S. Ramakrishnan's Blog, page 74

November 28, 2022

கடைசி குதிரைவண்டி – ஆங்கிலத்தில்

எனது கடைசி குதிரைவண்டி சிறுகதையை ஆர். சதீஷ் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்

இந்தக் கதை Usawa Literary Review இதழில் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2022 02:15

November 24, 2022

கனவு இல்லம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்லத் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.

2022-2023ஆம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வண்ணதாசன்,ஜி. திலகவதி, எஸ் இராமகிருஷ்ணன், பொன். கோதண்டராமன், சு. வெங்கடேசன். ப. மருதநாயகம், இரா. கலைக்கோவன், கா. ராஜன், ஆர்.என்.ஜோ.டி. குருஸ், ஆகிய பத்துத் தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

நான் எழுத்தை மட்டுமே நம்பி வாழுகிறவன். இதே சென்னையில் தங்குவதற்குச் சிறிய அறை கூட இல்லாமல் பல ஆண்டுகள் சுற்றியலைந்திருக்கிறேன். நிராகரிப்பும் அவமானமுமாக வாழ்ந்த அந்த நாட்கள் மனதில் நிழலாடுகின்றன. வேலை, சம்பாத்தியம் என எதுவுமில்லாமல் குடும்பத்துடன் சென்னை வந்த போது எத்தனை வாடகை வீடுகளில் வசித்திருக்கிறேன். எவ்வளவு துரத்தப்பட்டிருக்கிறேன் என்பதை நினைத்துக் கொள்கிறேன்.

வாசகர்களின் நிகரில்லாத அன்பும் அரவணைப்பும், பதிப்பகம், பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களின் உறுதுணையும், பல்வேறு இலக்கிய அமைப்புகள் மற்றும் அரசின் அங்கீகாரமுமே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது.

தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் தமிழக அரசின் கனவு இல்லத் திட்டம் முன்னோடியது. மிகுந்த பாராட்டிற்குரியது. இந்திய அளவில் எந்த அரசும் இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுக்கவில்லை. தமிழ் எழுத்தாளர்கள் மீது தமிழக முதல்வர் கொண்டுள்ள பேரன்பின் அடையாளமாகவே இதைக் காணுகிறேன்.

கனவு இல்லத் திட்டத்தில் எனக்கு வீடு வழங்கியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2022 20:29

November 20, 2022

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில்

நாளை தூத்துக்குடி புத்தகத் திருவிழா துவங்குகிறது.

முதல்நாளின் மாலை நிகழ்வில் உரையாற்றுகிறேன். ( 22.11.22)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2022 18:45

November 17, 2022

விருதுநகர் புத்தகத் திருவிழாவில்

நாளை (18.11.22 வெள்ளிகிழமை) மாலை விருதுநகர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன். விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

மதுரை ரோட்டிலுள்ள கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் புத்தகத்திருவிழா நடைபெறுகிறது.

பொதுநிகழ்ச்சி மாலை ஆறு மணிக்குத் துவங்குகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2022 00:28

November 15, 2022

பௌத்த மேகம்

வியட்நாமைச் சேர்ந்த பௌத்த துறவி திக் நியட் ஹான் (Thich Nhat Hanh) ஒரு ஜென் மாஸ்டர். Order of Interbeing எனத் தனக்கென ஒரு பௌத்த நெறிமுறையை உருவாக்கிக் கொண்டவர். உலகச் சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்காகப் போராடியவர். இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆவணப்படம். திக் நியட் ஹான்2022 இல் இறந்தார். அவரது Plum Village இதனை வெளியிட்டுள்ளது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2022 02:29

November 14, 2022

சித்திரப் பூ விழி வாசலிலே

சித்திரப் பூ விழி வாசலிலே வந்து யார் நின்றவரோ என்ற பாடலை நேற்றிரவு கேட்டுக் கொண்டிருந்தேன். பி.சுசிலாவும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடிய பாடல் இதயத்தில் நீ படத்தில் இடம்பெற்றது.

எழுதியவர் கவிஞர் மாயவநாதன். எத்தனை அழகாக எழுதியிருக்கிறார் என்று வியந்து மறுபடியும் கேட்டேன்.

தென்காசி மாவட்டத்தில் பூலாங்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் மாயவநாதன். சிறந்த திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறார். 35 வயதில் அமரராகிப் போனவர் மாயவநாதன். 10 ஆண்டுகளில் 24 படங்களில் மொத்தம் 54 பாடல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார்.

இந்தப் பாடலைக் கேட்கும் பலரும் இது கண்ணதாசன் எழுதியது என்றே நினைக்கிறார்கள். மாயவநாதனுக்குக் கிடைக்க வேண்டிய புகழும் பெருமையும் முழுமையாகக் கிடைக்கவில்லை. அவரது மறைவிற்குப் பிறகு குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது என்கிறார்கள். பசியால் சாலையில் விழுந்து உயிர் துறந்தார் என்கிறார்கள். உண்மையா எனத்தெரியவில்லை. ஆனால் தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் பணத்தினைப் பெரிதாக நினைக்காமல் விரும்பிய படங்களில் மட்டுமே பாடல்கள் எழுதியிருக்கிறார்.

படித்தால் மட்டும் போதுமா, திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தண்ணிலவு தேனிறைக்கத் தாழை மரம் நீர் தெளிக்கக் கன்னி மகள் நடை பயின்று சென்றாள் இவரது முதற்பாடல்.

பந்தபாசம் படத்தில் இடம் பெற்ற நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு போன்ற பாடல்கள் காலத்தை வென்றவை.

சித்திரப் பூ விழி வாசலிலே பாடலில் தோழியின் கேலியும் தேவிகாவின் பதிலும் மிக அழகாகச் சந்தச்சுவையும், கற்பனைத் திறனும் கொண்டு வெளிப்படுகின்றன. சொற்களால் இருவரும் பந்தாடுகிறார்கள். இரண்டு குரல்களும் குழைந்தும் முதிர்ந்தும் நம்மை கட்டிப் போடுகின்றன.

கட்டழகில் கவி கம்பன் மகனுடன்

ஒட்டி இருந்தவரோ இந்த

பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை

கற்றுத் தெளிந்தவரோ

உன்னை மட்டும் அருகினில் வைத்து

தினம் தினம் சுற்றி வருபவரோ இனி கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்

முத்தமிழ் வித்தகரோ

கலை முற்றும் அறிந்தவரோ

காதல் மட்டும் தெரிந்தவரோ

வண்ணக் கருவிழி தன்னில் வரும் விழி

என்று அழைப்பதுவோ

பசும் பொன்னிற் புதியதை கண்ணன் எனப் பெயர்

சொல்லி துதிப்பதுவோ (2)

ஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில் கவி

மன்னவன் என்பதுவோ இல்லை

தன்னைக் கொடுத்தனை தன்னில் மறைத்தவர்

வண்ணப் புது மலரே

அவர் நெஞ்சம் மலரில்லையே

மனம் எங்கும் நிறைந்தவரே

இன்று வழக்கொழிந்து போய்விட்ட பூவிழி வாசல் என்ற சொல் இந்த பாடலில் கேட்க எத்தனை புதியதாக இருக்கிறது. சங்க கவிதையின் சாயலில் எழுதப்பட்ட இந்த பாடல் பழந்தமிழ் பாடல்களின் நினைவு இழைகளோடு எழுதப்பட்டிருக்கிறது. அந்த இனிமை தான் காலத்தைக் கடந்து இதை ரசித்துக் கேட்க வைக்கிறது

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2022 23:37

November 12, 2022

மாநில கல்விக்கொள்கை உருவாகிறது.

தமிழக அரசு உருவாக்கியுள்ள மாநில கல்விக்கொள்கைக்கான உயர்மட்டக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றுகிறேன். நீதியரசர் முருகேசன் தலைமையில் இந்தக் கல்விக்குழு மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமே இது போலக் கல்விக் கொள்கைக்கான குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக அரசின் சிறந்த முன்னெடுப்பு என்பேன்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள். மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள். பெற்றோர்கள், கல்வியியல் அறிஞர்கள், பொதுமக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்து கொண்டேன்.

இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டோம்.

இதுதவிர மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கல்வி சார் அமைப்புகள். சிறுபான்மை கல்வி அமைப்புகள். கிறிஸ்துவ, இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனைகள், சட்டப்பல்கலைகழகம், மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அளவிலான பல்வேறு கல்வியியல் அறிஞர்களின் பரிந்துரைகள் என்று தொடர்ந்து கருத்துக் கேட்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கருத்துக்கேட்பு கூட்டத்தின் மூலம் பொதுமக்களின் எதிர்பார்ப்பு மற்றும் இன்றைய தேவைகள். பிரச்சனைகளை அறிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவில் இதுவரை வெளியாகியுள்ள பல்வேறு கல்விக்குழுவின் அறிக்கைகளையும் பரிந்துரைகளையும் வாசித்து ஆய்வு செய்து வருவதுடன், சர்வதேச அளவில் உள்ள கல்வி அறிக்கைகளையும் ஆழ்ந்து படித்துத் தேவையான விஷயங்களைத் தொகுத்து வருகிறேன்.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தனது துறையில் சிறந்து விளங்குபவர்கள். கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலைக் கொண்டவர்கள். மாற்றத்தை உருவாக்க நினைப்பவர்கள். அனைவரும் ஒன்றுகூடி புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம். நிச்சயம் மிகச்சிறந்த அறிக்கையாக அமையும் என நம்புகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2022 21:24

November 11, 2022

கண்ணுக்குத் தெரியாத பாதை

இருவேறு காலங்களில் பயணிக்கிறது மிமோசாஸ் (Mimosas) திரைப்படம். இரண்டினையும் இணைப்பது வியப்பான நிலப்பரப்பு. வாழும் போது நிலத்தோடு ஒருவருக்குள்ள பிணைப்பிற்கு இணையாதே மரணத்தின் பின்பு தனது சொந்த நிலத்தில் புதைக்கபடவேண்டும் என்பதும்.

அந்த ஆசையை நிறைவேற்றுவற்காக இருவர் மேற்கொள்ளும் கடினமான மலைப்பயணத்தையே படம் விவரிக்கிறது. பாதைகள் இல்லாத பயணம் ஒரு தளத்திலும் பாலைவனத்தில் டாக்சி ஒட்டுகளின் அதிவேகப் பயணம் வேறு தளத்திலுமாகப் படம் விரிவடைகிறது.

வயதான ஷேக் தலைமையில் ஒரு சிறிய கேரவன் சிஜில்மாசா நகரத்தை நோக்கி பயணிக்கிறது. அவர் தனது குடும்பத்தை அடைய சிஜில்மாசாவுக்குச் செல்ல முற்படுகிறார், தனது மரணம் தனது அன்புக்குரியவர்களிடையே நடைபெற வேண்டும் என்பதே அவரது இறுதி ஆசை. கேரவனைக் கொள்ளையடிக்க இரண்டு திருடர்கள் உடன் வருகிறார்கள்

பயண நேரத்தைக் குறைக்க மலைப்பாதை வழியாகப் பயணம் செய்யவேண்டும் என ஷேக் வலியுறுத்துகிறார். மற்றவர்கள் மலையின் குறுக்கே கடந்து போவதை விரும்பவில்லை. ஆனால் அவரோ உறுதியாக மலைப்பாதையில் செல்வது எனத் தீர்மானிக்கிறார். மற்றவர்கள் விருப்பமின்றி அவரைப் பின்தொடருகிறார்கள்..

பாதிவழியில் ஷேக் இறந்துவிடவே அவரது உடலை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. அவர் விரும்பியது போலவே சிஜில்மாசாவில் அடக்கம் செய்யத் தாங்கள் உதவி செய்வதாகச் சயத் மற்றும் அஹ்மத் என்ற இரண்டு திருடர்கள் முன்வருகிறார்கள். இதற்குக் காரணம் அவரது பொருட்களை அபகரித்துக் கொள்ளலாம் என்பதே.

பாதை தெரியாமல் மலையின் ஊடே பயணம் செய்கிறார்கள். கழுதை ஒன்றில் ஷேக்கின் உடல் துணியால் சுற்றி ஏற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பயணத்தின் நடுவே ஷாகிப் என்ற இளைஞன் இணைந்து கொள்கிறான்.

மூவரும் செங்குத்தான மலைதொடரைக் கடந்து செல்ல முயலுகிறார்கள். ஒரு நாள் இரவு உடலை சுமந்து செல்லும் கழுதையை அஹ்மத் ரகசியமாக விடுவித்துப் பயணத்தைத் தவிர்க்கலாம் என்று திட்டமிடுகிறான் ஆனால் ஷாகிப் அதைக் கண்டுபிடித்ததாக வேண்டும் வலியுறுத்துகிறான்

முதியவர் முகமது மற்றும் அவரது ஊமை மகள் இக்ராம் உதவியால் உடல் மீட்கப்படுகிறது. அவர்களும் பயணத்தில் இணைந்து கொள்கிறார்கள்.

வழியில் ஆற்றைக் கடந்து செல்லும் போது கொள்ளையர்களின் தாக்குதலை எதிர்கொள்கிறார்கள்.

இறந்த மனிதனின் ஆசையை நிறைவேற்றச் செல்லும் சயத் மற்றும் அஹ்மத் தங்கள் நம்பிக்கை மற்றும் விருப்பத்திலிருந்து திசைமாறுகிறார்கள். இறை நம்பிக்கை நம்மை வழிநடத்துமா என்ற கேள்வியை எழுப்புகிறது திரைப்படம்.

படம் மூன்று பகுதிகளாக உருவாக்கபட்டிருக்கிறது. இதை ஆன்மாவின் பயணத்திற்கான குறீயீடாகக் கருதுகிறார்கள்.

ஹெர்சாக்கின் Aguirre, the Wrath of God படத்தினை நினைவுபடுத்தும் காட்சிகள். ஆனால் இது வேட்கையின் பயணமில்லை. மீட்சியின் பயணம். தொழில்முறை சாராத நடிகர்களைக் கொண்டு மலை உச்சியினுள் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள். மௌரோ ஹெர்ஸ்ஸின் ஒளிப்பதிவு அபாரமானது. அதுவும் மலைப்பாதைகளில் குதிரைகளில் செல்லும் காட்சியும் விரிந்து பரந்த நிலவெளியும் இரவுக்காட்சிகளும் மிக அற்புதமாக உள்ளன

முட்டாள் போலத் தோற்றம் தரும் ஷாகிப் மெல்ல இறையுணர்வின் வழியே அதிசயங்களை உருவாக்க முயலுகிறான். மலையை எப்படிக் கழுதைகளால் கடக்க முடியும் என மற்றவர்கள் கேட்கும் போது அவன் பறந்து செல்லும் என்று பதில் தருகிறான். இது அர்த்தமற்றதாகத் தோன்றினாலும் அவனது ஆழமான இறை நம்பிக்கையின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்

சில தருணங்களில் ஷாகிப் ஞானியைப் போலவே நடந்து கொள்கிறான் உரையாடுகிறான். முழு நம்பிக்கையே வெல்லும் எனச் சொல்லிக் கொண்டேயிருக்கிறான்.

ஜான் போர்ட் படங்களைப் போலவே நிலக்காட்சியை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆலிவர் லாக்ஸ். இது அவரது இரண்டாவது படம்.

ஒரு காட்சியில் ஷாகிப் திருடன் அஹ்மத்தின் தோற்றத்தை ஷேக் போலிருப்பதாகச் சொல்கிறான். அதை ஏற்க மறுக்கும் அஹ்மத் தனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை என்கிறான். ஆனால் அவனும் இந்தப் பயணத்தின் வழியே புரிந்து கொள்ள முடியாத கடவுளின் செயல்களை உணர ஆரம்பிக்கிறான்.

வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இளம்பெண்ணும் பிணமும் மாட்டிக் கொள்வதைக் காணும் அஹ்மத் அவர்களைக் கைவிட்டு ஒளிந்து கொள்கிறான் ஆனால் ஷாகிப் அதை ஏற்கமறுத்து குரல் எழுப்புகிறான். அவனது வாயை அடைத்து உயிர்தப்புகிறான் அஹ்மத். முகமது கொல்லப்படுகிறார். அதன்பிறகு ஷாகிப் ஆத்திரம் தாங்க முடியாமல் நீ மனிதனே இல்லை என்று கூச்சலிடுகிறான் ஷாகிப். அஹ்மத் தன்னை அறியத் துவங்கும் புள்ளியது

வேடிக்கையான காட்சிகளும் வியப்பூட்டும் பயணமும் கொண்ட இப்படம் ஒரு உருவகக் கதை போலவே உருவாக்கபட்டிருக்கிறது. குற்றவுலகினை கொண்டாடும் சமகாலத் திரைப்படங்களுக்கு நடுவே ,வாழ்வின் நோக்கம் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுகிறது இப்படம் .இயற்கையை நெருங்கிச் செல்லும் போது மட்டுமே அதன் பிரம்மாண்டத்தையும் மூர்க்கத்தையும் மனிதன் உணருகிறான் என்கிறது இப்படம்.

சில இடங்களில் Meetings with Remarkable Men என்ற குர்ஜீ பற்றிய படத்தை நினைவுபடுத்தியது.

படத்தின் இறுதியில் கதை சமகாலத்திற்குத் திரும்புகிறது. அங்கே நாம் காண்பது வேறுவிதமான நிஜம். இதுவரை நாம் கண்டது அஹ்மத் கண்ட கனவு தானோ என்றும் தோன்றுகிறது. இந்த நிஜத்தில் ஷாகிப் இக்ராமை மீட்கும் பணிக்கு அஹ்மத்தை அழைத்துக் கொண்டு ஆவேசமாகப் புறப்படுகிறான்.

வெறுப்பும் வன்முறையும் கொண்ட இன்றைய உலகம். மீட்சியும் நம்பிக்கையும் கொண்ட அந்த உலகம் இரண்டுக்கும் நடுவே மனிதர்களின் ஆசைகளும் பெருமுயற்சிகளும் நடந்தேறுகின்றன.

In truth, being made aware of our own solitude can give us insight into the solitude of others. என்று Wind, Sand and Stars நூலில் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி குறிப்பிடுகிறார். இந்த உணர்வே படத்திலிருந்தும் நமக்குக் கிடைக்கிறது

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 18:39

விருதுநகர் புத்தகத் திருவிழாவில்

விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 17 துவங்கி 27 வரை நடைபெறுகிறது

விருதுநகர் மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் பொருட்காட்சி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது

இந்தப் புத்தகத்திருவிழாவில் நவம்பர் 18 மாலை உரையாற்றுகிறேன்

தலைப்பு : நினைவின் சித்திரங்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 03:53

மணிபாரதி – அரவான்

எனது அரவான் நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி நடத்துகிறார். இந்த நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

பிஸியோதெரபிஸ்டான மணிபாரதி தொடந்து அழகம்மை அரங்கம் சார்பாக நவீன நாடகங்களை இயக்கி நடித்து வருகிறார். இதற்கு முன்னர் எனது “கொஞ்சம் இனிப்பு அதிகம்” என்ற சிறுகதையை நாடகமாக இயக்கியிருந்தார்.

ஞானராஜ சேகரன் ஐஏஎஸ்  “ராமானுஜன்” திரைப்படத்தில் மணிபாரதியை கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார்.  அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள “ஐந்து உணர்வுகள்” திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் மணிபாரதி நடித்துள்ளார்

தற்போது இந்த வருடத்திற்கான Short+Sweet நாடக நிகழ்வில் எனது அரவான் நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி நிகழ்த்தவுள்ளார்.

நவம்பர் மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள அல்லையன்ஸ் ஃபிரான்சேஸ் அரங்கில் நிகழ்கிறது.

டிக்கெட் பெறுவதற்கு

https://in.bookmyshow.com/plays/week-3-short-sweet-south-india-theatre-festival/ET00343397

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 03:45

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.