S. Ramakrishnan's Blog, page 86
June 17, 2022
உண்மையான பரிசு
எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளை எப்படிப் புரிந்து கொள்வது. நேற்று வரை சரியாக நடந்த விஷயம் இன்று நடக்க மறுப்பது ஏன். நாம் விரும்பாத மாற்றம் நடந்துவிடும் போது எப்படி ஏற்றுக் கொள்வது. இந்தக் கேள்விகளுக்கான பதிலாக உருவாக்கப்பட்டிருக்கிறது Who are you? அனிமேஷன் திரைப்படம்.
ஒரு எழுத்தாளருக்கும் பரிசுப் பொருளை ஒப்படைக்க வந்த இளம்பெண்ணிற்குமான உரையாடலின் வழியே செயலூக்கத்திற்கான வழி அடையாளம் காட்டப்படுகிறது
13 நிமிஷத்துக்குள் எத்தனை நிகழ்வுகளை, மாற்றங்களை அழகாகச் சித்தரித்துள்ளது என வியப்பாக உள்ளது.
அவன், அவள் இருவரும் Who are you? என்ற ஒரே கேள்வியைச் சந்திக்கிறார்கள். ஆனால் இருவேறு அனுபவத்தை விவரிக்கிறார்கள். அவர்களுக்கு இடையில் நிகழும் சந்திப்பு முடிவில் இருவருக்கும் மகிழ்ச்சியை உருவாக்குகிறது
எது உண்மையான பரிசு என்பதை ஜென் போல விளக்குகிறது இப்படம்.
June 15, 2022
வனம் புகுதல்
Shinrin-Yoku, (Forest Bathing) என்ற இந்த ஆவணப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் 14 விருதுகளைப் பெற்றிருக்கிறது.
ஜப்பானியர்கள் அடர்ந்த காட்டிற்குள் செல்லும் பயணத்தை Forest bathing (Shinrin-Yoku)என்கிறார்கள்
அவர்கள் ஷின்ரின்-யோகுவை சிகிட்சை முறையாக மேற்கொள்கிறார்கள். காட்டின் விநோத ஓசைகள், மரங்களின் வாசனை, இலைகள் வழியாக கசியும் சூரிய ஒளி, சுத்தமான காற்று – இவை உடலுக்கும் மனதிற்கும் நலமளிக்கின்றன
இயற்கையின் வழியே நமது ஆற்றலையும் உயிர்ச்சக்தியையும் மீட்டெடுக்கலாம். ஆகவே வனக் குளியலை ஆரோக்கியத்திற்கான வழிமுறையாக கொள்கிறார்கள்.
ஷின்ரின்-யோகு ஒரு பாலம் போன்றது. நமது புலன்களை முழுமையாகத் திறப்பதன் மூலம், நமக்கும் இயற்கைக்குமான இடைவெளியைக் குறைக்கிறது.
இந்தக் காணொளியில் நாம் காணும் வானுயர்ந்த மரங்களும், ஒளியின் ஜாலங்களும், கலையாத இருளும், தனித்த பாதை தரும் வசீகரமும், விநோத ஒசைகளும் வனம் புகும் அனுபவத்தை முழுமையாக உணர்த்துகின்றன
முதல்வர் சந்திப்பு
மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும் விதமாக முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குழுவினை தமிழக அரசு உருவாக்கியுள்ளது .
இதில் நானும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளேன்

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் துணை வேந்தர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாசன், பேராசியர் மாடசாமி, தலைமை ஆசிரியர் இரா.பாலு, ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாநில கல்விக் கொள்கை குழுவினர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து அவரது ஆலோசனைகளைப் பெற்றோம்

அதைத் தொடர்ந்து மாநில கல்விக் கொள்கை குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது,
[image error]கவிஞர் வெய்யில் படைப்புலகம்
கவிஞர் வெய்யில் கவிதைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கினை ஆகுதி நடத்துகிறது.
ஜுன் 19 ஞாயிறு, சென்னை மைலாப்பூரிலுள்ள நிவேதனம் அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்விற்கு தலைமை ஏற்று வெய்யில் கவிதைகள் குறித்து உரையாற்றுகிறேன்
எனது அமர்வு காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது


நிகழ்வில் கோணங்கி, வசுமித்ரா, வெண்ணிலா, முத்துராசா குமார், காளிபிரசாத், ம.கண்ணம்மாள், ஜா. ராஜகோபாலன், மனோமோகன், வேல்கண்ணன், செந்தில் கரிகாலன், ந.பெரியசாமி, ராஜேஷ், ஜீவலட்சுமி, பேராசிரியர் அரங்க மல்லிகா பேராசிரியர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்
June 10, 2022
கவிஞன் சென்ற பாதை
1689ம் ஆண்டுத் தனது 45வது வயதில் கவிஞர் பாஷோ நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டார். வடக்கு நோக்கிய அந்தப் பயண அனுபவத்தை ஒரு நூலாக எழுதியிருக்கிறார். முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அதே பயண வழியில் லெஸ்லி டவ்னர் நடந்து பயணம் செய்திருக்கிறார். அந்த அனுபவத்தை On the Narrow Road: Journey Into a Lost Japan என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்.

பிரிட்டனைச் சேர்ந்த லெஸ்லி டவ்னர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் வாழ்ந்தவர். ஜப்பானிய மொழி நன்றாக அறிந்தவர். ஜப்பானியப் பண்பாடு மற்றும் வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட ஐந்து நாவல்களை எழுதியிருக்கிறார். கெய்ஷா பெண்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஜப்பானுக்கும் அன்றைய ஜப்பானுக்கும் இடையிலான மாற்றங்களையும் மாறாத இயற்கையினையும் அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவியது என்கிறார் லஸ்லி
1689 மார்ச் இருபத்தி ஏழாம் தேதி அதிகாலையில் பாஷோவின் பயணம் துவங்கியது..
அதைப்பற்றிய அவரது குறிப்பு
“வானத்தில் இருள் சூழ்ந்திருந்தது. நிலவு மெல்ல மேகங்களுக்குள் மறைந்து போனாலும் வெளிச்சம் கீற்றாகத் தெரிந்தது. ப்யூஜி மலையின் மங்கலான நிழலும், யுனோ மற்றும் யானகாவின் செர்ரிப் பூக்களும் கடைசியாக விடைபெற்றன. சில மைல்களுக்கு ஒன்றாகச் சேர்ந்து படகில் வருவதற்கு நண்பர்கள் கூடினர். செஞ்சுவில் படகிலிருந்து இறங்கியதும், மூவாயிரம் மைல் பயணம் என்ற எண்ணம் திடீரென்று எனது இதயத்தை ஆட்கொண்டது, எனது கண்களில் கசிந்த கண்ணீரைத் தவிர, நகரத்தின் வீடுகளோ நண்பர்களின் முகங்களோ தெரியவில்லை.“
பாஷோவின் வழித்துணையாக வந்தவர் அவரது நண்பர் சோரா. பத்து வயது இளையவர், இருவரும் நாள் ஒன்றுக்கு பதினைந்து முதல் இருபது மைல் தூரம் நடந்திருக்கிறார்கள். சில இடங்களில் குதிரையில் சென்றிருக்கிறார்கள். கிடைத்த இடத்தில் தங்கிக் கொண்டு வழியிலுள்ள பௌத்த ஆலயங்கள். மடாலயங்களைப் பார்வையிட்டபடி பயணித்திருக்கிறார்கள்.
ஒரு வைக்கோல் தொப்பி. ஒரு ஊன்றுகோல். வைக்கோல் காலணிகள், ஒரு மழைக்கோட்டு, மைப்புட்டி, தூரிகை, காகிதக்கட்டு, குளிராடைகள். இவ்வளவு தான் பாஷோவின் உடைமைகள்.

பாஷோ ஏன் இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். இரண்டு காரணங்கள், ஒன்று தனது நாட்டின் தொலைதூர வடக்கு மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற மடாலயங்களைக் காணுவது, இரண்டாவது மாறுபட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வது.
பாஷோவின் காலத்தில் ஜப்பானில் யுத்தமில்லை. வழிப்பறியில்லை. சமாதானம் மேலோங்கியிருந்து. ஆகவே எங்கேயும் சுதந்திரமாகப் பயணம் செய்யலாம். தனது பயணத்தின் ஊடே அவர் பௌத்த மடாலயங்களில் தங்கிக் கொள்கிறார். துறவிகளுடன் உரையாடுகிறார். மழைநாட்களில் ஓய்வெடுக்கிறார். பழைய நண்பர்களை வழியில் சந்தித்து நலம் விசாரிக்கிறார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீண்ட இந்தப் பயணம் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது

மலையின் உச்சியிலுள்ள பௌத்த ஆலயங்களையும் துறவிடங்களையும் காணுவதற்குக் கடினமான பாதையில் மலையேற்றம் செய்ய வேண்டும். அங்கே உணவு கிடைக்காது. குளிர் மிக அதிகமாக இருக்கும். அத்தனை சிரமங்களையும் எதிர்கொண்டு கடந்திருக்கிறார் பாஷோ.
நிக்கோ, டோகுகாவா ஆலயம், உங்காஞ்சி ஜென் கோயில், ஷிரகவா, அபுகுமா நதியைக் கடந்து சுககாவாவை நோக்கி செல்வது, புகழ்பெற்ற அசாகா மலைகள் வழியாக, அரண்மனை நகரங்களான அபுமிசூரி மற்றும் ஷிரோயிஷி வழியாக, கசாஜிமா மாகாணத்தை அடைந்து, நடோரி ஆற்றைக் கடந்து சென்டாய் நகருக்குள் நுழைவது, நோடா நோ தமாகவா நதி மற்றும் சூ என்று அழைக்கப்படும் பைன் காடுகளைக் கடந்து மாட்சுஷிமா தீவுகளுக்குச் செல்வது. பின்பு ஜப்பானின் மேற்கு கடற்கரையிலிருந்து சகட்டா, கிசகாட்டா மற்றும் எட்சு வரை பயணிப்பது எனப் பாஷோவின் பயணத்தில் சுமார் 40 நிறுத்தங்கள் இருந்தன
அவருடன் பயணம் மேற்கொண்ட சோரா பயண விவரங்களைத் தனது நாட்குறிப்பில் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். இந்த நாட்குறிப்பு, யசுசபுரோ யமமோட்டோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு 1943 இல் மீண்டும் வெளியிடப்பட்டது. பயணத்தின் உண்மையான தேதிகள், வானிலை மற்றும் விடுதிகளில் தங்கியிருந்த அனுபவம், வழியில் சந்தித்த மனிதர்கள் என அனைத்தையும் சோரா பதிவு செய்திருக்கிறார். பாஷோவின் நிழல் என்றே அவரைக் குறிப்பிடுகிறார்கள்.

நிக்கோ இயற்கை அழகுக்குப் பெயர் பெற்ற இடம். பாஷோவின் நாட்களில் இது ஒரு சுற்றுலா இலக்கு. எட்டாவது நூற்றாண்டிலிருந்து பௌத்த மையமாகச் செயல்பட்டு வருகிறது. பாஷோவின் காலத்திற்குச் சற்று முன்பு புத்த கோவில்கள் மற்றும் ஷின்டோ கோவில்கள் அங்கு அமைக்கப்பட்டன. இந்தக் கட்டிடங்கள் விரிவான வடிவமைப்பு மற்றும் அலங்காரத்திற்காகப் புகழ் பெற்றவை., “நிக்கோவைப் பார்க்கும் வரையில் எதையும் அற்புதம் என்று சொல்லாதீர்கள் என ஜப்பானியப் பழமொழி இருக்கிறது. பாஷோ அங்குச் சென்றிருக்கிறார். பாஷோவின் காலத்தில் அவரும் மற்ற யாத்ரீகர்களும் நடந்தே மலையேற வேண்டியிருந்தது. அவர் தனது பயணத்தில் சூரிய ஒளியில் மின்னும் இலைகளை வியந்து எழுதியிருக்கிறார்.
முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாஷோவின் பாதையில் பயணம் செய்ய ஆசைப்பட்ட லெஸ்லி இது குறித்த ஆசையைத் தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போதும் அனைவரும் வேண்டாம் என்றே தடுக்கிறார்கள். ஆனால் லெஸ்லி பிடிவாதமாகத் தனது பயணத்தைத் துவங்குகிறார்.
எப்படிப் பயணம் செய்வது, எங்கிருந்து துவங்குவது என்ற திட்டம் கூட அவரிடமில்லை. முதுகில் ஒரு பையுடன் சாலையில் நடந்து செல்லும் அவரைக் கண்டு கிராமவாசிகள் வியக்கிறார்கள். கிடைத்த வீட்டில் இரவு தங்கிக் கொள்கிறார். அவர்கள் தரும் உணவைச் சாப்பிடுகிறார். ஜப்பானிய மொழி அறிந்த காரணத்தால் மக்களுடன் எளிதாக உரையாட முடிகிறது.
லெஸ்லியின் பயணம் ஷிரகாவாவில் தொடங்குகிறது, பாஷோ மற்றும் அவரது நண்பர் கவாய் சோரா கடந்து சென்ற சோதனைச் சாவடியைத் தேடுகிறார். ஒபனாசாவாவில் பாஷோவைக் கொண்டாடும் சிலரைச் சந்திக்கிறார்; ஆர்வமுள்ள கவிஞர்கள் ஒன்றாகக் கூடி ஹைக்கூ எழுதுகிறார்கள் டோஹோகு பகுதியில் பிரகாசமான விளக்குகள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் வாழ்க்கையை எவ்வாறு அனுபவித்து வாழுவது என்பதை நன்றாக அறிந்திருக்கிறார்கள் டோக்கியோவிலும் ஜப்பானின் தெற்குப் பகுதிகளிலும் சந்தித்த எவரையும் விட மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்கள், அன்பு காட்டுகிறார்கள். என்கிறார் லெஸ்லி
பாஷோ தங்கியிருந்த சுருவோகாவில் உள்ள வீட்டைக் கண்டுபிடிக்க முயலும் லெஸ்லி சுற்றியலைகிறார். விசாரித்து அலைந்து அந்த வீட்டினைக் கண்டுபிடிக்கிறார். சிறியதொரு மரவீடு . அங்கேயிருந்த பாஷோவின் மேஜையைக் காணுகிறார். தூசி படிந்த அந்த வீட்டினை புனித ஸ்தலம் போல நினைக்கிறார்
பயண வழியில் அவருக்குப் பலரும் உதவுகிறார்கள். அவரை வரவேற்கும் கிராமவாசிகள் முதன்முறையாக வெளிநாட்டுக்காரப் பெண்ணைக் காணுகிறோம் என மகிழ்ச்சியடைகிறார்கள். ஒரு வீட்டில் வெட்டுக்கிளியை உணவாக சமைத்து தருகிறார்கள்.

“என்னிடம் திருட எதுவும் இல்லாததால், சாலையில் பயப்படத் தேவையில்லை. எனக்குப் பல்லக்கு தேவையில்லை, எங்கும் கால்களால் நடந்தே செல்கிறேன். நான் செல்ல வேண்டிய குறிப்பிட்ட பாதை என எதுவும் இல்லை, காலையில் நான் புறப்பட வேண்டிய குறிப்பிட்ட நேரமும் இல்லை. ஆகவே சுதந்திரமாகப் பயணிக்கிறேன். ஒவ்வொரு நாளும், நான் கவலைப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன: அன்று மாலை எனக்கு இனிமையான தங்குமிடம் கிடைக்குமா, என் கால்களுக்கு ஏற்றவாறு வைக்கோல் செருப்புகளை நான் பெற முடியுமா – அவ்வளவுதான். பயணத்தில் காணும் புதிய காட்சிகள் என்னுடைய மனதைத் தூண்டுகின்றன, நாளுக்கு நாள் எனது மகிழ்ச்சி அதிகமாகிறது “என்று பாஷோ குறிப்பிட்டதைத் தனது வழிகாட்டுதலாகக் கொள்கிறார் லெஸ்லி.
நவீன வாழ்க்கையின் சௌகரியங்களை உதறி இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற வேட்கையே லெஸ்லியை இயக்குகிறது

“நிக்கோவிலிருந்து நேராகப் பரந்த சமவெளியை நோக்கி குறுக்காக நடந்து செல்ல முடிவு செய்தேன். லேசாக மழை பெய்யத் தொடங்கியது, சூரியன் மறைந்து கொண்டிருந்தது, தூரத்தில் ஒரு கிராமத்தை நாங்கள் காண முடிந்தது. ஒரு விவசாயி வீட்டில் இரவு தங்கி, விடியற்காலையில் மீண்டும் சமவெளி வழியாகச் சென்றோம். வழியில் ஒரு குதிரை வயலில் மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டோம். புல் வெட்டும் ஒருவரிடம் நாங்கள் உதவி கேட்டோம், அவர் தனது குதிரையை எங்களுக்குக் குதிரையைக் கொடுத்தார்.
இரண்டு குழந்தைகள் குதிரையின் பின்னால் ஓடி வந்தார்கள் அவர்களில் ஒரு சிறுமியின் பெயர் கசானே நான் இதற்கு முன் கேள்விப்படாத அழகான பெயர்“ என்கிறார் பாஷோ
லெஸ்லி டவ்னர் தனது பயண வழியெங்கும் பாஷோவின் கவிதைகளை நினைவுகூறுகிறார். பாஷோ நடந்த பாதையெங்கும் அவரது கவிதைகளைக் கல்லில் பொறித்து வைத்திருப்பதைக் காணுகிறார் .
இயற்கையின் ஒரு அங்கமாகவே அவரது கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன என்கிறார்.
கோபோ கோயிலைப் பற்றி அதிகம் சொல்வது அதன் புனிதத்தைக் குறைப்பதாக அமையும் என்கிறார் பாஷோ.
லெஸ்லியின் புத்தகத்தைப் பற்றி விரிவாகச் சொல்வதும் அதன் வசீகர அனுபவத்தை குறைப்பதாகவே அமையும்.
•••
.
எஸ்.வி.ஆர் – சந்திப்பு.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கோத்தகிரி சென்று உடல் நலமற்றிருந்த தோழர் எஸ்.வி. ஆர் அவர்களைச் சந்தித்தேன். தாங்க முடியாத வலியுடன் போராடியபடி படுக்கையில் இருந்தார். அவரது கட்டிலின் அருகிலே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.

உரையாடல் துவங்கிய அரைமணி நேரத்தில் அவரிடம் உற்சாகம் ஏற்பட்டு எழுந்து அமர்ந்து கொண்டார். பேச்சும் எழுத்தும் தான் அவருக்கான மருந்து
எங்களுக்காக மதிய உணவு தயாரிக்கச் சொன்னார். நல்ல உணவளித்தார்கள். நான்கு மணி நேரம் அவருடன் இருந்தேன்.

வலியின் உச்சத்தில் வாழ்ந்து வந்த போதும் தொடர்ந்து படிப்பு. எழுத்து, இணையவழி உரைகள் என இயங்கி வருவது அவரது நிகரற்ற மனவலிமையாகும்.
எஸ்.வி.ஆர் சர்வதேச இலக்கியங்களைத் தேடித்தேடி வாசிக்கக்கூடியவர். மேற்கத்திய இசையை விரும்பிக் கேட்பவர். சமகால அரசியல் மற்றும் சமூகப்பிரச்சனைகள் குறித்து ஆழ்ந்து அறிந்தவர். அவரது நினைவாற்றல் வியப்பூட்டக்கூடியது.
ஸரமாகோ: நாவல்களின் பயணம் என்ற அவரது புதிய புத்தகத்தில் ஸரமாகோவின் அத்தனை நாவல்களையும் ஆழ்ந்து படித்துச் சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார். அந்த நூல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று பாராட்டிச் சொன்னேன். மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு அதை எழுதுவதற்காக எவ்வளவு புத்தகங்களை வாசித்தார் என்பதையும் எப்படி அந்த கட்டுரைகளை எழுதினார் என்பதையும் விவரித்தார்.

ஸரமாகோ பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் பார்த்திருக்கிறேன். அதைப்பற்றியும் உரையாடினேன். அவரும் அந்த ஆவணப்படத்தைப் பார்த்திருக்கிறார். எஸ்.வி.ஆர் அளவிற்கு ஸரமாகோவை யாராவது தமிழ்நாட்டில் வாசித்திருப்பார்களா என்பது சந்தேகமே.

ரஷ்யப்புரட்சி இலக்கியச் சாட்சியம் புதிய பதிப்பு. சமகால ஐரோப்பிய நாவல்கள். அந்நியமாதல், ஆர்மீனிய வரலாறு. உலக சினிமா, பெரியார் மற்றும் அம்பேத்கர் பற்றிய அவரது ஆய்வுகள். The Elephant’s Journey நாவல் எனப் பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். சார்த்தர் பற்றி அன்று விரிவாகப் பேசினார். இவ்வளவு ஞானமும் புரிதலும் கொண்ட ஒரு படைப்பாளியைக் காண்பது அரிது.
அவரிடமிருந்து தொடர்ந்து தீவிரமாக செயல்படுவதற்கான சக்தியினையும் புதிய கனவுகளுக்கான நம்பிக்கையினையும் பெற்றுக் கொண்டு திரும்பினேன்.
June 5, 2022
சாம்பல் முகங்கள்
ஆறுவயதான கர்ட் தனது அத்தை எலிசபெத்துடன் டிரெஸ்டனில் நடைபெறும் ஓவியக்கண்காட்சிக்குச் செல்வதுடன் NEVER LOOK AWAY படம் துவங்குகிறது. ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஃப்ளோரியன் ஹென்கெல் வான் டோனர்ஸ்மார்க் இயக்கியுள்ள படம்

அந்தக் கண்காட்சி கர்ட்டிற்கு விநோதமாகயிருக்கிறது வருகை தந்துள்ள மனிதர்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் விசித்திர ஓவியங்கள், புதிரான நவீன சிற்பங்கள். காவல்காக்கும் ராணுவத்தினர் என அந்த இடமும் மனிதர்களும் மிரட்சி கொள்ளச் செய்கின்றன
ஆனால் எலிசபெத் கண்காட்சியில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஒவியங்களை ரசிக்கிறாள். அவளது அழகை பலரும் ரசிக்கிறார்கள். அதை அவள் அறிந்துமிருக்கிறாள்.

கலை என்ற பெயரில் தேசமெங்கும் மனநோய் பெருகிவருகிறது. குறியீடுகள் அரூபங்கள் என ஓவியர்கள் வரைந்தவை யாவும் அர்த்தமற்ற கலைப்பொருட்கள் எனக் கருதிய நாஜி, கலைஞர்களை அவமானப்படுத்தும் விதமாகச் சீரழிந்த கலைக்காட்சிகளை ஏற்பாடு செய்தார்கள். அப்படி ஒரு கண்காட்சியினைத் தான் எலிசபெத்தும் கர்ட்டும் பார்வையிடுகிறார்கள்
எதை அதிகாரம் விலக்கவும் ஒடுக்கவும் நினைக்கிறதோ அதிலிருந்தே கர்ட் தனது கனவுகளைத் துவங்குகிறான்.

கண்காட்சியில் இடம் பெற்ற, யூஜென் ஹாஃப்மேனின் நவீன சிற்பமான கேர்ள் வித் ப்ளூ ஹேரைக் கண்டு கர்ட் மயங்கி நிற்கிறான் . சிற்பத்தின் முன்பு அவன் நிற்கும் தருணம் அழகானது. பேரழகியான அவனது அத்தை காடின்ஸ்கி ஓவியத்தின் முன்பு நின்று ரசிக்கிறாள். வெளியே வரும் போது கர்ட்டிடம் அதை தான் மிகவும் விரும்புவதாகத் தெரிவிக்கிறாள். வெளிப்படையாக தங்கள் விருப்பத்தை காட்ட முடியாத சூழல் இருந்த காலமது.
கர்ட் பர்னெர்ட்டின் கலைவாழ்வும் காதல் வாழ்வும் இரு சரடுகளாகப் பின்னி வளரும் இந்தத் திரைப்படத்தில் நாஜி ஆட்சியிலும் அதன் பிந்திய காலத்திலும் கலைஞர்களின் வாழ்வு எவ்வளவு நெருக்கடிகளைக் கொண்டிருந்தது என்பது விவரிக்கப்படுகிறது
ஓவியக் கண்காட்சியிலிருந்து அவர்கள் வீடு திரும்பும் போது அத்தையின் விநோத நடவடிக்கை ஒன்றை கர்ட் காணுகிறான்.
இரவில் நிறுத்திவைக்கப்பட்ட பேருந்துகளின் ஹார்ன்களை ஒரே நேரத்தில் அடிக்குமாறு ஒட்டுநர்களிடம் வேண்டுகிறாள் எலிசபெத். அவளுக்காகப் பேருந்தின் ஒலி எழுப்பப்படுகிறது. அந்த விநோத சங்கீதத்தை ஆனந்தமாக ரசிக்கிறாள் எலிசபெத். அந்தக் காட்சியில் அவள் ஒரு சிறுமியைப் போலவே நடந்து கொள்கிறாள். கண்காட்சி முடித்து திரும்பும் சிறுவன் பெரிய ஆள் போல நடப்பதும் அவள் சிறுமியாகிவிடுவதும் சுவாரஸ்யமான முரண்.

கலையின் வழியே தான் தனது மீட்சியை அடைய முடியும் என நம்புகிறாள் எலிசபெத். இன்னொரு காட்சியில் வீட்டில் நிர்வாணமாக ப்யானோ வாசிக்கிறாள். அதைக் கண்டு கர்ட் வியப்படைகிறான். அவளுக்கு மனச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகக் கருதிய குடும்பத்தினர் மனநலக் காப்பகத்தில் ஒப்படைக்கிறார்கள். மருத்துவமனை ஊழியர்கள் அவளை இழுத்துக் கொண்டு போவதை அதிர்ச்சியுடன் காணுகிறான் கர்ட்.

அக்காட்சியில் கண்ணை மூடிக் கொள்ளும் கர்ட்டிடம் “Never Look Away,” என்று சொல்கிறாள் எலிசபெத். அது தான் படத்தின் மையக்கரு.
நாஜி ராணுவத்தின் கட்டாயக் கருத்தடை மற்றும் கருணைக்கொலை பற்றிப் பேசும் இப்படம் அதற்குக் காரணமாக இருந்த டாக்டர் கார்ல் சீபாண்ட் தனது கடந்தகாலத்தை மறைத்துக் கொண்டு எவ்வாறு குற்றவுணர்வே இல்லாமல் நடந்து கொள்கிறார் என்பதையும் விவரிக்கிறது
மனநல மருத்துவமனையில் எலிசபெத் நாஜி SS மருத்துவப் படையின் உயர் பதவியில் இருக்கும் பேராசிரியர் கார்ல் சீபாண்ட் வசம் ஒப்படைக்கப்படுகிறார். அவர் கட்டாயக் கருச்சிதைவு மற்றும் கருணைக்கொலையினை அரங்கேற்றுபவர். அவள் தனக்கு மனச்சிதைவு இல்லை. தன்னை வெளியே விட்டுவிடும்படி மன்றாடுகிறாள். அவரைத் தந்தை போல நினைப்பதாகக் கண்ணீர் விடுகிறாள். ஆனால் சீபாண்ட் மனம் இரங்கவில்லை. அவளைக் கொல்வதற்கு ஆணையிடுகிறார்.
கர்ட்டின் வாழ்க்கையிலிருந்து ஒரு எலிசபெத் விடைபெறுகிறாள். இன்னொரு எலிசபெத் எல்லி என்ற பெயரில் அவன் வாழ்வில் நுழைந்து அவனை வழிநடத்துகிறாள். இந்த இரண்டு எலிசபெத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள். அழகாக இணைக்கப்பட்ட கண்ணியது
நாஜிகளின் காலம் முடிவடைகிறது. ரஷ்யச் செம்படை நகரை ஆக்கிரமிக்கிறது. கார்ல் சீபாண்ட் ரஷ்ய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுச் சிறை முகாமில் அடைக்கப்படுகிறார். விசாரணையின் போது தன்னைப் புரொபசர் என அழைக்க வேண்டும் என்கிறார் சீபாண்ட். அதற்காக அடிவாங்குகிறார்.
கைதியாக இருந்த போதும் தான் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என நினைக்கிறார் சீபாண்ட். ஆனால் செம்படையினர் நாஜி எஸ்எஸ் பிரிவின் தலைமை யார் என்பதை அறிந்து கொள்ள அவரை துன்புறுத்துகிறார்கள்.
ஒரு நாள் செம்படை அதிகாரியின் மனைவி சிக்கலான பிரசவத்தில் அலறுவதைக் கேட்டு உதவி செய்யச சீபாண்ட் முன் வருகிறார். அவரது உதவியால் குழந்தை நலமாகப் பிறக்கிறது.

இதில் மகிழ்ச்சியடைந்த செம்படை அதிகாரி சீபாண்டை சிறையிலிருந்து விடுவித்துப் பதவி கொடுத்துக் கௌரவப்படுத்துகிறார். கார்ல் சீபாண்ட்டின் வாழ்க்கை மாறுகிறது. தான் ஒரு நாஜி அதிகாரி என்பதை மறைத்துக் கொண்டு புதிய பதவியில் புதிய அடையாளத்துடன் வாழ ஆரம்பிக்கிறார்.
இளைஞனான கர்ட் ஒவியம் பயில விரும்பி டிரெஸ்டன் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் சேருகிறான் அங்கு எல்லி என்று அழைக்கப்படும் இளம் ஆடை வடிவமைப்பு மாணவியைக் காணுகிறான். அவளது அழகில் மயங்கி காதலிக்கிறான். எல்லியை முதன்முறையாக அவன் சந்திக்கும் காட்சியில் பேப்பரில் ஆஷ்ட்ரே செய்து தருகிறான் கர்ட்.
அவள் பேராசிரியர் கார்ல் சீபாண்ட் டின் மகள் என்பதை அறிந்து கொள்கிறான். அவளும் கர்ட்டினை காதலிக்கிறாள் ஓவியக் கல்லூரியில் நடக்கும் அவர்களின் காதல் பரபரவென நகர்ந்து செல்கிறது.
டிரெஸ்டன் அகாதமியில் சோசலிச யதார்த்தவாதம் மட்டுமே கலையாகக் கருதப்படுகிறது. மற்ற கலைப்படைப்புகளை அவர்கள் அனுமதிப்பதில்லை. ஆகவே கர்ட் தானும் சோசலிச யதார்த்த வகை ஓவியங்களை வரைகிறான். சுவரோவியங்களைத் தீட்டுகிறான்.
எல்லியின் மீதான காதலில் அவளது வீட்டிலே ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்குகிறான். இவர்களின் காதலை எல்லியின் அம்மா அறிந்து கொண்டிருக்கிறாள். கர்ட்டும் எல்லியும் நெருங்கிப் பழகுகிறார்கள். அதைச் சீபாண்ட் விரும்பவில்லை. அவர்கள் காதல் உறவைத் துண்டிக்க முயலுகிறார். ஆனால் எல்லியின் பிடிவாதத்தால் அவர்கள் திருமணம் நடந்தேறுகிறது.
சீபாண்டினை கர்ட் ஒவியம் வரையும் போது அவர் தான் எப்படி காட்சியளிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். அவரது கறார்தன்மை அழகாக படத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
கார்ல் சீபாண்ட்டினை அது வரை பாதுகாத்து வந்த செம்படை அதிகாரி மாஸ்கோவிற்கு மாற்றப்பட்டதால் தன் மீதான கடந்தகால வழக்குக்குப் பயந்து, சீபாண்ட் மேற்கு ஜெர்மனிக்குத் தப்பி ஓடுகிறார்.
அந்தக் காட்சியில் செம்படை அதிகாரி உண்மையை அறிந்த போதும் எப்படிச் சீபாண்டிற்கு உதவுகிறார் என்பதும் அவரது நன்றியுணர்வும் நேர்த்தியாக வெளிப்படுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கர்ட் மற்றும் எல்லி மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் செல்கிறார்கள். அங்கேயுள்ள கலைக்கூடத்தில் இணைந்து பணியாற்றுகிறான் ஆனால் அங்கே நடக்கும் கலைப்பரிசோதனைகளை அவனால் ஏற்கமுடியவில்லை. வழியில்லாமல் அவனும் செயற்கையான கலைப்படைப்புகளை உருவாக்குகிறான்.
உணவகத்தில அவனைச் சந்திக்கும் சீபாண்ட் அவனால் ஒரு போதும் கலைவாழ்வில் வெற்றி பெற முடியாது என்று சொல்கிறார். மனச்சோர்வுடன் கலைக்கூடம் திரும்பும் கர்ட் எதையும் வரைய முடியாமல் தடுமாறுகிறான். அவமானம் தான் அவனை புதிய படைப்பை உருவாக்க வைக்கிறது.
புதிய கலைவெளிப்பாட்டினை உணரும் கர்ட் அதில் தீவிரமாகச் செயல்பட ஆரம்பிக்கிறான். உண்மையும் கற்பனையும் ஒன்று கலக்கிறது. இந்தப் புதிய வகை ஓவியத்திற்காகப் பாராட்டுப் பெறுகிறான். கலை உலகம் அவனை அங்கீகாரம் செய்ததா, கடந்தகாலத்தின் உண்மைகள் அவனை என்ன செய்தன என்பதைப் படத்தின் இறுதிப்பகுதி விவரிக்கிறது
மூன்று மணி நேரத்திரைப்படமிது. ஓவியங்களின் நேர்த்தியுடன் கவித்துவத்துடன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். சீபாண்ட்டாக நடித்தவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் அபாரம்.
ஜெர்மன் ஓவியர் ஜெர்ஹார்ட் ரிக்டரின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது

கர்ட் இரண்டுவகையான கலைப்பயிற்சிகளைப் பெறுகிறான். ஒன்று சித்தாந்தம் வழிகாட்டும் கலை. மற்றது வெறும் கற்பனையின் வெளிப்பாடான கலை. இரண்டிலும் அவனால் வெற்றிபெற முடியவில்லை. முடிவில் இரண்டும் இணைந்த புதிய கலையாக்கம் ஒன்றை அவனே உருவாக்குகிறான். வெற்றிபெறுகிறான்.
உண்மைக்கும் கலைக்குமான உறவினைப் பேசும் இப்படம் வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மீது வெளிச்சமிடுகிறது.
June 2, 2022
மதகுரு 3 – ஓநாயும் நாவலும்
மதகுரு நாவலில் ஓநாய்களின் கூட்டம் கெஸ்டாவை தாக்கும் காட்சி இடம்பெறுகிறது. அபாரமான பகுதியது.

பணக்காரக் கிழவன் பிபெர்க்கும் அழகி அன்னா ஸ்டார்ண்யேக்கும் திருமணம் அறிவிக்கப்படுகிறது. அதைக் கெஸ்டா விரும்பவில்லை. அன்னா ஏன் இப்படி ஒரு கிழவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆத்திரப்படுகிறான். அன்னாவை மணந்து கொள்ள வேண்டும் எனப் பெர்டினாண்ட் பிரபு ஆசைப்படுகிறான்
அன்னாவின் திருமணத்தை ஏற்பாடு செய்தவள் மதகுருவின் மனைவி ஸ்வார்ட்டோ. அவள் தான் பணக்காரக் கிழவனைத் திருமணம் செய்தால் வசதியாக வாழலாம் என அன்னாவின் மனதை மாற்றியவள்.
பெர்டினாண்ட் மணந்து கொள்வதற்காக அன்னாவை தூக்கி வருகிறேன் என்று கெஸ்டா வாக்குக் கொடுக்கிறான். அப்படிக் கிளம்பும் போது பரூஉக்ளா அவனிடம் ஒரு நாவலைப் படிக்கத் தருகிறாள். நீ தோற்றுவிட்டால் இந்த நாவல் உனக்குத் தேவைப்படும் என்கிறாள்.
பின்ஜுவான் என்ற குதிரை பூட்டிய வண்டியில் செல்கிறான் கெஸ்டா. அவனுடன் பின்கிரெட் என்ற நாயும் உடன் செல்கிறது

••
கிழவனைத் திருமணம் செய்து கொள்ளப்போகும் தனது முடிவில் அன்னா உறுதியாக இருக்கிறாள். ஆகவே அவளை அவமானப்படுத்த நினைத்த உல்லாச புருஷர்கள் நடனவிருந்தில் எவரும் அவளுடன் சேர்ந்து ஆடக்கூடாது என்று முடிவெடுக்கிறார்கள்.
பத்து நாட்டியம் முடியும் வரை ஒருவரும் அவளைச் சேர்ந்து ஆட அழைக்கவில்லை. இந்த அவமானத்தை அன்னாவால் சகிக்க முடியவில்லை. பதினோறாவது நடனத்தின் போது அசடு வழிந்த வாலிபன் அவளைத் தன்னோடு ஆட வருமாறு அழைக்கிறான். அதை அன்னா ஏற்கவில்லை.
கிழட்டுப் பில்பெர்க்கை அவள் முத்தமிட வேண்டும் என விருந்தினர்கள் கூச்சலிடுகிறார்கள். இதற்குப் பதிலாக நான் சிறிதும் விரும்பாத ஒரு இளைஞன் கன்னத்தில் அறைவேன் என்று கூறிய அன்னா கெஸ்டாவின் கன்னத்தில் அறைகிறாள். இந்த அடி தான் அவர்கள் காதலுக்குக் காரணமாகிறது.
கெஸ்டா அவளைக் கோவித்துக் கொள்ளவில்லை. தனியே சந்திக்கும்படி கேட்டுக் கொள்கிறான். அந்தச் சந்திப்பில் தான் எவரைத் திருமணம் செய்து கொண்டால் அவனுக்கு என்ன என அன்னா கோபம் கொள்கிறாள். அவளைப் போன்ற அழகி விஷயத்தில் அப்படி விட்டுவிட முடியாது எனக் கூறும் கெஸ்டா பேசிப்பேசி காதல் வசப்படுத்துகிறான். அன்னா அவனைக் கட்டி அணைக்கிறாள்
தனது திருமணத்தை முறித்துக் கொண்டு கெஸ்டாவோடு ஒடிவிட முடிவு செய்கிறாள் . அதன்படி அவர்கள் ஒரு குதிரைவண்டியில் பயணம் செய்கிறார்கள். ஏக்பி பண்ணைக்குப் போய்விட்டால் போதும் என்று வேகமாக வண்டி ஒட்டுகிறான் கெஸ்டா. பெர்டினாண்ட்டினை ஏமாற்றியதைப் பற்றியோ கிழபில்பெர்க்கை ஏமாற்றியதைப் பற்றியோ அவனுக்கு வருத்தமில்லை.

அவர்களின் பயண வழியில் எதிர்பாராத விதமாக ஓநாய்கள் குறுக்கிடுகின்றன செல்மா லாகர்லேவ் ஒநாய்களின் தாக்குதலை அற்புதமாக எழுதியிருக்கிறார்.
கெஸ்டாவின் நாயான பின்கிரெட் ஓநாய்களைக் கண்டு பயப்படுகிறது. அவனது குதிரையும் ஓநாய் கூட்டத்தைக் கண்டு மிரளுகிறது.
தன்னுடைய விருப்பம் நிறைவேறக் கூடாது என நினைத்துத் தான் கடவுள் ஓநாய்களை அனுப்பியிருப்பதாகக் கெஸ்டா நினைக்கிறான். காதலின் பெயரால் எதையும் செய்யத் தயாராகயிருக்கிறேன் என்று அவன் ஓநாய்களின் மீது சாட்டையை வீசி துரத்துகிறான்.
ஒநாய்கள் அந்த வண்டியைத் தொடர்ந்து வருகின்றன. அவர்கள் மீது பாய்ந்து தாக்குகின்றன. இதனால் குதிரை மிரளுகிறது. இந்தத் தாக்குதலிலிருந்து தப்ப முடியாதோ என அன்னா பயப்படுகிறாள். வண்டியை வேகமாக ஒட்டுகிறான் கெஸ்டா
காட்டு ஓநாய்கள் குறுக்கு வழியாக முன்னேறி அவர்களைத் தாக்குகின்றன.

கெஸ்டா கடவுளையும் சாத்தானையும் ஒரே நேரத்தில் அழைக்கிறான் தனது குதிரையைச் சாட்டையால் அடித்து வேகப்படுத்துகிறான். ரேக்ளாவின் பின்னால் பச்சைக் கம்பளியைக் கட்டி பறக்கவிடுகிறான். காற்றில் அது படபடக்கவே ஓநாய்கள் அதைக் கண்டு பயப்படுகின்றன. காற்றில் அடிக்கும் கம்பளி நம் முன்னால் காட்சியாகத் தோன்றி ஒளிர்கிறது.
தொலைவில் பெர்கா பண்ணையில் எல்லா விளக்குகளும் எரிவது அவன் கண்ணிற்குத் தெரிகிறது. ஓநாய்கள் பின்தொடர்கின்றன. குதிரைவண்டியை கெஸ்டா திருப்புகிறான். வெண்மையான கோரைப் பற்களுடன் ஓநாய்கள் அவனை நோக்கிப் பாய்கின்றன. தன் மீது பாயும் ஓநாயின் வாயில் ப்ரூஉக்ளா கொடுத்த நாவலைத் திணிக்கிறான் கெஸ்டா.
ஓநாயின் வாயில் ஒரு நாவல் திணிக்கபடும் அந்தக் காட்சி என்னைப் பரவசப்படுத்தியது. கிளர்ச்சியூட்டும் காட்சியது. ப்ரூஉக்ளா போன்ற இளம்பெண்கள் பகற்கனவின் வடிவம் போலவே நாவலை நினைக்கிறார்கள். ஆகவே அவள் நாள் முழுவதும் நாவல் படித்தபடியே இருக்கிறாள்.
மாடம் தே ஸ்டேலின் கொரின் நாவலை ஓநாயின் வாயில் கெஸ்டா திணிப்பது சர்ரியலிச ஓவியம் போலிருக்கிறது. நாவலின் வழியே உருவான காதல் கனவுகள் அர்த்தமற்றவை என்பதைத் தான் இந்தக் காட்சி வெளிப்படுத்துகிறதா.
கெஸ்டாவின் காதலுக்கு மனிதர்கள் எதிரியில்லை. ஆனால் எதிரியாக ஓநாய்கள் தோன்றுகின்றன. அது தான் செல்மாவின் அபார கற்பனை. சாவிற்கும் வாழ்விற்குமான போராட்டமாக அந்தத் தாக்குதல் சித்தரிக்கப்படுகிறது.

ஓநாய்களிடமிருந்து தப்பிப்போக ஒரே வழி பெர்டினாண்ட் பண்ணைக்குப் போவது தான் எனக் கெஸ்டா முடிவு செய்கிறான். அது தான் கடவுளின் தீர்ப்பு. அவன் விரும்பும் காதல் ஒரு போதும் நிறைவேறாது. இதைத் தீர்க்கமாக உணர்ந்து பெர்டினாண்ட் பண்ணைக்குப் போகிறான். அன்னாவை அவர்களிடம் ஒப்படைக்கிறான்.
பெர்டினாண்ட்டினை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அன்னாவும் உணருகிறாள். தியாகியைப் போலக் கெஸ்டாவிடம் பேசுகிறாள். விதி நாம் ஒன்று சேருவதை விரும்பவில்லை என்று சொல்கிறான் கெஸ்டா.
தனது பாவச் செயல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது , கடவுளின் ஒங்கிய கையே நம்மைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது என்றும் சொல்கிறான்.
விடைபெறும் போது என்னைச் சீக்கிரமே மறந்துவிடுவாயா அன்னா என்று ஆதங்கமாகக் கேட்கிறான்
அதற்கு அவள் போ கெஸ்டா போ. நாமும் மனிதர்கள் தானே என்கிறாள்.
காதலை மறந்து வாழ்வில் கரைந்து போவது தானே மனித வாழ்க்கை. இதில் அன்னா மட்டும் விதிவிலக்கா என்ன.
கெஸ்டாவின் கேள்வியில் அவனது ஆழ்ந்த காதல் வெளிப்படுகிறது.
குதிரைவண்டி புறப்படும் போது அவன் ஓநாய்களை மறந்துவிட்டாயா என்று கேட்கிறான்.
ஓநாய்களை என்னால் ஒரு போதும் மறக்கமுடியாது. இனி அவை என்னைத் தேடி வராது என்கிறாள் அன்னா
விதி எனும் ஓநாய் தான் செய்ய வேண்டிய வேலையைச் செய்து முடித்துவிட்டது. இனி அன்னாவின் வாழ்வில் அது குறுக்கிடாது.
ஒநாய்குலச்சின்னம் நாவலில் இது போல ஓநாய்களின் வேட்டைக்காட்சி ஒன்று இடம் பெறுகிறது. திரைப்படமாக்கப்பட்ட போது அந்தக் காட்சியைச் சிறப்பாகப் படமாக்கியிருப்பார்கள். திரையில் கண்ட அந்த வியப்பை விடவும் எழுத்தின் வழியே அபாரமான பாய்ச்சலை உருவாக்கியிருக்கிறார் செல்மா.
ஓநாய்கள் பைபிளில் தீமையின் உருவமாகச் சித்தரிக்கப்படுகிறது. மந்தைகளைத் தாக்கும் ஓநாய் பற்றிப் பைபிள் குறிப்பிடுகிறது. இயேசு மேய்ப்பனாகச் சித்தரிக்கப்படுகிறார், ஆட்டு மந்தையை ஓநாய்களிடமிருந்து பாதுகாக்கிறார். அந்த வகையில் விவிலியத்தில் ஆடும் ஓநாயும் உருவகமாகச் சித்தரிக்கப்படுகிறது.
ஓநாயைப் போலச் சுதந்திரமாக இச்சையின் பாதையில் செல்லும் கெஸ்டாவை காட்டு ஓநாய்கள் தடுத்து நிறுத்துகின்றன என்பதை வாசிக்கையில் மனிதனின் ஆசையும் கடவுளின் விருப்பமும் மோதிக் கொள்வதாகவே தோன்றுகிறது

கிழட்டுப் பிபெர்க்கை திருமணம் செய்ய முடிவு எடுத்த அன்னா ஏன் சட்டென மனம் மாறிவிடுகிறாள். அந்தத் திருமணம் அவள் விரும்பியதில்லை. அது நிறுத்தப்படக்கூடும் என அவளும் நினைத்திருப்பாள். கெஸ்டா வழியாக அது நடந்தேறுகிறது.
அன்னாவை அழைத்துக் கொண்டு போகும் முயற்சியில் சிண்ட்ரோம் உதவி செய்கிறான். அவனுக்கு நடக்கப்போவது தெரிந்திருக்கும் தானா. இதுவும் சாத்தானின் விளையாட்டா.
கெஸ்டாவை எவரும் திருமணம் செய்து கொள்ள முடியாது. அவனைக் காதலிக்க மட்டுமே முடியும் என்று நாவலின் ஒரு இடத்தில் செல்மா லாகர்லேவ் சொல்கிறார்.
இந்தக் கருஞ்சுழியிடமிருந்து கெஸ்டா மீள முடியவில்லை.
பணக்கார கிழவனைத் திருமணம் செய்து கொள்ள ஏன் அன்னா தயாராகிறாள். இது தான் ஏக்பி சீமாட்டிக்கு நடந்தது. அதே நிகழ்வின் மறுவடிவம் போலத் தான் அன்னாவின் கதை சொல்லப்படுகிறது.
மரியாள் ஒருவிதமாக அவமானப்படுத்தப்படுகிறாள் என்றால் அன்னா வேறு விதமாக அவமானப்படுத்தபடுகிறாள். இருவரும் காதலின் புதிர் பாதையில் சுழலுகிறார்கள். விரும்பிய வாழ்க்கை எவருக்கும் கிடைப்பதில்லை. கெஸ்டா இந்த உலகின் நிகரற்ற பலசாலி ஆனால். மிகப் பலவீனமானவனும் அவனே என்கிறார் செல்மா.

நிஜம். காதலே அவனைப் பலசாலியாக்குகிறது. காதலே அவனைப் பலவீனமாக்குகிறது. விதியின் பகடையாட்டத்தில் கெஸ்டா தோற்றுக் கொண்டேயிருக்கிறான். செல்மாவின் கற்பனையில் நிஜமும் மாயமும் போட்டி போடுகின்றன. வெல்லமுடியாத ஒரு ஓநாயைப் போலவே எழுத்தில் பாய்ச்சலை நிகழ்த்துகிறார் செல்மா லாகர்லேவ்.
•••
June 1, 2022
மதகுரு- 2 தந்தையின் கோபம்
தந்தைக்கும் மகளுக்குமான உறவில் ஏற்படும் விரிசலையும் அதனால் ஏற்படும் கோபத்தையும் மதகுரு நாவலில் செல்மா லாகர்லெவ் மிகவும் நுட்பமாக எழுதியிருக்கிறார்.

கெஸ்டா பெர்லிங் தனது மகள் மரியாளைக் காதலிக்கிறான். மகளும் அவனுடன் நெருங்கிப் பழகுகிறாள் என அறியும் மெல்கியார் இதை விரும்பாமல் ஆத்திரமடைகிறார்.
அந்தக் கோபத்தினாலே மகளைச் சூதாட்டப்பொருளாக வைக்கிறார். சூதில் கெஸ்டா வென்றுவிடவே மரியாளை அவனிடமே விட்டுவிட்டு ஏக்பி மாளிகையை விட்டு வெளியேறுகிறார்.
அன்றிரவு நடந்த நடனவிருந்தில் கெஸ்டாவும் மரியாளும் கைகோர்த்து ஆடுகிறார்கள். நள்ளிரவைத் தாண்டியும் நடனம் தொடருகிறது. தந்தை தன்னைக் கைவிட்டுப் போனதை அறிந்த மரியாள் வீடு திரும்பக் குதிரைவண்டி இல்லாமல் நடந்தே போகிறாள்.
அவளது செயலை விவரிக்கத் தன்னழிவு என்ற சொல்லை க.நா.சு. பயன்படுத்துகிறார்

தந்தையின் மீதான கோபத்தில் அவள் தன்னை அழித்துக் கொள்கிறாள். கொட்டும் பனியின் ஊடாக நள்ளிரவில் நீண்ட தொலைவில் இருக்கும் தன் வீட்டை நோக்கி ஓடுகிறாள். தந்தை வீட்டுக்கதவை மூடியதோடு பணியாளர்களையும் திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். தந்தையின் மீதான கோபத்தைக் காட்ட வீட்டுவாசலில் வெறுந்தரையில் படுத்துக் கிடக்கிறாள் மரியாள். மரணம் தன்னைத் தழுவிக் கொள்ளட்டும் என்று வேண்டுகிறாள்.
பின்னிரவில் கெஸ்டா அங்கே வந்து அவளைக் காப்பாற்றுகிறான். எதற்காகக் கெஸ்டா அங்கே வருகிறான் என்பதற்கு விநோதமான காரணம் ஒன்றை செல்மா சொல்கிறார்.
ஏக்பி பண்ணையில் நடந்த நடனவிருந்திலிருந்து விடைபெற்றுப் போன அழகிகளின் வீட்டைத் தேடிப் போய் உறக்கத்திலிருக்கும் அவர்களை எழுப்பி அவர்களைப் புகழ்ந்து பாட வேண்டும் என்பதே கெஸ்டாவின் ஆசை.
எந்த இரவிலும் இளம்பெண்கள் தங்களைப் புகழ்ந்து பாடுவதை விரும்புவார்கள் என்கிறான் கெஸ்டா. இதை ஏற்றுக் கொண்ட உல்லாச புருஷர்கள் இளம்பெண்களைத் தேடிச் சென்று அவர்கள் வீட்டின் முன்பாக நின்று புகழ்ந்து பாடுகிறார்கள்.
இப்படிச் செல்லும் போது தான் மரியாளின் வீட்டிற்கு வருகிறார்கள். அங்கே மரியாள் பனியில் உறைந்து கிடப்பதைக் கண்ட கெஸ்டா கோபம் கொள்கிறான். அவளது வீட்டுக் கதவை உடைக்க முற்படுகிறான். மருத்துவரை அழைத்துவர ஆள் அனுப்புகிறான். பின்பு பனிக்கட்டியை எடுத்து அவள் காலில் தேய்ந்து உணர்வு வரச் செய்கிறான். இனி அவள் தனது மனைவி என முடிவு செய்து மரியாளை தனது கோச் வண்டியில் அழைத்துச் செல்கிறான்
மறுநாள் நடந்த நிகழ்வுகளைக் கேள்விப்படும் மெல்கியார் கோபத்தின் உச்சத்தை அடைகிறார். அவள் நினைவாக வீட்டிலிருக்கும் பொருட்கள் அத்தனையும் ஏலத்தில் விடுவதெனத் தீர்மானிக்கிறார்.
இது தான் வெறுப்பின் உச்சம்.
மகளின் மீதான கோபத்தில் ஒரு தந்தை அவளது பொருட்களை வீட்டை விட்டு வீசி எறிவதையும். தீயிட்டு எரிப்பதையும் அறிந்திருக்கிறோம். ஆனால் மெல்கியார் அவள் ஆசையாக வைத்திருந்த எல்லாப் பொருட்களையும் ஏலத்தில் விட முடிவு செய்கிறார். யாரோ ஒருவன் அதை அனுபவிக்கட்டும் என நினைக்கிறார். அந்த வீட்டில் மகளின் நினைவு படியாத பொருட்களே இல்லை.
ஆகவே மரச்சாமான்கள். உடைகள். படுக்கை, கட்டில். நாற்காலி தலையணை உறை விளையாட்டுப் பொம்மைகள். அலங்காரப் பொருட்கள். தேநீர் கோப்பைகள் வரை அத்தனையும் அள்ளி வந்து அறையில் குப்பை போலப் போடுகிறார். அப்படியும் அவரது கோபம் அடங்கவில்லை.
எந்தப் பொருளும் அவளுக்கு இனி உபயோகமாகக் கூடாது என்பதே அவரது ஒரே நோக்கம். இந்தச் செயலை மனைவி தடுக்கக் கூடும் என அவளைச் சமையலறையில் அடைத்துப் பூட்டிவிடுகிறார்.
ஏலம் போடுவதற்காக மகளின் பொருட்களை எடுக்கும் போது அவளது நினைவு அதிகமாகிறது. ஆகவே அவரது கோபமும் அதிகமாகிறது
தனது வீட்டில் இப்படி ஒரு ஏலம் நடப்பதைப் பற்றி மரியாள் அறிந்திருக்கிறாள்.
அவளால் அதைத் தடுக்க முடியவில்லை.

இந்த ஏலத்தில் கிடைக்கும் மொத்த பணத்தையும் தனது தந்தை ஒரு மூட்டையாகக் கட்டி லாங்பென் ஏரியில் போட்டுவிடப்போகிறார் என்று கேள்விப்படுகிறாள். அது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது
தந்தையைப் பிரிந்து கெஸ்டாவோடு தங்கிய மரியாளை அம்மை நோய் தாக்குகிறது. அவள் படுக்கையிலே கிடக்கிறாள். பேரழகியான அவளது முகம் உருமாறுகிறது. அம்மை தழும்புகள் கொண்ட முகத்தைக் காண அவளுக்கே பிடிக்கவில்லை. கறுத்துப் புள்ளிகள் கொண்ட தனது முகத்தை உலகம் இனி காணக்கூடாது என நினைக்கிறாள்.
இந்த நிலையில் தன்னைக் கெஸ்டா திருமணம் செய்து கொள்வானா என்று சந்தேகம் வருகிறது.தனது எதிர்காலம் பற்றிக் குழப்பமடைகிறாள். இப்படிக் கோரமான முகத்துடன் ஏன் உயிர்வாழ வேண்டும் என நினைக்கிறாள். மனக்குழப்பமும் கவலையும் நாளுக்கு நாள் அதிகமாகிறது. இந்தக் கோலத்தில் இருக்கும் தன்னையும் உல்லாச புருஷர்கள் கேலி செய்வார்கள் என்ற நினைப்பு வருத்தம் கொள்ளச் செய்கிறது.
கெஸ்டாவோடு தனது மனதிலிருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறாள். ஆனால் கெஸ்டா ஏக்பி பண்ணையில் இல்லை. அவன் பியோர்ன் பண்ணைக்குச் சென்றிருக்கிறான் என்பதை அறிந்து கொள்கிறாள்.
பியோர்ன் பண்ணையில் நடக்கும் ஏலம் உலகம் அறியாதது. மிகவும் விலைமதிப்புள்ள பொருட்களைக் கூட மலிவான விலையில் எடுத்துக் கொள்ளச் செய்கிறார் மெல்கியார். அப்படி ஏலம் எடுத்தவர்களுடன் மதுக்கோப்பையைப் பகிர்ந்து கொள்கிறார். காலை முதல் குடித்துக் குடித்து அவரது தலைமயிர் கூடக் குத்திட்டு நிற்கிறது என்கிறார் செல்மா. அவரது பீறிடும் ஆத்திரமே தலைமயிரைக் கூடப் படியவிடாமல் செய்கிறது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ளும் கெஸ்டா ரகசியமாக மரியாளின் தாயான குஸ்தாவாவைச் சந்திக்கிறான். பூட்டிய சமையலறைக் கதவைத் திறந்து அவளை விடுவிக்கிறாள். மரியாளின் பொருட்களை ஏலம் விடுவதை அவள் ஏன் தடுக்கவில்லை என்று கேட்கிறான்.
மெல்கியாரின் கோபத்தைத் தன்னால் கட்டுப்படுத்த முடியாது. மரியாளின் பொருட்களை மட்டுமில்லை. தான் சீதனமாகக் கொண்டு வந்த தங்க பிரேம் போட்ட நிலைக்கண்ணாடியினையும் ஏலத்தில் விடுகிறான் என்று ஆதங்கமாகச் சொல்கிறான். மரியாளுக்கு அம்மை வந்துள்ளது என்பதைப் பற்றிக் கெஸ்டா சொன்னதும் அவள் அவசரமாக மெல்கியாரைக் காணச் செல்கிறாள்
ஏலத்தில் நடுவே அவள் மகளின் நிலையைப் பற்றிச் சொல்கிறாள். நிச்சயம் மெல்கியார் ஏலத்தை நிறுத்திவிடுவார் என்று நம்புகிறான். ஆனால் மகள் எக்கேடு கெட்டாலும் தனக்குக் கவலையில்லை என்பது போல மெல்கியார் ஏலத்தைத் தொடருகிறார்.
அங்கேயும் சாத்தான் குறுக்கிடுகிறான். விதி விளையாடுகிறது. மெல்கியார் ஏலத்தில் தனது பொருட்களை எடுத்த நபர் என்ற உண்மையை அறிந்து கோபம் கொள்கிறான். அனைவரையும் அடித்துத் துரத்துகிறார்

உணர்ச்சிப்பூர்வமான அந்த நாடகத்தை இசைக்கோர்வையைப் போல அத்தனை நேர்த்தியுடன் செல்மா எழுதியிருக்கிறார்.
மெல்கியாரைப் பற்றிச் சொல்லும் போது செல்மா லாகர்லேவ் அவன் தற்பெருமைக்காரன் என்கிறார். அவனது மறுவடிவம் போலவே மரியாளும் இருக்கிறாள். அவளையும் தற்பெருமைக்காரி என்றே அவளது அம்மா சொல்கிறாள். ஒரே நாணயத்தின் இரண்டு பக்கம் போலவே தந்தையும் மகளும் இருக்கிறார்கள். நடந்து கொள்கிறார்கள்.
மரியாளை மணந்து கொள்ளப் போவதைப் பற்றிக் கெஸ்டா சொல்லும் போது அது நடக்கவே நடக்காது. அவள் உன்னை ஏமாற்றிவிடுவாள் என்று மகளைப் பற்றிக் குற்றம் சொல்கிறாள். அதைக் கெஸ்டா நம்ப மறுக்கிறான். குஸ்தாவா மீது கோபம் கொள்கிறான். ஆனால் அவள் சொன்னது தான் பலிக்கிறது
இவர்கள் கதையின் ஊடாகவும் ஏக்பி சீமாட்டியின் சாபம் வெளிப்படுகிறது. ஏக்பி சீமாட்டி இன்று இருந்தால் மெல்கியார் இப்படி ஏலம் விட்டிருக்க மாட்டார் என்று குஸ்தாவா சொல்கிறாள். அது உண்மையே. ஏக்பி சீமாட்டி தனது வீழ்ச்சியை மட்டுமின்றித் தன்னைப் போன்ற சுகபோகிகளின் வீழ்ச்சியினையும் முன்னறிவிக்கிறாள். அது பின்னாளில் அப்படியே நடந்தேறுகிறது
தன்னை விட்டுப் போன மகளின் பிரிவுத்துயரைத் தாங்கமுடியாமல் தான் மெல்கியார் இப்படி நடந்து கொள்கிறார். அது தோற்றுப் போன தந்தையின் மூர்க்கம். அதே தந்தை மகள் அம்மை நோயால் சாவின் விளிம்பைத் தொட்டு மீண்டிருக்கிறாள். இப்போது அவள் அழகியில்லை. முகம் முழுவதும் அம்மை தழும்புகள் கொண்டவள். உலகத்தால் வெறுக்கப்படுகிறவள் என்பதை அறிந்தவுடனே தனது வீட்டிற்கு மகளை அழைத்து வரத் தானே கிளம்பிச் செல்கிறார்
ஏக்பி பண்ணைக்கு மெல்கியார் வருகை தரும் காட்சி அபாரமானது. அங்கே அவன் மகள் அணிந்து கொள்ள ஓநாய் தோலில் செய்யப்பட்ட மேலங்கி ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார். மகளின் அறைக்குச் சென்று அவளைக் காணவில்லை. மாறாக அவளாக வந்து தன்னைப் பார்க்கட்டும் எனக் கூடத்தில் காத்திருக்கிறார்
ஏக்பி உல்லாச புருஷர்கள் கரடி வேட்டைக்குச் சென்றிருக்கிறார்கள். ஆகவே பண்ணை வீட்டில் ஆட்கள் இல்லை. தந்தை தனக்காக வந்து காத்திருப்பதை அறிந்த மரியாள் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் மறந்துவிடுகிறாள்.
காதலனை விடவும் தந்தையோடு வாழவே விரும்புகிறாள். தந்தையோடு அவள் வீடு திரும்ப முடிவு எடுக்கிறாள். நோயுற்ற பத்துவயது சிறுமியை அழைத்துப் போவதைப் போல அக்கறையோடு அன்போடு அவளைத் தன் வீட்டிற்கு மெல்கியார் அழைத்துப் போகிறார். அந்தத் தருணத்தில் நடந்து முடிந்த சம்பவம் யாவும் நினைவிலிருந்து அழிந்துவிடுகின்றன. அவள் என்றைக்கும் தனது மகள் தான் என்பதை மெல்கியார் உணருகிறார். இந்த உலகில் தந்தையை விடத் தன்னை யாரும் அதிகம் நேசித்துவிட முடியாது என மரியாளும் உணருகிறாள்.
இந்தச் சந்திப்பின் ஊடாக ஒரு அழகிய காட்சியைச் செல்மா லாகர்லேவ் விவரிக்கிறார். அதில் ஒரு நாயும் மெக்பி பறவையும் பேசிக் கொள்கின்றன. பனியில் புதைத்து வைத்த இறைச்சியை ரகசியமாகத் தின்னுவதற்கு நாய் முயல்கிறது. அதைக் கண்ட மெக்பி பறவை நாயைத் திருடன் என்று குற்றம் சாட்டுகிறது. கோபம் கொண்ட நாய் பறவையைத் துரத்துகிறது. நாயிடமிருந்து தப்பிப் பறந்த மெக்பி அதைப் பரிகாசம் செய்கிறது. இந்தக் காட்சியும் தந்தை மகளின் உறவும் நெருக்கமான தொடர்பு கொண்டது.
மரியாள் தன்னைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்த கெஸ்டா மிகவும் வருத்தமடைகிறான். அந்தப் பிரிவை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மரியாளைத் தேடி மெல்கியாரின் பண்ணைக்குச் செல்கிறான். அங்கே மரியாளைக் காணுவதற்காக அவளது அறைக்குள் செல்கிறான்.
அவன் காணுவது தான் காதலித்த மரியாளை அல்ல. மெல்கியாரின் மகளான மரியாளை. அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தந்தையைப் போலவே மரியாளும் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்கிறான் குஸ்தாவா சொன்னது அப்படியே நடந்து விட்டதை அறிகிறான்.
மெல்கியார் கதாபாத்திரம் ஒரு வகையில் தாரஸ்புல்பாவை நினைவுபடுத்துகிறார். இருவரும் அன்பின் காரணமாகவே மூர்க்கமாக நடந்து கொள்கிறார்கள். இன்னொரு வகையில் மெல்கியார் தான் லியர் அரசன். மகள் விஷயத்தில் அவரும் இப்படிதானே நடந்து கொள்கிறார்
காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது எவராலும் முடிவு செய்ய முடியாது. அவர்களின் மனக்குழப்பம் எந்த முடிவிற்கும் கொண்டு செல்லும். வீட்டை விட்டு வெளியேறிய மரியாள் சந்தோஷமாக வாழவில்லை. மாறாகக் கெஸ்டாவோடு இருந்த போது தந்தையைப் பற்றி நினைத்து வருந்துகிறாள். நோய் அவளது குழப்பத்தை அதிகமாக்குகிறது. ஆகவே மீண்டும் தந்தையிடமே சென்றுவிடுகிறாள். அங்குப் போன பிறகு காதலன் கெஸ்டாவை நினைத்து ஏங்குகிறாள். இந்தக் குழப்பத்தின் ஊசலாட்டத்தைச் செல்மா மிகவும் அழகாக எழுதியிருக்கிறார்.

தனது அழகிற்காக மட்டுமே கெஸ்டா தன்னை விரும்புகிறான். தனது தோற்றம் வசீகரமிழந்துவிட்டபிறகு அவனும் தன்னை அவமதிக்கவே செய்வான் என மரியாள் நினைக்கிறாள். ஆனால் தனது தந்தை ஒரு போதும் அப்படி நடந்து கொள்ள மாட்டார் என நினைத்து அவரிடம் செல்கிறாள். மகளுக்கு என்ன நடந்தது என்று மெல்கியார் அவளிடம் எதையும் கேட்டுக் கொள்ளவேயில்லை. ஒரு பார்வையிலே நடந்த எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறார். அவரது உச்சபட்ச கோபம் எப்படி வடிந்தது என்பது ஆச்சரியமளிக்கிறது.
மரியாளைச் சூதில் பந்தயப்பொருளாக வைத்து ஆடும் முடிவை மெல்கியார் எடுப்பதில்லை. சாத்தானின் தூண்டுதல் அந்த முடிவை எடுக்க வைக்கிறது. சூதில் தோற்ற மறுநிமிடம் அவர் மகளைப் பிரிந்து செல்கிறார். இனி தனக்கும் மகளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது என நினைக்கிறார். பகடைகளைப் போலவே மனிதர்களும் விதியின் கரங்களால் உருட்டி விளையாடப்படுகிறார்கள்.
கெஸ்டா பெர்லிங் கதாபாத்திரத்தை லெர்மென்தேவ் எழுதிய நம் காலத்து நாயகன் நாவலின் கதாநாயகன் பிச்சோரினுடன் ஒப்பிடத் தோன்றுகிறது. இருவரும் ஆசையின் பாதையில் சுதந்திரமாகச் சுற்றி அலைபவர்கள். காதலுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.
உண்மையில் கெஸ்டாவை மரியாள் விரும்பவில்லை. ஆனால் சந்தர்ப்பம் அவளைக் கெஸ்டாவோடு இணைக்கிறது. கட்டி அணைத்து முத்தமிடச் செய்கிறது. நாடகத்தின் ஒரு காட்சி போலவே அது நடந்தேறுகிறது. தந்தை செய்த அவமானத்திலிருந்து தன்னை மீட்டான் என்பதாலே தான் அவன் மீது காதல் பிறக்கிறது. ஆனால் அதுவும் நீடிப்பதில்லை. காதலின் வேறுவேறு வகைகளை, காதலின் உன்மத்தை, விபரீத செயல்களைச் செல்மா மிகவும் உணர்ந்து எழுதியிருக்கிறார்.
பொருட்களை அகற்றிவிடுவதன் மூலம் நினைவுகளை அகற்றிவிட முடியாது. உண்மையில் மெல்கியாரின் வெறுமையான வீடு மகளின் நினைவுகளை அதிகப்படுத்தியிருக்கக் கூடும். அது தான் முடிவில் மகளைத் தேடிச் செல்ல வைக்கிறது.
ஏக்பி சீமாட்டியின் இளமைக்காலக் காதல்கதையும் மரியாளின் காதல்கதையும் ஒரு புள்ளியில் ஒன்று சேருகின்றன. செல்மா லாகர்லேவின் மாயக்கைகள் கதையைக் கொண்டு செல்லும் விதத்தையும் கதை வழியே உருவாக்கும் அற்புதத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
May 31, 2022
மதகுரு- தாயின் சாபம்
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ், இவரது கெஸ்டா பெர்லிங் ஸாகா நாவலை ‘மதகுரு’ எனத் தமிழில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார்

கெஸ்டா பெர்லிங் ஸாகா நாவல் 1894 இல் ஸ்வீடனில் வெளியாகியிருக்கிறது.
மதகுரு நாவலைப் பலமுறை வாசித்திருக்கிறேன். காவியத்தன்மை கொண்ட நாவல். மகாபாரதத்தில் வருவது போலவே சூதாடி பெண்ணைத் தோற்கும் நிகழ்ச்சி இதிலும் இடம்பெற்றிருக்கிறது. தனது மகளைச் சூதில் இழக்கிறார் சிங்களேர்.

அபூர்வமான இந்த நாவலை எப்படி க.நா.சு கண்டுபிடித்து மொழியாக்கம் செய்தார் என்று வியப்பாகவே இருக்கிறது

நாவலில் வரும் ஏக்பி பண்ணையும் அதன் சீமாட்டி மார்கரீடாவும் அவளது பண்ணையில் தங்கி வாழும் உல்லாச புருஷர்களும் விசித்திரமானவர்கள். Pensioners என்பதை உல்லாச புருஷர்கள் என்று க.நா.சு மொழிபெயர்த்திருப்பது வெகு சிறப்பு. இந்த உல்லாச புருஷர்கள் ஆடல்பாடலில் தேர்ந்தவர்கள். தனித்திறமை கொண்டவர்கள். ஏக்பி சீமாட்டியை மகிழ்விப்பதே இவர்களின் பணி.
நாவலைப் படிக்கும் நாமும் உல்லாசபுருஷர்களில் ஒருவராக ஆசைப்படுவோம். இந்த உலகம் இன்பங்களை அனுபவிப்பதற்கு மட்டுமேயானது என நம்புகிறார்கள் உல்லாசபுருஷர்கள். இவர்களை ஏக்பி சீமாட்டி தேர்வு செய்து அழைத்து வந்து இன்பங்களை அனுபவிக்க வைக்கிறாள்.
மார்கரீடா இளமையில் ஒருவனைக் காதலிக்கிறாள். ஆனால் அவளது பெற்றோர் வசதியான மேஜர் ஒருவனுக்கு அவளைத் திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள். அந்த வாழ்க்கையை அவளுக்குப் பிடிக்கவில்லை.

சில ஆண்டுகளில் அவளது காதலன் நிறையப் பணம் சம்பாதித்து அருகிலுள்ள பண்ணையை விலைக்கு வாங்குகிறான். அவனுக்கும் மார்கரீடாவிற்கும் மீண்டும் காதல் மலருகிறது. அவர்களின் காதல்உறவை மேஜர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஊர் அவளைப் பற்றித் தவறாகப் பேசுகிறது. இதை அறிந்த மார்கரீடாவின் அம்மா ஒரு நாள் அவளைத் தேடி வருகிறாள்.
அம்மாவிடம் உன் மகள் என்றோ இறந்து போய்விட்டாள். இப்போது இருப்பது மேஜரின் மனைவி மட்டுமே என்கிறாள் மார்கரீடா.
அம்மா அவளது கள்ள உறவைப் பற்றி விமர்சனம் செய்து திட்டுகிறாள். இதில் ஆத்திரமான மார்கரீடா அம்மாவை வெளியே துரத்துகிறாள். கோபத்தில் அம்மா அவளை அடித்துவிடவே பதிலுக்குத் தானும் அம்மாவை அடித்துவிடுகிறாள் மார்கரீடா
மகளால் அவமானப்படுத்தப்பட்ட தாய்ப் புறப்படும் போது மகளுக்குச் சாபம் கொடுக்கிறாள். தன்னைத் துரத்தி அவமானப்படுத்தியது போல ஒரு நாள் அவளையும் அந்தப் பண்ணையிலிருந்து துரத்தி அடிப்பார்கள். அவள் பிச்சைக்காரி போலக் கையேந்தி வாழும் நாள் வரும் என்கிறாள்.
செல்வச்சீமாட்டியான மார்கரீடா அம்மாவின் சாபத்தைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் காலமாற்றத்தால் அம்மாவின் சாபம் பலிக்கிறது. அவள் பண்ணையை விட்டுத் துரத்தப்படுகிறாள். சாலையோரம் பிச்சைக்காரியாக வாழுகிறாள். எந்த உல்லாச புருஷர்கள் அவளைப் புகழ்ந்து பாடினார்களோ அவர்களால் அவமானப்படுத்தப்படுகிறாள்.
நாவலில் வரும் தாயின் சாபமும் அது பலிக்கும் விதமும் காவியத்தன்மை கொண்டதாகயிருக்கிறது
மார்கரீடா தனக்குப் பிடிக்காத திருமணத்தினால் தான் இறந்து போய்விட்டதாகவே நினைக்கிறாள். இப்போது இருப்பவள் ஒரு நடைப்பிணம். இந்த நிலைக்குக் காரணம் தனது பெற்றோர் என நம்புகிறாள். ஆனால் பெற்றோர்களோ மகளுக்கு நல்ல இடத்தில் வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது தங்களின் கடமை என்கிறார்கள்.
தாயிடம் மார்கரீடா கோபம் கொள்ளும் காட்சியைச் செல்மா லாகெர்லவ் மிக அழகாக எழுதியிருக்கிறார்.
தாயின் சாபம் பலித்துவிடும் என்ற நம்பிக்கை உலகெங்குமிருக்கிறது.எந்த தாயும் தன் பிள்ளைகள் அழிந்து போகட்டும் எனச் சாபம் கொடுப்பதில்லை. ஆனால் அப்படியான ஒரு நிலை வந்தால் அந்தச் சாபம் பலித்துவிடும் எனப் பயப்படுகிறார்கள்
மார்கரீடாவின் முகத்தில் அறையும் அவளது அம்மா தவற்றை உணரவைக்கவே முயலுகிறாள். ஆனால் அந்தச் செயல் மார்கரீடாவின் குற்றவுணர்வை அதிகப்படுத்திவிடுகிறது. அம்மாவின் பிடரியைப் பிடித்து வெளியே தள்ளியதோடு தன் கோபத்தினைக் காட்டிக் கொள்ள அம்மாவின் முகத்தில் அறையவும் செய்கிறாள்.

இந்த நிகழ்வு நாவலில் ஆழமான வடு போலச் சித்தரிக்கப்படுகிறது. மார்கரீடாவின் கடந்தகாலம் தான் அவள் ஏக்பி பண்ணையை இப்படி உல்லாச உலகமாக உருமாற்ற வைத்திருக்கிறது
இந்த நிகழ்வின் மறுபக்கம் போல மாவு விற்கப் போன சிறுமியை ஏமாற்றிக் குடித்துவிடும் கெஸ்டா அவளுக்கு ஏக்பி சீமாட்டி உதவி செய்து படிக்க வைப்பாள் என்ற ஒரே காரணத்திற்காகவே உல்லாச புருஷர்களில் ஒருவனாக மாறுகிறான்
குற்றவுணர்வு தான் அவனையும் இயக்குகிறது.
கெஸ்டாவிடம் சூதில் தோற்ற சிங்களேர் தனது மகளை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறான். கொட்டும் பனியில் வீட்டுவாசலில் நின்று உள்ளே அனுமதிக்கும்படி மன்றாடுகிறாள். ஆனால் அவளது தந்தை கதவைத் திறப்பதில்லை. கதவைத் திறக்க முற்படும் அவளது அம்மாவிற்கும் அடி கிடைக்கிறது. தந்தையைத் தண்டிக்கப் பனியில் வெட்டவெளியில் படுத்து கிடக்கிறாள் மரியாள். அவளை மீட்கிறான் கெஸ்டா. அப்போது தான் அவள் மீது காதல் உருவாகிறது
சிங்களேரின் மனைவியும் மார்கரீடாவின் அம்மாவும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள்.
வார்ம்லாந்தில் உள்ள ஏக்பி பண்ணைiய செல்மா லாகர்லெவ் தேர்ந்த ஓவியரைப் போலத் துல்லியமாக விவரித்திருக்கிறார். குறிப்பாக அந்த ஏரியின் விஸ்தாரணத்தையும் பனிக்காலத்தில் அது உறைந்துவிடும் அழகினையும் அற்புதமாக எழுதியிருக்கிறார்.
மதகுருவான கெஸ்டா பெர்லிங் வாழ்க்கையில் ஏன் இத்தனை மாற்றங்கள். வீழ்ச்சிகள். சாத்தானின் மறுவடிவமாக வரும் ஸிண்ட்ரோமின் வருகையும் கிறிஸ்துமஸ் இரவும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது
இந்த நாவலில் சாபமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் வேறுவேறு விதமாகத் தொடர்ந்து வருகிறது. மேஜிகல் ரியலிச நாவலாக இன்று கொண்டாடப்படும் படைப்புகளுக்கு இதுவே முன்னோடி என்பேன். செல்மா லாகர்லெவ் தான் கேட்டு அறிந்த கிராமப்புற கதைகள். நம்பிக்கைகள். சடங்குகள், தொன்மங்கள் யாவையும் இந்த நாவலில் ஒன்று கலந்திருக்கிறார். வியப்பூட்டும் கதாபாத்திரங்கள். விசித்திரமான நிகழ்வுகள்.
நெருக்கடி அதிகமாகும் போது தன்னை முழுமையாக ஒருவன் வெளிப்படுத்திக் கொள்வான் என்பதற்குக் குடிகார மதகுரு தேவாலயத்தில் ஆற்றும் சொற்பொழிவே சாட்சி.

இந்த நாவலை வாசித்தபோது Death Comes for the Archbishop நாவலில் வரும் பாதிரி கலேகோஸ் கதாபாத்திரம் நினைவில் வந்து போனது. பாதர் கலேகோஸ் உல்லாசமாக வாழுவதற்குச் செய்யும் தந்திரங்களும் பூர்வ குடி மக்களை ஏமாற்றும் விதமும் நினைவில் வந்து போனது.
Gösta Berling believed in fate; fate had mastered them: no one can resist fate. என்றொரு வரியை நாவலில் செல்மா எழுதியிருக்கிறார். இது தான் நாவலின் மையப்புள்ளி. விதிவசமான மனித வாழ்க்கையை அதன் விசித்திரங்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது நாவல். நாம் விரும்புவதற்கும் நமக்குக் கிடைத்திருப்பதற்குமான வாழ்வின் இடைவெளியைப் பேசுவதால் இன்றும் இந்த நாவல் மிக முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது
மதகுரு நாவலைப் பற்றிய இந்தக் குறிப்பு போல நாலைந்து சிறு குறிப்புகள் தொடர்ந்து எழுத நினைத்திருக்கிறேன்.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
