S. Ramakrishnan's Blog, page 69
February 7, 2023
தர்மகீர்த்தியின் மயில்கள்
புதிய சிறுகதை
பிப்ரவரி 7 2023
இந்தக் கதையில் நடக்கும் நிகழ்வுகள் ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்திருக்கக்கூடும். அல்லது அந்த நூற்றாண்டில் பல்லவ இளவரசனாக இருந்த தர்மகீர்த்தி பற்றியதாக இருக்கவும் கூடும். தர்மகீர்த்தி ஒரு சிறுகாப்பியம் எழுதியிருக்கிறார். அதன் பெயர் தர்மகீர்த்தியாணம்.

முடிமன்னர்கள் கவிஞராக மாறுவதும் கவிதைகள் எழுதி அங்கீகாரம் கேட்பது தமிழ் கவிதை மரபின் விசித்திரம். தன்னிடம் இல்லாத எந்த அங்கீகாரத்தைக் கவிதையின் வழியே மன்னர் அடைய முற்படுகிறார் என்பது புரியாதது..
தோல்வி தான் மன்னர்களைக் கவிதை எழுத வைத்திருக்கும் என்று தோன்றுகிறது. துரோகம் அல்லது ஏமாற்றம் எதையேனும் அடையும் போதும் கவிஞனாக மாறியிருக்கக்கூடும். கவிதையின் நாக்குத் தீண்டியதும் மன்னர் மறைந்துவிடுகிறார். அவருக்குத் தனது அதிகாரத்தின் வரம்பு புரிந்துவிடுகிறது
நீங்கள் வரலாற்றில் தர்ம கீர்த்தியைத் தேடுவதாக இருந்தால் அவனைப்பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்காது. ஆனால் கதைகளிலும் கவிதைகளிலும் இடம்பெற்றிருக்கிறான். எதிலும் அவன் எந்தப் பல்லவ சக்ரவர்த்தியின் மகன் என்று குறிப்பிடப்படவில்லை.
காஞ்சி அரண்மனையில் வசிக்கிறான். பொற்கிண்ணத்தில் பால் அருந்துகிறான், யானை மீதேறிச் செல்கிறான் என்ற தகவலைக் கொண்டு நாமே யூகித்துக் கொள்ள வேண்டியது.
வரலாற்று நாயகர்கள் பலரும் நாமாக உருவாக்கிக் கொண்டவர்கள் தானே. உண்மையாக எப்படி இருந்தார்கள். எப்படி நடந்து கொண்டார்கள் என்று யாருக்குத் தெரியும்.
வரலாறும் இலக்கியமும் எப்போதும் ஒரே உண்மையைச் சொல்வதில்லை. வரலாறு கொண்டாடும் எவரையும் இலக்கியம் பொருட்படுத்துவதில்லை. அது போலவே கவிஞனின் குரலையோ கதைகளில் வரும் மனிதர்களையோ வரலாறு கண்டுகொள்வதேயில்லை.
தர்ம கீர்த்தியின் கதையும் அப்படியானதே.
அவன் உண்மையாகவே பல்லவ இளவரசன் தானா என்பதைப் பற்றி இன்றுவரை சர்ச்சைகள் இருந்துவருகின்றன. வரலாற்றின் திரைக்குப் பின்னே மறைந்து போனவர்களை, ஒளிந்து கொண்டவர்களை இன்றிலிருந்து கண்டறிய முடியாது.
தர்ம கீர்த்தியும் அப்படியானவன் தான்.
கதைகளில் தர்ம கீர்த்தித் துறவியாக, நடிகனாக, வணிகனாக, மாயத்திருடனாக அழியாக் காதலனாக இடம்பெறுகிறான்
••.
தர்மகீர்த்தி யார் என்பது இந்தக் கதையை வாசிப்பவர்களுக்கு முக்கியமில்லை. தர்மகீர்த்தி எதனால் நினைவு கொள்ளப்படுகிறான் என்பதே முதன்மையானது. இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு பெயர் நிலைத்து நிற்கமுடியும் என்றால் அது காதலாலோ பெரும் வீரத்தாலோ மட்டுமே முடியும். இரண்டிலும் புனைவுகள் அதிகம். நிஜத்தை விடவும் புனைவே வரலாற்றை ருசிமிக்கதாக்குகிறது. நெருக்கம் கொள்ளவைக்கிறது
தர்ம கீர்த்தியைப் பற்றிய கதைகளில் முதன்மையானது அவனது மயில் கதைகள்.

தான் காதலித்த பெண்கள் அனைவரையும் மயில்களாக உருமாற்றிவிட்டான் என்பதை அக்கதைகளின் சாரம்.
இதே கதைகளுக்கு மாற்று வடிவமிருக்கிறது. அதில் தர்மகீர்த்தியால் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மயில்களாக உருமாறி அவனைப் பின்தொடர்கிறார்கள். வஞ்சம் தீர்க்க முனைகிறார்கள். முடிவில் அவர்கள் மயிற்கண் கொண்ட மீன்களாக மாறி விடுகிறார்கள்.
••
தர்மகீர்த்தி கதையில் வாழுகிறவன். கதையில் வசிப்பவர்களின் தோற்றம் மாறிக் கொண்டேயிருக்கக் கூடியது. வயதற்ற அவர்கள் இசைக்கருவியைப் போன்று வாசிப்பவருக்கு ஏற்ப மாறுபடக்கூடியவர்கள். ஒரு கதையைக் காலம் கைவிட்டாலும் அதில் வசித்த சிலர் என்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள். தர்மகீர்த்தியும் அப்படியே.
••
நீண்ட சுருளமுடியும் கிரேக்கச் சிற்பம் போன்ற முகமும், வெண் முத்தென்ற கண்களும், இரும்பு பூண் போன்ற தோள்களும் உள்ளோடிய வயிறும், கற்தூண்களின் உறுதி கொண்ட கால்களும் சற்றே பெரிய பாதங்களும் கொண்ட தர்ம கீர்த்தி நீலப்பட்டு உடுத்தி தலையில் வெண்தாமரை சூடியிருப்பான். சூரியனைப் போல அவன் செல்லும் இடமெல்லாம் ஒளிரக்கூடியவன். கொக்கின் சிறகு விரிவது போல அவனது சிரிப்பு இயல்பாக விரிந்து பரவும் என்கிறார்கள்.

தர்ம கீர்த்தியின் முதுகில் தாமரைக் கொடிகள் போன்ற சித்திரம் வரையப்பட்டிருக்கிறது என்றார்கள்..
உண்மையில் அந்தத் தாமரைக் கொடிகள் அவனது காதலின் போது உயிர்பெற்றுவிடும் என்றும் அவனைக் காதலிக்கும் பெண் ஆரத்தழுவும் போது அந்தத் தாமரை இலையின் ஈரத்தை உணர்வாள் என்றார்கள்.
காதலிப்பதற்காகவே தர்மகீர்த்தி வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் எங்கே சென்றாலும் அதன் நோக்கம் காதலிப்பது மட்டுமே. அவன் அழகான பெண்களால் காதலிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் எந்தக் காதலும் அவனுக்குப் போதுமானதாகயில்லை. பல்லாயிரம் மழைத்துளிகளைக் குடித்தபோதும் பூமியின் தாகம் அடங்கிவிடுகிறதா என்ன.
ஒரு கதையில் வாழ்நாள் முழுவதும் காதலித்துக் கொண்டேயிருக்கும்படி அவனுக்குச் சாபம் அளிக்கப்படுகிறது. அவனது குரு அந்தச் சாபத்தைத் தருகிறார். ஒருவேளை அவன் குருபத்தினியை காதலித்திருக்கக் கூடும். ஆனால் இந்த உலகில் காதலித்துக் கொண்டேயிருக்கும்படி ஒருவனுக்குச் சாபம் வழங்கப்படுகிறது என்பது வரமா இல்லை வருத்தமளிக்கும் சாபமா.
தர்மகீர்த்தியின் கதையில் அவன் காதலில் தோற்றுக் கொண்டேயிருக்கிறான். அல்லது தோற்பதற்காகவே காதலிக்கிறான். தர்மகீர்த்தியின் கதை ஏன் இத்தனை ஆண்டுகளாகப் பேசப்படுகிறது என்பதற்குக் காரணம் ஒவ்வொரு தோல்விக்கும் பிறகும் புதிதாகக் காதலிக்கத் துவங்கிவிடுகிறான் என்பதே
தர்மகீர்த்தியின் காதல் காரணங்கள் அற்றது. உலகின் நியதிகளைப் பொருட்படுத்தாதது. நிறைய மாயங்களைக் கொண்டது. பேரலையைப் போலக் காதலை அவன் உக்கிரமாக வெளிப்படுத்தும் போது காதலித்த பெண்ணால் நிராகரிக்கப்படுகிறான். அன்பின் பொருட்டால் தோற்கடிக்கப்படுகிறான். அவனைக் காதலித்த பெண்கள் உதிர்ந்த இலையை நோக்கும் மரத்தைப் போல அவனை நடத்துகிறார்கள். அவமானத்துடன் வெளியேறும் தர்ம கீர்த்தி காதலின் ஒற்றையடிப் பாதையில் அயராமல் நடக்கத் துவங்குகிறான்
••
தர்ம கீர்த்தியைக் காதலித்த ஒரு பெண் அவனைப்பற்றி இப்படிப் பகிர்ந்து கொண்டிருக்கிறாள். இதுவும் ஒரு கதையில் தானிருக்கிறது
தர்மகீர்த்தி ஒரு பொன்னிறமான நரியைப் போல எனது வீட்டின் பின்புறம் நின்றிருந்தான். காற்று தண்ணீரைத் தொடுவது போல என்னை ஏறிட்டுப் பார்த்தான். மறுநிமிடம் எனது ஆடைகள் தளர்வு கொள்வதையும் கைகள் அவனை நோக்கி நீள்வதையும் விநோதமாக உணர்ந்தேன். அவன் இப்போது பொன்னிற நரியில்லை. இளைஞன். அதுவும் வெண்பட்டு உடுத்தி சிகையில் மலர் சூடிய இளைஞன். அவனை நோக்கி நானே ஓடினேன். என்னை ஏற்றுக் கொண்டான் எனது உடலுக்குள் மறைந்திருக்கும் சுடர்களை ஏற்றத் துவங்கினான். நான் ஒரு சுடர் வரிசை என உணர்ந்த தருணத்தில் காற்று சுடருடன் விளையாடுவது போல என்னுடன் விளையாடினான். அவனுடனே கரைந்து போக ஆசைப்பட்ட நிமிஷத்தில் அவன் கேட்டான்
எனக்காக நீ ஒரு மயிலாக மாறுவாயா
மாறுவேன்
உன் விருப்பம் நிறைவேறும் என்றபடியே கைகளைக் காற்றில் அசைத்தான். மறுநிமிடம் நான் நீலமயிலாக மாறியிருந்தேன். தர்ம கீர்த்தி அங்கே இல்லை. மறைந்திருந்தான். இன்றும் அடிவானத்தின் அடியில் அவனது வருகைக்காகக் காத்திருக்கிறேன்.

••
தர்ம கீர்த்தியைப் பற்றிய இன்னொரு கதையில் அவன் ஒரு பௌத்த துறவியாக இருக்கிறான். அதுவும் காதலின் பொருட்டு மடாலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கள்ளத்துறவியாகவும் சித்தரிக்கப்படுகிறான்.
துறவியான தர்மகீர்த்தி மொட்டைத்தலையுடன், கனத்த புருவத்துடன் இருந்தான். ஆறடி உயரம். செருப்பு அணியாத கால்கள். படகுத்துறை ஒன்றில் அவனைக் கடந்து சென்ற ஒரு பெண்ணின் காலடி ஓசையை வைத்து அவளைக் காதலிக்கத் துவங்கினான் என்றும் அந்தப் பெண்ணின் முகத்தைக் கூட அவன் கண்டதில்லை என்றும் சொன்னார்கள்.
காலடி ஓசையிலிருந்து அவன் தனக்கான பெண் முகத்தை உருவாக்கிக் கொண்டான். அந்த முகத்தை ஒரு சுவரோவியமாக வரைந்தான் என்றும் அந்த ஓவியத்தின் முன்பாகக் கண்களை மூடி மணிக்கணக்கில் தியானம் செய்து வந்தான் என்றும் சொல்லப்படுகிறது.
பேரழகு கொண்ட ஒரு பெண் உருவின் முன்பு இளந்துறவி தியானிப்பதை எப்படி மடாலயத்தால் அனுமதிக்க முடியும். ஆகவே அவன் வெளியேற்றப்பட்டதாகவும் கதையில் வருகிறது.
அந்த ஓவியத்தில் இருந்த பெண் மயிற்றோகையை உடையாக அணிந்திருந்தாள். உண்மையில் அவள் ஒரு மயில் பெண்ணாகத் தோன்றினாள் என்கிறாள். தர்மகீர்த்தி என்ற துறவியின் கற்பனையில் ஏன் ஒரு பெண் மயில்தோகை கொண்டவளாகத் தோற்றம் கொண்டாள் என்பது புதிராகவே இருக்கிறது.
••
வேறு கதையில் இதே தர்ம கீர்த்தி திருடனாக இருக்கிறான். அவன் திருடச் செல்லும் வீடுகளில் உள்ள இளம்பெண்ணின் கனவிற்குள் புகுந்துவிடுகிறான். அவனைக் கனவில் கண்டு பழகிய பெண் விழித்து எழுந்த பின்பு அவனைத் தேடத் துவங்குகிறாள். கண்டறிய முடியாத போது அவனது நினைவிலே மயில்களாக மாறிவிடுகிறாள். அவன் செல்லும் இடமெல்லாம் அவனைப் பின்தொடர்கிறாள்.
அந்தக் கதையில் ஒரு படகில் நூறு மயில்களுடன் தர்மகீர்த்தி வருவதாகவும் படித்துறையில் அவன் இறங்கி நடக்கும் போது அவன் பின்னால் மயில்களின் கூட்டம் தொடர்வதாகவும் சித்தரிக்கப்படுகிறது.
••
தர்ம கீர்த்தியால் மயிலாக மாற்றப்பட்ட பெண்கள் என்ன ஆகிறார்கள்.
ஏன் காதல் ஒருவரை மயிலாக மாற்றிவிடுகிறது.
கதையில் அவர்கள் பூமியில் வசிக்கும் மயில்களைப் போலின்றி வானில் பறக்கத் துவங்கிவிடுகிறார்கள். சில இரவுகளில் வானில் மயில் கூட்டம் செல்வது போன்ற மாயக்காட்சி தெரிவதற்கு இதுவே உண்மைக்காரணம் என்கிறது கதை.

••
தனது மனைவியால் ஏமாற்றப்பட்ட தர்மகீர்த்தி என்ற இளவரசன் அந்த ஏமாற்றத்தைத் தாங்கமுடியாமல் மனைவியின் பெயர் கொண்ட பெண்ணை அழைத்துவந்து திருமணம் செய்து கொண்டு அன்றிரவே அவர்களைக் கொல்லத்துவங்கினான் என்றும் அவனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே பெண்கள் மயிலாக மாறினார்கள் என்றும் ஒரு கதை சொல்கிறது. இது உண்மையாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இதே போலக் கதை அரபு தேசத்தில் சொல்லப்படுகிறது. ஒருவேளை அந்தக் கதை தான் ஏழாம் நூற்றாண்டில் ஒரு வணிகன் மூலம் காஞ்சி வந்து சேர்ந்து தர்மகீர்த்தியின் கதையாக மாறிவிட்டதா என்றும் தெரியவில்லை
••
தர்மகீர்த்தியைப் பற்றிய இன்னொரு கதையில் அவன் பிறந்தவுடன் தாயை இழந்துவிடுகிறான். தந்தை அவனை வெறுக்கிறார். தனிமாளிகை ஒன்றில் வளர்க்கப்படுகிறான். மூர்க்கமான இளைஞனாக வளர்கிறான். அரண்மனை தோட்டத்தில் ஒரு நாள் நீலமயில் ஒன்று பேரழகு மிக்கப் பெண்ணாக உருமாறுவதைக் காணுகிறான். அவளை அடைய விரும்பி துரத்துகிறான். அவள் காதலால் அன்றிப் பலவந்தால் தன்னை அடைய முடியாது என்கிறாள். என்ன செய்ய வேண்டும் என்று கேட்கவே அவனை ஆண்மயிலாக மாற்றிவிடுகிறாள்.
அதன்பிறகு தர்ம கீர்த்தி ஆண்மயிலாக வாழுகிறான். அதில் அடையும் இன்பம் அவனைச் சுயநினைவின்றி மயக்கி வைக்கிறது, தந்தை இறந்து போகவே அவனது தேசத்தின் மீது எதிரிகள் போர் தொடுக்கிறார்கள். அப்போதும் அவன் ஆண்மயிலாகவே போருக்குச் செல்கிறான். போர்க்களத்தில் அவனை மயில்களே பாதுகாக்கின்றன. போரில் வென்றபின்பு அவன் இரண்டு மயில்கள் கொண்ட ரதம் ஒன்றில் அரண்மனை நோக்கிப் பறந்து வருகிறான். ஆண்மயிலாகவே அவன் ஆட்சியைத் தொடருகிறான். அவனை மயிலாக மாற்றிய பெண் இறந்து போகவே மீளாத் துயரில் அவன் நெருப்பில் விழுந்து இறந்துவிடுகிறான் என்கிறது இக்கதை
••
தர்மகீர்த்தியைப் பற்றிய சிறுகாப்பியமான தர்மகீர்த்தியாணத்தை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் இளவரசன் தர்ம கீர்த்தி பேராலே வழங்கப்படுகிறது. அதிலும் தாயற்ற தர்மகீர்த்திச் சிறுவயதிலே கானகம் சென்று துறவியாக வாழுகிறான். ஞானத்தை அடைவதற்காகக் கடுந்தவம் செய்கிறான். அவனை அரண்மனைக்கு அழைத்து வர ஒரு இளம்பெண்ணை அனுப்பி வைக்கிறார்கள். அவள் மயிலாக உருமாறி காட்டிற்குள் வருகிறாள். அந்த மயிலின் வசீகரத்தால் மயங்கி அரண்மனை திரும்பிய தர்மகீர்த்தி அவளை மனைவியாக்கிக் கொள்கிறான். வருஷங்கள் கடந்து போகின்றன. அவள் இறந்து போகிறாள்.அந்த துக்கத்தை அவனால் தாங்கமுடியவில்லை. தனது மனைவியைப் போல ஒரு மயிலால் உருமாற முடியும் என நினைத்த தர்ம கீர்த்தி அதற்காக நாட்டிலுள்ள மயில்களை வேட்டையாட ஆரம்பிக்கிறான். முடிவில் தேசத்திலிருந்த மயில்கள் முற்றி அழிந்து போகின்றன. இந்தச் சிறுகாப்பியத்தின் முடிவில் மயில்களின் சாபத்தால் தர்ம கீர்த்தி நாகமாக மாற்றப்படுகிறான். அவனை வானிலிருந்த வந்த மயில் ஒன்று கவ்விக் கொண்டு பறக்கிறது.
••
தர்மகீர்த்தியினைப் பற்றிய கதைகளில் அவன் நிஜமாகவும் இல்லை. புனைவாகவும் இல்லை. நீரிலும் நிலத்திலும் ஒரே நேரத்தில் வாழும் உயிரினம் போலிருக்கிறான். கதைகளில் வாழுகிறவர்களின் விதி புதிரானது போலும்.

தர்மகீர்த்தி என்பது ஒரு மயிலின் பெயர். அது புத்தனின் மனைவி யசோதரையால் வளர்க்கப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம்.
ஒருவேளை அதுவும் புனைவு தானோ.
••
February 4, 2023
வலது கன்னம்
புதிய சிறுகதை. பிப்ரவரி 3. 2023
வீட்டுச் சாமான்கள் முழுவதையும் வேனில் ஏற்றியிருந்தார்கள். அந்த வேன் முதுகில் வீட்டை தூக்கிச் செல்லும் பெரியதொரு நத்தையைப் போலிருந்தது

ஒரு வீட்டிற்குள் இவ்வளவு பொருட்கள் எப்படியிருந்தன என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். அவனுக்குப் பதிநான்கு வயது நடந்து கொண்டிருந்தது. ஆனால் பத்துவயது பையன் போல மெலிந்த தோற்றம் கொண்டிருந்தான். போலீஸ் கட்டிங் போல வெட்டப்பட்ட தலை. கழுத்து எலும்புகள் சற்றே துருத்திக் கொண்டிருந்தன.
முதன்முறையாக அவர்கள் வேனில் பயணம் செய்யப்போகிறார்கள் என்பது கதிருக்குக் கூடுதல் சந்தோஷமாக அளித்தது.

பொதுப்பணித்துறையில் என்ஜினியராக வேலை செய்த அவனது அப்பா எந்த ஊருக்கு டிரான்ஸ்பர் ஆனாலும் அவர் மட்டுமே சென்று தனியே வீடு எடுத்து தங்கியிருப்பதே வழக்கம். இதுவரை அப்படி ஆறேழு ஊர்களுக்கு மாறுதல் செய்திருக்கிறார்கள்.
இப்போது சாத்தூருக்கு டிரான்ஸ்பர் வந்திருந்தது. அந்தத் தகவல் வந்த நாளிலிருந்து அம்மா ஊர் மாறிப் போய்விடுவோம் என்று நச்சரிக்கத் துவங்கினாள்.
ஆரம்பத்தில் அப்பா ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் ரகுபதி மாமாவோடு ஏற்பட்ட நிலத்தகராறுக்கு பின்பு வெளியூருக்கு சென்று இருப்பது நல்லது என்ற முடிவிற்கு வந்திருந்தார்.
சாத்தூரில் வீடு தேடுவதில் இரண்டு வாரங்கள் கடந்து போயின. ஒவ்வொரு வாரம் அப்பா தென்னூர் வரும் போதும் அம்மா வீடு கிடைத்துவிட்டதா என்று ஆதங்கமாகக் கேட்பாள்.
“நல்ல வீடு அமையலை“ என்பார் அப்பா
ஆனால் ஒரு சனிக்கிழமை இரவு வீடு வந்த அப்பா சாத்தூரில் மாதா கோவிலை ஒட்டிய தெருவில் வீடு பிடித்துவிட்டதாகச் சொன்ன போது அவனால் நம்பவே முடியவில்லை.
நிஜமாகவே ஊர் மாறிப் போகப்போகிறோம்.
இதைக் கணேசனிடம் சொன்ன போது அவன் நம்பவேயில்லை. ஆனால் வாசு நம்பினான். அத்துடன் நாங்களும் சம்மர் லீவுக்குச் சாத்தூர் வர்றோம். உங்க வீட்லயே தங்கிகிடலாம்லே என்றான். அதைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.
சாத்தூர் எப்படியிருக்கும். அங்கே நீந்திக் குளிக்க ஏரி இருக்குமா. எத்தனை சினிமா தியேட்டர்கள் இருக்கும். அந்த ஊர் பள்ளிக்கூடம் மழைக்கு ஒழுகுமா. என்பதைப் பற்றியே அன்று அவர்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்..
அவர்கள் குடியிருந்த தென்னூர் கிராமத்தில் சினிமா தியேட்டர் கிடையாது. ஆனால் பெரிய ஏரி இருந்தது. அதன் கரையை ஒட்டி நிறைய மருத மரங்கள் இருந்தன. பேருந்து பிடிக்க வயல்வெளியின் ஊடாக நடந்து செல்ல வேண்டும். ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்தது. மாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் நாடகம் போடுவார்கள். கடைசி நாள் மட்டும் கோவில் முன்பு திரைகட்டி சினிமா காட்டுவார்கள்.

தென்னூரில் நூறுக்கும் குறைவான வீடுகளே இருந்தன. அதில் ஒரு வீதி முழுவதும் திண்ணை வைத்த பழங்கால வீடுகள். அவர்கள் வீட்டிலும் அப்படிப் பெரிய திண்ணை இருந்தது. எந்த வீட்டிலும் கழிப்பறைகள் கிடையாது. இப்போது தான் வீட்டின் பின்புறம் புதிதாகக் கட்டிக் கொண்டார்கள்.
அப்பா பார்த்து வைத்திருந்த புதுவீட்டை தானும் பார்க்க வேண்டும் என்பதற்காக அம்மா ஒரு திங்கள்கிழமை சாத்தூர் புறப்பட்டுச் சென்றாள். அன்றைக்குப் பள்ளி என்பதால் அவனும் ரமாவும் உடன் செல்ல முடியவில்லை. ஆனால் கதிருக்கு அவர்களுடன் போக வேண்டும் ஆசையாக இருந்தது..
சாத்தூர் போன அப்பாவும் அம்மாவும்அன்றிரவு திரும்பி வரவில்லை. ஜெயந்தியக்கா வீட்டிலே ரமாவும் அவனும் தூங்கினார்கள். காலையில் அவர்கள் பள்ளிக்குக் கிளம்பி போகும் வரை அம்மா திரும்பியிருக்கவில்லை. மாலை அவர்கள் பள்ளிவிட்டு வந்தபோது அம்மா சந்தோஷமான முகத்துடன் காணப்பட்டாள்.
“மூணு ரூம்.. நல்லா பெரிய ஹால் உள்ள வீடு. ஆனா வாடகை ஜாஸ்தி“ என்றாள்
“வசதியப் பாத்தா காசு கொடுக்கணும்லே“ என்றாள் ஜெயந்தியக்கா.
“ஊர்ல வெயில் அனலாக் கொதிக்குது. ஒரே புழுதி “ என்றாள் அம்மா.
“எப்போம்மா வீடு மாறப்போறோம்“ என்று கேட்டான் கதிர்
“உங்கப்பா தான் சொல்லணும்“ என்று சலித்துக் கொண்டாள் அம்மா. அந்த வாரம் விடுமுறைக்கு வந்த அப்பா உடனே வீட்டைக் காலி செய்து போய்விடலாம் என்றார்
இரண்டு நாட்களுக்குள் வீட்டைக்காலி செய்வதற்காகப் பரபரப்பாகச் செயல்பட்டார்கள். பால்காரனின் கணக்கை அன்றே முடித்துக் கொண்டாள் அம்மா. சீட்டுப் போடும் வீட்டில் போய்த் தகவல் சொல்லிவந்தாள். வீட்டுப் பொருட்களை அடைப்பதற்காக மரப்பெட்டி வாங்கிக் கொண்டு வந்தார் அப்பா. நாலைந்து அட்டைபெட்டிகளை தவசிமாமா வீட்டில் கேட்டு வாங்கி வந்தார்கள்.
உதவிக்குச் சொக்கனை வைத்துக் கொண்டு வீட்டுப் பொருட்களைப் பெட்டியில் அடைத்தார்கள்.
அம்மாவிற்குத் தெரியாமல் கட்டிலுக்கு அடியில் சுருட்டி ஒளித்து வைத்த இருபது மார்க் வாங்கிய மேத்ஸ் பரிட்சை பேப்பரை வெளியே எடுத்து போட்டான் சொக்கன்
நல்லவேளை அதை அப்படியே அள்ளிக் கொண்டு வெளியே ஒடினான் கதிர்
“என்னடா ஆச்சு“ என்று சப்தமாகக் கேட்டாள் அம்மா
“கரப்பான்பூச்சியா இருக்கு“ என்று சொல்லி சமாளித்தான் கதிர்.
அட்டைப்பெட்டி, மரப்பெட்டி. சாக்குபை எனப் பாத்திர பண்டங்களை நிரப்பியும் தீரவில்லை. ரமா பிறந்த போது வாங்கிய பால்புட்டி, கிரேப் வாட்டர் பாட்டிலைக் கூட அம்மா பத்திரமாக வைத்திருந்தாள். காலாவதியான மாத்திரைகள். தைல பாட்டில், ஊட்டசத்து மருந்து, சந்தன மாலை, பழைய டார்ச் லைட், காலியான விக்ஸ் டப்பா, கிழிந்த துணிகள் எல்லாம் அள்ளி வீட்டின் பின்புறம் கொண்டு போய்க் குவித்தான் சொக்கன்.
பொருட்கள் எதுவுமில்லாத வீடு சத்திரம் போல விநோதமாகத் தோற்றம் அளித்தது.
••
எப்போது வேன் வரும். எப்போது சாத்தூருக்குக் கிளம்புவோம் என்ற ஆசையோடு அன்றிரவு படுத்துக்கிடந்தான் கதிர்.
வேனில் போகும்போது கணேசன் வீட்டில் நிறுத்தி டாட்டா காட்ட முடியுமா என்று தெரியவில்லை. நண்பர்களைப் பிரிந்து போவதைப் பற்றி அவனுக்கு வருத்தமில்லை. சாத்தூரில் யார் புதிய பிரெண்டாக வரப்போகிறார்கள் என்பதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.
காலை ஆறு மணிக்கு வேன் வந்து நின்றபோது அதிலிருந்து இரண்டு பேர் இறங்கி வந்தார்கள். இருவரில் நடுத்தர வயதுள்ளவர் நெற்றியில் சந்தனம் குங்கும்ம் வைத்திருந்தார்.
அவர் அப்பாவிடம் “சாமானை மூட்டைகட்டி ஏத்திவிடுறதுக்கு ஆளை வரச்சொல்லியிருக்கேன். இப்போ வந்துருவாங்க“ என்றார்
காலியாக இருந்த வீட்டை அவரும் அப்பாவும் சுற்றிப் பார்த்தார்கள்.
“இது உங்க சொந்த வீடா“ என்று கேட்டார் சந்தனம் வைத்தவர்
“பூர்வீக வீடு.. தாத்தா காலத்துல கட்டினது.. “
“கவர்மெண்ட் வேலைன்னாலே இப்படிக் மூட்டை முடிச்சை கட்டிகிட்டு ஒட வேண்டிய தான்“
“மூணு வருஷத்துக்கு ஒரு ஊருக்குப் போயி தானே ஆகணும்“
“நம்ம ஊர் சௌகரியம் எந்த ஊர்லயும் கிடைக்காது. நம்ம ஊர் தண்ணி அப்படி.. “ என்றார் சந்தனம் வைத்தவர்
அப்பா தலையாட்டிக் கொண்டார்

இரண்டு பைக் அவர்கள் வீட்டை நோக்கி வந்து நின்றது. நான்கு பேர் இறங்கி வீட்டிற்குள் வந்தார்கள். அவர்களே பொருட்களை வேனில் ஏற்றினார்கள். பக்கத்துவீட்டுக் கிணற்றினை ஒட்டி சென்று கொண்டிருந்த பூனை நின்று அவர்கள் வீடு காலி செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தது .அந்தப் பூனை நிறைய முறை அவர்கள் வீட்டில் திருடி சாப்பிட்டிருக்கிறது. கதிர் அந்தப்பூனையை அடிக்கத் துரத்தியிருக்கிறான். இன்றைக்கு அந்த வெறுப்பில் தானே என்னவோ ஏளனமாகப் பார்த்தபடியே வாலை ஆட்டியபடி நின்றிருந்தது.
பிரம்பு நாற்காலியை கடைசியாக ஏற்ற வேண்டும் என்றும் அதில் தான் உட்கார்ந்து வரப்போவதாகச் சொன்னார் அப்பா
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீங்க முன்னாடி வந்துருங்க “என்றாள் அம்மா
“வண்டி வேகத்துல ஏதாவது ரோட்டில விழுந்துட்டா தெரியாமப் போயிடும். நான் பாத்துகிடுறேன், நீயும் பிள்ளைகளும் முன்னாடி உட்கார்ந்து கோங்க“. என்றார் அப்பா
“சாத்தூர் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும்“ என்று கேட்டாள் அம்மா
“நாலு மணியாகிடும்கா“ என்றான் டிரைவர்.
“அப்போ வழியில நிறுத்தி சாப்பிட்டுகிடுவோம்“ என்றார் அப்பா
அம்மா சாமி படங்களை மட்டும் ஒரு மஞ்சள் பையில் போட்டு தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டாள். வேனில் பொருட்களை அடைத்து ஏற்றியிருந்தார்கள்.
அம்மா பக்கத்து வீட்டில் உள்ள ஜெயந்தியக்காவிடம் தபால் வந்தால் வாங்கி வைக்கும்படி சொல்வதற்காகச் சென்றாள். அப்பா ஒட்டடை அடிக்கும் குச்சி வேனை விட்டு நீட்டிக் கொண்டிருப்பதை உள்ளே திணிக்க முயன்று கொண்டிருந்தார்.
தேவையில்லாத பொருட்கள் என்று ஒதுக்கியதில் கதிரின் தலையணையும் குப்பை மேட்டில் கிடைந்தது. அதை எடுத்துக் கொள்ளலாமா என்று நினைத்தான். ஆனால் அம்மா திட்டுவாள் எனப் பயமாக இருந்தது
தலையணை கிழிந்து பஞ்சு துருத்திக் கொண்டிருந்தது. தலையணை உறையிலிருந்த நிலாவும் இரண்டு கிளிகளும் நிறம் மங்கிப்போயிருந்தன. அந்தத் தலையணையில் முகம் புதைத்து எத்தனையோ கனவு கண்டிருக்கிறான். காய்ச்சலின் போது அழுதிருக்கிறான். நள்ளிரவில் விழிப்பு வந்து காரணமில்லாத பயம் பற்றிக் கொள்ளும் போது அந்தக் கிளிகள் மீது முகத்தைப் புதைத்துக் கொண்டு தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டியிருக்கிறான்.
ஒருமுறை கல்பனா சித்தியும் அவளது பிள்ளைகளும் இரவில் வந்து சேர்ந்த போது சித்திக்காக அம்மா அவனது தலையணை தான் பிடுங்கிக் கொண்டாள். கதிர் தலையணை தனக்கு வேண்டும் என்று கேட்டுப் பிடிவாதம் செய்து அடிவாங்கினான். சித்தி அவனது அழுகையைக் கண்டும் தலையணையை விட்டுத் தரவில்லை
வேண்டாத பாய். தலையணை, வளைந்து போன கரண்டிகள். அலுமினிய மக்கு, சிவப்பு பிளாஸ்டிக் வாளி, முருகன் படம் போட்ட காலண்டர். ரப்பர் செருப்புகள். சுருங்கிப் போன ஸ்வெட்டர், எனச் சிறிய குவியல் குப்பைமேட்டில் இருந்தது.
கதிர் காலியாக இருந்த வீட்டிற்குள் ஒரு முறை நடந்தான். குளியலறைக் கதவை தள்ளி குழாய் மூடியிருக்கிறதா என்று பார்த்தான். திறந்துவிட்டால் என்ன. இனிமேல் நம் வீடா என்ன. யார் நம்மைத் திட்டப்போகிறார்கள் என்ற நினைப்போடு தண்ணீர் குழாயை திறந்துவிட்டான். ஆனால் தண்ணீர் வரவில்லை. தேய்ந்து போன சோப்புத் துண்டுகள் தரையில் கிடந்தன. அவற்றைக் காலால் எத்திவிட்டான்.
பிரம்பு நாற்காலியைக் கயிறு கொண்டு இறுக்கக் கட்டினார்கள். அப்பா அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்மா காலியாக இருந்த வீட்டைப் பூட்டி சாவியை ஜெயந்தியக்காவிடம் கொடுத்துவிட்டு வடிவேல் வந்து வாங்கிடுவான் என்றாள்.
வேனில் ஏறிக் கொண்டபோது தங்கள் வீட்டை திரும்பிப் பார்த்தான் கதிர். மனதில் என்றோ ஒரு நாள் ரோட்டில் செத்துகிடந்த காகம் ஒன்றின் நினைவு வந்து போனது.
••
வேன் ஊரைக்கடந்து பிரதான சாலைக்கு ஏறும்வரை அம்மா ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அப்பா டிரான்சிஸ்டர் ரேடியோவில் ஏதோ பாடலை ஒலிக்கவிட்டபடியே பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
ஹைவேயில் அவர்கள் வேன் செல்லும் போது கதிருக்கு அளவில்லாத சந்தோஷமாக இருந்தது. தங்களைக் கடந்து செல்லும் பேருந்துகள். கார்கள் லாரிகளை எண்ணிக் கொண்டே வந்தான்.
அம்மாவின் முகத்தில் ஏதோ யோசனை. கலக்கம். தன் கவலைகளைக் காட்டிக் கொள்ளாமல் மறைத்திருந்தாள்
வேன் டிரைவருடன் ஏதோ பேசிக் கொண்டே வந்தாள் ரமா.
வழியில் ஒரு இடத்தில் நிறுத்தி அவர்கள் தேநீர் குடித்தார்கள். இனிப்பு வடையும் உளுந்தவடையும் சாப்பிட்டான் கதிர். எவ்வளவு பெரிய வடை என்று ஆச்சரியமாக இருந்தது. வெயிலேறிய சாலையில் வேன் செல்ல ஆரம்பித்தது. பின்னால் ஒடிக்கொண்டிருக்கும் புளியமரங்களையும் தூரத்து ஆடுகளையும் பார்த்தபடியே வந்தான் கதிர்.
பெயர் அறியாத ஊர்களைக் கடந்து சென்றது வேன்.
அவர்கள் சாத்தூருக்கு வந்து சேர்ந்த போது மணி ஐந்தாகியிருந்தது. சோர்ந்தும் களைத்தும் போயிருந்தார்கள். அவர்கள் வீடு இருந்த மாதா கோவில் தெருவின் முனையில் சினிமா போஸ்டர் ஒன்று பெரியதாகக் கண்ணில்பட்டது.
பக்கத்தில் ஏதாவது சினிமா தியேட்டர் தெரிகிறதா என்று எட்டிப்பார்த்தான். எதுவும் கண்ணில்படவில்லை
பச்சை நிற கேட் போட்ட வீட்டின் முன்பாக வேனை நிறுத்திவிட்டுச் சாமான்களை இறக்கி வைப்பதற்காக அப்பா ஆட்களைக் கூட்டிவரப் போனார்.
அவரது அலுவலக ப்யூன் காளிமுத்து மற்றும் மூன்று பேர் வந்திருந்தார்கள். அவர்கள் பண்டபாத்திரங்களை புது வீட்டில் இறக்கி வைக்க உதவி செய்தார்கள். பக்கத்திலுள்ள பரோட்டா கடையில் தேவையான இரவு உணவை வாங்கிக் கொள்வோம் என்றார் அப்பா,
அன்றிரவு அப்பாவோடு பரோட்டா கடையைக் காணுவதற்காகச் சென்றான். பெரிய கல்லில் எண்ணெயில் பரோட்டா பொறித்துக் கொண்டிருந்தார்கள். வட்டமலர் போல பார்க்கவே அழகாக இருந்தது. பரோட்டாவும் வழியலும் அம்மாவிற்கு இட்லியும் வாங்கி வந்தாரகள். அவ்வளவு ருசியான பரோட்டாவை அதற்கு முன்பு அவன் சாப்பிட்டதேயில்லை. அந்தப் பரோட்டாவிற்காகவே சாத்தூரில் குடியிருக்கலாம் என்று தோன்றியது.
சாத்தூர் பெரிய நகரில்லை. ஆனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு அது தான் பட்டணம். ஆகவே நிறைய சிறுவணிகர்கள் வந்து போனார்கள். பேருந்து நிலைய வாசலில் கூடை கூடையாக வெள்ளரிக்காயும் கொய்யாபழமும் விற்பனை செய்யப்பட்டன. ஒரு நாள் பனம்பழம் விற்கும் கிழவர் ஒருவரைக் கூடப் பார்த்தான்.
புதுவீட்டில் பொருட்களை எடுத்து அடுக்கி ஒழுங்கு செய்வதற்கு மூன்று நாட்கள் ஆனது. அப்படியும் நிறைய பிளாஸ்டிக் பொருட்களை வைக்க இடமில்லை. ப்யூன் காளிமுத்துவிற்கு அவற்றைத் தூக்கி கொடுத்தார் அப்பா.
கதிரை எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியிலும் ரமாவை எத்தல் ஹார்விபள்ளிக்கூடத்திலுமாகச் சேர்த்தார்கள். பள்ளிக்கூடத்தில் சேர்ந்த நாள் அன்றே விக்டருடன் நண்பனாகிவிட்டான்.
முதல் நாள் பள்ளிவிட்டு திரும்பும் போது விக்டர் அவனை அழைத்துக் கொண்டு போய் கிருஷ்ணா ஐஸ்பேக்டரியில் பால் ஐஸ் வாங்கிக் கொடுத்தான். அவன் இரண்டு ஐஸ் வாங்கிக் கொண்டான்
“டெய்லி ரெண்டு பால் ஐஸ் தின்பேன்“ என்று எச்சில் ஒழுகச் சொன்னான் விக்டர்
கதிருக்கு பால் ஐஸ் சுவை பிடித்திருந்தது. இதெல்லாம் தென்னூரில் கிடையாது என்றும் தோணியது.
அடுத்த பத்துநாட்களுக்குள் கதிருக்கு சாத்தூரை ரொம்பவும் பிடித்துப் போனது.. காண்டிராக்டர் காரில் விருதுநகருக்குப் போய்ப் புதுப்படம் பார்த்து வந்தார்கள். கோவில்பட்டி திலகராஜ் ஜவுளிக்கடையில் புதிய உடைகள் வாங்கினார்கள். அம்மாவிற்கு இரண்டு புதிய தோழிகள் உருவானார்கள். ரமாவிற்குத் தான் யாரையும் பிடிக்கவில்லை.
“இந்த ஊரு நல்லாவேயில்லை. பேசாம நம்ம ஊருக்கே போயிருவோம்மா “என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
கதிர் சனி ஞாயிறு இரண்டு நாளும் தெருத்தெருவாகச் சுற்றியலைந்தான். ஊரிலிருந்த இரண்டு சினிமா தியேட்டரிலும் சினிமா பார்த்தான். காமிக்ஸ் புத்தகங்களை வாடகைக்கு விடுவதற்கென்றே ஒரு பெட்டிக்கடை இருந்த்து. அங்கே நாலணா கொடுத்தால் காமிக்ஸ் புக் படிக்கத் தருவார்கள். பெஞ்சிலே உட்கார்ந்து படிக்க வேண்டும். அப்படி நிறையக் காமிக்ஸ் புத்தகங்களைப் படித்தான்.
மூன்று மாத காலத்திற்குள் முழுமையான சாத்தூர்காரன் போலாகியிருந்தான் கதிர். கருப்பையா நாடார் கடையில் கிடைக்கும் ஸ்பெஷல் பரோட்டா கறி சால்னா ருசி அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. சில நாட்கள் இருக்கன்குடி ரோட்டில் பருத்திப்பால் குடித்தான். தியேட்டரில் முட்டை போண்டாவை ஆசையாக வாங்கி சாப்பிட்டான். பவண்டோ குடித்தான்.

அப்பா அடிக்கடி சண்முக நாடார் கடையில் காரசேவும் கருப்பட்டி மிட்டாயும் வாங்கி வருவார். சோறுக்கு தொட்டுக் கொள்ளக் காரசேவு சுவையாக இருக்கும்
சில நேரம் தனியே ரயில் நிலையம் வரை சென்று தெற்கிலிருந்து வரும் ரயில்களை வேடிக்கை பார்த்து வருவான். ஒரு நாள் தேரடி முன்னால் தன்னைத்தானே சவுக்கடித்துக் கொள்ளும் ஒரு ஆளை பார்த்தான். அந்தச் சவுக்கு அவனைப் பயமுறுத்தியது.
பக்கத்து வீட்டிலிருந்த கோமதியக்காவும் அம்மாவும் மிக நெருக்கமானார்கள். கோமதியக்கா வீட்டில் செய்யும் நண்டும் கறியும் முட்டை மசாலாவும் தவறாமல் அவர்களுக்கு வந்து சேர்ந்தன. இந்த ஊரிலே இருந்துவிட வேண்டும். அப்பாவிற்கு டிரான்ஸ்பரே வரக்கூடாது என்று நினைத்தான் கதிர்.
••
கதிரின் பள்ளிக்குச் செல்லும் வழியில் மாவுமில்லை ஒட்டி சக்தி காபி பார் இருந்தது. அதன் வாசலில் மரபெஞ்சும் நாலைந்து பிளாஸ்டிக் நாற்காலிகளும் போட்டிருப்பார்கள். அந்தக் கடையில் உள்ள அலுமினிய தட்டில் எத்தனை சமோசா, வடை இருக்கிறது என்று எண்ணுவது விக்டரின் வழக்கம். முதல்நாளை விட எத்தனை வடை அதிகமாகியிருக்கிறது அல்லது குறைத்திருக்கிறது என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டே பள்ளிக்கூடம் செல்வார்கள்.
அன்றைக்கு அப்படி விக்டர் எண்ணிக் கணக்குச் சொன்னபோது“ நீ தப்பாச் சொல்றே“ என்றார் கதிர்
“அப்போ நீயே எண்ணி கரெக்டா சொல்லு“ என்றான் விக்டர்
எத்தனை சமோசா இருக்கிறது என எக்கிப் பார்க்கும் போது அவனது கைபட்டு தட்டு சரிந்து விழுந்த்து. ‘
தட்டிலிருந்த சமோசா வடை அத்தனையும் மண்ணில் சிதறியது. அதிர்ச்சியில் உறைந்து போனான் கதிர்..
“ஒடுறா கதிர்“ என்று கத்தினான் விக்டர்
ஆனால் ஒடாமல் கிழே விழுந்தவற்றைக் குனித்து எடுத்துத் தட்டில் போட முயன்றான் கதிர்.
கடைக்காரர் கோபத்துடன் அவனது சட்டையைப் பிடித்து உலுக்கியதோடு வலது கன்னத்தில் ஒங்கி அடித்தார். கண்ணில் பூச்சி பறந்தது. காதில் உய்ங் என ரீங்காரம் கேட்டது.
இதுவரை அவனை யாரும் அப்படி அடித்ததேயில்லை. வலியில் கண்ணீர் பீறிட்டது. அத்தோடு தரையில் கிடந்த சமோசாக்களைப் பார்த்தபடியே “தெரியாமல் செய்துட்டேன் அண்ணாச்சி“ என்றான் கதிர்
“உங்க விளையாட்டு மசிருக்கு என் கடை தான் கிடைச்சதா.. உன் வீடு எங்கடா இருக்கு.. “ என்று கேட்டார் டீக்கடைக்காரர்.
“ நம்ம ஊருக்குப் புதுசா குடி வந்துருக்காங்க அண்ணாச்சி. “ என்று போட்டுக் கொடுத்தான் விக்டர்
டீக்கடை அண்ணாச்சி மோசமான வசை ஒன்றை உதிர்த்தபடியே கதிரின் ஸ்கூல் பையைப் பிடுங்கிக் கொண்டு “போ. போயி உங்கப்பனை கூட்டிகிட்டு வா“ என்று மீண்டும் பிடறியில் அடித்து அனுப்பி வைத்தார்.
தன்னுடைய ஊரில் யாரும் ஒருமுறை கூட இப்படி அடித்ததில்லை. மோசமாகத் திட்டியதில்லை. கதிருக்கு நடுக்கமாக வந்தது. பள்ளி மாணவர்கள் நேரமாகிவிட்டதால் வேகமாக அவனைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். கால்களில் பலமில்லாமல் போய்விட்டது போல நடுக்கமாக இருந்தது
விக்டர் அவனைப் பார்த்து நாக்கை துருத்தி வக்கணை காட்டியபடியே பள்ளியை நோக்கி நடந்தான்.
••
அப்பாவின் பொதுப்பணித்துறை அலுவலக வாசலில் போய் நின்ற போது கதிருக்குப் பயமாக இருந்தது. ஒருவேளை அப்பாவும் அடிப்பாரோ.
அவன் தயங்கி நிற்பதைக் கண்ட ப்யூன் காளிமுத்து “உள்ளே வா“ என்று அப்பாவின் இருக்கையை நோக்கி அழைத்துக் கொண்டு போனார்
அப்பாவிடம் நடந்தவற்றைத் திக்கித் தடுமாறிச் சொன்னான் கதிர்.
அப்பா அவன் கன்னத்தில் பதிந்த தடத்தைப் பார்த்தபடியே “அந்த டீக்கடை எங்கேயிருக்கு“ என்று கேட்டார்
“ஸ்கூல் பக்கத்துல “
அப்பா காளிமுத்துவை உடன் அழைத்துக் கொண்டு “ஜீப்பில் போகலாம்“ என்றார்
அப்பாவின் அலுவல ஜீப்பில் இதுவரை கதிர் போனதேயில்லை. அவர்கள் ஜீப்பில் சென்று டீக்கடை வாசலில் இறங்கினார்கள்.
அப்பா தன்னுடைய பர்ஸிலிருந்து நூறு ரூபாயை எடுத்து கடைக்காரன் முன்னால் நீட்டியபடியே சொன்னார்
“இந்தாய்யா உன் காசு.. இதுக்காக என் பையனை அடிப்பியா“
“தட்டில இருந்த வடையைத் தட்டிவிட்டா பாத்துட்டு சும்மாவா இருக்க முடியும்“ என்று கோபமாகக் கேட்டார் அண்ணாச்சி
“அதுக்குக் கைநீட்டி அடிக்கச் சொல்லுதா“
“ ஆமா அடிச்சேன். அதுக்கு என்ன இப்போ, பெரிய மயிரு மாதிரி சப்தம் போடுறே.. “
“உன்மேலே போலீஸ்ல கேஸ் கொடுத்து உள்ளே தூக்கி வைக்க முடியும் பாத்துக்கோ“ என்றார் அப்பா
“ வச்சி பாரு.. அப்புறம் தெரியும் நான் யாருனு.. பிழைக்க வந்த நாயி.. என்கிட்டயே முறைக்குறயா.. போடா வெண்ணெய் உன்னாலே என்ன செய்ய முடியுமோ செய்யுடா “
என அப்பாவை அந்த ஆள் மிகவும் கேவலமாகப் பேசிக் கொண்டிருந்தார்
அப்பாவிற்குப் பதிலுக்குச் சண்டை போடத்தெரியவில்லை. அவருக்குக் கெட்டவார்த்தைகள் பேசத்தெரியவில்லை. காளிமுத்து இடையிட்டு பேசி சண்டையை நிறுத்தினார்.அப்பாவின் ஜீப்பிலே அவர்கள் வீடு திரும்பினார்கள்.
நடந்தவற்றைக் கேட்டு அம்மா அழுதாள். கதிரை அருகில் அழைத்துக் கன்னத்தைத் தடவிக் கொடுத்தாள் அம்மா. ஏனோ அவனது அப்பா டீக்கடைகாரர் மீது போலீஸில் புகார் தரவில்லை.
அதன்பிந்திய நாட்களில் அந்தவழியே பள்ளிக்கூடம் போகவே கதிருக்குப் பயமாக இருந்த்து. அடுத்தச் சில நாட்களில் அவனுக்கு ஊர் சுத்தமாகப் பிடிக்காமல் போனது.
இந்த ஊர் தன்னுடையதில்லை. இது அப்பாவின் வேலைக்கான ஊர். அவனுக்கென்று இந்த ஊரில் எதுவுமில்லை. எதற்காக இந்த ஊருக்கு வந்தோம். தென்னூருக்கே போய்விடலாமே என்று நினைத்து வருத்தப்பட்டான்.
அதன்பிறகு பள்ளியிலும் வீதியிலும் யாரோடும் பேசாமலும் பழகாமலும் ஒதுங்கி இருக்க ஆரம்பித்தான். படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

ரமாவைப் போலவே அவனும் “நம்ம ஊருக்குப் போயிரலாம்மா“ என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தான்
இவர்களின் குரலைக் கேட்டுக் கேட்டு அம்மாவும் ஒரு நாள் சொல்ல ஆரம்பித்தாள்
“பிள்ளைகளுக்கு இந்த ஊர் பிடிக்கலை. நாம தென்னூருக்கே திரும்பி போயிரலாங்க“
“மூணு வருஷதுக்கு எங்கேயும் போக முடியாது. என்ன நடந்தாலும் இங்கே தான் இருக்கணும்“ என்றார் அப்பா
“உங்களுக்கு என்ன பகல்ல ஆபீஸ் போனா ராத்திரி தான் வர்றீங்க. நானும் பிள்ளைகளும் தான் கிடந்து அவதிப்படுறோம்“
“நீ தானே ஊரு மாறணும். வீடு மாறணும்னு புலம்பிகிட்டு இருந்தே“
“அது நான் செய்த தப்பு“ என்று அம்மா விம்மினாள்.
சாத்தூரை விட்டு போகமுடியாது என்ற நிஜம் அவர்கள் வேதனையை அதிகப்படுத்தியது. உப்பில்லாத சாப்பாட்டைப் பிடிக்காமல் சாப்பிடுவது போல இருந்தது அவர்களின் வாழ்க்கை.
வீடு தந்த நெருக்கடி காரணமாகவோ என்னவோ அப்பா காண்டிராக்டர்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் அவரது பையில் ஆயிரக்கணக்கில் லஞ்சப் பணம் புழங்க ஆரம்பித்தது.
காண்டிராக்டர்கள் செலவில் லாட்ஜில் ரூம்போட்டு குடித்தார். போதையில் சில்லறை விஷயங்களுக்குக் கூடச் சண்டை போட்டார். ஊரை பழிவாங்குவதற்காக அப்படிச் செய்கிறாரோ என்று கதிருக்குத் தோன்றியது.
அன்றாடம் அலுவலகம் விட்டதும் காண்டிராக்டர் நடராஜனின் காரில் கோவில்பட்டி சென்று குடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புவார். ஞாயிற்றுகிழமைகளில் கூடிக் குடிப்பதற்காக அவரை மதுரை அழைத்துப் போகத் துவங்கினார்கள். பல நாட்கள் போதையில் தடுமாறியபடி அப்பா வாசற்கதவை ஒங்கி தட்டும் சப்தம் உறக்கத்தினுள் அவனுக்குக் கேட்டிருக்கிறது. அது ஒரு மிருகத்தின் காலடி ஒசை போலவே தோன்றியது,
குடிப்பழக்கம் காரணமாக அப்பாவின் உடல் நிலை சீர்கெட ஆரம்பித்தது. . படுக்கையிலே மஞ்சளாக வாந்தி எடுத்தார். அதில் ரத்தம் கசிந்திருந்தது. அம்மா அதைக் கண்டு பயந்து போனாள்.
அவர் மீது யாரோ லஞ்சபுகார் அனுப்பியிருக்கிறார்கள், அவரை விசாரணை செய்யப்போகிறார்கள் என்று ஒரு நாள் அப்பா போதையில் புலம்பியதை கேட்டு அம்மா அதிர்ந்து போனாள்.
எதற்காக இந்த ஊருக்கு வந்தோம் ஏன் இத்தனை பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டோம் என்று அம்மா புலம்பினாள். அந்த வாரம் வெள்ளிகிழமை இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வேண்டுதல் செய்து மாவிளக்கு எடுத்தாள். ஆனாலும் அப்பா மாறவேயில்லை.
ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் திருவாரூரிலிருந்து அருணா சித்தி அவர்களைக் காண சாத்தூர் வந்திருந்தார். அவர் அம்மாவின் ஒரே தங்கை. பள்ளி ஆசிரியராக வேலை செய்கிறார்.
“எதுக்குக்கா இப்படிச் சொந்தபந்தம் இல்லாத ஊர்ல கிடந்து அவதிப்படுறே. அத்தான் போக்கும் சரியில்லைன்னு சொல்றாங்க “
“எல்லாம் என் தலையெழுத்து“ என்றாள் அம்மா
“கதிரு ஆளே மெலிஞ்சி அடையாளம் தெரியலை.. அவனை வேணும்னா நான் கூட்டிகிட்டு போயி படிக்க வைக்கட்டும்மா“. என்றாள் அருணா சித்தி
“அவனையே கேளு“ என்றாள் அம்மா
“கதிரு என் கூட வந்துருறயா“
“இல்லை சித்தி. நான் இங்கே தான் இருப்பேன். வேணும்னா எங்கப்பாவை உங்க கூடக் கூட்டிகிட்டு போயிருங்க… நாங்க நிம்மதியா இருப்போம்“. என்றான் கதிர்.
“பெரிய மனுசனாட்டம என்ன பேச்சுப் பேசுறான் பாத்தியாக்கா“ என்றாள் அருணா சித்தி
அவன் பேசியதிலுள்ள உண்மையை ஆமோதிப்பவள் போல அம்மா சொன்னாள்
“அவன் ஒண்ணும் சின்னபுள்ளை இல்லை. நல்லது கெட்டது எல்லாம் தெரியும்“
அதை ஏற்பது போலக் கதிர் சொன்னான்
“இந்த வீட்ல நடக்குறது எல்லாம் உங்களுக்குத் தெரியாது சித்தி. எனக்கு இதை எல்லாம் பாத்துப் பழகிருச்சி. “
“நீ பேசலைடா. இந்த ஊரு உன்னை இப்படிப் பேச வைக்குது“ என்றாள் சித்தி
அவள் சொன்னது உண்மை என்று கதிர் உணர்ந்த போதும் அதை ஏற்பது போலத் தலையாட்டவில்லை. சித்தி கிளம்பும் வரை எதையும் காட்டிக் கொள்ளக்கூடாது என்பது போலப் பாவனையாக நடிக்கத் துவங்கியிருந்தான்.
••••
February 1, 2023
ஆங்கிலத்தில்
எனது வானில் எவருமில்லை சிறுகதையை ஆர்.சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.
இக்கதை Borderless இதழில் வெளியாகியுள்ளது
இணைப்பு
https://borderlessjournal.com/2023/01...

January 29, 2023
தொப்பி அணிந்த டால்ஸ்டாய்.
ஜி.கோபி
மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த வாசிப்பனுபவம்

••
மண்டியிடுங்கள் தந்தையே நாவல் திறந்த வேகத்தில் வாசித்து முடித்துவிடக் கூடிய எளிய சுவாரசியமான புத்தகம். ஆனாலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து வாசித்தேன். ரஷ்யவில் யஸ்யானா போல்யானா பண்ணைக்குச் சென்று டால்ஸ்டோயை பார்த்து உடன் பழகியது போல இருந்தது. அந்தப் பண்ணையின் மீதுள்ள ஒரு மணற் குன்றின் மீது நின்று கொண்டு அங்குள்ள விவசாயிகளோடு தொப்பி அணிந்த படி டால்ஸ்டோய் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எந்த நேரமும் உற்சாகமாகச் சுற்றியலையும் அனைவரையும் நேசிக்கும் முட்டாள் டிமிட்ரியையும் முரட்டுத்தனம் கொண்ட திமோபியையும் வெகுவாக ரசித்தேன்.
உண்மையில் அகன்ஷியா மற்றும் திமோபிக்காக நான் வருந்துகிறேன். நதியில் போட்ட இலையைப் போல அவன் வாழ்க்கை அலைக் கழிக்கப் படுகிறது. தந்தை டால்ஸ்டாயின் மீது ஏற்பட்ட உறவின் கசப்பும் கடந்த காலத்தில் அவர் செய்த குற்றத்தினால் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகப் பண்ணையை விட்டு வெளியேறிப் போகும் திமோபியை என்றும் மறக்கவே முடியாது. ஆனால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வரும் அவன் முற்றிலும் புதிய மனிதனாக இருக்கிறான்.
நேர்த்தியாக உடையணிந்து கொண்டு பண்ணை தொழிலாளர்களுடனும் அனைவருடனும் உற்சாகமாகப் பழகுகிறான். புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தவனாக நிறையப் பயண அனுபவங்களையும் நினைவுகளையும் கொண்டவனாகயிருக்கிறான். அதிலும் குறிப்பாகப் பால்சாக்கின் புத்தகங்களை எடுத்து தனது தாயிடம் கொடுப்பதாக ஒரு குறிப்பு வந்தது . உருமாறிய திமொபியை நான் வெகுவாக ரசித்தேன். ஏதோவொரு தருணத்தில் பயணங்களும் வாசிப்பும் எழுத்தும் மனிதனை மிகுமுக்கியமாக உருமாற்றமென்பது முற்றிலும் உண்மைதான்.

நீண்டகாலம் வாழ்ந்த நெடும் முதியவரான டால்ஸ்டாயை வாசிக்கும் போது மலையைப் போல நிசப்தமானவராகயிருந்தார். புத்தகத்தை வாசித்த முடித்த பின்னரவில் கூடப் புத்தகத்தின் அட்டைப் படத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் அமைதியான முரட்டுச் சிங்கத்தைப் போல டால்ஸ்டாய் தோற்றமளித்தார். நரைத்த தாடிகளுக்குள் அவரது கண்களின் அன்பையும் பரிவையும் ஆறாத நினைவுகளின் வலியை உணர முடிந்தது. நாவலின் இறுதி பகுதியில் அகன்சியாவின் சமாதிக்கு போய்விட்டு நன்றி சொல்கிறார் டால்ஸ்டாய். உண்மையில் அது அவருடைய காதலின் நினைவுச் சின்னம் அதுதான். அந்தக் கணத்தில் அவர் தனது ஒட்டு மொத்த தவறுகளுக்கும் மனம் திருந்தி வருந்ததியிருப்பார். அதைத் தொலைவில் இருந்து பார்க்கும் திமோபி மனதினுள் ஆசுவாசமடைகிறான். தனது தந்தையான டால்ஸ்டாய் மீதிருந்த இத்தனை ஆண்டுகள் கசப்பு குரோதமும் வடிந்து அமைதியடைகிறான்.
ரஷ்யாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் டால்ஸ்டாய் ஆற்றிய தொண்டு மிக முக்கியமான பொறுப்பான செயல் அதே போலவே பல்கலைகழகத்திலிருந்து டால்ஸ்டாயினைப் பேட்டி எடுக்க வந்த மாணவர்களோடு அவர் உரையாடும் அத்தியாயம் நான் விரும்பி வாசித்த ஒன்று. அதில் டால்ஸ்டாய் இலக்கிய ஆளுமையும் மேதைமையும் அழகாக வெளிப்பட்டிருந்தது. மாபெரும் எழுத்தாளரான இதே டால்ஸ்டாய் தான் இளமை காலத்தில் சூதாடியாக இராணுவ வீரனாகப் பெண்களை மயக்குபவராக இருந்திருக்கிறார். மேலும் இதே லெவ் டால்ஸ்டாய்தான் விவசாயியாக எளிமையும் ஞ்சானமும் கொண்ட முதிய தந்தையாக அனைவரையும் நேசித்துப் போதனை செய்பவராகயிருக்கிறார்.
நெடிய மலைக்குப் பல பக்கங்கள் உண்டு. எந்தப் பக்கத்திலிருந்து ஏறினாலும் மலையுச்சியில் நாம் அடையும் அனுபவம் நிகரில்லாதவொன்று. டால்ஸ்டாய் அந்த மலையைப் போலப் பல முகங்களைக் கொண்டவர். ஆனால் மலையின் நிசப்தம் பல நினைவுகளையும் கடந்த கால வாழ்வின் துயரங்களையும் கொண்டதேன எவரும் அறிய மாட்டார்கள்.
பனியும் பசுமையின் வயல் வெளிகளும் பழங்காலக் கிராம வீடுகளையும் கொண்ட அவரது பண்ணை மனதில் மிதந்த படியே இருந்தது. நீதிக்கதைளையும் அன்னா கரீனா போன்ற நவீன நாவலையும் எழுதிய டால்ஸ்டாய் ஒரு எளிய விவசாயியாக ராணுவ வீரனாக எழுத்தாளனாகவும் வாழ்ந்திருக்கிறார் என்பது ஆச்சர்யமாக யிருக்கிறது.
டால்ஸ்டாய் எந்தப் பெண்ணையும் கட்டாயப் படுத்தியோ வன்புணர்வுக்கோ உட்படுத்தவில்லை. அவரோடு பழகிய பெண்கள் அவரை விரும்பி நேசித்தார்கள் என்று ஒரு குறிப்பு வருகிறது. திடமான மனிதராகக் கருணையும் கொண்ட அவரை அனைவரும் விரும்பினார்கள். நாவலில் ஒரு பட்டாம்பூச்சியைப் போலப் பண்ணைக்குள் அலையும் முட்டாள் டிமிட்ரி மறக்கவே முடியாத கதாபாத்திரம். அவர் மரணமடையும் நேரத்திலும் சிரித்துக்கொண்டே மடிந்தான் என்பது ஆச்சர்யமாக இருந்தது. இந்தக் கசடுக்களும் போலிதனமுமான வாழ்வில் முட்டாள் டிமிட்ரி போன்றவர்கள் மட்டுமே நம்மைச் சந்தோசப் படுத்துகிறார்கள். நல்ல நண்பர்களாகயிருக்கிறார்கள். முட்டாள் டிமிட்ரி குழந்தையைப் போன்றவர். அவரை நான் அளவுகடந்து ரசித்து வாசித்தேன். டால்ஸ்டாயின் கடந்தகால வாழ்க்கையில் எஞ்சிய நினைவுகளுமாகவே திமோபியும் அகன்சியாவும் இருக்கிறார்கள்.

டால்ஸ்டாயை ஒரு போதும் அகன்ஷியா வெறுக்க வில்லை. பெண்களின் அன்பையும் மனதையும் எவராலும் புரிந்துகொள்ள முடியாது என்பது உண்மைதான். அதே நேரத்தில் தந்தை இல்லாத திமோபியின் வேதனையையும் உணர முடிந்துது. அழைக்கழிப்பின் வாழ்க்கை அவனுடையது. பண்ணயின் வேலையாட்கள் டால்ஸ்டாயின் சொந்த வாழ்க்கையை நாவல் பேசும் அதே நேரத்தில் அவருடைய பிறந்தநாள் இரவு விருந்தும், கொண்டாட்டம் நிறைந்த இரவும் சர்க்கஸ் உலகத்திற்குள் போய் வந்த அனுபவத்தைத் தந்தது. ரஷ்யாவின் பனிபெய்யும் இரவை கற்பனை செய்து பார்த்தேன்.
இந்தப் புத்தகத்தின் மூலம் டால்ஸ்டாயின் வாஞ்ச்சையையும் அன்பையும் அவருடைய போதனைகளையும் உணர முடிந்தது.
டால்ஸ்டாய்- சோபியா உறவு பல உண்மைகளைச் சொல்கிறது. திருமணமான அன்று சோபியாவிடம் தனது கடந்தகாலத் தவறுகள் நிறைந்த நினைவுகளின் டைரியை கொடுக்கிறார். காந்தியும் கூடத் தனது வாழ்நாளில் ரகசியமாகப் புகை பிடித்தாகவும் அதனால் ஏற்பட்ட குற்றஉணர்வினால் மன்னிக்குமாறும் அவரது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். செய்த தவறுக்கான தண்டனை மனதார அதை ஒப்புக்கொண்டு திருந்தி வாழ்வதில் தான் உள்ளது. மகாபாரத்தில் கூடக் குந்தியின் கடந்த கால உண்மை வெளிப்படும் போது அன்னை மீது கோபப்பட்டு யுதிஷ்டிரன் எதை மறைக்கப்படுகிறதோ அதைப் பாவம் என்பார்கள் என்று உரைக்கிறான்.
டால்ஸ்டாய் பற்றி எழுதப் பட்ட இந்த நாவல் அந்த உண்மையைத்தான் எளிமையாகப் பேசுகிறது. ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து கொள்வதுதான் நல்ல உறவின் அடையாளம். ஆனால் ஒரே படுக்கையில் படுத்திருந்தாலும் யாரும் ஒரே கனவை காண்பதில்லை என்று சொல்லும் டால்ஸ்டாய் சக மனிதனையும் ஆணையும் பெண்ணை யும் அவரவர் சரி தவறுகளோடு ஏற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் என்று அழுத்தமாகப் பதிவு செய்கிறார். தமிழில் எளிமையாக டால்ஸ்டாய்பற்றிப் புத்தகம் எழுதி நல்ல வாசிப்பனுபவத்தையும் டால்ஸ்டாயின் படைப்புகளையும் புரிந்து கொள்ள உதவி செய்த எழுத்தாளர் எஸ். ராவிற்கு அளவுகடந்த அன்பும் நன்றியும்
••
January 28, 2023
வெயிலின் சங்கீதம்
சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன். நாவல் குறித்த வாசிப்பனுபவம்
சுயாந்தன் (Suyaanthan Ratneswaran )·
**

நாதஸ்வர இசையினையும் அதனை வாசிக்கும் கலைஞர்கள் பற்றியதுமான அற்புதமான ஒரு நாவல் “சஞ்சாரம்”. கி.ராவுக்கு பின்னர் தமிழில் நாதஸ்வரம் பற்றி அதிகம் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்றே நினைக்கிறேன். இந்த நாவலை வாசித்து விட்டுக் கோயில்களில் நாயனம் வாசிக்கும் ஒரு வித்துவானிடம் உங்கள் கலையைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் நானூறு பக்கத்தில் பெருங்கதை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அசுரவாத்தியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்று இந்த நாவலில் இருந்த நாதஸ்வரம் பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டபோது அவர் ஒற்றை வார்த்தையில் கூறினார் இதனை ராஜவாத்தியம் என்று நாம் கூறுவோம். நாயனம் வாசிப்பது எல்லோராலும் முடியாது. அதற்கு மூச்சுப்பயிற்சியுடன் ரசனையும் அதிகம் இருக்க வேண்டும் என்றார். அதுதான் உண்மை. இந்நாவலும் அதனையே விரிவாகக் குறிப்பிடுகின்றது.
இந்நாவலை வாசித்ததில் இருந்து எதிரில் நாயனம் வாசிக்கும் அனைவரையும் பக்கிரி என்றும், ரத்தினம் என்றும் காணமுடிகிறது. இந்நாவலின் பிரதான கதாபாத்திரங்கள் இவர்கள்தான். தமிழ்ச்சமூகத்தின் இசையில் சினிமாப்பாடல்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் மிகச்சிறந்த தமிழ் இசையமைப்பாளர்கள் சினிமாப்பாடல்களின் துணுக்குகளில் நாதஸ்வரத்தின் ஒலியைச் சேர்த்துள்ளனர். துரதிருஷ்டவசமாக எனக்கு நாதஸ்வர இசை என்பது அறிமுகமானது காருகுறிச்சியார் மூலமோ ராஜரத்தினம்பிள்ளை மூலமாகவோ அல்ல. சினிமா இசையமைப்பாளர்களின் பாடல்கள் மூலமாகவே. இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் அவர்களின் இருபது வரையான பாடல்களில் நாதஸ்வர துணுக்குகள் இடைச்சேர்க்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் அவ்வளவு பிரமாதமானவை. அந்தத் துண்டுகளை ஒன்றாக்கி அடிக்கடி கேட்பதுண்டு. நேர்த்தியான மல்லாரி, திரிபுடைதாளங்களுக்கு இது ஈடாகாது என்றாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. என் தொலைபேசியின் அழைப்பிசையாக நாதஸ்வர இசையே உள்ளது.
00
இந்நாவலின் கதையமைப்பு பல கிளைக்கதைகளால் விரவிக்காணப்படுகிறது. அவை அனைத்தும் நாயனம் மற்றும் கரிசல் நிலங்களின் வாழ்வைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. சாதிய மனோபாவங்கள் அத்தியாயம் தோறும் குறிப்பிடப்படுகிறது. “மனிதர்களே ஊரைவிட்டுப் போய்விட்ட பிறகு கடவுளை கவனித்துக்கொள்ள யாருக்கு நேரமிருக்கிறது” போன்ற வசனங்கள் கரிசல் நிலத்தின் வீழ்ச்சியையும் நகர வாழ்வின் பிடிமானத்தையும் காட்டுகின்றது. பக்கிரி-ரத்தினம் என்ற இரண்டு கதாபாத்திரங்களையும் அவர்களின் நினைவோடைகளையும், கதையாசிரியரின் மேதமைகளையும் கொண்டு இந்நாவல் மிகமிகச் சிறப்பாக நகர்ந்து செல்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இந்நாவலை எழுதியுள்ளார்.
இந்நாவலில் இடம்பெறும் மாலிக் கபூர் – லட்சய்யா பற்றிய அரட்டானம் என்ற அத்தியாயம் அபாரமான கதைசொல்லல் என்றே கருதலாம். தன்னாசி கதையும் அவ்வாறான ஒன்றே.
துயரத்தின் இசை. மறக்கப்பட்ட சந்தோசத்தின் இசை. ரகசியத்தின் இசை. இச்சைகளின் இசை. நிராசையின் இசை. வெயிலின் சங்கீதம் என்று பலவாறாக கரிசல் மக்கள் நாதஸ்வர இசையை உணர்ந்து கொள்கின்றனர். நாதஸ்வரம் கரிசலின் ஆன்மாவை விழிப்படையச் செய்யும் வாத்தியம். இதைக் கேட்பதன் வழியாக அவன் மண்ணின் இரகசியத்தை அறிந்து கொள்கிறான்.
வாயில் வெற்றிலை போடுவதற்குமுன் எப்படி அதனை தயார் செய்வது என்று சுந்தரநயினார் கதாபாத்திரம் மூலம் மிக அழகான சித்திரம் ஒன்றை எஸ்.ரா தந்துள்ளார்.
டிஎன் ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், குழிக்கரை பிச்சையா, நல்லடை சண்முகசுந்தரம்,வல்லம் தெட்சிணாமூர்த்தி என்று பெரும்புகழ்பூத்த நாதஸ்வர கலைஞர்களின் குறிப்புகளும் பல அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளது.
மல்லாரி வாசிப்பதை காணொளிகளில் கண்டிருக்கிறேன். ஆனால் அது இரண்டு நாதஸ்வரங்கள், ஒரு ஒத்து, நான்கு தவில்கள் என்று பரந்துபட்ட ஒரு கலையம்சம் என்று இந்நாவலில் தரப்பட்ட விளக்கத்தைக் கொண்டே அறிந்துகொள்ள முடிந்தது.
இந்நாவலின் அத்தியாயங்கள் ஊர்ப்பெயர்களைக் கொண்டே நகர்கிறது. நாதஸ்வரக் கலைஞர்களாக இதில் காட்டப்படும் பக்கிரி-இரத்தினம் இருவரும் ஊர் ஊராகச் சென்று நாயனம் வாசித்து பிழைப்பு நடாத்துபவர்கள் என்பதைவிட, தனிப்பட்ட விதத்தில் தேசாந்திரியான எஸ்.ரா அவர்களுக்கு இந்நாவலை ஒரு பயணப்பிரேமையுடன் அமைப்பதில் அலாதி பிரியம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
தத்தகாரம், தன்னகாரம், துத்தகாரம், அகாரம், வழுக்கு, அசைவு, பிர்கா, விரலடி என்று எட்டுவகையான பயிற்சிகள் நாதஸ்வரத்திலுள்ளன. நாதஸ்வரத்தின் சொரூபத்தை அறிவதற்கு நம் கற்பனைகள் மூலம் ஒவ்வொரு ராகமாக “சஞ்சாரம்” செய்ய வேண்டும். அந்த சஞ்சாரம் வாசிப்பவனுக்கும் சரி அதனை ரசிப்பவனுக்கும் சரி பொதுவானதே.
இந்நாவல் மூலமாக மிகச்சிறந்த எழுத்தை வாசித்துள்ளேன் என்றும் மிக உயரிய விடயங்களை அறிந்துள்ளேன் என்றும் சில தருணங்களில் உணர முடிகிறது.
2018 சாகித்திய அகாடமி விருது இந்நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசாந்திரி பதிப்பகத்தால் இந்நாவல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 360 பக்கங்கள்.
முடிவில்லாப் போராட்டம்
நீதி மறுக்கப்பட்ட ஒருவனின் போராட்டத்தை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறது Ghodwa. 2021ல் வெளியான துனிசியப்படம். துனியப்புரட்சிக்குப் பிந்திய அரசியல் சூழலை விவரிக்கும் இப்படத்தை இயக்கியவர் தாஃபர் எல்’அபிதீன். இவரே முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

அதிகாரத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் வழக்கறிஞரான ஹபீப் தீவிரமான மனச்சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறார். புரட்சிக்கு முந்திய அரசின் மோசமாக வன்கொடுமையால் அவரைப் போலப் பலரும் பாதிக்கப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். புரட்சி அரசாங்கம் உருவானதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹபீப் நம்பினார். ஆனால் புரட்சி அரசாங்கம் அது போன்ற நீதி விசாரணை எதையும் மேற்கொள்ளவில்லை. ஆகவே நீதி கேட்டு அரசிடம் மன்றாடுகிறார் ஹபீப். இன்னமும் புரட்சி நடைபெறவில்லை. இனிமேல் தான் நடைபெறப்போகிறது என்று நம்புகிறார்.இந்த கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார்
மனைவியைப் பிரிந்து வாழும் ஹபீப் உடன் தற்காலிகமாக வந்து தங்குகிறான் அவரது மகன் அகமது. பள்ளி மாணவனாக அவன் பரிச்சை எழுதுவதற்காகத் தந்தையின் வீட்டில் தங்கியிருக்கிறான். இந்த நாட்களில் தந்தையின் குழப்பங்களைப் புரிந்து கொள்வதுடன் அவர் மீது மிகுந்த அன்பு காட்டுகிறான். தந்தை வெளியே செல்ல வேண்டாம் என்று தடுக்கிறான். ஆனால் ஹபீப் தொடர்ந்து பல்வேறு வகைகளில் போராடுகிறார். அடி உதை வாங்குகிறார். அவரை அதிகாரத்திலிருப்பவர்கள் விஷம் கொடுத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறார்.

தந்தையின் மீது அக்கறை கொண்ட அகமது பரிட்சை நடுவிலும் அவர் எங்கே சென்றிருப்பார் என்பதைப் பற்றியே நினைக்கிறான். கவலைப்படுகிறான். அடிபட்டுத் திரும்பும் தந்தையைக் குளிக்க வைக்கும் காட்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது
உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒரு காட்சியில் புரட்சி அரசாங்கத்தின் அதிபரிடம் நேரடியாக ஹபீப் முறையிடுகிறான். அவனது கோரிக்கையை அவர் ஏற்க மறுக்கிறார். அத்தோடு காவலாளிகளை ஏவி உதைத்து வெளியே தூக்கி எறிகிறார். இதற்காகத் தானா தானும் தோழர்களும் சிறைக்குச் சென்றோம். துயர்களை அனுபவித்தோம் என்று ஹபீப் புலம்புகிறான்.
துனிசியப் புரட்சிக்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் சமூக நீதியைத் தேடிக்கொண்டிருக்கும் ஹபீப் வழியாக மறைக்கப்பட்ட நீதியின் குரலை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
அகமது உடனான ஹபீப்பின் உறவு மிகவும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சில காட்சிகளில் மகன் தந்தையைப் போலப் பொறுப்பாக நடந்து கொள்கிறான். முடிவில் அவன் தந்தையின் லட்சியத்தை உயர்த்திப் பிடிக்க ஆரம்பிக்கிறான்.

ஒரு காட்சியில் ஹபீப்பை தேடிப் பிரிந்து போன மனைவி அவனது வீட்டிற்கு வருகிறாள். வீட்டின் அலங்கோல நிலையைக் காணுகிறாள். தண்ணீர் குழாய் வெடித்து வீடு முழுவதும் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. ஹபீப் தன் மகன் வருவதற்கு முன்பு வீட்டைச் சரி செய்ய முற்படுகிறான். அவன் இன்றும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் எனச் சண்டையிடும் மனைவி சுவரொட்டிகளைக் கிழித்து எறிகிறாள். ஹபீப் தனது லட்சியம் தோற்றுப்போய்விட்டதை ஏற்க மறுக்கிறான்.
படத்தில் ஹபீப் காஃப்காவின் நாவலைத் திரும்பத் திரும்பப் படிக்கிறான். ஒருவகையில் அவன் தான் விசாரணை நாவலில் வரும் ஜோசப் கே. படம் முழுவதும் காஃப்காவின் மனநிலையை ஹபீப் பிரதிபலிக்கிறான்.

அரசியலை மையப்படுத்திய படத்தைத் தந்தை மகன் உறவின் வழியே பேச முயன்றிருப்பது பாராட்டிற்குரியது. இயக்குநரின் முதற்படமிது. மிகுந்த அக்கறையுடன் கலை நேர்த்தியுடன் உருவாக்கியிருக்கிறார்.
January 27, 2023
கோபத்தின் எடை
புதிய சிறுகதை. 2023 ஜனவரி 28.
நீண்டநேரம் பேருந்தில் அமர்ந்து வந்தது பிரேமாவிற்குக் கால் சூகை பிடித்துக் கொண்டது. பேருந்து கோவில்பட்டி வந்து சேர்ந்த போது இரவு மணி பதினோறு இருபதைத் தாண்டியிருந்தது

பஸ்ஸை விட்டு இறங்கி காலை உதறிக் கொண்டாள். தலையில் போடப்பட்ட முக்காட்டினை விலக்கி சேலையைச் சரிசெய்து கொண்டாள். மூக்குக்கண்ணாடியில் படித்த தூசியைச் சேலை நுனியால் துடைத்துக் கொண்டாள். மனதில் கோபம் நிரம்பிவிட்டால் ஏனோ கால் வீங்கிவிடுகிறது. வீட்டிலிருந்த போதும் இதை உணர்ந்திருக்கிறாள்.
பேருந்து நிலையத்தில் பாதி இருண்டிருந்தது. காலியாக நின்றிருந்த பேருந்து ஒன்றின் டயரை ஒட்டிக்கொண்டு சாக்கடையை நோக்கி வேகமாக ஓடியது பெருச்சாளி. யாருக்குப் பயந்து இப்படி ஓடுகிறது. அது தான் மொத்த பேருந்து நிலையமே காலியாகத் தானேயிருக்கிறது. அதன் பயம் அதற்கு.
அழுக்கடைந்து போன பேருந்து நிலையக் கடைகள். பால் பாத்திரத்தைக் கழுவிக் கொண்டிருக்கும் டீக்கடைக்காரன். திறந்த உடம்போடு காலை மட்டும் நாலைந்து துணி சுற்றிவைத்திருக்கும் பிச்சைக்காரன். பேருந்து நிலையத்திற்குள்ளாகவே வாழும் கிழட்டுக் கறுப்பு நாய். என அந்த விசித்திர உலகம் குமட்டும் வாசனையைக் கொண்டிருந்தது. பேருந்து நிலையக்கடைகளுக்கு வந்தவுடன் பழங்கள் தன் ருசியை, வாசனையைத் தானே இழந்துவிடுகின்றன போலும்.
ஊர் வந்து சேர்ந்தபோதும் பிரேமாவின் மனதில் கோபம் வடியவேயில்லை.
பேருந்து நிலைய மணிக்கூண்டில் கடிகாரம் ஓடாமல் நின்றிருந்தது. இதைப்பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள். கையில் கட்டிய வாட்ச் நின்று போயிருப்பதையே எத்தனையோ தடவை கவனிக்காமல் பிரேமாபோயிருக்கிறாள்.
அரக்கோணத்திலிருந்து பஸ் மாறி மாறி கோவில்பட்டி வந்து சேருவதற்குள் இரவு பதினோறு மணியைக் கடந்துவிட்டிருந்தது. அன்றைக்குக் காலையில் இப்படித் திடீரெனக் கோவித்துக் கொண்டு பயணிப்போம் என அவள் நினைக்கவில்லை.
சிறிய கோபமாகத் தான் அன்றைய சண்டை துவங்கியது. ஆனால் திரவியம் அவளை மிக மோசமாகத் திட்டியதோடு ஆத்திரத்தில் எச்சிற்கையோடு அடித்துவிட்டான். அத்தோடு சாப்பாட்டுத் தட்டை சமையலறையை நோக்கி வீசி எறிந்தான். சுவரில்பட்டுத் தட்டு ஓசையோடு உருண்டு போனது. சாம்பார் வழியும் சுவரும் பிய்ந்து சிதறிய தோசையும் அவளது ஆத்திரத்தை அதிகப்படுத்தின. தானும் எதையாவது எடுத்து உடைக்கலாமா என்று நினைத்தாள்.
எதுவும் நடக்காதவன் போலத் திரவியம் தனது எச்சிற்கையை நிதானமாகக் கழுவிக் கொண்டிருந்தான். ஆத்திரத்தில் பிரேமா கத்தினாள்.
“போதும்சாமி., நான் கிளம்புறேன். இனிமே இந்த வீட்டுப்படி ஏறமாட்டேன் பாத்துக்கோ “
“சொல்லாதே… செய்“ என்றபடி கையில் பவுடரைப் போட்டு முகத்தில் தடவிக் கொண்டான் திரவியம்.
படுக்கையறைக்குள் நுழைந்து ஆரஞ்சுகலர் பையில் தனது துணிகளை அள்ளித்திணித்தாள். பையின் ஜிப் சரியாக வேலை செய்யவில்லை. அதை வேகமாக இழுத்த போது கையோடு பிய்ந்து கொண்டுவந்தது. வேறு பையைத் தேட வேண்டும். பேசாமல் ஒரு கட்டைப்பையை எடுத்துக் கொள்ள வேண்டியது தான் என்றவளாகக் காய்கறி வாங்கக் கொண்டு செல்லும் செல்வி ஸ்டோர் பையை எடுத்து அதில் துணிகளைத் திணித்தாள்.
இதற்குள் திரவியம் தனது பைக்கில் கிளம்பிப் போயிருந்தான். மின்சாரமில்லாமல் போய்விட்ட வீட்டினைப் போலத் திடீரென அமைதி பீடித்துக் கொண்டது.
குளித்துவிட்டுக் கிளம்பலாமா என்று தோணியது. ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லை என்பது போலப் பட்டுப்புடவைகளுக்குள் ஒளித்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டைப்பூட்டி சாவியை எடுத்துக் கொண்டாள்.
இந்தச் சாவி எதற்கு என்று கூட அப்போது தோணியது.
அரக்கோணத்திலிருந்து கோவில்பட்டிக்கு நேரடியாகப் பஸ் கிடையாது. இரண்டு அல்லது மூன்று பஸ் மாறவேண்டும். திருமணமான புதிதில் அப்படிப் பஸ் மாறிமாறி பயணம் செய்வது சந்தோஷம் அளித்தது. ஆனால் இப்படித் திடீரெனக் கோவித்துக் கொண்டு கிளம்பும் போது எதற்காகத் தனது ஊர் அவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று ஆத்திரமாக வந்தது
இவ்வளவு தூரம் தள்ளி வந்து எதற்காக ஒரு மாப்பிள்ளையை அப்பா கண்டுபிடித்துத் திருமணம் செய்து வைத்தார்.
திரவியத்தை அப்பா மருமகன் என்று சொன்னதேயில்லை. ஆர்ஐசார் என்று தான் சொல்வார். அது அவனது வேலை. அப்பா அந்த வேலையைப் பெருமையாக நினைத்தார்..
பேருந்து பயணத்தின் போது வழிமுழுவதும் கடந்தகாலத்தில் நடந்து போன எதையோ நினைத்துக் குழம்பிக் கொண்டேவந்தாள் பிரேமா. வழியில் பசியெடுத்தபோதும் இறங்கிப் போய்ச் சாப்பிட விருப்பமில்லை. மூத்திரம் பெய்வதற்குக் கூட இறங்கவில்லை. டிசம்பர் மாதம் என்ற போதும் பகலில் வெக்கை அடங்கியிருக்கவில்லை. சூடான வெயில். வீட்டிலிருந்து கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலைத் தான் குடித்தபடியே வந்தாள். அதுவும் பாதியில் தீர்ந்து போயிருந்தது. மேரிகோல்ட் பிஸ்கட்டாவது வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். கோபம் எதையும் செய்ய அவளை அனுமதிக்கவில்லை
இருளை கிழித்துக் கொண்டு விரைந்து வந்த பேருந்து கோவில்பட்டியை நெருங்கியதும் அவளுக்குத் தெம்பு வந்தது. தன் அகலமான கையை நீட்டி ஊர் அவளைக் கட்டிக் கொள்வது போலவே உணர்ந்தாள். எச்சிற்கையோடு அவளை அடித்தவன் வீட்டிற்கு இனி திரும்பிப் போகவே கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.
பேருந்தை விட்டு இறங்கிய போது தான் கவனித்தாள். அந்தப் பேருந்தில் அவள் ஒருத்தி மட்டுமே பெண். அத்தனை பேரும் ஆண்கள். அர்த்த ராத்திரியில் எந்தப் பெண் இப்படிப் பயணம் போகப்போகிறாள்.
பேருந்து நிலையத்தினை விட்டு வெளியே வந்த போது இரவுக்கடைகளின் டியூப்லைட் வெளிச்சம் கண்ணைக் கூசியது. பசியாக இருந்தாலும் ஏதாவது பரோட்டா கடையில் போய்ச் சாப்பிட முடியுமா என்ன. கொத்து பரோட்டா போடும் சப்தம் நாக்கில் எச்சிலைச் சுரக்க வைத்தது. வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான் என முடிவு செய்து கொண்டாள்

அவளது வீடு இருந்த கடலையூர் ரோட்டிற்கு .தனியே நடந்து போக முடியாது. அப்பாவை பைக் எடுத்துக் கொண்டு வரச்சொல்லலாமா.அல்லது ஆட்டோ பிடித்துப் போய்விடலாமா என்று நினைத்தபடியே கிழக்கு நோக்கி நடந்தாள்
பேருந்து நிலையத்தை ஒட்டிய உணவகங்கள் எல்லா ஊரிலும் ஒன்று போலவே இருக்கின்றன. வாயில் வைக்கமுடியாத மோசமான உணவு. அநியாயக் கொள்ளை. அதுவும் புளித்துப் போன மாவில் சுட்டு தரப்படும் தோசையை எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ. டீ காபி என்பது சூடாகத் தரப்படும் மாட்டு மோத்திரம் தான். எல்லா ஊர்களிலும் இதே அநியாயம் தான் நடக்கிறது. இதைப்பற்றிப் பலரும் புலம்பியதோடு சரி யாராலும் எதையும் செய்ய முடிந்ததில்லை. திரவியம் சில ஊர்களில் இந்தக் கடையாட்களுடன் சண்டைபோட்டிருக்கிறான். ஆனாலும் எதையும் மாற்ற முடியவில்லை.
ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ கூட இல்லை. டிசம்பர் மாத இரவுகள் நோயாளி போன்றவை. பிளாஸ்டிக் காகிதம் ஒன்றினுள் தலையைக் கொடுத்துவிட்டு வெளியே எடுக்கத் தெரியாமல் நாய் தலையைச் சிலுப்பிக் கொண்டிருந்தது. மிட்டாய்கடைகளை ஒட்டிய உயரமான சோடியம் விளக்கிலிருந்து பரவும் வெளிச்சத்தில் புழுதியேறி நிற்கும் சர்க்யூட் ஹவுஸ் வேப்பமரங்கள் விநோத தோற்றம் தந்தன.
கிழக்கிலிருந்து ஒரு ஆட்டோ வருவதைப் பார்த்தாள். அதன் ஹெட்லைட் வெளிச்சம் அதிகப் பிரகாசம் கொண்டிருந்தது. அந்த ஆட்டோ ஜோதி மிட்டாய்க்கடையை ஒட்டி நின்றுவிட்டது. வேறு யாராவது ஏறுவதற்குள் அதைப் பிடித்துவிட வேண்டும் என்பது போலப் பையை இழுத்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.
ஆட்டோ மட்டும் நின்றிருந்தது. டிரைவரைக் காணவில்லை.
பக்கத்திலிருந்த மூத்திர சந்திலிருந்து ஐயப்பசாமிக்கு மாலை போட்டிருந்த ஒருவர் வெளியே வந்தார். நாற்பது வயதிருக்கும். மெலிந்த உருவம். லேசாக நரைத்த தாடி. கறுப்புச் சட்டை. கழுத்தில் காவித்துண்டு சாய வேஷ்டி. கழுத்தில் 108 மணிகள் கொண்ட துளசிமாலை. இரவிலும் குளித்துவிட்டு வண்டி ஒட்டுகிறார் போலும். நெற்றியில் சந்தனமிருந்தது.
ஆட்டோ அருகில் வந்து நின்றபடியே “எங்கம்மா போகணும்“ என்று கேட்டார்
வெளிச்சத்தில் அந்த முகத்தை வியப்போடு பார்த்தபடியே இருந்தாள் பிரேமா
“எங்க போகணும் தாயி“ என்று மறுபடியும் கேட்டார் ஆட்டோடிரைவர்
“நீ பரமு தானே“ என்று தயக்கத்துடன் கேட்டாள் பிரேமா
“ஏன் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்“.
“மேட்டு ஸ்கூல்ல என் கூடப் படிச்ச.. பரமசிவம் தானே“ என்று மறுபடியும் கேட்டாள் பிரேமா
`மேட்டு ஸ்கூல தான் படிச்சேன். ஆனா நீங்க யாருனு தெரியலை“
“பிரேமா, லாயல் மில் ரோட்டில வீடு இருந்துச்சி“
“சிவப்பு ரிப்பன் பிரேமாவா“ என்று கேட்டான் பரமசிவம்
அப்படி அவளை நினைவு வைத்திருப்பவர் அவன் ஒருவனாக மட்டுமே இருக்கக் கூடும். ஒரு சொல்லின் வழியே அவளது பள்ளிப்பருவம் மீண்டு வந்தது.
“அதே பிரேமா தான்“ என்றாள்.
“எந்த ஊர்ல இருக்கீங்க. கண்ணாடி வேற போட்டு இருக்கீங்களா ஆள் அடையாளமே தெரியலை. “
“அரக்கோணத்துல இருக்கேன். அம்மா வீடு கடலையூர் ரோட்ல இருக்கு, “
“வீட்டுக்காரர் வர்றலையா“ என்று கேட்டான் சதாசிவம்
அவள் பதில் சொல்லவில்லை
அவனாகத் துணிகள் வைத்திருந்த பையை எடுத்துப் பின்சீட்டில் வைத்தான்.

ஆட்டோ செல்லத்துவங்கியது. அடைத்துச்சாத்தப்பட்ட கடைகளை வீடுகளைக் கடந்து ஈரக்காற்றுடன் சென்று கொண்டிருந்தது. வானில் இரண்டு மூன்று எனக் கூட்டமாக நட்சத்திரங்கள் எதையோ துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன. வானின் இருளைப் பற்றி அதற்குப் பயமே கிடையாது.
“நீயும் ரொம்ப மாறிட்டே“ என்றாள் பிரேமா
“வருஷம் ஆகுதுல்ல. ஆறாம்வகுப்புல ஒண்ணா படிச்சோம். அப்புறம் நான் கழுகுமலைக்குப் போயிட்டேன். படிப்பு நின்னு போச்சு. வடக்கே போயி நானும் பார்க்காத வேலையில்லை. ஆனா கடனுக்கு மேல் கடன் ஆனது தான் மிச்சம். என் பொண்டாட்டி சாத்தூர்காரி. ரெண்டு பொம்பளை பிள்ளைக. இந்த ஆட்டோ கூடக் கடன்தான்.. மிச்சமிருக்கிற வாழ்க்கையை எப்படியாவது ஒட்டுனா போதும்னு இருக்கு “
“உன் குரல் அப்படியே இருக்கு.. மாறவேயில்லை“.
“அதை எல்லாம்மா ஞாபகம்வச்சிருக்கே“ என்று வியப்போடு கேட்டான் பரமசிவம்
“உன்னை இப்படி வழியில் பாப்பேனு நினைக்கவேயில்லை. “
“எனக்கு ஸ்கூல்ல படிச்சேன்கிறதே மறந்து போயிருச்சி. “
“எனக்கு அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு.. வீட்டில் தனியா இருக்கும் போது ஒவ்வொருத்தர் பேரா நினைத்துப் பார்ப்பேன். “
“உங்கப்பா சர்வேயரா வேலை பாத்தார்லே. “
“அது கூட ஞாபகம் வச்சிருக்கியா“
“சிப்பிக்குள் முத்துப் படம் பாக்கப்போறப்போ உங்கம்மா கூட நீயும் சினிமா பாக்க வந்திருந்தே. அன்னைக்கு ரெயின்போ ரிப்பன் கட்டியிருந்தே“
அப்படி ஒரு ரிப்பன் அந்தக்காலத்தில் வந்திருந்தது. அதை ஆசையாக வாங்கிக் கட்டியிருக்கிறாள்.
“நல்லபடம். நான் நிறைய இடத்துல அழுதுட்டேன்“ என்றாள் பிரேமா
“சினிமா பாக்குறதையே விட்டு பத்து பதினைந்து வருசமாச்சி “ என்றான் பரமசிவம்
பாவம் நிறையக் கஷ்டங்களை அனுபவித்துவிட்டிருக்கிறான் போலும்.
ரோட்டின் இடதுபுறம் டியூப் விளக்குள் ஒளிர்ந்து கொண்டிருந்த தேநீர்க்கடையில் தொலைக்காட்சி ஒடிக்கொண்டிருந்தது. கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவளைக் கேட்காமலே பரமு ஆட்டோவை அந்த தேநீர்க்கடையை நோக்கி ஒட்டினான்
டீக்கடை வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கேட்டான்
“உனக்கு டீயா. காபியா“
“டீ “என்றாள்.
டீ மாஸ்டரிடம் ஸ்பெஷல் டீ என்று அவன் சொன்னதைக் கேட்கும் போது மகிழ்ச்சி அதிகமானது.
டீ கிளாஸின் வெளியே வடிந்திருந்த பாலை தனது காவித்துண்டால் துடைத்துவிட்டு அவளிடம் நீட்டினான்.அந்த அக்கறையை ரசித்தாள்.
அவள் அந்தத் தேநீரை கொஞ்சம் கொஞ்சமாக ருசித்துக் குடித்தாள். மனதில் கோபம் வடிய ஆரம்பித்திருந்தது. அவள் டீக்குடிப்பதையே பரமசிவம் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் குடித்துமுடித்தபிறகு டீக்கிளாஸை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டு காலியான மேஜை மீது வைத்துவிட்டு அவனே பணம் கொடுத்து வந்தான்.
அதன்பிறகு வீடு வந்து சேரும்வரை அவளுடன் ஒரு வார்த்தை கூடப் பரமு பேசவில்லை
வாசலை ஒட்டி ஆட்டோவை நிறுத்திவிட்டு அவனே பையை வீட்டுகேட் முன்பாகக் கொண்டு போய் வைத்தான்
அவள் பர்ஸிலிருந்து எடுத்த பணத்தை வாங்க மறுத்துவிட்டுச் சிரித்த முகத்துடன் கிளம்பிப் போனான்
பிரேமா காலிங்பெல்லை அழுத்தினான். பாதித் தூக்கத்துடன் கண்விழித்த அப்பா கலைந்த தலையுடன் யாரு என்று கலக்கமான குரலில் கேட்டார்
“நான்தாப்பா“ என்றாள் பிரேமா
வாசல்லைட்டை போட்டு வெளியே வந்து நின்று பார்த்தார்
நள்ளிரவில் மகள் தனியே வந்து நிற்கிறாள் என்றதுமே நடந்த விஷயங்கள் அவள் சொல்லாமலே அவருக்குப் புரிந்துவிட்டிருந்தன.
அவர்து கைகள் கேட்டை திறக்கும்போது நடுங்குவதைக் கண்டாள்

அப்பா வீதியைச் சூழ்ந்திருந்த இருளை வெறித்துப் பார்த்தபடியே இருந்தார் பிரேமா பையை உள்ளே தூக்கிக் கொண்டு நடந்தாள். சோபாவில் பையைப் போட்டுவிட்டு சமையலறைக்குள் சென்று விளக்கைப் போட்டாள். ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் பிடித்துக் குடித்தாள் பிரேமா
ஆட்டோவில் வரும்போது அடங்கியிருந்த ஆத்திரம் மீண்டும் தலைதூக்கியது
அம்மா எழுந்து வந்திருந்தாள்.
“சாப்பிடுறயாடீ“ என்று கேட்டாள்
“தோசை மாவை எடு“ என்றாள் பிரேமா
அம்மா தோசை மாவை பிரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து வைத்தபோது அவசரமாக வெங்காயம் வெட்டி சட்னி போட்டாள் பிரேமா
அவளாகத் தோசை ஊற்றிச் சாப்பிடுவதை அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரேமா சொல்லாமலே அவளது சண்டை அம்மாவிற்குப் புரிந்திருந்தது.
“எந்நேரம் புறப்பட்டே“ என்று கேட்டாள்
“பத்தரை மணிக்கு“ என்றாள் பிரேமா
சாப்பிட்ட தட்டை கழுவுவதற்காகப் போட்டுவிட்டு மறுபடியும் சொம்பில் தண்ணீர் பிடித்துக் குடித்தாள்.
பின்பு டைனிங்டேபிளில் அமர்ந்து அம்மாவும் மகளும் பேசத்துவங்கினார்கள். அம்மா சப்தமாக அழுதாள். திரவியத்தைக் கெட்டவார்த்தைகளில் திட்டினாள். அப்பா அவர்களாக வந்து தன்னிடம் நடந்த விஷயங்களைச் சொல்வார்கள் என்பது போல ஹாலில் காத்துக் கொண்டிருந்தார்
அவர்கள் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. தண்ணீர் குடிக்க வருவது போல இரண்டு முறை உள்ளே வந்து போனார். அவர்கள் பேச்சை அருகில் அமர்ந்து கேட்கவில்லை.
விடிகாலை வரை அம்மாவும் மகளும் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவரும் ஒன்றாகச் சமையல் அறையிலே உறங்கினார்கள். காலையில் அப்பா எழுந்து வந்தபோது இருவரையும் காணவில்லை. ஏழு மணிக்கு அவர்கள் வீடு திரும்பிய போது தான் கோவிலுக்குப் போய் வந்திருப்பது தெரிந்தது
அம்மா கண்டிப்பான குரலில் சொன்னாள்
“அவன் மேல கேஸ் கொடுத்து உள்ளே தூக்கி வைக்கணும். “
“என்ன நடந்துச்சி அதைச் சொல்லு முதல்ல“
“அந்த குரங்குபயலை பயலைப்பற்றித் தெரியாதாக்கும். எச்சிக்கையாலே அடிச்சிருக்கான். “
“எதுக்கு அடிக்கிறான். இவ என்ன செய்தா“
அதைக்கேட்ட மாத்திரம் பிரேமாவிற்கு ரௌத்திரமானது
“ஆமாம்பா. தப்பு என்மேல தான். நான் தான் லூசு“
“அப்படியில்லைம்மா. எதுக்குச் சண்டைனு கேட்டேன்“
“என்னாலே முடியலைப்பா. இனிமே நான் அங்க போகவே மாட்டேன்“
“இப்படி பேசினா எப்படிம்மா.. எத்தனை நாள் இங்க இருக்க முடியும்“
“உங்களாலே முடியலைன்னா சொல்லிருங்க நான் செத்துப் போயிடுறேன் “என்று வெடித்து அழுதாள்
அவளது அழுகை அம்மாவையும் தொற்றிக் கொண்டது
“ஒத்தைப் பொம்பளை புள்ளய பெத்து இப்படி ஒரு குரங்கு கைல பிடிச்சி குடுத்துருக்கோம். அவனை உங்களாலே ஒண்ணும் செய்ய முடியலை. “
“என்ன செய்யணும்கிறே. “
“அவன் ஜெயிலுக்குப் போகணும். என் மகளை அடிச்ச அவன் கையை உடைக்கணும்“
“பிரேமா..நீ அழுறதை நிப்பாடு.. நான் மாப்பிள்ளையைக் கேட்குறேன்“
“நீங்க ஒண்ணும் கேட்க வேண்டாம். நான் இங்க தான் இருக்கப் போறேன். இது என் வீடு இல்லையா“
“சரிம்மா.. உன் இஷ்டம்“ என்றார்.
பிரேமா உள்ளே போய் மெத்தையில் படுத்துக் கொண்டாள். தனது செல்போனை எடுத்துக் கொண்டு மொட்டைமாடிக்குப் போனார் அப்பா
அவர் திரும்பி வந்தபோது பிரேமாவும் அம்மாவும் கீரை ஆய்ந்து கொண்டிருந்தார்கள்.
“மாப்பிள்ளை போன் எடுக்கலை“
“அந்த நாய்பயகிட்ட உங்களை யாரு பேச சொன்னா..நமக்கு நம்ம பொண்ணு முக்கியம். அவனை லேசுல விடக்கூடாது“ என்றாள் அம்மா
“புரியாம பேசாத ரஞ்சிதம். அவங்க சண்டை என்ன இன்னைக்கு நேத்தா நடக்குது. கல்யாணமாகி பனிரெண்டு வருசமாச்சி, புள்ளை இல்லை. “
“அது இல்லை பிரச்சனை… அவன் பழக்கவழக்கம் சரியில்லை. தண்ணிவண்டியா ஆகிட்டான். “
“ஆனா பேச்சுப் பழக்கம் மரியாதையா தானே இருந்துச்சி. “
“அதெல்லாம் வெறும் நடிப்பு. இத்தனை வருசமும் உங்களாலே ஒண்ணும் பண்ண முடியலே“
அதற்கு அவரிடம் பதில் இல்லை. மகளுக்கு ஏற்படும் வேதனைகளைப் பார்த்துக் கொண்டும் எதுவும் செய்யமுடியாமல் போகும் வலியை அவரால் சொல்ல முடியவில்லை. திடீரென ஒரு இரவிற்குள் அவரது நரைத்த தாடி அதிகமாகியிருந்தது. கைகள் நடுங்குவதை மறைக்க முடியவில்லை
வீட்டிற்குள் நடப்பதற்கே மூச்சு வாங்கியது. சவரம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் போயிருந்தது.
தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டபடி தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கத் துவங்கினார்
அரக்கோணம் என்று செய்தியில் எது வந்தாலும் அது மகளோடு தொடர்பு கொண்டதாகவே அவருக்குத் தோன்றுவது வழக்கம். இன்றைக்குச் செய்தி கண்ணில் படுகிறது. ஒரு சொல் கூட மனதிற்குள் செல்லவில்லை
மதியம் மாப்பிள்ளையே போனில் அழைத்திருந்தார். அவரிடம் எப்படிப் பேசுவது என்று கூடத் தெரியவில்லை. தானே அடுத்த ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி வந்து பிரேமாவை கூட்டிப் போவதாகச் சொன்னார்.
“நீங்க தான் மாப்பிள்ளை பாத்துகிடணும்“ எனும் போது அப்பா தன்னை அறியாமல் விம்மினார். நல்லவேளை வீட்டில் யாரும் பார்க்கவில்லை
இரவில் பிரேமாவிடம் சொன்னபோது அவள் உறுதியான குரலில் சொன்னார்
“நான் போக மாட்டேன். அந்த ஆளும் இங்க வரக்கூடக்கூடாது“
“இப்படி பேசினா எப்படிம்மா“
“அப்பா உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. நீங்க அந்த ஆள் கூட வாழ்ந்து பாருங்க தெரியும்“
அவளது பதிலை மீறிச் சொல்ல அவரிடம் ஒரு வார்த்தையில்லை.

அதன் பிந்திய நாளில் அம்மாவும் அவளும் ஒரு ஜோசியக்காரரைப் பார்த்து வந்தார்கள். அதைப்பற்றி அப்பாவிடம் எதையும் சொல்லிக் கொள்ளவில்லை. அம்மாவும் அவளும் ஜவுளிக்கடைக்குப் போய்வந்தார்கள். அடர் பச்சை வண்ண புடவை ஒன்றை பிரேமா வாங்கிக் கொண்டாள்.
தன் வீட்டில் என்ன நடக்கிறது என்றே அப்பாவிற்குப் புரியவில்லை
அந்தப் புதன்கிழமை சங்கரன்கோவிலிலிருந்து வள்ளி நாயகம் மாமா வந்திருந்தார். அது தற்செயல்தானா. இல்லை அப்பா தான் வரச்சொன்னாரா என்று தெரியவில்லை. அவர் பிரேமாவிற்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார்.
“மாப்பிள்ளைக்கு இந்தப் பக்கம் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வரச்சொல்லிடுவோம், நம்ம பக்கத்துல இருந்தா எல்லாம் சரியாகிடும்“ என்றார்.
பிரேமாவிற்கு அந்த வீட்டில் அதிக நாட்கள் இருக்க முடியாது என்ற உண்மை புரியத்துவங்கியது.
“நானும் உங்க அப்பாவும் உன்கூட வந்து அரக்கோணத்தில் நாலு ஐந்து நாள் இருக்கோம். மாப்பிள்ளையைக் கிட்ட நான் பேசுறேன். நீயும் கொஞ்சம் வாயை அடக்கிட்டு இருக்கணும்மா“ என்றார் வள்ளி நாயகம்
அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் எழுந்து கழிப்பறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
வள்ளிநாயகம் மாமா போகும்வரை வெளியே வரவேயில்லை.
கோவித்துக் கொண்டு வீட்டை விட்டுத் திடீரெனக் கிளம்பியது போலவே அம்மா வீட்டிலிருந்தும் பின் மதியத்தில் தனது பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்
“நான் பஸ் ஸ்டாண்டில கொண்டுவந்து விடுறேன்மா“ என்றார் அப்பா
“நான் போய்கிடுவேன்“ என்று கோபமாகச் சொன்னாள் பிரேமா
அப்பா தெரிந்த ஆட்டோவிற்குப் போன் செய்து கொண்டிருந்தார். அதற்குள் அவள் வாசற்கதவைத் தாண்டி வெளியே வந்தாள்.
அந்த வீடும் மகிழ மரமும் சாலையும் அந்நியமாகத் தெரிந்தன
இரவில் வந்தது போலத் திடீரெனத் தன்முன்னே பரமு ஆட்டோவில் வந்துவிட மாட்டானா என்று ஆசையாக இருந்தது
அவள் பையோடு வெயிலில் நடக்க ஆரம்பித்திருந்தாள். அவளுக்கே தான் சிவப்பு ரிப்பன் சிறுமியாக இருந்தபோது எப்படியிருந்தோம் என்று ஞாபகமில்லை. ஆனால் அது பரமு நினைவில் பசுமையாக இருக்கிறதே என நினைத்தபடியே நடந்தாள்
பரமுவிற்குத் தான் வீட்டில் கோவித்துக் கொண்டு வந்தது பற்றித் தெரிந்திருக்குமா. அதை அவள் முகம் காட்டிக் கொடுத்திருக்குமா. தெரிந்தால் என்ன தப்பு. யார் வீட்டில் சண்டை நடக்கவில்லை.
நூருல் ஸ்டோரைத் தாண்டி அவள் நடந்தபோது திரும்பிப் பார்த்தாள்
கையில் ஒரு கறுப்பு குடையுடன் அப்பா மூச்சுவாங்க நடந்து வந்து கொண்டிருந்தார். அப்படி அவரைப் பார்க்க வருத்தமாகியது
அவர் நெருங்கி வரும்வரை பால்பூத்தை ஒட்டி நின்று கொண்டிருந்தாள். அருகில் வந்து பேசமுடியாமல் வாய் உலர்ந்த நிலையில் அப்பா சொன்னார்
“நான் என்னம்மா செய்யட்டும். “
அதைக்கேட்டபோது அவளுக்கு வருத்தம் அதிகமானது.
“நான் போய்கிடுறேன்பா“ என்றாள் பிரேமா
“பஸ் ஸ்டாண்ட் வரைக்குமாவது கூட வர்றேன்மா“ என்று சொல்லிவிட்டுத் தலைகவிழ்ந்து கொண்டார். அவரை இப்படிக் காணும் போது யாரோ ஒரு கிழவரைக் காணுவது போலிருந்தது.
அவரை ஏன் வருத்தப்படுத்த வேண்டும் என்பது போல நினைத்தவளாக அவரோடு இணைந்து நடக்க ஆரம்பித்தாள்.
வீதியில் படர்ந்திருந்த வெயில் ஒரு சாட்சியம் போல அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது..
*****
கவிஞனும் கவிதையும் 1 பொதுவெளியின் குரல்
பிரிட்டனில் சென்ற ஆண்டு வெளியான கவிதைத் தொகுப்புகளைப் பற்றிய கட்டுரை ஒன்றில் நம்முடைய காலத்தில் கவிதை பொதுவெளியின் குரல் என்பதிலிருந்து உருமாறித் தனிப்பட்ட உரையாடலாகச் சுருங்கிவிட்டது என்று வால்டர் பிளமிங் குறிப்பிடுகிறார்.

அவரது கட்டுரையில் இன்று கவிதை வாசிப்பவர்களாகக் கவிஞர்களும் குறைவான வாசகர்களும் மட்டுமே இருக்கிறார்கள். கவிதை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பழங்காலக் கடிகாரம் ஒன்றைப் போலிருக்கிறது . கவிதைக்கான பிரத்யேக மொழியும் சிறப்பு வடிவங்களும் தேய்ந்து கவிதையென்பது சிறிய உரைநடைபோல மாறிவிட்டது என்றும் விவரிக்கப்படுகிறது
இந்தக் கட்டுரை சமகாலத் தமிழ் நவீன கவிதை சூழலுக்கும் பொருந்தக்கூடியதே. ஆனால் இங்கே பொதுவெளியின் குரல் கவிதையில் உரத்துக் கேட்கவே செய்கிறது.சமகால நிகழ்வுகள் கவிதையில் வெளிப்படுகின்றன. ஆனால் வாசக கவனத்தை அதிகம் பெறுவதில்லை..
அதே நேரம் தமிழ் நவீன கவிதையின் சிறப்பாகக் கருதப்பட்ட அதன் மொழி, மௌனம் மற்றும் கவித்துவ வெளிப்பாடு பெரிதும் உருமாறியிருக்கிறது.
பிளமிங் இன்றைய கவிதையை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பழங்காலக் கடிகாரம் என்று குறிப்பிடுகிறார். அது பொதுவெளியில் உள்ள மணிக்கூண்டு கடிகாரமா. அல்லது வீட்டின் சுவரில் தொங்கும் பழமையான கடிகாரமா எனத் தெரியவில்லை. இரண்டுமாகவும் கவிதை விளங்கியிருக்கிறது.
டிஜிட்டில் கடிகாரங்களில் உலகில் இந்தப் பழைய கடிகாரங்கள் வெறும் அலங்காரப்பொருட்கள் தானா. கவிதையின் இடம் இன்று எங்கேயிருக்கிறது என்பதே கட்டுரை எழுப்பும் கேள்வி
இயற்கை, கவிதையில் வெளிப்படுவது போல நேரில் காணும்போதோ, கேமிரா வழியாகத் திரையில் காணும் போதோ நெருக்கம் தருவதில்லை. காரணம் கவிதை இயற்கையை அப்படியே பதிவு செய்வதில்லை. இயற்கையென விரியும் அதிசயத்தை அடையாளம் காட்டுகிறது. இயக்கம் இயக்கமின்மை. நிலைத்தவை நிலையாமை என்று உயர்தளங்களுக்கு எடுத்துச் செல்கிறது. இயற்கை உலகின் மர்மம் மற்றும் அழகு ஆகியவற்றைச் சொற்களால் முழுவதுமாக விவரித்துவிட முடியாதது.
குளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் மரம் போல இரண்டுமாகவும் ஒன்றாகவும் இயற்கை கவிதையில் வெளிப்படுகிறது.

இயற்கையைக் கவிதையின் வழியே தான் மனிதன் நம்பத் துவங்கினான். அது வரை இயற்கை அச்சம் தருவதாகவே இருந்தது. இயற்கையை ஒரு படைப்பாகக் கருதும் எண்ணம் அதன்பின்பு தான் உருவானது சூரியனையும் கோள்களையும் ஆபரணங்கள் போலக் கருதியவன் கவிஞன் மட்டுமே
பகலை இரவை நோக்கி இழுத்துச் செல்லும் சக்கரங்களை, குதிரைகளை அவனே பின்தொடர்கிறான். இந்த வியப்பும் அதிசயத்தலும் இன்று குறைந்துவிட்டது. இயற்கை இன்று ஒரு நுகர்பொருள் அல்லது அலங்காரம். மனிதனைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதே அதன் இருப்பின் தேவை. நகரவாழ்வில் எவரும் வேர்களைப் பற்றி நினைப்பதில்லை. அதற்கான தேவையுமில்லை.
காகித மலர்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் அதைக் கண்டு இயற்கையியலாளர்கள் கொதித்துப் போனார்கள். ஆனால் இன்று நாம் காணும் வரவேற்பு மேஜைகளில் காகித மலர்களே அலங்காரமாகக் காட்சி தருகின்றன. வால்பேப்பராக மாறிய பூக்களே அறையை அலங்கரிக்கின்றன. சுவர் முழுவதும் பூக்கள் உள்ள அறையில் தங்கும் ஒருவன் அதன் வாசனையின்மையைப் பற்றித் துளி கூட நினைப்பதில்லை. நவீன கவிதையும் இது போல காகிதமலராக மாறிவிட்டது தானா.
உண்மையில் இது இயற்கையிலிருந்து கவிதை விலகிப்போகும் செயல்பாடு மட்டுமில்லை. நமது கற்பனை அதன் ஈரத்தன்மையை இழந்துவருகிறது என்பதன் அடையாளமே
இன்னும் பார்க்காத ஒரு கல்லைத் தேர்ந்தெடுங்கள் என்கிறார் கவிஞர் வேர்ட்ஸ்வெர்த். உண்மையில் இன்னும் பார்க்காத கற்கள் இருக்கத்தானே செய்கின்றன. பயன்பாட்டு உலகில் அதற்கு தனிமதிப்பில்லை என்பதால் அது தேவையற்ற பொருளாகக் காட்சிதருகிறது.-

கல்லுக்குள் இன்னொரு கல் இருப்பது போல்,இலைக்குள் இன்னொரு இலை இருப்பதைக் கவிதையே காட்டித்தருகிறது. கவிதையின் பிரபஞ்சம் மிகப்பெரியது. அது பூமியை மட்டும் நம்பியதில்லை.
இன்றைய பெருநகர வாழ்வில் எந்த நிகழ்விற்கும் துவக்கம் எதுவன்றோ, முடிவு எது என்றோ அறிய முடியாது. நிகழ்வின் இடையில் நாம் அதை எதிர்கொள்கிறோம். வெற்றி கொள்கிறோம், வீழ்த்தப்படுகிறோம் அல்லது கடந்து போகிறோம். அன்றாடம் சுழல் போல ஆயிரமாயிரம் நிகழ்வுகள் நகரை வட்டமிடுகின்றன. கவிதை மட்டுமே தனி நிகழ்வின் துவக்கம் அல்லது முடிவு பற்றிக் கவலைப்படுகிறது. அல்லது கற்பனை செய்கிறது.
பெண்ணின் ஒரு கண் நீல நிறமாகவும், மறுகண பச்சை நிறமாகவும் இருப்பதைக் கவிதையில் மட்டுமே காணமுடியும். உலகில் இல்லாத பெண் கவிதையில் இடம்பெறுகிறாள். கவிதை இயங்குவது பறக்கும் உடல்களே
ஒரே உலகிற்குள் வேறு வேறு உலகங்கள் இயங்குகின்றன. இதை நம்மால் உணர முடியும் ஆனால் வரையறை செய்துவிட முடியாது. கவிதையில் இந்த மாற்று உலகைக் அறியும் ஒருவன் பரவசம் கொள்வது இதனால் தான்.
நமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் பற்றிப் பேசுவதை விடவும், தனக்கு மட்டுமே தெரிந்த, உணர்ந்த ஒன்றையே கவிதை எப்போதும் பேச முயலுகிறது. அதுவே கவிஞனின் செயல்பாடாகவும் இருக்கிறது.
ஏன் கவிதை உரைநடைக்கு இவ்வளவு நெருக்கமாக மாறிவிட்டது என்ற பிளமிங்கின் கேள்வி முக்கியமானது. காரணம் உரைநடையில் அன்றாட நிகழ்வுகளுக்கும் உணர்ச்சி நாடகத்திற்கும் அதிகச் சாத்தியங்கள் உள்ளன. குறைவான மௌனமே உரைநடைக்குப் போதுமானது. அதைவிடவும் உரைநடை பயன்பாட்டிற்கு மிகவும் நெருக்கமானது. அதாவது அதை ஒருவன் எளிதாக உள்வாங்கிக் கொள்ளவும் கொண்டாடவும் முடியும். இது தான் பிளமிங்கிற்கான விடையோ என்னவோ,
தற்காலக் கவிஞர்கள் அடிப்படையில் ஒருவர் மற்றவருக்காக எழுதுகிறார்கள் என்றும் பிளமிங் அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். உண்மையில் அப்படி கவிதை வழியான அக உரையாடல் தமிழ்ச் சூழலில் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை.
இயற்கையுடனான நமது துண்டிப்பு தவிர்க்கமுடியாதது. ஆகவே. இயற்கையைப் பற்றி எழுதுவதற்குப் பதிலாக,நமக்குள் இருக்கும் அமைதியின்மை, கடினத்தன்மை, கொந்தளிப்பு அலையாடல். மௌனம் போன்றவற்றை நுகர்வோர் உலகின் வழியாகவும் எழுதிவிட முடியும்.
கவிஞர் டி.எஸ். எலியட் அப்படியான ஒரு கவிதை இயக்கத்தைத் தான் முன்னெடுத்தார். அவரது கவிதையில் இயற்கை அமைதியானதில்லை. அது கைவிடப்பட்ட பொருள். சிதைவின் அடையாளம். மயக்கமருந்து தரப்பட்ட நோயாளி
எலியட்டைப் போலக் கவிதை எழுத விரும்புவோர் அல்லது அவரைப் படிக்க விரும்புவோர் இன்று குறைவு.
கவிதையின் வாசகன் இன்றும் இயற்கையின் மர்மத்தை, வியப்பை விரும்பவே செய்கிறான்.
ஆகவே கவிதைக்காக எழுதப்பட்ட கவிதைகளுக்கும் தேவை இருக்கவே செய்கிறது
••
January 23, 2023
போர்ஹெஸ் துப்பறிகிறார்
லூயிஸ் பெர்னாண்டோ வெரிசிமோ பிரேசிலின் புகழ்பெற்ற எழுத்தாளர், போர்ஹெஸ் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர் BORGES AND THE ETERNAL ORANG-UTANS என்ற நாவலை எழுதியிருக்கிறார்

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆங்கில நாவல்கள் விற்கும் பழைய புத்தகக்கடை குவியல் ஒன்றினுள் இந்த நாவலைக் கண்டெடுத்தேன்.
எட்கர் ஆலன் போ பற்றிய கருத்தரங்கிற்காகப் பியூனஸ் அயர்ஸ் நகருக்கு வருகை தரும் வோகெல்ஸ்டீன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு துப்பறியும் கதையை எழுதியிருக்கிறார்.
வியப்பூட்டும் இந்த நாவலில் போர்ஹெஸ் துப்பறியும் நிபுணரைப் போல உருவாக்கப்பட்டிருக்கிறார். போர்ஹெஸ் வழியாக மர்மங்கள் விலக்கப்படுகின்றன.
ஜோர்ஜ் லூயி போர்ஹெஸின் பன்முகத்தன்மையை, அவரது மேதமையைக் கொண்டாடும் விதமாகவே இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது\
நாவலின் முகப்பில்
“Don’t multiply the mysteries,” he said. “Mysteries should be simple. Remember Poe’s stolen letter, remember Zangwill’s locked room.” “Or complex,” replied Dunraven. “Remember the Universe.”
Jorge Luis Borges, “Abenjacán el Bojari, dead in his labyrinth” என்பதைப் பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார் வெரிசிமோ.
Everything that happened to me there in Buenos Aires I owe, in some way, to Aleph’s death. Or to geographical destiny. Or to the God behind the God who moves the God who moves the player who moves the pieces and begins the round of dust and time and sleep and dying in your poem, Jorge.
Or to the designs of an ancient plot set in motion exactly four hundred years ago in the library of the King of Bohemia. Or merely to the trapped animal’s unconscious feelings of respect for a well-made trap and a desire not to disappoint the person who went to so much trouble to set it .
என்ற வெரிசிமோ வரிகள் போர்ஹெஸ் எழுதியது போலிருக்கின்றன
தெலுங்கு சிறுகதை தொகுப்பில்
மொழிபெயர்ப்பாளர் பாலாஜி தமிழிலிருந்து சிறந்த கதைகளை தெலுங்கில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இந்த தொகுப்பில் எனது சிறுகதையும் இடம்பெற்றுள்ளது

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
