S. Ramakrishnan's Blog, page 65
April 7, 2023
பௌத்த சினிமா – 3 ஜென் குரு
ஜென் குரு டோஜன் பற்றிய திரைப்படம்.
அவரது வழியாக ஜென் பௌத்தம் உருவான விதம் விவரிக்கபடுகிறது
உணவு யுத்தம் -ஆங்கிலத்தில்
எனது உணவு யுத்தம் கட்டுரை தொகுப்பினை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். விரைவில் இந்நூல் வெளியாக உள்ளது

புதுமைப்பித்தன் நாடகம் – பதிவுகள்
புதுமைப்பித்தன் நாடகம் குறித்து வெளியான நாளிதழ் பதிவுகள்



நன்றி
The Indian Express / The Hindu/இந்து தமிழ் திசை
April 6, 2023
பௌத்த சினிமா- 2 பிறப்பிற்கு முன்
Why Has Bodhi Dharma Left for the East பௌத்த திரைப்படங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது தென் கொரியத் திரைப்படமாகும், பே யோங்-கியூன் இதனை இயக்கியுள்ளார். மூன்று புத்த பிக்குகளின் வாழ்க்கையைப் படம் விவரிக்கிறது. தலைப்பைப் பார்த்து பலரும் படம் போதி தர்மாவைப் பற்றியது என நினைக்கிறார்கள். படம் பதிலற்ற அந்தக் கேள்வியை வேறுவிதமாக எதிர்கொள்கிறது. இந்த திரைப்படம் Zen koan போன்ற ஒரு அனுபவத்தை தருகிறது
April 5, 2023
பௌத்த சினிமா -1 கர்மா
இரண்டு வேறுபட்ட பௌத்த பிக்குணிகளின் வழியே பௌத்த சமயத்தின் நம்பிக்கைகள். மறுபிறப்பு, மடாலய வாழ்க்கைமுறையை வெளிப்படுத்துகிறது இந்த நேபாளி திரைப்படம்
April 3, 2023
மாக்ஸ் லிண்டரின் குளியல் தொட்டி
மாக்ஸ் லிண்டர் மௌனப்படங்களின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்.
பிரெஞ்சு நடிகரான இவரது பாதிப்பில் உருவானர் தான் சார்லி சாப்ளின். தனது கடிதம் ஒன்றில் சாப்ளின் லிண்டரைத் தனது குருவாகக் குறிப்பிடுகிறார்.
மாக்ஸ் லிண்டர் நடித்த Max Takes a Bath என்ற மௌனப்படம் 1910ல் வெளியானது. குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்ன அறிவுரைக்காக மாக்ஸ் ஒரு குளியல் தொட்டியை விலைக்கு வாங்குகிறார். அதைத் தனது வீட்டிற்குக் கொண்டுவருவதில் ஏற்படும் பிரச்சனைகளை மிகவும் நகைச்சுவையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
மௌனப்பட உலகில் மிக அதிகச் சம்பளம் பெறும் நடிகராக இருந்தார். 1914 இல் ஆண்டுக்கு 1 மில்லியன் பிராங்குகள் சம்பாதித்தார் என்பது வியப்பானது.
உலகையே சிரிக்க வைத்த மாக்ஸ் லிண்டர் தனது 41வது வயதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்
மாக்ஸ் லிண்டரின் கறுப்பு வெள்ளை திரைப்படம் இப்போது வண்ணத்தில் வெளியாகியுள்ளது.
Max Linder – ‘Max prend un bain’ (1910) COLORIZED
செகாவின் துப்பாக்கி
புதிய குறுங்கதை
4.4.23

ஆன்டன் செகாவின் கதையிலிருந்த துப்பாக்கி திருடு போயிருந்தது. யார் அதைத் திருடியது எனத் தெரியவில்லை. ஆனால் அந்தத் துப்பாக்கி ஒரு வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. திருடு போன துப்பாக்கியைப் பற்றிச் செகாவிடம் எப்படித் தெரிவிப்பது என்று கதாபாத்திரங்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை திருடியதும் வேறு ஒரு கதாபாத்திரமாக இருக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. செகாவ் தனது கதையிலிருந்த துப்பாக்கி திருடப்பட்டதை அறிந்து கொள்ளாமல் வேறு கதைகள் எழுதுவதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். சில கதாபாத்திரங்கள் அவரது பல கதைகளிலும் வந்து போவதால் அவர்கள் வழியாக இந்தத் திருட்டைப் பற்றிச் செகாவிடம் சொல்வது என முயன்றார்கள். ஒவ்வொரு முறையும் செகாவிடம் இதைப்பற்றிக் கதாபாத்திரங்கள் பேச முற்படும் போது அவர் உண்மை சம்பவம் எதையாவது சொல்லி அதன் பேச்சைக் கேட்க மறந்து போவார். இதனால் கதாபாத்திரங்கள் கவலையடைந்தார்கள். திருடப்பட்ட துப்பாக்கி எந்தக் கதாபாத்திரத்தை நோக்கி நீளும் என்று தெரியாத பயமும் அவர்களுக்கு இருந்தது. செகாவின் வேறு கதையில் துப்பாக்கி இடம் பெற்றபோது அது களவு போன துப்பாக்கி தானா எனக் கதாபாத்திரங்கள் ஆராய்ந்தன.. ஆனால் அது வேறுதுப்பாக்கி என்பதைக் கண்டு கொண்டதோடு ஒரே துப்பாக்கி இரண்டு கதையில் இடம்பெறுவதில்லை என்பதைக் கண்டு கொண்டன. ஒரு முறை செகாவ் காதல் கதை ஒன்றை எழுதிக் கொண்டிருக்கும் போது அதில் அவர் எழுதாத ஒரு வரி தானே உருவானது. அந்த வரியில் துப்பாக்கி தொலைந்து போனதைப்பற்றிய தகவல் இருந்தது. தான் எழுதாத வரி எப்படிக் கதையில் வந்தது என்று செகாவிற்குப் புரியவில்லை. காதல் கதையில் துப்பாக்கிக்கு என்ன வேலை என்று யோசித்தார். பின்பு அவரே வேடிக்கையான குரலில் காதல்கதைகளின் முடிவைத் துப்பாக்கி தானே தீர்மானிக்கிறது என்று சொல்லிக் கொண்டார். பாவம் கதாபாத்திரங்கள். அதன் உலகில் நடக்கும் மாற்றங்களை உலகம் அறிவதேயில்லை. கதையிலிருந்து திருடு போன துப்பாக்கியை பற்றி எழுத்தாளர் ஒரு போதும் கவலைப்படப் போவதில்லை. காரணம் அந்த துப்பாக்கி ஒரு போதும் வாசகனை சுடாது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
April 1, 2023
அந்திமழையில்
இம்மாத(மே 2023) அந்திமழை இதழில் எனது புதிய சிறுகதை வெளியாகியுள்ளது

பந்தல்குடி பள்ளி
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் R.ஜெயபால் .
இவர் தனது வகுப்பு மாணவிகள் மாவட்ட மற்றும மாநில அளவில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை;ப் பாராட்டும் விதமாக எனது புத்தகங்களைப் பரிசாக வழங்கியுள்ளார் . வகுப்பறைக்குள் புத்தகங்கள் செல்வது வரவேற்க வேண்டிய செயல்.
ஜெயாலுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.





March 31, 2023
அறியப்படாத நட்பு
2022ல் வெளியான Turn Every Page — The Adventures of Robert Caro and Robert Gottlieb என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் ராபர்ட் காரோ மற்றும் அவரது எடிட்டர் ராபர்ட் காட்லீப்பிற்குமான ஐம்பது ஆண்டுகால நட்பை விவரிக்கிறது.
படத்தை இயக்கியிருப்பவர் ராபர்ட் காட்லீப்பின் மகள் லிசி. இப்போது ராபர்ட் காரோவுக்கு வயது 86. காட்லீப்பிற்கு வயது 91
க்னாஃப் (Alfred A. Knopf )பதிப்பகத்தின் தலைமை பொறுப்பு வகித்த காட்லீப் டோனி மோரிசன், ரே பிராட்பரி, சல்மான் ருஷ்டி வி.எஸ். நைபால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் திருத்திப் பதிப்பித்திருக்கிறார். இப்படம் காட்லீப் எப்படிப் பதிப்பகப் பணிக்கு வந்து சேர்ந்தார். அவரது குடும்பச் சூழல், தீவிர வாசிப்பு மற்றும் தனித்துவமான செம்மைப்படுத்தும் முறைகளை விவரிக்கிறது.

ராபர்ட் காட்லீப் மற்றும் காரோ ஐம்பது ஆண்டுகள் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். காரோவின் புகழ்பெற்ற புத்தகங்களை எடிட் செய்வதற்குக் காட்லீப் மேற்கொண்ட திருத்தங்கள். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கைப்பிரதியில் செய்த மாற்றங்கள் பற்றிப் படம் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.
அரைப்புள்ளி, கால்புள்ளி துவங்கி சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, தகவல்கள் சரிபார்த்தல், பத்திகள் ,விவரிப்புகள் வரை எவ்வளவு கவனமாகக் காட்லீப் எடிட் செய்கிறார். அதற்காக வாதிடுகிறார் என்பதைப் படம் அழகாகச் சித்தரித்துள்ளது.
ராபர்ட் மோசஸின் வாழ்வினை விவரிக்கும் “தி பவர் ப்ரோக்கர்” என்ற நூலின் கையெழுத்துப்பிரதி பல ஆயிரம் பக்கங்களைக் கொண்டிருந்தது. அதை வாசித்துத் திருத்தி காட்லீப் எப்படி ஒரே நூலாகக் கொண்டுவந்தார் என்பது வியப்பளிக்கிறது
படத்தின் துவக்கக் காட்சியில் காரோ இந்த ஆவணப்படத்தில் பேசுவதற்கு ஒத்துக் கொண்ட போதும் தானும் காட்லீப்பும் ஒன்றாக அமர்ந்து பேச விரும்பவில்லை என்கிறார். இது தான் ஐம்பது ஆண்டுகள் ஒன்றாகப் பணியாற்றிய போதும் ஒரு படைப்பாளிக்கும் அதன் எடிட்டருக்குமான உறவு.
ஆவணப்படத்தில் இருவரும் தனித்தனியே தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பரஸ்பரம் பாராட்டுகிறார்கள். நன்றி சொல்கிறார்கள்.

காட்லீப் ஒரு காட்சியில் எழுத்தைச் செம்மைப்படுத்தும் தனக்குப் படைப்பாளியை விடவும் ஈகோ அதிகம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடன் சண்டையிட்டுத் திருத்தம் செய்ய முடியாது என்கிறார்.
இந்தச் சண்டை புத்தகம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்கானது மட்டுமே என இருவரும் ஒத்துக் கொள்கிறார்கள்.
ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் தனது பேரனுடன் புத்தகக் கடைக்குச் செல்லும் காட்லீப் அங்கே தான் எடிட் செய்த பல்வேறு புத்தகங்களை எடுத்துக் காட்டி தனது நினைவுகளை விவரிக்கிறார். அழகான காட்சியது. அதில் புகழ்பெற்ற கேட்ச் 22 நாவலுக்கு முதலில் கேட்ச் 18 என்ற தலைப்பே வைக்கப்பட்டிருந்தது. தான் அதை “கேட்ச் -22” என மாற்றும்படி ஜோசப் ஹெல்லரிடம் சொன்னதை நினைவு கொள்கிறார்.
ராபர்ட் காட்லீட்பின் ரசனை வித்தியாசமானது. பதிப்பகத்தின் எடிட்டராக உள்ள அவர் பாலே நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். நியூயார்க் பாலே நடன மையத்தின் ஆலோசகராக நீண்டகாலம் செயல்பட்டிருக்கிறார்.
ராபர்ட் காரோ எப்படி எழுதுகிறார். ஆய்வு செய்கிறார் என்பதை மிகவும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அவரது ஆய்வுப்பணியில் மனைவி இனாவுடன் இணைந்து கள ஆய்வு செய்வது, புள்ளிவிவரங்கள் மற்றும் துல்லியமாகத் தகவல்களைத் திரட்டுவது என அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் இளம் படைப்பாளிக்குப் பாடம் போலிருக்கின்றன
காரோ இப்போதும் தட்டச்சுப்பொறியிலே எழுதுகிறார். அதுவும் கார்பன் நகல் வைத்து இரண்டு பிரதிகளை உருவாக்கிக் கொள்கிறார். தினசரி எவ்வளவு பக்கங்கள் எழுதினேன் என்பதைக் குறித்து வைத்துக் கொள்கிறார். அபுனைவு நூல்களுக்கும் புனைவு போலச் சுவாரஸ்யமாக, கச்சிதமாக, துல்லியமாக மொழியைக் கையாள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
ராபர்ட் காரோ ஹோமரையும் லியோ டால்ஸ்டாயினையும் தனது வழிகாட்டிகளாகக் குறிப்பிடுகிறார். இருவரையும் ஆழ்ந்து படித்திருக்கிறார்
அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி ஜான்சன் வாழ்க்கை வரலாற்றை ஐந்து தொகுதிகளாக எழுதத் திட்டமிடுகிறார் காரோ. அந்தப் பெரும்பணியில் அவருடன் இணைந்து செயல்படுகிறார் காட்லீப். ஐந்தாவது தொகுதி இன்னும் வெளியாகவில்லை. தாங்கள் இறப்பதற்கு முன்பு இறுதிப் புத்தகத்தை ஒன்றாக முடித்துவிடுவோம் என்ற காரோவும் காட்லீப் சொல்லும் தருணத்தில் கருத்துவேறுபாடுகளைத் தாண்டி அவர்களின் ஐம்பது ஆண்டுகால நட்பு அபூர்வமானது என்பது புரிகிறது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
