S. Ramakrishnan's Blog, page 63
May 4, 2023
கடைசி விலங்கு
புதிய குறுங்கதை
மதராஸ் பயத்தால் பீடிக்கபட்டிருந்தது.
ஜப்பானியர்களின் ராணுவம் தாக்குதலுக்கு நெருங்கி வருவதாகவும் நகரின் மீது குண்டுவீசப்போவதாகவும் அறிந்த கவர்னர் ஹோப் மதராஸைக் காலி செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அரசு அலுவலகங்களில் பாதி மதனப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. உயர் அலுவலகங்களில் சில ஊட்டிக்கு இடம்பெயர்ந்தன. நீதிமன்றம் கோவைக்கு மாற்றலானது. மருத்துவமனையிலிருந்த நோயாளிகளை வேலூருக்கு மாற்றினார்கள்.. இரண்டு லட்சத்திற்கும் மேலான மக்கள் நகரைக் காலி செய்து சொந்த ஊரை நோக்கி போயிருந்தார்கள். எல்லாக் கடைகளும் அடைக்கபட்டிருந்தன. முழுமையாக மின்சாரம் துண்டிக்கபட்டது.
லண்டனை விடவும் உயரியதாகக் கருதப்பட்ட மதராஸ் மிருக காட்சி சாலையில் இருந்த அனைத்து ஆபத்தான விலங்குகளையும் உடனடியாகக் கொல்லும்படியாfக கவர்னர் ஹோப்பின் ஆலோசகர் உத்தரவு பிறப்பித்தார். இதனை நிறைவேற்ற வேண்டிய மதராஸ் கார்ப்பரேஷன் கமிஷனர் ஓ புல்லா ரெட்டி, விலங்குகளைக் கொல்வதற்குப் பதிலாக ரயிலில் ஏற்றி ஈரோடிற்குக் கொண்டு செல்வது எனத் தீர்மானித்தார்
ஆனால் ரயில் பெட்டிகளை ஏற்பாடு செய்வதில் சிக்கல் உருவானது. அத்தோடு வழியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விலங்குகள் தப்பிபோய்விட்டால் என்ன செய்வது என்ற பயமும் உருவானது.

மிருககாட்சி சாலையை நோக்கி அதிகாலையில் மலபார் போலீஸ் படை பிரிவு சென்றது.
சில நாட்களாகவே நகரில் கடைகள் அடைக்கபட்டிருந்த காரணத்தால் விலங்குகளுக்கு உணவு வழங்கப்படவில்லை. அவை பசியோடு நாளெல்லாம் சப்தமிட்டபடியே இருந்தன. ஆகவே கூண்டினை நோக்கி வந்த மலபார் போலீஸ் படையினரை தங்களுக்கு உணவு வழங்க வந்தவர்களாக நினைத்துக் கொண்டன .
தங்கள் உத்தரவுகளை நிறைவேற்ற அவர்கள் துப்பாக்கியை உயர்த்தினார்கள்.
நிமிஷத்தில் அவர்கள் கொன்றுகுவித்த சிங்கம், புலி, சிறுத்தை, மலைப்பாம்பு, பனிக்கரடி போன்ற விலங்குகள் குருதிபெருக மண்ணில் விழுந்து கிடந்தன. யானையைக் கொன்றால் புதைக்க எடுத்துச் செல்வது சிரமம் எனக்கருதி அதை மட்டும் உயிரோடு விட்டார்கள். அசைவற்று நின்றிருந்த யானை திடீரெனப் பிளிறியது.
கூண்டின் கதவைத் திறந்து தன்னை நோக்கி வந்த காவலருக்கு வேடிக்கை காட்டுவது போல கரடி கைகளை உயர்த்தி அசைத்துக் காட்டியது. சிறுவர்கள் முன்னால் இப்படி கையசைத்து விளையாடியிருக்கிறது. காவலரின் இறுகிய முகம் அந்த கையசைப்பை ஏற்கவில்லை. தன் முன்னே நீட்டப்பட்ட துப்பாக்கியை பச்சைக்கேரட் என நினைத்துக் கொண்டு கரடி ஆசையாகக் கடிக்க முயன்றது.
காவலர் தனது துப்பாக்கியால் கரடியின் திறந்த வாயினுள் சுட்டார். தாடையைத் துளைத்துச் சென்றது குண்டு.
கரடி காற்றில் கைகளை அசைத்தபடியே வலியோடு துடித்து விழுந்தது.. அடுத்த குண்டு அதன் நெற்றியை நோக்கிப் பாய்ந்தது.
இனிதே பணி முடிந்ததெனக் காவலர்கள் கொல்லப்பட்ட விலங்குகளின் உடல்களை இழுத்துக் கொண்டு நடந்தனர். கொல்லப்பட்ட விலங்குகளின் மதிப்பு ரூபாய் 4,538 என நோட்புக்கில் குறித்துக் கொண்டார் உயரதிகாரி.
துப்பாக்கியை ஏன் தன்னால் தின்ன முடியவில்லை என்ற குழப்பத்துடன் இறந்து போனது அக் கரடி.
அகத்துணையான எழுத்து
ந. பிரியா சபாபதி
நம்மை நமக்கும் நாம் அறியாத பிறரின் வாழ்க்கையையும் நமக்குக் காட்டும் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற புத்தகம் இந்தத் ‘துணையெழுத்து’ நூல்.

“மறப்போம் மன்னிப்போம்” இந்த வார்த்தைகளுக்கு உரியவர்கள் குழந்தைகள்தாம். குழந்தைகள் உலகம் மாய உலகமும் அல்ல, மந்திரம் உலகமும் அல்ல. நிதர்சமான உண்மையை உணர்ந்த உலகம் ஆகும்.
குழந்தைகளை ‘ஞானியர்’ என்று சொன்னால் மிகையாது. அவர்கள் பொம்மையைத் தன் உலகமாகப் பார்க்கும் பொழுது பெரியவர்களின் பார்வைக் கோணமும் குழந்தைகளின் பார்வைக் கோணமும் வேறுபடும். அவர்களின் உலகத்திலோ, அந்தப் பொம்மைகளின் உலகத்திலோ பெரியவர்கள் நுழைய முடியாது.
வீடென்பது கல், மண் போன்ற இதர பொருட்கள்தான் ஆனதல்ல. அது உயிர்களின் வாழ்விடமாகும். பாசப் பிணைப்புகளின் அன்பு, காதல், போராட்டம், ரகசியங்களின் உணர்ந்திருக்கும். சாவிக் கொத்துடன் நாமும் இணைந்து சாவியாகச் சென்று கொண்டிருபோம் உண்மைக் கதாப்பாத்திரத்தின் சொற்கள் வழியாக.
உலகில் பல அதிசயங்கள் உண்டு. அதில் ஓர் அதிசயம் தான் உயிரினங்களின் பிறப்பு. அந்த உயிரினத்திற்காகத் தாய்ச் சுமப்பது துன்பம் அல்ல. இன்பம்தான். ‘குழந்தைகளுக்காக’ என்று எண்ணும் பொழுது அவள் பரந்து விரிந்த வானம் போல் மகிழ்ச்சி கொள்கிறாள். அவளின் ‘உயிரோசையை’ நம்மாலும் உணர முடிகிறது.
ஆண்களின் வாழ்க்கை எளிதானது. ஏன் ஆணாகப் பிறக்கவில்லை என்று என்னும் பெண்களுக்கு ஆணின் வாழ்க்கையை ஒரு நாள் அல்ல அரை நாள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து வாழ்ந்து பார்க்கும் பொழுதுதான் தெரியும்.
குறிப்பாக, வேலை தேடி அலையும் நாட்களும் வேலை கிடைக்காத நாட்களைக் கடக்கும் மனநிலையும் வெம்மையான மண் தரையில் பாதம் பதிந்தது போன்றதாகும். ஆண்களின் வாழ்க்கை என்பது அவர்களுக்குரியது மட்டுமல்ல. ஓர் ஆண் அவனுக்காகவும் வாழ்கிறான், அவனைச் சார்ந்தோருக்காகவும் உழைக்கிறான். ஆணின் மன வலியை சுட்டிச் செல்லும் பகுதி நிச்சயமாக மனத்தினை உலுக்கிச் செல்லும்.
மனிதன் தான் நினைத்ததை அடைவதற்கு மன வலிமை இருந்தாலும் மட்டும் போதாது. அவர்களுக்கு ஊக்கியாக வாழ்க்கை நிகழ்வுகள் துணையாக இருந்தால்தான் துணிச்சலோடு போராட முடியும். விளையாட்டு ஆசிரியரின் வாழ்க்கையினை வாசிக்கும் பொழுது ஆசிரியரைப் போன்று நம் மனத்திற்குள் பல்லாயிரம் கேள்விகள் எழும்.
இந்தத் துணையெழுத்து இயல்பான மனித வாழ்க்கைக்குரிய முதல் எழுத்து.
May 2, 2023
இரவுக்காவலாளியின் தனிமை
புதிய சிறுகதை.
அந்திமழை ஏப்ரல் 2023 இதழில் வெளியானது.
மாநகரில் தன்னைப் போல ஆயிரம் பேர்களுக்கு மேலாக இரவுகாவலாளிகள் இருக்கக் கூடும் என்று ஜோசப் நினைத்துக் கொண்டான். மற்றவர்களுக்கும் அவனுக்குமான வேறுபாடு முக்கியமானது. அவன் ஒரு தேவாலயத்தின் இரவுக்காவலாளியாக இருந்தான்.
கர்த்தருக்கும் திருடனுக்கும் நடுவே தானிருப்பதாக உணர்ந்தான்.
புனித மரியன்னை தேவலாயம் நூற்றாண்டு பழமையானது. கோவிலின் பெரிய கோபுரம் நூற்று இருபது அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதியில் எட்டு பெரிய சாளரங்கள் இருந்தன. அவற்றில் நிறப்பதிகைக் கண்ணாடி அமைக்கப்பட்டு, சூரிய வெளிச்சம் கோவிலின் உள்ளே வண்ணமயமாக ஒளிரும்படி அமைக்கபட்டிருந்தன

நகரின் பிரதான சாலையொன்றில் இருந்த அந்தத் தேவாலயத்தின் நுழைவாயிலில் பைபிள் மற்றும் பிரசுரங்கள் விற்கும் கடை ஒன்றிருந்தது. உள்ளே இரண்டு வீடுகள். ஒன்றில் தோட்டவேலை செய்யும் தங்கசாமி குடியிருந்தார். மற்றது பாதர் சேவியருக்கானது. அந்த வளாகத்தின் உள்ளே சிறிய அச்சுக்கூடம் ஒன்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இயங்கிவந்திருக்கிறது. தற்போது மூடப்பட்டிருந்தது. பைபிள் கடையின் இடதுபுறமிருந்த கண்ணாடி பெட்டிக்குள் பெரிய பைபிள் ஒன்று வைக்கபட்டிருந்தது. அதில் தினமும் ஒரு பக்கம் வாசிக்கும்படியாகத் திறந்து வைத்திருப்பார்கள். இரவிலும் அந்த வாசகங்களைப் படிக்க விளக்குப் பொருத்தப்பட்டிருக்கும்.
சில நாட்கள் பின்னிரவில் ஜோசப் அந்த வாசகங்களைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருப்பான். “ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும் போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்“ என்று ஒரு நாளிரவு அவன் படித்த வாசகம் அவன் மனதை வெகுவாகக் கவர்ந்தது. தான் இரவுக்காவலாளியாக நியமிக்கபட்டதும் இதனால் தானோ என்று நினைத்துக் கொண்டான்
தேவாலயத்தினைச் சுற்றிலும் பெரிய மதிற்சுவர்கள் கட்டப்பட்டிருந்தன. சிறிய கெபி ஒன்றும் இருந்தது. அந்தத் தேவாலயத்தின் வெண்கலமணி லிஸ்பனிலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டது என்பார்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளிரவு யாரோ விஷமிகள் அந்தத் தேவாலய சுவரில் ஆபாச சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றுவிட்டார்கள். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாதர் சேவியர் தண்ணீர் ஊற்றி சுவரை சுத்தம் செய்ய வைத்ததோடு இரவுக்காவலாளி ஒருவரையும் பணியில் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அவனுக்கு முன்பாக வேலையில் இருந்தவர்கள் யார் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் வேலையில் சேரும் நாளில் பாதர் சேவியர் அவனிடம் சொன்னார்
“நைட் எப்போ வேணும்னாலும் நான் வந்து செக் பண்ணுவேன். ஒரு சொட்டு தூங்க கூடாது. கேட்டை விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகக் கூடாது. ஏதாவது அவசரம்னா இந்த மணியை அடிக்கணும். நான் வருவேன்“ என்று கேட்டை ஒட்டி இருந்த அழைப்பு மணியின் பொத்தானைக் காட்டினார்.
ஜோசப் வேலையை ஏற்றுக் கொண்ட சில நாட்களிலே பத்து மணிக்கு பாதர் உறங்க ஆரம்பித்தால் காலை ஆறரை மணிக்கு தான் எழுந்து கொள்வார் என்பதை அறிந்து கொண்டுவிட்டான். தோட்டக்கார தங்கசாமி இருமலால் அவதிப்படுவதால் சில நேரம் பின்னிரவிலும் உறங்காமல் இருமிக் கொண்டேயிருக்கும் சப்தம் கேட்கும். ஒரு நாள் விடிகாலையில் தங்கசாமிக்கு மூச்சிரைப்பு வந்து அவதிப்பட்ட போது அவரை ஜோசப் தான் மருத்துவமனைக்கு அழைத்துப் போய் வந்தான்.
ஜோசப் அருகிலுள்ள வீராச்சாமி தெருவில் ஒரு மாடி அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தான். மிகச்சிறிய அறை. ஒரு மனிதன் பகலில் உறங்குவதற்குப் போதுமான இடம். கீழே இருந்த வீட்டின் குளியல் அறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில நாட்கள் அவனுக்குப் பகலிலும் உறக்கம் வராது. பாயை விரித்துப் போட்டு படுத்துக் கொண்டு கடந்தகாலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பான்
துயரமான கடந்த காலத்தைக் கொண்டவர்களால் மட்டுமே இரவில் விழித்துக் கொண்டிருக்க முடியும். ஏதாவது ஒரு பழைய நினைவு போதும் அந்த நாளை உறங்க விடாமல் செய்துவிடும். அப்படித்தான் அவனும் இரவில் விழித்துக் கொண்டிருந்தான்.
••
தேவாலயத்தின் நுழைவாயில் தெற்கு நோக்கியதாக இருந்தது. ஆள் உயர இரும்பு கேட்டுகள். அதை ஒட்டி மடக்கு நாற்காலி ஒன்றை போட்டு இரவில் காவலிருப்பான்.
கையில் ஒரு டார்ச்லைட். பிளாஸ்டிக் கூடை ஒன்றில் தண்ணீர் பாட்டில். பிஸ்கட் பாக்கெட், கொஞ்சம் திராட்சை பழங்கள் வைத்திருப்பான். அவனுக்கு வயது நாற்பதைக் கடந்துவிட்டிருந்தது. இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவனை விட மூன்று வயது மூத்த அக்கா சாராவிற்கே இன்னமும் திருமணம் நடக்கவில்லை. இதை எல்லாம் பற்றிக் கவலைப்படுவதற்கு எவருமில்லை. அவனது அம்மாவும் அப்பாவும் இறந்து போய்ப் பலவருசமாகிவிட்டது.
அவனது அப்பா மோசஸ் முதலாளியிடம் கார் டிரைவராக இருந்தவர். ஒரு விபத்தில் கைஎலும்பு உடைந்து போகவே கார் ஒட்ட முடியாமல் போனது. அதன்பின்பு மோசஸ் முதலாளியின் பீடிக்கம்பெனியில் அவருக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தார்கள். அவரது குடியால் அந்த வேலையிலும் நிலைக்கமுடியவில்லை. குடிக்கக் காசில்லாமல் திருடத்துவங்கி பலவிதங்களிலும் அவர்களுக்கு அவமானத்தைத் தேடி தந்தார்.
அவர் ஏற்படுத்திய அவமானத்திற்காக அம்மா குனிகூறுகிப் போனாள். வீட்டு கதவை பகலிலும் அடைத்து வைத்தே இருந்தாள்.
மைக்கேல் வாத்தியாரின் மகன் ஒரு நாள் நடுத்தெருவில் அப்பாவை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தபோது அவனுக்குத் தடுக்க வேண்டும் என்று தோன்றவேயில்லை. போதுமான அவமானங்களைச் செய்து முடித்த அவனது அப்பா ஒரு நாள் கல்லறை தோட்டத்து மரம் ஒன்றில் நிர்வாணமாகத் தூக்கில் தொங்கினார்.அம்மா அவரது மரணத்திற்காக அம்மா கண்ணீர் வடிக்கவில்லை. ஆனால் மனதிற்குள் அழுதிருப்பாள். இது நடந்த மூன்றாம் வாரம் அம்மா உறக்கத்திலே இறந்து போயிருந்தாள்.
அதன்பின்பு அவனும் அக்காவும் மட்டுமே வசித்தார்கள். அவர்களுக்குள் பேசிக் கொள்வதும் குறைந்துவிட்டது. அக்கா சில நாட்கள் பகலிரவாகப் பைபிள் படித்துக் கொண்டிருப்பாள். சமைக்கமாட்டாள். சாப்பிடமாட்டாள். ஞாயிற்றுகிழமை பிரார்த்தனைக்குப் போகையில் சப்தமாக அழுது பிரார்த்தனை செய்வாள். சில நேரம் மெழுகுவர்த்தியை கையில் பிடித்தபடியே இருட்டிற்குள் அமர்ந்திருப்பாள். அவளது மௌனம் அவனைத் துன்புறுத்தியது. அவனால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. இதற்காகவே ஊரை விட்டு வெளியேறினான்
நகரம் தன்னை மறைத்துக் கொண்டு வாழ்பவர்களுக்கானது. இங்கே எந்த அடையாளத்துடனும் எவரும் வாழ முடியும். இரவுக்காவலாளி என்பதும் அப்படி ஒரு அடையாளமே.
கிராமத்தில் கண்விழித்துப் பாதுகாக்க வேண்டிய அரும்பொருள் எதுவும் கிடையாது. அத்தோடு இப்படி ஒருவர் இரவெல்லாம் விழித்திருக்க முடியாது. ஊர் அறிந்துவிடும். வயல்வெளியில் காவலுக்கு இருப்பவர்கள் கூடக் கயிற்றுகட்டில் போட்டு உறங்கத்தான் செய்வார்கள். ஆனால் நகரின் இரவு விநோதமானது. இருள் பழகிய மனிதர்கள் இருந்தார்கள். இரவில் அரங்கேறும் குற்றங்கள் விநோதமானவை.
அவனது தேவலாயம் இருந்த சாலை ஒரு வெள்ளைக்கார கர்னலின் பெயரில் இருந்தது. அந்தக் கர்னலின் வீடு ஒருவேளை இந்தத் தெருவில் இருந்திருக்கக் கூடும். அந்தச் சாலையில் ஒரு காலத்தில் நிறைய மருதமரங்கள் இருந்ததாகக் கேள்விபட்டிருக்கிறான். இப்போது வணிக வளாகங்களும் அடுக்குமாடி அலுவலகங்களும் நகை கடைகளும் பெரியதொரு ஷாப்பிங் மாலும் இருந்தன. அதற்கு நடுவே சிறார் பூங்காவும் இருந்தன. அந்தச் சாலையில் மட்டும் இருபத்தியாறு இரவுக்காவலாளிகள் இருந்தார்கள்.

இரவுக்காவலாளிகளுக்கு என்று தனியுலகமிருக்கிறது. அவர்கள் விரும்பி இந்தப் பணியை ஏற்றுக் கொண்டவர்களில்லை. ஏதோ நெருக்கடி அவர்களை இரவில் விழிக்கச் செய்கிறது. இரவுக்காவலாளிகளின் முகத்தில் புன்னகையைக் காண முடியாது. ஜோசப் இருந்த வீதியில் பின்னிரவு நேரத்தில் தேநீர் விற்பனை செய்யும் சபரி வருவதுண்டு. அவன் தரும் சூடான இஞ்சி டீ பகலில் கிடைக்காதது. சில வேளை அவர்கள் விடிகாலையில் ரவுண்டாவில் ஒன்றுகூடுவார்கள். அதிகாலையின் முதல் தேநீரை ஒன்றுகூடி கூடிப்பார்கள். அப்போது ஷியாம் ஆளற்ற சாலையைப் பார்த்து பாட்டு பாடுவதுண்டு.
நேஷனல் பேங்க் ஏடிஎம் இரவுக்காவலாளி படம் வரையக் கூடியவர். இரவெல்லாம் பெரிய நோட்டு ஒன்றில் படம் வரைந்து கொண்டேயிருப்பார். ரெப்கோ பர்னிச்சர் கடை காவலாளிகள் இருவரும் விடியும்வரை சீட்டாடுவார்கள். நியூலைப் கம்பெனியின் காவலாளி ஒரு மலையாளி. அவன் சிறிய வெளிச்சத்தில் செக்ஸ் புத்தகங்களை ஆசையாகப் படித்துக் கொண்டிருப்பான். வங்காளதேசத்திலிருந்த வந்த ஒருவர் கூட அங்கே இரவுக்காவலாளியாக இருந்தார். அவர் தனிமை தாளமுடியாமல் நாய் பூனைகளிடம் பேசிக் கொண்டிருப்பார். ஒன்றிரண்டு இரவுக்காவலாளிகள் தனிமை தாங்க முடியாமல் குடிப்பதும் உண்டு. அதிலும் சின்னையாவின் குடித்தோழன் சாலையில் வசிக்கும் வலதுகை இல்லாத பிச்சைக்காரன். இருவரும் போதையில் அன்பை பொழிவார்கள். முத்தமிட்டுக் கொள்வதும் உண்டு.
சிட்டியூனியன் பேங்க் ஏடிஎம் காவலாளியான தவராஜா ஜோசப்போடு மிகுந்த நட்போடு பழகினார். எழுபது வயதைக் கடந்த அவர் ஒரு செக்யூரிட்டி நிறுவனம் மூலம் வேலைக்கு நியமிக்கபட்டிருந்தார். நடிகர் சந்திரபாபுவிற்கு வயதாகியிருந்தால் எப்படியிருக்குமோ அது போன்ற தோற்றம். நீல நிற யூனிபார்ம் அணிந்திருப்பார். அவர் சில வேளையில் கண்டசாலா குரலில் பாடுவதுண்டு. அதுவும் அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே ஆவது பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே எனப்பாடும் போது கேட்பவர் மனதில் மறைந்து போன துயரநினைவுகள் பீறிடும்
அதுவும் ஆவது பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே என நிறுத்தி இரண்டாம் முறை சொல்லும் போது தவராஜாவின் குரல் உடைந்துவிடுவது வழக்கம்.
பெரும்பான்மை நாட்கள் அவர் தனது ஏடிஎம்மிலிருந்து நடந்து வந்து தேவாலய வாசலில் இருந்த அவனை அழைத்துக் கொண்டு தேநீர் அருந்த செல்வார். அது போன்ற நேரத்தில் மறக்காமல் கண்ணாடிப் பெட்டியில் உள்ள பைபிளில் எந்தப் பக்கம் திறந்து வைக்கபட்டிருக்கிறது என்பதை அவர் ஆர்வமாகப் பார்ப்பதுண்டு. சில நாட்கள் அந்த வாசகங்களை ஒவ்வொரு எழுத்தாக அவர் வாசிப்பதை ஜோசப் பார்த்துக் கொண்டிருப்பான்.
சூடான தேநீரை அவர் விரும்புவதில்லை. அதை ஆறவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடிப்பார். திரும்பி வரும் போது தேவாலய வாசலில் நின்றபடி இருவரும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். பழைய கதைகளைச் சொல்வார். அதில் அவரது இளமைக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பலமுறை சொல்லியிருக்கிறார்
“ஜோசப்பு. உனக்குத் தெரியுமா..அப்போ எனக்கு இருபத்தைந்து வயசிருக்கும். நல்லா கர்லிங் கேர் வச்சி ஜம்னுயிருப்பேன். டெர்லின் சட்டை தான் போடுவேன். தினம் எங்க தெரு வழியா ஒரு பொண்ணு குடை பிடிச்சிகிட்டு போவா. அழகில ரம்பை தோத்திடுவா. அவ குடையோட நடக்கிற அழகை கண்ணை மூடாம பாத்துகிட்டு இருப்பேன். காத்துல நடக்கிற மாதிரி நடந்து போவா. அவ பின்னாடியே நானும் நடந்து போவேன். மடத்து பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை பார்த்தா. அந்த ஸ்கூல் வேப்பமரமா இருந்திருந்தா கூட அவளைப் பாத்துகிட்டே இருந்திருக்கலாமேனு தோணும் அவ முகத்துல எப்பவும் ஒரு சாந்தம். கீற்று மாதிரி புன்னகை. அவ என்னைத் திரும்பி பார்க்க மாட்டாளானு ஏங்கிட்டே இருந்தேன்.
ஒரு நாள் அவ பின்னாடி போய்கிட்டு இருந்தவன் சட்டுனு அவ குடைக்குள்ளே போயிட்டேன். அவ அதை எதிர்பார்க்கலை. கோவத்துல திட்டுவானு நினைச்சேன். ஆனா அவ என்னைப் பார்த்துச் “சின்னக் குடைக்குள்ளே ரெண்டு பேர் நடக்க முடியாதுனு சொன்னா“. அதைக் கேட்டு அடைந்த சந்தோஷம் இருக்கே. சொல்லி முடியாது. அவ கிட்ட “எப்பவும் இந்தக் குடையைப் பிடிச்சிகட்டு நான் கூட வரணும்னு ஆசைப்படுறேனு“ சொன்னேன். அதுக்கு அவ சிரிச்சா. அன்னைக்குக் கூடவே பள்ளிக்கூடம் வரைக்கும் நடந்தேன். உள்ளே போகும்போது அவ சொன்னா “ஆசையிருந்தா மட்டும் போதாது. எங்க வீட்ல வந்து கேட்கவும் தைரியம் வேணும்“.
அவ்வளவு தான். எனக்குத் தலைகால் புரியலை. அடுத்த நாளே பெரியவங்களைக் கூட்டிட்டு போயி அவ வீட்டில பேசினேன். அவங்க பொண்ணு குடுக்க மாட்டேனு சொல்லிட்டாங்க. எவ்வளவோ பேசி பார்த்தேன். அவங்க ஒத்துகிடவேயில்லை.

அதுக்கு அப்புறம் அவளை எங்க தெருவில பாக்கவே முடியலை. பள்ளிக்கூட வேலையை விட்டுட்டா. எங்கே போனானு தெரியாது. அவளைத் தேடி அவங்க சொந்தங்காரங்க இருக்க ஊர் ஊராக அலைஞ்சது தான் மிச்சம் அவளைத் திரும்பப் பாக்கவே முடியலை. பிரம்மை பிடிச்ச மாதிரி ஆகிட்டேன். நாலு வருஷம் நடைபிணம் மாதிரி இருந்தேன். அப்புறம் வீட்ல எங்கப்பாரு சொல்றதுக்காகச் சாந்தியை கட்டிகிட்டேன். அது கூட முப்பது வருஷம் வாழ்ந்து எனக்கும் வயசாகிப்போச்சி.. சாந்தியும் செத்துப் போயிட்டா. ஆனா அவளை மறக்கமுடியலை. சாகுறதுக்குள்ளே அவளை இன்னொரு தடவை பாத்துட்டா போதும். இல்லாட்டி என் கட்டை வேகாது. “
இதைச் சொல்லும் போது அவரது கண்கள் கலங்கிவிடும். பேச்சு வராது. மௌனமாக எதிரெ ஒளிரும் சிலுவை பார்த்துக் கொண்டிருப்பார். பின்பு அமைதியாகத் தனது ஏடிஎம் நோக்கி நடந்து போகத் துவங்குவார்..
ஒவ்வொரு நாளும் புதிய கதை சொல்வது போல அவரது வீதியில் குடை பிடித்தபடி வந்த பெண்ணைப் பற்றிச் சொல்லுவார். நேற்று சொன்னது நினைவிருக்காது என்பது போல விவரிக்க ஆரம்பிப்பார்.
அந்த நினைவுகளைத் திரும்பப் பேசும்போது அவர் அடையும் சந்தோஷத்திற்காக ஜோசப்பும் அதைக் கேட்டுக் கொண்டு வருவான். ஒரு நாளும் அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று அவர் சொன்னதேயில்லை. குடைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை விவரிக்கும் போது அவரது முகத்தில் இருபது வயதின் மகிழ்ச்சி தோன்றி மறையும். அப்போது ஜோசப்பிற்கு மனிதர்கள் நினைவில் வாழுகிறவர்கள். அந்தச் சந்தோஷமே போதுமானது என்று தோன்றும்
ஆனால் அவனுக்கு இப்படி நினைத்துச் சந்தோஷம் கொள்ளும் நினைவு ஒன்று கூடக் கிடையாது. அந்த ஏக்கத்தாலே அவர் சொல்லும் காதல்கதையைத் திரும்பத் திரும்பக் கேட்டான்
ஒவ்வொரு முறை அவர் சொல்லும் போதும் அந்தப் பெண்ணைப் பற்றிய கூடுதலாக ஒரு விஷயம் அவனுக்குத் தெரிய வரும்
ஒரு நாள் கதையை முடிக்கும் போது சொன்னார்
“ஜோசப்பு இந்த ஊர்ல தான் அவ இருக்கானு கேள்விபட்டேன். அவளை ஒரேயொரு தடவை பாத்தா போதும். நானும் முப்பது வருஷமா இதே ஊர்ல இருக்கேன் என் கண்ல படவேயில்லை“
“நேர்ல பாத்தா என்ன பேசுவீங்க“ எனக்கேட்டான் ஜோசப்
“தெரியலை. ஆனா அழுதுருவேன். அவ முன்னாடி அழுறதுக்காக என்கிட்ட கொஞ்சம் கண்ணீர் இருக்கு“
ஆண்களும் அழ விரும்புகிறார்கள். ஆனால் யார் முன்பு எதற்காக என்பதில் தான் மாறுபாடு இருக்கிறது. தூரத்து நட்சத்திரம் போல அவரது மனதில் அந்தப் பெண் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறாள் என்பதை ஜோசப் உணர்ந்து கொண்டான்.
••
புயல்காரணமாக மூன்று நாட்கள் பகலிரவாக மழை பெய்தது. மின்சாரம் போய்விட்ட ஒரு நாளில் இருளுக்குள் மின்னல்வெட்டி பயமுறுத்தியது. தேவாலயத்தினுள் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அந்த இரவில் அவன் தங்கசாமி வீட்டில் ஒதுங்கிக் கொண்டான். தவராஜாவை சந்திக்க முடியவில்லை. வழக்கம் போல அவர்கள் தேநீர் அருந்த செல்லவுமில்லை. ஒவ்வொரு நாளும் மழையின் சீற்றம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. தேவாலயத்தைச் சுற்றிலும் மழைத்தண்ணீர் நிரம்பியது. தேங்கிய தண்ணீரை பகலில் இயந்திரம் மூலம் வெளியேற்றினார்கள்.
மழை வெறித்த நான்காம் நாள் காலை வெயிலை கண்ட ஜோசப் கைகளை உயர்த்தி வணங்கினான். நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டேயிருந்தான். அந்த வெயில் காணும் மனிதர்கள் முகத்தில் புன்னகையை உருவாக்கியிருந்தது. அன்றிரவு பணிக்கு வந்தபிறகு தவராஜாவின் எண்ணிற்குப் போன் செய்து பார்த்தான். போன் வேலை செய்யவில்லை. தானே நடந்து சென்று பார்த்தான் , ஏடிஎம் வாசலில் வேறு ஒரு காவலாளி தலைக்குல்லா அணிந்து உட்கார்ந்திருந்தான்
“தவராஜா இல்லையா“ எனக்கேட்டான் ஜோசப்
“மழையில அவருக்கு உடம்புக்கு முடியலை. என்னை மாற்றிவிட்டுட்டாங்க“
“அவர் வீடு எங்க இருக்கு தெரியுமா“
“பெரம்பூர்லனு நினைக்குறேன். நீங்க எந்தச் செக்யூரிட்டி சர்வீஸ்லே வேலை செய்றீங்க“
“நான் சர்ச் வாட்ச்மேன்“ என்றான் ஜோசப்
“நாங்க ரெண்டு பேரும் முன்னாடி எஸ்கேஎம் ஸ்கூல் வாட்ச்மேனா இருந்தோம். அப்போ விடிய விடிய பேசிக்கிட்டேயிருப்போம் “. என்றான் அந்தப் புதிய காவலாளி
ஜோசப் பதில் சொல்லாமல் தனியே தேவாலயம் நோக்கி நடந்தான்.
இத்தனை நாட்கள் பழகியும் தவராஜாவின் வீடு எங்கேயிருக்கிறது, யாருடன் வசிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கமாக இருந்தது.
அந்த வாரம் சனிக்கிழமை மதியமாகத் தவராஜா வேலை செய்த செக்யூரிட்டி நிறுவனத்தைத் தேடிச் சென்று அவரது முகவரியை பெற்றுக் கொண்டு பெரம்பூருக்குச் சென்றான். குறுகலான சந்து ஒன்றின் உட்புறமிருந்த சிறிய வீட்டில் அவரது மகள் மட்டுமே இருந்தாள்.
“தவராஜாவை பாக்கணும்“ என்றான்
“அவர் செத்துபோயி மூணு நாள் ஆச்சு. அய்யாவுக்கு ரொம்பக் காச்சல் அடிச்சது. ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அன்னைக்கு நைட்டே செத்துட்டாரு… நீங்க செக்யூரிட்டி கம்பெனில வேலை பாக்குறீங்களா“ எனக்கேட்டாள் அவரது மகள்
“இல்லே அவரோட பிரண்ட்“ என்றான் ஜோசப்
“உங்க கிட்ட கடன் வாங்கியிருந்தாரா“ எனக்கேட்டாள்
“இல்லை. நான் தான் அவர்கிட்ட கடன் வாங்கியிருந்தேன்“
எனத் தனது பர்ஸில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினான்
அவள் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள்.
அவளுக்குத் தவராஜா காதலித்த பெண்ணைப் பற்றித் தெரிந்திருக்குமா, ஆணும் பெண்ணும் சில ரகசியங்களைக் குடும்பம் அறியாமல் கடைசிவரை ஒளித்துக் கொள்கிறார்கள். அந்த ரகசிய செடி இரவில் மட்டுமே மலர்கிறது.
அவளிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பும் போது கடைசிவரை தவராஜா தான் விரும்பிய பெண்ணைக் காணவேயில்லை என்பது அவனது துயரை அதிகப்படுத்தியது
••

அதன்பிறகான நாளில் எப்போதும் போல ஜோசப் இரவுக்காவல் பணிக்காகத் தேவாலயத்தின் வாசலில் அமர்ந்திருந்தான். அவன் மனதில் அந்தப் பெண் நடந்து போகத் துவங்கினாள். தவராஜா நிழல் போல அவள் பின்னால் போய்கொண்டிருந்தார்.
•••
April 30, 2023
தனிக்குரல்
உண்மையைச் சொல்லும் திரைப்படங்களை மட்டுமே நான் எடுக்க விரும்புகிறேன். அதுவும். ஆழமான உண்மைகளை, கசப்பான உண்மைகளைக் கூடப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது என்கிறார் உஸ்மான் செம்பேன்.

ஆப்பிரிக்கச் சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் உஸ்மான் செம்பேன் குறித்த ஆவணப்படம் “Sembene!”
2015ல் வெளியான இப்படத்தை Samba Gadjigo மற்றும் Jason Silverman’ இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஆப்பிரிக்கா முழுவதும் திரையிடப்பட்டிருக்கிறது
செனகலில் 1980 முதல் இப்போது வரை 90% திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே இந்த ஆவணப்படத்தை உருவாக்கினோம் என்கிறார்கள்.



செம்பேனின் “‘Moolaade’ “Xala.” “Mandabi” போன்ற திரைப்படங்களை உலகத் திரைப்படவிழாக்களில் பார்த்திருக்கிறேன்.
செம்பேன் பிரான்ஸ் தொழிற்சங்க இயக்கத்தின் உதவியால் சோவியத் ரஷ்யாவில் திரைக்கலை பயின்றவர். அவர் எப்படி ஆப்பிரிக்காவின் முக்கிய இயக்குநராக உருவானார் என்பதை ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்கள்
அவரது வாழ்வைச் சிறிய கதைகள் போலத் தனித்தனி அத்தியாயங்களின் வழியே அழகாக விவரிக்கிறார்கள்,.
செம்பேனின் வீட்டைத் தேடிச் செல்லும் இளம் இயக்குநரின் பார்வையில் படம் துவங்குகிறது. செம்பேன் மறைவிற்குப் பிறகு திறக்கப்படாத அவரது அறையின் கதவுகளைத் திறந்து உள்ளே செல்கிறார்கள். ஒரே தூசியும் குப்பையும் அடைந்துகிடக்கிறது. கைவிடப்பட்ட நிலையில் படச்சுருள்கள் காணப்படுகின்றன. செம்பேனின் திரைப்படச்சுருள்களை வெளியே எடுத்து வந்து சுத்தம் செய்கிறார்கள். அந்தக் காட்சி எவ்வளவு சிறந்த படைப்பாளியாக இருந்தாலும் காலம் இப்படிதான் நடத்துகிறது என்ற வேதனையினை நம் மனதில் ஏற்படுத்துகிறது

அவர் வாழ்ந்த போது செம்பேனின் இல்லம் ஒரு பண்பாட்டு மையம் போலச் செயல்பட்டு வந்தது. இப்போது அது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
செம்பேனின் மகன் மற்றும் அவரது திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் வழியே அவரது திரைப்பட உருவாக்கம் மற்றும் சொந்தவாழ்க்கை குறித்து விவரிக்கப்படுகிறது
செம்பேன் எழுதிய முதல் நாவல் மற்றும் அவரது இலக்கியப்பணி குறித்தும் படத்தில் பேசுகிறார்கள். தொல்குடித் தழும்புகள் என்ற தலைப்பில் செம்பேனின் சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன

எழுதப்பட்ட வார்த்தைகளை விடவும் சினிமா மிகவும் வலிமையுள்ள சாதனம் என்பதைச் செம்பேன் நன்றாக உணர்ந்திருந்தார். குறிப்பாகப் படிப்பறிவு இல்லாத மக்களை விழிப்புணர்வு கொள்ள வைப்பதற்குச் சினிமா பயன்படும் என்று நம்பினார்.
1961 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் திரைக்கலை படித்த பின்பு கார்க்கி ஸ்டுடியோவில் சில காலம் பணியாற்றினார். பின்பு. செனகனுக்குத் திரும்பி இரண்டு குறும்படங்களை இயக்கிய செம்பேன் தனது நாவலை மையமாகக் கொண்டு பிளாக் கேர்ள் படத்தை உருவாக்கினார். இப்படம். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றதுடன் உயரிய விருதுகளையும் வென்றது
ஃபிரெஞ்சு புதிய அலை திரைப்படங்களின் பாதிப்பில் பிரான்சிற்கு வீட்டுவேலை செய்வதற்கு அழைத்துவரப்பட்ட கறுப்பினப் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அடுத்த படத்தை உருவாக்கினார். இப்படம் ஆவணப்படம் போலவே உருவாக்கப்பட்டிருந்தது. அதன்காரணமாகத் திரைப்படவிழாக்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
செம்பேன் மக்களின் பேச்சுவழக்கிலே Mandabi என்ற அடுத்த படத்தை வண்ணத்தில் உருவாக்கினார். இதுவும் வெற்றிப்படமாக அமைந்தது.

தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் காலனிய எதிர்ப்புக் காரணமாகத் தனது படங்களுக்கான தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் சொந்த வீட்டினை அடமானம் வைத்துப் படங்களை உருவாக்கியிருக்கிறார். புறக்கணிக்கப்பட்ட கலைஞராக வாழ்ந்த அவரது இறுதி நாட்களையும் படம் உண்மையாகப் பதிவு செய்துள்ளது.
சினிமாவில் நாம் யாருடைய கதைகளைச் சொல்கிறோம் என்பது முக்கியமானது. ஆப்பிரிக்க மக்களின் பண்பாடு மற்றும் உண்மையான அரசியல் பிரச்சனைகள் நெருக்கடிகளைத் திரையில் பேச வேண்டும் என்பதே எனது நோக்கம். உலகம் ஆப்பிரிக்க மக்களைப் பற்றிக் கொண்டுள்ள எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும். அதற்காகவே நான் திரைப்படங்களை உருவாக்குகிறேன் என்கிறார் செம்பேன்.
செம்பேனின் திரைப்படங்கள் ஆப்பிரிக்க மக்களின் வாழ்வை உண்மையாகப் பிரதிபலித்தன. அவருக்குப் பின்வந்த இயக்குநர்கள் அந்த மரபின் அடுத்த கண்ணியாகத் தங்கள் படங்களை உருவாக்கினார்கள். சர்வதேச அரங்கில் ஆப்பிரிக்கச் சினிமா தனித்துக் கவனிக்கப்பட்டதற்கு செம்பேன் முக்கியமான காரணியாக இருந்தார்.
அவரது முக்கியமான வாசகம்.
“If Africans lose their stories, Africa will die”. இது தமிழ்ச் சமூகத்திற்கும் பொருந்தக்கூடியதே.
.
ஆரஞ்சு தோட்டக் குரங்குகள்
செசானின் நிலக்காட்சி ஓவியங்களைத் தியானம் என்று அழைத்தால் ரூசோவின் வனவாழ்வைச் சித்தரிக்கும் ஓவியங்களை மௌனவிழிப்புணர்வு என்று அழைக்கலாம்.

கையில் ஆரஞ்சு பழங்களுடன் உள்ள குரங்குகளை ஹென்றி ரூசோ மிக அழகாக வரைந்திருக்கிறார். ஆரஞ்சு தோட்டத்திலுள்ள அந்தக் குரங்குகளின் ஒளிரும் கண்களும் விநோத முகபாவமும் கனவுலகின் காட்சி போல உணரச் செய்கின்றன.
சுயமாக ஓவியம் வரையக் கற்றுக் கொண்டவர் ரூசோ. ஒவியப்பள்ளிகளில் பயிலாத ஓவியர்களைப் பிரெஞ்சு அகாதமி ஒதுக்கி வைத்திருந்த காலமது. ஆகவே ரூசோவின் ஓவியங்களை அகாதமி அங்கீகரிக்கவில்லை. இதனால் ரூசோ மனவருத்தம் கொண்டிருந்தார். அவரது கால கட்ட ஓவியர்களில் பிகாசோ போன்ற சிலரே அவரது மேதைமையை உணர்ந்து பாராட்டினார்கள். மற்றவர்கள் அவரை Sunday painter எனக் கேலி செய்தார்கள். ஆகவே அன்றைய முக்கிய ஓவியர்களை விட்டு விலகி தனியே வறுமையான சூழலில் ரூசோ ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார்.
அவரது ஓவியங்களில் காணப்படும் இயற்கை நாம் கண்ணால் காணும் இயற்கையிலிருந்து மாறுபட்டது. கனவில் வெளிப்படும் இயற்கை போல விநோதமானது. குறிப்பாக மரங்களின் இலைகளைப் பாருங்கள். கூர்மையான, துல்லியமான அதன் தோற்றம் இப்போது தான் விழிப்படைந்தவை போலிருக்கின்றன.

அடர் பச்சை நிறத்தினையும் இளம் பச்சை நிறத்தினையும் அவர் சுடர் போல ஒளிரும்படியாகக் கையாண்டிருக்கிறார். ஓவியத்தில் நாம் காணும் மக்காக் குரங்குகள் சாதுவாக, தியானத்திலிருப்பது போலக் காட்சி தருகின்றன. குரங்கு என்றாலே சேஷ்டை என்று நம் நினைவில் பதிந்துள்ள பிம்பம் மாறிவிடுகிறது. இந்தக் குரங்குகள் இயற்கையின் பேரழகில் மயங்கி நிற்கின்றன. எதற்கோ ஏக்கம் கொண்டிருக்கின்றன.
பௌத்த ஓவியங்களில் இது போன்ற குரங்குகளைக் கண்டிருக்கிறேன். அவை போதிசத்துவரின் வடிவமாகச் சித்தரிக்கப்பட்டவை. ஹென்றி ரூசோவின் குரங்குகள் ஊசி இலைகளுக்கும் வெள்ளை மலர்களுக்கும் இடையில் அமர்ந்திருக்கின்றன. ஊசலாடுகின்றன. வெள்ளை மலர்களுடன் உள்ள மக்காக் குரங்குகளையும் பாருங்கள். கற்பனையும் யதார்த்தமும் ஒன்று கலந்த காட்சியாகத் தோற்றம் தருகின்றன.

வனவாழ்வை வியப்பூட்டும் விதமாகச் சித்தரித்தவர் ரூசோ. இதற்காக அவர் எந்தக் காட்டிற்கும் செல்லவில்லை. பாரீஸின் புற நகரக் காட்சிகளையும் மிருக காட்சி சாலையிலுள்ள விலங்குகளையும் அவதானித்தே ஓவியங்கள் வரைந்திருக்கிறார். அவரது காடுகள் ஒரு நகரவாசியின் கனவுகளாகும், ஆகவே கனவு நிலையை மையமாகக் கொண்ட ஓவியங்களை முன்னெடுத்த சர்ரியலிஸ்டுகள் அவரைக் கொண்டாடினார்கள். குறிப்பாக உறங்கும் ஜிப்சி பெண் ஓவியம் இன்று வரை மிகச்சிறந்த கனவுக்காட்சியாகக் கொண்டாடப்படுகிறது..
ரூசோவின் குரங்குகள் மனிதப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. காதலுற்ற மனிதனைப் போலவே அவை ஆரஞ்சு பழத்துடன் காட்சிதருகின்றன. குரங்கும் ஆரஞ்சு பழங்களும் என்பதே கவித்துவமான உருவகம் தானே. ரூசோ தனது கலைக்கூடத்தில் வனவிலங்குகள் பற்றி ஆல்பம் ஒன்றை வைத்திருந்தார். Galeries Lafayette. அங்காடியால் வெளியிடப்பட்ட அந்த தொகுப்பின் துணை கொண்டே விலங்குகளை வரைந்திருக்கிறார்.
ரூசோ சுங்க இலாக்காவில் வேலை செய்தவர். ஆகவே ஓய்வு நேரத்தில் மட்டுமே ஓவியம் வரைந்தார். அவரது மேலதிகாரிகளில் சிலர் இதற்காக வேலை நெருக்கடியில்லாத சுங்கச்சாவடிகளை அவருக்கு அளித்தார்கள். அப்படியும் அவரால் தொடர்ந்து வேலை செய்ய இயலவில்லை. ஆயிரம் பிராங்குகள் ஓய்வூதியம் கிடைக்கும் என்பதால் வேலையிலிருந்து விடுபட்டு முழுநேரமாக ஓவியம் வரையத் துவங்கினார்.

இந்த நாட்களில் அவர் ஓவியம் வரைவதற்கான வண்ணங்களைக் கூடக் கடனாகவே வாங்க வேண்டியிருந்தது. மகனுடன் சிறிய ஒற்றை அறையில் வசித்து வந்தார். அங்கே ஒரேயொரு படுக்கை மட்டுமே இருந்தது. 1897 இல் அவரது மகனின் மரணத்திற்குப் பிறகு விதவையான ஜோசபின் நூரியை மணந்தார். அவரும் ஏழை. அவர்கள் முறையாகத் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை.
வறுமை முற்றிய நிலையில் பணம் சம்பாதிக்க வேண்டி The Revenge of a Russian Orphan என்ற நாடகத்தை எழுதினார், நகராட்சி நடத்திய ஓவியப்போட்டியில் பங்குபெற்றார். சிறுவர்களுக்கு வயலின் கற்றுக் கொடுத்தார். அப்படியும் போதுமான பணத்தைச் சம்பாதிக்க இயலவில்லை. ஜோசபின் ஒரு ஸ்டேஷனரி கடையைத் திறந்தார், அங்கு ரூசோவின் ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு வேளை உணவு கிடைக்கக் கூடும் என்பதற்காகச் சாலையோரம் அவர் வயலின் வாசிப்பதைத் தான் கண்டுள்ளதாக ரெமி டி கோர்மான்ட் எழுதியிருக்கிறார்.
நீண்டகாலப் போராட்டத்தின் பிறகே அவருக்கான அங்கீகாரம் கிடைத்தது. அவரது ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. விற்பனையாகின. பிகாசோ அதற்கு முக்கியக் காரணியாக இருந்தார்.
ரூசோவின் கடைசி நாட்கள் மிகத்துயரமானவை. அவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வலியோடு போராடிக்கொண்டிருந்தார். தனது படுக்கையைச் சுற்றும் ஈக்களைத் துரத்துவதற்குக் கூட அவரிடம் வலிமையில்லை.
அவர் 1910, செப்டம்பர் 4 அன்று நினைவு தப்பிய நிலையில் மருத்துவமனை வார்டில் இறந்தார். ஏழைகளைப் புதைப்பதற்காகப் பாக்னியூக்ஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். மூன்று வருடங்களுக்குப் பின்பு அவரது பெருமையை அறிந்தவர்கள் அவருக்காகப் புதிய கல்லறை ஒன்றை உருவாக்கினார்கள். அங்கே அவரது உடல் மாற்றப்பட்டது.
வறுமையும் நெருக்கடியுமான வாழ்விலிருந்து ரூசோ எப்படி இத்தனை கனவு பூர்வமான, அசாத்தியமான கலை அழகுடன் கூடிய ஓவியங்களை வரைந்தார் என்பது புதிராக இருக்கிறது
கலைமனம் நெருக்கடிகளைத் தாண்டி செயல்படக்கூடியது. புற உலகின் பிரச்சனைகள் அதிகமாகும் போது அது கற்பனையில் சஞ்சரிக்கத் துவங்குகிறது. ஆழ்ந்த கனவு நிலையைத் தொடுகிறது. படைப்பாற்றலின் உச்சம் வெளிப்படுகிறது.

ரூசோவின் வாழ்க்கையை அறிந்து கொள்ளும் போது ஆரஞ்சு பழங்களைக் கையில் ஏந்தி நிற்கும் குரங்கு அவரது மாற்று உருவம் போலத் தோன்றுகிறது.
ரூசோ தனது 64 வது வயதில் லியோனி என்ற 55 பெண்ணைக் காதலித்தார். அவளுக்குக் காதல் கடிதங்களை எழுதினார். அவள் கண்டுகொள்ளவேயில்லை. இந்தப் புறக்கணிப்பு அவரை வருத்தியது. இந்தக் காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியங்களில் காணப்படும் வனவிலங்குகள் சாந்தமாக, ஏக்கமானதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன
நகரத்திற்குக் கானகத்திற்குமான முக்கிய வேறுபாடு நகரம் பாதுகாப்பானது. பரபரப்பானது. புதுமைகள் நிறைந்தது. ஆனால் கானகம் என்பது பாதுகாப்பற்றது. பயம் தரக்கூடியது. வெறி கொண்ட விலங்குகள் வாழக்கூடியது என்றே பொதுப்புத்தியில் உருவாகியிருந்தது. இந்த எதிர்நிலைகளை ரூசோ தனது ஓவியங்களில் மாற்றியமைக்கிறார். அவரது கானகம் அச்சமற்றது. வசீகரமானது. அமைதியும் பேரழகும் கொண்டது. நகரமோ கானகமோ அதை இயக்குவது சமநிலையற்ற போராட்டம் தான் என்பதை ரூசோ சுட்டிக்காட்டுகிறார்.
மிருக காட்சி சாலையின் கூண்டிற்குள் அவர் கண்ட விலங்குகள் அவரது ஓவியத்தில் சுதந்திர வெளியில் உலவுகின்றன. விலங்குகளின் கண்களை அவர் மிகவும் தீர்க்கமாக வரைந்திருக்கிறார்.
ரூசோ இசைக்கலைஞர் என்பதால் இயற்கையை வயலினிலிருந்து கசியும் இசையைப் போல தூயதாக உருவாக்கியிருக்கிறார். அதன் காரணமாகவே விநோத மலர்களும் விழிப்புற்ற இலைகளும் மெய்மறந்த குரங்குகளும் பசித்த புலியும், நிசப்தமான பறவைகளும் கொண்டதாக அவரது வனவுலகம் உருவாகியிருக்கிறது.
இந்த ஓவியங்களை ஆழ்ந்து அவதானிக்கும் போது நாம் கேட்பது ரூசோவின் இசையைத் தான். அந்த இசை தான் வண்ணங்களாக உருமாறியிருக்கிறது.
••
April 25, 2023
ரூமியும் லம்யாவும்
பதிமூன்றாம் நூற்றாண்டு பாரசீக கவிஞர் ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட அனிமேஷன் திரைப்படம் Lamya’s Poem.

சிரியாவில் வாழும் பனிரெண்டு வயதான லம்யாவின் பகல் கனவில் துவங்குகிறது படம். மின்மினிப்பூச்சிகள் பறக்கும் உலகைக் கனவு காணுகிறாள். அதில் மின்மினிப்பூச்சிகள் பறந்து வந்து அவளது கையில் அமர்கின்றன. அதன் வசீகர ஒளியும் பறத்தலும் அவளைச் சந்தோஷப்படுத்துகின்றன. விநோதமான கற்பனையிலிருந்து அவள் விழிப்படையும் போது சாதாரணப் பள்ளி மாணவியாக வெள்ளை உடையில் தோன்றுகிறாள்.
வீட்டில் அவளும் அம்மாவும் மட்டுமே வசிக்கிறார்கள். அவளது வீட்டிற்கு வரும் ஆசிரியர் அவளது படிப்புத்திறமையைப் பாராட்டி தன்னிடமுள்ள ஒரு புத்தகத்தை வாசிக்கத் தருகிறார். அது ரூமியின் கவிதைப்புத்தகம்.
ரூமி யார் என்று தெரியுமா என்று அவளிடம் கேட்கிறார். அவள் தனக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்கிறாள். ரூமியின் வாழ்க்கையை ஆசிரியர் விவரிக்கத் துவங்குகிறார். அவை காட்சிகளாக விரிகின்றன.

மங்கோலிய படையெடுப்பில் சாமர்கண்ட் சூறையாடப்படுகிறது. அங்கே வசித்த ரூமியின் குடும்பம் அகதியாக வெளியேறுகிறார்கள். இந்தப் பயணத்தில் ரூமி எழுதிய கவிதைகள் காற்றில் பறக்கின்றன. அவரது தந்தை அந்தக் கவிதைகளைப் பாதுகாக்க முனையும் போது யாருக்காக நான் கவிதைகள் எழுதுவது. இந்தச் சூழலில் சண்டையிடுவது தானே முக்கியம் எனக் கேட்கிறார் ரூமி. இந்தக் கவிதைகள் என்றும் வாழக்கூடியவை. யாரோ என்றோ அதைப் படிப்பார்கள். கவிதைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்கிறார்
படம் ரூமியின் அகதி வாழ்க்கையினையும் லம்யாவின் அகதி வாழ்க்கையினையும் இருசரடுகளாகப் பிணைத்துச் செல்கிறது. கற்பனை உலகில் ரூமியை சந்திக்கும் லம்யா அவருடன் உரையாடுகிறாள். சாகசங்களை மேற்கொள்கிறாள். அவர் தனது கடந்தகாலத் துயரங்களை மறக்க முடியாமல் தவிக்கிறார்.
ரூமியின் கவிதை அவளது வாழ்க்கையை எப்படி இணைக்கிறது. திசைமாற்றுகிறது என்பதை அழகாகச் சித்தரித்துள்ளார்கள். சூபி ஞானக்கவியாக அறியப்பட்ட ரூமியை இப்படம் அகதியின் பாடலைப் பாடும் போராளியாக மாற்றுகிறது. ரூமியின் தந்தை படத்தில் அமைதியின் தூதுவராகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
வேறுவேறு காலங்களில் வசித்தாலும் ஒரேமாதமான நெருக்கடியை லம்யாவும் ரூமியும் சந்திக்கிறார்கள். இன்றைய இளம் வயதினரைப் போலவே, லம்யாவும் செல்போனும் கையுமாகவே இருக்கிறாள். தொடர்ந்து இசை கேட்கிறாள். நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாள். அவளது இயல்பு வாழ்க்கையைப் போர்விமானங்களின் வான்வழித் தாக்குதல் சிதைக்கிறது.

லம்யாவும் அவரது தாயும் ஊரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பாதுகாப்பான இடம்தேடிச் செல்கிறார்கள். தாயை பிரியும் லம்யாவிற்கு வாழ்வின் மீதான பற்றை ரூமியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன இன்னொரு மாயதளத்தில் லம்யாவும் ரூமியும் இணைந்து சாகசப் பயணத்தைத் தொடங்குகின்றனர். அவை மியாசகியின் அனிமேஷன் படங்களை நினைவுபடுத்துகின்றன.
சிரியாவின் சமகால அரசியலை, போர் சூழலைப் பேசும் இப்படம் கவிதைகளே நம் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துகின்றன. துயரங்களிலிருந்து நம்மை ஆற்றுப்படுத்துகின்றன என்கிறது, இப்படம் ரூமியின் வாழ்க்கையைப் புதிய கோணத்தில் விவரித்திருப்பது சந்தோஷமளிக்கிறது.
முகமது அலியின் கையெழுத்து
புதிய சிறுகதை. (உயிர்மை ஏப்ரல் 2023 இதழில் வெளியானது)

அவனுக்கு முப்பது வயதிருக்கும். தூக்கமில்லாத கண்கள். கலைந்த தலையும் வெளிறிய உதடுகளும் கொண்டிருந்தான். அரைக்கை சட்டை. அதுவும் சாம்பல் நிறத்தில். அதற்குப் பொருத்தமில்லாது ஊதா நிற பேண்ட் அணிந்திருந்தான். காலில் ரப்பர் செருப்பு அதன் ஒரங்கள் தேய்ந்து போயிருந்தன. கையில் ஒரு துணிப்பை. அதற்குள் அரிய பொருள் எதையோ வைத்திருப்பவன் போல மடியில் கவனமாக வைத்திருந்தான்
தாலுகா அலுவலகத்தில் இப்படியானவர்களை அன்றாடம் காண முடியும் என்பதாலோ என்னவோ அவனை யாரும் எதுவும் கேட்கவில்லை. அவன் முகத்தில் கடன் கேட்க நினைப்பவனின் தயக்கம் கூடியிருந்தது. வலதுகாலை அழுத்தி ஒருபக்கமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.
மதிய உணவு நேரத்தில் தாலுகா அலுவலகத்தின் இயல்பு மாறிவிடுகிறது. அரசு அலுவலகத்திற்கான விறைப்பு கலைந்து சற்றே பொது நூலகத்தின் சாயல் கொண்டதாகிறது. அந்த நேரத்தில் ஊழியர்கள் புன்னகைக்கிறார்கள். அவர்களுடன் எளிதாக உரையாடலாம். ஒருவேளை அதற்காகத் தான் அவனும் காத்திருந்தானோ என்னவோ.
மேம்பாலம் முடியும் இடத்திலிருந்து வலதுபக்கமாகச் செல்லும் துணைசாலையில் புதிதாகக் கட்டப்பட்டிருந்தது தாலுகா அலுவலகம். மூன்று மாடிகள் கொண்டது.
தாலுகா அலுவலகம் என்றாலே மனதில் தோன்றும் தூசி படிந்த வேப்பமரமும், அழுக்கடைந்த படிக்கட்டுகளும் பாதி இருள் படிந்த அறைகளும் அங்கேயில்லை. ஆனால் வாசலை அடைத்துக் கொண்டு நிற்கும் ஜீப்பும் ஆங்காங்கே விடப்பட்ட பைக்குகளும் பழைய தாலுகா அலுவலகத்தின் மிச்சமாகத் தோன்றின.
பெரும்பான்மையான அரசு அலுவலகங்களில் லிப்ட் இருப்பதில்லை. இருந்தாலும் வேலை செய்வதில்லை. இந்த அலுவலகத்திலும் பெரிய படிக்கட்டுகள் மட்டுமே இருந்தன. படியேறிச் செல்லும் போது எதிர்படும் சுவரில் அரசு விளம்பரம் ஒன்றை பெரிதாக ஒட்டியிருந்தார்கள்.
அலுவலகத்தில் கல்யாண மண்டபங்களில் இருப்பது போன்ற பெரிய ஜன்னல்கள் வைத்திருந்தார்கள். அதிக வெளிச்சத்தை விரும்பாத ஊழியர் ஒருவர் தனது இருக்கையை ஒட்டிய ஜன்னலில் பாதியை மட்டுமே திறந்து வைத்திருந்தார்.
தாலுகா அலுவலகத்தின் உணவுவேளையில் வந்து போகும் சிறுவணிகர்கள் அதிகம். சில்வர் தூக்குவாளியில் சூடாக முறுக்குக் கொண்டு வரும் பாக்கியத்தம்மாளும், அதிசரம், சீடைபாக்கெட், ரவாலட்டு விற்கும் முத்துவும், லுங்கி, டவல்கள் விற்க வரும் காசிமும், நைட்டி, காட்டன்புடவைகள் விற்க வரும் கலைவாணிக்கும் அந்த அலுவலக ஊழியர்கள் அன்பான வாடிக்கையாளர்கள்.
தாலுகா ஆபீஸ் இடம்மாறினாலும் அவர்களின் வருகை தடைபடுவதில்லை. அதிலும் சூடான தேங்காய் போளி விற்கும் கேசவன் யார் உள்ளே இருந்தாலும் கவலையின்றி நேரடியாகத் தாசில்தார் டேபிளில் இரண்டு தேங்காய் போளிகளைத் துண்டிக்கபட்ட நியூஸ்பேப்பரில் வைக்கும் அளவிற்குச் சுதந்திரமாகச் செயல்படுவான்.
பாக்கியத்தமாளுக்குக் கனத்த உடம்பு. அதிலும் ஆணி உள்ள கால் என்பதால் மெதுவாகவே படியேறி வருவார். தூக்குவாளியை படிக்கட்டில் வைத்து ஏறும் சப்தத்தை வைத்தே அவர் வருவதை அறிந்து கொண்டுவிடுவார்கள். மதிய சாப்பாட்டிற்குப் பின்பு அவரது முறுக்கை கொறித்தால் தான் பலருக்கும் பசியாறும்.
பழைய தாலுகா அலுவலகம் போலின்றி இங்கே குளிர்ந்த தண்ணீர் குடிப்பதற்காகக் கூலிங் மெஷின் பொருந்தியிருந்தார்கள். அந்தத் தண்ணீரை காசிம் எப்போதும் தனது பச்சை நிற பாட்டிலில் பிடித்துக் கொண்டுவிடுவார். குளிர்ந்த தண்ணீரை குடிக்கும் போது அவரது முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி அலாதியானது.
இவர்களைத் தவிர எதிரேயுள்ள டீக்கடையிலிருந்து வரும் பையனையும் ஜெராக்ஸ் கடை சுப்பையாவையும் தவிர்த்தால் அந்த அலுவலகத்திற்குச் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் நில உடமைச் சான்றிதழ் வாங்க வருகிறவர்கள் தான் அதிகம்.
அவர்களின் முகத்தைப் பார்த்தவுடனே கண்டுபிடித்துவிடலாம். பதற்றத்தில் தான் கொண்டுவந்துள்ள சர்டிபிகேட்டுகளைக் கண்முன்னே நழுவவிடுவார்கள். சிலரால் கேட்ட கேள்விக்குப் பதில் பேசமுடியாது. ஒரே அளவில் மரமேஜைகள் இருந்தாலும் மனுவை பெற்றுக் கொள்ளும் அதிகாரியின் முன்னுள்ள மேஜை மட்டும் மிகப்பெரியதாக அவர்களுக்குத் தோன்றும். சுவரில் தொங்கும் தலைவர்களின் புகைப்படங்களில் கூடப் புன்னகையைக் காண முடியாது.
மதிய உணவு நேரம் முடிந்தாலும் உடனே பலரும் இருக்கைக்குத் திரும்பிவிடுவதில்லை. சிலர் புகைபிடிப்பதற்காகப் படிகளில் கீழே இறங்கி போவதுண்டு. அப்படிக் கிழே இறங்கிய ராகவன் தான் அந்த மனிதனைக் கவனித்தான்.

“என்ன வேணும்“. என்று போகிற போக்கிலே கேட்டான்
“.அது வந்து சார்.. நானு “. என்று தயக்கத்துடன் அந்த ஆள் சொன்னதைக் கேட்ட ராகவன் “.உள்ளே போயி பாருங்க“. என்றபடியே கிழே நடந்தான்
மதிய உணவை முடித்துவிட்டு சிலர் இருக்கைக்குத் திரும்பியிருந்தார்கள். ஜெயந்தி கழுவிய டிபன்பாக்ஸை ஜன்னல் ஒரம் வைத்துக் கொண்டிருந்தாள். அந்த ஆள் சபாபதி மேஜையின் முன்பாக நின்றபடியே “.சார்“. என்று அழைத்தான்
பல்குத்துவதற்காகக் குண்டூசியைத் தேடிக் கொண்டிருந்த சபாபதி அவன் ஏதோ தின்பண்டம் விற்க வந்தவன் என நினைத்துக் கொண்டு “.என்ன கொண்டு வந்துருக்கே“. என்று கேட்டார்.

அவன் தனது பையிலிருந்து பழைய புகைப்படம் ஒன்றை வெளியே எடுத்து அவர் முன்பாகக் காட்டியபடியே சொன்னான்
“.முகமது அலி போட்டோ சார்“.
`புரியாமல் திகைத்துப் போன சபாபதி கேட்டார்
“என்னப்பா இது.. “
“. முகமது அலி சார். வேல்டு பேமஸ் பாக்சர் . பக்கத்துல நிக்குறது எங்க அப்பா.. கீழே முகமது அலி கையெழுத்து இருக்கு. பாருங்க“.
“.சரிப்பா. அதை ஏன்கிட்ட ஏன் காட்டுறே“.. எனச் சபாபதி புரியாமல் கேட்டார்
“முகமது அலி மெட்ராஸ் வந்திருக்கப்போ. எடுத்த போட்டோ“
“.அதெல்லாம் இருக்கட்டும். ஏதாவது மனு குடுக்க வந்தியா“. எனக்கேட்டார் சபாபதி
“.முகமது அலியோட கையெழுத்தை விக்க வந்துருக்கேன் சார் “. என்று தயக்கத்துடன் சொன்னான்
சபாபதிக்கு அவன் கேட்டது புரியவில்லை
“.கையெழுத்தை விக்குறதா.. இதை வாங்கி என்ன செய்றது“. என்று நக்கலாகக் கேட்டார்
அவன் தலைகவிழ்ந்தபடியே சொன்னான்
“ ரொம்ப மதிப்பான கையெழுத்து சார்.. வீட்டுக் கஷ்டம் அதான் விக்கலாம்னு வந்துருக்கேன். ““
சபாபதி பொழுது போவதற்குச் சரியான ஆள் கிடைத்துவிட்டான் என்பது போல நமட்டு சிரிப்போடு “நமக்குப் பாக்சிங் எல்லாம் ஒத்துவராது.. அந்தா.. கார்னர் சீட்ல இருக்கான் பாரு சேகர். அவன்கிட்ட காட்டு. “ என்றார்
சேகர் அந்த அலுவலகத்தில் யாருக்கு கடன் தேவை என்றாலும் வாங்கித் தருவான். யாரிடமிருந்து பணம் வாங்குகிறான் என்று தெரியாது. ஆனால் ஆயிரம் ரூபாய்க்கு ஐம்பது ரூபாய் எடுத்துக் கொள்வான். அவனிடம் பலரும் அவசரத்திற்குக் கடன் வாங்கியிருக்கிறார்கள். சம்பள நாளில் கொடுத்த கடனை கறாராக வசூல் செய்துவிடுவான்
சேகர் முன்பாகப் போய் நின்ற ஆள் பழைய புகைப்படத்தை நீட்டினான்
நிமிர்ந்து அதைப் பார்த்த சேகர் ஏதோ யோசனையோடு கேட்டான்
“டெத் சர்டிபிகேட் வேணுமா.“
“இல்லை சார்.. இவர் முகமது அலி “ என்றான்
“முகமது அலின்னா “ என்று புரியாமல் கேட்டான் சேகர்

“ பேமஸான குத்துச் சண்டை சேம்பியன். 1980ல் மெட்ராஸ் வந்துருந்தார்.. அப்போ எம்ஜிஆர் முன்னாடி ஜிம்மி எல்லிஸோடு பாக்சிங் மேட்ச் நடந்துச்சி. எங்கப்பா அந்தக் காலத்தில பெரிய பாக்சர்.. அவருக்குப் பாக்சிங்ல ஒத்த கண்ணு போயிருச்சி. ஆனாலும் சூப்பரா பாக்சிங் பண்ணுவார். முகமது அலியே எங்கப்பாவை பாராட்டியிருக்கார்.. இது அவரோட எடுத்த போட்டோ.. கன்னிமாரா ஹோட்டல் முகமது அலி தங்கி இருந்தாரு.. அவரைப் பார்க்க ஒரே ஜனத்திரள். இந்தப் போட்டோல கையெழுத்து வாங்க எங்கப்பா நின்னுகிட்டு இருக்கிறதை பாத்து முகமது அலி ரூம்க்குள்ளே கூட்டிகிட்டு போயி கையெழுத்து போட்டு குடுத்துருக்காரு.. எங்கப்பாவுக்கு ரொம்பச் சந்தோஷம் “ எனக் கதை போலச் சொல்லிக் கொண்டிருந்தான்
“இப்போ உனக்கு என்ன வேணும் அதை மட்டும் சொல்லு“ என்றான் சேகர்
“முகமது அலி கையெழுத்தை வாங்கிக்கோங்க சார் . ஐநூறு ரூபாய் குடுத்தா போதும்“ என்று சொன்னான்
இதைச் சேகர் எதிர்பார்க்கவில்லை.
“இதை வச்சி நான் நாக்கு வழிக்கிறதா“ என்று கோபமாகக் கேட்டான்
“அப்படி சொல்லாதீங்க சார். முகமது அலி கையெழுத்துக்கு மதிப்பு இருக்கு“
“நம்ம ஆபீஸ்ல எத்தனை பேருக்கு இந்த முகமது அலி யாருனு தெரியுதுனு இப்போ பாத்துருவோம். “ என ஏதோ சவாலை முன்னெடுப்பவன் போல அவனிடமிருந்த போட்டோவை பிடுங்கிக் கொண்டு அனைவரையும் தன் முன்னால் அழைத்தான்.
சேகர் கேலியான குரலில் சொன்னான்
“இந்த போட்டோவுல இருக்கிறது யாருனு கரெக்டா சொல்லிட்டா.. நூறு ரூபாய் தர்றேன். “
“நடிகரா“ என ஒரு பெண் கேட்டார்
“இவரை மாதிரி எங்க தெருவுல ஒரு டெய்லர் இருக்கார். காது அப்படியே அவரைப் பாக்குற மாதிரி இருக்கு“ என்றாள் ஜெயந்தி.
“இவரு புட்பால் சேம்பியன் தானே “ எனக் கேட்டான் மணி
ரங்காசாரி மட்டும் கரெக்டாகச் சொன்னார்
“இது முகமது அலி. பாக்சிங்ல வேல்டு ஹெவிவெயிட் சேம்பியன். ஒரிஜினல் பேரு காஸ்சியுஸ் கிளே.. பின்னாடி முகமது அலினு பேரை மாத்திகிட்டான். “
“கரெக்ட் சார்.. அவரோட கையெழுத்து இது.. நீங்களாச்சும் வாங்கிக்கோங்க“ என்றான் அந்த மனிதன்
“வொய்ப்போட பாக்சிங் போடவே எனக்கு நேரம் பத்தலை. இதை வாங்கிட்டு போயி என்ன செய்றது. ஏதாவது பாரீன் ஸ்டாம்ப்னா கூட என் மகளுக்குக் குடுக்கலாம். “ எனக் கேலியாகச் சொன்னார் ரங்காசாமி
“அப்படி சொல்லாதீங்க சார்.. எங்கப்பா படத்தை வேணும்னா கட் பண்ணிட்டு தர்றேன். ஐநூறு ரூபா குடுங்க“ என அவன் மன்றாடினான்.
“ஒரு கையெழுத்துக்கு ஐநூறு ரூபா ரொம்ப ஜாஸ்தி “ என்றார் ரங்காசாரி
“நீங்களும் அப்படிக் கேட்குறவங்க தானே“ எனச் சொல்ல நினைத்து மனதிற்குள் அதை விழுங்கி விட்டு “எங்கப்பா இருந்தா இதை விக்க விடமாட்டார் சார்“ என்றான்
“நீ விக்க வந்தது தப்பில்லை. தாலுகா ஆபீஸ்க்கு ஏன்பா கொண்டு வந்தே“ என்று கேலியான குரலில் கேட்டார் ரங்காசாரி
“நீங்க எல்லாம் படிச்சவங்க. இதோட மதிப்பு தெரியும்னு நினைச்சேன்“ எனச் சொன்னான்.
“முகமது அலி கையெழுத்து இல்லே முகமது அலியோ வந்தாலும் இங்க ஒரு மதிப்பும் கிடையாது பாத்துக்கோ“ என்று ஜோக் அடித்தவர் போலத் தானாகச் சிரித்தார் ரங்காசாரி
இதற்குள் படியில் யாரோ ஏறிவரும் சப்தம் கேட்டு ப்யூன் முனுசாமி தாசில்தார் வந்துட்டார் என்று அறிவித்தார்
சபாரி சூட் அணிந்திருந்த தாசில்தார் ரத்தினசாமி தனது இருக்கைக்குப் போகையில் அந்த மனிதன் அலுவலகத்தினுள் நிற்பதை கவனித்திருக்கக் கூடும். இருக்கையில் அமர்ந்தவுடன் பெல்லை அடித்தார்
ப்யூன் முனுசாமி வேகமாக உள்ளே சென்றார்
“வெளியே யாரோ நிக்குறாங்களே.. சென்ட் விக்குற ஆளா… அப்படி யாரையும் உள்ளே வரவிடக்கூடாதுனு சொன்னனே“ என்று கோபமாகச் சொன்னார்
“சென்ட் விக்கிற ஆள் இல்லே சார். இது ஏதோ போட்டோ விக்க வந்துருக்கார்“ என்றார் முனுசாமி
“அந்த ஆளை உள்ளே கூப்பிடு“ எனக் கோபமாகச் சொன்னார் தாசில்தார்
செய்வதறியாமல் நின்ற அந்த மனிதனை ப்யூன் தாசில்தார் கூப்பிடுவதாக அழைத்தார்
மெதுவாக நடந்து தாசில்தார் அறைக்குள் சென்றான். அவர் கடுகடுப்பான முகத்துடன் கேட்டார்
“இது என்ன சந்தை கடையா.. கண்ட ஆட்களும் உள்ளே வந்து பொருள் விக்குறதுக்கு. நீ யாரு.. எதுக்கு வந்துருக்கே“
அவரது கோபத்தைக் கண்டு பயந்து போன அந்த மனிதன் தயங்கி தயங்கி சொன்னான்
“முகமது அலி கையெழுத்து.. போட்டோ“
“எஸ் 1ன்னை வரச்சொல்லு“ என்று கோபமாகச் சொன்னார் தாசில்தார்
சபாபதி உள்ளே சென்றார்
“இது கவர்மெண்ட் ஆபீஸா இல்லே.. பொருட்காட்சியா.. இந்த ஆளை எப்படி உள்ளே விட்டீங்க.. “
“மனு கொடுக்கவந்தவருனு நினைச்சிட்டோம் ,,ஆனா.. இவன் ஏதோ போட்டோவை வச்சிகிட்டு கதை விடுறான். “
“இதை இப்படி விடக்கூடாது. நீ போலீஸ்க்கு போன் பண்ணு. ஒரு ஆளை பிடிச்சி குடுத்தா. அடுத்தவன் வர பயப்படுவான்“ என்று சப்தமாகச் சொன்னார்
அந்த மனிதன் கலக்கமான முகத்துடன் “சாரி சார். நான் கிளம்புறேன்“ என வெளியே நடக்கத் திரும்பினான்
“கையில என்ன வச்சிருக்கே. காட்டு“ என்று தாசில்தார் அதே கோபத்துடன் கேட்டார்
முகமது அலியும் அவனது அப்பாவும் உள்ள போட்டோவை காட்டினான்.
“டொனேஷன் கேட்டு வந்தியா“ எனக் கேட்டார் தாசில்தார்
“இல்லை சார். முகமது அலி கையெழுத்தை விக்க வந்தேன்“ என்று அவன் மெதுவான குரலில சொன்னான்
“அதுக்கு வேற இடம் கிடைக்கலையா. “ என அந்தப் போட்டோவை அலட்சியமாக மேஜை மீது போட்டார்
“பரவாயில்லை சார். போட்டோவை குடுங்க நான் கிளம்புறேன் “ என்றான்
இதற்குள் அந்த அறைக்குள் வந்த ரங்கசாரி சரளமான ஆங்கிலத்தில் முகமது அலியைப் பற்றிச் சொன்னார். பாதிப் புரிந்தும் புரியாமல் தாசில்தார் கேட்டார்
“இத யாரு வாங்குவா.. சாரி“
“இதுக்குனு கலெக்டர்ஸ் இருக்காங்க சார்.. ஐந்தாயிரம் பத்தாயிரம் போகும்“
“அப்படியா சொல்றீங்க.. “
“வீட்ல கஷ்டமான சூழ்நிலை. அதான் விக்க வந்தேன் “ என்று மறுபடியும் சொன்னான் அந்த மனிதன்
“இதை வாங்கி நான் என்ன செய்றது.. நம்ம போட்டோவை மாட்டவே வீட்ல இடம் இல்லை “ என்று தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தினார் தாசில்தார்
இதற்குள் சேகர் அறைக்குள் வந்து சொன்னான்
“இது எல்லாம் புதுமாதிரி பிராடு சார். நெட்ல இருந்து போட்டோவை எடுத்துப் பிரிண்ட் போட்டு கிளம்பி வந்துருறாங்க“
“இல்லை.. சார். இது எங்க அப்பா தான்“
“அதுக்கு ஏதாவது சர்டிபிகேட் வச்சிருக்கியா“ என்று கேட்டான் சேகர்
“நான் ஏன் சார் உங்களை ஏமாத்துறேன்“ என்று பரிதாபமாகக் கேட்டான் அந்த மனிதன்
“சேகர் சொல்றது கரெக்ட் இந்தக் காலத்துல யாரையும் ஆளை பாத்து நம்ப முடியாது. நாம தான் கவனமா இருந்துகிடணும்“ என்றார் ரங்காசாரி
“இந்த ஆளை துரத்திவிட்டுட்டு வெளி ஆட்களுக்கு அனுமதி இல்லைனு ஒரு போர்ட் மாட்டிவையுங்க“ என்றார் தாசில்தார்
அவரது மேஜையில் கிடந்த போட்டோவை எடுத்து தனது பைக்குள் வைத்துக் கொண்டு அந்த மனிதன் படியிறங்கி நடந்தான்.
ஏதோ சான்றிதழ் வாங்க காத்திருந்த கிழவர் “தாசில்தார் வந்துட்டாரா“ என்று அவனிடம் கேட்டார்
“இருக்கார்“ என்றபடியே வெளியே நடந்தான்
மணி மூன்றைக் கடந்திருந்தது. பசியில் காது அடைத்தது. கண்களில் பூச்சி பறக்க மயக்கம் வருவது போலிருந்தது. உக்கிரமான வெயிலில் சாலை சூடேறியிருந்தது. மரங்களில் அசைவேயில்லை
அவன் தனது வீட்டிற்குப் போவதற்காகப் புறநகர் பேருந்தை பிடிக்கப் பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.
திடீரென அவனது கையிலிருந்த பை கனப்பது போலாகியது. யாரோ சிரிக்கும் சப்தம் போலக் கேட்டது
சிரிப்பது முகமது அலி தானா
அவன் கைகள் கனம் தாங்காமல் கீழே இழுப்பது போலத் தோன்றியது.
புகைப்படத்தை வெளியே எடுத்துப் பார்த்தான். முகமது அலியின் பக்கத்தில் நின்றிருந்த அப்பாவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அபூர்வமாகத் தோன்றியது.
இதை வீட்டிற்குத் திரும்பக் கொண்டு போய் என்ன செய்வது என்ற கேள்வி மனதில் எழுந்தது.
சாலையோர புளியமரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தார் டின் ஒன்றில் தார் கசிந்து ஒழுகிக் கொண்டிருந்தது. தனது பையிலிருந்த போட்டோவை வெளியே எடுத்து அந்தத் தாரில் ஒட்ட வைத்தான். தார் டின்னில் ஒட்டிய போட்டோவிலிருந்தபடி முகமதுஅலி கானல் ததும்பும் சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்
தனது கோபத்தைக் காட்டுவது போலக் காலில் போட்டிருந்த செருப்பை உதறிவிட்டு வெறும் காலோடு விடுவிடுவென தனது வீடு நோக்கி நடக்கத் துவங்கினான். விநோத மிருகம் ஒன்றின் நாக்கைப் போலச் சாலை நீண்டு கிடந்தது.
••••
April 23, 2023
எனது உரை
உலகப் புத்தக தின விழாவில் நேற்று பேசிய உரை. நன்றி ஸ்ருதி டிவி.
April 21, 2023
உலகப் புத்தக தினம்.
உலகப் புத்தக தினவிழாவினை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை, பொதுநூலகம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் பதினெட்டு நூலகங்களில் கூட்டங்கள் நடத்துகிறார்கள். இதில் நூறு பேர் உரையாற்றுகிறார்கள். புத்தக தினத்தை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுவது பாராட்டிற்குரியது. நூலகங்களைப் பண்பாட்டு மையங்களாக மாற்றும் இந்தச் செயல்பாடு முன்னோடியானது.
சென்னை தேவநேய பாவாணர் மாவட்ட மையநூலகத்தில் முழு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது
இதில் நான் கலந்து கொண்டு உலகின் முதற்புத்தகம் என்ற தலைப்பில் நிறைவுரை ஆற்றுகிறேன். நேரம் மாலை 5 மணி.
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

April 20, 2023
வெயில் அறிந்தவன்
புதிய குறுங்கதை.
கல்லூரி படிப்பைப் பாதியில் விட்டு அவன் ஊர் திரும்பினான். நூறுக்கும் குறைவான வீடுகளைக் கொண்ட கரிசல் கிராமமது. அவனைச் சுற்றும் ஈக்கள் கூட இனி என்ன செய்யப்போகிறாய் என்ற கேள்வியைக் கேட்டன. வேப்பஞ்செடி போல நான் இந்த மண்ணில் வேரூன்றி வளர விரும்புகிறேன் எனக்கு வேறு இடமில்லை என்றான்.

தாயும் அக்காவும் அவனை நினைத்துக் கலங்கினார்கள். விவசாயியான தந்தை தனது கோபத்தை விறகு பிளப்பதில் காட்டினார்.
அவன் தன்னை நேசிப்பவர்களை வெறுத்தான். உலர்ந்த நத்தைக்கூடினை போலத் தன்னை மாற்றிக் கொள்கிறான். கோடையின் நீண்ட பகல் தற்கொலை கயிறு போலிருக்கிறது
யாரோ வீசி எறிந்து போன காலி மதுபாட்டிலில் நிரம்புகிறது வெயில். அவன் ஆசை தீர வெயிலைக் கண்களால் குடிக்கிறான். நூற்றாண்டு பழமையான ஒயினைப் போலிருக்கிறது. அவனது உடலுக்குள் வெயில் புகுந்த பின்பு கண்கள் பிரகாசமாகின்றன. கைகால்கள் வேகம் கொள்கின்றன.

அடிவானத்தினை நோக்கி தனியே மேயும் ஆடு ஒன்று கோபமில்லாமல் சூரியனை வெறித்துப் பார்க்கிறது. இது கோடை. இது கோடை என்று கூவுகின்றன குயில்கள். உலர்ந்த மேகங்கள் விளையாட இடமில்லாத சிறுவர்களைப் போலச் சோர்ந்து நிற்கின்றன. பசித்த மலைப்பாம்பு போல வீதியில் ஊர்ந்து செல்கிறது வெயில். திண்ணைகள். கல்உரல்கள். மின்விளக்குக் கம்பங்கள் நடுங்குகின்றன. சூரியனைப் பார்த்துச் சிரிக்கிறான் கல்மண்டபத்துக் கோட்டிக்காரன். அவனது சட்டைப் பையில் பாதி உடைந்த பென்சில். கிழிந்த காகிதங்கள். செல்லாத நாணயங்கள்.
நீருக்குள் அமிழ்ந்துகிடக்கும் ஆமையைப் போல அசைவற்றிருக்கிறது அவனது ஊர். சுற்றிலும் வெயிலின் நடனம் . அது மாலையில் முடியும் வரை வீட்டின் கூரையைப் போல அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். கோடை மிகவும் நீண்டது. பிரசவித்த பெண்ணின் உடலைப் போலக் கிராமம் தளர்ந்து போயிருக்கிறது.
வீட்டோர் சாப்பிட அழைக்கும் போது, கோபத்தில் ஒலிக்கும் அவன் குரலில் வெயில் கொப்பளிக்கிறது. மாலையில் சப்தமிட்டபடியே ஆடுகள் ஊர் திரும்புகின்றன. மேற்கில் சூரியன் மறைகிறது. ஆனால் ஒளி மறையவில்லை.

தயங்கித் தயங்கி வருகிறது இரவு. கோடை காலத்து இருட்டில் பிசுபிசுப்பே கிடையாது. வீட்டில் உறங்க விருப்பமின்றித் தோட்டத்துக் கிணற்றின் படிகளில் அமர்ந்திருக்கிறான். நீர் சுவடேயில்லாத கிணறு. அண்ணாந்து வானை நோக்குகிறான். ஒளிரும் நூறு நூறு நட்சத்திரங்கள். தாங்க முடியாத அதன் பேரழகைக் கண்டு கோபமாகி அவற்றைக் கொல்ல ஆயுதம் தேடுகிறான். அவன் வீசி எறிந்த கல் ஆகாயத்தை நோக்கிப் பறந்து எங்கோ விழுகிறது. அவனது தோல்வியைக் கண்டு நட்சத்திரங்கள் சிரிக்கின்றன. அவன் கைகளால் முகத்தைப் பொத்தி அழுகிறான். அவன் படித்த கவிதைகள் மனதில் தோன்றி மறைகின்றன
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
