கணவானாகவும், பண்ணை தொழிலாளிகளுக்கு முதலாளியாகவும் வலம் வருகிறார் கதாநாயகன் கவுன்ட் லெவ் நிக்கோலோவிச் டால்ஸ்டாய்.
இதெல்லாம் முக்கியமில்லாதது என்று எண்ணுதல் வேண்டாம். எந்த அளவிற்கு அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் புரிந்துக்கொண்டு இருந்தால் அவரவர்கள் எப்படி அழைப்பார்கள் என்று ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப அவரின் பெயரை உபயோகித்துள்ளார் என்பது புரியும்.
இந்நாவலில் எஸ்.ரா அவர்கள் பட்டாம்பூச்சி விளைவு (BUTTERFLY EFFECT) பயன்படுத்தியுள்ளார் என்று சொன்னால் மிகையாகாது. நாவலின் ஆரம்பத்தில் சொல்லி சொல்லாமல் விட்ட விடயங்கள் பக்கங்கள் சொல்ல சொல்ல விவாதிக்கும் முறையில் அழகாக விளக்கப்பட்டுள்ளது. உதாரணமாக டால்ஸ்டாய் தனது தவறை நினைத்து முதலில் வருந்துவார். அந்த எண்ணம் பக்கங்கள் நகர ‘கடந்த காலத்தை எவன் மறைக்க விரும்புகிறானோ அவன் நிகழ்காலத்தில் தொடர்ந்து தவறுகள் செய்வான்’ என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது அவர் தனது கடந்த காலத்தை மறைக்க விரும்பவில்லை எனவும் தற்போது எந்தத் தவறு செய்யவில்லை என்றும் விளக்குகிறார். இந்தக் கருத்து மேலும் வலுவடைந்து ஒரு உரையாடலில் ‘மன்னிப்பு கேட்பதால் குற்றத்தைக் கடந்து போய்விட முடியாது’ என்று டால்ஸ்டாய் சொல்ல ‘ஆனால் உணர முடியுமோ’ என்று பிராங் கேட்க ‘அது ஒரு தப்பித்தல்’ என்று சொல்லுகிறார். இதற்கு ஆதாரமாக அக்ஸின்யாவிற்குப் பிடித்த மஞ்சள் பூக்களை அவர் அவளின் கல்லறையில் வைத்து அமைதியாய் நிற்கும் போது இறந்தவர்களிடம் மன்னிப்பு கேட்பது சிரமமானதில்லை அவர்கள் உயிரோடு இருப்பவர்களைப் போலக் கோபித்துக் கொள்வதில்லை. இத்தனை காலம் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்பது இல்லை. மன்னிப்பு கேட்க வந்தாலும் முகம் கொடுத்து பார்க்க மாட்டேன் என்று திரும்பி கொள்வதில்லை பிறந்தவர்கள் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். இனி அவர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று அவர் மனதில் தோன்றியது. இது மாதிரி எடுத்துக்காட்டுக்கள் பல சொல்லலாம்.
இந்த நாவலின் கதாப்பாத்திரங்கள் டால்டாயின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது இன்னொரு சிறப்பு. அக்ஸின்யா ஒரு பண்ணையில் வேளையில் செய்யும் பெண் அவள் தன்னை ஏமாற்றியவர் மீது எந்தக் கோபமும் கொள்ளாமல் அவரை மதித்து அவரின் அன்புக்காக ஏங்கி, அவரை விட்டு விலகாமல் அங்கேயே அந்தப் பண்ணை வேலைகளைச் செய்யதுக்கொண்டு இருக்கும் வெளியுலகம் தெரியாத பெண்.
இதை விளக்க டால்ஸ்டாய் உடன் ஒரு இளைஞன் நடத்தும் உரையாடலின் போது “துர்கனேவ் கதைகளில் வரும் பெண்கள் கட்டுப்பாடுகளை மீறுகிறார்கள் மிகுந்த தைரியசாலியாக நடந்து கொள்கிறார்கள் ஆனால் உங்கள் கதையில் வரும் பெண்கள் தடுமாற்றத்துடன் நடந்துகொள்கிறார்கள் பகல் கனவுகளில் சஞ்சரிக்கிறார்கள்” என்று இளைஞன் கேட்க அதற்கு டால்ஸ்டாய் “அது உண்மை இல்லை அவர் விருந்தில் சந்தித்து அழகிகளைக் கதாபாத்திரமாக எழுதிக் கொண்டிருக்கிறார். நான் அப்படி இல்லை பண்ணை அடிமைகள் பற்றி எழுதுகிறேன் தனிமையிலும் பெண்களை உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களை நிராதரவான பெண்களைப் பற்றி எழுதுகிறேன்” என்று கூறுகிறார்
இதை இன்னொரு இடத்தில் “நீங்கள் எப்பொழுதும் ஏன் பெண்கள் பக்கம் இருக்கிறீர்கள்” என்று ஒருவர் கேட்க “அந்தப் பக்கம் தான் நியாயம் இருக்கிறது”, “உங்கள் கதையின் நாயகிகள் முடிவில் வெற்றி அடைவதில்லை”, “வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது நான் பொய்யாகக் கதாபாத்திரங்களுக்குச் சுபமான முடிவு அளிப்பதில்லை” என்று கூறுகிறார் இதே தான் எஸ்.ரா அவர்களும் அக்ஸினியாவின் கதாப்பாத்திரத்திற்கு நியாயப்படுத்தியிருக்கிறார். இன்னொரு பக்கம் சோபியா, அவளின் வருகை ஒட்டுமொத்த பண்ணையின் நிலையையும் மாற்றிவிடுகிறது. எல்லாப் பொறுப்புகளையும் சுமந்து அதை ஒழுங்குபடுத்தி நிர்வாகிக்கும் திறமையான பெண்ணாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பெண் என்பவள் சுதந்திரமான முடிவுகளை எடுக்கக் கூடியவள் என்பதற்கேற்ப கருத்தடை, குழந்தைப்பேறு போன்றவற்றின் பெண்மை சார்ந்த வலிகளையும் தன் கருத்துக்களையும் சொல்லும் போது முற்போக்காக இருக்கிறார்கள் சோபியா.
திமோஃபி சிறுவனாய் இருக்கும் போது தந்தை பற்றிய கேள்விகளையும் பதின் பருவத்தில் முரட்டுத்தனமாகவும் தன் தந்தையின் மீது அளவற்ற கோவத்தையும் கொண்டவனாக இருக்கிறான். தந்தையின் அன்பை தேடும் ஒருவனாகத் தன்னைத் தன்னைத் தனித்து உணரும் மனிதனாக இருக்கிறான். பண்ணையிலிருந்து வெளியேறி உலகம் சுற்றி மீண்டும் தனக்கென ஒரு இருப்பிடம் வேண்டுமென உணர்ந்து பண்ணையை வந்தடையும் போது முற்றிலும் வேறொரு மனிதனாக இருக்கிறான். உலகம் அவனுக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
அதன் பின் தன் தந்தைக்குத் தொந்தரவு இல்லாமல் பண்ணையின் எல்லா வேலைகளையும் செய்து அவரைத் தூரத்திலிருந்தே ரசிக்கிறான். தனக்கென ஒரு குடும்பம் அமையும் போது புது மனிதனாய் மாறி அதை இழக்கும் போது இனிமேல் இழக்க ஏதுமில்லாதவன் போல் மாறிவிடுகிறான். அவனின் முடிவு சற்று சோகமானது தான் ஆனால் அது தான் நிதர்சனம்.
அடுத்து முக்கியமாகக் கூறவேண்டும் என்றால் முட்டாள் டிமிட்ரி. ஒவ்வொரு முறையும் அவனை முட்டாள் டிமிட்ரி என்று தான் சொல்லப்படுகிறது அதற்குக் காரணம் என்னைப் பொறுத்தவரை அவன் கடவுள் உங்களைப் பார்க்கிறார் என்றும் அனைவரின் தவறுகளையும் அறிந்தவனாக இருக்கிறான். இப்படி உண்மையையும் தவறுக்குப் பரிகாரத்தைக் கூறுபவனையும் முட்டாள் என்று தானே கூறுவார்கள். அவன் வரும் பகுதிகள் அத்தனையுமே அருமையான வரிகளில் நிரப்பப்பட்டிருக்கும்.
மண்டியிடுங்கள் தந்தையே ஒரு ரஷ்ய நாவல் தான் என்று நான் முழுமையாக நம்புகிறேன். நாவல் முழுவதும் அன்பு மட்டுமே எல்லாம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு நாவல்.
எஸ்.ரா அவர்களின் உழைப்பு, நாவலுக்காகத் தன் அர்ப்பணிப்பு என்பது வரிகளின் ஊடே தெரிகிறது. அவர்கள் மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க நான் வேண்டுகிறேன்.
இந்நாவலை பற்றி இன்னும் நிறையப் பேசலாம் ஆனால் சுவாரசியத்தை நான் குறைக்க விரும்பவில்லை. படியுங்கள் நிச்சயம் பிடிக்கும்.
***
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
