S. Ramakrishnan's Blog, page 90
April 19, 2022
எனது நாடகம்
தியேட்டர் லேப் குழுவின் 16வது ஆண்டுவிழாவை முன்னிட்டு அதன் இயக்குநர் ஜெயராவ் மே 7 மற்றும் 8 தேதிகளில் நாடகவிழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்.
சென்னை பெசன்ட் நகரிலுள்ள ஸ்பேசஸ் அரங்கில் இந்த நாடகங்கள் நடைபெற இருக்கின்றன.
இந்த விழாவில் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from Underground யை மையமாகக் கொண்டு நான் எழுதிய மரணவீட்டின் குறிப்புகள் நாடகம் நிகழ்த்தப்படுகிறது.


தந்தையின் குரல்
இ.இளங்கோவன்
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வைத்தி கதாபாத்திரம் சிக்கல் சண்முகம் என்ற நாதஸ்வர கலைஞனைப் பார்த்து கேட்கிற மாதிரியான ஒரு வசனம், “என்ன சண்முகம், துரை சொல்றது புரியலையா? மேனாட்டுச் சங்கீதத்தை உன்னோட நாதஸ்வரத்தில் வாசிக்க முடியுமா? வித்தை எப்படி, கர்நாடகத்தோட சரியா? இல்லை மேல்நாட்டு சங்கீதமும் வருமா?”
இந்தக் கேள்விக்குச் சிக்கல் சண்முகம் எவ்வாறு தனது நாதஸ்வரம் மூலமாகப் பதிலுரைத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சிக்கல் சண்முகம் எதிர்கொண்ட இந்த அறைகூவலை, தனக்குக் கொடுத்த அறைகூவலாக, எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எடுத்துக் கொண்டு, தனது எழுதுகோல் தமிழக மற்றும் இந்திய புறச்சூழலை மட்டும் வைத்துக் கொண்டு அல்ல, உலகப் புதினங்களையும் எழுத முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
எழுத்தாளர் எஸ்.ராவால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய புதினம் “மண்டியிடுங்கள் தந்தையே”. இந்தப் புதினம் முற்றிலும் ஒரு ரஷ்ய புதினம், புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு முழுக்க முழுக்க ரஷிய சூழலில், இந்தப் புதினத்தை எஸ்ரா எழுதியுள்ளார். இப்புதினத்தில் ஒரு பாத்திரம் கூடத் தமிழகம் சார்ந்தோ, இந்தியா சார்ந்தோ இல்லை. லியோ டால்ஸ்டாய்,அவரது குடும்ப உறுப்பினர்கள், அவரது பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளிகள், அவரது நண்பர்கள் இவர்களையே பாத்திரமாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது.
1. எப்போதும் போல எஸ்ரா பக்கத்திற்குப் பக்கம் வர்ணனைகள், உவமைகள், ஒப்பீடுகள் என்று மொழியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். மொழியின் தரம் உச்சம். எடுத்துக்காட்டாக, 1“மரத்தைப் போலப் பச்சை நிறமாகவா இருக்கிறது அதன் நிழல்?.” 2 “பாறையில் வந்து மோதும் அலையின் மீது பாறைக்குக் கோபம் இருக்குமா என்ன? அது ஒரு வகை நேசம்”. இது போன்ற பல ஒப்பீடுகள் பக்கத்திற்குப் பக்கம் நிறைந்து கிடக்கின்றன.
2. சற்றேறக்குறைய 140 வருடங்களுக்கு முன்பு நடைபெறுவதாக இந்தப் புதினம் இருக்கிறது. 140 ஆண்டுகள் பின்னோக்கிய ரஷ்யாவை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் எழுத்தாளர். எந்த இடத்திலும் சிறுபிழை கூடக் கால ஓட்டத்தில் இல்லாமல் இருக்கிறது. பனிபடர்ந்த ரஷ்யா நம் கண் முன் வருவது நிச்சயம்.
3. வெறும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு எழுதிய புதினம் அல்ல,என்பதை ஒரு சராசரி வாசகனால் புரிந்து கொள்ள முடிகிறது. மிக நீண்ட ஒரு வரலாற்று ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவாக இந்தப் புதினம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் வாசகனால் உணரமுடிகிறது. வெறும் வரலாற்றுச் செய்திகளைக் கட்டுரைகளாக அவர் கொடுக்கவில்லை என்பதே இந்தப் புதினத்தின் சிறப்பு. ஆகச் சிறந்த பில்டர் காபி என்பது காப்பியின் கசப்பும் தொலைந்து விடாமல், அதே நேரத்தில் காப்பி வெறும் கசப்பாகவும் இருந்து விடாமல், அதற்கேற்றாற்போல் சரியான விகிதத்தில் பாலும், சர்க்கரையும் கலந்து ஒரு ஆகச்சிறந்த பில்டர் காபியை படைப்பது போலவே, எழுத்தாளர் மிகத் துல்லியமான வரலாற்றுச் செய்திகளை இந்தப் புதினத்தில் மிகச்சரியான விகிதத்தில் புனைவுகளையும் , உயரிய மொழி நடையையும் சேர்த்து சரியான விகிதத்தில் இந்தப் புதினத்தைப் படைத்திருக்கிறார்.
ரஷ்யா என்ற நாடு எப்படி இருக்கும், அந்த மக்களின் உணவுப்பழக்கம் என்ன?, குடும்ப உறவுமுறைகள், இவைகளைத் தெரிந்து கொள்ள ஆசைப்படும் ஒரு தேசாந்திரிக்கும், அதே நேரத்தில் எந்த வரலாற்றுச் செய்தியும் எனக்கு வேண்டியதில்லை ஒரு தந்தை-மகனுக்கு இடையிலுள்ள உறவு முரண்களைப் பற்றிப் பேசும் ஒரு புதினம் எனக்கு வேண்டும் என்று ஆசைப்படும் வாசகனுக்கும் ஒரு சேர ஒரு புதினத்தைப் படைத்திருக்கிறார்.இந்த ஒரு புதினம் ஒரு தேசாந்திரிக்கும், கதை படிக்க ஆசைப்படும் வாசகனுக்கும் சமமாக விருந்தளிக்கிறது. ஆகச்சிறந்த எழுத்தாற்றலை கொண்ட ஒரு எழுத்தாளனால் மட்டுமே இந்தப் புள்ளியை அடைய முடியும் என்பதற்கு இந்தப் புதினம் ஒரு எடுத்துக்காட்டு
4.இந்தப் புதினத்தில் இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே லியோ டால்ஸ்டாயின் இலக்கியப் படைப்புகளைப் பற்றிய விமர்சனம் இடம் பெற்றிருக்கின்றன. ஏற்கனவே லியோ டால்ஸ்டாயின் மற்ற இலக்கியப் படைப்புகளைப் படித்த வாசகர்களுக்கு இது மிகவும் விருந்தாக அமைகிறது. அதேநேரத்தில் லியோ டால்ஸ்டாயின் எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் படிக்காத வாசகனுக்கு லியோ டால்ஸ்டாய் என்ற நெடுஞ்சாலையைக் காண கதவுகள் திறக்கப்படுகின்றன.
5. லியோ டால்ஸ்டாய் வாழ்ந்த அதே காலகட்டத்தில்தான் இந்தியாவில் தாது ஆண்டுப் பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்தை நேரில் சந்தித்த வடலூர் வள்ளலார் ஜீவகாருண்யம் என்ற கோட்பாட்டை எப்படி உருவாக்கினாரோ,அதுபோல அதே காலகட்டத்தில் ரஷ்யாவில் ஏற்பட்ட பஞ்சம், எப்படி இருந்தது? அதனுடைய கோர முகங்கள் எப்படித் தாண்டவமாடின? அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த லியோ டால்ஸ்டாய் அதை எப்படி எதிர்கொண்டார்? அந்தப் பஞ்ச கால அனுபவங்களே லியோ டால்ஸ்டாயின் அன்பு நிறைந்த வார்த்தைகளுக்கு ஆதாரமாக இருக்குமோ என்கிற எண்ணத்தை இந்தப் புதினம் நமக்குக் காட்டுகிறது.
6. “மண்டியிடுங்கள் தந்தையே” என்ற தலைப்புக் கொண்ட இந்தப் புதினத்தில் யார் தந்தையாக இருக்கிறார்?எந்த மகன் இந்தக் கேள்வியை எந்தத் தந்தையிடம் கேட்கப் போகிறார்? என்பதற்கான விடையை இந்தப் புதினத்தின் தொடக்க அத்தியாயங்களே நமக்குத் தெரிவிக்கிறது. அது தெரிந்து இருந்தாலும் இந்தக் கேள்வியை இந்த மகன் எப்போது கேட்க போகிறான் என்கிற ஒரு புதிர் இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயத்தின் கடைசி வரி வரைக்கும் நீண்டு கொண்டே சென்று இருப்பது இந்தப் புதினத்திற்கு ஒரு உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறது எனலாம். அந்தக் கடைசி அத்தியாயத்தின் கடைசி வரியிலும் கூட “மண்டியிடுங்கள் தந்தையே” என்ற வாசகம் இடம்பெறவே இல்லை. எழுத்தாளர் இந்த வாசகத்தை வாசகனே கேட்டுக் கொள்ளட்டும் என்கின்ற தொணியிலும் விடவில்லை. இந்தப் புதினத்தை முழுமையாகப் படித்த பின், என்னால் இந்தத் தலைப்பை உணர முடிந்தது. இது Untold Title அல்ல, மாறாக Intrinsic Title என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
முதல்முறையாக இந்திய எழுத்துலகில் முழுக்க முழுக்க ரஷ்யாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதினம் எழுதிய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் பாராட்டுக்கள். இருந்தபோதிலும் என்னிடம் இருந்தும் இந்தப் புதினத்தைப் பற்றிய சில கேள்விகள் உள்ளன.
1. ஜார் மன்னர், மெழுகுவர்த்தி வெளிச்சம், குதிரை வண்டி என்ற இந்த மூன்று வார்த்தைகளை மட்டுமே நூறாண்டுகளுக்கு முந்தைய ரஷ்யாவை படம்பிடிக்கப் பெரிதாக எழுத்தாளர் கையாண்டுள்ளார். ஜார் மன்னர் என்ற இடத்தில் விலாடிமிர் புட்டின் என்றும் மெழுகுவர்த்தி வெளிச்சம் என்கின்ற இடத்தில் எல்இடி வெளிச்சம் என்றும் குதிரை வண்டி என்கிற இடத்தில் லாடா கார் என்றும் மாற்றினால் இந்தப் புதினம் ஒருவேளை இன்றைய காலகட்டத்தைக் குறிப்பதாகக் கூட அமைந்திருக்கக் கூடும். எ.கா ரயில் நிலையம் பற்றிப் பேசும் எழுத்தாளர் 140 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் ரயில்கள் எப்படி இருந்தன என்பது போன்ற செய்திகளைச் சேர்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம்.
2. லியோ டால்ஸ்டாய் ஒரு ஆகச்சிறந்த கிறிஸ்தவராக இருந்தாலும் கூட அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த கிறிஸ்துவ மத அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்களைக் கொண்டிருந்தார் என்பது வரலாற்று உண்மை. அதை இந்தப் புதினத்தில் கோடிட்டுக் காண்பிக்கப்படுகிறது. ஆனால் எந்தெந்த முறையில் கிறிஸ்துவ மத அமைப்புகள் தங்களுக்குள் சீர்திருத்தம் செய்திருக்க வேண்டும் என்று லியோ டால்ஸ்டாய் எண்ணினார் என்கிற கூடுதல் செய்தி இணைக்கப்பட்டிருந்தால் புதிதாக லியோ டால்ஸ்டாய் பற்றி அறிய விரும்பும் வாசகனுக்குக் கூடுதல் பயன் அளித்திருக்கும். அவர் ஏன் கிறிஸ்தவ மிஷனரிகளை எதிர்க்கிறார் என்பதற்கு வலுவான காரணங்கள் இங்கு அமையப் பெறவில்லை.
எப்படிப் பார்த்தாலும், இந்தப் புதினம் தமிழர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம். உலக மொழிகளில் இந்தப் புதினம் மொழிபெயர்ப்பு செய்யும் பட்சத்தில், எஸ் ராமகிருஷ்ணனோடு தமிழும், தமிழர்களும் பெருமையடைவார்கள் என்பது உண்மை.
சிக்கல் சண்முகத்தின் நாதஸ்வரம் மட்டுமல்ல எனது எழுதுகோலும் மேனாட்டு இலக்கியங்களைப் படைக்கும் என்பதை நிரூபித்துள்ளார் எஸ்ரா.
தமிழ் என்ற எழுதுகோல் கொண்டு ரஷ்ய வெண்பனியை மையாக ஊற்றி, லியோ டால்ஸ்டாயின் கருப்புப் பக்கங்களில் ஓவியம் வரைந்துள்ள எஸ்ராவுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.
April 14, 2022
கற்பனைத் தோழி
ஹிட்லரின் நாஜி முகாமில் அடைக்கப்பட்டு இறந்துபோன யூதச்சிறுமி ஆனி ஃபிராங்க் எழுதிய டைரிக்குறிப்புகள் இனப்படுகொலையின் சாட்சியமாக விளங்குகிறது. இந்த நூல் தமிழ் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது
ஜெர்மனியின் பிராங்பெர்ட் நகரத்தில் 1929ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஆனி ஃபிராங்க் பிறந்தார். யூதர்களை நாஜி ராணுவம் வேட்டையாடத் துவங்கிய போது அவர் தனது சகோதரி மார்க்ரெட், மற்றும் தாய் தந்தையருடன் ரகசிய நிலவறை ஒன்றில் ஒளிந்து வாழ்ந்தார். இரண்டு வருடங்களாக அவர்கள் ரகசிய இடத்தில் மறைந்து வாழ்ந்திருக்கிறார்கள். .

இந்த இருண்ட நாட்களில் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையே ஆனி நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். டச்சு மொழியில் எழுதப்பட்ட இந்த நாட்குறிப்புகள் 1950ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியானது .
கிட்டி என்ற கற்பனைத் தோழியிடம் சொல்வது போலவே ஆனி ஃபிராங்க் டைரிக்குறிப்புகளை எழுதியிருக்கிறார்.

இந்தக் கற்பனைத்தோழி கிட்டியின் பார்வையில் ஆனி பிராங்கின் வாழ்க்கை மற்றும் அன்றைய நாஜிக் கொடுமைகள் பற்றி விவரிப்பதாக Where Is Anne Frank என்ற அனிமேஷன் திரைப்படம் உருவாகப்பட்டுள்ளது. இதனை இஸ்ரேலிய திரைப்பட இயக்குநர், ஆரி ஃபோல்மேன் இயக்கியுள்ளார்
2021 கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட இந்த அனிமேஷன் படத்தைப் பார்த்தேன்.
அனிமேஷன் படங்கள் என்பது சிறார்களுக்கானது என்ற பொதுப்புத்தியை அகற்றி தீவிரமான, அதே நேரம் சுவாரஸ்யமான, வரலாற்று உண்மையைப் பேசும் அனிமேஷன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
மாயச்சுழல் ஒன்றினுள் நாம் புகுந்துவிட்டதைப் போலக் காட்சிகள் நம்மை விநோத உலகிற்குள் இழுத்துக் கொள்கின்றன. முயலைப் பின்தொடரும் ஆலீஸ் போலப் பரவசத்துடன் நாமும் கிட்டியைப் பின்தொடருகிறோம்.
வரலாற்று நிகழ்வுகள் கண்முன்னே விரியத் துவங்குகின்றன.

ஜூன் 1942 முதல் ஆகஸ்ட் 1944 வரை, ஆனி ஃபிராங்க் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள அனெக்ஸில் மறைந்திருந்தனர், அந்த இடம் இப்போது அருங்காட்சியகமாக மாறியுள்ளது. இங்குதான் ஆன் ஃபிராங்க் தனது நாட்குறிப்பை எழுதினார். அப்போது அவரது வயது 15.
75 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே அருங்காட்சியகத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது: புயல் வீசும் இரவில் ஆனி ஃபிராங்க் நாட்குறிப்பைப் பாதுகாக்கும் கண்ணாடிப் பெட்டி உடைந்து போகிறது. ஒரு துளி மை அந்த நாட்குறிப்பில் விழுந்து ஓடும்போது அதிலிருந்து ஒரு அழகான சிவப்பு தலை உருப்பெறுகிறது. . அது தான் கிட்டி. 14 வயதான சிறுமி. ஆனியின் கற்பனைத் தோழி
அவள் 1940-களின் பாணியில் ஆடை அணிந்திருக்கிறாள்.

அருங்காட்சியக காவலர்கள் கண்ணில் அவள் தெரிவதில்லை. அவள் ஆனி ஃபிராங் குடும்பத்தினரின் புகைப்படங்களைக் காணுகிறாள். அவர்களைத் தேடிக் குரல் கொடுக்கிறாள். , ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை.
மறுநாள் காலை அருங்காட்சியம் திறக்கப்படுகிறது. புதிய பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள், ஆனால் யாரும் கிட்டியைக் கவனிக்கவில்லை – அவள் அவர்களுக்குக் கண்ணுக்குத் தெரியாதவள். ஆனி ஃபிராங்கினால் மட்டுமே அவளைப் பார்க்க முடியும். ஆனி எங்கே போனாள் என்று கிட்டிக்குப் புரியவில்லை. காலமாற்றத்தை அவள் அறிந்திருக்கவில்லை.
ஆகவே இரவில் ஆனி ஃபிராங்கின் டைரியை மறுபடி படிக்க ஆரம்பிக்கிறாள். அதன் வழியே ஆனி தனது 13வது பிறந்தநாளைக் கொண்டாடுவதைக் காணுகிறாள், ஆனியின் ரகசியக் காதல் மற்றும் கவலைகளை அறிந்து கொள்கிறாள். நாட்குறிப்பின் வழியாக ஆனி பற்றிய முழு உண்மைகளை அறிந்து கொள்ள முடியாத கிட்டி அதைத் தேடி அலைகிறாள். இதற்காக நாட்குறிப்பை உடன் கொண்டு செல்கிறாள்.

தனது தோழியைக் கண்டுபிடிக்கக் காவலர்களின் உதவியை நாடுகிறாள். ஆனி ஃபிராங்க் இறக்கவில்லை. அவள் ஆம்ஸ்டர்டாமில் இன்றும் இருக்கிறாள் என்றே கிட்டி உணருகிறாள். ஆனி பெயரிலுள்ள நினைவுச்சின்னங்கள். பாலத்தைக் காணுகிறாள். இது தான் உண்மை என்ற போதும் அதை அவள் ஏற்கவில்லை.
அவளிடமிருந்து ஆனி ஃபிராங்க்கின் நாட்குறிப்பைக் கைப்பற்றக் காவலர்கள் துரத்துகிறார்கள். பீட்டரின் நட்பு கிடைக்கிறது. அவனது உதவியுடன் ஜாக்கைக் கண்டுபிடிக்கிறாள். முடிவில் ஆனி ஃபிராங்க் அனுபவித்த பயங்கரத்தைப் புரிந்துகொள்கிறாள்..
பின்பு பீட்டருடன் இணைந்து அகதிகளுக்கு உதவி செய்ய முற்படுகிறாள். ஆனியின் கனவும் நம்பிக்கையும் புது வடிவம் கொள்வதுடன் படம் நிறைவுபெறுகிறது.
ஆனி ஃபிராங்க்கின் வாழ்க்கையை முன்வைத்து சமகால அகதிகளின் நிலை மற்றும் வாழ்க்கை நெருக்கடிகளை ஆரி ஃபோல்மேன் கவனப்படுத்தியிருக்கிறார். மிகச்சிறந்த வரைகலைச்சித்திரங்கள். தேர்ந்த இசை, படத்தொகுப்பு எனப் படம் சிறந்த அனுபவத்தைத் தருகிறது
ஆனி பிராங்க் பற்றிய ஆவணப்படங்கள். மற்றும் முழுநீள திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அவை அவளது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மட்டுமே கவனப்படுத்த முயன்றன. இந்தப் படத்திலே மாயமும் நிஜமும் ஒன்ற கலக்கின்றன.
ஆனிக்கு டைரி எப்படிக் கிடைக்கிறது , எந்த ரகசியங்களை டைரியில் எழுதுகிறார்கள் என்பதைப் பற்றிய காட்சிகள் அழகானவை.
ஆனி ஃபிராங்கின் கதையை முழுக்க முழுக்க ஓவியங்களாகச் சொன்ன இப் படம். 15 நாடுகளில் உருவாக்கப்பட்ட 159.000 தனிச்சித்திரங்களைக் கொண்டிருக்கிறது. Lena Guberman இதனை ஒருங்கிணைத்து உருவாக்கியிருக்கிறார். அனிமேஷன் செய்யப்பட்ட உருவங்களுடன் 2-D இல் இணைத்து முற்றிலும் புதிய நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இளம் பார்வையாளர்களைச் சென்றடைவதற்காகவே இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கியிருக்கிறேன் என்கிறார் ஃபோல்மேன்
ஆனி எப்படி இறந்தாள், அவளுக்கு என்ன ஆனது? என்பதை இரண்டு புள்ளிகளாக வைத்துக் கொண்டு இன்று பல்வேறு தேசங்களின் அகதிகளால் நிரம்பியுள்ள ஐரோப்பாவின் தற்போதைய சூழ்நிலையைப் பற்றிப் பேசியிருக்கிறோம் என்கிறார் ஃபோல்மேன்
கிட்டி வெறும் கற்பனைத்தோழியில்லை. அவள் ஆனியின் ஆல்டர் ஈகோ . உண்மையில் அவள் ஒரு போராளி, அவள் ஆனியைப் போலப் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இல்லை. தைரியமாக மறைக்கப்பட்ட உண்மைகளைத் தேடுகிறாள். படத்தின் இறுதியில் அவள் அகதிகளுக்கு உதவிட முற்படுகிறாள். அதுவே அவள் வாழ்வின் அடுத்த நிலையாகும்.
•••
திருப்பூரில்
16.4.22 சனிக்கிழமை திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைக்க இயலவில்லை. ஆகவே மீனாட்சி புக்ஸ் அரங்கில் மாலை நாலு மணி அளவில் இருப்பேன்.
விருப்பமான நண்பர்கள், வாசகர்கள் சந்திக்கலாம்
மாலை ஆறுமணிக்கு பசியின் கதை என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்
April 13, 2022
நன்றி
நேற்று எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி.
தூத்துக்குடியில் தனது சலூனில் நூலகம் அமைத்துள்ள P பொன்மாரியப்பன் எனது பிறந்தநாளுக்காக ஊர்முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடன் தொலைபேசியில் பேசினேன். ``எழுத்தாளர்களின் பிறந்த நாளை ஊரே கொண்டாடணும். என்னாலே முடிஞ்சதை நான் செய்திருக்கிறேன்“ என்றார். வாசிப்பின் வழியே உருவான இது போன்ற மனிதர்களே நாம் கொண்டாட வேண்டியவர்கள்.



ஒரு நண்பர் ரிஷிகேஷில் எனக்காக பிரார்த்தனை செய்து மகிழ்ந்திருக்கிறார்.
அமெரிக்காவில் எனது வாசகர்களில் சிலர் ஒன்று கூடி எனது பிறந்த நாளைக் கொண்டாடியதோடு எனது சிறுகதைகளை வாசித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடன் வீடியோ காலில் பேசினேன்.

ஆர்டிஸ்ட் கனலி ஒரு அழகான ஓவியத்தை வரைந்து அனுப்பியிருக்கிறார்.
வண்ணதாசனின் ஆசி நேற்றைய நாளை கூடுதல் மகிழ்ச்சி கொள்ளச் செய்தது.
நூற்றுக்கணக்கான குறுஞ்செய்திகள். வாட்ஸ்அப் வாழ்த்துகள். மின்னஞ்சல்கள். தொலைபேசி அழைப்பு , நேரடி சந்திப்பு என அன்பைப் பகிர்ந்து கொண்ட அனைவரும் எனது மனம் நிறைந்த நன்றி
April 12, 2022
சிற்றிதழ்கள் பற்றிய உரை
புரவி முதலாண்டு விழாவில் தமிழ் சிற்றிதழ்கள் பற்றிய எனது உரையின் இணைப்பு.
நிகழ்வின் கிளைவழிகள்
Waru என்ற நியூசிலாந்து திரைப்படத்தைப் பார்த்தேன்.

வாரு என்ற பழங்குடியினச் சிறுவனின் மரணம் மற்றும் இறுதிச்சடங்கினையும் அது பழங்குடியினரிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் முன்வைத்து உருவாக்கப்பட்ட கதைதொகுப்பாகும்.
ஒவ்வொரு பகுதியும் பத்து நிமிஷம் ஓடக்கூடியது. சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு பகுதியினையும் ஒரு மாவோரி பெண் இயக்குநர் இயக்கியிருக்கிறார். இந்தத் தொகுப்பிற்கான படப்பிடிப்பு காலை 9:59 மணிக்குத் தொடங்கி, ஒரே நாளில் படமாக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை.
சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த Anthology இதுவே. ரோஷோமான் போல ஒரு உண்மையின் வேறுவேறு கோணங்களைப் படம் மிக அழகாக விவரிக்கிறது. ஒவ்வொரு பகுதியும் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியைப் பிரதானமாக வெளிப்படுத்துகிறது.
இது போன்ற உணர்வுப்பூர்வமான கதையைச் சிங்கிள் ஷாட்டில் படமாக்குவது ஒரு சவால். அதைச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார்கள். ஒரு மரணம் எத்தனை தளங்களில் தனது பாதிப்பினை ஏற்படுத்துகிறது. அதுவும் குறிப்பாக இதைப் பெண்கள் எதிர்கொள்ளும் விதமும் சொல்லப்படாத துயரமும் மிக அழுத்தமாகப் படத்தில் வெளிப்பட்டுள்ளது.

Charm
இந்த முதற்பாதியில் இறுதிச்சடங்கிற்காக உணவு சமைக்கிறார்கள். அந்தச் சமையலறையினுள் நடக்கும் நிகழ்வுகளின் வழியே இழப்பு, துயரம். எதிர்பாராத வருகை. இணைந்தும் விலகியும் செல்லும் உறவு என அழகாகச் சித்தரித்திருக்கிறார்கள்.
Anahera
வாரு படித்த சிறார் பள்ளியின் ஆசிரியர். இறுதிச் சடங்கில் மாணவர்கள் கலந்து கொள்வது மற்றும் ஆசிரியருக்கு அந்தப் பையனின் மரணத்தில் ஏற்படும் பாதிப்பினை மையப்படுத்தியிருக்கிறார்கள்.
Mihi
தனித்து வாழும் பெண் வறுமையான சூழலில் எப்படித் தனது குழந்தைகளின் அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறாள் என்பதைப் பற்றியது. இதில் குழந்தைகளின் உலகம் அழகாக வெளிப்பட்டுள்ளது

Em
பாடகியான எம் குடித்துவிட்டு முழுப்போதையில் வீடு திரும்புகிறாள். அவளது வீடு பூட்டப்பட்டிருக்கிறது. கைக்குழந்தை சமையலறையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் காணுகிறாள். போதையில் அவள் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வீட்டிற்குள் எப்படிப் போகிறாள். குழந்தையை எப்படி அரவணைக்கிறாள் என்பதே மையக்கதை
Ranui
இறந்து போன சிறுவனின் இரண்டு பாட்டிகளும் கலந்து கொள்ளும் இறுதி நிகழ்வு மற்றும் பையனை அடக்கம் செய்யும் முறை பற்றியது. இதில் இரண்டு வயதான பாட்டிகள் தங்கள் பேரனின் உடலுக்காகப் போராடுகிறார்கள் மாவோரி பழங்குடியின் இறுதிச்சடங்குகள் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த படமிது.
.
Kiritapu
தொலைக்காட்சி அறிவிப்பாளராக உள்ள மாவோரி இனப்பெண் வாருவின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இனவெறி மீதான கோபத்தை வெளிப்படுத்துவது.
Mere
மேரே, தங்கள் இனத்தை அவமதித்தவனிடம் நேரடியாகக் கொள்ளும் கோபத்தைப் பற்றியது.
Titty & Bash

டிட்டி மற்றும் பாஷ் என்ற இரண்டு சகோதரிகளின் பயணத்தைப் பற்றியது. அவர்கள் பாடல் கேட்டபடியே காரில் பயணம் செய்வதும், பாதி வழியில் சண்டையிட்டுக் கொள்வதும் அழகான காட்சிகள்.
வாருவின் மரணத்திற்குப் பெற்றோர்களின் பொறுப்பின்மையும் பராமரிப்பாளரின் அலட்சியமும் காரணம் , இதைத் தொடரும் குற்றமாகக் கருதுகிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் உருவாக்கும் குற்ற உணர்வும், இயலாமை உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்கள்
முதல் பகுதியில் பையனை இழந்த பெண் குழந்தையைத் திரும்பக் கொண்டு வர” அமானுஷ்ய சக்திகளைப் பயன்படுத்துமாறு வேண்டுகிறாள்.

இன்னொரு கதையில் பள்ளி ஆசிரியையான அனாஹேரா இறுதி சடங்கில் கலந்து கொள்வது பற்றித் தயங்குகிறாள்.
நிராகரிக்கப்பட்ட பெண்ணின் நிலையை அடுத்த பகுதி விளக்குகிறது. பூட்டப்பட்ட வீட்டினை காணும் பாடகி குடும்பத்தின் பொறுப்பின்மையினை முழுமையாக உணருகிறாள்.
ட்ரூ ஸ்டர்ஜ்ஜின் ஒளிப்பதிவு அபாரமானது.
வாரு என்ற சிறுவன் படத்தில் காட்டப்படுவதேயில்லை. அவன் ஒரு குறியீடு போலவே சித்தரிக்கப்படுகிறான். இனவெறி,. குடும்ப வன்முறை, தாய்மை, துக்கம், இழப்பு மற்றும் குற்ற உணர்வு ஆகியவற்றைப் படம் ஒற்றை நிகழ்வின் வழியே கையாளுகிறது என்பது தான் இதன் தனிச்சிறப்பு.
April 11, 2022
ஹைதராபாத் நாட்கள்
ஒரு வாரம் ஹைதராபாத்திலிருந்தேன்.
நண்பர்கள் சந்திப்பு. சினிமா வேலை, ஊர்சுற்றல் என நாட்கள் போனதே தெரியவில்லை.

ஹைதராபாத்தில் போக்குவரத்து நெருக்கடி மிகவும் அதிகம். விடிகாலை துவங்கி நள்ளிரவு வரை எந்தச் சாலையில் சென்றாலும் நீண்ட வாகன வரிசை. நெடிய காத்திருப்பு. ஹைதராபாத் இன்னொரு துபாய் என்றே தோன்றியது.
ஹைதராபாத் முழுவதும் விதவிதமான உணவகங்கள். சாப்பிடுவதற்கு இடம் பிடிக்கக் குறைந்தது ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டும். விதவிதமான பிரியாணிகள். ருசியான உணவு. அதுவும் இரவுக்கடைகளின் வரிசையினைக் காணும் போது இன்னொரு உலகமாக இருந்தது.
ஹைதராபாத்திற்குப் பலமுறை போய் வந்திருக்கிறேன். லாக்டவுன் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் செல்லவில்லை. இந்த முறை விமானநிலையத்திலிருந்து வரும் போது நகரம் உருமாறியிருப்பதைக் கண்டேன். எங்குப் பார்த்தாலும் ஆள் உயரக் கட்டிடங்கள். புதிய கட்டுமானப்பணிகள். பரபரப்பான வாழ்க்கை. புதிய விமான நிலையம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது சர்வதேச முனையமாக இருக்கும் என்றார்கள்.
ஹைதராபாத்திலிருந்த நாட்கள் முழுவதும் காரிலே சுற்றிக் கொண்டிருந்தேன். சார்மினார் பகுதிக்குள் காரில் போனது இன்னொரு நூற்றாண்டிற்குள் போய் வந்தது போலவே இருந்தது.
ஷாப்பிங் மால். சினிமா தியேட்டர் என எங்கும் பார்க்கிங் கட்டணம் கிடையாது. எவ்வளவு நேரம் என்றாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்கிறார்கள். வசதியான நிறுத்துமிடங்கள்.

சென்றவாரத்தில் ஒரு நாள் சலார் ஜங் அருங்காட்சியகம் போயிருந்தேன். இந்த மியூசியத்தை இதற்கு முன்பு நான்குமுறை பார்த்திருக்கிறேன். ஆனாலும் இங்குள்ள கலைப்பொருட்களைத் திரும்பக் காணும் ஆசை தூண்டியது.

சலார் ஜங் சாலையில் உள்ளது இந்த மியூசியம். போக்குவரத்து நெருக்கடிக்குள் காரில் போய்ச் சேருவதற்குக் குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாகிவிடுகிறது. மூன்று தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான மாளிகை. அருங்காட்சியகங்களுக்கான கட்டிடக்கலையில் இது தனிச்சிறப்புக் கொண்டது, இந்தியாவின் மூன்று தேசிய அருங்காட்சியகங்களுள் இதுவும் ஒன்று
மீர் யூசுஃப் அலிகான் சலார் ஜங் சேகரிப்பிலிருந்த கலைப்பொருட்களைப் பாதுகாத்து அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார்கள். உலக அளவிலே தனிநபர் சேமிப்பில் மிக அதிகமான கலைப்பொருட்கள் உள்ள மியூசியம் இதுவே


இந்திய, ஐரோப்பிய, சீன ஜப்பானியக் கலைப் பொருட்களும் அந்தக் காலக் கடிகாரங்களும் ஆயுதங்களும் உடைகளும் வெள்ளிப்பொருட்களும் யானைத் தந்தம் மற்றும், சலவைக்கல்லால் செய்யப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்களும், காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவை மட்டுமின்றிப் பெர்சிய உருதுப்புத்தகங்கள், எழுதுகோல்கள். கைப்பிரதிகள். ஒப்பந்தங்கள். சதுரங்கப் பலகைகள். பதக்கங்கள், பீங்கான் கோப்பைகள். தேநீர் கலன்கள். அரிய புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

மியூசியத்தினைப் பார்வையிடுவது என்பது வெறுமனே சுற்றிவருவதில்லை. புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில்லை. அதன் வரலாற்றையும் அங்குள்ள கலைப்பொருட்களைப் பற்றிய தகவல்கள். அது சேகரிக்கப்பட்ட காலம். கலைப்பொருட்களின் தனித்துவம். மற்றும் நுணுக்கங்கள் பற்றிய அறிந்து கொள்ளும் போது தான் மியூசியத்தின் அருமை புரியத் துவங்கும்.
இந்த மியூசியத்தில் புகைப்படம் எடுப்பதற்குக் கேமிரா, செல்போன் பயன்படுத்த ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்த டிக்கெட்டில் உள்ள பார்கோடினை ஸ்கேன் செய்து அருங்காட்சியக ஆப்பில் இணைந்து கொண்டால் அங்குள்ள கலைப்பொருட்கள் பற்றிய ஆடியோ கைடினைக் கேட்கலாம்.
நான் முன்னதாக நான்கு முறை பார்த்திருக்கிறேன் என்பதால் நான் விரும்பிய தளங்களை, விரும்பிய கலைப்பொருட்களை மட்டுமே தேர்வு செய்து பார்ப்பது என முடிவு செய்து கொண்டேன். அப்படியும் ம்யூசியத்திற்குள் ஐந்தாறு மணி நேரமாகி விட்டது.
ஒருவர் நிதானமாக மியூசியத்தை முழுவதும் பார்வையிட வேண்டும் என்றால் இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும். அப்படி யார் விரும்பிப் பார்க்க போகிறார்கள். பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் என்பதால் ஒரு மணிநேரத்திற்குள் மொத்த மியூசியத்தைப் பார்த்துவிட்டு கேண்டியனுக்குள் நுழைந்துவிடுகிறார்கள்
எனக்கு ஒரு அவசரமும் இல்லை என்பதால் நிதானமாகக் கலைப்பொருட்களைப் பார்வையிட்டேன்.

சலார் ஜங் தலைமுறையின் வரலாறு மிக நீண்டது. சலார் ஜங் III ஏழாவது நிஜாம் மீர் உஸ்மான் அலி கான் ஆட்சியின் போது ஹைதராபாத்தின் திவானாக இருந்திருக்கிறார். சலார் ஜங்கின் தந்தைவழி குடும்பத்தில் ஐந்து தலைமுறையாகத் திவானாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலேயர்களின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அவர்கள் ஆதரவில் நடந்து கொண்டவர்கள். ஆங்கிலேயர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மற்றும் கடிதங்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
யூசுஃப் அலிகான் சலார் ஜங் இங்கிலாந்தில் படித்தவர். உலகெங்கும் பயணம் செய்து அரிய கலைப்பொருட்களைச் சேகரித்திருக்கிறார். அந்தக் கலைப்பொருட்களை எப்படி இங்கே கொண்டுவந்திருக்கிறார் என்பதன் பின்னே எழுதப்படாத நிறையக் கதைகள் ஒளிந்திருக்கின்றன.

விதவிதமான கைத்தடிகளுக்கு என்றே ஒரு அரங்கிருக்கிறது. அங்குள்ள சில கைத்தடிகளில் கால் பாதம் போன்ற அமைப்பைச் செய்திருக்கிறார்கள். காலை கையில் பிடித்துக் கொண்டு செல்வது என்பது விநோதமாக இருக்கிறது. விதவிதமான நிறங்களில் வடிவங்களில் கைத்தடிகள். இந்தக் கைத்தடிகளுக்குப் பின்னே மேற்குலகின் பண்பாடும் உயர் வகுப்பு அந்தஸ்தும் மறைந்திருக்கிறது. அந்தக் கைத்தடிகள் அரங்கில் நின்றபோது கோணங்கி எழுதிய கைத்தடி கேட்ட நூறு கேள்விகள் என்ற கதை நினைவில் எழுந்தது . கைவிடப்பட்ட விவசாயி ஒருவர் மதுரை நகரில் ஊன்றுகோலுடன் சுற்றி அலைகிறார். அவரது வறுமையும் அவலமும் கதையில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த விவசாயி வைத்துள்ள கைத்தடி கேள்விகேட்பதாகக் கோணங்கி எழுதியிருப்பார். இங்கே சில விநோத கைத்தடிகளைக் காணும் போது அதைப் பயன்படுத்திய மனிதன் யாராக இருப்பார் என்ற கேள்வி தோன்றவே செய்தது

யானைத் தந்தத்தில் செய்த கலைப்பொருட்களையும் இந்திய ஓவியங்கள் மற்றும் நுண்ணோவியங்களையும் பார்ப்பதற்கு நிறைய நேரத்தைச் செலவிட்டேன். தந்ததால் ஆன மேஜை விளக்கு. பேப்பர் கட்டர், விலங்கு உருவங்கள் மற்றும் புத்த பிரதிமைகள் சிறப்பாக உள்ளன



ஒரு கூடம் முழுவதும் அபூர்வமான நுண்ணோவியங்கள் இடம்பெற்றுள்ளன. ரவிவர்மாவின் அசல் ஓவியங்களைக் காணுவதற்குத் தான் நிறையக் கூட்டம். மற்றபடி ராஜஸ்தானிய, மொகலாய மினியேச்சர்களைக் காணுவதற்கு ஆட்களே இல்லை. ஆனால் மிக அரிய நுண்ணோவியங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

பஹாரி நுண்ணோவியங்கள் 17-19 ஆம் நூற்றாண்டுகளில் ஜம்முவிலிருந்து கர்வால் வரை வளர்ந்து செழித்த ஓவியவகையாகும். இந்த ஓவியங்கள் ராஜபுத்திர மன்னர்களால் வளர்த்தெடுக்கப்பட்டன. ராமாயணம் மற்றும் ஜெயதேவாவின் கீத கோவிந்தக் காட்சிகளை மையப்படுத்திய இந்த நுண்ணோவியங்கள் புகழ்பெற்றவை.

king with Ladies ஓவியத்தில் அரசன் அணிந்துள்ள பச்சை நிற உடையும் சிவப்பு கம்பளமும் அருகில் அமர்ந்துள்ள பெண்ணின் இளஞ்சிவப்பு வண்ண ஆடையும் பணிப்பெண்ணின் அடர்நீலம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ண பார்டரும் அத்தனை அழகாக வரையப்பட்டுள்ளன. 1780ல் வரையப்பட்ட ஓவியமிது. இது போலவே இன்னொரு ஓவியத்தில் அரசனும் அரசியும் அமர்ந்து கூக்கா படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா லாக்டவுன் காரணமாக நீண்டகாலம் மூடப்பட்டு இருந்த காரணத்தால் இந்தியச் சிற்பங்கள் உள்ளிட்ட சில பகுதிகள் பராமரிப்பிற்காக மூடப்பட்டிருந்தன.

ஐரோப்பிய கலைக்கூடத்தில் நகலெடுக்கப்பட்ட சிற்பங்களே நிறைய உள்ளன. இங்குள்ள ரெபேக்கா சிலை மிகவும் புகழ் பெற்றது. 1876 ஆம் ஆண்டில் பென்சொனி என்னும் இத்தாலியச் சிற்பியால் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டது. சல்லாத்துணியால் முக்காடு போட்டிருக்கும் ரபேக்காவின் முகத்தை மிக நுணுக்கமாக வியப்பூட்டும் வகையில் உருவாக்கியிருக்கிறார் பென்சோனி.

சீன மற்றும் ஜப்பானியக் கலைப்பொருட்களைக் கொண்ட காட்சிக்கூடத்தில் அபூர்வமான கலைப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக நீலக்குவளைகள். தேநீர்கலன்கள். வேலைப்பாடு கொண்ட அலங்கார தட்டுகள். பௌத்த ஓவியங்கள். சிற்பங்கள். மரநாற்காலிகள். குறுவாட்கள். குடுவைகள். மற்றும் செவ்வக கண்ணாடிகள் நுட்பமான கைவேலைப்பாட்டுடன் காணப்படுகின்றன.

மியூசியத்தினுள் ஒரு அரிய நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பெர்சிய கவிதைகள் நூலில் மொகலாய அரசர் ஜஹாங்கீர் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அக்பருக்குப் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது. இது போலவே ஷாஜகானின் மகள் ஜஹனாரா பேகம் கையெழுத்திட்ட உமர்கயாம் கவிதைகளின் ஏடு இங்கே காணப்படுகிறது.
சலார் ஜங் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு ஆங்கிலக் கனவான் போலவே நடந்து கொண்டார். அவரது அரண்மனை ஆங்கில பாணியில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது பகட்டான விருந்தோம்பல் ஆங்கிலேயர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. 1877ல் டெல்லி தர்பாரில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்திய ஒரே இந்தியர் இவர் மட்டுமே. ஹைதராபாத்தில் கொலை கொள்ளை அதிகமாக இருந்த காலத்தில் அவற்றை ஒடுக்கியவர் இவர் என்கிறார்கள்.
நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் மற்றும் மாவட்டங்களுக்காகத் தனிப் போலீஸ் படை இவரால் உருவாக்கப்பட்டது ஹைதராபாத்தில் இவர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவினார், மேலும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் கல்லூரி துவங்க ஆதரவு கொடுத்திருக்கிறார். இறுதிவரை ஆங்கிலேயர்களின் தீவிர விசுவாசியாகச் செயல்பட்டிருக்கிறார். ஆனாலும் ஆங்கிலேயர்கள் இவரையும் ஒரு கட்டத்தில் கைவிட்டு அவரது அதிகார வரம்பை கட்டுப்படுத்தினார்கள். கசப்பான அனுபவங்களுடன் அவரது இறுதி நாட்கள் கழிந்திருக்கின்றன.
திரும்பி வரும் போது சுல்தான் பஜாரைக் கடந்து வந்தேன். சுல்தான் பஜாரில் சுதந்திரதினம் அன்று கொடி ஏற்ற முயன்ற இளைஞன் பற்றி அசோகமித்திரன் சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். மிகச்சிறந்த கதையது.
சுதந்திரத்திற்கு முந்தைய ஹைதராபாத் பற்றி அசோகமித்திரன் எழுதியுள்ள நினைவுகளும் புனைவும் முக்கியமானது. இப்படித் தெலுங்கில் கூட எழுதியிருப்பார்களா எனத் தெரியவில்லை.
•••
April 10, 2022
புரவி சிறப்பிதழில்
புரவி சிறப்பிதழில் எனது புதிய சிறுகதை வெளியாகியுள்ளது.

April 8, 2022
கோவையில் உரையாற்றுகிறேன்
புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா
தனது பட்டிமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் தனியிடம் பிடித்தவர்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தவர். சங்க இலக்கியம் குறித்து ஆழ்ந்து அறிந்தவர்.
இவரது தமிழ்பணியைப் போற்றும் விதமாக 2021ல் பத்மஸ்ரீ விருது அளிக்கபட்டது.
அவரது நகைச்சுவை உணர்வும் , சமூக அக்கறையும் மிகுந்த பாராட்டிற்குரியது
நீண்டகாலமாக அவரை அறிவேன். சிறந்த பண்பாளர்.
காலவரிசைப்படுத்தி, புதிய உரையுடன் இவர் வெளியிட்ட ‘புறநானூறு’ – புதிய வரிசை நூல் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அகநானூறு பாடல்களைத் தொகுத்துள்ள முறையை ஆராய்ந்து. பொருளுக்கேற்ற பாடலை எளிதாகத் தேர்வு செய்யும் வகையில் எளிமையாக வரிசைப்படுத்தி புதிய விளக்கவுரையை எழுதியிருக்கிறார். மூன்று தொகுதிகளாக வெளியாகியுள்ளன.
கவிதா பதிப்பகம் இந்நூல்களை வெளியிட்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா அவர்களின் அகநானூறு தொகுதிகளின் அறிமுக விழா கோவையில் ஏப்ரல் 17 ஞாயிறு மாலை நடைபெறுகிறது
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
நிகழ்வு நடைபெறும் இடம் : கிக்கானி அரங்கம், கோயம்புத்தூர்.
நாள் :ஏப்ரல் 17 ஞாயிறு
நேரம். :மாலை ஆறுமணி
இந்த நிகழ்வில் சிறந்த பேச்சாளர்கள் சுகிசிவம், ராஜா, பாரதி பாஸ்கர், மரபின் மைந்தன் முத்தையா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள் . கவிதா சொக்கலிங்கம் முன்னிலை வகிக்கிறார். சாலமன் பாப்பையா அவர்கள் ஏற்புரை வழங்குகிறார்.
கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளது.


S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
