S. Ramakrishnan's Blog, page 78

September 20, 2022

பழைய மதராஸ்

பிதியா மேரி க்ரோக்கர் எனப்படும் பி.எம்.க்ரோக்கர் பிரிட்டனைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் 14 ஆண்டுகள் வசித்திருக்கிறார். இதில் சில காலம் வெலிங்டனில் வாழ்ந்திருக்கிறார். 1882 ஆம் ஆண்டுத் தனது 33 வயதில் எழுதத் துவங்கிய க்ரோக்கர் 1919 வரையுள்ள 37 ஆண்டுகளில் 44 நாவல்கள் மற்றும் ஆறு சிறுகதைகளின் தொகுதிகளை எழுதியிருக்கிறார்.

இவரது நாவல்கள் இங்கிலாந்தில் விரும்பி வாசிக்கபட்டன. சில நாவல்கள் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன.

இதில் In Old Madras என்ற நாவல் சென்னையை மையமாகக் கொண்டது.

இந்தியாவில் ராணுவத்தில் பணிபுரிந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது மாமாவைத் தேடி இங்கிலாந்திலிருந்து மதராஸிற்கு வருகிறார் ஜெஃப்ரி மாலண்டர்

ஒரு நாள் கேப்டன் மற்றும் இரண்டு ராணுவ அதிகாரிகள் பெங்களூரிலிருந்து வேட்டைக்குச் செல்கிறார்கள். அந்தப் பயணத்தில் அவர்கள் மைசூர் வழியாகக் கூர்க் வரை செல்கிறார்கள். மறு நாள் காலை கேப்டன் கூடாரம் காலியாக இருப்பது கண்டறியப்படுகிறது, அவருடைய உடைமைகள் சிதறிக்கிடக்கின்றன, அவரைக் கண்டறிய முடியவில்லை. அவர் காவிரி ஆற்றில் மூழ்கிவிட்டார், அவரது உடல் மீட்கப்படவில்லை என்று ராணுவம் தெரிவிக்கிறது.

ஆனால் கேப்டன் இறந்துவிட்டதாகக் கூறப்படும் ஒரு வருடத்திற்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. ஆகவே அவர் ஆற்றில் மூழ்கிச்சாகவில்லை எங்கோ ஒளிந்து வாழுகிறார் என்ற சந்தேகம் உருவாகிறது.

உயிருடன் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் அவரைத்தேடி மதராஸிற்கு வருகிறார் ஜெஃப்ரி. ஆனால் மாமாவைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை.

தனது உறவினர் ஃப்ரெடி மற்றும் அவரது மனைவி ஃபேனி ஆகியோருடன் ஜெஃப்ரி தங்குகிறார். அவரைத் தங்கள் சொந்த மகனைப் போலவே நடத்துகிறார்கள்.

ஜெஃப்ரி மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது என்று ஃப்ரெடியும் ஃபேனியும் நினைக்கிறார்கள், அதனால் அவரைத் திசைதிருப்ப முயலுகிறார்கள். ஆனால் ஜெஃப்ரி தனது தேடுதலை நிறுத்தவில்லை அவரது சாகசங்களை விவரிக்கிறது இந்நாவல்.. அன்றைய சென்னையின் வாழ்க்கை மற்றும் பிரிட்டிஷ் குடும்பங்களின் இயல்பு பற்றி க்ரோக்கர் நுட்பமாக எழுதியிருக்கிறார்.

ஊட்டியில் வசித்த அவரது நினைவுகளையே நாவலிலும் க்ரோக்கர் எழுதியிருக்கிறார்

After a short stay in Madras, a bungalow in the Neilgherries was Fanny’s first home. It was at Ooty that she engaged her Indian retinue, unpacked her glass and china, and set up her own dog. Her husband’s friends, so well known by name, had unanimously offered her a hearty welcome; these were mostly military people, with easy, agreeable manners. Her garden was fragrant with roses and violets, the view from the verandah of Cranford Hall was unsurpassed, and how the sun shone! Caught into a whirl of congenial society, Frances Ann found herself in another world.

இவை அன்றைய சென்னைக் காட்சிகள்

It had been one o’clock when Mallender left the Fort—at an hour when all Madras was under the spell of noonday quiet; servants were “eating rice,” animals resting, the very crows and hawks temporarily suppressed—but now the city was awake; the Gorah bazaar, and Georgetown, were humming like bee-hives, heavily laden trams, crammed with passengers, clanged and rumbled up and down the Mount Road, the old established “Europe” shops, such as Orr’s, Spencer’s, and Oak’s, were brilliantly alight and filled with customers; motors and bicycles skimmed hither and thither—luxurious carriages drawn by steppers rolled by, whilst picturesque foot-passengers, Jutkas, and leisurely bullock-carts gave a touch of local colour to the scene.

Such was the traffic, that it was a considerable time before Colonel Tallboys’ Napier could extricate itself and thread its smooth way by Royàpetta towards Egmore. As the car turned sharply through an entrance gate and up the long drive to Hooper’s Gardens, Mallender was both impressed and surprised. Here was no mere bungalow, but the lofty stately dwelling of a one-time merchant prince—reared in an age when space, and rupees, were amply available.

“Hooper’s Gardens” stood surrounded by fifty acres of short, coarse grass, a white, two-storied mansion with pillared verandahs, a flat roof, and imposing portico. Against a dense background of palms and shrubberies were pitched a group of tents.

“We are a bit on the outside skirts of fashion,” explained Colonel Tallboys, “but it’s a noble, spacious old house—built in spacious times. One or two wealthy natives live hereabouts in others of the same class. My neighbour is a Prince of the family of Gulberga. His premises are a jungle, the whole place is disgracefully kept, full of horses, mountebanks, and squalid retainers. The fellow is a terrible drawback, I must confess. Well, here we are,” he added as the car stopped; “I expect we shall find Fanny in the drawing-room.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2022 06:59

September 16, 2022

ஷேக்ஸ்பியரின் ரகசியங்கள்

ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் புரிந்து கொள்வதற்கான சில அடிப்படைகளை உருவாக்கும்விதமாக. Shakespeare and the goddess of complete being என்ற புத்தகத்தைக் கவிஞர் டெட் ஹியூஸ் எழுதியிருக்கிறார்.

இதில் ஷேக்ஸ்பியரின் ஆரம்பகாலக் கவிதைகளான வீனஸ் அண்ட் அடோனிஸ் மற்றும் தி ரேப் ஆஃப் லுக்ரேஸைக் கொண்டு அவரது நாடகங்களை ஆராய்ந்திருப்பது முக்கியமானது.

இந்தக் கவிதைகளை அவரது நாடகங்களின் திறவுக்கோலாக டெட் ஹியூஸ் மதிப்பிடுகிறார். இரண்டு வேறுபட்ட காதல்நிலைகளை சித்தரிக்கும் இந்தக் கவிதைகளிலிருந்து அவரது நாடகங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன என்றும் வாதிடுகிறார்.

ஷேக்ஸ்பியர் தனது காலகட்டத்தில் நடந்த மதமோதல்கள் மற்றும் அதிகாரப்போட்டியை அடையாளப்படுத்தும் விதமாகவே நாடகங்கள் எழுதியிருக்கிறார். அவரது நாடகங்களுக்கு எனப் பொதுவான சட்டகம் இருக்கிறது. அதைத் திட்டமிட்டு ஷேக்ஸ்பியர் உருவாக்கியிருக்கிறார் என்கிறார் ஹியூஸ்

ஷேக்ஸ்பியரின் காலத்தில் இங்கிலாந்தில் கத்தோலிக்கச் சபைக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன. சீர்திருத்த சபை செல்வாக்குப் பெறத்துவங்கியது. இந்தச் சூழலில் தனது கத்தோலிக்க நிலைப்பாட்டினை தனது நாடகங்களில் ஷேக்ஸ்பியர் அழுத்தமாக வெளிப்படுத்துகிறார் எனும் ஹியூஸ் இதற்கான ஆதாரங்களை அவரது நாடகங்களிலிருந்து காட்டுகிறார்

ஷேக்ஸ்பியரின் கவிதைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட ஹியூஸ் அதன் புதிய பதிப்பு ஒன்றைத் தொகுத்து அறிமுகவுரை எழுதியிருக்கிறார். ஷேக்ஸ்பியரின் பெண் கதாபாத்திரங்களை ஆராயும் ஹியூஸ் காதலின் வடிவமாக ஒரு நிலையிலும் ஆறாக்கோபம் கொண்டவர்களாக, அதிகார ஆசைமிக்கவராக மறுநிலையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரட்டை நிலை அவரது நாடகங்களில் தொடர்ந்து காணப்படுகிறது என்பதை லேடி மேக்பெத் மற்றும் டெஸ்டிமோனா போன்ற கதாபாத்திரங்களைக் கொண்டு ஆராய்கிறார்

தேவதை, கன்னி, தாய் மற்றும் நரகத்தின் தெய்வம் என மாறுபட்ட நிலைகளில் பெண் சித்தரிக்கப்படுவதும், அந்தச் சக்தியால் கொல்லப்பட்ட பன்றி மற்றும் பாம்பு மற்றும் பல விலங்கு வடிவங்களையும் முன்வைத்து. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை விளக்குவதும் புதுமையானது.

டெட் ஹியூஸின் விமர்சனத்தை முழுமையாக ஏற்க முடியாது. ஆனால் அவர் தனது மதிப்பீடுகளை உருவாக்கும் விதமும் ஷேக்ஸ்பியரை ஆழ்ந்து வாசித்துப் புரிந்து கொண்டிருக்கும் விதமும் சிறப்பானது. குறிப்பாகத் தொன்மங்களை ஷேக்ஸ்பியர் கையாளும் விதம் பற்றிய பார்வை மிகவும் தனித்துவமானது. ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் ஒளித்து வைத்துள்ள ரகசியங்களைக் கண்டறிந்து சொல்வது போலவே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

Frank Kermode எழுதியுள்ள Shakespeare’s language இது போலவே ஷேக்ஸ்பியரின் மொழியை ஆராயும் முக்கியமான புத்தகமாகும்.

இந்த இரண்டு புத்தகங்களையும் சேர்த்து வாசிக்கும் போது ஷேக்ஸ்பியர் பற்றிய புதிய பார்வையை நாம் அடைய இயலும்

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2022 23:08

September 15, 2022

எம்.டி.வாசுதேவன் நாயர் நேர்காணல்

Sahapedia சிறந்த இலக்கியவாதிகளின் நேர்காணல்களை வெளியிட்டுள்ளது.

எம்.டி. இந்த நேர்காணலில் அவரது படைப்புகள் மற்றும் வாழ்க்கை குறித்துப் பேசியிருக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2022 23:03

தேசாந்திரி அரங்கு

திருச்சி புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது

எண் 68 & 69

எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும்.

செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் என்னைச் சந்திக்கலாம்

செப்டம்பர் 24 சனிக்கிழமை மாலை புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன். அன்று மாலை நான்கு மணி முதல் தேசாந்திரி பதிப்பக அரங்கில் இருப்பேன்

[image error]

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2022 22:57

ஃபின்லாந்தியா

Jean Sibelius இசையமைத்த Finlandia மிகச்சிறந்த இசைக்கோர்வை.

இம்பீரியல் ரஷ்யாவின் கெடுபிடியான தணிக்கைக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டும் விதமாகவும் ஃபின்னிஷ் மக்களின் நம்பிக்கையினைத் தூண்டும் விதத்திலும் ஜீன் செபெலியஸ் 1899 ல் இதனை உருவாக்கியுள்ளார். ரஷ்ய தணிக்கையைத் தவிர்ப்பதற்காக, ஃபின்லாந்தியாவைப் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் மாற்றுப் பெயர்களில் நிகழ்த்தியிருக்கிறார்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2022 22:42

காலை உணவுத் திட்டம்

அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளிலுள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 மாணவர்கள் இதனால் பயன்பெறுவார்கள்.

மாணவர்களுக்கு காலை, மதியம் என இருவேளை உணவு வழங்குவதில் இந்தியாவின் முதல் மாநிலமாகத் தமிழகம் திகழ்வது பெருமையளிக்கிறது.

நான் பள்ளியில் படிக்கும் நாட்களில் வறுமையான குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களில் சிலர் காலை உணவு கிடைக்காமல் அல்லது போதுமான உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவார்கள். பாடம் நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் மயங்கி விழுவதைக் கண்டிருக்கிறேன். மதிய உணவுத்திட்டம் பல்லாயிரம் மாணவர்களின் பசியைப் போக்கி கல்வியில் சாதனை செய்ய வைத்தது என்பதே வரலாறு.

இன்று அந்த நற்செயலின் அடுத்த கட்டமாக காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஒரு சரித்திர சாதனையாகவே கருதுகிறேன்.

ஏழை எளிய மாணவர்களின் பசியைப் போக்கும் இந்த அற்புதமான திட்டத்தைச் செயல்படுத்திய தமிழக முதல்வரை மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2022 05:06

திருச்சி புத்தகத் திருவிழா

திருச்சி புத்தகத் திருவிழா செப்டம்பர் 16 முதல் 25 வரை நடைபெறுகிறது.

இடம் : வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானம். திருச்சி

நேரம் காலை 11 மணி முதல் இரவு 9 வரை

இதில் செப்டம்பர் 24 சனிக்கிழமை மாலை வரலாற்றின் மௌனம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்

திருச்சி புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அங்கே எனது அனைத்து நூல்களும் கிடைக்கும்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2022 00:12

யாமம் தெலுங்கு மொழிபெயர்ப்பு

எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவை நாவல் குறித்து வெளியான அறிமுகக்குறிப்புகள்

இந்த நாவலை தெலுங்கில் ஜி. பாலாஜி மொழியாக்கம் செய்துள்ளார். இவரே தற்போது எனது சஞ்சாரம் நாவலை சாகித்ய அகாதமிக்காக மொழியாக்கம் செய்துள்ளார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2022 00:01

September 14, 2022

அவளும் அவனும்

கடிதம் வழியாகவே படம் துவங்குகிறது. ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் என்று ஆசை கொண்ட பினா மற்றும் ஆல்ஃபிரடோ கடிதங்களின் வழியே மனதை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் காதலர்களாக இருக்கக் கூடும் என்ற எண்ணம் நமக்கு உருவாகிறது.

LaVisita_fascetta.qxd

The Visit (1963) என்ற இத்தாலியப்படம் பினாவின் ஒருநாளிற்குள் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது

ரயில் நிலையத்தில் படபடப்புடன் காத்திருக்கிறாள் பினா. அங்கே வரும் இரண்டு கன்னியாஸ்திரீகள் அவளது மிகையான ஒப்பனையைக் கண்டு நகைக்கிறார்கள். அவளோ ஆல்ஃபிரடோவின் வருகைக்காக ஆவலாகக் காத்திருக்கிறாள். கண்ணாடி முன்பாக நின்று பேசி ஒத்திகை பார்த்துக் கொள்கிறாள்.

ரோமிலிருந்து ரயில் வந்து சேருகிறது. பிளாட்பாரத்தில் வேகவேகமாக ஓடுகிறாள். எங்கேயும் ஆல்ஃபிரடோவைக் காணவில்லை. ரயில் கிளம்பும் போது ஒரு பெட்டியிலிருந்து இறங்கி அவளை நோக்கி நடந்து வருகிறான் ஆல்ஃபிரடோ. ரயிலிலே முகச்சவரம் செய்து கொள்ள வேண்டியிருந்ததால் உடனே இறங்க முடியவில்லை என்கிறான்.

அவனை எப்படி வரவேற்பது என்று பினாவிற்குத் தெரியவில்லை. அவளது ஆசை, விலகல் அவளது முகத்தில் அழகாக வெளிப்படுகிறது. தனது பழைய காரில் அவனை அழைத்துப் போகிறாள். அந்தக் காரின் கதவு சரியாகப் பூட்டுவதில்லை. அதைத் தனது கையாலே பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான் ஆல்ஃபிரடோ.

வழியில் ஒரு முட்டாள் ஆல்ஃபிரடோவை கேலி செய்கிறான். அவனைப் பிடிக்கவில்லை என்று திட்டுகிறான். முட்டாளின் கோபத்திற்குப் பயந்து ஆல்ஃபிரடோ காரிலே உட்கார்ந்திருக்கிறான்

ஆல்ஃபிரடோவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள் பினா. அதன்பிறகே உண்மை நமக்கு உணர்த்தப்படுகிறது

முப்பத்தைந்து வயதான, தனித்து வாழும் அழகியான பினா தனக்காகக் கணவனைத் தேர்வு செய்யத் திருமண விளம்பரம் கொடுத்திருக்கிறாள். அதில் அவள் தேர்வு செய்துள்ளவன் தான் ஆல்ஃபிரடோ. அவளை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக வந்திருக்கிறான். அவனுக்கும் நாற்பது வயதுக்கும் மேலாகிறது. புத்தக அங்காடி ஒன்றில் வேலை செய்கிறான்.

ஆல்ஃபிரடோவிற்குத் தனது வீட்டினைச் சுற்றிக் காட்டுவதோடு அவள் வளர்க்கும் கிளி, நாய் ஆமை போன்றவற்றையும் அறிமுகம் செய்து வைக்கிறாள். 36 வயதிலும் பினா அழகியாகவே இருக்கிறாள். ஊர்மக்களின் அன்பைப் பெற்றிருக்கிறாள்.

ஆல்ஃபிரடோ அவற்றை விரும்பாத போதும் அவள் முன்பாக நடிக்கிறான். சொத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டுமே அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவனுக்கு ஏற்கனவே வேறு பெண்களுடன் உறவு இருக்கிறது. அதுவும் உதடு கிழிந்த சலவை நிலைய பெண்ணுடன் அவன் உறவு கொள்ளும் காட்சி வேடிக்கையானது.

பினாவின் வீட்டில் அவன் ஒரு நாளை கழிக்கிறான். அந்த நாளின் இடைவெட்டாக இருவரின் கடந்தகால நிகழ்வுகளும் வந்து போகிறது. ஆல்ஃபிரடோ போலவே பினாவும் நடிக்கிறாள். அவள் ரெனாடோ என்ற டிரக் டிரைவரை விரும்புகிறாள். அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். ரெனாடோ திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவன் என்பதால் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளத் தேடுகிறாள். அப்படித்தான் ஆல்ஃபிரடோ தேர்வு செய்யப்படுகிறான்.

ஆல்ஃபிரடோ குடிகாரன். இளம்பெண்களைக் கண்டால் பின்னாலே ஓடுபவன். பினா வீட்டிற்கு வரும் பக்கத்துவீட்டுப் பெண்ணை மயக்க முயல்கிறான். நடனத்தின் போது வேறு ஒரு பெண்ணுடன் கைகோர்த்து ஆடுகிறான். ஒருவேளை பினாவிடம் சொத்து இல்லாவிட்டால் அவளை ஒருமுறை அடைந்தால் கூடப் போதும் என்பதே ஆல்ஃபிரடோவின் நோக்கம். அதைப் பினா உணர்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கும் அப்படி ஒரு ஆண் தேவைப்படுகிறான். ஆகவே நெருக்கமாகப் பழகுகிறாள்.

அவள் கொடுத்த திருமண விளம்பரத்தைப் பார்த்துப் பதில் அளித்தவர்களை ஒரு ஆல்பமாகத் தயாரித்து வைத்திருக்கிறாள் பினா. அதை இருவரும் புரட்டிப் பார்க்கும் காட்சி சுவாரஸ்யமானது

கிராமத்தில் வாழும் பினாவும் நகரில் வாழும் ஆல்ஃபிரடோவும் வேறுவேறு ரசனைகள், மதிப்பீடுகள் கொண்டவர்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது இருவரும் நடிக்கிறார்கள். பரஸ்பரம் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

பினாவின் வீட்டிலுள்ள வயதான பணிப்பெண் பினாவைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஆல்ஃபிரடோவிற்கு ஆலோசனை சொல்கிறாள். வீட்டில் பினா இல்லாத நேரங்களில் ஆல்ஃபிரடோ நடந்து கொள்ளும் விதமும் முட்டாள் மீது கொள்ளும் கோபமும் நல்ல வேடிக்கை.

பினா எங்கே சென்றாலும் முட்டாள் பின்தொடருகிறான். அவள் மீது அன்பு கொண்டிருக்கிறான். நடனத்தில் அவளுடன் கைகோர்த்து ஆடுகிறான். முடிவில் அவன் ஆல்ஃபிரடோவை ஏற்றுக் கொண்டு நட்பாக விரும்புகிறான். ஆனால் ஆல்ஃபிரடோ அதை விரும்புவதில்லை

ஒரு காட்சியில் பினாவும் ஆல்ஃபிரடோவும் உண்மையை வெளிப்படையாகப் பேசிக் கொள்கிறார்கள். பினாவின் காதலன் ரெனாடோவைச் சந்தித்துப் பேசும் ஆல்ஃபிரடோ அவனுடன் நட்பாகிறான். அது பினாவிற்கு வியப்பளிக்கிறது. ஒத்தரசனையைக் கொண்டவர்களை விடவும் மாறுபட்ட ரசனை கொண்டவர்களால் தான் சந்தோஷமாக, ஒன்றாக வாழ முடியும் என்கிறாள் பினா.

இத்தாலிய நகைச்சுவை படங்களில் ஆண் தான் மையக் கதாபாத்திரமாக இருப்பது வழக்கம். பெண் கதாபாத்திரங்கள் இரண்டாம் நிலையில் தான் இடம்பெறுவார்கள். இந்தப் படத்திலோ மையமாக இருப்பது பினா. அவளது தனிப்பட்ட வாழ்க்கை, உளவியல் மற்றும் சமூகச் சமூகப் பிரச்சனைகளைப் படம் கவனப்படுத்துகிறது

Sandra Milo பினாவாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்

அறுபதுகளின் இத்தாலிய நகைச்சுவை படங்கள் அன்று நிலவிய கசப்பான மற்றும் ஏமாற்றமடைந்த மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக உருவாக்கப்பட்டது.

பினா மற்றும் ஆல்ஃபிரடோ தனிமையிலிருந்து விடுபடவே முயலுகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் வேறுவிதமானது. பினா வீட்டினை அழகாக வைத்திருக்கிறாள். நிறையப் பணமும் சேமித்து வைத்திருக்கிறாள். அவளது வாழ்க்கை ரசனையானது. ஆனால் ஆல்ஃபிரடோ குறுகிய மனப்பான்மையோடு, பேராசை, சுயநலம், சிடுமூஞ்சித்தனம் கொண்டவனாக இருக்கிறான். அவன் தனது தவறுகளை ஒத்துக்கொள்கிறான். அது தான் பினாவைக் கவருகிறது.

அவர்கள் ஒன்றாகக் கழிக்கும் ஒருநாளிற்குள் இத்தாலியத் தினசரி வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றம் வந்து போகிறது. தலைமுறை மாறிவருவது. புதிய தொலைக்காட்சியின் வருகை. நகரத்தில் உணவுப்பொருட்களின் விலை அதிகமாக இருப்பது.

கார்லோ கசோலாவின் சிறுகதையைக் கொண்டு அன்டோனியோ பியட்ரேஞ்செலி இப்படத்தை இயக்கியுள்ளார்.

குளிர்காலத்தில் தனிமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கருதியே பினா திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறாள். அவள் ஆல்ஃபிரடோவின் கடிதங்களிலிருந்து அவனைப் பற்றிய கற்பனையை வளர்த்துக் கொள்கிறாள். முதன்முறையாக அவனைச் சந்திக்கும் போது ஏமாற்றம் அடைகிறாள். அதைக் காட்டிக் கொள்வதில்லை. ஆனால் ஆல்ஃபிரடோ அவளது அழகைக் கண்டதும் எப்படியாவது அவளை அடைந்துவிட வேண்டும் என்று பேராசை கொள்கிறான்.அவளிடம் பாசாங்கு செய்கிறான். படத்தில் ஐந்து ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் மிக அழகாகத் துவங்கி முடிகின்றன.

அவர்களுக்குள் திருமணம் நடக்குமா அல்லது அந்த உறவு ஒரு நாளுடன் முடிந்துவிடுமா என்ற கேள்வி எழுகிறது.

அதற்கான பதிலும் கடிதம் வழியாகவே வெளிப்படுகிறது. படத்தின் துவக்கக் காட்சி போலவே இறுதி காட்சியும் கடிதம் மூலமே நிறைவு பெறுகிறது

ஹாலிவுட் நகைச்சுவை படங்களில் காணமுடியாத உண்மையான நிகழ்வுகளை, அழுத்தமான உணர்ச்சி வெளிப்பாட்டினை, துயரிலிருந்து கசியும் நகைச்சுவையை இத்தாலியப் படங்களில் காணமுடிகிறது.

பினாவின் செயல்களைக் கண்டு நாம் சிரிக்கிறோம். ஆனால் அவளுக்காக வருந்தவும் செய்கிறோம். இது போலத் தான் ஆல்ஃபிரடோ வாழ்க்கையும். நடுத்தரவயதில் தனிமையை உணருகிறவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். அது தான் இன்றைக்கும் இப்படத்தைப் புதியதாக வைத்திருக்கிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2022 23:54

குற்றத்தின் பாதை

புதிய சிறுகதை

(டெல்லி தமிழ்சங்க மலரில் வெளியானது.)

தாத்தாவைக் கைது செய்வதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் வீட்டிற்கு வந்த ஏப்ரல் மாதத்தின் புதன்கிழமை முற்பகலில் கூர்வாள் போல வெயில் மினுங்கிக் bகாண்டிருந்தது. அப்போது என் வயது பனிரெண்டு. தாதன்குளத்தில் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன்

அப்பாவின் வேலை காரணமாக அம்மாவும் தம்பிகளும் புனலூரில் வசித்தார்கள். என்னை மட்டும் தாத்தா வீட்டில் விட்டிருந்தார்கள்.

தாத்தாவிற்கு எட்டூர் கண்மாயை ஒட்டி நாலு ஏக்கர் வயலும் கரிசல் நிலமும் இருந்தது. வயலடியில் பெரிய படிக்கிணறு. பச்சை நிறத்தில் கலங்கிய தண்ணீர். கிணற்றுள் ஒரு ஆமையிருந்தது. அது எப்போதாவது நீர்மட்டத்திற்கு வந்து தலையை வெளியே நீட்டி வெயிலைத் தொட்டுப் போகும்.

கிணற்றை ஒட்டிய சிறிய அறையினுள் மோட்டார் பம்ப். வெளியே குளிப்பதற்கான சிமெண்ட் தொட்டி. கிணற்றை ஒட்டியது போல வளர்ந்து நிற்கும் இரட்டைவேப்பமரம். இரவில் தாத்தா கயிற்றுகட்டிலைப் போட்டு அந்த மரத்தடியில் தான் உறங்குவார். சில நாட்கள் நானும் அங்கே உறங்கியிருக்கிறேன்.

தாத்தா எப்போதும் எதையோ யோசித்தபடியே இருப்பார். ஏதாவது கேட்டால் உடனே பதில் சொல்லிவிட மாட்டார்.

சில நேரம் சிகரெட் புகையை வெறித்துப் பார்த்தபடியே தனக்குத் தானே ஏதோ சொல்லிக் கொள்வார். பாட்டிக்கும் அவருக்கும் சண்டை வராத நாளே கிடையாது. வீட்டை விடவும் நிலத்தில் இருப்பது தான் அவருக்குப் பிடித்திருந்தது.

போலீஸ்காரர்கள் வந்த போது தாத்தா மடத்தில் சின்னராசுவோடு ஆடுபுலியாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் மடத்தைக் கடந்து தான் வந்திருக்க வேண்டும். ஆனால் தாத்தாவை அடையாளம் தெரியவில்லை.

தாத்தாவை நினைத்துக் கொண்டாலே அவர் காதில் சொருகியிருக்கும் சிகரெட் தான் நினைவிற்கு வரும். தாதன்குளத்தில் அப்படிக் காதில் சிகரெட் சொருகியவர்கள் எவரும் கிடையாது. தாத்தா இந்தப் பழக்கத்தை எங்கே கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை. அது பாசிங்ஷோ சிகரெட்.

தாத்தா ஒல்லியான உடல்வாகு கொண்டிருந்தார். ஆறடி உயரம். கழுத்து மட்டும் சற்றே வளைந்தது போலிருக்கும். உடல் முழுவதும் மயிர் அடர்ந்திருக்கும். கைகளைக் காணும் போது வயதான குரங்கின் கைகள் போலத் தோன்றும். ஒடுங்கிய முகம். பெரிய பற்கள். கல்யாண வீடுகளுக்குப் போகும் நாளை தவிர மற்ற தினங்களில் மேல்சட்டை அணிந்தது கிடையாது. அழுக்கடைந்த வேஷ்டி. வெளிறிப்போன துண்டு. முழுவதும் நரைத்துப்போன தலை. மூக்கிற்குள்ளும் கூட மயிர் நரைத்துப் போயிருந்தது.

வீட்டில் இல்லாத நேரங்களில் தாத்தா மடத்தில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருப்பார். அல்லது பொட்டல்பட்டிக்குப் போய்விடுவார். அங்கே யார் இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் வீட்டில் சண்டை வரும்போது பொட்டில்பட்டிக்காரி என்று பாட்டி திட்டுவாள். யார் அந்தப் பெண் என்று எனக்குத் தெரியாது. தாத்தாவிடம் கேட்டதும் இல்லை

••

தாத்தாவை கூட்டிக் கொண்டு வரும்படி என்னைப் பாட்டி அனுப்பி வைத்தாள். நான் மடத்தை நோக்கி நடந்து போன போது தெருவில் இரண்டு சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ஒருவன் நானும் விளையாட வருகிறேனா என்று கேட்டான்.

“எங்க வீட்டுக்குப் போலீஸ் வந்துருக்கு“ என்றேன்

“போலீஸ் துப்பாக்கி வச்சிருந்தாங்களா“ என ஒரு பையன் கேட்டான்

நான் அதைக் கவனிக்கவில்லை. இரண்டு போலீஸ்கார்களில் ஒருவர் பெரிய தொப்பையுடன் குள்ளமாக இருந்தார். இன்னொருவர் இளைஞன். நாலு ரோட்டில் இறங்கி நடந்து வந்திருக்கக் கூடும். அதுவரை தான் டவுன்பஸ் வரும்.

இருவரும் வியர்த்து வழியும் முகத்துடன் இருந்தார்கள். பாட்டி அவர்களுக்கு லாடஞ்சொம்பில் தண்ணீர் கொடுத்தபோது ஒருவனே முழுசொம்பு தண்ணீரையும் குடித்துவிட்டான். இன்னொருவர் தொப்பியால் விசிறிக் கொண்டே ஒரு துண்டுவெல்லம் இருந்தா குடுங்க என்றார்

பாட்டி மண்டைவெல்லத்தில் சிறு துண்டும் இன்னொரு சொம்பு தண்ணீரும் கொடுத்து அனுப்பினாள். நான் தான் இந்தப் போலீஸ்காரரிடம் கொடுத்தேன். அவர் வெல்லத்துண்டை கறுக்முறுக் என்று கடித்து மென்றார். பிறகு சொம்பினை அண்ணாந்து குடித்தார். தண்ணீர் கழுத்து வழியாக வழிந்தோடியது. அதை அவர் துடைத்துக் கொள்ளவில்லை.

எங்கள் ஊரின் பகல்பொழுது வெயில் அனலாகக் கொதிக்கக் கூடியது. மரங்களில் அசைவிருக்காது. கல் உரலில் வெயில் நிரம்பியிருக்கும் கூரைவீடுகள் பெருமூச்சிடுவது போலச் சப்தமிடும். வெயில் தாங்க முடியாமல் ஒலைக்கொட்டான்கள் தானே தீப்பறிக் கொள்வதும் உண்டு.

ஊரைச் சுற்றிலும் விரிந்திருந்தது கரிசல் நிலம். ஆங்காங்கே உடை மரங்கள். ஊரின் கிழக்கே ஒரு ஆலமரமிருந்தது. அதன் நிழலில் கிறங்கி கிடக்கும் ஆடுமேய்ப்பவர்கள். ஆலமரத்தையொட்டி கண்மாய். அதில் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் நிரம்பியிருக்கும். கோடையில் பாளம் பாளமாக வெடித்துப் போய்விடும். எப்போதும் கண்மாயிற்குள் சுற்றித்திரியும் நாய் ஒன்றிருந்தது. அது கண்மாயில் எதையோ தேடுவது போல அலைந்து கொண்டிருக்கும்.

••

நாலு ரோட்டிலிருந்து நடந்து வந்த எரிச்சல் போலீஸ்காரர்கள் முகத்தில் படர்ந்திருந்தது

“தங்கச்சாமி இல்லையா“ என்று பருத்த தொப்பை கொண்ட போலீஸ்காரர் கேட்டார்

தாத்தாவை அப்படிப் பெயர் சொல்லி யாரும் கூப்பிடுவது கிடையாது. பாட்டி அந்தப் போலீஸ்காரரை முறைத்தபடியே சொன்னாள்

“அவுக வீட்ல இல்லே“

“அவரை ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டு போக வந்துருக்கோம்“ என்றான் இளைஞன்

பாட்டி அது ஒன்றும் பெரியவிஷயமில்லை என்பது போல அவர்களை முறைத்தபடியே சொன்னாள்

“மடத்துல இருக்காரானு பார்த்துட்டு வரச்சொல்றேன்“

அதன்பிறகு தான் நான் மடத்தை நோக்கி கிளம்பினேன்.

வழியில் சிவப்பு வண்ணம் அடித்த பம்பரம் வைத்திருந்தவன் கிழே கிடந்த பம்பரத்தின் மீது ஒங்கி ஆக்கர் வைத்துக் கொண்டிருந்தான்.

நான் மடத்தை நோக்கி நடந்த போது ஒரு பூனை சாவகாசமாக இடிந்த மதில் சுவரின் மீது நடந்து போய்க் கொண்டிருந்தது. வேண்டுமென்றே அதை நோக்கி கையை வீசிப் பயமுறுத்தினேன். பூனை கண்டுகொள்ளவேயில்லை. ஊர் பூனைகளுக்குப் பயம் போய்விட்டிருக்கிறது

மடத்தில் தாத்தா ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார். அவர் எப்போதும் புலி தான். அவரை எந்த ஆட்டாலும் அடைக்க முடிந்ததில்லை. நான் தாத்தா ஆடுவதைப் பார்த்தபடியே நின்றிருந்தேன்.

வழிமறித்த ஒரு ஆட்டினை வெட்டிய கையோடு என்னைப் பார்த்து “காசு வேணுமா“ என்று கேட்டார்

“நம்ம வீட்டுக்கு ரெண்டு போலீஸ்காரங்க வந்துருக்காங்க. பாட்டி கூட்டியார சொல்லுச்சி. “ என்றேன்

“அவிங்களை இங்க வரச்சொல்லு“ என்றபடியே தாத்தா விளையாட்டினை தொடர்ந்தார்

அவரை அழைத்துக் கொண்டு போகாமல் வீடு திரும்பினால் பாட்டி கோவித்துக் கொள்வாள் என்பதால் தாத்தாவிடம் மறுபடியும் சொன்னேன்

“ உங்களைக் கையோட கூட்டிட்டு வரச்சொன்னாங்க. “

“எவன் சொன்னது“

“போலீஸ்காரங்க“

அதைக் கேட்ட சின்னராசு ஆட்டத்தை நிறுத்திவிட்டு சொன்னார்

“அப்புச்சி…வீட்டுக்கு போயி என்னானு பாத்துட்டு வந்திருங்க.. நம்ம ஆட்டத்தைப் பொறவு வச்சிகிடுவோம்“

தாத்தா தன்னுடைய காதில் சொருகியிருந்த சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்துக் கல்லில் தீக்குச்சியை உரசி பற்ற வைத்து, ஊத ஆரம்பித்தார். என்ன யோசனை என்று தெரியவில்லை. புகையை ஊதியபடியே மடத்தின் தூண்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு எழுந்து சிகரெட்டை புகைத்தபடியே வீட்டை நோக்கி நடந்தார்

•••

போலீஸ்காரர்களில் இளையவன் வாசலில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டிற்குள் ஒரு சேவல் சுதந்திரமாக நடந்து திரிந்தது. பாட்டி அடுப்பில் சுரைக்காயை வேகவைத்துக் கொண்டிருந்தாள்.

தாத்தாவை கண்டதும் இரண்டு போலீஸ்கார்ரகளும் விறைப்பானவர்கள் போல உடலை இறுக்கமாக்கி கொண்டு நின்றார்கள். பருத்த தொப்பை கொண்டவர் ஒரு காகிதத்தைத் தாத்தாவிடம் நீட்டினார். தாத்தா அதை வாங்கிக் கொள்ளவில்லை

“உங்க பேரு“ என்று அந்தப் போலீஸ்காரரை நோக்கி கேட்டார் தாத்தா

“சிவசாமி. இவன் ரவி“ என்றார் அந்தப் போலீஸ்காரர்

“என்னா வேணும் “ என்று சற்றே கோபமாகக் கேட்டார் தாத்தா.

“உங்களை அரெஸ்ட் பண்ணி கூட்டிகிட்டு வரச்சொல்லி இன்ஸ்பெக்டர் உத்தரவு.. கிளம்புங்க“ என்றான் ரவி

அவனை முறைத்தபடியே தாத்தா வீட்டிற்குள் போனார். பகலிலும் வீட்டிற்குள் வெளிச்சமில்லை. மங்கலான இருட்டுப் படர்ந்திருந்தது. நடந்து போன வேகத்தில் தாத்தா மிளகாய் வற்றல் வைத்திருந்த சொளகினை மிதித்துத் தள்ளிவிட்டுப் போனார். பாட்டி அவரைக் கோபத்தில் திட்டுவது கேட்டது.

தாத்தா ஒரு முக்காலியை எடுத்துக் கொண்டு வந்து வாசலை ஒட்டி போட்டு உட்கார்ந்தபடியே என்னிடம் “முக்குகடையில் ரெண்டு பாசிங்ஷோ சிகரெட் வாங்கிட்டு வா“ என்றார்

வரும்போது அந்தக் கடையைத் தாண்டி தானே வந்தோம். அப்போதே வாங்கியிருக்கலாமே என்று தோன்றியது. ஆனால் தாத்தாவின் முறைப்பை கண்டதும் நான் காசை வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்

“இன்னைக்கு வரமுடியாது. ரெண்டு நாள் கழிச்சு வாங்க“ என்று தாத்தா போலீஸ்காரர்களைப் பார்த்து மிரட்டுவது போலச் சொன்னார்

“ கையோட கூட்டிட்டு வரச் சொல்லி ஆர்டர்“ என்றான் ரவி

“அதுக்கு வெறும்வயிற்றோட வரச்சொல்றயா“ என்றபடியே அவனை முறைத்தார் தாத்தா

“அருப்புக்கோட்டையில போயி சாப்பிட்டுகிடலாம்“ என்றார் சிவசாமி

“கிளப் கடையில் போடுற சோற்றை வாயில வைக்க முடியாது. வீட்ல சோறு ஆக்கிட்டு இருக்கா.. சாப்பிட்டு போவோம்“ என்றபடியே அவர் வீட்டிற்குள் சுற்றும் சேவலை நோக்கி தண்ணீர் செம்பை வீசி எறிந்தார். சேவலின் மீது அடிபடவில்லை. ஆனால் செம்பு மரப்பெஞ்சின் அடியில் போய் உருண்டது.

“வேலம்மா …அந்த சொம்ப எடு “என்று உத்தரவிட்டார்

பாட்டி ஆத்திரத்தில் திட்டியபடியே அவர் வீசி எறிந்த சொம்பை எடுத்து அடுப்படிக்குள் வீசினாள்.

பாட்டியின் கோபத்தை ரசித்தவர் சிவசாமி போல அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்

நான் வாங்கி வந்த சிகரெட்டினை தாத்தாவிடம் நீட்டியபோது அவர் ஒன்றை காதில் சொருகிக் கொண்டபடியே மற்ற சிகரெட்டினை பற்றவைத்துக் கொண்டு போலீஸ்கார்ர்களிடம் கேட்டார்

“நீங்களும் வீட்ல சாப்பிடலாம்லே“

“சொன்னா புரியாதா.. நாம உடனே கிளம்பணும்“ என்று ரவி கோபமாகச் சொன்னான்

அவனை நோக்கி புகையை ஊதியபடியே தாத்தா சொன்னார்

“நான் வரமுடியாதுன்னா என்ன செய்வீங்க“

“அடிச்சி இழுத்துட்டு போவோம்“ என்றான் ரவி

“அம்புட்டுத் தைரியம் இருக்கா“ என்றபடியே புகையை ஊதினார் தாத்தா

எனக்குத் தாத்தாவை பார்க்க வியப்பாக இருந்த்து. அவர் போலீஸ்காரர்களைப் பார்த்து பயப்படவேயில்லை. அவர்களை மிரட்டுகிறார். உறுதியான குரலில் பேசுகிறார்.

கான்ஸ்டபிள் சிவசாமி ரகசியமான குரலில் எதையோ ரவியிடம் சொல்வது கேட்டது. ரவி தலையாட்டினான்.

தாத்தா அதைக் கவனித்தவர் போலச் சொன்னார்

“இப்படி தான் அந்தச் சர்வேயர் கிறுக்கன் ஏறுக்குமாறா பேசிகிட்டு இருந்தான். அதான் அவன் மண்டையில கடப்பாரையாலே போட்டேன். தலைமுறையா ரோட்டடி நிலம் எங்களுது. பட்டா இருக்கு.. வரி கட்டியிருக்கோம். அதைப் போயி கவர்மெண்ட் புறம்போக்குனு அந்தக் கிறுக்கன் சொல்றான். ஒரு நியாயம் வேணாம். நானும் கிளிபிள்ளைக்குச் சொல்ற மாதிரி படிச்சி படிச்சி சொன்னேன். அவன் கேட்கலை. நிலத்தை அளந்து கல்லு நடப்போறேனு போனான். அதான் கடப்பாரை கம்பியாலே மண்டைல போட்டேன். “.

“கவர்மெண்ட் ஆபீசர் மேல கையை வச்சா என்ன நடக்கும்னு உமக்கு தெரியலை. எப்படியும் நாலு வருஷம் ஜெயில் தான்“ என்றார் சிவசாமி

“கவர்மெண்ட்னுனா அதுக்கு ஒரு நியாயம் வேணாமா.. எவனோ. எச்சிக்கலைப்பய கொடுத்த காசை வாங்கிட்டு என் நிலத்தைப் புடுங்க வந்தா பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா“

“உம்ம நிலம்னா.. கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே“

“வக்கீலுக்கு யார் தண்டச் செலவு செய்றது. அதான் நானே அவன் மண்டையில நாலு போட்டேன் “

“கதையடிச்சது போதும் கிளம்புங்க“ என்றான் ரவி

தாத்தா சிகரெட்டினை அணைத்து எறிந்தபடியே சொன்னார்

“ இப்போ வரமுடியாது உன்னாலே ஆனதை பாரு“

இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. சிவசாமி ஏதோ சொல்ல முயன்றார். அதற்குள் தாத்தா எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்தார். சிவசாமியும் ரவியும் அவர் பின்னாடியே ஏதோ சொல்லியபடி வேகமாக நடந்தார்கள். அதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது..

வெயிலோடி கிடந்த வீதியில் தாத்தா வேகமாக நடந்து கொண்டிருந்தார். தெருநாய் ஒன்று புதிதாகத் தெரிந்த போலீஸ்காரர்களைக் கண்டு குலைத்தது. தாத்தா மடத்திற்குப் போன போது அங்கே யாருமில்லை. தாத்தா மடத்தினுள் ஏறி தூணை ஒட்டி உட்கார்ந்து கொண்டார்

சிவசாமி மட்டும் மடத்துப் படியில் நின்றபடியே சொன்னார்

“கோவிச்சிகிட்டா எப்படி.. உச்சிக்குக்குள்ளே போயிரலாம்னு நினைச்சேன். நாலு ரோட்டில ஒரு மணி பஸ்ஸை விட்டா திரும்ப மூணு மணிக்கு தானே. பஸ் வரும்“

“ அப்போ  மூணு மணிக்கு போவோம்“

சரியென அவர்கள் தலையாட்டியபடியே மடத்து நிழலில் உட்கார்ந்து கொண்டார்கள்

“ஒரு ஆட்டம் போடுவமா“ என்று கேட்டார் சிவசாமியிடம் கேட்டார் தாத்தா

சிவசாமியும் தலையாட்டினார்

இருவரும் ஆடுபுலி ஆட்டம் ஆட ஆரம்பித்தார்கள். தாத்தா உற்சாகமாகத் தனது புலிகளை எடுத்துக் கொண்டார். ரவி ஒரு தூணில் சாய்ந்தபடியே அவர்கள் விளையாட்டினை பார்த்துக் கொண்டிருந்தான். ஆடுகளை வைத்து புலியை அடைக்கப் போராடிக் கொண்டிருந்தார் சிவசாமி.

நான் அவர்களை வியப்போடு பார்த்தபடியே இருந்தேன் தாத்தா முகம் உற்சாகத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது.

“கலர் குடிக்குறீங்க“ என்று விளையாடியபடியே தாத்தா கேட்டார்

சிவசாமி தலையாட்டினார்

தாத்தா என்னை நோக்கி திரும்பி “மூணு பவண்டோ வாங்கிட்டு வா“.

“காசு“ என்று தாத்தாவை நோக்கி கேட்டேன்

“நான் சொன்னேன்னு பாண்டிகிட்ட சொல்லு. குடுப்பான்“

நான் மூன்று பவண்டோ பாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்தபோது தாத்தா ஜெயித்திருந்தார். தாத்தா தன் கைகளால் கலர்பாட்டிலை திறந்து அவர்களைக் குடிக்க வைத்தார். பாதிப் பாட்டிலை தான் குடித்துவிட்டு மீதியை என்னிடம் நீட்டினார் தாத்தா. அதைச் சொட்டுச் சொட்டாக ருசித்துக் குடித்தேன்

••

அந்த இரண்டு போலீஸ்காரர்களும் மதியம் தாத்தாவோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். வேணியக்கா வீட்டில் இருந்து இரண்டு சில்வர் தட்டுகளை இரவல் வாங்கி வந்தேன். தாத்தா பழைய அலுமினியத் தட்டில் சாப்பிட்டார். பாட்டி சோற்றை அள்ளி அள்ளி வைத்தாள்.

“ தேங்காதுவையல் அரைச்சி வச்சிருக்கலாம்லே“ என்றார் தாத்தா. அது அவருக்குப் பிடித்தமானது. சோற்றில் பிசைந்து சாப்பிடுவார்.

“பொட்டல்பட்டிகாரிகிட்ட கேளு… ஆக்கிப் போடுவா. “ என்றாள் பாட்டி. அதன் பிறகு தாத்தா பேசவில்லை. சாப்பிட்டு முடித்துத் தண்ணீர் சொம்பை கையில் எடுக்கும் போது சொன்னார்

“சுரைக்கா கூட்டு ருசியா இருந்துச்சி “

இப்படிச் சாப்பாட்டினை அவர் ஒரு போதும் பாராட்டி சொன்னதேயில்லை. பாட்டி சேலையால் முகத்தைத் துடைத்தபடியே சொன்னாள்

“இன்னைக்குத் தான் நாக்குல ருசி தெரியுதாக்கும்“

தாத்தா சிரித்துக் கொண்டபடியே எழுந்து கொண்டார்.

பின்பு கல்யாண வீட்டிற்குக் கிளம்புவது போல டிரங் பெட்டியில் மடித்து வைத்திருந்த மேல்சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டார். துவைத்து வைத்திருந்த பளுப்பு நிற வேஷ்டி ஒன்றை கட்டிக் கொண்டார். சாமி படத்தின் முன்பாக நின்று திருநிறு பூசிக் கொண்டார். பிறகு பாட்டியிடம் அமைதியான குரலில் சொன்னார்

“வேலம்மா.. பெட்டிக்கடைக்கார பாண்டிக்கு  கலர் வாங்குனதுக்கு ரூவா குடுக்கணும். அதை மறக்காம குடுத்துரு.. சோமு மவன் நமக்கு இருபத்தைந்து ரூவா தரணும். அதை வாங்கிக் கோ.. இந்த ஆடு ரெண்டையும் வித்துரு.. தேவையில்லாமல் வக்கீலுக்குக் காசை கொடுத்து கோர்ட்க்கு அலைய வேண்டாம். எத்தனை வருஷம் என்னை ஜெயில்ல போடுறாங்களோ போடட்டும். இந்தப் பயல நல்லபடியா பாத்துக்கோ.. “

ஏதோ ஊருக்கு கிளம்புகிறவர் போலக் கடகடவெனச் சொல்லிக் கொண்டிருந்தார்

சிவசாமி அவரது கையில் விலங்கை மாட்டினான். சந்தைக்கு அழைத்துச் செல்லப்படும் ஆடு போவது போல. தாத்தா மௌனமாக அவர்களுடன் நடந்து போக ஆரம்பித்தார்

தெருவில் ஆள் நடமாட்டமில்லை. கையில் விலங்கிட்டு தாத்தா போவது என் மனதை உறுத்தியது.

முற்றியபாகு போல வெயில் வழிந்த வீதியில் அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். நான் தாத்தாவின் பின்னாடியே நடந்து போனேன்

மடத்தைக் கடந்து போகையில் ஏனோ அதைத் திரும்பி பார்த்துக் கொண்டார்

ஊரை விலக்கிய மண்சாலையில் அவர்கள் நடந்து போன போது தாத்தா திரும்பி பார்த்து சொன்னார்

“நீ எதுக்குடா பின்னாடியே தொயங்கட்டிகிட்டு வர்றே. வீட்டுக்கு போ“

“நாலு ரோடு வரைக்கும் வாரேன்“

“அதெல்லாம் ஒரு மசிரும் வேணாம்“ என முறைத்தபடியே சொன்னார்

நான் தயங்கியபடியே நின்று கொண்டேன்.

தாத்தாவும் அவர்களும் வெயிலோடு நடந்து கொண்டிருந்தார்கள்.

இனி எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தாத்தா திரும்பி வருவார். அவரை எப்போது காண முடியும் என்ற நினைப்பு மனதை வேதனைப்படுத்தியது.

அவர்கள் பின்னாடியே ஒடினேன். இரட்டை பனைகளைத் தாண்டி அவர்கள் போகும்போது மூன்று நிழல்கள் நீண்டு சரிந்தன. நான் தொலைவில் நின்றபடியே தாத்தா என்று பலமாகச் சப்தமிட்டேன்

அது அவருக்குக் கேட்டிருக்கக் கூடும். ஆனால் அவர் என்னைத் திரும்பி பார்க்கவேயில்லை.

யாரோ தெரிந்தவருக்குப் பெண் பார்க்க போவது போலத் தாத்தா இயல்பாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது நிழல் கம்பீரமாக நிலத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது

தாத்தாவின் இந்தக் கம்பீரத்தை அங்கீகரிப்பது போலக் குயில் ஒன்று எங்கிருந்தோ இனிமையாகச் சப்தமிட்டது. எனக்கோ அந்தச்சப்தம் பிரிவை மேலும் அதிகப்படுத்துவதாகத் தோன்றியது

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2022 06:48

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.