S. Ramakrishnan's Blog, page 82
August 3, 2022
விட்மன் கவிதைகள்
வால்ட் விட்மன் கவிதைகள் எந்தத் திரைப்படத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய இந்த ஆவணப்படம் விட்மனின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு 2019 ல் வெளியிடப்பட்டுள்ளது
August 1, 2022
கோயில் பூனைகள்
கோவைக்கிழார் என அறியப்படும் கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார் கோயில் பூனைகள். காட்டு எருமைகள் என்ற இரண்டு முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

சிறந்த தமிழறிஞரான கோவைக்கிழார் எண்பது நூல்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார், இதில் முக்கியமானது கொங்குநாட்டின் வரலாற்றை எழுதியது.

வரலாறு, இலக்கியம், மொழிபெயர்ப்பு,கல்வெட்டு, நாட்டுப்புற இலக்கியம்,கோயிற்கலை,சமயம், மானிடவியல் எனப் பல்வேறு துறைகளில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்..
மெட்ராஸ் பிரசிடென்சியின் அறநிலையத்துறை ஆணையாளராகப் பணியாற்றிய போது தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கோயில்களுக்கு நேரில் சென்று அக்கோயில்களின் வரலாறு, நிர்வாக முறை, கோயில் அமைந்திருந்த சூழல் பற்றி ஆய்வு செய்து விரிவான குறிப்புகள் எழுதியுள்ளார் . தமிழில் அர்ச்சனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானது. பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் சார்பில் தமிழ்க்கல்லூரி ஒன்றைத் தோற்றுவித்து அதன் முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார்.
கோவில் சொத்துகளை மோசடி செய்வது குறித்தும் கோவிலில் நடைபெற்ற திருட்டு மற்றும் முறைகேடுகளைப் பற்றியும் கோயில் பூனைகள் நூலில் சுவைபட எழுதியிருக்கிறார். தீவிர சைவ சமயப்பற்றாளரான கோவைக்கிழார் இப்படி ஒரு நூலை எழுதியிருப்பது கோவில் நிர்வாகத்தின் புரையோடிப் போன நிலையை அடையாளம் காட்டுகிறது..
கோவிலுக்குப் புது நகையைக் காணிக்கையாகச் செலுத்த வைத்து அதை எப்படி ஏமாற்றுவார்கள், கோவில் நிலங்களைக் குத்தகைக்கு விடுவதில் நடக்கும் மோசடிகள், கோவில் வருவாயைச் சுரண்டும் நபர்கள், யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்குள் நடந்த நீதிமன்ற வழக்கு, கோவில் தர்மகர்த்தா பதவிக்காக நடக்கும் போட்டிகள், கோவில் பணத்திற்காக நடந்த கொலைகள் எனப் பல்வேறு முறைகேடுகளைப் பற்றிக் கோவைக்கிழார் கேலியும் கிண்டலுமாக எழுதியிருக்கிறார்.
மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட சிலரது பெயர்களை மாற்றியிருக்கிறார். ஊரோ, கோவிலோ பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. அது போலவே அந்தக் கால நீதிமன்றத்தின் செயல்பாடு, வழக்கறிஞர்களின் வாதம். பிறழ்சாட்சிகள். கோவில் பணியாளர்களின் வாழ்க்கை நெருக்கடிகள், ஆகமங்கள். கோவில் விழாக்கள். காணிக்கை செலுத்தும் முறைகள். ஆதீனங்களின் செயல்பாடு குறித்தும் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டவர் என்பதால் தனது பணிக்காலத்தில் சந்தித்த மனிதர்கள். நிகழ்வுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். இவரது நாட்குறிப்புகள் நூறு தொகுதிகளுக்கும் மேலாக இருக்கின்றன. அவை அச்சில் வெளியிடப்படவில்லை என்கிறார்கள்.
எல்லாக் கோவில்களிலும் யானை இருக்கிறதோ இல்லையோ கோவிற்பூனைகள் இருக்கின்றன அவற்றை யாரலும் அடக்கவோ விரட்டவோ முடியாது என்று குறிப்பிடும் கோவைக்கிழார் திருட்டுப்பூனைகளைப் பற்றி எழுதியிருப்பது நல்ல நகைச்சுவை.
இது போன்ற புத்தகம் தமிழில் வந்ததில்லை. கோவை புத்தகக் கண்காட்சியில் நண்பர் கந்தசுப்ரமணியம் இதனைச் சிபாரிசு செய்து வாங்கிக் கொடுத்தார். ஜோனதன் ஸ்விப்ட் எழுத்துகளைப் படிப்பது போன்ற எள்ளலான நடை. நீதிமன்றக் காட்சிகளை நாடகம் போல விவரித்திருப்பது அழகு.

காட்டு எருமைகள் அந்தக் கால ஜமீன்தார்களைப் பற்றியது. சிறுகதை போலவே நிகழ்ச்சிகளை விவரித்திருப்பது கோவைக் கிழாரின் சிறப்பு. ஜமீன்தார்களின் அதிகாரம் மற்றும் அவர்கள் நிர்வாகத்திலிருந்த கோவில்கள். வெள்ளைக்காரப் பெண்ணை மணந்து கொண்ட கதை, ஜமீன்தார்களை ஏமாற்றிச் சொத்தைப் பறித்தவர்கள், ஜமீன்தார்களின் உல்லாச வாழ்க்கை, அவர்கள் விரும்பி ரசித்த இசை நாடக நிகழ்ச்சிகள், ஜமீன்தார்கள் நடத்திய வழக்குகள். மைனர்களின் வாழ்க்கை என அந்தக் கால ஜமீன்களின் அகபுற உலகை அசலாகப் பதிவு செய்திருக்கிறார்
பேரூர் புலவைப் பேரவை, தவத்திரு சாந்தலிங்கர் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி இந்த நூல்களை வெளியிட்டுள்ளது. விலை மிகவும் குறைவு.
நூலைப் பெற தொலைபேசி எண் 0422 2607995
July 30, 2022
ஏ.கே. செட்டியாரின் காந்தி
காந்தியைப் பற்றிய திரைப்படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ உருவாக்குவதற்கு முன்னதாக ஏ.கே.செட்டியார் காந்தி என்ற ஆவணப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். இதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள். சந்திப்புகள் வியப்பூட்டக்கூடியவை. இந்த அரிய ஆவணப்படம் முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் மீட்கப்பட்ட சுருங்கிய வடிவம் தற்போது கிடைத்துள்ளது. காந்தி பவுண்டேஷன் இதனை வெளியிட்டுள்ளார்கள்.
அண்ணல் அடிச்சுவட்டில் என காந்தி ஆவணப்படத்திற்காக ஏ.கே. செட்டியார் மேற்கொண்ட பயணத்தை ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்துள்ளார்.

1937 அக்டோபர் 2. நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் பயணம் செய்த ஏ. கே. செட்டியார் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ‘டாகுமெண்டரி’ படம் எடுக்கவேண்டுமென்று ஆசை கொண்டார். இதற்காக இரண்டரை ஆண்டுகள். இரு முறை உலகைச் சுற்றி வந்தார். ஒரு லட்சம் மைல் பயணம். முப்பது ஆண்டுகளில், நூறு ஒளிப்பதிவாளர்கள் படம்பிடித்த 50,000 அடி நீளப் படங்களைக் சேகரம் செய்தார். 1940இல் ஆவணப்படம் வெளிவந்தது. பிறகு தெலுங்கு, இந்தி விளக்கவுரையுடன் அதை வெளியிட்டிருக்கிறார். இந்திய சுதந்திர தினத்தன்று இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது .1953இல் ஹாலிவுட்டில் அதன் ஆங்கில வடிவம் வெளியானது..

காந்தி ஆவணப்பட உருவாக்கத்தைப் பற்றி ஏ. கே. செட்டியார் நிறைய குறிப்புகள் எழுதியுள்ளார். அத்துடன் அரிய பல பிற்சேர்க்கைகளை இணைத்து இந்நூலை ஆ. இரா. வேங்கடாசலபதி பதிப்பித்துள்ளார்
July 29, 2022
ஒரு கனவிலிருந்து மறுகனவிற்கு.
மனிதர்கள் கனவைத் துரத்திச் செல்பவர்கள். எவ்வளவு நெருக்கடியிலும் அவர்கள் கனவுகளைக் கைவிடுவதில்லை. ஒரு கனவிலிருந்து இன்னொரு கனவிற்கு மாறிவிடுவார்களே அன்றிக் கனவுகளற்ற வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதுவும் இயற்கைக்கு மிக நெருக்கமாக. தனித்து வாழுகிறவர்கள் எதையும் துணிச்சலோடு சந்திக்கக் கூடியவர்கள். இடர்களை எதிர்கொண்டு வெல்லக்கூடியவர்கள். அப்படி ஒரு மனிதனின் கதையைத் தான் துருக்கியின் சிறந்த படமான COLD OF KALANDAR விவரிக்கிறது. முஸ்தபா காரா இயக்கிய படமிது.

1980 இல் பிறந்த முஸ்தபா காரா, கும்ஹுரியேட் பல்கலைக்கழகத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறையில் பட்டம் பெற்றிருக்கிறார். 2006 இல் வெளியான ஹோப் ஐலண்ட் அவரது முதல் படமாகும். அவரது இரண்டாவது திரைப்படம் கோல்ட் ஆஃப் கலந்தர்.
இயக்குநர் முஸ்தபா காரா சிறுவனாக இருந்தபோது, மெஹ்மத் போலவே இருந்த ஒருவரைக் கண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையின் சாயலிலே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.
ஜாக் லண்டனின் கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறார் மெஹ்மத். தங்கம் தேடி அலாஸ்காவில் அலைந்த ஜாக் லண்டனின் மனநிலை கொண்டே மெஹ்மத்தும் இயங்குகிறார். அறியப்படாத மலைக்குகைகளில் ஏதேனும் அரிய கனிமங்கள் இருக்கக்கூடும் என்று அவர் நம்புகிறார். அதைத் தேடித் தனி ஆளாக மலையேற்றம் செய்கிறார். குகைகளில் தவழ்ந்து சென்று கனிமங்களைத் தேடுகிறார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை.

குரூரமான யதார்த்தம் அவரை மண்டியிடச் செய்கிறது. தோற்றுப் போய் வீடு திரும்புகிறார். வீட்டில் அவரது அம்மா மட்டுமே அவரைப் புரிந்து கொண்டிருக்கிறார். மனைவி பிள்ளைகள் மீது அன்பு கொண்டிருந்த போதும் அவரால் குடும்பத்தின் சுமையை முழுமையாக ஏற்க முடியவில்லை. நிறையக் கடன் வாங்கியிருக்கிறார். வேலையில்லாத நெருக்கடியும் தோல்வியும் அவரைக் கசப்பான மனநிலையில் வைத்திருக்கிறது. இதிலிருந்து மெஹ்மத் மீளுவதற்கு ஒரேயொரு வழி கிடைக்கிறது. அது காளைச்சண்டை. அதற்காக அவர் தனது காளையைத் தயார்ப் படுத்துகிறார். முடிவு என்னவானது என்பதே படத்தின் கதை.

துருக்கியின் சார்பில் சிறந்த அயல்மொழி படத்திற்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட இப்படம் சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறது. மிகச்சிறந்த ஒளிப்பதிவு. தேர்ந்த நடிப்பு. என நிறைவான அனுபவத்தைத் தருகிறது.
கருங்கடல் பகுதியிலுள்ள மலைக் கிராமத்தில் தனது இரண்டு குழந்தைகள், மனைவி மற்றும் தாயுடன் வசிக்கும் மெஹ்மத்தின் வீடும் சூழலும் வேறு நூற்றாண்டில் வாழ்வது போலவே இருக்கிறது. நவீன வாழ்க்கையின் எந்த அடையாளமும் இல்லை. மரத்துண்டுகளைச் சேகரித்துக் கொண்டு. கால்நடைகளுக்கான புல்லைச் சேகரித்துக் கொண்டு கிடைக்கும் உணவுப் பொருளைக் கொண்டு சமைத்து வாழுகிறார்கள்.
படத்தில் நாம் இரண்டு உலகங்களைக் காணுகிறோம். ஒன்று மெஹ்மத்தின் உலகம். மற்றது அவனது மனைவி, குழந்தைகள். அம்மாவுடையது. அவர்கள் மெஹ்மத்தினைப் போலக் கனவுலகில் சஞ்சரிக்கவில்லை. மாறாகக் கடினமான வாழ்க்கையைச் சந்திக்கிறார்கள். பாறையில் முளை விடும் தாவரம் போலக் கிடைத்த வாழ்விற்குள் மகிழ்ச்சியை உருவாக்க முனைகிறார்கள்.

தொலைவில் உள்ள மலையின் குறுகிய குகையினுள் கடினமான பாறைச் சுவர்களில் மெஹ்மத்தின் கோடாரி கற்களை உடைக்கிறது. கிடைத்த மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு சுரங்க அதிகாரிகளிடம் பரிசோதனை செய்யும்படி தருகிறார். புதிதாக ஏதாவது கனிமம் அல்லது தங்கம் கிடைத்துவிட்டால் தனது வாழ்வில் அதிர்ஷ்டம் வந்துவிடும் என மெஹ்மத் நம்புகிறார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைகிறது. சோர்வுடன் வீடு திரும்புகிறார்.
நள்ளிரவில் வீடு திரும்பும் மெஹ்மத்தின் பசி அறிந்து அவருக்கு உணவு அளிக்கிறார் அம்மா. எத்தனை காலம் இப்படி அதிர்ஷ்டத்தைத் துரத்திக் கொண்டிருப்பது என்று அம்மா வருத்தப்படுகிறார். தன்னால் முடிந்தவரைக் கடினமாக உழைக்கிறேன். எப்படியாவது வாழ்க்கையில் மாற்றம் வந்துவிடும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் மெஹ்மத். உறங்கும் மனைவி குழந்தைகளை அவர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது அழகான காட்சி.
விடிகாலைக் குளிரில் எழுந்து கொள்ளும் அவரது மனைவி கால்நடைகளைக் கவனிக்கிறாள். வீட்டு வேலைகள் செய்கிறாள். அவள் குடும்பத்தின் பொறுப்புகளை மொத்தமாகச் சுமந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிகிறது.

மெஹ்மத்தின் வருகை அவளுக்கு மகிழ்ச்சி தரவில்லை. இப்படிப் பொறுப்பில்லாமல் மலைக்குகைகளில் அலைந்து கொண்டிருக்கிறாரே எனச் சண்டையிடுகிறாள்.
மெஹ்மத்திற்கு நிலையான வேலை இல்லை, ஆகவே அவர் கடனில் அவதிப்படுகிறார். தினக்கூலிக்குச் சுரங்கத்தில் வேலை செய்தால் போதும் என மனைவி ஆலோசனை சொல்கிறார்.
இனி பொறுப்பாக நடந்து கொள்கிறேன் என்று மெஹ்மத் உறுதி அளிக்கிறார் ஆனால் கனிமங்களைத் தேடும் அவரது ஆர்வம் திரும்பவும் அவரை மலையை நோக்கியே திருப்புகிறது. ரகசியமாக அவர் வீட்டை விட்டுப் புறப்படும் காட்சி அழகானது. தொடரும் தோல்விகள் அவரைச் சஞ்சலம் கொள்ளவைக்கின்றன.

இனி அதிர்ஷ்டத்தை நம்பி பயனில்லை என உணரும் மெஹ்மத் காளை சண்டையில் தனது காளையைப் பங்கேற்கச் செய்து போட்டியில் வென்று பரிசுப் பணத்தை அடையலாம் என்று நினைக்கிறார்.
ஆனால் அவரது மனைவி காளையை விற்றுக் கடனை அடைப்போம் என்கிறார். இதை மெஹ்மத்தால் ஏற்க முடியவில்லை. எப்படியாவது போட்டியில் வெல்ல வேண்டும் எனத் தனது காளைக்கு நிறையப் பயிற்சிகள் அளிக்கிறார். மெஹ்மத்தின் கனவுகள் நிறைவேறியதா என்பதே படத்தின் இறுதிப்பகுதி.
நகரங்களில் வசிப்பவர்களுக்கும், இயற்கையோடு இணைந்து மலைப்பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கும் தினசரி வாழ்க்கையின் போராட்டங்கள் ஒன்று போல இருப்பதில்லை. எளிய விஷயங்களுக்குக் கூடப் போராட வேண்டியிருக்கிறது என்பதைப் படம் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது
படம் முழுவதும் பனிக்காற்று வீசுகிறது. பனிபடர்ந்த நிலவெளியும் மலையும் சிறிய மலைக்கிராமமும் அங்குள்ள மரவீடும் கடந்து செல்லும் மேகங்களும் விநோதமான சூழலாக விவரிக்கப்படுகின்றன. பனி அவரது தனிமையை அதிகமாக்குகிறது. அவரது மனநிலையின் அடையாளம் போலவே உணர்த்தப்படுகிறது.

மூடுபனி, மழை, தூரத்து மலைகள். கடந்து செல்லும் வெண் மேகங்கள். நீண்டபனிப்பாதைகள் என அருமையான, அழகான ஒளிப்பதிவு. சில காட்சிகள் ரெம்பிராண்டின் ஓவியம் போலவே ஒளிருகின்றன. மெஹ்மத்தின் மனநிலையையும் பருவகாலங்களையும் படம் அழகாக ஒன்றிணைத்துள்ளது. பல இடங்களில் தார்கோவெஸ்கியின் Mirror படத்தை நினைவுபடுத்துகிறது.
அழகாகப் படமாக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டுள்ள இப்படம், நான்கு பருவங்களில் ஒரு குடும்பத்தைப் பின்தொடர்ந்து, நிகழ்வாழ்விற்கும் எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மைக்கும் இடையிலான ஊசலாட்டத்தைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.
••
.
காந்தி கதைகள்
காந்தியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ்சிறுகதைகளை சுனில் கிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். பரிசல் பதிப்பகம் அதனை வெளியிட்டிருக்கிறார்கள். இத்தொகுப்பில் எனது இரண்டு கதைகள் இடம்பெற்றுள்ளன

July 27, 2022
ஏன் நாவல்கள் படிக்க வேண்டும்
நண்பர் மயன் மகேஷ் கோவையின் முக்கிய ஆளுமைகள் மற்றும் பல்துறைக் கலைஞர்கள் குறித்து தொடர்ந்து ஆவணப்படங்களை உருவாக்கி வருகிறார்.
சமீபத்தில் ஒவியர் ஆதிமூலம் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
கோவை புத்தகக் கண்காட்சியில் நான் ஆற்றிய உரையைப் பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார்.
நன்றி மயன் மகேஷ்.
தலையசைக்கும் மலர்
கவிஞர் க.மோகனரங்கன் நீரின் திறவுகோல் என்ற பிறமொழிக் கவிதைகளின் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இந்நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மோகனரங்கனின் தேர்வும் மொழிபெயர்ப்பும் மிகச்சிறப்பாக உள்ளது. சமகால உலகக் கவிதைகள் மற்றும் இந்தியக் கவிதைகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தேர்வு செய்து மொழிபெயர்த்திருக்கிறார்.
காட்சித்தன்மையும் நேரடியான விவரிப்பு மொழியையும் கொண்ட கவிதைகளே எனது விருப்பத் தேர்வாக இருந்தது என்கிறார் மோகனரங்கன். அப்படியில்லை. சில எளிய கவிதைகள் போலத் தோற்றம் தரும் சிக்கலான, ஆழ்ந்த கவிதைகளையும் தேர்வு செய்து மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். அதைத் தமிழில் கொண்டு வருவது ஒரு சவால். கவிதையை ஆழ்ந்து புரிந்து கொண்டு கச்சிதமான சொற்களைத் தேர்வு செய்து மொழிபெயர்த்திருக்கிறார்.

கவிதையின் மீது தீவிரமான பற்றும் தேடலும் கொண்ட ஒருவரால் மட்டுமே இது போன்ற தொகை நூலைச் சாத்தியப்படுத்த இயலும். பிரம்மராஜன் தொகுத்த உலகக் கவிதைகளின் தொகுப்பு மிக முக்கியத் தொகைநூல். அந்த வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தொகுப்பாகவே நீரின் திறவுகோலைக் கருதுகிறேன்.
மோகனரங்கன் தேர்வு செய்துள்ள கவிஞர்களின் பெயர்களைப் பாருங்கள். அத்தனை பேரும் சிறந்த கவிஞர்கள். தேர்வு செய்துள்ள கவிதைகளும் சிறப்பானவை. நோபல் பரிசு பெற்ற கவிஞரும் இதில் இடம்பெற்றிருக்கிறார். கபீர் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இணையத்தில் கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. மின் புத்தகங்களாகவும் எளிதில் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் கவிதைக்கென்றே பிரத்யேக இணைய இதழ்கள் வெளியாகின்றன. புகைப்படங்களுக்கு அடுத்த இடத்தில் கவிதைகளே அதிக எண்ணிக்கையில் இணையத்தில் பகிரப்படுகின்றன என்கிறார்கள். இந்தக் குவியலுக்குள் நல்ல கவிதையை, நல்ல கவிஞரை அடையாளம் காணுவது எளிதானதில்லை. தேர்ந்த வாசிப்பின் வழியே மட்டுமே இது சாத்தியம்.
புதிய சொல்முறைகளை அறிந்து கொள்ளும்விதமாக இந்தக் கவிதைகளை மொழிபெயர்த்தேன் என்று மோகனரங்கன் கூறுகிறார். ஏன் இந்தத் தேவை ஒரு கவிஞனுக்கு ஏற்படுகிறது.
இன்றைய தமிழ் கவிதை தானாக ஒரு சட்டகத்தினுள் சிக்கிக் கொண்டிருக்கிறது. கவிதையின் மொழி, கூறுமுறை, பாடுபொருளில் மாற்றம் தேவைப்படுகிறது. இதற்கு அயல்மொழிக் கவிதைகளின் வாசிப்பும் புரிதலும் அவசியமானது.

பிரெஞ்சு கவிஞர் ழாக் ப்ரெவெர் கவிதைகள் தமிழுக்கு அறிமுகமானதன் காரணமாகத் தமிழ்க் கவிதையின் பாடுபொருட்களும் மொழிதலும் மாறியிருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.
ஒரு வனத்திற்குள் செல்லும் போது நமக்கேற்படும் புதிய அனுபவம் வேறுவேறு குரல்களைக் கேட்பதாகும். அறிந்த அறியாத காட்சிகளின் வழியே நம்மை இழக்கத் துவங்குகிறோம். அன்றாட உலகிலிருந்து விடுபட்டு வேறு உலகில் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறோம். வனத்தினுள் காலம் குழம்பிக்கிடக்கிறது. சில வேளைகளில் காட்சியும் ஓசையும் தொடர்பில்லாதபடி துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அது போன்ற ஒரு அனுபவத்தைத் தான் மொழியாக்கக் கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் போதும் அடைகிறோம்.
வேறுவேறு மொழியில் வேறுவேறு காலங்களில் எழுதப்பட்ட இந்தக் கவிதைகள் தமிழ் வாசகனுக்கு நெருக்கம் தருவதற்கு முக்கியக் காரணம் அதில் வெளிப்படும் கவித்துவ மொழி மற்றும் தருணங்களே. இந்தக் கவிதைகளின் வழியே முற்றிலும் புதிய மொழியுலகம் வெளிப்படுகிறது. புதிய படிமங்கள், பிம்பங்களை அறியத் துவங்குகிறோம். இதுவரை நாம் கொண்டிருந்த மனப்பிம்பங்கள், அடையாளங்கள் இதனால் மாறத் துவங்குகின்றன.

ரோலர்ஹோஸ்டரில் பயணம் செய்வது போல நம்மை மேலும் கீழுமாகக் கவிதை சுழற்றிவிடுகிறது. கவிதைகளின் வழியே நமது அகம் உருமாற்றம் கொள்கிறது. புறப்பார்வைகள் மாறுகின்றன. கேமிராவின் லென்ஸை மாற்றுவதன் மூலம் காட்சிகளை நெருக்கமாகப் படமாக்குவது போலக் கவிதை சில சொற்களைக் கொண்டு பொருட்களை, மனிதர்களை, இயற்கையை நமக்கு நெருக்கமாக்குகின்றன. நமக்குள் இருப்பது ஒரு கோணல் உலகம் என்பதைச் சில கவிதைகள் உணர்த்துகின்றன. சமூகத்தால் கைவிடப்படுதல், அரசியல் மற்றும் அதிகாரத்தால் வேட்டையாடப்படுதல், அகதியாக தன்னுடைய அடையாளம் இழப்பது. விவரிக்க முடியாத வன்முறைகள், துயர நிகழ்வுகள், தற்கொலை போன்றவற்றைக் கவிதை தொட்டுப் பேசும் போது அது தனிநபரின் அனுபவமாகச் சுருங்கிவிடாமல் பொது அனுபவமாக, எதிர்ப்பின் அடையாளமாக மாற்றப்படுகிறது. கவிதை ஒரு மாற்று உலகை, மாற்று மெய்மையை உருவாக்கவே முனைகிறது.
Auto Mirror by Adam Zagajewski
In the rear-view mirror suddenly
I saw the bulk of the Beauvais Cathedral;
great things dwell in small ones
for a moment.

வாகனக் கண்ணாடி
பின்னோக்கு ஆடியில் திடுமென
போவாயிஸ் தேவாலயத்தின்
பெரும்பகுதியைக் கண்டேன்
பெரிய விஷயங்கள்
ஒரு கணம் தங்குகின்றன
சிறியவற்றுள்
என்ற ஆடம் ஜகாஜெவ்ஸ்கியின் கவிதை எளிமையாகத் தோன்றினாலும் தாவோ வெளிப்படுத்தும் ஞானம் போன்ற அனுபவத்தைத் தருகிறது.
பனித்துளியில் ஆகாயம் பிரதிபலிப்பது போன்றது. இடம் மாறுவது பொருட்கள் மட்டுமில்லை. நாம் இதுவரை வைத்திருந்த மதிப்பீடு தான்.
பெரிய விஷயங்கள்
ஒரு கணம் தங்குகின்றன
சிறியவற்றுள்
என்ற கச்சிதமான சொற்களின் வழியே நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட கவிதை போன்ற அனுபவத்தை மொழிபெயர்ப்பாளர் உருவாக்குகிறார்.
••
நெப்போலியன்
மிரோஸ்லாவ் ஹோலூப்

குழந்தைகளே
நெப்போலியன் போனபார்ட் எப்போது பிறந்தார்
வினவுகிறார் ஆசிரியர்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், குழந்தைகள் சொல்கின்றனர்
நூறு வருஷங்களுக்கு முன்
குழந்தைகள் சொல்கின்றனர்
கடந்த வருடம் தான்
குழந்தைகள் சொல்கின்றனர்
யாருக்கும் தெரியவில்லை
குழந்தைகளே
நெப்போலியன் போனபார்ட் என்ன செய்தார்
வினவுகிறார் ஆசிரியர்
போரில் வெற்றி பெற்றார், குழந்தைகள் சொல்கின்றனர்
போரில் தோல்வியுற்றார், குழந்தைகள் சொல்கின்றனர்
யாருக்கும் தெரியவில்லை
நமது கறிக்கடைக்காரர்
நெப்போலியன் எனும் பெயருடைய
நாய் ஒன்றை வைத்திருந்தார்
பிரான்சிஸ் சொன்னான்
அவர் அதை அடித்துத் துன்புறுத்துவார்
போனவருடம் அது பட்டினியால் இறந்து போனது
எல்லாக் குழந்தைகளும்
இப்போது நெப்போலியனுக்காக வருந்தினார்கள்.
வரலாற்றினால் உருவாக்கப்படும் பிம்பத்திற்கும் வாழ்க்கை உருவாக்கும் பிம்பத்திற்குமான வேறுபாட்டினை கவிதை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. எளிய உயிர்களின் துயரமே நம்மைப் பரிவு கொள்ள வைக்கிறது. வரலாற்று நாயகர்களின் வெற்றிகள் யாவும் வெறும் செய்திகளே. பட்டினியால் இறந்து போன நெப்போலியன் எனும் நாய் வரலாற்றில் ஒரு போதும் இடம் பெறாது. ஆனால் அது குழந்தைகளின் மனதில் இடம் பிடித்துவிடுகிறது. குழந்தைகளின் வேறுவேறு பதில்கள் மூலம் எப்படி நடந்திருந்தாலும் பெரிய மாற்றம் ஒன்று ஆகியிருக்காது என்ற உணர்வைக் கவிஞர் ஏற்படுத்துகிறார். வினவுகிறார் ஆசிரியர் என்ற மொழியாக்கம் சிறப்பானது.
•••
சிங்கம்
கல்பற்றா நாராயணன்.

நிஜமான சிங்கம்
தன் ஆகிருதியை
எப்போதும்
காட்டியவாறே இருக்காது
சிற்பங்களிலும்
சித்திரங்களிலும்
கண்ணால் கண்டிராதவர்களின்
கற்பனைகளிலும்
இருக்கும் சிங்கமோ
எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது
சிங்கமாகவே
இது சிங்கத்தை மட்டும் குறிக்கும் கவிதையில்லை. சிங்கம் ஒரு அடையாளம் மட்டுமே. மிகை வெளிப்பாடு நமது பண்பாட்டின் இயல்பாகியிருக்கிறது. கற்பனையில் நாம் கொள்ளும் உருவங்களே நமக்குப் போதுமானதாக இருக்கின்றன. அதையே நாம் நிஜமாகவும் நினைக்கிறோம். பகிர்ந்து கொள்கிறோம்.
••
ஒரு மலர்
ஜாக் கெரோக்
ஒரு மலர்
மலையுச்சியினின்றும்
தலையசைக்கிறது
பள்ளத்தாக்கினைக் நோக்கி
One Flower
on the cliffside
Nodding at the canyon.
-Kerouac
அச்சமற்ற மனதின் குறியீடாகிவிடுகிறது மலர். நிஜம் தானே. மலருக்கு முகடு என்றோ பள்ளத்தாக்கு என்றோ பேதமில்லை. வீழ்வதைப் பற்றி எந்த மலரும் கவலை கொள்வதில்லை. பயந்து நடுங்குவதில்லை. மலர்வது போலவே உதிர்வதும் அதன் ஒரு நிலையே
மலையுச்சியிலிருந்து ஒரு மலர் பள்ளத்தாக்கினை நோக்கித் தலையசைப்பது காதலின் அடையாளமாகவும் தோன்றுகிறது. பள்ளத்தாக்கு மலரை ஒரு போதும் கையில் ஏந்திக் கொள்ளாது. என்றாலும் பள்ளத்தாக்கு வசீகரமாக இருக்கிறதே.
வேறுவிதமாக வாசித்தால் இந்தத் தலையசைப்பை மறுப்பாகவும் எடுத்துக் கொள்ளலாம். பள்ளத்தாக்கின் ஏதோ ஒரு வேண்டுகோளை மலர் மறுத்தும் தலையசைத்திருக்கலாமே.
பௌத்த மடாலயங்களில் துறவிகள் வெண்கலமணியைச் சுழற்றுவார்கள். அதிலிருந்து இனிமையான நாதம் விரிந்து பரவும். அது போன்ற ஒரு உணர்வு அலையைத் தான் இந்தக் கவிதையும் ஏற்படுத்துகிறது.

ஜாக் கெரோக் ஹைக்கூ கவிதைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இது போன்ற ஹைக்கூ கவிதைகளை நிறைய எழுதியிருக்கிறார். Book of Haikus என்ற பெயரில் தனித்தொகுப்பாக வெளியாகியுள்ளது
மஞ்சள் பறவை நிறைந்த நிலப்பரப்பு
ஷண்டாரோ தனிகாவா

பறவைகள் உள்ளன
அதனால் வானம் இருக்கிறது. வானம் உள்ளது
அதனால் பலூன்கள் இருக்கின்றன
பலூன்கள் உள்ளன
அதனால் குழந்தைகள் ஓடுகிறார்கள்
குழந்தைகள் ஓடுகிறார்கள் அதனால் சிரிப்பு இருக்கிறது
சிரிப்பு உள்ளது
அதனால் சோகம் இருக்கிறது. ஆகவே பிரார்த்தனை இருக்கிறது
மேலும் மண்டியிடுவது இருக்கிறது
நிலம் உள்ளது
அதனால் தண்ணீர் ஓடுகிறது. இன்றும் நாளையும் இருக்கிறது
ஒரு மஞ்சள் பறவை உள்ளது. எனவே அனைத்து வண்ணமும்
மரங்களும் இயக்கங்களும் இருக்கின்றன
உலகம் இருக்கிறது
உலகம் எந்த அடுக்கில் உள்ளது. எந்த வரிசையில் இயங்குகிறது என்பதைப் பற்றிப் பொதுப்புத்தியிலிருந்து மாறுபட்ட வரிசையை, அனுபவத்தைக் கவிதை உருவாக்குகிறது. பறவைகள் இருப்பதால் வானம் இருக்கிறது என்று கவிதை துவங்குகிறது. வாசித்தவுடன் சட்டென நமது பார்வை மாறிவிடுகிறது. சிரிப்பு இருப்பதால் சோகம் இருக்கிறது என்ற வரியின் மூலமாக மகிழ்ச்சியின் அடியில் எப்போதும் சோகம் மறைந்திருப்பதை உணர முடிகிறது. பிரார்த்தனை என்பதே ஒரு பக்க உரையாடல் தானே.
ஒரு மஞ்சள் பறவை உள்ளது. எனவே அனைத்து வண்ணமும்
மரங்களும் இயக்கங்களும் இருக்கின்றன
உலகம் இருக்கிறது
என்ற வரிகளை வாசித்து முடிக்கையில் மஞ்சள் பறவை விநோதமாகிவிடுகிறது. எது அந்த மஞ்சள் பறவை. நெருப்பின் சுடருக்குள் சதா பறந்து கொண்டிருக்கிறதே ஒரு பறவை அது தானா. இல்லை காற்று தான் மஞ்சள் பறவையா. அல்லது உயிரியக்கம் தான் பறவையாகச் சிறகடிக்கிறதா. உலகம் இருக்கிறது என்பதே அதன் இயக்கத்தால் தான் அறியப்படுகிறது. இந்த இயக்கத்தினை நாம் தான் நமது வசதிக்காக வரிசைப்படுத்திக் கொள்கிறோம். மனித உணர்வின் தனித்துவமான ஒளிரும் இடமாகக் கவிதை விளங்குகிறது. கவிதை சிலவற்றை வெளிக்காட்டுவதைப் போலவே சிலவற்றை மறைத்துக் கொள்கிறது. ஆகவே ஒற்றை வாசிப்பில் ஒருவர் கவிதையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டுவிட முடியாது. கவிதை தனக்கெனச் சொந்த விதிகளைக் கொண்டிருக்கிறது. பயணப்படாத பாதைகளில் பயணிக்கிறது.
காலியான வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்கும் தொலைபேசி போன்றது எனது கவிதை என்கிறார் ஆனி கார்சன். அந்தத் தொலைபேசியை யார் எப்போது எடுத்துப் பேசுவார்கள் என்பது புதிரானது. அதே நேரம் அந்தத் தொலைபேசி அழைப்பு இன்னமும் வீடு உயிரோட்டத்துடன் இருப்பதையும் நினைவுபடுத்துகிறது. சுழலும் மின்விசிறியின் இறக்கைகள் காற்றைத் துண்டிப்பது போன்றது தான் கவிதை எழுதுவது என்கிறார் மிலான். இன்மையில் சுழலுவது கவிதையின் இயல்புதானே.
இந்தத் தொகுப்பில் அகத்தேடலை முதன்மைப்படுத்தும் கவிதைகள் நிறைய இருக்கின்றன. அது போலவே கவிதை குறித்து எழுதப்பட்ட சில தனித்துவமான கவிதைகளும் இருக்கின்றன. சில கவிதைகள் வாழ்க்கையின் புறச்சூழல் மற்றும் நிகழ்வுகளைச் சார்ந்து ஏற்படும் மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
பொதுவாக அயல்மொழிக் கவிதைகளின் தொகைநூல்களைத் தொகுக்கும் போது கவிஞர்களை முதன்மைப்படுத்தியதோ, அல்லது நாடுகளை வரிசைப்படுத்தியோ தொகுப்பார்கள். அது மரபான முறை. சிறந்த கவிதைகளை மட்டுமே மோகனரங்கன் முதன்மைப்படுத்தியிருக்கிறார். அதுவும் தனக்கு விருப்பமான முறையில் விருப்பமான கவிஞர்களை மட்டுமே தொகுத்திருக்கிறார். அதுவே இத்தொகுப்பினைத் தனித்துவமாக உணரச் செய்கிறது. இளம் கவிஞர்களும் கவிதை வாசகர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமிது.
•••
July 26, 2022
ஜெயமோகன் சந்திப்பு
திங்கள்கிழமை மாலை ஜெயமோகன் தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்திருந்தார். அவரை வரவேற்று உரையாடினேன். ஜெயமோகனுடன் கோவை புத்தகக் கண்காட்சி நிர்வாகிகளும் உடன் வந்திருந்தார்கள்.


நான் தேர்வு செய்து தொகுத்துள்ள 100 சிறந்த கதைகள் புத்தகம் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றிக் கண்காட்சி நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டார். அஜிதனின் மைத்ரி நாவல் குறித்து அவரிடம் விசாரித்தேன். மாலை அமர்வில் நான் உரையாற்ற வேண்டிய நேரமானதால் ஜெயமோகனுடன் குறைவான நேரமே பேச முடிந்தது.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பதிப்பகம் முதன்முறையாகக் கோவை புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
கோவை புத்தகக் கண்காட்சியில்
இரண்டு நாட்களாகக் கோவை புத்தகக் கண்காட்சியிலிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் மக்கள் கண்காட்சிக்கு வந்திருந்தார்கள். பை பையாக நூல்களை வாங்கிச் சென்றார்கள்.
தேசாந்திரி பதிப்பக அரங்கில் வாசகர்களைச் சந்தித்தேன். எனது புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன். ஜாக் லண்டனின் ஒயிட் ஃபேங் நாவலின் மொழிபெயர்ப்பை டாக்டர் சந்திரமௌலி செய்திருக்கிறார். அந்த நூலின் வெளியிட்டு விழா நடைபெற்றது. டாக்டர் ரவி அதனை வெளியிட்டார்.




அதைத் தொடர்ந்து கவிஞர். க.வை.பழனிசாமியின் கவிதையின் அந்தரங்கம் நூலினை வெளியிட்டு உரையாற்றினேன். இதில் விஜயா வேலாயுதம். கவிஞர் மோகனரங்கன். எழுத்தாளர் கோபாலகிருஷணன். எழுத்தாளர் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். காலச்சுவடு சார்பில் அரவிந்தன் நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்தார்.
கவிஞர் சுகுமாரன். மலையாளக் கவிஞர் ராமன். இயக்குநர் ஞான.ராஜசேகரனைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது.

அன்று மாலை மணிகண்டனின் வானம் பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் உதயசங்கர். எழுத்தாளர் கலைச்செல்வி எழுதிய சிறார் நூல்களை வெளியிட்டேன்.

திங்கள்கிழமை காலை பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரி மாணவர்களுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. பேராசிரியர் ராமராஜ், பேராசிரியர் கந்தசுப்ரமணியம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்காட்சி வளாகத்தின் வெளியே உள்ள புல்தரையில் அமர்ந்து பேசினோம். மாணவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சி அளித்தது.


திங்கள்கிழமை மாலை கண்காட்சியில் ஏன் நாவல்களை வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். பலரும் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே கேட்டார்கள்.
கோவை புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள கொடீசியா அமைப்பின் நிர்வாகிகள் பாலசுந்தரம், நடராஜன், விஜய் ஆனந்த், ரமேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
July 23, 2022
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சமையற்காரர்
Kitchen Chronicles: 1001 Lunches with J.Krishnamurti என்ற புத்தகம் படித்தேன்.

1970களில் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் க்ரோனென் சென்னையில் நடைபெற்ற ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவு ஒன்றைக் கேட்கிறார். கிருஷ்ணமூர்த்தியின் மீது அபிமானம் கொண்டு அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தானும் பயணம் செய்து அவரது உரைகளைக் கேட்கத் துவங்கினார். இந்தப் பயணம் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதையே இந்த நூல் விவரிக்கிறது.
ஜே.கிருஷ்ணமூர்த்தி அமைப்போடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த க்ரோனெனிற்குக் கிருஷ்ணமூர்த்தியின் உறைவிட முகாம் ஒன்றில் உடன் தங்கியிருக்கவும் அங்கே சமையல் கலைஞராகப் பணியாற்றவும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அந்த நாட்களில் கிருஷ்ணமூர்த்தியோடு நடைப்பயணம் செய்து. அவருடன் உரையாடியது. அவரைப் புரிந்து கொண்டதைப்பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார்
சென்னையில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உரைக்கு முன்பாக எம்.எஸ். சுப்புலட்சுமி பாடல் பாடியதையும் அவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியை வணங்கி ஆசி பெற்றதையும் க்ரோனென் குறிப்பிடுகிறார். எவரும் தன்னை வணங்குதல் கூடாது எனும் கிருஷ்ணமூர்த்தி எம்.எஸ். மீதான அன்பால் அதை அனுமதித்திருக்கக் கூடும் என்கிறார்
கிருஷ்ணமூர்த்தியின் உரை கேட்க வருகிறவர்கள். அவர்கள் கேள்வி எழுப்பும் விதம். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நகைச்சுவை உணர்வு. அவரது நடைப்பயிற்சி என ஜேகேயின் உலகைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். இதில் நாம் காணும் ஜேகே புதியவர்.
1943 ஜெர்மனியில் பிராங்ஃபர்ட் அருகே உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்தவர் க்ரோனென். 1960களில், நான் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்திருக்கிறார், பௌத்தம், தாவோயிசம் மற்றும் இந்து மதம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமான க்ரோனென் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களை விரும்பிப் படித்திருக்கிறார். தனது மெய் தேடலின் பயணத்தில் இந்தியா வந்திருக்கிறார்.., 1970ல், சென்னையில் ஜேகேயுடன் குழு விவாதத்திற்கு அழைக்கப்படும் நபர்களில் ஒருவராக அவரை அழைத்திருக்கிறார்கள். அந்தச் சந்திப்பில் துவங்கி ஜேகே சென்ற இடங்களில் எல்லாம் நிழல் போல உடன் சென்றிருக்கிறார்
இந்தப் பயணத்தின் போது ஆலன் தம்பதிகளின் அறிமுகம் கிடைக்கிறது. ஆலன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஜே கிருஷ்ணமூர்த்திக்காகச் சமைத்திருக்கிறார். சைவ சமையல் பற்றி ஒரு நூலும் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
1975 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக க்ரோனின் வேலை செய்து கொண்டிருந்த போது ஓஜாயில் ஜேகிருஷ்ணமூர்த்தி ஒரு சிறிய பள்ளியைத் தொடங்க விரும்புவதாக, ஆலனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. அங்கே சென்று இணைந்து கொண்டவர் தற்செயலாகவே சமையல்வேலைகளைத் துவங்கியிருக்கிறார்கள். .
பள்ளி ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் சைவ உணவை எவ்வாறு தயாரிப்பது என்று ஆரம்பத்தில் கற்றுக் கொண்டிருக்கிறார். பின்பு தான் ஜேகேயிற்கு உணவு சமைத்துக் கொடுத்திருக்கிறார்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது விருந்தினர்களுக்குச் சமைப்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது, அதில் ஆலன் தம்பதிகள் பெரிதும் உதவினார்கள். சமையல் ஒரு கலை வடிவம் என்பதை அங்கே தான் கண்டுபிடித்ததாக க்ரோனின் கூறுகிறார்
பொதுவாகக் கிருஷ்ணமூர்த்தி தனது உணவில் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவதில்லை. அவர் ஆரோக்கியமான உணவை விரும்பினார். ஆனாலும் சில வேளைகளில் அவர் இத்தாலிய உணவுகளை விரும்பினார். அவருக்குச் சில உணவுக் கட்டுப்பாடுகள் இருந்தன: கொழுப்பு, எண்ணெய்கள் மற்றும் பால் பொருட்களை மிகக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும்.. அவர் வெண்ணெய் மற்றும் கிரீம், சர்க்கரை பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிடுவார். அது போலவே மசாலாப் பொருட்களையும் அவர் விரும்பவில்லை. அவர் சூப்களை விரும்பினார், குறிப்பாக ஏழு வெவ்வேறு வகையான பீன்ஸ் சூப் அவருக்கு மிகவும் பிடித்தமானது என்கிறார்
சில சமயம் பப்பாளி, அன்னாசிப்பழம், வாழைப்பழம் சேர்த்து ஃப்ரூட் சாலட் செய்தால் அதை விரும்பி சாப்பிடுவார் என்கிறார்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய இந்த நினைவுக்குறிப்புகள் அவர் மீது கூடுதல் நெருக்கத்தையே ஏற்படுத்துகின்றன.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
