S. Ramakrishnan's Blog, page 72
December 30, 2022
சாகித்ய அகாதமி விருது 2022
இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு அறிவிக்கபட்டுள்ளது.

அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ள காலா பாணி நாவலை வாசித்திருக்கிறேன். காளையார் கோவில் போரை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாவல். தமிழக வரலாற்றின் அறியப்படாத உண்மைகளை தொடர்ந்து தனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்திவருபவர் ராஜேந்திரன்
அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
•••
இயல் விருது 2022 – வாழ்த்துகள்
கனேடிய இலக்கியத் தோட்டம் சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது சிறந்த எழுத்தாளரான பாவண்ணன் மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் லெ.முருகபூபதி இருவருக்கும் வழங்கப்படுகிறது.


இருவரும் எனது நண்பர்கள். சிறந்த படைப்பாளிகள். தொடர் செயல்பாட்டின் மூலம் தமிழ் இலக்கியத்தினை வளப்படுத்தியவர்கள். பாவண்ணன் சிறந்த மொழிபெர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். முருகபூபதி இலங்கை சாகித்திய மண்டல விருது பெற்றிருக்கிறார். மிகத்தகுதியானவர்களை தேர்வு செய்து கௌரவிக்கும் இயல்விருதுக் குழுவிற்கும் நண்பர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.
December 27, 2022
புதிய வெளியீடுகள்
தேசாந்திரி பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள். சென்னை புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பக அரங்கில் புதிய நூல்கள் யாவும் கிடைக்கும்




December 26, 2022
ஒரு நாள் மகிழ்ச்சி
The Girl from Dak Lak என்ற வியட்நாம் திரைப்படத்தைப் பார்த்தேன். 2022ல் வெளியான இப்படத்தைப் பெட்ரோ ரோமன் சி மாய் இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.

வியட்நாமின் கிராமப்புறத்தைச் சேர்ந்த சுயோங் என்ற இளம் பெண் தனது வீட்டில் சமையல் செய்வதில் படம் துவங்குகிறது. உடல்நலமற்ற தந்தைக்கு அவளே உணவு புகட்டிவிடுகிறாள். அம்மாவும் பக்கத்துவீட்டுப் பெண்களும் சுயோட் வீட்டின் பொருளாதார நெருக்கடியைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். வேலை தேடி நகருக்குப் போகலாம் என்று சுயோங் நினைக்கிறாள்
தோழி ஒருத்தியின் முகவரியைப் பெற்றுக் கொண்டு அவள் சைகோன் நகருக்குப் பயணம் செய்கிறாள். புதிய நகரம். முதல்முறையாகப் பயணம் செய்கிறாள். அந்தத் தவிப்பை அவள் தேடலில் காணமுடிகிறது.

சைகோன் நகரில் அவள் தேடிச் சென்ற தோழி அந்த இடத்தில் வேலையில் இல்லை. அவளைக் கண்டறிய முடியவில்லை. போக்கிடமின்றி அலைந்து திரிந்து வேலை கேட்கிறாள். அறை எடுத்துத் தங்கக் கையில் போதுமான பணமில்லை. அடைத்துச் சாத்தப்பட்ட கடை ஒன்றின் முன்பாக உறங்க முயலுகிறாள். கடைப்பெண் அவள் மீது பரிதாபம் கொண்டு தங்களுடன் ஒரு இரவு தங்கிக் கொள்வதற்கு அனுமதிக்கிறாள்.
நூடுல்ஸ் மற்றும் துரித உணவு வகைகள் விற்கும் அந்தக் கடையினை இரண்டு பெண்கள் நடத்துகிறார்கள் உரிமையாளர் வேறு ஒரு பெண்.. அவர்களுடன் இணைந்து உணவகத்தில் பார்சல் போடும் வேலை மற்றும் துப்பரவு பணிகளை மேற்கொள்ள ஆரம்பிக்கிறாள் சுயோங்
நகரம் மெல்லப் பழக ஆரம்பிக்கிறது. மாநகரில் தனித்து வாழும் பெண்களுக்கு ஒரே துணை செல்போன் மட்டுமே.. அதற்குள்ளாகவே இரவெல்லாம் சஞ்சரிக்கிறார்கள். முகநூல் வழியாக நட்பைத் தேடிக் கொள்கிறார்கள். புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

படத்தில் சிறந்த காட்சி கூகிள் மேப் வழியாக எப்படி வாடிக்கையாளர்களின் முகவரியை அறிந்து கொள்வது என்பதைச் சியோங் கற்றுக் கொள்வதாகும் இதன் பிறகு அவள் சைக்கிளில் உணவு விநியோகத்துக்காக நகரைச் சுற்ற ஆரம்பிக்கிறாள்.
வார விடுமுறை நாளில் மூன்று பெண்களும் ஒன்றாக நகரில் சுற்றியலைகிறார்கள். அது தான் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே நாள். அன்று அழகாக ஒப்பனை செய்து கொள்கிறார்கள். சியோங் புதிய ஆடை அணிந்து கொள்கிறாள். அவளுக்கு நவீன ஒப்பனைகளைச் செய்துவிடுகிறார்கள். அவள் உருவமே மாறிவிடுகிறது. ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள். ஆண் நண்பர்களுடன் நடனமாடுகிறார்கள். ஒன்றாகக் குடிக்கிறார்கள். புதிய வாழ்க்கைக்குத் தன்னை மாற்றிக் கொள்கிறாள் சுயோங்
போதுமான வருமானமில்லை. பணிச்சுமை அதிகம். வயதின் ஆசைகள், ஊரின் மீதான ஏக்கம் என யாவும் ஒன்று சேர்ந்து கொள்கின்றன. அவளால் ஊருக்குத் திரும்பி போகவும் முடியவில்லை. நகரில் ஆனந்தமாக வாழவும் வழியில்லை. ஆகவே குழப்பத்திற்குள் சிக்கித் தவிக்கிறாள்
மழைக்காலத்தில் அவர்களின் உணவகம் நீரில் மிதக்கிறது. இரவெல்லாம் தண்ணீரை வெளியேற்றுகிறார்கள். அதிகச் சம்பளம் தரும் வேறு வேலையைத் தேடுகிறாள் சுயோங். அது எளிதாகயில்லை. அவளிடம் புகைப்படம் முறையான அத்தாட்சி என எதுவுமில்லை.
இந்நிலையில் உணவகத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு அவளே காரணம் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். வேறு வேலைக்குப் போக வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. அறுபட்ட பட்டம் போலவே தன்னை உணருகிறாள்.
சொந்த ஊருக்கே திரும்பிப் போய்விடலாம் என்ற முடிவுடன் பேருந்து நிலையம் செல்கிறாள் சுயோங். ஆனால் கடைசி நிமிஷம் முடிவை மாற்றிக் கொள்கிறாள். புதிய வேலை தேடி நகருக்குள் செல்ல ஆரம்பிக்கிறாள்
கிராமப்புறத்திலிருந்து வேலை தேடி மாநகருக்கு வரும் இளம் பெண்ணின் வாழ்க்கையை மிக யதார்த்தமாக, உண்மையாகச் சித்தரித்திருக்கிறார்கள். உணவகத்தில் பெண்களுக்குள் ஏற்படும் தோழமை. பார்சல் கொடுக்கப் போன இடத்தில் ஏற்படும் புது உறவு. விடுமுறை நாளில் அறிமுகமான இளைஞனின் நட்பு என்று அவளது உலகம் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

அம்மாவிடம் அவள் தொலைபேசியில் பேசும்போது தான் சந்தோஷமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள முயலுகிறாள். ஆனால் அவளால் முடியவில்லை. அம்மா ஊர் திரும்பிவந்துவிடு என்று வற்புறுத்துகிறாள். அவளுக்குத் தோற்றுப் போக ஊர் திரும்ப விருப்பமில்லை
நான்கே கதாபாத்திரங்கள். அவர்களுக்குள் விரியும் நட்பு. போட்டி. ஏமாற்றம் கவலைகள் எனச் சிறுகதை போலக் கச்சிதமாக நிகழ்வுகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. படுக்கையில் கிடக்கும் அப்பாவின் மீதான அவளது அன்பு குறைவான காட்சிகளில் அழுத்தமாக காட்டப்படுகிறது
இது போலவே உணவகம் இயங்கும் முறை. அதன் பணிச்சுமை, அங்கு வேலை செய்பவர்களின் நெருக்கடிகளை ஆவணப்படம் போல நிஜமாகச் சித்தரித்திருக்கிறார்கள்.
சந்தோஷமான எளிய வாழ்க்கையிலிருந்து கவலைகளும் நெருக்கடிகளும் நிரம்பிய பெருநகர வாழ்க்கைக்குள் சிக்கிக் கொண்ட இளம்பெண்ணின் கதையைப் படம் சிறப்பாகச் சித்தரித்துள்ளது. இதன் காரணமாகவே சர்வதேச திரைப்படவிழாக்களில் தனித்துக் கவனம் பெற்று வருகிறது.
December 25, 2022
புத்தக வெளியீட்டுவிழா. புகைப்படங்கள்
நேற்று எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.
நூல்களை வெளியிட்டு சிறப்பித்தார் ஆனந்தகுமார் ஐஏஎஸ்.
சிறப்பு விருந்தினராக இளம்பகவத் ஐஏஎஸ் அவர்கள் கலந்து கொண்டார்.
ஆசான் எஸ்.ஏ.பெருமாள். எழுத்தாளர் உதயசங்கர், பொன் மாரியப்பன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்கள்
நூல்வெளியீட்டினைத் தொடர்ந்து பால்சாக் பற்றி சிறப்புரை ஆற்றினேன்
புத்தகங்களைச் சிறப்பாக அச்சிட்டு உதவிய மணிகண்டன். புத்தகத் தயாரிப்பில் உறுதுணை செய்த ஹரிபிரசாத், அன்புகரன். நிகழ்வு ஒருங்கிணைப்பில் உதவிய சண்முகம், தூத்துக்குடியிலிருந்து வந்த பொன் மாரியப்பன். அருண்பிரசாத் மற்றும் நண்பர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட வாசகர்கள். நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி
நிகழ்வினைப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ள ஸ்ருதிடிவி கபிலனுக்கு அன்பும் நன்றியும்














December 20, 2022
பால்சாக் பற்றிய சிறப்புரை
உலக இலக்கியத்தினை அறிமுகம் செய்யும் விதமாக நிறைய உரைகள் ஆற்றியிருக்கிறேன். இதன் வழியே மகத்தான படைப்பாளிகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களின் படைப்புகளைக் கொண்டாடவும் முடிந்திருக்கிறது.

இந்த முறை டிசம்பர் 25 ஞாயிறு மாலை பிரெஞ்சு இலக்கியத்தின் நிகரற்ற படைப்பாளி பால்சாக் பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன்.
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்வு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது

பால்சாக்கின் வாழ்வு மற்றும் படைப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
யதார்த்தவாத எழுத்தின் நாயகராகக் கொண்டாடப்படும் பால்சாக் சிறுகதை, குறுநாவல் நாவல்கள் என எழுதிக் குவித்தவர்.

19ம் நூற்றாண்டு பிரெஞ்சு சமூகத்தினை துல்லியமாக தனது எழுத்தில் பதிவு செய்தவர் பால்சாக்.
பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி இவரை ஆழ்ந்து படித்திருக்கிறார். இவரது நாவலை ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். டால்ஸ்டாய், ஹென்றி ஜேம்ஸ், டிக்கன்ஸ், சாமர்செட்மாம் போன்ற இலக்கியவாதிகளின் விருப்பத்திற்குரிய எழுத்தாளராக இருந்திருக்கிறார்.
இவரது படைப்புகள் 25 பெருந்தொகுதிகளாக வெளியாகியுள்ளன.

The Human Comedy என்ற பொதுதலைப்பில் தனது படைப்புகளை அவரே வரிசைப்படுத்தியிருக்கிறார். இதில் இவரது 91 நாவல்களும் சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. அதில் 41 நாவல்கள். சில 500க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டவை பெரும்பாலானவை 250 அல்லது அதற்கும் குறைவான பக்கங்கள் கொண்டவை. 25 சிறுகதைகள் . 25 குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன.
இது தவிர இவரது நாடகங்களும் கட்டுரைகளும் தனி நூலாக வெளியாகியுள்ளன.

எழுதும் நேரங்களில் துறவியின் அங்கி போன்ற உடையை அணிந்து கொண்டு எழுதியவர் பால்சாக்
அவர் நள்ளிரவில் எழுதத் துவங்குவார். இரவு 1 முதல் காலை 8 மணி வரை எழுதக்கூடியவர். சில நாட்கள் தொடர்ச்சியாக பதினாறு மணி நேரம் எழுதியிருக்கிறார். அறிவியல், தத்துவம். உளவியல், வரலாறு, பண்பாடு, சட்டம் கலைகள் என இவர் தொடாத விஷயங்களே இல்லை.

டிசம்பர் 25 மாலை எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழாவும் நடைபெறுகிறது.
இந் நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்
••
December 19, 2022
புதிய புத்தகங்கள்-3
டிசம்பர் 25 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது
உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் மற்றும் அரிய ஓவியங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நிறங்களை இசைத்தல் வெளியாகிறது
தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள்-2
டிசம்பர் 25 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது
அதில் உலக இலக்கியம் மற்றும் இந்திய இலக்கியம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு வான் கேட்கிறது வெளியாகிறது
தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள்-1
டிசம்பர் 25 மாலை ஆறு மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது
அதில் எனது புதிய சிறுகதைத் தொகுப்பு பகலின் சிறகுகள் வெளியாகிறது
தேசாந்திரி பதிப்பகம் வெளியிடும் இந்தத் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

கவிக்கோ மன்றம், சி.ஐ.டி காலனி,மயிலாப்பூர்,சென்னை – 600 004
காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில்
டிசம்பர் 24 சனிக்கிழமை மாலை காஞ்சிபுரம் புத்தகத்திருவிழாவில் உரையாற்றுகிறேன். மாலை ஆறுமணிக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.


S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
