S. Ramakrishnan's Blog, page 93
March 13, 2022
பிரிவின் சொற்கள்
The Letter Room என்ற முப்பது நிமிஷம் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றைப் பார்த்தேன். சிறைக் கைதிகளுக்கு வரும் கடிதங்களைத் தணிக்கை செய்து ஒப்படைக்கும் அதிகாரியின் கதை.

தனிமையில் வாழும் சிறை அதிகாரி ரிச்சர்ட் இரக்க குணம் கொண்டவர். சிறைக்கைதிகளிடம் அன்பாக நடந்து கொள்கிறார். இவரைத் தகவல் தொடர்பு இயக்குநராகப் பதவி உயர்வு கொடுத்து நியமிக்கிறார்கள். தனது புதிய வேலையில் கைதிகளுக்கு வரும் கடிதங்களைப் படித்துத் தணிக்கை செய்கிறார். சிறைக்கோப்பிற்காக இந்தக் கடிதங்களை ஸ்கேன் செய்து வைப்பதும் அவரது வேலை.
மரணதண்டனை கைதி ஒருவன் தனக்கு மகளிடமிருந்து கடிதமே வருவதில்லை என்று ஏங்குகிறார்.
ஒரு கைதிக்கு அவனது மனைவி ரோசிட்டாவிடமிருந்து வரும் கடிதங்களில் உள்ள நெருக்கத்தையும் காதலையும் உணர்ந்த ரிச்சர்ட் கைதி ஏன் பதில் கடிதம் எழுத மறுக்கிறான் எனப் புரியாமல் குழம்பிப் போகிறான். அந்தப் பெண் மீது கொண்ட பரிவின் காரணமாக ரோசிட்டாவை நேரில் தேடிச் சென்று அவளது கணவனைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறாள்.

அவள் கடிதம் எழுதுவது பதில் பெறுவதற்காக அல்ல. நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்காகத் தான் என்று ரிச்சர்ட்டிற்குப் புரிய வைக்கிறாள். இது அவனுக்குள் மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது
நம் அனைவருக்கும் நம்மை நேசிக்க யாராவது ஒருவர் தேவை என்பதைப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது
Elvira Lind இயக்கியுள்ளார். ரோசிட்டாவின் கடிதம் வழியாக அவன் தன்னை நேசிக்க எவருமில்லை என்பதை உணர்ந்து கொள்கிறான். ரிச்சர்ட்டின் வீடு. இரவு வாழ்க்கை. காரில் அமர்ந்தபடியே சாப்பிடுவது. சிறையில் ரோசிட்டா கடிதத்தைப் படித்துக் காம உணர்வினை அடைவது என நுட்பமாகப் படம் விரிகிறது.
ரிச்சர்ட் தன்னோடு பணியாற்றுகிறவர்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. விலகியே நடந்து கொள்கிறான். அவனது மேலதிகாரியிடம் நடந்து கொள்வதும் அப்படியே.
தான் பாட்காஸ்ட ஒன்றில் கேட்ட கதையிலிருந்து இந்தப் படத்தை உருவாக்கியதாக இயக்குநர் கூறுகிறார். அந்தக் கதையில் முகம் தெரியாத ஒரு பெண் எழுதும் கடிதங்களில் மயங்கி அவளுக்குத் தொடர்ந்து பணம் அனுப்புகிறான் ஒருவன். முடிவில் அது பெண்ணில்லை. ஒரு ஆண் பெண் பெயரில் கடிதம் எழுதி பணம் பறிக்கிறான் என்பதைக் கண்டறியும் போது மனம் உடைந்து போகிறான்.
இந்தக் கதைச் சரட்டினை சிறைச்சாலையினுள் பொருத்தி திரைக்கதை எழுதியுள்ளதாகக் கூறுகிறார்
ரோசிட்டாவின் கடிதங்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கின்றன. அந்த வரிகளின் வழியே அவளுடன் ரிச்சர்ட் நெருக்கமாகிறான். சிறைவிதிகளை மீறி அவளைத் தேடிப் போகிறான். அவள் வழியாக அவன் புதிய மாற்றத்தையும் அடைகிறான்.
அரைமணி நேரப்படத்திற்குள் ஒரு கதாபாத்திரத்தின் அகவுலகையும் அவனது மனமாற்றத்தையும் நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பது பாராட்டிற்குரியது.
நாவலின் ஒவியம்
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை நாவலில் வரும் சுப்புவை படம் வரைந்திருக்கிறார் கோபாலகிருஷ்ணா.

ஒரு நாவல் எப்படி எல்லாம் கொண்டாடப்படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கு மூன்று இயக்குநர்கள் வேறுவேறு தருணங்களில் தொடர்பு கொண்டார்கள். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. அதற்கான சரியான தருணம் விரைவில் வரக்கூடும் என நம்புகிறேன்

March 11, 2022
உயிருள்ள பொம்மைகள்
மண் பொம்மை காளிந்தீசரண் பாணிக்ராஹியின் நாவல். ஒரிய மொழியில் எழுதப்பட்ட இந்நாவலை ரா. வீழிநாதன் தமிழாக்கம் செய்திருக்கிறார். நான் அறிந்தவரை மூன்றோ நான்கோ ஒரிய நாவல்கள் தான் இதுவரை தமிழில் வந்துள்ளன. ஒரியச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று நேஷனல் புக் டிரஸ்ட் மூலம் வெளியாகியுள்ளது. சமகால ஒரிய இலக்கியப் படைப்புகள் அதிகம் தமிழில் வெளியாகவில்லை. ஆங்கிலத்தில் சில வாசிக்கக் கிடைக்கின்றன. ஒரியக் கவிதைகள் பெற்ற கவனத்தை ஒரிய கதைகள் பெறவில்லை என்றே தோன்றுகிறது.

காளிந்தி சரண் பாணிகிராஹி கவிஞர், நாவலாசிரியர், நாடகாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். 1930களில் ஒடியா இலக்கியத்தில் முற்போக்கு மார்க்சிய இயக்கங்கள் தீவிரமாக வளர்ச்சிகொண்ட போது அதை உருவாக்கிய பகபதி சரண் பாணிக்ராஹி இவரது தம்பி

ஆங்கிலத்திலும் எழுதிய பாணிக்ராஹி இரண்டு ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்திருக்கிறார். அவரது மூத்த மகள் நந்தினி சத்பதி ஒடிசாவின் முதலமைச்சராக விளங்கியவர்.
Matira Manisha என்ற இவரது புகழ்பெற்ற நாவலை மிருணாள் சென் திரைப்படமாக எடுத்திருக்கிறார். இந்த நாவலின் தமிழாக்கம் தான் மண்பொம்மை.
அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்படும் பாகப்பிரிவினையை விவரிக்கும் இந்த நாவல் காந்தி யுகத்தில் ஒரிய கிராமங்கள் எப்படியிருந்தன என்பதை மிக நுண்மையாகச் சித்தரித்துள்ளது.
பதான் பாடா கிராமத்தில் வசிக்கும் சாம்பதான் ஊரில் யார் எந்த வேலைக்குக் கூப்பிட்டாலும் முதல் ஆளாகப் போய் நிற்பான். மனதிற்குப் பட்டதைத் தைரியமாகப் பேசக்கூடியவன். ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் அவனது பங்கில்லாமல் எதுவும் நடக்காது. மண்குடிசையில் வசிப்பவன். அந்த வீட்டினை அவன் தான் கட்டினான்.
ஊரில் இரண்டு பேர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சாம்பதான் குறுக்கே புகுந்து ஒருவரின் காலையும் மற்றவனின் கையினையும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வான். சோறு தண்ணீர் இல்லாமல் காலை முதல் மாலை வரை இப்படியே உட்கார்ந்திருப்பான். சாம்பதான் செத்தபிறகு அவரவர் மனப்படி சண்டைபோட்டுக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்வான்.
இப்படி அடுத்தவர் வீட்டில் சண்டை போட்டாலே குறுக்கிடும் சாம்பதான் குடும்பத்திற்குள்ளே சச்சரவு உருவாகிறது. அது எப்படி வளர்ந்து பிரிவனையாகிறது என்பதை நாவல் அழகாக விவரிக்கிறது
சாம்பதானின் மனைவி கடும் உழைப்பாளி. இரண்டு மருமகள்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போதும் அவளாக வீட்டுவேலைகளை இழுத்துப் போட்டுச் செய்கிறவள். அவள் தனது மூத்தமகனை மலைமுழுங்கி என்றும் இளையவனைப் பித்துக்குளி என்று செல்லமாக அழைக்கிறாள். இரண்டு மருமகளையும் சமமாக நடத்துகிறாள். அது மூத்த மருமகளுக்குப் பிடிக்கவில்லை. மருமகள்களுக்குள் சண்டை வரும் போது கிழவி சண்டை போட்டால் வீடு இரண்டு பட்டுவிடும் என்று எச்சரிக்கை செய்கிறாள். அவளது மரணத்தின் பின்பு அவளது வாக்குப் பலித்துவிடுகிறது.
சாம்பதான் இறக்கும் போது மூத்த மகன் பர்ஜுவிடம் இளையவன் சக்டியோடு சண்டைபோடாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும். நிலத்தைப் பங்கு போடக்கூடாது. வீட்டில் இரண்டு அடுப்பு எரியக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறான்
இதன்படியே பர்ஜு நடந்து கொள்ள முயற்சிக்கும் போது அவனது மனைவி சிறிய விஷயங்களுக்குக் கூடக் குறை சொல்வதுடன் சக்டி மனைவியோடு வீண் சண்டை போடுகிறாள்.

சக்டி ஒரு உழைப்பு சோம்பேறி. சூதாடி. ஆகவே தனக்குரிய சொத்தைப் பங்கு போட்டுத் தரும்படி அண்ணனிடம் சண்டை போடுகிறான்.
தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி முடியாத பர்ஜு வாய்மூடி மௌனியாகிறான். ஒரு நிலையில் தம்பி கேட்டயாவையும் அவனுக்கே தந்துவிடவும் முயலுகிறான்.
குடும்பத்திற்குள் நடக்கும் இந்தச் சகோதர சண்டையை ஊரில் சிலர் வளர்த்துவிடுகிறார்கள். அடுத்தவரின் வீழ்ச்சியை ரசிப்பது காலம் காலமாகவே தொடரும் மனோவிகாரம் என்பதையும் நாவல் பதிவு செய்திருக்கிறது.
நாவலை வாசிக்கும் போது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகக் கிராமங்களிலும் இது போலச் சொத்துப் பிரிப்பதில் சகோதரர்கள் போட்டுக் கொண்ட சண்டையும் வழக்குகளும் நினைவில் வந்து போயின.
ஊரில் அண்ணனுக்குக் கிடைக்கும் மரியாதையும் கௌரவமும் தனக்குக் கிடைப்பதில்லையே என்று சக்டி நினைக்கிறான். அதைக் காட்டிக் கொள்ளாமல் சொத்தை பிரிப்பதில் குறியாக இருக்கிறான். மனைவியின் பேச்சைக் கேட்டு அண்ணனுடன் தகராறு செய்கிறான். இதைப் பர்ஜு புரிந்து கொள்வதுடன் ஒதுங்கிப் போகவே முயலுகிறான்.
பாகப்பிரிவினை என்பது விதியின் விளையாட்டு அதிலிருந்து தப்ப முடியாது என்று ஜதுதலேயி என்ற கதாபாத்திரம் சொல்கிறது.
விதி தான் காரணமா இல்லை மனிதர்கள் தனது அறியாமையால். சகவாச தோஷத்தால் இப்படி நடந்து கொள்கிறார்களா, தர்மம் அழிந்து போய்விட்டதா என்பதைப் பாணிக்ராஹி பல இடங்களில் விவாதிக்கிறார்.

அண்ணன் மகள் திருமணத்திற்குச் சக்டி போகக் கூடாது என்று அவனது மனைவி தடுக்கிறாள். அவளது கோபத்திற்குப் பயந்து அவனும் போகாமல் நின்றுவிடுகிறான். அது மன உறுத்தலைத் தருகிறது. ஆனால் ஊர்மக்கள் பர்ஜு தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினான். அதற்கான செலவு பற்றிச் சக்டிக்கு எதுவும் தெரியாது என்று குத்திக்காட்டும் போது அவன் கோபம் கொள்கிறான். அண்ணன் தம்பிகளின் சண்டையை வீட்டுப் பெண்கள் வளர்த்தெடுக்கிறார்கள். வீடு நரகமாகிப் போகிறது.
பர்ஜுவை வழிநடத்துவது அவன் கேட்டறிந்து பின்பற்றும் ராமாயணம் மற்றும் பழங்கதைகள். ஆனால் சக்டிக்கு இது போலப் புராணங்கள், கதைகள் எதிலும் நம்பிக்கை கிடையாது. அவன் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறான்.
காளிந்தீசரண் பாணிக்ராஹியின் நாவலில் அந்தக் காலத்தில் ஒரு திருமணம் நடத்திவைக்க நூறு ரூபாய் செலவானது என்பதும், அந்தத் திருமணத்தில் என்ன நகை போட்டார்கள். விருந்தில் பூரியும் பாயாசமும் எப்படியிருந்தது என்பது போன்ற விவரணைகள் துல்லியமாக எழுதப்பட்டிருக்கின்றன.
வறுமையும் குடும்பக் கஷ்டங்களையும் மீறி உறவுகளுக்குள் ஏற்படும் சிடுக்குகள். வம்பு வழக்குகள் முக்கியமாகின்றன. சக்டியின் மனைவிக்கும் பர்ஜுவின் மனைவிக்கும் இடையில் காரணமில்லாமலே வெறுப்பும் கசப்பும் உருவாகிறது. அவர்கள் ஒரே கூரையின் கீழே வாழ முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். பர்ஜு குடும்பச் சண்டையைத் தாங்க முடியாமல் மௌனமாகிவிடுவது முக்கியமான தருணம். அவனது மௌனம் சண்டையை நிறுத்திவிடுகிறது. மனைவிக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் சக்டியால் ஒரு போதும் இப்படி நடந்து கொள்ளமுடியாது. தெரியாது. அவன் நாவலின் இறுதியில் தான் சுய உணர்வு கொள்கிறான்.
அந்தக் கால மனிதர்களை இனி காணமுடியாது என்று நாவலில் ஒரு வரி வருகிறது. அந்த மனிதர்களை மட்டுமின்றி அந்தக் கிராமங்களையும் இனிகாண முடியாது.
அந்தக் காலக் கிராமத்தில் அறியாமையும் சாதிக்கொடுமைகளும் உழைப்பு சுரண்டலும் பெண் அடிமைத்தனமும் இருந்தன. அதைக் கடந்து சமூகம் இன்று முன்னேறியிருக்கிறது. இது போன்ற நாவலைப் படிக்கும் போது இந்தியச் சமூகம் கடந்து வந்த தொலைவை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒரிய நாவலுக்கும் தமிழ் வாழ்க்கைக்கும் பெரிய வேறுபாடில்லை. பெயர்கள் இடத்தை மாற்றிவிட்டால் இது ஒரு தமிழ் நாவலே.
March 9, 2022
தன்னை மறந்தவள்
எமி பிரஸ்டன் நடுத்தர வயது பெண். அவளது கணவர் ஜிம் ஒரு டிம்பர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். திருமணமாகி இருபது ஆண்டுகள் சந்தோஷமான வாழ்க்கையைத் தொடர்கிறாள். பதின்வயதிலுள்ள மகன் பிரைன் பேச்சுப் போட்டியில் ஆர்வம் கொண்டவன். அவர்கள் லண்டனின் சிறிய குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார்கள். ஐம்பதுகளில் கதை நடக்கிறது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் படம் துவங்குகிறது. எமி பிரஸ்டனுக்கு வானொலியில் இசை கேட்பது பிடித்தமானது. சமையலறையில் உணவு தயாரித்தபடியே சங்கீதம் கேட்கிறாள். வேறு பக்கம் கவனம் திரும்பவே அடுப்பு தீப்பற்றி எரிகிறது. ரொட்டித்துண்டு கருகிப்போகிறது. கருகிப்போன பகுதியை நீக்கிவிட்டு மீதமுள்ளதைக் கணவனுக்குச் சாப்பிடத் தருகிறாள். ஜிம் அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறான்.
வீட்டை விட்டு வெளியே போகாத எமி பிரஸ்டன் எப்போதும் அழுக்கான டிரஸ்ஸிங் கவுனை அணிந்து கொண்டிருக்கிறாள். வீடு தான் அவளது உலகம்.
பகல் முழுவதும் இரவு உடையில் இருப்பதைப் பற்றி அவள் பெரிதாகக் கருதவேயில்லை. அடிக்கடி சிகரெட் பிடிக்கிறாள். பத்திரிக்கை குறுக்கெழுத்துப் போட்டியில் ஆர்வமாகயிருக்கிறாள். அதில் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவோம் என நினைக்கிறாள்.

எப்போதும் பதற்றமாக இருக்கும் அவள் எதையும் கவனமாகச் செய்வதில்லை. வீடு அலங்கோலமாக உள்ளது. மீதமான உணவு சமையல் மேடையில் கொட்டிக்கிடக்கிறது. பல நேரம் அடுப்பைக் கவனிக்க மறந்துவிடுகிறாள். நாற்காலி. மேஜையில் தேய்க்க வேண்டிய துணிகள் குவிந்து கிடக்கின்றன. படுக்கையில் கண்டபடி கிடக்கும் பொருட்கள். என எதிலும் ஒழுங்கேயில்லை.
ஊசி நூலைத் தேடுவதற்காக எல்லா டப்பாக்களையும் எடுத்துக் கொட்டிவிட்டு அப்படியே வேறு வேலையைக் கவனிக்கக் கூடியவள் எமி. இத்தனை களேபரங்களுக்கு இடையிலும் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அன்பாக நடந்து கொள்கிறாள். ஜிம் ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகத்தில் வேலையிருக்கிறது என்று சொல்லி அவசரமாகக் கிளம்பிப் போகிறான்
உண்மையில் அலுவலகத்தில் வேலை செய்யும் ஜார்ஜியா என்ற இளம்பெண்ணுடன் அவன் நெருங்கிப் பழகுகிறான். ரகசியமாக அவள் வீட்டினைத் தேடிப் போகிறான்.

அவளோ வீட்டை அழகாகப் பராமரிக்கிறவள். இனிமையாகப் பேசுகிறவள். அழகான உடை அணிந்திருக்கிறாள். அவளுடன் நெருங்கிப் பழகும் ஜிம் தன் மனைவியை விட்டு விலகி அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான்
மனைவியை விவாகரத்து செய்யாவிட்டால் அவளைத் தேடி வரவேண்டாம் என ஜார்ஜியா வலியுறுத்துகிறாள்.
இதைப் பற்றி மனைவியிடம் எப்படிப்பேசுவது என அவனுக்குத் தெரியவில்லை. இரவில் வீடு திரும்பும் அவனுக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடத் தருகிறாள் எமி . அவனோ கவனமில்லாமல் சாப்பிடுகிறான். அவன் சொல்லாமலே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை எமி கண்டுபிடித்துவிடுகிறாள். உடல்நலமில்லையா என ஆறுதலாக விசாரிக்கிறாள்.
அவன் கோபம் கொண்டு சண்டை போடுகிறான். அதில் அவளை விவாகரத்துச் செய்யப்போவதாகச் சொல்கிறான். அந்தக் கோபத்தைக் கூடத் தன்னைக் கேலி செய்வதாகவே எமி நினைத்துக் கொள்கிறாள். ஆனால் அது உண்மை என்று அவன் உரக்கக் கத்தவே ,அதிர்ந்து போகிறாள்.
தன்னை ஏன் பிடிக்கவில்லை என்று திரும்பத் திரும்பக் கேட்கிறாள்.
நீ அன்பான மனைவி தான். ஆனால் அழகாக இல்லை. கனிவாகப் பேசுவதில்லை. இனிமையாக நடந்து கொள்ள தெரியவில்லை. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள உன்னால் முடியவில்லை என்று குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். அத்தனை தவறுகளையும் ஏற்றுக் கொண்டு இனி திருந்திவிடுகிறேன் என்று கண்ணீர் விடுகிறாள். ஆனால் ஜிம் பிடிவாதமாக அவளைவிட்டுப் போவதிலே குறியாக இருக்கிறான்.
என்னை விட்டுச் சென்றால் சந்தோஷமாக இருக்கும் என்றால் அதையும் உங்களுக்காக அனுமதிக்கிறேன். ஒரேயொரு முறை ஜார்ஜியாவை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வா, அவளுடன் பேச வேண்டும் என்கிறாள்

அதன்படியே ஜார்ஜியாவை தனது வீட்டிற்கு அழைத்து வர ஒத்துக் கொள்கிறான் ஜிம்
இத்தனை ஆண்டுகள் தன்னைக் கவனிக்கவேயில்லை என உணரும் எமி உடனடியாக ப்யூட்டி பார்லருக்குச் சென்று தலையலங்காரம் செய்து கொள்ள முயலுகிறாள். அவனுக்குப் பிடித்தமான மதுவை வாங்குவதற்கு மோதிரத்தை அடகு வைக்கிறாள்.
ப்யூட்டி பார்லரில் அவள் அழகாகத் தயாராகி வரும் காட்சி அபாரமானது. இரவு உடையிலிருந்த எமி தானா இது என வியப்பளிக்கிறது.
எதிர்பாராத மழை அவளது ஆசைகளைக் கலைத்துவிடுகிறது. முடிவில் ஈர உடையுடன் வீடு திரும்புகிறாள், ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் தனி ஆளாக மொத்த மதுவையும் குடித்துப் போதையில் மயங்கிப் போகிறாள்.
ஜிம், ஜார்ஜியாவை அழைத்துக் கொண்டு வருகிறான். மயங்கிக் கிடக்கும் எமிக்குத் தேநீர் தயாரித்துத் தருகிறாள் ஜார்ஜியா
அதைக் கண்ட மகன் இவளை ஏன் வீட்டிற்கு அழைத்து வந்தீர்கள் எனத் தந்தையிடம் சண்டையிடுகிறான். ஆத்திரத்தில் பிரைனை ஜிம் அடித்துவிடுகிறான். இதனால் பிரைன் கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போகிறான்.

மயக்கம் கலைந்து எழுந்து வரும் எமி, ஜார்ஜியாவிடம் அமைதியாகப் பேசுகிறாள். குற்றச்சாட்டுகள் போலின்றித் தான் அறிந்த உண்மைகளை எடுத்து வைக்கிறாள்
உனக்கு இவரைப் பற்றி என்ன தெரியும். இத்தனை ஆண்டுகள் மணவாழ்க்கையில் நான் அறியாத எதை நீ அறிந்து வைத்திருக்கிறாய். அவரது முழங்கால் வலி பற்றி உனக்குத் தெரியுமா. படுக்கையில் குறட்டை விடுவதைக் கேட்டிருக்கிறாயா. இருபது ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்தோம். எதற்காக எங்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாய். என்று முகத்திற்கு நேராகக் கேட்கிறாள். இதனால் ஜார்ஜியா கோவித்துக் கொண்டு வெளியேறுகிறாள்.‘
தானும் வீட்டைவிட்டுப் போவதாக அறிவிக்கும் ஜிம் தனது உடைகளை எடுத்துப் பெட்டியில் அடுக்குகிறான். அப்போதும் எமியே உதவிக்கு வருகிறாள். அவனது உடைகளை, உள்ளாடைகளை, சாக்ஸ் டைகளைத் தனியே எடுத்து மடித்துப் பெட்டியில் வைக்கிறாள். தானும் தன் மகனும் தனியே வாழ்ந்துவிடுவோம் என்று தைரியமாக அவனுக்கு விடை தருகிறாள்
இனி அவளது வாழ்க்கை என்னவானது என்பது தான் படத்தின் மீதப்பகுதி
கணவனின் அலுவலகத்திற்கு எமி பிரஸ்டன் தொலைப்பேசி செய்து பேசும் காட்சி முக்கியமானது. அது தான் திருப்புமுனை.
அவள் ஏற்கனவே ஜார்ஜியாவோடு ஜிம்மிற்கு உள்ள ரகசிய உறவை அறிந்திருக்கிறாள். அதற்காக அவனுடன் சண்டையிடவில்லை. ஆனால் எத்தனையோ ஆண்கள் இருக்கும் போது வயதில் மூத்த தன் கணவனை ஏன் மயக்கி பிடித்துக் கொண்டாள் என்று ஜார்ஜியா மீது தான் கோபம் கொள்கிறாள்.

உண்மையான அன்பு மட்டும் போதாது தானா என்பது தான் எமி பிரஸ்டன்யின் கேள்வி. நடுத்தர வயது பெண்ணின் தவிப்பை எமி அழகாக வெளிப்படுத்துகிறார்.
தன்னாலும் அழகாகத் தோற்றம் அளிக்க முடியும் என நம்பும் அவள் தன் மகனிடமிருந்து பத்து ஷில்லிங் கடன் வாங்குகிறாள். தலை அலங்காரம் செய்ய அம்மா பணம் கேட்பதைக் கண்டு மகன் கேலி செய்கிறான். விஸ்கி போத்தல் வாங்குவதற்காக அவளது நிச்சயதார்த்த மோதிரத்தை மூன்று பவுண்டுகளுக்கு அடகு வைக்கிறாள். அன்று தான் முதன்முறையாக அடகுக் கடைக்கு அவள் செல்கிறாள். அந்தக் காட்சி மறக்கமுடியாதது
தன்னுடைய வாழ்க்கை கைநழுவிப் போவதை உணரும் ஒரு பெண் அதைத் தக்கவைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்வாள் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
Takes 20 years to build a home and you can break it up in five minutes.
I was going on my knees to you!
Yes, I was.
என எமி ஜார்ஜியாவிடம் சொல்கிறாள். இந்த மன்றாடுதலில் அவள் தோற்றுப் போகவே செய்கிறாள். ஆனால் ஜிம்மிற்கு தன்னை புரிய வைத்துவிடுகிறாள் என்பது தான் சிறப்பு.
படம் மெலோடிராமா தான். ஆனாலும் மனது கரைந்து போகவே செய்கிறது.

குடும்பக் கதைகளின் காலம் முடிந்துவிட்டது என்று இன்றைய சினிமா சொல்லிக் கொண்டிருக்கிறது. அது உண்மையில்லை. இன்றும் இந்தப்படம் பார்வையாளருக்கு நெருக்கமாகவே உள்ளது. இதே extra-marital relationship கதைக்களத்தில் தமிழிலே நிறையப் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன ,சில வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் அந்தப் படங்களில் இல்லாத யதார்த்தம் இதில் கைகூடியிருக்கிறது.
குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடைதேடும் எமியின் செயல் அவள் வாழ்க்கையின் ரகசியம் போலவே உணர்த்தப்படுகிறது. தினசரி வாழ்க்கையின் சலிப்பு தான் அவளை இப்படி மாற்றியிருக்கிறது. ஆனால் அதை அவள் வெளிப்படுத்தவில்லை. வெளியுலகின் இன்பங்களைத் தேடி ஓடவில்லை. இருப்பிடத்திற்குள்ளாகவே விரும்பியதைச் செய்து கொள்ள முயல்கிறாள். தடுமாற்றத்தில் நிறையக் குளறுபடிகளைச் செய்கிறாள். ஆனால் அத்தனையும் அவளது அன்பின் வெளிப்பாடு என்பதைக் குடும்பம் உணர்ந்தேயிருக்கிறது.
Guns of Navarone, Mackenna’s Gold போன்ற ஆக்சன் படங்களை எடுத்த J. Lee Thompson இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இயக்குநரின் சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கக் கூடிய படம் என்பதால் உண்மைக்கு நெருக்கமாக உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள்.
Yvonne Mitchell எமியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். I am what I am என்பதைக் கடைசிக்காட்சி வரை நிரூபித்துக் காட்டுகிறார். wide angle மற்றும் extreme close up வழியே கதாபாத்திரங்களின் இயல்பை வெளிப்படுத்துவது படத்தின் தனிச்சிறப்பு
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனது செயல்களுக்கான சரியான ஒரு காரணமிருக்கிறது. இதில் எவரும் குற்றவாளியில்லை. படத்தில் டிரஸ்ஸிங் கவுன் என்பது குறியீடாக மாறியிருக்கிறது.
படத்தின் முதற்காட்சியிலே I thought you were joking என்கிறாள் எமி. அது வேடிக்கையில்லை என்று ஜிம் கண்டிப்பாக சொல்கிறான். படம் முழுவதும் இந்த இடைவெளி தொடருகிறது. ஜிம் சிகரெட் பாக்கெட்டினை மறந்து போகையில் வீட்டிலிருந்து சப்தம் கொடுத்து சிகரெட் பாக்கெட்டை தூக்கி வீசுகிறாள் எமி. அது தண்ணீரில் விழுகிறது.
பழைய பாடல்கள். பழைய நண்பர்கள். பழைய வாழ்க்கை என அவளது உலகம் மாறாதது. எமி ஏன் இப்படி ஆனாள். அவளது இரண்டாவது பிரசவமும் அதைத் தொடர்ந்த குழந்தையின் துயரமும் தான் காரணம். அதை ஒரு காட்சியில் அவளே சொல்கிறாள். அதன்பிறகு அவள் கண்ணாடி பார்ப்பதை நிறுத்திவிட்டாள். தனக்கு ஊட்டசத்து குறைவு என்று தானாக சமாதானம் சொல்லிக் கொள்ளத் துவங்கிவிட்டாள்.
குடும்பத்தின் நலனை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த எமிக்குத் தன்னைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறான் ஜிம். அவள் கடைசி வரை மாறவேயில்லை. ஆனால் குடும்பத்தில் தனது இடத்தைப் புரிந்து கொள்கிறாள்.
நல்ல மனிதர்களுக்கு வரும் சோதனை காலத்தைப் பேசும் படமிது என்கிறார் கதாசிரியர் டெட் வில்லிஸ். எமியின் வாழ்க்கையை மட்டுமின்றி ஐம்பதுகளில் நடுத்தரவர்க்கம் எப்படியிருந்தது என்பதையும் படம் நுணுக்கமாக விவரிக்கிறது.
•••
.
March 8, 2022
தெலுங்கில்
எனது சிற்றிதழ் சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் ஜி. பாலாஜி.

நன்றி
vaartha.com
ஜி. பாலாஜி
இடக்கைக்குள் நீதி
கோபாலகிருஷ்ணன்

நீதி என்பது எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக் கட்டியை போல மனிதர்களைக் கொண்டு செல்கிறது. உணவுக்காகவும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மனிதன் அலைவதை போலவே நீதிக்காகவும் மனிதன் காத்திருக்கிறான், போராடுகிறான். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “இடக்கை ” புத்தகம் வாசித்து முடித்ததும் இந்திய வரலாற்றின் மீது படிந்த கறையைத் தொட்டு பார்த்ததைப் போல உணர முடிந்தது. பின்னர்தான் புரிந்தது அது கறையல்ல தழும்புகள் மறைந்து போகாத நினைவுகள்.
உடலில் காயம் ஏற்பட்டு ஆறிய பின்னர்க் காயம் மறைந்து போய்விடும். தழும்புகளும் அதன் நினைவுகளுமே மிஞ்சியிருக்கும். இந்தப் புத்தகத்திலும் எண்ணற்ற காயங்களின் தழும்புகளைத் தொட்டு உணர முடிந்தது.ஏதோவகையில் சாதாரண மனிதன் அடைந்த வலியும் வேதனையுமான தழும்புகளாகவே இருந்தது இந்தக் கதை.
இடக்கை நாவல் ஆயிரம் கதைகளைக் கொண்ட விசித்திர மரம். ரத்தத் தாலும் வன்மத்தாலும் அதன் கிளைகளும், இலைகளும் இருளில் மினுமினுத்துக் கொண்டிருக்கின்றன. வாழ்வெனும் அந்த மரத்தின் வேர்கள் சாமான்ய மனிதர்களின் வாழ்வேனும் நரம்புகளைக் கொண்டு வேரூன்றியிருக்கின்றது. புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் என்றோவொரு நாள் கோர்ட் வாசலில் ஏதோவொரு நீதிக்காகக் காத்துக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது.
நாம் அனைவரும் ஒருவகையில் தூமகேதுவின் வெவ்வேறு வடிவங்கள்தானே. விசித்திரங்களும், கதைகளின் நீரரூற்றுகளும், வரலாற்று சாட்சியங்களும் அடங்கிய புத்தகமாக இடக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. நீதி எனும் நுலால் முடிவிலா கதைகளின் புனைவை சிலந்தி வலை பின்னுவதைப் போலப் பின்னிக்கொண்டே போகிறார் எழுத்தாளர் எஸ்.ரா.
நாவலில் மக்பி அரண்மனை இளவரசியாக இருந்தாலும் கவிதை எழுதியதற்காகச் சிறையிலடைத்துக் கொல்லப்படும் கதை துயரமானது. ஆனால் பெண்கள் பூக்களைக் கட்டி மாலையாக அணிந்து கொள்வதைப் போல மக்பி தன்னுடைய வாழ்வை கவிதையாளும் தண்டனைகளாலும் அணிந்துகொண்டிருக்கிறாள் என்று தோன்றுகிறது. இன்னொரு கதாபாத்திரமான மஞ்சு என்கிற சிறுவன் இறந்துபோனது சொல்ல முடியாத துயரத்தை உண்டுபண்ணியது. பசிக்காகவும், வறுமைக்காகவும் உணவைத் தேடி அலைந்து கடைசியில் விஷக்காய்களைத் தின்றுவிட்டு இறந்து போன மகனை கண்டு நளா துயருற்று புலம்புவது வறுமையின் கொடும் அவலம்.
இன்னொருபுறம் தீண்டாமையின், சாதிக் கொடுமையின் பள்ளத்தாக்குதலில் மனிதர்கள் புதையுண்டு இருப்பதைக் காணமுடிகிறது. பள்ளிப் பாட புத்தகங்களில் தீண்டாமை ஒரு பாவச் செயல், பெருங்குற்றம் என்றெல்லாம் வாசித்திருப்போம் . ஆனால் வரலாற்றின் பக்கங்களில் தீண்டாமையும் சாதிக்கொடுமையும், மதவெறியும் எப்படிக் கறை படிந்த எழுத்துக்களால் எழுதப் பட்டிருக்கிறது என்கிற உண்மையைப் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தப் புத்தகத்தின் விமர்சனமாகப் புனைவுகளும் விசித்திரங்களும் அதிகபடியாக அழுத்துகின்றனவோ என்று கருத்துத் தோன்றுகிறது. ஆனால் எளிய மொழியில் எழுத்து முறை இருப்பதால் அந்தக் குறை பெரிதாகத் தெரியவில்லை.
குறிப்பிடவேண்டிய புனைகதைகளில், புழுவின் கதை, எழும்பின் கதை, கதைகளின் வழியாக மனிதர்களை உருமாற்றுவது என முடிவற்ற கதைகளின் ஆறு பெருக்கேடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறது. நதியில் குளித்துவிட்டு கரையேறி வந்ததும் உடலோடும் உள்ளதோடும் குளுமையும் ஒட்டிக்கொண்டதை போல எஸ். ராவின் புனைவுகளுக்குள் இருந்து இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த பின் நம் மீதும் துயர்தரும் நீதியும் புனைவும் ஓட்டிக் கொண்டு விடும்.
மனிதர்களுக்கு நீதி ஏன் அவசியம்? அதிகாரத்தின் மூலம் சாமானிய மனிதனின் வாழ்க்கை ஏன் விளையாட்டுப் பொருளாகிவிடுகிறது? நீதியின் மீது மனிதர்கள் கொண்ட நம்பிக்கை காத்துக் கொண்டே இருக்கும் பொறுமையின் தொடர்ச்சிதானா? ஒரு வகையில் மரணம்தான் அனைத்துத் தரப்பு மனிதர்களின் பொதுவான நீதியாக இருக்கிறது. கொடும் அரசன் ஒளரங்கசீப்பும் மரணமடைந்தான், சாமான்ய மனிதர்களும் மரணமடைகிறார்கள். அப்படியெனில் எதற்கு அதிகாரத்தையே மனிதன் உயர்வாகக் கருதி சாதாரண எளிய மனிதர்களின் துன்புறுத்துகிறான் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
பகலில் பூச்சிகளாகவும் இரவில் மனிதர்களாகவும் உருமாறும் சிகிரியர்களின் கதைகளை வாசிப்பது விசித்திரமாக இருந்தது. மாயத்தின் எண்ணற்ற பக்கங்களில் இந்தப் புத்தகம் மிதந்து கொண்டிருக்கிறது. சம்புவின் இறுதி பயணத்தின் வானமும் கடலும் ஒன்று சேர்ந்து நட்சத்திரங்கள் கடலில் மிதக்கும் காட்சி அபாரமானது. அது மின்மினி பூச்சிகள் கையில் ஊர்ந்து போவது போல நட்சத்திரங்கள் கடலில் மிதப்பது என்று எழுதியிருந்தது புனைவின் உச்சகட்டம். இந்தப் புனைவுகளின் வழியாக மனிதன் என்ன புரிந்து கொண்டான் சிந்திக்கிறான், அதனால் அவன் வாழ்வில் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன? கதைகளும் புனைவுகளும்தான் மனிதனுக்குச் சிந்தனையைத் தூண்டும் விதமாக முக்கியக் காரணமா? என்று தோன்றும். எஸ். ராவின் எளிய உரைநடையும் வளமான மொழியும் ரயில் பெட்டிகளின் இடைவெளியைப் போல நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது.
முன்னரே சொன்னது போல இந்த நாவலில் அநீதி என்கிற வரலாற்று சாட்சியங்களின் கறையை எஸ். ரா துடைத்து சுத்தமாக்கி நினைவுகள் அடங்கிய கதைகளாக உருமாற்றியிருக்கிறார்.
நினைவில் பறக்கும் காட்டுவாத்துகள்
ஆங்கிலக் கவிஞர் மீனா அலெக்சாண்டரின் கவிதை ஒன்றின் வழியே தான் சீனக்கவிஞர் லி சிங்-சாவ் (Li Ch’ing-chao )பற்றி அறிந்து கொண்டேன். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெண்கவியை நினைவு கூர்ந்து மீனா அலெக்சாண்டர் கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார்.

காட்டுவாத்துகளுடன் லிசிங் சாவோ பனிக்காலத்தை எதிர் கொண்டதை பற்றிப் பேசும் இந்தக் கவிதையின் வழியே பனிமூட்டத்திற்குள் ஒளிரும் நட்சத்திரம் போல லிசிங் சாவோ அறிமுகமானார்.
கடந்த சில நாட்களாக லி சிங் சாவோவின் உலகிற்குள் புகை போலச் சுற்றிக் கொண்டிருந்தேன்.
என்னிடமுள்ள சீனக்கவிஞர்களின் தொகைநூலில் லி சிங் சாவோவின் கவிதைகள் இருக்கிறதா என்று தேடினேன். சில கவிதைகள் இருந்தன. பின்பு இணையத்தின் வழியே அவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசித்தேன். அவர் எழுதிய கவிதைகளில் பெருமளவு காணாமல் போய்விட்டன. எஞ்சியிருப்பது ஒரு தொகுப்பு மட்டுமே.
கவிதை என்பது முடிவில்லாத பாலங்களின் தொடர்ச்சி என்றே தோன்றுகிறது. ஒரு பாலத்தின் வழியே இன்னொரு பாலத்திற்குச் செல்வது போன்றதே எனது கவிதை வாசிப்பு. கவிதையின் ஒற்றை வரியென்பது உண்மையில் பாலம் போன்றதே. எந்த இரண்டினை அது இணைக்கிறது என்பது வியப்பானது.
இருபதாம் நூற்றாண்டு ஆங்கிலக் கவியும் பதிமூன்றாம் நூற்றாண்டு சீனக்கவியும் ஒரே புள்ளியில் இணைகிறார்கள். அல்லது ஒரே ஜன்னலின் வழியே உலகைக் காணுகிறார்கள். மீனா அலெக்சாண்டரின் கவிதை பிரிந்து போன சகோதரியின் நினைவினை எழுதுவது போல எழுதப்பட்டிருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முந்தைய கண்ணாடி என்றாலும் நம் முகத்தைக் காட்டத்தானே செய்கிறது. அப்படித் தான் மீனா அலெக்சாண்டர் தன் அகத்தினை லியின் கவிதைகளின் வழியே கண்டிருக்கிறார்.

லி சிங்-சாவ் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அவளுடைய தந்தை, லி கெஃபே புகழ்பெற்ற இலக்கியவாதி, ஆகவே சிறு வயதிலேயே லி சிங்-சாவ் கவிதைகளில் ஈடுபாடு கொண்டார். தனது பதினேழு வயதில், அவள் இரண்டு நீள் கவிதைகளை எழுதிப் புகழ்பெற்றார். தனது பதினெட்டு வயதில் மிங்செங் ஜாவோவை மணந்தார். இருவருக்கும் இலக்கியம் கலையின் மீது தீவிரமான ஈடுபாடு இருந்தது. ஆகவே வீட்டினை ஒரு ம்யூசியம் போல மாற்றினார்கள். அரிய நூல்கள். கலைப்பொருட்கள். சித்திர எழுத்துகள். ஓவியங்களைத் தேடித்தேடிச் சேகரித்தார்கள். அவற்றை ஆய்வு செய்து தொகுப்பாக வெளியிட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் இரவு உணவை முடித்த பிறகு அவர்கள் ஹாலில் அமர்ந்து கொண்டு ஏதாவது ஒரு புத்தகத்திலுள்ள ஒரு நிகழ்ச்சியைத் தேர்வு செய்வார்கள். அது எந்தப் புத்தகத்தில் உள்ளது என்று யார் சொல்கிறார்களோ அவர்களே முதலில் மதுக்கோப்பையைத் தொடவேண்டும். இந்த விளையாட்டினை மனமகிழ்ச்சியோடு ஈடுபட்டோம் என்கிறார் லி சிங்-சாவ் வீட்டின் பத்து அறைகள் முழுவதும் அவர்கள் சேகரித்த அரிய நூல்களும் கலைப்பொருட்களும் நிரம்பியிருந்தன.
சீன செவ்வியல் கவிஞர்கள் தமிழின் சங்க கவிதைகள் போலவே போரையும் காதலையும் கொண்டாடி எழுதியிருக்கிறார்கள். முக்கியக் கவிஞர்களின் காதல் கவிதைகளில் பிரிவும் சோகமும் மையமாக விளங்குகின்றன. தனிப்பட்ட மகிழ்ச்சியை கட்டுப்பாடற்ற விதத்தில் கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் லி சிங்-சாவ் கவிதைகள் எழுதியிருக்கிறார்
உயர்வகுப்புக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இசையும் கலையும் இயல்பாக அறிமுகமாகியிருந்தன. தனது கவிதைகளை அவரே இசை அமைத்துப் பாடியிருக்கிறார்.
தனது 49வது வயதில் மிங்செங் இறந்து போனார். அந்தத் துயரை லியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கணவரின் இழப்பைத் தாங்க முடியாமல் அவர் எழுதிய கவிதைகள் துயர நினைவுகளின் வெளிப்பாடாக உள்ளன.. அரசியல் காரணங்களுக்காகத் தப்பியோடி மறைந்து வாழும் வாழ்க்கையினை மேற்கொண்ட அவர் நீண்ட காலம் கவிதைகளை விட்டு விலகியே வாழ்ந்திருக்கிறார்.
நான் ஒரு மஞ்சள் பூவை
விட மெல்லியள்
என்ற லியின் கவிதை வரிதான் அவளது அடையாளம்.
இரவை எதிர்கொள்வதும் இரவினுள் கரைந்து போவதும் தான் லி கவிதைகளின் மையம். அவள் தனது காத்திருப்பை வேதனையாகக் கருதவில்லை மாறாகக் காத்திருப்பின் வழியே தனக்குள் மலர்வதாக உணர்ந்திருக்கிறார்.
தனக்குள் ஆழ்ந்து செல்ல செல்ல புற உலகின் காட்சிகள் யாவும் அகவுலகின் காட்சிகளாக மாறுவதைக் கண்டறிந்திருக்கிறார். அதனால் தான். வானில் பறக்கும் காட்டுவாத்துகள் அவள் கண்ணுக்குள் பறக்கின்றன. பிளம்பூக்கள் அவளது அடையாளமாக மாறுகின்றன.
மெல்லிய மூடுபனி, அடர்ந்த மேகங்கள், துக்கம் நிறைந்த நாள்;
தங்க விலங்கில் சுப தூபம் எரிகிறது.
நள்ளிரவு குளிர்
என் திரையைத் தொடுகிறது.
எனும் போது குளிர்காற்றால் சலனமுறும் திரையாக அவளே மாறிவிடுகிறாள்
இரவைக் கடந்து செல்ல அவள் கவிதைகளைப் படகாக மாற்றுகிறாள். அதன் துடுப்பாக மது இணைகிறது.
என் முற்றம் சிறியது,
ஜன்னல்கள் செயலற்றவை,
தொலைதூர மலையிலிருந்து மேகங்கள் எழுகின்றன
இரவு வெகு தொலைவில் இருக்கிறது
என்பது போன்ற வரிகளின் வழியே அவள் இரவை அழைக்கிறாள்.
உண்மையில் இரவென்பது தனிமைத்தோழனாக மாறுகிறது. வெளிச்சம் தீண்டும் போது அவள் விழித்துக் கொள்கிறாள். மதுவின் சூடு அவளுக்குள் எரிகிறது. பெண்களின் குடியிருப்பிற்குள் வசந்தம் வருகிறது. தோட்டத்தில் சிவப்புப் பூக்கள் மலரத்துவங்குகின்றன, வானில் நீலமேகங்கள் கடந்து போகின்றன. லி சிங்-சாவ் தன்னை இழப்பதற்கு இயற்கையைத் துணைகொள்கிறார். பூக்கள் மலரும் போது திடீர் மழையின் போதும் தொலைதூர மலைகளின் மீது செல்லும் நிலவினாலும் அவர் தன்னை இழக்கிறார். மதுவை அருந்துவது போலவே அவர் தன்னைச் சுற்றிய உலகையும் கொஞ்சம் கொஞ்சமாக அருந்துகிறார்.
கவிஞர்களால் பாடப்படாத பூக்களைப் பற்றி எழுதும் லி சிங்-சாவ் பெண்களின் வசிப்பிடத்தைத் தனித்த குறியீடாக மாற்றுகிறார். மேற்தளத்திலுள்ள தனது அறையிலிருந்து காணும் காட்சிகளை விவரிக்கும் போது அந்தத் தளம் என்பது தனிமையின் ஒரு நிலை என்பது போலவே விவரிக்கிறார்

பதினைந்து வருஷங்களின் முன்பு,
நிலவொளியில்
மலர்களை ரசித்துக்கொண்டு
நண்பர்களுடன் அமர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன்.
இன்று, நிலவொளியில் பூக்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன,
ஆனால் என் உணர்வுகள் எப்படி ஒரே மாதிரியாக இருக்க முடியும்?
என்றொரு கவிதையை லி எழுதியிருக்கிறார். இதில் மாறாத நிலவொளியும் மலர்களும் மாறும் மனதும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. இருப்பின் சுகதுக்கங்களைக் கவிதையின் வழியே வெளிப்படுத்தும் லி சீன நிலக்காட்சி ஓவியங்களின் அழகுடன் கவிதைகள் எழுதியிருக்கிறார். அது தான் இன்றும் அவரைக் கொண்டாட வைக்கிறது
••
March 6, 2022
காந்தியின் நிழலில் – அறிமுகக் கூட்டம்
காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டம் சார்பில் எனது காந்தியின் நிழலில் நூல் குறித்து அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் முனைவர் ம. பிரேமா அண்ணாமலை உரையாற்றுகிறார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவினுள் நிகழ்ச்சி நடைபெறுகிறது
Google Meet வழியே நேரலையிலும் பங்குபெறலாம்.
இணைப்பு
தொடர்பு எண்கள்
9790740886
9952952686
நாள்: 09.03.2022
நேரம்: மாலை .6 45

நன்றியுடன்
நேற்றுடன் புத்தகக் கண்காட்சி நிறைவுபெற்றது.
கடந்த மூன்று நாட்களாகப் பெருந்திரளாகக் கூட்டம். நிறைய இளைஞர்கள். பெண்கள். அவர்கள் பைநிறைய புத்தகங்களுடன் வலம் வருவதைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த ஊரடங்கு வாழ்க்கை அனைவரின் கவனத்தையும் புத்தகங்களின் மீது திருப்பியிருப்பதன் விளைவாகவே இதனைக் கருதுகிறேன்.
இப்படி ஒரு அறிவுத் திருவிழாவிற்கு அனுமதி தந்து, புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடக்க முதற்காரணமாக இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி
புத்தகக் காட்சி சிறந்த முறையில் நடைபெற உதவிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ், உதயசந்திரன் ஐஏஎஸ் ,அவர்களுக்கும், புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த பபாசிக்கும் அன்பும் நன்றியும்




எல்லா நாளும் தேசாந்திரி அரங்கிற்குத் திரளாக வருகை தந்து எனது புத்தகங்களை வாங்கிச் சென்ற வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. உங்களின் அன்பு தான் என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.
நிறைய சிறார்கள் எனது புத்தகங்களை ஆசையாக வாங்கினார்கள். என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். கையெழுத்து பெற்றார்கள். அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.
நிறைய இளம் படைப்பாளிகளைப் புத்தகக் கண்காட்சியில் சந்திக்க முடிந்தது. அவர்களின் புதிய புத்தகத்தை எனக்கு அளித்தார்கள். எழுத்துலகில் அவர்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
கண்காட்சி அரங்கில் எங்கள் புத்தகங்களை தங்களது அரங்கில் விற்பனை செய்து உதவிய சக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், ஆதரவு தந்த பத்திரிக்கையாளர்கள். ஊடக நண்பர்கள். இணைய இதழாளர்கள். சமூக ஊடகங்களில் பகிர்ந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நிறைந்த அன்பும் நன்றியும்.
பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களுக்காகப் புத்தகங்கள் வாங்கிய நூலகர்கள். நூலகப் பணியாளர்கள். நிர்வாகிகள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி

ஒவ்வொரு நாளும் வெளியூர்களிலிருந்து நிறைய வாசகர்கள் வந்திருந்தார்கள். விடுமுறை நாட்களில் காலை ஏழு மணிக்கெல்லாம் வெளியூர் வாசகர்கள் கண்காட்சி நடக்கும் நந்தனம் மைதானத்திற்கே வந்து காத்திருந்தார்கள். இரவு 9 மணி வரை அரங்கில் கூட்டம் குறைவதில்லை. இந்த மாற்றம் வியப்பானது. வரவேற்க வேண்டியது.
கடந்த சில ஆண்டுகளில் புத்தக வாசிப்பைக் கொண்டாடும் நிறைய அமைப்புகள், குழுக்கள். உருவாகியுள்ளன. அவர்கள் தொடர்ந்து இணைய வழியில் புத்தக அறிமுகக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். புத்தகங்களை விமர்சனம் செய்கிறார்கள். சிறந்த விமர்சனங்களுக்குப் பரிசு வழங்குகிறார்கள்.
இது போன்ற முயற்சிகளால் புத்தக வாசிப்பு விரிவடைந்திருக்கிறது என்பதே நிஜம். வாசிப்பை முன்னெடுக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்

இது போலவே தொலைக்காட்சிகள் தனிக்கவனம் எடுத்துப் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றார்கள். முகநூலிலும் சமூக ஊடகங்களிலும் கடந்த 18 நாட்களாகப் புத்தகக் கண்காட்சி தான் மையமாக விளங்கியது. எத்தனை ஆயிரம் புகைப்படங்கள். செய்திகள். பகிர்வுகள். காணொளிகள். அவர்கள் அனைவருக்கும் எனது அன்பும் பாராட்டுகளும்.
மண்டியிடுங்கள் தந்தையே உள்ளிட்ட எனது புதிய நூல்கள் யாவும் ஒரு பதிப்பு விற்றுத் தீர்ந்திருக்கிறது. எப்போதும் போலவே தேசாந்திரி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, துணையெழுத்து, கதாவிலாசம், சஞ்சாரம், இலக்கற்ற பயணி, யாமம், உப பாண்டவம், நெடுங்குருதி, இடக்கை, சிறிது வெளிச்சம் அயல்சினிமா, எலியின் பாஸ்வேர்டு, சிரிக்கும் வகுப்பறை, எழுத்தே வாழ்க்கை போன்ற புத்தகங்கள் விற்பனையில் சாதனை புரிந்திருக்கின்றன.
தேசாந்திரி அரங்கினை சிறப்பாக நிர்வாகம் செய்த ஹரிபிரசாத், அன்புகரன், கபிலன். விக்கி, சண்முகம், கபிலா காமராஜ், டிரைவர் ராமு, நூல்களை அச்சிடுவதற்குத் துணை நின்ற மணிகண்டன், உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி
••••
March 2, 2022
சாண்டில்யனின் மறுபக்கம்
சாண்டில்யன் தனது சுயசரிதையைச் சிறிய நூலாக எழுதியிருக்கிறார். போராட்டங்கள் என்ற இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதில் சாண்டில்யன் எழுத்தாளரான விதம் மற்றும் அவரது கல்லூரி நாட்கள். பத்திரிக்கை துறையில் வேலை செய்த அனுபவங்கள். தமிழ், தெலுங்கு படங்களுக்குத் திரைக்கதை எழுதும் போது கிடைத்த அனுபவம். சந்தித்த மனிதர்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.
ஆங்கிலப்படங்கள் மீது சாண்டில்யனுக்கு இருந்த தீராத ஆசை வியப்பூட்டுகிறது. அந்தக் கால ஆங்கிலப்படங்களைத் தேடித்தேடி பார்த்திருக்கிறார்.
ராஜாஜியின் நட்பு. மற்றும் கல்கியோடு பழகிய நாட்கள், அன்றைய பத்திரிக்கையாளர்களின் நிலை மற்றும் வாழ்க்கை போராட்டங்கள் பற்றியும் கிண்டலாக எழுதியிருக்கிறார்.
சாண்டில்யனின் இயற்பெயர் பாஷ்யம். சொந்த ஊர் மாயவரம் அருகேயுள்ள திரு இந்தளூர். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் படித்திருக்கிறார். அந்த நாட்களில் ராஜாஜியின் அறிவுரை படி கதர் அணிந்து காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியிருக்கிறார். தியாகராய நகரில் இவர் வீட்டுக்கு அருகில் கல்கியும், சற்றுத் தள்ளி சாமிநாத சர்மாவும் வசித்திருக்கிறார்கள். அவர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்.
சுதேசமித்திரன் பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றியுள்ளார். ஸ்வர்க சீமா, என் வீடு என்ற படங்களின் திரைக்கதைகளின் உருவாக்கத்தில் இவருக்குப் முக்கியபங்கிருந்தது. நடிகர் நாகையாவோடு ஏற்பட்ட நட்பின் காரணமாக அவரது படங்களின் கதை உருவாக்கத்தில் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்.
சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் எதிலும் அவரது புகைப்படம் இடம்பெற்றிருக்காது. அவரைப் பற்றிய வாசகர்களின் பிம்பமும் அவரது நிஜத் தோற்றம் மற்றும் அவரது வாழ்க்கை செய்திகள், ஈடுபாடுகளும் எதிர்நிலையில் இருக்கின்றன. அதைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்
பிரபலமான கொலைவழக்குகளின் விசாரணை நடைபெற்ற போது சாண்டில்யன் அந்தச் செய்திகளை நீதிமன்றத்தில் எப்படிச் சேகரித்தார் என்ற கட்டுரை சுவாரஸ்யமானது. அந்த நாளில் பாடப்பட்ட கொலைசிந்துகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார்
காந்தியின் சென்னை வருகையைப் பற்றியும் அப்போது காந்தியின் கூட்டங்களுக்குச் செய்தி சேகரிக்கச் சென்றதைப் பற்றியும் எழுதியிருக்கிறார். சென்னையில் காந்தி இந்தியில் உரையாற்றியபோது ஒருவருக்கும் புரியவில்லை. சென்னை இந்தி பிரச்சாரச் சபாவில் நடந்த வேறு ஒரு கூட்டத்தில் உ.வே.சாவின் தமிழ் உரையைக் கூட இந்தியில் மொழிபெயர்ப்புச் செய்து படித்தார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்.
அன்றைய அரசியல் தலைவர்கள் ஆங்கிலப் பத்திரிக்கைகளை மட்டுமே மதித்தார்கள். தமிழ் பத்திரிக்கையாளர்களைக் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். பத்திரிகையாளர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறார். பத்திரிக்கை துறை குறித்த முதல் செய்திப் படமான Birth of a Newspaper ஆவணப்படத்தை இவரே இயக்கியுள்ளார்.

க.நா.சுவோடு பழகியுள்ள சாண்டில்யன் அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்
அதில் க.நா.சு தனது சூறாவளி பத்திரிக்கையில் எழுதிய எழுத்தாளர்களுக்கு அந்தக் காலத்திலே ஐம்பது ரூபாய் சன்மானம் கொடுத்திருக்கிறார் என்கிறார். பொதுவாக அந்த நாட்களில் விகடன், கல்கி போன்ற இதழ்களே பத்து ரூபாய் தான் சன்மானம் கொடுத்து வந்தன.
சூறாவளி சிறுபத்திரிக்கை என்றாலும் க.நா.சு தனது கைப்பணத்திலிருந்து ஒரு கதைக்கு ஐம்பது ரூபாய் சன்மானம் கொடுத்திருக்கிறார் என்பது பெரிய விஷயம் என்று சாண்டில்யன் பாராட்டுகிறார்
சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழுக்கு சாண்டில்யன் சந்தா கொடுத்ததிற்கு அவரது சக எழுத்தாளர்கள் கண்டித்தார்கள் என்பதைப் பற்றியும் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்

பத்திரிக்கையாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் அவரது பங்களிப்பு பற்றிப் பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டதில்லை. அதை அவர் எழுதியதாகவும் நினைவில் இல்லை. இந்த நூலிலும் அதைப்பற்றிச் சில தகவல்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்
சினிமாவிற்குத் திரைக்கதை எழுத அழைத்து எழுத்தாளர்களை ஏமாற்றுகிறார்கள் என்ற குரல் சாண்டில்யனிடமும் ஒலிக்கிறது. கதை விவாதத்திற்கு அழைப்பவர்கள் ஒரு காபி வாங்கிக் கொடுப்பது மட்டுமே வழக்கம் என்கிறார்.
தன்னை இலக்கியவாதிகள் எவரும் அங்கீகரிக்கவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் நிறைய இடங்களில் வெளிப்படுகிறது.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
