S. Ramakrishnan's Blog, page 75
November 9, 2022
நெற்றியில் தேள் கொண்டவள்
ரஃபேல் வரைந்த எலிசபெத் கோன்சாகா உருவப்படத்தில் எலிசபெத்தின் நெற்றியில் ஒரு தேள் உருவம் காணப்படுகிறது. தேள் வடிவிலான தலைச்சுட்டி ஒன்றை எலிசபெத் அணிந்திருக்கிறார். இது அந்தக் காலத்தில் தீவினையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இளம்பெண்கள் அணிந்து கொள்ளக்கூடியது என்கிறார்கள். நிஜமாகவும் இருக்கலாம், எலிசபெத்தின் நெற்றியிலுள்ள தேள் அவளது சோகமான, எதையோ சொல்ல முயன்று தயங்குகின்ற முகத்திற்குக் கூடுதல் வசீகரம் தருகிறது. இந்த ஓவியம் 1504ல் வரையப்பட்டது

எலிசபெத் அர்பினோ டியூக்கின் மனைவி. கலை இலக்கியங்களில் தீவிர விருப்பம் கொண்டிருந்தவர். ஓவியத்தில் அவர் கறுப்பு உடையை அணிந்திருக்கிறார். அவரது உதடுகள் இன்னும் இளமையாக இருப்பதை உணர்த்துகின்றன
கழுத்தில் இரண்டு எளிய தங்கச் சங்கிலிகளை அணிந்துள்ளார். நெற்றியில் தேள் வடிவ நகை உள்ளது, அதில் ஒரு விலையுயர்ந்த கல் காணப்படுகிறது. இந்தத் தேள் வடிவத்தைக் காமத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். சிலர் இது விருச்சிக ராசியைக் குறிக்கிறது என்றும் சொல்கிறார்கள். இத்தோடு கருவுறுதலைக் குறிக்கவும் தேள் வடிவம் கொண்ட நகையை அணிவது வழக்கம் என்றும் கருதப்படுகிறது.

தனது கணவரின் மலட்டுத்தன்மை காரணமாகக் கருவுற இயலாமல் போனவர் எலிசபெத். அதைச் சுட்டிக்காட்டும்விதமாக இந்தத் தேள் வடிவ நகை அணியப்பட்டிருக்கலாம்.
ஓவியத்தின் பின்னணியில் அமைதியான, ஒளிரும் நிலப்பரப்புச் சித்தரிக்கப்படுகிறது. அதில் உயரமான மலை காணப்படுகிறது. எலிசபெத்திடம் வெளிப்படும் புன்னகை மர்மமானது. அவரது சற்றே தொங்கிய இடது கண்ணிமை, நீண்ட முகம், பெரிய நெற்றி, நேர் கொள்ளாத கண்கள் தனித்த வசீகரம் கொண்டிருக்கின்றன. இந்த ஓவியத்தில் எலிசபெத் ஏதோ பதற்றத்தை மறைக்க முயல்வதாகத் தோன்றுகிறது.

டியூக் கைடோபால்டோ மற்றும் அவரது மனைவி எலிசபெத் இருவரையும் ரஃபேல் வரைந்திருக்கிறார். ஆனால் டியூக் கைடோபால்டோ ஓவியம் இப்போது காணாமல் போய்விட்டது. 1497ல் போப்பாண்டவர் உத்தரவால் டியூக் கைடோபால்டோ சிறைபிடிக்கப்பட்டார். அந்தக் கால வழக்கப்படி அவரை விடுவிப்பதற்காகப் பணம் கோரப்பட்டது. குடும்ப நகைகளை விற்று எலிசபெத் பணத்தைத் திரட்டினார். ஆகவே தான் ஓவியத்தில் அவர் எளிமையாக இரண்டே தங்கச் சங்கிலிகள் அணிந்திருக்கிறார் என்கிறார்கள்.
எலிசபெத் அணிந்துள்ள தங்க ரேகை கொண்ட ஆடை திருமணப் பரிசாக அளிக்கப்பட்டது. எலிசபெத்திற்குக் குழந்தைகள் இல்லாததால் மிகவும் சோகமாக இருக்கிறாள். அதையே ரஃபேல் தனது ஓவியத்தில் துல்லியமாகச் சித்தரித்திருக்கிறார் என்கிறார்கள் கலைவிமர்சகர்கள்
ரஃபேலின் உருவப்படத்தில், எலிசபெத்தின் தலை சூரிய உதயத்தின் அடங்கிய ஒளிக்கு எதிராக நிமிர்ந்திருக்கிறது, . இது அவளது பார்வையைச் சூரியனுடன் இணைவு கொள்ளவைக்கிறது. சிறுவயதிலே தாயை இழந்தவர் என்பதால் தானோ என்னவோ அவரது பெண் உருவங்களில் கருணையும் சாந்தமும் அழுத்தமாக வெளிப்படுகிறது



ரஃபேலின் வரைந்த இருபதுக்கும் மேற்பட்ட மடோனாக்களில் நம்மைக் கவர்வது அவர்களின் கண்கள். ரஃபேல் போல முகபாவத்தையும் கண்களையும் வரைய முடியாது. குறிப்பாகத் துல்லியமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அந்த முகங்கள் அபாரமானவை.
டாவின்சி, மைக்கேலாஞ்சலோ என்ற இரு மேதைகளின் காலத்தில் உருவாகி அவர்களின் பாதிப்பில்லாத ஓவியராகச் சாதித்திருக்கிறார் ரஃபேல். ஓவியர் என்றாலே வறுமையும் நெருக்கடியும் கலகத்தன்மை கொண்ட வாழ்க்கை முறையே இருக்கும் என்பதிலிருந்து விலகி அமைதியான, வசதியான. பெயரும் புகழும் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் ரஃபேல். அவர் ஒரு அரசனைப் போல வாழ்ந்தார் என்கிறார் Lives of the Painters, Sculptors, and Architects என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதிய வசாரி.
ரஃபேல்லோ சான்சியோ ரஃபேல் 1483 – ல் மத்திய இத்தாலிய நகரமான அர்பினோ வில் பிறந்தவர். இவருடைய தந்தையும் ஒரு ஓவியர். அவரிடமே தனது ஆரம்பப் பாடங்களை ரஃபேல் கற்றுக் கொண்டார்.

ரஃபேலின் 11வது வயதில் அவரது தந்தை இறந்து போனார். தந்தையின் பூர்வீக சொத்துகள் அனைத்தும் அவரது மாமாவால் பாதுகாக்கப்பட்டன. இதில் பெரும்பகுதி ரபேலுக்குச் சொந்தமானது. தந்தையின் சொத்துகளில் பாதியை மாற்றாந்தாய் பெர்னார்டினா வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆகவே செல்வமும் செல்வாக்கும் கொண்ட இளமைக் காலத்தினை ரஃபேல் பெற்றார். நாடக அரங்கிற்கான திரைகள் மற்றும் அரங்க அமைப்பை உருவாக்குவதிலும் ரஃபேல் ஈடுபட்டிருக்கிறார். அத்துடன் அவர் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தெய்வீகத்தன்மை கொண்ட ஓவியராக அறியப்பட்ட ரபேலை லியோனார்டோ டாவின்சிக்குச் சமமாகக் கருதினார்கள். இதனால் பெரும் வணிகர்கள் மற்றும் உயர் தட்டுக் குடும்பங்களுக்கான ஓவியம் வரையும் பணி அவருக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டது.
1500- ஆம் ஆண்டில் அர்பினோவில் இருந்து பெர்கியா சென்று. புகழ்பெற்ற ஓவியரான பியட்லோ பெர்கினோ உடன் இணைந்து தேவாலயத்தில் புனிதர்களின் ஓவியம் மற்றும் பைபிள் காட்சிகளை வரையும் பணிகளை மேற்கொண்டார்.
21 வயதில் பிளாரன்சுக்கு ரஃபேல் சென்ற போது மைக்கேலாஞ்சலோ புகழின் உச்சத்திலிருந்தார். அவரது டேவிட் சிற்பம் அப்போது தான் உருவாக்கப்பட்டிருந்தது. இன்னொரு பக்கம் லியோர்னாடோ டாவின்சி, புகழ்பெற்ற ஒவியராகக் கொண்டாடப்பட்டு வந்தார். . டாவின்சியின் மோனாலிசா ஓவியத்தால் வசீகரிக்கப்பட்ட ரஃபேல் அதன் சாயலில் கன்னிமேரி ஓவியங்களை வரையத் துவங்கினார்.
1508 – ல் இரண்டாம் ஜூலியஸ் போப்பின் மாளிகையை அலங்கரிக்கும் பொறுப்பு ரஃபேலிடம் வழங்கப்பட்டது. அதைத் திறம்படச் செய்த காரணத்தால் போப்பின் நன்மதிப்பைப் பெற்றார். அதன் காரணமாக வாடிகன் அரண்மனை நான்காவது தளத்திலுள்ள நான்கு அறைகளுக்கு ஓவியம் வரையவும், புதிய கட்டிடங்களை உருவாக்கவும் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. அங்கே ரபேலும் அவரது குழுவினர்களும் அசாத்தியமான கலைப்படைப்புகளை உருவாக்கினார்கள். கலை வாழ்வின் உச்சத்திலிருந்த ரஃபேல் எரிநட்சத்திரம் போலத் தனது 37 வயதில் காய்ச்சல் காரணமாக இறந்து போனார்.

சிஸ்டைன் தேவாலயத்தின் சுவர்களில் ரஃபேல் வரைந்த அழகிய ஓவியங்கள் காலத்தைக் கடந்து இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. ‘லா ஃபோர்னாரினா’ என்ற பெண் உருவப்படமே அவர் கடைசியாக வரைந்தது., இந்தப்படத்திலிருப்பது அவரது காதலியும் மாடலுமான மார்கெரிட்டா என்கிறார்கள். ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

ரஃபேலின் கலை பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பகால நவ-லத்தீன் கவிதைகள் மற்றும் தொன்மங்களை ஆதாரமாகக் கொண்டது
அவர் ஆடைகளை வரைந்துள்ள விதமும் நிறத்தேர்வும் மிகவும் தனித்துவமானது. அவர் ஓவியத்திற்குள் உணர்ச்சிப்பூர்வமான நாடகம் ஒன்றை நிகழ்த்திக் காட்டுகிறார். குறிப்பாகப் பைபிள் காட்சிகளைச் சித்தரித்த விதத்தில் அதில் வரும் உணர்ச்சிகளின் தீவிரத்தை மேல் கீழாக உருவங்களைச் சித்தரிப்பதின் வழியே உணர்த்திவிடுகிறார். ரஃபேல் வரைந்த சிறகுள்ள குழந்தைகளை எப்படி மறக்கமுடியும். அவர்கள் வானுலகின் குழந்தைகள். அந்தக் குழந்தைகளின் முகத்தில் களங்கமின்மையும் ஆர்வமும் வெகு நேர்த்தியாக வெளிப்படுகின்றன
ரஃபேலின் கோடுகள் நடனமாடுகின்றன. அழுத்தமாகவும் பறத்தலுடனும் கோடுகளை வரைந்திருக்கிறார். அவரது கோட்டோவியங்களில் மனிதர்களின் உடல்கள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ இயக்கத்துடன் சித்தரிக்கப்படுகின்றன. அதில் வெளிப்படும் லயம் நிகரில்லாதது

ரஃபேலின் ஒவியம் பற்றிய இந்தக் கவிதை அவரது ஒவியத்தின் இயல்பையும் அவர் சித்தரித்த பெண்களின் அபூர்வத்தையும் அழகாக விவரிக்கிறது.
if i were a raphael painting
she would be unclothed
all her secrets laid out
in the late summer sun
streaming through the open window
she would face the painter
her almost-green-but-not-quite eyes
wide with a fear and a thrill
never felt until now
her rosebud lips twitch in a half smile
as though she is afraid
the happiness will be lost if she grins too wide
her chocolate brown hair
curls just above narrow shoulders
sprinkled with cinnamon freckles
the artist paints with a tender hand
capturing both innocence and allure
and when he is done the girl is dressed and gone
and so the painting is hidden and gathers dust
until a curious boy unveils it years later
and hangs it above the fireplace
where his greedy eyes can feast on the girl’s secrets
day and night, he will try to unravel them
but distraction comes in shape of a skin and bone lover
so the painting is suppressed again
until another prying hand wipes the dust away
– yellah girl- Jan 2016
November 7, 2022
ஜாய்ஸின் டப்ளின்
ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய யூலிசிஸ் நாவலின் கடைசிவரி yes I said yes I will Yes.
மோலியின் கூற்றாக வரும் இந்த வரியில் வரும் யெஸ் என்பது ஒரு இடைவெட்டு. ஒரு ஆமோதிப்பு. தளர்வு, எதிர்ப்பின் முடிவு, நிதர்சனமான உண்மை. கடந்தகாலத்தின் குரல் எனப் பல்வேறுவிதங்களில் சொல்லலாம். இந்த வரியை மிகவும் சோகமாக வரி எனக் குறிப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். ஜாய்ஸ் இதை “the female word” என்கிறார்.

நாவலின் கடைசிப் பத்தி
“I was a Flower of the mountain yes when I put the rose in my hair like the Andalusian girls used or shall I wear a red yes and how he kissed me under the Moorish wall and I thought well as well him as another… then he asked me would I yes to say yes my mountain flower and first I put my arms around him yes and drew him down to me so he could feel my breasts all perfume yes and his heart was going like mad and yes I said yes I will Yes.”
சந்தேகம் மற்றும் நம்பிக்கையின்மையின் ஊடாகப் பயணம் செய்யும் இந்த நாவலின் கடைசிச் சொல்லாக யெஸ் இடம்பெற்றிருப்பது முக்கியமானது.. நாவலில் மோலியின் பங்கு சிறியதே. ஆனால் அவளது பார்வையில் தான் நாவல் நிறைவு பெறுகிறது. மோலி ப்ளூம் தனது கணவருக்கு அருகில் படுக்கையில் படுத்தபடியே இவற்றை யோசிக்கிறாள். முற்றுப்புள்ளியில்லாத இந்த நினைவோட்டத்தில் அவர்களின் கடந்தகாலம் விவரிக்கப்படுகிறது. இன்றைய கசப்புணர்வு, விலகலைத் தாண்டிய அவர்களின் இனிய உறவினை உணர்வது போல இந்த யெஸ் இடம்பெறுகிறது. மோலியின் தனிமொழியாகவே இதனைக் கருதுகிறார்கள்.

ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலிசிஸ் வெளியாகி நூறு ஆண்டுகள் ஆகின்றது. அதற்கான விளம்பரங்களில் ஜாய்ஸ் உருவத்துடன் Yes என அச்சிட்டுப் பெரிதாக வெளியிட்டிருக்கிறார்கள்
இன்னொரு வகையில் இந்த யெஸ் அவரை அயர்லாந்து அங்கீகரித்துக் கொண்டாடுவதன் அடையாளம். இந்தப் பெருமைகளும் அங்கீகாரமும் அவர் வாழும்போது கிடைக்கவில்லை. சூரிச்சில் தனது 59வது வயதில் அல்சருக்கான அறுவைசிகிச்சையில் நினைவிழந்து ஜாய்ஸ் இறந்த போது அயர்லாந்து அரசு சார்பில் எவரும் மரியாதை செலுத்தவில்லை. ஆனால் பிரிட்டன் அரசு மரியாதை செலுத்தியது. ஜாய்ஸின் நூற்றாண்டிற்குப் பின்பே அவர் அயர்லாந்தின் கல்சரல் ஐகானாக மாறினார். அவரது உருவம் அச்சிட்ட பணத்தாள் துவங்கி அவரது சிலைகள் நினைவகம் என அயர்லாந்து அவரைக் கொண்டாடியது

தனது நாற்பதாவது பிறந்த நாள் அன்று யூலிசிஸ் நாவல் வெளியாக வேண்டும் என்று ஜாய்ஸ் விரும்பினார். 2 பிப்ரவரி 1922 அன்று இந்நாவலின் முதற்பிரதி ஜாய்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
எதற்காகத் தனது பிறந்தநாளின் போது நாவல் வெளியாக வேண்டும் என ஜாய்ஸ் ஆசைப்பட்டார் எனத் தெரியவில்லை. அவருக்கு ஆருடத்தில் நம்பிக்கையிருந்தது என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

எளிதாகப் படிக்க இயலாத இந்த ஆயிரம் பக்க நாவல் உலகெங்கும் எழுப்பிய அலை எதிர்பாராதது. நவீன நாவலின் உச்சம் என ஒரு சாரார் கொண்டாடுகிறார்கள். இன்னொரு வகை விமர்சகர்களோ கழிப்பறை கிறுக்கல்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இந்த நாவலின் முதற்பதிப்பு டப்ளினிலுள்ள நினைவகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் புத்தகங்கள் முதற்பதிப்பாக வெளியாகின. அதில் நிறைய தவறுகள் இடம்பெற்ற காரணத்தால் பின்பு புதிய பதிப்பு உருவானது என்கிறார்கள். இந்த நாவலின் வெவ்வேறு பதிப்புகள் வெளியானதின் பின்பு சுவாரஸ்யமான தகவல்கள் நிரம்பியிருக்கின்றன.
நினைவுகளும் நிகழ்வுகளும் இணைந்து செல்லும் எழுத்தைப் படிப்பது உண்மையிலே மிகக் கடினமானதே. நாவலில் டப்ளின் நகரின் வீதிகளையும் அங்குச் சந்தித்த மனிதர்களையும் ஜாய்ஸ் துல்லியமாக எழுதியிருக்கிறார். அவரது நினைவில் டப்ளின் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்திருக்கிறது என்பதை நாவலின் வரிகளைப் பின்பற்றி இன்று மேற்கொள்ளப்படும் பயணங்கள் உறுதி செய்கின்றன.
என் இருபது வயதுகளில் யூலிசிஸ் நாவலைப் படிக்க ஆரம்பித்த போது ஐம்பது பக்கங்களைக் கூடத் தாண்ட முடியவில்லை. பின்பு வேறுவேறு தருணங்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்திருக்கிறேன். இந்த லாக்டவுனின் போது தான் நாவலை முழுமையாக வாசித்தேன். அப்படியும் நிறையப் புரியவில்லை. நிறைய உதவி நூல்களின் வழியே தான் புரிந்து கொள்ள முடிந்தது. அப்படியும் முழுமையாக புரியவில்லை என்பதே நிஜம்.
நாவலில் லியோபோல்ட் ப்ளூம் ஒரு நாள் முழுவதும் டப்ளின் நகரவீதிகளில் சுற்றியலைகிறான். முன்னறியாத நபர்களை சந்திக்கிறான். மதுவிடுதிகளுக்குச் செல்கிறான். தற்செயலாக ஸ்டீபன் டெடலஸ் என்ற இளம் எழுத்தாளனைச் சந்தித்து உரையாடுகிறான். வீடு திரும்ப மனதில்லாத ஒருவனின் அலைக்கழிப்புகளே நாவலின் பிரதானம். 18 அத்தியாயங்களாக நாவல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவை தனித்தனியே பிரிக்கப்படாமலே எழுதப்பட்டது என்கிறார்கள்.
History is a nightmare from which I am trying to awake என்ற ஸ்டீபன் டெடலஸின் வரியே நாவலுக்கான திறவுகோல் எனலாம். இந்த நாவலும் ஒரு வரலாற்றின் விடுபடுதலை தான் பேசுகிறது. அந்த வரலாறு எதனால் உருவாக்கபட்டிருக்கிறது என்பதை கேள்வி கேட்கிறது. நாவலின் ஊடாக கேள்விகளும் விவாதங்களும் முன்வைக்கபடுகின்றன. யார் யாரிடம் பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினம்.
அயர்லாந்தில் வசிக்கும் விளம்பரங்கள் சேகரிக்கும் வேலை செய்யும் யூதரான ப்ளூமின் வாழ்க்கையை விவரிக்கும் ஜாய்ஸ் தனது தேசம் யூதர்களை எப்படி நடத்தியது என்பதையும் கத்தோலிக்கத் தேவாலயங்களின் செயல்பாடு மற்றும் இறையியலைப் பற்றிய விவாதத்தை முன்னெடுக்கிறார்.
மனைவியின் கள்ள உறவைப் பற்றி அறிந்த ப்ளூம் அந்த நினைவுகளால் துரத்தப்படுகிறார். நகரவீதியில் சுற்றியலையும் ப்ளூம் விசித்திரமான நிகழ்வுகளால். மனிதர்களால் சூழப்படுகிறார். ஓரிடத்தில் அறியாத மரண ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார். வேறிடத்தில் அழகான, இளம்பெண்களின் மீதான நாட்டம் கொள்கிறார், சாலையில் பார்வையற்ற சிறுவனுக்கு உதவுகிறார். நாவல் முழுவதும் பல்வகையான உணவுக்குறிப்புகள் உணவகங்கள் மதுவிடுதிகள் இடம்பெறுகின்றன.

ஒரு அத்தியாயத்தில் ப்ளூம் தேசிய நூலகத்தினுள் செல்கிறார். வேறு ஒரு அத்தியாயத்தில் ஜெசுவிட் பாதிரியைச் சந்திக்கிறார். மரணம் காதல் மதுவிடுதி இசை, தோல்வி, கடந்தகால நினைவுகள் மற்றும் கிரேக்க சிற்பங்கள் குறித்த சந்தேகங்கள், யூதர்களின் பொருளாதார நிலை, தாயின் மரணம் எனக் கனவுக் காட்சிகள் போலத் தொடர்பில்லாத சம்பவங்கள் நடக்கின்றன
வீடு நகரம் என்பது இரண்டு மாறுபட்ட விஷயங்களில்லை. நகரம் என்பது பெரியதொரு வீடு என்றே ஜாய்ஸ் நினைக்கிறார். நகரத்தின் காட்சிகளைக் கொண்டு தனது வீட்டிற்கு ஒரு பாடலை புனைய முற்படுகிறார். அந்தப் பாடல் புரிந்து கொள்ளப்படாத உறவின், அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.
சம்பிரதாயமான நாவலைப் போல இதில் கதை வளர்த்தெடுக்கப்படுவதில்லை. மாறாக நிகழ்வுகள் சிதறடிக்கப்படுகின்றன. நினைவுகளாலும் எண்ணங்களாலும் இவை உருவாக்கபடுவதைக் காணமுடிகிறது. இத்தனை கடினமான, நாமே யூகித்துப் பின்தொடர வேண்டிய நாவல் எப்படி இவ்வளவு உச்சத்தில் கொண்டாடப்படுகிறது என்பது வியப்பானதே.
இதைப்பற்றிக் குறிப்பிடும் விமர்சகர் , வில்லார்ட் பாட்ஸ்
Certainly any intelligent reader can read and understand it, if he returns to the text again and again. He is setting out on an adventure with words. என்கிறார்.
இந்த நாவலைக் கொண்டாடும் எஸ்ரா பவுண்ட் நாவல் டப்ளினைப் பற்றியதாக இருந்தாலும் உலகின் எந்த நகரிலும் இதே அனுபவமே ஏற்படும். ஆகவே ஜாய்ஸ் விவரித்திருப்பது நவீன மனிதனின் பிரச்சனை. அதுவும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக எழுதியிருக்கிறார் என்கிறார்.
தனது காலத்தில் ஏற்பட்ட ஐரிஷ் அரசியல் மாற்றங்கள் மற்றும் புரட்சி பற்றி ஜாய்ஸ் எதையும் எழுதவில்லை. அவரிடம் தேசப்பற்றில்லை என்ற விமர்சனம் இன்றும் தொடர்ந்து வருகிறது
நாவலின் நூற்றாண்டினைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் அயர்லாந்தில் பலரையும் பேட்டி கண்டு வெளியிடுகிறார்கள். அவர்களில் பலர் நாவலைப்பற்றித் தகவலாகக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். சிலர் படிக்கத் துவங்கி பத்து இருபது பக்கங்களில் விட்டிருக்கிறார்கள். ஆனாலும் இளைஞர்களுக்கு ஜேம்ஸ் ஜாய்ஸ் ஒரு கவர்ச்சியான படிமம். அதை உயர்த்திப் பிடிக்க ஆசைப்படுகிறார்கள்.
தனது இளமையில் நாடகாசிரியர் இப்சனை ஆழ்ந்து படித்து அவரைப்பற்றிய விமர்சனக்கட்டுரையை ஜாய்ஸ் எழுதியிருக்கிறார். இப்சனின் நோராவின் சாயலை மோலியிடம் காணமுடிகிறது என்கிறார்கள்.
ஜாய்ஸ் Dubliners எழுதும் போது, அதற்குத் தேர்வு செய்திருந்த தலைப்பு Ulysses in Dublin. ஆனால் அந்தத் தலைப்பை வைக்கவில்லை. அந்த எண்ணமே பின்பு நாவலாக உருமாறியிருக்கிறது.
கிரேக்க நாடகங்களின் தனிமொழியைப் போலவே நாவலில் கதாபாத்திரங்கள் தனது எண்ணங்களை, குழப்பங்களை, கடந்தகால நினைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சொல் அதன் ஓசைக்காகவே பல இடங்களில் வெளிப்படுகிறது. முற்றுப்பெறாத வாக்கியங்கள். காட்சிகளைத் துண்டித்துத் துண்டித்துச் செல்லும் விவரிப்பு, பலநேரங்களில் நம்மைக் குழப்பமடையச் செய்கிறது
நாவல் ஒரு விளையாட்டுப் பலகை போலவே இருக்கிறது. விளையாட்டின் சாத்தியங்களைப் போலவே புதிய வாசிப்பு அதைப் புதியதாக்கிக் கொண்டேயிருக்கிறது
•••
November 3, 2022
ஓவியத்தில் சிறகடிக்கும் பறவைகள்
எனது பள்ளியில் வாரம் ஒரு நாள் ஓவிய வகுப்பு இருந்தது அதில் முதலில் வரைய கற்றுக் கொள்ளும் போது மாணவர்கள் அனைவரும் காகம் வரைவார்கள். காகத்தை வரைவது எளிதானது. சிறிய கோடுகளால் எளிதாக வரைந்துவிட முடியும். ஆனால் அதில் துல்லியமிருக்காது.
ஒரு குருவியை அல்லது புறாவை வரைவது அந்த வயதில் கடினமானது. ஆர்வமுள்ள சில மாணவர்கள் தோகை விரித்த மயிலை வரைவார்கள். துல்லியமாக வரைந்து பாராட்டுப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எவரும் ஆந்தையை, மீன்கொத்தியை, மரங்கொத்தியை வரைய முற்பட்டதில்லை. நாம் இன்று காணும் பறவை ஒவியங்களை முதலில் வரைந்தவர் எவர் என்று தெரியாது. மனிதர்களை, இயற்கைக் காட்சிகளை வரைவது போலவே விலங்குகளையும் பறவைகளையும் வரைவது தனித்த வகையாக அறியப்படுகிறது.

சீன நிலக்காட்சி ஓவியர்கள் தனது ஓவியங்களை இயற்கையின் அழியா வடிவமாகக் கருதினார்கள். இயற்கையை வரைவதன் வழியாக அதன் பிரம்மாண்டத்தை, தனித்துவத்தைப் பேரழகினைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்பினார்கள். இன்று அந்த நிலக்காட்சிகளை உருமாறியிருக்கின்றன. ஆனால் ஓவியத்தில் என்றும் மாறாத வடிவமாக அந்தக் காட்சி நிலைபெற்றுவிட்டது. கலையின் உன்னதம் என்பது இதுவே.
இது போலவே அமெரிக்காவின் பறவை இனங்களை அதன் வாழ்விடத்திலும், பறந்தலையும் தருணங்களிலும் வரைந்து பறவைகளின் ஓவியராக அறியப்படுகிறார் ஜான் ஜேம்ஸ் ஆடுபான்.
இவரது ஒவியங்களின தொகுப்பாக வெளிவந்துள்ள The Birds of America ஒரு அரிய கலைப்பெட்டகம். துல்லியமான அவதானிப்புடன் சரியான வண்ணத்துடன் மிகவும் நுணுக்கமாகப் பறவைகளை வரைந்திருக்கிறார்.
ஒவியப்பள்ளி எதிலும் பயிலாமல் சுயமாக ஓவியம் வரையக் கற்றுக் கொண்டவர் ஆடுபான்





பறவைகளை வரைவது எளிதானதில்லை. அதுவும் காட்டுப்பறவைகளை வரைவது என்றால் நீங்கள் ஒரு பறவையியலளாராக இருக்க வேண்டும். தொடர்ந்து பறவைகளை அவதானித்து மனதில் உள்வாங்கிப் பதிய வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்தாலும் கோடுகளால், வண்ணங்களால் தத்ரூபமாக ஓவியமாக்குவது எளிதானதில்லை. இதில் ஆடுபான் நிகரற்றவர். வண்ணப்புகைப்படத்தில் நாம் காணுவது போல அதே துல்லியம் அதே உயிருள்ள வண்ணங்கள். எப்படி இதை ஓவியத்தில் சாத்தியமாக்கினார் என்று வியப்பாகவே இருக்கிறது
கரீபியத்தீவின் கரும்புத்தோட்டத்தில் 1785ல் பிறந்தவர் ஆடுபான். இவரது தந்தை பிரெஞ்சு கப்பற்படையில் பணியாற்றினார். இவர்களுக்குச் சொந்தமாகப் பெரிய கரும்புத்தோட்டமிருந்தது. ஆடுபான் பிறந்த சில மாதங்களிலே அவரது அன்னை இறந்து போனதால் அவர் கரீபிய பெண்ணால் வளர்க்கப்பட்டார். தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சனை காரணமாக அவரது தந்தை நிலத்தை விறறுவிட்டு பிரான்சிற்குக் குடிபெயர்ந்தார். அங்கே தனது ஆரம்பக் கல்வியை ஆடுபான் பயின்றிருக்கிறார். பிரான்சிலிருந்த போதே அவர் பறவைகளை வரைய கற்றுக் கொண்டிருந்தார்.

அவரது பதினெட்டாவது வயதில் ஆடுபானின் தந்தை கள்ளபாஸ்போர்ட் ஒன்றின மூலம் அவரை அமெரிக்கா அனுப்பி வைத்திருக்கிறார்.
அமெரிக்காவில் தந்தையின் நண்பருக்குச் சொந்தமாக ஒரு பண்ணை இருந்தது. அதில் தந்தைக்கும் ஒரு பங்கு இருந்த காரணத்தால் வணிகம் செய்து வாழலாம் என அமெரிக்கா சென்றார்.
ஆனால் கப்பல் பயணத்திலே விஷக்காய்ச்சல் பாதித்த காரணத்தால் சிகிச்சை முடியும் வரை குடில் ஒன்றில் தனித்து வசிக்கும்படி நேரிட்டது. பூர்வ குடி இந்தியப்பெண் தான் அவரைக் கவனித்துக் கொண்டார்.
மில்க்ரோவ் என்ற 284 ஏக்கர் பண்ணையில் வசிக்கத் துவங்கிய ஆடுபான் வேட்டையாடுவதிலும் இசை கேட்பதிலும் ஓவியம் வரைவதிலும் நேரத்தைச் செலவிட்டார். வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் காட்டில் நிறையச் சுற்றி அலைந்திருக்கிறார். அவர் செய்த வணிகம் தோல்வி அடையவே கடன் தொல்லை அதிகமானது. ஒருமுறை கடனுக்காகச் சிறை சென்றிருக்கிறார் .இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்காக ஓவியம் வரையத் துவங்கினார். அப்போது தான் அவரது கவனம் பறவைகளை வரைவதில் திரும்பியது.
அரிய பறவை இனங்களை ஆழ்ந்து அவதானித்து அதன் செயல்பாடுகள் மற்றும் வாழ்முறையை அறிந்து கொண்டார். அத்தோடு பறவைகள் எங்கே ஒன்று கூடுகின்றன. எப்படி இரைதேடுகின்றன. அதன் இறகின் வண்ணங்கள் மற்றும் அலகு, கால்களின் தனித்துவத்தை ஆராய்ந்து அவற்றைத் தனது ஓவியத்தில் துல்லியமாக வரைந்திருக்கிறார்
அலெக்சாண்டர் வில்சன் என்ற புகழ்பெற்ற பறவையியலாளரின் அறிமுகமும் நட்புமே அவருக்குப் பறவைகளை வரைவதில் அதிக நாட்டத்தை உருவாக்கியது.

வட அமெரிக்காவின் முழுமையான பறவைகளின் பட்டியலை உருவாக்கியதோடு அதன் ஓவியங்களையும் ஆடுபான் உருவாக்கியிருக்கிறார். இதில் அவர் கண்டறிந்த 25 புதிய பறவைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற இவரது ஒவியங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அதை அச்சிட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யத்துவங்கினார். இதன் மூலம் வருவாய்க் கொட்டியது. அவரது புகழ்பெற்ற பறவை ஓவியங்கள் யாவும் அஞ்சல் அட்டை அளவில் இன்றும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை தொகுக்கப்பட்டுத் தனி நூல்களாகவும் வெளியாகியுள்ளன
ஆடுபானின் வாழ்க்கை சாகசங்களால் நிரம்பியது. அவரது வேட்டையைப் பற்றி நிறையக் கதைகள் உலவுகின்றன. வேட்டை துப்பாக்கி மற்றும் நாயுடன் அவர் அமர்ந்துள்ள ஓவியம் மிக அழகானது. அதில் நாய் படுத்துள்ள விதமும் அதன் முகபாவமும் அத்தனை வசீகரமாகயிருக்கிறது.

தனது பக்கத்துப்பண்ணையில் வசித்த லூசி மேக்வெல் மீது காதல் கொண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார் ஆடுபான். லூசி இசையிலும் புத்தக வாசிப்பிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். அவரது துணை ஆடுபானின் ஒவிய விருப்பத்தைத் தீவிரப்படுத்தியது என்கிறார்கள். ஆடுபானின் வாழ்க்கையை லூசி ஒரு நூலாக எழுதியிருக்கிறார்.
அவர்களின் வீட்டிற்குள் ஒரு அருங்காட்சியகமே உருவாக்கப்பட்டிருந்தது. அதில் விதவிதமான பறவைகளின் முட்டைகள் இருந்தன. மற்றும் பாடம்செய்யப்பட்ட அணில்கள் பறவைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன, சுற்றிலும் உள்ள அலமாரிகளில் மீன்கள், தவளைகள், பாம்புகள், பல்லிகள் மற்றும் பிற ஊர்வன போன்றவற்றின் மாதிரிகள் நிறைந்திருந்தன. சுவர் முழுவதும் அவர் வரைந்த இயற்கை ஓவியங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன,
பறவைகளின் வலசை போவதை அடையாளம் காண்பதற்காக அதன் கால்களில் வெள்ளிநூல் ஒன்றைக் கட்டிவிடுவதை ஆடுபான் பின்பற்றினார். இந்த முறையே பின்பு நவீனமயமாக்கப்பட்டது.
அவரிடம் தொலைநோக்கியோ கேமிராவோ கிடையாது என்பதால் துல்லியமாகப் படம் வரைய வேண்டும் என்பதற்காகப் பறவைகளை வேட்டையாடியிருக்கிறார். இறந்த பறவைகளின் இறகுகளைப் பாதுகாத்து வைத்ததோடு அதைத் துல்லியமாக ஆராய்ந்து படம் வரைந்திருக்கிறார். இது போலவே பறவைகளைப் பாடம் செய்தும் பாதுகாத்து வந்திருக்கிறார். இறந்த பறவையின் இறகுகள் சில மணிநேரங்களில் நிறம் மாறிவிடுவதால் அவற்றை உடனே வரைய வேண்டிய தேவையிருந்தது. பறவைகளை நேசித்தவர் என்றாலும் அதன் இறைச்சியை ருசிக்காமல் இருக்கவில்லை. பல்வேறு பறவைகளின் ருசி எப்படியிருக்கும் என்பதையும் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.
அவரது பண்ணையிலும் நிறைய அடிமைகள் இருந்தார்கள். அவர்களில் சிலரே அவரே விற்பனை செய்திருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறை குற்றச்சாட்டாக முன்வைக்கிறார்கள். பல படைப்புகளில், ஆடுபான் முதலில் பறவைகளை வரைந்தார் மற்றும் பின்புலங்கள் அவரது உதவியாளர்களால் வரையப்பட்டிருக்கின்றன
அவரது நீர்வண்ண ஓவியங்களில் இருக்கும் துல்லியம் வியப்பூட்டுகிறது. குறிப்பாகப் பறவைகளின் கண்களை அவர் வரைந்துள்ள விதமும் இறக்கைடியக்கும் விதத்தை அதே வேகத்துடன் லயத்துடன் வரைந்துள்ளதும் அபாரமாகயிருக்கிறது . வெளிர் பகுதிகளில் சிறிய வளைவு கோடுகள் மூலம் தனித்துவ அழகினை உருவாக்கியிருக்கிறார். அவர் வரைந்துள்ள கழுகுகள் உயிரோட்டமாகயிருக்கின்றன. இன்று அழிந்து போன சில பறவை இனங்களை இவரது ஒவியத்தில் மட்டுமே காணமுடிகிறது.

trumpeter swan ஓவியத்தில் ஆடுபான் கழுத்தை வளைத்து நிற்கும் அன்னத்தை மட்டுமே வரைந்திருந்தார். ஆனால் அதை நகலெடுத்த ஆங்கிலேய ஓவியர் அதில் ஒரு வண்ணத்துப்பூச்சியை இணைத்து வரைந்திருக்கிறார் என்கிறார் வாக்னர். இவர் ஆடுபான் ஓவியங்களின் மூலத்தை ஆராய்ச்சி செய்து வருபவர்.
ஆடுபான் காலத்தில் அமெரிக்காவில் அறிவியல் என்பது கல்விப்புலத்திற்கு மட்டுமானதில்லை. விருப்பமான தனிநபர்களும் அதில் இணைந்து செயல்படலாம். அப்படித் தான் இயற்கை வரலாற்றில் ஆர்வம் கொண்டு ஆடுபோன் பறவைகள், விலங்குகள் மற்றும் வன சூழல் குறித்து விரிவாக ஆராய்ந்து ஓவியங்களுடன் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு இயற்கை அறிவியல் மையங்கள் ஆதரவு அளித்திருக்கின்றன
1825 ஆம் ஆண்டுச் செப்டம்பரில் பறவையியல் வல்லுநரான சார்லஸ் போனபார்ட்டின் (பேரரசர் நெப்போலியனின் மருமகன்) அமெரிக்கப் பறவையியலின் முதல் தொகுதி வெளியானது அவரது உத்வேகத்தை அதிகப்படுத்தியது. அந்தத் தொகுப்பு போலவே தனது ஓவியங்களையும் தனிநூலாகத் தொகுத்து வெளியிட வேண்டும் என்று ஆடுபான் விரும்பினார். இதற்காக அவர் ஐரோப்பாவிற்குப் பயணம் மேற்கொண்டார். ஸ்காட்லாந்தின் சிறந்த மரச்செதுக்குபவர்களில் ஒருவரான வில்லியம் லிசார்ஸுக்கு ஆடுபான் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரது உதவியால் என்கிரேவிங் மூலம் ஆடுபானின் ஓவியங்கள் வெளியாகின. பின்பு, லண்டனைச் சேர்ந்த ஓவியரான ராபர்ட் ஹேவெல் மூலம் தனது ஓவியங்களை விற்பனைக்கு உரிய விதமாக என்கிரேவிங் செய்யத்துவங்கினார்.
தனது வெளியிட்டுத் திட்டத்திற்கு ஆதரவாகப் பணம் திரட்டுவதில் தொடர்ந்து சிக்கலை எதிர்கொண்டார். சந்தா மற்றும் கண்காட்சி மூலம் பணம் திரட்டுவது முன் வெளியிட்டுத் திட்டம் அறிவிப்பது எனப் பல்வேறு விதங்களில் முயற்சிகள் செய்தார். இருநூறு புத்தகங்கள் மட்டுமே முதற்பதிப்பாக வெளியிடப்படும் என அறிவித்து முன்விலை நிர்ணயம் செய்தார். அதற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாகப் பின்பு அவரது ஓவியங்கள் இயற்கை வரலாறு மியுசியங்களால் காப்பகங்களால் விலைக்கு வாங்கப்பட்டன.
இன்று அவரது பெயரிலே இயங்கி வரும் Audubon Society பறவைகள் பாதுகாப்பு மற்றும் பறவையியல் ஆய்வுகளில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.
November 2, 2022
அரவான் நாடகம்
நான் எழுதிய அரவான் நாடகம் சிறந்த நடிகரும் பதிப்பாளருமான கருணாபிரசாத் இயக்கி நடித்து பல்வேறு ஊர்களில் நிகழ்த்தப்பட்டது அந்த நாடகம் தனி நூலாகவும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு குயின்மேரீஸ் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. அரவான் நாடகம் மலையாளத்திலும் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளின் முன்பு புதுவையில் நாடக கலைஞர் சுகுமார் இந்த நாடகத்தை சிறப்பாக நிகழ்த்தினார்.

இப்போது இந்த நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி சிறுநாடகமாக உருவாக்கியிருக்கிறார்
பத்துநிமிஷங்கள் கொண்ட நாடகங்களுக்கான விழாவில் இடம்பெறுகிறது


Short+Sweet Theatre Festival 2022ல் அரவான் நிகழ்த்தப்படவுள்ளது.
மணிபாரதி இதனை நிகழ்த்துகிறார்.
நவம்பர் 17 மாலை 7 மணி
நவம்பர் 18 மாலை7 மணி
மற்றுமம் நவம்பர் 19 மதியம் இந்நாடகம் நிகழ்த்தப்படுகிறது
இடம்
Alliance Francaise of Madras.
Auditorium Edouard Michelin, 24, Nungambakkam College Road, Opposite Good Shepherd School, Subba Road Avenue, Chennai 600034
கட்டணம் ரூ 200
October 31, 2022
ரகசியக் கதைசொல்லி
ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் கதைத்தொகுப்பை எழுதியவர் யார் எனத் தெரியாது. அது ஒரு தொகைநூல். அதில் பல்வேறு காலகட்டங்களில் கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இன்று நாம் வாசிப்பது பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பிரெஞ்சு பதிப்பு. அதிலிருந்து ஆங்கிலப்பதிப்புகள் வந்திருக்கின்றன. ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்டன் மொழியாக்கமும் இது போலச் சொந்த சரக்குகள் கொண்டதே என்கிறார்கள். இன்று அரபு மூலப்பிரதிகளுடன் ஒப்பிட்டு நிறைய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளிப்படுகின்றன

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை மற்றும் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையும் ஆரம்பக் காலத்தில் அராபிய இரவுகள் தொகுப்பில் கிடையாது. அதைத் தொகுப்பில் இணைத்தவர் மொழிபெயர்ப்பாளர் கேலண்ட்
அவருக்குப் பின்பு மொழியாக்கம் செய்தவர்கள் எவரும் இக்கதை குறித்து ஆய்வு மேற்கொள்ளவில்லை. அப்படியே அதைத் தொடர்ந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். இன்று கேலண்டின் நாட்குறிப்பு வழியாக அராபிய இரவுகளின் மொழியாக்கம் பற்றி புதிய செய்திகள் கிடைக்கின்றன
கேலண்டிற்கு இந்தக் கதைகள் எப்படித் தெரியவந்தது என்பதைப் பற்றி எழுதும் பாலோ லெமோஸ் ஹோர்டா 1709 ஆம் ஆண்டில் கேலண்ட் ஒரு பயணியைச் சந்தித்த விபரத்தைக் கூறுகிறார்.

அந்தப் பயணியின் பெயர் ஹன்னா தியாப். சிரிய தேசத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞரான தியாப் தான் கேட்டறிந்திருந்த வாய்மொழிக்கதைகளைக் கேலண்டிடம் கூறியிருக்கிறார். அப்போது சொல்லப்பட்டது தான் அலிபாபா மற்றும் அலாவுதீன் கதைகள் என்கிறார் லெமோஸ். இதற்கான ஆதாரங்களையும் வரிசையாகப் பட்டியலிடுகிறார்.
தியாப் என்ற ரகசிய கதைசொல்லியின் மூலமே இந்தக் கதைகள் அரேபிய இரவுகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன
தியாப் பதினாறு கதைகளைக் கேலண்டிடம் கூறியிருக்கிறார். அவற்றில் பத்து உருமாற்றம் பெற்று அராபியக்கதை தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன
கேலண்டின் பிரெஞ்சு மொழியாக்கம் 1704 முதல் 1717 வரை பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
இந்தக் கதைகளுக்குத் தேவையான நுட்பமான தகவல்கள் மற்றும் சாகசங்களைத் தனது சொந்த பயணத்திலிருந்து கேலண்ட் உருவாக்கியிருக்கிறார். ஆகவே அது உண்மையான அரபுக்கதைப் போலத் தோற்றம் தருகிறது என்கிறார்கள்.
1679 இல், கேலண்ட் இஸ்தான்புல்லிற்கு மூன்றாவது முறையாகப் பயணம் செய்து தனது புத்தக வேட்டையை நடத்தியிருக்கிறார். அங்கே பல்வேறு கையெழுத்துப்பிரதிகளை விலைக்கு வாங்கியதோடு, துருக்கி வணிகர் ஒருவர் மூலமாகத் தனியார் நூலகம் ஒன்றை முழுவதுமாக வாங்கி அதிலிருந்த கையெழுத்துப்பிரதிகள் மற்றும் வரைபடங்களைச் சேகரித்துச் சென்றிருக்கிறார். ஓராண்டில் இருபது ஆண்டுகளுக்குத் தேவையான விஷயங்களைத் தான் சேகரித்துவிட்டதாக அவரது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.
இஸ்தான்புல் கிராண்ட் பஜாரின் புத்தக விற்பனையாளர்கள் தங்களிடமுள்ள கையெழுத்துப் பிரதிகளைக் கதைசொல்லிகளுக்கு கடனாகக் கொடுப்பது வழக்கம். காஃபி ஹவுஸில் மாலை நேரம் ஒன்று கூடும் மக்களிடம் அந்தக் கதைகளைக் கதைசொல்லிகள் சொல்லி மகிழ்வார்கள். அதை நேரில் கேட்டிருந்த கேலண்ட் கதைசொல்லிகளிடமிருந்தும் கையெழுத்துப்பிரதிகளைப் பெற்றிருக்கிறார்.
பிரெஞ்சில் தனது அரேபியக் கதைகளுக்குக் கிடைத்த வரவேற்பைப் பயன்படுத்திக் கொண்டு கேலண்ட் நிறையக் கதைகளை இப்படிச் சொருகியிருக்கிறார். அதை இப்போது அடையாளம் கண்டு வரிசைப்படுத்துகிறார்கள்

இன்று அலிபாபா கதையை எழுதியவராக தியாப்பை குறிப்பிடுவதோடு அவரது நாட்குறிப்பினையும் மொழிபெயர்த்து தனி நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
போர்ஹெஸ் அரேபிய இரவுகளின் மொழியாக்கம் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையின் மொழியாக்கத்தை அட்சரம் இதழில் வெளியிட்டிருக்கிறேன்.
அராபிய இரவுக்கதைகளுக்குள் இந்தியக் கதைகளும் ஒளிந்திருக்கின்றன. அதன் மாற்றுவடிவங்களை நாம் எளிதான இனம் காண முடியும்.
October 29, 2022
சேலத்தில்
சேலம் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசக சாலை இணைந்து நடத்தும் இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் எனது சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல் நாளை மாலை நடைபெறுகிறது.

October 27, 2022
காஷ்மீரின் குளிர் நிலவு
ஆஹா சாகித் அலியின் கவிதைகளை கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறுநூலாக வெளியாகியுள்ளது.

The Country Without a Post Office என்ற இவரது கவிதைத் தொகுப்பினை வாசித்திருக்கிறேன். சிறந்த கவிதைகளைக் கொண்டது.
ஆகா சாகித் அலி 1949ல் காஷ்மீரில் பிறந்தவர். அமெரிக்காவில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கேயே பல ஆண்டுகள் வசித்தவர். டிசம்பர் 8, 2001ல் மூளையில் ஏற்பட்ட கட்டியின் பாதிப்பால் காலமானார். புலம்பெயர்ந்த கவிஞராக அறியப்படும் சாகித் அமெரிக்காவில் வசித்தாலும் மனது காஷ்மீரையே சுற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்.

காஷ்மீர் பிரச்சனை சார்ந்து அவரது குரல் காஷ்மீரின் அழகிய நினைவுகளையும் நடப்பு துயரங்களையும் ஊடுருவிச் செல்கிறது. காஷ்மீரத்து மக்களின் அவல நிலையை, துன்பத்தை மிகவும் நுணுக்கமாக தனது கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
சாகித் அலியின் கவிதைகளில் இயற்கை மௌனசாட்சியமாக உள்ளது. பனியும் காற்றும் நிலவும் காஷ்மீர் பிரச்சனைகளின் உண்மையை அறிந்த சாட்சியமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒருவகையில் இந்த இயற்கை தான் அவர்களை ஆற்றுப்படுத்துகிறது என்றும் நம்புகிறார்
அவரது அஞ்சலகம் இல்லாத நாடு என்ற நீள் கவிதையில் அஞ்சலும் அஞ்சலகமும் இயல்பு வாழ்க்கையின் அடையாளமாகச் சுட்டப்படுகின்றன. அஞ்சலகம் மூடப்படும் போது உறவுகள் அறுபட்டுப் போகின்றன. புற உலகத்திலிருந்து அவர்கள் துண்டிக்கப்படுகிறார்கள். நேசிப்பவர்களின் சொற்களை இழந்துவிடுகிறார்கள். சாகித் அலி கடிதங்களைக் குறியீடாகக் கருதுகிறார். அவற்றின் வழியே சொல்லப்பட்டதைத் தாண்டிய நிறையப் புரிந்து கொள்ளப்படுகிறது. உணரப்படுகிறது என்கிறார்.
ஷங்கர் ராமசுப்ரமணியனை எது சாகித் அலியின் கவிதைகளை நோக்கி இத்தனை ஈர்ப்புக் கொள்ளச் செய்தது என யோசித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் ஒடுங்கியுள்ள சொந்த ஊர் மீதான விருப்பம். அம்மா மீதான அன்பு. இழந்து போன உறவு மற்றும் நட்பு குறித்த ஏக்கம் இவையே சாகித்தை மிகவும் தோழமையுடன் அணுகச் செய்திருக்கக் கூடும்.
காஷ்மீரத்து நிலவைப் பற்றிய இந்த கவிதையில் வரும் வெறுங்கை என்ற சொல் இயலாமையின் அடையாளமாகிறது. தொலைபேசி தொடர்பு துண்டிக்கபட்டதும் தண்ணீர் தொலைபேசி வடங்களிலிருந்து நீங்கிச் செல்கிறது. சொற்களால் தொடப்பட்ட அந்த நெருக்கத்தை இழந்த உணர்வை அழகாக கவிதை வெளிப்படுத்துகிறது.
••
ஓர் அழைப்பு
– ஆஹா சாகித் அலி
நான் கண்களை மூடுகிறேன். அது என்னை நீங்கவில்லை
காஷ்மீரின் குளிர் நிலவு
என் வீட்டை
உடைத்து நுழைந்து
என் பெற்றோரின் காதலைத் திருடுகிறது.
நான் எனது கைகளைத் திறந்து பார்க்கிறேன்:
வெறுங்கை, வெறுங்கை. இந்த அழுகையோ அந்நியமானது.
“நீ எப்போது வீட்டுக்கு வருவாய்?”
அப்பா கேட்கிறார், திரும்பவும் கேட்கிறார்.
சமுத்திரம் தொலைபேசி வடங்களுக்குள் இடம்பெயர்கிறது.
“நீங்கள் எல்லாரும் நிம்மதியாக இருக்கிறீர்களா?”
நான் கத்துகிறேன்
தொடர்பு மரித்துவிட்டது.
தண்ணீர் தொலைபேசி வடங்களிலிருந்து நீங்கிச் செல்கிறது.
கடல் அமைதியாக உள்ளது
அதன் மேலோ
குளிர்ந்த காஷ்மீரின் குளிர் நிலவு.
••
அதிகாலை நான்கு மணி, வேங்கை
– ஆஹா சாகித் அலி
இந்தப் பாழில் பதிக்க
எதுவோ ஒன்று காத்திருக்கிறது
ரோமம் மூடிய
எதுவோ ஒன்று
வெளியே
ஜனவரிப் பனியில்
இன்னமும் உறங்காமல் விழித்திருக்கிறது.
நான் ஜன்னலைத் திறக்கிறேன்:
பத்தாயிரம் மைல்களுக்கப்பால்
குமாவுனின் மலைச்சரிவுகளில்,
ஆட்கொல்லிக்கு அஞ்சி
குடியானவர்கள் வீட்டுக்குள் பூட்டியிருக்க,
அவர்களின் குடிசைகளோ
உறைபனிச் சாந்தால் சுற்றிப் போர்த்தப்பட்டுள்ளது.
எனக்கு முன்னால் மேஜையில்
காற்றுப் பக்கங்களைப் படபடக்க வைக்கிறது.
எதுவோ ஒன்று அசையத் தொடங்குகிறது:
கிராமத்தினர் மறுபடியும்
உயிர்ப்புக்குத் திரும்புகின்றனர்,
சூரியனோ அவர்களது குடிசைகளுக்கு
திரும்பவும் ஆடை அணிகளைப் பூட்டுகிறது.
கழுவத்தக்க வைகறையின் ஊதாக்களை
அது கழுவுகிறது.
புத்தகப் பக்கத்துக்கூடாக
எதுவோ ஒன்று அலைந்துலவுகிறது.
நன்றி
October 24, 2022
செராபியத்தின் அழிவு
அகோரா 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்

இப்படத்தில் அலெக்சாண்ட்ரியாவின் புகழ்பெற்ற நூலகம் அழிக்கப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது. எதற்காக நூலகத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அறிவின் சேகரமாகவும் அறிவியலின் ஊற்றுக்கண்ணாகவும் அது செயல்படுகிறது என்பதால் தான்.
நூலகத்தைக் காப்பாற்றுவதற்காக அதன் மாணவர்கள் போராடுவதும் நூலக வளாகம் அடித்து நொறுக்கப்பட்டு ஏடுகள் தீக்கரையாவதைப் பார்த்தபடியே ஹைபேஷியா தப்பியோடுவதும் மனதை உலுக்கக்கூடிய காட்சிகள்
இப்படம் 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, வானியலாளரும் தத்துவஞானியுமான ஹைபேஷியாவினை முதன்மைப்படுத்துகிறது. அத்தோடு அலெக்சாண்ட்ரியாவின் அன்றைய பெருமைகளையும் மதமோதல்களையும் விளக்குகிறது.
ஹைபேஷியா வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை தியோன் கணிதவியலாளர். அவர் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் காப்பாளராக இருந்தவர், அவரது முதன்மையான பணி “உலகின் அனைத்து அறிவையும் சேகரிப்பதாகும்”

செராபிய நூலகத்திலிருந்த அரிய ஏடுகளை ஆராய்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறிஞர்கள் வந்து போனார்கள்.. கி.பி 391 இல் இந்நூலகம் அழிக்கப்பட்டது, அந்த நிகழ்வை மையமாகக் கொண்டே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது
தியோன் தத்துவம், கணிதம் மற்றும் வானியல் ஆகியவற்றை ஹைபேஷியாவிற்கு கற்றுக் கொடுத்தார். தந்தையின் பள்ளியிலே ஆசிரியராக பணியாற்றினார்.
ஹைபேஷியா மாணவர்களுக்குக் கோள்களின் இயக்கம் பற்றி விவரிக்கும் காட்சி மிக அழகானது.

ஆண்கள் மட்டுமே கல்வி பயிலும் சூழலில் நிகரற்ற பெண் அறிஞராக ஹைபேஷியா செயல்படும் விதம் மற்றும் அவளது கனவுகளைப் படம் பேசுகிறது.
அகோரா படத்தைப் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் Nick Gillam-Smith இயக்கிய Alexandria: The Greatest City என்ற ஆவணப்படத்தைப் பார்த்தால் போதும். அந்த அடிப்படைகள் தெரியாவிட்டால் படத்தின் நிகழ்வுகளைப் புரிந்து கொள்வது கடினம்
அலெக்சாண்ட்ரியா ஆவணப்படம் பேகன்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையே நடந்த மோதல், அதன் காரணமாக அறிவுத்துறையில் ஏற்பட்ட நெருக்கடி என வரலாற்றின் இருண்ட பக்கங்களைப் பேசுகிறது ,அதில் அலெக்சாண்டரை கடவுளின் அவதாரமாகக் கொண்டாடிய எகிப்திய மக்களையும் பற்றியும் இந்த நகரம் உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் விரிவாகக் காட்டுகிறார்கள். குறிப்பாக நிலவறையினுள் உள்ள கட்டுமானங்களையும் தொல் படிவங்களையும் சிறப்பாக விளக்குகிறார்கள். அதில் அலெக்சாண்ட்ரியாவின் அரிய நூலகம் பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன. இந்த நகரம் அலெக்சாண்டரின் கனவு. ஆம். அவர் கனவில் ஒரு ஞானி தோன்றி இப்படி ஒரு நகரை உருவாக்கும்படி சொன்னார் என்கிறார்கள்.
ஹைபேஷியாவின் அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்று வியந்து கொண்டாடப்படுகின்றன. ஆனால் அவரது காலத்தில் அவை மதவிரோத செயல்பாடாக கருதப்பட்டது. அவர் விசாரணைக்கு ஆளானார்.

சூரியன் மற்றும் கோள்களின் இயக்கம் பற்றி ஆய்வு செய்த ஹைபேஷியாவை சூனியக்காரியாக அறிவித்து அவள் மீது மக்கள் கல்லெறிகிறார்கள். அவள் வேட்டையாடப்படுகிறாள்.
வரலாற்று நிகழ்வின் மீது உருவாக்கபட்ட புனைகதை என்பதால் இதில் காதல், துரோகம். அடிமையின் வாழ்க்கை என ஊடுஇழைகள் சேர்ந்து திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அலெக்சாண்ட்ரியா நகரின் அன்றைய தோற்றமும் வாழ்க்கையும் அரங்க அமைப்பு மற்றும் வரைகலை காட்சிகள் மூலம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
அஞ்சலி

தனித்துவமிக்க சிறுகதை படைப்பாளியாகவும் இடதுசாரி சிந்தனை கொண்ட தீவிர சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கிய தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களின் மறைவிற்கு எனது அஞ்சலி.
October 22, 2022
உறுபசி -வாசிப்பனுபவம்
அருளானந்தம்

சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்கு பிறகு என்று தொடங்குகிறது இந்த நாவல். சம்பத்தின் நண்பர்களான அழகர், ராமதுரை, மாரியப்பன் மற்றும் யாழினி இவர்களின் வழியே சம்பத்தின் மனைவியாகிய ஜெயந்தியும் அவரவர் பார்வையில் சம்பத்.
யார் இந்த சம்பத்?
அவன் ஏன் 42 வயதில் இறந்தான்?
பதின் பருவத்தின் கனவுகள் மிகவும் அலாதியானவை கனவுகள் மட்டுமல்ல ஆச்சரியங்கள், நம்பிக்கைகள், மூடத்தனங்கள் மற்றும் புத்திசாலித்தனங்கள் அனைத்தும் தான்.
கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை முதன்மை பாடமாகக் கொண்டு பயிலும் மாணவனாக சம்பத்.
தமிழின் மீதான பேரார்வம், கம்பராமாயணம் புத்தகத்தை எரித்து நான் ஏன் நாத்திகனானேன் பகத்சிங்கை படித்து, கல்லூரியில் இடைநின்று, தமிழை அரசியலாகக் கொள்ளும் அரசியல் கட்சியில் பேச்சாளராக மாற்றி விட்டது சம்பத்தை; ஓரிடத்தில் நிலை கொள்ள இயலாத சம்பத் மதுவின் மயக்கத்தால் யாரும் கண்டு கொள்ளப்படாமல் கட்சி கைவிட்டது.
சம்பத் இறந்திருக்கமாட்டான்:
யாழினியுடனான காதல் கை கூடி இருந்தால்…
தீப்பெட்டி தொழிற்சாலையிலேயே பணி புரிந்திருந்தால்…
தினசரி இதழில் பிழை திருத்துபவராக
சற்றே குற்ற உணர்வு கொள்ளாமல் இருந்திருந்தால்….
லாட்டரி சீட்டு வாங்காமல் இருந்திருந்தால்….
ஆதாமின் பெருங்காமக் கனவுகள் கைக்கொண்டு 25 வயதிற்குள் திருமணம் நடைபெற்று இருந்தால்….
செடிகளைப் போல தன் விருப்பம் போல வாழாதிருந்தால்…
மேடைப்பேச்சு எனும் தொற்றுநோய் தாக்காதிருந்தால் .. .
தமிழ் இளங்கலை பட்டம் சேராதிருந்தால்….
நண்பர்கள் இன்னும் கொஞ்சம் கருணையோடு இருந்திருந்தால். ..
மாமிசத்தை கிழிக்கும் கோரைப் பற்களை இந்தச் சமூகம் காட்டாமல் இருந்திருந்தால்…
சிறுவயதில் தங்கை சித்ராவின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்ற குற்றத்தின் தீராத மன வேதனை இல்லாமல் இருந்திருந்தால். ..
சம்பத்தின் அப்பா கட்டைகளைக் கொண்டு ரத்தம் வழிய வழிய அடிக்காமல் விட்டிருந்தால்…
கடற்கரையில் திரியும் காகம் மணலில் கிடைப்பதை எல்லாம் கொத்தி அலைவது போல் இல்லாமல் இருந்திருந்தால்…
சில்வண்டாக மாறி பிரச்சனைகளில் இருந்து தப்பித்து இருந்தால். …
துருப்பிடித்த சன்னல் கம்பியும் இரத்தக்கறைத் தோய்ந்த மருத்துவமனையும் இல்லாதிருந்தால்…
மனிதன் வாழ்வதற்கு பற்பல இலக்கணங்களை வகுத்துள்ளது இந்தச் சமூகம்.பொருள் ஈட்டல் சமூகத்தின் அடிப்படை தேவை யாகிறது. நிர்வாண உடலின் மேல் பற்பல வண்ண ஆடைகளுடன் வாசனை திரவியங்களும் இணைந்து மானுட உள்ளத்தின் உண்மை நிலையை மறைப்பதற்கு இந்த இலக்கணங்கள் உதவுகின்றனவோ?
அடிப்படையில் ஏற்படுகின்ற குற்ற உணர்வு அந்த குற்ற உணர்வின் காரணமாக ஏற்படும் பயம் இவை இரண்டும் மனப் பிறழ்விற்கு காரணிகள்
யார் இந்த சம்பத்? நோயாளியா ,மனநோயாளியா, காமுகனா , தமிழ் ஆர்வலனா .குடிகாரனா ,பிச்சைக்காரனா
இவன் யாருமல்ல, ஆம்! மேற்கண்ட அனைத்தும் தான்! சமூகத்தால் கட்டமைக்கப்படுள்ள ஒழுக்கங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாது விதிமீறல்களில் ஒருவனாக இருந்து வாழ்க்கையில் நிறைவுற்றவன்.
சம்பத்தை நாம் எளிதில் கடந்து செல்லலாம் ஆனால் சம்பத்தின் மனைவி ஜெயந்தியை என்றுமே கடக்க முடிவதில்லை!
உங்கள் பள்ளி அல்லது கல்லூரி நண்பர்கள் யாரேனும் இன்னும் உயிரோடு இருந்தால் அவர்கள் முகவரிக்கு ஒரு கடிதம் எழுதுங்கள் அல்லது தொலைபேசியில் ஒரு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்பையோ மேற்கொள்ளுங்கள்…
சம்பத்தின் இறப்பை நம்மாலும் தள்ளிப்போட முடியும் தானே?!
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
